சனி, 19 அக்டோபர், 2024

முக்கிய செய்திகள்...

முக்கிய செய்திகள்:
=============

துங்கா சிருங்கேரி மடத்தின் ஸ்ரீ விதுசேகர பாரதி ஸ்வாமிகள், நமது ஆதி குருவான ஸ்ரீஆதி சங்கராச்சாரியார் சுவாமிகளின் ஆராதனையின் மிக மங்களகரமான நிகழ்வைக் கொண்டாடுவதற்காக காஞ்சிபுரம் வருகை தருகிறார்.

தேதி, சில நாட்களுக்கு முன்பு நாங்கள் அறிவித்தபடி, "துலா கிருஷ்ண பக்ஷ ஏகாதசி" (ஐப்பசி புரம்) அக்டோபர் 27, 2024 அன்று வருகிறது.

ஸ்ரீ விதுசேகர பாரதி அவர்கள் அக்டோபர் 26 ஆம் தேதி காஞ்சிபுரம் வந்து, அக்டோபர் 27 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் தங்கி, காஞ்சிபுரத்தில் ஆதிசங்கரர் ஆராதனையைக் கொண்டாடிவிட்டு, அக்டோபர் 28 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் இருந்து புறப்படுவார்.

அக்டோபர் 27 ஆம் தேதி இந்த மங்களகரமான ஆராதனை திதியில் காஞ்சிபுரத்தில் தங்கியிருக்கும் பீடாதிபதியின் மூலம், துங்க சிருங்கேரி, ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் காமாக்ஷி தேவியுடன் இணைந்து மோக்ஷம் அடைந்த நாள் என்பதைத் தங்கள் முழு ஒப்புதலைக் காட்டியுள்ளனர்.

துங்கா சிருங்கேரி காமாக்ஷி கோவிலுக்கு அக்டோபர் 27, 2024 அன்று மாலை 5 மணிக்கு சென்று தங்கள் ஆதி குரு சங்கராச்சாரியார் மற்றும் காமாக்ஷி ஆகிய இருவரிடமும் ஆசி பெற முடிவு செய்துள்ளது.

காமாட்சி கோவிலுக்கு வருகை தரும் துங்கா சிருங்கேரி ஆச்சாரியாருடன் சர்ச்சைக்குரிய சந்திப்பை தவிர்த்து, அக்டோபர் 27-ம் தேதி காஞ்சிபுரத்தை விட்டு வெளியேறி ஆதிசங்கராச்சாரியார் ஆராதனை தினத்தில் கலந்து கொள்ளாமல் இருக்க நமது சொந்த ஆச்சாரியார் முடிவு செய்திருப்பது வருத்தமளிக்கிறது.

சிவ அஷ்டோத்தரம்...

ஓம் சிவாய நம:
ஓம் மஹேச்வராய நம:
ஓம் சம்பவே நம:
ஓம் பினாகிநே நம:
ஓம் சசிசேகராய நம:
ஓம் வாம தேவாய நம:
ஓம் விரூபாக்ஷயே நம:
ஓம் கபர்தினே நம:
ஓம் நீலலோஹிதாய நம:
ஓம் சங்கராய நம:
ஓம் சூலபாணயே நம:
ஓம் கட்வாங்கிநே நம:
ஓம் விஷ்ணுவல்லபாய நம:
ஓம் சிபி விஷ்டாய நம:
ஓம் அம்பிகா நாதாய நம:
ஓம் ஸ்ரீ கண்டாய நம:
ஓம் பக்த வத்ஸலாய நம:
ஓம் பவாய நம:
ஓம் சர்வாய நம:
ஓம் திரிலோகேசாய நம:
ஓம் சிதிகண்டாய நம
ஓம் சிவாப்ரியாய நம:
ஓம் உக்ராய நம:
ஓம் கபாலிநே நம:
ஓம் காமாரயே நம:
ஓம் அந்தகாஸுர ஸூதநாய நம
ஓம் கங்காதராய நம:
ஓம் லலாடாக்ஷ்ய நம:
ஓம் காலகாளாய நம:
ஓம் க்ருபாநிதயே நம:
ஓம் பீமாய நம:
ஓம் பரசுஹஸ்தாய நம:
ஓம் ம்ருகபாணயே நம:
ஓம் ஜடாதராய நம:
ஓம் கைலாஸவாஸிநே:
ஓம் கவசிநே நம:
ஓம் கடோராய நம:
ஓம் திரிபுராந்தகாய நம:
ஓம் வ்ருஷாங்காய நம:
ஓம் வ்ருஷபாரூடாய நம:
ஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய நம:
ஓம் ஸாமப்ரியாய நம:
ஓம் ஸ்வரமயாய நம:
ஓம் த்ரயீமூர்த்தயே நம:
ஓம் அநீச்வராய நம:
ஓம் ஸர்வஜ்ஞாய நம:
ஓம் பரமாத்மநே நம:
ஓம் ஸோம ஸூர்யாக்நி லோசனாய நம:
ஓம் ஹவிஷே நம:
ஓம் யக்ஞ மயாய நம:
ஓம் ஸோமாய நம:
ஓம் பஞ்வக்த்ராய நம:
ஓம் ஸதாசிவாய நம:
ஓம் விச்வேச்வராய நம:
ஓம் வீரபத்ராய நம:
ஓம் கணநாதாய நம:
ஓம் ப்ரஜாபதயே நம:
ஓம் ஹிரண்ய ரேதஸே நம:
ஓம் துர்தர்ஷாய நம:
ஓம் கிரீசாய நம:
ஓம் கிரிசாய நம:
ஓம் அநகாய நம:
ஓம் புஜங்கபூஷணாய நம:
ஓம் பர்க்காய நம:
ஓம் கிரிதன்வநே நம:
ஓம் கிரிப்ரியாய நம:
ஓம் புராராதயே நம:
ஓம் மகவதே நம:
ஓம் ப்ரமதாதிபாய நம:
ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம
ஓம் ஸூக்ஷ்மதனவே நம:
ஓம் ஜகத்வ் யாபினே நம:
ஓம் ஜகத் குரவே நம:
ஓம் வ்யோமகேசாய நம:
ஓம் மஹா ஸேந் ஜநகயா நம:
ஓம் சாருவிக்ரமாய நம:
ஓம் ருத்ராய நம:
ஓம் பூதபூதயே நம:
ஓம் ஸ்தாணவே நம:
ஓம் அஹிர் புதன்யாய நம:
ஓம் திகம்பராய நம:
ஓம் அஷ்டமூர்த்தயே நம:
ஓம் அநேகாத்மநே நம:
ஓம் ஸாத்விகாய நம:
ஓம் சுத்த விக்ரஹாய நம:
ஓம் சாச்வதாய நம:
ஓம் கண்டபரசவே நம:
ஓம் அஜாய நம:
ஓம் பாசவிமோசகாய நம:
ஓம் ம்ருடாய நம:
ஓம் பசுபதயே நம:
ஓம் தேவாய நம:
ஓம் மஹாதேவாய நம:
ஓம் அவ்யயாயே நம:
ஓம் ஹரயே நம:
ஓம் பூஷதந்தபிதே நம:
ஓம் அவ்யக்ராய நம:
ஓம் பகதேத்ரபிதே நம:
ஓம் தக்ஷ்த்வரஹராய நம:
ஓம் ஹராய நம:
ஓம் அவ்யக்தாய நம:
ஓம் ஹஸஸ்ராக்ஷயை நம:
ஓம் ஸஹஸ்ரபதே நம:
ஓம் அபவர்க்கப்ரதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் தாரகாய நம:
ஓம் பரமேச்வராய நம:

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி
ஸமர்ப்பயாமி

திருமீயச்சூர்

திருமீயச்சூர் ஆலயத்தில் உள்ள   இடது கரத்தில் கிளியுடன் உள்ள ஸ்ரீ சுகப்பிரம்ம துர்க்காதேவி சிற்பத்தின்  சிறப்பு:

இந்த ஆலயத்தை சுற்றி வலம் வரும்போது மேகநாதர் கருவறை தேவகோட்டத்தில் உள்ள சிற்பங்களில் வடக்கு தேவகோட்டத்தில் உள்ள துர்க்கையின் இடது கரத்தில் கிளியுடன் உள்ள சிற்பத்தை பார்த்து வியப்பு.

துர்க்கையின் இடது கரத்தில் கிளியுடன் உள்ள சிற்பத்தின் சிறப்பு:

மதுரையில் மீனாட்சிக்கும், ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாளுக்கும் கிளி உண்டு.

இவை கூட அலங்காரத்துக்காக செய்து வைக்கப்படுபவை தான்.

மற்றபடி சிலையில் கிளி கிடையாது.

ஆனால், துர்க்கை சிலையிலேயே கிளி அமைக்கப்பட்டுள்ளது ஒரு
சில கோயில்களில் தான்.

சென்னை திரிசூலம் திரிசூலநாதர் கோயில்,
தேனி மாவட்டம் சின்னமனூர் மாணிக்கவாசகர் கோயில் ஆகியவற்றிலும், திருமியச்சூரிலும் உள்ள துர்க்கையின் இடது கையிலும் கிளி இருக்கிறது.

மேகநாதர் கருவறை தேவகோட்டத்தில் வடக்கு கோட்டத்தில் எட்டு கரங்களுடன் இடது கரத்தில் கிளியுடன் உள்ள துர்க்கையின் சிற்பம் உள்ளது.

இந்த துர்க்கையை ஸ்ரீ
“சுகப்பிரம்ம துர்க்கா தேவி’ என்று அழைக்கின்றனர்.

“சுகம்’ என்றால் “கிளி’.

இவள் மகிஷாசுரன் மீது நின்ற கோலத்தில் இருந்தாலும் சாந்த சொரூபிணியாக திகழ்கிறாள்.

ஸ்ரீ சுகப்பிரம்ம துர்க்கா தேவியின் இடது கையில்
உள்ள இந்தக் கிளி பக்தர்களின் கோரிக்கையை துர்க்கை மூலமாக லலிதாம்பிகையிடம் நினைவுபடுத்திக் கொண்டே இருக்குமாம்.

“சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை’ என்ற சொலவடை கூட இதில்
இருந்து தான் பிறந்தது.

இன்றும் கூட தினமும் மாலை வேளையில் மட்டும் ஒரு கிளி இந்த துர்க்கா சன்னதியில் இருந்து லலிதாம்பிகை சன்னதிக்கு சென்று வருவதைக் காணலாம்
என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.

இந்த ஸ்ரீ சுகப்பிரம்ம
துர்க்காதேவி மிக அழகாக காட்சியளிப்பதோடு தனது இடது கையில் சுகப்பிரம்மம் (கிளி) எந்தியிருப்பது மிகசிறப்பு.

நமது கோரிக்கைகளை
இந்த  ஸ்ரீ சுகப்பிரம்ம
துர்க்கா தேவியிடம் மனம்
விட்டு தெரிவித்தால்
ஸ்ரீ சுகப்பிரம்ம
துர்க்காதேவியின் இடது கையிலுள்ள கிளி நமக்காக
ஸ்ரீ லலிதா அம்பாளிடம் தூது செல்வதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.

நாம் வழிபடும்போது நமது பிராப்தத்திற்கு ஏற்ப ஒரு கிளி மேகநாதர் கருவறை விமான கோபுரத்தின்மீது அமர்ந்தும்
பின்பு ஸ்ரீ லலிதா அம்பாள் சன்னதி கொடிமரத்தில் அமர்ந்து செல்லும் காட்சி இன்றும் நடக்கிறது என்று பக்தர்கள் கூறுகின்றார்கள்.

மேகநாதர் கருவறை தேவகோட்டத்தில் வடக்கு கோட்டத்தில் எட்டு கரங்களுடன் இடது கரத்தில் கிளியுடன்
உள்ள ஸ்ரீ சுகப்பிரம்ம துர்க்கா தேவி சிற்பத்தின் புகைப்படங்கள் மற்றும் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள தகவல் பலகையின் படம்...

ஐப்பசி ஸ்பெஷல்! துலா ஸ்நானம்!

ஐப்பசி ஸ்பெஷல்! துலா ஸ்நானம்!

ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்று போற்றுவர். இந்த மாதத்தில் இரவு நேரமும் பகல் நேரமும் சமமாக இருப்பதால் இதற்கு ‘துலா [தராசு] மாதம் என்று பெயர். ஐப்பசி முதல் தேதி அன்று காவிரியில் நீராடுவது புண்ணியம் என்கின்றன ஞான நூல்கள். துலா மாதத்தில் இதர நதிகளும் புண்ய தீர்த்தங்களும் காவேரியில் சேர்ந்து விளங்குகின்றன. ஆதலால் அப்போது ஸ்நானம் செய்பவர்கள் பஞ்ச மஹா பாதகங்களிலிருந்தும் விடுபடுகின்றனர். அதில் ஸ்நாநம் செய்தவர்கள் அச்வமேத யாகம் செய்த பலனையும் அடைகின்றனர்.

துலா மாதத்தில் காவேரிக் கரையில் எவனோருவன் பித்ருக்களை உத்தேசித்து ச்ராத்தம், பிண்டதானம், தர்ப்பணம் இவற்றைச் செய்கிறானோ அப்படிச் செய்யப்பெற்ற அவை கல்ப கோடி வர்ஷபர்யந்தம் பித்ருக்களை த்ருப்தி செய்விக்க வல்லவையாகின்றன. ப்ரஹ்மா முதலான ஸகல தேவர்களும், ஸரஸ்வதி, கெளரி, லக்ஷ்மி, இந்த்ராணி முதலியவர்களும் அப்ஸர ஸ்த்ரீகளும் துலா மாதத்தில் ஸ்நாநம் செய்ய விரும்பி வருகின்றனர். காவேரிக் கரைகளில் பிறந்து வளர்ந்த பசு பக்ஷி முதலானவையும் அதன் காற்றினால் பரிசுத்தங்களாக ஆகி மோக்ஷத்தை அடைகின்றன என்றால் பக்தி ச்ரத்தையுடன் ஸ்நானம் செய்தவர்கள் அடையும் பலனைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

மேலும் மஹான்களின் பெருமை, துளஸியின் மஹிமை, கங்கையின் ப்ரபாவம், துளஸியைக் கொண்டு செய்யப்படும் அர்ச்சனையின் வைபவம், ஸாளக்ராமத்தின் ஆராதன மஹிமை, காவேரியின் பெருமை இவற்றை உபதேசிக்கக் கேட்பவர்கள் மஹாபாக்கியசாலிகள். ஐந்மாந்தரங்களில் புண்யம் செய்தவர்களே காவேரியைக் காணும் பாக்கியத்தையும் அதில் ஸ்நாநம் செய்ய யோக்யதையையும் பெற்றவர்களாக ஆகின்றனர். ஸாமான்யமானவர்களுக்கு இது கிட்டாது. நதிகளில் மஹா விஷ்ணுவின் திருவடியிலிருந்து உண்டான கங்கை எப்படி உயர்ந்ததோ, புஷ்பங்களில் துளஸி எவ்வாறு மேற்பட்டதோ, வ்ரதங்களுக்குள் ஏகாதசி வ்ரதம் எப்படி உயர்ந்ததாக உள்ளதோ க்ருஹஸ்தர்கள் செய்ய வேண்டிய கர்மாக்களுள் பஞ்ச மஹாயஜ்ஞங்கள் எவ்வாறு உயர்ந்தவையோ, சுத்திகளுக்குள் மநஸ்ஸுத்தி எப்படி உயர்ந்ததோ, தேவதைகளுள் ஸ்ரீமந்நாராயணன் எவ்வாறு உயர்ந்தவராக விளங்குகிறாரோ அக்ஷரங்களுக்குள் ஓங்காரம் எவ்வாறு உயர்ந்ததோ, வேதங்களுள் ஸாமவேதம் எப்படி உயர்ந்ததாகக் கருதப் பெறுகிறதோ, பதினோரு ருத்ரர்களுக்குள் சங்கரம் எப்படி உயர்ந்தவராக உள்ளாரோ, ப்ராஹ்மண ஸ்த்ரீகளுள் அருந்ததி எவ்வாறு மேம்பட்டவளோ, ஸ்த்ரீகளுக்குள்மஹாலக்ஷ்மி எப்படி உயர்ந்தவளோ, தானங்களுக்குள் அந்நதானம் எப்படி உயர்ந்ததோ அதே போல் நதிகளுக்குள் உயர்ந்தது காவேரி நதி என்று புராணங்கள் கூறுகின்றன.

ஐப்பசி முதல் நாளன்று  திருப்பராய்த்துறையிலும் ஐப்பசி கடைசி நாள் மயிலாடுதுறையிலும் நீராடுவது விசேஷமாகக் கருதப்படுகிறது. துலா மாதமாகிய ஐப்பசியில் பிரம்ம முகூர்த்தத்தில் காவிரி நதியில் நீராடினால், மஹா விஷ்ணுவின் அருள் கிட்டும். துலா மாதத்தில் சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை நேரத்திற்குமுன் காவிரியில் மும்மூர்த்திகளும், முப்பது முக்கோடி தேவர்களும், 68 ஆயிரம் ரிஷிகளும், முனிவர்களும் சித்தர்களும் நீராடுவதாக சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

துலா மாதத்தில் காவிரியில் நீராடுவது புனிதமானது என்று சாஸ்திரம் சொல்லும் அதே வேளையில் இயலாத நிலையில் ‘கடைமுகம்’ என்று சொல்லப்படும் ஐப்பசி முப்பதாம் தேதி நீராடி பலன் பெறலாம். அன்றும் நீராட முடியாதவர்கள், ‘முடவன் முழுக்கு’ என்று சொல்லப்படும் கார்த்திகை முதல் தேதி நீராடினாலும் புனிதம் பெறலாம் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

‘ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது காசியில் ஓடும் கங்கை நதியில் நீராடுவதற்கு சமம்’ என்று புராணங்கள் கூறுகின்றன. ஏனெனில் ஐப்பசி மாதமானது துலா மாதத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான பாரதத்தில் ஓடும் நதி தேவதைகள் அனைத்தும் காவிரியில் நீராடி தங்களிடம் மானிடர்கள் கரைத்துச் சென்ற பாபக்கறைகளைப் போக்கிக் கொள்கின்றது என்று காவிரி மகாத்மியம் என்னும் நூல் கூறுகிறது.

மக்கள் தங்களுடைய பாவங்களை போக்க கங்கையில் நீராடி நீராடி கங்கைக்கே பாவம் அதிகமாக சேர்ந்து தோஷம் ஏற்பட தன் பாவங்கள் தீர என்ன செய்ய வேண்டும்? என்று விஷ்ணு பகவானிடம் கேட்டாள் கங்கை. அதற்கு ஸ்ரீ மஹா விஷ்ணு "நீ காவேரி நதியில் நீராடு உன் பாவம் நீங்கும்" என்றார்.

அன்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்யக்ஷேத்ரே விநச்யதி |
புண்ய க்ஷேத்ரே கிருதம் பாபம் வாரனாச்யாம் விநச்யதி |
வாரனாச்யாம் க்ருதம் பாபம் கும்பகோனே விநச்யதி |
கும்பகோனே க்ருதம் பாபம் காவேரி ஸ்நானே விநச்யதி |
என்று காவேரி ஸ்நானத்தின் மகிமையை வேதம் போற்றுகிறது.

அதன் படியே ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசையன்று கங்கா தேவி காவேரியில் நீராடி மக்கள் தன்னிடம் கரைத்த பாவங்களைப் போக்கிக் கொள்கிறாள் என்று புரான இதிகாசங்களில் போற்றப்படுகின்றது

துலா மாதத்தில் காவிரியில்  ஒரு முறை நீராடுபவன் ஸ்ரீமன் நாராயணனாக மாறுகிறான். மற்ற விரதங்களில் ஏதாவது சிறு தவறு ஏற்பட்டாலும் அதற்கு பிராயச்சித்தம் செய்ய வேண்டும். ஆனால், காவிரி துலா ஸ்நானத்திற்கு அப்படி எதுவுமில்லை. மக்களுக்கு புத்தியும் முக்தியும் அளிக்கும் துலா மாதத்தில் காவிரியில் நீராடுபவர்கள் தன்னையும் தங்கள் குடும்பத்தினரையும் முன்னோர்களின் பாபங்களையும் போக்கிக் கொள்வதுடன் வளமான வாழ்வு காண்கிறார்கள் என்று ஞான நூல்கள் கூறுகின்றன. துலா காவிரி நீராடல் அழகு, ஆயுள், ஆரோக்கியம், செல்வம், கல்வி, மாங்கல்ய பாக்கியம், குழந்தைப்பேறு, வலிமை ஆகியவற்றை தரும். எனவே காவிரியை நினைத்தாலும் சிறப்பைக் கேட்டாலும் பாபங்கள் விலகும் என்றார் பிரம்மா நதி தேவதைகளிடம் ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடி நீர்க்கடன் செலுத்துவோரின் முன்னோர்கள் சொர்க்கத்தை அடைகிறார்கள். காவிரி தேவியை வணங்கி துதிப்பவர்கள் சொர்க்க லோகம் செல்லும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள். தன்னில் நீராடுபவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வளமான வாழ்வு தருபவள் என்கிறது காவிரி புராணம். நதி தேவதைகளும்,
தேவர்களும், மானிடர்களும் துலா மாதத்தில் காவிரியில் நீராடி தங்களிடம் உள்ள பாபங்களைப் போக்கிக்கொண்டதும் அந்தக் கறைகள் அனைத்தையும் காவேரி போக்கிக்கொள்ள திருமங்கலக்குடி திருத்தலத்திலும், மாயூரத்தில் (மயிலாடுதுறை) உத்தர வாகினியாக (தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாய்வது) இருந்து காவிரி போக்கிக்கொள்கிறாள் என்பது ஐதீகம்.

ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் அருள் புரியும் ரங்கநாதருக்கு ஐப்பசியில் தங்கக் குடங்களில் ஸ்ரீரங்கத்தின் தென் பகுதியில் உள்ள அம்மா மண்டபம் காவிரி நதிக்கரைப் படித்துறையிலிருந்து புனிதத் தீர்த்தத்தை சேகரித்து யானை மீது எடுத்து வந்து அபிஷேகம் செய்வர். மற்ற மாதங்களில் ஸ்ரீ ரங்கத்தின் வடக்கில் உள்ள கொள்ளிடத்தில் இருந்து வெள்ளிக் குடங்களில் தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் செய்வார்கள்.

துலா காவேரி மஹாத்மியம்:

ஆதியில் உமாதேவிக்கு ஸ்ரீ பரமேச்வரன் சொன்ன காவேரி மகாத்மியத்தை தேவ வன்மன் என்ற அரசனுக்கு சுமத் திரங்கி என்ற ரிஷி சொல்லத் தொடங்குகிறார். ஒரு சமயம் பார்வதி - பரமேச்வரர்கள் ஒரு நந்தவனத்தில் தங்கியிருந்த போது அங்கு பறவைகள் வடிவில் வந்த நதி தேவதைகள், துலா மாதத்தில் காவேரியில் ஸ்நானம் செய்து விட்டு அவ்விருவரையும் தரிசிக்க வந்தன. அவர்கள் வேண்டிய வரங்கள் எல்லாவற்றையும் தந்த ஈச்வரன், மேலும் கூறலானார்:

"கங்கைக்கு நிகரான காவிரியில் நீராடினாலும் தரிசித்தாலும் அதனை பக்தியுடன் தொட்டாலும் அதன் கரையில் தானம், தர்ப்பணம் செய்தாலும் எல்லா பாவங்களும் விலகி புண்ணியம் கிட்டும். இதன் கரைகளில் காசிக்கு சமமான ஸ்தலங்களும் இருக்கின்றன. நினைத்ததைத் தரும் சிந்தாமணியான காவேரியின் பெருமையை இன்னும் சொல்கிறேன் கேள்" என்றார். அஸ்வமேத யாகம் செய்யத் தொடங்கிய அரிச்சந்திர மகாராஜாவை, முனிவர்கள், பிராயச்சித்தமாக துலா மாதத்தில் காவிரியில் நீராடிவிட்டு வரச்சொன்னார்கள்.

நாத சந்மா என்பவன் பரம பதிவ்ரதையான அனவித்யை என்பவளுடன் காவேரி ஸ்நானம் செய்வதற்காகவும் இருவரும் மோக்ஷ சாம்ராஜ்யத்தைப் பெற வேண்டியும் கௌரி மாயூர க்ஷேத்திரத்தை நோக்கி வந்தான். முனிவர்கள் தங்கள் பத்திநிகளுடனும் புத்திரர்களுடனும் தங்கி ஹோமாக்னி செய்து பலவித தானங்களை செய்து வரும் அந்த மோக்ஷ புரியில் நாமும் தங்கி நற்கதி பெறுவோம் என்றான் நாதசன்மன். அப்படியானால் காவேரி மற்ற எல்லா தீர்த்தங்களை விட எவ்வாறு உயர்ந்தது என்று அனவித்யை கேட்க நாத சந்மனும் கூறத்தொடங்கினான்.

காவிரி உருவான கதை:

காவேரன் என்ற அரசன் தனக்குப் புத்திர பாக்கியம் இல்லாததால் பிரம்மாவைக் குறித்துத் தவம் செய்தான். பிரம்மாவானவர் "உனக்குப் புத்திர பாக்கியம் இல்லா விட்டாலும் ஒரு குழந்தையை அளிக்கிறேன்" என்று கூறி தன் மனத்தால் ஒரு பெண் குழந்தையை உண்டாக்கி அவனிடம் அளித்தார். காவேரி என்ற பெயரில் அவனிடம் வளர்ந்த அப்பெண் தகுந்த கணவனை வேண்டித் தவம் செய்யலானாள். பின்னர் அகஸ்த்திய முனிவரைக் கண்ட காவேரியானவள், இவரே தனது மணாளர் ஆவார் என்று நினைத்து லோபா முத்ரா என்ற பெயருடன் அவரை திருமணம் செய்து கொண்டவுடன் அவள் விரும்பியபடியே நதி ரூபமாகி பிற நதிகளுக்கும் மனிதர்களுக்கும் ஏற்பட்ட பாவங்களை நீக்கவும், மோக்ஷத்தை அளிக்கவும் மறு அம்சமாகத் திகழுமாறு அகஸ்த்ய ரிஷி அருளினார்.

துலாக் காவேரியின் நீர்த்திவலைகள் ஒவ்வொன்றும் புண்ணிய தீர்த்தமாகும். அதிலுள்ள மணல்கள் எல்லாம் தேவதைகள். அதனால் தான் உலகிலுள்ள புனித நதிகள் அனைத்தும் துலா மாதத்தில் காவேரியில் நீராடி மக்கள் தங்களிடம் கரைத்த பாவக் கறைகளைக் கழுவி புனிதமடைகின்றன. துலா மாதத்தில் காவேரியில் நீராடுபவர்கள் தங்கள் குடும்பத்தினரையும் சேர்த்து மூன்று கோடி உறவினர்களையும் கடைத்தேற்றுகிறார்கள். துலா மாதத்தில் காவேரியில் நீராடி முன்னோர்களுக்கு பிதுர் பூஜை செய்து அன்னதானம், ஆடை தானம் அளித்தால் பித்ருக்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள். அழகு, ஆயுள், ஆரோக்கியம், சொல்வளம், கல்வி, வாழ்வில் சுகம் என எல்லாம் கிட்டு மென்று துலாக் காவேரி மகாத்மியம் கூறுகிறது.

ஆதி, இடை, கடை என்னும் மூன்று அரங்கங்களையும் தன்னகத்தே கொண்டு, சதாசர்வ காலமும் இறைவன் நாராயணனின் திருவடியைத் தழுவி வணங்கும் காவேரியின் பேறும் பெருமையும் தன்னிகரற்றது. தட்சிணகங்கை என்று போற்றப்படும் காவேரிக்கு பொன்னி, விதிசம்பூதை, கல்யாணி, சாமதாயினி, கலியாண தீர்த்தரூபி, உலோபமுத்ரா, சுவாசாஸ்யாமா, கும்பசம்பவ வல்லவை, விண்டுமாயை, கோனிமாதா, தக்கணபதசாவணி என பல பெயர்கள் உள்ளன.
காவேரியில் துலா ஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதரை வழிபட்டதன் பலனாக சந்தனு மகாராஜா பீஷ்மரை புத்திரனாக அடைந்தார்.

அர்ச்சுனன், துலா ஸ்நானம் செய்து ஸ்ரீ ரங்கநாதப் பெருமாளை துதித்து சுபத்ராவை மணம் புரிந்தான் என்று புராணம் கூறுகிறது. முரன் முதலான அசுரர்களை அழித்ததால் மஹா விஷ்ணுவிற்கு பற்றிய #வீரஹத்தி தோஷம் போக்க காவேரியில் ஐப்பசி மாதம் நாக சதுர்த்தியன்று துலா ஸ்நானம் செய்து தோஷம் நீங்கப்பெற்றார் என்று துலாக் காவேரி மகாத்மியம் கூறுகிறது

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசையன்று கங்கா தேவி காவேரியில் நீராடி மக்கள் தன்னிடம் கரைத்த பாவங்களைப் போக்கிக் கொள்கிறாள் என்பது புராணம். ஐப்பசி முதல் தேதி திருச்சிக்கு அருகிலுள்ள திருப்பராய்த்துறையிலும், இரண்டாவது நீராடலை ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபம் படித்துறையிலும், கடைசி தேதியன்று மயிலாடுதுறை நந்திக் கட்டத்திலும் முழுக்குப் போட வேண்டும் என்பது ஐதீகம்.

தலைக்காவேரி, ராமபுரம், ஸ்ரீரங்கம், திருப்பராய்த்துறை, திருவானைக்காவல், சப்தஸ்தானம், திருவையாறு, புஷ்பாரண்யம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, மயிலாடுதுறை, கும்பகோணம், திருவிடைமருதூர் முதலிய காவேரி நீர்த்துறைகள் துலா மாதத்தில் நீராட சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.

துலாக் காவேரி ஸ்நானம் செய்பவர்கள், காவேரி நதிக்குப் பூஜை செய்து வழிபடுவதுடன் அருகில் அரசமரம் இருந்தால் அதற்கு நீர் வார்த்து அதை வலம் வந்து வணங்குவது புண்ணிய பலன் தரும். காவேரிக் கரையில் கோமாதா பூஜை செய்தால் மேன்மேலும் புனிதம் கிட்டும். துலா காவேரி ஸ்நானம் செய்யும் முன் தகுந்த புரோஹிதர்களை கொண்டு ஸ்நான ஸங்கல்பம் செய்துக்கொள்வது சிறந்தது. முடியாதவர்கள் கீழ்கண்ட ஸ்லோகத்தை கூறி துலா ஸ்நானம் செய்வது உசிதம்.

"கங்கேச யமுனே சைவ
கோதாவரி சரஸ்வதீ
நர்மதே சிந்து காவேரீ
ஜலேஸ்மின் சன்னிதிம் குரு"

ஐப்பசி மாதத்தில் துலா ஸ்நானம் போற்றப் படுவதுபோல் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகமும் சிவாலயங்களில் சிறப்பிக்கப் படுகின்றன.

எந்த படியில் என்ன பொம்மை வைக்க வேண்டும்?

எந்த படியில் என்ன பொம்மை வைக்க வேண்டும்?

கொலு வைக்கும் போது 5,7,9 என்ற கணக்கில் படி அமைக்கின்றனர். ஒன்பது படிகள் வைப்பது பொருத்தமானதாக இருக்கும். கொலு மேடை படிகளை கிழக்கு அல்லது வடக்கு திசையில் இருக்கும் வகையில் அமைக்க வேண்டும்.

முதல் படியில் செடி, கொடி, காய், கனி பொம்மைகளை வைக்க வேண்டும். மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

இரண்டாம் படியில் சங்கால் செய்த பொம்மைகளை வைக்கலாம். நத்தை பொம்மை வைப்பது நலம். எதையும் நிதானமாகச் செய்து உயர் இடத்தை பிடிக்க வேண்டும் என்பது இதன் பொருள்.

மூன்றாம் படியில் பூச்சி வகை பொம்மைகள், கரையான் புற்று,சிலந்தி வலை, களிமண்ணில் செய்த எறும்பு, வண்ணத்துப்பூச்சி (காதிகிராப்ட் கடைகளில் மரத்தால் செய்தது கிடைக்கிறது) பொம்மைகளை வைக்க வேண்டும். எறும்பு போல் சுறுசுறுப்பு,கரையான் புற்றையும் சிலந்தி வலையையும் கலைத்தாலும் திரும்பத் திரும்பக் கட்டும் திடமனப்பான்மையை அம்பாளிடம் வேண்டி இந்த பொம்மைகளை அடுக்க வேண்டும்.

நான்காம் படியில் நண்டு, வண்டு, தேனீ பொம்மைகள் இடம்பெற வேண்டும். ஆழமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்பதை இது குறிக்கும்.

ஐந்தாம் படியில் மிருகங்கள்,பறவை பொம்மைகள் வைக்க வேண்டும். மிருக குணத்தை விட்டு பறவைகள் போல் கூடி வாழ வேண்டும் என்பது இதன் பொருள்.

ஆறாம் படியில் மனித பொம்மைகள் வைக்க வேண்டும். முதல் ஐந்து படிகளில் வைக்கப்பட்ட பொம்மைகளுக்கு கூறப்பட்ட குணநலன்களைக் கடைபிடித்தால் முழு மனிதன் என்ற அந்தஸ்தைப் பெறலாம்.

ஏழாம் படியில் மகான்கள், முனிவர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும். மனித நிலையில் இருந்து தெய்வீக நிலைக்கு உயர பக்தி அவசியம் என்பதை இது உணர்த்துகிறது. விவேகானந்தர், ராமகிருஷ்ணர் ராகவேந்திரர் பொம்மை கடைகளில் கிடைக்கிறது. வியாசர் போன்ற முனிவர்களின் படங்களைப் பார்த்து பொம்மை செய்யலாம். கிடைக்காத பொம்மைகளுக்கு பதிலாக சுவாமி சிலைகள் வைக்கலாம்.

எட்டாம் படியில் நாயன்மார்கள் (அப்பர், சம்பந்தர், சுந்தரர்), ஆழ்வார்கள் (ஆண்டாள், பெரியாழ்வார்) சூரியன், நாகர் போன்ற தேவர்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். மகானாக உயர்ந்தவர் தவம், யாகம் முதலான உயர்நிலை பக்தியைக் கடைபிடித்து தேவர் அந்தஸ்துக்கு உயர வேண்டுமென்பதை இது காட்டுகிறது.

ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்கள் தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதியுடன் இருக்கும் வகையிலான சிலைகளை வைத்து, நடுவில் ஆதிபராசக்தி சிலையை சற்று பெரிய அளவில் வைக்க வேண்டும்.தேவநிலைக்கு சென்ற உயிர்கள் தெய்வநிலையை அடைய வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.

வெள்ளி, 18 அக்டோபர், 2024

56. ஸ்ரீ சர்வஜ்ஞ சதாசிவ போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்....

காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

56. ஸ்ரீ சர்வஜ்ஞ சதாசிவ போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்....

ஐம்பத்தி ஆறாவது ஆச்சார்யர் [கி.பி. 1524 - 1539]

ஸ்ரீ சர்வஜ்ஞ சதா சிவ போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், வட பெண்ணாற்றங்கரையில் உள்ள ஒரு சிற்றூரில் ''சித்ருதசிக் கண்ணா'' என்பவரின் மகனாக பிறந்தார். இவர் இராமநாதபுரம் மன்னரான சேதுபதி மரபினருக்குக் குருவாக விளங்கியவர்.

ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடாதிபதிகள் திருமரபினர் ஸித்தி எய்திய விபரங்களைக் கூறும் புண்யஸ்லோக மஞ்சரி, ஸ்வஸ்த்ம நிரூபணம் என்ற நூல்களை இயற்றி உள்ளார்.

இவர் காலத்தில் 03-05-1528 விரோதி வருடம், வைகாசி மாதம் ஸ்ரீகிருஷ்ண தேவராயர் "உதயம் பாக்கம்" என்ற கிராமத்தை ஸ்ரீமத் ஆசார்யாளுக்கு அர்ப்பணம் செய்ததாக செப்பேடு கூறுகின்றது.

அந்த செப்பேடு பூஜ்ய ஸ்ரீ ஆசார்யரைப் புகழ்ந்து போற்றுகிறது.

இவர் கி.பி. 1539 ஆம் ஆண்டு, விளம்பி வருடம், சித்திரை மாதம், வளர்பிறை அஷ்டமி திதி அன்று ராமேஸ்வரத்தில் சித்தி அடைந்தார்.

இவர் 15 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்துள்ளார். 



ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி!

ஏழு நாட்களில் அர்ஜூனின் பேரன் பரீட்சித்து மன்னருக்கு பாகவத சப்தாஹம் உபதேசித்து மோட்சம் கிடைக்க செய்த ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி!

சுகஹா என்னும் வடமொழி சொல்லுக்கு கிளி என்று பொருள்!

ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி பிறப்பு நிகழ்வு ஒன்று...

ஒரு முறை ஜனன - மரண ரகசியங்களை உமையன்னைக்கு ஈசன் சொல்லிக் கொண்டிருந்த போது உமை கண்கள் அசர,
அருகே மரத்தில் அமர்ந்திருந்த கிளிக்குஞ்சு ஈசனின் உபதேசத்தை 'ம்' கொட்டிக் கேட்டதாம்.

'ம்' கொட்டியது கிளி என்பதை அறிந்த ஈசன் அதைப் பிடிக்க முற்பட அது வியாசரின் மனைவியின் கர்ப்பத்தில் அடைக்கலமானது. ஈசன் 'கிளியே வெளியே வா' என அழைக்க கிளி முகத்தோடு சுகர் தோன்றினார். தான் உபதேசித்த ஜனன - மரண சிவ ரகசியத்தை எவரிடமும் கூறாமல் பிரம்மமாக இரு. ''உன் ஜன்ம தினத்தன்று என்னையும் உன்னையும் வணங்குபவர்கள் வாழ்வு சிறக்கும்'' என ஆசி வழங்கினார் ஈசன்.

ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி பிறப்பு நிகழ்வு இரண்டு...

ஸ்ரீ கிருஷ்ணர் முனிகளுள் நான் வியாசராக இருக்கிறேன் என்கிறார். மஹாபாரதக் கதை மற்றும் நம் தமிழ் கடவுள் பற்றி கந்த புராணம் எழுதிய வியாசர் அவர்களின் மகன் தான் ஸ்ரீ சுகப் பிரம்மம். கிருதாசீ என்ற தேவமங்கையின் அழகில் மயங்கிய வியாசர் அவளிடம் மனதைப் பறி கொடுத்தார்.
அவரிடம் இருந்து தப்பிக்க கிருதாசீ கிளியாக மாறினாள்.
ஆனாலும் முனிவரின் தபோ பலத்தால் கிருதாசீ கர்ப்பம் தரித்தாள்... ரிஷியின் கர்ப்பம் ராத்தங்காது என்பதால் உடனடியாக அவர்களுக்கு ஓர் மகன் பிறந்தான்.

குழந்தைக்கு முகம் கிளி போன்றும், உடல் மனிதனைப் போன்றும் இருந்தது. கிளியாக மாறிய தனது தாய் கிருதாசியின் சாயலான கிளி வடிவத்தை முகத்தில் தாங்கி பிறந்தவர். பொதுவாக தாயின் சாயலைப் பெற்ற மகனும், தந்தையின் சாயலைப் பெற்ற பெண்ணும் பெரும் அதிர்ஷ்ட சாலிகள் என்பார்கள்.

எனவே சுகர் உலகிலேயே மிகச் சிறந்த ஞானவான் என்ற தகுதியைப் பெற்ற அதிர்ஷ்ட சாலி தான். இவர் தனது அதிர்ஷ்டத்தைக் கூட உணர வேண்டிய அவசியமில்லாத பிரம்ம ஞானி. வடமொழியில் சுகா என்றால் கிளி என்ற அர்த்தம். அதனால் கிளி முகம் கொண்டு பிறந்த அந்த குழந்தைக்கு சுகர் என்று பெயரிட்டனர்.

குழந்தையை தேவலோகத்திற்கு எடுத்துச் செல்ல இயலாததால், வியாசரிடமே கொடுத்து விட்டாள் தேவ மங்கை கிருதாசி. வியாசரும் அக்குழந்தையைப் புனித நீராட்ட, சிறுவனாக உருமாறிய சுகர் பிறப்பிலேயே ஞானியாக
விளங்கினார். வேதவியாசரின் பிள்ளை என்பதால் தேவர்கள் பூமாரி பொழிந்து குழந்தையை வாழ்த்தினர்.

சுகருக்கு உரிய வயது வந்ததும் உபநயனம் செய்வித்தனர்.
பால பிரம்மச்சாரியான சுகருக்கு வேண்டிய தண்டமும் மான் தோலும் வான் வெளியிலிருந்து வந்து விழுந்தன. வியாசர் மகா பாரதத்தை சுகருக்கு உபதேசித்த பிறகே தம் சிஷ்யர்களான வைசம்பாயனர் போன்றோருக்கு
உபதேசித்தார். இவரது குரு பிரகஸ்பதி ஆவார். குரு பிரகஸ்பதியிடம் கற்க வேண்டியது அனைத்தையும் கற்றார்.
மிகச் சிறந்த ஞானமும் அடக்கமும் பெற்றிருந்த போதிலும் சுகர், தம்மை ஞான மில்லாத ஒருவராகவே நினைத்துக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் ஸ்ரீ வியாசர் சுகப்பிரம்மா இங்கே வா என்றார்.
வருகிறேன் என்று சுகப்பிரம்மர் மட்டுமல்ல அங்கே நின்ற மரம் மட்டை செடி கொடி எல்லாம் வருகிறேன் என்றது. இதை கண்டு சுகப்பிரம்மருக்கு பெருமை பிடிபடவில்லை! அப்படி என்றால் அனைத்திலும் நான் இருக்கிறேனா? நான் எவ்வளவு பெரிய ஆள் என்று நினைத்தாரோ இல்லையோ அவருடைய ஞானம் அக்கணமே அவரை விட்டுப் போய் விட்டது.

உடனே ஸ்ரீ வியாசர் மகனிடம் சுகா தற்பெருமையால் உனது ஞானம் அனைத்தையும் இழந்தாய். நீ உடனே சென்று ஜனகரை பார்த்து உபதேசம் பெற்று வா என்று கூறினார். சுகரும் உடனே தந்தை சொல் கேட்டு ஜனகரை பார்க்க மிதிலைக்கு சென்றார்.
மகா ராஜாவாக இருந்தும் ஜனகர் தாமரை இலைத் தண்ணீர் போல் ராஜாங்கத்தில் குடும்ப வாழ்வில் பட்டும் படாமல் இருந்தார். அவரை சந்திப்பதற்காக வாயிற்காப்போனிடம் அனுமதி கேட்டார் .

அதற்கு அவன் சுவாமி இங்கே நில்லுங்கள் நான் போய் அரசரிடம் அனுமதி பெற்று வருகிறேன். நீங்கள் யார் என்று கேட்டால் என்ன சொல்ல வேண்டும் என்று கேட்டான். அதற்கு உடனே சுகப்பிரம்ம மகரிஷி அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று உன் மன்னனிடம் சொல் என்று கூறினார். அவனும் உடனே சென்று மன்னனிடம் அவர் கூறிய படியே கூறினான்.

உடனே மன்னர் ஜனகர் அவர் நாலைந்து பேர்களுடன் வந்து இருக்கிறார். அவரை மட்டும் தனியாக வரச்சொல் என்று கூறினார். ஏன் மன்னர் இவ்வாறு கூறினார்? என்று குழம்பிப் போய் மன்னர் கூறியதை வந்து அப்படியே சுகப்பிரம்மரிடம் கூறினான்.

அவர் உடனே சரி சுகப்பிரம்மம் வந்திருக்கிறது என்று சொல் என்று கூற காவலனும் மன்னனிடம் அவ்வாறே சொல்ல இன்னும் ஒரு ஆள் கூட இருக்கிறார், அவரையும் விட்டு விட்டு வரச் சொல் என்று கூறினார். இன்னுமொருவர் தங்களுடன் உள்ளாராம். அவரையும் விட்டு விட்டு வர சொன்னார் மன்னர் என்று சுக முனிவரிடம் கூறினார்.

சரியப்பா, சுகப்பிரம்மன் வந்திருக்கிறான் என்று சொல் என்று சொன்னதும் அவனும் அவ்வாறு சொல்ல அவரை உடனே உள்ளே வரச் சொல் என்று ஜனக மகாராஜா அனுமதி கொடுத்தார். அவரைக் கண்டதும் ஜனக மகாராஜா அவரிடம் பேச வில்லை. எழுந்து அவருக்கு ஆசனம் வழங்க வில்லை .
அதற்கு பதிலாக அங்குள்ள மொட்டை அடித்த தலையுடன் உள்ள ஒருவனை அழைத்து அவனை அமர வைத்து அவன் தலையில் ஒரு தட்டை வைத்து தட்டில் நிறைய எண்ணையை ஊற்றினார். டேய்! நீ உடனே புறப்பட்டு ரத வீதிகள் அனைத்தையும் சுற்றி விட்டு இங்குவா. தட்டு கீழே விழக் கூடாது. மேலும் தட்டிலிருந்து ஒரு சொட்டு எண்ணெய் கூட கீழே சிந்தக் கூடாது. அவ்வாறு சிந்தினால் உன் தலையை வாங்கி விடுவேன் என்று எச்சரித்தார்.

அவனும் கிளம்பினான். அவன் வேறு எதிலும் கவனம் செலுத்த வில்லை. தனது தலையிலிருந்த தட்டிலும் எண்ணெயுமே
கவனம் செலுத்தி அனைத்து வீதிகளையும் சுற்றி விட்டு மன்னனிடம் வந்தான். மன்னனும் ஒரு சொட்டு கூட சிந்தாமல் இருப்பதைக் கண்டு அவனை மன்னிக்க அவன் மகிழ்ச்சியுடன் சென்றான்.

அப்போதும் அவர் சுகரிடம் பேசவில்லை. ஆனால் இதை அனைத்தையும் நன்கு கவனித்துக் கொண்டிருந்த சுகர்
அதிலிருந்து ஒரு விஷயத்தை புரிந்து கொண்டார். ஒரு மனிதனுக்கு உயிர் போய் விடும் என்ற நிலை ஏற்பட்டால் சுற்றுப்புறத்தில் என்ன நடந்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல், நாமும் மனதை அடக்கி கடவுளின் மீது மட்டும் பக்தியை செலுத்தினால் அகங்காரம் தானே அடங்கும்.

மீண்டும் ஞானம் பிறக்கும் என்ற உபதேசத்தை ஜனகர் உபதேசிக்காமலேயே அவரிடம் பெற்று அங்கிருந்து மிக மகிழ்ச்சியுடன் கிளம்பினார். கிளி முகம் கொண்ட இவருக்கு நாரதர் உபதேசம் செய்தார். தவ வாழ்வில் ஈடுபட்ட இவர், எல்லா உயிர்களிலும் கடவுள் வியாபித்து இருப்பதை உணர்ந்தார்.

ஒரு நதிக்கரை வழியே சுகப்பிரம்மர் முன்னே செல்ல சிறிது இடை வெளியில் வியாசர் சென்ற போது தெய்வப் பெண்கள் நதியில் நீராடி கொண்டு இருந்தனர். சுகப்பிரம்மர் வந்த போது அவர்கள் அவரை கண்டு கொள்ளாமல் அரைகுறை ஆடையுடன் குளித்தபடி இருந்தனர். சிறிது நேரத்தில் வயதான வியாசர் வருவதை பார்த்தவுடன் நாணப்பட்டு அரக்க, பரக்க தங்கள்
ஆடைகளை எடுத்து தங்களது உடலை மூடினர். ஆனால் அவர்கள் வாலிபரான சுகரைக் கண்டு வெட்கப்படவில்லை.

உங்களின் இந்த மாறுபாடான செயலுக்கு என்ன காரணம்? என வியாசர் கேட்க அதோ பாருங்கள் உங்கள் மகன் எதனையும் காணாது சென்று கொண்டு இருக்கின்றார். அவர் கண்களுக்கு அனைத்தும் பிரம்மமாய்த் தோன்றுகின்றன. உமக்கு அப்படி இல்லையே! ஆண், பெண் என்னும் வேறுபாடுகள் உமக்கு தெரிகின்றன. அதனால் உங்களைக் கண்டவுடன் வெட்க முற்றோம் என்றனர் தேவப் பெண்கள்.

பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் நடத்திய ராஜ சூய யாகத்தில் அன்னதானம் நடத்தப்பட்டது. அதில் ஒரு லட்சம் பேர் சாப்பிட்டால் அதை தெரிவிக்கும் வகையில் ஒரு தெய்வீக மணி ஒலிக்கும். அதைக் கொண்டு ஒரு நாளைக்கு எத்தனை பேர் சாப்பிட்டார்கள் என்று கணக்கிடுவார்கள். திடீரென்று ஒரு நாள் அந்த மணி மிக வேகமாக ஒலிக்கத் தொடங்கியது. ஒரு தரம் அடித்தால் ஒரு லட்சம் தானே கணக்கு! இதென்ன இப்படி தொடர்ந்து அடிக்கிறதே அதிசயம்! வேகம் தாளாமல் மணி
அறுந்து விழுந்து விட்டது. தெய்வீகமணியில் எவ்விதமான கோளாறும் இருக்க வாய்ப்பில்லை.

அனைவரும் திகைத்து நின்ற வேளையில், பச்சைக்கிளி முகம் கொண்ட சுகர் இலையில் இருந்த ஒரு சில பருக்கைகளைக் கொத்தி விட்டுப் போனது தான் இதற்கு காரணம் என்பது பின்னால் தெரிய வந்தது. எனவே ஸ்ரீ சுகப்பிரம்மரின் பெயரால் அன்னதானம் நடத்தினால் நமக்கு அளவற்ற செல்வமும், புண்ணியமும் கிடைக்கும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது.

அர்ச்சுனனின் மகன் அபிமன்யுவின் மனைவி உத்தரை. இவள் கருவுற்றாள். இவளுக்கு ஒர் ஆண் குழந்தை பிறக்கிறது. அஸ்வத்தாமன் சாபத்தால் இறந்து பிறந்த இந்தக் குழந்தையை உயிர்ப்பித்துப் பாண்டவ வம்சத்தைக் காத்தவர் கிருஷ்ணர். அப்படி இறந்து பிறந்து ஸ்ரீ கிருஷணரால் உயிப்பிக்கபட்ட குழந்தையான அர்ச்சுனரின் பேரன்
பரீட்சித்து மன்னர். பரீட்சித்து பின்னாளில் ஹஸ்தினாபுரத்து மகா ராஜாவாக ஆன போது வேட்டையாடக் காட்டுக்குச் சென்றார்.

அங்கு ஒரு முனிவர் குடிலொன்றைக் கண்டார். தாகத்திற்கு நீர் கேட்டு நின்றார். தவ சிரேஷ்ட்டரான சமீகர் முனிவர் காதில் அவரது குரல் விழவில்லை. கோபமுற்ற மன்னர் பரீட்சித்து, அருகில் செத்துக் கிடந்த பாம்பை எடுத்து முனிவருக்கு மாலையாக்கினார். இதனைக் கண்ட முனிவரின் மகன் சிரிங்கி, மன்னர் பரீட்சிதது ஏழே நாட்களில் பாம்பு கடித்து இறந்து விடுவார் எனச் சாபமிடுகிறார். சாபம் பற்றி தெரிந்து கொண்ட பரீட்சித்து, உடனடியாகத் தன் மகன் ஜனமேஜயனுக்கு பட்டாபிஷேகம் செய்வித்தார்.

பொறுப்புகளை அவனிடம் ஒப்படைத்து விட்டு கங்கைக் கரையில் வடக்கு முகமாக உட்கார்ந்து தவம் புரிந்து உயிர் விட ஏற்பாடு செய்தார். தகவல் அறிந்த அத்ரி, வசிஷ்டர், பிருகு, ஆங்கிரசர், பராசரர், தேவலர், பரத்வாஜர், கவுதமர், அகத்தியர், வியாசர் என்ற தவசிரேஷ்டர்கள் எல்லாம் அங்கு வந்து சேர்ந்தனர்.

அவர்கள் அனைவரையும் பரீட்சித்து வணங்கினார். இந்த சமயத்தில் சுகபிரம்மர் பல தலங்களிலும் சிவ பூஜை செய்த படியே கங்கைக்கரைக்கு வந்து சேர்ந்தார். சுகபிரம்மத்தைக் கண்ட ரிஷிகள் கூட தம்மை மறந்து எழுந்து நின்றனர்.
சுகபிரம்மரின் வருகை பரீட்சித்திற்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஈடுஇணையற்ற ஒரு பாக்கியம் கிடைத்து விட்டதாக கருதினார். ஒருவன் வாழ்வில் இறைவனை சற்று கூட நினைக்காத நிலையில் அவனுக்கு மரணம் சம்பவிக்கும் என்ற நிலை ஏற்பட்டால் அந்த குறிப்பிட்ட காலத்திற்குள்ளாவது கிருஷ்ணனின் பால பருவ லீலைகளைக் கூறும் பாகவதம் கேட்டால் முக்தி கிடைக்கும் என்ற சுகப்பிரம்மர் அந்த பரந்தாமனின் திவ்ய லீலைகளை அவனுக்கு எடுத்துரைத்தார்.

பரீஷத்து ராஜாவும், பக்தி சிரத்தையுடன் அதைக் கேட்டார்.
சாபத்தின் படியே பாம்பரசன் தட்சகன் பரிட்சித்தை ஏழாம் நாளில் கடிக்க மோட்சம் அடைந்தார். இந்த நிகழ்வின் காரணமாகவே ஸ்ரீமத் பாகவதம் சப்தாகமாக, அதாவது ஏழு நாட்களுக்கு உபன்னியாசமாகக் கூறப்படும் வழக்கம் உண்டானது. ஸ்ரீ ஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி
ரூபத்தில் ரங்க நாதரிடம் அனுப்பியதாகவும் தூது சென்று வந்த கிளியிடம் என்ன வரம் வேண்டும் என்று ஆண்டாள் கேட்க சுகப்பிரம்மம் இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.

அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் கூறுகிறது. இங்கு ஆண்டாள் உலா வரும் போது நாலாயிர திவ்யப் பிரபந்தம் பாடப்படுகிறது.
செங்கோல் ஏந்தி அரசாளும் மதுரை ஸ்ரீ மீனாட்சிக்கு வலத் தோளில் கிளி அன்பால் இறையாட்சி புரியும் ஸ்ரீ ஆண்டாளுக்கு இடது தோளில் கிளி. இந்த கிளி தினமும் புதிதாகச் செய்யப்படுகிறது.

கிளி மூக்கு, மாதுளம்பூ, மரவல்லி இலை, கிளியின் உடல், இறக்கைகள், நந்தியாவட்டை இலையும், பனை ஓலையும் கிளியின் வால் பகுதிக்கு வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள் கட்டுவதற்கு வாழை நார், கிளியின் கண்களுக்கு காக்காய்ப் பொன் போன்றவற்றை பயன் படுத்தி கிளியை உருவாக்குகின்றனர்.

ஸ்ரீ சுகப்பிரம்ம முனிவரது காயத்ரி மந்திரம்!

ஓம் வேதாத்மஹாய வித்மஹே
வியாச புத்ராய தீமஹி;
தந்நோ சுகர் ப்ரசோதயாத்!

சதா ப்ரம்மத்தோடு ஒன்றிய நிலையில் இருந்ததால் எப்போதும் சுகமாக இருந்ததால் இவர் சுக ப்ரம்ம மஹரிஷி என்று அழைக்கப் பட்டார். சுகப்பிரம்ம மகரிஷி அருளியது தான் "ஸ்ரீமத் பாகவதம்" என்றும் பதினாறு வரம் பெற்ற மார்க்கண்டேயன் இவரது சீடன்.

இவரது மற்றொரு சீடர் கௌடபாதர்,அவரது சீடர் கோவிந்த
பகவத் பாதர், அவரது நேர் சீடர் தான் ஆதி சங்கரர். இதிலிருந்து ஸ்ரீ சுகப்பிரம்மரின் பெருமையை உணர்ந்து கொள்ளலாம்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பத்தில் பில்லாலி
தொட்டியில் சுகப்பிரம்ம மகரிஷி அருட்பீடம் உள்ளது. இங்கு சுகப்பிரம்மருக்கு தனி சன்னதி உண்டு.

சிறப்பு தகவல் : சென்னையில் சுகப்ரம்ம மகரிஷி ஆஸ்ரமம்!
சுகப்பிரம்ம மகரிஷியை போற்றி, அவரை ஆராதிப்பதற்க் என்றே சென்னை தி.நகரில் சுகப்ரம்ம மகரிஷி ஆஸ்ரமம் ஒன்று உள்ளது. குமார் குருஜி என்பவர் இதை நிர்வகித்து வருகிறார். சுகப்ரம்ம – மார்கண்டேய ஜீவ நாடி ஜோதிடம் இங்கு மிகவும் பிரபலம். இவருக்கு உமாமகேசனார் ஓலைச்சுவடி ஏடுகளும், சுகர் மகரிஷி ஓலைச்சுவடி ஏடுகளும் ஸ்ரீ ஜெய காந்தி நாயுடு என்பவர் மூலம் கிடைத்துள்ளன.

ஜெயகாந்தி நாயுடு கடலூருக்கு அருகே உள்ள திருப்பாதிரிப் புலியூரைச் சேர்ந்ததான '‘தொட்டிப்பதி” என்னும் ஊரைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இயற் பெயர் ராமசாமி. இவருக்குப் பரம்பரைச் சொத்தாக உமாமகேசனார் ஏடுகளும், சுகர் மகரிஷி ஏடுகளும் கிடைத்தன. இறை அருளால் அவரும் மக்களுக்கு அதனை வாசித்து நல்வழி காட்டி வந்தார்.

பின்னர் ஸ்ரீ குமாரைத் தமது சீடராக ஏற்றுக் கொண்ட ஜெய காந்தி நாயுடு அவருக்கு ”ஸ்ரீ விஜயப் பிரம்ம ஸ்ரீகாந்தி” என்ற பட்டத்தைச் சூட்டினார். மற்ற நாடி ஜோதிடம் போலல்லாமல் இவர்கள் பார்க்கும் முறையே வேறு. ஆனால் தற்போது நாடி ஜோதிடம் பார்ப்பது நிறுத்தப்பட்டு விட்டது. இந்த ஆசிரமம் மக்களுக்கு சோதிடப் பலன்களை மட்டுமல்லாது, தேவையான
மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி, ஏழை எளியோருக்கு உதவி வருகிறது. மற்றும் பல்வேறு அறப்பணிகளையும், ஆன்மீக, ஆலயப் பணிகளையும் ‘சுகர் மார்க்கண்டேயன்
அறக்கட்டளை’ என்ற பெயரில் செய்து வருகின்றது.

இன்றும் ஒவ்வொரு ஆண்டும் சுகப்ரம்ம மகரிஷியின் ஜெயந்தி வரும் தினத்தன்று [ஆனி மாதம் – திருவோணம் நட்சத்திரம்] மூன்று நாட்கள் இங்கு கொண்டாட்டம் களை கட்டும். வேத விற்பன்னர்கள் அது சமயம் கௌரவிக்கப்படுவார்கள்.
ஹோமங்கள் யாகங்கள் நடைபெறும். அன்னதானமும் உண்டு.
இன்றும் ஒவ்வொரு மாதமும் திருவோணம் நட்சத்திரத்தன்று சுகப்பிரம்மருக்கு பூஜையும் ஆராதனையும் இங்கு நடைபெறுகிறது. ஆன்மீக சொற்பொழிவும் நடைபெறும்.

முன்னதாக விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் நடைபெறும்.
பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு மந்திரோபதசனை செய்யப்பட்டு இறுதியில் பிரசாதம் வழங்கப்படுகிறது. சில சமயம், சர்ப்ரைஸாக கேள்விகள் கேட்கச் சொல்லி, அவற்றுக்கு பதில் அளிக்கப்படுகிறது. இது தவிர தினமும் மாலை சுகப்பிரம்மருக்கு பூஜை உண்டு. [ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் காலை 11.00 மணிக்கு] கலந்து கொண்டு சுகப்பிரம்மரின் அருளை பெறுங்கள். ஒரு முறை இந்த ஆஸ்ரமத்துக்கு சென்று VISITORS BOOK ல் உங்கள் பெயரையும் அலைபேசி எண்ணையும் பதிந்து விட்டு வந்தால், ஆஸ்ரமத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழ் உங்களுக்கு அனுப்புவார்கள்.

முகவரி : சுகப்பிரம்ம மகரிஷி ஆஷ்ரமம்,
8/22, அருளாம்பாள் தெரு, [கர்நாடக சங்க பள்ளி அருகே]
தி.நகர், சென்னை – 600017, தொலைபேசி : 044-28342483.

[சிரத்தையும், பக்தியும் இருப்பவர்கள் நிச்சயம் அங்கு போக வேண்டும் என்று கருதுபவர்கள் மட்டும் மேற்படி தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை கேட்டு பெறவும். ஆர்வக்கோளாறு காரணமாக சும்மா அழைக்கவேண்டாம்!]

பின் குறிப்பு : இந்த பதிவின் தொடர்ச்சியாக சுமார் 5,100 ஆண்டுகள் பழமையான விழுதுகள் வளராத ஆலமரம் அமைந்துள்ள சிறப்பு மிக்க சுகஸ்தல் திருத்தலத்தின் முதல் பாகவத பீடம் பற்றிய சிறப்பு பதிவினை படிக்க தவறாதீர்கள்! 

 


 

வியாழன், 17 அக்டோபர், 2024

உங்களுக்கு தெரியுமா?

உங்களுக்கு தெரியுமா? காஞ்சிபுரத்தில் பிறந்த மற்றும் வாழும் மக்கள் பெரும் புண்ணியம் செய்தவர்கள்...

காஞ்சிபுரத்து மக்களுக்கு இந்த தகவலை அனுப்பி அவர்களின் ஊர் பெருமையை உலக அறிய செய்யுங்கள்... உங்களுக்கும் புண்ணியம் கிடைக்கட்டும்...

காஞ்சிபுரம் குடி மக்கள் வாழ்க! வாழ்க!!!

காஞ்சிபுரத்தில் மட்டும் சுமார் 66000 கோவில்கள் அக்காலத்தில் இருந்தது என்று கச்சியப்ப முனிவர் அருளிய காஞ்சி புராணம் வாயிலாக நாம் அறிய முடிகிறது.

அவை பின்வருவன:

1. சிவன் கோவில் மட்டும் : 16000

2. அம்பிகைக்குரிய சக்திகள் வீற்றிருந்தருளும் கோவில்கள் : 5000

3. பெருமாள் கோவில் : 12000

4. பிரம்மன் கோவில் : 10700

5. அருக தேவன் கோவில் : 9700

6. புத்தேவன் கோவில் : 8000

7. கொற்றவை கோவில் : 1000

8. பைரவர் கோவில்: 1000

9. சாத்தன் கோவில்: 1000

10. முருகனுக்கு : 500

11. விநாயகருக்கு : 500

12. சூரியனுக்கு : 500

13. ஆதிஷேன் : 100

போன்ற கோவில்கள் அக்காலத்தில் பெருமை வாய்ந்ததாக இருந்தது என்று கச்சியப்ப முனிவர் தனது பாடலில் குறிப்பிடுகிறார். இறைவன் கருணையாளன் காஞ்சிபுரத்தில் மட்டும் 66000 கோவில்கள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது. இறைவனை எந்த விசயத்திலும் அடக்கி விட முடியாது [அன்பை தவிர]. கோவில் நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணத்தையையே மிஞ்சி விட்டது காஞ்சி மாநகர்.

கல்வியை கரையிலாத காஞ்சி மாநகர் தன்னுள்ளாய்.

புதன், 16 அக்டோபர், 2024

அருமையான உபதேசம்...

படித்ததில் பிடித்தது...
எவ்வளவு அருமையான உபதேசம்...

நமது குடும்பங்களில் சிலவற்றில் அல்ல பலவற்றில் லக்ஷ்மி  என்கிற பெயர் லஷ்மி, லெஷ்மி, லெச்சுமி, எச்சுமி, எச்சம்மா என்றெல்லாம் அபிமானத்தோடு அழைக்கப்படுபவை.

இப்போது நாகரிகமாக பெயர்கள் வைத்துக் கொள்ளும்  பெண்கள் இப்படி கூப்பிட்டால் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்,  மரியாதை பண்ணுவார்கள் என்று எண்ணிப் பார்க்க பயமாக இருக்கிறது.

நமது எச்சம்மா பாட்டி பாவம் அடுத்தடுத்து கணவன், பிள்ளை, ரெண்டு பெண்களை இழந்து அனாதையானவள். இருந்தும்  குரு கடாக்ஷத்தால் வாழ்வில் துன்பங்கள் தொடராது என்று நம்பிக்கை கொண்டவள்.

இளம் வயதில் விதவை, படிப்பு வாசனை கிடையாது. யாரும் இல்லாதவளுக்கு போக்கிடம் எது? அவள் நம்பிக்கை அவளை ஸ்ரீ ரமணரிடம் கொண்டு சேர்த்தது. முதலில் பகவானை தரிசித்தவள் ஒரு மணி நேரம் அங்கே அவர் முன் அமர்ந்தாள்.  மகரிஷி அவளோடு பேசவில்லை. ஆனால் அந்த ஒருமணி நேரத்திலும் அதற்கப்புறமும் கூட அந்த ஆஸ்ரமத்தில் அவளுக்கு இது வரையில் காணாத ஒரு மன நிம்மதி ஏற்பட்டது.

அவள் அன்று முதல் சந்தோஷத்தை அனுபவிக்க தொடங்கினாள். வானில் பறந்தாள் என்று கூட சேர்த்து சொல்லலாம். துன்பத்திலிருந்து, துயரத்திலிருந்தும், கஷ்டத்திலிருந்தும் விடுபட்டவர்களுக்கு தான் அந்த  சுகம் தெரியும் அனுபவம் புரியும்.

ஏதோ ஒரு காந்த சக்தி அவளைக் கவர்ந்து விட்டது. தேனுண்ட நரி சுற்றுவதை போல எச்சம்மா ரமண மஹரிஷி இருந்த விரூபாக்ஷ குகை அருகே காணப்பட்டாள். அவளுக்கு என்ன தோன்றியதோ பகவானுக்கு நல்ல மடி சமையல் பெற்ற தாய்  செல்லக் குழந்தைக்கு அளிப்பது போல் தினமும் கொண்டுவர ஆரம்பித் தாள். விரூபாக்ஷ குகை அப்போ எல்லாம் அதிக ஜன நடமாட்டம் இல்லாத காடு மண்டிக்கிடந்த மலைமேல் ஒரு இடம்.  கையில் சாப்பாட்டுக் கூடையோடு மலைமேல் ஏறி செல்வாள் எச்சம்மா. வழியில் மலைமேல் இருந்து கீழே இறங்குபவர்களை பார்ப்பாள். அநேகர் முகம் ஏமாற்றத்தோடு காணப்படும்.

'பாட்டிமா எதுக்கு கஷ்டப்பட்டு மூச்சு வாங்க மலை ஏறுகிறே.  அங்கே பகவானை குகையில் காணோம். வெகுநேரம் காத்திருந்து தரிசிக்காமல் திரும்புகிறோம். எங்கே போயிடுவார் அங்கே தான் இருப்பார். வாங்கோ எங்கூட நான் காட்றேன், எச்சம்மா அவர்களையும் திரும்ப அழைத்துக் கொண்டு மலை ஏறுவாள். என்ன மாய மந்திரம் எச்சம்மாவுக்கு தெரியும்?

அவர்கள் முதலில் குகைக்கு சென்ற போது பகவான் ஒரு கோவணாண்டியாக குகைச் சுவரை கற்களை மண்ணில்  குழைத்து பூசி சுவர் எழுப்பிக் கொண்டிருந்தார். அவர்களுக்கு  ரமணரை தெரியாது, பார்த்ததில்லை.

ஆகவே அந்த கோவணாண்டியை வேலையாளாக மதித்து.  
''சுவாமி எங்கேப்பா இருக்காரு?'' என்று கேட்டார்கள்.  
''எனக்குத் தெரியாதே'' என பதில் சொல்லி இருக்கிறார் பகவான் ரமணர்.

வெகு நேரம் காத்திருந்து விட்டு அவர்கள் கீழே இறங்கியிருக் கிறார்கள். இப்போது எச்சம்மாவோடு சென்ற போது அவரைப் பார்த்ததும் திடுக்கிட்டார். ஸ்வாமியையா நாம் சாதாரண வேலைக்காரனாக எண்ணிவிட்டோம்'' அவர்கள் சென்றதும்  எச்சம்மா வருத்தத் தோடு பகவானைக் கேட்டாள், ''ஏன் இப்படி பண்ணிட்டேள். பாவம் அவா தெரியாம தானே அப்படிக் கேட்டிருக்கா?''

''என்னை என்ன பண்ணச் சொல்றே நீ. நான் என்ன பண்ண முடியும். என் கழுத்திலே ஒரு அட்டையிலே ''நான் தான் ரமண மஹரிஷி'' எழுதி கழுத்திலே தொங்கவிட்டுக்க சொல்றியா?''  என்று சொல்லி சிரித்தார். எச்சம்மாள் தன்னிடமிருந்த  பொருள்கள் எல்லாவற்றையும் பகவானுக்கும் அவரது   பக்தர்களுக்கும் உபயோகமாக ஏதாவது செய்வாள்.

ரமணரின் தாய் அழகம்மாள் தன்னுடைய கடைசி காலத்தில்,   விரூபாக்ஷ குகைக்கு மகனைப் பார்க்க வந்த போது கூட  அவளைத் தன்னோடு தங்க அனுமதிக்கவில்லை .

எச்சம்மா அழகம்மாளை தன்னோடு திருவண்ணாமலை கிராமத்துக்கு கூட்டிச்சென்று விட்டாள். அழகம்மாவால் தினமும்  மலைமேல் ஏறி ரமணரை பார்ப்பது சிரமமாக இருந்தது.

பாவம் அழகம்மா, எல்லாவற்றையும் விட்டு விட்டு எல்லோரையும் துறந்து விட்டு மகனைப் பார்க்க இங்கே வந்திருக்கிறாள். அவளை பகவானோடு தங்க அனுமதிக்க கூடாதா என்று பகவானுடைய சீடர்களை கேட்டாள் எச்சம்மா.

''அம்மாவானாலும் பெண்கள் எவரையும் இங்கே ஸ்வாமியோடு இருக்க அனுமதிப்பது தவறு. இப்போது அம்மாவை அனுமதித்தால் பின்னால் எச்சம்மா நீயோ மற்றும் ஆஸ்ரமத்தில் உள்ள பெண்களும் அந்த உரிமை கோருவார்களே. அப்புறம் இது என்ன ஆஸ்ரமம்?''  என  மறுத்தார்கள் சீடர்கள்.

''அதெப்படி அப்பா சரியாகும். இந்த உலகில் நானோ வேறு எந்த பெண்ணோ, அம்மாவாக முடியுமா? அவளுக்கு என்று தனி உரிமை கிடையாதா? நான் இப்போ ஒரு சபதம் எடுத்துக்கறேன்.

நானோ ஆஸ்ரமத்தில் வேறு எந்த பெண்ணோ பகவானை இப்படி வந்து இருக்க அனுமதி கேட்க மாட்டோம். இவர்கள் பேசுவது அனைத்தும் ரமண மஹரிஷி கேட்டுக் கொண்டிருந்தார். அவர் மெளனமாக இருப்பது சீடர்கள் சொன்னதை ஆமோதித்து என்று  விளக்கினார்கள் சீடர்கள்.

பகவான் மெதுவாக எழுந்தார், அம்மா அழகம்மாவின் கையை பிடித்துக் கொண்டார். ''வா நாம் வேறு எங்காவது போவோம். நாம் இங்கே தங்குவதில் அவர்களுக்கு விருப்பமில்லை.
அப்புறம் என்ன சீடர்கள் பகவான் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்கள். அழகம்மா மகனோடு இருப்பதில் ஆக்ஷேபணை எதுவும் இல்லை. கடைசி வரை அம்மா மகனைப் பிரிய வில்லை.

இந்த பாக்யம் அழகம்மாவுக்கு எச்சம்மாவால் தானே  கிடைத்தது. திருவண்ணா மலையில் அப்போது இன்னொரு மஹான் வாசம் செய்து வந்தார். அவர் பெயர் சேஷாத்ரி சுவாமிகள். சேஷாத்திரி சுவாமிகளால் ரமணர் உலகத்துக்கு, நமக்கு கிடைத்தார். சேஷாத்ரி ஸ்வாமி ஒரு ப்ரம்மஞானி. அவர் இந்த உலகுக்கு காட்டிய ஆத்ம ஞானி தான் பகவான் ரமணர்...

வெளியே அதிகம் தெரியாத மஹான் திருவண்ணா  
மலையில் சேஷாத்திரி ஸ்வாமிகள் வாழ்ந்த ஒவ்வொரு கணமும் அதிசயம், ஆச்சர்யம் நிறைந்த  சம்பவங்களாக இருந்த போதிலும் அவற்றைப் பற்றி அதிகம் வெளியே தெரியாத காரணம் அவர் விளம்பரப்பிரியர் அல்லர்.

மற்றும் எவரையும் அருகிலே சேர்க்காதவர் என்பதால் இதை கவனித்து வெளியே சொல்ல அதிக பக்தர் இல்லை. இது தவிர  அவரிடமிருந்து அதிசய அனுபவங்கள் பெற்ற பக்தர்களும் அவற்றை வெளிப்படுத்த முற்படவில்லை. ஆங்காங்கே  அவர்கள் மூலம் அறிந்த கசிந்த விஷயங்கள் தான் ஸ்ரீ  குழுமணி நாராயண சாஸ்திரிகள் போன்றவர்களால் நமக்கு இன்று கிடைத்துள்ளது.

ஒரு சில சம்பவங்கள் சொல்கிறேன்.

சேஷாத்திரி ஸ்வாமிகள் அருகிலே எப்போதும் சிஷ்யனாக  சேவை செய்யும் மாணிக்க சாமிக்கு ஒரு நாள் சேஷாத்திரி ஸ்வாமிகள் அபூர்வமான ஒரு உபதேசம் செய்தார்.

''இதோ பார் மாணிக்கம், நீ ஈயைப் போல் சுத்தமாக,  
எறும்பைப் போல பலத்தோடு, நாயைப்போல் அறிவோடு, ரதியைப்போல் அன்போடு இருக்க கத்துக்கோ. அப்போ குரு தெரிவார்'' என்றார்.

மலர்களின் மதுவும், மலமும் ஈக்கு ஒன்றே. ஆகவே  இரண்டிலும் அது ஆனந்திக்கிறது. ஆனால் மனதளவில் அது சுத்தமானது. பலமுள்ளவன் தான் சோர்வடைய மாட்டான். இரவும், பகலும் உழைக்கும் எறும்பு சுறுசுறுப்புக்கு பேர் போனது. ஆகவே அதை பலமிக்கது என கருதலாம்.

காதையும், வாலையும் எவனோ குறும்பு சாமி வெட்டி விட்டான் என்றாலும் காது இருந்த இடத்தை உயர்த்தியும், வால் இருந்த இடத்தை ஆட்டியும் நாய் அறிவை உபயோகித்து ஒருவேளை உணவை அளித்தவனை நன்றியோடு நெருங்குகிறது.

அதால் நன்றியை தெரிவிக்க முடிந்தது இந்த செயல் தானே.

எந்த மனைவி கணவனின் நலம் கருத்தில் கொண்டு  எப்போதும் அவனுக்கு பணி விடை செய்து, அவன் அடிபணிந்து கிடக்கிறாளோ அவளே அழகிய குணம் படைத்த ரதி என்று  கருதப்படுபவள். இதைத் தான் ஸ்வாமிகள் மாணிக்க சாமிக்கு உணர்த்தி இருக்கிறார்.

எனவே ஐம்புலன் வசமாகாமல் சுறுசுறுப்பாக தனது நித்ய கடமைகளை செய்பவன் கஷ்டத்தை கஷ்டமாகவே உணர மாட்டான். லோக க்ஷேமத்திற்காக தன் உழைப்பை ஈடு படுத்திக் கொள்வான்.

நமது கர்மங்கள் பயனை அளிப்பவை. ஆனால் ஈஸ்வரார்ப் பணமாக செய்த கர்மங்கள் வறுத்த விதையை நட்டது போல.  எந்த கர்மபயனும் சம்பந்தப்படுத்தாது என்றார்.

ஒரு நாள் ஸ்வாமிகள் எச்சம்மா (நம்ம லட்சுமி அம்மா! ) வீட்டுக்கு போனார். அவள் பூஜை பண்ணும் நேரம் அது. ''நீ  என்ன பூஜை பண்றே?'' ''உங்க படத்தையும், ரமணர் படத்தையும் வைத்து தான் பூஜை பண்றேன் இதோ பாருங்கோ '' என்றாள்.

''எவ்வளோ நாள் இந்த மாதிரி எல்லாம் பூஜை பண்ற, தியானத்தில் இருக்க வேண்டாமா?'' என்கிறார் சுவாமி.

''எப்படின்னா சொல்லிக் கொடுங்கோ? பண்றேன் ''

''இப்படித்தான்'' என்று சுவாமி தரையில் பத்மா ஸனம்  போட்டு அமர்ந்தார். அவ்வளவு தான். அவர் சிலையாகி விட்டார். காலை பத்து மணிக்கு இது நடந்து மாலை நாலு மணி கிட்டத்தட்ட அவர் அசையவே இல்லை. சமாதி நிலை. மாலை நாலரை மணி அளவில் இதுவரை எதிரே அமர்ந்து எத்தனையோ பேர் தன்னையே பார்த்து கொண்டிருந்தது எதுவுமே தெரியாது அவருக்கு. மெதுவாக கண் திறந்தார். ''எச்சம்மா, பார்த்தியா. இப்படி தான் தியானம் பண்ணணும் நீ'' அப்போது ''ஈஸ்வரனை எப்படி தியானம் பண்ணுவது?'' என்று கேட்க, ''பலாப் பழத்திலுள்ள பலாச்சுளை போல, பலாக்கொட்டையை போல பண்ணணும்''  என்கிறார். பக்தருக்கு புரியாமல் வாயைப் பிளந்தார். ஸ்வாமியே விளக்கினார்.

''பலாக் கொட்டையை ஈஸ்வரன் என்று வைத்துக்கொள். எப்படி தன்னுடைய பீஜ சக்தியால் அநேக மரங்கள், கோடி கணக்கான பழங்களை உற்பத்தி பண்ணுகிறது. அது மாதிரி தான் ஈஸ்வரன் தன்னுடைய மாயா சக்தியால் அளவற்ற ஜீவன்களை உண்டு பண்ணுகிறான். சின்னதும், பெரிசுமாக, தித்திப்பு வேறே வேறே மாதிரி வெவ்வேறு நிறமாக, வெள்ளை, மஞ்சள், வெளிறிய கலர் என்று பலாப்பழசுளை மாதிரி, எவ்வளவோ உயிர்களை படைக்கிறான்.

பலாக்கொட்டை மேலே உறை இருக்கிற மாதிரி ஈஸ்வரன் ஜீவனை அன்னமயம் முதலான பஞ்ச கோசங்களை வைத்து மூடி இருக்கிறான். பலாக்கொட்டை மேலே இருக்கிற உறையை எடுத்துட்டு சுட்டு சாப்பிடறோமே. அது போல பஞ்ச கோசங்களை நீக்கணும். அப்போ தான் பகவான் தெரிவான்.

இன்னொண்ணும் சொல்றேன் கேளு. நாம எல்லோருமே   ஒருத்தர் தான். ஒரு ஸ்வரூபம் தான். ஆனால் கண்ணாடியில்   பார்க்கும் போது, நாமும் தெரியறோம். நம்ம ஸ்வரூபமும் கண்ணாடியில் ஒன்றாக தெரியறது. தெரிவது இண்டாயிடுத்து. அது மாதிரி ஆத்மா ஒண்ணு தான்.

அதை நிர்மலமான புத்தியில் பிரதி பலிக்க பண்ணினால் தான் தியானத்தில் அனுபவிக்கிறோம். தியானம் பண்றவன், தியானம், யாரை தியானம் பண்றோமே மூணும் ஒண்ணா யிடணும். அதை தான் த்ரிபுடி என்கிறோம்.

ஒன்றறக்''  கலந்து என்று தமிழ் பாட்டிலே வருமே அதுதான்  இது. மேலும் அவர் சொல்கிறார்.....

ஒவ்வொரு மனிதனும் தனியாகவே இந்த உலகில் அறிமுக மாகிறான். இந்த உலகை விட்டு விலகும் போதும் அவ்வாறே, அவன் எவ்வளவு பெரிய மக்கள் தலைவனாக இருந்த போதும், தனியே தான் செல்ல வேண்டும் என்பது நியதி.

அவனது பூர்வஜென்ம கர்மாக்கள் அவனை அவன் வாழ்நாளில் அவனை நல்ல வனாகவோ, கெட்ட வனாகவோ அவன் செயல்களில் காட்டுகிறது.

நரகமோ, ஸ்வர்க்கமோ எங்கு செல்ல வேண்டுமானாலும் அவன் தனித்தே தான் போக வேண்டும். நம்மை எல்லாம்  தாங்கும் இந்த பூமி ஏதோ ஒரு சத்தியத்திற்கு கட்டுப் பட்டுள்ளது. அந்த சத்யம் தனது சக்தியால் சூரியனை ஒவ்வொரு நாளும் நேரம் தவறாமல் தனது பணியை, உலகை ஒளி பெற செய்விக்கிறது. காற்றை வீசச் செய்கிறது. எல்லாமே  அந்த சத்தியத்தின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது. நம்மையும் சேர்த்து தான் சொல்கிறேன். ஆனால் இந்த மனிதர்கள் தான் சத்தியதிற்கும் தர்மதிற்கும் கட்டுப்பட மறுக்கிறார்கள்.

காலம் தான் உலகத்தின் சகல ஜீவராசிகளையும் உயிருடன் இயக்குகிறது. அதுவே முடிவைத் தருகிறது. எல்லாம் உறங்கும் வேளையிலும் காலம் உறங்காமல் விழித்துள்ளது. காலத்தை வெல்ல முடியாதது. எவராலும் கட்டுப்படுத்த முடியாத ஒன்று. அதுவும் மேலே சொன்ன ஒரு சத்தியத்துக்கு உட்பட்டு செயல்படுகிறது. என்று சேஷாத்ரி சாமிகள் மாணிக்கம் சாமிக்கு செய்த உபதேசங்கள் இவைகள்.

அருள்மிகு உத்தமர் திருக்கோவில்

அருள்மிகு உத்தமர் திருக்கோவில்
 
மூலவர் : புருஷோத்தமன்
உற்சவர் : பூர்ணவல்
தாயார் : பூர்ணவல்லி,
அம்பாள்: சவுந்தர்ய பார்வதி
தல விருட்சம் : கதலி [வாழை மரம்]
தீர்த்தம் : கதம்ப தீர்த்தம்
ஆகமம் பூஜை : வைகானஸம்
பழமை : 2500 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : கதம்பவனம், பிச்சாண்டவர் கோவில், திருக்கரம்பனூர்
ஊர் : உத்தமர் கோவில்
மாவட்டம் : திருச்சி
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : திருமங்கையாழ்வார்.
       
பேரானைக் குறுங்குடி எம்பெருமானைத் திருத்தண்கால் ஊரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு காரார் திண்கடல் ஏழும் மலையேழிவ் வுலகுண்டும் ஆராதென்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே;திருமங்கையாழ்வார்.   

விழா: சித்திரையில் பெருமாளுக்கும் வைகாசியில் சிவனுக்கும் தேர்த்திருவிழா   
       
தல சிறப்பு: பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அருளும் தலம். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற108 திவ்ய தேசங்களில் இது மூன்றாவது திவ்ய தேசம்.   
      
திறக்கும் நேரம்: காலை 06:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 04.30 மணி முதல் இரவு 08:00 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி: அருள்மிகு உத்தமர் திருக்கோவில், திருக்கரம்பனூர், பிச்சாண்டார் கோவில் - 621 216.மணச்சநல்லூர் வட்டம்,திருச்சி மாவட்டம்.போன்:+91- 431 - 2591 466, 2591 040.  
     
தகவல்: சிவன், பிச்சாடனாராக வந்து தன் தோஷம் நீங்கப்பெற்ற தலம் என்பதால் இவ்வூர் "பிச்சாண்டார் கோவில்'' என்றும், மகாவிஷ்ணு கதம்ப மரமாக நின்ற ஊர் என்பதால் "கதம்பனூர்'' என்றும் "கரம்பனூர்'' என்றும் அழைக்கப்படுகிறது. கணவனும், மனைவியும் இல்லற வாழ்க்கையில் சேர்ந்து வாழ்வதே உத்தமம். இவ்வாறு ஒருவருக் கொருவர் இணக்கமாக வாழ்பவர்களை உத்தமர் என்பர். இங்கு மும்மூர்த்திகளும் தம்பதி சமேதராக இருப்பதால் திருமங்கையாழ்வார் இத்த லத்தை "உத்தமர் கோவில்'' என்று மங்களாசாசனம் செய்துள்ளார். தம்பதியர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் குடும்பம் சிறக்கும் என்பது நம்பிக்கை.

சிவன் - பெருமாள் வீதி உலா!

பக்தர் ஒருவருக்காக பிரம்மா, சிவன், திருமால் என மூன்று தெய்வங்களும் காட்சித் தந்த தலம் உத்தமர் கோவில். தன் மனைவி சரஸ்வதியுடன் பிரம்மா அருள் பாலிக்கும் இத்தலத்தில் ஆண்டு தோறும் கார்த்திகைத் திருநாளன்று சிவனும், பெருமாளும் சேர்ந்து வீதி உலா வருவது தனிச் சிறப்பு.
      
பெருமை: பிரம்மன் சன்னதி, படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மாவிற்கு பூலோகத்தில் தனக்கென தனியே கோவில் இல்லையே என மனக்குறை இருந்தது. எனவே மகா விஷ்ணு அவரை பூலோகத்தில் பிறக்கும் படி செய்தார். பிரம்மா இத்தலத்தில் பெருமாளை வணங்கி தவம் செய்து வந்தார். அவரது பக்தியை சோதிப்பதற்காக மகா விஷ்ணு, கதம்ப மரத்தின் வடிவில் நின்று கொண்டார். இதையறிந்த பிரம்மா கதம்ப மரத்திற்கு பூஜைகள் செய்து சுவாமியை வணங்கினார். அவரது பக்தியில் மகிழ்ந்த மகா விஷ்ணு காட்சி தந்து நீ எப்போதும் இங்கேயே இருந்து என்னை வழிபட்டு வா. நீ பெற்ற சாபத்தால் உனக்கு கோவில்கள் இல்லா விட்டாலும் இங்கு தனியே வழிபாடு இருக்கும் என்றார். பிரம்மாவும் இங்கேயே தங்கினார். பிற்காலத்தில் இவருக்கும் சன்னதி கட்டப்பட்டது. பிரம்மாவுக்கு இடப்புறத்தில் ஞான சரஸ்வதி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கிய படி இருக்கிறாள். இவள் கைகளில் வீணை இல்லாமல் ஓலைச்சுவடி, ஜெப மாலையுடன் காட்சி தருவது சிறப்பு. பிரம்மாவிற்கு தயிர் சாதம், ஆத்தி இலை படைத்தும் சரஸ்வதிக்கு வெள்ளை வஸ்திரம், தாமரை மலர் மாலை சாத்தியும் வழிபட்டால் ஆயுள் கூடும், கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. குருப்பெயர்ச்சியின் போது பிரம்மாவிற்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.

மும்மூர்த்திகள் தலம்: விஷ்ணு கிழக்கு பார்த்தபடி பள்ளி கொண்ட கோலத்திலும், உற்சவர் பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்திலும் உத்யோக விமானத்தின் கீழ் அருள் பாலிக்கிறார். பூரணவல்லி தாயார் தனிச்சன்னதியில் அருளுகிறாள். இவள் என்றும் உணவிற்கு பஞ்சமில்லா நிலையைத் தரக்கூடியவள். அருகில் மகா லட்சுமிக்கும் தனிச்சன்னதி இருக்கிறது. இவ்விரண்டு தாயார்களது தரிசனம் விசேஷ பலன்களைத் தரக்கூடியது. பெருமாளுக்கு நேர் பின் புறத்தில் சிவன் மேற்கு பார்த்த படி லிங்க வடிவில் இருக்கிறார். இவர் பிட்சாடனாராக கோஷ்டத்திலும், உற்சவராகவும் இருக்கிறார். சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் தனித்தனி சன்னதிகளில் அம்பாள்களுடன் காட்சி தருகின்றனர். ஒரே தலத்தில் மும் மூர்த்திகளையும் தரிசனம் செய்வது அபூர்வம். கார்த்திகை தீபத்திருவிழாவின் போது மூவருக்கும் மூன்று திசைகளில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு ஒன்றாக உலா வருகின்றனர். தைப்பூசத் திருவிழாவில் சிவனுக்கும் மாசி மகத்தில் பெருமாளுக்கும் கொள்ளிடத்தில் தீர்த்தவாரி விழா நடக்கிறது. சிவகுரு தெட்சிணா மூர்த்தி, விஷ்ணு குரு வரதராஜர், குரு பிரம்மா, சக்திகுரு சவுந்தர்ய பார்வதி, ஞானகுரு சுப்பிரமணியர், தேவகுரு வியாழன், அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆகிய ஏழு குரு சுவாமிகளும் குருவிற்குரிய இடங்களில் இருந்து அருளுகின்றனர். குரு பெயர்ச்சியின் போது ஏழு குருக்களுக்கும் விசேஷ அபிஷேகங்கள் நடக்கிறது. எனவே இத்தலம் "சப்தகுரு தலம்'' எனப்படுகிறது.
 
ஸ்தல வரலாறு: சிவனைப் போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மாவைக் கண்ட பார்வதி தேவி அவரை தனது கணவன் என நினைத்து பணிவிடை செய்தாள். இதைக்கண்ட சிவன் குழப்பம் வராமல் இருக்க பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கிள்ளி எடுத்தார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததோடு, பிரம்மாவின் கபாளமும் [மண்டை ஓடு] அவரது கையுடன் ஒட்டிக் கொண்டது. சிவன் எவ்வளவோ முயன்றும் அவரால் கபாளத்தை பிரிக்க முடிய வில்லை. அவருக்கு படைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும் கபாளமே எடுத்துக் கொண்டது. எவ்வளவு உணவு இட்டாலும் கபாளம் மட்டும் நிறையவே இல்லை. பசியில் வாடிய சிவன் அதனை பிச்சைப் பாத்திரமாக ஏந்திக் கொண்டு பிட்சாடனார் வேடத்தில் பூலோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார். அவர் இத்தலத்திற்கு வந்த போது பெருமாள், சிவனின் பாத்திரத்தில் பிச்சையிடும் படி மகா லட்சுமியிடம் கூறினார். அவளும் கபாளத்தில் பிச்சையிடவே அது பூரணமாக நிரம்பி சிவனின் பசி நீக்கியது. இதனால் தாயார் "பூரணவல்லி'' என்ற பெயரும் பெற்றாள். மகா விஷ்ணுவும் பள்ளி கொண்ட கோலத்தில் சிவனுக்கு காட்சி தந்தார். 




செவ்வாய், 15 அக்டோபர், 2024

55. ஸ்ரீ சந்திர சூடேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு

காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

55. ஸ்ரீ சந்திர சூடேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு

ஐம்பத்தி ஐந்தாவது ஆச்சார்யர் [கி.பி.1507 - 1524]

ஸ்ரீ சந்திர சூடேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு, தென்னாற்காடு மாவட்டத்தில் மணி முக்தா நதிக்கரையில் உள்ள அஸ்மசாலா என்ற ஊரில் "புராரி - ஸ்ரீ மதி" தம்பதிகளின் மகனாக பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் "அருணகிரி".

அப்போது விஜய நகரத்தை ஆண்டவர் "கிருஷ்ண தேவராயர்". அவர்கள் ஸ்ரீ மடத்திற்கு ‘'பொடவூரை'' நிவந்தமாக [மானியமாக] அளித்ததை [கி.பி. 1514] கீழம்பிக் கல்வெட்டு விளம்புகிறது.

காட்டுப்பத்து, அம்பிகாபுரம் ஆகிய ஊர்களை மான்யமாக அளித்ததுடன் ‘'சகல சாஸ்திரங்களையும் முற்றிலுமாகக் கற்ற மகாத்மா'’ எனவும் இவரைப் போற்றி செப்பேட்டில் பதித்திருக்கிறார் கிருஷ்ண தேவராயர்.

இவர் 1524 ஆம் ஆண்டு, சுபானு வருடம், பங்குனி மாதம், வளர்பிறை, ஏகாதசி திதி அன்று சித்தி அடைந்தார்.

இவர் 17 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்துள்ளார்.