ராமகிருஷ்ணர் பகுதி இரண்டு
அந்த அன்புக்கரத்திற்கு சொந்தக்காரர் கமார்புகூரில் வசித்த சுகலால் கோஸ்வாமி. அவர் சுதிராமின் நெருங்கிய நண்பர். தன் நண்பனின் கஷ்டகாலத்தில் உதவுவது தனது கடமை என நினைத்தார். தனது ஊருக்கே வந்துவிடும்படி நண்பரை அழைத்தார். சுதிராமிற்கு வேறு வழியில்லை. மனைவி, இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகளுடன் கமார்புகூரில் குடியேறினார். தேரேய்பூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இந்த கிராமம் இருந்தது. கமார் என்ற வங்காள சொல்லுக்கு கொல்லர்கள் என்பது பொருள். புகூர் என்ற சொல்லுக்கு குளம் என்பது பொருள். இவ்வூர் செழிப்புமிக்க கிராமம். தண்ணீர் வசதி அதிகமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் வயல்வெளிகளில் தாவரங்கள் செழித்து வளர்ந்திருந்தன. தாமரைப்பூக்கள் நிறைந்த குளங்கள், ஆறு இக்கிராமத்தில் இருந்தது. கோஸ்வாமி தனது நண்பருக்கு ஒரு ஏக்கர் நிலத்தை கொடுத்தார். அதில் சில குடிசைகளும் இருந்தன. அந்த இடத்திற்கு லட்சுமிஜாலா என பெயர். பல கஷ்டங்களை அனுபவித்தாலும் நடப்பதெல்லாம் பகவான் செயல் என உணர்ந்து இறைநம்பிக்கையை விடாமல் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். துன்பங்கள் தொடரும் வேளையில் சுதிராமின் மனைவி சந்திராதேவி மிகுந்த பதட்டத்திற்கு ஆளானார். அவர் படும் வேதனையைக் கண்டு பொறாத சுதிராம் ஆறுதல் சொல்வார். சந்திரா! இவை சாதாரண துன்பங்கள். நாம் பட்டினி கிடக்கிறோம். பட்டினி என்பது ஒரு நோயல்ல. அதைக்கண்டு கலங்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. எத்தனையோ பேர் செல்வம் இருந்தும் பகவானுக்காக நோன்பிருக்கிறார்கள். அவர்களே பட்டினி கிடக்கும்போது ஏழைகளான நாம் பட்டினி கிடந்தால் என்ன? இறைவன் நம்மை நோன்பிருக்கச் செய்துள்ளார். அது அவரது விருப்பமாக இருக்கிறது. சற்று காலத்தில் நாம் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்புவோம். கவலைப்படாதே! என்பார்.
காலப்போக்கில் நண்பர் கோஸ்வாமி தந்த நிலம் விளையத் தொடங்கியது. சுதிராமின் குடும்பத்தில் பட்டினிக்கு இடமில்லாமல் போனது. எஞ்சிய உணவுப் பொருளை ஏழைகளுக்கு அவர் அளித்துவந்தார். ராமபக்தரான சுதிராம் வயலுக்கு சென்றதும், ஹே.. ராமா! ரகுவீரா! என்று அழைப்பார். அதன்பிறகே கூலியாட்களை வயலுக்குள் இறக்குவார். நடுகையின்போது ராமனின் பெயரை உரக்கச்சொல்லி முதல் நாற்றை நடுவார். தொடர்ந்து பணியாட்கள் வேலை செய்வார்கள். ஒருமுறை பக்கத்து ஊருக்கு ஏதோ பணி நிமித்தமாக சென்றிருந்த சுதிராம் அதை முடித்துவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவரால் நடக்கக்கூட முடியாமல் தளர்வு ஏற்பட்டது. அங்கிருந்த மரத்தடியில் படுத்தார். காற்று இதமாக இருந்தது. மரம் தந்த நிழலின் சுகத்தில் அப்படியே கண்ணயர்ந்துவிட்டார். அப்போது கனவு ஒன்று தோன்றியது. சுதிராம்! நான் சொல்லும் இடத்திற்கு செல். அங்கே கவனிப்பாரின்றி நான் கிடக்கிறேன். என்னை உன் வீட்டிற்கு எடுத்துச்செல், என ஒரு சிறுவனின் வடிவில் தோன்றிய ராமர் சொன்னார். சுதிராம் திடுக்கிட்டு விழித்தார். சற்று தூரம் சென்றார். ராமர் கனவில் சொன்னதுபோலவே ஒரு இடம் தென்பட்டது. அங்கே ஒரு பாம்பு படமெடுத்து நின்றது. அதன்கீழ் ஒரு சாளக்கிரம ராமர்சிலை கிடந்தது. அதை எடுப்பதற்காக சுதிராம் விரைந்தார். பாம்பு அங்கிருந்து சென்றுவிட்டது. சிலையை எடுத்துக்கொண்டு கண்களில் நீர் மல்க வீடு திரும்பினார் சுதிராம். ராமரே தந்த சிலை என்பதால் அவரது பக்தி உணர்வு மிகவும் அதிகரித்தது. அந்தச்சிலையை வீட்டில் வைத்து பூஜித்து வந்தார். அவரது குலதெய்வமான சீதளாதேவி ஒரு சிறுமியின் வடிவில் வந்து தினமும் பூ பறித்து தருவாள். அவளுடன் சுதிராம் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருப்பார். அந்தக்குழந்தை அவரோடு தோட்டத்திற்கு சென்று மரக்கிளைகளை வளைத்துக் கொடுப்பாள். சுதிராம் இலகுவாக மலர்களை பறித்துக்கொள்வார்.
தெய்வத்தை நேரில் தரிசிக்கும் பாக்கியம் கொண்டவரான சுதிராமின் வாழ்வில் மற்றொரு அதிசயமும் நிகழ்ந்தது. கமார்புகூரில் இருந்து 64 கி.மீ. தொலைவில் உள்ள மேதினிப்பூர் என்ற ஊருக்கு சுதிராம் சென்றுகொண்டிருந்தார். வழியில் வில்வ மரம் ஒன்று நின்றது. பொதுவாக அந்தக்காலத்தில் மரத்தில் இலைகள் உதிர்ந்திருக்கும். ஆனால் இந்த மரத்தில் மட்டும் இலைகள் ஏராளமாக இருந்தது சுதிராமிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது சிவபெருமானின் கருணை என்றே நினைத்தார். வில்வ இலைகளை பறித்தார். மேதினிப்பூருக்கு செல்லாமல் மீண்டும் வீட்டிற்கு வந்துவிட்டார். வீட்டில் இருந்த சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட்டார். வெளியூருக்கு புறப்பட்ட காரணத்தையே மறந்துவிட்டார். மறுநாள்தான் அவருக்கு அந்த நினைவே வந்தது. அந்த அளவிற்கு மிகப்பெரிய ராமபக்தராகவும், சிவபக்தராகவும் விளங்கினார் சுதிராம். எந்தச் சூழ்நிலையிலும் அவர் நேர்மை மாறவே இல்லை. யாரிடமும் கடனாகவோ, இலவசமாகவோ எதையும் பெறமாட்டார். ஒழுக்கமற்ற மனிதர்களைக் கண்டாலே ஒதுங்கிப்போவார். அவர் காயத்ரி ஜெபம் செய்யும்போது ஒரு தெய்வீக ஒளி வீசும். கன்னங்களில் கண்ணீர் வழியும். ராமசேவையிலேயே அவரது காலம் கழிந்தது. இதனிடையே மூத்த மகன் ராம்குமாருக்கும், மூத்த மகளுக்கும் திருமணம் நடந்து முடிந்தது. ராம்குமார் ஜோதிடக்கலையில் வல்லவர். தந்தையாரின் தொழிலில் உதவியாக இருந்தார். இதனால் குடும்பத்தில் மீண்டும் செல்வவளம் செழித்தது. ராம்குமாரிடமும் தெய்வீகசக்திகள் இருப்பதாக ஊரார் நம்பினர். அவரது ஜோதிடம் சரியாக இருந்ததால் கூட்டம் மொய்த்தது. காளிதேவியை ராம்குமார் வழிபட்டு வந்தார். ஒருமுறை காளி கோயிலுக்கு அவர் சென்றிருந்தார். அப்போது அதிபயங்கர வடிவத்தில் காளிதேவி அவர் முன்பு தோன்றினாள்.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
புதன், 2 டிசம்பர், 2020
ராமகிருஷ்ணர் பகுதி இரண்டு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக