ஞாயிறு, 15 டிசம்பர், 2019

 அதிகாலையில் எழுபவரே உயர்ந்தவர்!

நம்மிடையே பல ஜாதிப்பிரிவுகள் உள்ளன. அவரவர் தங்கள் ஜாதியின் சிறப்பை எடுத்துக்கூறி உயர்ந்த ஜாதியாக கொள்கிறார்கள். ஆனால் யாரொருவன் காலையில் சூரியனைப் பார்க்கிறானோ அவனே உயர்ந்த ஜாதிக்காரன் என்கிறார் வேதத்திற்கு பதம் பிரித்த அத்ரி மகரிஷி.உதைநம் கோபா அத்ருஷன் அத்ருஷன் உதஹார்ய:அத்ருஷன் அத்ருஷன் என்கிறார்.இதற்கு சூரியனை முதலில் பார்க்கும் ஜாதி உயர்ந்தது என்று பொருள்.அதாவது காலையில் சூரியன் உதிக்கும் முன்பே எந்த நாடு எழுகிறதோ அந்த நாடே உருப்படும். திருப்பாவையில் ஆண்டாள் இதையே மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளால் என்கிறாள்.மதி என்றால் ஒளி என்றும் பொருளுண்டு.ஆயர்பாடி மக்கள் பசுக்களை மேய்ச்சலுக்காக ஓட்டிக்கொண்டு காலையிலேயே கிளம்புகிறார்கள்.அவர்களே முதலில் சூரியனைப் பார்க்கிறார்கள்.அடுத்து பெண்கள் குடங்களுடன் நீராட கிளம்பி விட்டார்கள்.அவர்கள் அடுத்ததாக சூரியனைப் பார்க்கிறார்கள். அவர்களும் கொடுத்து வைத்தவர்களே! இவர்களுக்கு பிறகு தான் சூரிய வெளிச்சம் தரையில் விழுந்து பூமியே சூரியனைப் பார்க்கிறதாம்.மதியை நிலா என்று எடுத்துக் கொள்ளலாம். பகலில் சூரியனும் இரவில் சந்திரனும் ஒளிரும் நாளே நற்செயல்கள் செய்ய உகந்த நாள்.அப்படிப்பட்ட உயர்ந்த நாளில் மார்கழி நோன்பு துவங்குகிறது, இதனால் தான் ராமபிரான் சூரியகுலத்திலும் கிருஷ்ணர் சந்திர குலத்திலும் அவதரித்தனர். இனிமேலாவது சூரியோதத்துக்கு முன் எழும் பழக்கத்தை மேற்கொண்டு உயர்ஜாதியில் ஒரு உறுப்பினர் ஆவீர்களா!
---------------------------------------------------------------------------------
12 ராசிகளுக்கான மார்கழி மாத பலன்கள்!

மார்க்கசீர்ஷம் என்ற வடமொழிச் சொல்லே தமிழில் மார்கழி ஆனது. மார்க்க என்றால் வழி.சீர்ஷம் என்றால் மேலான.ஆக மார்கழி என்றால் மேலான வழி எனப்பொருள்.பக்தியே மேலான வழி.அதிலும் இறைவனைச் சரணடைந்து விடுதல் மிக மிக உயர்ந்த வழி.இத்தகைய சிறப்பான மார்கழி மாதத்தின் 12 ராசிகளுக்கான பலன்களும் பரிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------
என்ன கோலம் போட்டால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கோலம் போட்டுக் கோலாகலமாக வாழுங்க: கோலம்போடும்போது கோடுகள் கோணல் மாணலாக இருந்தாலும் போட்டு முடித்தபின் எப்படிக் கோலாகலமான அழகுடன் இருக்கிறதோ அப்படியே கோலம் போடும் வீட்டினையும் மகாலட்சுமி தன் அருட்பார்வையால் நிறைப்பாள் என்பது ஐதிகம். கோலங்கள் தெய்வீக யந்திரங்களுக்கு சமமான கோலங்களை பூஜை அறையில் மட்டுமே போட வேண்டும். ஹ்ருதய கமலம், நவகிரக கோலங்கள், ஐஸ்வர்யக் கோலம், ஸ்ரீசக்ரக் கோலம் போன்றவை யந்திரம் போன்றவை. இவற்றை மஞ்சள் பொடியினாலும், அரிசிமாவினாலும் மட்டுமே போடுவது நல்லது. அழகுக்காக வண்ணப் பொடிகளைப் பயன்படுத்தினால் கோலத்திற்கு உரிய தெய்வம் அல்லது கிரகத்திற்கு உரிய வண்ணத்தில் போடலாம்.  இத்தகைய கோலங்களால் தெய்வீக அருள் நிரம்பும் தோஷங்கள் விலகும். சுப காரியங்களுக்காகப் போடப்படும் கோலங்கள் கண்டிப்பாக இரட்டை இழைக்கோலங்களாகத்தான் இருக்க வேண்டும் ஒற்றை இழை ஒருபோதும் கூடாது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் சமயத்தில் போடும் கோலங்களுக்கு காவியால் அழகூட்டுவது சிறப்பானது. இப்படிப் போடுவதால் மங்கலம் சிறக்கும்; மனை விளங்கும்.  வீட்டு வாசலில் போடும் கோலங்களில் தெய்வீக வடிவங்கள் இடம்பெறக் கூடாது. புனிதமான பொருட்களின் வடிவங்களை வரைவதைத் தவிர்ப்பதும் நல்லது. அவற்றை பூஜை அறையிலோ வீட்டின் உள்ளே போடலாம். படிக்கோலத்தின் நான்கு மூலைகளிலும் போடும் தாமரை, திசை தெய்வங்களின் ஆசியைப் பெற்றுத்தரும். வாசல் படிகளில் குறுக்குக் கோடுகள் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. கோலத்தின் தொடக்கமும் முடிவும் கோலத்தின் மேற்புறமாக அமையும்படி போடுவது அவசியம். ஏறு முகமான பலனை இது தரும். கோலத்தில் இடப்படும் காவி சிவ சக்தி ஐக்கியத்தை உணர்த்துகிறது. இப்படிக் கோலமிடுவது, சகல நன்மையும் தரும்.
---------------------------------------------------------------------------------
திருவெம்பாவை-பாடல் 1

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியையாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்

பொருள்: வாள் போன்ற நீண்ட கண்களையுடைய தோழியே! முதலும் முடிவும் இல்லாத ஒளிவெள்ளமாய் பிரகாசிக்கும் நம் சிவ பெருமான் குறித்து நாங்கள் பாடுவது உன் காதில் கேட்கவில்லையா? செவிடாகி விட்டாயோ? அந்த மகாதேவனின் சிலம்பணிந்த பாதங்களைச் சரணடைவது குறித்து நாங்கள் பாடியது கேட்டு, வீதியில் சென்ற ஒரு பெண் விம்மி விம்மி அழுதாள். பின்னர் தரையில் விழுந்து புரண்டு மூர்ச்சையானாள். ஆனால், நீ உறங்குகிறாயே! பெண்ணே! நீயும் சிவனைப் பாட எழுந்து வருவாயாக!

விளக்கம்: திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மார்கழி அதிகாலையில் பவனி வருகிறார். அவரைத் தரிசிக்க பெண்கள் காத்து நிற்கிறார்கள். தங்களுக்கு கிடைத்த இந்த நற்பேறு தங்கள் தோழிக்கும் கிடைக்க வேண்டுமென்ற ஆசையில் அவளை எழுப்புகிறார்கள்.
---------------------------------------------------------------------------------
திருப்பதியில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை!

கைசிக ஏகாதசி விழாவையொட்டி, திருப்பதி கோவிலில் இருந்து நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்த வேங்கடமுடையான் வஸ்திர மரியாதையுடன், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பாப்பிராஜு, நிர்வாக அதிகாரி கோபால், ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், கோவில் இணை கமிஷனர் கல்யாணி ஆகியோர் வீதியுலா வந்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
---------------------------------------------------------------------------------
மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - சிறப்பு கோலங்கள்!

மார்க்கசீர்ஷம் என்ற வடமொழிச் சொல்லே தமிழில் மார்கழி ஆனது. மார்க்க என்றால் வழி. சீர்ஷம் என்றால் மேலான. ஆக, மார்கழி என்றால் மேலான வழி எனப்பொருள். பக்தியே மேலான வழி. அதிலும், இறைவனைச் சரணடைந்து விடுதல் மிக மிக உயர்ந்த வழி. ஆண்டாள், பெருமாளைச் சரணடைந்து தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினாள். அதற்காக, முப்பது நாள் நோன்பிருந்தாள். தான் மட்டுமின்றி, மற்றவர்களும் இறைவனை அடைய வேண்டும் என்ற மேலான நோக்கில், தோழியரையும் நோன்பிருக்கும்படி வற்புறுத்தினாள். பக்தி மட்டுமின்றி பொதுநலமும் மேலான வழி என்பதை இம்மாதம் நமக்கு எடுத்துரைக்கிறது.
---------------------------------------------------------------------------------
திருப்பாவை-பாடல் 1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.

விளக்கம்: இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.
---------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை: