வியாழன், 22 ஆகஸ்ட், 2019

சிதம்பர ரகசியம் பகுதி : 13

பிரபஞ்சமாகிய இந்த ஆடலரங்கத்தில் இடை விடாது ஆடும் இந்த ஆடலரசன் ஆடவில்லை எனில் நாம் வாழ்வது எங்கே? இந்த ஆடலின் மகத்துவத்தைச் சொல்லி முடியாது. அவன் ஆடுவது ஆனந்த தாண்டவம். இந்தத் தாண்டவம் பலவகைப் படுகிறது. அது பற்றிப் பின்னால் பார்ப்போம். இப்போது சிதம்பரம் கோவில் மூலஸ்தானத்தில் உள்ள நடராஜர் சிலை வலது பக்கம் சிற்பத்தின் வலது பக்கமாய் பார்த்தோமானால் ஒரு திரை தொங்க விடப் பட்டிருக்கும். அந்தத் திரையை எல்லா நேரமும் திறந்து வைத்துத் தரிசனம் செய்து வைக்க மாட்டார்கள். ஏனெனில் அதற்குள்ளே தான் "சிதம்பர ரகசியம்" உள்ளது. இது தான் இந்தக் கோயிலின் முக்கியத்துவமும் புனிதமும் கூட. இறைவனின் உருவ தத்துவமான சிவலிங்க தத்துவத்தை மட்டுமல்லாது உருவமற்ற அந்தப் பரம்பொருளின் அரூப தத்துவத்தையும் உணர்த்துவது. எல்லையற்றப் பரம்பொருள் எங்கும் விரிந்து பரந்து இருப்பதைக் குறிக்கும். ஆகாயம் எவ்வாறு உருவமில்லாமல் உருவம் இருப்பதைப் போல் இருக்கிறதோ அது போல் இந்தப் பரம்பொருளும் உருவமற்றது. உருவம் இருப்பது போல் உள்ளது. எல்லையற்று விரிந்து பரந்து காணப்படுவது. ஆதியில் இறைவனை உருவ வழிபாடு செய்து வழிபட்டதில்லை. ஆனால் சாதாரண மனிதனுக்கு இறைவன் என்ற ஒரு உருவம் தேவைப் பட அவனுடைய செளகரியத்துக்காக ஏற்பட்டது தான் உருவ வழிபாடு. காலப் போக்கில் வழிபாட்டில் இரு முறைகள் ஏற்பட்டன. ஒன்று உருவ வழிபாடு. மற்றது அருவ வழிபாடு. அருவ வழிபாடு நிர்குண உபாசனை எனப்படும். இது எல்லாராலும் முடியாதது. சாதாரண மனிதனால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று. கடவுளைத் தன் மனத்தினுள்ளே நிறுத்தி அவனின் பரிபூரணப் பேரானந்தத்தைப் பெற எல்லாராலும் முடியாது. யோகிகளும், ஞானிகளும் அதற்கெனப் பயிற்சிகள் பல செய்து தங்கள் தவத்தாலும் தியான வழிபாடுகளாலும் அடைந்த ஒன்றைச் சாதாரண மனிதன் அடைய முடியுமா? வழிப்பாடுகளிலேயே மிகச் சிறந்த ஒன்றான இறைவனைத் தன்னுள்ளே காணுதல் எல்லாராலும் முடியாத ஒன்று அல்லவா?

ஆனால் நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஒன்றைப் புரிந்து கொள்ளும் ஒரு வழிமுறை தான் இந்தச் சிதம்பர ரகசியத்தில் உள்ளது. அதை நமக்குக் காட்டி சொல்லாமல் சொல்வது தான் சிதம்பர ரகசியம். யோகிகளும் ஞானிகளும் தங்கள் மனதையே இந்த ஆகாயமாக நினைத்துக் கொண்டு அங்கே உள்ள தாமரைப் பூவில் இறைவனை ஆவிர்ப்பவித்து வழிபட்டு தன்னுள்ளே உள்ள பரிபூர்ண இறை சக்தியைக் கொண்டு பேரானந்த நிலை எட்டுவது தான். இதற்கு மிகுந்த பயிற்சி வேண்டும். இது யோக சாஸ்திரமும் சம்மந்தப் பட்டது. நம்முடைய உடலின் மூலநாடிகளைக் கிளப்பி மனமாகிய தாமரைப் பூவில் அமர்ந்திருக்கும் இறை சக்தியைத் தலை உச்சிக்குக் கொண்டு போய்ப் பேரானந்த நிலையை எட்டுவதே ஆகும்.

 மிண்டும் நாளை சந்திக்கலாம்.

கருத்துகள் இல்லை: