JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
திங்கள், 12 ஜூன், 2017
திருக்கச்சூர் (அருள்மிகு தியாகராஜா சுவாமி திருக்கோவில்) சிங்கப்பெருமாள் கோயிலிலிருந்து நரசிம்மரை வழிப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் செல்லும் பேருந்துச் சாலை இல்லாட்டி மறைமலை நகர் ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து தியாகராஜபுரம் திருக்கச்சூர் செல்லும் சாலையில் சென்றால் திருக்கச்சூரை அடையலாம். ஊருக்குள்ள போனதும் வலது பக்கம் திரும்பிச் சென்றால் (கச்சூர்) ஆலக்கோயிலையும் இடப்பக்கம் போனா மலையடிவாரக் கோயிலான மருந்தீசர் கோயிலையும் அடையலாம். முதலில் நாம் மலையடிவாரக்கோவிலான அருள்மிகு தியாகராஜா சுவாமி திருக்கோவில் பற்றி பார்க்கலாம். கோவிலுக்குள்ள நுழையும் முன்னே நம் கண்ணுல படுறது கல்லினால் ஆன தேர் நிறுத்தும் மேடை. மேடை மட்டும் இருக்கு!! ஆனா தேரை காணோம்!! ஆனா அது கூட கலைநயத்தோடு அழகாக காட்சி அளிக்கிறது. அதன் அழகை ரசித்து விட்டு கோவிலின் நுழை வாயிலின் முன் உள்ள ஒரு சிறிய மண்டபத்தினுள் நுழைந்தேம். அங்கே திக்கற்றவர்க்கு ஈசனே துணை என்ற வாசகத்தை உண்மையாக்குற மாதிரி வானமே கூரையாய் வாழும் நரிக்குறவர்களுக்கு வீடாய் மாறி இருந்துச்சு அந்த மண்டபம். இங்கு ராஜகோபுரமில்லை. முகப்பு வாயில் மட்டுமே. கோயிலுக்கு எதிரில் பதினாறுகால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் தான் சுந்தரர் பசிகளைப்பால் படுத்திருந்தாராம். இம்மண்டபத் தூண்களில் அநுமந்த சேவை, கூர்மாவதாரம், காளிங்க நர்த்தனம், கல்கி அவதாரம், துர்க்கை, ஆதிசேஷன், ஊர்த்துவ தாண்டவம், காளி முதலிய பல சிற்பங்கள் காணபடுகின்றது. தொண்டை நாட்டிலுள்ள தியாகராஜா சந்நிதிகளுள் இத்தலமும் ஒன்று. இங்குள்ள தியாகேசர் 'அமுதத் தியாகர்' என்னும் பெயருடையவர். அமுதம் திரண்டு வருவதற்காகத் திருமால் கச்சப வடிவில் (ஆமை வடிவில்) இருந்து இறைவனை இத்தலத்தில் வழிபட்டதாக வரலாறு. இக்கோயில் ஆலக்கோயிலாகும். ஆதலின் 'கச்சபவூர்' எனும் பெயர் நாளடைவில் மக்கள் வழக்கில் மாறி 'கச்சூர்' ன்னு மாறிவிட்டது. கச்சூர் கோயில் : ஆலக்கோயில். இறைவன் : விருந்திட்ட ஈஸ்வரர், விருந்திட்ட வரதர், கச்சபேஸ்வரர் அம்பாள் : அஞ்சனாக்ஷியம்மை தலமரம் : ஆல் தீர்த்தம் : கூர்ம (ஆமை) தீர்த்தம். வாயிலில் நுழைந்ததும், கொடிமரம், நந்தி, பலிபீடங்கள் உள்ளன. இவை சுவாமிக்கு சந்நிதிக்கு நேரே ஜன்னல் வைத்து அதற்கு எதிரில் வெளியில் அமைந்துள்ளது. பக்க (தெற்கு) வாயில் முன்னால் மண்டபம் உள்ளது. இம் மண்டபத் தூண் ஒன்றில் திருமால் ஆமை வடிவில் வழிபடும் சிற்பம் உள்ளது. இம்மண்டபத்தில் அமுதத் தியாகேசர் சபை உள்ளது. அவற்றை எல்லாம் கண்டு வெளி பிரகாரம் சுற்றும் முன்பு இக்கோவிலின் ஸ்தல வரலாறை கொஞ்சம் பார்க்கலாம். அமிர்தம் கிடைப்பதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தார்கள். மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பைக் கயிறாக்கி பாற்கடலைக் கடையும் சமயத்தில்... மந்தார மலை கனம் தாங்காமல் மூழ்கத் தொடங்கியதாம். அது கடலில் மூழ்காமல் இருக்க திருமால் ஆமை (கச்சபம்) வடிவெடுத்து மந்தார மலையின் அடியில் சென்று மலையை தாங்கி நின்றாராம். திருமால் இவ்வாறு ஆமை உருவில் மலையின் கனத்தைத் தாங்கக்கூடிய ஆற்றலைப் பெற இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. ஆமை (கச்சபம்) வடிவத்தில் மஹாவிஷ்னு சிவபெருமானை வழிபட்டதால் இத்தலம் திருக்கச்சூர் என்று பெயர் பெற்றதாம். இத்தலம் ஆதிகச்சபேஸம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள கூர்ம தீர்த்தத்தில் நீராடி பிரதோஷ நாட்களில் கச்சபேஸ்வரரை வணங்கினால் எல்லா தோஷங்களும் நீங்கும். செல்வம், கல்வி, இன்பம் கிடைக்கும். இத்தலத்திற்கு வந்த சுந்தரர் ஆலயத்தினுள் சென்று சிவபெருமானை பக்தியுடன் வழிபட்டு வெளி வந்தார். வெகு தொலைவில் இருந்து திருக்கச்சூர் வந்த காரணத்தினால் களைப்பும் அதனுடன் பசியும் சேர்ந்து தள்ளாடியபடி கோவிலின் வெளியே உள்ள மண்டபத்தில் படுத்து கண்களை மூடுகிறார். சுந்தரரின் நிலையைக் கண்ட இறைவன் கச்சபேஸ்வரர் ஓர் அந்தணர் உருவில் சுந்தரரின் தோளைத் தட்டி எழுப்புகிறார். அவரை உட்காரச்சொல்லி வாழையிலை விரித்து அன்னம் பரிமாறி குடிக்க நீரும் கொடுக்கிறார். அன்னம் பலவித வண்ணங்களுடனும் பலவகை சுவையுடனும் இருப்பதைக் கண்ட சுந்தரர் காரணம் கேட்கிறார். சமைத்து உணவு கொண்டுவர நேரம் இல்லாததால் பல வீடுகளுக்குச் சென்று பிச்சை வாங்கி வந்து உண்வு கொடுத்ததாக அந்தணர் சொல்கிறார். அந்தணர் செயலில் நெகிழ்ந்து போன சுந்தரர் எதிரே உள்ள குளத்திற்குச் சென்று கைகளைக் கழுவிக் கொண்டு திரும்பி வந்து பார்த்தால் அந்தணர் மாயமாய் மறைந்து போயிருக்கக் கண்டார். இறைவனே தனக்காக திருக்கச்சூர் வீதிகளில் தனது திருவடிகள் பதிய நடந்து சென்று பிச்சையெடுத்து அன்னமிட்டதை நினைத்து இறைவனின் கருணையைக் கண்டு மனம் உருகினார் சுந்தரர். பசி நீங்கப்பெற்ற சுந்தரர் இறையருள் கருணையை வியந்து முதுவாயோரி என்னும் பதிகம் பாடிப் போற்றினார். வெளிப்பிரகாரத்தில் காலபைரவர் தெற்கு நோக்கி அழகாக அருள்பாலிக்கிறார். திருக்கச்சூர் தலம் ஆலக்கோவில் என்ற பெயருடனும் அழைக்கப்படுகிறது. இவ்வாலயத்தின் மூலவர் கச்சபேஸ்வரராக இருந்தாலும் இவ்வாலயம் தியாகராஜ சுவாமி திருக்கோவில் என்றே அழைக்கப்படுகிறது. கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு எதிரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. இது கூர்ம தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. திருமால் கூர்மாவதாரம் எடுத்தபோது இக்குளத்தை உண்டு பண்ணியதாகக் கருதப்படுகிறது. கிழக்கு வெளிப் பிரகாரத்தில் கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியவை அமைந்துள்ளன. தெற்கு வெளிப் பிரகாரத்தில் 27 தூண்களை உடைய நட்சத்திர மண்டபம் உள்ளது. நட்சத்திர மண்டபத்தைக் கடந்து நேரே சென்றால் தியாகராஜர் சந்நிதி உள்ளது. இவர் உபயவிடங்கர் எனப்படுகிறார். மகாவிஷ்ணுவிற்கு இத்தலத்தில் இறைவன் தனது நடனத்தைக் காட்டி அருளியுள்ளார். மண்டபத்தில் உள்ள தெற்கு வாயில் வழியே உள்ளே சென்றால் இறைவி அஞ்சனாட்சியின் சந்நிதி உள்ளது. நான்கு திருக்கரங்களுடன் நின்ற நிலையில் அம்பாள் அருள்பாலிக்கிறாள். வலம் வருவதற்கு வசதியாக அம்மன் சந்நிதி ஒரு தனிக கோவிலாகவே உள்ளது. அம்பாள் சந்நிதி முன் உள்ள மண்டபத்திதிருந்து மற்றொரு கிழக்கு நோக்கிய வாயில் வழியாக உள்ளே சென்றால் கருவறையில் கிழக்கு நோக்கிய சந்நிதியில் இறைவன் கச்சபேஸ்வரர் காட்சி தருகிறார். திருமாலுக்கு அருளிய இவர் ஓர் சுயம்பு லிங்கமாவார். கருவறை அகழி போன்ற அமைப்பு கொண்டது. கருவறை சுற்றில் தென்கிழக்கில் வடக்கு நோக்கிய நால்வர் சந்நிதியைக் காணலாம். கருவறை சுற்றி வலம் வரும் போது வடக்குச் சுற்றின் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. கருவறை கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர், தட்சினாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கோவில் காலை 8 மணி முதல் நண்பகல் 11.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். தியாகராஜாரை தரிசனம் பண்ணிவிட்டு கோவிலின் வெளியே வரும் போது ஒரு விநாயகர் சன்னதி காணபடுகிறது அதை விட நிறைய பசுக்களும் மாடுகளும் கோவிலின் உள்ளேயும் வெளியேயையும் நிறைய காணபடுகின்றன. அடுத்தது {நாளை} அருகே உள்ள மலை கோவிலைப்பற்றி பார்போம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக