வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

சிதம்பர ரகசியம் பகுதி : 14

யோகம் அறிந்தவர்களும் அதன் மூலம் மூச்சைக் கட்டுப் படுத்த முயன்றவர்களுமே அறிந்த உண்மை இது. நாம் இப்போ தினமும் செய்யற ஆசனங்கள் எல்லாம் யோகம் ஆகி விடாது. உண்மையாக யோகக் கலையைக் கற்றவர் இன்று மிகச் சிலரே இருக்கின்றனர். இந்த யோகக் கலையின் மூலம் மூச்சைக் கட்டுப் படுத்தி வேண்டியபோது விடுவதற்கும் இழுப்பதற்கும் தெரிந்தவரே யோகி ஆவார். இது சித்தர்களால் மட்டுமே முடியும் என நினைக்கிறேன். பதஞ்சலி முனிவரும் வியாகரம பாதரும் சித்தர்களில் சேர்ந்தவர்கள். அவர்களால் முடிந்தது. இவர்கள் இருவரும் முக்தி அடைந்ததும் ராமேஸ்வரத்தில் என்று சொல்லுவார்கள். தென்னாட்டைச் சேர்ந்த இவ்விரு சித்தர்களும் சேர்ந்து இறைவனுக்கு எழுப்பிய கோயில் தான் இந்கச் சிதம்பரம் கோயில். நம் உடலின் அமைப்புத் தான் பொதுவாகக் கோயில் அமைப்பும். இதில் சிதம்பரம் கோயில் ஞான ஆகாசம் எனப்படும். "சித்" என்றால் "ஞானம்" என்றும் "அம்பரம்" என்றால் "ஆகாசத்தையும்" முறிக்கும். சித்தர்கள் மூச்சுக்கலையை விஞ்ஞானத்தின் உதவியின்றியே பயின்றவர்கள். மூச்சைக் கட்டுப் படுத்தத் தெரிந்தவர்கள். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எத்தனை தரம் மூச்சு விடுகிறான் என்பதைக் கண்டறிந்து அதைக் கட்டுப் படுத்தி ஞானம் அடைந்து சகல சித்தியும் கைவரப் பெற்றவர்கள். ஒரு சாதாரண மனிதன் 4 வினாடிகளுக்கு ஒருமுறை மூச்சை உள்ளிழுத்து வெளியிடுகிறான். ஒரு நிமிஷத்திற்குப் பதினைந்து முறையும், ஒரு மணி நேரத்திற்கு 900 முறையும் ஒரு நாளுக்கு 21,600 முறையும் மூச்சு விட்டு இழுக்கிறான். இதைக் குறைக்கத் தான் யோகக் கலை பயன்படுகிறது. அதன் மூலம் மூச்சைக் கட்டுப் படுத்தி 21/2(இரண்டரை) மணி நேரத்துக்கு ஒரு முறை மூச்சை இழுத்து வெளியிட்டால் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த திருமூலரைப் போலவும் மார்க்கண்டேயரைப் போலவும் இருக்க முடியும் வாழ முடியும். ஒரு பிறந்த குழந்தையைப் பாருங்கள். அது மூச்சு விடுவதை! முதலி பிறந்து கொஞ்ச நாட்களுக்கு மிகச் சரியாக முச்சை விட்டு இழுக்கும். குழந்தையின் மூக்கு நுனியில் இருந்து அதன் உச்சிக் குழி இருக்கும் உச்சந்தலைக்கு 12 அங்குலம் நீளம் இருக்கும். குழந்தையின் உச்சந்தலை "படபட"வென அடித்துக் கொண்டே இருப்பதைக் கண்டிருக்கலாம். குழந்தையின் உள்நாக்குக்கும் இந்த உச்சந்தலைக்கும் ரகசிய வழி இருப்பதாயும் அதுதான் இறைவன் இருப்பிடம் எனவும் சொல்லப் படுகிறது. அதனால் தான் குழந்தை பிறந்ததும் தானே சிரிப்பதற்கும் அழுவதற்கும் இறைவன் விளையாட்டுக் காட்டுகிறார் என்று சொல்கிறோம். 6 மாதத்துக்கு மேல் ஆகிக் குழந்தையின் உச்சிக் குழி மூடியதும் இதில் 4 அங்குலம் குறைகிறது. குழந்தையும் நம்மைப் போல் மூச்சு விட ஆரம்பிக்கிறது. 21,600 ஒரு நாளைக்கு என்ற கணக்குப்படி நம் வாழ்நாள் பூராவுக்கும் வேண்டிய மூச்சை நாம் அதிகமாய்ச் செல்வழிக்கிறோம். நடக்கும்போது, நிற்கும்போதும், ஓடும்போதும், விளையாடும்போதும், தூங்கும்போதும் என்று செலவு செய்வதால் குறைந்து வருகிறது. இந்த ரகசிய வழியானது முறையான யோகப் பயிற்சியில் மீண்டும் திறந்து கொள்ளும். நம் உள்மனதில் உள்ள மூன்றாவது கண் எனச் சொல்லப் படும் ஞானக் கண் திறந்து கொள்ளும். உள்ளொளி பிறக்கும். ஞானம் சித்தியடையும்.

அடுத்து இந்த ஞானக் கண் திறக்கும் முறையான "குண்டலினி யோகம்" பற்றி விவரம் கொடுக்கப் போகிறேன். யாரும் தவறிக் கூட முயற்சி செய்து பார்க்கவேண்டாம். விளைவுகள் மோசமாக இருக்கும். முறையான குருவிடம் முறையான பயிற்சி இல்லாவிட்டால் ஏற்படும் விளைவுகளில் மரணம் கூட சம்பவிக்கலாம். திரு ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய "பாபா" திரைப்படத்தில் காட்டிய யோக முத்திரை தவறு எனவும் அதனால் தான் படம் தோல்வி அடைந்ததோடு அல்லாமல் வேறு மோசமான விளைவுகளைச் சந்தித்தார் எனவும் சொல்லப் பட்டது. ஆகவே படிக்கிறதோடு நிறுத்திக் கொள்வோம்.

மிண்டும் நாளை சந்திக்கலாம்

கருத்துகள் இல்லை: