புதன், 25 நவம்பர், 2020

அருள் மிகு அட்சயபுரீஸ்வரர் திருக் கோவில்

அருள் மிகு அட்சயபுரீஸ்வரர் திருக் கோவில்
 



மூலவர் :அட்சயபுரீஸ்வரர்
அம்மன் :அபிவிருத்தி நாயகி
தல விருட்சம் :வில்வமரம்
பழமை :1000 வருடங்களுக்கு முன்
ஊர் :விளங்குளம்
மாவட்டம் :தஞ்சாவூர்
மாநிலம் :தமிழ்நாடு
 
திருவிழா:மகா சிவராத்தரி, திருக்கார்த்திகை, திருவாதிரை   
       
தல சிறப்பு:இத்தலத்தில் சனீஸ்வர பகவான் தெற்கு நோக்கி மந்தா, ஜேஷ்டா மனைவியருடன் திருமண கோலத்தில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.   
       
திறக்கும் நேரம்:காலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில், விளங்குளம்-614 612, பேராவூரணி தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்.போன்: +91 97507 84944, 96266 85051.  
      
பொது தகவல்:பூசம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வர். மனதில் தெய்வபக்தி மேலோங்கி இருக்கும். மென்மையுடன் மற்றவர்களிடம் பழகுவர். கவலைகளை மறந்து சிரிக்கும் பண்பைப் பெற்றிருப்பர். எடுத்த செயலை வெற்றியோடு முடிக்கும் வைராக்கியம் இருக் கும். நண்பர்கள் மத்தியில் புகழோடு வாழ்வர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சண்டிகேஸ்வரர், மனைவியருடன் சனீஸ்வரர், சூரியன், பைரவர், நந்தி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, லிங்கோத்பவர், துர்க்கை, கஜலட்சுமி, நாகர், நடராஜர் சன்னதிகள் உள்ளன.

பிரார்த்தனை:பூசம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். உடல் ஊனமுள்ளவர்கள், கால் வலி உள்ளவர்கள், தோஷங்களினால் திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்க வழிபாடு செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:பூச நட்சத்திரத்திற்குரியவர்கள் நல்லெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், புனுகு, இளநீர், சந்தனம், பால், தயிர் ஆகிய எட்டு வகை பொருள்களால் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து, எட்டு முறை சுற்றி வந்து வழிபட்டால் தீராத பிரச்னைகள் தீரும்.  

தலபெருமை: பூச பத நேசம் தரும் என்பது பழமொழி. பதன் என்பது சனீஸ்வரரை குறிக்கும். சனிபகவான் தன் பாத குறைபாடு நீங்க இத்தல் அட்சய புரீஸ்வரரை வேண்டி நிவாரணம் பெற்ற தலமே விளங்குளம். எனவே பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனிக்கிழமைகளிலோ, பூச நட்சத்திர தினத்தன்றோ, அட்சய திரிதியை நாளிலோ இத்தல இறைவனை வழிபட்டால் வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 27 நட்சத்திரத்தில் பூச நட்சத்திரம் 8வது நட்சத்திரமாக அமைந்துள்ளது. இதனால் பூச நட்சத்திரத்திற்குரியவர்கள் இந்த நாட்களில் நல்லெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், புனுகு, இளநீர், சந்தனம், பால், தயிர் ஆகிய எட்டு வகை பொருள்களால் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து, எட்டு முறை சுற்றி வந்து வழிபட்டால் தீராத பிரச்னைகள் தீரும் என்பதும், அனைத்து வகையான சனி தோஷத்தினால் பாதிக்கப்ட்டவர்கள் இத்தலத்தில் மனைவியருடன் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கும் சனிபகவனை வழிபட்டால் தோஷங்களின் பாதிப்பு குறையும் என்பதும் ஐதீகம்.அடிக்கடி உடல் நலக்குறைவு, கடன் பிரச்னையால் அவதிப்படுபவர்கள், மன நிம்மதி வேண்டுபவர்கள், ஊனமுற்றவர்கள், கால் சம்பந்தமான நோய் உள்ளவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள் விளங்குளம் சனீஸ்வரரை வழிபட்டு வரலாம். இங்கு சனீஸ்வர பகவான் மந்தா, ஜேஷ்டா என்ற மனைவியருடன் திருமண கோலத்தில் ஆதிபிருஹத் சனீஸ்வரர் என்ற பெயரில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தல அபிவிருத்தி நாயகியை வழிபட்டால் சகல காரியங்களும் அபிவிருத்தியாகும். இத்தலத்தில் நவக்கிரக சன்னதி கிடையாது. அதற்கு பதில் சூரியனும் அவரது புத்திரர் சனிபகவானும் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர். விநாயகர் இத்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இதுபோன்ற அமைப்பை காண்பது அரிது. இவரை வழிபட்டால் அனைத்து காரியங்களிலும் விஜயம் கிடைக்கும் என்பதால் இவர் விஜய விநாயகர் என அழைக்கப்படுகிறார்.   
       
தல வரலாறு:பூச பதன் நேசம் தரும் என்பது பழமொழி. பதன் என்பது சனீஸ்வரரைக் குறிக்கும். ஒருமுறை எமதர்மராஜன், தன் தந்தையான சனீஸ்வரனின் காலில் அடிக்க அது ஊனமானது. இதற்கு நிவாரணம் தேடி பல சிவத்தலங்களுக்கு அவர் சென்றார். இத்தலத்துக்கு வந்தபோது, விளாமரவேரில் கால் இடறி அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தார். அவர் விழுந்தநாள் திருதியையும், பூச நட்சத்திரமும், சனிவாரமும் சேர்ந்த நன்னாளாக இருந்தது. அவர் விழுந்த இடத்தில் இருந்து, பல காலமாக மறைந்திருந்த பூச ஞானவாவி தீர்த்தம் சுரந்து சனீஸ்வரரை மேல் எழுப்பி கரை சேர்த்தது. அப்போது சிவபெருமான் அட்சயபுரீஸ்வரராக சனீஸ்வரருக்கு காட்சிதந்து, திருமண பாக்கியமும் தந்தார். சனீஸ்வரரின் ஊனம் நிவர்த்தி ஆனது. விளாமரம் இருந்ததாலும், தீர்த்தம் சுரந்ததாலும் இவ்வூர் விளங்குளம் ஆனது. பூச நட்சத்திர லோகத்தில் வசித்த பூச மருங்கர் என்ற சித்தர், சனீஸ்வர லோகத்திலிருக்கும் சனிவாரி தீர்த்தத்தை எடுத்து, பூமியில் பல கோயில்களில் உள்ள தீர்த்தங்களில் அதை சேர்ப்பார். அந்த தலங்களில் எல்லாம் சனீஸ்வரருக்கு முக்கியத்துவம் உண்டாயிற்று. இந்த சித்தர் சூரியலோகத்துக்கும், பித்ரு லோகத்துக்கும் கூட தினமும் சென்று வரும் அரிய சக்தியை உடைய பித்ரசாய் என்னும் காக்கைகளுக்கு சற்குருவாக விளங்குகிறார். இவர் தினமும் இத்தலத்தில் வழிபாடு செய்வதாக ஐதீகம்.

கருத்துகள் இல்லை: