ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

பக்தி கதைகள்

கைக்கு கை மாறும் பணமே! உன்னைக் கைப்பற்ற நினைக்குது மனமே!

பொன் வேண்டுமா! பொன் மனம் வேண்டுமா! என்று கேள்வி கேட்டால், பெரும்பாலோனோருக்கு மனம் பொன்னின் மீது தான் அலைபாயும். ஒரு பெரியவர் தினமும் தியானம் செய்வார். அவரது மனதில் ஆசைகள் என்பதே இல்லை. நாளடைவில், ஒருதபஸ்வியாக மாறிவிட்டார். ஊரை விட்டு ஒதுங்கி சிவசிந்தனையிலேயே இருந்தார். சிவபெருமான் தன் மனைவி பார்வதியிடம்,இந்த பெரியவருக்கு நாம் ஏதாவது பரிசளிக்க வேண்டும். சமீபகாலமாக இந்திரனின் போக்கு சரியில்லை. அவனது பதவிக்கு இவரை அமர்த்தி விடலாம், என்றார். பார்வதியும் சம்மதம் சொன்னாள். இந்த விஷயம் இந்திரன் காதுக்கு எட்டிவிட்டது. பயந்து போன அவன், ஒரு தங்கப்பெட்டியில் நவரத்தினங்களை நிரப்பி, அந்தணர் போல் மாறுவேடமணிந்து தபஸ்வியிடம் சென்றான்.தபஸ்வியே! நான் ஒரு அந்தணன். எங்கள் ஊர் கோயில் திருப்பணிக்காக பக்கத்து நாட்டு மன்னனிடம் பொருள் பெற்று வருகிறேன். அவசரமாக நான் வெளியூர் போக வேண்டியுள்ளது. அதுவரை இந்தப் பொருளை நீங்கள் பாதுகாத்து வையுங்கள். திரும்பி வந்து வாங்கிக் கொள்கிறேன், என்றான். தபஸ்வியும் சம்மதித்தார்.அதன்பிறகு அவரால் தியானத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. ஐயோ! இது அடுத்தவர் பொருளாயிற்றே! யாரும் திருடிச் சென்று விடுவார்களோ என பயந்து அதிலேயே கவனம் செலுத்தினார். சிவசிந்தனை மறைந்தது. இதனால் ஆசை தலை தூக்கியது. நான்கைந்து நவரத்தினத்தை எடுத்தால் தெரியவா போகிறது என நினைத்து பெட்டியைத் திறந்து ரத்தினங்களை எடுத்தார். அதை பக்கத்து ஊருக்கு போய் விற்று கிடைத்த பணத்தில் கண்டதையும் சாப்பிட்டார். தபஸ்வி என்ற இலக்கணத்திற்கு மாறாக நடந்தார். அதனால் இந்திரலோக பதவியை இழந்தார். நல்ல மனம் படைத்தவர்களைக் கூட பணம் என்னும் கருவி மாற்றி விடுகிறது. பணத்தின் மீது கொண்ட பற்றால், தாய், தந்தை, சகோதர உறவுகள் இல்லை என்ற நிலைக்கு உலகம் போய்க் கொண்டிருக்கிறது. காசு தான்கடவுள்என்ற பிடிவாதத்தை விடாத வரை இந்த நிலை தான்!

கருத்துகள் இல்லை: