திங்கள், 7 அக்டோபர், 2024

நவராத்திரி நான்காம் நாள் வழி பாடு...

நவராத்திரி நான்காம் நாள் வழி பாடு...

அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்கு செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் உண்டாகும். தொழிலில் லாபம் பெருகும். மதுரை மீனாட்சியம்மன் நாரைக்கு முக்தி கொடுத்த அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள். சத்தியன் என்னும் தவமுனிவர் ஒருவர் இருந்தார். அவர் தினமும் அச்சோதீர்த்தம் என்னும் குளத்தில் நீராடி, சிவனை தியானத்து வந்தார். அங்கொரு நாரை ஒன்று வசித்து வந்தது. சத்திய முனிவரும், மற்ற தவசீலர்களும் மதுரையின் பெருமையை பேசிக் கொண்டிருந்தனர். அதைக்கேட்ட நாரைக்கும் சிவபக்தி உண்டானது. மதுரை கோயிலுக்கு வந்து பொற்றாமரைக்குளத்தில் நீராடி சிவனை வழிபட்டது. பதினாறாம் நாள் நாரைக்கு காட்சியளித்த சிவன், நாரைக்கு முக்தியளித்தார். இக்கோலத்தை தரிசித்தால் சிவனருளால் பிறவாத நிலை உண்டாகும்.

நைவேத்யம்: புளியோதரை
தூவும் மலர்கள்: செந்தாமரை, ரோஜா

பாட வேண்டிய பாடல்:
என் குறை தீர நின்று ஏத்துகின்றேன் இனி யான் பிறக்கின்
நின்குறையே அன்றி யார் குறை காண் இருநீள் விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியளாய்
தன்குறை தீரஎம் சடைமேல் வைத்த தாமரையே.

நவராத்திரி மூன்றாம்நாள் வழி பாடு...

நவராத்திரி மூன்றாம்நாள் வழி பாடு...

அம்பிகையை வராஹியாக அலங்கரிக்க வேண்டும். பன்றி முகம் கொண்ட இவளை வழிபட்டால் பகைவர் பயம் நீங்கும். குலோத்துங்க பாண்டியன் ஆட்சிக் காலத்தில், முதியவர் ஒருவர் வாள் வித்தை கற்பித்து வந்தார். அவரிடம் படித்த சித்தன் என்ற மாணவன், தானும் வித்தை கற்பிக்கும் ஆசிரியரானான். ஒழுக்கமற்ற அவன் ஒருநாள், குருபத்தினியின், கையைப் பிடித்து இழுத்தான். அவளோ, சித்தனை வெளியே தள்ளி கதவைத் தாழிட்டுக் கொண்டாள். சிவனிடம் முறையிட்டு அழுதாள். சிவன் அவளைக் காக்க, குருவின் வடிவில் புறப்பட்டார். சித்தனுடன் வாள்போர் புரிந்து அவனுடைய அங்கங்களை வெட்டி வீழ்த்தினார். இதை அறிந்த மாணிக்கமாலை, ""தன் கணவர் அவ்வாறு செய்ய வாய்ப்பில்லை. அவர் கோயிலுக்குச் சென்றிருக்கிறார், என மறுத்தாள். வழிபாடு முடித்து வந்த குரு, இந்த அற்புதத்தை நிகழ்த்தியது சிவனே என உணர்ந்தார். மன்னன் அத்தம்பதியை யானை மீது அமர்த்தி நகரை வலம் வரச் செய்தான். மதுரை மீனாட்சி பாணனுக்கு அங்கம் வெட்டிய கோலத்தில் காட்சியளிக்கிறாள். இதை தரிசித்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.

நைவேத்யம்: எலுமிச்சை சாதம்
தூவ வேண்டிய மலர்கள்: மல்லிகை, செவ்வந்தி

பாட வேண்டிய பாடல்:
நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும்
அயனும் பரவும் அபிராமவல்லி அடியிணையைப்
பயன் ஒன்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும்பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.

நவராத்திரி இரண்டாம்நாள் வழி பாடு...

நவராத்திரி இரண்டாம்நாள் வழி பாடு...

அம்பிகையை மயில்வாகனம், சேவல் கொடியுடன் அலங்கரிக்க வேண்டும். இவளை கவுமாரி என்றும், குமார கணநாதாம்பா என்றும் அழைப்பர். பக்தர்களின் பாவத்தைப் போக்கி தைரியத்தை அளிப்பவள் இவள். மதுரை மீனாட்சியம்மன் கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலையில் காட்சி தருகிறாள். மதுரையை ஆட்சி செய்த சுகுணபாண்டியன், மறுபிறவியில் கருங்குருவியாகப் பிறந்தான். மற்ற பறவைகள் துன்புறுத்தியதால் காட்டிற்கு பறந்த அக்குருவி, ஒரு மரத்தில் தங்கியது. அங்கு வந்த சிவபக்தர் ஒருவர், சிவநாமத்தை ஜெபிக்க கேட்ட குருவி ஞானம் அடைந்தது. குருவியும் மதுரை கோயிலுக்கு வந்து, குளத்தில் நீராடி ஈசனை வழிபட்டது. சிவனும் குருவிக்கு மந்திர உபதேசம் செய்தருளி, குருவியினத்தில் வலிமை மிக்க வலியன் குருவியாக இருக்க வரமளித்தார். இக்கோலத்தை தரிசித்தால் மன வலிமை உண்டாகும்.

நைவேத்யம்: தயிர் சாதம்
தூவ வேண்டிய மலர்: முல்லை

பாட வேண்டிய பாடல்:
தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால்
இவளே கடவுளர் யாவருக்கும் மேலை இறைவியுமாம்
துவளேன் இனியொரு தெய்வ முண்டாக மெய்த் தொண்டு செய்தே.

நவராத்திரி முதல்நாள் வழிபாடு...

நவராத்திரி முதல்நாள் வழிபாடு...

நவராத்திரியின் முதல் நாளில் அம்பாளுக்கு மகேஸ்வரி பாலா என்று பெயர் சூட்டி வணங்க வேண்டும். மது, கைடபர் ஆகிய அசுரர்களின் அழிவுக்கு காரணமான இவளை, இந்நாளில் சாமுண்டியாக அலங்காரம் செய்ய வேண்டும். மதுரை மீனாட்சி நாளை ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அண்ட சராசரத்துக்கும் அம்பிகையே தலைவி. இதை அண்டம்+ சரம்+அசரம் என்று பிரிக்க வேண்டும்.அண்டம் என்றால் உலகம்.சரம்என்றால் அசைகின்ற பொருட்கள்.அசரம்என்றால் அசையாத பொருட்கள். ஆம்.... அன்னை ராஜராஜேஸ்வரி, இந்த உலகிலுள்ள அசைகின்ற, அசையாப் பொருட்களுக்கெல்லாம் அதிபதியாக இருந்து அருளாட்சி நடத்துவதைக் குறிக்கும் வகையில் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது. இக்கோலத்தை தரிசித்தால் ராஜபோக வாழ்வு கிடைக்கும்.

நைவேத்யம்: சர்க்கரைப் பொங்கல்
தூவும் மலர்கள்: மல்லிகை, வில்வம்

பாட வேண்டிய பாடல்:
மின்னாயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குகின்றது
அன்னாள் அகமகிழ் ஆனந்தவல்லி அருமறைக்கு
முன்னாய் நடுவெங்கு மாய்முடி வாய முதல்வி தன்னை
உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே.

ஆண்டுக்கு இருமுறை நவராத்திரி கொண்டாட வேண்டும்!

ஆண்டுக்கு இருமுறை நவராத்திரி கொண்டாட வேண்டும்!

ஆண்டுக்கு இருமுறை நவராத்திரி கொண்டாடவேண்டும் என்று தேவி புராணம் கூறுகிறது. சித்திரையில் வரும் நவராத்திரிக்கு வசந்த நவராத்திரி என்றும், புரட்டாசியில் வரும் நவராத்திரிக்கு சாரதா நவராத்திரிஎன்றும் பெயர்.இவ்விரு காலங்களும் எமனுடைய கோரைப்பற்களுக்குச் சமமாகும். கோடை, குளிர் என பருவகாலம் மாறும் போது நோய்நொடிகள் பரவும். இந்த ஆபத்திலிருந்து மக்களைக் காக்கும்படி தேவியைப் பூஜிக்கவேண்டும் என்பதால் இவ்விழாவை நடத்தினர். ஆனால், கோடையில் நடந்த சித்திரை நவராத்திரி காலப்போக்கில் மறைந்து விட்டது. புரட்டாசி சாரதா நவராத்திரியே இப்போது வழக்கத்தில் உள்ளது.

அம்மன் விரும்பும் நவராத்திரி!

நவராத்திரி பூஜையை தெய்வங்களும், தேவர்களும்கூட செய்து பலன் பெற்றுள்ளனர். நாரதர் அறிவுரைப்படி ராமர் கடைப்பிடித்து ராவணனை அழித்து சீதையை மீட்டு வந்தார். கண்ணபிரான், சியமந்தக மணி காரணமாக அடைந்த அபவாதம் இப்பூஜை செய்ததால் நீங்கியது. பஞ்சபாண்டவர்கள் பாரதப் போரில் வென்றதும் இந்த பூஜை செய்ததால்தான். தீய சக்தி மேலோங்கும்போது காத்திட வேண்டினால் அம்பாள் சண்டிகையாக ஒன்பது கோடி வடிவங்கள் எடுத்து தீமையை அழித்து நன்மை செய்வாள் என தேவி மகாத்மியம் கூறுகிறது. நவராத்திரியில் 9 நாட்களும் பூஜை விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இயலாதவர்கள் அஷ்டமி நாளில் மட்டுமாவது விரதம் இருந்து பூஜை செய்யலாம். விஜயதசமி தினத்தில் அம்பிகை அசுரர்களை அழித்து வெற்றிவாகை சூடினாள். ஆணவம்  சக்தியாலும், வறுமைசெல்வத்தினாலும், அறியாமைஞானத்தினாலும் வெற்றி கொள்ளப்பட்ட தினம் என்பதால் வீரம், செல்வம், கல்விக்கு உரிய தேவியரான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என முப்பெரும் தேவியர்க்கும் உரியதாக இதை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் புதிதாகத் தொடங்கும் எல்லாக் காரியங்களும் எளிதாக வசமாகும் என்பது ஐதீகம். அன்று அபிராமி அந்தாதியினைப் படிப்பது மிகச் சிறந்த பலன் தரும்.

நம் வாழ்வின் இன்னல்களை நீக்கி, தேவியின் இன்னருளைப் பெற்றுத் தரும் வழிபாட்டு நியதிகளை சொல்லித் தருகிறது நவராத்திரி. நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவில் அம்பாளை தியானித்து, பூஜித்து வழிபட வேண்டும்.

நவராத்ரி வ்ரதப் பூமௌ குருதேயோ நரோத்தம
தஸ்ய புண்ய பலம் வக்தும் ஸக்தா ஸா பரமேஸ்வரீ.

நவராத்திரியில் எவ்வாறு அலங்காரம் செய்ய வேண்டும்?

நவராத்திரியில் எவ்வாறு அலங்காரம் செய்ய வேண்டும்?

நவராத்திரி நாட்களில் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் அலங்கரித்து வழிபடுவர். அம்பிகையை முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும்; அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியின் அம்சமாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் முப்பெரும் சக்தியரை வழிபடுவார்கள். நவராத்திரியின் முதல் நாள் தேவியான மகேஸ்வரி பாலா, மது கைடபர் அழிவுக்குக் காரணமான தேவி. இரண்டாம் நாள் வழிபடப்படும் கவுமாரி, குமாரியாகப் போற்றப்படுகிறாள். அவளே ராஜ ராஜேஸ்வரியாகவும் ஆராதிக்கப்படுகிறாள். மூன்றாவது நாளுக்கு உரியவாராகி, கன்யா கல்யாணி என்று அழைக்கப்படுகிறாள். நான்காம் நாளில் அருள்பவள், மகாலட்சுமி. இவள் ரோகிணி என்று அழைக்கப்படுகிறாள். ஐந்தாம் நாள் வைஷ்ணவியாகவும் மோகினியாகவும் அலங்கரிப்பர். ஆறாவது நாளுக்குரிய தேவிவடிவம். இந்திராணி. அன்று சர்ப ராஜ ஆசனத்தில் தேவி அமர்ந்திருக்கும் கோலத்தில் பூஜை செய்வது வழக்கம். ஏழாம் நாள், தேவி மகாசரஸ்வதி, சுமங்கலி என அழைக்கப்படுகிறாள். எட்டாவது நாள் தேவியானவள் நரசிம்மிதருமி. நரசிம்மி வடிவின் சினம் தணிந்த கோலம் இது. அன்று அன்னை அன்பே உருவாக அருள்பாலிக்கிறாள். ஒன்பதாம் நாள் அம்பிகை, சாமுண்டி மாதா, அம்பு, அங்குசம் தரித்த லலிதா பரமேஸ்வரியாக அன்னையை வழிபடுவது வழக்கம்.பத்தாம் நாள் அசுரர்களை அழித்து அம்பிகை பெற்ற வெற்றியைக் குறிக்கும் விஜயதசமி. அன்று அன்னை வெற்றித் திருமகளாக அலங்கரிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். இந்த வடிவங்களில் தேவியைத் தரிசித்து வழிபடுவதால் நவநிதிகளும் பெற்று, நீடுழி வாழ்வர் என்பது ஐதிகம்.

நவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்...

நவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்...

நவராத்திரியின் சிறப்புப் பற்றியும், இதை அனுஷ்டிக்க வேண்டிய முறை, கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் தேவி மஹாத்மியத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் தெய்வங்களிடம் வரம் பல பெற்று, தங்களை அழிக்க யாருமில்லை என்று தலைக்கனம் பிடித்துத் திரிந்தார்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் மக்கள் மிகவும் அல்லலுற்றனர். தவசீலர்களால் வேள்விகளைச் செய்ய முடியவில்லை. அனைவரும் இந்த இரு அரக்கர்களையும் கண்டு அஞ்சி நடுங்கினர். இனியும் இப்படியே போனால் மக்கள் தாங்கமாட்டார்கள் என்று எண்ணிய தேவர்கள், மஹா விஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட்டனர். அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக் கொண்டு, என்ன செய்வது என ஆலோசித்தனர். ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது வரம். அதனால் தேவர்களும் மூவர்களும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர்.

மக்களின் துன்பம் கண்டு சகியாத அவளும் மிக அழகான மங்கையின் வடிவம் கொண்டு பூமிக்கு வந்தாள். அவளுடைய அழகுக்கு யாரும் நிகர் இல்லை என விளங்கினாள். பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு, சிலை என ஆனார்கள். அதே போல இந்திரனும் திக்குப் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்துவிட்டு சிலையாக நின்றார்கள். அப்படி அவர்கள் நின்றதால்தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது. அன்னை அந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி, போர்க்கோலம் பூண்டு சும்ப, நிசும்பர்களையும், அவர்களது படைத்தளபதிகளான மது, கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள்.

அவள் வெற்றி பெற்ற தினமே விஜயதசமி. ஒன்பது நாட்கள் போர் விடாமல் நடந்தது. அதனாலேயே நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். ஏன் ராத்திரி? ஒன்பது பகலில் கொண்டாடலாம் என்று கேள்வி எழுவது சகஜம். அந்நாட்களில் போருக்கு என்று சில சட்ட திட்டங்கள் உண்டு. மாலை நேரம் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு போர் புரிய மாட்டார்கள். படைகள் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும். அப்போது அன்னையின் படைக்கு ஊக்கம் கொடுக்கவும், மறுநாளைய போரில் உற்சாகமாகப் போரிடவும் வேண்டி அன்னையைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இது ஒன்பது இரவுகள் நடந்தது. அதனாலேயே நாம் நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.

படலம் 12: பங்குனிமாத சந்தன பூஜை...

படலம் 12: பங்குனிமாத சந்தன பூஜை

பன்னிரெண்டாவது படலத்தில்: பங்குனி மாதத்தில் செய்ய வேண்டிய கந்த பூஜா விதி கூறப்படுகிறது. முதலில் பங்குனி மாதத்தில் உத்தர நட்சத்திரதினத்தில் கந்த பூஜை செய்ய வேண்டுமென கால நிரூபணமாகும். விசேஷ ஸ்நபன விசேஷ பூஜையுடன் கந்த பூஜா விதி அனுஷ்டிக்கவும் எனகூறப்படுகிறது. பிறகு சந்தனத்தில் சேர்க்க வேண்டிய அகில குங்குமம் முதலியவைகளின் கந்தத்ரவ்யங்களின் பிரமாண வசனம். கிருதகம்பள விதிக்கு கூறிய மார்க்கப்படி ஹோமம் செய்க. லிங்கத்திலும் பீடத்திலும் மற்ற எல்லா இடத்திலும் பூசுவதை செய்க. கம்பள வேஷ்டனமின்றி மற்ற எல்லா கர்மாவும் கிருதகம்பள விதி மார்க்கமாக செய்ய வேண்டுமென சூசிக்கப்படுகிறது. எல்லா ரோக சம்பவம், உத்பாத சூசகாத்புதம் காணப்பட்ட சமயம் அபிசாரகிருத தோஷ ஸமயங்களிலும் முன்பு கூறிய தோஷ நிவிருத்திக்காகவும் விருப்பப் பயனையடைவதற்கும் கந்தபூஜா செய்யவும் என்று கந்தபூஜா பலம் நிரூபிக்கப்படுகிறது. இவ்வாறாக 12ம் படல கருத்து தொகுப்பாகும்.

1. பங்குனி மாதத்திலே உத்திர நட்சத்திரத்திலே உத்தமமான சந்தனத்தினால் பூஜிக்கவேண்டும். விசேஷ ஸ்நபனத்தோடு கூட விசேஷ ஹோமத்துடன் கூடியதாக இருக்கவேண்டும்.

2. எட்டு பலம் முதல் ஒவ்வொரு பலமாக கூட்டி ஆயிரம் பலம் எடை முடிய சந்தனத்தின் அளவு கூறப்பட்டது அதில் பாதி அகில் சேர்க்க வேண்டும்.

3. அதில் கால்பாகமோ, அதில் பாதியோ குங்கும பூவும் அதில் பாதி கால் பாகத்தில் எட்டில் ஓர் பங்கும் அதில் பாதியோ, கால்பாகமோ மேற்கூறிய திரவ்யம் சேகரித்து

4. பச்சைகற்பூரம் இரண்டு பங்கு பொடி செய்து எல்லா இடத்திலும் தூபம் காண்பிக்கவேண்டும். எல்லா மந்திரங்களாலும் அபிமந்திரணம் செய்யப்பட்டதை அர்பணம் செய்யவேண்டும்.

5. நெய்கம்பள பூஜையில் கூறியபடி ஹோமம் செய்து சந்தனத்தை ஸம்ஸ்கரித்து பீடத்தோடுகூடிய லிங்கத்தை சந்தனத்தினால் சிவமந்தரத்தினால் பூசவேண்டும்.

6. நல்ல வாசனையுள்ள புஷ்ப மாலைகளினால் பீடம் லிங்கம் முதலியவைகளை அலங்கரிக்கவேண்டும். கம்பளி இல்லாமல் (சந்தனத்தினால்) நெய் கம்பளத்தைபோல எல்லாம் நடத்தவேண்டும்.

7. எல்லாவிதமான வியாதி உண்டான காலத்திலும், அத்புதமான காலத்திலும் இஷ்டத்தை அடையும் பொருட்டு ஆபிசாரம் செய்ததினால் ஏற்பட்ட குறை நீங்கவும் இந்த முறையில் செய்யவேண்டும்.

இவ்வாறு பங்குனி மாதம் சந்தனம் சாற்றும் முறையைக் கூறும் பன்னிரண்டாவது படலம்.

படலம் 11: மாசி மாத சிவபூஜா விதி!

படலம் 11: மாசி மாத சிவபூஜா விதி!

பதினொன்றாவது படலத்தில் மாசிமாதத்தில் விதிக்கப்பட்டுள்ள சிவராத்ரி பூஜாவிதி கூறப்பட்டுள்ளது. முதலாவதாக சிவராத்ரி வ்ரதாசரண பலநிரூபணம் மாசிமாத கிருஷ்ணபக்ஷ சதுர்தசீ ராத்ரி சிவராத்ரி அந்த தினத்திலே சிவாலயத்தில் சிவலிங்க விஷயமான சிவராத்ரி பூஜா செய்ய வேண்டும் என காலம் நிர்தேசிக்கப்படுகிறது. பிறகு முற்பகலில் ஸ்நான உபவாஸத்துடன் கூடிய சாதகனால் சிரத்தையாக பூஜை செய்ய வேண்டுமென அதிகார நிரூபணம். ராத்ரியில் நான்கு யாமத்திலும் பூஜாவிதி கூறப்படுகிறது. முதல் யாமம், பாயஸாந்நம், இரண்டாம் யாமம் கிருஸரான்னம் மூன்றாம் யாமம் குலான்னம், நான்காம் யாமம், சுத்தான்னம் நிவேதிக்க வேண்டுமென நிவேதனபிரகாரம் சூசிக்கப் படுகிறது. பின்பு பூஜை முடிவில் செய்ய வேண்டிய ஹோமவிதி பிரதிபாதிக்கப்படுகிறது. தான் விரதம் அனுஷ்டிக்க அசக்தனாக இருப்பின் அந்நியனால் தனக்காக வ்ரதாசரணம் செய்ய வேண்டுமென சூசிக்கப்படுகிறது. பிறகு ராத்ரியில் விழித்து ஆசார்ய பூஜை செய்க. வித்த சாட்யமின்றி தட்சிணா தானம் செய்ய வேண்டும். அவ்வாறே லிங்கம் சிவபக்தர்கள், பிராமணர்கள், அதிதிகளிவர்களுக்கு யதாசக்தி பூஜை செய்க. பிறகு சாதக பூஜை நன்கு முறைப்படி முடித்து ஸ்வகிருஹம் சென்று பந்து ஜனங்களுடன் கூட முறைப்படி பாரணம் செய்க என்று சிவராத்திரி பூஜாவிதியில் கிரியாகல்பம் கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக பதினாறாவது படல கருத்து தொகுப்பாகும்.

1. பிறகு, பிராமணர்களே, சிவராத்ரி விரதத்தை பற்றி கூறுகின்றேன். விசேஷமாக விரதங்களில் உத்த மோத்தமமானதை நீங்கள் சிரத்தையுடன் கேளுங்கள்.

2. முன்னால் தேவியாலும், பிறராலும், எது அனுஷ்டிக்கப்பட்டதோ (அந்த சிவராத்ரி விரதானுஷ்டத்தால்) என்னோடு கூட தேவி ஸந்தோஷமாயிருந்தால் மற்றவர்கள் விரும்பிய நன்மைகளை அடைந்தார்கள்.

3. விரதம் அனுஷ்டித்தவர்கள் யமன் கட்டளையினால் பாதிக்கப்படுவதில்லை. கிங்கரர்களாலும் பயப்படும்படியான பார்வை உடையவர்களாலும் பார்க்கப்படுவதில்லை. நரகங்களையும் அடைவதில்லை.

4. எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதன் முறையை கேளுங்கள் மாசி மாதத்தில் தேய்பிறையில் எந்த தினத்தில் சதுர்த்தசி இருக்கின்றதோ

5. அந்தராத்ரி சிவராத்ரியாகும். எல்லா நல்வினைகளும் சேர்ந்து சுபத்தை கொடுக்கக் கூடியதாகும். அந்த ராத்ரியில் சிவாலயத்தில் சிவலிங்கத்தில் சிவபூஜை செய்யவேண்டும்.

6. ஸ்நானம் செய்து முற்பகலில் நியமமாக உண்ணாமல் விரதமாக இருந்து மிக வேண்டும் சிரத்தையோடு கூட ஸாதகன் உபசாரத்தினால்

7. பிறகு முன்கூறிய முறைப்படி பஞ்ச சுத்தியை முறைப்படி செய்து சிவாஸனம், சிவமூர்த்தி வித்யா தேகம் கல்பித்து பிறகு

8. சிவனை ஆவாஹனம் செய்து ஸன்னிதானம் செய்து பாத்யம் முதலியவைகள் கொடுத்து அர்ச்சிக்க வேண்டும். சந்தனாதி தைலம்பூசி அரிசி மாவினால் தேய்த்து சுத்தி செய்யவேண்டும்.

9. பஞ்சாமிருதத்தினால் பஞ்சகவ்யங்களினால் அந்தந்த முறையோடு அபிஷேகம் செய்யவேண்டும், நெய் முதலியவைகளோடு சந்தன ஜலத்தினால் முறைப்படி அபிஷேகம் செய்யவேண்டும்.

10. ஐந்து அங்கங்களோடு கூடிய பவித்ரங்களாலும் அரிசிமாவினால் மறுபடி இந்த பிரகாரம் நெல்லி முள்ளியினால் தேய்த்து

11. அரிசிமாவினால், தூபம் செய்யப்பட்ட மஞ்மள் பொடியினாலும் அஸ்த்ரமந்திரத்தினால் தேய்த்து ஜலத்தினால் சுத்தம் செய்யவேண்டும்

12. பிறகு ஈச்வரனை இளநீரால் அபிஷேகம் செய்யவேண்டும், பஞ்ச பிரம்ம மந்திரம் ஷடங்க மந்திரம், மூல மந்திரத்தினால் சந்தன ஜலத்தினால் அபிஷேகம் செய்யவேண்டும்.

13. சுத்தமான பஞ்சு ஆடையினால் துடைத்து லிங்கத்தை சுத்தமான ஆடையினால் லிங்கத்தை சுற்றி வஸ்த்ரம் சாத்தவேண்டும்

14. ஒவ்வொரு யாமத்திலும் தனித்தனியாக திரவியங்களாலும் சந்தனம் முதலியவைகளாலும், சந்தனம், அகில், பச்சை கற்பூரம், குங்குமப்பூ முதலியவைகளால் முறைப்படி அர்ச்சிக்கவேண்டும்.

15. மல்லிகைபூ நீலோத்பலம் ஜாதி புஷ்பங்கள் வில்வங்களை அருகம்புல் அரிசி எள்ளும் கூடினதாக நன்கு பூஜிக்க வேண்டும்.

16. குங்குலியம் அகில் சாம்பிராணி மட்டிப்பால் முதலியவைகளினால் தூபம் போட வேண்டும். நல்ல வெண்மையான நூலை நெய்யில் நனைத்து நெய் தீபம் போட வேண்டும்.

17. முதல் யாமத்தில் பாயஸமும் இரண்டாம் ஜாமத்தில் எள்ளு வெல்லம் நெய் கலந்த அன்னமும் மூன்றாம் ஜாம பூஜைக்கு சக்கரை பொங்கலும் நான்காவது ஜாம பூஜைக்கு சுத்தான்னமும் செய்ய வேண்டும்.

18. அதற்கு பிறகு எல்லாவிதமான காய்கறிகளோடும்கூட, நெய், வெல்லத்தோடுகூட, வெற்றிலை பாக்கையும் நிவேதனம் செய்யவேண்டும்.

19. தூபம் தீபாராதனையோடுகூட சிவனின் பொருட்டு அர்ப்பணம் செய்து குண்டத்திலோ ஸ்தண்டிலத்திலோ விசேஷமாக ஹோமம் செய்ய வேண்டும்.

20. குண்ட ஸம்ஸ்காரத்துடன் குண்டத்திலோ, பாத்திரத்திலோ அக்னியில் சிவாக்னியை கல்பித்து அக்னி ஹ்ருதயத்தில் சிவாஸனத்தை கல்பித்து

21. அவ்விடத்தில் ஈசனை நன்கு பூஜித்து அந்த ஜ்வாலையாக இருக்கும் அக்னியில், ஸமித், நெய், அன்னம் நெற் பொறி, எள்ளு இவைகளை மூலமந்திரம் ஷடங்க மந்திரங்கள், பஞ்ச பிரம்ம மந்திரங்களால் ஹோமம் செய்யவேண்டும்.

22. சிவமந்திர ஹோமத்தில் பத்தில் ஓர் பாகம் மற்ற மந்திரங்களும் பத்துமுதல் பத்து பத்தாக அதிகபடுத்தி ஐம்பது ஆகுதிவரை செய்யலாம்.

23. இடைவெளி இல்லாத பூர்ணமான பூர்ணாஹூதியை சிவனுக்காக செய்து வணங்கி அந்த விபூதியை ஈசனுக்கு அர்பணம் செய்து நமஸ்கரித்து

24. ஒவ்வொரு ஜாமத்திலும் மறுபடி மறுபடி இந்த பிரகாரம் பூஜிக்க வேண்டும். நாமே செய்ய இயலாவிடில் நமக்காக பிறரால் செய்விக்கப்பட வேண்டும்.

25. இரவை தூக்கம் இல்லாமல் கழித்து, தெளிவான அதிகாலையில் நித்யானுஷ்டானங்களை செய்து பிறகு முறைப்படி ஸ்நபனம் செய்து

26. ஈச்வரனை முன்போல் பூசித்து பிறகு குரு பூஜையை செய்யவேண்டும். பிறகு பணம் இல்லாத்தன்மை இல்லாமல் பிறகு தட்சிணையை (குருவுக்கு) கொடுக்கவேண்டும்.

27. லிங்கம் கட்டிகள், சிவபக்தர்கள், பிராமணர்கள், அதிதிகளையும் இயன்றளவு பக்தியினால் நன்கு பூசை செய்து

28. பந்துக்களோடு கூட ஸாதகன் தனது வீட்டிற்கு சென்று கை, கால்களை சுத்தம் செய்துகொண்டு சாப்பாட்டை (பாரணை) செய்ய வேண்டும்.

இவ்வாறு மாசிமாத சிவராத்ரி பூஜை முறையைக் கூறும் பதினொன்றாவது படலமாகும்.

படலம் 10: மாசி மாத கிருதகம்பள பூஜா முறை...

படலம் 10: மாசி மாத கிருதகம்பள பூஜா முறை...

பத்தாவது படலத்தில் மாசிமாதத்தில் செய்ய வேண்டிய கிருதகம்பள பூஜா விதி கூறப்படுகிறது. முதலில் மாகமாசத்தில் மகாநட்சத்திரத்தில் கிருத கம்பளம் செய்ய வேண்டுமென கால நிர்தேசமாகும். பிறகு கிருத (நெய்) ஸம்பாதநம் அதன் ஸம்ஸ்காரமும் வர்ணிக்கப்படுகிறது. பிறகு பஞ்சகவ்ய பஞ்சாம்ருதத்தால் விசேஷ ஸ்நபனம் விசேஷ பூஜை செய்து ஹோமம் செய்க என கூறி அங்கு செய்ய வேண்டிய ஹோம விதி பிரதிபாதிக்கப்படுகிறது காலை மதியத்தில் முன்பு போல் ஸ்நபனத்துடன் விசேஷ பூஜை செய்து ஸர்வாலங்கார யுதமாக ஆலய பிரதட்சிண பூர்வம் ஸம்ஸ்கரிக்கப்பட்ட நெய்யை லிங்கத்தில் பீடம் வரை எல்லா இடத்திலும் பூச வேண்டும். பிறகு கந்தாதிகளால் பூஜித்து கம்பள வேஷ்டநம் செய்ய வேண்டும். பிறகு தாம்பூல சஹிதம் ஹவிஸ் நிவேதிக்க வேண்டும். பிறகு அடுத்த ஸந்த்யா காலத்திலோ மறுதினத்திலோ கம்பளாதிகளை எடுத்து முன்பு போல் பூஜிக்க வேண்டும். முயற்சிக்கு தக்கவாறு ஆசார்யனுக்கு தட்சிணாதானம் கொடுக்க வேண்டும். இந்த பூஜை அங்குரார்ப்பண ஸஹிதமாகவோ, ரஹிதமாகவோ செய்யலாமென சூசிக்கப்படுகிறது. இவ்வாறாக பத்தாவது படல கருத்து சுருக்கமாகும்.

1. மாசி மாதத்தில் மகாநட்சத்திரத்தில் நெய்யில் (நனைத்த) கம்பளியை சாத்தும் பூஜையை செய்ய வேண்டும். புழு, பூச்சி, இல்லாததும் காராம்பசு வினையுடையதும்.

2. ரோமம் இல்லாமலும், சுத்தமாயும், நல்ல மணத்தோடு நூதனமான நெய்யை ஆசார்யன் அஸ்த்ர மந்திரத்தினால் ஸ்தாபிக்க வேண்டும். ஜலத்தில் வருண மூல மந்திரத்தை கூறிக்கொண்டு

3. அந்த நெய்யை குங்குமப்பூ, அகில், மஞ்சள் பொடி, பச்சை கற்பூரம் இவைகளோடு சேர்த்து உருண்டையாக செய்து (இவைகளால் ஸம்ஸ்கரிக்கப்பட்டு)

4. தங்கபாத்ரம் முதலியவைகளில் வைத்து, பஞ்ச பிரும்மந்திரம் ஷடங்க மந்திரம் சிவமந்திரத்தோடு கூட பூஜித்து தூபம் கொடுத்து அபிமந்த்ரணம் செய்ய வேண்டும்.

5. பஞ்சகவ்ய, பஞ்சாமிருதங்களினாலோ விசேஷமாக ஸ்நபனம் செய்ய வேண்டும். விசேஷ பூஜையை செய்து முடிவில் ஸ்தண்டிலத்திலே நெய்யை வைக்க வேண்டும்.

6. புத்திமானானவன் ஹ்ருதய மந்திரத்தை கூறிக்கொண்டு சந்தனம் முதலியவைகளினால் பூஜிக்க வேண்டும். அதற்கு முன் ஸ்தண்டிலத்தில் சிவாக்னியை ஸ்தாபிக்க வேண்டும்.

7. புரச சமித், நெய், அன்னம், எள்ளு, பொரி இவைகளோடு கூடியதாக நூற்றெட்டு தடவை ஹோமம் செய்து முடிவில் பூர்ணாஹுதியை செய்ய வேண்டும்.

8. பவித்ராரோகணமுறைப்படி நெய்யில் ஸம்பாத ஹோமம் செய்து முன்புறத்தில் ஸ்தண்டிலத்தில் வஸ்திரத்தால் மூடப்பட்ட நெய்யை வைக்க வேண்டும்.

9. காலையிலோ மத்தியானத்திலோ கவச மந்திரத்தினால் அவகுண்டனம் செய்தபிறகு ஈசனை ஸ்னபனம் முதலியவைகளோடு பூஜித்து

10. ஸகலவிதமான அலங்காரத்தோடு விசேஷமாக பூஜைகள் செய்து சிவமந்தரத்தை சொல்லிக் கொண்டு நெய்யுடன் கோயில்வலம்வந்து

11. நெய்யால் லிங்கத்தை எல்லா இடத்திலும் பூசி எல்லா பீடங்கள் முடிவுவரை சந்தனம் முதலியவைகளால் பூஜித்து கம்பளியை சுற்றவேண்டும்.

12. ஈஸ்வரனுக்கு வெற்றிலைபாக்குடன் கூடின நிவேதனத்தை கொடுக்க வேண்டும் (அர்பணிக்கவேண்டும்)

13. அடுத்த ஸந்தியா காலத்திலோ மறுநாளிலோ கம்பளி முதலியவைகளை நீக்கிவிட்டு முன்போல ஈசனை பூஜிக்கவேண்டும். அப்படியே ஆசார்யனை பூஜிக்கவேண்டும்.

14. ஆசார்யனுக்கு சக்திக்கு ஏற்றவாறு தட்சிணையை கொடுக்கவேண்டும். பாலிகை தெளிப்பதுடன் கூடவோ, இல்லாமலோ இதை செய்யவேண்டும்.

இவ்வாறு நெய் சேர்த்த கம்பள பூஜை முறை பத்தாவது படலமாகும்.

படலம் 9: மார்கழி, தை மாத சிவபூஜா விதி...

படலம் 9: மார்கழி, தை மாத சிவபூஜா விதி...

ஒன்பதாவது படலத்தில் மார்கழி மாதம், தை மாதம் செய்ய வேண்டிய விசேஷ பூஜாவிதி கூறப்படுகிறது. அதில் முதலில் மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரம் கூடிய தினத்தில் தேவருக்கு கிருதஸ்நான ஸமந்வித ஸ்நபனம் அல்லது கேவல ஸ்நபனம் செய்து, விசேஷமாக கந்தாதிகளால் தேவரை பூஜித்து பலவித கானங்களுடன் கிராம பிரதட்சிணம் செய்து, தேவரை ஆலய பிரவேசம் செய்க. அல்லது ராத்திரியிலும் பகலிலும் பலிஹோமங்களுடன் கூட ஸர்வாலங்காராயுதமாக பேரபிரதட்சிணம் செய்து சூர்ணோத்ஸவத்துடன் தீர்த்தோத்ஸவம் செய்து தேவாலய பிரவேசம் செய்க என்று கூறப்பட்டுள்ளது. பிறகு அங்கு ஸாயங்காலத்தில் விதிக்கப்பட்டுள்ள டோலரோஹணவிதி பிரதிபாதிக்கப்படுகிறது. அதில் டோலாகல்பனபிரகாரம் ஊஞ்சலில் தேவதாயஜனம் கூறப்படுகிறது. பிறகு ஊஞ்சலில் பலகை மேல் சிவன், இடப்பாகம் தேவி, மத்தியில் ஸ்கந்தரையும் ஆரோஹிக்க வேண்டும். அங்கு பலவித ந்ருத்யகான வாத்ய ஸஹிதம் ஈசனை சந்தோஷிக்க வேண்டும் என டோலோத்ஸவ விதி நிரூபிக்கப்படுகிறது. பிறகு இந்த ஊஞ்சலுத்ஸவம் வேறு காலத்திலும் செய்ய வேண்டும். பிரதி தினமும் செய்யலாமென பக்ஷõந்தரமாக சூசிக்கப்படுகிறது. பேரா ரோஹநத்தோடு டோலாசலனம் இஷ்டமென்று கூறப்பட்டுள்ளது. இந்த பக்ஷத்தில் ஊஞ்சலில் தேவரை ஆரோஹித்து அந்த ஸாந்நியத்தை தியானிக்கவும் என டோலாரோஹன விதி கூறப்படுகிறது. மார்கழி மாதத்தில் மகா நட்சத்திரத்தில் ஈச, ஈச்வரிக்கு விசேஷமாக நெய்யுடன் கூடிய பாயசத்தை அர்ப்பணிக்கவும் (தை) புஷ்யமாசத்தில் புஷ்ய நட்சத்திரத்தில் தேனபிஷேகம் மஹாஹவிர் நிவேதனம் நிவேதன முடிவில் பேரயாத்ரை செய்ய வேண்டுமென புஷ்யமாஸவிதி கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக ஒன்பதாவது படல கருத்து தொகுப்பாகும்.

1. மார்கழி மாதத்தில் ஆருத்ரா நட்சத்ரத்தில் முன் கூறிய விதிப்படி நெய் அபிஷேகத்தோடு கூட பரமேஸ்வரனை பூஜிக்க வேண்டும்.

2. விசேஷமாக ஸ்நபனம் மட்டும் செய்து சந்தனங்களால் பூஜித்து, பலவித கானங்களால் ஸந்தோஷிக்கச் செய்ய வேண்டும்.

3. கிராம பிரதட்சிணம் செய்து ஸ்வாமியை ஆலயத்தில் பிரவேசிக்க செய்து அல்லது ராத்திரியிலோ, பகலிலோ பலி, ஹோமம் செய்து

4. எல்லா அலங்காரங்களுடன் கூட, பிம்ப பிரதட்சிணம் செய்து சூர்ணோத்ஸவம், தீர்த்த உத்ஸவம் செய்து ஆலய பிரவேசனம் செய்ய வேண்டும்.
ஸாயங்காலத்தில் ஊஞ்சல் உத்ஸவம் செய்ய வேண்டும்.

5. ஸர்வாலங்காரயுதமாக வேண்டும், ஸ்தம்பல க்ஷணத்துடன் கூடிய இரண்டு ஸ்தம்பம் அமைத்து அதன் நடுவில் குறுக்கு ஸ்தம்பம் அமைக்க வேண்டும்.

6. நான்கு முழ அளவுள்ள ஊஞ்சலை அதன் நடுவில் அமைக்க வேண்டும். நான்கு சங்கிலியுடனும், ஊஞ்சல் மேல் விட்டத்தில் மூடக்கூடிய விதான வஸ்திரத்துடன் கூடியதாயும்

7. பல அலங்காரத்துடனும், இரு முழம் அளவுள்ள ஹம்ஸானத்துடன் அமைத்து புண்யாக பிரோக்ஷணம் செய்ய வேண்டும்.

8. அஸ்திரமந்திர ஜலத்தால் பிரோக்ஷணம் செய்த பலகையில் ஆஸனத்தை கல்பித்து ஹ்ருதய மந்திரத்தால் அன்னப்பறவை தோகைகளாலான ஹம்ஸா ஸனத்தில் ஹம்ஸத்தை பூஜிக்க வேண்டும்.

9. வலது பக்கத்தில் பிரம்மாவையும், இடது பக்கத்தில் விஷ்ணுவையும் விஷ்டரமாகிய ஆஸன பாகத்தில் ருத்திரனையும், பலகையின் மேல் பாகத்தில் சிவனை பூஜிக்க வேண்டும்.

10. இடது பாகத்தில் தேவியையும், நடுவில் ஸுப்ரஹ்மண்யரையும் பூஜிக்க, அல்லது பலகையின் மேல் தேவியை சந்தனம் முதலியவைகளால் அர்ச்சிக்கவு

11. பலவித கானங்களுடனும், பல நிருத்தங்களுடனும், பலவித வாத்யங்களுடனும், கூட ஈஸ்வரனை மகிழ்விக்க வேண்டும்.

12. மற்ற சமயத்திலும் இஷ்டத்தை தரக்கூடிய ஊஞ்சல் உற்சவம் செய்யலாம். எல்லா விருப்பத்தையும் அடைவதற்காக பிரதிதினமும் செய்யலாம்.

13. பிம்பத்தை எழுந்தருளப்பண்ணியுமோ ஊஞ்சலாட்டுவதை செய்ய வேண்டும். இந்த மார்கழி மாதத்தில் மக நட்சத்திரத்தில் விசேஷமான நெய்யுடன்

14. கூடிய பால் பாயாசத்தை தேவியுடன் கூடிய சம்புவிற்கு அர்பணம் செய்யவேண்டும்.

15. தை மாசத்தில் (பூச) புஷ்ய நட்சத்ரத்தில் தேன் அபிஷேகம் செய்க. மஹாஹவிஸ் நிவேதனம் செய்து ஸ்வாமி திருவீதியுலா செய்ய வேண்டும்.

16. முன் கூறியபடி செய்தால் கர்தா விரும்பிய பயனை அடைகிறான்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் மார்கழிமாத, தை மாத பூஜைமுறையாகிய ஒன்பதாவது படலமாகும்.