வியாழன், 1 ஆகஸ்ட், 2019

108 திவ்ய தேசங்கள் : அருள் மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில்

மூலவர் : ஆதிகேசவ பெருமாள்
தாயார் : மரகதவல்லி நாச்சியார்.
தீர்த்தம் : கடல் வாய் தீர்த்தம், வாட்டாறு, ராம தீர்த்தம்
பழமை : 3000 வருடங்களுக்கு முன்
ஊர் : திருவட்டாறு
மாவட்டம் : கன்னியாகுமரி
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:நம்மாழ்வார்
      
வாட்டாற்றானடி வணங்கி மாஞலப் பிறப்பறுப்பான் கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானை பாட்டாய பலபாடி பழவினைகள் பற்றறுத்து நாட்டாரோடு இயல்வொழிந்து நாரணனை நண்ணினமே. நம்மாழ்வார்.

விழா : ஓணம், ஐப்பசி பிரமோற்ஸவம், புரட்டாசி சனி, வைகுண்ட ஏகாதசி.  
      
சிறப்பு : இங்குள்ள பெருமாளின் திருமேனி கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையால் 16008 சாளக்கிராம கற்களை (நாராயணனின் வடிவமான கல் வகை) இணைத்து உருவானது. பெருமாளை மூன்று வாசல் வழியாகத்தான் தரிசிக்க முடியும். நடுவாசலில் உள்ள உற்சவர் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருளுகிறார். பெருமாளின் நாபியில் தாமரையோ, பிரம்மனோ கிடையாது. இதனால் இவரை வணங்கினால் மறுபிறப்பு கிடையாது என்பது ஐதீகம். கருவறையில் கருடன், சூரியன், பஞ்சாயுத புருஷர்கள், மதுகைடபர் என்னும் அரக்கர்கள் உள்ளனர். சிரசின் அருகே ஹாதலேய மகரிஷி மண்டியிட்டு அமர்ந்துள்ளார். ஆண்டு தோறும் பங்குனி மூன்று முதல் ஒன்பது வரையிலும், புரட்டாசி மூன்று முதல் ஒன்பது வரையிலும் சூரியனின் அஸ்தமன கதிர்கள் மூலவரின் மீது பட்டு தரிசிப்பதைக் காணலாம்.  
      
திறக்கும் நேரம் : காலை 06:00 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 05:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில், திருவட்டாறு : 629 177. கன்னியாகுமரி மாவட்டம். போன் : +91- 94425 77047 




     
ஸ்தல பெருமை : பெருமாளின்  திருப்பதிகளில் இத்தல பெருமாள் தான் கிடந்த கோலத்தில் மிகப்பெரிய அளவில் அருள் பாலிக்கிறார். இவர் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபரை பார்த்த நிலையில் மேற்கு நோக்கி அருளுகிறார். மேற்கு பார்த்த பெருமாளை தரிசிப்பது மிகவும் சிறப்பு. இடது கையை தொங்க விட்டு வலது கையில் முத்திரை காட்டி தெற்கே தலைவைத்தும் வடக்கே திருவடி காண்பித்தும் சயனத்தில் உள்ளார். இத்தகைய கோலத்தை காண்பது மிகவும் அரிது. தாயார் மரகதவல்லி நாச்சியார்.  
      
ஸ்தல வரலாறு : பிரம்மா யாகம் நடத்திய போது ஏற்பட்ட தவறால் யாக குண்டத்தில் இருந்து கேசன் கேசி என்ற அரக்கர்கள் தோன்றினர். இவர்களால் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொந்தரவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட இவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். திருமால் கேசனை அழித்து கேசியின் மேல் சயனம் கொண்டார். கேசியின் மனைவி பெருமாளை பழிவாங்கும் நோக்கத்துடன் கங்கையையும், தாமிரபரணியையும் துணைக்கு அழைக்க அவர்கள் இருவரும் வேகமாக ஓடி வந்தனர். இதையறிந்த பூமாதேவி திருமால் சயனித்திருக்கும் பகுதியை மேடாக்கினாள். அவர்கள் திருமால் இருந்த இடத்தை சுற்றி வணங்கி இரண்டு மாலைகள் போல் வட்ட வடிவில் ஓட ஆரம்பித்தனர். இதனால் இத்தலம் "வட்டாறு' என அழைக்கப்பட்டது. இரு நதிகளும் பெருமாளுக்கு மாலை சூட்டியது போல் இருப்பதைக்கண்ட நம்மாழ்வார் மாலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் என பாடுகிறார். கேசனை அழித்ததால் இத்தல பெருமாள் கேசவப் பெருமாள் எனப்படுகிறார். கேசியின் மீது சயனித்த போது அவன் தன் பன்னிரெண்டு கைகளால் தப்புவதற்கு முயற்சி செய்தான். பெருமாள் அவனது பன்னிரெண்டு கைகளிலும் பன்னிரெண்டு ருத்ராட்சங்களை வைத்து தப்பிக்க விடாமல் செய்தார். இவையே திருவட்டாரை சுற்றி சிவாலயங்களாக அமைந்தன. மகா சிவராத்திரியின் போது பக்தர்கள் பன்னிரெண்டு சிவாலயங்களையும் ஓடியவாறு தரிசித்து கடைசியில் ஆதிகேசவப் பெருமாளையும் அவர் பாதத்தின் கீழ் உள்ள சிவனையும் தரிசிப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. 

கருத்துகள் இல்லை: