திங்கள், 18 நவம்பர், 2019

அருள் மிகு நரசிம்மர் திருக்கோயில்

மூலவர்  :  நரசிம்மர்
தாயார்  :  அமிர்தவல்லி
பழமை  :  2000 வருடங்களுக்கு முன்
ஊர் :  திருக்குறையலூர், சீர்காழி
மாவட்டம்  :  நாகப்பட்டினம்
மாநிலம் :  தமிழ்நாடு

திருவிழா : நரசிம்மர் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி    
           
சிறப்பு : நரசிம்மரை இத்தலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக இரண்டு தாயார்களுடன் தரிசிப்பது மிகவும் அரிது. திருமங்கை ஆழ்வார் அவதரித்த தலம் இது.    
           
திறக்கும் நேரம்: காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.  அருள் மிகு நரசிம்மர் திருக்கோயில், திருக்குறையலூர் - 609 106 நாகப்பட்டினம் மாவட்டம்.போன்:+91- 94435 64650, 94430 07412.   
          
தகவல் : சுவாமி மலைக்கும், திருக்கூடலூருக்கும் இடையே காவிரியில் துணை ஆறாக பிரியும் மண்ணியாறு இத்தலத்தின் வழியாக சென்று கடலில் கலக்கிறது.இதன் சிறப்பை வைணவ ஆச்சாரியார்கள் "மண்ணியில் நீர் தேங்கும் குறையலூர், சீர்கலியன் தோன்றிய ஊர்' என்று சிறப்பித்து பாடியுள்ளனர். குலசேகர ஆழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனிகள் போன்றோர் இங்கு தரிசனம் செய்துள்ளனர்.

பிரார்த்தனை : மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், கடன் பிரச்னை உள்ளவர்கள், குடும்பத்தில் பிரச்னை உள்ளவர்கள் இந்நாளிலும், அஷ்டமி, சுவாதி நாட்களிலும் நெய்விளக்கு ஏற்றி, பானக நைவேத்தியம் செய்து வழிபடுகிறார்கள்.   
           
ஸ்தல பெருமை : தாயார் அமிர்தவல்லி தனி சன்னதியில் அருளு கிறாள். பிரதோஷ நாட்களில் நரசிம்மருக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், கடன் பிரச்னை உள்ளவர்கள், குடும்பத்தில் பிரச்னை உள்ளவர்கள் இந்நாளிலும், அஷ்டமி, சுவாதி நாட்களிலும் நெய்விளக்கு ஏற்றி, பானக நைவேத்தியம் செய்து வழிபடுகிறார்கள். அமாவாசை நாட்களில் சக்கரத்தாழ்வார் சன்னதியில் சுதர்சன ஹோமம் நடக்கிறது. நவக்கிரக தோஷம், பித்ரு தோஷம், எதிரிகளின் தொந்தரவுக்கு ஆளானவர்கள் இந்த யாகத்தில் கலந்து கொள்கிறார்கள். கருடன், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், திருமங்கையாழ்வார், வைணவ ஆச்சாரியார்களுக்கும் தனித்தனி சன்னதிகள் உண்டு.
   
ஸ்தல வரலாறு : சிவனை அவமரியாதை செய்யும் வகையில், பார்வதியின் தந்தை தட்சன் ஒரு யாகம் நடத்தினான். இதனால் கோபம் கொண்ட பார்வதி, தந்தைக்கு புத்தி புகட்ட யாகம் நடக்கு மிடத்திற்குச் சென்றாள். அவளையும் தட்சன் அவமரியாதை செய்யவே, யாகத்தீயில் விழுந்து விட்டாள். கோப மடைந்த சிவன், தனது அம்சமாக வீரபத்திரரை உருவாக்கி அனுப்பி யாகத்தை அழித்தார். மேலும், பார்வதியைப் பிரிந்த துயரம் சிவனை வாட்டியது.நரசிம்மர் அவருக்கு இத்தலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராகக் காட்சி தந்து அமைதிப்படுத்தி யதாக தல புராணம் கூறுகிறது. நரசிம்மரை இவ்வாறு இரண்டு தாயார்களுடன் தரிசிப்பது மிகவும் அரிது.

ஆழ்வார் அவதார தலம் :  திருமங்கை ஆழ்வார் அவதரித்த தலம் இது. இக்கோயிலில் இவருக்கு சன்னதி உள்ளது. துவாபர யுகத்தில் உபரிசிரவஸு என்ற மன்னனாகப் பிறந்த இவர், இங்கு நரசிம்மரை வழிபட்டு, அடுத்த பிறப்பில் நீலன் என்னும் மன்னனாக இங்கு அவதரித்ததாக மங்களபுரி மகாத்மியம்கூறுகிறது.திருமங்கையாழ்வார், 108 திவ்ய தேசங்களில் 86 தலங்களை மங்களாசாசனம் செய்துள்ளார். இதன் அடிப்படையில் அவர் அவதரித்த இத்தலத்து நரசிம்மரை வழிபட்டால் 86 பெருமாளையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.இத்தலத்தில் அவதரித்திருந்தாலும், திருமங்கையாழ்வார் இங்கு சுவாமியை மங்களாசாசனம் செய்ய வில்லை. வேறு தலத்தை மங்களாசாசனம் செய்யும் போது, இத்தல நரசிம்மரைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

ஆதி அகோபிலம் : தைமாத அமாவாசையை ஒட்டி, இவ்வூர் அருகில் உள்ளதும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றானது மான திருநாங்கூரில் 11 கருட சேவை நடக்கும்.அப்போது, திருநாங்கூரில் இருந்து திருமங்கையாழ்வார் இக்கோயிலுக்கு எழுந்தருள் வார். "திருப்பல்லாண்டு தொடக்கம்' என்னும் தமிழ்மறை பாடி சுவாமியை வழிபடும் வைபவம் நடக்கும். மிகவும் பழமையான இத்தலத்தை "ஆதி நரசிம்மர் தலம்' என்றும், தெற்கில் மிகவும் உயர்ந்த நரசிம்ம ஷேத்திரம் என்பதால் "தட்சிண நரசிம்மர் தலம்' என்றும் சிறப்பு பெயரிட்டு அழைக்கிறார்கள். பத்ம புராணம், நாரத புராணத்தில் இத்தலம் ஸ்ரீபூரணபுரி, பூரண நரசிம்ம ஷேத்திரம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை: