செவ்வாய், 9 ஜூலை, 2019

திரு முறைத்தலங்கள்

திருக்கச்சி ஏகம்பம்

ஏகாம்பரநாதர் திருக்கோயில்

(பெரிய) காஞ்சிபுரம்

தொண்டை நாட்டுத் தலம்

சென்னை, செங்கற்பட்டு, அரக்கோணம், வேலூர் முதலிய பல நகரங்களிலிருந்து வருவதற்குப் பேருந்து வசதிகள் உள்ளன.

சென்னையிலிருந்து காஞ்சிபுரத்திற்குப் பேருந்துகள் அடிக்கடி உள்ளன.

செங்கற்பட்டு - அரக்கோணம் இருப்புப் பாதையில், காஞ்சிபுரம் இருப்புப்பாதை நிலையம் - மத்தியில் உள்ளது.

காஞ்சிபுரம், வரலாற்றுக்கு முற்பட்ட நகரம் என்னும் சிறப்புடையது. கி.மு. 5- ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரம் சிறப்பாக இருந்த செய்தி, சீன யாத்ரிகர் யுவான்சுவாங் குறிப்பின் மூலம் தெரிய வருகின்றது. கி.மு. 2-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பதஞ்சலி, தம் பாஷ்யத்துள் காஞ்சியின் சிறப்பைக் கூறியுள்ளார்.

தொண்டை நாட்டின் தலைநகரமாக திகழும் காஞ்சிபுரம், A.H. 3ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த பல்லவர்களுக்குத் தலைநகராக விளங்கியது. சோழர்கள், விஜயநகர மன்னர்கள் ஆகியோர்களின் ஆட்சி முத்திரைகளும் இந்நகரில் பதிந்திருந்தன.

"கல்வியைக் கரையிலாத காஞ்சிமாநகர்" என்று அப்பர் தேவாரத்தில் புகழப்படும் இத்தலம் பண்டைக்காலத்தில் கல்விக்கு இருப்பிடமாக விளங்கிக் 'கடிகாஸ்தானத்தை'யும், புகழ் பெற்ற அறிஞர்களையும் பெற்றிருந்தது. ஹர்ஷர் காலத்தில் புகழுடன் விளங்கிய நாலாந்தாப் பல்கலைக் கழகத்தின் தலைவராக விளங்கிய தர்மபாலரும், பேராசிரியர் தின்னாகரும், பௌத்த சமயத் தத்துவ நூல்களை எழுதி உதவிய போதிதர்மரும் காஞ்சியைச் சேர்ந்தவர்களே.

அர்த்தசாஸ்திரம் எழுதிய சாணக்கியர், திருக்குறளக்கு உரை எழுதிய பரிமேலழகர், பொய்கையாழ்வார், வேதாந்த தேசிகர், வண்ணக் களஞ்சியம் நாகலிங்க முனிவர், சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான சியாமா சாஸ்திரிகள், இசைமேதை நயினாப் பிள்ளை முதலியவர்களைப் பெற்ற தலம் காஞ்சியே.

காஞ்சிக்குப் பக்கத்தில் உள்ள 'ஜின காஞ்சி' (ஜைன காஞ்சி) என்னும் பகுதி - தற்போது திருப்பத்திகுன்றம் என்று வழங்கும் பகுதி - பண்டை நாளில் சமணர்களுக்குக் (திகம்பரப் பிரிவினர்க்கு) கோட்டையாக விளங்கியதாகும். இங்குள்ள ஜைனக்கோயில் மிக்க சிறப்பு வாய்ந்தது. A.H. 14ஆம் நூற்றாண்டில் மல்லிசேனா, வாமனசூரி போன்ற சமணப் பெருமக்கள் காஞ்சியில் அனைவராலும் மதிக்கத்தக்கவர்களாக வாழ்ந்தனர். இவையெல்லாம் நோக்குமிடத்துக் காஞ்சிபுரம் சமயப் பொதுவிடமாகத் திகழ்ந்தது என்பதையும் அறிகின்றோம்.

வைணவத்திலும் காஞ்சி அழியாத சிறப்பைப் பெற்றுள்ளது. பொய்கையாழ்வாரும் வேதாந்த தேசிகரும் வாழ்ந்த பதி. ஸ்ரீ ராமாநுஜர் இளமைக் காலத்தைக் காஞ்சியில் கழித்து அத்திகிரி அருளாளனாகிய ஸ்ரீ வரதராஜப் பெருமாளின் பேரருளைப் பெற்றார். திருமழிசையாழ்வாரும் சில காலம் காஞ்சியில் வாழ்ந்தார் என்பதும், அவர் தொடர்பான 'சொன்ன வண்ணம் செய்த பெருமாள்' வரலாறும் அனைவரும் அறிந்ததே. வரதராஜப் பெருமாளுக்குத் தொண்டு செய்து வாழ்ந்து வந்த 'திருக்கச்சி நம்பிகள்' பெருமையை அறியாதார் யார்?

காஞ்சிபுரம் கோயில்கள் மலிந்த நகரம். எப்போதும் விழாக்கள் மலிந்து விளங்கும் நகரமாதலின் 'விழவறாக் காஞ்சி' என்று புகழப்படும் பெருமை பெற்றது,

பெரும்பாணாற்றுப்படை, தண்டியலங்காரம் முதலிய நூல்கள் இத்தலத்தின் புகழைப் பாடுகின்றன.

தற்கால உலகில் பட்டுப்புடவைகளுக்குப் புகழ் பெற்றது காஞ்சி. காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. பஞ்சபூதத் தலங்களுள் இது பிருதிவித் தலம்.

சக்தி பீடங்களுள் சிறந்ததாகிய காமகோடி பீடத்தலம் இதுவே. காமாட்சியம்பிகையின் ஆலயம் காமக்கோட்டம் எனப்படும். இறைவனிடம் இருநாழி நெல் பெற்று அம்பிகை முப்பத்திரண்டு அறங்களையும் செய்தருளிய அற்புதத்தலம். கந்தபுராணம் தோன்றிய பெருமையுடைய தலமும் இதுவே. இந்நூலாசிரியரான கச்சியப்ப சிவாச்சாரியார் தொண்டு செய்து வந்த குமரக்கோட்டமும் (முருகன் திருக்கோயில்) இங்குள்ளதே. கந்த புராணம் அரங்கேற்றப்பட்ட மண்டபம் இன்றும் இத்திருக்கோயிலில் கச்சியப்பர் பெயரில் நூலகமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

'நகரேஷ§காஞ்சி' 'முத்திதரும் நகர் ஏழில் முக்கியமாம் காஞ்சி' என்றெல்லாம் புகழ்ந்தோதப்படும் இத்தலத்திற்கு,

1. பிரளயசித்து 2. காமபீடம் 3. மும்மூர்த்திவாசம் 4. சிவபுரம் 5. விண்டுபுரம்
6. தபோமயம் 7. சகலசித்தி 8. கன்னிகாப்பு 9. துண்டீரபுரம் 10. சத்திய விரதக்ஷேத்திரம் 11. பூலோக கயிலாயம் 12. பிரமபுரம்

என்பன வேறு பெயர்கள். திருவேகம்பமும் குமரகோட்டமும் காமக் கோட்டமும் சோமாஸ்கந்த வடிவில் அமைந்திருப்பது இத்தலத்திற்குள்ள தனிச் சிறப்பாகும். தீர்த்தச் சிறப்பும் இதற்குண்டு. சர்வதீர்த்தத்தின் சிறப்பு அறியாதார் யார்? 'தரையிடங்கொளும் பதிகளிற் காஞ்சியந்தலம்' சிறந்தது என்பது கந்த புராணத் தொடராகும்.

சாக்கிய நாயனார், திருக்குறிப்புத் தொண்டர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் வாழ்ந்த தெய்வப் பதி.

கண் பார்வையிழந்த சுந்தரர் திருவெண்பாக்கத்தில் ஊன்று கோலைப் பெற்றவாறே இத்தலத்திற்கு வந்து காமக்கோட்டம் பணிந்து பின்னர்த் திருவேகம்பம் அடைந்து இறையருளால் இடக்கண்பார்வை பெற்ற அற்புதம் நிகழ்ந்த தலமிதுவே. உமை, திருமகள், வாணி ஆகிய மூவரும் முறையே வழிபட்ட ஏகம்பம், காயாரோகணம் கச்சபேசம், ஆகிய கோயில்கள் உள்ள தலம்.

இத்தலபுராணமாகிய காஞ்சிப் புராணம் - மாதவச் சிவஞான சுவாமிகளால் இயற்றப்பட்டது - தலபுராண வரலாற்றில் மிகச் சிறப்புடையதொரு இடத்தைப் பெற்றுள்ளதாகும். சிவஞான சுவாமிகள் காஞ்சியில் ஒரு பகுதியாக விளங்கும் பிள்ளையார் பாளையத்தில் மண்டபத் தெருவிற்குப் பக்கத்தில் உள்ள திருவாவடுதுறை ஆதீனக்கிளை மடாலயத்தில் தங்கிக் காஞ்சிப் புராணத்தை எழுதினர். பிரமன் வழிபட்ட தலமாகிய இக் காஞ்சி, நிலமகளின் உந்திதான் போன்றது என்று புகழப்படுகின்றது.

திசையனைத்தும் பக்தியுடன் போற்றிப் பணிந்து பரவப்படும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய சுவாமிகள் ஸ்ரீ மடம் உள்ள தலம் இதுவே. அருளழுகு தவவிழிகள் அமையப் பெற்று, அண்டி வரும் அணைவருக்கும் அருள்சொரிந்து, உலகு வாழத் தவமாற்றி, உயர்ந்தோங்கு தவந்தனில் ஒப்பில்லா மாட்சிமையுடையவர்களாகத் திகழ்ந்துவரும் காஞ்சி மாமுனிவர்களின் அருளாட்சி நனிசிறக்கும் அருமைத் தலமும் காஞ்சியே.

சைவ ஆதீனங்களுள் மிகப் பழமையான ஆதீனமாகவும் மெய்கண்டதேவர் சந்தான பீடமாகவும் பெருமையுடன் திகழ்கின்ற தொண்டை மண்டலாதீனத் திருமடாலயம் பெருமையுடன் திகழ்கின்ற தொண்டை மண்டலாதீனத் திருமடாலயம் இத்தலத்தில்தான் உள்ளது.

இத்தகு அளவற்ற சிறப்புக்கையுடைய இத்தலத்தில் கயிலாய நாதர் கோயில், வைகுந்தப் பெருமாள் கோயில், கச்சபேசம் முதலிய எண்ணற்ற கோயில்கள் இருப்பினும் பாடல்பெற்ற திருமுறைக் கோயில்கள் எனப்படுபவை ஐந்தேயாகும். அவை 1. திருவேகம்பம் 2. திருமேற்றளி 3. ஓணகாந்தன்தளி 4. கச்சிநெறிக்காரைக்காடு 5. அநகதங்காவதம் என்பன.

இவற்றுள் 'பெரிய கோயில்' என்றழைக்கப்படும் ஸ்ரீ ஏகாம்பர நாதர் திருக்கோயிலே 'கச்சித் திருவேகம்பம்' என்று போற்றப்படும் பெருமை வாய்ந்தது.

இத்திருக்கோயில் பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ளது. திருவேகம்பம், திருக்கச்சியேகம்பம், ஏகாம்பரநாதர் திருக்கோயில் எனப் பலவாறு அழைக்கப்படுவதம் இத்திருக்கோயிலே.

மாணிக்கவாசகர் இத்திருக்கோயிலைக் 'கச்சித் திருவேகம்பன் செம்பொற்கோயில்' என்று சிறப்பித்துப் பாடியுள்ளார். அருணகிரிநாதரின் திருப்புகழும் உள்ளது. முற்றத் துறந்த பட்டினத்தாரின் 'திருவேகம்பமுடையார் திருவந்தாதியும்' கந்த புராணமும் இத்தலத்தின் சிறப்பையும், மூர்த்தியின் புகழையும் பலவாறு புகழ்கின்றன. மணிமேகலை, தக்கயாகப் பரணி, மத்தவிலாசப்பிரகசனம், தண்டியலங்காரம் முதலிய நூல்களிலும், பன்னிரு திருமூறைகளில் பலவிடங்களிலும் இத்தலச் சிறப்பு பேசப்படுகின்றது.

இறைவன் - திருவேகம்பர், ஏகாம்பரநாதர், ஏகாம்பரேஸ்வரர்

இறைவி - ஏலவார்குழலி

தலமரம் - மா

தீர்த்தம் - சிவகங்கைத் தீர்த்தம்

மூவர் பாடலும் பெற்றது.

ஏகாம்பரேஸ்வரர் மூலவர் - மணல் (பிருதிவி) லிங்கம். உமாதேவியார் கம்பை நதிக்கரையில் மணலால் இலிங்கம் அமைத்து வழிபட, இறைவன் ஆற்றில் வெள்ளம் வருமாறு செய்ய, உமையம்மை இலிங்கத்தைத் தழுவிக் காத்தாள் என்பது தலவரலாறு. தழுவிய போது இறைவன் தன் திருமேனியில் அம்பிகையின் வளைத் தழும்பும் முலைச் சுவடும் ஏற்றுத் தழுவக் குழைந்தார். இதனால் தழுவக் குழைந்த பிரான்' என்றும் பெயர்.

"எள்கலின்றி இமையவர்கோனை ஈசனை வழிபாடு செய்வாள்போல்

உள்ளத்துள்கி உகந்து உமைநங்கை வழிபடச் சென்றுநின்றவாகண்டு

வெள்ளங்காட்டி வெருட்டிட வஞ்சி வெருவி ஓடித்தழுவ வெளிப்பட்ட

கள்ளக்கம்பனை எங்கள் பிரானைக் காணக்கண் அடியேன் பெற்றவாறே"

- சுந்தரர்

தற்போது 'கம்பா நதி' ஆலயத்துள் ஆயரக்கால் மண்டபத்திற்கு முன்னால் குளமாகிய நிலையில் உள்ளது.

தலமரம் மாமரம். ஆம்ரம் - மாமரம்.

ஏகம் + ஆம்ரம் = ஏகாம்ரம் - ஒற்றை மாமரம்

இம்மாவடியின்கீழ் இறைவன் எழுந்தருளியிருப்பதால் இறைவன், ஏகாம்அரநாதர் எனப் பெயர் பெற்றார். இப்பெரே ஏகாம்பரநாதர் என்று வழங்கலாயிற்று. "ஒரு மாவின்கீழ் அரையர்" என்னுந் தனிப்பாடல் தொடர் இங்கு நினைக்கத்தக்கது 'கம்பர்' என்பது தமிழில் வழங்கும் பெயர். ஊர்ப் பெயர் கச்சி, காஞ்சி என்றாலும் கோயிருக்குப் பெயர் ஏகம்பன் என்பதே.

காஞ்சிபுர மண்டலம் மூழுமைக்கும் தேவி, காமாக்ஷியே யாவாள். ஆதலின் காஞ்சியில் எச்சிவாலயத்திலும் தனியாக அம்பாள் (மூல) சந்நிதி கிடையாது. எனினும் ஒவ்வொரு கோயிலிரும் உற்சவமூர்த்தமாக ஓர் அம்பாள் சந்நிதி ஒரு பெயர் தாங்கி இருக்கும். அவ்வகையில் இத்திருக்கோயிலில் உள்ள அம்பாளுக்கு 'ஏலவார் குழலி' என்று பெயர். ஆயினும் தேவஸ்தானத்தின் பெயர் ஸ்ரீ காமாக்ஷயிம்பாள் சமேத ஸ்ரீ ஏகாம்பரநாதர் தேவஸ்தானம் என்றே வழங்கப்படுகிறது.

மிகப் பெரிய கோயில். உயர்ந்த ராஜகோபுரம் ஒன்பது நிலைகளுடன் கம்பீரமாகக் காட்சி தருகின்றது. நுழைவு வாயிலில் முன்னால் விநாயகரும் முருகப்பெருமானும் இடம் மாறிக் காட்சி தருகின்றனர். இக்கோபுரம் விஜயநகர மன்னரான கிருஷ்ணதேவராயரால் A.H. 1509ல் கட்டப்பட்டதாகும். 'ஒன்பது நிலை தமீஇ ஓங்கும் கோபுரம்' என்பது காஞ்சிப் புராணம்.

இவ்வாயிலில் நின்றால் தண்ணென்ற காற்று எப்போதும் வீசுவதை அனுபவிக்கலாம். இவ்வாறு அனுபவித்த புலவரொருவர்தம் தனிப் பாடலில் 'கம்பத்தடி காற்று' என்று புகழ்ந்துள்ளார்.

உள்ளே நுழைந்தால் நேரே தெரிவது வாகன மண்டபம். இதற்குச் சரபேச மண்டபம் என்று பெயர். திருவிழாக் காலங்களில் சுவாமி இங்கெழுந்தருளி, உபாசாரங்களை ஏற்று, வாகனங்கள் மீது ஆரோகணிந்து திருவீதியுலாவுக்குப் புறப்படுவார்.

(பெரும்பாலான தலங்களில் வாகனங்களின் அமைப்பு பக்கவாட்டிலேயே அமைந்திருக்கும். சுவாமி நேராக நோக்குவார். ஆனால் இங்குச் சுவாமியின் நோக்கும் வாகனங்களின் முகமும் ஒரே திசையில் - நேராகவே இருக்கும்) .

விசாலமான உள் இடம். இடப்பால் நந்தவனம். அடுத்து குளமாகத் தேங்கியுள்ள நிலையில் கம்பையாறு உள்ளது. நேரே தெரிவது ஆயிரக்கால் மண்டபம். சற்றுப் பழுதடைந்துள்ளது. இக்கோபுரம் பல்லவகோபுரம் எனப்படும். இக்கோபுர வாயிலில்தான், தல விநாயகராகிய 'விகடசக்கர விநாயகர்' உள்ளார்.

சலந்தரணை அழிக்கத் திருமால் இறைவனை வேண்டிப் பெற்ற சக்கராயுதத்தை, வீரபத்திரர்மேல் ஏவியபோது அவர் அணிந்திருந்த வெண்டலைமாலையில் உள்ள ஒருதலை அதை விழுங்கிவிட்டது, திருமால் பெரிதும் வருந்தினார். இதையறிந்த விஷ்வக்சேனர் வீரபத்திரரிடம் சென்று வேண்டி, அவர் சொல்லியவாறே பிரம கபாலம் சிரிக்கும் வகையில் விகடக் கூத்தாடினார். அக்கூத்தைக் கண்டு பிரமகபால சிரிக்க, சக்கரப்படை கீழே விழுந்தது. அப்போது அருகிலிருந்த விநாயகர், அதை விரைந்து எடுத்துக்கொண்டு, மறுமுறையும் விகடக்கூத்து ஆடுமாறு பணிக்க, அவரும் அவ்வாறே ஆடினார். மகிழ்ந்து விநாயகரும் சக்கரப்படையைத் தந்தருளினார். ஆதலின் விகடக் கூத்தினை விரும்பிக்கொண்டமையால் 'விகடசக்கர விநாயகர்' என்று பெயர் பெற்றார். விநாயகரை வணங்கிக் கோபுர வாயில் கடந்து வலப்பக்கமாகத் திரும்பிக் கோயிலக்கு வரவேண்டும். இதுவே முறையான வழியாகும். பிற்காலத்தில் திருப்பணிகள் நடந்த காலத்தில் அமைக்கப்பட்ட மதில் 'வளைவு' ராஜகோபுரத்திற்கு நேராக இருப்பதால் இன்று மக்கள் பெரும்பாலும் இவ்வளைவின் வழியாகவே செல்கின்றனர்.

(சுவாமி புறப்பாடு இன்றும் இம்முறையான வாயில் வழியாகவே நடைபெறுவதை நேரில் காணலாம்) கோயிலுக்கு முன்புள்ளது 'திருக்கச்சி மயானம்' 'கோயிலாகும். இது வைப்புத் தலமாகும். அப்பரால் வைத்துப் பாடப்பட்டதாகும். அப்பாடல் -

" மைப்படிச்த கண்ணாளும் தானும் கச்சி

மயானத்தான் வார்சடையன் என்னின் அல்லால்

ஒப்புடையன் அல்லன் ஒருருவனல்லன்

ஓரூரனல்லன் ஓர்உவமன் இல்லி

அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்

அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்

இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்

இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே"

எதிரில் வள்ளல் பச்சையப்பர் கட்டிய மண்டபம் உள்ளது. இம்மண்டபத் தூண் ஒன்றில் அவருடைய உருவமும் உள்ளது.

ஏகம்பத்தின் நாற்புறத்திலும் நான்கு கோயில்கள் உள்ளன. அவற்றுள் கச்சிமயானம் ஒன்று. மற்றவை வாலீசம், ரிஷபேசம், சத்தியநாதேசம் என்பன. மறுபுறம் சிவகங்கைத் தீர்த்தம் உள்ளது. அழகிய பெரிய குளம். நல்ல படித்துறைகள் உள்ளன. நாற்புறமும் கோபுரங்கள் உள்ளன, உயர்ந்துள்ள கொடி மரம் பணிந்து கோயிலுள் நுழையும்போது வாயிலில் இரு துவார பாலகர்கள் நம்மை வரவேற்கின்றனர். பக்கத்தில் உட்புறமாகக் கரிகாற்சோழனின் சிலையன்றுள்ளது.

உட்செல்லுகிறோம். வலப்பால் வாகன மண்டபம். இடப்பாலுள்ளது பவித்ர உற்சவ மண்டபம். இங்கிருந்து பார்த்தால் நேரே மூலவர் காட்சி தருகிறார். சற்று முன்னால் சென்று இடப்புறமாகத் திரும்பினால் அம்மூலையில் உள்ள தூணில் இறைவன், இறைவியைத் திருமணங்கொள்ளும் அழகான சிற்பம் உள்ளது, அதன் எதிர்த் தூணில் இறைவி, இறைவனின் கண்களைமூடும் சிற்பம் உள்ளது, இடப்பால் திரும்பிப் பிரகார வலம் வருகிறோம். வலப்பால் 'பிரளயகால சக்தி'யின் சந்நிதி உள்ளது, 'ஈறுசேர் பொழுதினும் இறுதியின்றியே காத்தூக காஞ்சியை மாறிலாது இருத்திடுகின்ற' அம்பிகை இவள். வழிபட்டுத் தொடர்கிறோம். பிரகாரம் மிக்க அழகுடையது. பக்கத்துத் தூண்களின் அமைப்பும் உச்சிப்பகுதியும் அற்புதமான அழகுடையவை, செல்லும்போதே வலப்பால் இருப்பது "சபாநாயகர்" மண்டபம். இது நாளடைவில் 'நாயகர்' மண்டபம் என்றாகி, இன்று மக்கள் வழக்கில் கொச்சையாக நாயர் மண்டபம் என்று வழங்குகிறது. இங்குத்தான் ஏகம்பரநாதரின் உற்சவத் திருமேனி உள்ளது. சந்நிதியுள் பெருமான் (இங்கு) சோமாஸ்கந்த வடிவில் காட்சி தருகிறார். இம்மூர்த்தம் இராசசிம்ம பல்லவனின் உபயமாகச் செய்துவைக்கப்பட்டது. இதற்குச் சான்றாக இதன் பின்னால் பிரபாவளி செருகுமிடத்தில் சிங்கம் உள்ளது. பின்னால் உமாமகேசுவரர், சந்திரசேகரர், ஸ்ரீ கண்டசிவாசாரியார் முதலிய உற்சவத் திருமேனிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. பெருவிழாக் காலங்களில் அபிஷேகங்களும் அலங்காரங்களும் செய்யப்படுவதும், பெருமான் உலாவுக்குப் புறப்படுகின்ற சிறப்புடையதும் இம்மண்டபத்தில்தான். இச்சந்நிதியில் இரு பக்கங்களிலும் பெரிய கண்ணாடிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் திருமேனியைப் பார்த்துத் தரிசிப்பதே தனியழகு, பிராகாரம் முழுவதிலும் இடப்பால் வரிசையாகச் சிவலிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன.

பஞ்சமுக விநாயகர் தரிசனம். இது பிற்காலப் பிரதிஷ்டை, (1-2-1979ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது) . அடுத்து வருவது மாவடி. தலத்திற்குரிய பெருமையுடையது. மாதவச் சிவஞான சுவாமிகள் "மருமலத்தனிமா" என்று இதைக் குறிப்பிடுகின்றார். மாவடியை வலம் வரும் அமைப்பில் பிரகாரமுள்ளது. துவார கணபதியையும், ஆறுமுகரையும் வணங்கி, மேலேறிச் சென்று இறைவனையும் இறைவியையும் தரிசிக்கலாம். பீடத்தின் அடியில் பஞ்சாக்கினி தவம், இலிங்கோற்பவ வரலாறு. அம்பிகை தழுவும் கோலம் முதலிய சிற்பங்கள் உள்ளன.

மாமரம் இத்தல மரம். இவ்விடம் மிகச் சிறந்த பிரார்த்தனைக்குரிய இடமாகும். திருமணங்கள் நடைபெறுமிடம். புத்திரப் பேறில்லாதவர்கள் அப்பேறு வேண்டி, தொட்டிலைக் கட்டி வேண்டிக் கொள்ளும் நிலையை இன்றும் காணலாம்.

வேதமே மாமரம்: வேதத்தின் நான்கு வகைகளே இம்மரத்தின் நான்கு கிளைகள். இதன் வயது புவியியல் வல்லுநர்களால் 3600 ஆண்டுகளுக்கு மேல் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இம்மரத்தின்மீது ஏறுவதுகூடாது. இயல்பாகவே பழுத்துக் கீழே விழும் கனிகளைச் சுவைத்தோர், நான்கு கிளைகளிலிருந்தும் கிடைக்கும் மாங்கனிகள் நான்கு விதமான சுவையுடையதாகச் சொல்கின்றனர்.

தவம் செய்த அம்பாளுக்கு, இறைவன் இம் மாவடியின் கீழ்தான் காட்சி தந்தருளினார். 'ஒருமாவின்கீழரையர்" என்பது தனிப்பாடல். இம்மாமரத்தை வலம் வரலாம். மாவடியைத் தொழுது பின் திரும்பி வந்து, பிரகாரத்தில் வலம் வரும்போது சஹஸ்ரலிங்க சந்நிதி பெரிய ஆவுடையாருடன் காட்சி தருகின்றது. அடுத்து வலப்பால் படிகளேறிச் சென்றால் 'ஏலவார் குழலி' - அம்பாளின் உற்சவச் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம். அழகான திருமேனி.

பக்கத்தில் 'மாவடிவைகும் செவ்வேள்' சந்நிதி. குமரகோட்டம் என்னும் பெயரில் தனிக்கோயில் முருகப் பெருமானுக்கு இத்தலத்தில் இருந்தாலும், அப்பெருமானின் அருள் வரலாற்றைக் கூறும் கந்தபுராணம் இத்தலத்தில் தோன்றினாலும், அதில் மூவிரு முகங்கள் போற்றி' எனும் பாடலில் வரும் "காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி" என்று புகழப்படும் தொடருக்குரிய பெருமான் இவரேயாவார்.

இச்சந்நிதியில் உற்சவத் திருமேனி (வள்ளி தெய்வயானையுடன் கூடி) முன்னால் இருக்க, பின்னால் இதே திருமேனிகள் சிலாரூபத்தில் உள்ளன. அடுத்த தரிசனம் நடராச சபை - இடப்பால் உள்ளது.

11-12-1961ல் புதியதாக நிறுவப்பட்டது. முன் மண்டபம் அழகாக உள்ளது. சபையில் அம்பலக் கூத்தருடன் சிவகாமியும் மாணிக்கவாசகரும் காட்சி தருகின்றனர். தரிசித்து வெளி வந்தால் பக்கத்தில் 'பைரவர்' சந்நிதி. அடுத்துள்ளது யாக சாலை. எதிரில் வலப்பால் நவக்கிரக சந்நிதி, கிரகங்கள் உரியவாகனங்கள் மீது அமர்ந்து உரிய திசைகளை நோக்கியிருக்கும் அமைப்பில் உள்ளன. நடுவில் சூரியன் உள்ளார்.

உள்வாயிலைத் தாண்டுகிறோம். இடப்பால் இத்தலத்து வாழ்ந்த நாயன்மார்களான திருக்குறிப்புத் தொண்டர், ஐயடிகள் காடவர்கோன், சாக்கிய நாயனார் ஆகியோர் திருமேனிகள் உள்ளன. அடுத்து நால்வர் சந்நிதி, தொடர்ந்து அறுபத்து மூவர் மூலத் திருமேனிகள், முடிவில் சந்தானாசாரியர்களும் உளர். எதிரில் வலப்பால் 'வெள்ளக் கம்பர்' சிவலிங்கத் திருமேனி உள்ளது. அடுத்துப் பிரகாரத்தில் இடப்பால் சிவலிங்க பாணங்கள் மட்டும் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, ஆறுமுகப்பெருமான் திருவுருவமும், பக்கத்தில் 'கள்ளக் கம்பர்' சிவலிங்கத் திருமேனியும், அடுத்து, 'மத்தள மாதவேசர்' சிவலிக்த் திருமேனியும் உள்ளன, சண்டேசவரர் உள்ளார். இத்திருக்கோயிலில் கருவறையில் கோஷ்ட மூர்த்தங்கள் ஏதுமில்லை. அடுத்த இடப்பால் வரிசையாக அறுபத்துமூவர் உற்சவத் திருமேனிகள் உள்ளன.

நேரே நிலாத்துண்டப் பெருமாள் சந்நிதி. இச்சந்நிதியின் பக்கத்தில் 'நல்ல கம்பர்' சிவலிங்கத் திருமேனியும், அடுத்து சற்று உள்ளடங்கிய சூரியன் திருவுருவமும் உள்ளன. நாடொறும் ஆலய பூஜை இச்சூரிய பகவான் வழிபாட்டிலேயே தொடங்குகின்றது.

(நிலாத்துண்டப் பெருமாள் சந்நிதி திருமங்கையாழ்வாரின் மங்களாசாசனம் பெற்றது. இங்கு, தீர்த்தம் தரப்பெற்றுச் சடாரியும் சிவாசாரியாரால் சார்த்தப்படுகிறது. இச்சந்நிதியில் சிலாரூபமான திருமேனி வழிபாட்டில் உள்ளது. (பக்கத்தில் உள்ள சுதைரூபம் வழிபாட்டில் இல்லை.)

மூலவரைத் தரிசிக்கச் செல்லுகிறோம். ஆலந்தானகந்த அமுத செய்த பிரான் பிருதிவி (மணல்) லிங்கமாகக் காட்சி தருகிறார். பாணம் சற்று கூசாகவுள்ளது. இதன்மீது தண்ணீர் படக்கூடாது. அபிஷேகங்கள் முதலிய அனைத்தும் ஆவுடையாருக்கே. இலிங்கபாணத்திற்குப் புனுகுச் சட்டம் மட்டும் சார்த்தப்படுகிறது. பின்னால் சுவரில் சோமாஸ்கந்தத் திருமேனி உள்ளது.

இலிங்க வகைகளுள் அம்பாள் அமைத்து வழிபட்ட இது 'தேவிக லிங்கமாகும்'. திங்கட்கிழமைதோறும் தல மகிமைத் தொடர்பான - அம்மை தழுவும் கோலமுடைய - கவசம் சார்த்தப்படுகிறது.

ஏலவார்குழலாள் என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற காலகாலனாம் கம்பன் எம்மானைக் கண்குளிரக் கண்டு மகிழ்கிறோம். தரிசனம் முடித்து பக்கவாயில் வழியாக இறங்கிச் சண்டேசவரரை வணங்க வழியுள்ளது. ராஜகோபுரம் தெற்கு நோக்கியிருப்பனம் மூலவர் கிழக்கு நோக்கியுள்ளார்.

மூலவரைத் தரிசித்து, சண்டேசவரரின் அருள் பெற்று வெளியே வந்து கொடி மரத்தின் முன்பு வீழ்ந்து வணங்கி வழிபாட்டை நிறைவு செய்கிறோம். வெளியில் பெரிய நந்தி உருவம் உள்ளது. இதற்குப் பக்கத்தில் 'வாலீசம்' தனிக் கோயிலாகவுள்ளது.

செயல் அலுவலரின் அலுவலகத்திற்குப் பக்கத்தில் குளத்தையட்டி 'ரிஷபேசம்' கோயில் உள்ளது.

கச்சிமயானத்தின் முன்புள்ள தூணில் ஆதிசங்கரர், தக்ஷிணாமூர்த்தி சிற்பங்கள் உள்ளன. சபாநாயகர் மண்டபத்தில் சந்நிதிக்கு எதிரில் உள்ள இருதூண்களில் ஒன்றில் அன்ன வாகனத்தில் ஒருபுறம் ரதியும் மறுபுறம் மன்மதனும், அவ்வாறே எதிர்த் தூணில் AO வாகனத்தில் ஒருபுறம் ரதியும் மறுபுறம் மன்மதனம் சிற்ப வடிவில் உள்ளனர்.

நவக்கிரகம் வணங்கி, உள்வாயிருக்கு அருகில் இறங்கும் படிகளில் இறங்கும்பாது ஒரு தூணில் நரசிம்மம் இரணியனைப் பிளக்கும் சிற்பமும் எதிர்த்தூணில் பிட்சாடனர் சிற்பமும் இருப்பதைக் காணலாம்.

நாடொறும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. பூஜை முறைகள் 'காமிக' ஆகம அடிப்படையில் அமைந்தவை. ரதசப்தமி நாளில் சூரிய ஒளி சுவாமி மீது படுதலைக் கண்டு தரிசிக்கலாம்.

திருப்பணிகள் 25 -10 - 76ல் தொடங்கப் பெற்று மகா கும்பாபிஷேகம் 1-2-79ல் நடைபெற்றது. இவ்விரு நிகழ்ச்சிகளுமே ஸ்ரீ காஞ்சி காமகோடி பிடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களால் நடத்தி வைக்கப்பட்டன. இக்கும்பாரிஷேகத்தை நகரத்தார்கள் செய்து தந்தது குறிப்பிடத்தக்கது.

இராசகோபுரமும் (1991ல்) திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இராசராச சோழதேவன், விசயகண்ட கோபாலதேவன், கம்பண்ண உடையார், அச்சுத உடையார், முதற்குலோத்துங்கன் மூன்றாம் குலோத்துங்கன் முதலியோர் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோயிலில் கிடைத்துள்ளன. இவற்றின் மூலம் 1. ஆராதனைக்கும் திருவமுதுக்கும் விடப்பட்ட நிபந்தங்கள். 2. கோயிலுக்குப் பசுக்களை வழங்கியது. 3. நந்தா விளக்கெரிய ஏற்பாடு செய்தது முதலிய செய்திகளை அறிகிறோம்.

இத்திருக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா மிகச் சிறப்பாக பதினான்கு நாள்களுக்கு நடைபெறுகின்றது. இவ்விழாவில் ஆறாம்நாள் விழாவாகப் பகலில் அறுபத்துமூவரும் இரவில் வெள்ளித் தேர்க்காட்சியும் நடைபெறுவதும், ஒன்பதாம் நாள் விழாவாக நடைபெறும் மாவடிச் சேவையும், பன்னிரண்டாம் நாள் விழாவாக நடைபெறும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் சிறப்பாகத் தரிசிக்கத்தக்கன. பதினான்காம் நாள் இரவில் திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்தின் சார்பில் நடைபெறும் திருமுறைப் பெருவிழா மிகச் சிறப்புடையதாகும். (சிவ சிவ ஒலி மண்டபக் கட்டளையும் ஸ்ரீ காசி மடத்தின் சார்பில் நடைபெறுகிறது) .

ஆனித்திருமஞ்சனம், ஆடிப்பூரம், நவராத்திரி, அன்னாபிஷேகம், சுந்தரர் இடக்கண் பெற்றது. பவித்ரோற்சவம், தைப்பூசம், கார்த்திகைச் சோமவாரங்கள், (கடைசி சோமவாரம் லட்சதீபம்) மாசி மகம், சிவராத்திரி, திருவாதிரை முதலியவை இத்திருக்கோயிலில் நடைபெறும் சிறப்பு விழாக்களாகும்.

யாத்ரிகர்களுக்குரிய வசதிகளாகத் தங்குமிடங்களும், உணவு விடுதிகளும் இந்நகரில் வசதியாக உள்ளன. அரசின் சுற்றுலாத்துறை பயண மாளிகையும் இங்குள்ளது.

மறையானை மாசிலாப் புன்சடை மல்குவெண்

பிறையானைப் பெண்ணொடு ஆணாகிய பெம்மானை

இறையானை ஏர்கொள் கச்சித் திருவேகம்பத் (து)

உறைவானை அல்லது உள்காது எனது உள்ளமே.

(சம்பந்தர்)

கரவாடும் வன்னெஞ்சர்க்கு அரியானைக் கரவார்பால்

விரவாடும் பெருமானை விடையேறம் வித்தகனை

அரவாடச் சடைதாழ அங்கையினில் அனல் ஏந்தி

இரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே

(அப்பர்)

பண்ணில்ஓசை பழத்தினில் இன்சுவை

பெண்ணொடு ஆண் என்று பேசற்கு அரியவன்

வண்ணமில்லி வடிவு வேறாயவன்

கண்ணிலுண்மணி கச்சியேகம்பனே.

(அப்பர்)

முந்தைகாண் மூவரினும் முதலானான்காண்

மூவிலைமேல் மூர்த்திகாண் முரகவேட்குத்

தந்தைகாண் தண்கடமா முகத்தினாற்குத்

தாதைகாண் தாழ்ந்து அடியே வணங்குவார்க்குச்

சிந்தைகாண் சிந்தாத சித்தத்தார்க்குச்

சிவன் அவன்காண் செங்கண்மால் விடையன்றேறும்

எந்தைகாண் எழிலாரும் பொழிலார் கச்சி

ஏகம்பன்காண் அவன்ª ன் எண்ணத்தானே.

(அப்பர்)

"ஆலந்தான் உகந்து அமுது செயதானை

ஆதியை அமரர் தொழுது ஏத்தும்

சீலந்தான் பெரிதும் உடையானைச்

சிந்திப்பார் அவர் சிந்தையுளானை

ஏலவார் குழலாள் உமைநங்கை

என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற

காலகாலனைக் கம்பன் எம்மானைக்

காணக்கண் அடியேன் பெற்றவாரே"

(சுந்தரர்)

காசணிமின்கள் உலக்கையெல்லாம் காம்பணிமின்கள் கறையுரலை

நேசமுடைய அடியவர்கள் நின்று நிலாவுக என்று வாழ்த்தித்

தேசமெல்லாம் புகழ்ந்தாடும் கச்சித் திருவேகம்பன் செம்பொற் கோயில்பாடிப்

பாசவினையைப் பறித்து நின்று பாடிப் பொற்சுன்னம் இடித்து நாமே

(மாணிக்கவாசகர்)

"ஏகம்பத்துறை எந்நாய் போற்றி

பாகம் பெண்ணுருவானாய் போற்றி"

(திருவாச, போற், திருவக)

"ஏகம்பத்தின் இயல்பாயிருந்து

பாகம் பெண்ணொடாயின பரிசும்"

(திருவாச, கீர்த்,திருவக)

மெய்த்தொண்டர் செல்லும் நெறி அறியேன் மிக நற்பணி செய்

கைத்தொண்டர் தம்மிலும் நற்றொண்டுவந்திலன் உண்பதற்கே

பொய்த்தொண்டு பேசிப் புறம்புறமே உன்னைப் போற்றுகின்ற

இத்தொண்டனேன் பணி கொள்ளுதியோ கச்சி ஏகம்பனே.

(திருவேகம்பர் திருவந்தாதி)

முன்னுறு பொருள்கட்கெல்லாம் முற்படு பழையாய் போற்றி

பின்னறு பொருள்கட்கெல்லாம் பிற்படு புதியாய் போற்றி

புன்மதியாளர் தேறாப் பூரண முதலே போற்றி

சின்மயத் திருவேகம்ப சிவசிவ போற்றி போற்றி

(காஞ்சிப்புராணம்)

என்நெஞ்சே உன்னை இரந்தும் உரைக்கின்றேன்

கன்னஞ் செய்வாயாகில் காலத்தால் - வன்னெஞ்சேய்

மாகம்பத்தானை யுரித்தானை வண்கச்சி

ஏகம்பத்தானை இறைஞ்சு.

(க்ஷேத்திரத் திருவெண்பா)

(ஐயடிகள் காடவர்கோன்)

பங்கயச் செங்கைத் தளிரால் பனிமலர் கொண்டருச்சித்துச்

செங்கயற் கண்மலைவல்லி பணிந்த சேவடி நினைந்து

பொங்கிய அன்பொடு பரவிப் போற்றி ஆரூரர்க்கு

மங்கை தழுவக் குழைந்தார் மறைந்த இடக்கண் கொடுத்தார்.

(பெ. புரா)

"அற்றைக் கிரைதேடி

அத்தத்திலு மாசை

பற்றித் தவியாத

பற்றைப் பெறுவேனோ

வெற்றிக் கதிர்வேலா

வெற்பைத் தொளைசீலா

கற்றுற்றுணர் போதா

கச்சிப் பெருமாளே"

(திருப்புகழ்)

"நாகம்பராந் தொண்டை நாட்டிலுயர் காஞ்சி

ஏகம்பமேவும் பேரின்பமே"

(அரும்பா, விண், கலி, வெ)

தொல்லை மறைதேர் துணைவன் பல்லாண்டு வரை

எல்லையிருநாழி நெற்கொண்டோர் - மெல்லியலாள்

ஓங்குலகில் வாழும் உயிரனைத்தும் ஊட்டுமால்

ஏங்கொலிநீர்க் காஞ்சியிடை

(தண்டியலங்கார மேற்கொள் பாடல்)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில்

காஞ்சிபுரம் - 631 502,

காஞ்சிபுரம் மாவட்டம்.

திங்கள், 8 ஜூலை, 2019

ஆதி சங்கரர் அருளிய நிர்வாணாஷ்டகம்!

சிவ வழிபாட்டின் உன்னத நோக்கத்துக்கு, பயனுக்கு நம் வேதாந்திகளின் முதல்வர் - மதச் சீர்திருத்தம் செய்தவரும் ஷண்மத ஸ்தாபகருமான ஆதி சங்கரர் அருளிய நிர்வாணாஷ்டகம் என்னும் பாக்களே சிறந்த சான்று. ஆதிசங்கரர் அருளிய ஆனந்த நிலையின் ஆறு சுலோகங்கள் : (நிர்வாணாஷ்டகம்)

1. மனமும் நானல்ல; புத்தியும் நானல்ல;
நான் என்ற அகங்காரமும் நானல்ல;
அறிவும் சக்தியும் நானல்ல.
உடலின் அங்கங்களும் நானல்ல; ஆகாயம், பூமியும் நானல்ல;
ஜோதியும் நானல்ல; காற்றும் நான் அல்ல.
ஆனந்த மயமான சிவனே நான் - நானே சிவன்.

2. உச் சுவாச, நிச் சுவாச மூச்சினால் ஆனவன் அல்ல, நான்.
கப, பித்தம் முதலிய ஏழு தாதுக்களால் ஆனவனுமல்ல; பஞ்ச (ஐந்து) கோசத்தால் ஆனவனும் அல்ல.
வாக்க நான் அல்ல, கை கால்களும் நான் அல்ல.
ஆனந்த மயமான சிவனே நான் - நானே சிவன்.

3. துவேஷம் எனக்கில்லை; ராகமும் (அன்பும்) எனக்கு இல்லை. லோபமும் எனக்கில்லை; மோகமும் எனக்கில்லை.
மதமும் எனக்கில்லை, மாத்சர்யமும் (சினமும்) எனக்கில்லை, தர்மத்துக்கும் தொடிசு இல்லை, சம்பத்துக்கும் சம்பந்தமில்லை.
ஆனந்தமயமான சிவனே நான் - நானே சிவன்.

4. புண்ணிய பாவமும் எனக்கேது? ஓதுவது, தீர்த்தாடனம் எனக்கேது? வேதம், வேள்வி எனக்கேது? சுகம் ஏது? துக்கம் ஏது?
ஹவிஸ் நானல்ல; அனுபவிக்கிறவனும் நானல்ல; அனுபவிக்கப்படுபவனும் நானல்ல!
ஆனந்தமயமான சிவனே நான்; நானே சிவன்.

5. மிருத்யுவிடம் (மரணத்திடம்) எனக்குப் பயமில்லை. ஜாதி வித்தியாசம் எனக்கில்லை.
தகப்பனும் இல்லை; தாயும் இல்லை; பிறவியும் எனக்கில்லை;
பந்துவும் இல்லை; சினேகிதனும் எனக்கில்லை. ஆசானும் இல்லை; சிஷ்யனும் எனக்கில்லை. ஆனந்தமயமான சிவனே நான் - நானே சிவன்.

6. சஞ்சலம் இல்லாதவன்; உருவங்களால் கட்டுப்படாதவன்; இந்திரியங்கள் அனைத்தையும் ஜயித்தவன்; பற்றை அறவே துறந்தவன்; எனக்கு முக்தியே.

பந்தமோ விஷயமோ இல்லை. ஆனந்தமய சிவனே நான் - நானே சிவன். சொல்லும் அதன் பொருளும் போல் இணைபிரியாத ஜகத்துக்கே தாய் தந்தையராக விளங்கும் பார்வதி பரமேசுவரரை நான் வணங்குகிறேன். சொல்லும் அதன் பொருளும் நான் நன்றாக அறிவதற்கு அருள வேண்டும்.
ஸ்ரீ மஹாலஷ்மியை தோத்திரம் செய்வதன் மூலம் சர்வ கார்ய ஸித்திகள் ஸ்ரீ மஹா லஷ்மித் தேவியைத் தங்களுடைய இஷ்டத் தெய்வமாகக் கொண்டு உபாசித்து வருபவர்கள் அநேகம் பேர். அவளுக்குரிய சில பவித்திரமான மந்திரங்களை ஜபிப்பதன் மூலமாக அவளுடைய அருளை, அவளை ஆராதிப்பவர்கள் அடையலாம். அத்துடன் சகல கார்யங்களிலும் சகல விதமான சித்திகளையும் அடையலாம். இவ்வாறு சித்தி பெறுவதற்குரிய மந்திர மார்க்கங்களை அனுசரித்து எப்படிப் பலன் பெறலாம் என்பதைக் காணலாம்.

1. அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அடைவதற்கு . . .

கீழ் வரும் மந்திரத்தினைத் தினந்தோறும் காலையில் எழுந்து இருபத்து ஏழு தடவை ஜபம் செய்யவும்.

மந்திரம் : மஹா லக்ஷ்மீர் மஹாகாளீ மஹாகந்யா ஸரஸ்வதீ
போக வைபவ ஸந்தாத்ரீ பக்தானுக்ரஹ காரிணீ

2. எல்லாவிதப் பயங்களும் ஒழிய கீழ் வரும் மந்திரத்தைத் தினந்தோறும் மாலையில் பனிரெண்டு தடவை ஜபம் செய்யவும்.

மந்திரம் : பத்ரகாளீ கராளீ ச மஹாகாளீ திலோத்தமா
காளீ கராள வக்த்ராந்தா காமாக்ஷீ காமதா ஸுபா

3. ஏதாவது ஒரு காரியத்தைச் செய்ய எண்ணும் போது அதில் வெற்றி கிட்ட வேண்டும் என்றால் கீழ் வரும் மந்திரத்தைத் தாங்கள் எந்தக் காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணினார்களோ அந்தக் காரியத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் தினந்தோறும் பத்துத் தடவை ஜபம் செய்து வரவும்.

மந்திரம் : ஜயா ச விஜயா சைவ ஜயந்தீ சாபராஜிதா
குப்ஜிகா காளிகா ஸாஸ்த்ரீ வீணா புஸ்தக தாரிணீ

4. எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபட கீழ் வரும் மந்திரத்தைக் காலையில் எழுந்தவுடன் பதினெட்டுத் தடவை. தினந்தோறும் ஜபிக்கவும்.

மந்திரம் : பிப்பலா ச விஸாலாக்ஷீ ரன்க்ஷக்க்நீ வ்ருஷ்டி காரிணீ
துஷ்ட வித்ராவிணீ தேவீ ஸர்வோபத்ரவ நாஸிநீ

5. கல்வியில் வல்லமை பெற கீழ் வரும் மந்திரத்தைக் காலையில் எழுந்தவுடன் பனிரெண்டு தடவை ஜபிக்கவும்.

மந்திரம் : அர்த்த நாரீஸ்வரி தேவீ ஸர்வ வித்யா ப்ரதாயிநீ
பார்கவீ பூஜுஷீ வித்யா ஸர்வோபநிஷ தாஸ்திதா

6. ஒன்று மாற்றி ஒன்றாகக் கஷ்டங்கள் வந்து கொண்டே இருந்தால் கீழ் வரும் மந்திரத்தைத் தினந்தோறும் நூற்றியெட்டுத் தடவை ஜபம் செய்து வந்தால் கஷ்டங்கள் நிவர்த்தியாகும்.

மந்திரம் : கேதநீ மல்லிகா ளஸோகா வாராஹீ தரணீத்ருவா
நாராஸிம்ஹீ மஹோக்ராஸ்யா பக்தாநா மார்தி நாஸிநீ



திருமணத்தின் போது சொல்லப்படும் சப்தபதி மந்திரங்கள்...
பாக்கியம் உள்ளவர்கள் மட்டுமே இதை முழுவதும் படிப்பார்கள்....

ஸகா! சப்தபதா! பவ ஸாக்யோவ்! சப்தபதா! பாபூவா!
என்னுடன் ஏழு அடிகள் எடுத்து வைத்து நீ என் சிறந்த தோழி ஆவாய்.

ஸக்யம் தே கமே யம் ஸக்யாத் தே மாயோஷம் ஸகயன் மே!
நாம் இணைவது தெய்வத்தின் ஆணையாகக் கருதுவதால், இந்த பந்தத்தில் இருந்து நான் என்றும் விடுபடமாட்டேன்.

மாயோஷ்ட சமயாவ சமயாவ சங்கல்பாவஹை சம்ப்ரியோவ்
அன்போடும் பாசத்தோடும் இணைந்து நாம் எல்லாச் செயல்களையும் இணைந்தே செய்வோம்
ரோசிஷ்ணு சுமனஸ்யமநோவ் இஷாமூர்ஜம் அபி ஸ்வசாநோவ்
நாம் எண்ணத்தாலும் செயலாலும் நண்பர்களாக இருப்போம். நம் கடமைகளையும் கர்மாக்களையும் இணைந்தே செய்வோம்

மனக்ஹும்சி சம்வ்ரதாஸ் ஸ்மு சித்தானி ஆகாரம் சத்வமாசி
நீ பாடல் எனில் நான் இசையாக இருக்கிறேன், நீ இசை எனில் நான் பாடலாக இருக்கிறேன்.

அமூஹம் அமூஹமாஸ்மி ஸா த்வம் த்யோவ்றஹம்
நான் ஆகாசமாக இருக்கிறேன் நீ பூமியாக இருக்கிறாய்

பருத்திவீ தவம் ரேதோ அஹம் ரேதோ பிருத்வம் மனோஹமஸ்மி
நான் செயலின் ஆதாரமாக இருக்கிறேன் நீ செலுத்தும் ஆற்றலாக இருக்கிறாய்

வாக் தவம் ஸாமா ஹம் அஸ்மி ருக்த்வம் சாமாம்
நான் எண்ணங்களாக இருக்கிறேன் நீ அதைச் சொல்லும் வாக்காக இருக்கிறாய்

அனுவ்ரதா பாவ பும்சே பும்சே புத்ராய வேத்தவை
நீ வார்த்தைகளாக இருக்கிறாய் நான் அதன் பொருளாக (அர்த்தம்) இருக்கிறேன்

ஸ்ரீயை புத்ராய வேத்தவை ஏஹி ஸூந்ரூரூதே||
நீ உன் அன்பான வார்த்தைகளால் என் வாழ்நாட்களை நிரப்பு, என் ஆற்றலாய் இருந்து நம் வாழ்வை மகிழ்ச்சியால் செழிக்கச் செய்வாயாக, நம் குடும்பம் குழந்தைகளால் செழித்து வளர உதவுவாயாக.
============================================
முதலடி: ஏகமிஷே விஷ்ணுத்வ அன்வேது
தெய்வ சாட்சியாக எடுத்து வைக்கும் முதல் அடி

இரண்டாவதடி: த்வே ஊர்ஜ்வே விஷ்ணுத்வ அன்வேது
உனக்கும் நம் சந்ததிகளுக்கும் அளவில்லாத உணவுகளைக் கொடுக்க கடமைப்படுகிறேன். உனக்கு அளவில்லாத ஆற்றலும் ஆரோக்கியமும் அளிக்க உறுதிகொள்கிறேன்

மூன்றாமடி: த்ரீணீ வ்ருத்தவ விஷ்ணுத்வ அன்வேது
வேதங்களில் சொன்னபடி உன் வாழ்நாள் முழுதும் உன் கடமைகளை பூர்த்தி செய்ய நான் துணையிருக்க கடமைப்படுகிறேன். உன் விரதங்களை(கடமை) அனுஷ்டிக்க துணையிருப்பேனென உறுதிகொள்கிறேன்

நாலாமடி: சத்வாரி மாயோ விஷ்ணுத்வ அன்வேது
நீ வாழ்நாள் முழுதும் மகிழ்ந்திருக்கச் செய்ய கடமைப்படுகிறேன்.உனக்கு மகிழ்ச்சியைத் தருவேனென உறுதிகொள்கிறேன்

ஐந்தாமடி: பஞ்ச பசுப்ய: விஷ்ணுத்வ அன்வேது
நீ உன் வீட்டில் வளர்க்கும் செல்லபிராணிகளுக்கும், பசுக்களுக்கும், பயிர்களுக்கும் பாதுகாப்பாயிருந்து அவை பெருகி வளம் கொழிக்கச் செய்யவும் துணையிருக்க கடமைப்படுகிறேன். நீ பராமரிக்கும் செல்லப்பிராணிகள், பசுக்கள் போன்றவை பெருகத் துணையிருப்பேனென உறுதிகொள்கிறேன்.

ஆறாமடி: சத்ரு துப்யா: விஷ்ணுத்வ அன்வேது
மழை வெயில் பனி போன்ற எல்லா காலங்களிலும் நீயும் நம் சந்ததியினரும் பாதுகாப்பாக இருக்கத் துணையிருக்க கடமைப்படுகிறேன்.உனக்கு துன்பம் வராமல், எல்லா காலங்களிலும் காப்பேன் என உறுதிகொள்கிறேன்.

ஏழாமடி: சப்த சப்தப்யா: விஷ்ணுத்வ அன்வேது
அக்னி வளர்த்து நீ செய்யும் செயல்கள் வெற்றிபெற துணையிருக்கவும், உனக்கு இடைஞ்சல்கள், தீங்கு நேராமல் காக்கும்படி கடமைப்படுகிறேன்.நீ அக்னி வளர்த்து செய்யும் செயல்கள் எல்லாவற்றிற்கும் இடைஞ்சலில்லாமல் பார்த்துக் கொள்வேன் என உறுதிகொள்கிறேன்.
========================================
இருவரும் சொல்வது
========================================

ஓம் ஏகோ விஷ்ணுஜர்கத்ஸ்வரம், வ்யாஸம் யேன சராசரம்! ஹ்ருதயே யஸ்ததோ யஸ்ய! தஸ்ய ஸாக்ஷி ப்ரதீயதாம்!

மணமகன் சொல்வது: என் இணையே! நம் ஹ்ருதயபூர்வ அன்பினால் இணைந்து இந்த முதல் காலடி எடுத்து வைக்கிறோம். நீ நம் ஆரோக்கியத்திற்கு உகந்த உணவுகளைச் சமைப்பாயாக. என் செயல்பாடுகள் ஒவ்வொன்றிற்கும் உன் துணையையும் வேண்டுகிறேன். நீ நம் குடும்ப மேன்மைக்கு உதவியாய் இருப்பாயாக. நீயும் நம் சந்ததிகளும் மகிழ்வுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டிய செல்வ-நலன்களுக்காக உழைத்து உங்களைப் பேணுவேன் என்று உறுதி கூறுகிறேன். நீ என்னைப் பேணுவாயாக.

ஓம் இஷ ஏகபதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வானயுது புத்ரான் வின்தாவஹை! பஹூம்ஸ்தே ஸந்து ஜரதஷ்டய:

மணமகள் சொல்வது: உன்னிடம் நானும் அன்பினால் பணிந்து இணைகிறேன். நீ உன் வீட்டின் பொறுப்புக்கள் அனைத்தையும் என்னிடம் அளித்துவிடு. உனக்கான உணவை நானே தருகிறேன். நீ நம் குடும்பத்திற்காக ஈட்டிவரும் செல்வங்களை பேணி வளர்த்து செழிக்கச் செய்கிறேன் என்று உறுதி கூறுகிறேன். நம் குழந்தைகளும் நாமும் ஆரோக்கியத்துடனும் மகிழ்வுடனும் இருக்க பார்த்துக்கொள்ளும்படி நீ என்னைப் பேணுவாயாக.

ஓம் ஜீவாத்மா பரமாத்மா ச, ப்ருத்வி ஆகாஷமேவ ச! சூர்யசந்த்ரத்வயேமர்த்தயே, தஸ்ய சாக்ஷி ப்ரதீயதாம்!!

அன்பே! ஜீவனும் ஆத்மாவும் போல என்னில் இரண்டரக் கலந்த நீ, என்னோடு இரண்டாமடி எடுத்து வைத்து விட்டாய். பூமி ஆகாசத்தை நிரப்பி, ஆகாசத்தின் இருப்பைக் குறிப்பது போல, என் இதயத்தை உன் அன்பின் ஆற்றலால் நிரப்பி உறுதியாக்கு. உன் மகிழ்ச்சியாலேயே என் இதயம் உறுதியாகும்.அப்போதுதான் நானும் மகிழ்ந்திருப்பேன். நாம் இணைந்து நம் குடும்பத்தையும் குழந்தைகளையும் காப்பாற்றுவாயாக.

ஓம் ஊர்ஜே த்விபதீ பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வானயு புத்ரான் வின்தாவஹை, பஹூம்ஸ்தே ஸந்து ஜரதஷ்ட்ய:!!

என் அன்பே! நீ துக்கமடைந்திருக்கும்போது, உன் இதயத்தை என் அன்பின் ஆற்றலால் நிரப்புவேன். நீ சந்தோஷமாயிருக்கும்போது நானும் மகிழ்ந்திருப்பேன். உன்னை என் அன்பான வார்த்தைகளால் மகிழ்வுறச் செய்வேன் என்று உறுதிகொள்கிறேன். நம் குடும்பத்தையும் குழந்தைகளையும் உன் மனைவியாக உன்னோடு இணைந்து காப்பேன் என்று உறுதிகூறுகிறேன்.

ஒம் த்ரிகுணாஷ்ச த்ரிதேவாஷ்ச, த்ரிசக்தி: சத்பராயண:!! லோகத்ரயே த்ரிஸந்த்யாயா: தஸ்ய ஸாக்ஷீ ப்ரதீயதாம்!

அன்பே! இப்போது என்னோடு மூன்றடிகள் நடந்துவிட்டாய். மங்களங்கள் நிறைந்த உன் கரங்களைப் பற்றிய எனக்கு இந்தப் புண்ணியத்தால் செல்வச் செழிப்பு நிறைந்து வளம் பெருகப்போகிறது. இன்றிலிருந்து உன்னைத் தவிர மற்ற பெண்கள் அனைவருமே என் தாய்கும் சகோதரிக்கும் ஒப்பாகக் கருதுவேன். நம் குழந்தைகளுக்கு கல்விச்செல்வத்தை நாம் இணைந்து அளிக்கலாம் கல்வி செல்வம் பெருகி அவர்கள் நீடூழி வாழட்டும்.

ஓம் ராயஸ்போஷாய த்ரிபதீ பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வானயு புத்ரான் வின்தாவஹை, பஹூம்ஸ்தே ஸந்து ஜரதஷ்ட்ய:!!

அன்பே! என் ஹ்ருதயபூர்வமாய் உன்னை விரும்புகிறேன், என் கணவனாக வரித்து உன் நலனையே குறித்திருப்பேன். மற்ற ஆண்கள் அனைவருமே என் தந்தைக்கும் சகோதரனுக்கும் ஒப்பாகக் கருதுவேன். நீயே என் மகிழ்ச்சியாக இருக்கிறாய்.

ஓம் சதுர்முகஸ்த்தோ ப்ரம்மா, சத்வாரோ வேதஸம்பவா: சதுர்யுகா: ப்ரவதந்த்ரே தேஷாம் சாக்ஷீ ப்ரதீயதாம்!!

அன்பே! என் பூர்வபுண்ணியங்களின் பலனாகவே உன்னோடு இந்த நான்காம் அடி எடுத்து வைக்கிறேன். என் வாழ்வில் சர்வமங்களங்கள் உன்னோடு வருகின்றது. நீ எனக்கு கர்மாக்கள் செய்யும் தகுதியுடைய புண்ணியத்தை தருகிறாய். நமக்கு செரிந்த அறிவும், பணிவும், மேன்மையும் கூடிய மக்கட்செல்வம் உண்டாகட்டும். அவர்கள் நீடூழி வாழ வாழ்த்துவோம்.

மாயோ பவாய சதுஷ்பதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வாநயது புத்ரான் வின்தாவஹை பஹூம்ஸதே ஸந்து ஜரதஷ்டய:!!

உன் வாழ்க்கை புஷ்பங்களிலிருந்து வீசும் நறுமணம் போல மணம் வீசட்டும். மணமாலையில் கோர்க்கப்பட்ட பூக்கள் போல உன்னோடு இணைந்தும், குழைத்து வைத்த சந்தனத்தினைப் போல உன் அன்பால் நெகிழ்ந்தும் இருக்கிறேன்.

ஓம் பஞ்ச்சமே பஞ்ச்சபூதானாம், பஞ்ச்சப்ராணை: பராயணா:! தத்ர தர்ஷணிபுண்யானாம் சாக்ஷிண: ப்ராணபஞ்சதா:

அன்பே, இப்போது என்னோடு ஐந்தாம் அடியையும் எடுத்து வைத்து என் வாழ்வை சிறப்பானதாக்கினாய், அர்த்தமுள்ளதாக்கினாய். உனக்கு தெய்வத்தின் அருள் என்றும் இருக்கட்டும். நம் சந்ததிகள் நீடூழி வாழட்டும்.

ஓம் ப்ரஜாப்யாம் பஞ்சபதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வாநயது புத்ரான் வின்தாவஹை பஹூம்ஸதே ஸந்து ஜரதஷ்டய:!!

அன்பே நான் உனது துக்கங்களிலும் சந்தோஷங்களிலும் பங்கு கொள்கிறேன். உன் அளவில்லாத அன்பு கண்டு உன் மீது மதிப்பும் நம்பிக்கையும் கூடுகிறது. இந்த அன்பைப் பெற நான் எதுவும் செய்வேன்.

ஓம் ஷஷ்டே து ஷட்க்ருதூணாம் ச, ஷண்முக: ஸ்வாமிகார்த்திக: ! ஷட்ரஸா யத்ர ஜாயந்தே, கார்த்திகேயாஷ்ச சாக்ஷிண:!!

அன்பே! ஆறாம் அடியெடுத்து என்னோடு நடந்து என் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பினாய். நம் பந்தத்தால் நமக்கு மகிழ்ச்சியும் அமைதியும் என்றென்றும் விளையட்டும்.

க்ருதுப்ய: ஷட்ஷ்பதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வாநயது புத்ரான் வின்தாவஹை பஹூம்ஸதே ஸந்து ஜரதஷ்டய:!!

அன்பே! நீ தர்மானுஷட்டான காரியங்கள் செய்யும் போதெல்லாம் நானும் அதில் பங்கேற்று உனக்கு துணையாயிருப்பேன். நம் குடும்பத்திற்கு தேவையான செல்வச் செழிப்புக்களை மிகுதியாக்க துணையிருப்பேன். தெய்வ காரியங்களிலும், நம் மகிழ்ச்சிக்காக நீ செய்யும் ஒவ்வொரு காரியங்களிலும் எப்போதும் துணையிருப்பேன்.

ஓம் சப்தமே ஸாகராஷ்சைவ ஸப்ததீபா: ஸபவர்த்தா:! ஏஷாம் ஸப்தஷிர்பதநீநாம் தேஷாமாதஷர்சாக்ஷிண:!!

அன்பே! இந்த ஏழாம் அடியோடு நம் பந்தம் பிரிக்கவியலாததாக பிணைந்தது. நம் அன்பும் நட்பும் தெய்வீகமானது. தெய்வமே ஏற்படுத்திய பந்தம்தான் இது. நீ முழுமையாக எனதானாய், நான் முழுமையாக உனதானேன். என் வாழ்க்கையை உன் கையில் ஒப்படைக்கிறேன். என் வாழ்க்கை போகும் திசையை நீயே தீர்மானிப்பாயாக.

ஸகே சப்தபதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வாநயது புத்ரான் வின்தாவஹை பஹூம்ஸதே ஸந்து ஜரதஷ்டய:!!

அன்பே! தெய்வத்தின் ஆணையாலும், புண்ணிய புத்தகங்களான வேதங்களில் குறித்த வண்ணமும் கர்மங்களைச் செய்து நாம் இணைந்தோம். நான் உனது மனைவியானேன். நாம் செய்த சத்தியப் பிரமாணங்கள் அனைத்துமே மனதால் செய்தவை. நாம் ஒருவருக்கொருவர் உண்மையாயிருப்போம். இந்தத் திருமணம் நம் வாழ்நாள் முடியும் வரை நீடித்திருக்கட்டும்.
மனிதன் பஞ்சபூதங்கள் எனப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் தன்மையால் ஆனவன். மனிதன் குழந்தையாய்ப் பிறந்து நிலத்தில் உழல்கிறான். உணவுப் பொருட்களில் நீரைச் சேர்த்து, நெருப்பிட்டு சுவையாய் அருந்தி, இதமாய் வருடிச் செல்லும் காற்றை சுவாசிக்கிறான். சந்தோஷமான வாழ்க்கையில் அவன் தன்னை மறந்த நிலையில் ஆகாயத்தில் ஆனந்தமாய்ப் பறக்கிறான்.

பஞ்சபூதங்கள் ஒரு மனிதனை அரவ ணைத்துச் சென்றால் அவன் வாழ்கிறான். இல்லையெனில் வீழ்கிறான். ஒருவனு டைய உயிர் நீரோட்டம் போன்றது. உயிரற்ற உடலை மண்ணில் புதைப் பதும் நெருப்பில் எரிப்பதும் நிகழ் கிறது. உயிரானது காற்றில் கலந்து ஆகாயத்தில் ஒடுங்கி விடுகிறது.

உடலை வைத்துத்தான் இந்த உலகத்தில் நமக்கு இருப்பிடம். இதை எல்லாரும் உணர வேண்டும். ஒருவரின் லட்சியங்கள் எவ்வளவு உயர்ந்த தாக வேண்டுமானாலும் இருக்க லாம். ஆனால் உடல்நலம் ஒத்துழைக்க வில்லையென்றால் பாதிக்கிணறு தாண்டிய கதையாகிவிடும்.

உடலைப்பற்றி பின்வரும் சித்தர் பாடலைக் கவனியுங்கள்.

"கூறுவேன் தேகமது என்னவென்றால்

குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி

மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு

வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி

தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி

தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி

ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி

அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.'

உடல் என்பது, எலும்புகளைத் தூண்போல நாட்டி வைத்து, அவற்றின் இருப்பிடம் மாறி விடாமல் இருக்க நுண்ணிய துவாரங்களால் இணைத்து, நரம்புகளால் இழுத்துக் கட்டி, அவற்றுக்கு இடையில் தசைகளைச் சேர்த்து, ரத்தத்தை ஊற்றி, தோலால் மூடி, உள்ளே வாயு எனப்படும் பிராணனை அடக்கி உடல் என்ற உருவம் உண்டாக்கப்பட்டிருக்கிறதாம்.

இன்றைய நவீன மருத்துவம் மனித உடம்பை அதன் செயலின் பொருட்டு பல்வேறு மண்டலங்களாகப் பிரித்து வகைப்படுத்தியுள் ளது. நவீன மருத்துவம் தேகத்தின் அடிப்படை யாகக் கருதும் எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், ரத்த ஓட்ட மண்டலம், தசை மண்டலம், மூச்சு மண்டலம் ஆகிய ஐந்து மண்டலங்களும் சேர்ந்ததுதான் நம்முடைய தேகம் என்பதை, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் தம் மதிநுட்பத்தால் மேற் கண்ட பாடல் மூலம் நமக்குத் தெரியப்படுத்தி உள்ளார்கள்.

எனவே, விஞ்ஞானம் விண்ணை முட்டி அதற்கு மேலும் வளரலாம். ஆனால் விஞ்ஞானம் ஒருக்காலும் சித்தர்களின் ஞானத்திற்கு ஈடாகாது. ஏன்? எப்படி என்று எப்போதும் கேள்விகளையே எழுப்பிக் கொண்டிருந்தால் கடைசியில் குழப்பம்தான் மிஞ்சும். சில நேரங்களில் சித்தர்களின் கருத்துகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் உயர அதுவே வழியாகும்.

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைதல்தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் (நெருப்பு) பித்த நோய்களும், காற்றினால் (வாயு) வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.

பிணியுடையவனே மனிதன். தனக்கு வரும் பிணியை மதிநுட்பம், மன திடம் போன்றவற் றால் போக்கிக் கொள்வதே சாமர்த்தியம்.

நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய சித்தர்களைச் சரணடைவதே உத்தமம். வானத்தை முட்டும் கட்டிடங்களும் குளிரூட்டப் பட்ட மருத்துவமனைகளும் நுனிநாக்கு ஆங்கிலமும் ஒருபோதும் நோயை முழுமையாய் விரட்டிவிடாது. நமக்குநாமே மருத்துவனாகி, நமது உடம்பை நாமே பகுத்துப் பார்க்கும் மதிநுட்பத்தை நாம் பெற வேண்டும்.

மானுட உடலைப் பீடிக்கும் நோய்கள் மொத்தம் 4448 ஆகும். அதில் மிகவும் கடுமை யான நோய்கள் 448 என திருமூலர் குறிப்பிடு கிறார். கடுமையான நோய்கள் தேகத்தைத் தாக்கி னால், விரைவில் நலம் பெற சிவபெருமானை வேண்டுங்கள் என்று திருமூலர் கூறுகிறார்.

உடலை அழியாத் தன்மைக்குக் கொண்டு செல்ல, திருமூலர் அறுபதுக்கும் மேற்பட்ட காயகற்ப முறைகளைக் குறிப்பிட்டுள்ளார். உடல் நலம் பெற எவர் முனைந்தாலும், முதலில் உடலில் உள்ள அழுக்குகளை அகற்றிக் கொள்ள வேண்டும். ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று திருமூலர் குறிப்பிடுகிறார். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலாய் கருது' என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.

பெற்ற தாயானவள் தன் பிள்ளைமேல் உள்ள பாச மிகுதியால், கண்ட உணவுகளையும் வகை வகையாய் செய்து கொடுத்து அவன் வயிற்றைக் கெடுத்துவிடுவாள். ஆனால் கடுக்காயோ வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.

கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்.

துவர்ப்புக்கும் வாயுவுக்கும் ஆகாது. ஆனால் வாழைப்பூவை கடலைப்பருப்பு சேர்த்துத்தான் பொரியல் செய்து சாப்பிடு கிறோம். கடலைப்பருப்பு வாயுப் பதார்த்தம். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவை யான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.

கடுக்காயை மருந்தாக்குவது எப்படி?

கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். தரமான கடுக்காயை வாங்கி வந்து உடைத்து, உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துவிட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கை யைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்

கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். கடுக்காயை உணவாய் தினசரி சாப்பிட்டு வாருங்கள். உங்களை எந்த நோயும் அணுகாது. பின் வரும் சித்தர் பாடலைக் கவனியுங்கள்.

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு

மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்

விருத்தனும் பாலனாமே.'

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வரப் பழகிக் கொள்ளுங்கள். இதனால் முன் சொன்ன அனைத்து நோய்களும் உங்களை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

தென்னாட்டவருக்கு திரிபலா...

திரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சம அளவு கலந்த மருந்தாகும். இதனை எவர் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள், இம்மருந்தினை காலை- இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்த லாம்.

உடல் வலிமை பெற...

நூறு கிராம் கடுக்காய், சிலாசத்து பற்பம் 50 கிராம்- இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு காலை- இரவு சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்; நரம்புகள் முறுக்கேறும்.

பல் நோய்கள் தீர...

கடுக்காய், கொட்டைப்பாக்கு, படிகாரம் ஆகிய மூன்றையும் வகைக்கு நூறு கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் பல் துலக்கி வர அனைத்து பல் வியாதிகளும் தீரும்.

மூல எரிச்சல் தீர...

கடுக்காய்த் தூளை நீரிலிட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து, அந்த நீரால் ஆசன வாயைக் கழுவி வர மூல எரிச்சல், புண் ஆகியன ஆறும்.

எனவே, கடுக்காய் உங்கள் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷ மாகும். கடுக்காய் திருமூலரின் ஆசி பெற்றது. நாமும் அதைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், இந்த உடல் பெற்ற உபாயம் அறிவோம். நல்லன செய்து நலம் பல பெறுவோம். கடுக் காயைக் கருத்தில் வையுங்கள். திருமூலர் ஆசி உங்களுக்கு எப்பொழுதும் உண்டு. வாழ்க வளமுடன்!


      வாழ்க வையகம்!  வாழ்க வளமுடன்!
காரடையார் நோன்பின் மகிமை

உ லகில் உள்ள எல்லா நாடுகளிலும் ஆன்மீகத்தில் சிறந்த நாடாக பலம் மிகுந்த நாடாக இந்தியா கருதப்படுவது ஏன் என்று சிந்தித்தால் நமக்குக் கிடைக்கும் பதில் பாரத தேசம் ஒரு புண்ணிய பூமி, கர்ம பூமி பல ஆலயங்கள் நிறைந்த நாடு என்று கூறுவார்கள். அது மட்டுமல்ல, நமது நாட்டுப் பெண்கள் இல்லங்களிலும், ஆலயங்களிலும் ஆற்றிய ஆன்மீகப் பணியும் ஒரு காரணம். நமது நாட்டு வரலாற்றில்

ஆன்மீக பக்கத்தை புரட்டினால் ஆண்கள் புரிந்த ஆன்மீகச் செயல்கள் மற்றும் அதிசயச் செயல்கள் போல சற்றும் குறையாமல் ஏன் சற்று அதிகமாகவே பெண்கள் ஆற்றியுள்ளனர். அப்படி ஒரு ஆன்மீகச் சாதனை புரிந்தவர்களில் சாவித்திரி தேவியும் ஒருவர். அவர் புரிந்த சாதனையே இன்று கொண்டாடப்படும் காரடையார் நோன்பிற்கு காரணம். அதனுடைய வரலாற்றை நாம் இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.

மத்திர தேசம் என்ற நாட்டை ஆண்டு வந்த அசுவபதி என்ற ராஜாவிற்கு குழந்தை இல்லை என்ற கவலை. ஒரு நாள் நாரதர் அங்கு வந்த போது அவரிடம் தன் குறையை சொல்ல நாரதர் சாவித்திரி தேவியை நினைத்து பூஜை ஹோமங்கள் செய்தால் வழி பிறக்கும் என்று சொல்லி மறைந்தார். ராஜாவும் அவர் சொன்னபடியே செய்தார். அந்த ஹோமம் செய்த அக்னி குண்டத்திலிருந்து ஜெகத்ஜோதியாய் தேவியவள் வந்தாள். பிரம்மதேவன் அனுப்பியதால் இங்கு வந்தேன். இப்போது உனக்கு மகன் இல்லை. இனிமேல் உண்டாகும். செய்த தவத்திற்கு பலனாக நானே கன்னிகையாய் வந்து அவதரிப்பேன் என்று சாவித்திரி தேவி சொல்லி மறைந்தாள்.

சிறிது நாட்களுக்கப் பிறகு தேவி அவள் சொன்னபடியே அரசனின் பட்ட மகிஷியான மாளவியின் வயிற்றில் சாவித்திரி தேவி பிறந்தாள். அவள் வளர்ந்து பருவ மங்கையானதும் அவளுக்கு திருமணம் செய்ய நினைத்தார்கள். அவளுடைய அழகிற்கு ஈடாக எந்த அரச குமாரனும் இல்லை, என்பதால் அசுவபதி ராஜா தன் மகளிடம் நீயே உன் தோழிமாரோடு சென்று உனக்கேற்றவனைக் தேர்ந்தெடுத்து வா என்று சொல்லி அனுப்பினார்.

சாவித்திரி தேவியும் தேசமெங்கும் ஆராய்ந்தும் கிடைக்காமல் இருந்த போது நாட்டை இழந்து காட்டில் வசிக்கும் சாலுவ தேசத்து அதிபதியின் மகனை (சத்தியவான்) வனத்தில் கண்டாள். தன் தந்தையிடம் வந்து தன் விருப்பத்தைத் தெரிவித்தாள். அப்போது அங்கு வந்த நாரதர் அதைக் கேட்டுக் கலங்கினார். காரணம் என்ன என்று ராஜா கேட்டதற்கு நாரதர் சொன்னார். அந்த சத்தியவான் ஒரு வருடத்தில் மரணம் அடைந்து விடுவான் என்று. ராஜா தன் மகளிடம் சொல்ல வேறு ஒருவரை வரித்து வா என்று சொன்னார். ஆனால் சாவித்திரியோ மனதில் ஒருவரை வரித்த பின்பு வேறு ஒருவரைத் தேடுவது பதிவிரதம் கெட்டுவிடும். அவரையே தான் நான் மணப்பேன் என்று உறுதியாகக் கூறிவிட்டாள்.

நாரதர் அரசனிடம் சாவித்திரி அவள் மன திடத்தாலே எமனையும் வெற்றி பெறுவாள் என்று சொல்ல அரசரும் அவள் விருப்பப் படியே காட்டிற்கு சென்று சத்தியவானிடம் கன்னிகா தானம் செய்து விட்டு வந்தார். காட்டில் சாவித்திரி பதிவிரதா தர்மத்திற்கு ஒரு குறையும் இல்லாமல் கணவனோடு கானகத்தில் வாழ்ந்து வந்தாள். கணவனுடைய மரண தேதியை அறிந்து இருந்ததால் கடுந்தவம் செய்தாள், கௌரி நோன்பு இருந்தாள். காமாக்ஷி தேவியை நோக்கி கடுந்தவம் இருந்தாள். அந்த பங்குனி முதல் நாள் வந்தது. கடும் நோன்பு இருந்து உணவு இல்லாமல் இருந்தாள். காட்டில் விறகு கொண்டு வர கணவனுடன் சென்றாள். விறகு பிளக்கும் போது கணவன் உயிர் துறந்தான். சாவித்திரி தன் கணவனின் உயிரை மீட்க சபதம் கொண்டாள். கணவனுக்கு ஈமைக்கிரியைகள் செய்ய உறவினர்கள் வந்த போது செய்ய அவள் அனுமதிக்கவில்லை. சாவித்திரி தனது கணவனின் உடலுடன் காட்டில் தனியாக அவன் உயிரை மீட்க காமாட்சி தேவியை நோக்கி பூஜித்தாள். பூஜையை தொடர்ந்து நடுவே எமன் தோன்றி உன்னுடைய பூஜைகள் அனைத்தும் வீண். உயிர் பிரிந்தது பிரிந்தது தான் என்று சொல்லியும் அவள் தன் விரதத்தை கைவிடவில்லை. காட்டில் கிடைத்த பூக்களையும், பழங்களையும் வைத்து பூஜித்தாள். அம்மைக்கு அமுது படைக்க விரும்பினாள். காடுகளில் ஏதும் கிடைக்காததால் அங்கே கிடைத்த களிமண்னை அடையாகவும், கள்ளிப் பாலை வெண்ணெயாகவும் பாவித்து பூஜை செய்தாள்.

எமதர்மன் சத்தியவான் உயிரை எடுத்து விட்டுச் சென்று கொண்டிருந்தார். சாவித்திரி விடாமல் பின் தொடர்ந்து சென்றாள். எமன் அவளைப் பார்த்து ''என்னை ஏன் தொடருகிறாய்?''என்று கேட்க ''என் கணவன் உயிர் வேண்டும்'' என்றாள். வேறு எதை வேண்டுமானாலும் கேள் தருகிறேன் என்ற எமனிடம் ''எனக்கு நூறு பிள்ளைகள் வேண்டும்'' என்று வரம் கேட்க ''தந்தேன் அம்மா உனக்கு'' என்றார். தொடர்ந்து அவரைப் பின் தொடர்ந்து உங்கள் வரம் ''பலிக்காமல் போகலாமா!கணவனில்லாமல் எப்படி உங்கள் வரம் எனக்கு பலிதமாகும்? தரும தேவனுடைய வாக்கு பொய்யாகலாமா?'' என்றாள். எமதேவனுக்கு அப்போது தான் சாவித்திரி தேவியின் மதி நுட்பம் புரிந்தது. சாவித்திரியின் பூஜைகளையும், மதி நுட்பத்தையும் மெச்சி உள்ளங்குளிர்ந்து கணவனுடைய உயிரைப் தந்ததோடு இழந்த ராஜ்ஜியத்தையும் அளித்தார்.

இவ்வாறு காலனையே கதி கலங்க வைத்து போராடி வெற்றி பெற்றதற்கு சாவித்திரியம்மன் செய்த கௌரி நோன்பு தான் காரணமாகும். அப்படி சாவித்திரி செய்த பூஜையே இன்று நாம் அனைவரும் செய்யும் காரடையார் நோன்பு ஆகும். மாசி முடிந்து பங்குனி தொடங்கும் சமயம் அன்றைய தினம் சுமங்கலிகள் பூஜை செய்தால் அவர்களுடைய கணவரைப் பிரியாமல் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள் என்பதே அந்த நோன்பின் மகத்துவம்.

காட்டில் சாவித்திரி படைத்த மண் அடையை வெல்ல அடையாகவும், கள்ளிப்பாலை வெண்ணெயாகவும் நாம் அன்னைக்கு படைக்கிறோம். பூஜையின்போது ''உருகாத வெண்ணெயும், ஒரடையும் நான் உனக்கு தருவேன். கணவனை பிரியாத வரம் வேண்டும்''என்று சுமங்கலிகள் அனைவரும் காரடையார் நோன்பு எனும் பூஜையை செய்தால் சாவித்திரி போல திடமான மனதையும் கொண்ட கொள்கையில் உறுதியும் காமாட்சி அன்னையின் அருளையும் பெறுவார்கள் என்பது உறுதி.
“தர்பையின் மகிமை”

க்ருஷ்ண மூர்த்தி ஸாஸ்த்ரிகள்
(வேதபாஷ்ய ரத்னம், வேதாந்த மீமாம்ஸா சிரோமணி)

நமது வாழ்க்கைக்கு உணவு, ஜலம், காற்று எல்லாம் தேவை. உணவு என்பது தான்யங்களின் மூலம் கிடைக்கிறது. பசி என்ற நோயை குணப்படுத்துவதால் தான்யங்களுக்கு ஓஷதிகள் என்று வைத்து தைத்திரீய உபநிஷத்தில் “ஓஷதீப்யோ அன்னம்” எனப்படுகிறது.

உணவினால் உயிருக்கு பலம் ஏற்படுவதால் மட்டும் போதாது.பல நோய் எதிர்ப்பு சக்தியையும் நாம் பெற வேண்டும்.அதற்காக விசேஷமாக ரத்த ஸுத்திக்காக அருகம்புல் மிகவும் பயன்படுவது போல தர்பை எனப்படும் புல்வகையானது சில சூழ்நிலைகளில் உள்ள கெடுதல்களைப்போக்கடிக்கும் தன்மை பெற்றது என்று வேதத்திலேயே கூறப்படுகிறது.

1.பவித்ரம் வை தர்பா:
தர்பையானது புனிதத்தன்மையைத்தருகின்றன. நமது உடலில் வெளியிலிருந்து உள்ளே புகும் தீமையைத் தடுக்கிறது. எனவே தான் நாம் எந்த ஒரு செயல் (வைதீககார்யங்கள்) செய்ய ஆரம்பிக்கும் போதும் தர்பத்தில் உட்கார்ந்து கையிலும் தர்ப்பவித்ரத்தை அணிகிறோம்.

2.“தர்பையின் உத்பத்தி”
வேதத்தில் பல முறை இந்த கதை வருகிறது. இந்திரன் வ்ருத்ராஸுரனை கொன்ற பொழுது வ்ருத்ராஸுரனின் தலை நதியில் விழுந்தது. அப்போது ஜலத்தில் இயல்பாக உள்ள ஒரு விசேஷமான சக்தி தெய்வத்தன்மை இரண்டும் நதியின் கரையோரத்தில் வெளிவந்து மண்டியது. அந்த இடத்தில் உடனே தர்பை முளைத்தது. எனவே யாகாதிகளான செயல்களுக்கு தேவையான சக்தியும், தெய்வத்தன்மையும் தன்னுள்ளே கொண்டுள்ளதாக தர்பையானது கருதப்படுகிறது. ”இந்த்ரோ  வ்ருத்ரமஹன்,………தே தர்பா அபவன்” (6.1.1)இதே ஸந்தர்பம் ப்ராம்ஹணத்திலும் (3.2.4)வருகிறது.

3.“அக்னியின் ப்ரதிநிதி”
கடைந்து எடுக்கும் அக்னி உற்பத்தியாகாவிடில் மற்ற தீக்ஷிதரின் அக்னியை எடுத்து கொள்ளலாம். அதுவும் கிடைக்காவிடில் தர்பஸ்தம்பத்தில் ஹோமம் பண்ணலாம். தர்பஸ்தம்பத்தில் அக்னியின் ஸாந்நித்யம் உள்ளது. ”தர்பஸ்தம்பே ஹோதவ்யம். அக்னிவான் வை தர்பஸ்தம்ப: ”(3.7.3)

4.“தீயகதிர்களைத்தவிர்ப்பது”
சந்திர, ஸூர்ய க்ரஹணகாலங்களில் வீடுகளில் பெரியவர்கள் தொன்று தொட்டு ஊறுகாய் போன்ற நீடித்து பயன் படுத்தும் உணவு பொருட்களில் (ஜாடி, பாட்டில்) தர்பையைக்கிள்ளி அதன் துண்டை உள்ளே போடுகிறார்கள். ஏனெனில் வெளியிலே அந்த நேரத்தில் வரும் தீயகதிர்கள் வாயிலாக உணவு பொருட்களில் கெடுதல் ஏற்படாதவாறு தர்பை தடுக்கும் தன்மை வாய்த்தது. இவ்வாறு நமது மூதாதையர்கள் பயன் படுத்தி வரும் தர்பைக்கு பலப்பல விசேஷங்கள் உள்ளன. உடல் வலிமையும் புத்திகூர்மையும் கூட அவற்றால் ஏற்படும் என்று ஊகிக்க முடிகிறது. ஏனெனில் பாணிணி முனிவர் கௌமுதியை எழுதும் போது “பவித்ர பாணியாக உட்கார்ந்து ஆலோசித்து எழுதினார்” என்று மஹாபாஷ்யத்தில் கூறப்படுகிறது. ஒரு புனிதச்செயல் செய்யும் நேரத்தில் நமது சக்தி தடைபடாமலிருக்க நாம் கையில் தர்பத்தினாலான பவித்ரத்தை தரிக்கிறோம். முழுமையாக அந்த வேலை பூர்தியாகும் வரை கழற்றாமலிருப்பது நம் செயலுக்கு உதவுகிறது.

5.“சக்தியை பரிமாறுவது”
இந்த விதத்திலும் தர்பை உபயோகிக்கப்படுகிறது. யஜமானன் தனக்கு பதிலாக புரோஹிதரை கார்யங்கள் செய்யுமாறு அதிகாரத்தை மாற்றித்தரும் போதும். ஸ்த்ரீகளே சில கார்யங்கள் (பித்ருகார்யங்கள்) செய்ய நேரிடும் போதும் தர்பங்களை மற்றவருக்கு கொடுத்து தன் அதிகாரத்தை மாற்றுவதும் வழக்கத்தில் உள்ளது.
குருடர்களுக்கு கண்ணாடி எவ்வளவு பயனுள்ளதோ அவ்வளவு பயனுள்ளதே முட்டாள்களுக்கு புத்தகங்கள்

கல்வியே சிறந்த நண்பன். கல்விமான்களுக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு. கல்வி அழகையும், இளமையையும் விஞ்சி விடும்.

பிறர் செய்யும் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள், ஏனெனில் நீங்களாகவே பட்டு உணர்ந்து பாடம் கற்கவேண்டுமெனில் இந்த ஆயுள் போதாது.

ஒருவர் மிகவும் நேர்மையாக இருக்கக்கூடாது. நேர் நிமிர்ந்த மரமே முதலில் வெட்டிச் சாய்க்கப்படுகிறது. நேர்மையான மனிதனே அதிக சோதனைகளை எதிர்கொள்கிறான்.

பாம்புகள் கூட விஷமில்லாமல் இருக்கலாம், ஆனால் விஷம் இருப்பதாக பாசாங்கு செய்வது அவசியம்.

ஒவ்வொரு நட்புறவிலும் கொஞ்சம் சுயநலம் உள்ளது. சுயநலமற்ற நட்புறவு இல்லவேயில்லை. இதுதான் கசப்பான உண்மை!

எந்த ஒரு வேலையைத் தொடங்குவதாக இருந்தாலும் முதலில் உங்களிடம் நீங்களே 3 கேள்விகளை கேட்கவேண்டும்: நான் ஏன் இதனைச் செய்யவேண்டும், முடிவுகள் என்னவாகவிருக்கும், நான் இதில் வெற்றி பெறுவேனா? இந்தக்கேள்விகளை ஆழமாகச் சிந்திக்கும்போதுதான் திருப்திகரமான விடைகள் கிடைக்கும். முயற்சி செய்யுங்களேன்.

பயம் உங்களை நெருங்கும்போது அதனை தாக்கி அழியுங்கள்!

உலகின் ஆகப்பெரிய சக்தி இளமையும் பெண்ணின் அழகும்தான்!

ஒரு வேலையத் துவங்கிவிட்டீர்களென்றால் அதன் விளைவுகள் பற்றி அச்சப்படக்கூடாது. கைவிடாதீர்கள்! நேர்மையாக பணியாற்றுபவர்கள் மகிழ்ச்சியானவர்கள்.

மலரின் மணம் காற்றின் திசைவழி மட்டுமே செல்லும், ஒரு நல்ல மனிதனின் நற்தன்மை அனைத்து திசைகளுக்கும் செல்லும்.

விக்கிரகங்களில் கடவுள் இல்லை. உங்கள் உணர்வுகளே உங்கள் கடவுள். ஆன்மாவே கோயில்.

மனிதன் செயலினால் உயர்ந்தவனே தவிர பிறப்பினால் அல்ல.

உங்களை விட தகுதியில் உயர்ந்தவர்களிடமோ, தாழ்ந்தவர்களிடமோ நட்பு பாராட்டாதீர்கள், இந்த நட்பினால் மகிழ்ச்சி ஏற்படாது.

முதல் 5 ஆண்டுகளுக்கு உங்கள் குழந்தைகளை அன்புடன் நடத்துங்கள். அதன் பிறகு கண்டியுங்கள், 16 வயது ஆகிவிட்டதா நண்பராக நடத்துங்கள், வளர்ந்த உங்களுடைய குழந்தைகளே உங்கள் சிறந்த நண்பர்கள்.
தென்னாங்கூர் பாண்டுரங்கன் ஆலயம்
இறைவனை வழிபடுவது என்பதே ஆனந்தம் அதிலும் இசையோடு இறைவனை வழிபடமுடியும் என்றால் பக்தர்களின் சந்தோஷத்திற்கு அளவேது. அப்படிப்பட்ட அற்புத ஆலயம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகில் உள்ள தென்னாங்கூரில் உள்ளது. இயற்கை எழில் நிறைந்துள்ள இந்த கிராமத்திற்கு அழகு சேர்ப்பதே இந்த ஆலயம் தான் என்றால் அது மிகையாகாது.

பாண்டுரங்கனை தரிசிக்க வருபவர்கள் இந்த கிராமத்திற்குள் நுழைந்ததும் தங்களை மறக்கச் செய்கின்ற வகையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. திசைமாறி கிழக்கு இந்திய பகுதிக்குள் நுழைந்து விட்டோமோ என்கிற பிரமிப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் பூரி ஜகன்னாதா ஆலயத்தின் வடிவமைப்பில் தென்னாங்கூர் பாண்டுரங்கன் ஆலயம் அமைந்திருப்பது தான்.

மேலும் இந்த ஆலயம், கோவில்களுக்கு என உள்ள ஆகமவிதிப்படி தியான மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், ராஜகோபுரம் என அடுத்தடுத்த நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காண்போரை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ராஜகோபுரத்தின் உயரம் 120 அடி ஆகும். அதற்கு மேல் தங்கக் கலசம் நிர்மாணிக்கப்படுகிறது.

இந்த அழகிய கோபுரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கருவரையில் பிரம்மாண்டமாக காட்சி தரும் வகையில் பாண்டுரங்கனும், ருக்மனியும் (இந்த ஆலயத்தில் ருக்மணி என்பதற்கு பதிலாக ருக்மாயி என்று அழைக்கப்படுகிறது) அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

கலைநயமிக்க வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள கருவரையில் பாண்டுரங்கனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, அவர்கள் கொடுக்கும் காணிக்கையான தேங்காய், பழம்ஆகியவற்றை பெற்றுக் கொண்டவுடன் திரைச்சீலை விலக்கப்படும். அப்போது கருவரையில் இருக்கும் பாண்டுரங்கனையும் ருக்மணியையும் காணும் பக்தர்கள் உள்ளத்தில், வைகுந்தத்தில் இறைவனை காண்பது போன்ற பிரமிப்பை எற்படுத்துகின்றது.

ஒவ்வொரு நாளும் பாண்டுரங்கனுக்கு ஒவ்வொரு வகையான அலங்காரம் செய்யப்படுகிறது. இதில் குறிப்பாக பக்தர்களை கவருவது, வியாழக்கிழமை நடக்கும் நிஜபாத தரிசனம், வெள்ளிக்கிழமை நடக்கும் வெள்ளிகலச சேவை அலங்காரம், சனிக்கிழமை நடக்கும் திருப்பதி வெங்கடேசபெருமாள் அலங்காரம். ஞாயிற்றுக்கிழமை நடக்கும் ராஜஸ்தான் தலைப்பாகையுடன்அலங்கரிக்கப்படும் ராஜகோபாலன் அலங்காரம் ஆகியனவாகும்.
பசுவந்தனை சங்கு ஸ்வாமிகள் (பகுதி-2)

விடிந்தது தங்களுடைய வயலுக்கு நீர் பாய்ச்சப்பட்டிருக்கும் என்ற எண்ணத்துடன் வயலுக்கு வந்த அண்ணன் பக்கத்து வயலில் நீர் பாய்ந்து இருந்ததைக் கண்டு அர்ச்சியுற்றார். ஸ்வாமிகள் மீது ஆத்திரம் கொண்டார். ஏண்டா நம் வயலில் தண்ணீர் இறைக்கச் சொன்னால் அடுத்தவன் வயலுக்கு வேலை செய்திருக்கிறாயே. நம் வயலில் பொட்டுத் தண்ணீரைக் காணோம். உனக்கு மூளை பிசகி விட்டதா? என்று கத்தினார். ஸ்வாமிகள் தண்ணீர் இறைப்பதை நிறுத்தாமல் அண்ணா எங்கே பாய்ந்தால் என்ன. அதுவும் நம் வயல் தானே. அந்த வயலிலும் தண்ணீர் இல்லையே என்றார். ஆத்திரமுற்ற அண்ணன் வரப்பில் கிடந்த கழியை எடுத்து ஸ்வாமிகளின் மேல் மாறி மாறி அடித்தார். அப்படியே களைப்புற்றார். சங்கு ஸ்வாமிகள் தன் மேல் விழுந்த அடிகளைப் பொருட்படுத்தாமல் புன்னகைத்தார். அண்ணா இப்படி ஓங்கி ஓங்கி அடித்தாயே உன் கைகள் என்னமாய் வலிக்கும்? நான் கொஞ்சம் தடவி விடவா? என்று பரிவுடன் கேட்டார். அவ்வளவு தான் அடுத்த வினாடி. அனல் மேல் பட்ட புழுபோல் அண்ணன் விழுந்து துடித்தார். இதைக் கண்டு சகிக்க முடியாத ஸ்வாமிகள். கவலை வேண்டாம் அண்ணா உமது வலி இந்தக் கணமே நீங்கும் என்று சொல்ல. அதுவரை சகோதரனை துவள வைத்த வலி சட்டென்று அகன்றது. அதிர்ந்து போனார் அண்ணன்.

முன்பு ஸ்வாமிகளின் தந்தை இப்போது அண்ணன். அடிப்பட்டவருக்கு வலிக்கும் என்பது சரி. அடித்தவருக்கும் வலிக்குமா என்று யோசித்த சகோதரர் ஏதோ ஒரு சக்தி ஸ்வாமிகளிடம் இருப்பதை உணர்ந்தார். இந்தச் சேதி மெள்ள மெள்ள அக்கம் பக்கத்துக்கு ஊர்களுக்குப் பரவியது. பிறகு உள்ளூர்க்காரர்கள் எவரும் ஸ்வாமிகளிடம் எந்த வேலையையும் தருவதில்லை. வேலைக்காரனைப் போல் ஸ்வாமிகளைப் பயன்படுத்தி வந்தவர்கள். அவரைப் பார்த்ததும் மரியாதையுடன் கையெடுத்துக் கும்பிட்டனர். ஸ்வாமிகள் வழக்கம் போல் இஷ்டப்படித் திரிந்தார். கிடைத்ததை உண்டார். அந்க ஊரில் உள்ள பாழடைந்த மண்டபம் ஒன்றில் படுத்து உறங்கினார். பல முறை நிஷ்டையில் ஆழ்ந்து விடும் ஸ்வாமிகள் சமாதி நிலைக்குச் சென்று விடுவார். இந்த நிலையில் அவரைப் பார்ப்பவர்கள் ரொம்ப களைப்புல தூங்கிறார் போல என்றே கருதுவர். ஒரு நாள் தந்தை மற்றும் சகோதரருடன் தரையில் உட்கார்ந்து சாப்பிட்டார் ஸ்வாமிகள். மூவருக்கும் உணவு பரிமாறிக் கொண்டிருந்தார் ஸ்வாமிகளின் தாயார். இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க ஸ்வாமிகள் மட்டும் கண் மூடித் தவத்தில் மூழ்கிக் கிடந்தார். இந்தத் தருணத்தைப் பயன் படுத்தி அவருடைய அண்ணன் நைஸாக ஸ்வாமிகளின் தட்டில் இருந்த உணவை எடுத்துச் சாப்பிட்டார். சிறிது நேரத்தில் கண் விழித்த ஸ்வாமிகள் தட்டைப் பார்ததார். அண்ணனோ ஸ்வாமிகளை ஏளனத்துடன் பார்த்தார்.

அவ்வளவு தான் சட்டென்று ஸ்வாமிகள் தட்டு முழுவதும் உணவுப் பதார்த்தங்கள் நிரம்பி வழிந்தன. அதிர்ந்து போன அண்ணன் குழப்பத்துடன் ஸ்வாமிகளை ஏறிட்டார். அண்ணா வேண்டுமானால் இந்த உணவையும் எடுத்துக் கொள்ளுங்கள். இறை சிந்னையில் இருக்கும் என்னை பசி ஒன்றும் செய்யாது என்றார். ஒரு முறை சிங்கம்பட்டி ஜமீன்தாரான நல்லக்குத்தி பெரியசாமித் தேவர் ராஜா பூர்வ ஜன்ம வினைப்பயனால் மகோதரம் என்னும் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோயால் பெரிதும் அவதிப்பட்டார். (சங்கு ஸ்வாமிகள் காலத்தில் ஜமீனை ஆண்டு வந்தவர் இவர்) பசுவந்தனையில் இருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் இருக்கிறது சிங்கம்பட்டி. பசி எடுக்கும் சாப்பிட முடியாது. இரவில் நிம்மதியாகத் தூங்க முடியாது. வாந்தி குமட்டல் என்று நரக வேதனையை அனுபவித்து வந்தார் ஜமீன்தார். இதைக் கண்ட அவருடைய குடும்பமே சோகத்தில் தவித்தது. அரண்மனை வைத்தியர்கள் வெளியூர் வைத்தியர்கள் என்று பலர் முயன்றும் ஜாமீன்தாரின் நோயை குணப்படுத்தவே முடியவில்லை. தெய்வ பக்தியில் சிறந்தவரான ஜமீன்தார். குடும்பத்தினரது வேண்டுகோளின் படி சிதம்பரம் சென்று நடராஜ பெருமானை தரிசித்து முறையிடுவது என முடிவு செய்தார். அதன் படி அமைச்சர் மற்றும் வீரர்கள் சூழ பல்லக்கில் பயணித்தார். நெடு நாள் பயணத்துக்குப் பின் சிதம்பரத்தை அடைந்து நடராஜப் பெருமானின் ஆலயத்தினுள் நுழைந்தனர்.

புனித தீர்த்தமான சிவகங்கை திருக்குளத்தில் நீராடிவிட்டு கனக சபையைக் கண்ணராக் கண்டார்.  மலர்களால் சிவானரைத் தொழுதார். அவரது கண்களில் இருந்து நீர் பெருகியது. பிறவி நோய் தீர்க்கும் பெருந்தகையே அடியவர்களது இன்னல்களைக்களையும் அம்பலவாணா அடியேனைப் படுத்தும் மகோதரத்தை நீக்கி அருள் மாட்டாயா?என்று வேண்டினார். ஆட்சியை மறந்தார் ஆயிரங்கால் மண்டபத்திலேயே தங்கினார். ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடி ஆறு கால பூஜையை  அனுதினமும் தரிசித்தார். பாலும் பழமும் உண்டு விரதம் அனுஷ்டித்தார். ஆலயத்துக்கு வந்த பக்தர்களும் ஜமீன்தார் குணமாக வேண்டி இறைவனிடம் பிரார்த்தித்தனர். இப்படியாக ஒரு மண்டல காலம் அங்கு தங்கி இருந்தார் ஜமீன்தார். 48ம் நாள் விரதம் பூர்த்தியானது. ஆனால் மகோதர நோய் மறையவில்லை. மனம் கலங்கினார் ஜமீன்தார். அன்றிரவு ஆலயக்கதவு மூடப்பட்டது. உடன் வந்தோர் அனைவரும் உறக்கத்தில் ஆழ்ந்தனர். ஆறாத துயரத்தில் தவித்த ஜமீன்தார் நடராஜ பெருமானுக்கு அருகே சென்றார்.

தில்லையம்பலவாசா உன்னையே நம்பி வந்தேனே. உன்னை மட்டுமே நம்பி இருந்தேனே. என்னைக் கைவிடாலமா?ஒரு மண்டல காலம் உன் சந்நிதியில் தவமாகத் தவம் இருந்து உடல் நலம் குணமாகாமல் நான் ஊர் திரும்பினால் ஊரே என்னை மட்டுமின்றி உன்னையும் பழிக்காதா? எனவே விடிவதற்குள் என் நோய் தீர வழி பிறக்க வேண்டும். இல்லையெனில் சிவகங்கை குளத்தில் வீழ்ந்து என்னை நானே மாய்த்து கொள்வேன். இது சத்தியம் என்றார் ஜமீன்தார். பிறகு அயர்ச்சியில் சந்நிதியிலேயே தூங்கிப் போனார். அவர் கனவில் தோன்றிய நடராஜ பெருமான். அன்பனே வருந்தாதே உனக்கு ஏற்பட்ட நோயைத் திர்க்கவல்ல சங்கு ஸ்வாமிகள் பாண்டிய தேசத்திலே பசுவந்தனை எனும் தலத்தில் உள்ளான். எனக்கு மிகவும் வேண்டிய அடியவன். பரமஞானி விடிந்ததும் அவனைத் தேடிப் புறப்படு. நலம் பெறுவாய் என்று அருளினார். இறைவன் அருளியதில் குளிர்ந்து போன ஜமீன்தார். விடிந்ததும் சிவகங்கை தீர்த்தத்தில் நீராடிப் சிவனாரை வணங்கி விட்டு பசுவந்தனை நோக்கிப் புறப்பட்டார். பல நாட்கள் பயணித்து பசுவந்தனை திருத்தலத்தை அடைந்தார்.

பல்லக்கில் ஜமீன்தார் வருவதைக் கண்டு ஆச்சரியத்துடன் பார்த்த ஊர்மக்கள் பல்லக்கைத் தொடர்ந்தனர். அவர்களிடம் இந்த ஊரில் சங்கு ஸ்வாமிகள் என்பவர் எங்கே வசித்து வருகிறார்? என்று பவ்யமாகக் கேட்டார். சங்கு ஸ்வாமிகளா?அப்படி ஒரு ஆசாமி இந்த ஊரிலேயே இல்லை என்றனர் மக்கள். இந்த ஊரில் தான் இருக்கிறார். ஒரு வேளை அந்தத் தவசீலரைப் நீங்கள் தரிசித்தது இல்லையோ? அப்போது கும்பலில் இருந்த ஒருவன். மகாராஜா இந்த ஊரில் சங்கு ஸ்வாமிகள் என்று எவரும் இல்லை. ஆனால் சங்கு என்று ஒரு சோம்பேறி இருக்கிறான். ஊருக்கு ஒதுக்கு புறமா இருக்கிற பாழடைந்த மண்டபத்தில் அந்தச் சோம்பேறி படுத்து கிடைப்பான் என்றான். ஜமீன்தாரின் முகம் பிரகாசம் ஆனது. ஆமாம் அவர் தான் நான் அவரைத்தான் தரிசிக்க வேண்டும். எனக்கு வழி காட்டுங்களேன் என்றார் கெஞ்சலாக ஊர்ஜனங்கள் முன்னே நடக்க பாழடைந்த மண்டபம் நோக்கிப் பல்லக்கு புறப்பட்டது. அங்கே மண்டபத்தின் சிதிலமடைந்த திண்ணையில் கால் மேல் கால் போட்டு ஏதோ சிந்தித்த பாவனையில் இருந்தார் சங்கு ஸ்வாமிகள்.

பல்லக்கில் இருந்து இறங்கிய ஜமீன்தார் ஸ்வாமிகளை நோக்கி மெள்ள நடந்தார். கண்ணில் நீர் மல்க அவரை வணங்கினார். தட்டுகளில் பழங்களும் பலகாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. ஜமீன் தாரை ஏறெடுத்துப் பார்த்த சங்கு ஸ்வாமிகள் என்ன அப்பனே அந்த நடராஜ் பெருமான் உன் நோயைத் தீர்க்க முடியவில்லை என்று என்னிடம் அனுப்பி இருக்கிறாரோ? எல்லாமே ஒரு நாடகம் தான். இந்தா இந்தப் பழத்தைச் சாப்பிடு என்று தட்டில் இருந்த பழம் ஒன்றை எடுத்து அவருக்குக் கொடுத்தார். இறை அருளால் கிடைத்த தெய்வப் பிரசாதம் எனக்கருதி அதை உண்டார் ஜமீன்தார். என்னே ஆச்சிரியம். அந்தப் பழத்துண்டுகள் வயிற்றுக்குள் சென்றதும் ஒரவித புத்துணர்வு ஜமீன்தாரை ஆட் கொண்டது. அமிர்தத்தை உண்டவர் போல் மகிழ்ந்தார். ஆடினார் பாடினார் சங்கு ஸ்வாமிகளுக்கு நன்றி தெரிவித்து விழுந்து வணங்கினார். அவரது மகிமையை ஊர் மக்களுக்கும் புரிய வைத்தார். சங்கு ஸ்வாமிகள் சம்பந்தப்பட்ட எந்த ஒரு வைபவத்துக்கும் சிங்கம்பட்டி ஜமீனில் இருந்து உரிய மரியாதை இப்போதும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. பசுவந்தனை மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் பாசனம் மற்றும் குடி நீருக்கு எப்போதுமே தட்டுப்பாடு உண்டு. காரணம் இங்கு ஆறு குளங்கள் எதுவும் கிடையாது. எனவே மழை நீரை சேகரித்து வைத்து அதைத் தட்டுப்பாடான காலங்களில் பயன் படுத்துவது வழக்கம். ஒரு வருடம் மழை பொய்த்துப் போனாலும் அதோகதிதான்.

இது போன்ற தருணத்தில் சங்கு ஸ்வாமிகளே பல ஊருணிகளை (குளம்) ஏற்படுத்தி இருக்கிறார். அதாவது அவர் எங்காவது பயணிக்கும் போது எதிர்ப்படும் எவராவது சாமி ரொம்ப தாகமாக இருக்கு. தண்ணி வேணும் என்று கேட்டு விட்டால் போதும். ஓரிடத்தில் உட்கார்ந்து கைகளால் மணலைத் தோண்டுவார். உடனே அவர்களும் சேர்ந்து தோண்டுவார்கள். சிறிது ஆழ்த்திலேயே தண்ணீர் ஊற்று போல பிய்ச்சிக்கொண்டு வரும். ஸ்வாமிகளின் அருள் திறத்தால் உண்டான பல ஊருணிகள் இன்றும் பசுவந்தனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் உள்ளன. இவை சங்கு ஸ்வாமிகள் ஊருணி என்றே அழைக்கப்படுகின்றன. எல்லா மஹான்களையும் போலவே தான் சமாதி ஆகப்போகும் காலம் இது தான் என்று துல்லியமாகத் தன் சீடர்களிடம் சொல்லி அதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார் சங்கு ஸ்வாமிகள். அந்த நாளும் வந்தது. அன்று பசுவந்தனை கயிலாயநாதர் ஆலயம் சென்று இறைவனைத் தொழுதார். பிறகு அவர் சொன்ன அதே நேரத்தில் ஜப மாலையுடனும் சின் முத்திரையுடனும் சமாதி ஆனார். ஸ்வாமிகள் அவர் கூறியிருந்தபடி சமாதி அமைத்து. அவரது பூத உடலை நல்லடக்கம் செய்தனர் சீடர்கள். இன்றும் தன் சமாதி கோயிலை நாடி வரும் பக்தர்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றி நல்லருள் புரிந்து வருகிறார் சங்கு ஸ்வாமிகள். நாமும் அவரின் திருவடி பணிவோம். திருவருள் பெறுவோம்.

தலம்: பசுவந்தனை சிறப்பு: சங்கு ஸ்வாமிகள் சமாதி கோயில்

இருப்பிடம்: கோவில்பட்டியில் இருந்து தெற்கே சுமார் 24 கி.மீ தொலைவில்  இருக்கிறது. பசுவந்தனை மதுரை நெல்லை ரயில் மார்க்கத்தில் கடம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே சுமார் 20 கி.மீ தொலைவு. மதுரை நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறில் இருந்து கிழக்கே சுமார் 21 கி.மீ தொலைவு. தூத்துக்குடி மதுரை நெடுஞ்சாலையில் எப்போதும் வென்றானில் இருந்து மேற்கே சுமார் 11 கி.மீ தொலைவு.

செல்லும் வழி: பகவந்தனைக்கு அருகில் உள்ள நகரம் கோவில்பட்டி தமிழகத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் கோவில்பட்டியை அடைவது எளிது. கோவில்பட்டி நெல்லை தூத்துக்குடி முதலான ஊர்களில் இருந்து பகவந்தனைக்குப் பேருந்து வசதி உண்டு. என்றாலும் பேருந்து சர்வீஸ் குறைவாகவே உள்ளது.

தொடர்புக்கு: அருள்மிகு கயிலாதநாத ஸ்வாமி திருக்கோயில்.
பகவந்தனை : 625 718, ஒட்டப்பிடாரம் வட்டம். தூத்துக்குடி மாவட்டம். போன்:0461-2282308.


ஞாயிறு, 7 ஜூலை, 2019

பசுவந்தனை சங்கு ஸ்வாமிகள் (பகுதி-1)

மஹான்களது அவதார காலங்கள் மாறுபட்டிருந்தாலும் அவர்களது நோக்கம் ஒன்று தான். அதாவது பக்தியை இயன்று வரை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வது. வறுமை நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் அப்பாவி மக்களுக்கு உதவுவது. இவையே அவர்களின் நோக்கங்கள். பக்தர்களது எளிய வாழ்வுக்கு என்னென்ன தேவையோ அவற்றை என்றென்றும் கிடைக்கும்படி அருள்புரிந்தனர். வைத்தியர்களால் கூடத் தீர்க்க முடியாத விதிப் பயனால் விளைந்த நோய்களை தங்களது அருளாசியினால் பறந்தோட வைத்தார்கள்.

தென் தமிழகத்தில் கோவில் பட்டியில் இருந்து சுமார் 24 கி.மீ.தொலைவில் பசுவந்தனை எனும் கிராமம் உண்டு. இங்கே விவசாயக் குடும்பத்தில் அவதரித்த சங்கு ஸ்வாமிகள் என்பவர் மிகச்சிறந்த சித்த புருஷர். இவர் பிறந்தது. சமாதி ஆனது முதலான விவரங்கள் பல காலமாக அறியப்படாமலே இருந்தது என்றாலும் ஸ்வாமிகளுடன் இருந்து சீடர்களது காலத்தைக் கொண்டு ஓரளவு ஊகித்து அறிந்துள்ளனர். அதாவது சங்கு ஸ்வாமிகள் பிறந்தது 1785 என்றும் ஜீவசமாதியானது 1870 என்றும் அனுமானிக்கப்படுகிறது. சங்கு ஸ்வாமிகளின் தந்தையார் பெயர் சிவஞான தேசிகர். இவருக்கு  இரு மகன்கள். மூத்தவர் தங்கப்பிள்ளை. இளையவர் சங்கு ஸ்வாமிகள் (தங்கப் பிள்ளையின் வாரிசான ஏழாவது தலைமுறையினர் பசுவந்தனையில் இன்றும் உள்ளனர் இவர்களில் மூத்தவரான பிரம்மநாயகம் சங்கு ஸ்வாமிகளின் சமாதி வழிபாடுகளை கவனித்து வருகிறார். அடுத்தவரான ஐ.  மாடசாமி பிள்ளை பசுவந்தனை அருள் மிகு கயிலாயநாதர் ஆலயத்தில் கணக்கராகப் பணிபுரிகிறார்) சங்கு ஸ்வாமிகளுக்குத் திருமணம் ஆகவில்லை.

சங்கு ஸ்வாமிகள் எப்படி இருப்பார் என்பதற்கான தகுந்த புகைப்பட ஆதாரங்கள் இன்று வரை கிடைக்கவில்லை. எனினும் இளம் வயதில் ஸ்வாமிகள் இப்படி தான் இருந்திருப்பார் என்ற யூகத்தின் பேரில் அவருடைய அன்பர்கள் படம் ஒன்றை வரைந்து உருவாக்கியுள்ளனர். அதில் கட்டுமஸ்தான தேகம் சாந்தமும் தெய்வீகமும் தவழும் திருமுகம். கம்பீரமான மீசை. திருநீறும் ருத்திராட்சமும் துலங்கும் திருமேனி என அருள் ததும்பும் வடிவமாகத் திகழ்கிறார் ஸ்வாமிகள். சங்கு ஸ்வாமிகள் அவதரித்த பசுவந்தனையிலேயே இவரது ஜீவசமாதி இருக்கிறது. சமாதியின் மேல் லிங்கப் பிரதிஷ்டை முன்னே நந்திதேவர். தவிர இங்கு விநாயகரும் தரிசனம் தருகிறார். ஜீவசமாதி கதைச் சிற்பங்கள் நிறைந்த விமானத்துடன் திகழ்கிறது. பிராகாரத்தில் சங்கு ஸ்வாமிகளின் சிஷ்யரான நத்தக்காடு சங்கு ஸ்வாமிகள் சமாதி இருக்கிறது. மேலும் கோவிந்தபுரம் சங்கு ஸ்வாமிகள். சிங்கிலிப்பட்டி சங்கு ஸ்வாமிகள். மாவிலிப்பட்டி சங்கு ஸ்வாமிகள் முதலான சிஷ்யர்களும் சங்கு ஸ்வாமிகளுக்கு உண்டு. இவர்களது சமாதிகள் வெவ்வேறு இடங்களில் உள்ளன். தினமும் காலை ஒன்பது மணிக்கு சங்கு ஸ்வாமிகளின் ஜீவசமாதிக்கு வழிபாடு நடைபெறுகிறது. இங்கு வைக்கப்படும் பிரார்த்தனை குறைவின்றி நிறைவேறுவதாகச் சொல்கிறார். இங்கு பூஜைகள் செய்து வரும் பிரம்மநாயகம். ஆண்டுதோறும் ஆவணி மாதம் அசுவினி நட்சத்திர தினத்தன்று சங்கு ஸ்வாமிகளின் குருபூஜை சிறப்புற நடைபெறுகிறது.

சிறுவயதில் இருந்தே இறை சிந்தனை. உயிர்களிடத்தும் பயிர்களிடத்தும் மிகுந்த அன்பு என வாழ்ந்தவர் சங்கு ஸ்வாமிகள். தனக்குக் கெடுதல் செய்தவர்களிடமும் அன்பு பாராட்டியவர். பசுவந்தனை கயிலாயநாதர் ஆலயம் மற்றும் இதனருகே தான் உருவாக்கிய நந்தவனத்திலும் எப்போதும் இருந்து வந்த ஸ்வாமிகளை இவருடைய வீட்டார். மட்டுமின்றி ஊர்மக்களும் புரிந்து கொள்ளவே இல்லை. வீடு உதவாக்கரை என்றது. ஊரோ பித்தர் என்றது. தன்னிலை மறந்த நிலையில் பல மணி நேரம் ஆகாயத்தையே அண்ணாந்து பார்த்தப்படி இருப்பார் ஸ்வாமிகள். மேகக் கூட்டங்களின் முடிவில்லாத பயணத்தையே வெறித்து கவனிப்பார். அப்போது எவரேனும் வந்து ஏதேனும் கேட்டால் எளிதில் சுயநினைவுக்கு வரமாட்டார். சில நேரம் வாய் விட்டுச் சிரிப்பார். சில நேரம் கேவிக்கேவி அழுவார். இரவு வேளைகளில் வயல்காடுகளில் தனியே உலவிக் கொண்டிருப்பார். மழை வெயில் என்று எதைக் குறித்தும் அறியாமல் தன்னுள் ஆழ்ந்திருந்த அவரை எந்த இயற்கையும் பாதித்ததில்லை.

பள்ளிக்குச் சென்று பாடம் படித்தார?தெரியவில்லை. ஆனால் வாழ்வியல் பாடம் மொத்தத்தையும் அறிந்திருந்தார் ஸ்வாமிகள். பசி உணவு என்றெல்லாம் எண்ணியது கிடையாது. ஆனால் பிறது பசியைப் போக்கியுள்ளார். பிறரது சந்தோஷத்துக்காக தன்னை வருத்திக்கொண்டு உழைத்திருக்கிறார்.  சொந்தக்காரர்களது உத்தரவுக்கு இணங்கி இரவு பகல் பாராமல் வயலுக்கு நீர் பாய்ச்சி இருக்கிறார். அறுவடை செய்யப் பட்ட நெற்கதிர்களையும் வாழைக்குலைகளையும் கூலியாள் போல் தலையில் சுமந்தபடி சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்திருக்கிறார். ஆனால் இதற்காக ஊதியமே பெற்றுக்கொள்வில்லை ஸ்வாமிகள். எவர் எந்த வேலையைக் கொடுத்தாலும் புன்னகைத்தபடி அதைச் செய்து முடிப்பார். வீட்டு வேலைகள் எதுவும் செய்யாத சங்கு ஸ்வாமிகள் பிறர் தரும் வேலைகளைச் சிரமேற்கொண்டு செய்து முடிப்பதை அறிந்த அவருடைய தந்தையார் மனம் வெதும்பினார். வீட்டு வேலைகளைச் செய்வதற்கு அவர் தயாராகவே இருக்கிறார். நீங்கள்தான் கொடுப்பதே இல்லை. எவர் சொல்லியோ வேலை செய்பவர் நீங்கள் சொல்லியோ  செய்யாமல் இருப்பார்? என்று சொன்னர்கள் சிலர். அதன்படி ஒரு நாள் சங்கு ஸ்வாமிகளை அழைத்துக்கொண்டு வயலுக்குச் சென்ற அவருடைய தந்தையார் ஏர் பூட்டிக் கொடுத்தார். மதியத்துக்குள் இந்த வயல் முழுவதும் உழுது முடிக்க வேண்டும் கவனமாக வேலை செய் என்று சொல்லிச் சென்றார்.

ஸ்வாமிகள் வயலை உழ ஆரம்பித்தார். மதியம் நெருங்க நெருங்க சூரியனின் வெம்மை உழுது கொண்டிருந்த மாடுகளைச் சுட்டெரித்தது. வெயிலில் மாடுகள் மிகுந்த சிரமப்படுகின்றனவே என்று இரக்கப்பட்டு தான் உடுத்தி இருந்த வேட்டியை அவிழ்த்து. அதை நீரில் நனைத்து ஈரம்சொட்டச் சொட்ட மாடுகளின் மேல் போட்டார். மகனுக்கு இட்ட வேலையை எந்த அளவுக்கு முடித்துள்ளான் என்று அறிய அப்போது அங்கே வந்தார். அவருடைய தந்தை மாடுகளின் மீது மகன் ஈர வேட்டியை நனைத்து போட்டிருப்பதைக் கண்டு ஆத்திரமானார். அடேய் பைத்தியக்காரா மாடுகளின் மேல் ஈரத்துணியைப் போட்டு இப்படி வேலை செய்கிறாயே உடல் தகிக்கிறது. என்று அந்த மாடுகள் உன்னிடம் சொன்னதா? என்று சொல்லி விட்டு ஸ்வாமிகளை ஆவேசத்துடன் அடித்தார். தன்மேல் அடி விழுந்த போதும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் தந்தையே என்னை அடிக்காதீர்கள். உங்களுக்குத்தான் கைகள் வலிக்கும் என்றார் ஸ்வாமிகள். அவ்வளவு தான் அந்த நிமிடமே தன் உடலில் இனம் புரியாத வலி ஏற்படுவதை உணர்ந்தார் தந்தையார். மகனை எந்தக் கையால் அடித்தாரோ அந்தக் கையிலும் தோளிலும் கடும் வலி ஏற்பட்டது. ஐயோ வலி தாங்க முடிய வில்லையே என அலறியபடி வயலிலேயே சாய்ந்து விட்டார். அப்போது தந்தையின் தோளையும் கைகலையும் மெள்ள வருடினார் ஸ்வாமிகள்.

தந்தையே கவலை வேண்டாம் தங்களுக்கு ஏற்பட்ட வலி பறந்து போய் விடும் என்றார். அடுத்த கணமே வலி மாயமானது. மகனிடம் ஏதோ விசேஷ சக்தி குடி கொண்டிருப்பதை அப்போது தான் உணர்ந்தார் தந்தை. அதன் பின் அவனது செயல்களை கேலி செய்வதை அறவே நிறுத்திக் கொண்டார். இதே போல் ஸ்வாமிகளின் அண்ணன் அவரிடம் அவஸ்தைப்பட்டது. தனிக்கதை ஓர் அதிகாலை வேளையில் சங்கு ஸ்வாமிகளிடம். அடேய் நம் வயலுக்குச் சென்று ஏற்றம் இறைத்து நீர் பாய்ச்சு என்றார் அவருடைய மூத்த சகோதரர். நம் வயல் என்று தனியே இருக்கிறதா என்ன? ஊரில் உள்ள வயல்களை அனைத்தும் நம்முடையதுதானே? அண்ணனுக்குக் கோபம் வந்தது. ஏனப்பா நம் வயல் எங்கே இருக்கிறது என்று உனக்குத் தெரியாதா? வயது மட்டும் ஏறிக்கொண்டே போகிறது. வாழ வேண்டிய வழி தெரியவில்லையே. சரி நம் வயலைக் காட்டுகிறேன். வா என்றவர் ஸ்வாமிகளின் கையைப் பிடித்து கொண்டு தெருவில் இறங்கி நடந்தார். அந்த இருட்டு வேளையில் சகோதரரின் உத்தரவுக்கு மறுப்பேதும் இன்றி அவருடன் சென்றார் ஸ்வாமிகள். இதோ இது தான் நமக்கு வயல். பொழுது விடிந்ததும் நான் மீண்டும் வருவேன். நம் வயல் முழுவதும் தண்ணீர் பாய்ந்திருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு கிளம்பினார். அண்ணன் சகோதருடைய உத்தரவுப்படி ஏற்றத்தின் மூலம் தண்ணீர் இறைத்து வயலில் பாய்ச்சினார். ஸ்வாமிகள். இதைக்கண்ட பக்கத்து வயல்காரன் இது தான் தக்க தருணம் என்று மடையைத் தனது வயல் பக்கம் திருப்பி விட்டான்.


தொடரும்.