ஞாயிறு, 3 ஜூன், 2018

போனவர்களுகு

நமது கதை நாம் இருந்ததோடு முடிவதில்லை. நம்முள் இதுவரை இருந்த சூக்ஷ்ம உடல் தொடர்கிறது. அந்த சூக்ஷ்ம உடலில் நமது எண்ண பதிவுகள் அப்படியே இருக்கும். இதை தான் வாசனை  என்கிறோம். பூர்வ ஜென்ம வாசனை இது தான். சிலபேருக்கு  எந்த ஜென்மத்திலோ நடந்த வாசனைகள், அதாவது நினைவுகள் வந்து அவர்கள் பேசுவது ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா. எங்கோ ஒரு பெண்மணி தான் பல நூற்றாண்டுகள் முன்பு அக்பரின் மனைவியாக இருந்தாள்  என்று சொன்னதாக பத்ரிகைகள்  சொல்லியது ஞாபகம் இருக்கிறதா? நான்  உடலோடு இருக்கும் போது  இந்த எண்ணங்களை அலசி, பிரித்து பார்த்து எதை வெளியே கொண்டுவர வேண்டும். எதை உள்ளேயே  அமுக்கி வைக்கவேண்டும் என்று தீர்மானித்தோம். அந்த உடல் இப்போது இல்லை. எரித்து விட்டார்கள். எண்ணங்கள் மட்டும் சூக்ஷ்ம உடலோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் எண்ணங்கள் தலை தூக்கும்.

அதற்கு தான் நல்ல எண்ணங்கள் மட்டும் நிலைக்கட்டும் என்று  இறக்கும்போது ஒருவன் காதில் தாரக மந்திரம் ஓதுகிறோம். விஷ்ணு சஹஸ்ரநாமம் படிக்கிறோம், கீதை பாராயணம் எல்லாமே. கட்டுப்படுத்தும் உடல் இல்லை என்பதால் கடைசியில் ஒருவன்  பயத்தோடு இறந்தால் அந்த பயம் அவனது சூக்ஷ்ம உடலில் தலை தூக்கும்.  அதே போல் தான் கோபம், ஆத்திரம் அதிகமாக கட்டுப்பாடின்றி புலப்படும். பேய் பிசாசு பழிவாங்கியது என்றெல்லாம் இதனால் தான் பேசுகிறாரகள். நல்ல எண்ணங்கள் சொர்க்கத்தில், மற்றவை நரகத்திலும் தள்ளும் என்பது இதனால் தான். இதையே கர்ம பலன் என்போம்..இதை முழுதும் அழிக்க, விலக்க , பல பிறவிகள், பல உடல்கள் வேண்டும். சூக்ஷ்ம சரீரம்  உடலை தேடும், அது மீண்டும் அதை பிரிந்த உடலை அடையமுடியாதபடி துவாரங்கள் அடைபட்டுவிட்டது. அது இறந்த தனது முந்தைய உடலையே சுற்றிக்கொண்டிருக்கும். முக்கியமாக  நாசித்துவாரம் , மூலாதாரம் ரெண்டின் வழியாக தான் மூச்சு போகும் வரும், இதையே   தான் பிராணன் அபானன்  என்று  மூக்கு மலத்துவாரம் என்கிறோம். மூக்கை பஞ்சு அடைத்தும், மற்றதை கட்டை விரல்களை இணைத்து வழியை முடியும் விடுகிறார்கள்.

ஊரார் உற்றார் வந்த பிறகு காரியங்கள் துவங்குகிறது. இறந்தவன் தலை அருகே செங்கல் ஹோமகுண்டம் தயார் செய்வது  எம தர்மனுக்கு மரியாதைக்காக. உடல் இனி பஞ்ச பூதங்களை அடைவதால் அதற்கு பூத உடல் என்று பேர். அதை ஒரு நூலின், கயிறின் மூலம்  ஹோமகுண்ட கும்பம், அக்னியோடு இணைப்பார்கள். ஜீவன் அக்னியோடு சங்கமமாகுமுன் அதை நீரால் சுத்தப்படுத்துகிறார்கள். பிறகு தான்  உடலை அக்னிக்கு அளிக்கவேண்டும். நெருங்கிய  உறவினர் அந்த சடங்குகளை நிறைவேற்றுகிறார்கள்.   கல் ஊன்றுதல் என்பதை பாஷணஸ்தாபனம் என்பார்கள்.  இந்த  சடங்கில் குடும்பத்துக்கு குடும்பம் மாறுதல் இருக்கிறது. அதற்கான வழிமுறைகள் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறதை புரோகிதர்கள் அறிந்து கர்மாவை செய்ப்பவர்களுக்கு விளக்க வேண்டும். என்ன செயகிறோம் என்பதே தெரியாமல் எதையும் செய்தல் தவறு இதற்கிடையில்  பெரிய கும்பல் சேர்ந்து விடுகிறது. இறந்தவருக்கு மலர் சூட்ட, அஞ்சலி செலுத்துபவர்கள் வருவார்கள். எதற்காக இறந்த உடலுக்கு  பூ மாலைகள்?  இதற்கு  சாஸ்திரம் எதுவும் இல்லை. இறந்தவர் தெய்வமாகிவிட்டார் என்ற  நம்பிக்கை அப்படி மரியாதை செலுத்த வைக்கிறது. அது ஒரு பழக்கமாக, வழக்கமாக ஆகிவிட்டது. இறந்த உடலுக்கு செய்யவேண்டியது  பிரேத சம்ஸ்காரம் எனும் சடங்குகள் மட்டுமே.

இறந்தவரின் குடும்ப நபர்கள், மனைவி, பெண் பிள்ளை பேரன் பேத்தி மருமகன் மருமகள் மற்றும் நெருங்கிய சுற்றம், ஆகியோர் ஸ்நானம் செய்து ஈரத்துணியுடன், தலை துவட்டாமல் குடத்தில் ஜலத்தோடு  இறந்தவர் கால் முதல் தலை வரை உடலை  நனைப்பார்கள். தலை அருகே காலி குடம் கவிழ்த்து வைத்து அதிலிருந்து வழிந்த ஜலத்தை அதன் மேல் தெளித்து பிறகு அந்த பாத்திரம் உடலின் வடக்கு பக்கத்தில் வைப்பார்கள். வடக்கே கங்கை இருக்கிறது. அதன் ஜலம் இறந்தவர் உடலை புனிதப்படுத்துவதாக ஐதீகம். அந்த ஜல பாத்திரமும் கங்கைநீரால் புனிதமாகியது.   இது தான் பிரேத அபிஷேக பூஜை. பிறகு அனைவரும் பிரேதத்தை  சுற்றி வணங்குவார்கள்.   இதை செய்வது அஸ்வமேத யாகம் செய்த பலன் என்று சொல்வதுண்டு.

பிறகு அந்த இடம் ஈரம் துடைக்கப்பட்டு உடலை துடைத்து ஆணோ பெண்ணோ புது ஆடை அணிவிப்பார்கள்.  இனி நகைகள் ஆபரணங்கள் எதுவும் கிடையாது விடுவார்கள். தெற்கு பார்த்த அந்த உடலை அனைவரும் வணங்கிய பின்  பிரயாண ஏற்பாடுகள். அதற்கான மந்திரங்கள் ஆரம்பிக்கும்

வெள்ளி, 25 மே, 2018

பூஜையில் உபயோகப்படுத்தும் நைவேத்ய பொருள்களின் சமஸ்க்ருத பெயர்கள் :

1) வெற்றிலைப் பாக்கு - தாம்பூலம்

2) முழுத்தேங்காய் - நாரிகேலம்

3) பல தேங்காய் மூடிகள் - நாரிகேல கண்டாணீ

4) வாழைப்பழம் - கதலி பலம்

5) மாம்பழம் - ஆம்ர பலம்

6) விளாம்பழம் - கபித்த பலம்

7)நாகப்பழம் ( நாவல்பழம்  ) - ஜம்பு பலம்

8) பலாப்பழம் - பனஸ பலம்

9) சாத்துக்குடி - நாரங்க பலம்

10) ஆப்பிள் பழம் - காஷ்மீர பலம்

11) பேரிக்காய் - பேரீ பலம்

12) கொய்யாப் பழம் - பீஜா பலம்

13) திராட்சை பழம் - திராட்ஷா பலம்

14) பேரீச்சம் பழம் - கர்ஜீர பலம்

15) பிரப்பம் பழம் - வேத்ர பலம்

16) கரும்பு - இக்ஷூ தண்டம்

17) மாதுளம்பழம் - தாடிமீ பலம்

18) எலுமிச்சம்பழம் - ஜம்பீர பலம்

19) வடை - மாஷாபூபம்

20) மஞ்சள் பொங்கல் - ஹரித்ரான்னம்

21) எள்ளுச்சாதம் - திலோன்னம்

22) சர்க்கரைப் பொங்கல் - குடான்னம்

23) அக்காரவடிசல் - சர்க்கரான்னம்

24) வெண்பொங்கல் - முத்கான்னம்

25) புளியோதரை - திந்திரிணியன்னம்

26) வெள்ளைசாதம் - சுத்தான்னம்

27) எலுமிச்சைசாதம் - ஜம்பீரபலன்னம்

28) தேங்காய் சாதம் - நாரிகேலன்னம்

29) தயிர்சாதம் - தத்யோன்னம்

30) பலவித சாதங்கள் - சித்ரான்னம்

31) சுண்டல் - க்ஷணகம்

32) பால் பாயாசம் - க்ஷீர பாயஸம்

33) வெல்ல பாயாசம் - குட பாயஸம்

34) புட்டு - குடமிச்சபிஷ்டம்

35) முறுக்கு - சஷ்குலி

36) இட்லி - லட்டுகானி

37) கொழுக்கட்டை - மோதகானி

38) அப்பம் - குடாபூபம்

39) மாவிளக்கு - குடமிஸ்ஸபிஷ்டம்

40) அதிரசம் - குடாபூபம்

41) உளுந்து - மாஷம்

42) பயறு - முத்கம்

43) எள் - திலம்

44) கடலை - க்ஷணகம்

45) கோதுமை - கோதுமா

46) அரிசி - தண்டுலம்

47) அவல் - ப்ருதுகம்

48) நெய் - ஆஜ்யம்

49) பருப்பு பாயாசம் - குடபாயஸம்

50) பால் - க்ஷீரம்

51) சுக்கு வெல்லம் கலந்த நீர் - பானகம்

52) வெண்ணெய் - நவநீதம்

53) கல்கண்டு - ரஸ கண்டாளீ

56) மல்லிகைப்பூ - மல்லிகாபுஷ்பம்

57) செவ்வந்திப்பூ - ஜவந்திபுஷ்பம்

58) தாமரைப்பூ - பத்மபுஷ்பம்

59) அருகம்புல் - தூர்வாயுக்மம்

60) வன்னிஇலை - வன்னிபத்ரம்

61) வில்வ இலை - பில்வபத்ரம்

62) துளசி இலை - துளஸிபத்ரம்

63) ஊதுபத்தி / சாம்பிராணி - தூபம்

64) விளக்கு - தீபம்

65) சூடம் - கற்பூரம்

66) மனைப்பலகை - ஆசனம்

67) ரவிக்கைத்துணி - வஸ்த்ரம்

68) மஞ்சள்/குங்குமம் கலந்த அரிசி - மங்களாட்சதை

69) ஜலம் நிரப்பிய சொம்பு - கலசம்

70) திருமாங்கல்ய சரடு - மங்கலசூத்ரம்

71) மற்ற பட்சணங்கள் - விசேஷபக்ஷணம்

72) பூநூல் - யக்ஞோபவீதம்

73) சந்தணம் - களபம்

74) விபூதி - பஸ்பம்

75) வாசனை திரவியங்கள் - ஸுகந்தத்ரவ்யா
அம்மா

தாயன்பைப்போலக் கலப்படமே இல்லாத பூரணமான அன்பை இந்த லோகத்தில் வேறெங்குமே காண முடியவில்லை. பிள்ளை எப்படி இருந்தாலும், தன் அன்பை பிரதிபலிக்காவிட்டாலும்கூட, தாயாராகப்பட்டவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் பூரணமான அன்பைச் செலுத்துக் கொண்டேயிருக்கிறாள். பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு என்று இதைத்தான் சொல்லுகிறோம். தேவி அபராத க்ஷமாபன ஸ்தோத்திரம் என்று அம்பாளிடமே நம் குறைகளைச் சொல்லி மன்னிப்புக் கேட்டுக் கொள்கிற துதி ஒன்று இருக்கிறது. அதில் துஷ்டப்பிள்ளை இருப்பதுண்டு. ஆனால் துஷ்ட அம்மா என்று ஒருத்தி கிடையவே கிடையாது என்று வருகிறது. பரிபூரணமாக அன்பையும், தன்னலமே இல்லாத உழைப்பையும், அம்மா ஒருத்தியிடம்தான் பார்க்க முடிகிறது.

குழந்தையாகப் பிறக்கிறபோதே அம்மாவிடம்தான் ஒட்டிக் கொள்கிறோம். ஆகாரம் தருவதிலிருந்து சகலத்துக்கும் அவள்தான் குழந்தைக்குக் கதியாக இருக்கிறாள். வயது ஏறுகிற சமயத்தைவிட பால்யத்தில்தான் தாயார், குழந்தை இருவருக்கும் பரஸ்பர அன்பு மிக அதிகமாக இருக்கிறது. அதிலும் மனித இனக்கத்தைவிடப் பசுக்குலத்திட்தான் இந்த அன்பு நிரம்பித் ததும்புகிறது. கன்று அம்மா. என்று கத்துவதில் உள்ள ஆவல் மாதிரி வேறெங்கும் அன்பைப் பார்க்க முடியவில்லை. இதைப் பார்த்துதான் மநுஷ்ய ஜாதியே, அம்மா என்று கூப்பிட ஆரம்பித்ததோ என்று தோன்றுகிறது. தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு, மஹாராஷ்டிரம், கன்னடம் முதலிய பாஷைகளிலும் அம்மா என்றே தாயாரைச் சொல்கிறார்கள். மலையாளத்தில் "அம்மை"என்பார்கள். ஸம்ஸ்கிருதத்தில் "மா"என்றும் "அம்பா"என்றும் சொல்லுவதும் இதேதான். ஹிந்தியில் "மா", "மாயி''என்கிறார்கள். இங்கிலீஷ் மம்மி, மம்மா எல்லாமும் கன்று குட்டியின்

அம்மாவிலிருந்து வந்தவைதான் போலிருக்கிறது.

இந்த அம்மாவின் அன்பு ஒரு பக்கம் இருக்கட்டும். இவள் இந்த சரீரத்திற்கு மட்டும்தான் அம்மா. அவளுடைய அல்லது நம்முடைய சரீரம் போன பிற்பாடு இந்த அம்மாவுக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை. அப்புறம் வேறு கர்ப்பவாஸம். வேறே அம்மாள் வருவாள். இப்படிச் சரீரத்திற்கு மட்டும் அம்மாவாக இல்லாமல், உயிருக்கு அம்மாவாக இருக்கிற ஒருத்தி இருக்கிறாள். சரீரம் அழிகிற மாதிரி உயிர் அழிவதில்லை. இந்தச் சரீரம் போன பிற்பாடு அந்த உயிர் இன்னொரு சரீரத்திற்குப் போகிறது. இந்த உயிரின் அம்மாதான் நமக்கு சாசுவதமாக, நிரந்தரமாக, எந்நாளும் தாயாராக இருந்து கொண்டிருக்கிறாள். கன்றுக்குப் பசுவைப் போல எந்த ஜன்மத்திலும் எந்தக் காலத்திலும் எல்லாப் பிராணிகளுக்கும் தாயாராக இருக்கும் பரதேவதையின் பாதார விந்தத்தில் நிறைந்த அன்பு வைப்பதே ஜன்மா எடுத்ததன் பிரயோஜனம். ஜன்ம நிவிருத்திக்கும் அதுவே வழி. அதாவது, உயிர் சரீரத்தை விட்டபின் இன்னொரு சரீரத்தில் புகாமல் பேரானந்தத்தில் கரைவதற்கும் அந்த அம்மாதான்.

நமக்கு இருக்கிற சக்தி எல்லாம் அவளுடையதுதான். ஒரே அகண்ட பராசக்திதான், கண்டம் கண்டமாக, துண்டு துண்டாக ஆகி இத்தனை ஜீவராசிகளிடமும் துளித்துளி சக்தியை வெளிப்படுத்துகிறது. நாம் சொந்த முறையில் எதையும் சாதித்ததாகப் பெருமைப் பட்டுக் கொள்ளவும், அகம்பாவம் கொள்ளவும் நியாயமே இல்லை. நாம் எதைச் செய்திருந்தாலும் எல்லாம் அவள் கொடுத்த சக்தியால்தான் நடக்கிறது. இதை உணர்ந்து அகம்பாவம் சிறிதும் இல்லாமல் அவளிடம் சரணாகதி செய்தால் ஒரே அம்மாவான இவள் இகத்திலும் பரத்திலும் பரமாநுக்கிரஹம் செய்வாள். எப்படி எதுவும் கேட்கத் தெரியாத குழந்தைக்கு வேண்டியதைத் தாய் தானே கவனித்துக் கொள்கிறாளோ, அப்படியே ஜகன்மாதாவாகவும் கருணாமூர்த்தியாகவும் உள்ள அம்மா, உண்மையான பக்தி வைத்தவர்கள் தன்னை எதுவும் கேட்காவிட்டாலும்கூட, தானாகவே அவர்களுக்கு இகலோகத்தில் வித்தை, செல்வம், தேககாந்தி முதலிய தந்து, பின்பு ஞானத்தில் பழுத்துப் பராமானந்தத்தைபப் பெறும்படி அருள் புரிவாள். பரம ஞான அத்வைத ஆனந்தம் நமக்குக் கிடைத்து, நாம் அந்த ஆனந்தமாகவே ஆகிவிடுவது ஒரு பக்கம் இருக்கட்டும். அது அவள் நம் கர்மாவைத் தீர்த்து, என்றைக்கோ ஒருநாள் தரப்போகிற நிலை. அது கிடைக்கிறபோது கிடைக்கட்டும். அதுவே கிடைக்கவில்லையே என்கிற குறை இப்போது நமக்கு வேண்டாம். இப்போது நமக்குப் பரம அன்பு அம்மாவான அம்பாள் இருக்கிறாள். அவளுடைய அன்பை நினைத்து அவளிடமும் நாமும் அன்பைச் செலுத்துவதற்கு இப்போதே நமக்குச் சாத்தியமாகிறது. இதிலுள்ள ஆனந்தத்துக்கு மேல் நமக்கு எதுவும் வேண்டாம். அம்பாள் தியானத்தைவிட நமக்கும் நம் மாதிரியே அவளை அம்மாவாக்கிக் கொண்ட சகல லோகத்துக்கும் நிறைவான இன்பம் வேறில்லை. சகல லோகமும் சமஸ்த ஜீவராசிகளும் க்ஷேமமாக இருக்க அன்பே உருவான சாக்ஷ£த் அம்பிகையை எப்போதும் ஆனந்தமாக நினைத்துக் கொண்டிருப்போம்.
____________________________________________________
ஆலய வழிபாடு

உதவி பெற்றதற்கு நன்றி சொல்வதற்கு ஒரு சிறந்த கடமை. ஒரு சிறு புல்லைக்கூட சிருஷ்டிக்கத் திறனற்ற மனிதனுக்கு இத்தனை உணவும், உடையும், மற்ற உபகரணங்களும் வழங்கும் ஆண்டவனுக்கு நன்றி காட்டுவது நமது கடமை. இவ்வாறு நன்றி கூறும் அடையாளமாகவே நாம் உண்பதை அவனுக்கு முன் காட்டி விவேதனம் செய்ய வேண்டும். அவனுக்குக் காட்டிவிட்டுப் பிறகு நாம்தான் உண்ணப்போகிறோம். நாம் பலவிதமான ஆடை ஆபரணங்கள் அணிவதற்கு அருள் செய்யும் ஆண்டவனுக்குத் திரு ஆபரணங்களையும் வஸ்திரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். எல்லோருமே இவ்விதம் வீட்டில் பூஜை செய்து, திரவியங்களை ஈஸ்வரார்ப்பணம் செய்ய இயலாது. எனவே, சமுதாயம் முழுவதும் சேர்ந்து இப்படி சமர்ப்பணம் பண்ணும்படியான பொது வழிபாட்டு நிலையங்களாக ஆலயங்கள் எழுந்துள்ளன.

ஆதியில் மகரிஷிகள் மந்திர சக்தியால், எங்கும் நிறைந்த பரம்பொருளைச் சில விக்கிரங்களில் விசேஷ சாந்நித்தியம் கொள்ளச் செய்தனர். அப்படிப்பட்ட மூர்த்திகளைச் சுற்றிக் கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளன. வீட்டில் பூஜை செய்கிறவர் உள்பட அனைவரும் கோய்லுக்குப் போவது என்று கட்டுப்பாடாகப் பழக்கம் வைத்துக் கொண்டால்தான் அங்கு பூஜைகள் குறைவற நடக்கும். நான் கோயிலுக்குப் போகிறேன் என்றால், எனக்காகவாவது கோயிலைச் சுத்தமாக வைக்கிறார்கள். விளக்குகள் போடுகிறார்கள். நைவேத்தியம் சுத்தமாகச் செய்கிறார்கள். வஸ்திரம் அழுக்கில்லாமல் கட்டுகிறார்கள்.

சின்னஞ்சிறிய சூக்ஷ்மமான தர்மங்களை எல்லாம் மறந்து விட்டோம். நமக்கு உணவு தருபவனுக்கு நல்¢லபடி நிவேதனம் நடக்க வேண்டும். நமக்கு உடை தருபவனுக்கு நல்ல வஸ்திரம் இருக்க வேண்டும் என்பதையெல்லாம் கவனிக்கத் தவறுகிறோம். இப்போது ஒரு ஊரில் யார் ரொம்ப அழுக்குத் துணி கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்தால் ஸ்வாமிதான் என்று தெரிகிறது. நம் ஊர் கேயிலில் ஸ்வாமியின் வஸ்திரம் சுத்தமாயிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்திவிட்டோமானால், நம் மனஸின் அழுக்கும் போய்விடும். ஆலயம் தொழுவது சாலவும் நன்று. அரனை மறவேல், திருமாலுக்கு அடிமை செய் என்றெல்லாம் புண்ணிய மொழிகள் வழங்கும் இந்த நாட்டில், ஒவ்வோர் ஊரிலும் உள்ள ஈஸ்வரன் கோயிலையும் பெருமாள் கோயிலையும் நல்ல நிலையில் வைத்திருந்து வழிபாடு நடக்கச் செய்ய வேண்டும். இது நம் முதல் கடமை.

தற்போது ஆலய வழிபாட்டுக் கிரமங்களில் என்ன வேண்டுமானாலும் மாறுதல் செய்யலாம் என்று எண்ணப்படுகிறது. எங்கேயும் உள்ள மின்சாரத்தை வெளிப்படுத்த ஆங்காங்கே மின்சக்தி ஸ்தாபனம் ( Power House) இருப்பது போல், எங்கும் உள்ள ஈஸ்வர சக்தியை வெளிப்படுத்த ஆங்காங்கே மந்திர பூர்வமாக ஆகமபூர்வமாக ஆலயங்கள் எழுப்பப்பட்டு, அவற்றின் பூஜாக்கிரமங்கள் உருவாகி உள்ளன. மின்சக்தி இயந்திரத்தில் நாம் தாறுமாறாகக் குறுக்கிட்டால் தேகம் போய்விடும். அதுபோலவே ஆத்ம க்ஷேமத்துக்கான ஆலய யந்திரத்தில் குறுக்கிட்டால் ஆத்மா போய்விடும்.

குருக்கள் அநுஷ்டானம் இல்லாதவராக இருக்கிறாரே அதனால் சாந்நித்தியம் போகவில்லை என்றால், நாமும் எதைச் செய்தால் என்ன என்கிறார்கள். அதாவது பாக்கி இருக்கிற ஸ்வாமியையும் வெளியே அனுப்பிவிடலாம் என்கிறார்கள்.

ஒரளவு அநாசாரத்துக்குத் தாக்கு பிடிக்கிற சக்தி கோயில்களில் இருக்கிறது. அதற்காக முழுக்க அநாசரமாக்குவோம் என்று கிளம்பினால் நமக்குத்தான் பயன் நஷ்டமாகும். ஸ்வாமிக்கு ஒரு நஷ்டமும் இல்லை. கோயிலில் இப்போதுள்ள ஆசாரக் குறையை நிவர்த்தி செய்ய வேண்டுமேயன்றி, ஆகமத்தில் இல்லாத புது விஷயங்களைப் புகுத்தக்கூடாது. நாம் கட்டுப்பாடாக இந்த ஆசாரங்களைப் பின்பற்றி அத்தனை பேரும் கோவிலுக்குப் போவது என்று ஏற்பட்டால் குருக்களும்தானே சரியாகி விடுவார்.

ராஜீய விவகாரங்களின் பொருட்டு மத விஷயங்களை மாற்றக்கூடாது. புதிது ஸ்திரமாக இராது. ஆடி மாதம் வெள்ளம் வரும்போது கரையைச் சில இடங்களில் இடிக்கும். அதுபற்றிக் கவலை வேண்டாம். புது ஆவேசத்தைப பற்றிக் கோபம் கொள்ள வேண்டாம். ஜனங்களிடம் நாம் நியாயத்தை விளக்கினால் அவர்கள் ஒப்புக் கொள்வார்கள். புது ஆவேசம் தானாகப் போய்விடும். சீர்திருத்தக்காரர்கள் நம் சாஸ்திரங்களைப் படிக்கவில்லை. அதனால் கோபம் அடைகிறார்கள். அதற்காக நாமும் கோபம் கொள்ளலாகாது. எதிர்க்கட்சியிடத்திலும் நமக்குப் பிரியம் வேண்டும். ஆகமத்தின் கருத்தை நாம் அவர்களுக்குப் பிரியமாக எடுத்துச் சொல்லி விளக்க வேண்டும்.

இந்தக் கோவில்களைக் கட்டிய காலத்திலிருந்து இன்றுவரை அவற்றில் பின்பற்றப்படும் நியதிகளை அப்படியே காட்டவேண்டும். நாம் சரியாக இருந்து, உண்மையான பக்தியுடன் வழிபாடு செய்து, உண்மையான அன்புடன் எடுத்துச் சொன்னால் எல்லோரும் கேட்பார்கள். இன்று கோயில்கள் விஷயம் இப்படியானதற்கு நாமே காரணம் என்று உணர்ந்து, முதலில் நம்மைத் திருத்திக் கொள்வோமாக!
____________________________________________________
நமஸ்காரம்

பரமேஷ்வரன் மீது ஒரு ஸ்லோகம் இருக்கிறது. அதில் பக்தர் இப்படிச் சொல்கிறார். திரிபுர சம்ஹாரம் செய்த பிரபுவே. c என்னுடைய இரண்டு அபராதங்களை க்ஷமிக்க வேண்டும். அந்த இரண்டு அபராதங்கள் என்ன? போன ஜன்மத்தில் நான் உன்னை நமஸ்கரிக்காதது ஒர் அபராதம். வரப்போகிற ஜன்மத்தில் உன்னை நான் நமஸ்கரிக்காமல் இருக்கப்போவது இரண்டாவது அபராதம். போன ஜன்மத்தில் நான் உன்னை நமஸ்கரிக்கவில்லை என்று எப்படித் தெரிகிறது என்கிறாயா? எனக்கு இப்போது ஒரு ஜன்மம் ஏற்பட்டிருப்பதிலிருந்தே அது தெரிகிறது. போன பிறவியில் உன்னை நமஸ்கரித்து இருந்தால் அப்போதே எனக்கு மோஷம் கிடைத்திருக்கும். இந்த மறு பிறவியே ஏற்பட்டிராது. அது சரி, அடுத்த ஜன்மாவில் நமஸ்கரிக்க மாட்டேன் என்றது ஏன் தெரியுமா. இந்த ஜன்மாவில் உன்னை நமஸ்கரித்து விட்டேன் அல்லவா. அதனால் c எனக்குப் பிறவியே தர மாட்டாய். மறு ஜனமாவே இல்லாதபோது அப்போது உனக்குச் செய்ய வேண்டிய நமஸ்காரம் மட்டும் எப்படி இருக்கும். இப்படியாக போன ஜன்மா, வருகிற ஜன்மா இரண்டிலும் உன்னை வணங்காத குற்றத்தை மன்னித்துவிடு.

இந்த ஸ்லோகத்திலிருந்து என்ன ஏற்படுகிறது. மனப் பூர்வமாக ஈஸ்வரனை நமஸ்காரம் செய்து விட்டால் போதும். அவர் நம்மை ஜனன மரண சக்கரத்திலிருந்து விடுவித்து விடுவார். நம் பாவங்களையெல்லாம் போக்கி முக்தி தந்து விடுவார். இந்த ஸ்லோகத்தைச் சொன்னவர் கவித்வ சமத்காரத்தில் பாடியவரில்லை. அவர் பழுத்த அநுபவசாலி, எனவே அவரது வார்த்தையை பரிபூர்ணமாக நம்பி நாமும் ஈஸ்வரனிடத்தில் சரணாகதி என்று விழுந்து நமஸ்காரம் பண்ணுவோம். நமஸ்கரித்தால் மோஷம் நிச்சயம் என்ற நம்பிக்கையுடன் பண்ணினால் அப்படியே கிடைக்கும். சந்தேகமில்லை.

நமஸ்காரம் செய்வதாத் தண்டம் சமர்ப்பித்தல் என்பார்கள். தண்டம் என்றால் கழி அல்லது கோல் என்று அர்த்தம். கையில் பிடித்திருக்கிற ஒரு கோலை விட்டுவிட்டால் அது அப்படியே தடாலென்று கீழே விழுந்து விடும். அப்படியே இந்த சரீரத்தை நமதல்ல, இது ஈஸ்வரனுடையது என்கிற எண்ணத்துடன் கீழே போடுவதுதான் நமஸ்காரம். நம் சரீரம் வெறும் மரக்கோல்தான். உதவாத பொருளை அது தண்டமாகி விட்டது என்கிறோம். அப்படி தண்டமான வஸ்துதான் நம் சரீரம். இதைத் தூக்கிப் பிடித்து நிறுத்தி வைத்து ஆட்டுகிற சக்தி ஈஸ்வரன் கொடுத்ததே ஆகும். இந்த உடம்பை ஏதோ நாமே தூக்கி நடத்துகிறோம் என்ற எண்ணத்தை ஒழித்துவிட்டு, அதற்கு அடையாளமாக ஈஸ்வரன் முன் இந்தச் சரீரத்தைக் கீழே போடவேண்டும். அதுதான் தண்டம் சமர்ப்பிப்பது. ஜுரம் வந்திருக்கிறது. இதிலிருந்து நம்மைக் கடைத்தேற்றுவதற்காக, நமக்கு வந்திருக்கிற சம்ஸார ஜுரத்திற்கு புரிந்துகொண்டு, அதற்கு அடையாளமாக ஸ்வாமியின் முன் தண்டாகாரமாக விழுந்து நமஸ்கரிக்க வேண்டும்.

நாம் செய்கிறோம் என்கிற எண்ணம் போய்விட்டால் அதுவே ஸதாகால நமஸ்காரமம். அந்த அநுபவம் நமக்கு ஸித்திக்காத போதிலும் ஈஸ்வர சந்நிதியிலிருந்து அப்படி பாவித்து வணங்கித் தரையோடு, தரையாக எளிமையாகக் கிடக்க வேண்டும். இங்கே வணங்கிவிட்டால், அப்புறம் வெளியே எங்கேயும் வணங்காமல் இருக்கலாம். பெறுப்பை உன்னிடமே பூரணமாகக் போட்டேன் என்பதற்கு அடையாளம் சரீரத்தைத் தரையில் போடுவது, கொஞ்சம் பொறுப்பை நமக்கு வைத்துக் கொண்டால்கூட ஸ்வாமி தம் பங்கைக் குறைத்துக் கொண்டு விடுவார். இதில் அரைகுறைக்கு இடமே இல்லை. நம்முடைய நல்லது பொல்லாதது அவ்வளவும் அவர் விட்டபடி என்று சகல பொறுப்பையும் அவரிடம் தள்ளுவதற்கு வெளி அடையாளமாக உடம்பைத் தரையில் தள்ளி நமஸ்காரம் பண்ணவேண்டும். அப்படிச் செய்தால் நம் பாரம் அனைத்தயும் கிருபா சமுத்திரமமான ஸ்வாமியே ஏற்று அநுக்கிரகிப்பார்.
____________________________________________________
ஆலயமும் தெய்வீகக் கலைகளும்

இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன் இந்தியாவுக்கு வந்த மெகஸ்தனிஸ் அப்போது நம் ஜனங்கள் எவ்வளவு ஸத்துக்களாக வாழ்ந்தார்கள் என்பதைத் கூறியிருக்கிறான். இந்திய மக்களுக்குப் பொய்யே சொல்லத் தெரியாது. தெருவில் போட்டுக் கிடக்கிற பணத்தைக்கூட எடுத்துச் செல்ல மாட்டார்கள் என்றெல்லாம் மெகஸ்தனிஸ் சொல்லியிருக்கிறான். அந்தக் காலத்து ஜனங்களின் மனசு மாதிரியே இப்போதும் இருக்கக்கூடாதா என்று ஆசையாக இருக்கிறது.

அன்றைக்கு அவர்கள் அவ்வளவு உயர்வாக இருந்ததற்குக் காரணம் என்ன? இன்று நாம் இவ்வளவு தாழ்ந்து போய்விட்டதற்கு காரணம் என்ன? அந்தந்தக் காலத்தின் சூழ்நிலையே அந்தந்த மனப்பான்மைக்கும் காரணமாக இருக்கிறது. பழங்காலத்தில் பொது ஜனங்கள் எல்¤லோரும் கோயிலுக்குப் போனார்கள். அங்கே அவர்களுக்கு நல்வழி கூறுவதற்காக மகாபாரதம் முதலியஸத் கதைகள் நடைபெற்றன. இதற்காகவே ராஜாங்கத்தில் மானியம் தரப்படடு வந்தது. நாடகம், கூத்து எல்லாமும்கூடத் தெய்வ சம்பந்தமாகவே இருந்தன. தங்கள் தொழிலைச் செய்வது, ஆலய தரிசனம், ஸத் கதை சிரவணம் இவற்றுக்கே மக்களின் பொழுது சரியாக இருந்தது. இதனால் யோக்கியர்களாகவே இருந்தார்கள். இப்போது ஜனங்களைக் கவர்ந்திருப்பதற்கு என்ன என்னவோ ஆபத்துக்கள் எல்லாம் வந்து விட்டன.

தர்மத்துக்கு விரோதமான படக்காட்சிகள், கதைப் புஸ்தகங்கள் எல்லாம் அதிகமாகி விட்டன. ஜனங்கள் இதற்கிடையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது பலவிதமான அரசியல் கட்சிகள் வேறு அவர்கள் புத்தியைக் கலக்கிக் கொண்டிருக்கின்றன. எங்கேயும் சஞ்ஜலம், அதிருப்தி யோக்கியதைக் குறைவு. லஞ்சம் இவை அதிகரித்துவிட்டன.

பழைய காலத்தில் ராஜாவின் மானியத்துடன், பாரதம் முதலான ஸத் கதை நடந்தபோது, தலைமுறை தத்துவமாக அது செழித்து வளர்ந்தது. இப்போது ஹரிகதை, உபந்நியாசம் செய்கிறவர்கள் தங்கள் தலைமுறையோடு அது போகட்டும் என்று நினைக்கிறார்கள். அதோப்போல் அர்ச்சகர்கள் தங்கள் தலைமுறையோடு அர்ச்சனைத் தொழில் போகட்டும் என்று நினைக்கிறார்க்ள். முன்பு அரசர்கள் தெய்வ பக்தியை வளர்த்து எங்கு பார்த்தாலும் சாஸ்திரோக்தமாக ஆலயங்கள் கட்டியசால் ஆகம சாஸ்திர வித்வான்கள், சிற்பிகள், ஸ்பதிகள் ஆகியோர் வம்சாவளியாக சுபிட்சமாக வாழ்ந்தார்கள். இன்றய சூழ்நிலையிலோ இவர்கள் யாவரும் தங்களோடு இந்தத் தொழில் தொலையட்டும் என்று நினைக்கும் படியாகி விட்டது. ஈஸ்வர சம்பந்தத்துடனேயே ஆயிரம் காலப் பயிராக வளர்ந்த நாட்டுக் கலைகளும் இப்போது மங்குகின்றன. துரௌபதி அம்மன் கோயிலில் உடுக்கடித்து பாரதம் சொல்கிறவன், கரகம் ஆடுகிறவன், அரிச்சந்திரன் கூத்துப் போடுபவன் எல்லோரும் அடுத்த தலைமுறையை இந்தத் தொழிலில் பழக்கவில்லை. நாட்டுக் கலைஞர்களுக்கு, முன்பு ராஜாங்க மானியம் கிடைத்து வந்தது. இப்போது பழைய கிராமப் பண்பாடு (folk culture) என்று பெரிதாகப் பேசினாலும், ஏதோ அவ்வப்போது மந்திரிமார்களே அந்த மாதிரி வேஷம் போட்டுக்கொண்டு கிராமிய நடனக்காரர்களோடு ஃபோட்டோ எடுத்துக்கொண்டு பத்திரிக்கையில் பிரசுரமாகிறது தவிர, இந்தக் கலைஞர்களுக்கு மானியம் மாதிரி எதுவும் இல்லாமல் இந்தக் கலைகளும் நசிகின்றன.

கோயில்களும் அவற்றைச் சேர்ந்த இந்தக் கலைகளும் ஒங்கு வளர்ந்த நாளில் தேசம் எப்படி இருந்தது என்று மெகஸ்தனிஸ் சர்டிஃபிகேட் கொடுத்திருக்கிறான். இவை எல்லாம் ம்மங்கிப்போயிருக்கிற இன்றைக்குத் தேசம் எப்படி இருக்கிறது என்பதையோ பிரத்யக்ஷமாகவே பார்க்கிறோம். எங்கே பார்த்தாலும் பொய்யும், சஞ்சலமும், கலப்படமும், அதர்மமும் மிகுந்துவிட்டன.இவை நிவிருத்தியாக வழி ஒன்றுதான். பழைய காலத்தைப்போலக் கோயில்களைச் சமூக வாழ்வின் மத்திய ஸ்தான மாக்கிவிட வேண்டும். அன்றுபோல் இப்போதும் தெய்வ சம்பந்தமான பழங் கலைகளை வளர்க்க வேண்டும்.

க்ஷேத்திரங்களில் மகா புருஷர்கள் உண்டாக்கிய சாந்நித்தியத்தை மந்திரங்களாலும் ஆகம சாஸ்திர விதிகளாலும் ரட்சித்து வரவேண்டும். ஆலயங்களில் சாந்நித்தியம், அங்கு ஆகம சாஸ்திரமறிந்த ஸ்தபதிகள் மூலம் திருப்பணி, கோயிலில் பூசாரியின் பாரதக் கதை இவற்றை ஏற்படுத்தி விட்டால் அர்ச்சகர்களுக்கும் சிற்பிகளுக்கும் மற்றக் கலைஞர்களுக்கும் வாழ்வு தருவதோடு, தேசத்துக்கே நல்ல வாழ்வு தந்ததாகும். நம் தேசம் ஒன்று நன்றாய் இருந்து விட்டால் போதும். லோகம் முழுதும் அதனிடமிருந்து சகல க்ஷேமங்களையும் பெற்றுக் கொண்டு விடும்.
____________________________________________________
பக்தி

ஒரே பேரரிவுதான் இத்தனை பிரபஞ்சங்களாகவும், ஜீவராசிகளாகவும் தோன்றுகிறது. இந்தத் தோற்றத்தைப் போக்கடித்துவிட்டால், அந்த பேரறிவுதான் எஞ்சி நிற்கும். அந்த நிலையில் காரியம் எதுவுமே இல்லை. பிரபஞ்சம், ஜீவ ராசிகள் என்கிற தோற்றங்கள் இருக்கிற வரையில்தான் பல விதமான காரியங்கள் ஏற்படுகின்றன. இவற்றைக் கடந்து, இவற்றுக்கு மூலமான பேரறிவை அடைந்துவிட்டால், முடிவில் அறிகிறவன், அறிவு, அறியப்படுகிற வஸ்து என்கிற பேதங்கள்கூட இல்லாமல் எல்லாம் ஒன்றாகிவிடுகிறது. அதைத்தான் பிரம்ம ஸாக்ஷ£த்காரம் என்பது, இதுதான் ஜீவாத்மாவின் மாறுபடாத, சத்தியமான நிலை.

ஆனால் இந்த சத்தியமான நிலையை நாம் தெரிந்து கொள்ளாமல், வெறும் தோற்றமான பிரபஞ்சத்தையும், ஜீவராசிகளையுமே மெய்யென நம்பி வாழ்கிறோம். இதற்குக் காரணம் மாயை. மாயாசக்தியால்தான் ஒரே பிரம்மம் இத்தனை வெவ்வேறு வஸ்துக்களைப்போல் தெரிகிறது. மாயப் பிரபஞ்சம் ஒர் அற்புதமான நிலையில் நடக்கிறது. பலவிதமான இயற்கை விதிகள் ஒழுங்காக வகுக்கப்பட்டு, அதன் பிரகாரமே பிரபஞ்சம் நடக்கிறது. காரியமே இல்லாத பிரம்மம் மாயையால் பிரபஞ்சமாக தோன்றுகிறபோது, சிருஷ்டி, பரிபாலனம்,

சம்ஹாரம் முதலிய காரியங்கள் எல்லாம் நடக்கின்றன. காரியம் இல்லாத நிலையில் எதைப் பிரம்மம் என்கிறோமோ அதையே இந்தக் காரியங்களைச் செய்கிறபோது ஈஸ்வரன் என்கிறோம். காரியம் இல்லாத பரம் பொருளை நிர்குணப் பிரம்மம் என்றும், அதுவே காரியத்தில் இருக்கிறபோது ஸகுணப் பிரம்மம் அல்லது ஈஸ்வரன் என்றும் அத்வைத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கும். ஈஸ்வரன், பகவான், கடவுள், தெய்வம், ஸ்வாமி என்று சொல்வதெல்லாம் இந்த ஸகுணப் பிரம்மையையே.

எப்போது பார்த்தாலும் காரியம் செய்து கொண்டிருப்பதே நமக்கு இயல்பாகிவிட்டது. உடம்பால் காரியம் செய்யாத போதும், வாக்கால் பேசி காரியம் செய்யாத போதும்கூட, நம் மனசு சதா எதையாவது நினைத்துக் கொண்டே இருக்கிறது. இதுவும் காரியம்தான். இந்தக் காரியம் நின்றால்தான், அதாவது மனஸில் எண்ணமே தோன்றாமல் இருந்தால்தான். எந்தக் காரியமும் இல்லாத பிரம்ம நிலையை அடைய முடியும். ஆனால் இந்த மனஸில் ஒரு க்ஷணம்கூட அதையும் நினைக்காமல் இருக்கமுடியவில்லையே. இதை எப்படி நிறுத்தப் பழகுவது?

இந்தப் பழக்கத்துக்கு வழிதான் பக்தி. காரியமில்லாத பிரம்மத்தை நாமும் காரியமில்லாமலிருக்கிற நிலையில்தான் அநுபவிக்க முடியும். அது முடியவில்லையா? அதே பிரம்மம் சகல பிரபஞ்சங்களையும் நடத்தி வைக்கிற - அதாவது காரியத்தைச் செய்கிற - ஈஸ்வரனாக இருக்கிறதல்லவா. இந்த ஈஸ்வரனையே ஸதா சிந்தனை பண்ணு. காரியத்தை எல்லாம் அதற்கே திருப்பு. உடம்பால் நமஸ்காரம் பூஜை, வாக்கால் ஸ்தோத்திரம், மனஸால் தியானம் என்று சகல காரியங்களையும் ஈஸ்வரனிடம் செலுத்து. அவற்றை ஈஸ்வரன் அங்கீகரித்து, உன்னை பிரம்ம ஞானத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பான். இப்படிப்பட்ட இடையறாத ஈஸ்வர சிந்தனைக்குத்தான் பக்தி என்று பெயர். இதில் அன்பு ரொம்பவும் முக்கியம். அன்போடு அவனை நினைப்பதே பக்தி.

உலகத்திலுள்ள நல்லது - கெட்டது, அழகு - அவலக்ஷணம், இன்பம் - துன்பம் எல்லாமே பிரம்மத்திலிருந்து வந்தவைதாம். ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஐக்கியமாகி பிரம்மநிலை, அடையும்போது நல்லது கெட்டது, அழகு, அவலக்ஷணம், சந்தோஷம் துக்கம் என்கிற பேதமில்லை.

ஆனால் இப்போது நாம் இருக்கிற நிலையில் இவை எல்லாம் ஒன்றாகத் தோன்றவில்லை. இந்த நிலையில் ஈஸ்வரனை எல்லா அழகுகளுக்கும், எல்லா நன்மைகளுக்கும், எல்லா இன்பங்களுக்கும் உருவமாகப் பாவித்து அன்பு செலுத்த வேண்டும். குணமே இல்லாத பிரம்மத்தை நம்மால் நினைத்து பார்க்க முடியாது. அந்த நிற்குணத்திலிரும்தே சகல குணங்களும் தேன்றியிருக்கின்றன. ஒரு நிறமும் இல்லாத சூரிய வெளிச்சம் கண்ணாடிப் பிரிஸத்தில் பட்டு ஒளிச்சிதறலில் (Refraction) சகல வர்ணங்களையும் வாரிக் கொட்டுகிறதல்லவா. அப்படிய் நிற்குணப் பிரம்மம் மாயை என்கிற கண்ணாடியில் பட்டு ஈஸ்வரனாகி சகல குணங்களையும் வாரிக் கொட்டுகிறது. நிற்குணத்தை நம்மால் நினைக்க முடியாது. ஆனால் குணங்களை நினைக்க முடியும். ஆனால் கெட்ட குணங்களை நினைத்தால் அது நம்மை மேலும் கஷ்டத்தில், சம்ஸார சாகரத்தில்தான் இழுத்துக் கொண்டு போகும். அதனால் நல்ல குணங்களை கல்யாண குணங்களையே நினைக்க வேண்டும். வெறுமே குணத்தை நினைப்பதென்னால் முடியாது. அதனால் உயிரோடு, உருவத்தோடு, அந்த நல்ல குணங்கள் எல்லாவற்றையும்கொண்ட ஒருத்தனை நினைக்க வேண்டும். எல்லாக் குணங்களும் உயிர்களும் உருவங்களும் எதனிடமிருந்து வந்ததோ, எது இதையெல்லாம் ஆட்டிப்படைத்து வைத்துக்கொண்டிருக்கிறதோ, அதையே அனந்த கல்யாண குணங்களும் கொண்ட தெய்வ ரூபமாக அப்போது நினைக்க நினைக்க அந்தக் கல்யாண குணங்கள் நமக்கும் வரும்.

மனசு எதைத் தீவிரமாக இடைவிடாமல் நினைத்தாலும் அதுவாகவே மாறுகிறது. இதை மனோதத்துவக்காரர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். தோஷங்கள் அற்ற கிருபா சமுத்திரனான பகவானைத் தியானம் செய்து கொண்டே இருப்பதால் நம்முடைய தோஷங்கள் விலகி, நாம் அன்பு மயமாகிறோம். உண்மையான பக்தி வைத்துவிட்டால் அப்புறம் மனசு அன்புமயமாகிவிட, அதன்பின் அது பாபத்தில் பிரவேசிக்கவே செய்யாது. உலகத்தில் பாப எண்ணங்கள் விலகுவதற்கு பக்தியைவிட வேறு வழி இல்லை. ஆனால் பக்தி செய்வதற்கு இது மட்டும் காரணம் இல்லை. நாம் சத்தியமான நிலையை அடைவதற்கு பக்தி வழி பண்ணுகிறது என்பதுதான் முக்கியமான காரணம். மனசு என்பதே நின்றுப்போய் ஆத்ம ஜ்யோதிஸ் அப்படியே பளீரென்று அடிப்பதற்கு முன்னதாக அந்த மனதிலிருந்து பாப அழுக்கு போக வேண்டும். இப்படிப் பாபத்தைப் போக்குவதே பக்தி
____________________________________________________
இஷ்ட தேவதை

மநுஷ்யர்கள் மனப்பான்மைகள் பல தினுசாக இருக்கின்றன. ஒவ்வொரு விதமான மனப்பான்மை உள்ளவர்களையும் ஆகர்ஷித்து, அவர்களைப் பக்தி செலுத்த வைத்து, அவர்கலுடைய மனத்தைச் சுத்தம் செய்து, சித்தத்தை ஏகாக்ர (ஒருமை) ப்படுத்தவே பரமாத்மா பல பல தேவதா ரூபங்களாக வந்திருக்கிறது.

இந்த ஹிந்துக்களுக்கு எத்தனை கோடி சாமிகள். என்று அந்நிய மதஸ்தர்கள் நம்மை கேலி செய்வதுண்டு. உண்மையில் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்வாமி இருப்பதாக விஷயம் தெரிந்த எந்த ஹிந்துவும் எண்ணவில்லை. வைதிக மதம் ஸ்வாமி ஒருவரே என்று கண்டது மட்டுமில்லை. இந்த ஜீவனும்கூட அதே ஸ்வாமிதான் என்று வேறெந்த மதமும் கண்டுபிடிக்காததையும் கண்டுபிடித்திருக்கிறது. எனவே, பிரபஞ்ச வியாபாரத்தை நடத்துகிற மகா சக்தியாக ஒரு ஸ்வாமிதான் இருக்கிறது என்பதில் எந்த விஷயமறிந்த ஹிந்துவுக்கும் சந்தேகமில்லை. ஆனால் அந்த ஸ்வாமி பல ரூபத்தில் வரமுடியும். அப்படிப்பட்ட யோக்கியதையும் கருணையும் அதற்கு உண்டு என்று இவன் நம்புகிறான்.

ஒரே ஸ்வாமி நம் தேசத்தின் மகாபுருஷனாகளுக்குப் பல ரூபங்களில் தரிசனம் தந்திருக்கிறார். அந்தந்த ரூபங்களுக்குறிய மந்திரம், உபாஸனா மார்க்கம் எல்லாவற்றையும் அந்த மகாபுருஷர்கள் நமக்குத் தந்திருக்கிறார்கள். இவற்றை முறைப்படி அநுஷ்டித்தால் நாமும் அந்தந்த தேவதையின் அநுக்கிரகத்தைப் பெற முடியும். எந்த தேவதையாக இருந்தாலும் சரி. அது முடிவில் பரமாத்மாவே. ஆகையால், நாம் சந்தேகம் கொள்ளாமல் பூரண சிரத்தையோடு பக்தி வைத்தால் அது நமக்குச் சம்சார பந்தத்திலிருந்து விடுதலை தரும். இந்த விடுதலைக்கு நாம் பக்குவப்படுவதற்கு முன் லௌகிக வேண்டுதல்களைக்கூட நிறைவேற்றி அநுக்கிரகிக்கும்.

அவரவர் மனத்தைப் பொறுத்து ஒன்றில் பிடிமானம் கொள்வதற்கே இத்தனை தேவதைகள் இருக்கின்றன. தாயாரிடம் குழந்தைப்போல் பரமாத்மாவை அநுபவிக்க வேண்டும் என்கிற மனப்பான்மை உடையவனுக்கு தக்ஷிணாமூர்த்தி இருக்கிறார். ஆனந்தமாக ஆடிப்பாடி பக்தி செலுத்துவதற்குக் கிருஷ்ண பரமாத்மா இருக்கிறார்.

இஷ்டம் இருந்தாலும், இஷ்டம் இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு மகா சக்தியிடம் பக்தி செலுகத்துவது என்று ஏதோ ஒரு தத்வத்தை மட்டும் காட்டாமல், நம் மனசுக்கு எப்படி இஷ்டமோ, அதற்கு அநுசரணையாகவே அந்த மகாசக்தியை ஒரு மூர்த்தியில் பாவித்து, வெறும் தத்வத்தை ஜீவனுள்ள ஒரு அன்பு உருவகமாக பாவித்து, வெறும் பக்தி செய்வதற்கு நம் மதத்தில் உள்ள இஷ்ட தேவதை வழிபாடே வழி வகுக்கிறது. அன்போடு உபாஸிக்க வேண்டுமானால், உபாஸனைக்குறிய மூர்த்தி நம் மனோபாவத்துக்குப் பிடித்தமானதாக இருந்தால்தானே முடியும். இதனாலேயே இஷ்ட தேவதை என்று தனக்குப் பிடித்த மூர்த்தியை உபாஸிக்க நமது மதம் சுதந்திரம் தருகிறது. நம் மனப்போக்குப் பிடித்தது என்கிற நிலையில் ஆரம்பத்தில் ஏதோ ஒரு மூர்த்தியை இஷ்ட தேவதையாக்கிக் கொண்டாலும், போகப் போக அதனிடம் உண்மையான பக்தி உண்டாக உண்டாக, நமக்கென்று என்ன ஒரு தனி மனப்போக்கு? என்று அதையும் விட்டுவிட அந்த தேவதையே அநுக்கிரகம் செய்யும். அப்புறம் எல்லாமே ஒர் பரமாத்ம வஸ்துவாகத் தெரியச் செய்யும்.

அவரவரும் தமக்கு இஷ்டமான தேவதையே உபாஸிக்கும்போதே மற்றவர்களுடைய இஷ்ட தேவதைகளைப் தாழ்வாக எண்ணக்கூடாது. நமக்கு எப்படி இந்த ரூபத்தில் பரமாத்மா அநுக்கிரகம் பண்ணுகிறாரோ அப்படியே மற்றவர்கலுக்கு மற்ற ரூபங்களின் மூலம் அநுக்கிரகம் பண்ணுகிறார் என்று தெளிவு பெற வேண்டும். அந்தந்த தேவதைக்குறிய புராணத்தைப் பார்த்தால் அது ஒன்றே முழுமுதற் கடவுள். மற்ற தேவதை எல்லாம் அதற்குக் கீழானவை. இந்த அவை பூஜை செய்தன. இதனிடம் அவை தோற்றுப் போயின என்றெல்லாம் இருக்கிறதே என்று கேட்கலாம். இதற்கு நஹி நிந்தா நியாயம் என்று பெயர். அதாவது இதர தேவதைகளை நிந்திப்பது பௌராணிகரின் நோக்கமல்ல. இந்த ஒரு தேவதையை ஆராதிப்பவருக்கு மனம் சிதறாமல் இது ஒன்றிடமே தீவிரமாகப் பற்றுதல் ஏற்படுத்த வேண்டும் என்பதே புராணத்தின் நோக்கம். இதற்காகவே இந்த தேவதைக்கு மட்டும் மற்றத் தேவதைகளுக்கு இல்லாத உத்கர்ஷம் (உயர்வு) சொல்லப்படுகிறது.

மகாநுபாவர்களாக இருந்தவர்கள் எல்லாத் தேவதைகளையும் சமமாகவே பார்த்தார்கள். மகா கவிகளான காளிதாசன், பாணன் முதலியவர்கலும் ஒரே வஸ்துவைத்தான் பல மூர்த்திகளாகவும் வருகிறது என்று சந்தேகமில்லாமல் கூறுகிறார்கள்.

பக்தர்களின் மனோபாவத்தைப் பொறுத்துப் பரமாத்மா பல ரூபம் கொள்கிறபோதே, பிரபஞ்சத்தில் தன்னுடைய வெவ்வேறு காரியங்களைப் பொறுத்தும் வெவ்வேறு ரூபங்களை எடுத்துக் கொள்கிறது. ரஜோ குணத்தால் சிருஷ்டி செய்யும் போது அதற்கேற்ப பிரம்மாவாகிறது. ஸத்வ குணத்தால் பரிபாலிக்கும்போது அதற்கேற்ப மகா விஷ்ணுவாகிறது. தமோ குணத்தால் சம்ஹரிக்கும்போது அதற்குறிய முறையில் ருத்ரரூபம் கொள்கிறது. இந்த மூன்றைப் பாணனும் காளிதாசரும் ஒரே சக்தியின் மூன்று வடிவங்களாகக் குறிப்பிடுகிறார்கள். இந்த மூன்றுக்கும் பொருந்துவது முப்பத்து முக்கோடி தேவதைகளுக்கும் பொருந்தும்.

எனவே, என் தெய்வம் உசந்தது, உன் தெய்வம் தாழ்ந்தது என்று சண்டை பிடிப்பதில் அர்த்தமே இல்லை. ஆனாலும், நம் தேசத்தில் பல இஷ்ட தெய்வங்கள் இருந்தாலும் கூட, பிரதானமாக இருந்து வரும் சைவத்துக்கும் வைஷ்ணவத்துக்கும் இடையே ரொம்பவும் சண்டைதான் நடந்து வந்திருக்கிறது. நன்றாக ஆலோசித்துப் பார்த்தால் இந்த இரண்டு பிரிவுகளுக்கும் தெய்வங்களான

பரமேச்வரனும் மகா விஷ்ணுவும் ஒரே வஸ்துதான் என்ற ஞானம் பெறுவோம்.
____________________________________________________
இஷ்ட தேவதை

மநுஷ்யர்கள் மனப்பான்மைகள் பல தினுசாக இருக்கின்றன. ஒவ்வொரு விதமான மனப்பான்மை உள்ளவர்களையும் ஆகர்ஷித்து, அவர்களைப் பக்தி செலுத்த வைத்து, அவர்கலுடைய மனத்தைச் சுத்தம் செய்து, சித்தத்தை ஏகாக்ர (ஒருமை) ப்படுத்தவே பரமாத்மா பல பல தேவதா ரூபங்களாக வந்திருக்கிறது.

இந்த ஹிந்துக்களுக்கு எத்தனை கோடி சாமிகள். என்று அந்நிய மதஸ்தர்கள் நம்மை கேலி செய்வதுண்டு. உண்மையில் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்வாமி இருப்பதாக விஷயம் தெரிந்த எந்த ஹிந்துவும் எண்ணவில்லை. வைதிக மதம் ஸ்வாமி ஒருவரே என்று கண்டது மட்டுமில்லை. இந்த ஜீவனும்கூட அதே ஸ்வாமிதான் என்று வேறெந்த மதமும் கண்டுபிடிக்காததையும் கண்டுபிடித்திருக்கிறது. எனவே, பிரபஞ்ச வியாபாரத்தை நடத்துகிற மகா சக்தியாக ஒரு ஸ்வாமிதான் இருக்கிறது என்பதில் எந்த விஷயமறிந்த ஹிந்துவுக்கும் சந்தேகமில்லை. ஆனால் அந்த ஸ்வாமி பல ரூபத்தில் வரமுடியும். அப்படிப்பட்ட யோக்கியதையும் கருணையும் அதற்கு உண்டு என்று இவன் நம்புகிறான்.

ஒரே ஸ்வாமி நம் தேசத்தின் மகாபுருஷனாகளுக்குப் பல ரூபங்களில் தரிசனம் தந்திருக்கிறார். அந்தந்த ரூபங்களுக்குறிய மந்திரம், உபாஸனா மார்க்கம் எல்லாவற்றையும் அந்த மகாபுருஷர்கள் நமக்குத் தந்திருக்கிறார்கள். இவற்றை முறைப்படி அநுஷ்டித்தால் நாமும் அந்தந்த தேவதையின் அநுக்கிரகத்தைப் பெற முடியும். எந்த தேவதையாக இருந்தாலும் சரி. அது முடிவில் பரமாத்மாவே. ஆகையால், நாம் சந்தேகம் கொள்ளாமல் பூரண சிரத்தையோடு பக்தி வைத்தால் அது நமக்குச் சம்சார பந்தத்திலிருந்து விடுதலை தரும். இந்த விடுதலைக்கு நாம் பக்குவப்படுவதற்கு முன் லௌகிக வேண்டுதல்களைக்கூட நிறைவேற்றி அநுக்கிரகிக்கும்.

அவரவர் மனத்தைப் பொறுத்து ஒன்றில் பிடிமானம் கொள்வதற்கே இத்தனை தேவதைகள் இருக்கின்றன. தாயாரிடம் குழந்தைப்போல் பரமாத்மாவை அநுபவிக்க வேண்டும் என்கிற மனப்பான்மை உடையவனுக்கு தக்ஷிணாமூர்த்தி இருக்கிறார். ஆனந்தமாக ஆடிப்பாடி பக்தி செலுத்துவதற்குக் கிருஷ்ண பரமாத்மா இருக்கிறார்.

இஷ்டம் இருந்தாலும், இஷ்டம் இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு மகா சக்தியிடம் பக்தி செலுகத்துவது என்று ஏதோ ஒரு தத்வத்தை மட்டும் காட்டாமல், நம் மனசுக்கு எப்படி இஷ்டமோ, அதற்கு அநுசரணையாகவே அந்த மகாசக்தியை ஒரு மூர்த்தியில் பாவித்து, வெறும் தத்வத்தை ஜீவனுள்ள ஒரு அன்பு உருவகமாக பாவித்து, வெறும் பக்தி செய்வதற்கு நம் மதத்தில் உள்ள இஷ்ட தேவதை வழிபாடே வழி வகுக்கிறது. அன்போடு உபாஸிக்க வேண்டுமானால், உபாஸனைக்குறிய மூர்த்தி நம் மனோபாவத்துக்குப் பிடித்தமானதாக இருந்தால்தானே முடியும். இதனாலேயே இஷ்ட தேவதை என்று தனக்குப் பிடித்த மூர்த்தியை உபாஸிக்க நமது மதம் சுதந்திரம் தருகிறது. நம் மனப்போக்குப் பிடித்தது என்கிற நிலையில் ஆரம்பத்தில் ஏதோ ஒரு மூர்த்தியை இஷ்ட தேவதையாக்கிக் கொண்டாலும், போகப் போக அதனிடம் உண்மையான பக்தி உண்டாக உண்டாக, நமக்கென்று என்ன ஒரு தனி மனப்போக்கு? என்று அதையும் விட்டுவிட அந்த தேவதையே அநுக்கிரகம் செய்யும். அப்புறம் எல்லாமே ஒர் பரமாத்ம வஸ்துவாகத் தெரியச் செய்யும்.

அவரவரும் தமக்கு இஷ்டமான தேவதையே உபாஸிக்கும்போதே மற்றவர்களுடைய இஷ்ட தேவதைகளைப் தாழ்வாக எண்ணக்கூடாது. நமக்கு எப்படி இந்த ரூபத்தில் பரமாத்மா அநுக்கிரகம் பண்ணுகிறாரோ அப்படியே மற்றவர்கலுக்கு மற்ற ரூபங்களின் மூலம் அநுக்கிரகம் பண்ணுகிறார் என்று தெளிவு பெற வேண்டும். அந்தந்த தேவதைக்குறிய புராணத்தைப் பார்த்தால் அது ஒன்றே முழுமுதற் கடவுள். மற்ற தேவதை எல்லாம் அதற்குக் கீழானவை. இந்த அவை பூஜை செய்தன. இதனிடம் அவை தோற்றுப் போயின என்றெல்லாம் இருக்கிறதே என்று கேட்கலாம். இதற்கு நஹி நிந்தா நியாயம் என்று பெயர். அதாவது இதர தேவதைகளை நிந்திப்பது பௌராணிகரின் நோக்கமல்ல. இந்த ஒரு தேவதையை ஆராதிப்பவருக்கு மனம் சிதறாமல் இது ஒன்றிடமே தீவிரமாகப் பற்றுதல் ஏற்படுத்த வேண்டும் என்பதே புராணத்தின் நோக்கம். இதற்காகவே இந்த தேவதைக்கு மட்டும் மற்றத் தேவதைகளுக்கு இல்லாத உத்கர்ஷம் (உயர்வு) சொல்லப்படுகிறது.

மகாநுபாவர்களாக இருந்தவர்கள் எல்லாத் தேவதைகளையும் சமமாகவே பார்த்தார்கள். மகா கவிகளான காளிதாசன், பாணன் முதலியவர்கலும் ஒரே வஸ்துவைத்தான் பல மூர்த்திகளாகவும் வருகிறது என்று சந்தேகமில்லாமல் கூறுகிறார்கள்.

பக்தர்களின் மனோபாவத்தைப் பொறுத்துப் பரமாத்மா பல ரூபம் கொள்கிறபோதே, பிரபஞ்சத்தில் தன்னுடைய வெவ்வேறு காரியங்களைப் பொறுத்தும் வெவ்வேறு ரூபங்களை எடுத்துக் கொள்கிறது. ரஜோ குணத்தால் சிருஷ்டி செய்யும் போது அதற்கேற்ப பிரம்மாவாகிறது. ஸத்வ குணத்தால் பரிபாலிக்கும்போது அதற்கேற்ப மகா விஷ்ணுவாகிறது. தமோ குணத்தால் சம்ஹரிக்கும்போது அதற்குறிய முறையில் ருத்ரரூபம் கொள்கிறது. இந்த மூன்றைப் பாணனும் காளிதாசரும் ஒரே சக்தியின் மூன்று வடிவங்களாகக் குறிப்பிடுகிறார்கள். இந்த மூன்றுக்கும் பொருந்துவது முப்பத்து முக்கோடி தேவதைகளுக்கும் பொருந்தும்.

எனவே, என் தெய்வம் உசந்தது, உன் தெய்வம் தாழ்ந்தது என்று சண்டை பிடிப்பதில் அர்த்தமே இல்லை. ஆனாலும், நம் தேசத்தில் பல இஷ்ட தெய்வங்கள் இருந்தாலும் கூட, பிரதானமாக இருந்து வரும் சைவத்துக்கும் வைஷ்ணவத்துக்கும் இடையே ரொம்பவும் சண்டைதான் நடந்து வந்திருக்கிறது. நன்றாக ஆலோசித்துப் பார்த்தால் இந்த இரண்டு பிரிவுகளுக்கும் தெய்வங்களான

பரமேச்வரனும் மகா விஷ்ணுவும் ஒரே வஸ்துதான் என்ற ஞானம் பெறுவோம்.
____________________________________________________
மரணம் இது படிக்க கொஞ்சம் கஷ்டமாக, வேதனையாக இருக்கலாம்.

எந்த பிறவி எடுத்தாலும் அது நாமோ நம்மை சேர்ந்தவர்களோ தான். சாதாரண ஒரு கரப்பாம் பூச்சி  செத்துப் போனாலும் அதன் கர்ம பலனை நிர்ணயிக்கும் பரிணாம நிலை அழிவதில்லை. செத்த பின்னும் பிராணசக்தி இறந்த உடல் எங்கும் போகாமல் அந்த இடத்திலேயே சுற்றுகிறது. ராத்திரி புல் வெளி பக்கம் நடக்காதே என்பதற்கு காரணம் சில பூச்சிகளை, பாம்புகளை நீங்கள் மிதித்து அது உங்களை கடித்துவிடக்கூடாது என்பதற்காக மட்டும் இல்லை. அப்போது தான் செத்துப்போன பூச்சிகள், உயிரினங்கள் எல்லாம் வேறு பரிணாமத்திற்கு இடம் பெயரும் நிலையில் அங்கே பூமியை பற்றிக்கொண்டே இருக்கும். அநேகமாக மிருகங்கள் பூச்சிகள் எல்லாம் இரவில் தான் மரணம் அடைகிறது. சின்ன சின்ன ஜீவன்களை பறவைகளோ, விலங்குகளோ கொன்று தின்பதற்கு இரவு பகல் தனியாக வேண்டாம். தானாகவே இறப்பது அதிகம் இரவில் தான். அவற்றின் வாழ்க்கையே  கொஞ்ச காலம் தான். ஆகவே அடுத்த ஜென்மத்தை சீக்கிரமாக அடையும். ஆயிரமாயிரம் ஆண்டுகள்  இதையெல்லாம் அறிந்து தான் இறந்து கொண்டிருப்போர்களுக்கும் இறந்தவர்களுக்கும் பல சடங்குகள்  உண்டாக்கப்பட்டிருக்கின்றன.

வடக்குப்பக்கம் தலை வைப்பதும்  வீட்டிற்கு வெளியே கொண்டு போய் உடலை கிடத்தும் காரணம் ஒரு கட்டிடத்துக்குள் இருக்கிற போது அவ்வளவு சுலபமாக உயிர் பிரியாது. கட்டிடத்திற்கு வெளியில் வடக்கு தெற்காக அந்த மரணமடையப் போகிறவனுடைய உடல் கிடத்தப்படுகிறபோது எளிதாக அந்த உயிர் உடம்பிலிருந்து பிரிகிறது. இறந்தவன் உயிர் உடலை சுற்றிக்கொண்டே இருக்கும். அந்த உடலை வடக்கு தெற்காக வைப்பதால் காந்த ஈர்ப்பு காரணமாக அந்த உயிர் உடம்பை விட்டு விலகிப் போய் விடுகிறது. அந்த உடலில் சில மாற்றங்கள் நிகழ்வதால் இனி அந்த உடலைச் சுற்றிக் கொண்டிருப்பதில் பயன் இல்லை என  உயிர் அறிகிறது. வடக்கு, தெற்காக வைத்து விட்டால் மறுபடியும் உடலுக்குள் நுழைய முடியாது என்று உயிர் அறிகிறது. எதற்காக இறந்த உடலின் ரெண்டு கால் கட்டைவிரலையும் ஒன்றாக சேர்த்து கட்டுகிறார்கள்? இறந்தவுடன் உடலில் மீதமிருக்கிற பிராணசக்தி மூலாதாரம் வழியே வெளியேற முயலும். உடலினுடைய பின்புறத் துவாரம் திறந்திருக்குமேயானால் அதன் வழியாக அந்த உயிர் மீண்டும் நுழைய முயலும். அது அந்த உயிருக்கும் நல்லதில்லை. அந்த சூழலுக்கும் நல்லதில்லை. எதிர்மறை விளைவை உண்டாக்கும். கால் கட்டை விரல்களைக் கட்டுவதால் மூலாதாரம் மூடப்படுகிறது. கால் கட்டை விரல்களை மூடினால்  பின் புறத் துவாரம் இறுக்கமாகி விடும்.

ஏன் உடலை எரிக்கிறார்கள்? நான்கு மணி நேரத்திற்குள் உடலை எரிக்க வேண்டும். உடல் சிதைந்து போகும் வரையில் உயிர் அதைச் சுற்றியே அலையும். மேல்நோக்கிப் போகாது. அந்த உயிருக்கு  அடுத்து என்ன நிகழ வேண்டுமோ அது நிகழ வேண்டாமா? தான் அது வரை குடியிருந்த வீடான உடல் இனி இல்லை என்று அதற்கு தெரியாது. தேடும் எனவே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அந்த உடலை எரித்துவிட வேண்டும். பழைய காலங்களில் மரணம் நிகழ்ந்து ஒன்றரை மணி நேரத்தில் எரித்துவிட வேண்டும் என்று ஒரு விதி இருந்தது. இப்போது நிலையே வேறு. பிள்ளை  வெளிநாடுகளிலிருந்து வரவேண்டும் என்பதற்காக பல தினங்கள் குளிர் பெட்டியில் ஆஸ்ப்பித்திரிகளில் கிடங்குகளில் கிடக்கிறது. வீடுகளில் கூட  உடலை வீட்டிலேயே இரண்டு நாட்கள் கூட  வைக்கிறார்கள். அது இறந்தவருக்கு நல்லதில்லை, உயிரோடு இருப்பவர்களுக்கும் நல்லதில்லை. நம்மில் அநேகருக்கு மரணம் என்ற பேச்சை எடுத்தாலே பிடிக்காது. கோபிப்பார்கள் ஏதோ பேசக்கூடாத கெட்ட விஷம் எதையோ பேசிவிட்டது போல் கை அமர்த்தி சே சே அபசகுனமாக  பேசாதே நல்ல விஷயமாக பேசு என்பார்கள். மரணம் பற்றி தெரிந்து கொள்ள ஒரு பக்கம்   அருவருப்பு, பயம், மனம்  இடம் கொடுப்பதில்லை. யாரும் அது பற்றி அதிகம் பேச விரும்புவதில்லை.  வாழவே தெரியாதவர்கள் வாழ்வுக்கு அப்புறமாக நிகழும் மரணத்தையோ அதற்கு அப்புறமாக நடப்பதையோ பற்றியா தெரிந்து கொள்வார்கள்?. எல்லோருமே மரணமே நிகழாமல் வாழதான் ஆசைப்படுகிறார்கள். நடக்க முடியாததை நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். வாழ்க்கையில்  என்னென்ன வெல்லாம் நிகழவேண்டும் என்று ரொம்ப பெரிய  லிஸ்ட் ஒவ்வொருவரிடமும் இருக்கிறதே.
_______________________________
பக்தி செய்வது எதற்காக ?

ஒவ்வொரு காரணத்திற்கும் ஒரு விளைவு இருக்கிறது. பௌதிக விஞ்ஞானம் முழுவதும் இந்தக் காரணம் விளைவு (Cause & Effect) பற்றிய விதிகளைக் குறிப்பதேயாகும். மாற்ற முடியாத இந்த விதிகளாலேயே உலகம் ஒழுங்குடன் இயங்குகிறது. ஏதோ ஒரு பேரறிவு இருப்பதால் தான் இப்படிப்பட்ட விதிகள் உண்டாகி அவை எல்லாம் ஒன்றாக இணைந்து உலக வாழ்வு ஏற்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. பௌதிக உலகில் காரணம் விளைவு என்கிற தவிர்க்க முடியாத சங்கிலி இருந்ததால் மனித வாழ்க்கையிலும் அது இருந்து தானே ஆக வேண்டும். நாம் செய்கிற சகல காரியங்களுக்கும் விளைவு இருந்து தான் ஆக வேண்டும். நல்ல காரியங்கள் செய்தால் அதற்குச் சமமான கெட்ட பலன்களைப் பார்க்கிறோம். கெட்ட பலன்களைத் தருகிற பலதாதா தான் பிரபஞ்சத்தை நடத்தி வைக்கிற மகா சக்தி, ஈஸ்வரன், பகவான், ஸ்வாமி, கடவுள், பரமாத்மா எனப்பட்டவன்.மனசு இருக்கிற வரையில் அது சஞ்சலித்துக் கொண்டே தான் இருக்கும். நல்லதோடு கெட்டதையும் நினைக்கத்தான் செய்யும். புண்ணியத்தோடு பாபத்தையும் செய்து கொண்டே இருக்கும். இந்தப் பாபத்துக்கு விளைவாக கஷ்டங்ளைப் போக்கடிப்பதற்காகவே பொதுவில் எல்லோரும் பிரார்த்தனை செய்கிறார்கள். இதைத்தான் பக்தி என்று நினைக்கிறார்கள். ஈசுவரன் மனசு வைத்தால் நம் பாபத்துக்குப் பிரதியான கஷ்டத்தை தராமலும் இருக்கலாம்.ஆனால் அவன் கஷ்டத்தைப் போக்கத்தான் வேண்டும் என்று நிற்பந்தம் செய்ய நமக்கு யோக்கியதை இல்லை. ஏனென்றால் நம் கர்மத்துக்குப் பலனாக இந்தக் கஷ்டத்தைக் கொடுத்திருப்பவனே அவன்தான். ஆகையினால் கஷ்டம் வந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் இருக்கிற மனோபாவத்தைப் பிரார்த்திப்பதே இதைவிட உத்தமமாகும். ஆனால் இந்தப் பிரார்த்தனைகூட நிஜமான பக்தி அல்ல.

நம் கஷ்டத்தை ஈசுவரனிடம் சொல்கிறபோதே அவனுக்கு அது தெரியாது என்று நாம் நினைப்பதாக ஆகிறது. அதாவது ஈஸ்வரனுடைய எல்லாம் அறிந்த ஸர்வஞானத்துக்குக் குறை உண்டாக்குகிறோம். இந்தக் கஷ்டத்தைப் போக்கு. அல்லது கஷ்டத்தைப் பொருட்படுத்துகிற மனப்பான்மையை மாற்று என்கிற போது நாம் கேட்டுத்தான் அவன் ஒன்றைச் செய்கிறான் என்று ஆகிறது. அதாவது தானாகப் பெருகும் அவனது காருண்யத்துக்குக் குறை உண்டாக்கிவிடுகிறோம். இப்படி ஞான சமுத்திரமாக, கிருபா சமுத்திரமாக இருக்கிற ஈஸ்வரனுடைய ஞானம், கிருபை இரண்டுக்கும் தோஷம் கற்பிக்கிற பிரார்த்தனை உண்மையான பக்தி இல்லை. ஆனால் இப்படிப்பட்ட பிரார்த்தனையால் மனச்சுமை தற்காலிகமாகவாவது லேசாகி கொஞ்சம் சாந்தி பிறக்கிறது. நாமாகவே எல்லாம் சாதித்துவிட முடியும் என்ற அகங்காரத்தைவிட்டு ஈஸ்வரனிடம் யாசிக்கிற அளவுக்கு எளிமை பெறுகிறோமே அதுவும் நல்லது தான். அவனும் நாம் அவனுடைய ஞானத்துக்கும் கருணைக்கும் குறை உண்டாக்கியதைக்கூட பொருட்படுத்தாமல் நம் கர்மாவையும் மீறிப் பிரார்த்தனையை நிறைவேற்றினாலும் நிறைவேற்றலாம். ஆனாலும் ஒரு கஷ்டம் போனாலும் இன்னொரு கஷ்டம் என்று லோக வாழ்க்கையில் வந்து கொண்டே தான் இருக்கும். ஆகையால் லௌகிகமான கஷ்ட நிவிருத்திக்காக பிரார்த்தனை பண்ணுவதற்கு முடிவே இராது. எப்படி விட்டாயோ அப்படி ஆகட்டும் என்று சரணாகதி செய்வதுதான் பக்தி. தனக்கு என்று எதுவுமே இல்லா விட்டால் மனஸின் அழுக்குகள் நீங்கி அது கண்ணாடி மாதிரி சுத்தமாக இருக்கும். அப்போது நிறைந்த ஆனந்தமாக இருக்கலாம். எனக்கு வேறு ஒன்று மில்லை என்று யாரிடம் சரணாகதி செய்து விட்டாலும் ஒரு பதியிடம் பத்தினி சரணாகதி செய்தாலும் (அவன் தூர்த்தனான பதியாகக்கூட இருக்கலாம்). ஒரு குருவிடம் சிஷ்யன் சரணாகதி செய்தாலும் (அந்த குரு போலியாக இருந்தாலும்கூடச் சரி) அப்புறம் நிச்சிந்தைதான். அதன் முடிவான பலனாக மோஷம் தான். ஆனால் ஏதோ புராணங்களில் இப்படிப் பதியிடம் ஆசாரியனிடம் சரணாகதி பண்ண லாயக்குள்ளவன் என்று தோன்றுகிற குரு கிடைத்து அவனிடம் சரணாகதி செய்து விட்டால் அப்புறம் ஸ்வாமி கூட வேண்டாம் தான். ஆனால் வாஸ்தவத்தில் நிஜமாகவே திரிபுவனங்களும் யஜமானனாக எல்லாம் தன் சொத்தாக கொண்டுள்ள ஸ்வாமியிடம் தான் நம்மால் கொஞ்சத்தில் கொஞ்சமாவது எல்லாம் உன் உடைமையே எனக்கென்று ஒன்றுமில்லை என்று சரணாகதி செய்து அதனால் நிம்மதி பெற முடிகிறது.

பக்தி செய்வதற்கு இன்னொரு முக்கியமான காரணம் அன்பு செலுத்தாமல் வாழ்ந்தால் ஆனந்தமே இல்லை. அன்பிலே உள்ள ஆனந்தம் வேறேதிலும் இல்லை என்று அநுபவத்தில் தெரிகிறது. ஆனால் நாம் யாரிடம் அன்பு வைத்தாலும் என்றோ ஒரு நாள் ஒன்று நாம் அவரைவிட்டுப் பிரிகிறோம். இல்லா விட்டால் அவர் நம்மை விட்டுப் பிரிகிறார். ஆனந்த ஹேதுவாக இருந்த அன்பு அனைத்தையும் அழுகை மயமாகி விடுகிறது. நம்மை விட்டுப் பிரியாத ஒரே சாசுவதமான வஸ்து ஈஸ்வரன் தான். அவனிடம் அன்பு வைத்து விட்டால் இந்த அன்பு என்றும் சாசுவதமாக ஆனந்தம் தந்து கொண்டே இருக்கும். இந்த அன்பு முற்றுகிற போது யாவுமே அவனாகத் தெரியும். ஒன்றிடம் அது காரணமாகவே இன்னொன்றிடம் துவேஷம் என்றில்லாமல் எல்லாம் அவனாததால் எல்லாவற்றிடமும் ஏற்றத் தாழ்வில்லாமல் அன்பாக இருப்போம். அன்பற்ற வாழ்வு வாழ்ந்து மனுஷ்ய ஜன்மாவை விருதாவாக்கிக் கொள்ளாமல் இருக்க பக்தியே உதவுகிறது.பக்தியால் படிப்படியாக லௌகிக கஷ்டங்களைப் போக்கிக் கொள்ளலாம். அல்லது கஷ்டத்தை பொருட்படுத்தாத நிலைக்கு மனோபாவத்தை உயர்த்திக் கொள்ளலாம். மனத்தின் அழுக்கை போக்கிக் கொள்ளலாம். அலைகிற மனஸை ஒருமுகப்படுத்தலாம். ஈஸ்வரனின் கல்யாண குணங்களை நாமும் பெறலாம். என்றும் அழிவில்லாத சாசுவதமான அன்பைப் பெற்று ஆனந்திக்கலாம். இவை எல்லாவற்றுக்கும் மேலாகக் கர்ம பலனைத் தருகிறவனைத் தஞ்சம் புகுந்தால் தான் அவன் கர்மகதிக்குக் கட்டுப்பட்ட ஸம்ஸாரத்திலிருந்து நம்மை விடுவித்து முடிவில் முக்தி தருவான். அதாவது அவனே தான் நாமாகியிருப்பது எல்லாமுமாகி இருப்பது என்று அநுபவத்தில் அறிந்துகொண்டு அப்படியே இருக்கச் செய்வான். இந்த அத்வைத ஞானத்தையும் முக்தியையும் அவன் கிருபையாலேயே பெறலாம். பக்தி செலுத்துவதற்கு இத்தனை காரணம் இருக்கிறது.

இனி காரணமே இல்லாத பக்தி ஒன்றும் இருக்கிறது.
__________________________________________________________________