வெள்ளி, 15 நவம்பர், 2024

சபரிமலை ஐயப்பன் வரலாறு...

சபரிமலை ஐயப்பன் வரலாறு...

ஓம் அறிந்தும் அறியாமலும்
தெரிந்தும் தெரியாமலும் செய்த
ஸகல குற்றங்களையும் பிழைகளையும்
பொறுத்துக்காத்து ரட்சிக்க வேண்டும்
ஓம் ஸ்ரீ ஸத்யமான பொன்னு பதினெட்டாம்படி
மேல் வாழும் வில்லாளி வீரன் வீரமணி கண்டன்
காசி இராமேஸ்வரம் பாண்டி மலையாளம்
அடக்கி ஆளும் ஓம் ஸ்ரீ ஹரிஹரசுதன்
ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா..

 ஐயப்பன் வரலாறு : ஐயப்பன் அருள் பல அருள்பவன். புலியை வாகனமாகக் கொண்டவன். தவக் கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள் பாலித்துவரும் அருட்கடல். மகிஷி என்ற அரக்கியை வதம் செய்ய அவதரித்தவன் ஐயப்பன்.

ஐயப்பன் வரலாறு பற்றி கூறப்படுவதாவது: கேரளாவில் பந்தள மகாராஜா குழந்தையில்லாமல் மனம் வருந்தி வந்தார் அந்த சமயத்தில் மகிஷி என்ற அரக்கி ரிஷிகளை துன்புறுத்தி வந்தாள். அவர்களுக்கு உதவ சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவர்தான் ஐயப்பன். விஷ்ணு மோகினியாக மாற சிவனுக்கும் மோகினிக்கும் (விஷ்ணுவுக்கும்)ஐயப்பன் பிறந்தார். குழந்தையாக பிறந்த ஐயப்பனை மரத்திற்கு அடியில் விட்டுவிட்டு சென்று விட்டனர் ஹரியும், விஷ்ணுவும் தெய்வ செயல்கள் அனைத்திற்குமே ஒரு காரணம்உண்டல்லவா? பக்திமானான பந்தள மகாரஜாவின் பிள்ளையில்லா குறையைத் தீர்க்கவே பரந்தாமனும், பரம்பொரளும் குழந்தையை அங்கேவிட்டுச் சென்றனர். வேட்டைக்கு வந்த பந்தள மன்னன் குழந்தையின் அழுகுரல் கேட்டான். எங்கு குழந்தை அழுகிறது என பதைபதைத்து தேடி மரத்தடியில் ஜொலிக்கும்தேஜசுடன் குழந்தை ஐயப்பனைக் கண்டான். ஆண்டாவா! என் குழந்தையில்லா குறை தீர்க்கவே இந்த குழந்தை இங்கு இருக்கிறதா என மகிழ்ந்து அந்த குழந்தையை அரண்மனை கொண்டு சென்றான். அரசியும் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தாள். இருவரும் இறைவனுக்கு நன்றி செலுத்தினர். குழந்தையை கண்ட அனைவரும் சொக்கிப் போனார்கள். ஜோதிடர்கள் இந்தக் குழந்தை தெய்வாம்சம் பொருந்திய குழந்தை எனக் கூறினர். கழுத்தில் மணியுடன் பிறந்ததால் குழந்தைக்கு மணிகண்டன் என்றுபெயரிட்டு ன பெயரிடலாம் என்று முடிவு செய்து மணிகண்டன் என பெயரிட்டு அன்போடு பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தனர். இந்நிலையில் மகாராணிக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அரசனும் அரசியும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. மணிகண்டன் வந்த நேரம் நமக்கும்குழந்தை பிறந்தது என ஆனந்தம் அடைந்தனர்.

குருகுல வாசம்: தன்னிடம் கல்வி பயில வந்திருக்கும் மணிகண்டன் சாதாரணச் சிறுவனல்ல ஓர் அவதார புருஷன் என்பதை முனிவர் தனது தபோ பலத்தால் உணர்ந்து கொண்டார். இந்தச் சிறுவனுக்கு தான் குருவாக இருந்து கல்வி கற்றுத் தருவது தனது பூர்வஜென்ம புண்ணியம் தான் என்பதும் அவருக்குப் புரிந்தது. மணிகண்டன் சூட்டிகையாய் இருந்தான் கல்வி கேள்வியுடனான அறுபத்து நான்கு கலைகளையும் விரைவிலேயே கற்றுத் தேர்ந்தான். அரசகுமாரர்களுக்குத் தேவையான அனைத்து ஆயுதப் பயிற்சிகளையும் அஸ்திர வித்தைகளையும் வெகு விரைவாகவும் சிறப்பாகவும் கற்றுக் கொண்டான். குருகுல வாசம் சிறப்புற முடிந்தது மணிகண்டன் அரண்மனைக்குச் செல்ல விடைபெறும் நேரம் வந்தது. குருவுக்கு தகுந்த மரியாதை செய்வதற்காக எண்ணற்ற பரிசுகளையும் பொன்னையும் பொருளையும் அனுப்பி வைத்திருந்தார் மன்னர். அனைத்தையும் குருவின் பாதங்களில் சமர்ப்பித்த மணிகண்டன் குருவே தங்களின் திருவருளால் நான் நிறைந்த கல்வியைப் பெற்றேன். இந்த பொன்னையும் பொருளையும் தவிர இன்னும் வேறு ஏதேனும் வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன் என்றான். முனிவர் தயக்கத்துடன் மணிகண்டா மனிதர்களின் சக்திக்கு மீறிய ஒன்றை உன்னிடம் கேட்கப் போகிறேன் முடியுமானால் நிறைவேற்று இல்லாவிட்டால் மனம் வருந்த வேண்டாம் என்றார். உங்களின் விருப்பத்தை நிறை வேற்றுவது எனது பாக்யம். நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் என்று பணிவாகக் கேட்டான் மணிகண்டன். குருபத்தினி கண்களில் நீருடன் மணிகண்டனிடம் ஐயனே எங்களுக்கு ஒரு மகன் இருப்பதும் அவன் பிறவியிலிருந்தே ஊமை என்பதும் உனக்கு தெரியாததா என்ன அவனை நினைத்துத்தான் நாங்கள் மிகுந்த கவலையுடன் இருக்கிறோம். நீதான் அந்த ஊமைப் பிள்ளையின் குறை தீர்த்து அருள் புரிய வேண்டும் என்று வேண்டினாள். பெற்றவர்களது தவிப்பைப் புரிந்து கொண்ட மணிகண்டன் அப்படியே ஆகட்டும் அம்மா என்றான். குருவின் மகனை அருகில் அழைத்தான் பழத் தட்டிலிருந்த கனி ஒன்றை கொடுத்து உண்ணச் சொன்னான். பின் அந்த சிறுவனிடம் கண்ணா இங்கே என்னையே பார் நான் சொல்வதை நம்பிக்கையுடன் திரும்பச் சொல் என்று கூறி பஞ்சாட்சர மந்திரத்தையும் அஷ்டாக்ஷர மந்திரத்தையும் ஓதினான் மணிகண்டன். ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய எங்கே சொல் அங்கே ஒரு அற்புதம் நடந்தது மணிகண்டன் சொல்லச்சொல்ல குரு மைந்தனும் அந்த மந்திரத்தைச் சேர்த்து சொன்னான் தெளிவாக உச்சரித்தான் ஊமைச் சிறுவன் பேசத் தொடங்கி விட்டான். குரு தம்பதியினர் மெய் சிலிர்த்துப் போயினர். கை குவித்து வணங்கினர் மணிகண்டா உலகில் எந்த சீடனும் குருவுக்கு செய்ய முடியாத ஒன்றை எனக்கு நீ தந்தருளினாய். இந்த அற்புதத்தை நிகழ்த்திய நீ சாதாரண மானிடன் இல்லை என்பதை அறிவோம் நீ யார் ஐயனே என்று குரு வேண்டினார். மணிகண்டன் தனது அவதார ரகசியத்தை குருவிடம் கூறினான். பின் குருவே இது தங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்கட்டும். எனது அவதார நோக்கம் முடிந்ததும் ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தில் நான் தங்களுக்கு ஜோதிஸ்வரூபனாக காட்சி தருவேன். இதுவே நான் தங்களுக்கு அளிக்கும் குருதட்சணை என்று சொல்லி வணங்கி விடை பெற்றுக் கொண்டான். குருகுலத்திலிருந்து மணிகண்டன் அரண்மனைக்குத் திரும்பி விட்டான் இப்போது மணிகண்டன் பன்னிரெண்டு வயதுச் சிறுவன். மன்னனும் மக்களும் மற்ற மந்திரி பிரதானிகளும் சேவகர்களும் மணிகண்டனை வரவேற்று மகிழ்ந்தார்கள்.

ராணி கோப்பெருந்தேவியின் மன மாற்றம்: ராஜ்ஜியத்திலோ அரண்மனையிலோ எந்த மாற்றமும் இல்லை, எல்லாம் அப்படியப்படியே இருந்தன. ஆனால் கண்ணே மணியே மணிகண்டா எப்படியடா உன்னைப் பிரிந்திருப்பேன் என்றெல்லாம் வருத்தப்பட்டுக் கொஞ்சிச் சீராட்டி குரு குலத்திற்கு அனுப்பி வைத்த ராணி கோப்பெருந்தேவியின் மனத்தில் மட்டும் இந்த சில வருடங்களில் பெரும் மாற்றம் நிகழ்ந்திருந்தது. அவள் இப்போது மணிகண்டனை வேம்பாக வெறுக்கும் நிலைக்கு வந்திருந்தாள். காரணம் அரசுரிமை பந்தள நாட்டின் மந்திரி அந்த அளவுக்கு மகாராணியின் மனதை விஷமாக்கி இருந்தான். மணிகண்டன் வருவதற்கு முன்பு தங்களுக்கு குழந்தையில்லை இப்போதுதான் உங்களுக்கென்று மகன் ராஜராஜன் பிறந்து விட்டானே இனி இந்த ராஜ்ஜியத்திற்கு அவன்தானே உண்மையான வாரிசு அதை விடுத்து காட்டிலிருந்து எடுத்துவளர்த்த குழந்தையை அரச வாரிசு என்று சொல்லித் திரிவது என்ன நியாயம் அரசி. எக்காரணம் கொண்டும் அரசுரிமையை வேறு யாருக்கும் விட்டுத் தராதீர்கள் என்று உபதேசம் செய்து, அவளை கைப்பாவை போலவே மாற்றி வைத்திருந்தான். பேருக்கு மணிகண்டன் மேல் பாசம் பொழிந்து உள்ளுக்குள் மனத்தில் வஞ்சம் வைத்துக் காத்திருந்தான். இம்மாதிரியான சூழ்நிலையில்தான் மன்னன் ராஜசேகரன் மணிகண்டனுக்கு இளவரசுப் பட்டம் கட்டத் தீர்மானித்தான். அரண்மனை புரோகிதரிடம் முகூர்த்தநாள் கணிக்கச் சொன்னான். ராணி கோப்பெருந்தேவி பதறிப் போனாள். இனியும் காலம் கடத்தக்கூடாது உடனடியாக மணிகண்டனை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று முடிவெடுத்தாள். அமைச்சனும் அவளும் சேர்ந்து திட்டம் தீட்டினார்கள். அரண்மனை வைத்தியரையும் தங்கள் சதிக்கு கூட்டுச் சேர்த்துக் கொண்டார்கள். அன்றைய தினமே ராணிக்குத் தாளமுடியாத பொய்த் தலைவலி உண்டானது. ஐயோ தலைவலி தாங்க முடியவில்லையே செத்துப் போய்விடலாம் போல் இருக்கிறதே. நான் என்ன செய்வேன் என்று துடித்தாள். கண்ணீர் விட்டாள் திறமையாக நடித்தாள். ராணியின் வலியை நிஜமென்று நம்பிய மன்னன் வைத்தியரிடம் சினந்தான். என்ன வைத்தியரே ஒரு தலைவலியை உங்களால் சரிப்படுத்த முடியவில்லையா இதற்கு உங்களிடம் மருந்தே இல்லையா? ராணி வலியால் துடிப்பதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை ஏதாவது செய்யுங்கள் வைத்தியரே என்றார். வைத்தியர் ஏற்கனவே தாங்கள் பேசிக்கொண்ட சதித் திட்டத்தின்படி விபரீதமான ஒரு விஷயத்தைக் கூறினார். மன்னா இது சாதாரண தலைவலி இல்லை. இந்தக் கொடுமையான தலைவலிக்கு ஒரேயொரு மருந்துதான் உண்டு. அந்த மருந்தைத் தயாரிக்கத் தேவையான மூலிகைகள் எல்லாம் என்னிடம் உள்ளன. ஆனால் என்று அரண்மனை வைத்தியர் தான் சொல்ல வந்ததைச் சொல்லாமல் தயங்கினார். என்ன ஆனால் என்ன வேண்டும்? அந்த மூலிகையை அரைத்துக் கலக்கி பற்றுப்போட பால் வேண்டும் அதுவும் குட்டி போட்ட புலியின் பால். என்ன குட்டி போட்ட புலியின் பாலா விளையாடுகிறீர்களா? வைத்தியரே காட்டுக்குப் போய் பெண் புலியை வேட்டையாடி அதுவும் அதன் மடியில் பால் கறப்பதெல்லாம் முடிகிற காரியமா? குட்டி போட்ட புலி எவ்வளவு உக்கிரமாக இருக்கும் தெரியுமா என்று கோபப்பட்டார். ஐயோ வலி தாள முடியவில்லையை உயிர் போகிறதே. மன்னர் சொல்வது சரிதான் புலிப்பால் கொண்டு வருவதெல்லாம் சாத்தியமா என்ன விடுங்கள். நான் செத்துப் போகிறேன் இந்த வலியோடு என்னால் வாழமுடியாது என்று மகாராணி நடிப்பின் உச்சம் தொட்டாள்.

மணிகண்டன் அவதார நோக்கம்: மணிகண்டன் அனைத்தையும் உணர்ந்திருந்தான். ஆனாலும் தனது அவதார நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான காலம் நெருங்கி விட்டதால் அந்த நிகழ்வுக்கு ராணியின் இந்த நாடகத்தை பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தான். மன்னன் ராஜசேகரன் முன்பு வந்து தந்தையே கவலைப்பட வேண்டாம் அன்னையின் துன்பத்தைப் போக்க வேண்டியது எனது கடமை. அனுமதி கொடுங்கள் நான் சென்று புலிப்பால் கொண்டு வருகிறேன் என்றான் ராணியும் மந்திரியும் மகிழ்ந்தார்கள் அவர்கள் எதிர்பார்த்தது நடந்து விட்டது. மன்னனோ பதறினான். மணிகண்டா நீ பாலகன் இது மிகவும் ஆபத்தான காரியம் நான் வேறு ஆட்களின் மூலம் முயற்சிக்கிறேன் இந்த விபரீதத்தில் நீ இறங்கவேண்டாம் என்றான். அப்பா என்னை நம்புங்கள் என் திறமையின் மீது உங்களுக்கே நம்பிக்கையில்லையா? தயவுசெய்து என்னைச் செல்ல அனுமதியுங்கள். வெற்றியோடு திரும்புகிறேன் என்று வேண்டினான். மணிகண்டனின் உறுதியும் கட்டளைக் குரலும் மன்னனை மறுக்க முடியாமல் செய்தன. துணைக்கு நமது படையை அழைத்துச் செல் மணிகண்டா. வேண்டாம் அப்பா கூட்டமாக சென்றால் புலிகள் மிரண்டு ஓடி ஒளிந்து கொள்ளும். நான் ஒருவனாகவே சென்று முடித்து வருகிறேன். தைரியமாக விடை கொடுங்கள். போய் வெற்றியுடன் வா மணிகண்டா என்று வாழ்த்திய மன்னன் ராஜசேகரன் தனது குலதெய்வமான சிவபெருமானுக்கு பூஜித்த முக்கண்ணனின் தேங்காய் ஒன்றையும் கூடவே பயணத்தில் உண்பதற்கான உணவுப் பொருள்களுமாக ஒரு துணியில் இருபுறமும் முடிச்சுகளாகக் கட்டி மணிகண்டனிடம் கொடுத்து வழியனுப்பி வைத்தான். இந்த நிகழ்வின் காரணமாகத்தான் சபரிமலை செல்லும் பக்தர்கள் இருமுடி சுமந்து செல்லும் வழக்கம் உண்டானது. பந்தள நாட்டின் எல்லையைக் கடந்து மணிகண்டன் காட்டுக்குள் பிரவேசித்த போது, இந்திரன் முதலான தேவாதி தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானால் அனுப்பி வைக்கப்பட்ட பூதகணங்களும் மணிகண்டனை எதிர்கொண்டு வரவேற்றனர்.

மகிஷியின் வதம்: மகிஷியின் வதத்துக்கான நேரம் நெருங்கிவிட்ட மகிழ்ச்சியுடன் மணிகண்டனைப் போற்றித் துதித்து அவனை அழைத்துச் சென்று மலையுச்சியின் உயர்ந்த சிம்மாசனத்தில் அமர வைத்துப் பூஜித்தனர். தேவர்கள் அன்று மணிகண்டனை அமர வைத்துத் தொழுத அந்த இடமே "பொன்னம்பலமேடு" எனவும், அந்த மலையே "காந்தமலை" எனவும் அழைக்கப்படுகிறது. இதை "தக்ஷிண கைலாயம்" எனவும் இங்கிருந்து உற்பத்தி ஆகும் நதி " தக்ஷிண கங்கை" என்றும் அழைப்பதுண்டு. தன்னை அழிப்பதற்காக ஒரு பாலகன் தலைமையில் தேவர்கள் படை திரட்டியிருக்கிறார்கள் என்கிற தகவல் அதற்குள் மகிஷியின் காதுகளை எட்டியிருந்தது. மணிகண்டனை தேவர்கள் தொழுது கொண்டிருந்த சமயத்தில் அரக்கி மகிஷி அங்கே வந்து குதித்தாள். அவளது அசுரர் படை கூப்பாடு போட்டபடி பின் தொடர்ந்து வந்தது. யாரடா அவன் பொடியன் என்னைக் கொல்ல வந்திருப்பவன் என்று கர்ஜித்தவள். பாலகனான மணிகண்டனைப் பார்த்ததும் வியந்து போனாள். அடுத்த நொடி வயிறு குலுங்கச் சிரித்தவள், கோபம் கொப்பளிக்க அடேய் சிறுவா பிள்ளைப்பூச்சி போலிருக்கும் நீயா என்னை எதிர்க்க வந்திருக்கிறாய். இன்றோடு உன் ஆயுள் முடிந்தது என் சுண்டுவிரலால் உன்னை நசுக்கி விடுகிறேன் பார் என்றபடி மணிகண்டனை நோக்கிப் பாய்ந்தாள். அடுத்த நொடி போர் தொடங்கியது. மகிஷியின் அசுரர் படைகளும் தேவேந்திரனும் படைகளும் அவர்களுக்கு துணையாக பூதகணங்களும் மோதின. தேவர்களும் பூதகணங்களும் ஆக்ரோஷமாகப் போர் புரிந்து ஆயிரக்கணக்கான அசுரர்களைக் கொன்று குவித்தார்கள். மகிஷமுகி தன்னுடைய மாயா சக்தியினால் பல்லாயிரக்கணக்கான பாணங்களை எய்தாள். மகிஷியின் அத்தனை பாணங்களையும் அஸ்திரப் பிரயோகங்களையும் மணிகண்டன் அநாயசமாகத் தடுத்து தவிடுபொடியாக்கினான். இறுதிக் கட்டம் நெருங்கிக் கொண்டிருந்தது. மணிகண்டனின் பாணங்களால் அடிபட்டு மகிஷியின் உடலெல்லாம் ரத்தம் பீறிட்டுச் சிதறியது. பலம் குன்றிப் போனாள் மகிஷமுகிக்குத் தனது முடிவு தெரிந்து விட்டது. அவள் புரிந்து கொண்டாள் தெய்வாம்சம் பொருந்திய இந்தச் சிறுவன் நிச்சயம் ஹரிஹரனின் புத்திரனாகத்தான் இருக்கவேண்டும். வயதும் பன்னிரெண்டுதான் இருக்கும் தேஜஸ் அவனை பிரம்மச்சாரி என்றே உணர்த்துகிறது. அப்படியானால் நான் பிரம்மாவிடம் கோரிய வரம் பலிக்கப் போகிறதா என் விதி முடியும் தருணமா இது. மகிஷி தனது மரணத்தை உணர்ந்த தருணமே மணிகண்டன் அவளை நெருங்கி தலையின் இரு கொம்புகளைப்பற்றிப் பிடித்துத் தூக்கி கரகரவென்று சுழற்றித் தூக்கியெறிந்தான். மகிஷியின் உடல் " அழுதா" நதிக்கரையில் வந்து விழுந்தது. அவள் மீண்டும் எழும் முன் ஸ்ரீ தர்மசாஸ்தாவாகிய மணிகண்டன் அவள் உடல் மீது ஏறி நின்று நர்த்தனமாடினார். மகிஷியின் உயிர் மெல்லப் பிரிந்தது. மகிஷியின் உடலின் மீது மணிகண்டன் நர்த்தனமாடி சம்ஹாரம் செய்ததைக் கண்டு மகிழ மேலுலகில் இருந்து முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகள், கந்தவர்கள், கின்னரர்கள், கிம்புருஷர்கள், அஷ்டதிக் பாலகர்கள், யட்சர்களுடன், சிவபெருமானும் விஷ்ணுவும் கூட வந்திருந்தனர். அப்போது அங்கே ரிஷப வாகனத்தில் வந்த சிவபெருமான் மணிகண்டன் நடனத்தைக் காண்பதற்காக தனது காளையைப் பக்கத்தில் உள்ள ஆசிரமத்தில் கட்டி வைத்தாராம். அந்த புனிதமான இடமே சபரிமலையில் செல்லும் வழியில் உள்ள " காளை கட்டி " ஆசிரமம் ஆகும். தேவர்கள் பூமாரி பொழிந்து வெற்றி முழக்கமிட்டனர். அப்போது அங்கே ஓர் ஆச்சர்யம் நிகழ்ந்தது மண்ணில் மலை போல வீழ்ந்து கிடந்த மகிஷியின் உடலிலிருந்து விடுதலையாகி சாப விமோசனம் பெற்று எழுந்தாள் லீலாவதி அவள். மணிகண்டனை நெருங்கி அவனது பாதத்தில் வீழ்ந்து பணிந்தாள். ஐயனே தங்களின் புனிதக் கரங்கள் என் மீது பட்டதால் சாப விமோசனம் பெற்றேன். இனி நான் தங்களுக்கே சொந்தம் என்னைத் திருமணம் செய்து ஏற்றுக்கொள்ள வேண்டும் ஸ்வாமி என்று வேண்டினாள். மணிகண்டன் புன்முறுவல் பூத்தான். லீலாவதி இந்த அவதாரத்தில் நான் நித்ய பிரம்மச்சாரியாகவே இருப்பதென்று தீர்மானித்திருக்கிறேன். எனவே என்னை அடைய வேண்டுமென்ற உன் எண்ணம் நிறைவேறாது. ஐயனே தாங்கள் இப்படி என்னை ஒரேயடியாக நிராகரிக்கக்கூடாது, கருணை காட்டுங்கள் ஸ்வாமி என்று லீலாவதி தழுதழுத்தாள். அப்படியெனில் ஒரேயொரு வாய்ப்பை உனக்கு அளிக்கிறேன். இங்கே மலையில் எனக்கென்று அமைக்கப்படும் கோவிலில்தான் நான் வீற்றிருக்கப் போகிறேன். என்னை தரிசிக்க வருடந்தோறும் கோடானுகோடி பக்தர்கள் வருவார்கள் அப்படி இங்கே வரும் ஒவ்வொரு பக்தரும் அடுத்தமுறை வரும்போது மற்றொரு பக்தரைத் தன்னுடன் அழைத்து வருவர். இதனால் ஆண்டுக்காண்டு என் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகும். ஒவ்வொரு வருடமும் புதிதுபுதிதாகப் பக்தர்கள் கன்னிச்சாமி என்ற பெயரோடு என்னை தரிசிக்க வருவார்கள். இந்த நியதி எப்போதாவது மாறி ஏதாவது ஒரு வருடத்தில் கன்னிச்சாமிகள் யாரும் வரவில்லை என்றால், அப்போது கண்டிப்பாக உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன் அதுவரைக் காத்திரு என்று பதிலுரைத்தவன் மேலும் தொடர்ந்து சொன்னான். என்னுடைய கோவிலுக்கருகிலேயே உனக்கும் ஒரு கோவிலை எழுப்பச் செய்கிறேன். நீ எனது இடப்பக்கத்தில் மாளிகைபுரத்து அம்மன் என்ற பெயரோடு கோவில் கொண்டு வீற்றிரு. மக்கள் உன்னை மஞ்சமாதா என்று வழிபடுவார்கள். என்னை தரிசனம் செய்ய வரும் எல்லா பக்தர்களும் உன்னையும் தரிசித்து விட்டுத்தான் செல்வார்கள் என்று அருள் புரிந்தான். தர்மசாஸ்தா அருகிலேயே இருப்பது சாதாரண பாக்கியமா என்ன மஹா பாக்யம் ஆயிற்றே. மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டாள் லீலாவதி இவ்வாறாக மஞ்சமாதா ஐயப்பனின் அருகில் இடம் பிடித்தாள். மணிகண்டனின் அவதாரநோக்கம் நிறைவடைந்தது. ஆனால் காட்டுக்கு வந்த காரியம் முடிவடையவில்லேயே தாயின் தலைவலிக்குப் புலிப்பால் கொண்டு செல்ல வேண்டுமே. தேவேந்திரன் ஒரு பெண் புலியாகவும், மற்ற தேவர்கள் அனைவரும் புலிக் கூட்டங்களாக உருமாறினார்கள் மணிகண்டன் கம்பீரமாக அந்த வேங்கையின் மீது அமர்ந்து கொள்ள ஆயிரக்கணக்கான புலிகள் கொண்ட புலிக்கூட்டம் அவனைப் பின் தொடர்ந்தது. அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பாக இன்னொரு காரியம் செய்ய வேண்டியிருந்தது. வதம் செய்த மகிஷியின் உடலைக் கற்களைப் போட்டு மூடும் வேலை. இறந்த மகிஷியின் உடல் உயிரற்றதாக இருந்தாலும் அரக்க உடல் என்பதால் மலை போல் வளரத் தொடங்கி விடும். எனவே மணிகண்டன் மகிஷியின் உடலைப் பாதாளத்தில் தள்ளிக் கற்களால் மூடினான். மற்றவர்களும் ஐயனுடன் சேர்ந்து ஆளுக்கொரு கல் எடுத்து வீசி கற்குவியலுக்குள் மகிஷியின் உடலைப் புதைத்தனர்.
அப்படிக் கற்களால் மூடப்பட்டு மகிஷி அடக்கம் செய்யப்பட்ட இடம்தான் " கல்லிடும் குன்று" என்று வழங்கப்படுகிறது. மணிகண்டன் பெண்புலியின் மீது கம்பீரமாக அமர்ந்து புலிக்கூட்டம் பின் தொடர பந்தள ராஜ்ஜியத்துக்குள் நுழைந்தான். நகர மக்கள் உறுமியபடி வந்த ஆயிரக்கணக்கான புலிகளையும் பிரம்மாண்ட வேங்கையின் மீது கோடி சூர்ய பிரகாசத்துடன் அழகுற ஆரோகணித்து வந்த மணிகண்டன் திருவுருவத்தையும் கண்டு திகைத்தனர் வியந்தனர் பயந்தனர் ஒளிந்திருந்து கண்குளிர தரிசித்தனர்.
அரண்மனையிலோ மன்னன் ராஜசேகரன் கண்களில் தாரை தாரையாக ஆனந்தக்கண்ணீர், அரசி கோப்பெருந்தேவியோ திடுக்கிட்டுப் போனாள். புலிப்பால் கொண்டு வர கானகம் போனவன் கொடிய மிருகங்களால் தாக்கப்பட்டு சின்னாபின்னமாகி விடுவான் என்று நினைத்திருந்தவளுக்கு மணிகண்டன் ஒட்டுமொத்த புலிக் கூட்டத்துடனே வந்தது அதிர்ச்சியாக இருந்தது. அம்மா தங்களது தலைவலியைப் போக்க இதோ புலியுடனேயே வந்துவிட்டேன் தாயே. தாங்கள் வேண்டிய அளவு பாலைக் கறந்து கொள்ளலாம் என்று அன்னையிடம் புன்னகையுடன் கூறிய மணிகண்டன் தந்தையிடம் திரும்பி அப்பா வைத்தியரை அழைத்து வரச் சொல்லுங்கள். உடனே சிகிச்சையை தொடங்கட்டும் என்றான்.
மன்னன் ராஜசேகரன் மணிகண்டனை மார்புறத் தழுவினான். மணிகண்டா இது நிச்சயமாக மானிடர் செய்யக்கூடிய காரியமே இல்லை. நீ புலிப்பால் கொண்டுவர கானகம் சென்றதுமே, உன் அன்னைக்கு தலைவலி தீர்ந்துவிட்டது உண்மையைச் சொல் நீ யார் என்று தழுதழுத்த குரலில் கேட்டார்.
கோப்பெருந்தேவியோ மணிகண்டனின் காலடியில் சரிந்தாள் அவள் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. மணிகண்டா என்னை மன்னித்து விடப்பா. நீ தாய் என்றழைக்கத் தகுதியில்லாதவள், நான் என் வயிற்றில் பிறந்த பிள்ளை ராஜ்ஜியத்தை ஆளவேண்டும் என்ற ஆசையில் கடவுள் எனக்களித்த தெய்வமகனான உன்னைக் காட்டுக்கு அனுப்பிவைத்த பாவி நான். போலியாக நடித்து புலிப்பால் கேட்ட எனது ஈனச் செயலை மன்னித்துவிடு மகனே என்று கதறினாள். மன்னன் ராஜசேகர பாண்டியன் உண்மையை உணர்ந்தான் கோபம் கொண்டான். வீரர்களே அந்த அயோக்கிய மந்திரியையும் சதிக்கு உடந்தையாக இருந்த அரண்மனை வைத்தியரையும் உடனடியாக கட்டி இழுத்து வாருங்கள் என்று கட்டளையிட்டான். வேண்டாம் தந்தையே எல்லோரையும் மன்னித்து விடுங்கள். விதி இழுத்துப் போன பாதையில் தங்களையுமறியாமல் தவறிழைத்தவர்கள் அவர்கள்.
நான் இந்த பூமிக்கு வந்த அவதார நோக்கத்தை நிறைவேற்ற அவர்களும் இவ்வாறாக எனக்கு உதவியிருக்கிறார்கள் என்று தடுத்துப் பேசினான் மணிகண்டன். பின்னர் புலிகளிடம் திரும்பி இந்திரனே தேவர்களே நீங்கள் செய்த உதவிக்கு நன்றி இனி நீங்கள் தேவலோகம் செல்லலாம் என்று சொல்ல அடுத்த நொடியே புலிக்கூட்டங்கள் மறைந்தது. மன்னன் ராஜசேகர பாண்டியன் ஏதும் விளங்காதவனாய் மணிகண்டா யாரப்பா நீ என்ன இந்தத் திருவிளையாடல் என்று கேட்டான்.
அதை நான் சொல்கிறேன் மன்னா என்றபடி உள்ளே வந்தார் அகத்திய மாமுனிவர். மன்னன் ராஜசேகர பாண்டியனுக்கும் அரசி கோப்பெருந்தேவிக்கும் மணிகண்டனின் அவதார நோக்கத்தின் மகிமையை ஆதி முதல் அந்தம் வரை விளக்கிக் கூறினார். மன்னரும் அரசியும் மெய் சிலிர்த்துப் போனார்கள்.
ஹரிஹர புத்ரனா இத்தனை நாட்கள் தங்கள் வீட்டில் வளர்ந்து தங்கள் மடியில் தவழ்ந்து விளையாடியது. ஆஹா நாங்கள் எத்தனை பாக்யசாலிகள். மகனே மணிகண்டா உன் அவதார நோக்கம் முடிந்து விட்டாலும் எங்களுக்கு செய்யவேண்டிய இன்னொரு கடமை மிச்சம் உள்ளது. நாளையே உனக்கு பட்டாபிஷேகம் செய்வித்து விடுகிறேன் பந்தள தேசத்திற்கு மன்னனாகி இனி நீதான் நாட்டைப் பரிபாலிக்க வேண்டும் என்றான் ராஜசேகரன். ஆம் கண்ணே அப்பா சொல்படி உடனே ராஜ்ஜியத்தை ஏற்றுக்கொள் என்றாள் கோப்பெருந்தேவி. தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள் மகிஷியை அழிக்கும் அவதார நோக்கத்திற்குப் பிறகு இந்தக் கலியுகத்தில் மக்களை நல்வழிப்படுத்தி அவர்களைக் காக்க வேண்டியது என் கடமை. அதுவே எனது அவதாரத்தின் நோக்கமாகும். அதற்காகவே எனக்கென்று ஓரிடத்தை அமைத்துக் கொண்டு அங்கிருந்தே என்னை நாடி வரும் பக்தர்கள் துயர் தீர்த்து அவர்களுக்கு அருள்பாலிக்க விரும்புகிறேன். தாங்கள் எனக்களிப்பதாகச் சொல்லும் சிம்மாசனத்தை விட என்னைத் தேடி வரும் பக்தர்களின் இதய சிம்மாசனமே எனக்கு விருப்பமானது என்று முடிவாகச் சொன்னான் மணிகண்டன். மன்னன் ராஜசேகரன் மனம் வருந்தினாலும் எல்லோருக்குமான இறைவனை தன் சுயநலத்திற்காகப் பிடித்து வைத்துக்கொள்வது சரியல்ல என்று உணர்ந்தான். அவன் மணிகண்டனிடம் ஒரு விண்ணப்பம் செய்து கொண்டான். மகனே உனது பட்டாபிஷேகத்திற்காகவே நான் ஆசை ஆசையாக ஆடை ஆபரணங்களைச் சேகரித்திருக்கிறேன் அவற்றை எனக்காக ஒருநாளாவது அணிந்து சிம்மாசனத்தில் அமர்ந்து எங்களுக்கு காட்சி தர வேண்டும் பகவானே என்று இறைஞ்சினான். ஐயனும் மன்னன் ராஜசேகரின் அன்புக்கு கட்டுப்பட்டு ஆகட்டும் தந்தையே நான் கோயில் கொண்ட பிறகு அந்த ஆடை ஆபரணங்களை மகர சங்கராந்தி தினத்தன்று அணிந்து தங்களுக்குக் காட்சி தருவேன் என்று உறுதியளித்ததோடு அந்த திருவாபரணப் பெட்டி எவ்வாறு யாரால் சபரிமலைக்கு எடுத்து வரப்பட வேண்டும் எந்தெந்த ஆலயங்களில் இறக்கி பூஜை செய்து ஆசீர்வாதம் பெற வேண்டும் என்பதையும் மன்னனுக்கு எடுத்துரைத்தான்.

சபரிமலை ஆலயம்: மணிகண்டன் மன்னனிடம் தந்தையே தங்களது ராஜ்ஜியத்தில் எனக்கென்று கொஞ்சம் நிலத்தை தர முடியுமா என வினவினான். உனக்கு எவ்வளவு இடம் வேண்டுமோ எடுத்துக் கொள் மகனே என்றான் மன்னன். மறுகணம் ஐயன் தந்தையே நான் இப்போது வில்லில் அம்பு பூட்டித் தொடுக்கப் போகிறேன். அந்த அம்பு எங்கு போய் விழுகிறதோ அந்த இடத்தை எனக்களித்தால் போதும். அங்கே எனக்கு ஆலயம் எழுப்புங்கள். அங்கிருந்து நான் அருள்பாலிக்கிறேன் என்றான் மணிகண்டன் பின் வில்லெடுத்து அம்பு தொடுத்தான் அம்பு சென்று விழுந்த இடம் சபரிமலை. அக்கணமே ஐயன் அனைவரின் கண்ணெதிரே ஜோதிப் பிழம்பானான். விண்ணுக்கும் மண்ணுக்குமாக விஸ்வரூபம் எடுத்து ஒளிர்ந்தான். அந்த ஜோதியானது சபரிமலையில் சென்று இறங்கியது. கோடி சூரியப் பிரகாசத்துடன் அந்தப்பகுதி ஜொலித்தது கலியுகத்தின் மனித மனங்களின் இருளைக் கிழித்தெறியத் தொடங்கியது. ஐயன் சொற்படி ஆலயத்தை உருவாக்க முனைந்தான் மன்னன். அவனுக்கு பக்கபலமாக நின்று ஆலோசனைகளை அள்ளி வழங்கினார் அகத்திய மாமுனிவர். கோயிலின் ஒவ்வொரு அமைப்பையும் அகத்தியருடன் கலந்தாலோசித்து அவரது ஆலோசனைப்படியே கிழக்கு நோக்கி பதினெட்டுப் படிகளுடன் கூடிய கோயிலைக் கட்டி முடித்தான் ராஜசேகர பாண்டியன்.

பதினெட்டுப்படிகள்: பதினெட்டுப்படிகள் தாத்பர்யம் என்ன அகத்திய மாமுனிவர் மன்னன் ராஜசேகரனுக்கு விளக்கினார். இந்தப் பதினெட்டுத் திருப்படிகளும் பதினெட்டுத் தத்துவங்களைக் குறிக்கின்றன. மெய் ; வாய் ; கண் ; மூக்கு ; செவி ஆகிய ஐந்து இந்திரியங்களும்
காமம் ; குரோதம் ; லோபம் ; மோகம் ; மதம் ; மாச்சர்யங்கள் ; திதிஷை ; டம்பம் ; ஆகிய அஷ்ட ராகங்களும்
சத்வ ; இராஜஸ ; தாமஸ குணங்களும் வித்யையும் அவித்யையும் சேர்த்து தத்துவங்கள் பதினெட்டாகும்.
தத்வாதீனாகப் பகவான் இருக்கிறான் என்பதை உணர்த்தும் விதம்தான் இந்த பதினெட்டுப்படிகள்.
அகத்திய மாமுனிவரின் இந்த விளக்கம் கேட்டு மனம் மகிழ்ந்தான் மன்னன் ராஜசேகரன்.
கோயில் கட்டி முடித்ததும் சாஸ்தாவுக்கு எந்த வகையிலான விக்ரஹம் அமைப்பது என்ற கேள்வி எழுந்தது? கேரளப் பிரதேசத்தை உருவாக்கியவரான பரசுராமரே அதைத் தீர்மானித்தார்.
சாஸ்தாவின் பலவித ரூபங்களில் இரு கால்களையும் குத்திட்டு யோக பட்டத்துடன் பந்தனம் செய்த வண்ணம் தத்வமஸி என்னும் சின் முத்திரையுடன் கூடிய பகவானின் திருவுருவமே ஏற்றது என்று சொன்னார் பரசுராமர். ஒரு மார்கழி மாதக் கடைசி நாளில் சபரிமலையில் ஆலயத் திருப்பணிகள் இனிதே முடிந்தது. மகா சங்கராந்தி தினமான தை மாதப்பிறப்பு நன்னாளில் ( கிருஷ்ண பக்ஷம் ; பஞ்சமி திதி ; உத்திரம் நக்ஷத்திரம் கூடிய சுப யோக சுப தினத்தில் ) பரசுராமர் ஸ்ரீ தர்மசாஸ்தாவைப் பிரதிஷ்டை செய்தார்.

இனி ஸ்வாமியை எப்படி அழைப்பது : ஐயனை அன்னையாகவும் அப்பனை தந்தையாகவும் கொண்டதனால் அவன் ஐயப்பன் ஆகிறான். மேலும் ஐயன் என்றால் உயர்ந்தவன் பெரியவன் என்றெல்லாம் பொருள் உண்டு. மேலும் பரசுராம க்ஷேத்ரமான கேரளாவில் எல்லாமே அப்பன்தான். உதாரணமாக குருவாயூரப்பன், ஏற்றுமானூரப்பன் வைக்கத்தப்பன், காக்கரையப்பன் அந்த வகையில் ஐயனுடன் அப்பனைச் சேர்த்து ஐயப்பன் என்று அழைக்கிறார்கள். குலகுருவாம் அகத்திய மாமுனிவர் துணையிருந்து பூஜை விதிகளை கிரமமாக நிறைவேற்றி வைத்தார். அன்றிலிருந்து ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தன்று ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி ஸ்வரூபத்தில் காட்சியளித்து அருள் பாலித்து வருகிறார். அதே போல் தனது குருவுக்கு வாக்களித்தபடி மணிகண்டன் குரு தட்சணையாக ஆண்டுதோறும் மகரஜோதியாக காட்சி தருகிறார்.

இவ்வாறாக கலியுகத்தின் உன்னத புனிதத் தலமாக பூலோக சொர்க்கம் சபரிமலை ஆலயம் உருவானது.

ஐயனே வேதம்



ஐயனே யாகம்


ஐயனே மோக்ஷம்
ஐயனே ப்ராணம்
ஐயனே தத்வம்
ஐயனே நித்யம்
ஐயனே ஜீவணம்
ஐயனே லோகம்
ஐயனே ஸகலம்
ஐயனே ஸ்மரணம்
ஐயனே சரணம்
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா

கடவுள் எங்கே இருக்கிறார்?

கடவுள் எங்கே இருக்கிறார்? என்ற கேள்விக்கு மூன்று பெரியோர்கள் பதில் சொல்லி விட்டார்கள்...
 

மக்கள் கேட்ட கேள்விகள்

கடவுள் எங்கே இருக்கிறான்?
 

மனதுக்குள் இருக்கிறானா?
 

வெளியே இருக்கிறானா?
 

அவனுக்கு உருவம் உண்டா?இல்லையா?
 

நேரடியாகப் பார்க்கலாமா?
அல்லது மறைவாக இருக்கிறானா?
 

அவன் ஒருவனா? பல வடிவங்களில் உள்ளானா?

இந்த எல்லா கேள்விகளுக்கும் மகான்கள் பதில்
சொல்லியிருக்கிறார்கள்.
 

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் பதில் :
அழுக்கடைந்த கண்ணாடியில் சூரிய கிரணம் பிரதிபலிப்பதில்லை. அது போல மாயைக்குட்பட்ட அசுத்த ஆத்மாக்களின் இருதயத்தில் ஈஸ்வர தேஜஸ் தோன்றுவதில்லை. ஆனால் தெளிவான கண்ணாடியில் சூரியன் பிரதிபலிப்பதைப் போல தூயோரின் மனத்தில் பகவான் தோன்றுகிறான்.

ஒரு லிட்டர் பாலில் இரண்டு லிட்டர் நீரைக் கலந்துவிட்டால், அதிலுள்ள தண்ணீர் முற்றும் வற்றி, பால் மட்டும் கிடைக்க நீண்ட நேரம் காய்ச்ச வேண்டும். சாதாரண இல்லறத்தானுடைய மனம் தண்ணீர் கலந்த பால் போன்றது. உண்மையான பக்தனுடைய நிலையை அடைய அவனுக்கு நீண்ட காலமும், நெடிய முயற்சியும் தேவை. (இதற்குப் பின்னர்தான் கடவுள் தரிசனம்)
 

கம்பர் பதில் : ஒன்றே என்னின் ஒன்றேயாம்,
  பல என்று உரைக்கின் பலவேயாம்
அன்றே என்னின் அன்றேயாம்,
  ஆமே என்னின் ஆமேயாம்
இன்றே என்னின் இன்றேயாம்,
   உளது என்று உரைக்கின் உளதேயாம் நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு
இங்கு என்னோ பிழைப்பு அம்மா!
 

பொருள் : இறைவன் ஒன்று என்று சொன்னால் ஒன்றுதான்; பல என்றால் பலவே தான்; அப்படி அல்ல என்றாலும் அல்ல தான்; அப்படித்தான் என்றால் ஆம் அப்படித்தான்; இல்லை என்றாலும் இல்லைதான்; உண்டு என்றாலும் உண்டுதான்; எல்லாம் நமது நம்பிக்கையில் தான் இருக்கிறது. இதனை உணர்ந்து கொண்டால் நம் வாழ்வு நன்று!
 

அப்பர் பதில்

விறகில் தீயினன் பாலில்
   படுநெய்போல்
மறைய நின்றுளன்
    மாமணிச் சோதியான்
உறவு கோல்நட்டு
   உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய
    முன் நிற்குமே
 

பொருள் : விறகில் தீ இருப்பது போலவும், பாலில் நெய் இருப்பது போலவும், மணியில் ஒளி இருப்பது போலவும் இறைவன் மறைந்திருக்கிறான். ஆனால் சோதி வடிவாய் இருக்கிறான். அதிலும் மணிச்சோதியாய் மாமணிச்சோதியாய் உள்ளான்.          அப்படியிருந்தும் நம் கண்ணுக்குத் தெரியவில்லையே என்பார் சிலர். குருட்டுக் கண்ணுக்கு உலகியல் பொருள் தெரியாது அதுபோல அறியாமை நிரம்பிய நமக்கு அச்சோதி புலப்படாது. நமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவாகிய கோலை நட்டு, உணர்வாகிய கயிற்றினால் முறுக வாங்கிக் கடைய முன்னின்றருளுவான் என்கிறார் அப்பர். முறுகக் கடைய விறகில் தீ தோன்றும். வாங்கிக் கடைய பாலில் நெய் தோன்றும் கடைய மணியில் ஒளி தோன்றும். எனவே பக்தியுடன் உறவுடன் முறுக வாங்கிக் கடைந்து இறைவனைக் கண்டு இன்புறுவோமாக.
 

திருமுலர் பதில்

உள்ளத்தும் உள்ளன்
    புறத்துள்ளன் என்பவர்க்
குள்ளத்தும் உள்ளன்
   புறத்துள்ளன் எம்மிறை
உள்ளத்தும் இல்லை
   புறத்தில்லை என்பவர்க்
குள்ளத்தும் இல்லை
   புறத்தில்லை தானே.
 

பொருள் : பக்தியுடன் வழிபடுவோர், எங்கும் நிறைந்த இறைவனை உள்ளத்திலும் காணலாம்; வெளியிலும் காணலாம். உள்ளத்தும் இல்லை; புறத்தும் இல்லை என்று கூறும் நாத்தீகர்களுக்கு உள்ளத்தும் புறத்தும் வெளிப்படாது மறைந்து நிற்பான்.

.......................................................

''தந்யம் யசஸ்யம் ஆயுஷ்யம்
      ஸ்வர்க்யம் சத்ரு விநாசனம்
குல சந்தாரகம் சேதி
     ச்ராத்தமாஹூர் மநீஷிண:''

-மஹா பாரதம்,
அநுசாஸந பர்வம் ஸ.145

"இறந்தோரை உத்தேசித்துச் செய்யப்படும் தர்ப்பணமானது செல்வம், புகழ், ஆயுள், ஸ்வர்கம் முதலிய நன்மைகளை அளிக்கும். எதிரிகளை ஒழிக்கும், தன் குலம் தழைத்தோங்கச் செய்யும்” —
மஹா பாரதம்,
அநுசாஸந பர்வம் ஸ.145

விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்...

விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்...

ஒருவர் மிக மிக நல்லவராக, தான தர்மங்களை செய்து வாழ்பவராக, பிறர் துன்பங்களை பொறுக்க முடியாமல் உதவிகள் செய்பவராக இருப்பார்.

ஆனால், அவருக்கு பல மன வேதனைகளும் சோதனைகளும் வருவது உண்டு. அவர் அவற்றை பொருட்படுத்தாமல் தன்னுடைய காரியத்திலேயே கண்ணாக இருப்பார்.

அவரின் நலம் விரும்பிகள் இந்த மனிதர் மிக நல்லவராக இருக்கிறார். ஆனால், ஏன் இவருக்கு மட்டும் இது போன்ற சோதனைகள் வருகின்றது என்று நினைப்பார்கள்.

இதை விதி என்பதா அல்லது துரதிஷ்டம் என்பதா என்று வாதிடுவார்கள். இப்படி பலரும் நம்மிடையே வாழ்கிறார்கள்.

விதி என்றால் என்ன? அதிர்ஷ்டம் என்றால் என்ன? இந்த சந்தேகம் பொதுவாக எல்லோருக்கும் எழுவதுண்டு.

அதேபோல், ராமாயண காவிய நாயகனான ராமருக்கும் இந்த சந்தேகம் இருந்தது. அவரும் மனிதனாக பிறப்பெடுத்தவர் அல்லவா? அவர் தனது சந்தேகத்தை தீர்ப்பதற்காக தனது குருவை நாடினார்.

"உண்மையில், விதி என்றால் என்ன, அதிர்ஷ்டம் என்றால் என்ன?"

இந்தக் கேள்வியை ஸ்ரீராமர் ஒரு நாள் வசிஷ்டரைக் கேட்க, அவர் பதில் கூறுகிறார்.

"ராமா! நாம் செய்த வினைகளின் பயனாக ஏற்படும் இன்ப, துன்பங்களைத்தான் விதி என்றும், அதிர்ஷ்டம் என்றும் கூறுகிறோம். ஒவ்வொரு மனிதனின் மனதிலும் எத்தனையோ வாசனைகள் அல்லது எண்ணங்கள் உள்ளன. அவைதான் வாக்கினால் செய்யப்படும் கர்மங்களாகவும், உடலினால் செய்யப்படும் கர்மங்களாகவும் பரிணமிக்கின்றன. அவன் வாசனைகள் எப்படியோ, அது மாதிரித்தான் அவன் செய்யும் கர்மங்களும் இருக்கும். எப்படி கிராமத்துக்கு போக விரும்புகிறவன் கிராமத்துக்கும், நகரத்திற்குப் போக விரும்புகிறவன் நகரத்திற்கும் போவானோ, அது மாதிரி பூர்வ ஜன்மத்தில், பலன் மீது உள்ள தீவிரமான ஆசையினால் பெருத்த முயற்சியின் பேரில் செய்யப்படும் கர்மம்தான் இந்த ஜன்மத்தில் விதியாக மாறுகிறது.

மனிதன் தனது முயற்சியினால் இந்த உலகில் எதையும் அடைய முடியும். விதியைக் கொண்டு முடியாது. முன் ஜன்ம வாசனைகள் அல்லது கர்மாக்கள் என்னும் நதி மனிதனை நல்ல வழியிலோ தீய வழியிலோ இழுத்துச் செல்லுகிறது. ஆனால், மனிதன் முயற்சி கொண்டு அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். முயற்சி என்பது ஆன்மிக நாட்டமாகவும் இருக்கலாம்.

மனிதனுடைய மனது ஓர் குழந்தையைப் போன்று சஞ்சலமுடையது. அதைக் கெட்ட வழியிலிருந்து நல்ல வழிக்குத் திருப்பவும் முடியும் அதே மாதிரி நல்ல வழியிலிருந்து கெட்ட வழிக்கும் திருப்பலாம்.

ஆகவே, மனிதன் தனது முழு முயற்சியினால்தான் அதைக் கெட்ட வழியிலிருந்து நல்ல வழிக்கு திருப்ப வேண்டும். உலகில் மனிதன் எந்தெந்தக் காரியங்களில் ஈடுபடுகிறானோ, அதிலேயே தன்யமாகி விடுகிறான். ஆகவே, ராமா, நீ உன் முயற்சியைக் கொண்டு, இந்திரியங்களை அடக்கி, துக்கம் இல்லாத பதவியை அடை.

பிறகு, அந்த நல்ல வாசனையையும் துறந்து பிரம்மத்தோடு ஐக்கியமாகு! என்று கூறுகிறார் வசிஷ்டர்.

ஸ்ரீராமருக்கு மட்டுமல்ல, நமக்கும் சேர்த்து வசிஷ்டர் சொன்னதிலிருந்து நாம் செய்யும் கர்மங்கள் மற்றும் எண்ணங்களில் நாம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில், அவைதான் பின்னர் விதியாக மாறி, நமக்கு இன்பத்தையோ, துன்பத்தையோ கொடுக்கப் போகின்றவையாக மாறுகிறது.

*பைரவி*

அர்சாசனைக்கு உகந்த பூக்கள்...

அர்சாசனைக்கு உகந்த பூக்கள்...


நம் தெய்வங்களுக்கு எந்தெந்த மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்று பார்ப்போம்...

விஷ்ணுவை அட்சதையால் அர்ச்சிக்கக் கூடாது.

பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது.

விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். அது போல, சிவசம்பந்தமுடைய தெய்வங்களுக்கே  வில்வார்ச்சனை செய்யலாம். ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு வில்வம் கொண்டு அர்ச்சனை செய்வது விசேஷம்.

விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது. விநாயகர் சதுர்த்தியன்று மட்டும் அர்ச்சனை செய்யலாம்.

பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது.  தும்பை,  வில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம்.

துலுக்க சாமந்திப்பூவைக் கண்டிப்பாக தெய்வங்களுக்கு உபயோகப்படுத்தக் கூடாது.

மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும்.  இதழ் இதழாகக் கிள்ளி அர்ச்சனை செய்யலாகாது.

வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை உபயோகிக்கக் கூடாது.அன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும்.

ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களில் எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. தாமரை, நீலோத்பலம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை தடாகத்திலிருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்கிற விதியில்லை.

வாசனை இல்லாதது, முடி, புழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது, வாடியது, தகாதவர்களால் தொடப்பட்டது, நுகரப்பட்டது, ஈரத்துணி உடுத்திக் கொண்டு கொண்டு வரப்பட்டது, காய்ந்தது, பழையது, தரையில் விழுந்தது ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப் படுத்தக் கூடாது.
சம்பக மொட்டுத் தவிர, வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல. மலர்களைக் கிள்ளி பூஜிக்கக் கூடாது.

வில்வம், துளசியைத் தளமாகவே அர்ச்சிக்க வேண்டும். முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா-இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு உரியவை.
துளசி, முகிழ் (மகிழம்), சண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, தர்பம், அருகு, நாயுருவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் இலை பூஜைக்கு உகந்தவை.

சனி, 9 நவம்பர், 2024

உக்கிரபாண்டியன் திரு அவதாரப் படலம்!

உக்கிரபாண்டியன் திரு அவதாரப் படலம்!

ஈசன் அதற்கு ஏதும் பதில் சொல்லாவிட்டாலும், தடாதகை பிராட்டியாருக்கு அருள் செய்ய மனதில் எண்ணிவிட்டார். தன் மகன் முருகப்பெருமானை அழைத்தார். ஏறுமயிலேறி விளையாடியபடியே ஆறுமுகன் அவர் முன் வந்துநின்றான். தந்தையே! என்னைத் தாங்கள் அழைத்த காரணம் என்ன? என்றான். முருகனைத் தன் மடியில் அமர்த்திக்கொண்டார் ஈசன். சரவணா! அன்றொரு நாள் எனது நெற்றிக்கண்ணில் இருந்து பறந்த சுடரில் பிறந்த நீ, மக்கள் நலனுக்காக இந்த மதுரையில் பிறக்க வேண்டும். தடாதகைபிராட்டியாரின் வயிற்றில் நீ கருவாவாய், என்றார். முருகப்பெருமானும் தந்தையின் கட்டளைக்கு பணிந்து, தடாதகைபிராட்டியாரின் மணிவயிற்றில் குழந்தையாகத் தங்கினார். தான், கர்ப்பமுற்றதை அறிந்த தடாதகை மிகுந்த மகிழ்ச்சியுடன் கணவரின் மார்பில் சாய்ந்து, இந்த விஷயத்தை தெரிவித்தாள். அரசி தடாதகை கர்ப்பமுற்றதை அறிந்த அமைச்சர் சுமதி அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. அவர் இந்த விஷயத்தை மக்களுக்கு தெரிவிக்க உத்தரவிட்டார். மக்கள் தங்கள் எதிர்கால மன்னர் மதுரையில் பிறக்கப்போவதை எண்ணி மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றனர். மீனாட்சி கல்யாண உற்சவம் போல, ஊரெங்கும் மாவிலை தோரணம் கட்டி, இனிப்புகள் சமைத்து, தானம் செய்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். கர்ப்பஸ்திரீக்கு என்னென்ன தேவையோ அவையெல்லாம் செய்து கொடுக்கப்பட்டன. கர்ப்பவதிக்கு புளிப்பு வகை மிகவும் பிடிக்குமே! இதனால் ருசியான புளியோதரையை சமைத்துக் கொடுத்தனர். குழந்தை சிவப்பாக பிறக்க வேண்டுமே என்பதற்காக குங்குமப்பூ கலந்த பால், விதவிதமான பழரசங்கள் கொடுக்கப்பட்டன.

மிக முக்கியமாக வேத விற்பன்னர்கள் காலையும் மாலையும் வரவழைக்கப் பட்டு அரிய ஆன்மிகத் தத்துவங்கள், போதனைகள், கதைகள், இறைவனின் திருநாமங்களின் மகிமை ஆகியவை சொல்லப்பட்டன. இது மிகவும் முக்கியமான விஷயம். இந்தக் காலத்தில் கர்ப்பவதிகள் டிவியின் முன்னால் அமர்ந்து, கண்ட கண்ட நாடகங்களைப் பார்த்து கண்ணீர் வடிப்பதும், உணர்ச்சிவசப் படுபவதும், ஆபாசமும், வன்முறையும் கலந்த பாடல்கள், திரைப்படங் களைப் பார்த்து அவற்றையே விரும்பும் குழந்தைகளைப் பெறுகிறார்கள். தாங்கள் தவறு செய்துவிட்டு, பிள்ளைகள் கெட்டலையும் போதும், ஒழுங்காகப் படிக்காமல் இருக்கும்போதும் அவர்கள் மீது தங்கள் கடமையைச் சரிவர செய்யவில்லை என பழி போடுகிறார்கள். கர்ப்பவதிகள் தயவுசெய்து டிவி பார்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும். சிறந்த ஆன்மிக நூல்களைப் படிக்க வேண்டும். யாருடைய துணையுடனாவது கோயில்களுக்குச் சென்று ஆன்மிக  சொற்பொழிவுகளைக் கேட்க வேண்டும். இப்படி செய்தால் மிகச்சிறந்த குழந்தைகள் பிறக்கும். இப்படியாக, தடாதகை பிராட்டியாரின் கர்ப்ப கால முடிவில், அவளுக்கு வளைகாப்பு, பூச்சூடல் ஆகிய மங்கள நிகழ்ச்சிகள் மிகுந்த ஆடம்பரத்துடன் நடத்தப் பட்டன. மதுரை வாழ் மக்கள் தங்கள் அரசியாருக்கு விதவிதமான கொழுக்கட்டைகள், வடை வகைகளை கொண்டு வந்து கொடுத்தனர். ஒரு திங்கள்கிழமை, நிறைந்த திருவாதிரை நட்சத்திரம், சகல கிரகங்களும் சுபவீட்டில் இருந்த சுபயோக சுபவேளையில் தடாதகை பிராட்டியார் தன் செல்வமகனைப் பெற்றெடுத்தாள். அவள் மட்டுமா! ஊரும் உலகமும் மகிழ்ச்சியடைந்தது. சுந்தரேச பாண்டியன் தன் மகனை பார்க்க வந்த போது, மரகதவல்லியான தடாதகை பிராட்டியாரின் பச்சைக் கன்னங்களில் சிவப்பு இழையோடியது. வெட்கமும், மகிழ்ச்சியும் ஒன்றுசேரும் நேரத்தில் தான் பெண்களுக்கு அழகே கூடும் போலும்!

சுந்தரேச பாண்டியன் தன் மனைவியின் பேரழகையும், செக்கச் சிவக்க பிறந்த மகனின் பேரழகையும் ஒருசேர ரசித்தார். குறிப்பிட்ட நாட்கள் கடந்த பிறகு குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடந்தது. உக்ரவர்மன் என்று பெயர் சூட்டினர். பெயர் சூட்டு விழாவுக்கு தாய்மாமன் வந்தாக வேண்டுமே! திருமால் தன் கருட வாகனத்திலும், பிரம்மா அன்னவாகனத்திலும் அவரவர் தேவியரான ஸ்ரீதேவி, பூதேவி, சரஸ்வதியுடன் வந்து சேர்ந்தனர். தேவ குரு பிரகஸ்பதி குழந்தையை ஆசிர்வதித்து, உரிய வயது வந்ததும் தானே நேரில் வந்து குழந்தைக்கு பாடங்களைக் கற்றுக்கொடுப்பதாகவும் சுந்தரேச பாண்டியனிடம் தெரிவித்தார். ஐந்து வயதில் உக்ரவர்மனுக்கு பூணூல் அணியும் வைபவம் நடந்தது. தேவகுரு பிரகஸ்பதி பாடங்களை ஆரம்பித்தார். எட்டுவயதிலேயே சகல கலைகளையும் கற்றான் உக்ரவர்மன். தந்தை சுந்தரேசபாண்டியன், அவனுக்கு பாசுபதாஸ்திரம் எய்யும் முறையை கற்றுக் கொடுத்தார். உக்ரவர்மனுக்கு 16 வயதானது. அவனுக்கு திருமணம் செய்து வைப்பதா அல்லது பட்டம் சூட்டுவதா என்று சுந்தரேசபாண்டியனும், தடாதகை பிராட்டியாரும் யோசிக்க ஆரம்பித்தனர். அமைச்சர் சுமதியுடனும், வேத பண்டிதர்களுடனும் இதுபற்றி கலந்தோலசித்தனர். திருமணமே சிறந்த வழி என அவர்கள் ஒருமித்த முடிவெடுத்துக் கூறவே பெண் பார்க்கும் படலம் ஆரம்பமானது.

மலையத்துவஜனை அழைத்த படலம்!

மலையத்துவஜனை அழைத்த படலம்!

காஞ்சனமாலைக்கு வருத்தம். ஏழுகடல் வந்தாயிற்று, புனித நீரும் ஆடலாம். ஆனால், சாஸ்திரம் என்ன சொல்கிறது தெரியுமா? தீர்த்தமாடினாலும் சரி, கோயிலுக்கு  போனாலும் சரி...திருமணத்துக்குப் பிறகு தம்பதி சமேதராகச் சென்றால் தான் சிறந்த பலன் உண்டு. மலையத்துவஜனோ இந்த பூமியிலேயே இல்லை. காஞ்சனா என்ன செய்வாள்? இவ்வளவு செய்தும், கணவரின்றி நீராடி பயனில்லாமல் போய்விடுமே! அவளது கண்களில் நீர் முட்டியது.சிவனடியார்களை அழைத்த காஞ்சனமாலை, திருநீறு போல் வெள்ளை உள்ளம் படைத்த அடியவர்களே! அடியவளுக்காக எம்பெருமான், எழுகடலை வரவழைத்துள்ளார். அதில் நீராட வேண்டுமானால், கணவருடன் இணைந்தே நீராட வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அது என்னால் இயலாது என்பதை தாங்கள் அறிவீர்கள். இதற்கு மாற்று வழியிருக்கிறதா? எனக்கேட்டாள். அடியவர்கள் அவளது கவலையை உணர்ந்து, இதற்காக வாட வேண்டாம் தாயே! புனிததீர்த்தங்களுக்கு செல்லும் கணவனை இழந்த பெண்கள், தங்கள் புத்திரர்களின் கையைப் பிடித்தபடியே மூழ்கி எழுவதற்கு அனுமதியளிக்கிறது சாஸ்திரம். தங்களுக்கு புத்திரன் இல்லை என்பதும், ஒரே புத்திரி என்பதையும் நாங்கள் அறிவோம். இவ்வாறான சமயங்களில் பசுக்கன்றின் வாலை பிடித்தபடி நீராடுவது போதுமானதென்றும், அத்தகைய நீராடலுக்கும் புண்ணிய நீராடலின் முழுபலனும் கிடைக்கும் என்றும் சாஸ்திரம் தெரிவிக்கிறது.

தாங்கள் அதற்கான ஏற்பாட்டைச் செய்யுங்கள்,என்றனர். காஞ்சனமாலைக்கு கண்ணீர் இன்னும் அதிகமானது. தன் மகள் தடாதகையிடம் சென்று, மகளே! நான் கொடுத்து வைக்காத பாவியாகி விட்டேன். கணவரை இழந்தேன், ஆண் குழந்தைகளைப் பெறவில்லை. ஒரு பசுக்கன்றின் வாலைப் பிடித்தபடி நீராடும் நிலைக்கு ஆளானேன். என்னவோ என் மனம் இதற்கு ஒப்பவில்லை. உன் மணாளரிடமே கேட்டு, இதையும் விட சிறந்த உபா யத்தை அறிந்து சொன்னால், அந்த ஈசனின் கட்டளையை நிறைவேற்ற சித்தமாயிருக் கிறேன், என்றாள். தாயின் வருத்தம் மகளைக் கலக்கியது. மீன் தன் குஞ்சுகளைக் காப்பது போல், மக்களைக் காக்கும் மாதரசி மீனாட்சியான தடாதகை பிராட்டியார் தன் கணவரிடம் சென்று, ஈசனே! என் தாய் நீராடுவதற்காக மதுரைக்கு புனித தீர்த்தங்களை வரவழைத்தீர்கள். ஆனால், கணவனை இழந்து, புத்திரனைப் பெறாத அவள், பசுக்கன்றின் வாலைப்பிடித்தபடி நீராடுவது குறித்து வருந்துகிறாள். இந்நிலைக்கு மாற்று ஏற்பாட்டைத் தாங்களே செய்ய வேண்டும், என்றாள். தன்னை முழுமையாக நம்புவர்க்கு கேட்டதை கேட்டபடி தரும் ஈசன் அவளுக்கு அருள்புரிய மனம் கொண்டார். தேவாதி தேவனான இந்திரனை நோக்கிப் பார்த்தார். அவன் ஓடோடி வந்தான். இந்திரா! என் மாமியார் புனித தீர்த்தமாட விரும்புகிறார். கணவனுடன் இணைந்து தீர்த்தமாடினால் தான் புண்ணியபலம் கிடைக்கும் என்பதால், சொர்க்கத்தில் இருக்கும் மலையத்துவஜ பாண்டியனை புஷ்பகவிமானத்தில் ஏற்றி தக்க மரியாதைகளுடன் மதுரைக்கு அனுப்பி வை, என்றார். அதன்படியே அவன் செய்ய, மலையத்துவஜன் எழுகடல் தீர்த்தக்கரையில் வந்து இறங்கினான்.

ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ என்ற பழமொழி ஈசனின் திருவருளால் பொய்யானது. காஞ்சனமாலை தன் கணவனைக் கண்டு கதறியழுது அவன் பாதம் பற்றி வணங்கினாள். தடாதகைபிராட்டியாரோ தன் தங்கத்தந்தையைப் பார்த்ததும் உணர்ச்சிப்பூர்வமானாள். மலையத்துவஜபாண்டியன் ஈசனை வணங்கினான். பெருமானே! எனக்கு ஆண்மகன் இல்லை என்ற வருத்தமே இல்லை. ஏனெனில், பெண்ணைப் பெற்றதால் பெருமையடைந்தவன் நான். ஈசனாகிய தாங்களே எனக்கு மருமகனாகக் கிடைத்ததை என்னவென்று சொல்வேன்! தங்கள் ஆசிர்வாதம் எனக்கு வேண்டும், எனச் சொல்லி அவரது பாதத்தில் விழச்சென்றான். சிவபெருமான் அதைக்கண்டு பின்வாங்கினார். மாமனாரே! நான் பூமிக்கு மானிட அவதாரம் எடுத்து வந்துள்ளேன். தாங்கள் எனக்கு மாமனார். மாமன் என்பவர் தந்தைக்குச் சமமானவர். எனவே, தங்களுக்குத்தான் நான் மரியாதை செய்யவேண்டும். ஈசன் என்ற அந்தஸ்துடன் என் பாதத்தில் விழ தங்களை அனுமதிக்கமாட்டேன், என பணிவுடன் சொன்னார். மருமகன்கள் தங்கள் மாமனாருக்கு செய்ய வேண்டிய மரியாதையை, இந்த இடத்தில் தெளிவாக நடத்திக் காட்டியுள்ளார் ஈசன். பின்னர் சிவனடியார்களை அழைத்த அவர்,  அடியவர்களே! முறைப்படி இவர்களுக்கு தீர்த்த ஸ்நானம் செய்து வையுங்கள், என்றார். இறைவனின் கட்டளைக் கேற்ப சிவனடியார்களே அவர்களுக்கு தீர்த்தஸ்நானம் செய்வித்தனர். பின்னர் காஞ்சனமாலையும், மலையத்துவஜனும் பிறவாப்பெருவாழ்வு பெற்றனர். அவர்கள் சிவபெருமானுடன் ஜோதியில் கலந்தனர். என்னதான் பெருவாழ்வு பெற்றாலும், தாயையும், தந்தையையும் பிரிந்த மகளுக்கு வருத்தம் இருக்காதா என்ன! தடாதகைப் பிராட்டியாருக்கு கண்ணீர் முட்டிநின்றது. இருப்பினும், தன் மணாளனின் பாதம் பணிந்து தன் பெற்றோருக்கு நற்கதி கொடுத்ததற்காக நன்றி தெரிவித்தாள்.பின்னர் சுந்தரபாண்டியனான தன் கணவரிடம்,அன்பரே!  என் தாய் தந்தை சிவலோகம் அடைந்து விட்டனர். எனக்கு சகோதரர்கள் இல்லை. பாண்டியவம்சம் நம்மோடு முடிந்து விடக்கூடாது. தாங்கள் தான் நம் வம்சவிருத்திக்கு அருளவேண்டும், எனக் கேட்டுக் கொண்டாள்.

ஏழுகடல் அழைத்த படலம்!

ஏழுகடல் அழைத்த படலம்!

கவுதமர் என்னும் மகரிஷி, அரசி காஞ்சனமாலையைச் சந்தித்தார். ஸ்ரீராமபிரானால் கல்லாய் இருந்து சுயரூபம் பெற்றாளே அகலிகை, அவளது கணவரே இந்த கவுதமர். தேவேந்திரன் தப்பு செய்தாலும் அவனையே சபிக்கும் ஆற்றலுள்ளவர், மிகப் பெரிய தபஸ்வி. மீனாட்சி திருமணத்திற்கு வந்திருந்த அவர், சிவபெருமானிடம் விடை பெற்ற பிறகு, மரியாதை நிமித்தமாக காஞ்சனமாலை அம்மையாரையும் சந்தித்து விடை பெற்றுக் கொள்ள வந்தார். அவரை அரண்மனைக்குள் அழைத்து வந்த காஞ்சனமாலை தகுந்த மரியாதை செய்தாள். உயர்ந்த ஆசனத்தில் அவரை அமர செய்து, சிறிய ஆசனம் ஒன்றில் தான் அமர்ந்து கொண்டாள். பெரியவர்கள் ஒரு இடத்தில் அமர்ந்திருக்கும் போது, சிறியவர்கள் தரையில் அமர்ந்து கொள்ள வேண்டும். பெரியவர்களுக்கு தரப்படும் மரியாதை மிகப்பெரிய புண்ணியத்தையும், அவர்களின் ஆசியையும் நமக்குத் தரும். அவரிடம் காஞ்சனமாலை, மாமுனிவரே! என் மகள் மீனாட்சியின் திருமணம் நல்லபடியாக முடிந்து விட்டது. என் மருமகனாக அந்த ஈசனே வந்துவிட்டார். இனி மதுரையின் காலம் பொற்காலமாகவே திகழும். எனவே, நான் பிறவாப் பெருநிலை அடைய விரும்புகிறேன். அதற்கு என்ன வழி என்று தாங்கள் தான் உபதேசிக்க வேண்டும், என்றாள். குழந்தைகளுக்கு திருமணம் முடிந்தபிறகும், அவர்கள் விஷயத்தில் தலையிடாமல், அதன் பிறகு முக்திக்குரிய நிலையாகிய தெய்வ வழிபாட்டை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்பது இதன்மூலம் தெளிவாகிறது. பிள்ளைகளுக்கு திருமணமான பிறகும், வீட்டுக்கு வந்த மருமகள், மருமகனின் செயல்பாடுகளில் தலையிட்டால் நிம்மதியின்மையே ஏற்படும் என்பது இதன்மூலம் கிடைக்கும் அறிவுரையாக இருக்கிறது.காஞ்சனமாலையின் மன ஓட்டத்தை கவுதமரும் புரிந்து கொண்டார்.

அரசியாரே! உமையவளை மகளாகவும், ஈசனையே மருமகனாகவும் அடைந்த பெறற்கரிய புண்ணியத்தைப் பெற்ற மகராசியான உங்களுக்கு உபதேசிக்கும் தகுதி எனக்கில்லை. இருப்பினும், ஞானத்தை யாசிக்கும் போது அதை அருள்வதே ஒருவரின் கடமை. இதோ! பிறப்பற்ற நிலையடைய மூன்று வழிகளைச் சொல்கிறேன். தர்மம் செய்தல், உண்மையை மட்டுமே பேசுதல், இறைவனைத் தியானம் செய்தல், நம் மனத்தைக் கட்டுப்படுத்தி ஆசைகளைக் குறைத்தல் ஆகியவை ஒரு ரகம். சிவாயநம என்னும் மந்திரத்தை தினமும் ஓதுவது, வேதநூல்களை  படிப்பது, யாகங்கள் செய்வது ஆகியவை இரண்டாவது ரகம். சிவபெருமானை வில்வத்தால் அர்ச்சனை செய்வது, கோயிலை வலம் வருவது, தல யாத்திரை செல்வது, தீர்த்தங்களில் நீராடுவது ஆகியவை மூன்றாவது ரகம். இதில், கடல் உள்ள இடத்தில் நீராடுவது மேலும் நலம் பயக்கும், என்றார். அவர் சென்றபிறகு, காஞ்சனமாலை தன் மகளிடம் வந்தாள். மீனாட்சி! எனக்குள் ஒரு ஆசை, பிறப்பற்ற நிலையடைய விரும்புகிறேன். கவுதம மகரிஷியின் அறிவுரைப்படி பார்த்தால் தீர்த்தமாடுவதே முக்திநிலைக்கு முதல் பாதையாக இருக்குமென கருதுகிறேன். அதிலும் ஆறும் கடலும் இருக்குமிடத்தில் நீராடுவது மிகப்புண்ணியமானதென்று அவர் கூறினார். நம் மதுரை நகரில் உன் கணவரின் அருளால் வைகை என்னும் மலர்க்கொடியாள் மலர்ந்து பரந்து ஓடுகிறாள். ஆனால், இங்கே கடல் இல்லையே! கடல் இங்கிருந்தால் நான் அதில் நீராடி பிறப்பற்ற நிலைக்கு பாதை காண்பேன், என்றாள். தாயின் விருப்பத்தை ஆண் பிள்ளைகள் இருந்தால் நிறைவேற்றி வைப்பார்கள். மீனாட்சியோ ஆணுக்கு ஆணாகவும், பெண்ணுக்கு பெண்ணாகவும் இருக்கிறாள்.

திருமணத்துக்குப் பிறகும் கூட கணவர் வீடான இமயத்துக்குச் செல்லாமல், கணவரையும் இங்கேயே தங்க வைத்து விட்டாள். மணாளனோ மகாதேவன். அவர் உத்தரவிட்டால் கடல்களே விழுந்தடித்துக் கொண்டு இங்கே வராதா என்ன! தன் அன்னையின் விருப்பத்தை அவள் தன் நாதனிடம் சொன்னாள். மாமியின் விருப்பத்தை நிறைவேற்ற அந்த சாமியும் முடிவு செய்து விட்டார். கடல்களே! மதுரைக்கு வாருங்கள், என்றார். ஒன்றல்ல, இரண்டல்ல...ஏழு கடல்களும் மதுரைக்கு வந்து சேர்ந்தன. எங்கும் பேரிரைச்சல்... அலைகள் நர்த்தனமாடின. அவற்றில் கிடந்த சங்குகளும், முத்துச் சிப்பிகளும் ஒன்றோடொன்று உரசி எழுப்பிய ஓசை எல்லையே இல்லாமல் விரிந்து சென்றது. மக்களின் கண்களுக்கு கடல்கள் தெரியவில்லையே ஒழிய கடல் ஓசை தெளிவாகக் கேட்டது. அவர்கள் குலை நடுங்கிப் போனார்கள். அவர்கள் ஓடோடி வந்து மன்னர் சுந்தரேசரை வணங்கி, எம்பெருமானே! எங்கள் மன்னனே! இதென்ன ஓசை... கடல் அலைகளின் பேரிரைச்சல் கேட்கிறதே! என்ன இது! ஊழிக்காலமாகிய உலகம் அழியும் காலம் வந்துவிட்டதா! என பலவாறாகக் கேட்டனர். சுந்தரேசர் அந்தக் கடல்களை அடக்கினார். அமைதியாயிருங்கள்! நீங்கள் மீனாட்சி ஆலயத்தின் வெளிப்புறமுள்ள கிணற்றில் சென்று அடக்கமாய் இருங்கள், என்று கர்ஜித்தார். அவ்வளவுதான்! சத்தமே வரவில்லை. மக்கள் மகிழ்ந்தனர். சுந்தரேசர் குறிப்பிட்ட இடத்தில் சென்று பார்த்தனர். கிணற்றில் நீர் நிரம்பிக் கிடந்தது. கருணை வடிவான ஈசனை மனதார துதித்த காஞ்சன மாலை பரிவாரங்களுடன் கிணற்றுக்குச் சென்றாள். மதுரை மீனாட்சி கோயில் கிழக்கு கோபுரம் எதிரேயுள்ள புதுமண்டபத்தைக் கடந்தால் வரும் தெருவுக்கு எழுகடல் தெரு என்று இப்போதும் பெயர் இருக்கிறது.

அன்னக் குழியும் வையையும் அழைத்த படலம்!

அன்னக் குழியும் வையையும் அழைத்த படலம்!

நாதா! இதென்ன அதிசயம்! பல லட்சக்கணக்கானோருக்கான உணவை இவன் ஒருவன் சாப்பிட்டு விட்டானே! இன்னும் இவனை விட்டால் சமையல்காரர்களையும், பாத்திரங்களையும் கூட தின்று விடுவான் போலிருக்கிறதே! அதற்கும் பசி அடங்கா விட்டால் உலகையை விழுங்கி விடுவானோ! ஐயனே! இதென்ன சோதனை! என்றாள்.மீனாட்சியை அமைதிப்படுத்திய சுந்தரேசர், நான்கு  குழிகளை வரவழைத்தார். அவற்றில் பால் சோறு, தயிர்ச்சோறு உள்ளிட்ட அன்னவகைகள் குறைவின்றி கிடைக்க ஏற்பாடு செய்தார். குண்டோதரன் அவற்றைச் சாப்பிட்டு சாப்பிட்டு களைத்துப் போனான். அந்தக் குழியில் இருந்து வந்த சாப்பாடு குறையவே இல்லை. பசி தணியவே, தண்ணீர் குடிக்க நீர்நிலைகளை தேடியலைந்தான். மதுரையில் இருந்த பல குளங்களின் நீரும் வற்றும் வகையில் தண்ணீர் குடித்தும் தாகம் அடங்கவில்லை. ஐயனே! என் தாகத்தையும் தீர்க்க வேண்டும், என சுந்தரேசரிடம் வேண்டினான். அவர் தன் தலைமுடியைச் சாய்த்து கங்கையை கீழே இறங்கச் சொன்னார். கங்கா! நீ பிரவாகமெடுத்து ஆறாக இந்நகரின் வழியே ஓடிவா, என்றார்.

அவள் சுந்தரேசரிடம், சுவாமி! தங்கள் சித்தப்படியே செய்கிறேன். உங்கள் திருமணநாளன்று உருவாகும் பாக்கியம் பெற்ற என்னில் மூழ்கி எழுபவர்கள் பிறப்பற்ற நிலையாகிய மோட்சத்தை அடைய அருள்பாலிக்க வேண்டும், என வேண்டினாள். கங்கா! மோட்சத்தலங்களான வைகுண்டத்தின் முதல் எழுத்தாகிய வை கைலாயத்தின் முதல் எழுத்தாகிய கை இவை இரண்டையும் இணைத்து நீ வைகை என வழங்கப்படுவாய். உன்னில் குளிப்பவர்கள், தீர்த்தமாகப் பருகுபவர்களுக்கு மோட்சம் கிட்டும். அவர்கள் சகல செல்வங்களோடும் வசிப்பார்கள், என்றார். பின்னர் கங்காதேவி, ஆறாக வேகமாக ஓடிவந்தாள். அவளுக்கு வேகவதி என்ற பெயர் உண்டாயிற்று. குண்டோதரன் அந்த ஆற்றின் இருகரைகள் மீதும் கைகளை விரித்து வைத்துக் கொண்டு ஆற்றின் போக்கை தடுத்து தண்ணீர் அருந்தி தாகம் தீர்ந்தான். இதனாலும் இந்த நதிக்கு வைகை என்று பெயர் வந்ததாக சொல்வர். தன் தாகம் தீர்த்த வைகை சிவனின் தலையில் இருந்து தோன்றிய தால் அதற்கு சிவதீர்த்தம் என்னும் புனித பெயரும் வைத்தான். சிவனின் திருமணத்திற்கு வந்து, திருமணப்பணிகளை சிறப்பாக செய்த அவனுக்கு பூதகணங் களின் தலைமைப் பதவியை சுந்தரேசப் பெருமான் அளித்தார்.

குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்!

குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்!

அனைத்து மக்களும் சாப்பிட்டாயிற்று. லட்சக்கணக்கில் திருமணத்துக்கு வந்திருந்த மக்களும் சாப்பிட்டாலும், சமைத்ததில் பெரும் பங்கு மிஞ்சிவிட்டது. எவ்வளவு பரிமாறினாலும், உணவின் அளவு அப்படியே இருப்பது போல் தெரிகிறதே! இது ஏதோ மாயவித்தை போல் தெரிகிறதே! சமையல் குழுவினர் பிரமித்தனர். இதுபற்றி முறையிட அரசி மீனாட்சியிடம் அவர்கள் ஓடினர். மீனாட்சி மடப்பள்ளியில் சென்று பார்த்தாள். சமைத்த உணவில், லட்சக்கணக்கானவர்கள் சாப்பிட்டிருந்தும் கூட, சற்று கூட குறையாமல் அப்படியே இருந்தது. இது இறைவனின் லீலை என்பதை அவள் எப்படி அறிவாள்? சுந்தரேசர் ஏதும் அறியாதவர் போல் இருந்தாள். மீனாட்சி தன் கணவரிடம் நாணத்துடன் சென்றாள். சுவாமி! எங்கள் இல்லத்தில் நாங்கள் சமைத்த உணவு அப்படியே மீந்துவிட்டது. லட்சக் கணக்கானவர்கள் மாப்பிள்ளை இல்லம் சார்பாக வந்திருந்தும் அப்படியே இருப்பது ஆச்சரியமூட்டுவதாக உள்ளது. உணவை வீணடிப்பது மகாபாவம் என்பது தாங்கள் அறியாததல்ல! அது அன்னபூரணிக்கு மாசு கற்பித்தது போல் ஆகும். இந்த உணவு காலியாக தாங்கள் தான் அருள்புரிய வேண்டும், என்றாள்.

அவளது பேச்சில் சற்றே ஆணவம் தொனித்தது போல் தெரிந்தது. மனிதனுக்கு சிறிதளவு ஆணவம் இருந்தாலும் இறைவனை அடைய முடியாது. அந்த ஆணவத்தைக் களைய அவன் சோதனைகளைத் தருவான். தன் மனைவியிடமும் விளையாடிப் பார்க்க இறைவன் திருவுளம் கொண்டார். அப்படியா! ஏராளமாகவா சமைத்தீர்கள்! எல்லோரும் சாப்பிட்டாயிற்றே! சரி...என் பூதகணங்கள் சாப்பிட்டதா என விசாரித்து விடுகிறேன், என்றவர், பூதகணங்களை அழைத்து விசாரிப்பவர் போல் நடித்தார். குண்டோதரன் என்ற பூதகணத்தை தவிர மற்றவர்கள் சாப்பிட்டாயிற்று என்றனர். குண்டோதரனுக்கு திருமணப்பணிகள் அதிகமாக இருந்ததால், பிறகு சாப்பிடலாம் என இருந்துவிட்டான். குண்டோதரா! சாப்பிடாமல் அப்படி என்ன வேலை செய்து கொண்டிருக்கிறாய்! போ போ, முதலில் சாப்பாட்டை முடி! அப்புறம், பணிகளை செய்யலாம், என செல்லமாகக் கடிந்துகொண்டார் மாப்பிள்ளை சுந்தரேசர். குண்டோதரன் சாப்பிடச் செல்லும் போது மீனாட்சி அவரிடம், சுவாமி! இவன் ஒருவன் சாப்பிடுவதால் உணவு தீர்ந்துவிடுமா! இன்னும் சாப்பிடாதவர்கள் நிறைய இருப்பார்கள். அவர்களையும் வரச்சொல்லுங்கள், என்றாள்.

புன்னகையை உதிர்த்த சுந்தரேசர், இவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கட்டும், இன்னும் யார் யார் சாப்பிடவில்லை என விசாரித்து அனுப்பி வைக்கிறேன், என்றார். குண்டோதரன் மடப்பள்ளிக்குள் நுழைந்தானோ இல்லையோ, அவனது வயிற்றில் வடவைத்தீ எனப்படும் கொடும் பசித்தீயை எரிய வைத்தார் சுந்தரேசன். மடப்பள்ளிக்குள் நுழைந்த குண்டோதரன் ஒரு நிமிடத்தில் அனைத்தை யும் சாப்பிட்டு விட்டு, ஐயோ! பசி பொறுக்க முடியவில்லையே! திருமண வீட்டுக்கு வந்தவர்களுக்கு வயிற்றுக்குச் சோறிட வேண்டாமோ, என புலம்பினான். மீண்டும் சமையல் செய்யப்பட்டது. அதுவும் கணநேரத்தில் காலியாகி விட்டது. மீனாட்சியும் அரண்மனையில் இருந்த மற்றவர்களும் அதிசய அதிர்ச்சியை அடைந்தனர்.இதென்ன புதுமை! ஒரு தனிநபரால் இப்படி உணவுண்ண முடியுமா! இவன் வாயைத் திறந்ததும் எல்லாமே தானாக வயிற்றுக்குள் போய் விடுகிறதே! மீண்டும் மீண்டும் சமைத்து ஓய்ந்துவிட்டனர் சமையல்காரர்கள். அரண்மனையில் வாங்கி வைத்திருந்த சமையல் பொருட்கள் அத்தனையும் காலி. மீனாட்சிக்கு இதில் ஏதோ சூட்சுமம் இருப்பது புரிந்து விட்டது.

வெள்ளியம் பல திருக்கூத்தாடிய படலம்!

வெள்ளியம் பல திருக்கூத்தாடிய படலம்!  

எம்பிரானுக்கும், தடாதகை பிராட்டியாருக்கும் திருமணம் இனிதே நிறைவுபெற்ற பின் திருமண விருந்து துவங்கியது. திருமணத்துக்கு வந்தவர்களையெல்லாம் விருந்துண்ண சுந்தரேசர் அழைத்தார். இருவரை தவிர எல்லோரும்  விருந்துண்ண  சென்றனர். அவர்கள் தான் சாஸ்திரங்களில் தேர்ந்த பதஞ்சலி முனிவரும்,  பக்தியில் முதிர்ந்த வியாக்ரபா முனிவரும்! அவர்கள் சிவபெருமானின் பாதம் பணிந்தனர். பதஞ்சலி முனிவர் சிவனிடம், சோமசுந்தரப் பெருமானே! நாங்கள் ஒரு உறுதி எடுத்துள்ளோம். அதாவது, தில்லையம்பலமாகிய சிதம்பரத்தில் நாங்கள் தங்கள் திருநடனக்கோலத்தை தரிசித்த பிறகே உணவு உண்போம். இங்கு என்ன செய்வதென தெரியவில்லை, என்றதும், அதற்கென்ன! அங்கு ஆடிய நடனத்தை இங்கும் ஆடுகிறேன். தாங்கள் இருவரும் கண்டுகளித்த பின் உணவருந்துங்கள், என்றார். முனிவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. சிவபெருமான் அவர்களை அழைத்துக் கொண்டு மதுரை கோயிலுக்குள் சென்றார். மேலும் சிவபெருமான் உலகனைத்தும் வடிவான விராட்புருடனுக்குத் தில்லைப் பதி இதயமாகும். மதுரையோ துவாத சாந்தத் தானம் என மொழிந்தார். இதைக் கேட்டு மகிழ்வுற்ற முனிவர்கள் வேந்தர் வேந்தே! பிறஉறுப்புகள் எது என தெளிவாக விளக்குங்கள் என கூறினர்.  இறைவடிவான சுந்தர பாண்டியர் கூறியதாவது மூலதாரமான இப்பூவுலகிலே எல்லையற்ற இறைத்தன்மைத் தானங்கள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைக் கேளுங்கள். திருவாரூர் மூலதாரத் தானம், திருவானைக்கா சுவாதிட்டானத் தானம், திருவண்ணாமலை நாபி, தில்லைபதி இதயம், திருக்காளத்தி கண்டம், காசித் தலம் புருவமத்தியம், திருக்கயிலாயம் பிரமநாடி, இந்த மதுரைப் பதி துவாத சாந்தத்தானம். இது எவ்வாறு சிறந்ததென்று கேட்பீர்களானால், அது முன்னர் தோன்றிய முறையால் என்று தெளிந்த விளக்கத்தினை எடுத்து இயம்பினார். அதன் பின் அனைவரும் கோயிலுக்குள் சென்றார்கள். அங்கே ஓர் அற்புதத்தை அவர்களுக்கு நிகழ்த்திக் காட்டினார் சிவபெருமான். இந்திரனால் அமைக்கப்பட்ட தங்க விமானத்தின் கீழ், ஒளி பொங்கும் வெள்ளி அம்பலம் ஒன்றை உருவாக்கினார். பளபளவென மின்னிய அந்த அரங்கத்தில் மாணிக்க பீடம் ஒன்று வந்து அமர்ந்தது. கோடி சூரியர்கள் ஒரே சமயத்தில் உதித்தாற் போல் குருபரன் தோன்றினார். மனம், மொழி, பக்கம், மேல், கீழ், முன், பின் என்ற இவைகளைக் கடந்த மெய்ஞ்ஞானப் பேரொளி வடிவே அது. சிவகணங்கள் முழக்க, நந்தி தேவர் மத்தளம் அடிக்க, திருமால் இடக்கை முழக்க, தும்புரு நாரதர் இசைபாட தேவர்கள் பூமழை பொழிய, கடல்நிற மேனி படைத்த செந்தீப்புறமயிர் முயலகண் மேல் வடவைத் தீப்போல் அவனது செங்கண்கள் பிதுங்கவும், சினங்கொள்ளவும் முதுகு முறியவும் வலது திருவடியை ஊன்றி சிவபெருமான் அந்த பீடத்தில் நின்று நடனமாடினார்.  திருக்கூத்தாடும் இடது திருவடித் தாமரையும், பத்துத் திருக்கரங்களும், வலக்கரம் ஐந்தில் அபய அத்தத்திலே சூலமும், மற்ற நான்கு கரங்களில் உடுக்கை, அம்பு, வாள், மழு என்பனவும் இடக்கரம் ஐந்தில் வரத அத்தத்திலே பாம்பும், மற்றைய நான்கு கரங்களில் அக்கினி, வில், கேடகம், தண்டு என்பனவும், திருநீலகண்டமும், சங்க குண்டலம் பூண்ட திருச்செவியும், விரித்த செஞ்சடையும், வெள்ளிய திருநீற்றொளித் திருமேனியும், முக்கண்களும், அரவக் கச்சையும், அம்மையார் ஒதுங்கி நிற்கும் பக்கமும், அவ்வம்மையார் மேல் வைத்த திருநோக்கமும் திருநகையும் தோன்றத் திருநடனம் செய்தருளினார். அந்த முனிவர்களும் மதுரை மாநகர மக்களும் இறைவனின் நடன காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர். பின்னர் பதஞ்சலி, வியாக்கிரபாத முனிவர்கள் கருணாமூர்த்தியைப் பாக்களால் பலபடப் பூசித்துப் போற்றி மகிழ்ந்தனர். பரந்தாமன் அம்முனிவர்களிடம் நீங்கள் இன்னும் விரும்பியது யாது? அதை யாம் நிறைவேற்றி வைப்போம் என வினவினார். உடனே அவ்விருவரும், எந்தையே! இத்திருக்கூத்துடனம் எப்பொழுதும் இவ்வெள்ளியம்பலத்துள்ளே நின்று எல்லோருடைய பாச பந்தங்களையும் போக்கி அருள் செய்தல் வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள். திருமண விழாக்களில் பிறர் நடனமாடி நாம் ரசிப்பது வழக்கம் தான்! ஆனால், இங்கோ மணமகனே நடனமாடினார். அந்தக் காட்சியைக் கண்ட பிறகு முனிவர்கள் உணவருந்தச் சென்றனர்.வெள்ளியம்பல திருக்கூத்தாடிய படலம்!  எம்பிரானுக்கும், தடாதகை பிராட்டியாருக்கும் திருமணம் இனிதே நிறைவுபெற்ற பின் திருமண விருந்து துவங்கியது. திருமணத்துக்கு வந்தவர்களையெல்லாம் விருந்துண்ண சுந்தரேசர் அழைத்தார். இருவரை தவிர எல்லோரும்  விருந்துண்ண  சென்றனர். அவர்கள் தான் சாஸ்திரங்களில் தேர்ந்த பதஞ்சலி முனிவரும்,  பக்தியில் முதிர்ந்த வியாக்ரபா முனிவரும்! அவர்கள் சிவபெருமானின் பாதம் பணிந்தனர். பதஞ்சலி முனிவர் சிவனிடம், சோமசுந்தரப் பெருமானே! நாங்கள் ஒரு உறுதி எடுத்துள்ளோம். அதாவது, தில்லையம்பலமாகிய சிதம்பரத்தில் நாங்கள் தங்கள் திருநடனக்கோலத்தை தரிசித்த பிறகே உணவு உண்போம். இங்கு என்ன செய்வதென தெரியவில்லை, என்றதும், அதற்கென்ன! அங்கு ஆடிய நடனத்தை இங்கும் ஆடுகிறேன். தாங்கள் இருவரும் கண்டுகளித்த பின் உணவருந்துங்கள், என்றார். முனிவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. சிவபெருமான் அவர்களை அழைத்துக் கொண்டு மதுரை கோயிலுக்குள் சென்றார். மேலும் சிவபெருமான் உலகனைத்தும் வடிவான விராட்புருடனுக்குத் தில்லைப் பதி இதயமாகும். மதுரையோ துவாத சாந்தத் தானம் என மொழிந்தார். இதைக் கேட்டு மகிழ்வுற்ற முனிவர்கள் வேந்தர் வேந்தே! பிறஉறுப்புகள் எது என தெளிவாக விளக்குங்கள் என கூறினர்.  இறைவடிவான சுந்தர பாண்டியர் கூறியதாவது மூலதாரமான இப்பூவுலகிலே எல்லையற்ற இறைத்தன்மைத் தானங்கள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைக் கேளுங்கள். திருவாரூர் மூலதாரத் தானம், திருவானைக்கா சுவாதிட்டானத் தானம், திருவண்ணாமலை நாபி, தில்லைபதி இதயம், திருக்காளத்தி கண்டம், காசித் தலம் புருவமத்தியம், திருக்கயிலாயம் பிரமநாடி, இந்த மதுரைப் பதி துவாத சாந்தத்தானம். இது எவ்வாறு சிறந்ததென்று கேட்பீர்களானால், அது முன்னர் தோன்றிய முறையால் என்று தெளிந்த விளக்கத்தினை எடுத்து இயம்பினார். அதன் பின் அனைவரும் கோயிலுக்குள் சென்றார்கள். அங்கே ஓர் அற்புதத்தை அவர்களுக்கு நிகழ்த்திக் காட்டினார் சிவபெருமான். இந்திரனால் அமைக்கப்பட்ட தங்க விமானத்தின் கீழ், ஒளி பொங்கும் வெள்ளி அம்பலம் ஒன்றை உருவாக்கினார். பளபளவென மின்னிய அந்த அரங்கத்தில் மாணிக்க பீடம் ஒன்று வந்து அமர்ந்தது. கோடி சூரியர்கள் ஒரே சமயத்தில் உதித்தாற் போல் குருபரன் தோன்றினார். மனம், மொழி, பக்கம், மேல், கீழ், முன், பின் என்ற இவைகளைக் கடந்த மெய்ஞ்ஞானப் பேரொளி வடிவே அது. சிவகணங்கள் முழக்க, நந்தி தேவர் மத்தளம் அடிக்க, திருமால் இடக்கை முழக்க, தும்புரு நாரதர் இசைபாட தேவர்கள் பூமழை பொழிய, கடல்நிற மேனி படைத்த செந்தீப்புறமயிர் முயலகண் மேல் வடவைத் தீப்போல் அவனது செங்கண்கள் பிதுங்கவும், சினங்கொள்ளவும் முதுகு முறியவும் வலது திருவடியை ஊன்றி சிவபெருமான் அந்த பீடத்தில் நின்று நடனமாடினார்.  திருக்கூத்தாடும் இடது திருவடித் தாமரையும், பத்துத் திருக்கரங்களும், வலக்கரம் ஐந்தில் அபய அத்தத்திலே சூலமும், மற்ற நான்கு கரங்களில் உடுக்கை, அம்பு, வாள், மழு என்பனவும் இடக்கரம் ஐந்தில் வரத அத்தத்திலே பாம்பும், மற்றைய நான்கு கரங்களில் அக்கினி, வில், கேடகம், தண்டு என்பனவும், திருநீலகண்டமும், சங்க குண்டலம் பூண்ட திருச்செவியும், விரித்த செஞ்சடையும், வெள்ளிய திருநீற்றொளித் திருமேனியும், முக்கண்களும், அரவக் கச்சையும், அம்மையார் ஒதுங்கி நிற்கும் பக்கமும், அவ்வம்மையார் மேல் வைத்த திருநோக்கமும் திருநகையும் தோன்றத் திருநடனம் செய்தருளினார். அந்த முனிவர்களும் மதுரை மாநகர மக்களும் இறைவனின் நடன காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர். பின்னர் பதஞ்சலி, வியாக்கிரபாத முனிவர்கள் கருணாமூர்த்தியைப் பாக்களால் பலபடப் பூசித்துப் போற்றி மகிழ்ந்தனர். பரந்தாமன் அம்முனிவர்களிடம் நீங்கள் இன்னும் விரும்பியது யாது? அதை யாம் நிறைவேற்றி வைப்போம் என வினவினார். உடனே அவ்விருவரும், எந்தையே! இத்திருக்கூத்துடனம் எப்பொழுதும் இவ்வெள்ளியம் பலத்துள்ளே நின்று எல்லோருடைய பாச பந்தங்களையும் போக்கி அருள் செய்தல் வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள். திருமண விழாக்களில் பிறர் நடனமாடி நாம் ரசிப்பது வழக்கம் தான்! ஆனால், இங்கோ மணமகனே நடனமாடினார். அந்தக் காட்சியைக் கண்ட பிறகு முனிவர்கள் உணவருந்தச் சென்றனர்.

தடாதகையாரின் திருமணப் படலம்!

தடாதகையாரின் திருமணப் படலம்!

உலகத்துக்கே ஒரு தாயை ஈன்றெடுத்துக் கொடுத்த காஞ்சனமாலையும், உலகத்தாயான தடாதகைபிராட்டியும் தங்கள் குல தலைமையை இழந்து அடைந்த கவலைக்கு அளவே இல்லை. அவருக்குரிய ஈமச்சடங்குகளை தடாதகையே முன்னின்று செய்தாள். தந்தையில்லாத வீடு... மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால் வீட்டுக்கு மருமகன் வந்துவிடுவார். தடாதகையை நல்லபடியாக பார்த்துக் கொள்வார். இவளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால் நல்லதென முடிவெடுத்து, மகளிடம் சொன்னாள் காஞ்சனமாலை. மகள் அவளிடம், அம்மா! ஒரு தாயாக இருந்து உனக்குரிய கடமையை நீ சொன்னாய். ஆனால், தந்தைக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவது எனது கடமை. தந்தையார் என்னிடம் சொன்னபடி நான் உலகமெங்கும் சுற்றி, அனைத்து தேசங்களையும் என் ஆட்சியின் கீழ் கொண்டு வரவேண்டியிருக்கிறது. நீ என்னை வாழ்த்தி வழியனுப்பு! திரும்பி வந்ததும், உன் விருப்பப்படியே திருமணம் நடக்கும், என்றாள். மகளின் விருப்பத்திற்கு தாயும் குறுக்கே நிற்கவில்லை. அமைச்சர் சுமதி போருக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். போர்க்கோலம் பூண்ட தடாதகை பிராட்டி, தாயிடம் நல்லாசி பெற்று புறப்பட்டாள். தாரை, தப்பட்டை ஆர்ப்பரிக்க, சங்குகள் முழங்க அவளது நால்வகைப் படையும் கிளம்பியது.

இவர்களது படையைப் பார்த்தவுடனேயே எதிரிகளெல்லாம் அஞ்சி, நடுங்கி அவளை சரணடைந்தனர். பூவுலகில் வெற்றிக்கொடி நாட்டி தடாதகை பிராட்டியார், தேவலோகத்திற்குச் சென்றாள். புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால், குழந்தை பிறக்குமென மலையத்துவஜனுக்கு வாக்களித்த இந்திரன், கலங்கிப் போனான். நமது யோசனையால் பிறந்த குழந்தையே, நம்மை நோக்கி படையெடுத்து வருகிறதே என அஞ்சி நடுங்கினான். பதவியை விட்டுவிட்டு, ஓடி ஒளிந்து கொண்டான். தடாதகை பிராட்டியார் தேவேந்திரனுக்குச் சொந்தமான சங்கநதி, பதுமநிதி, சிந்தாமணி, காமதேனு, கற்பகதரு போன்ற மிகப் பெரிய செல்வங்களையெல்லாம் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டாள். தேவ கன்னியர்களை தனக்கு பணிபுரிவதற்காக தன்னோடு வரச்சொன்னாள். பிறகு, கயிலை மலையையும் தன் வசமாக்கிக் கொள்வதற்காக படைகளுடன் அங்கு புறப்பட்டாள். தடாதகை பிராட்டியார் வாழ்க! அமைச்சர் சுமதி வாழ்க! என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது.கயிலையை அவள் அடைந்ததும், சிவபெருமான் அவளை முகம் மலர வரவேற்றார். தடாதகை  பிராட்டியார் மதுரையிலிருந்து கிளம்பியபோதே, சுந்தரேஸ்வர பெருமானும் அவள் அறியாவண்ணம் அவளது தேரிலேயே அமர்ந்து வந்தார் என்பதை, அவளால் உணர முடியவில்லை. இதை அறியாத நந்திதேவர், பிராட்டியாரின் படை கண்டு நடுங்கி நின்றார். இப்படி ஒரு படை வந்திருக்கிறதே! நம்மையே அடிமைப் படுத்த வந்துள்ள இந்தப் பெண் மணியை நீங்கள் வரவேற்கிறீர்களே! என் கட்டுக்காவலை மீறி இவர்கள் உள்ளே வந்துள்ளார்கள். இப்போது நாம் என்ன செய்வது? என சிவனிடம் யோசனை கேட்டார்.

சிவபெருமான் அவரிடம், போருக்கென வந்தவர்களிடம் மோதிப்பார்த்து விட வேண்டியதுதான். நீ நம் படைகளுடன் புறப்படு, என்றார். சக்திதேவியான தடாதகை பிராட்டியாரின் வீரத்தை உலகுக்கு உணர்த்துவதற்காக, சிவபெருமான் இப்படியொரு நாடகம் ஆடினார். நந்தி தேவரின் தலைமையில் புறப்பட்ட படைகள் அனைத்தும் தடாதகை பிராட்டியால் விரட்டியடிக்கப்பட்டன. சிவகணங்கள் ஓடி ஒளிந்து கொண்டனர். சூரியன், சந்திரன், அக்னி, வருணன் முதலான தேவர்களின் அஸ்திரங்களை எல்லாம் தடாதகை பிராட்டியார் அழித்தாள். பூதங்களின் வலிமை பிராட்டியின் வலிமை முன்னால் எடுபடவில்லை. வேறு வழியின்றி சிவபெருமானே அவளுடன் போர் செய்ய கிளம்பினார். அவர் அன்னையின் முன் வந்து நின்றதும், அந்த அதிசயம் நிகழ்ந்தது. அவளது தனங்களில் ஒன்று மறைந்தது. மன்மதனின் கணைகள் அவளைத் தாக்கியது போன்ற உணர்வு ஏற் பட்டது. ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, நாணத்தால் தலை குனிந்து நின்றாள் தடாதகை. அமைச்சர் சுமதி ஆச்சரியப் பட்டார். அவருக்கு தான் மீனாட்சியின் தன ரகசியம் தெரியுமே! எதிரே நிற்பது சிவபெருமான் என்பதும், அவளே அவரை மணந்து கொள்வார் என்பதும் தெரிந்து விட்டது. தடாதகை பிராட்டியார் குனிந்த தலைநிமிராமல், அவரது பாதத்தில் விழுந்தாள். அதுவரையில் இருந்த வீரம், காதலாக மாறிவிட்டது.

உலகையே வென்று நம் கைக்குள் கொண்டு வந்தாலும், மனிதன் இறைவனிடமே அடைக்கலமாக வேண்டும் என்பதை உணர்த்தியது இந்தக் காட்சி. சிவபெருமான் அவளைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். பின்னர் மீனாட்சி மதுரை திரும்பினாள். தாய் காஞ்சனமாலை வெற்றிக்கனி பறித்து வந்த மகளை வரவேற்றாள். உலகை வென்றதுடன், ஈசனின் இதயத்தையும் தன் மகள் வென்று வந்தாள் என்ற செய்தியறிந்து, மகளுக்கு மணநாள் குறிக்க ஏற்பாடு செய்தாள். இறைவனுக்கே திருமணம் நடத்தி வைக்கும் பாக்கியம் கிடைத்தது குறித்து அமைச்சர் சுமதி ஆனந்தம் கொண்டார். திருமண பட்டோலை எழுதி, பல தேசத்து மன்னர்களுக்கும் அனுப்பினார். மதுரை மக்களுக்கு தடாதகை பிராட்டி யாருக்கு திருமணம் நடக்க இருப்பது குறித்து முரசறைந்து அறிவிக்க ஏற்பாடு செய்தார். மக்கள் மகிழ்ந்தனர். தங்கள் வீட்டு திருமணம் அல்லவா? நகரை அவர்கள் அலங்கரித்த விதம் அலாதியாக இருந்தது. தங்கள் வீடுகளை சுத்தம் செய்து வண்ண ஓவியங்களைத் தீட்டினர். நகர் முழுவதும் கமுகு, வாழை மரத்தோரணங்களைக் காண முடிந்தது.இறைவனுக்கு அம்பாளின் அவதாரமான தடாதகை பிராட்டியுடன் நடக்கப் போகும் திருமணத்துக்கு முனிவர்களும், தேவர்களும் வந்து சேர்ந்தனர். சிவபெருமானுக்கும், தடாதகை பிராட்டியாருக்கும் செய்யப் பட்ட அலங்காரத்தை சொல்லி மாளாது. தடாதகை பிராட்டி தன் மக்களை மீன் போல் பாதுகாத்தவள். அதாவது, மீன்கள் தங்கள் கண்களாலேயே குஞ்சுகளுக்கு உணவூட்டுபவை. சற்றும் இமைக்காதவை. இக்காரணத்தால், எங்கள் மீனாட்சிக்கு கல்யாணம் என மக்கள் ஆரவாரம் செய்தனர்.

 அந்த மீனாட்சிக்கு சரஸ்வதியும், லட்சுமியும் வந்திருந்து அலங்காரம் செய்தனர். ஊர் மகிழ்ந்திருந்த வேளையில், காஞ்சனமாலைக்கு மட்டும் கண்ணீர் வழிந்தது. இதையெல்லாம் பார்க்க தன் கணவர் மலையத்துவஜன் இல்லையே என்று! தந்தையில்லாத மீனாட்சிக்கு தந்தையாயும், தமையனாயும் இருந்து திருமணத்தை நடத்தி வைக்க அந்த மகாவிஷ்ணுவே வந்துவிட்டார். ஈசனுக்கு பட்டு அங்கவஸ்திரம், விதவிதமான நகைகள் அணிவிக்கப்பட்டு மிக அழகாக இருந்தார். இவரல்லவோ சுந்தரன் என்று மக்கள் ஆனந்தமாகப் பேசினர். சுந்தர ஈஸ்வரன் எங்கள் மீனாட்சியின் கரம் பற்ற வந்துள்ளான், என புகழ்ந்தனர். இதனால் சிவபெருமானுக்கு சுந்தரேஸ்வரன் என்ற பெயர் உண்டாயிற்று. அமைச்சர் சுமதி ஆனந்தக் கண்ணீர் வழிய நின்றிருந்தார். மணமேடைக்கு மணமக்கள் வந்தனர். அவர்கள் மாலை மாற்றி  கொண்டனர். பிரம்மா வேதமந்திரம் முழங்க, திருமால் தாரை வார்த்துக்கொடுக்க, மணமகளுக்கு திருமாங்கல்யத்தை அணிவித்தார் சுந்தரேசர். அவளது பாதத்தில் மெட்டி அணிவித்தார். எங்கும் பூ மழை பொழிந்தது. மீனாட்சி அம்மியில் கால் வைக்கவும், திருமணத்துக்கு வந்திருந்த வசிஷ்டரின் மனைவி அருந்ததி தேவி, மீனாட்சியின் முன்னால் வந்து நின்று, தங்களின் பார்வை என் மீது பட நான் இங்கே காத்திருக்கிறேன், என்று தலை வணங்கி கைகூப்பி நின்றாள். அருந்ததிக்கு ஈசனும், பிராட்டியும் அருள் செய்தனர். மதுரையிலேயே தங்கி, தன் மகளுடன் நல்லாட்சி செய்ய வேண்டுமென காஞ்சனமாலை இறைவனிடம் வேண்டிக் கொண்டாள். இறைவனும் அந்தக் கோரிக்கையை ஏற்றார். மீனாட்சியுடன் இணைந்து மதுரை நகரை அரசாள முடிவெடுத்தார்.