வியாழன், 22 அக்டோபர், 2020

ஓம் ஸ்ரீ துர்க்காயை நம:

 ஓம் ஸ்ரீ துர்க்காயை நம:
==================


அஞ்ஞாதவாசத்திற்காக விராட நகரத்தினுள் செல்வதற்கு முன்னால் யுதிஷ்டிரர் துர்க்கையை மனமுருகப் பிரார்த்திக்கிறார். நான் எழுதிக்கொண்டிருக்கும் வியாஸபாரதத்தில் விராடபர்வம் எழுதும் போது கதையின் விறுவிறுப்பு தொய்வடையக்கூடாது என்பதற்காக ஒரு வரியில் யுதிஷ்டிரர் துர்க்கையைக் கும்பிட்டார் என்று கடந்துவிட்டேன். நலமருளும் நவராத்திரி நடந்து கொண்டிருப்பதாலும் யுதிஷ்டிரர் செய்த துர்க்கைத் துதியை இங்கே கொடுத்தால் பலருக்குப் புண்ணியம் என்பதாலும்.... இதோ அந்த துதி:

********

திவ்யமான வஸ்திரங்களை உடுத்தி புஷ்ப மாலைகளினால் அலங்கரிக்கப்பட்டு சத்ருக்களை சம்ஹாரம் செய்பவளான துர்க்கையை மனதினால் ஸ்தோத்திரம் செய்பவர்களை அவள் எப்படிக் காப்பாற்றுவாள் தெரியுமா? புதைச் சேற்றில் அகப்பட்டுக்கொண்ட பலஹீனமான பசுவை கரையேற்றுவது போல துதிப்பவரின் பாவங்களிலிருந்து கரையேற்றுகிறாள்... என்கிறார் வியாஸர். கம்சனால் தூக்கிக் கல்லில் அடிக்கப்பட்டபோது குபீரென்று விண்ணுக்குக் கிளம்பிய வாஸுதேவரின் சகோதரி அவள். தன்னுடைய இளைய சகோதரர்களுடன் அவளை பிரத்யட்சமாகத் தரிசிப்பதற்காக அவளைப் போற்றத் துவங்குகிறார்.

"வரங்களை அளிப்பவளே!
கறுத்த நிறமுடையவளே!
நித்ய யவௌனம் உடையவளே!
வேத சஞ்சாரியே!
பால சூரியனுக்கு ஒப்பான வடிவுடையவளே!
பூர்ண சந்திரன வதனம் உடையவளே!
நான்கு கைகளை உடையவளே!
நான்கு முகங்களை உடையவளே!
பருத்த ஸ்தனங்களைக் கொண்டவளே!
மயில் தோகை நிற கங்கணங்கள் உடையவளே!
நீ நீலமேகம் போல கறுத்த நிறமுடையவள்!
உன் கைகளில் பல ஆயுதங்களைத் தாங்குகிறாய்!
உன்னுடைய இடுப்பிலிருக்கும் சர்ப்பத்திலான கடிசூத்திரத்தினால் வாஸுகியினால் சுற்றப்பட்ட மந்திரபர்வம் போல விளங்குகிறாய்!
மயில் தோகைகளினால் செய்யப்பட்ட உயர்ந்த கொடியினால் விளங்குகிறாய்!
நீ பிரம்மச்சர்ய விரதத்திலிருந்து தேவலோகத்தைக் காப்பாற்றினாய். ஆகையால் அவர்கள் உன்னை ஸ்தோத்திரம் செய்கிறார்கள்.
மூவுலகங்களையும் ரக்ஷிப்பதற்காக மஹிஷாஸுரனைக் கொன்றாய்!
எனக்கு நீ பிரசன்னமாக வேண்டும் தாயே!

நீ எனக்குக் கருணை புரி!
எனக்கு மங்களைத்தை அருள்!
யுத்தத்தில் ஜயத்தைக் கொடுக்கும் நீயே ஜயஸ்வ ரூபிணியாகவும் விஜயஸ்ய ரூபிணியாகவும் இருக்கிறாய்!
நீ இப்போது எனக்கும் ஜயத்தைக் கொடு!
ஏ காளீ! மஹா காளீ! சாராயத்திலும் மாமிசத்திலும் பசுக்களிலும் விருப்பமுள்ளவளே!
பர்வதங்களுள் ஸ்ரேஷ்டமான விந்தியபர்வதமே உன் வாசஸ்தலம்!
இஷ்டங்களை அருளி இஷ்டப்படி பல ரூபங்களில் சஞ்சரிப்பவள் நீ!
எந்த மனிதர்கள் உன்னை விடியற்காலையில் நினைக்கிறார்களோ அவர்கள் சத்புத்திரர்களையும் ஐஸ்வரியத்தையும் அடைவது அரிதல்லவே!
காட்டில் கஷ்டப்படுபவர்களுக்கும் பெரும் சமுத்திரத்தில் மூழ்குபவர்களுக்கும் திருடர்களால் வழிமறிக்கப்படுபவர்களுக்கும் நீயே

துர்க்கம் என்னும் முதலைகள் நீந்தும் அகழியிலிருந்து பிராணிகளியக் காப்பதினால் உன்னை துர்க்கை என்றழைக்கிறார்கள்.

ஏ மஹாதேவீ!  ஜலத்தைத் தாண்டும் போதும் அரண்யங்களில் வசிக்கும் போதும் பிரவேசிக்கவே முடியாத மலைக்காடுகளிலும் உன்னை நினைப்பார்கள் கஷ்டத்தை அடையவே மாட்டார்கள்.

நீயே கீர்த்தி;
நீயே ஸ்ரீதேவி;
நீயே தைரிய லக்ஷ்மி;
நீயே கார்யஸித்தி;
நீயே ஹ்ரீ (அபாண்டமான காரியங்கள் செய்யும் போது உண்டாகும் வெட்கம்)
நீயே கல்வி;
நீயே சந்ததி;
நீயே புத்தி;
நீயே சந்த்யை;
நீயே ராத்ரி;
நீயே ஒளி;
நீயே உறக்கம்;
நீயே நிலவு;
நீயே காந்தி (Khaanthi);
நீயே பொறுமை;
நீயே தயை;

உன்னை பூஜிப்பதினால் மனிதர்களின் மோகத்தையும் பந்தத்தையும் மக்கள் அழிவையும் பொருள் அழிவையும் வியாதியையும் மரணத்தையும் பயத்தையும் போக்குவாய்!

தேவீ!  ராஜ்ஜியத்திலிருந்து தோற்ற நான் உன்னைச் சரணமடைந்தேன்.

தாமரை இதழ் போல கண்களை உடையவளே; எனக்குப் பாதுகாப்பாக இரு!

ஸத்யஸ்வரூபிணியே! எங்கள் விஷயத்தில் சத்தியமாக இரு!!

ஹே துர்க்கையே!  பக்தர்களிடத்தில் அன்புள்ளவளே! நீ என்னை ரக்ஷிப்பாயாக"

இவ்வாறு யுதிஷ்டிரர் பிரார்த்தித்தவுடன் நேரில் தோன்றி அவர்களைக் காப்பதாக வாக்களித்தாள் துர்க்காம்பிகை.

இதப் படிப்பதால் உண்டாகும் பலன்களை பலஸ்ருதியாக துர்க்கையே சொல்கிறாள்.

"ஓ! பாண்டவர்களே! இந்த உத்தமமான ஸ்தோத்திரத்தை எவன் பக்தியோடு கேட்பானோ அல்லது படிப்பானோ அல்லது சொல்வானோ அவனுடைய காரியங்களெல்லாம் சித்தியடையும். அவர்களுக்கு ராஜ்ஜியத்தையும் ஆயுளையும் சரீரத்தையும் சத்புத்திரர்களையும் கொடுப்பேன்"

இப்படி வரமருளி அந்த இடத்தில் மறைந்துபோனாள்!

#வியாஸபாரதம்
#துர்க்கை_துதி
#நவராத்திரி_2020


கருத்துகள் இல்லை: