வெள்ளி, 4 டிசம்பர், 2020

நாராயண தீர்த்தர்

நாராயண தீர்த்தர்

வைணவ சம்பிரதாயத்தில் கிருஷ்ண லீலா தரங்கப் பாடல்களுக்கென தனிச் சிறப்பிடம் உண்டு. முதல் பாடலைக் கேட்டு பகவானே நடனம் புரிந்தார் என்பது ஐதீகம்.
17ம் நூற்றாண்டில் தஞ்சாவூர், நாயக்கர்களின் ஆளுகைக்கு உட்பட்டது. கலைக்கும், இலக்கியத்துக்கும் இவர்கள் அதிக ஆதரவு அளித்ததால் புலவர்களும், கலைஞர்களும் தங்கள் குடும்பத்தோடு தஞ்சாவூர் ஜில்லாவில் குடியேறத் தொடங்கினார். இப்படி வந்த ஒரு குடும்பத்தில் தோன்றியவர் நாராயண தீர்த்தர். 1675-ல் பிறந்த இவர், கர்நாடக சங்கீதத்தின் உத்தம வாக்கேயகாரர்களின் சபையில் ஒருவராகத் திகழ்ந்தார். 12-ம் வயது வரையில் ஒரு சாஸ்திரியிடம் பாகவதம் பயின்றார். இசையிலும் பரத சாஸ்திரத்திலும் நிபுணரான இவரை ஜயதேவரின் அஷ்டபதி மிகவும் கவர்ந்தது.திருமணமான பிறகு இவர் எப்போதாவது மாமனார் வீட்டுக்குச் செல்வார். வெண்ணாற்றின் மறுகரையில் மாமனார் வீடு இருந்ததால் இவர் நீந்தியே ஆற்றைக் கடந்து செல்வார். ஒருமுறை அப்படி நீந்திக் கொண்டிருக்கும்போது வழியில் சுழலில் மாட்டிக் கொண்டார். தப்புவதற்கு இவர் செய்த முயற்சிகள் பயனற்றுப் போயின. புதிதாக சந்நியாசத்தை ஏற்றவர்கள் செய்ய வேண்டியதை ஒட்டி, இவர் பல ÷க்ஷத்திரங்களுக்கு யாத்திரை சென்றார். திருப்பதிக்குச் செல்லும் வழியில் திருமலை அடிவாரத்தில் ஓர் அசரீரி கேட்டது.

திருவையாற்றுக்குத் தெற்கேயுள்ள கோயிலுக்கு செல் என்றது. அதற்கிணங்க அவர் அங்கு சென்றார். இவர் வந்து சேர்ந்த ஊர் வரகூர். தொன்மைப் பெயர் வராகபுரி. இந்த ஊர் காவேரிக் கரையில் திருவையாறிலிருந்து தென்மேற்கே 10 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலத்தில் தங்கி இவர் இயற்றியது தான் அமரத்துவம் பெற்ற கிருஷ்ண லீலா தரங்கிணி. பாகவதத்தின் தசம ஸ்கந்தத்தைப் பற்றிய இந்த நூல் கண்ணன் பிறந்தது முதல் ருக்மணியை மணக்கும் வரையில் உள்ள கதையை விவரிக்கிறது. பல்லவி, அநுபல்லவி இவற்றால் ஆன, தரங்கம் என்கிற இசைவடிவில் 12 சர்க்கங்களாக உள்ளன. நிருத்திய நாடகம் என்கிற வடிவில் உள்ள இது ராகம், தாளம், பாவம் ஆகிய மூன்றினாலும் அலங்கரிக்கப் பெற்றது. இனிய இசையும், நாட்டிய ஜதி முறையும் சேர்ந்து  தெளிவான மொழியில் சித்தரிக்கப் பெற்றுள்ளது.

நடன ஆசிரியராகத் தம்மை பாவித்து நாராயண தீர்த்தர் தமது சாகித்தியங்களை இயற்றியுள்ளார். தமது தரங்களுக்கு ஏற்ப கடவுளையும் ஆடும்படி வேண்டினார். ஜயஜய ராமநாத என்ற முதல் தரங்கம், வரகூரின் பிரதான தெய்வமாகிய ஸ்ரீவெங்கடேசுவரரைக் குறிக்கிறது. இவரது பாடலைக் கேட்டு, கர்ப்பகிருகத்திலிருந்து வெளியான கஜ்ஜ நாதம்-கிண்கிணி ஓசை-நாராயண தீர்த்தருக்கும் அவரது பக்தர்களுக்கும் கேட்டது. மூலஸ்தானத்திலிருந்து ஆஞ்சனேயரே தாளம் போட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த கோயிலிலுள்ள ஆஞ்சநேயர் பெயர் தாளம் கொட்டி ஆஞ்சநேயர். எந்த எந்த பாடல்களுக்குக் கடவுள் நடனம் ஆடினாரோ, அவற்றைத் தமது சீடர்களுக்கு இவர் கற்பித்தார். தியாகையரின் தந்தையான சொண்டி வேங்கட சுப்பையா அவர்களும் இவருடைய சீடர்களுள் ஒருவர். வரகூரில் பஜனை சம்பிரதாயம் ஒன்றையும் இவர் நிறுவினார். ஒவ்வோர் ஆண்டும் கோகுலாஷ்டமியை இவருடைய பக்தர்கள் தரங்கப் பாடல்களைப் பாடிக் கொண்டாடுகிறார்கள். மாசி மாதம் சுக்ல பட்ச அஷ்டமியன்று நாராயண தீர்த்தர் மறைந்தார். இவரது உடலை வரகூருக்குக் கிழக்கே திருப்பூந்துருத்தி என்ற கிராமத்தில் அடக்கம் செய்திருக்கிறார்கள்.


கருத்துகள் இல்லை: