செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

பண்டரீபுரம் ராமதாஸர்

ராமதாஸர் ஒரு சிறந்த ராமபக்தர். இவர் அனுமாரின் அம்சமாகவே இந்த உலகத்தில் அவதரித்தார். அவர் பிறக்கும்போது சிறியதாக ஒரு வால்கூட இருந்தது. நாள் ஆக ஆக அது தானே மறைந்துவிட்டதாம். எப்போதும் ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம் என்றே ஜபம் செய்து கொண்டிருப்பார். இந்த மந்திரத்தில் பதின்மூன்று எழுத்துக்கள் இருப்பதால் பதிமூன்று கோடி கணக்கு வைத்து ஜபம் செய்வார். இவர் ஒரு முறை ஜபம் செய்து விட்டால் ராமருடைய வில்லில் உள்ள மணி ஒரு தரம் அடிக்குமாம். இப்படி பலமுறை பதின்மூன்று கோடிகள் ஜபம் செய்தவர். இடையில் ஒரு கௌபீனம், கையில் ஜபமாலை, நீண்ட முடி, தாடி, கால்களில் பாதுகை இதுதான் அவருடைய உருவம். கண்கள் எப்போதும் சூரியன் போல் பிரகாசித்துக் கொண்டே இருக்கும். சத்ரபதி சிவாஜியின் குரு இவர். ராமதாஸர் கோதாவரி நதிக்கரையில் உள்ள கஞ்சன்காட் என்ற இடத்தில் ஒரு குகையில் தங்கி ஜபத்தில் ஈடுபட்டவராக இருப்பார். பண்டரீபுரம் அருகிலுள்ள மகாக்ஷேத்திரம். ஒரு தாயாருக்கு நிறைய குழந்தைகள் இருக்கும். எல்லாக் குழந்தைகளும் அம்மா அம்மா என்று தாயாரைச் சுற்றி சுற்றி வந்து கொண்டே இருக்கும். தன்னைச் சுற்றி வரும் குழந்தையைக் காட்டிலும் தன்னை விட்டு விலகியிருக்கும் குழந்தையையே தாய் உள்ளம் அதிகமாக நினைக்கும். அதுபோல் தான் பகவானும். பாண்டுரங்கனை தரிசிப்பதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருந்தாலும் பாண்டுரங்கனோ ராமதாஸர் வருகின்றாரா? எப்போது என்னைப் பார்க்க வருவார்? இவ்வளவு பக்கத்தில் இருந்துகொண்டு என்னைப் பார்க்க ஏன் வரவில்லை என்று கவலைப்பட்டுக்கொண்டே இருக்கின்றார். ராமதாஸர் ஏன் பாண்டுரங்கனை பார்க்க வரவில்லை? அதற்கு ஒரு காரணம் உண்டு. சிவ பக்தர்கள் பாண்டுரங்கனை சிவனே என்கிறார்கள். பண்டரீபுரத்தில் சிவராத்திரி விமரிசையாக இருக்கும். திகம்பரராக இருப்பதால் ஜைனர்கள் எல்லாம் மஹாவீரர் என்கிறார்கள். வைஷ்ணவர்கள் எல்லாம் கையில் சங்குடன் ருக்மணியுடன் இருப்பதால் இவன் கிருஷ்ணனே என்கிறார்கள். ராமதாஸருக்கு ஒரு பிடிவாதம். ராமரைத் தவிர வேறு தெய்வத்தை சேவிப்பதில்லை. ராம நாமத்தைத் தவிர வேறு நாமத்தை ஜபம் செய்வதில்லை. ராமாயணத்தைத் தவிர வேறு எதையும் பாராயணம் செய்வதில்லை. இப்படியிருக்க எந்த மூர்த்தி என்றே நிர்ணயம் ஆகாத பாண்டுரங்களை எப்படித் தரிசனம் செய்வது? அதனால் தான் போகவில்லை. ஒரு நாள் சிவாஜி, ராமதாஸரை வணங்கி விட்டு அவர்முன் கைகூப்பி பணிவுடன் நின்றார். ராமதாஸரும் வந்த விஷயத்தைக் கேட்டார். நாளை ஏகாதசி பாண்டுரங்கனுக்கு ஒரு பெரிய திருமஞ்சனம் பூஜை எல்லாம் ஏற்பாடு செய்துள்ளேன் தாங்கள் தான் அதை முன்னின்று நடத்திக் கொடுக்க வேண்டும் என சிவாஜி வேண்டினார். நீ பூஜையை நல்ல முறையில் நடத்து ஆனால் என்னால் வரஇயலாது என்று ராமதாஸர் கூறினார். அதற்கு சிவாஜி தங்களால் நாளை வரமுடியாது என்றால் வேறு ஒருநாளில் பூஜை நடத்த ஏற்பாடு செய்கிறேன் என்றார். ராமதாஸரோ நீ எப்போது ஏற்பாடு செய்தாலும் நான் வருவதற்கில்லை திட்டமிட்டபடி நாளையே நடக்கட்டும் என்று கூறினார். சிவாஜியோ தாங்கள் ஏன் வருவதற்கில்லை என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா? என்று வினவினார். வேறு ஒன்றும் இல்லை. நான் ராமபிரானைத் தவிர வேறு தெய்வத்தை சேவிப்பதில்லை என்ற நியமத்தில் இருப்பவன். அதனால் தான் நான் வருவதிற்கில்லை என்று கூறினேன். குருவானவர் சீடர்கள் செய்யும் நல்ல காரியங்களைத் தடுக்காமல் ஊக்குவிக்க வேண்டும். அதனால் தான் பூஜையை உன்னை நடத்தச் சொன்னேன் என்றார். சிவாஜியோ நீங்கள் வரவில்லையென்றால் அனைத்து ஏற்பாடுகளையும் நிறுத்தி விடுவேன் என்று பிடிவாதமாக இருந்தான். சரி! உன் ஆசைக்காக காலையில் வந்து ஐந்து நிமிடங்கள் இருந்துவிட்டு வந்துவிடுவேன் என்று கூறி சிவாஜியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். மறுநாள் காலையில் ஸ்நானம் எல்லாம் முடித்துவிட்டு ஜபமாலையை கையில் உருட்டிக்கொண்டு ஜபம் செய்து கொண்டே பண்டரீ வந்துவிட்டார். பண்டரீ வந்தால் அங்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. சிவாஜி வருவதாகவோ திருமஞ்சனம் ஏற்பாடாகி இருப்பதாகவோ ஒரு தகவலும் இல்லை. ஜபம் செய்து கொண்டு வந்தவர் தன்னை அறியாமல் கோயிலுக்குள் வந்து விட்டார். கோயிலுக்குள் வந்து தெய்வத்தை வணங்காமல் அலட்சியம் செய்யக்கூடாது என்பதால் உள்ளே சென்று தரிசனம் செய்தார். பாண்டுரங்கனே தன்னை தரிசிக்க இப்படி ஒரு லீலை புரிந்துள்ளார் என அப்போது தான் ராமதாஸரின் மனதில் தோன்றியது. உடனே ராமதாஸர் ஹே பாண்டுரங்கா! நீ ராமனா அல்லது பாண்டுரங்கனா! ராமனாக இருந்தால் சரயு நதிக்கரையை விட்டு ஏன் இங்கு வந்தாய்? சீதாவை விட்டு விட்டு ருக்மணி தேவியுடன் இங்கு காட்சி தருகிறாய்? என புலம்பினார். அடுத்த விநாடி அங்கு பாண்டு ரங்கனைக்காணவில்லை. அந்த இடத்தில் சீதை லட்சுமணர், ஆஞ்சநேயர் சகிதமான ராமச்சந்திர மூர்த்தி தனது விஸ்வரூபதரிசனம் காட்டி ராமனும் நானே பாண்டு ரங்கனும் நானே என்பதை உணர்த்தினார்.


கருத்துகள் இல்லை: