வியாழன், 16 ஆகஸ்ட், 2018

வந்து விட்டது வரலட்சுமி விரதம்

சுமங்கலிப் பெண்கள் அனுஷ்டிக்கும் வரலட்சுமி விரதம் ஆகஸ்ட்28 ல் வருகிறது.இதை மாமியார் மருமகளுக்கு எடுத்து வைப்பது மரபு.புதிதாக மணமான பெண்கள் இந்த ஆண்டிலேயே தலைநோன்பாக விரதம் மேற்கொள்வர்.இந்த விரதம் இருப்பவர்கள் முதலில் விநாயகரைப் பூஜிக்க வேண்டும்.ஒன்பது முடிச்சு இட்ட மஞ்சள் தடவிய நோன்புச்சரடை வரலட்சுமிக்கு அணிவிக்க வேண்டும்.முதன் முதலாக விரதமிருப்பவர்கள் லட்சுமி தாயாருக்கு லட்டு மைசூர்பாகு திரட்டுப்பால் நைவேத்யம் செய்ய வேண்டும். பாயாசம்,வடை,கொழுக்கட்டை,இட்லியும் நைவேத்யம்.லட்சுமி தாயாரை சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்த பிறகு வலக்கையில் நோன்புச் சரடைக் கட்டிக் கொள்ள வேண்டும்.வரலட்சுமி விரதத்தன்று மாலையில் லட்சுமி தாயாருக்கு தூபதீபம் கற்பூரம் காட்டி பூஜை செய்ய வேண்டும்.வீட்டுக்கு சுமங்கலிகளை அழைத்து அவர்களுக்கு தாம்பூலம் புத்தாடை கொடுத்து வழியனுப்ப வேண்டும்.அடுத்தநாள் காலையில் புனர்பூஜை என்னும் மறுபூஜை செய்ய வேண்டும்.இதைச் செய்ய இயலாதவர்கள் முதல்நாளே சுண்டல் நைவேத்யம் செய்து பூஜையை நிறைவு செய்யலாம்.கலசம் வைத்தும் வரலட்சுமியைப் பூஜை செய்வர்.கலசத்தை இரவில் அரிசி பாத்திரத்தில் வைக்க வேண்டும்.இதனால் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது ஐதீகம்.கலசத்தில் இருந்த தேங்காயை மறுவெள்ளிக்கிழமையில் பால் பாயாசம் செய்ய பயன்படுத்தலாம்.இந்த வழிபாட்டிற்கு தோரக்ரந்தி பூஜை என்றும் பெயர்.இந்த விரதத்தால் குடும்ப ஒற்றுமை மேலோங்கும்.மாங்கல்ய பலம் கூடும்.எண்ணிய எண்ணம் ஈடேறும்.செல்வவளம் பெருகும்.கன்னிப்பெண்களுக்கு திருமணயோகம் உண்டாகும்.

கருத்துகள் இல்லை: