சனி, 14 டிசம்பர், 2019

தாய் - தந்தை - குரு - தெய்வம்

(சிதம்பரனார் மாவட்டத்தில் கும்மிடிக்கோட்டை - வாலை குருநாதஸ்வாமி கோயிலில் கும்பாபிஷேகத்தில் சுவாமிகளின் அருள்வாக்கு)

கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்வார்கள். இந்த உயர்ந்த மனிதப்பிறவி எடுத்த எல்லோரும் நல்ல பழக்க வழக்கங்களோடு விளங்க வேண்டும். பக்தியும் மரியதையும் இருந்தால்தான் நல்ல பழக்கவழக்கங்கள் வரும் மூன்று பேர்களிடத்திலே பக்கிதியோடு இருக்க வேண்டும்.

தாய் தந்தையரிடத்திலே பக்தியோடு இருக்க வேண்டும். மரியாதையோடு இருக்க வேண்டும். குருவினடத்திலே பக்தியோட இருக்க வேண்டும். தெயவத்தினிடத்திலே பக்தியோடு இருக்க வேண்டும்.

முன்காலத்திலே பார்த்தால், படிப்பைத் தேடிக் கொள்வதற்காக குருவினடித்திலே சென்று அவருக்கு வேண்டிய சேவைகள் பணிவிடைகளெல்லாம் செய்து, பல காலங்கள் அவருடனேயே இருந்து, பாடமெல்லாம் கற்றுக் கொண்டார்கள். துரோணாச்சாரியாரிடத்திலே பலபேர் படித்தார்கள். ஆசிங்கரரிடத்திலே பலபேர் படித்தார்கள்.

ஒரே ஒரு முனிவரிடத்திலே ஆயிரம் பேர்கள் கூட படித்தார்கள். இதுபோல் பல நூறுபேர் சேர்ந்து படிக்கக் கூடிய இடத்திற்கு, கடிகாஸ்தானம் என்று பெயர். பல்கலைக்கழகம் என்று சொல்லுகிறோமே அது போன்று கடிகாஸ்தானம்.

உபமன்யு என்று ஒருவர், அவர் ஒரு முனிவரிடத்திலே சேவை செய்து, அவர் சொல்லும்படியெல்லாம் கேட்டுக்கொண்டு படித்தார். அவர் என்ன சாப்பிடச் சொல்லுகிறாரோ, அதைத்தான் சாப்பிடுவார். அவர் சொல்லும்படியெல்லாம் இருந்துகொண்டு கஷ்டப்பட்டுப் படித்தார்.

இதுபோல் கிருஷ்ணபரமாத்மா கூட சாந்த்வீபணி என்ற முனிவரிடத்திலே.. பகவானே.. படித்தார். ராமபிரானுக்கு விஸ்வாமித்திரர் நல் உபதேசம் செய்தார். எப்படிப் பசியை நீக்குவது, எப்படித் தூக்கத்தை வெல்வது என்றெல்லாம் விஸ்வாமித்திரர் ராமபிரானுக்குச் சொல்லிக் கொடுத்தார். அது குருபக்தி.

அதுபோன்று தாய் தந்தையர்களுக்குச் செய்ய வேணடியதைச் செய்து, மதித்தார். இப்படி மதித்தவர்களில் பெரிய உதாரணம் பிள்ளையார்.

உலகமனைத்துமே தாய் தந்தையர்தான் என்று தாய் தந்தையரையே வலம் வந்தவர். அதன் மூலமாக ஒரு பழத்தையே பெற்றவர்.

அதுபோல, சிரவணகுமாரன் என்று ராமாயணத்திலே வருகிறது, வயதான தாய் தந்தையருக்குப் பணிவிடைகளெல்லாம் செய்து வந்தார். ஒரு சமயம் தசரத மகாராஜா வேட்டைக்காகச் செல்லும்பொழுது ஒரு யானை தண்ணீர் குடிக்கிற மாதிரிச் சத்தம் கேட்டது. அதைப் பார்த்து சத்தத்தைக் கேட்டு யானை தான் தண்ணீர் குடீக்கிறதாக்கும் என்று நினைத்து அவர் அடித்தார். அவர் சத்தத்தைக் கேட்டு திக்கை அறிந்து கொண்டு அடிக்கக் கூடியவர் என்னும் திறமைக்காக.. வேறு ஒன்றுமில்லை.. அந்த நேரம் மனிதக்குரல் கேட்டவுடனேயே அவர்களிடத்திலே போய் மன்னிப்பெல்லாம் கேட்டுக்கொண்டார் தசரத மகாராஜா.

மகாராஷ்டிராவிலே பண்டர்பூர் என்று ஒர் ஊர் இருக்கிறது. சில படங்களைப் பார்த்தால் தெரியும். இடுப்பிலே கை வைத்துக்கொண்டு ஒரு பெருமாள் இருப்பார்.

அவரை விட்டல் என்று சொல்லுவார்கள். அந்த இடத்திலே புண்டரீகன் என்று ஒருவர் இருந்தார். அவர் தாய், தந்தையர்களுக்கெல்லாம் பணிவிடை செய்து வந்தார். கூப்பிட்டால் மட்டுமே வரக்கூடிய ஸ்வாமி, இவ்வளவு நல்லவர்கள் இருக்கிறார்களே என்று தானாகவே வந்தார், தாய் தந்தையர்களிடத்திலே பக்திக்கு இது போன்றவர்கள் உதாரணங்கள்.

அதேபோன்று தெய்வத்தினிடத்தில் பக்திக்கு, துருவன் என்று ஒருவர் இருந்தார். ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர், சின்ன வயதிலேயே தவம் செய்தார். அதே போன்று பிரஹலாதன் சின்ன வயசிலேயே தபஸ் பண்ணினார். சின்ன பாலகராக இருந்தவர் பெரிய ஞானத்தைப் பிரசாரம் செய்யக்கூடிய ஞானஸ்தனாக விளங்கினார். இவர்களெல்லாம் சிறந்த தெய்வ சக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர்கள்.

இதுபோல், தாய் தந்தையர் குரு, தெய்வம் இவர்களிடத்தில பக்தி செய்து நல்லதொரு மனப்பக்குவத்தை அடைந்து அதன் மூலமாக இறைவனுடைய அருளைப் பெற்றவர்கள், ஞானத்தைப் பெற்றவர்கள், முக்தியை அடைந்தவர்கள், ஆனந்த அனுபவ நிலையிலேயே திளைத்திருந்தவர்கள் நம்முடைய முன்னோர்கள் எல்லாம் ஈஸ்வரனிடத்திலே பக்தியை வைக்க வேண்டும். அந்த பக்தி மாறுதல் அடையக் கூடியதாக இல்லாமல் சஞ்சலமும் சந்தேகமும் உள்ளதாக இல்லாமல் தீர்மானமானதாகவும், அகங்காரம் கர்வம் இல்லாததாகவும் இருக்க வேண்டும், பிரியத்துடன் இருக்க வேண்டும். பிரார்த்தனைகளை நல்ல பிரார்த்தனைகளாகச் செய்ய வேண்டும், தர்மத்தினுடைய அடிப்படையில் பிரார்த்தனைகள் அமைய வேண்டும். அப்படி என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நமக்குத் தெரிய வில்லையென்றால் 'என்ன கொடுத்தால் எனக்கு நல்லதோ, அதைக் கொடுங்கள்' என்று பிரார்த்தனை செய்ய வாவது தெரிந்து கொள்ளவேண்டும். இப்படியாக பக்தி அமைய வேண்டும்.

அப்படி ஒரு பக்தி செய்வதற்காகத்தான் உருவ வழிபாடெல்லாம் நாம் செய்து வருகிறோம். எல்லா இடத்திலேயும் நிறைந்திருக்கக்கூடியவர் ஸ்வாமி. அவரை அதே ரூபத்திலே நாம் தெரிந்து கொள்வது கடினம். அதற்காகத்தான் மூர்த்தி வழியாக, உருவத்தின் வழியாக வழிபடுகிறோம்.

தீபத்தை வழிபடுகிறோம். தீபமங்கள் ஜோதி என்று சொல்லுகிறோம்.

இது போல தீபத்தை வழிபடுவதை, ஆதிசங்கரர் முதலாகப் பல பேரும் சொல்லியிருக்கிறார்கள். சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். ஆதிசங்கரர் அம்மனைப் பற்றிச் சொல்லும் போதும் இ தை சொல்லியிருக்கிறார்.

மிருத்யுஞ்சயன் என்று ஒரு ஸ்வாமி. ஈஸ்வரனுடைய ஒரு விதம். பதினாறு வயதில் ஒரு மார்க்கண்டேயர். வயது முடிந்தவுடனயே எமன் வந்தபோது ஈஸ்வரனை பக்தி செய்தார். எமன் வந்தார். ஈஸ்வரனுடைய அருள் இருந்ததனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பக்திக்காக ஈஸ்வரன் இவருக்கு ஆசி புரிந்தார். அந்த மிருத்யுஞ்ஜயரைப் பற்றிச் சொல்லும்போது அந்த தீபத்தைப் பற்றியும் சொல்லி எப்படியெல்லாம் தீபம் இருக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.

ஒரு தீபத்திலிருந்து இன்னொரு தீபம் எரிவது போல் ஞானம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்க வேண்டும் என்பது தாத்பர்யம். அதையும் நம்முடைய

உருவ வழிபாட்டில் சேர்த்தார்கள், பல தீபங்களைப் பற்றியும் பல நூல்களிலும் சொல்லியிருக்கிறார்கள்.

'மாதா ச பார்வதீ தேவீ, பிதா தேவோ மஹேஸ்வரா:' என்பத ஸ்லோகம். அதேதான், 'சொல்லும் பொருளும் என் நடமாடும்' என்று ஆதீ தம்பதிகள் என்று பெயர். வால்மீகி முனிவர் ஆதிகவி. ஒருவர் புரிந்து கொள்வதற்காகப் பேசுகிறோம். நம்முடைய இலக்கியங்கள் எல்லாம் பாட்டில் இருக்கிறது தேசிகர் விருத்தம், கலிவெண்பா, கட்டளைக் கலிவெண்பா, சக்கர பந்தம் இப்படிப் பல முறைகளில், வெண்பாக்களில் அமைந்திருக்கிறது, எழுத்துக்களில் குறில் நெடில் எல்லாம் வைத்து வெவ்வேறு விருத்தங்கள் அமைந்திருக்கின்றன. அந்தாதி என்று சொல்லுகிறோம், அதுபோல் பல விதங்களில் அமைந்துள்ளது. முதல் முதலில் பாட்டு என்று அமைத்தவர் வால்மீகி முனிவர். அவர்தான் முதல் முதலாக ராமாயணத்தை எழுதியவர். முதலில் மனிதன் எழுதிய பாட்டு என்றால் அதுதான்.

அதுபோல் பார்வதி பரமேஸ்வரன் இரண்டு பேரும் ஆதி தம்பதிகள். 'ஏகபிம்பம் சிவார்ப்பணம்' என்பதாக பக்தியோடு சமர்ப்பிக்க வேண்டும். சுதோஷி என்று பெயர். ஒரு தும்பைப்பூ. அது இருந்தாலே சந்தோஷப்படக்கூடியவர் ஸ்வாமி, சிவ சிவ சிவ சிவ என்று சொன்னாலே போதும். கங்காதரர் அவர் ,ஒரு புனிதமான எண்ணத்தைக் கொடுக்கக்கூடிய, பாவங்களைப் போக்கக்கூடிய கங்கையை நமக்காகத் தரித்துக் கொண்டிருப்பவர், அவருக்கு கங்கையினால் ஆகவேண்டியது ஒனறுமில்லை. அவருக்கு எந்தப் புனிதத் தன்மையும் வேண்டியதேயில்லை. மனிதர்கள், இந்த உலகத்திலே இருக்கக்கூடியவர்கள், நல்லதொரு மனதுடன் இருக்கவேண்டும், பாவங்கள் நீங்க இருக்கவேண்டும் என்பதற்காக, பகீரதன் தவம் பண்ணினதை ஏற்றுக்கொண்டு அதற்காகத் கங்கையைத் தருவித்துக் கொடுத்தவர். அதனால் கங்காதரன் என்று பெயர்.

அம்பாள், இந்த அம்பாளுடைய கருணையானது தனியானது, முனிவர்கள் எல்லோரும் அம்பாளுடைய பக்தியைச் செய்த ஞானத்தைச் செய்திருக்கிறார்கள். இந்திரனுக்கு ஞானத்தை உபதேசித்தவள் அம்பாள். ஆதி சங்கரர் சௌந்தர்ய லஹரியெல்லாம் செய்திருக்கிறார். காமாட்சியம்மனிடத்திலே ஸ்ரீ சக்ரப்பிரதிஷ்டை செய்திரூக்கிறார். அதே போன்று திருவானைக்கா. அது நீரைச் சேர்ந்த ஸ்தலம். அங்கே அம்பாளுக்கு காதணிகள் இருக்கிறதே, அதை தாடங்கம் என்று சொல்லுவார்கள். அந்த தாடங்கத்தை அணிவித்தவர். இதுபோன்று பல இடங்களிலே ஆதிசங்கரர் பக்தி செய்திருக்கிறார்.

காளிதாஸர் சாதாரணமாக இருந்து, அம்பாளுடைய அருளினாலே பெரிய மகாகவி ஆனவர். காஞ்சிபுரத்திலே ஒருவர் ஊமையாக இருந்தார். அம்மனின் அருளாலே பேசும் சக்தி பெற்றார், பாடினார். வேறு யாரைப் பற்றியும் பாடவோ பேசவோ விரும்பாமல் இதுவே போதும் என்று இருந்துவிட்டார். ஐந்து விதங்களிலே அம்மனைப் பற்றிப் பாடியிருக்கிறார். ஐநூறு பாடல்கள். அதில் ஒரு பகுதியில் அம்மனுடைய பாதங்களை, மந்தஹாஸத்தை (புன்னகை) கடாட்சத்தை (பார்வை) எல்லாவற்றையும் பற்றி நூறு நூறு எழுதியிருக்கிறார். அந்த அளவுக்கு பக்தியினுடைய மகிமை !

ஐம்பத்தி ஒரு சக்தி பீடங்கள் இருக்கின்றன. அம்பாதி என்ற ஊரிலே ஐம்பது

ஷேத்திரங்கள் இருக்கின்றனவே அதற்கெல்லாம் சேர்த்த மாதிரி கோயில் கட்டியிருக்கிறார்கள். குஜராத்தில் இருக்கிறது காமாட்சியம்மன் கோயில். இமயமலை, காஞ்சீபுரம் என்று எங்கெங்கெல்லாம் அம்மனுடைய சக்தி பீடம் இருக்கிறதோ அதற்கெல்லாம் கோயில் கட்டியிருக்கிறார்கள்.

இப்படி அம்பாளுடைய பக்தர்களாக விளங்கியவர்கள் எல்லோரும் பெரிய ஞானிகளாக விளங்கியிருக்கிறார்கள் அகத்தியர். தெய்வீகத்துக்கும் தமிழ் மொழிக்கும் முக்கியமானவர் அந்த அகத்திய முனிவருடைய தர்மத்தின் லோபாமுத்திரை. இந்த லோபாமுத்திரை அம்மனுடைய பக்தை. இதுபோன்று பெரியவர்கள் எல்லாம் நிறைய பக்தி செய்து அவரவர்களுக்கு வேண்டிய அறம், பொருள், இன்பம், வீடு என்று சொல்லக்கூடிய எல்லா வகையிலும் பயன் பெற்றிருக்கிறார்கள். இந்த ஊரிலே வெள்ளிக் கிழமைகளிலே சுவாமிக்கும் அம்பாளுக்கும் பூஜைகள் எல்லாம் நடைபெற்றிருக்கிறது. முன்பிருந்த பெரியவர்கள் எல்லாம் இந்த ஊருக்கு வந்து செய்திருக்கிறார்கள். இந்த ஊரைச் சேர்ந்தார்கள் எல்லாம் பெரிய பெரிய விழாவெல்லாம் நடத்தினார்கள். எல்லோருமே தினமும் காலையிலும் சாயங்காலமும் ஐந்து நிமிஷம் தீப வழிபாடு செய்து, இறைவனுடைய பெயரை வெட்கமில்லாமல் பக்தியோடு, உரக்கச் சொல்லி பிரார்த்தனை செய்துகொண்டு, நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து, அதன் மூலம் எல்லோரும் சிறந்து விளங்க வேண்டும் என்று வாழ்த்தி ஆசிர்வதிக்கின்றோம்.
---------------------------------------------------------------------------------‐--

கருத்துகள் இல்லை: