ஐப்பசி ஸ்பெஷல் ! துலா ஸ்நானம் !
ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்று போற்றுவர். இந்த மாதத்தில் இரவு நேரமும் பகல் நேரமும் சமமாக இருப்பதால் இதற்கு ‘துலா(தராசு) மாதம் என்று பெயர். ஐப்பசி முதல் தேதி அன்று காவிரியில் நீராடுவது புண்ணியம் என்கின்றன ஞான நூல்கள். துலா மாதத்தில் இதர நதிகளும் புண்ய தீர்த்தங்களும் காவேரியில் சேர்ந்து விளங்குகின்றன. ஆதலால் அப்போது ஸ்நானம் செய்பவர்கள் பஞ்ச மஹா பாதகங்களிலிருந்தும் விடுபடுகின்றனர். அதில் ஸ்நாநம் செய்தவர்கள் அச்வமேத யாகம் செய்த பலனையும் அடைகின்றனர்.
துலா மாதத்தில் காவேரிக் கரையில் எவனோருவன் பித்ருக்களை உத்தேசித்து ச்ராத்தம், பிண்டதானம், தர்ப்பணம் இவற்றைச் செய்கிறானோ அப்படிச் செய்யப்பெற்ற அவை கல்ப கோடி வர்ஷபர்யந்தம் பித்ருக்களை த்ருப்தி செய்விக்க வல்லவையாகின்றன. ப்ரஹ்மா முதலான ஸகல தேவர்களும், ஸரஸ்வதி, கெளரி, லக்ஷ்மி, இந்த்ராணி முதலியவர்களும் அப்ஸர ஸ்த்ரீகளும் துலா மாதத்தில் ஸ்நாநம் செய்ய விரும்பி வருகின்றனர். காவேரிக் கரைகளில் பிறந்து வளர்ந்த பசு பக்ஷி முதலானவையும் அதன் காற்றினால் பரிசுத்தங்களாக ஆகி மோக்ஷத்தை அடைகின்றன என்றால் பக்தி ச்ரத்தையுடன் ஸ்நானம் செய்தவர்கள் அடையும் பலனைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?
மேலும் மஹான்களின் பெருமை, துளஸியின் மஹிமை, கங்கையின் ப்ரபாவம், துளஸியைக் கொண்டு செய்யப்படும் அர்ச்சனையின் வைபவம், ஸாளக்ராமத்தின் ஆராதன மஹிமை, காவேரியின் பெருமை இவற்றை உபதேசிக்கக் கேட்பவர்கள் மஹாபாக்கியசாலிகள். ஐந்மாந்தரங்களில் புண்யம் செய்தவர்களே காவேரியைக் காணும் பாக்கியத்தையும் அதில் ஸ்நாநம் செய்ய யோக்யதையையும் பெற்றவர்களாக ஆகின்றனர். ஸாமான்யமானவர்களுக்கு இது கிட்டாது. நதிகளில் மஹா விஷ்ணுவின் திருவடியிலிருந்து உண்டான கங்கை எப்படி உயர்ந்ததோ, புஷ்பங்களில் துளஸி எவ்வாறு மேற்பட்டதோ, வ்ரதங்களுக்குள் ஏகாதசி வ்ரதம் எப்படி உயர்ந்ததாக உள்ளதோ க்ருஹஸ்தர்கள் செய்ய வேண்டிய கர்மாக்களுள் பஞ்ச மஹாயஜ்ஞங்கள் எவ்வாறு உயர்ந்தவையோ, சுத்திகளுக்குள் மநஸ்ஸுத்தி எப்படி உயர்ந்ததோ, தேவதைகளுள் ஸ்ரீமந்நாராயணன் எவ்வாறு உயர்ந்தவராக விளங்குகிறாரோ அக்ஷரங்களுக்குள் ஓங்காரம் எவ்வாறு உயர்ந்ததோ, வேதங்களுள் ஸாமவேதம் எப்படி உயர்ந்ததாகக் கருதப் பெறுகிறதோ, பதினோரு ருத்ரர்களுக்குள் சங்கரம் எப்படி உயர்ந்தவராக உள்ளாரோ, ப்ராஹ்மண ஸ்த்ரீகளுள் அருந்ததி எவ்வாறு மேம்பட்டவளோ, ஸ்த்ரீகளுக்குள்மஹாலக்ஷ்மி எப்படி உயர்ந்தவளோ, தானங்களுக்குள் அந்நதானம் எப்படி உயர்ந்ததோ அதே போல் நதிகளுக்குள் உயர்ந்தது காவேரி நதி என்று புராணங்கள் கூறுகின்றன.
ஐப்பசி முதல் நாளன்று திருப்பராய்த்துறையிலும் ஐப்பசி கடைசி நாள் மயிலாடுதுறையிலும் நீராடுவது விசேஷமாகக் கருதப்படுகிறது. துலா மாதமாகிய ஐப்பசியில் பிரம்ம முகூர்த்தத்தில் காவிரி நதியில் நீராடினால், மஹா விஷ்ணுவின் அருள் கிட்டும். துலா மாதத்தில் சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை நேரத்திற்குமுன் காவிரியில் மும்மூர்த்திகளும், முப்பது முக்கோடி தேவர்களும், 68 ஆயிரம் ரிஷிகளும், முனிவர்களும் சித்தர்களும் நீராடுவதாக சாஸ்திரம் குறிப்பிடுகிறது.
துலா மாதத்தில் காவிரியில் நீராடுவது புனிதமானது என்று சாஸ்திரம் சொல்லும் அதே வேளையில் இயலாத நிலையில் ‘கடைமுகம்’ என்று சொல்லப்படும் ஐப்பசி முப்பதாம் தேதி நீராடி பலன் பெறலாம். அன்றும் நீராட முடியாதவர்கள், ‘முடவன் முழுக்கு’ என்று சொல்லப்படும் கார்த்திகை முதல் தேதி நீராடினாலும் புனிதம் பெறலாம் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.
‘ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது காசியில் ஓடும் கங்கை நதியில் நீராடுவதற்கு சமம்’ என்று புராணங்கள் கூறுகின்றன. ஏனெனில் ஐப்பசி மாதமானது துலா மாதத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான பாரதத்தில் ஓடும் நதி தேவதைகள் அனைத்தும் காவிரியில் நீராடி தங்களிடம் மானிடர்கள் கரைத்துச் சென்ற பாபக்கறைகளைப் போக்கிக் கொள்கின்றது என்று காவிரி மகாத்மியம் என்னும் நூல் கூறுகிறது.
மக்கள் தங்களுடைய பாவங்களை போக்க கங்கையில் நீராடி நீராடி கங்கைக்கே பாவம் அதிகமாக சேர்ந்து தோஷம் ஏற்பட தன் பாவங்கள் தீர என்ன செய்ய வேண்டும்? என்று விஷ்ணு பகவானிடம் கேட்டாள் கங்கை. அதற்கு ஸ்ரீ மஹா விஷ்ணு "நீ காவேரி நதியில் நீராடு உன் பாவம் நீங்கும்" என்றார்.
அன்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்யக்ஷேத்ரே விநச்யதி |
புண்ய க்ஷேத்ரே கிருதம் பாபம் வாரனாச்யாம் விநச்யதி |
வாரனாச்யாம் க்ருதம் பாபம் கும்பகோனே விநச்யதி |
கும்பகோனே க்ருதம் பாபம் காவேரி ஸ்நானே விநச்யதி |
என்று காவேரி ஸ்நானத்தின் மகிமையை வேதம் போற்றுகிறது.
அதன் படியே ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசையன்று கங்கா தேவி காவேரியில் நீராடி மக்கள் தன்னிடம் கரைத்த பாவங்களைப் போக்கிக் கொள்கிறாள் என்று புரான இதிகாசங்களில் போற்றப்படுகின்றது
துலா மாதத்தில் காவிரியில் ஒரு முறை நீராடுபவன் ஸ்ரீமன் நாராயணனாக மாறுகிறான். மற்ற விரதங்களில் ஏதாவது சிறு தவறு ஏற்பட்டாலும் அதற்கு பிராயச்சித்தம் செய்ய வேண்டும். ஆனால், காவிரி துலா ஸ்நானத்திற்கு அப்படி எதுவுமில்லை. மக்களுக்கு புத்தியும் முக்தியும் அளிக்கும் துலா மாதத்தில் காவிரியில் நீராடுபவர்கள் தன்னையும் தங்கள் குடும்பத்தினரையும் முன்னோர்களின் பாபங்களையும் போக்கிக் கொள்வதுடன் வளமான வாழ்வு காண்கிறார்கள் என்று ஞான நூல்கள் கூறுகின்றன. துலா காவிரி நீராடல் அழகு, ஆயுள், ஆரோக்கியம், செல்வம், கல்வி, மாங்கல்ய பாக்கியம், குழந்தைப்பேறு, வலிமை ஆகியவற்றை தரும். எனவே காவிரியை நினைத்தாலும் சிறப்பைக் கேட்டாலும் பாபங்கள் விலகும் என்றார் பிரம்மா நதி தேவதைகளிடம் ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடி நீர்க்கடன் செலுத்துவோரின் முன்னோர்கள் சொர்க்கத்தை அடைகிறார்கள். காவிரி தேவியை வணங்கி துதிப்பவர்கள் சொர்க்க லோகம் செல்லும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள். தன்னில் நீராடுபவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வளமான வாழ்வு தருபவள் என்கிறது காவிரி புராணம். நதி தேவதைகளும்,
தேவர்களும், மானிடர்களும் துலா மாதத்தில் காவிரியில் நீராடி தங்களிடம் உள்ள பாபங்களைப் போக்கிக்கொண்டதும் அந்தக் கறைகள் அனைத்தையும் காவேரி போக்கிக்கொள்ள திருமங்கலக்குடி திருத்தலத்திலும், மாயூரத்தில் (மயிலாடுதுறை) உத்தர வாகினியாக (தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாய்வது) இருந்து காவிரி போக்கிக்கொள்கிறாள் என்பது ஐதீகம்.
ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் அருள் புரியும் ரங்கநாதருக்கு ஐப்பசியில் தங்கக்குடங்களில் ஸ்ரீரங்கத்தின் தென்பகுதியில் உள்ள அம்மா மண்டபம் காவிரி நதிக்கரைப் படித்துறையிலிருந்து புனிதத் தீர்த்தத்தை சேகரித்து யானை மீது எடுத்து வந்து அபிஷேகம் செய்வர். மற்ற மாதங்களில் ஸ்ரீ ரங்கத்தின் வடக்கில் உள்ள கொள்ளிடத்தில் இருந்து வெள்ளிக் குடங்களில் தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் செய்வார்கள்.
துலா காவேரி மஹாத்மியம்:
ஆதியில் உமாதேவிக்கு ஸ்ரீ பரமேச்வரன் சொன்ன காவேரி மகாத்மியத்தை தேவ வன்மன் என்ற அரசனுக்கு சுமத் திரங்கி என்ற ரிஷி சொல்லத் தொடங்குகிறார். ஒரு சமயம் பார்வதி - பரமேச்வரர்கள் ஒரு நந்தவனத்தில் தங்கியிருந்த போது அங்கு பறவைகள் வடிவில் வந்த நதி தேவதைகள், துலா மாதத்தில் காவேரியில் ஸ்நானம் செய்து விட்டு அவ்விருவரையும் தரிசிக்க வந்தன. அவர்கள் வேண்டிய வரங்கள் எல்லாவற்றையும் தந்த ஈச்வரன், மேலும் கூறலானார்:
"கங்கைக்கு நிகரான காவிரியில் நீராடினாலும் தரிசித்தாலும் அதனை பக்தியுடன் தொட்டாலும் அதன் கரையில் தானம், தர்ப்பணம் செய்தாலும் எல்லா பாவங்களும் விலகி புண்ணியம் கிட்டும். இதன் கரைகளில் காசிக்கு சமமான ஸ்தலங்களும் இருக்கின்றன. நினைத்ததைத் தரும் சிந்தாமணியான காவேரியின் பெருமையை இன்னும் சொல்கிறேன் கேள்" என்றார். அஸ்வமேத யாகம் செய்யத் தொடங்கிய அரிச்சந்திர மகாராஜாவை, முனிவர்கள், பிராயச்சித்தமாக துலா மாதத்தில் காவிரியில் நீராடிவிட்டு வரச்சொன்னார்கள்.
நாத சந்மா என்பவன் பரம பதிவ்ரதையான அனவித்யை என்பவளுடன் காவேரி ஸ்நானம் செய்வதற்காகவும் இருவரும் மோக்ஷ சாம்ராஜ்யத்தைப் பெற வேண்டியும் கௌரி மாயூர க்ஷேத்திரத்தை நோக்கி வந்தான். முனிவர்கள் தங்கள் பத்திநிகளுடனும் புத்திரர்களுடனும் தங்கி ஹோமாக்னி செய்து பலவித தானங்களை செய்து வரும் அந்த மோக்ஷ புரியில் நாமும் தங்கி நற்கதி பெறுவோம் என்றான் நாதசன்மன். அப்படியானால் காவேரி மற்ற எல்லா தீர்த்தங்களை விட எவ்வாறு உயர்ந்தது என்று அனவித்யை கேட்க நாத சந்மனும் கூறத்தொடங்கினான்.
காவிரி உருவான கதை:
காவேரன் என்ற அரசன் தனக்குப் புத்திர பாக்கியம் இல்லாததால் பிரம்மாவைக் குறித்துத் தவம் செய்தான். பிரம்மாவானவர் "உனக்குப் புத்திர பாக்கியம் இல்லா விட்டாலும் ஒரு குழந்தையை அளிக்கிறேன்" என்று கூறி தன் மனத்தால் ஒரு பெண் குழந்தையை உண்டாக்கி அவனிடம் அளித்தார். காவேரி என்ற பெயரில் அவனிடம் வளர்ந்த அப்பெண் தகுந்த கணவனை வேண்டித் தவம் செய்யலானாள். பின்னர் அகஸ்த்திய முனிவரைக் கண்ட காவேரியானவள், இவரே தனது மணாளர் ஆவார் என்று நினைத்து லோபா முத்ரா என்ற பெயருடன் அவரை திருமணம் செய்து கொண்டவுடன் அவள் விரும்பியபடியே நதி ரூபமாகி பிற நதிகளுக்கும் மனிதர்களுக்கும் ஏற்பட்ட பாவங்களை நீக்கவும், மோக்ஷத்தை அளிக்கவும் மறு அம்சமாகத் திகழுமாறு அகஸ்த்ய ரிஷி அருளினார்.
துலாக் காவேரியின் நீர்த்திவலைகள் ஒவ்வொன்றும் புண்ணிய தீர்த்தமாகும். அதிலுள்ள மணல்கள் எல்லாம் தேவதைகள். அதனால் தான் உலகிலுள்ள புனித நதிகள் அனைத்தும் துலா மாதத்தில் காவேரியில் நீராடி மக்கள் தங்களிடம் கரைத்த பாவக் கறைகளைக் கழுவி புனிதமடைகின்றன. துலா மாதத்தில் காவேரியில் நீராடுபவர்கள் தங்கள் குடும்பத்தினரையும் சேர்த்து மூன்று கோடி உறவினர்களையும் கடைத்தேற்றுகிறார்கள். துலா மாதத்தில் காவேரியில் நீராடி முன்னோர்களுக்கு பிதுர் பூஜை செய்து அன்னதானம், ஆடை தானம் அளித்தால் பித்ருக்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள். அழகு, ஆயுள், ஆரோக்கியம், சொல்வளம், கல்வி, வாழ்வில் சுகம் என எல்லாம் கிட்டு மென்று துலாக் காவேரி மகாத்மியம் கூறுகிறது.
ஆதி, இடை, கடை என்னும் மூன்று அரங்கங்களையும் தன்னகத்தே கொண்டு, சதாசர்வ காலமும் இறைவன் நாராயணனின் திருவடியைத் தழுவி வணங்கும் காவேரியின் பேறும் பெருமையும் தன்னிகரற்றது. தட்சிணகங்கை என்று போற்றப்படும் காவேரிக்கு பொன்னி, விதிசம்பூதை, கல்யாணி, சாமதாயினி, கலியாண தீர்த்தரூபி, உலோபமுத்ரா, சுவாசாஸ்யாமா, கும்பசம்பவ வல்லவை, விண்டுமாயை, கோனிமாதா, தக்கணபதசாவணி என பல பெயர்கள் உள்ளன.
காவேரியில் துலா ஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதரை வழிபட்டதன் பலனாக சந்தனு மகாராஜா பீஷ்மரை புத்திரனாக அடைந்தார்.
அர்ச்சுனன், துலா ஸ்நானம் செய்து ஸ்ரீ ரங்கநாதப் பெருமாளை துதித்து சுபத்ராவை மணம் புரிந்தான் என்று புராணம் கூறுகிறது. முரன் முதலான அசுரர்களை அழித்ததால் மஹா விஷ்ணுவிற்கு பற்றிய #வீரஹத்தி தோஷம் போக்க காவேரியில் ஐப்பசி மாதம் நாக சதுர்த்தியன்று துலா ஸ்நானம் செய்து தோஷம் நீங்கப்பெற்றார் என்று துலாக் காவேரி மகாத்மியம் கூறுகிறது
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசையன்று கங்கா தேவி காவேரியில் நீராடி மக்கள் தன்னிடம் கரைத்த பாவங்களைப் போக்கிக் கொள்கிறாள் என்பது புராணம். ஐப்பசி முதல் தேதி திருச்சிக்கு அருகிலுள்ள திருப்பராய்த்துறையிலும், இரண்டாவது நீராடலை ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபம் படித்துறையிலும், கடைசி தேதியன்று மயிலாடுதுறை நந்திக் கட்டத்திலும் முழுக்குப் போட வேண்டும் என்பது ஐதீகம்.
தலைக்காவேரி, ராமபுரம், ஸ்ரீரங்கம், திருப்பராய்த்துறை, திருவானைக்காவல், சப்தஸ்தானம், திருவையாறு, புஷ்பாரண்யம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, மயிலாடுதுறை, கும்பகோணம், திருவிடைமருதூர் முதலிய காவேரி நீர்த்துறைகள் துலா மாதத்தில் நீராட சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.
துலாக் காவேரி ஸ்நானம் செய்பவர்கள், காவேரி நதிக்குப் பூஜை செய்து வழிபடுவதுடன் அருகில் அரசமரம் இருந்தால் அதற்கு நீர் வார்த்து அதை வலம் வந்து வணங்குவது புண்ணிய பலன் தரும். காவேரிக் கரையில் கோமாதா பூஜை செய்தால் மேன்மேலும் புனிதம் கிட்டும். துலா காவேரி ஸ்நானம் செய்யும் முன் தகுந்த புரோஹிதர்களை கொண்டு ஸ்நான ஸங்கல்பம் செய்துக்கொள்வது சிறந்தது. முடியாதவர்கள் கீழ்கண்ட ஸ்லோகத்தை கூறி துலா ஸ்நானம் செய்வது உசிதம்.
"கங்கேச யமுனே சைவ
கோதாவரி சரஸ்வதீ
நர்மதே சிந்து காவேரீ
ஜலேஸ்மின் சன்னிதிம் குரு"
ஐப்பசி மாதத்தில் துலா ஸ்நானம் போற்றப் படுவதுபோல் ஐப்பசி பௌர்ணமி
அன்னாபிஷேகமும் சிவாலயங்களில் சிறப்பிக்கப் படுகின்றன.