வெள்ளி, 12 நவம்பர், 2021

ஏழுமலையான் பகுதி - ஆறு

ஏழுமலையான் பகுதி - ஆறு




தன் கணவருக்கு ஏற்பட்ட கஷ்டத்தை போக்குவதற்காக லக்ஷ்மி மகேஸ்வரனிடம் சென்றாள். தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடை அவரிடம் சொல்லி தனது அவசரம் காரணமாக திருமால் பூலோகம் சென்று ஒரு புளியமரத்தின் கீழ் அன்ன பானமின்றி தவமிருப்பது பற்றி எடுத்துச் சொன்னாள். மகேஸ்வரன் அவளது கஷ்டத்தை போக்குவதற்கு வாக்களித்தார். பிரம்மாவை வர வழைத்தார். பிரம்மனே! நாம் இருவரும் பசு, கன்றுவாக மாறி நாராயணனின் இருப்பிடத்திற்கு செல்ல வேண்டும். நம்மை லக்ஷ்மி சந்திரகிரி நாட்டின் அரசன் சோளராஜனுக்கு விற்று விடுவாள். நாம் அந்த நாட்டில் தவம் செய்து கொண்டிருக்கும் நாராயணனை தேடிச் சென்று அவரது பசி போக்க பாலூட்டுவோம் என்றார். லக்ஷ்மி மகிழ்ச்சி அடைந்தாள். இதன் பிறகு பிரம்மா பசுவின் வடிவையும், மகேஸ்வரன் கன்றுக் குட்டியின் வடிவையும் அடைந்தனர். லக்ஷ்மிதேவி அவற்றை மேய்ப்பவள் போல வேடமணிந்தாள். பசு, கன்றுகளை ஓட்டிக்கொண்டு சந்திரகிரிக்கு வந்து சேர்ந்தாள். அந்த பசுவும் கன்றும் அந்நாட்டு மக்களை கவர்ந்தன. இதுபோன்ற உயர்ந்த ஜாதி பசுவை நாங்கள் இதுவரை கண்டதில்லை. இதன் மடு மிகவும் பெரிதாக இருக்கிறது. ஒரு முறை பால் கறந்தால் உலகத்திற்கே போதும் என்கிற அளவிற்கு பெரிதாக மடு கொண்ட பசுவை அதிசயப்பிறவி என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. இது எங்கள் தேசத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் என்றே கருதுகிறோம். இந்த மாட்டுக்கு சொந்தக்காரி பேரழகு பொருந்தியவளாக இருக்கிறாள். லக்ஷ்மி கடாக்ஷம் இவள் முகத்தில் தாண்டவமாடுகிறது என்று புகழ்ந்து பேசினர். தங்கள் நாட்டிற்கு வந்திருக்கும் அதிசய பசு, கன்று பற்றிய தகவல் அரண்மனைக்கு சென்றது.

மன்னன் சோளராஜன் அவற்றை பார்க்க விரும்பினான். இதை எதிர்பார்த்து காத்திருந்த லக்ஷ்மி பிராட்டியார், பசுக்களை ஓட்டிக்கொண்டு அரண்மனைக்கு சென்றாள். மன்னன் அந்த பசுக்களை பற்றி விசாரித்தான். பெண்மணியே! உனது நாடு எது? எந்த நாட்டில் இது போன்ற உயர் ஜாதி பசுக்கள் இருக்கின்றன? இதன் சிறப்பம்சம் என்ன? தெளிவாகச் சொல் என கேட்டான். லக்ஷ்மி பிராட்டி அவனிடம் மன்னனே! இந்த பசுக்களுக்கு உணவிட சாதாரண மனிதர்களால் முடியாது. இவை மிக அதிகமாக சாப்பிடும். ஆனால் உணவிற்கேற்ற பாலை இந்த ஊருக்கே தரும். நீ அரண்மனைவாசி. உன்னால் இதை வளர்க்க முடியும். இந்த பசுக்களுக்கு தேவையான உணவை கொடுத்து வா. உன் நாடே வளமாகும், என தெரிவித்தாள். சோளராஜனுக்கும், அவனது மனைவிக்கும் அந்த பசுக்களை மிகவும் பிடித்து விட்டது. உலகத்திற்கே படியளக்கும் லக்ஷ்மி பிராட்டிக்கு பணம் கொடுத்து அந்த பசுக்களை வாங்கிக் கொண்டனர். அரண்மனை கொட்டிலில் அந்த பசுக்கள் அமைதியாக நின்றன. அவற்றை கட்டிப்போட வேண்டும் என்ற அவசியம் வரவில்லை. எந்தப் பிரச்னையும் செய்யாமல் சாப்பிட்டன. அதுவரை அப்படிப் பட்ட பசுக்களை பார்க்காத பராமரிப்பு ஊழியர்கள் ஆச்சர்யமும் ஆனந்தமும் கொண்டனர். சோளராஜன் தலைமை பசு பராமரிப்பாளரை அழைத்து சேவகனே! இந்த பசு கரக்கும் பாலை மட்டும் அரண்மனையில் ஒப்படைத்து விட வேண்டும். இதன் பால் தெய்வாம்சம் மிக்கது என இதை என்னிடம் விற்ற பெண்மணி சொல்லியிருக்கிறாள். இவற்றை வேங்கடாசல மலைக்கு அழைத்து சென்று மேயவிடு. மிகவும் கவனமாக பார்த்துக்கொள் என சொல்லி அனுப்பினான்.

பராமரிப்பாளர்கள் அந்த பசுக்களை வேங்கடாசல மலைக்கு ஓட்டிச் சென்றனர். சேவகர்கள் மதியவேளையில் ஓய்வெடுக்கும் நேரத்தில் அந்த பசுக்கள் மந்தையை விட்டு பிரிந்து மலையிலிருந்த புளியமரத்தின் அருகில் சென்றன. புற்றுக்குள் ஸ்ரீமந் நாராயணன் தவத்தில் இருந்தார். அவர் மீது அந்த பசு பாலை சொரிந்தது. திடுக்கிட்டு விழித்த நாராயணன் மேல் நோக்கி பார்த்தார். பால் வழிந்து கொண்டிருந்தது. வாய் திறந்து அந்த பாலை பருகினார். இப்படியாக தினமும் அந்த பசுக்கள் புற்றுக்கு சென்று அதனுள் அமர்ந்திருந்த ஹரிக்கு பாலை சொரிந்துவிட்டு வந்தன. மிகுந்த எதிர்பார்ப்புடன் வாங்கப்பட்ட பசு, பால் கொடுக்காததால் அரண்மனையில் பிரச்னை ஏற்பட்டது. இவற்றை விற்கவந்த பெண்மணி அரசனையே ஏமாற்றிவிட்டாளோ என்று பேசிக் கொண்டனர். மகாராணி பராமரிப்பாளனை அழைத்து இந்த மாடு பால் கொடுக்கிறதா? இல்லையா? ஒரு வேளை நீயே இந்த பாலை குடித்து விடுகிறாயா? உண்மையை சொல்லா விட்டால் உன் தலையை எடுத்து விடுவேன் என எச்சரித்தாள். அவன் பதறிப்போனான். மகாராணி! எல்லா பசுக்களையும் போல இதையும் திருவேங்கடமலைக்கு ஓட்டிச் செல்கிறேன். எங்கள் பார்வையில் தான் இந்த பசுக்கள் மேய்கின்றன. மடு மிகவும் பெரிதாக இருக்கிறது. ஆனால் கறந்தால் பால் வருவதில்லை. இது என்ன அதிசயம் என்று எங்களுக்கு புரியவில்லை. மாயப்பசுக்களாக இவை உள்ளன என்று சொல்லி அவளது காலில் விழுந்தான். மகாராணிக்கு அவனது பேச்சில் நம்பிக்கை வரவில்லை. பொய்யனே! உன் பேச்சை நான் நம்பமாட்டேன். மிகச்சிறிய கன்றை ஈன்றுள்ள இந்த பசுவிற்கு எப்படி பால் இல்லாமல் போகும்? இன்று ஒரு நாள் அவகாசம் தருகிறேன். நாளை முதல் எப்படியும் இந்த பசுவின் பால் அரண்மனைக்கு வந்தாக வேண்டும். இல்லா விட்டால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டி அனுப்பினாள்.

என்ன செய்வதென அறியாத பராமரிப்பாளன் மறுநாள் அந்த பசுவின் மீது ஒரு கண் வைக்க ஆரம்பித்தான். மதிய வேளையில் அவன் ஓய்வெடுக்கவில்லை. பசுக்கள் புற்றை நோக்கி சென்றன. பராமரிப்பாளன் பின்தொடர்ந்தான். புற்றின் அருகே சென்ற பசு, பால் சொரிய ஆரம்பித்தது. அவன் அதிர்ச்சியடைந்தான். கடும் கோபம் ஏற்பட்டது. தனது கையில் இருந்த தடியுடன் பசுவை அடிக்க பாய்ந்தான்.

தொடரும்....

கருத்துகள் இல்லை: