இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரம்...
தமிழில் முதலில் தோன்றிய காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். சிலப்பதிகாரத்தை இயற்றியவர் சேரன் செங்குட்டுவனின் சகோதரர் இளங்கோவடிகள் ஆவார். அரச பதவியை உதறிவிட்டு துறவறம் பூண்டு வாழ்ந்தவர் இளங்கோ அடிகள். இவர் கி. பி 2 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் என்ற ஆதாரமாக செங்குட்டுவன் கண்ணகிக்கு கோயில் எடுத்து விழாக் கொண்டாடிய போது இலங்கை மன்னன் கயவாகு உடனிருந்தான் என்பதை இளங்கோவடிகளே கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும் நன்னாள் செய்த நாளினி வேள்வியும் (வரந்தரு காதை ) எனக் கூறியுள்ளார். கயவாகு மன்னனது ஆட்சி கி.பி 2-ஆம் நூற்றாண்டு என இலங்கை சரித்திரமாகிய மகாவம்சம் கூறுகிறது. இளங்கோவடிகள் தன் பிறந்த காலத்திற்கு காரணம் கூறியவாறு இயற்றிய காப்பியத்திற்கும் காரணம் வைத்துள்ளார். சிலம்பு+ அதிகாரம்= சிலப்பதிகாரம். கதையில் வரும் திருப்ப நிகழ்ச்சிகளுக்கெல்லாம் சிலம்பே (கண்ணகி, பாண்டிமாதேவி ஆகியோரின் கால் சிலம்புகள்) இக் காப்பியத்தில் சிலம்பு காரணமாக இருப்பதால் சிலப்பதிகாரம் எனப்பட்டது. சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்களாக முத்தமிழ் காப்பியம் (இயல், இசை, நாடகம்) என்னும் முத்தமிழும் விரவிப் பெற்றதால், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் (பாடல்கள் இடையிடையே உரைநடையும் வருவதால்), இயல், இசை, நாடகப் பொருட் தொடர்நிலைச் செய்யுள் (இசை, நாடக வெண்பாக்கள் நிறைந்துவருவதால்), குடிமக்கள் காப்பியம் (சிலப்பதிகாரத் தலைவன் சாதாரண வணிகன் என்பதால்) என்றும் அழைப்பர்.
மலைவளம் காணச் சென்ற சேரன் செங்குட்டுவனிடம் குன்றக் குறவர்கள் கூறிய கண்ணகி பற்றிய செய்தி, அதைத் தொடர்ந்து புலவர் சாத்தனார் கூறிய கண்ணகியின் வரலாறுகள் தான் இம்முதல் காப்பியம் தோற்றக் காரணமாக அமைந்த நிகழ்ச்சி. மூன்று நகரங்களின் கதை என்னும் பட்டம் சிலப்பதிகாரத்திற்கு உண்டு. சிலப்பதிகாரத்தை புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் காதை (கதை தழுவிய செய்யுட் பகுதிக்கு காதை எனப் பெயர்) என்றும் 30 உட்பிரிவுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இம் முப்பது காதைகளில் புகார் காண்டத்தில் 10 காதைகளும், மதுரைக் காண்டத்தில் 13 காதைகளும், வஞ்சிக் காண்டத்தில் 7 காதைகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இக்காப்பியத்தில் பதிகம் என்ற பகுதியில் சிலப்பதிகாரம் கூறும் செய்திகள் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும். நாட்டிய அரங்கின் அமைப்பு, திரை அமைப்பு, விளக்கு ஒளி அமைப்பு ஆகியவை பற்றிய தெய்திகள் விரிவாக இக்காப்பியத்தில் கூறுயுள்ளனர். பழைய அரும்பத உரை, அடியார்க்கு நல்லார் உரை என்று சிலப்பதிகாரத்திற்கு பழைய உரைகள் உள்ளன. முதலில் கானல்வரி நீங்களாக ஊர்சூழ்வாரி என்ற முடிய அடியார்க்கு நல்லார் உரை உள்ளது. இசை நுணுக்கம், இந்திர காளியம், பஞ்ச மரபு, பரதசேனாதீபம், மதிவாணர் நாடகத் தமிழ்நூல் என்ற ஐந்து நூல்கள் சிலப்பதிகாரத்தில் வரும் இசை நாடகப் பகுதிகளுக்கு விளக்கம் கூறுவதற்கு அடியார்க்கு நல்லார் மேற்கோள் காட்டிய நூல்களாகும். கோவலன், கண்ணகி, மாதவி இக் கதையில் முக்கிய பாத்திரங்கள். கண்ணகி கற்பு நெறி தவறாமல் வாழும் பத்தினி. திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்; ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்; மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்னும் மங்கல வாழ்த்துப் பாடலில் இளங்கோவடிகள் இயற்கையை தன் செய்யுளால் வாழ்த்தி தொடங்கியவுடன். கண்ணகியை தீதற்ற வடமீன் என்னும் அருந்ததி யுடனும் ஒப்பிட்டும், கோவலனை செவ்வேள் என்னும் முருகக் கடவுளுடன் ஒப்பிட்டும் பாடியுள்ளார். கோவலனின் தந்தை பெயர் மாசாத்துவான் மற்றும் கண்ணகியின் தந்தை பெயர் மாநாய்க்கன் என்பதாகும். கோவலனுக்கு 16 ஆண்டுகளிலும் கண்ணகிக்கு 12 ஆண்டுகளிலும் திருமணம் நடந்தேறியது. மாதவி பேரழகி. ஆடற்கலையின் ஆழமுணர்ந்தவள். கணிகையர் குலத்தோன்றலெனினும் கற்புநெறி வழுவாமல் கோவலனுக்கென்றே வாழ்ந்தவள்.
மணிமேகலையின் தாய். மாதவி அரங்கேற்றிய போது அவள் வயது 12. மாதவி ஆடிய 1. அல்லி( கம்சன் ஏவிய மத யானையின் கொம்பினை முறிப்பதைக் குறிக்கும் ஆடல்), 2. கொடுகொட்டி(திரிபுரத்தை எரித்த வெற்றிக் களிப்பால் சிவன் ஆடிய கூத்து), 3. குடை(படைகளை இழந்து அசுரர்கள் தோல்வியடைந்த போது முருகன் தன் குடையை சாய்த்து ஆடியது), 4. குடம்(காமனின் மகன் அநிருத்தனை விடுதலை செய்வதற்காக கண்ணன் குடத்தின் மீது ஆடியது), 5. பாண்டரங்கம்(தேரில் முன்னே நின்ற நான்முகன் காணுமாறு பாரதி ஆடியது), 6. மல்லாடல்(வாணாசுரன் என்னும் அசுரனை வெல்லும் பொருட்டு அஞ்சனவண்ணன் மல்லனாகி ஆடியது), 7. துடியாடல்(சூரபதுமனை வென்ற முருகன் வெற்றிக் களிப்பால் கடலின் மீது ஆடியது), 8. கடையம்(இந்திராணி என்னும் தெய்வ நங்கை கடைசியர்(உழவர்) வேடம் கொண்டு ஆடியது, 9. பேடு( ஆண்மைத் தன்மை திரிந்த பெண்மைக் கோலத்தோடு காமன் ஆடியது), 10. மரக்கால்( அசுரரின் வஞ்சக் கொடுந் தொழிலைப் பொறாதவளாய்த் துர்க்கை மரக்கால் கொண்டு ஆடியது, 11. பாவைக்கூத்து ( அசுரரின் வெம்மையான போர்க்கோலம் நீங்க, செந்நிறம் உடைய திருமகள் கொல்லிப்பாவை வடிவுடன் ஆடியது) ஆடல்கள். 1. கானல் வரி, 2. உள்ளவரி 3. புறவரி, 4. கிளர்வரி, 5. தேர்ச்சி வரி, 6. காட்சி வரி, 7. எடுத்துக்கோள் வரி, 8. வேட்டுவ வரி வரிக்கூத்தாகும். அரங்கேற்றி முடிந்ததும் மாதவி 1008 களஞ்சு பொன் பரிசாகவும், தலைக்கோல் என்ற பட்டமும் பெற்றாள். ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்து எழினி என்பது திரைச்சீலைகளின் வகைகள். பூம்புகாரில் வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் மன்றம், பூத சதுக்க மன்றம், பாவை மன்றம் என்ற ஐந்து மன்றங்கள் உள்ளன. புகார் நகரத்தில் மருவூர்ப்பாக்கம், பட்டினபாக்கம் என்று இருபகுதிகளைக் கொண்டது. மதுரைப் பயணத்தில் கோவலனுக்கு வழித்துணையாகச் சென்றவர் கவுந்தியடிகள். கோவலன் தனது செல்வம் அனைத்தையும் முறை இல்லாமல் செலவழித்து கடைசியில் மிஞ்சிய தனது மனைவியின் காற்சிலம்பை விற்க மதுரைக்கு வருகிறான். கடைவீதியில் அதை விற்க முயலும் போது அரண்மனைக் காவலர்களால் அரசியின் சிலம்பை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு மன்னர் முன் விசாரணை கைதியாக நிற்க வைக்கப்படுகிறான். மந்திரம், தெய்வம், மருந்து, நிமித்தம், தந்திரம், இடம், காலம், கருவி என்ற எட்டு வகையான சூழ்நிலைகளின் துணையால் களவாடி உண்ணும் வாழ்வினர் திரிவதாக பொற்கொல்லன் கூறினான்.
மன்னன் கோவலன் விற்க முயன்ற சிலம்பு அரசியின் சிலம்பு என குற்றம் சாட்ட,கோவலன் அது தனது மனைவி கண்ணகி யின் காற்சிலம்பு என மறுக்கிறான். ஆனால் மன்னனின் தவறான தீர்ப்பால் கொலை செய்யப்படுகிறான். கணவன் கொலையுண்ட செய்தி கேட்டு கண்ணகி கோபாவவேசமாக அரசனின் அரச சபைக்கு வருகிறாள். மன்னனின் தீர்ப்பு தவறு என நீதி கேட்கிறாள். மன்னன் தனது மனைவியின் காற்சிலம்பில் உள்ளது முத்து என கூற தனது சிலம்பில் உள்ளது மாணிக்க பரல்கள் என சிலம்பை வீசி உடைத்து நிருபிக்கிறாள். நீதி தவறிய மன்னன் அக்கணமே உயிர் விடுகிறான்.அரசியும் உடன் உயிர் விடுகிறாள். மதுரையை எரியூட்டும் முன் பார்ப்பனர், அறவோர், பசு, பத்தினிப் பெண்கள், மூத்தோர்(முதுமையாளர்) குழந்தைகளை கைவிட்டு விடச் சொல்லி கண்ணகி தீக்கடவுளை ஏவினாள். மதுரையை எரித்த பின்னர் கண்ணகி நெடுவேள் குன்றத்தில் உள்ள வேங்கை மரநிழலில் 14 நாட்கள் தங்கியிருந்தாள். தெய்வ வடிவுடன் வந்த கோவலனைக் கண்டு அவனுடன் வான ஊர்தியிலேறி தேவர்கள் போற்ற துறக்கம் அடைவதே கண்ணகியின் முடிவாக இருந்தது. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று ஓர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு என்று மகாகவி பாரதியார் பாரட்டியுள்ளார், உலகத்து சிறந்த நாட்கங்களுள் ஷேக்ஸ்பியரின் மாக்பெத்து ஒன்றே சிலப்பதிகாரம் போல் சிறப்புடையது எனப் பாரட்டினார் மார்க்கபந்து சர்மா. தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை; தேரும் சிலப்பதிகாரமதை; ஊனிலே எம்முயிர் உள்ளளவும் நிதம்; ஓதி உணர்ந்தின் புறுவோமே எனக் கவிமணி கூறியுள்ளார். இவ்வாறு அனைத்து கவிகளும் சிலப்பதிகாரத்தை பாராட்டியுள்ளனர்.
பதிகம்
குணவாயிற் கோட்டத் தரசுதுறந் திருந்த
குடக்கோச் சேரல் இளங்கோ வடிகட்குக்
குன்றக் குறவர் ஒருங்குடன் கூடிப்
பொலம்பூ வேங்கை நளங்கிளர் கொழுநிழல்
ஒருமுலை யிழந்தாளோர் திருமா பத்தினிக் - 5
கமரர்க் கரசன் தமர்வந் தீண்டிஅவள்
காதற் கொழுநனைக் காட்டி அவளொடெங்
கட்புலங் காண விட்புலம் போய
திறும்பூது போலுமஃ தறிந்தருள் நீயென
அவனுழை யிருந்த தண்டமிழ்ச் சாத்தன் - 10
யானறி குவனது பட்டதென் றுரைப்போன்
ஆரங் கண்ணிச் சோழன் மூதூர்ப்
பேராச் சிறப்பின் புகார்நக ரத்துக்
கோவல னென்பானோர் வாணிகன் அவ்வூர்
நாடக மேத்தும் நாடகக் கணிகையொ -15
டாடிய கொள்கையின் அரும்பொருள் கேடுறக்
கண்ணகி யென்பாள் மனைவி அவள்கால்
பண்ணமை சிலம்பு பகர்தல் வேண்டிப்
பாடல்சால் சிறப்பின் பாண்டியன் பெருஞ்சீர்
மாட மதுரை புகுந்தனன் அதுகொண்டு - 20
மன்பெரும் பீடிகை மறுகிற் செல்வோன்
பொன்செய் கொலலன் றன்கைக் காட்டக்
கோப்பெருந் தேவிக் கல்லதை இச்சிலம்பு
யாப்புற வில்லைஈங் கிருக்கென் றேகிப்
பண்டுதான் கொண்ட சில்லரிச் சிலம்பினைக் - 25
கண்டனன் பிறனோர் கள்வன் கையென
வினைவிளை காலம் ஆதலின் யாவதுஞ்
சினையலர் வேம்பன் தேரா னாகிக்
கன்றிய காவலர்க் கூஉயக் கள்வுனைக்
கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கெனக் - 30
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
நிலைக்களங் காணாள் நெடுங்கணீர் உகுத்துப்
பத்தினி யாகலின் பாண்டியன் கேடுற
முத்தார மார்பின் முலைமுகந் திருகி
நிலைகெழு கூடல் நீளெரி ஊட்டிய - 35
பலர்புகழ் பத்தினி யாகு மிவளென
வினைவிளை கால மென்றீர் யாதவர்
வினைவிளை வென்ன விறலோய் கேட்டி
அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க்
கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில் - 40
வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தேன்
ஆரஞ ருற்ற வீரபத் தினிமுன்
மதுரைமா தெய்வம் வந்து தோன்றிக்
கொதியழற் சீற்றங் கொங்கையின் விளைத்தோய்
முதிர்வினை நுங்கட்கு முடிந்த தாகலின் - 45
முந்தைப் பிறப்பிற் பைந்தொடி கணவனொடு
சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்துச்
சங்கம னென்னும் வாணிகன் மனைவி
இட்ட சாபங் கட்டிய தாகலின்
வாரொலி கூந்தனின் மணமகன் றன்னை - 50
ஈரேழ் நாளகத் தெல்லை நீங்கி
வானோர் தங்கள் வடிவின் அல்லதை
ஈனோர் வடிவிற் காண்ட லில்லெனக்
கோட்டமில் கட்டுரை கேட்டனன் யானென
அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம் - 55
உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்
ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்
சிலப்பதி காரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுளென - 60
முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது
அடிகள் நீரே யருளுகென் றாற்கவர்
மங்கல வாழ்த்துப் பாடலுங் குரவர்
மனையறம் படுத்த காதையு நடநவில்
மங்கை மாதவி அரங்கேற்று காதையும் - 65
அந்தி மாலைச் சிறப்புச்செய் காதையும்
இந்திர விழவூ ரெடுத்த காதையும்
கடலாடு காதையும்
மடலவிழ், கானல் வரியும் வேனில்வந் திறுத்தென
மாதவி இரங்கிய காதையுந் தீதுடைக் - 70
கரனாத்திற முரைத்த காதையும் வினாத்திறத்து
நாடுகாண் காதையும் காடுகாண் காதையும்
வேட்டுவ வரியும் தோட்டலர் கோதையொடு
புறஞ்சேரி யிறுத்த காதையும் கறங்கிசை
ஊர்காண் காதையும் சீர்சால் நங்கை - 75
அடைக்கலக் காதையும் கொலைக்களக் காதையும்
ஆய்ச்சியர் குரவையும் தீத்திறங் கேட்ட
துன்ப மாலையும் நண்பகல் நடுங்கிய
ஊர்சூழ் வரியும் சீர்சால் வேந்தனொடு
வழக்குரை காதையும் வஞ்சின மாலையும் - 80
அழற்படு காதையும் அருந்தெய்வந் தோன்றிக்
கட்டுரை காதையும் மட்டலர் கோதையர்
குன்றக் குரவையும் என்றிவை அனைத்துடன்
காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
வாழ்த்து வரந்தரு காதையொடு - 85
இவ்வா றைந்தும்
உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்
உரைசா லடிகள் அருள மதுரைக்
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்
இது, பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபென். - 90
பதிகம்
அஃதாவது இந்நூலின்கட்போந்த பொருளை நிரலாகத் தொகுத்துக் கூறும் சிறப்புப் பாயிரம் என்றவாறு.
பதிகக் கிளவி பல்வகைப் பொருளைத்
தொகுதி யாகச் சொல்லுத றானே
என்பதுமுணர்க.
இனி, பதிகம் என்ற சொல் பாயிரம் என்னும் பொருட்டுமாகும் என்பதனை,
முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்
புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்,
எனவரும் நன்னூற் சூத்திரத்தால் உணர்க.
பாயிரம் பொதுவும் சிறப்பும் என இருவகைத்து. அவற்றுள் இப்பதிகம் இந்நூற்கேயுரிய சிறப்புப் பாயிரம் ஆகும். சிறப்புப் பாயிரம் நூலாசிரியனாற் கூறப்படாது என்பதும், நூலாசிரியனின் ஆசிரியர் முதலிய பிறராற் செய்யப்படும் என்பதும் நன்னூலால் அறியப்படும்.
ஓருந் தமிழ் ஒருமூன்று முலகின்புற வகுத்துச் சேரன் தெரித்த இச்சிலப்பதிகாரத்திற் சேர்ந்த பொருள் ஆருந் தெரியத் தொகுத்துரைத்து இப்பதிகஞ்செய்த சான்றோர் பெயர் முதலியன அறிந்திலேமாயினும், இப்பதிகம் நூலாசிரியராகிய இளங் கோவடிகளாராற் செய்யப்பட்டிலது; பிறசான்றோராற் செய்யப்பட்டது என்பதனை ஈண்டுக் குறிக்கொண்டுணர்க.
இனிப் பதிகம் நூலாசிரிய ரானும் செய்யப்படும் என்பதனைச் சீவக சிந்தாமணி யென்னும் செந்தமிழ் வனப்புநூற்பதிகம் அதனாசிரியராகிய திருத்தக்க தேவராற் செய்யப் பெற்றிருத்தலால் அறிகின்றோமெனினும், பதிகம் நூலாசிரியராற் செய்யப்படாதென்பதற்குக் காரணம் தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும் தான் தற்புகழ்தல் தகுதியன்றே என்பது கருதியேயாம். ஆகவே, நூலாசிரியன் பதிகம் செய்யுங்கால் அவையடக்கியல்பற்றித் தான் தற்புகழாது தனது நூற்பொருளைத் தொகுத்துக்கூறுதல் அமையும் என்பதும் அவ்விதியாலேயே பெறப்படுதலின் இவ்வாற்றால் திருத்தக்க முனிவர் தம் நூற்குத் தாமே (பாயிரம்) பதிகம் செய்தனர் என்றறிக. இச்சிலப்பதிகாரத்திற்குப் பதிகம் செய்தார் பிறரே; அடிகளார் செய்திலர் என்பதை இப்பதிகத்தின் உரையின்கண் இன்றியமையாத விடத்தே கூறுதும். ஆண்டுக் கண்டுகொள்க.
1-9 : குணவாயில்........அறிந்தருள்நீயென
(இதன்பொருள்) குடக்கோச் சேரல் அரசு துறந்து குணவாயில் கோட்டத்து இருந்த இளங்கோ அடிகட்கு - முத்தமிழ் நாட்டின் கண் குடக்கின்கண் அமைந்த சேர நாட்டிற்கு மன்னனாகிய சேரன் செங்குட்டுவனுக்கும், ஒருகாரணத்தால் தமக்குரிய அரசுரிமையையும் பிறவற்றையும் ஒருங்கே துறந்து திருக்குணவாயில் என்னும் கோயிலின்கண் நோற்றிருந்த சான்றாண்மை மிக்கவரும் அச் சேரலுக்குத் தம்பியாதலின் இளங்கோ என்னும் திருப்பெயருடையாருமாகிய அடிகளார்க்கும், குன்றக்குறவர் ஒருங்குடன் கூடி -அவர்தாம் அரசியற் சுற்றத்துடன் மலைவளங்காணச் சென்று பேரியாற்றடை கரை இருமணல் எக்கரிடத்தே ஒருங்கிருந்துழி ஆங்கு மலையிடத்தே வாழ்வோராகிய குறவர் எல்லாம் ஒருங்கே திரண்டு சென்று வணங்கியவர் செங்குட்டுவன் திருமுக நோக்கி, கொற்றவ! ஈதொன்று கேட்டருள்க; பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல் - எம் மூர்க்கணித்தாகிய நெடுவேள் குறத்தின்கண் பொன்னிறமுடைய பூக்கள் மலிந்தவொரு வேங்கை மரத்தினது நன்மைமிக்க கொழுவிய நீழலிலே; ஒருமுலை இழந்தாள் ஓர் திருமாபத்தினிக்கு -தன் திருமுலைகளுள் ஒன்றனை இழந்தவளாய் வந்து நின்ற திருமகள் போல்வாளும் சிறந்த பத்தினியுமாகிய ஒருத்தியைக் கண்டோம்; யாங் கண்டு நிற்கும் பொழுதே அவள் பொருட்டு; அமரர்க்கரசன் தமர் வந்து ஈண்டி அகல் விசும்புளார் கோமானாகிய இந்திரனுடைய சுற்றத்தார் வானத்தினின்று மிழிந்து வந்து அவள் முன்குழீஇ; அவள் காதல் கொழுநனைக் காட்டி - வல்வினை வந்துறுத்த காலை மதுரைக் கண் அவள் இழந்த கணவனையும் அவட்குக் காட்டி, பீடு கெழு மந்நங்கையின் புகழைப் பாராட்டித் தமது வானவூர்தியின்கண் கணவனோடு ஏற்றி; அவளொடு எம் கண்புலம் காண விண்புலம் போய அது - அத்திருமாபத்தினியோடு அவ்வமரர்கள் வலவனேவா வானவூர்தியின்கண் எளிய மாந்தராகிய எம் ஊன் கண்ணும் கண்கூடாகக் காணும்படி வானிடத்தே சென்ற அக் காட்சியையும் கண்டேம் அக்காட்சி தானும்; இறும்பூது போலும் எளியேங்கட்குப் பெரிதும் மருட்கை தருவதொன்றாயிருந்தது; நீ அறிந்து அருள் என - எம்பெருமான் இந்நிகழ்ச்சியைத் திருவுளம் பற்றியருளுக ! என்று கூறி மீண்டும் வணங்கா நிற்ப என்க.
விளக்கம் 1-3 : குணவாயில் கோட்டத்து அரசு துறந்திருந்த இளங்கோவடிகள் என இயைக்க. குடக்கோ. தமிழகத்தின் மேற்றிசைக் கண்ணதாகிய சேர நாட்டு மன்னன்; அவனாவான் சேரன் செங்குட்டுவன் என்க. சேரல். சேர மன்னன். சேரல் இளங்கோவடிகள் என்புழிச் சேரனும் இளங்கோவடிகளும் ஆகிய இருவர்க்கும் எனல் வேண்டிய எண்ணும்மையும் ஆக்கச் சொல்லும் தொகைச்சொல்லும் தொக்கன.
இனி, சேரலும் இளங்கோவடிகளும் மலைவளங்காணச் சென்று பேரியாற்றடைகரை யிடுமணல் எக்கரின்கண் ஒருங்கிருந்துழி அவ்விருவர்க்கும் குறவர் வந்து குழீஇக் கூறி பொலம்... அறிந்தருள்நீ எனச் சேரலை நோக்கிக்கூற என்பது கருத்தாகக் கொள்க.
குன்றக் குறவர், குன்றுகளில் வாழ்வோராகிய குறவர். இனி குன்றம், என்றது திருச்செங்குன்று என்னும் மலை என்பர் அடியார்க்கு நல்லார். திருச்செங்கோடு என்பாருமுளர் என்று கூறி, அது பொருந்தாது என்று மறுத்துங் கூறியுள்ளார்.
4. பொலம்பூவேங்கை - பொன்னிறமான பூவையுடைய வேங்கை. திருமாபத்தினிக்கு நிழலாகும் பேறுபெற்றமையின் நலங்கிளர் நிழல் என்று விதந்தார்.
5. தாம் கண்கூடாகக் கண்டமை தோன்ற ஒரு முலையிழந்தாள் என்று குறவர் கூறினர் என்க. மேலும் கண்ணகியாரே இக்குன்றக் குறவர்க்கு மணமதுரையோடு அரசு கேடுற வல்வினை வந்துருத்தகாலை கணவனை அங்கிழந்து போந்த கடுவினையேன் யான் என்றறிவித்தமையின் ஓர் திரு மா பத்தினி என மூன்று அடைமொழிகளால் விதந்தோதினர் என்க.
6. அமரர்க்கரசன் தமர் என்றது இந்திரனுடைய அரசியற் சுற்றத்தாரை.
7-9. காதற்கொழுநன் என்றது அப் பத்தினி இழந்த காதற் கணவனை என்பதுபட நின்றது. அமரர்கள் மாந்தர் கண்களுக்குப் புலப்படாராகவும், எங் கண்களுக்குப் புலப்படலாயினர் என்று வியப்பார் எங்கட் புலம்காண என்றார். கட்புலம் காண என்றது கட்குப் புலப்பட என்றவாறு. புலம் ஈண்டு ஒளி. அதாஃவது உருவம். இறும்பூது மருட்கை. இந்நிகழ்ச்சி யாம் கண்கூடாகக் கண்டதேயாயினும் இக் காட்சி மெய்யோ? பொய்யோ? என்று மருள்கின்றோம் என்பார் போய அது இறும்பூது போலும் என்றனர். போய+அது என்று கண்ணழித்துக் கொள்க. போனதாகக் கண்ட அக்காட்சி என்பது பொருள். போலும் . ஒப்பில் போலி.
இனி, அறிந்தருள் நீ என்றது, இங்ஙனம் இந்நாட்டின் நிகழ்ந்த இந் நிகழ்ச்சி இந்நாட்டிற்குத் தீங்கு பயக்குமோ? நன்மை பயக்குமோ? யாமேதுமறிகிலேம் அறிந்து ஆவன செய்யும் கடப்பாடுடைய நீ அறிந்தருள்க என்பதுபட நின்றது. என்னை, முலை யிழந்து வந்தமையால் தீமைபயக்கும் என்றும், வானவர்தமர் வந்து கணவனைக் காட்டி அழைத்துப் போனமையால் நன்மை பயக்கும் என்றும், இருவகைக்கும் இந்நிகழ்ச்சி பொருந்துதலால் யாங்கள் இவற்றுள் ஒன்று துணிகிலேம். இவற்றைத் துணியுந் தகுதியுடைய நீயே அறிந்தருள்க என்பதே அக் குறவர் கருத்தாகலின் என்க.
இது மருட்கை என்னும் மெய்ப்பாடு.
10-11 : அவனுழை ........ ...... உரைப்போன்
(இதன் பொருள்.) அவன் உழை இருந்த தண் தமிழ்ச் சாத்தன் அது கேட்ட செங்குட்டுவன்றானும் பெரிதும் வியப்புற்றுத் தன் பக்கலிலுள்ளாரை நோக்க அப்பொழுது அவ்வரசன் மருங்கிலிருந்த குளிர்ந்த தமிழ்மொழிப்புலமையுடையோனாகிய சாத்தன் என்பான்; யான் அது பட்டது அறிகுவன் என்று உரைப்போன் அரசனுடைய குறிப்பறிந்து வேந்தர் பெருமானே ! யான் அந்நிகழ்ச்சியினது வரலாற்றினை நன்கு அறிந்துளேன் ஆகலின் கூறுவல் கேட்டருள்க என்று தொடங்கி அதனைக் கூறுபவன் என்க.
(விளக்கம் 1) : அவன் - சேரன் செங்குட்டுவன். அவன் என்பது இளங்கோவடிகளைச் சுட்டியதாகக் கருதுவர் உயர்திரு நாட்டாரவர்கள். அது பொருந்தாது என்னை? இப்பதிகஞ் செய்த சான்றோர் தொடக்கத்தே இளங்கோவடிகள் என அடிகளாரைக்கூறிவைத்து வழக்கினாகிய உயர்சொற்கிளவியாகிய ஒருவரைக் கூறும் அப்பன்மைக் கிளவிக்குப் பொருந்தாத அவன் என்னும் ஒருமைச் சுட்டாற் சுட்டார் ஆதலின் என்க; பின்னும் இவர் அடிகளாரைப் பன்மையாலேயே அடிகள் நீரே அருளுகென்றாற்கு அவர் என்றே சுட்டுதலும் உணர்க. ஈண்டும் குன்றக்குறவர் அறிந்தருள்நீ எனச் செப்பியது சேரன் செங்குட்டுவனுக்குப் பொருந்துவதன்றி அடிகளார்க்குப் பொருந்தாமையும் அறிக. ஆகவே குன்றக்குறவர் சேரனும் அடிகளாரும் ஒருங்கிருந்துழிச் சென்று வணங்கி அவருள் சேரனுக்கே கூறினர் என்னும் எமது கருத்தே பொருத்தமாம்.
இனி, பழையவுரையாசிரியருள் வைத்து அரும்பதவுரையாசிரியர், குணவாயிற் கோட்டத்துக் கடவுளர் முன்னர்த் துறந்திருந்த இளங்கோவடிகளுக்குக் கண்ணகி வானவர் போற்றத் தன் கணவனோடு கூடியது கண்டு செங்குட்டுவனுக்கு உரைத்த குறவர் வந்து எல்லா மறிந்தோய் இதனை அறிந்தருள் என்று கூறிப் போக, பின்பு செங்குட்டுவனைக் கண்டு போந்து அடிகளுழை வந்தசாத்தன் அது பட்டவாறெல்லாம் கூற என்றோதுவர். இதுவும் பொருந்தாமைக்கு முன் கூறிய காரணம் ஒக்கும்; மேலும் செங்குட்டுவனுக்குக் குன்றக்குறவர் கூடிவந்து பேரியாற்றிடுமணல் எக்கரிடைக் கண்டு கூறியவர் மீண்டும் அரசு துறந்திருந்த அடிகளார்க்குக் கூறக் குணவாயிற் கோட்டத்திற்கு ஒருங்குடன் கூடிவந்து போதலும்; பேரியாற்றிடு மணல் எக்கரிடத்தே குறவர் சேரனைக் கண்டு கூறியபொழுது ஆங்கு அவனுழையிருந்த தண்டமிழ்ச் சாத்தனே ஈண்டும் அக்குறவர் கூறும் பொழுது வந்திருத்தலும் இன்னோரன்ன பிறவும் நிகழ்தற்கியையா நிகழ்ச்சிகள் (அசம்பாவிதம்) என்க.
இனி, ஆசிரியர் அடியார்க்குநல்லார்தாமும் அரும்பதவுரை யாசிரியர் கருத்துப் பொருந்தாதெனக் கண்டு, தாம் வேறு கூறினர் ஆயினும் அவர் தாமும் குறவர் இளங்கோவடிகளை நோக்கி அறிந்தருள் என்பதும் பொருந்தாதென வறிக.
11. அதுபட்டது - அந்நிகழ்ச்சியினது வரலாறு. அது என்றது ஓரு முலையிழந்தனை என்பார் அடியார்க்கு நல்லார்.
12-20 : ஆரங்கண்ணி.............புகுந்தனன்
(இதன் பொருள்) : ஆரங்கண்ணிச் சோழன் மூதூர் பேரா சிறப்பின் புகார் நகரத்து - வேந்தே ! போந்தை வேம்பே ஆர் எனவரும் மூவகைப்பட்ட பூக்களுள் வைத்து (ஆர் என்னும்) ஆத்திப்பூங் கண்ணியை அடையாளமாகக் கொண்டு தலையிற் சூடிய சோழ மன்னனுடைய பழைய நகரங்களுள் வைத்து எக்காலத்தும் நீங்காத சிறப்பினையுடைய பூம்புகார் என்னும் நகரத்தின்கண் வாழுகின்ற பெருங்குடிவாணிகருள் வைத்து; கோவலன் என்பான் ஓர் வாணிகன்-கோவலன் என்னும் பெயரையுடைய வாணிகன் ஒருவனிருந்தனன்; அவ்வூர் நாடகம் ஏத்தும் நாடகக் கணிகையொடு ஆடிய கொள்கையின் - அவன் அந்நகரத்திலேயே வாழ்பவளும் நாடகம் என்னும் கலையே தன்னைப் பாராட்டற்கியன்ற புகழொடு நாடகமாடுகின்ற பொதுமகளுமாகிய மாதவி என்னும் நாடகக் கணிகையோடுகூடி யின்புறும் கோட்பாடுடைமை காரணமாக; அரும்பொருள் கேடு உற - தன் தாயத்தார் வழித் தனக்குக் கிடைத்த தேடற்கரிய பொருளெல்லாம் அழிந்தொழிந்தமையாலே பெரிதும் நாணி; மனைவி கண்ணகி என்பாள் - அவ்வாணிகன் மனைக்கிழத்தி கண்ணகி என்னும் பெயருடையவள் ஆவள்; அவள் கால் பண்ணமை சிலம்பு பகர்தல் வேண்டி - அவள்பால் எஞ்சியிருந்த அவளுடைய காலணியாகிய சித்திரச் செய்வினையமைந்த சிலம்புகளை விற்று அப்பொருளை முதலாகக் கொண்டு இழந்த பொருளை ஈட்டவிரும்பி; பாடல் சால் சிறப்பின் பாண்டியன் பெருஞ்சீர் மாடமதுரை புகுந்தனன் - புலவர் சங்கமிருந்து பாடிய பாடல் சிறந்த சிறப்பினையுடைய பாண்டியனது மிக்க புகழையுடைய மதுரைமாநகரத்தே தன் மனைவியாகிய அக்கண்ணகியுடனே சென்று புகுந்தனன் என்க.
(விளக்கம் 12) ஆரங்கண்ணி - ஆத்திமாலை. இது சோழ மன்னர்க்குரிய அடையாளப்பூ. இதனை,
...........உறுபகை
வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்துபுகழ்ப்
போந்தை வேம்பே ஆர் என வரூஉம்
மாபெருந் தானையர் மலைந்த பூவும்
எனவருந் தொல்காப்பித்தானும், (பொருள் - 13)
கொல்களிறு ஊர்வர் கொலைமலி வாள்மறவர்
வெல்கழல் வீக்குவர் வேலிளையர் - மல்குங்
கலங்கல் ஒலிபுனல் காவிரி நாடன்
அலங்கல் அமரழுவத்(து) ஆர்
எனவரும் புறப் - வெண்பாவானும், (பொது) அறிக.
15. நாடகம் இவளாற் சிறப்பெய்துதலின் அக்கலையே இவளை ஏத்தும் என்றவாறு. கணிகை - பதியிலாள்; பொதுமகள் (16) ஆடிய கொள்கை - நுகர்ந்த கோட்பாடு. கொள்கையினால் என்க. அரும் பொருள்-ஈட்டுதற்கரிய பொருள். எனவே முன்னை யூழான், தாயப் பொருளாய்க் கிடைத்த பொருள் என்பதாயிற்று. (17) அவன் மனைவி கண்ணகி என்னும் பெயருடையாள் எனச் சுட்டுப்பெயர் பெய்துரைக்க. நாடகமேத்தும் கணிகை என்றவர் ஈண்டு மனைவி என்றொழியாது பெயரை விதந்து கூறியது அவளே இக்குறவராற் கூறப்பட்டவள் என்றறிவுறுத்தற்கென்க. இது முன்மொழிந்து கோடல் என்னும் உத்தி (18) பண் அமை சிலம்பு இசை பொருந்திய சிலம்புமாம். சிலம்பு பகர்தல் வேண்டி என்றது - எஞ்சிய அணிகலன் அதுவே ஆகலான் அதனைப் பகர்தல் வேண்டி என்பதுபட நின்றது.
19. ஊழ்வினை வந்துருத்தகாலை நல்லவும் தீயவாம் என்றுணர்த்தற்கு, பாடல்சால் சிறப்பின் பாண்டியன் எனவும், பெருஞ்சீர் மாட மதுரை எனவும் பாண்டியனையும் மதுரையையும் விதந்தோதினர்.
ஈண்டு அடியார்க்கு நல்லார் சிறப்பிற் பாண்டியனென்றும் பெருஞ்சீர் மாடமதுரையென்றும் அடிகள் புகழ்ந்தார் என்பர். இப்பதிகம் அடிகளாராற் செய்யப்பட்டிலது என்பது வெள்ளிடைமலையென விளங்கிக் கிடப்பவும் அவர் இவ்வாறு கூறியது வியத்தற்குரியதாம்.
20-22 : அதுகொண்டு.......காட்ட
இதன் பொருள் : அதுகொண்டு மன் பெரும் பீடிகை மறுகின் செல்வோன் - அங்ஙனம் முன்னாள் மதுரைபுக்க அக்கோவலன் மறுநாள் அச்சிலம்புகளுள் ஒரு சிலம்பை விற்கும் பொருட்டுக் கையிலெடுத்துக் கொண்டு அந்நகரத்து அங்காடி மறுகுகளில் வைத்து, மிகப்பெரிய மறுகிற் செல்பவன்; பொன்செய் கொல்லன் தன்கைக் காட்ட - ஆங்குத் தன்னெதிரே வந்த பொற்கொல்லன் ஒருவன் கையில் அச்சிலம்பைக் கொடுத்துக் காட்டா நிற்ப என்க.
விளக்கம் : 20-21 : அது கொண்டு என்றார் அவன் கொடு போனது ஒற்றைச் சிலம்பு என்பது தோன்ற. மன்-மிகுதிப் பொருட்டு, மன்னைச் சொல்லுக்கு ஆசிரியர் தொல்காப்பியனார் மிகுதிப் பொருளுண்மை கூறிற்றிலரேனும் இடையியற் புறனடையால் பவணந்தி முனிவர் அச்சொற்கு அப்பொருள் உண்மை ஓதுதலும் உணர்க.
இனி, பெரும் பீடிகைக்கு மன்னைச் சொல்லையும் அடையாக்கியதனால் மக்கள் வழக்குமிக்க அம் மாபெருந்தெருவிற் சென்றும், அவன் ஊழ்வினை அவனை விட்டிலது கண்டீர் என்றிரங்குவது இப்பதிக முடையார் குறிப்பென்று கோடலுமாம். பீடிகை மறுகு-அங்காடித் தெரு.
22. கைக்காட்ட . கையிற் கொடுத்து ஆராய்ந்து காணுமாறு செய்ய என்க. இது, அவன் அதனை நன்கு நோக்கி, இது பெருந்தேவியின் சிலம்பை ஒத்துளது என்று காண்டற்கும் அவ்வழி வஞ்சித்தற்கும் ஏதுவாதல் பற்றிக் கொல்லற்குக்காட்ட என்னாது கொல்லன் கைக் காட்ட என வேண்டா கூறி விதந்தார்.
இனி, அடியார்க்கு நல்லார் அது கொண்டென்றார்; அச்சிலம்பால் மேல்விளைவன தோன்ற; அஃது அநியாயபுரத்தே புகுகின்றவன் கூற்றத்தையும் உடன்கொண்டு புக்கான் என்றாற் போன்றிருந்தது என்பர்.
23-26 : கோப்பெருந்தேவி........கள்வன் கையென
இதன் பொருள் : இச்சிலம்பு கோப்பெருந்தேவிக்கு அல்லதை யாப்புறவு இல்லை - அங்ஙனம் காட்டியபொழுது அப்பொய்த் தொழிற் கொல்லன் அச்சிலம்பினது சித்திரச் செய்வினை யெல்லாம் புரிந்துடன் நோக்கி வஞ்சகமென்று நெஞ்சகத்தே வைத்துக் கோவலனை நோக்கி ஐய! இப் பெருவிலைச் சிலம்பு கோப்பெருந்தேவிக்கே ஆவதன்றிப் பிறர் அணியப் பொருந்துவதன்று காண் ஆதலால், ஈங்கு இருக்கஎன்று ஏகி-யான் சென்று இதுபற்றி விறல் மிகு வேந்தற்கு விளம்பி வருந்துணையும் உதோ விருக்கின்ற என் சிறுகுடிலின் அயலே இருந்திடுக ! என்று கூறிச் சென்று; பண்டு தான் கொண்ட சில் அரிச்சிலம்பினை-அரசனைக் கண்டு அடிவீழ்ந்து கிடந்து தாழ்ந்து பல வேத்தி முன்பு பணிக்களரியில் தான் வஞ்சித்துக் கொண்ட தேவியின் சிலம்பு பற்றி ஆராய்ச்சி சிறிது பிறந்து வருதலால் அவ்வஞ்சம் வெளிப்படா முன்னம் அப்பழியை இவ் வேற்று நாட்டான் மேலேற்றுவல் என்றெண்ணி; கண்டனன் பிறன் ஓர் கள்வன் கையென-வேந்தர் வேந்தே, பண்டு களவு போன தேவியாருடைய சிலவாகிய பரலிடப்பட்ட சிலம்பை இன்று அடிநாயேன் பிறர் நாட்டுக் கள்வன் ஒருவன் கையிற் கண்டேன் என்று கூற என்க.
விளக்கம் 2-3 : யாப்புறவு - பொருந்தும். ஈங்கு என்று சுட்டியது அப்பொற் கொல்லன் குடிலுக்கருகான ஒரு கோயிலை. (25) சில்லரிச் சிலம்பு என்றது, பண்டு தான் வஞ்சித்துக் கொண்டுள்ள தேவியார் சிலம்பினை.
இப்பகுதிக்கு ஆசிரியர் அடியார்க்கு நல்லார் வகுத்த விளக்கம் மிகவும் இனியன; அவையாவன :- தான் கொண்ட என்றார், தன்னெஞ்சறியத் தான் கொண்டதனை இங்ஙனம் கூறினான் என்பது தோன்ற; ஈங்கிருக்க என்றார், பிறிதோரிடத்தாயின் ஊர்காவலர் ஆராய்வர் என்று கருதினான் என்பது தோன்ற; என்று ஏகி என்றார், அவன் கருத்தும் முயற்சியுந் தோன்ற; சில்லரிச் சிலம்பினை என்றார் தொழிற்பன்மை தோன்ற; (ஈண்டுச் சில்லரி என்பதற்கு இவர் சிலவாகிய சித்திரத் தொழில்கள் எனப் பொருள் கொண்டனர் போலும்) பிறன் ஓர் கள்வன் கையிற் கண்டனன் என்றார், தன்னையும் கள்வன் என்றமை தோன்ற (இஃது ஆற்றவும் இன்பந்தரும் நுண்ணிய விளக்கமாகும்)
27-30 : வினைவிளை.........ஈங்கென
இதன்பொருள் : வினை விளைகாலம் ஆகலின் - அது கோவலன் முற்பிறப்பிற் செய்த தீவினை வந்து தன் பயனை நுகர்விக்கும் காலமாக இருந்தமையாலே; சினை அலர் வேம்பன் யாவதும் தேரான் ஆகி - அரும்புகள் மலர்கின்ற புதிய வேப்பந்தாரணிந்த அப்பாண்டியன் அப்பொய்த் தொழிற் கொல்லன் கூற்றை ஒரு சிறிதும் ஆராயாதவனாய்; கன்றிய காவலர்க் கூய்-தந்தொழிலில் பயின்றடிப்பட்ட திறமுடைய காவலர் சிலரை அழைத்து; அக்கள்வனைக் கொன்று -நீயிர் இக்கொல்லனொடு சென்று இவனாற் காட்டப்படுகின்ற அக்கள்வனைக் கொன்று; அச்சிலம்பு - அவன் கைக்கொண்டுள்ள நம்மரண்மனைச் சிலம்பினை; ஈங்குக் கொணர்க என - இப்பொழுதே இங்குக் கொண்டு வரக்கடவீர் எனக் கட்டளையிடா நிற்ப என்க.
விளக்கம் : வினைவிளை காலமாதலின் எனத் தண்டமிழ்ச் சாத்தனார் கூறியது-கோவலன் முற்பிறப்பிற் செய்த தீவினை வந்து தன் பயனை நுகர்விக்கும் காலம் அதுவாகலின் என்னும் பொருளுடையதாம். என்னை? பின்னர் வினைவிளை காலம் என்றீர் யாதவர் வினைவிளைவு எனச் சேரன் வினவுதலின் அச்சேரனும் வினை கோவலன் வினை என்றே கருதி வினவினன் என்பதும், அவ்வினாவிற்கு விடை கூறும் சாத்தனாரும், கோவலனுடைய ஊழ்வினையையே மதுரைமா தெய்வங் கூறத் தாங் கேட்டாங்குக் கூறுதலாலும் யாம் கூறுமுரையே பொருத்தமாம்.
இனி, அடியார்க்கு நல்லார் அங்ஙனம், அவன் சொல்லக்கேட்ட பாண்டியன் தான் முற்பவத்திற் செய்த தீவினை வந்து பலிக்கின்ற காலமாதலாலே ஒன்றையுந் தேரானாய் என்று கூறும் உரை பயில்வோர்க்கு மயக்கந்தருவதாயுளது. என்னை? பாண்டியன் தான் செய்த தீவினையாலே மயங்கித் தேரானாயினன் என்பது போன்று அவ்வுரை அமைந்துள்ளது. ஆயினும் அடியார்க்கு நல்லார் தான் முற்பவத்திற் செய்த தீவினை என்புழித் தான் என்னும் பொதுப் பெயர் மறுகிற் செல்வோன் என்னும் எழுவாயின் சுட்டுப் பெயர்ப்பொருள் பயந்து கோவலனையே குறித்து நின்றது எனக்கொள்க. பாண்டியனைக் குறித்திலது என்பதனை அவர் அதற்குக் கூறும் விளக்கவுரை புலப்படுத்தும். அவர் இதனானன்றே தென்னவன் தீதிலன் தேவர் கோமான் கோயில். நல்விருந்தாயினான் என்ற கருத்து மெனக் கொள்க எனவும் (38-44) விறலோய்........யானென் என்பதன் விளக்கவுரையில் வினைவிளைவு யாதென்று வினாவினாற்குப் பாண்டியன் வினைவிளைவு கூறிற்றிலர் எனவும், ஓதுதலின் அடியார்க்கு நல்லார் தான் முற்பவத்திற் செய்த தீவினை என்புழித்தான் என்னும் பொதுப் பெயரால் கோவலனையே குறித்தனர் என அமைதி காண்பாம்.
அடியார்க்கு நல்லார் இவன் சொன்ன அக்கள்வனைக் கொல்ல அச் சிலம்பையும் அவனையும் இப்பொழுதே இங்கே கொண்டு வருவீராக வெனச் சொல்லக் கருதினவன் காமபரவசனாய் இச்சிலம்பு இவள் ஊடல் தீர்க்கும் மருந்தாமென்னும் கருத்தால் வாய்சோர்ந்து கொன்று அச்சிலம்பை இப்பொழுதே கொணர்க என்று கூற என்றோதியவுரை நூலாசிரியரின் கருத்துணர்ந்து விரித்தோதிய நுண்ணிய இனியவுரையேயாகும். என்னை, ஆசிரியர் இளங்கோவடிகளாரும், அப்பாண்டியனிடம் பொற்கொல்லன் சென்று வஞ்சம் புணர்க்கும் அச் செவ்விதானும் அவன் காம பரவசனாய் இருக்கும் ஒரு செவ்வியாகவே புனைந்திருத்தலான் ஆசிரியன் நெஞ்சத்து ஆழ்ந்திருக்கும் கருத்துணர்ந் துரைத்த நுண்ணுரையேயாம் என்க.
இனி, அடிகளார் சினையலர் வேம்பன் ஈண்டுத் தான் அரசியல் பிழைத்தான் என்று கருதுகின்றார் இப்பிழையின் வழியே அவனுக்கு அறம் கூற்றாயிற்று என்பது அவர் கொள்கையாகும். அடிகளார் உலகியலில் அரசராவோர் இத்தகைய செய்திகளிலே மிக எளிதாகவே தமது அறத்தினின்றும் வழுவி விடுகின்றனர். அதுவே பின்னே அவர் தம் அரசாட்சியைக் கவிழ்த்து விடுகின்றது. ஆதலால் அரசராயினோர் மிகவும் விழிப்புடனிருந்து ஆட்சிசெய்தல் வேண்டும் என்று அரசர்க்கு அறிவுறுத்தவே அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும் வாய்மையையும் இக்காவியப் பொருள் மூன்றனுள் ஒன்றாகக் கொள்வாராயினர். இவ்வாறன்றிப் பாண்டியன் கேடுறற்கும் காரணம் ஊழ்வினையே என்று கொள்வது ஊழ்வினையின் இயல்பறியாதார் கொள்கையேயாம் என்க. என்னை? ஊழ்வினையானது நன்னெறியிற் செல்வாரைத் தீயநெறியிற் புகுத்தும் ஆற்றலுடையதன்று. ஈண்டுப் பாண்டியன் பொன்செய்கொல்லன் தன் சொற் கேட்ட மாத்திரையே ஆராயாது கோவலனைக் கொல்வித்தது அவன் பிழையேயன்றி ஊழின் பிழை என்று கொள்ளற்க. அடிகளார் கருத்தும் பாண்டியன் அரசியல் பிழைத்தான் என்பதேயாம் என நுண்ணிதின் உணர்க.
இனி, அரசராதல் அறங்கூறவையத்தாராதல் வழக்குத் தீர்க்கும் பொழுது அவர் செய்யவேண்டிய அரசியன் முறையை,
தொடைவிடை ஊழாத் தொடைவிடை துன்னித்
தொடைவிடை ஊழிவை தோலாத் - தொடைவேட்டு
அழிபடல் ஆற்றால் அறிமுறையென் றெட்டின்
வழிபடர்தல் வல்ல தவை
எனவரும் புறப்பொருள் வெண்பாமாலையான் (273) உணர்க.
அதனாலன்றோ வழக்குரைகாதையில் பாண்டியன் தன் பிழையுணர்ந்துயீர் நீப்பவன் தான் செய்த பிழையை,
பொன்செய் கொல்லன் றன்சொற் கேட்ட
யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்குந் தென்புலங் காவல்
என்முதற் பிழைத்தது கெடுகவென் னாயுளென
உலகறிய அரற்றி மயங்கி வீழ்ந்தனன்.
இனி, மதுரைமாதெய்வம் கண்ணகியார்க்கு.
தோழிநீ யீதொன்று கேட்டியெங் கோமகற்கு
ஊழ்வினை வந்தக் கடை
மாதரா யீதொன்று கேளுன் கணவற்குத்
தீதுற வந்த வினை
என இருவர் வீழ்ச்சிக்கும் ஊழ்வினையே காரணம் எனக் கூறிற்றாலோ எனின் அஃதொக்கும். இரண்டும் ஊழ்வினையே. கோவலன். முற்பிறப்பிற் செய்தது பாண்டியன் அற்றைநாள் முற்பகலிலேயே செய்தது இரண்டும் ஊழே ஆதலின், தெய்வம் அவ்வாறு கூறிற்று என்க. ஆயினும்,
பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்
தாள்வினை யின்மை பழி
என்பதுபற்றி ஈண்டுக் கோவலன் பழிக்கப்பட்டிலன். அறிவறிந்தும் ஆள்வினையில் வழீஇய அரசனே பழிக்குரியவன் ஆகின்றனன் என்க.
இனி, ஈண்டும் அடியார்க்கு நல்லார் முன்னர்க் கைகுறைத்தல் முதலிய முறைசெய்தோன் இதனைத் தேர்ந்திலன் என்று அடிகள் இரங்கிக் கூறினார் என்பது பொருந்தாமை முற்கூறியது கொண்டுணர்க.
31-36 : கொலைக்கள............இதுளென
இதன்பொருள் : கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி-அவ்வேம்பன் பணித்தபடியே அக்காவலராற் கொலையிடத்தே பட்டொழிந்த வணிகனாகிய அக் கோவலனுக்கு மனைவியாகிய கண்ணகி தானும் இச்செய்தி கேட்ட பின்னர்; நிலைக்களம் காணாள் - தனக்கு நிலையிடம் காணாளாய்; பத்தினியாகலின் - அவள் தான் திருமா பத்தினியாகலான்; பாண்டியன் கேடு உற நெடுங்கண் நீர் உகுத்து-அரசியல் பிழைத்த அப்பாண்டியன் உயிர் கேடுறும் படி அவன் முன்னர்ச் சென்று தன் நெடிய கண்ணினின்றும் நீர் உகுத்து; நிலை கெழு கூடல்-அற்றை நாள்காறும் நன்னிலை பொருந்தியிருந்த நான்மாடக்கூடல் என்னும் அவன் நகரத்தை; முத்து ஆரம் மார்பின் முலைமுகந்திருகி நீள் எரி ஊட்டி - சினந்து பண்டு முத்துவடம் பூண்டிருந்த தன்திருமுலைகளுள் ஒன்றைப் பற்றித் திருகி வட்டித்து விட்டெறிந்து தீக்கிரையாகச் செய்தமையாலே; பலர் புகழ்-மதுரைமாதெய்வம் முதலாகப் பலரானும் புகழப்படுகின்ற; பத்தினி ஆகும் இவள் என - திருமாபத்தினியாகிய அக்கண்ணகி நல்லாளே இங்கு இக்குன்றக் குறவராற் கூறப்பட்டவள் என்று சாத்தனார் அறிவியா நிற்ப என்க.
விளக்கம் 30 : கொணர்க ஈங்கெனக், (31) கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி எனவே, அக்காவலர் கோவலனைக் கொன்றமையும்; கண்ணகியார் கோவலனுடன் மதுரைக்கு வந்திருந்தமையும் கூறியவாறாயிற்று. மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் கையிற்றனிச் சிலம்பும் கண்ணீரும், வையைக்கோன்....உண்டளவே தோற்றான் உயிர் என்று அடிகளார் கூறுதல் கருதி உரையாசிரியர் (அடியார்) அவனுயிர்கேடுறக் கண்ணீர் உகுத்து எனக் கண்ணீரை ஏதுவாக்கினார். கண்ணகி இடமுலை கையாற்றிருகி வட்டித்து மறுகின் விட்டெறிந்த அளவிலே அவர்முன் எரியங்கிவானவன் வந்து தோன்றலின் என்றமையால் தன் முலை முகத்தெழுந்த தீ என்றார் (அடியார்) வாழ்த்துக் காதையுள்ளும் அடிகளார் தொல்லை வினையாற் றுயருழந்தாள் கண்ணினீர் கொல்லவுயிர் கொடுத்த கோவேந்தன் என்றோதலுமுணர்க. ஈண்டு, அல்லற்பட்டாற்றா தழுதகண்ணீரன்றே, செல்வத்தைத் தேய்க்கும் படை (535) என வருந் திருக்குறளையும் நினைக.
37-38 : வினைவிளை..........என்ன
இதன்பொருள் : வினைவிளை காலம் என்றீர் - அது கேட்ட சேரன் செங்குட்டுவன் அக்கண்ணகியார் பொருட்டுப்பட்ட கவற்சியுடையனாய் ஐய ; நீயிர் வினைவிளை காலம் என்றீரல்லிரோ! அவர் வினைவிளைவு யாது என்ன-அவர்க்கு இத்தகைய மாபெருந்துயரம் வருவதற்குக் காரணமாய் அவர் செய்த தீவினைதான் யாது அது நிகழ்ந்த காலம் யாது? அறிவீராயிற் கூறுதிர் என்று சாத்தனாரை வேண்டவென்க.
விளக்கம் 27 : வினைவிளை காலமாதலின் யாவதுஞ் சினையலர் வேம்பன் தேரானாகி எனச் சாத்தனார் உரைத்தமையுணர்க. வினைவிளை காலமாதலின் வேம்பன் யாவதுந் தேரானாகி என்றமையால் ஈண்டு வினையென்றது கோவலன் செய்த வினையோ? அல்லது வேம்பன் செய்த வினையோ? என ஐயுறுதற்கிடனாயிருந்தமையின் யாது அவர் வினைவிளைவு எனத் தானறிந்த உயர்திணைமருங்கிற் பன்மைச் சுட்டால் சுட்டினான் சேரன். என்னை?
பான் மயக்குற்ற ஐயக் கிளவி
தானறி பொருள்வயிற் பன்மை கூறல் (தொல்-சொல்-23) என்பது இலக்கண விதியாகலான்.
38-54 : விறலோய்...........யானென
இதன்பொருள்: விறலோய் கேட்டி வெற்றிவேந்தே ! கேட்டருள்க; அதிராச்சிறப்பின் மதுரை மூதூர் - பண்டொருகாலத்தும் துன்பத்தால் நடுங்கியறியாத சிறப்பினையுடைய மதுரை யாகிய அந்தப் பழைய நகரத்தின் கண்ணே; கொன்றை அம் சடைமுடி மன்றப் பொதியிலில் - அக்கண்ணகி முலைமுகந் திருகி அந்நகரத்தைத் தீக்கிரையாக்கிய அற்றை நாளிரவு யான் அந்நகரத்து மன்றங்களாகிய பொதியிலில்களுள் வைத்துக் கொன்றை வேய்ந்த சடை முடியினையுடைய இறைவன் எழுந்தருளியுள்ள; வெள்ளியம் பலத்துக்கிடந்தேன் -வெள்ளியம்பலம் என்னும் மன்றத்தே அத் தீயினுக்கஞ்சிப் புகுந்து ஆங்கொருசார் கிடந்தேனாக; நள்ளிருள் அவ்விரவின் இடையாமத்தே, அவ்வம்பலம றுகின்கண்; ஆர் அஞர் உற்ற வீரபத்தினிமுன் - பொறுத்தற்கரிய துன்பத்தோடே செல்லா நின்ற மறக்கற்புடைய அக்கண்ணகியார்க்கு முன் வருதற்கு அஞ்சி, மதுரைமாதெய்வம் வந்து தோன்றி - பாண்டியன் குல முதற் கிழத்தியாதலின் மதுராபதி என்னும் தெய்வமகள் அவனுக்குப்பட்ட கவற்சியளாய், அம் மாநகரைத் தீயுண்ணால் பொறாளாய் உருவத்திருமேனிகொண்டு அவரைப் பின்தொடர்ந்துவந்து; சீற்றம் கொங்கையில் அழல் விளைத்தோய்-பெரிய சினத்தாலே நினது கொங்கையினின்றும் கொதிக்கின்ற தீயைப் பிறப்பித்த தெய்வக் கற்புடையோய் ! ஈதொன்றுகேள்; முந்தைப்பிறப்பின் முதிர்வினை நுங்கட்கு பைந்தொடி கணவனொடு முடிந்தது-முற்பிறப்பிலே செய்யப்பட்டு இதுகாறும் முதிர்ந்த பழைய தீவினை உங்களுக்குப் பசிய தொடியினையுடைய நின் கணவன் முடிவோடு தன்பயனை ஊட்டி யொழிந்தது; ஆதலின் - அங்ஙனமாகலான் இப்பொழுது; முந்தைப் பிறப்பின் சிங்கா புகழ் வண் சிங்கபுரத்துச் சங்கமன் என்னும் வாணிகன் மனைவி முற்பிறப்பிலே குன்றாத புகழையுடைய வளவிய கலிங்க நாட்டுச் சிங்கபுரமென்னும் நகரின்கண் சங்கமன் என்னும் வாணிகனுக்கு மனைவி; இட்டசாபம் கட்டியது ஆகலின் - இட்ட சாபமானது இப்பிறப்பின்கண் வந்து நினக்கு மூண்டுளதாதலான்; வார் ஒலி கூந்தல் நின்மணமகன் தன்னை நீண்டு செறிந்த கூந்தலையுடையோய் ! நீ நின் கணவனை; ஈர்ஏழ்நாள் அகத்து எல்லை நீங்கி-இற்றைநாளினின்றும் பதினாலாநாட் பகல் நீங்கிய பொழுதிற் காண்பாய்; வானோர் தங்கள் வடிவின் அல்லதை ஈனோர் வடிவில் காண்டல் இல் என-அங்ஙனம் காணுமிடத்தும் வானவர் வடிவில் (நின் கணவனைக்) காண்பதல்லது மக்கள் வடிவில் காண்டல் இல்லை என்று கூற; கோட்டம் இல் கட்டுரை யான் கேட்டனன் என - அவ்வஞ்சமற்ற கட்டுரையினை யான் எனது செவியாலேயே கேட்டேன் என்று அச்சாத்தனார் கூற என்க.
விளக்கம் : குன்றக்குறவர் அடிகட்குக் கூறினர் என்பார்க்கு ஈண்டு (37) வினைவிளைகால மென்றீர் யாதவர்...காலம் என, பன்மை விகுதியால் அடிகளார் சாத்தனாரை வினவினர் என்பதும் சாத்தனார் அடிகளாரை (38) விறலோய் என ஒருமைக்கிளவியால் விளித்தனர் என்பதும் பொருந்தாமையுணர்க. எனவே, முன்னது அரசன் வினாவும் பின்னது புலவர் விளித்ததும் ஆகும் என்பதே அமையும் என்க.
39. அதிராச் சிறப்பின் மதுரை மூதூர் என்றது அற்றை நாள் காறும் அதிராச்சிறப்புடைய மதுரை மூதூர் என அற்றை நாள் அதிர்ந்தமையைக் குறிப்பால் உணர்த்தி நின்றது (40). கொன்றையஞ்சடை முடியையுடைய இறைவன் என்க. இறைவன் எழுந்தருளிய அம்பல மாதலின் கண்ணகியார் ஏவியவாறு தீக்கதுவா தொழிந்தமையான் யான் அதனைப் புகலிடமாகக் கருதி அதனுட் புகுந்து கிடந்தேன் என்பார் (40) சடைமுடி மன்றப் பொதியிலிற் கிடந்தேன் என்றார் என்க. இஃதறியாது பழையவுரையாசிரியர் அவர் துயின்றதாகக் கூறுவது பொருந்தாது என்னை? அற்றை நாள் பிற்பகலிலே அந்நகரம் உரக்குரங் குயர்த்த வொண் சிலையுரவோன் காவெரியூட்டியநாள் போற்கலங்க, தண்டமிழ் ஆசான் சாத்தன் வெள்ளியம்பலத்தே துயின்று கிடந்தான் என்பது வியப்பேயாகும். இனி, கிடந்தேன் என்னும் அச்சொல்தானே தீயினுக் கஞ்சி வெள்ளியம்பலத்தைப் புகலிடமாகக் கொண்டு அதனுட் புகுந்து ஒருசார் திகைத்துக் கிடந்தேன் என்பதுபடக் கிடப்பதனை இலக்கிய நயமூணர்வோர் உணர்வர் என்க. இனி, பௌத்தராகிய சாத்தனார் தாமும் கொன்றைச் சடைமுடி இறைவன் பொதியிலில் கிடக்க நேர்ந்ததூஉம், அவர் தம்மைக் காத்துக் கோடற்பொருட்டு அவர்க் கணித்தாக அதுவே புகலிடமாகக் கண்டமையேயாம் என்க.
42. ஈண்டு ஊதுலைக் குருகின் உயிர்த்தனன் உயிர்த்து மறுகிடை மறுகும்.... ஆரஞர்உற்ற வீரபத்தினி முன் என அழற்படு காதைக் கண் அடிகளார் கூறிய சொற்றொடரையே இப்பாயிர முடையாரும் பொன்போற் போற்றிக் கூறுதல் உணர்க (43) சீற்றம்-மிக்கசினம்; சீற்றத்தால் என்க.
45-46 : முதிர்வினை - பயனூட்டத்தகுந்ததாக முதிர்ந்துள்ள பழைய தீவினை முந்தைப் பிறப்பின் முதிர்வினை பைந்தொடி ! நுங்கட்குக் கணவனொடு, முடிந்தது எனமாறுக. முற்பிறப்பின் கட் செய்து முதிர்ந்துள்ள தீவினை உங்கட்குத் தன்பயனை ஊட்டி உன் கணவன் சாவோடு கழிந்தது என்றவாறு. எனவே, உன் கணவன் இம்மைச் செய்த நல்வினையால் வானவன் ஆயினன் என்பது குறிப்புப் பொருள். இங்ஙனம் நுண்ணிதின் உரைகாண மாட்டாது பழையவுரையாசிரியர், முதிர்வினை முடிந்தது என்பதற்கு நுங்கட்கு முற்பட்ட நல்வினை முடிந்ததாகலான் என ஈண்டைக்குச் சிறிதும் பொருந்தாவுரை கூறி ஊழ்வினை உருத்துவந் தூட்டும் என்பதற்குச் செய்யுளிற் சொற் காணாது வறிதே போயினர்.
பைந்தொடி: அண்மைவிளி (47) சிங்காத என்னும் பெயரெச்சத்தீறு கெட்டது (5) வாரொலி கூந்தல்: விளி. கூந்தால் நின்னை வாணிகன் மனைவி இட்ட சாபம் கட்டியதாகலின் (51) ஈரேழ் நாளகத்தெல்லை நீங்கி வானோர் வடிவிற் கணவனைக் காண்பதல்லது மக்கள் வடிவிற் காண்டல் இல்லை என்றவாறு. கொலைக்களப் பட்ட சங்கமன் மனைவி நிலைக்களங்காணாள் மன்றினும் மறுகினுஞ் சென்றனள் பூசலிட்டு எழுநாளிரட்டி எல்லை சென்றபின்....மலைத்தலை யேறி மால் விசும்பேணியில் கொலைத்தலைமகனைக் கூடுபு நின்றோன் எம்முறுதுயரம் செய்தோரியாவதும் தம்முறுதுயரம் இற்றாகுக என்றே விழுவோள் (49) இட்ட சாபம் கட்டியது ஆதலால், அவள்பட்டன வெல்லாம் நீயும் பட்டு ஈரேழ் நாளகத்து எல்லை நீங்கி நின் கணவனை வானோர் வடிவிற் காண்குவை என்றவாறு. நின் கணவன் திறத்தில் அச்சாபம் அவனோடு முடிந்தது நின்திறத்தில் நினக்குரிய கூறு இப்பொழுதே நின்னைக் கட்டியது ஆகலின் என்பது கருத்து (50) வாரொலி...(176) ஈனோர் வடிவிற் காண்ட லில்லென என வரும் நான்கடிகளும் அடிகளார் கூறியாங்கே ஈண்டும் கூறப்பட்டமை அறிக (34) கோட்டம் வளைவு ; ஈண்டு வஞ்சம் என்னும் பொருட்டு. கட்டுரை பொருள் பொதிந்த சொல்.
55-60 : அரைசியல்..............செய்யுளென
இதன்பொருள் : அரைசு இயல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்- இவ்வாறு தண்டமிழ்ச் சாத்தனார் சேரன் செங்குட்டுவனுக்குக் கோவலன் கண்ணகி இருவர்க்கும் பழவினை விளைந்த வாற்றை விளம்பி முடித்தவுடன் ஆங்குக் குன்றக்குறவர் கூறியது தொடங்கிச் சாத்தனார் கூற்று முடியுந் துணையும் தமக்கியல்பான அமைதியோடிருந்து அவர்கள் கூறியவற்றின் மெய்ப்பொருளை ஆராய்ந்துணர்ந்த இளங்கோவடிகளார் சாத்தனாரை நோக்கி ஐய ! நுமது வாய்மொழியினூடு உள்ளுறையாக யாம் மூன்று வாய்மைகளைக் கண்டோம் அவை தாம் யாவெனின்; நூனெறி நின் றொழுகுதற்குரிய அரசாட்சி ஒழுக்கின்கண்ணே அரசர் சிறிது ஒழுக்கம் பிழைப்பினும் அவரை அறக்கடவுளே கூற்றமாகிக் கொல்லும் என்பதூஉம்; உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் - புகழமைந்த கற்புடைமகளை இவ்வுலகத்து மக்களேயன்றி அமரர் முதலிய உயர்ந்தோரும் சென்று வழிபாடு செய்வர் என்பதூஉம்; ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம் முன் செய்த இருவகை வினைகளும் செய்த முறையானே செய்தவனை நாடிவந்து உருக்கொண்டு நின்று தத்தம் பயனை நுகர்விக்கும் என்பதூஉம் ஆகிய இம் மூன்றுண்மைகளும் சிலம்பு என்னும் அணிகலனைக் காரணமாகக் கொண்டு எமக்குத் தோன்றினவாதலான்; யாம் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் ஓர் பாட்டு உடைச் செய்யுள் நாட்டுதும் என-யாம் இவையிற்றை உள்ளுறுத்திச் சிலப்பதிகாரம் என்னும் பெயருடைய இயலிசை நாடகம் என்னும் முத்தமிழ்க்கும் பொதுவாகப் பாட்டுக்களையும் செய்யுளையும் உடையதொரு வனப்புநூலை இயற்றி இவ்வுலகத்து மக்கட்கு எப்பொழுதும் நலம்பயக்கும்படி நிலைநிறுத்தக் கருதுகின்றேம் என்று திருவாய்மலர்ந்தருளா நிற்ப வென்க.
விளக்கம் 35 : அரைசியல் என்புழி அகரத்திற்கு ஐகாரம் போலி. அரசியல் செங்கோன்மை. ஈண்டு, சினையலர் வேம்பன் பொய்த்தொழிற் கொல்லன் கூற்றை ஆராயாது நம்புதலும் அவனாற்கள்வன் என்றவனை அழைத்து வினவாமல் கடுந்தண்டம் விதித்தலும் பிறவும் அரசியல் பிழைத்தவாறாம். அவனை வீரபத்தினியின் கண்ணீரே உயிர் போக்கியது அறம் கூற்றான வாறாம் என்க.
இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின் (குறள் 547)
என்று ஓதுதலான், அரைசியல் பிழைத்தகாலை அச்செங்கோன் முறையே அவனைக் கொல்லும் என்பதும் பெறப்படும். இன்னும்,
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தாற் றானே கெடும் (குறள் 548)
எனவரும் அருமைத் திருக்குறட்கு இப்பாண்டியன் சிறந்த எடுத்துக் காட்டாதலும் அறிக.
56. பத்தினிக்கு இரண்டாவதன்கண் நான்கனுருபு மயங்கிற்று. பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும் என்றது குன்றக் குறவர் ஒருங்குடன் கூடி திருமாபத்தினிக்கு அமரர்க் கரசன் தமர் வந்து ஈண்டி அவள் காதற் கொழுநனைக் காட்டி அவளோடு எங் கட்புலம் காணவிட்புலம் போயது இறும்பூது போலும் என்றதனானும், சாத்தனார் ஆரஞர் உற்ற வீரபத்தினி முன் மதுரை மாதெய்வம் வந்து தோன்றி.........கூறிய கோட்டமில் கட்டுரை கேட்டனன் யான் என்றதனானும் அடிகளார் பெற்ற வாய்மை என்க.
57. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது சாத்தனார் மதுரை மாதெய்வம் வந்து தோன்றி, கண்ணகியை நோக்கி நுங்கட்கு முந்தைப் பிறப்பின் முதிர்வினை நின் கணவனொடு முடிந்தது என்றதனானும் வாணிகன் மனைவியிட்ட சாபம் கட்டியது ஆகலின் ஈரேழ் காளகத்து எல்லைநீங்கி நீ நின் கணவனை வானோர் வடிவிற் காண்குவை என்றதனானும் எய்திய வாய்மை என்க.
58. சூழ்வினைச்சிலம்பு என்றது உருத்து வந்தூட்டுதற்குச் சூழும் ஊழ்வினைக்குக் கருவியாகிய சிலம்பு எனவும், சூழ்ந்த சித்திரச் செய்வினை யமைந்த சிலம்பு எனவும் இரு வேறு பொருளும் பயந்து நிற்றல் அறிக.
ஈண்டுச் சிலம்பு என்றது கண்ணகியார் காற்சிலம்பிற்கும் கோப்பெருந்தேவியார்க்குரிய கோயிற் சிலம்பிற்கும் பொது; என்னை? இருவர் சிலம்பும் காரணமாகலின் வாளா சூழ்வினைச் சிலம்பு காரணமாக என அடிகளார் கூறினர் என்க.
59. சிலப்பதிகாரம் - சிலம்பு காரணமாக விளைந்த கதையைக் கூறுகின்ற நூல் (60) பாட்டு-இசைக்கும் நாடகத்திற்கும் பொதுவாகிய உருக்கள். (இவற்றின் இயல்பு (3) அரங்கேற்று காதையுரையிற் காண்க) செய்யுள் இயற்றமிழ்ச் செய்யுள், எனவே, இந்நூலின்கண் இயலிசை நாடகம் என்னும் முத்தமிழும் இடம் பெற்றமையுணர்க. அவற்றை ஆண்டாண்டுக் காட்டுதும்.
61-62 : முடிகெழு...............என்றாற்கு
(இதன்பொருள்) முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது-அது கேட்டுப் பெரிதும் மகிழ்ந்து தமிழ்நாட்டு மூவேந்தர்க்கும் பொதுவுரிமையுடையதாகும் அன்றோ அடிகள் செய்யக்கருதிய அவ்வனப்பு நூல்; ஆகவே ஆர்வமும் செற்றமும் அகலநீக்கிய அடிகட்கு அச்செயல் பெரிதும் பொருந்துவதேயாகும். ஆதலால்; அடிகள் நீரே அருளுக என்றாற்கு - வினையினீங்கி விளங்கிய அடிகளாராகிய நீவிரே அந்நூலைச் செய்து இவ்வுலகிற்கருளுக என்று வழி மொழிந்து வேண்டிய அத்தண்டமிழ் ஆசான் சாத்தனார்க்கு என்க.
(விளக்கம்) இந்நிகழ்ச்சி நிரலே சோழநாட்டினும் பாண்டியனாட்டினும் சேரநாட்டினும் நிகழ்ந்தமையின் அடிகளார் இந்நிகழ்ச்சியைப் பொருளாகக் கொண்டியற்றும் நூல் மூன்று தமிழ்நாட்டிற்கும் பொதுவுரிமையுடையதாம் என்பார் முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது என்றார். எனவே, இவ்வேண்டுகோள் தம்நாடு பிறர்நாடு என்னும் வேற்றுமையின்றி யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் கொள்கையோடு ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய மெய்யுணர்வுடைய அடிகளார் செய்யின் அவ்விலக்கியம் எல்லார்க்கும் பெரும்பயன் விளைக்கும். ஏனைய எம்போல்வார் செய்வது அத்துணைப் பயனுடையதாகாது. ஆதலால், அடிகளாரே செய்தருளுக என்று அப்புலவர் பெருமான் அடிகளாரை வழிமொழிந்து ஊக்கியபடியாம்.
இனி, இவ்வாறன்றி அடியார்க்கு நல்லார் (62) என்றாற்கு - தான் பாடக் கருதி வினாவின சாத்தற்கு; அங்ஙனம் கூறாது இங்ஙனம் கூறினாரென்க. என் சொல்லியவாறேவெனின், - இச்செய்கின்ற காப்பியம் மூவேந்தர்க்கும் உரியது என்பதனால், ஏனையோரை இவர் புகழ்ந்துரையாராகலின் யாம் காப்பியம் செய்யக் கடவேமென்பது கருதிநீரே? அருளுக என ஏகாரப் பொருண்மை தோன்ற இது கருதி இது சொன்னாற்கு (உள்ளொன்று வைத்து அப்பொருள் குறிப்பாகப் புலப்படப் புறமொன்று சொன்ன சாத்தற்கு) அவன்(ர்?) கருதிய பொருளிற்கு (குறிப்புப் பொருளிற்கு) உடன்படாது சொல்லிற்கு (வெளிப்படையாகத் தோன்றும் பொருளிற்கு) உடன்பட்டார் என்பதாயிற்று என வுரைத்தனர். இவ்வுரை, நனிநாகரிகத்திற் கொவ்வாமை நுண்ணுணர்வாற் கண்டு கொள்க.
ஈண்டு இனித் தாம் வகுத்துக் கொண்டதனைக் கூறுவார் எனவரும் அடியார்க்கு நல்லார் உரையில் தாம் என்னும் பொதுப் பெயர் அடிகளாரைக் கருதிக் கூறப்பட்டது. அது பொருந்தாமை முன்னும் காட்டினோம்.
62- 90 : அவர் ..............மரபென்
(இதன்பொருள்) அவர் - அக்கண்ணகி கோவலருடைய மணத்தில் மகளிர் வாழ்த்திய; மங்கல வாழ்த்துப் பாடலும்......வரந்தரு காதையொடு இவ் ஆறு ஐந்தும்-மங்கல வாழ்த்துப் பாடல்முதலாக வரந்தரு காதையீறாக ஈண்டுக் கூறப்பட்ட முப்பதுறுப்புக்களையு முடைய இப்பொருட் டொடர்நிலைச் செய்யுளிலக்கியத்தை; உரை இடையிட்ட பாட்டுடைச் செய்யுள் - உரையிடையிட்ட செய்யுளும் பாட்டிடையிட்ட செய்யுளுமாக; உரைசால் அடிகள் அருள - புகழமைந்த இளங்கோவடிகளார் திருவாய் மலர்ந்தருளா நிற்ப; மதுரைக் கூலவாணிகன் சாத்தன் கேட்டனன் - மதுரைக் கூலவாணிகனான தண்டமிழாசான் இனிதே கேட்டு மகிழ்ந்தனன்; இது-இந்நூற்குப் புறவுறுப்பாகக் கூறப்பட்ட இது; பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபு-சிலப்பதிகாரம் என்னும் இவ்வனப்பு நூலின் உட்பகுதிகளையும் நூலும் நுவலுவோனும் உள்ளிட்ட பிறவகைகளையும் தெரிதற்குக் காரணமான பாயிரத்தின் இலக்கணம் பற்றிச் செய்து நூன்முகத்தே வைக்கப்பட்டது என்க.
(விளக்கம்) (62) அவர் என்றது கண்ணகியும் கோவலனுமாகிய இருவரையும். மங்கலம்-திருமணம். மங்கலவாழ்த்துக்காதை என்னாது பாடல் என்றது, இஃது இசையொடு புணர்த்துப் பாடுதற்கியன்ற உரு என்றறிவித்தற்கு. இக்காப்பியத்தை ஓதத் தொடங்குவோர் இசையினால் வாழ்த்துப் பாடித் தொடங்கவேண்டும் என்பது அடிகளார் கருத்தாகும். எனவே, இஃது இசைத்தமிழ் என்பது பெற்றாம். இவ் வாழ்த்துப் பாடலிலேயே இக்காப்பியக் கதை தோற்றுவாய் செய்யப்படுகின்றது. இதில் கதை நிகழ்ச்சியில்லை என்று அடியார்க்கு நல்லார் கூறுவது பொருந்தாது. இதன்கண் கதை தோற்றுவாய் செய்யப்படினும் இறைவனையும் கற்புடைத் தெய்வமாகிய கண்ணகியையும் வாழ்த்துவதே குறிக்கோளாதல்பற்றி அச்சிறப்பு நோக்கிக் காதை என்னாது பாடல் என்றே குறியீடு செய்தனர். இசைத் தமிழுக்கேற்ற வாரநடையும் கூடைநடையும் திரள் நடையுமாக இதனை அடிகளார் மிக அருமையாக அதற்கியன்ற மயங்கிசைக் கொச்சகக் கலியால் யாத்துள்ளனர். இதற்கியைந்த பண்வகுத்து இசைக் கருவிகளோடு இசைவாணர்கள் இசையரங்குகளிலே பாடினால் இப்பாடல் பேரின்பம் பயக்கும் என்பது எமது துணிபாம்.
(63-4) குரவர் - தாய் தந்தையர். மனையறம் - மனைக்கண்ணிருந்து செய்யும் விருந்தோம்பல் முதலிய அறங்கள். அவற்றை,
அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் (சிலப் - 16 : 71 - 3)
எனவரும் கண்ணகியார் கூற்றானுமுணர்க.
(64-5) நடநவின் மங்கை மாதவி - ஆடற்கலையை ஐயாண்டிற்றண்டியம் பிடித்து ஏழாண்டு அக்கலையை நன்குபயின்று ஆடலும் பாடலும் நிரம்பி எஞ்சிய அழகு நிரம்புகின்ற மங்கைப் பருவமெய்திய மாதவி என்றவாறு.
(67) ஊர் இந்திரவிழவு எடுத்த காதை என்க. ஊர் - புகார் நகரம்.
(66) மடலவிழ் கானல் என்புழி மடலவிழ் என்பது கானலுக்கு இயற்கையடை. வரி-இசைப்பாட்டில் ஒருவகை. அதனியல்பு அக்கானல் வரியில் விளக்கப்படும். இக்காதைக்கு இவ்விசைப்பாடல் சிறப்பாய் நிற்றலின் அதுவே பெயராயிற்று.
கானல்வரியில் கதை நிகழாமை யுணர்க என்னும் அடியார்க்கு நல்லார் உரை போலி.
(66-70) வேனில்....காதையும் என்பது வேனிற்காதை என்னும் பெயர்ப் பொருட்டாய் நின்றது.
(70-71) பின்னிகழும் தீங்கை யுணர்த்துதலையுடைய கனாத்திறம் என்க.
(71-2) வினாத்திறத்து நாடுகாண் காதை என்றது, அக்காதையின் கண் கண்ணகி மதுரை மூதூர் யாதென வினவுதலும் கவுந்தியடிகள் என்னோ? இங்ஙனம் கருதியது என வினவுதலும், வறுமொழியாளன் கவுந்தியடிகளாரை நொசிதவத்தீருடன் ஆற்று வழிப்பட்டோர் ஆர்? என வினவுதலும், மீண்டும் உடன்வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை கடவது முண்டோ? என்று வினவுதலும் எனப் பல்வேறு வினாக்களை யுடைமையைக் கருதி என்க.
(73) வேட்டுவ வரி - வேட்டுவ மகளாகிய சாலினி கொற்றவை கோலங்கொண்டு ஆடிய வரிக்கூத்தும் என்க. இதனைக் கோலச்சாரி என்பர் அடியார்க்குநல்லார். இது கூத்தாற் பெற்ற பெயர்.
(73-4) தோட்டலர் - தோட்டையுடைய அலர். தோடலர் தோட்டலர் என விகாரமெய்திற்றெனினுமாம். தோட்டலர் கோதை-அன்மொழித் தொகையாய்க் கண்ணகி என்னும் பெயர் மாத்திரையாய் நின்றது.
இறுத்தல் - தங்குதல்.
(73-5) கறங்கிசையூர் பல்வேறு ஒலிகளும் ஒலிக்கும் மூதூராகிய மதுரை என்க. ஊர் காண்காதைக்கண் அடிகளார்(1) புறஞ்சிறைப்பொழிலும் என்பது தொடங்கி (14) காலை முரசங்கனைகுரலியம்ப என்னுந் துணையும், அந்நகரத்தில் உண்டாகின்ற இசைகளை விதந்தோதுதலை யுட்கொண்டு ஈண்டு, கறங்கிசையூர் என்று அடைதொடுத்தபடியாம்.
(75-6) சீர் - சிறப்பு; புகழ் எனினுமாம். ஈண்டுப் பாயிரமுடையார் அடைக்கலக் காதைக்கண் என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன்.. பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு எனக் கவுந்தியடிகளார் கண்ணகியின் சிறப்பெல்லாம் மாதவிக்கு எடுத்தோதியதனையும் அவரே இளங்கொடி நங்கை எனக் கண்ணகியைச் சுட்டியதனையும் கருதிச் சீர்சால் நங்கை என்றோதினர். சீர் - அழகு என்னும் பொருட்டு எனினும் ஈண்டு ஆசிரியர் கருதியது அப்பொருளன்று என்க.
(77) ஆய்ச்சியர் - ஆயர்க்குப் பெண்பாற் கிளவி. ஈண்டு மாதரி முதலிய இடைக்குல மகளிர். இக்காதையும் கதை நிகழ்ச்சிக்குறுப்பாகவே நின்றது. ஆயினும் குரவைக்கூத்தே சிறந்து நிற்றலின், ஆய்ச்சியர் குரவை என்றார். எனவே, இது கூத்தாற் பெற்ற பெயர். குரவைக் கூத்தாவது
குரவை யென்பது கூறுங் காலைச்
செய்தோர் செய்த காமமும் விறலும்
எய்த வுரைக்கு மியல்பிற் றென்ப
எனவும்
குரவை யென்ப தெழுவர் மங்கையர்
செந்நிலை மண்டலக் கடகக் கைகோத்
தந்நிலைக் கொட்பநின் றாட லாகும் (அடியார்க் - மேற்கோள்)
எனவும் வரும் நூற்பாவானுணர்க. ஈண்டு ஆய்ச்சியரிடத்து நிகழ்தலின் ஆய்ச்சியர் குரவை எனப்பட்டது. மேலே குன்றத்தின்கண் நிகழ்ந்தது குன்றக் குரவை எனப்படுதலு முணர்க.
(77-8) தீத்திறம் - தீய தன்மையுடையசொல். கேட்டது என்றதனாற் சொல் என்பது பெற்றாம். துன்பமாலை - துன்பத்தின் இயல்பு. மாலை - இயல்பு. இது தன்மையாற் பெற் பெயர்.
(78-9) நண்பகல் நடுங்கிய வூர் சூழ்வரியும் - இக்காதையை அடிகளார் பெரும்பான்மையும் நாடக வழக்கத்தாற் செய்திருத்தலின் இதுவும் கூத்தாற்பெற்ற பெயர் என்க. நடுங்கிய வூர் எனப் பெயரெச்சம் எனினும் அமையும். என்னை? கண்ணகியின் நிலைகண்டு அந்நகரமே நடுங்கியதாகலான் என்க.
(78-80) சீர்சால் வேந்தன் என்றார், தான் செய்த தவறு கண்டுழியே உயிர்விட்டான் ஆகலின். சீர் - ஈண்டு மானம் போற்றிய சிறப்பு என்க. இதனாலன்றோ அடிகளாரும்,
அரைசர் பெருமான் அடுபோர்ச் செழியன்
வளைகோல் இழுக்கத் துயிர்ஆணி கொடுத்தாங்கு
இருநில மடந்தைக்குச் செங்கோல் காட்டப்
புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்
அரைசு கட்டிலின் துஞ்சியது அறியார்
என அழற்படுகாதையில் உளமாரப் பாராட்டி யோதிய தூஉம் என்க.
(80) வஞ்சினமாலை-அஃதாவது : கண்ணகியார் பாண்டியன் முன் சென்று வழக்குரைத்த பொழுது அம்மன்னவன் வழக்கும் ஆருயிரும் ஒருங்கே தோற்ற பின்னரும் சினந்தணியப் பெறாமல் அம்மன்னவன் தேவியை நோக்கிக் கண்ணகி சூள் மொழிந்த தன்மையும் என்றவாறு. வஞ்சினமாவது இன்னது செய்யேனேல் இன்னவாறாகுவல் என்று இயம்புவது. இதுவும் தன்மையாற் பெற்ற பெயர்.
(81) அருந்தெய்வம் தோன்றி என்றது - மக்கள் காண்டற்கரிய இயல்புடைய மதுராபதி யென்னும் மாதெய்வம் கண்ணகியாரை இரந்து அழல் வீடு பெறுதற்பொருட்டு அவர் கண்காண எளிவந்து என்பதுபட நின்றது.
(82-3) மட்டு - தேன். கோதையர் ஈண்டுக் குறத்தியர். குன்றக்குரவை - குன்றத்துத் தெய்வமாகிய முருகவேளை நோக்கி ஆடிய குரவைக்கூத்து. மட்டலர் கோதை குன்றக் குரவை என்று பாட மோதிக் கோதை கண்ணகியெனக் கொண்டு கோதைக்குக் குன்றக் குறத்தியர் எடுத்த குரவை எனினுமாம். இதுவும் கூத்தாற் பெற்ற பெயர்.
(83) என்றிவை யனைத்துடன் என இவ்விருபத்து நான்கும் கண்ணகியார் வரலாறாகலின் ஒருகூறாக வகுத்தனர். மேல்வருவன சேரன் செங்குட்டுவன் செயலாகலின் அவற்றை வேறுபட வோதினர்.
(84-85) காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் வாழ்த்து வரந்தரு காதை எனவரும் ஆறு காதைகளுள் வைத்து இறுதியினின்ற வரந்தரு காதை ஒழிய ஏனைய காட்சி முதலிய ஐந்து காதைகளும் இளங்கோவடிகளார் பண்டைத் தமிழ்ச்சான்றோர் பொருணெறி மரபு பற்றி அந்நெறியிற் சிறிதும் பிறழாதவாறு செய்துள்ளனர். காட்சி முதலிய ஐந்தும் புறத்திணை ஏழனுக்கும் பொதுவாகிய துறைகளாம். இவற்றை, ஆசிரியர் தொல்காப்பியனார் புறத்திணையியலுள் (5) வெறியறி சிறப்பின் எனத் தொடங்கும் நூற்பாவின்கண்,
காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென்
றிருமூன்று வகையிற் கல்லொடு புணரச்
சொல்லப் பட்ட வெழுமூன்று துறைத்தே
என்றோதுத லறிக. இதற்கு, ஆசிரியர் நச்சினார்க்கினியர் இது.... .... புறத்திணைக்கெல்லாம் பொதுவாகிய வழுவேழும் உணர்த்துதல் நுதலிற்று என்று விளக்குதலும் உணர்க.
ஆசிரியர் தொல்காப்பியனார் போர்க்களத்தே அவிப்பலி செய்தல் விழுப்புண் பட்டுவீழ்தல் முதலியவற்றால் அறங்காத்தற் பொருட்டு உயிர்நீத்த மறவர்க்குக் கூறிய இத்துறைகள் கற்பென்னும் பேரறத்தி லொழுகி அதன் தெய்வத்தன்மையால் பாண்டியன் அரசவையேறி அவனொடு சொற்போர் தொடுத்து அரசனை வென்று நகர்தீமடுத்து விண்ணகம்புக்க கண்ணகியார்க்கும் நன்கு பொருந்துமென் றுட் கொண்டு இவற்றிற்கு அத்துறைப் பெயர்களையே நிறுவினர் என்றுணர்க.
இவற்றுள் காட்சி ஈண்டுக் கண்ணகித் தெய்வத்திற்குப் படிவம் செய்தற்குத் தகுந்த கல் இஃதாம் என்று ஆராய்ந்து கண்டது என்க.
அடியார்க்கு நல்லார், கற்காட்சியும் குறவர் பாகுடக் காட்சியும் என்க என்பர். ஈண்டுப் பாகுபடம் என்பது அரசிறை என்னும் பொருட்டு; கையுறை எனினுமாம். குறவர் கொணர்ந்த கையுறை அல்லது அரசிறை இக்காப்பியத்திற்குப் பொருளன்மையானும் ஏனைய துறைப்பெயரே யாதலானும் அப்பொருள் மிகைபடக் கூறலென்றொழிக. கற்காட்சி எனல் வேண்டியது கல் என்னும் சொல் தொக்கது. ஏனையவற்றிற்கும் இஃதொக்கும்.
(84) கால் கோள் - கல்லின்கண் படிவம் சமைக்கத் தொடங்குதல். ஈண்டுக் கால் கோள் என்பதற்குத் தொடங்குதல் என்னும் பொருளே கொள்க அடியார்க்கு நல்லார், கற்கோள் கால்கோள் என விகாரம் என்பர். இளங்கோவடிகளார் கற்கால் கோள் எனப் பல விடத்தும் வழங்குதலின் அவர் கருத்து அஃதன்றென்பது விளங்கும். ஆசிரியர் நச்சினார்க்கினியரும் கால்கோள் என்பதற்கு (தொல் புறத் 5) கல்லுறுத்து இயற்றுதற்குக் கால் கோடலும் எனவும், இது நட்டுக் கால் கொண்டது எனவும் ஓதுதலின் அவர் கருத்தும் அஃதன்றென்பது புலனாம்.
நீர்ப்படை - படிவமாகவைத்த கல்லை நீரில் மூழ்குவித்தல். இஃதொரு சடங்கு, குடமுழுக்குப் போன்று.
நடுதல் என்பது நடுகல் எனவும் நடுதற்காதை என்பது நடுகற் காதை எனவும் ஏடெழுதுவோராற் பிறழ எழுதப்பட்டன என நினைத்தற்கிடனுளது. ஆசிரியர் இளங்கோவடிகளார் கருத்தும் நடுதற் காதை என்பதற்கே பொருந்தும். பழைய உரையாசிரியர் இருவரும் நடுதற்காதை என்றே பாடங் கொண்டனர் என்று கருதவும் இடனுளது. தொல்காப்பியத்தில் நடுதல் என்றும், நடுகல் என்றும் பாட வேறுபாடு காணப்படுதலும் உணர்க.
எனவே, ஏனைய நான்கினும் கல் என்னும் சொல் தொக்கு நின்றாற் போலவே இதனினும் கல்நடுதல் என்பதில் அச் சொல் தொக்கு நின்றதாகக் கோடலே முறையாம். ஆராய்ந்து கொள்க.
(85) வாழ்த்து-கற்படிவமமைத்து நன்கலம் முழுவதும் பூட்டிப் பூப்பலி செய்து காப்புக் கடைநிறுத்தி வேள்வியும் விழாவும் நாள்தோறும் வகுத்துக் கடவுண் மங்கலம் செய்யப்பட்ட கண்ணகித் தெய்வம் விண்ணிடத்தே மின்னுக் கொடிபோல் கடவுள் நல்லணி காட்டிச் செங்குட்டுவனையும் நெடுஞ்செழியனையும் ஆங்கு வந்திருந்த ஏனைய அரசரையும் வாழ்த்தியது என்க. அடியார்க்குநல்லார் பெருங் கிள்ளியையும் என்பர். இஃது ஆராய்ச்சிக்குரியது.
(85) வரந்தருகாதை - அங்ஙனம் வாழ்த்திய தெய்வம் செங்குட்டுவன் முதலியோர்க்கு வரமருளிய காதையோடே என்க.
(86) மேலே (83) இவையனைத்துடன் ஈண்டுக் கூறப்பட்ட காட்சி முதலியனவும் வரந்தருகாதையோடு கூடிய (89) இவ்வாறைந்தும்- முப்பதும் என்றபடியாம்.
(87) உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் - நாடக வழக்கத்தால் உரைச் செய்யுள்களை இடையிடையே கொண்டுள்ளதும் நாடகத்திற்கும் இசைக்கும் உரிய பாடல்களையும் இயற்றமிழ்க்கேயுரிய செய்யுள்களையுமுடைய இக்காப்பியத்தை என்க.
(88) உரைசால் அடிகள் - புகழமைந்த அவ்விளங் கோவடிகளார் என்க.
(89) மதுரைக் கூலவாணிகன் சாத்தன் - இவர் மணிமேகலையென்னும் பெருங்காப்பியம் செய்த பெரும் புகழுடைய புலவராவார்.
இவரைச் சங்க நூல்களிற் காணப்படுகின்ற சீத்தலைச்சாத்தனார் என்பாரும் அவர் வேறு இவர் வேறு என்பாரும் இருதிறத்தார் உளர்.
(90) இது என்றது இதுகாறுங் கூறிய இப்பகுதி என்றவாறு. அஃதாவது நூன்முகத்தே நின்ற இவ்வுறுப்பு என்றவாறு.
பதிகத்தின் மரபினாற்செய்யப்பட்டது என்றவாறு. இப்பதிகம் அடிகளாரை யாண்டும் படர்க்கையிலேயே கூறுவதனால் இதனைச் செய்த சான்றோர் பிறர் என்பது தேற்றம். அவர் பெயர் முதலியன தெரிந்தில. அடிகளாரே இதனையும் செய்தவர் என்னும் கருத்தால் அடியார்க்கு நல்லார் கூறும் உரை பொருந்தா என்பது முன்னுங் கூறினாம், கடைப்பிடிக்க.
இனி, இதனை, சேரற்கும் அடிகட்கும் குறவர் குழீஇ வந்து வணங்கி போயது இறும்பூது இதனை நீ அறிந்தருள் என்று அரசனுக்குக் கூற அவனுழை யிருந்த சாத்தன் உரைப்போன் இவனென; வினைவிளைவு யாது என அரசன் வினவச் சாத்தன் விறலோய் கேட்டனன் யான் என ஆங்கு இவற்றைக் கேட்டிருந்த அடிகள் சாத்தனை நோக்கி யாம் இவற்றை உள்ளுறையாக்கிச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் ஓர் பாட்டுடைச் செய்யுள் நாட்டுதும் எனச் சாத்தன் அடிகள் நீரே அருளுக என்றாற்கு மங்கல வாழ்த்து முதலாக வரந்தரு காதை யீறாகக் கிடந்த இவ்வாறைந்தும் அடிகள் அருளச் சாத்தன் கேட்டனன் இது பதிகம் என இயைத்திடுக.
இனி இதன்கண் - பதிகத்தின் மரபு வருமாறு:-
பொதுவும் சிறப்பும் எனப் பாயிரம் இருவகைப்படும் என்ப. அவற்றுள் இஃது இந்நூற்கேயுரிய சிறப்புப் பாயிரமாம். பாயிரம் பதிகம் ஒருபொருட் கிளவிகள்.
ஆக்கியோன் பெயரே வழியே எல்லை
நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே
கேட்போர் பயனோ டாயெண் பொருளும்
வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே
எனவும்,
காலங் களனே காரணம் என்றிம்
மூவகை யேற்றி மொழிநரும் உளரே
எனவும் வரும் நன்னூற் சூத்திரங்களால் இப்பதிகத்தின் மரபு இவை என்றுணர்க.
இனி, இதனுள் நிரலே, குணவாயிற் கோட்டத்து அரசு துறந்திருந்த இளங்கோவடிகட்கு என்பதனால், இந்நூலாசிரியரின் சிறப்பும், பெயரும்; குன்றக் குறவர் கூடி... இறும்பூது போலும் அறிந்தருணீயென, அரசனுக்கு அறிவிப்ப அவனுழையிருந்த தண்டமிழ் ஆசான் சாத்தன் உரைப்போன்... கட்டுரை கேட்டனன் யானென அது கேட்ட அடிகள் அருள என்றதனால் வழியும் முடிகெழு மூவேந்தர்க்கும் உரியது என்றதனால் எல்லையும் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் என்றதனால் நூற்பெயரும் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்றமையான் இம்முத்தமிழுக்குமுரிய இலக்கண முணர்வோர் இந்நூல் கேட்டற்குரியார் என யாப்பும் கேட்போரும் அரைசியல் பிழைத்தோர்க் கறங் கூற்றாவதூஉம் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும், ஊழ்வினை உருத்து வந்தூட்டும் என்பதூஉம் என்றதனால் நுதலிய பொருளும் இம்மூன்று வாய்மைகளையும் இந்நூலின் வாயிலாய்த் தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லோர், உள நாள் வரையாது ஒல்லுவ தொழியாது செல்லுந்தேயத்துக் குறுதுணை தேடுதல் தேற்றமாதல், யாமோர் பாட்டுடைச் செய்யுள் நாட்டுதும் என்று அடிகளார் கூறுதலாற் போதருதலின் பயனும், சேரல் இளங்கோ அடிகட்கு எனவே, அவ்வரசன் காலமே இந்நூல் தோன்றிய காலம் எனக் காலமும், நாட்டுதும் என்பதற்கு உலகிற்குப் பயன்படச் செய்து நிறுத்துவேம் என்பது பொருளாகலின் அடிகளார் மக்கள்பால் வைத்த அருளே இது செய்தற்குக் காரணம் எனக் காரணமும், அடிகள் அருளக் கூலவாணிகன் சாத்தன் கேட்டனன் என்றதனால் அத்தண்டமிழாசான் தலைமை வகித்த சான்றோர் அவைக்களமே இந்நூல் அரங்கேறிய களம் எனக் களமும் ஆகிய பாயிரப் பொருள் பதினொன்றும் போந்தமையுணர்க.
செய்யுள்-சூட்டச் செந்தூக்கு: (அஃதாவது இடையிடையே குறளடியும் சிந்தடியும் விரவி ஈற்றயலடி மூச்சீர்த்தாய் முடிந்த ஆசிரியப்பா என்றவாறு.)
பதிகம் முற்றிற்று.
உரைபெறு கட்டுரை
1. அன்று தொட்டுப் பாண்டியனாடு மழை வறங்கூர்ந்து வறுமை யெய்தி வெப்புநோயுங் குருவுந் தொடரக் கொற்கையிலிருந்த வெற்றிவேற் நங்கைக்குப் பொற்கொல்லராயிரவரைக் கொன்று கள வேள்வியால் விழவொடு சாந்தி செய்ய நாடு மலிய மழை பெய்து நோயும் துன்பமு நீங்கியது.
2. அது கேட்டுக் கொங்கிளங் கோசர் தங்க ணாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய மழை தொழிலென்றும் மாறாதாயிற்று.
3. அது கேட்டுக் கடல்சூ ழிலங்கைக் கயவாகு வென்பான் நங்கைக்கு நாட்பலி பீடிகைக் கோட்ட முந்துறுத் தாங்கு அரந்தை கெடுத்து வரந்தரு மிவளென ஆடித்திங்களகவையி னாங்கோர் பாடி விழாக்கோள் பன்முறை யெடுப்ப மழை வீற்றிருந்து வளம்பல பெருகிப் பிழையா விளையுள் நாடாயிற்று.
4. அது கேட்டுச் சோழன் பெருங்கிள்ளி கோழியகத்து எத்திறத்தானும் வரந்தரு மிவளோர் பத்தினிக் கடவுளாகுமென நங்கைக்குப் பத்தினிக் கோட்டமுஞ் சமைத்து நித்தல் விழாவணி நிகழ்வித்தோனே.
1. அன்றுதொட்டு...........நோயுத்துன்பமு நீங்கியது
(இதன்பொருள்) அன்று தொட்டு - கல்லாக் களிமகன் ஒருவன் கையில் வெள் வாளெறியக் கோவலன் வெட்டுண்டு புண்ணுமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப, மண்ணகமடந்தை வான்றுயர் கூரக் காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனனாக அற்றைநாள் முதலாக; பாண்டியன் நாடு மழை வறம் கூர்ந்து - பாண்டியனுடைய நாட்டின்கண் மழையின்மையே மிகாநிற்றலாலே; வறுமை எய்தி-யாண்டும் விளைவுகுன்றி உயிர்களை வருத்தும் பசிப்பிணி முதலியவற்றிற்குக் காரணமான நல்குரவு வந்தெய்தி அது காரணமாக; வெப்பு நோயும் குருவும் தொடர - கொடிய தொழு நோயும் கோடைக் கொப்புளமும் இடைவிடாது மாந்தரை நலியா நிற்றலால்; கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன் - அப்பொழுது வடவாரியர் படைகடந்து தென்றமிழ் நாடொருங்கு காணப் புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் பின்னர் அப் பாண்டிய நாட்டிற் கரசுரிமையுடையனாய்க் கொற்கைக்கண் அரசு வீற்றிருந்த வெற்றீவேற் செழியன் என்னும் மன்னன் அந் நலிவு தீர்த்தற்பொருட்டு; நங்கைக்குப் பொற் கொல்லர் ஆயிரவரைக் கொன்று களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய-திருமா பத்தினியாகிய கண்ணகிக்குப் பொற்கொல்லர் ஒருபதினாயிரவரைப் பலியிட்டு அப்பலிக்களத்திலே வேள்வி செய்யுமாற்றால் விழாவெடுத்து அமைதி செய்தலாலே; நாடுமலிய மழை பெய்து நோயுந் துன்பமும் நீங்கியது- அவன் நாடானது அன்றுதொட்டு மிகவும் மழை பெய்யப்பெற்று முற் கூறப்பட்ட வறுமையும் நோய்களும் நீங்கப்பெற்றது என்க.
(விளக்கம்) நாடு நீங்கியது என இயையும். அன்றுதொட்டு என்றது சினையலர் வேம்பன் யாவதும் தேரானாகி.........கள்வனைக் கொன்று சிலம்பு கொணர்க எனக் காவலருள் கல்லாக் களிமகன் வாளால் எறிந்து கோவலனைக் கொல்ல அவன் குருதி நிலத்தின் மேற் பரந்த அன்றுதொட்டு என்பதுபட நின்றது என்க. வெப்பு நோய் - தொழுநோய் என்பது அடியார்க்கு நல்லார். குரு-கோடைக் கொப்புளம். இதனை இக்காலத்தார் அம்மைநோய் என்பர். கொப்புளிப்பான் என்பதுமது. கொற்கை பாண்டியனாட்டில் ஒரு பட்டினம். இவ்வுரை பெறு கட்டுரைக் கண் நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய எனவரும் சொற்றொடர் அறிஞருலகத்தைத் துன்புறுத்தும் என்பதில் ஐயமில்லை. அறிவிலா மாக்களுலகத்திற்குக் கழிபேருவகை செய்யும். எனவே, இவ்வுரை பெறு கட்டுரை என்னும் இப்பகுதி நாடெங்கணும் கண்ணகித் தெய்வத்திற்குக் கோயிலெடுத்து வழிபாடு செய்த பிற்காலத்தே கண்ணகி கதையைப் பொது மக்கட்குக் கூறிவந்த பூசகராற் செய்யப்பட்டு நூன்முகத்தே வைக்கப்பட்டது என்று கருத இடனுளது. இங்ஙனமே நூலினுள் காண்டத் திறுதிகளினும் நூலிறுதியினும் காணப்படுகின்ற கட்டுரைகளும் பிற்காலத்தே செய்யப்பட்டு நூலினுட் செருகப்பட்டன போலும். (முன்னுரையினை நோக்குக) இதன் பயன் ஆராய்ச்சியறிவில்லாத மாக்களை அத்தெய்வத்தினிடம் ஆற்றுப்படை செய்வதாகும் என்க. இவ்வாற்றான் யாமும் சாந்தி பெறுவோமாக. இதற்கு, அரும்பதவுரை யாசிரியர், உரைத்துப் போதுகின்ற கட்டுரை என்று கூறும் விளக்கம் ஒரு சான்றாகும். என்னை? இக் கட்டுரை வழிவழியாகக் கூறப்பட்டு வருவதொன்றென்பதே அவர் கருத்தாகலான் என்க.
2. அதுகேட்டு...........மாறாதாயிற்று
(இதன்பொருள்) அதுகேட்டு - வெற்றிவேற் செழியன் நங்கைக்குச் சாந்திசெய்து அவன் நாட்டின்கண் தீங்ககற்றி நன்மையை நிறுவிய அச் செய்தியைக் கேட்டு, கொங்கு இளங்கோசர் கொங்குமண்டிலத்து இளங்கோக்களாகிய கோசரும்; தங்கள் நாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய-கண்ணகிக்குத் தம்முடைய நாடாகிய கொங்குமண்டலத்திலும் விழாவெடுத்து அமைதிசெய்யா நிற்பவே; மழை தொழில் என்றும் மாறாதாயிற்று-அந்த நாடும் மழை வளம் பெற்று உழவு முதலிய தொழிலும் மாறாமல் வளமுடையதாயிற்று என்க.
(விளக்கம்) நாடு மழையும் தொழிலும் மாறாதாயிற்று என்க. மழை தொழில் பெய்தற்றொழில் என்பாருமுளர். இளங்கோசர் என்பது சாதிப்பெயர். இவரைக் குறுநில மன்னர் என்பது குறித்து இளங்கோசர் எனப்பட்டார் எனினுமாம்.
3. அதுகேட்டு...............நாடாயிற்று
(இதன்பொருள்) அதுகேட்டு - அச்செய்தியினைக் கேள்வியுற்று; கடல்சூழ் இலங்கைக் கயவாகு என்பான் - கடலாற் சூழப்பட்ட இலங்கையை ஆட்சிசெய்யும் கயவாகு என்னும் வேந்தான்; நங்கைக்கு நாள் பலி பீடிகைக் கோட்டம் முந்துறுத்து ஆங்கு - கண்ணகிக்கு நாள்தோறும் பூப்பலி செய்தற்குரிய பலிபீடத்தை முற்படச் செய்து பின்னர்க் கோயிலுமெடுத்து அந்நாட்டினும்; இவள் - இப்பத்தினித் தெய்வம்; அரந்தை கெடுத்து வரம்தரும் என - பசியும் பிணியும் முதலிய துன்பங்களைப் போக்கி யாம் வேண்டும் வரங்களையும் அளித்தருளும் என்று கருதி; ஆங்கு ஆடித்திங்கள் அகவயின் பாடி விழாக்கோள் பல் முறை எடுப்ப - அக்கோயிலின்கண் ஆண்டுதோறும் ஆடித் திங்களிலே அவ்வரசன் தன் உரிமைச் சுற்றத்துடன் சென்று அக்கோயிலின் மருங்கே படவீடமைத்துத் தங்கியிருந்து சிறப்புகள் பன்முறையும் எடாநிற்றாலாலே; மழை வீற்றிருந்து - மழை குறைவின்றி நிலை பெறுதலானே; வளம்பல பெருகி - வளங்கள் பலவும் மல்கி; பிழையா விளையுள் நாடாயிற்று. அந்நாடும் பொய்யாது விளையும் விளைவினையுடைய நாடாயிற்று என்க.
(விளக்கம்) அது கேட்டு என்றது இவ்வாறு பலரும் நங்கைக்குச் சிறப்புச் செய்து நலமெய்தும் அச்செய்தி கேட்டு என்றவாறு. கயவாகு - அக்காலத்தே இலங்கையை ஆட்சிசெய்த அரசன் என்பதும், அவன் சேரன் செங்குட்டுவன்பால் நட்புரிமையுடையவன் என்பதும் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயிலெடுத்து விழாச் செய்தபொழுது இவனும் அவ்விழாவிற்கு வந்திருந்தனன் என்பதும், அவ்விழாவின்கண் அத்தெய்வத்தின்பால் எம் நாட்டிற்கும் எழுந்தருள வேண்டும் என்று வரம் வேண்டி அங்ஙனமே வரமருளப் பெற்றவன் என்பதும்; அடிகளார்,
அருஞ்சிறை நீங்கிய வாரிய மன்னரும்
பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும்
குடகக் கொங்கரு கயவாகு வேந்தனும்
எந்நாட் டாங்க ணிமைய வரம்பனின்
நன்னாட் செய்த நாளணி வேள்வியில்
வந்தீ கென்றே வணங்கினர் வேண்டத்
தந்தேன் வரமென் றெழுந்த தொருகுரல் (157-164)
என வரந்தரு காதையி லோதுமாற்றானு முணர்க.
நாட்பலி பீடிகை - நாள்தோறும் பூப்பலி செய்தற் கியன்ற பீடம். அரந்தை - வறுமை, பிணி முதலியவற்றாலுண்டாகும் துன்பம்.
ஆடித்திங்கள் அகவயின் விழவெடுத்தான் - கண்ணகியார் அத்திங்களிலே தம் தெய்வத்தன்மை காட்டினமையைக் கருத்துட் கொண்டு என்க. என்னை?
ஆடித் திங்கட் பேரிருட் பக்கத்
தழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று
வெள்ளி வாரத் தொள்ளெரி யுண்ண
உரைசால் மதுரையோ டரைசுகே டுறுமெனும்
உரையு முண்டே (கட்டுரைகாதை - 133-7)
என மதுரைமாதெய்வம் கூறிற்றாகலின் அக்கால மதுவாதலுணர்க.
பாடி-படவீடு. பாடிவிழா என்றது அரசன் உரிமைச் சுற்றத்தோடு வந்து பாடிவீடமைத்து அதிற் றங்கியிருந்து செய்யும் விழா வென்க. இதனாற் போந்தது கயவாகு கண்ணகிக்கு விழாவெடுப்பதனை அத்துணைச் சிறப்பாகக் கருதினன் என்பதாம்.
இவ்வாறு அரசர்கள் பாடிவிழா வெடுப்பதனைப் பெருங்கதை உஞ்சைக் காண்டத்தினும் காண்க. பாடி-நகரி என்பர். (அடியார்க்)
4. அதுகேட்டு............நித்தல் விழாவணி நிகழ்வித்தோனே
(இதன்பொருள்) அதுகேட்டு - அச்செய்தியைக் கேள்வியுற்று; கோழியகத்து - அப்பொழுது சோழ நாட்டிற்குத் தலைநகராய்த் திகழ்ந்த உறையூரிடத்தே அரசு கட்டிலில் வீற்றிருந்த சோழன் பெருங்கிள்ளி (பெருநற்கிள்ளி) என்னும் சோழமன்னன்; இவள் எத்திறத்தானும் வரந்தரும் ஓர் பத்தினிக் கடவுள் ஆகும் என- இக் கண்ணகியாகிய நங்கை நமக்கு எவ்வாற்றானும் வரந்தருதற்கியன்றதொரு பத்தினிக் கடவுள் என மகிழ்ந்து; நங்கைக்கு - தன்னாட்டிலே தோன்றித் தெய்வமாகிய அக்கண்ணகிக் கடவுட்கு; பத்தினிக் கோட்டமும் சமைத்து - ஏனையோரினும் சிறப்பப் பத்தினிக்கோட்டமும் எடுப்பித்து; நித்தல் விழா அணி நிகழ்வித்தோனே - நாள்தோறும் வேள்வியும் விழாவும் நிகழ்வித்தனன் என்க.
(விளக்கம்) பெருங்கிள்ளி - இவன் புகார் நகரத்தைக் கடல் கொண்டமையால் ஆங்கிருந்துய்ந்துபோன நெடுங்கிள்ளியின் மகன் ஆவான். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கடவுட் படிவம் சமைத்து வேள்வியும் விழவுஞ் செய்த காலத்தில் புகார் நகரம் கடல் கொள்ளப் பட்டழிந்தது. இக்காரணத்தால் இவ்வுரைபெறு கட்டுரையில் புகாரில் கண்ணகிக்குக் கோயிலெடுத்த செய்தி காணப்பட்டிலது. மேலும், புகார்ச் சோழர் வழித் தோன்றலே ஈண்டுக் கூறப்படுகின்ற பெருங்கிள்ளி என்க. இவன் கண்ணகித் தெய்வம் தன்னாட்டிற்றோன்றிய வுரிமைபற்றி இத்தெய்வம் பொதுவாக ஏனைய நாட்டினர்க்கு வரந்தருதல் போலன்றி நமக்குப் பிறப்புரிமைபற்றிச் சிறப்பாகவும் வரந்தருதற்குரியது என்பான், எத்திறத்தானும் வரந்தருமிவள் ஓர் பத்தினிக் கடவுள் என்றான் என்க. காவிரி நாட்டின்கண் பசியும் பிணியுமின்மையின் முன் கூறப்பட்டவாறு கூறாது கோட்டம் அமைத்து நித்தல் விழாவணி நிகழ்வித்தோன் என்றுமட்டுமே கூறப்பட்டதென்க.
இனி உரைபெறு கட்டுரை-இவை முற்கூறிய கட்டுரைச் செய்யுள் எனவும் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் உரைசால் அடிகள் அருள என்றமையால், சிறுபான்மை இவ்வுறுப்புக்களும் சிலவரும் எனவும் கொள்க என்பர் அடியார்க்கு நல்லார். இதனால் இவ்வுரைபெறு கட்டுரை என்னும் உறுப்பும் இளங்கோவடிகளாரே இயற்றியது என்பது அடியார்க்கு நல்லார் கருத்தென்பது அறியப்படும்.
இதன்கண், பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று களவேள்வியால் சாந்தி செய்ய எனவரும் சொற்றொடரே அடிகளார் இதனைச் செய்திலர் என்பதற்குப் போதிய சான்றாம்.
உரைபெறு கட்டுரை முற்றிற்று.