சனி, 4 ஜனவரி, 2020

அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில்,திருவல்லிக்கேணி
                                             {பகுதி:1}

திருவரங்கம் திருவேங்கடம் காஞ்சிபுரம் திருஅயோத்தி திருஅகோபிலம் ஆகிய ஐந்து திவ்ய தேசங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் வண்ணம் அமையப்பெற்ற அற்புதத்தலம்.108 வைணவ திவ்ய தேசங்களில் பெருமாள் மீசையுடன் காட்சியளிக்கும் அழகியத் திருத்தலம். கிழக்கு, மேற்கு ஆகிய இரண்டு வாயில்களில் இரண்டு மூர்த்திகள் முதல் மூர்த்தியாக சேவை சாதிக்கும் புண்ணியத் தலம். ஸ்ரீபெரும்புதூர் மாமுனி உடையவர் இராமானுஜர் என்னும் எதிராஜரை இந்த பூமிக்கு தந்தருளிய பெருமாள் குடிகொண்டுள்ள ஒப்பற்ற தலம்.108 வைணவ திவ்ய தேசங்களில் 60வது திருத்தலம். பேயாழ்வார் திருமழிசையாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்த திருத்தலம். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருவரங்கம் போலவே ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெறும் சிறந்ததொரு திருத்தலம். இவ்வாறு ஏராளமான பெருமைகளையும் மகிமைகளையும் சிறப்புகளையும் உள்ளடக்கிய ஒப்பற்ற திருத்தலம் இதுவாகும்.

திருவட்டாறு திருசிற்றாறு ஆகிய தலங்களைப் போலவே தீர்த்தத்தின் பெயரால் பெருமை பெற்ற தலங்களில் திருவல்லிக்கேணியும் ஒன்று.இத்தல தீர்த்தத்திற்கு கைரவணீஎன்று பெயர்.கைரவம் என்பதற்கு செவ்வல்லி என்பது பொருள்.புராண காலத்தில் இத்தீர்த்தத்தில் செவ்வல்லி மலர்கள் பூத்துக் குலுங்கிய காரணத்தால் தமிழில் அல்லிக்குளம் என்றும் வடமொழியில் கைரவணி என்றும் குறிப்பிட்டனர்.பிற்காலத்தில் அல்லிக்கேணி என்ற பெயரில் இத்தலம் அழைக்கப்பட்டது.திருமால் குடிகொண்டுள்ள அல்லிக்கேணி என்பதால் இவ்விடம் திருவல்லிக்கேணி எனப் பெயர் பெற்றது.

திருவல்லிக்கேணி திருத்தலத்தில் பரந்தாமனான திருமால் ஐந்து வடிவங்களில், ஐந்து சன்னதிகளில் தனித்தனியாக சேவை சாதிக்கிறார்.

அருள்மிகு வேங்கடகிருஷ்ணன் (பார்த்தசாரதி),
அருள்மிகு மனநாதர் (அரங்கநாதர்),
அருள்மிகு இராமபிரான்,
அருள்மிகு கஜேந்திர வரதர்,
அருள்மிகு தெள்ளிய சிங்கர் (நரசிம்மர்).

இந்த ஐந்து மூர்த்திகளின் கருவறைகள் மீதும் ஆனந்த விமானம் பிரணவ விமானம் புஷ்பக விமானம் சேஷ விமானம் தைவீக விமானம் ஆகிய ஐந்து விமானங்கள் அமைந்துள்ளன. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஐந்து திவ்ய தேசங்களை ஒரே இடத்தில் தரிசிக்கும் வண்ணம் அமையப் பெற்றது மிகச்சிறந்த ஒன்றாகும். அதில் மனநாதராகிய அரங்கநாதர் சன்னதி மட்டுமே மிகப் தொன்மையானது.

தலைக்குறிப்பு:
மூலவர் :வேங்கடகிருஷ்ணன்
உற்சவர் :பார்த்தசாரதி
தாயார் :ருக்மணி தாயார்
ஆகமம் :வைகானசம்
தீர்த்தம் :கைரவணீ புஷ்கரணி
புராணப்பெயர் :விருந்தாரன்ய செத்திரம்
ஊர் :திருவல்லிக்கேணி

பார்த்தசாரதி வரலாறு:பகவான் கண்ணன் துவாபரயுகத்தின் முடிவில் கிருஷ்ணாவதாரம் எடுத்த நோக்கம் முடிவுற்றதும் வைகுண்டம் செல்கிறார்.அப்போது கலியுகம் தோன்றுவதற்கான தூர்நிமித்தங்கள் ஏற்படுகின்றன.கலியின் கொடுமையால் பூமியில் அதர்மங்கள் தழைத்தோங்கும் என்பதை அறிந்த ஆத்ரேய மகரிசி தனது குருவான வியாச மகரிசியை சந்தித்து, நல்லவர்கள் கலியின் கொடுமையிலிருந்து விடுபட்டு உய்யும் வகையைக் கூறுமாறு வேண்டினார்.

அப்போது வியாசர் அதுவரை தாம் ஆராதித்து வந்த "பார்த்தசாரதி பெருமாளின்" திருமேனி உருவத்தைத் தந்து தென் பாரதத்தில் துளசிவனம் நிறைந்து காணப்படும் விருந்தாரன்யத்தில் உள்ள (ரங்கநாதர்)மனநாதன் திருக்கோயிலில் வைத்து ஆகம முறைப்படி வழிபட்டு வந்தால் சகல நன்மைகளும் ஏற்படும் என்றார்.திருவல்லிக்கேணி தலம் அமைந்துள்ள பகுதி புராண காலத்தில் விருந்தாரண்யம் என்று அழைக்கப்பட்டது.அதன்படியே ஆத்ரேய மகரிசியும் விருந்தாரண்யம் வந்து அருள்மிகு பார்த்தசாரதி சுவாமியின் திருவுருவத்தை வைத்து வழிபாடு செய்து வந்தார்.கலியின் கொடுமையிலிருந்து பூமியைக் காக்கும் பொருட்டு பார்த்தசாரதி சுவாமியை இங்கு வைக்கப்பட்டதால் அன்றுமுதல் இக்கோவிலில் அருள்மிகு பார்த்தசாரதி சுவாமியே முதன்மையான கடவுளாக வழிபாடு செய்யப்பட்டு வருகின்றனர்.

வேங்கடவன் திருநாமம்:பிற்காலத்தில் துண்டீரம் என்ற நாட்டை சுமதி என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான்.துண்டீரம் என்பதே துண்டீர மண்டலம் என ஆகி அதுவே திரிந்து பிற்காலத்தில்"தொண்டை மண்டலம்"ஆயிற்று என்பர்.அரசன் சுமதி திருமலை திருப்பதியில் கோவில் கொண்டுள்ள திருவேங்கடமுடையான் மீது தீவிர பக்தி கொண்டு வழிபட்டு வந்தான்.

இவ்வரசனுக்கு பார்த்தனுக்கு
(அர்ச்சுனனுக்கு) சாரதியாக
(தேரோட்டியாக) விளங்கிய கிருஷ்ணன் திருக்கோலத்தை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. எனவே சுமதி தனது விருப்பத்தை நிறைவேற்றி வைக்குமாறு ஏழுமலையானான திருவேங்கடமுடையானை மனமுருகி வேண்டினான்.அவன் பக்திக்கு மனமிறங்கிய "ஏழுமலையான் வெங்கடேசர்" அவன் கனவில் தோன்றி விருந்தாரண்யம் சென்றால் விருப்பம் நிறைவேறும் என்று ஆசிர்வதித்தார்.அதன்படியே மன்னன் சுமதி விருந்தாரண்யம் வந்து ஆத்ரேய முனிவரால் வழிபாடு செய்யப்பட்டு வந்த அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோலத்தைக் கண்டு மனம் குளிர சேவித்தான்.திருமலையில் உள்ள வேங்கடநாதனே இங்கு கிருஷ்ணனாக காட்சி தருவதைப்போல உணர்ந்தான். எனவே "வேங்கட கிருஷ்ணன்" என்ற திருநாமம் சூட்டி வழிபட்டு வந்தான். அன்று முதல் இன்று வரை இத்திருக்கோயில் மூலவருக்கு "வேங்கட கிருஷ்ணன்" என்ற திருநாமமே வழங்கப்பட்டு வருகிறது.
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் இத்தளத்தின் மீது பத்து பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்துள்ளார். திருமங்கையாழ்வார் அருள்மிகு பார்த்தசாரதி சுவாமியை பெரிய திருமொழி பகுதியில், இரண்டாம் பத்து, மூன்றாம் திருமொழியில் அழகாக பாடியுள்ளார்.

விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும்
வேழமும் பாகனும் வீழ செற்றவன் தன்னை புரமெரி செய்த
சிவனுரு துயர்களை தேவை பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர்முன் நின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானைத்
திருவல்லிக்கேணி கண்டேனே.
(திருமங்கையாழ்வார்)

திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி சுவாமி தமது குடும்பத்துடன் காட்சியளிக்கிறார். ஒரே கருவறையில் பகவான் தமது உறவினர்களுடன் காட்சியளிக்கும் திருக்கோலத்தை "பஞ்ச வீர வழிபாட்டு மரபு" என்று அழைப்பது வழக்கம். இதுபோன்ற அமைப்பு திருத்தங்கல் (89வது திவ்யதேசம்)திருநறையூர் என்னும் நாச்சியார்கோவில்(14வது திவ்யதேசம்)தேரழுந்தூர் (23வது திவ்யதேசம்)ஆகிய திவ்யதேசங்களில் காணப்படுகின்றன.

கருவறையில் மூலவர் அருள்மிகு வேங்கட கிருஷ்ணன், நின்ற திருக்கோலத்தில் இரண்டே திருக்கரங்களுடன் வலது கரத்தில் "பாஞ்ச சன்யம்"என்னும் சங்கை ஏந்தி இடதுகரம் வேங்கடவனைப் போன்று கீழ் முகமாக நோக்கி தான முத்திரையைக் காட்டுகிறது. மேலும் இடுப்பின் மேல்புறம் பேரொளி வீசும் வாள் ஒன்று தொங்குகிறது.

மகாபாரதத்தில் கண்ணபிரான் யுத்தத்தின் போது ஆயுதம் எடுப்பதில்லை என்று துரியோதனனிடம் சபதம் செய்தார். பிறகு வாள் ஏன் உள்ளது? என்ற கேள்வி எழக்கூடும்.இதற்கு வைணவப் பெரியவர்கள் பகவத்கீதையில் நான்காம் அத்தியாயம் 42வது சுலோகத்தில் உள்ளதைக் கொண்டு விளக்கம் அளிக்கின்றனர்.

அஞ்ஞானத்தின் பிடியில், அதாவது உலகப் பற்றில் அடைபட்டுக் கிடந்த பார்த்தனிடம் அஞ்ஞானத்திலிருந்து பிறந்ததும் உள்ளத்தில் உறைவதும் ஆகிய இந்த பற்றிலிருந்து விடுபட ஞானமென்னும் வாளால் வெட்டி, யோகத்தில் நிலைபெறுக! பார்த்தா எழுந்திரு! என்று கூறுகிறார். நம்மைப் போன்ற சாதாரண மக்களிடம் ஏற்படக்கூடிய அஞ்ஞானம் என்னும் இருளை அகற்றுவதரற்க்காகவே பகவான் இத்தலத்தில் ஞானவாளுடன் சேவை சாதிப்பதாக வைணவப் பெரியவர்கள் கூறுகின்றனர்.

பெருமாளுக்கு வலதுபுறம் "ருக்மணி பிராட்டி" அழகிய திருமேனியோடு காட்சி தருகின்றார்.

பெருமாளுக்கு இடதுபுறம் தம்பி சாத்தகி கிழக்கு நோக்கியவாறு காட்சி தருகின்றார். சாத்தகி தனது வலது கரத்தில் கட்கம் என்ற குறுவாளை ஏந்தியும், இடது கரத்தில் வரத முத்திரையை காட்டியும் சேவை சாதிக்கிறான்.

சாத்தகி எவ்வாறு கண்ணனுக்கு தம்பி முறை ஆகவேண்டும் என்பதற்கு மகாபாரதத்தில் சில குறிப்புகள் உள்ளன. கண்ணனின் தாயார் தேவகியின் சுயம்வரத்தின் போது ஏராளமான அரசர்கள் வந்தனர். மதுராபுரியின் அரசகுமாரரான வசுதேவருக்காக அவரது சகோதரன் “சினி” என்பவன், சுயம்வரத்தில் கலந்து கொண்ட அணைத்து அசுரர்களையும் வென்று வசுதேவரை தேவகிக்கு மனம் முடித்து வைத்தான். இந்த சினியின் மகனே சத்யகன். சத்யகன் மகனே சாத்தகி. எனவே விருட்னி குலத்து வீரனான சாத்தகி கண்ணனுக்கு தம்பிமுறை ஆகிறான்.

ருக்மணி பிராட்டிக்கு வலதுபுறமாக கண்ணனின் தமையனான பலராமர் கலப்பையுடன் வடக்கு நோக்கியவாறு காட்சி தருகின்றார்.

சாத்தகிக்கு அடுத்ததாக மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் ஆகியோர் தெற்கு நோக்கியவாறு காட்சி தருகின்றனர்.

ஒருமுறை சிவபெருமான் மன்மதனை தனது நெற்றிக்கண்ணால் எரித்து விடுகிறார். இந்த மன்மதன் கண்ணனுக்கும், ருக்மணி பிராட்டிக்கும் மகனாகப் பிறக்கின்றான். பேரழகு வாய்ந்த பிரத்யும்னன், சம்பராசுரனின் அரண்மனையில் வசித்து வந்த ரதிதேவியின் அம்சமான மாயாவதி என்பவளைத் திருமணம் செய்கிறான். பிரத்யும்னன் மாயாவதி தம்பதியர்கட்கு பிறந்தவனே அநிருத்தன்.இவன் கண்ணனின் பேரன் ஆவான்.

இதுவரை நாம் திருவல்லிக்கேணி திருத்தலத்தில் கோவில் கொண்டுள்ள ஐந்து மூர்த்திகளில் ஒருவரான அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி தோன்றிய வரலாற்றை மட்டுமே ஆரிந்துள்ளோம். முழு வரலாற்றையும் அறிந்துகோள்ள இன்று ஒரு நாள் போதுமா?

தொடரும்

கருத்துகள் இல்லை: