அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்
மூலவர்:காசி விஸ்வநாதர்
அம்மன்/தாயார்:விசாலாட்சி
தீர்த்தம்:கங்கையில் 64 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. ஆதிகங்கை என்ற
தீர்த்தக் குளம் உள்ளது. ஞான வாவி என்ற சிறுதீர்த்தக் கிணறு, மணிகர்ணிகா
தீர்த்தம், சக்ரதீர்த்தம் முதலியன காசியில் உள்ள முக்கிய தீர்த்தங்கள்.
பழமை:3000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:வாராணசி, பனாரஸ், ஆனந்த வனம், மகாமயானம், அவிமுக்தம்.
ஊர்:காசி
மாவட்டம்:வாரணாசி
மாநிலம்:உத்திர பிரதேசம்
திருவிழா:தை அமாவாசை, ஆடி அமாவாசை, தீபாவளி (அன்னக்கொடி உற்ஸவம்), ஹோலிப் பண்டிகை, சிவராத்திரி, நவராத்திரி.
தல சிறப்பு:இந்தியாவில் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் காசியே முதன்மையானது,
அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது மணிகர்ணிகா சக்தி பீடம் ஆகும். இங்குள்ள
மூலவர் மரகதத்தால் ஆனவர் என்பது தனி சிறப்பு.
திறக்கும் நேரம்:காலை 2.30 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும். அமாவாசை நாட்களில் நாள் முழுதும் திறந்திருக்கும்.
முகவரி:அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், காசி-221 001, வாரணாசி மாவட்டம்,- உத்தரப்பிரதேசம் மாநிலம்.போன்:+91 542-239 2629
பொது தகவல்:ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமானால் உருவாக்கப்பட்ட
நகரம் காசி. இத்தலம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. இவ்வூருக்கு
வாரணாசி, மகாமயானம், அபிக்தம், ஆனந்த பவனம் ஆகிய பெயர்களும் உள்ளன. மிகவும்
பழமை வாய்ந்த நகரம். வாரணா, ஹசி என்ற நதிகளுக்கும் இடையில் இவ்வூர்
அமைந்துள்ளதால் வாரணாசி என்ற பெயர் வந்தது. இவ்வூரை பனாரஸ் என்றும்
சொல்வார்கள். கல்வியை வழங்கும் கிரகமான புதன் காசிவிஸ்வநாதரைப் பூஜித்ததன்
பயனாக நவக்கிரகங்களில் ஒருவராக கிரகபதவி பெற்றார். கல்வியில் சிறந்து
விளங்க மாணவர்கள் காசிவிஸ்வநாதரை வழிபாடு செய்வது சிறப்பாகும். காசி
என்றால் ஒளிநகரம் என்பது பொருள். காசியில் இறந்து போவது சொர்க்கத்தைத்
தரும் என்று சொல்வார்கள். இங்கே இறந்து போகும் பறவைகள், மிருகங்கள் மற்றும்
சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் ராமநாமத்தை
சிவனே ஓதுகிறார் என்பது ஐதீகம். ஓம் என்ற பிரணவத்தை ஓதுவதாகவும்
சொல்லப்படுவதுண்டு.
இந்த கோயிலை முதன்முதலில் கட்டியது யார் எனக்
கேட்டால் ஆச்சரியமாக இருக்கும். முகலாய சக்ரவர்த்தி அக்பர் தனது
வருவாய்துறை அமைச்சர் தோடர்மால் மூலமாக கட்டினார். தோடர்மால் தனது குருவான
நாராயண் பட் உதவியுடன் ஷகி கஜானா நிதியிலிருந்து இந்தப் பணியைச்
செய்துள்ளார். ஆனால் காசி விஸ்வநாதர் கோயிலின் பழங்கால வரலாற்றிலும்
கல்வெட்டுகளிலும் இதுபற்றிய தகவல்கள் ஏதுமில்லை. கி.பி 1034ம் ஆண்டு முதல்
காசி விஸ்வநாதர் கோயில் பலமுறை முகலாய பேரரசர்களால் இடித்து தள்ளப்
பட்டுள்ளது. இதை இந்துக்கள் திரும்பத் திரும்ப கட்டி வந்துள்ளனர். 1669-ல்
அக்பரின் பேரன் அவுரங்கசீப் விஸ்வநாதர் கோயிலில் உள்ள சிருங்கர்
மண்டபத்தின் சுவரை ஆதாரமாகக் கொண்டு கோயில் அருகில் ஒரு மசூதியையும்
கட்டினார். இப்போதும் இந்த மசூதி இருக்கிறது. சிருங்கர் மண்டப சுவரை
ஆதாரமாகக் கொண்டு மசூதி கட்டப்பட்டுள்ளதை கண்கூடாகப் பார்க்கலாம்.
இதிலிருந்து காசி கோயில் ஒரு புண்ணி சத்திரம் மட்டுமல்ல ஒற்றுமையின்
சின்னம் என்பதும் நமக்கு புரிகிறது.
இங்கு அன்ன பூரணி, சத்திய
நாராயணர், டுண்டி ராஜவிநாயகர், சாட்சி விநாயகர், இராமர், அனுமன்,
சனிபகவான், துர்காதேவி, கவுடி மாதா, பைரவர், மகாகாளர், மகா காளி,
பாண்டுரங்கன், நீலகண்டர், தண்டபாணீச்வரர் ஆகியோர் பரிவார மூர்த்திகளாக
உள்ளனர். விசுவநாதர் கோயில் கர்ப்பகிருகம் வடநாட்டுப்பாணியில் கோபுரம்
உயரமாகவும், கொடியுடனும் காணப்படுகிறது. மூலவர் விசுவநாத லிங்கம் சிறியதாக
பூமி மட்டத்திலிருந்து ஒரு பள்ளத்தில் உள்ளார். பக்தர்கள் மண்டிபோட்டுக்
குனிந்து விசுவநாதரைத் தொட்டு வழிபடுகின்றனர். லிங்கத்தின் தலையில்
தங்கமுலாம் பூசப்பட்ட தாமிரத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. லிங்கத்தைச்
சுற்றிலும் வெள்ளித் தகடுக் கட்டு அமைத்துள்ளார்கள். லிங்கத்தின் மேல் ஒரு
பாத்திரம் கட்டித் தொங்க விட்டுள்ளார்கள். அதிலிருந்து கங்காதீர்த்தம்
சொட்டுச் சொட்டாக லிங்கத்தின் மீது விழுந்து அபிஷேகம் செய்கிறது.
கோயிலின் பின்பக்கம் ஒரு தனி நந்தி, சுவற்றைப் பார்த்துள்ளார். இதுதான் ஆதி
நந்தி. ஆதி விசுவநாதர் கோயிலிருந்த இடத்தில் மசூதி உள்ளது. அந்த நந்தியின்
அருகேதான் ஞானவாவி என்ற தீர்த்தக் கிணறு உள்ளது. இப்போதுள்ள காசி
விஸ்வநாதர் கோயில் 1777ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தூர் ராணி அகல்யாபாய்
இக்கோயிலைக் கட்டினார். இந்த கோயில் மிகவும் சிறிய கோயில் தான். குறுகலான
பாதையில் சென்று கோயிலை அடைய வேண்டும். பூஜை பொருட்களைக் கொண்டு பக்தர்களே
ஆராதனைகள் அனைத்தையும் செய்யலாம். அர்ச்சகரிடம் கொடுத்து பூஜிக்க வேண்டும்
என்ற அவசியம் இல்லை. அன்னபூரணி கோயிலும், விசாலாட்சி கோயிலும் தனியே சிறிது
தொலைவில் உள்ளன. விசாலாட்சி கோயில் நமது தென்னாட்டுப் பாணியில் உள்ளது.
இங்கே நவக்கிரகங்களும் உள்ளன. அன்னபூரணி அம்பாள் கோயிலில் தீபாவளி அன்று
அன்னக்கொடி உற்சவம் நடக்கும். அப்போது, அம்பாள் லட்டுத்தேரில் பவனி
வருவாள்.
பிரார்த்தனை:வியாச காசியில், வியாசர் வழிபட்ட
சிவலிங்கத்தை வழிப்பட்டால் தான், காசிக்கு வந்த முழுப் பலனையும் அடையலாம்.
காசிக் காவலர் பைரவர் கோயிலில், காசிக் கயிறு என்னும் கறுப்புக் கயிறு
கட்டிக் கொண்டால், நம்மைத் தீய சக்திகள் அண்டாது. கங்கையில் நீராடினால்
நமது தேகம் புனிதம் அடைகிறது. விசுவநாதரைத் தரிசித்தால் உயிர் புனிதம்
அடைகிறது. ஞான வாவியைத் தரிசித்தால் அறிவு புனிதம் அடைகிறது - என்று
முனிவர்கள் பலர் கூறியுள்ளனர்.
நேர்த்திக்கடன்:பக்தர்கள்
இங்குள்ள தீர்த்தக் கரையில் தம் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்து
நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
தலபெருமை:இங்கு
விஸ்வநாதர் மகிழ்ச்சி பெருக்குடன் எழுந்தருளி உள்ளார். எனவே, இவ்வூரை ஆனந்த
பவனம் என்கின்றனர். வெள்ளித்தகடு பதித்த தொட்டியில், தங்க ஆவுடையார் மீது
இவர் காட்சியளிக்கிறார். சிவபெருமானின் அடியையும் முடியையும் காண
பிரம்மாவும் திருமாலும் முயன்றபோது, அவர்களை எரித்து அழித்த இடம் இவ்வூரே
என்று கூறுவதுண்டு. எனவே, இவ்வூருக்கு மகாமயானம் என பெயர் வந்தது.
விசாலாட்சி அம்மைக்கு தனி சன்னதி உள்ளது. கங்கை நதியின் மேற்குக்கரையில்
காசி அமைந்துள்ளது. காசியிலிருந்து வடக்காக 30கி.மீ. தொலைவு வரை கங்கைநதி
ஓடுகிறது. இங்கே வடமுகமாக கங்கை ஓடுவதால் உத்தர வாகினி என்று
அழைக்கின்றனர்.
தீர்த்தக் கட்டங்கள்: கங்கை நதியின் ஓரத்தில்
ஏராளமான படித்துறைகள் உள்ளன. இதில் 64 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன.
இத்தீர்த்தக்கட்டங்கள் அனைத்திலும் நீராடுவது மிகுந்த பலனைத் தரும். ஆனால்,
எல்லோருக்கும் இது சாத்தியமல்ல. எனவே, அஸ்சங்கம், தசாஸ்வமேத கட்டம்,
வரணசங்கம கட்டம், பஞ்சகங்கா கட்டம், மணிகர்ணிகா கட்டம் ஆகிய படித்துறைகளில்
ஒரே நாளில் நீராடி மகிழ்வது மிகவும் புனிதமானதாகும்.இதற்கு பஞ்சதீர்த்த
யாத்திரை என்று பெயராகும். அஸ் நதி கங்கையில் கலக்கும் பகுதியில் அஸ்சங்கம
கட்டம் அமைந்துள்ளது. இங்கிருந்து தான் காசி தலம் ஆரம்பமாகிறது.
இக்கட்டத்தை காசியின் நுழைவுவாயில் என்று சொல்வர். இக்கரையில் அமைந்துள்ள
சிவலிங்கம் அஸ்சங்கமேஸ்வரர் எனப்படுகிறார். முதலில் அஸ்சங்கமத்தில் நீராடி
சங்கமேஸ்வரரை வணங்க வேண்டும். துளசி ராமாயணத்தை எழுதிய துளசிதாசர் இந்த
கட்டத்தில் இறங்கி கங்கையில் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.
இதையடுத்து தசாஸ்வமேத கட்டத்தில் நீராட வேண்டும். இங்கு பிரம்மன் பத்து
அசுவமேத யாகங்களை செய்ததால் தசாஸ்வமேத கட்டம் என பெயர் பெற்றது. இந்த
தீர்த்தக்கரையில் சூலடங்கேஸ்வரர் என்ற சிவலிங்கம் உள்ளது. இதையடுத்து
வரணசங்கம கட்டத்தில் நீராடச் செல்ல வேண்டும். இங்கு வருண நதி கங்கையில்
கலக்கிறது. இந்த கரையில் உள்ள ஆதிகேஸ்வரரை வணங்கிவிட்டு, யமுனை, சரஸ்வதி,
சிரணா, தூதபாய் ஆகிய நதிகளும் கங்கையில் கலக்கும் பஞ்சகங்கா கட்டத்திற்கு
செல்ல வேண்டும். இங்கு நீராடி விட்டு கரையிலுள்ள பிந்துமாதவர் மற்றும்
கங்கேஸ்வரரை வணங்க வேண்டும். பஞ்ச தீர்த்தக்கட்டங்களில் ஐந்தாவதாக
அமைந்துள்ள மணிகர்ணிகா கட்டத்திற்கு செல்ல வேண்டும். இங்கு நீராடி
பித்ருக்களுக்காக தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த கரையிலுள்ள
மணிகர்ணிகேஸ்வரரையும், அம்பாளையும் வழிபட வேண்டும்.
மகாராஜா
ரஞ்சித்சிங் கோயிலுக்கு 820 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கினார். காசியில்
மூலவர் அவிமுகேஸ்வரர் என்றும் விஸ்ஹேஸ்வர் என்றுமே அழைக்கப்பட்டார்.
இப்போதுள்ள விஸ்வநாதர் என்ற பெயர் வேதம் கற்ற அறிஞர்களால் அதன்பிறகே
சூட்டப்பட்டது. பொதுவாக வயதானவர்களே இந்த தலத்திற்கு போய்வர வேண்டும் என்ற
எண்ணம் உள்ளது. இளைஞர்களும் இங்கு சென்றுவரலாம். ஏனெனில் காசி விஸ்வநாதர்
ஆலயம் ஒரு அறிவுத் திருத்தலம் ஆகும். கல்வியும் ஞானமும் தரும் புண்ணிய
ஸ்தலம் இது. காசிக்கு செல்பவர்கள் அங்குள்ள துண்டிவிநாயகரை வணங்கினால் தான்
காசி யாத்திரையின் பலன் முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. இவரது
உருவ அமைப்பு சற்று மாறுபட்டு இருக்கும். முடிவடையாத சிலை போல,
துண்டிவிநாயகர் காட்சி தருகிறார். இங்கு வந்து கருமங்களை தொலைத்து விட்டு
என்னை வணங்காமல் சென்றால் உங்கள் யாத்திரையின் பலனும் என்னைப் போல்
அரைகுறையாகத் தான் இருக்கும் என்று சொல்லாமல் சொல்வதைப் போல இந்த
விநாயகரின் வடிவமைப்பு அமைந்துள்ளது. எனவே காசிக்கு செல்பவர்கள் கண்டிப்பாக
இந்த விநாயகரையும் வழிபடவேண்டும்.
பாரத நாட்டில் குடியேறிய
ஆரியர்களில் காசி என்ற பிரிவினர் இங்கே கி.மு. 1400 வாக்கில் வாழ்ந்து
வந்தமையினால் இத்தலம் காசி என்ற பெயர் பெற்றது. காசி என்றால் மிகப்
பிரகாசம் என்று பொருள். பார்வதி தேவியின் காதிலுள்ள மிகப் பிரகாசமான
குண்டலம் இங்கே விழுந்து பிரகாசித்ததால் காசி என ஆயிற்று என்றும் கூறுவர்.
பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் மரகதலிங்கமாக சிவலிங்கம் பிரகாசிப்பதால்
இத்தலம் காசி எனப் பெயர் பெற்றது என்பர். சிவபெருமான் விரும்பி
மகாமயானத்தருகே இருப்பதால் காசி என்றவுடனே, மோட்சம் கிடைப்பதால் இத்தலம்
காசி என்றனர். கா = தோள் சுமை, சி= பெண் சுமை. பார்வதி தேவியைத்
தோளில்சுமந்துகொண்டு, சிவ பெருமான் ஹரித்வாரிலிருந்து இங்கே வந்தமையால்
இத்தலம் காசி என அழைக்கப்படுகிறது என்றும் கூறுவர். வாரணம், அசி என்ற
இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் இத்தலம் இருப்பதால் இத்தலத்திற்கு
வாராணசி என்ற பெயர் ஏற்பட்டது.
பனாரன் என்ற அசுரன் இத்தலத்தைப்
புதுப்பித்து ஒரு லிங்கம் அமைத்து வழிபட்டதால் இத்தலத்திற்கு பனாரஸ் என்ற
பெயர் ஏற்பட்டது. அவி = தலைவன், முத்தன் = சிவபெருமான். வேதங்களுக்குத்
தலைவன் சிவபெருமான். அவர் வாழுமிடம் அவிமுக்தம் என இத்தலத்திற்குச்
சிறப்பாகப் பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர். சிவபெருமான் சுடலையை விரும்பி
அங்கே வாழ்பவன் ஆனதால் இத்தலத்திற்கு மகாமயானம் என்ற பெயரும் உண்டாகியது
என்பர். இறப்பவர்களுக்குச் சிவபெருமான் ராம் என்று உபதேசம் செய்து மோட்சம்
வழங்குவதால் மகாமயானம் எனப்பட்டது. அதிக வெப்பகாலம், அதிக மழைக்காலம், தவிர
ஆண்டு முழுதும் காசியாத்திரைக்கு ஏற்ற காலங்கள் ஆகும். முன்பெல்லாம்
கால்நடையாகவோ, மாட்டு வண்டி, குதிரை வண்டிகளில் யாத்திரை போவார்கள். ஆனால்
தற்போது ரயில், பேருந்து, விமானம் மூலம் யாத்திரை செய்வதால் எப்பொழுது
வேண்டுமானாலும் காசியாத்திரை மேற்கொள்ளலாம்.
நம் நாட்டில் உள்ள
முக்தித் தலங்கள் ஏழினுள் காசி தலையாய முக்தித் தலம் ஆகும். நம் நாட்டில்
பிறந்த ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது, காசி - இராமேசுவரம்
யாத்திரை மேற்கொள்ளும் சிறப்புமிக்க தலம் காசி ஆகும். பூலோகக் கைலாசம்
என்று சைவர்கள் போற்றும் தலம். காசிக்கு நிகரான தலம் மூவுலகிலும் இல்லை என
ஆன்மீகவாதிகள் கூறுவர். ஈசன் காக்கும் மகாமயானம் இங்கே உள்ளது. காசியில்
இறப்போர் உடனே மோட்சம் அடைவார்கள். காசி என்று சொன்னாலே புண்ணியம்
கிடைக்கும். இங்கே இறக்கும் உயிர்களுக்குச் சிவபெருமான் காதில் ராமமந்திரம்
ஓதி மோட்சம் அடைய வழி செய்கின்றார். காசியில் ஐந்து உபநதிகள் கங்கையில்
கலக்கின்றன. காசிக் கங்கையில் நீராடினால் பாவங்கள் எல்லாம் போய் புனிதம்
உண்டாகும். நம் நாட்டிலுள்ள புனிதத்தலங்களில் தலை சிறந்த தலம் காசிப்பதியே
ஆகும். லோகமாதா அன்னபூரணி காசிய ம்பதியில் இறைவனுக்கும் மக்களுக்கும் உணவு
வழங்கி சக்தியூட்டுகின்றார். காசியின் மகிமையை உணர்ந்த தென்னாட்டு மக்கள்,
காசியில் காவாசி அவினாசி என்று பழமொழி கூறுகின்றனர். தங்கள் ஊர்களுக்குச்
சிவகாசி, தென்காசி என்றெல்லாம் பெயர் வைத்துப் பெருமைப்படுகின்றனர்.
தென்னாட்டில் எல்லாச் சிவன் கோயிலிலும் காசி விசுவநாதர் லிங்கமும், காசி
விசாலாட்சியும் வைத்து வழிபடுகின்றனர்.
கங்கையின் மகிமை
உணர்ந்தவர்கள், சிவகங்கை, நூபுரகங்கை, கங்கைகொண்ட சோழபுரம் எனவும் தங்கள்
ஊர்களுக்குப் பெயரிட்டு மகிழ்கின்றனர். மும்மூர்த்திகளும், தேவர்களும்,
விசுவநாதரைப் பூஜித்த தலம் காசி ஆகும். அனுமன், இராமேசுவரத்தில் இராமர்
பூஜிக்க லிங்கம் எடுத்த தலம் காசி. மகாராஜா ரஞ்சித் சிங், காசி விசுவநாதர்
ஆலய விமானத்தைப் பொன் தகடுகளால் வேய்ந்தார். இன்றும் கோபுரம் தங்கமாக
ஒளிர்கிறது. கோயில் தூண்களில் சிற்பங்கள் உள்ளன. காசியில் மீட்டருக்கு ஒரு
கோயில் எனப் பலகோயில்கள் உள்ளன. கேதார்நாத் போக முடியாத ஒரு பக்தனுக்கு
சிவன் கங்கைக் கரையில் காட்சி தந்தார். அந்த இடம் கேதார்நாத் காட்
என்கின்றனர். அங்கே கேதார்நாத்திலிருப்பது போலவே சுயம்புவாகத் தோன்றிய ஒரு
பாறையையே சிவலிங்கமாக மக்கள் வழிபடுகின்றனர். விசுவாமித்திரரால்
பரிசோதனைக்குட்பட்ட அரிச்சந்திர மகாராஜா, சிவபெருமான் தரிசனம் பெற்றது
காசியம் பதியாகும். சனிபகவான் தவம் செய்து, சிவபெருமான் வரத்தால்
நவக்கிரகங்களில் ஒன்றானது காசியில். காசியின் கங்கைக் கரையில் நம்
முன்னோர்களுக்குச் சிரார்த்தம் முதலிய வைதீகச் சடங்குகள் செய்யலாம். அதனால்
நாமும் நம் முன்னோர்களும், புனிதம் அடையலாம்.
தல
வரலாறு:இமயத்தில் சிவபெருமானை உதாசீனம் செய்துவிட்டுத் தக்கன் யாகம்
செய்தார். தமது கணவனை அவமதித்த தங்கள் யாகத்தை தடுக்கச் சென்ற பார்வதி
தேவியைத் தக்கன் அவமதித்து விட்டார். அதனால் பிராணத்தியாகம் செய்த பார்வதி
தேவியின் உடலை, சிவபெருமான் தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்தார்.
இதனைப் பார்த்த திருமால் தமது சக்ராயுதத்தை ஏவி, பார்வதி தேவியின் உடலின்
பாகங்களைத் துணித்தார். ஒவ்வோர் இடத்தில் ஒவ்வொரு பாகம் விழுந்தது. ஆவேசம்
தணிந்த சிவபெருமான் மகாமயானமான காசிக்கு, மீதமுள்ள உடல் பாகத்தைக் கேதார
நாத்திலிருந்து கொண்டு வந்தார். மகாமயானத்தில் பார்வதி தேவியின் உடலை
அக்கினியில் இடமுனைந்தார். சிவபெருமான் பார்வதி தேவியின் காதில் தாரக
மந்திரம் உபதேசம் செய்தார். அப்போது அவரது காதிலிருந்த காதணி எங்கேயோ
விழுந்து விட்டதை அறிந்தார். அப்போது அங்கே திருமால் தமது சக்கரத்தால் ஒரு
தீர்த்தக் கிணறு தோண்டி, அதனருகே அமர்ந்து சிவபெருமானை நோக்கி தவம் செய்து
கொண்டு இருந்தார். சிவன் அவரை அணுகி பார்வதி தேவியின் காதணி பற்றிக்
கேட்டார். திருமால் தாம் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகே உள்ள கிணற்றைச்
சுட்டிக் காட்டினார். சிவபெருமான் அக்கிணற்றை எட்டிப்பார்க்கையில் அவரது
காதிலிருந்த குண்டலமும் கிணற்றில் விழுந்துவிட்டது. கிணற்றினுள்ளிலிருந்து
பிரகாசமான பேரொளியுடன் ஒரு சிவலிங்கம் வெளிப்பட்டது. அந்தச் சிவலிங்கத்தில்
சிவபெருமானின் சக்தியும் பார்வதி தேவியின் சக்தியும் ஒன்றாக ஐக்கியமாகி
இருந்தது.
திருமால் அந்த ஜோதிர்லிங்கத்தை எடுத்து இத்தலத்தில்
பிரதிஷ்டை செய்து வழிபட்டார். சிவ பெருமானை நோக்கித் தமது தவத்தை தொடர்ந்து
மேற்கொண்டார். சிவபெருமான், திருமால் முன்பு விசுவரூபம் கொண்டு
தோன்றினார். திருமால் விரும்பும் வரம் யாதெனக் கேட்க, அவர் இங்கு பிரதிஷ்டை
செய்த ஜோதிர் லிங்கத்திலிருந்து எப்போதும் மக்களை ஆசிர்வதிக்க வேண்டினார்.
மேலும் சிவபெருமான் ஜடாமுடியிலிருக்கும் கங்கை இத்தலத்தில் வந்து
சிவபெருமானை அர்ச்சிப்பதுடன், இத்தலம் வந்து கங்கையில் நீராடும் மக்களுடைய
பாவங்களைப் போக்க வேண்டும் எனவும், சிரார்த்தம் செய்தால் அவர்கள் பாவம்
எல்லாம் விலகி புனிதம் அடைந்து சுவர்க்கம் போக வேண்டும் எனவும் வரம்
வேண்டினார். சிவபெருமானும் அவர் கேட்ட வரம் தந்து, தாமும் அந்த லிங்கத்தில்
ஒளியாக ஐக்கியமாகி இன்றும் மக்களுக்கு அருள்பாலிக்கின்றனர். திருமாலுக்கு
விசுவரூபம் காட்டித் தந்தமையால், சிவலிங்கத்திற்கு விசுவநாதர் எனப்பெயர்
உண்டாகியது. அதன்பின்பு விசாலாட்சியாக அவதாரம் கொண்டிருந்த அன்னை பார்வதி
தேவியை, சிவபெருமானுக்குத் திருமால் திருமணம் செய்து வைத்தார். பிரம்மதேவர்
பல யாகங்கள் செய்து அவர்கள் திருமணத்திற்கு உதவி செய்தார். இவ்வாறு
திருமாலின் வேண்டுதலின்படி ஜோதிர்லிங்கமாகத் தோன்றிய சிவன் விசுவநாதர் என
வழங்கப்பட்டு வருகிறார். காசியைப் பற்றி ஏகப்பட்ட புராணக் கதைகள் உள்ளன.
ஏனெனில் காசியம்பதி வேதகாலம், புராண காலத்திற்கு முற்பட்டது. பல
தேவர்களும், முனிவர்களும், மன்னர்களும், இங்கு தவம்செய்து பேறு
பெற்றுள்ளார்கள். சூரியனின் புத்திரர்கள் எமனும், சனி பகவானும் சிவபெருமானை
நோக்கி இப்பதியில் தவம் செய்து, எமன் தென்திசைக் காவலனாகவும்,
எமலோகத்திற்கு அதிபதியாகவும், பதவி பெற்றார். சனிதேவன் சிவபெருமான் அருளால்
நவக்கிரகங்களில் ஒரு கிரகமாகப் பதவி பெற்றார்.
பிரம்மாவே இங்கு
யாகம் செய்தும், தவம் செய்தும் பிரம்ம பதவியைப் பெற்றார் எனில், காசியின்
மகிமையும் தொன்மையும் யாரால் எடுத்துக் கூற முடியும்? சப்தரிஷிகள் என்னும்
ஏழு ரிஷிகளும் இங்கு தவம் செய்து, சிவபெருமான் அருளால் நட்சத்திரப்
பதவியடைந்துள்ளார்கள். காசியில் இரவு பூஜை சப்த ரிஷிகள் பூஜை என மிகவும்
சிறப்பாக, தினசரி நடைபெறுவதால் இத்தலத்தை அவர்கள்தான் தாபித்தார்களோ என ஓர்
எண்ணம் உண்டாகிறது. இராமபிரான் முன்னோர்களில் ஒருவரான ஹரிச்சந்திரன்
வரலாறு அறியாதோர் இலர். அவர் விசுவாமித்திரர் சோதனைக்குட்பட்டு காசியில்
வந்து சுடலையைக் காத்து, மனைவியைப் பிறர்க்கு விற்றுத் துன்பப்பட்டும்,
பொய்யே பேசாமல் முடிவில் சிவபெருமான் அருளால் இழந்த செல்வம் எல்லாம் பெற்று
சுபிட்சம் அடைந்தார். இதிசாக காலத்தில் இராமர் இங்கிருந்து சிவலிங்கம்
கொண்டு சென்று, இராமேசுவரத்தில் வைத்து வழிபட்டு, இராவணனை வதைத்த தோஷம்
நீங்கப் பெற்றார் என இராமயணத்தில் வரலாறு காண்கிறோம். மகாபாரதக் காலத்தில்
பஞ்ச பாண்டவர்கள் காசி வந்து வழிபாடுகள் செய்ததாகவும் மகா பாரதத்தில்
வரலாறு கூறப்படுகிறது. இன்னும் இப்படி எத்தனையோ புராணங்கள் காசிப் பதியைப்
பற்றியுள்ளன. புராண காலத்தில் சத்தியபுரம் என்னும் ஊரில் பூரித்தியும்னன்
என்பான் அரசாண்டு வந்தான். அவனுக்கு ஆயிரக்கணக்கான மனைவிகள். இன்பத்தில்
மூழ்கியிருந்ததால் அவனால், அரசாட்சியை சரிவர கவனிக்க இயலவில்லை. இதனைச்
சாதகமாக்கி அவனது விரோதிகள் அவனை நாட்டை விட்டுத் துரத்தி விட்டனர்.
விபாவரை என்னும் தமது பட்டத்து ராணியை மட்டும் தன்னுடன் அழைத்துக்கொண்டு,
மன்னன் விந்திய மலைச்சாரலில் வந்து வாழ்ந்து வந்தான். வறுமையின் கொடுமையால்
தன் மனைவியையே கொன்றுவிட்டான். அவள் மாமிசத்தை உண்ணப் போகும் போது,
இரண்டுசிங்கங்கள் அங்கே வர பூரித்தியும்னன் ஓடிவிட்டான். அப்படி அவன்
ஓடும்போது அவன்எதிரே வந்த நான்கு பிராமணர்களைக் கொன்று தின்ன முற்பட்டான்.
அப்போது பிராமணர்களது கையிலிருந்த வேத ஏடுகள், மான்தோல் ஆசனம், அவர்கள்
அணிந்திருந்த பூணூல் இவைகளைக் கண்டதாலும் தொட்டதாலும் அவனுக்குப் புத்தி
தெளிந்தது.
பூரித்தியும்னன் தான் செய்த பெண் கொலை, பிராமணர்கள்
கொலை இவைகளினால் பாவ ஆத்மாவாக ஆகிவிட்டதை உணர்ந்தான். பிரம்மஹத்தி தோஷம்
அவனைப் பற்றவே அவன் பெரும் சண்டாளன் ஆகிவிட்டான். காட்டில் அலைந்து சாகல்யா
என்ற தவமுனிவரைக் கண்டு பாவவிமோசனம் கேட்டான். அந்த முனிவர் ஐந்து
கருப்புத் துணிகளைக் கொடுத்து அவனை உடுத்திக் கொள்ளக் கூறினார். காசிக்குச்
சென்று கங்கையில் மூழ்கி விசுவநாதரைத் தரிசித்தால் பாவ விமோசனம் ஆகும்
என்று கூறினார். அவனும் முனிவர் சொற்படி, காசிக்குச் சென்றான். அவன்
காசிமண்ணை மிதித்ததும் ஒரு துணி வெண்மை ஆகிவிட்டது. கங்கையில் மூழ்கி
எழுந்தான். என்னே ஆச்சர்யம்! இறந்த அவனது மனைவி அவனது கைகளைப்
பிடித்துக்கொண்டு உடன் எழுந்தாள். மற்றும் ஒரு கருப்பு ஆடை வெண்மை
ஆகிவிட்டது. இரண்டு ஆடைகளையும் கங்கையில் அவிழ்த்து விட்டு மூன்று
ஆடைகளுடன் கரை யேறினான்.
இரண்டாவது அதிசயம்! இவனால் கொல்லப்பட்ட
நான்கு பிராமணர்களும் கரையில் நின்று கொண்டு தம்பதிகள் இருவரையும்
வரவேற்றனர். அவனதுபாவம் தீர மந்திரம் ஓதி அட்சதை தெளித்தனர். மூன்றாவது
ஆடையும் வெண்மை ஆகிவிட்டது. கணவன் மனைவி இருவரையும் மணி கர்ணிகா கட்டத்தில்
அவர்கள் மூழ்கச் செய்தனர். நான்காவது ஆடையும் வெண்மை ஆகிவிட்டது. பின்பு
விசுவநாதரைத் தொட்டு, பக்தியுடன் வழிபடக் கூறினர். அவ்விருவரும் அதன்படியே
வழிபட, ஐந்தாவது ஆடையும் வெண்மை ஆகிவிட்டது. அவனது பாவங்கள் எல்லாம்
நீங்கிப் புனிதன் ஆனான். விசுவநாதர் ஆலயத்தின் முன்பு அவர்கள் இருவரையும்
அவனது எதிரிகள் அன்புடன் வரவேற்றனர். நாட்டிற்கு அழைத்துச் சென்று, அவனது
அரசை அவனிடமே கொடுத்து, மீண்டும் பூர்த்தியும்னனை அரசனாக்கினர். எனவே
கங்கையில் மூழ்கி காசி விசுவநாதரைத் தரிசித்தால் கொடிய பாவங்களும்
நீங்கிவிடும். எனவேதான் காசிக்கு விடும் பக்தர்கள், தம்பதிகளாக, இரு ஆடைகள்
அணிந்து கங்கையில் மூழ்கி, ஓர் ஆடையை கங்கை நீரில் விட்டுவிட வேண்டும்
என்கின்றனர். கரைக்கு வந்து பிராமணர்களைத் தரிசித்து அவர்களுக்கு தானம்
வழங்க வேண்டும் என்றும் கூறுவர். விசுவநாதர் ஆலயம் சென்று விசுவநாதரைத்
தொட்டு வழிபட வேண்டும் என்றும் இங்கே கூறுகின்றனர். அவ்வாறு செய்தால்தான்,
நாம் நம்மையும் அறியாமல் செய்த பாவங்கள் கூட விலகும் என்கின்றனர்.
இவ்வரலாற்றினால் நாம் கங்கை நீராடும் முறைக்கு விளக்கம் அறிகின்றோம்.
மாபலிச்சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்ட நாராயணன்,
திருவிக்கிரமராக ஓங்கி வளர்ந்து உலகளந்து விட்டு, மற்றொரு காலை தேவலோகம்
வரை நீட்ட, ஆகாச கங்கை நீர்கொண்டு பிரம்மா அத்திருப்பாதத்தைக் கழுவிப்
பூஜித்தார். அப்போது பெருக்கெடுத்து ஓடிய கங்கை நீரைச் சிவபெருமான் தன்
சடையில் தாங்கிப் பூமியில் விட்டார். அந்த கங்கையே காசியில்
புனிதத்தீர்த்தமாக விளங்குகிறது என்கின்றனர்.
சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: இந்தியாவில் 12ஜோதிர்லிங்க
ஸ்தலங்களில் காசியே முதன்மையானது, அம்மனின் சக்தி பீடங்களில் இது
மணிகர்ணிகா பீடமாகும். இங்குள்ள மூலவர் மரகதத்தால் ஆனவர் என்பது தனி
சிறப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக