ஞாயிறு, 29 நவம்பர், 2020

ராமாயணம் பகுதி ஏழு

ராமாயணம் பகுதி ஏழு

மிகச்சிறந்த முகூர்த்த நாள் ஒன்றை விசுவாமித்திரர் குறித்தார். திருமணவிழாவிற்கான ஏற்பாடுகள் மிதிலையில் மிகச்சிறப்பாக நடந்தன. தங்கள் நான்கு இளவரசிகளுக்கும் திருமணம் என்பதால் ஊரே கோலாகலமாக இருந்தது. எங்கும் மகிழ்ச்சி புயல்தான். மணநாளும் வந்தது. மணக்கோலம் பூண்ட நான்கு ராஜகுமாரர்களும் மணமேடைக்கு வந்தனர். மங்கள ஓசை முழங்கியது. எங்கு பார்த்தாலும் மங்கலச் சின்னங்கள். மணவிழாவுக்கு வந்த மக்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. அனைவரும் அதை அணிந்து கொண்டனர். அனைவரது கையிலும் மஞ்சள் அரிசி கொடுக்கப்பட்டது. ஒருபக்கம் விருந்து விசேஷம் நடந்து கொண்டிருந்தது. ராம சகோதரர்களுக்கு திருமணம் முடிக்க விஜயா என்ற முகூர்த்த நேரம் குறிக்கப்பட்டிருந்தது. இந்த நேரம் உலகம் பிறந்ததிலிருந்து அந்த ஒரே ஒருமுறைதான் வந்ததாம். இப்படி ஒரு நேரம் இனியார் வாழ்விலும் வரப்போவதும் இல்லை. அப்படிப்பட்ட சிறப்பான முகூர்த்தத்தில் சீதாபிராட்டியின் கழுத்தில் மங்கல நாண் பூட்டினார் ராமபிரான். அண்ணியின் கழுத்தில் அண்ணன் தாலி அணிவித்த அந்த இனிய காட்சியை மற்ற தம்பிகளும் அவர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகள்களும் கண்டு மகிழ்ந்தனர். ஜனக மகாராஜா ராமச்சந்திரமூர்த்தியின் கைகளைப் பிடித்து, ஸ்ரீராமா! என் மகள் சீதை இன்று முதல் உன்வாழ்வில் அறம் வளர்க்கும் துணைவியாக இருப்பாள். அவளது கரத்தை உனது கையினால் பற்றிக் கொள் என்றும், இவளோடு சிறந்து வாழ். உனக்கு மங்களம் உண்டாகட்டும். உன்னை கணவனாக பெற்றதால் அவள் பாக்கியவதியாகிறாள். உனது நிழல் போல எக்காலமும் உன்னை தொடர்ந்து வருவாள். ஒரு கணம் கூட உன்னை பிரிந்திருக்கமாட்டாள். நீயே கதி என பேரன்புடன் இருப்பாள், என்று உறுதிமொழி அளித்தார்.

பின்பு அவரே மந்திரங்களை ஓதினார். தன் கையில் இருந்த புனித தீர்த்தத்தை ராமனின் கரத்தில் தெளித்தார். அப்போது தேவலோகத்திலிருந்து முரசு சத்தம் கேட்டது. தேவர்களும், முனிவர்களும் வானுலகிலிருந்து பூமழை பொழிந்தனர். இறைவனுக்கே திருமணம் நடக்கும்போது தேவர்கள் மனதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவா வேண்டும்! அதேநேரம் இந்த உலகில் உள்ள கெட்டவர்களின் உள்ளங்களில் இனம்புரியாத நடுக்கம் ஏற்பட்டது. அது ஏன் என அவர்களால் உணரமுடியவில்லை. உலகில் உள்ள நல்லவர்களுக்கு மட்டுமே ராமனின் திருமணக் காட்சி தரிசனம் கிடைத்துக் கொண்டிருந்தது. பிறகு ஜனகர் லட்சுமணனின் அருகில் வந்தார். தன் மகள் ஊர்மிளாவை அவனுக்கு தாரை வார்த்துக் கொடுத்தார். இதையடுத்து தன் தம்பி பெண்களையும் தன் பெண்களாக பாவித்து, மாண்டவியை பரதனுக்கும், சுருதகீர்த்தியை சத்ருக்கனனுக்கும் திருமணம் செய்து கொடுத்தார். நான்கு தம்பதிகளும் அக்னியை வலம் வந்தனர். ஜனகரையும், தசரதரையும் விழாவிற்கு வந்திருந்த மற்ற முனிவர்களையும் வணங்கினர். அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றனர். சாஸ்திரவிதி சற்றும் தவறாமல் இந்த திருமணம் நடந்தேறியது. இவ்விடத்தில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். சாஸ்திரவிதிகள் தவறாமல் நடந்தாலும், மனிதனாகப் பிறந்துவிட்டால் அவன் துன்பத்திற்கு ஆட்பட்டே ஆக வேண்டும் என்பதை இந்த திருமணக்காட்சி விளக்குகிறது. தெய்வத்தின் திருமணமாக இருந்தாலும், தெய்வம் மனிதனாக அவதரித்திருப்பதால் பின்னால் படப்போகும் கஷ்டங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவில்லை. இந்த திருமணத்திற்காக பொருத்தம் பார்க்கப்பட்டது. அனைத்தும் நல்லவிதமாகவே நிறைவேறியது. இருப்பினும் கூட ராமனும், லட்சுமணனும் அவர்களது மனைவியரை பிரிய நேர்ந்தது. ஜோதிடம் பார்த்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்பவர்கள்கூட பிரிந்து போய்விடுவதன் தத்துவம் இதுதான். மனிதத் திருமணங்கள் கருத்து வேறுபாடின்றியோ, பிரிவினை இன்றியோ அமையாது.

இதன்பிறகு விசுவாமித்திரர் தசரதரிடமும், ஜனகரிடமும் விடைப்பெற்றார். தன் பணி முடிந்த மகிழ்ச்சியுடன் இமயமலைக்கு தவம் இருக்கச் சென்றார். ஜனகர் தம் புதல்விகளுக்கு தகுந்த சீர்வரிசை அளித்து அயோத்திக்கு மணமக்களை அனுப்பி வைத்தார். செல்லும் வழியிலேயே ராமபிரானுக்கு கடும் சோதனை ஏற்பட்டது. திடீரென பேய்க்காற்று வீசியது. பறவைகள் அங்குமிங்கும் பறந்து திரிந்தன. அவை பயந்துபோய் கீச்சிட்டன. பலமான்கள் அங்குமிங்கும் பாய்ந்து ஓடின. இயற்கையின் சீற்றமோ என அனைவரும் கருதினர். ஆனால் அவர்கள் நடந்து கொண்டிருந்த அந்த இரவு வேளையிலும் அதி பயங்கர இருட்டில் ஒரு முனிவர் தோன்றினார். இருளிலும் அவர் ஒளிர்ந்தார். அவர்தான் ஜமதக்னி முனிவரின் மகன் பரசுராமர். அவர் ஜடாமுடி தரித்தவர். அவரது கண்கள் கோவைப்பழம் போல சிவந்திருந்தன. அவரது நோக்கமே அரச குலத்தினரை அழிப்பதுதான். ராமனுடன் வந்த முனிவர்கள் எல்லாம் பரசுராமரை வணங்கினார்கள். ஆனால் அந்த வணக்கத்தை பரசுராமர் ஏற்றுக் கொள்ளவில்லை. பரசுராமர், ராமசகோதரர்களை வழிமறிக்க காரணமும் இருந்தது. இவரது தந்தை ஜமதக்னியை அரசன் ஒருவன் கொன்றுவிட்டான். எனவே, இந்த உலகில் அரசகுலமே இருக்கக்கூடாது என பரசுராமர் சபதமிட்டிருந்தார். ஏராளமான அரசர்களை கொன்றும் குவித்தார். இப்போது தசரதர், மற்றும் அவரது நான்கு இளவரசர்கள் கண்ணில்பட்டு விட்டதால் அவர்களையும் அழிக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது. அவர் ராமரைப் பார்த்து கோபத்துடன் பேச ஆரம்பித்தார்.


கருத்துகள் இல்லை: