ராமகிருஷ்ணர் பகுதி ஐந்து
கதாதரனுக்கு அவரது தந்தை சுதிராம் தம் முன்னோர்களின் பெயரை வரிசையாக சொல்லிக் கொடுத்தார். அவர் சொல்வதை கதாதரன் அக்கறையுடன் கவனிப்பான். எத்தனை நாள் கழித்து திரும்ப கேட்டாலும் அப்படியே சொல்வான். ஆனால், அவருக்கு பள்ளிப்பாடத்தில் மட்டும் அதிக நாட்டம் இல்லை. குறிப்பாக கணக்கு என்றால் அவருக்கு வேப்பங்காய். யாராவது வாய்ப்பாடு சொன்னால் அவரை வெறுப்போடு பார்ப்பார். சிறிது காலத்தில் கதாதரன் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.பள்ளியில் சேர்ந்த சில மாதங்களிலேயே அவரை அனைவருக்கும் பிடித்துவிட்டது. படிப்பில் புத்திசாலியில்லாவிட்டாலும், மற்றவகைகளில் அவரை ஏனோ அத்தனைபேருக்கும் பிடித்திருந்தது. கடைசி வரை கணக்குப்பாடத்தை மட்டும் அவர் விரும்பவேயில்லை. இதை சுதிராம் பெரிதுப்படுத்தவில்லை. இறைவனின் ஆணைப்படி எப்படியாவது தன் மகன் முன்னேறிவிடுவான் என்றே அவர் நினைத்தார். வீட்டில் குறும்பு செய்தால்கூட அவர் கண்டிப்பதில்லை. அதேநேரம் கதாதரனும் குறும்பு செய்துவிட்டு எதையும் மறைப்பதில்லை. நான்தான் அதை செய்தேன் என தைரியமாக ஒப்புக் கொள்வார். இந்தப் போக்கு சுதிராமுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் கதாதரனுக்கு புத்திமதிகள் சொல்வார். குறும்பு செய்யவேண்டாம் என கேட்டுக் கொள்வார். அதை அப்படியே ஏற்றுக் கொள்வார் கதாதரன். ஆனால் வேறுமாதிரியான குறும்புகளை செய்வார். அந்த குறும்பினால் நிச்சயமாக மற்றவர்களுக்கு பாதிப்பு இருக்காது. இப்படியாக அவரது இளமைக்காலம் கழிந்து கொண்டிருந்தது. சிறிது காலம் கழித்து கணிதம் நீங்கலாக மற்ற பாடங்களில் கதாதரன் ஆர்வம் செலுத்தினார். நன்றாக எழுதினார். ஆன்மிக பெரியவர்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொண்டார். அவற்றை படிக்கும் நேரத்தில் இந்த உலகையே மறந்துவிடுவார். தியானம் செய்பவரை போல தோன்றும்.
அவரது காலத்தில் ராமாயணமும், மகாபாரதமும் மிகவும் பிரசித்தம். ஊர் ஊராக நாடகம் மூலம் ராமாயணம், மகாபாரதம் கதை மக்களிடம் சொல்லப்படும். ஆனால் நாடகக் குழுவினரிடம் பணம் இருக்காது. எனவே அவர்கள் மேடைப்போட்டு நாடகம் நடத்தமாட்டார்கள். தெருவோரங்களில் மாதக்கணக்கில் தொடர்ச்சியாக நாடகத்தை நடத்திக் காட்டுவார்கள். இதைப்பார்ப்பதற்கென்று தவறாமல் கூட்டம் வரும். அந்த கூட்டத்தில் ஒருவராக கதாதரனும் இருப்பான். அந்த நாடகத்தில் வரும் வசனங்களையும், பாடல்களையும் கதாதரன் வரிவிடாமல் கேட்பார். வீட்டிற்கு வந்து ஒன்றுவிடாமல் திரும்ப சொல்லிப்பார்ப்பார். கற்றலில் கேட்டலே நன்று என்ற பழமொழிக்கு ஏற்ப, கதாதரனின் மனதில் ராமாயணம், மற்றும் மகாபாரத கதைகள் இலகுவாக பதிந்தன. இதைத்தவிர தான் வாழ்ந்த கிராமத்தில் உள்ள குயவர்களின் வீட்டிற்கு சென்றுசுவாமி பொம்மைகளை வாங்கி வருவார். அவர்கள் பொம்மை செய்யும் விதத்தை பார்த்துக் கொண்டேயிருப்பார். அவர்களோடு இணைந்து பொம்மை செய்யவும் கற்றுக் கொண்டார். நண்பர்கள் வீட்டிற்கு சென்று பொம்மைகள் செய்து கொடுப்பார். யாரேனும் ஓவியரைக் கண்டால் விடமாட்டார். அவர்களோடு சேர்ந்த ஓவியம் வரைவார். பொம்மை செய்வதிலும், ஓவியம் வரைவதிலும் தேர்ச்சி பெற்றார். பள்ளிப்படிப்பை விட இதுபோன்ற காரியங்களில் அவருக்கு அதீத அக்கறை இருந்தது. ஓய்வு நேரங்களில் புராண இதிகாசங்களை படிப்பார். வளர வளர தெய்வீக எண்ணங்கள் மனதில் பதிந்தன. சில நேரங்களில் பக்தி பரவசத்தால் மயங்கி விழுந்துவிடுவார். நாட்டுப்புற பாடல்களையும் அவர் கற்றுக் கொண்டார். அந்தக் காலத்தில் பேய், பிசாசு பயம் மக்களிடம் மிகவும் அதிகம். அங்கே பேய் இருக்கிறது, இங்கே பிசாசு இருக்கிறது என்றெல்லாம் மக்கள் பேசிக் கொள்வார்கள். அந்த இடங்களுக்கு தைரியமாக சென்று வருவார் கதாதரன்.
சுதிராமுக்கு ஆதரவு அளித்த சட்டர்ஜி குடும்பத்தினருக்கு தெய்வ அருள் வந்து ஆடுவார்கள். அவர்கள் அருகில் செல்லவே கிராமமக்கள் தயங்குவார்கள். ஆனால் கதாதரன் தைரியமாக அவர்களது அருகில் சென்று அவர்கள் செய்வதையெல்லாம் கவனிப்பார்.இந்த மாமா, அத்தை ஆகியோர் சுவாமி ஆடுவதைப் போல எனக்கும் ஆடத் தோன்றுகிறது. என்மேலும் தெய்வம் வந்து அமராதா? என்று வேடிக்கையாக சொல்வார். கதாதரனிடம் ஒரு வசீகர சக்தி இருந்தது. தன்னோடு பழகும் சிறுவர்களை விரைவில் தன்வசப்படுத்திவிடுவார். அவரது நண்பர்கள் சாப்பிடச் செல்லும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் அவரோடு இருப்பார்கள். அதுமிட்டுமின்றி அந்த கிராமத்தில் வசிக்கும் பெண்களும், உறவுக்காரர்களும் ஏதாவது காரணம் சொல்லிக் கொண்டு கதாதரனைக் காண வருவார்கள். அவர்கள் கையில் மிட்டாய் அல்லது பழங்கள் இருக்கும். கமார்புகூரில் சுதிராமனுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார். அவரது பெயர் மாணிக்ராம். அவர் கதாதரனைப் பார்க்காமல் ஒருநாள் கூட இருக்கமாட்டார். கதாதரனின் உடலில் உள்ள அங்க அடையாளங்களைக் கொண்டு இவன் பிற்காலத்தில் பெரிய மகானாக வருவான் என்று சொல்வார். கதாதரனுக்கு பல பரிசுகளை கொடுப்பார். இதிகாசங்களை படித்த கதாதரன் அதிலுள்ள பாத்திரங்களைப் போல நடித்துக் காட்டுவார். சில நேரங்க்ளில் அந்த பாத்திரத்தோடு ஒன்றி அப்படியே மயக்கநிலையில் ஆழ்ந்துவிடுவார். ஊராரில் சிலர் வேறுமாதிரியாக பேச ஆரம்பித்தனர்.அந்த சிறுவனுக்கு வலிப்பு வருகிறது. அதனால்தான் அவன் அடிக்கடி மயக்கம் அடைந்துவிடுகிறான், என்று கேலிபேசினர். கதாதரனின் பெற்றோர் இந்த கேலிபேச்சு கண்டு பயந்தார்கள். இப்படியே சொல்லிச் சொல்லி மற்றவர்களையும், நம்பவைத்து விடுவார்களோ என பயந்தனர்.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
ஞாயிறு, 6 டிசம்பர், 2020
ராமகிருஷ்ணர் பகுதி ஐந்து
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக