படலம் 1: மேற்கு வாயில் பூஜா முறை!
இந்த முதலாவது படலத்தில் மேற்கு நோக்கி இருக்கும் திருக்கோயில் லிங்கத்திலும், ஸகள வடிவத்திலும், முகலிங்கத்திலும் க்ருஹஸ்தாச்ரமத்தை உடைய சிவாச்சார்யனால் பரார்த்த பூஜா முறை செய்யத் தகுந்தது என நிரூபணம் செய்யப்படுகிறது. முதலில் மேற்கு நோக்கி இருக்கின்ற திருக்கோயில்களில் பரார்த்த பூஜை செய்வதால் அரசன், தேசம், இவைகளுக்கு பூர்ண நிறைவையும், போகம், முக்தியையும், பலன் கொடுக்கக்கூடியதாக பலன்கள் நிரூபணம் செய்யப்படுகிறது. சிவாச்சாரியனால் தினம்தோறும் காலையில் அவசியமான சவுச ஸ்னானம் முதலியவைகள் செய்த பிறகு த்விஜன் மனுவிற்கு ஏற்பட்ட அவசியம் செய்யவேண்டிய சந்தியாவந்தனம் நிரூபிக்கப்படுகின்றன. பிராம்மணர்களுக்கு விதிக்கப்பட்ட சவுச, ஸ்நான, ஹோமம், முதலிய விஷயங்களில் ஸ்ருதி, ஸ்மிருதி, முதலியவைகளில் கூறப்பட்ட அனுஷ்டானத்தை, சிவபிராம்ணனால் செய்ய வேண்டுமா? வேண்டாமா? என வித்யாசம் காண்பிக்கப்படுகிறது. தன்னுடைய சாஸ்திரத்தில் கூறப்பட்ட ஸந்தியாமந்திர தர்பண விதிகளுக்கு பிறகே சிவ பிராம்மணர்களால் திருக்கோயில் பூஜைக்காக திருக்கோயிலுக்குச் செல்ல வேண்டும் என கூறப்பட்டு இருக்கிறது. பிறகு ஆன்மசுத்தி, ஸ்தானசுத்தி, த்ரவ்ய சுத்தி, மந்திர சுத்தி, லிங்க சுத்தி என்று சொல்லக்கூடிய ஐந்து சுத்திகளின் நடுவில் முதலில் ஆத்ம சுத்தியானது நிரூபணம் செய்யப்படுகிறது. அந்த இடத்தில் கரன்யாஸபூர்வமாய் த்வாதசாந்த ரூபமாக ஜீவான்மசேர்க்கையும், பாஞ்ச பவுதிகமான சரீர சுத்தியும், கரன்யாச, அங்கன்யாச, அஷ்டத்ரிம்சத் கலாந்நியாசத்தினால், சரீரத்தை சிவ சரீரமாக கல்பிதமான முறை அந்தர்யாக பிரகாரங்கள் என்பது முதலான விவரங்கள் கூறப்பட்டு இருக்கின்றன.
பிறகு ஸ்தான சுத்தி த்ரவ்ய சுத்தி கூறப்படுகிறது. த்ரவ்ய சுத்தி நிரூபணத்திலே ஸமயத்திற்கேற்ப பாத்யம், ஆசமனம், அர்க்யங்கள், விஷயத்தில் உத்தம மத்யம, அதம முறைகள் கூறப்பட்டு இருக்கின்றன. பிறகு மந்திர சுத்தி கூறப்படுகிறது. பிறகு சாமான்யர்க்யம் சேர்ப்பது. வழியாக பூஜைகள் நிரூபிக்கப்படுகிறது. பிறகு லிங்க சுத்தி முறையானது விதிக்கப்படுகிறது. அந்த இடத்தில் த்வார பூஜை செய்தபிறகு தான் ஆசன கல்பனை முறையை நிரூபிக்கப்படுகிறது. பிறகு லிங்க சுத்தி முறையானது விதிக்கப்படுகிறது. அந்த இடத்தில் த்வார பூஜை செய்த பிறகு தான் பஞ்ச சுத்தி செய்ய வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது. பிறகு ஆசன கல்பனை முறை நிரூபிக்கப்படுகிறது. அங்கு அனந்தாசன, ஸிம்மாஸன, யோகாசன, பத்மாசன, விமலாசனங்களின் ஸ்வரூப வர்ணனம், அபிஷேகம் ஆவாஹன காலங்களில் இந்த ஆசனங்களில் தனித்தனியாக கல்பிக்கும் முறையானது காணப்படுகிறது. பிறகு பஞ்சப்பிரும்ம மந்திரம் அஷ்டத்ரிம்சத் கலான்யாசம் முதலியவைகளால் மூர்த்தி கல்பன முறையானது கூறப்படுகிறது. ஆவாஹன, ஸ்தாபன, ஸன்னிதான, ஸன்னிரோதன, அவகுண்டன, அம்ருதீகரண என்று சொல்லக்கூடிய முத்திரைகளை காண்பிக்க வேண்டிய முறை, பாத்யம், ஆசமனம், அர்க்யம், புஷ்பபதானமான முடிவை உடைய பத்து சம்ஸ்காரங்கள் செய்யவேண்டும் என கூறப்படுகிறது. கந்தம், புஷ்பம், தூபம், தீபம் உபசாரங்களினால் சிவனை பூஜிக்கவேண்டும் என கூறப்படுகிறது. மந்திர பூர்வமான நைவேத்யம் முக்யமான ஆபரண அர்ப்பணம் தீபாராதனை முறைகள் கூறப்படுகின்றன. கண்ணாடி, குடை, சாமரம், காண்பிப்பது செய்ய வேண்டும் என கூறப்படுகிறது.
இரவில் தீபதான கடைசியில் நீராஜனம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. மஹா ஹவிர் நிவேதனத்திற்கு பிறகு பலி, ஹோமங்கள் செய்ய வேண்டும். ஸ்நபன காலத்தில் மந்திரம், வீணாகானம் வேதாத்யயனம், ஸ்தோத்திர பாடம் முதலியவைகள் கூறப்படுகிறது. அதற்குமேல் சகல விதமான பாட்டுக்கள், தூபம் முடிவாக அபிஷேக காலத்தில் பாடவேண்டிய முறையானது காண்பிக்கப்படுகிறது. பிறகு பாட்டோடு கூடிய நாட்டிய விதியானது விதிக்கப்படுகிறது. தமிழ்பாஷைகளோடு கூடிய பாட்டோ, ஸம்ஸ்ருத பாஷை முதலிய பதினெட்டு பாஷை பாட்டோடு கூடியதாகவோ, நாட்யம் செய்யவேண்டியது என கூறப்பட்டு இருக்கிறது. அடுத்து ருத்திர கன்னிகையின் லக்ஷணம் கூறப்படுகிறது. முடிவில் சுளுகோதக விசர்ஜனம் செய்யவேண்டும். இதன்படி பூஜா முறையின் கிரியா கலாபங்களை காண்பிக்கப்பட்டது. ஸாதகனால் ஸித்திப்பதற்காக பூஜை முறையினுடைய விதியானது கூறப்படுகிறது. பிறகு சிவாகமத்தில் கூறப்பட்ட மந்திரங்களினால் மட்டும் செய்யப்படுகின்ற பூஜை உத்தமமாகும். சிவாகமங்களில் கூறப்பட்டதும் வேதத்தில் சொல்லப்பட்டதுமான மந்திரங்களினால், செய்யப்படும் பூஜை மத்யமமாகும். வேதத்தில் சொல்லப்பட்ட மந்திரத்தினால் மட்டும் பூஜை செய்வது அதமம் என பூஜா விஷயத்தில் மூன்று தன்மைகள் கூறப்பட்டு இருக்கிறது. பிறகு சைவ மந்திரங்களினுடைய உயர்வுகள் கூறப்படுகின்றன.
பீஜ மந்திரங்களிலிருந்து உண்டானது ருத்திராத்யாயம் என கூறப்படுகிறது. ஆகையினால் ருத்திராத்யாய ஸ்தானத்திலே, பீஜ மந்திரம் சொல்லவேண்டும் என கூறப்பட்டு இருக்கிறது. பூஜா முறையானது, கூறப்பட்டு இருக்கிறது. முன்பு கூறப்பட்ட பூஜா முறையானது கிழக்கு, தெற்கு, வடக்கு வாயிலை உடைய கோயில்களில் லிங்கம் ஸகலம் முக லிங்க விஷயங்களில் ஒரே ஆகமத்தால் என கூறப்பட்டு மேற்கு வாசல் உள்ள கோயில்களில் விசேஷமாக செய்ய வேண்டியவைகளை கூறப்பட்டு இருக்கிறது. வாசல் படிக்கு நேராக இருக்கின்ற ஈஸ்வரனுக்கு மேல்முகம் கல்பித்து ஈஸ்வரனுடைய இடது பக்கத்திலோ, வலது பக்கத்திலோ, மனோன்மணியை ஸ்தாபித்து இரண்டுகை ஒரு முகத்தோடு கூடிய தேவியையும் அப்படியே கர்பாவரணம், வித்யேசர்கள் கணேச, லோகேச, அஸ்திர ஆவரண விஷயத்தில் செய்யவேண்டிய விஷயங்கள் கூறப்பட்டு இருக்கின்றது. ஈசனின் முன்னிலையில் விருஷபம், சூலம், கொடிமரம், கோபுரங்கள் செய்ய வேண்டும், பரிவார அர்ச்சனை விசேஷமாக கூறப்பட்டு இருக்கிறது. ஈசான தேசத்தில் சண்டிகேச ஸ்தானம் உண்டா? என்றும் தெற்கில் விக்னேச ஸ்தானம் கல்பிக்க வேண்டும் என விசேஷமாக கூறப்பட்டு இருக்கிறது. முடிவில் மற்றவையாவும், கிழக்கு வாசல் பூஜையோடு சமானம் என்று கூறப்பட்டு இருக்கின்றது. இந்த பிரகாரம், முதல் படல கருத்து சுருக்கமாகும்.
1. கிருஹஸ்தர்களுக்கு நன்மை அளிப்பதான நிஷ்கள, ஸகள, ஸகள நிஷ்கள திருமேனிகளின் பரார்த்த பூஜையில் மேற்கு திவாரபூஜை இது.
2. மேலும் அந்த பூஜை அரசன் அரசாங்கத்தின் அபிவிருத்தியையும், போக மோக்ஷத்தையும் கொடுப்பதாகும். காலையில் செய்ய வேண்டிய ஸ்நானத்தை செய்துவிட்டு
3. ஸூர்யச்ச என்பது முதலான மந்திரங்களால் மூன்று சந்த்யா காலங்களிலும் தீர்த்தத்தை அருந்தி ததிக்ராவிண்ண என்பதான மந்திரங்களால் தீர்த்த பிரோக்ஷணம் செய்து கொள்ள வேண்டும்.
4. ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: என்பது முதலான மந்திரங்களினால் மூன்று முறை அஞ்சலி ஹஸ்தமாக அர்க்யம் விட வேண்டும். பிறகு அதே மந்திரத்தால் பத்து முறை ஜபிக்க வேண்டும்.
5. வேதம் தர்ம சாஸ்திரம் முதலியவைகளில் கூறப்பட்டுள்ள அனுஷ்டானத்தை பிராம்மண தன்மை சித்திப்பதற்காக தினந்தோறும் செய்ய வேண்டும். இதை செய்யா விட்டாலும் சைவானுஷ்டானத்தை தவறாமல் செய்ய வேண்டும்.
6. அந்த அனுஷ்டானத்தில் அவச்யமான சவுசம், ஸ்நானம், ஆசமனம் இவைகளிலோ ஸந்த்யாவந்தனம் தர்ப்பணம் ஹோமங்களிலும்
7. கிருஹபலி முதலியவைகளிலும் மற்ற பிராம்மணர்களுக்கு விதிக்கப்பட்ட எந்த அனுஷ்டானம் உண்டோ அதை செய்தோ, செய்யாமலோ இருக்கலாம் சைவானுஷ் டானத்தை கட்டாயமாக செய்ய வேண்டும்.
8. தன் சாஸ்த்ரமான சைவ சாஸ்த்ர ஸ்ந்தியா வந்தன மந்திரங்களும் தர்ப்பணமும் செய்து கால்களை அலம்பிக் கொண்டு தேவாலயத்திற்கு போக வேண்டும்.
9. நன்கு ஆசமனம் செய்து உள்ளே நுழைந்து வடக்கு முகமாக தன் ஆசனத்தில் அமர்ந்து சுத்தமான வெண்மையான விபூதியை குழைத்து அணிந்து
10. கரன்யாஸம் செய்து தேஹமத்தியில் ஸூஷும்நையில் பிரகாசிக்கிற ஹூம்காரத்தை தியானித்து அசைவின்றி பிராணாயாமம் செய்ய வேண்டும்.
11. ஹூம்பட் என்று ரேசகத்துடன் கூடியதாக ஐந்து கிரந்திகளை பிளந்து அதிலிருந்து திரும்பியதாக
12. மூர்த்தி மந்திரத்தினால் ஜீவனை கிரஹித்து ஹூம்காரத்தின் மேல் கும்பகத்துடன் கூடியதாக வாயுவை மேல் நோக்கி சென்றதாக செய்ய வேண்டும்.
13. அந்த வாயுவினாலே திவாத சாந்தத்தில் இருக்கும் சிவனுடன் கூடியதாக சேர்க்க வேண்டும். இது ஆத்ம யோஜனமாகும். பிறகு ப்ருத்வீ முதலான பஞ்ச பூதங்களை சுத்தி செய்ய வேண்டும்.
பஞ்ச பூதங்கள்: ப்ருத்வீ, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் (மண், நீர், நெருப்பு, காற்று, வெளி)
14. பஞ்ச பூதங்களை நிவ்ருத்தி முதலான கலைகளாலும் அதன் அத்வாக்களாலும் வியாபித்திருப்பதாக எண்ணி முதலில் அந்த பூதங்களை சோதிக்க வேண்டும்.
15. பஞ்ச பூதங்களை தஹிப்பதும் ஒன்றுக் கொன்று பரஸ்பரமாக சோதிப்பதை மண்டலத்துடன் கூடியதாக செய்வதும் பூதசுத்தி என கூறப்பட்டுள்ளது.
16. சோதிக்க வேண்டியது இல்லாததும் கலைகளோடு மட்டும் கூடியதான சரீரத்திற்கு திவ்ய தன்மை உண்டாவதற்கு அம்ருதாப்லாவனம் செய்யவேண்டும்.
17. அம்ருத ஸ்வரூபியாகிற குண்டலினீ சக்தியை தியானித்து அதிலிருந்து உண்டான அம்ருதத்தை சொரிதலால் நனைந்ததாக கலைகளோடு கூடிய திவ்ய சரீரத்தை நினைத்துக் கொள்ள வேண்டும்.
18. ஹ்ருதயத்தில் ஆஸனத்தை தியானித்து அந்த ஆஸனத்தில் மூர்த்தியாகிற ஆத்மாவை ஸ்தாபிக்க வேண்டும். பிறகு அம்ருதாப்லாவனம் செய்து கரன்யாஸம் செய்ய வேண்டும்.
19. சந்தன பூச்சுடன் கூடிய கைகளை அஸ்த்ர மந்திரத்தால் கையை மேலும் கீழும் சுத்தி செய்து அவைகளில் (உள்ளங்கைகளில்) பிரம்ம மந்திரங்களை நியாஸம் செய்து கரதலத்தில் நேத்ரத்தை நியாஸம் செய்ய வேண்டும்.
20. சிவனின் அங்க மந்திரமான ஹ்ருதய, சிர, சிகா கவச அஸ்திர மந்திரங்களையும் நியாஸம் செய்து அதற்கு முன்னதாக சிவாஸநாய நம: சிவ மூர்த்தயே நம: சிவாய நம: என்று நியாஸம் செய்து திரும்பவும் கையில் சிவனை நியாஸம் செய்ய வேண்டும். கவச மந்திரத்தால் அந்த கையை சுற்றுதலான அவகுண்டனத்தை செய்ய வேண்டும். இவ்வாறு ஸம்ஸ்காரம் செய்யப்பட்ட அந்த கையை எல்லா கார்யத்திற்கும் உபயோகிக்க வேண்டும்.
21. கரநியாஸம் கூறப்பட்டு அங்கநியாஸம் கூறப்படுகிறது. தலையில் இருந்து பாதம் வரை பிரம்ம மந்திரமான ஈசான, தத்புருஷ, அகோர, வாமதேவ ஸத்யோஜாத மந்திரங்களையும், அங்க மந்திரமான ஹ்ருதய, சிரஸ், சிகா, கவச நேத்ர அஸ்திர மந்திரங்களையும் நியாஸம் செய்ய வேண்டும்.
22. மூலமந்திரத்தையும் பிரம்ம மந்திரங்களையும் நியாஸம் செய்த பிறகு சிவனை ஹ்ருதயத்தில் ஸ்தாபித்து ஹ்ருதயாதி அங்க மந்திரங்களை அந்தந்த இடங்களில் நியாஸம் செய்து அஷ்டத்ரிம்சத் கலாநியாசம் செய்ய வேண்டும்.
23. நேத்ரங்களில் நேத்ர மந்திரத்தை தியானித்து ஹ: அஸ்த்ராய பட் என்று திக்குகளில் பாவிக்க வேண்டும். பிறகு சிவமந்திரங்களை ஸ்மரித்து மஹாமுத்ரையை செய்ய வேண்டும்.
மஹா முத்ரையில் லக்ஷணம்:
ஒன்றுக்கொன்று பின்னிய கட்டைவிரல்களை உடைய தாய் மற்ற கை விரல்களை நீட்டியதாய் உள்ளது மஹா முத்ரையாகும். இது தேவதைகளை அழைப்பதற்கும் கூடுதல் குறைவு தோஷங்களை போக்கும் கிரியைகளை நிறைவு செய்யும் இலக்கண முடையதாகும்.
24. அஷ்டத்ரிம்சத்கலாநியாஸம் செய்து பஞ்சபிரம்ம மந்திரங்களையும் நியாஸம் செய்ய வேண்டும். ருத்ர சக்தியுடன் கூடியதான அக்ஷர நியாஸத்தை செய்ய வேண்டும்.
25. அக்ஷர நியாஸத்துடன் கூடியதாகவும், கண்டர் முதலான தேவர்களுடன் கூடிய கண்ட நியாஸம் செய்ய வேண்டும். மாத்ருகாநியாஸம் மட்டுமோ செய்தாலும் செய்யலாம்.
26. இவ்வாறே சரீரத்தை சிவமயமாக்கி கொண்டு பிறகு அந்தர்யாகம் செய்ய வேண்டும். ஹ்ருதயத்தில் பூஜையையும் நாபியில் ஹோமத்தையும் இரண்டு புருவத்தின் மத்தியில் ஸமாதியையும் பாவனை செய்ய வேண்டும்.
27. இவ்வாறு ஆத்மசுத்தி கூறப்பட்டது. அதன் பிறகு ஸ்தான சுத்தி சொல்லப்படுகிறது. கையை சொடுக்கி திக்குகளில் சுற்றி அவகுண்டனம் செய்ய வேண்டும்.
28. மூன்று பாத்திரத்தை எடுத்து கொண்டு ஆஸனத்தின் மேல் வைக்க வேண்டும். அவைகளில் முறைப்படி பாத்யம், ஆசிமனம், ஆர்க்யம் இம்மூன்றையும் கல்பிக்க வேண்டும்.
29. சந்தனம், விளாமிச்ச வேர், வெண்கடுகு, அருகம்புல், குங்குமப்பூ, தீர்த்தம் இவைகளுடன் கூடிய பாத்யமானது உத்தமம் ஆகும். குங்குமப்பூ இல்லாத பாத்யம் மத்யமமாகும்.
30. சந்தனம், விளாமிச்ச வேர் இவையுடன் கூடிய ஜலமானது அதம பாத்யமாகும். ஜாதிபத்திரி, விளாமிச்ச வேர், குங்குமபூ, பச்சகற்பூரம், ஏலக்காய், ஜாதிக்காய் கிராம்பு
31. முரம் என்ற சிற்றேலத்துடன் கூடியது உத்தமமான ஆசமனீய ஜலமாகும். ஏலக்காய், கிராம்பு, பச்ச கற்பூரம், சிற்றேலம், ஜாதிக்காய் இவைகளுடன் கூடியது மத்யமமான ஆசமனம்.
32. ஏலக்காய், கிராம்பு, பச்சை கற்பூரம் இவையுடன் கூடிய ஜலமும் அதமமான ஆசமனீயமாகும். தீர்த்தம், பால், தர்பை நுனி, யவை, அக்ஷதை எள் இவைகளுடன்.
33. நெல், வெண்கடுகு, இவையுடன் சேர்ந்தது உத்தமமான அர்க்ய ஜலமாகும். யவை, வெண்கடுகு, நெல், அரிசி இவையுடன் கூடியது மத்யமமான அர்க்ய ஜலமாகும். நெல் அரிசியுடன் கூடியது.
34. அதமமான அர்க்யமாக கூறி வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது. வெண்கடுகு, சந்தனம், விளாமிச்ச வேர், அருகம்புல், இவைகளுடன் கூடியது பாத்யம்.
35. ஏலக்காய், கிராம்பு, பச்சை கற்பூரம், ஜாதிக்காயுடன் கூடிய ஆசமனீய ஜலத்தையோ பூஜைக்கு அங்கமாக உபயோகிக்க வேண்டும்.
36. முன்பு கூறப்பட்டதையோ இப்பொழுது சொல்லப்பட்டதையோ கிரஹித்து மந்திரத்துடன் கூடியதாக பூஜிக்க வேண்டும். யவை, வெண்கடுகு, நெல், நுனி முறியாத அக்ஷதை இவைகளுடன் கூடியதும்.
37. நெல், அரிசி, அக்ஷதைகளுடன் கூடியதுமான ஐந்து அங்கம் அல்லது மூன்று அங்கம் அல்லது கேவலமான அர்க்யத்தையோ
38. பாத்திரத்தை ஹ்ருதய மந்திரத்தால் கற்பித்து மேலும் ஸம்ஹிதா மந்திரத்தை கூறி ஜலத்தை நிரப்பி திரவியங்களை அஸ்த்ரமந்திரத்தால் பிரோக்ஷித்து கவச மந்திரத்தால் அவ குண்டனம் செய்ய வேண்டும்.
39. ஹ்ருதய மந்திரத்தால் அபிமந்த்ரணம் செய்து தேனுமுத்ரையை காண்பிக்க வேண்டும். சந்தனத்தினால் திலக மிட்டுக்கொண்டு தலையில் புஷ்பம் வைத்து கொள்ளவேண்டும்.
40. இது திரவ்ய சுத்தி எனப்படும். மந்திரம் அறிந்தவன் ஓம்காரத்திலிருந்து நம: வரை மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இது மந்த்ர சுத்தி எனப்படும்.
41. ஸாமாந்யார்க்கத்தை எடுத்து கொண்டு வாயிற் படியின் முன்பாக விருஷபத்தை பூஜிக்க வேண்டும். வினாயகரையும் சரஸ்வதியையும் வாசற்படியின் மேல் பூஜித்து நந்தியையும் கங்கையையும்
42. மஹாகாளரையும் யமுனையையும் முறையாக வாயிற்படியின் வலது இடது பக்கத்தில் பூஜிக்க வேண்டும். அவ்வாறே இரண்டு பக்கங்களிலும் விமலன், சுபாஹுவையும் பூஜிக்க வேண்டும்.
43. வலது காலால் உள்ளே நுழைந்து அஸ்த்திர மந்திரத்தால் திரையை பூஜிக்க வேண்டும். வாஸ்து பிரம்மாவை பூஜித்து நிர்மால்ய பூஜையை செய்ய வேண்டும்.
44. லிங்கத்திலிருந்து நிர்மால்யங்களை எடுத்து சண்டிகேசரிடம் ஸமர்பிக்க வேண்டும். அறிவாளியானவன் சிவலிங்கத்தையும் ஆவுடையாரையும் தீர்த்தத்தால் சுத்தி செய்ய வேண்டும்.
45. இது லிங்க சுத்தி எனப்படும். இவ்வாறு பஞ்ச சுத்தி கூறப்பட்டது. திவார பாலகர்களை பூஜித்த பிறகும் கூட பஞ்ச சுத்திகளை செய்யலாம்.
46. விசேஷமான சுத்தி ஆஸநம் ஸம்ஸ்காரம் இவைகளுடன் கூடியதாக செய்யும் பூஜை பரமேஸ்வரனிட மிருந்து எல்லா பலனையும் கொடுக்க கூடியதாகும்.
47. விசேஷமான சுத்திகள் முன்னதாகவே கூறப்பட்டு ஆஸனம் இப்பொழுது கூறப்படுகிறது. கணபதி, குரு ஆதாரசக்தி இவர்களையும் அனந்தன், தர்மன் முதலியோர்களையும்
48. அதர்மன் முதலானவர்களை அதச்சதனம் ஊர்த்வச்சதனம் பத்மம் கர்ணிகை இவைகளையும் வாமை முதலிய ஒன்பது சக்திகளையும் சூர்யமண்டலம் முதலிய நான்கு மண்டலங்களையும் அதிபதிகளையும் உடையதாக ஆஸன பூஜையை ஈசனுக்கு செய்ய வேண்டும்.
49. முடிவில் அந்தந்த மந்திரங்களை ஸ்மரித்து சிவாஸனம் பூஜிக்க வேண்டும். இவ்வாறு பஞ்சாஸனத்துடன் கூடியதான ஏகாஸன பூஜா முறை கூறப்பட்டது.
50. அனந்தன் ஆதார சக்தி இவையுடன் கூடியது அனந்தாஸனமாகும். தர்மன், அதர்மன், அதச்சனம் உர்த்வச்சதனம் இந்த வர்க்கங்களோடு கூடியது.
51. ஸிம்மாஸநமாகும், யோகாஸனம் சுத்த மாயாதத்வம் வரையிலாகும். எட்டு வித்யேச்வர பாவனை வரையில் பத்மாஸனம் ஆகும். சூர்ய மண்டலம் முதலிய மண்டலங்களுடன் கூடிய பத்மம் விமலாஸனமாகும்.
52. ஸ்நானம் ஆவாஹனம் இவைகளுக்கு முன்பாக தனித்தனியே ஐந்து ஆஸனங்களை பூஜித்து ஆஸனம் சங்கல்பித்து அதற்கு மேல் மூர்த்தி கல்பனம் செய்ய வேண்டும்.
53. மூர்த்தியின் மேல் ஈசானம் முதலிய பிரம்ம மந்திரத்தையும் முப்பத்தி எட்டு கலையுடன் கூடிய அஷ்ட த்ரிம்சத்கலாநியாஸம் செய்ய வேண்டும். அக்ஷர கண்ட நியாஸமாவது செய்ய வேண்டும்.
54. முப்பத்தி எட்டு கலையுடன் கூடிய பஞ்ச பிரம்மத்தை நியாஸம் செய்ய வேண்டும். வித்யாதேஹம் பூஜித்து சிவனை ஆவாஹனம் செய்ய வேண்டும்.
55. ஸ்தாபனம், ஸந்நிதானம், ஸந்நிரோதனம், அவகுண்டனம் செய்த பிறகு ஹ்ருதயாதி மந்திரத்தால் ஈசனின் அங்கத்தில் நியாஸம் செய்ய வேண்டும்.
56. அதற்கு மேல் ஒரே சிந்தனையோடு சிவனை ஆவாஹிக்க வேண்டும் தேனு முத்ரையையும் மஹாமுத்ரையையும் காண்பிக்க வேண்டும்.
57. பாத்யம், ஆசமனம், அர்க்யம், அருகம்புல், இவைகளை சமர்ப்பிக்க வேண்டும். பத்து ஸம்ஸ்காரங்கள் கூறப்பட்டன. இந்த உபசாரங்களால் சிவனை பூஜிக்க வேண்டும்.
58. வாசனை திரவ்யங்களை கலந்த சந்தனத்தை விருப்பப்படி அணிவிக்க வேண்டும். பலவிதமான புதியதான புஷ்பங்களை ஸமர்ப்பிக்க வேண்டும்.
59. வெட்டிவேர், சந்தனம், குங்குலியம் முதலிய திரவ்யங்களால் தூபம் கூறப்பட்டு இருக்கிறது. பூஜை செய்யும் ஆசார்யன் கர்த்தாவின் விருப்பத்தை அனுசரித்து நல்லெண்ணெய் நெய் இவைகளால் ஆன தீபங்களை ஏற்ற வேண்டும்.
60. அணையா விளக்குகளை அவ்வாறே ஸமர்ப்பிக்க வேண்டும். மந்த்ர பூர்வமான ஹவிஸும், பருப்பு வகையால் ஆன அன்னத்தை ஆமந்த்ரண ஹவிஸாக சொல்லப்பட்டுள்ளது.
61. ஆபரணங்களை ஸமர்ப்பித்து திரும்பவும் தூபத்தை ஸமர்ப்பிக்க வேண்டும். அவ்விடத்தில் மங்களமான கீதங்களாலும் எல்லா வாத்யங்களாலும்
62. எல்லாவித நடனத்துடன் கூடியதாக வேண்டும் விருஷப கொடியோனான பரமேஸ்வரனை மகிழ்விக்க வேண்டும். தூபம் கொடுத்த பிறகு தீபாராதனை செய்ய வேண்டும்.
63. கட்டை விரல் மோதிர விரலுடன் கூடி வாஸனை யோடு கூடிய விபூதியால் சுற்றுதலை செய்து விபூதியை விட்டு விட்டு பிறகு விபூதியை எடுத்து பரமேஸ்வரனுக்கு திலகமிட வேண்டும்.
64. கண்ணாடியை காண்பித்து, குடை, சாமரம் இவைகளை சமர்ப்பிக்க வேண்டும் தீபங்கள் கொடுத்தபிறகு ராத்ரியில் நீராஜனம் செய்ய வேண்டும்.
65. மஹாஹவிஸ் நிவேதனத்திற்கு பிறகு பலியம் ஹோமத்தையும் செய்ய வேண்டும். ஆமந்த்ரண ஹவிஸ் நிவேதன காலத்தில் பலி அல்லது ஹோமத்தை செய்ய வேண்டும்.
66. பலிஹோமம் இரண்டு கிரியைகளையும் சேர்த்தோ, தனியாகவோ, செய்யலாம். அபிஷேகம் செய்யும் காலத்தில் மந்திரம் பாட்டு வீணை வாசிப்பதோ
67. வேதாத்யயனமோ ஸ்தோத்ர பாடங்களை படிப்பதையுமோ செய்ய வேண்டும். தூபத்தின் முடிவில் மற்ற தமிழ் முதலான பாஷைகளால் பாடுவதும் செய்ய வேண்டும்.
68. அதற்கு பிறகு தமிழ் மொழி முதலியவைகளால் பாடுதல் ஆடுதல் இவைகளுடன் பிழையில்லா ஸம்ஸ்கிருத மொழிகளாலும் பலவித ஸ்வரத்துடன் கூடியதாகவும்
69. பதினெட்டு வித பாஷைகளாலும் பாடலாம். பலவித தேசங்களிலும் உண்டான நாட்யங்களையும் செய்யலாம்.
70. விசேஷமாக உத்ஸவாதி காலங்களில் பற்பல பாடகர்களை கொண்டும் பாடச் செய்தல் வேண்டும். பலவிதமான ஸ்த்ரீகளை கொண்டும் இவ்விதமே நித்யோத்ஸவம் செய்ய வேண்டும்.
71. இளமையாகவும் அழகாகவும் உள்ள பெண்கள் கர்த்தாவின் அபிப்ராயபடி எனக்கு பணிவிடை செய்பவர்களாக கூறப்பட்டு உள்ளார்கள். ருத்ர கன்னிகைகள் என்பது அவர்களின் பெயராகும்.
72. அவர்களுடைய எண்ணிக்கை கிராமத்தில் உள்ள ஜனத்தொகையை அனுசரித்ததாக இருக்க வேண்டும். உத்ஸவத்தினுடைய முடிவில் நித்யோத்ஸவம் முறைப்படி அனுஷ்டிக்க வேண்டும்.
73. வாத்யம் வாசிப்பவர்களை எட்டு என்ற எண்ணிக்கை முறைப்படி ஏற்படுத்தவும் அதன் முடிவில் சுத்த நிருத்தமும் அதன் முடிவில் சுளுகோதமும் செய்ய வேண்டும்.
74. பிறகு விஸர்ஜனம் செய்து லயாங்கபூஜை செய்யவேண்டும். சாதகன் பூஜை பலன் சித்திப்பதற்கு லிங்கத் திலிருந்து பூஜையை ஸம்ஹரித்து
75. திரும்பவும் லிங்கத்தை சுத்தி செய்து சந்தனம் முதலியவைகளால் சிவனை பூஜிக்க வேண்டும். இவ்வாறு தினந்தோறும் செய்யாவிட்டாலும் முடிந்த வரையாவது செய்ய வேண்டும்.
76. உத்தமம், மத்யமம், அதமம் என்று என்னுடைய பூஜை மூன்று விதமாகும். சுத்தமான சைவ சம்பந்த மந்திரங்களால் மட்டும் செய்வது உத்தமமாகும்.
77. சிவாகமம் வேதம் இவைகளில் கூறிய மந்திரங்களால் பூஜிப்பது மத்யமமாகும். வேத மந்திரங்களால் மட்டும் பூஜிப்பது அதமமாகும். நித்யம் நைமித்திகமான பூஜையிலும் இந்த முறை கூறப்பட்டுள்ளது.
78. இந்த மூன்று உலகத்திலும் சைவ மந்திரத்திற்கு சமமான மந்திரம் கிடையாது. அதிலும் பீஜாக்ஷரத்தை உடைய மூலமந்திரமானது சிரேஷ்டம் என கூறப்படுகிறது.
79. பீஜ மந்திரங்களுக்கு உற்பத்தி ஸ்தானமாக உள்ள பிரணவம் முதலான மந்திரமும் லக்ஷம் அக்ஷரத்தை உடைய எல்லா மந்திரங்களும் ருத்ராத்யாயம் முதலியவைகளும் சிறந்ததாகும்.
80. அதற்கான பீஜ மந்திரத்தை அந்தந்த ஸ்தானத்தில் உபயோகம் செய்ய வேண்டும். எனக்கு விருப்பமாக உள்ள பீஜமந்திரத்திற்கு சமமான வேறு மந்திரம் இல்லை.
81. கிழக்கு முகம் தெற்கு முகம் வடக்கு முகமாக இருக்கின்ற ஸகள நிஷ்களமான லிங்கத்திற்கும் ஸகள பிம்பத்திற்கும் இது பொதுவான முறையாகும்.
82. ஹே பண்டிதர்களே மேற்கு திவார பூஜையில் உள்ள விசேஷத்தை கேளும். முன்பே எல்லா பூஜை முறைகளும் கூறப்பட்டு சில விசேஷம் கூறப்படுகிறது.
83. திவாரத்தை எதிர்நோக்கி உள்ள முகமாக ஊர்த்வ முகத்தை கல்பிக்க வேண்டும் லிங்கத்தின் இடப்பக்கத்திலோ வலது பக்கத்திலோ மனோன்மணியை ஸ்தாபிக்க வேண்டும்.
84. ஈசனைப் போன்று மனோன்மணியின் உருவமும் இருக்கும் மனோன்மணிக்கு ஒரே முகமும் இரண்டு கைகளும் உள்ளவளாகவோ பூஜிக்க வேண்டும். ஈசான மூர்த்தியை ஈசான திக்கிலோ தென் மேற்கிலோ பூஜிக்க வேண்டும்.
85. தத்புருஷ மூர்த்தியை கிழக்கு திசையிலோ மேற்கு திசையிலோ பூஜிக்க வேண்டும் அகோர மூர்த்தியை தெற்கிலோ வடக்கிலோ பூஜிக்க வேண்டும்.
86. வாமதேவ மூர்த்தியை வடக்கிலோ தெற்கிலோ பூஜிக்க வேண்டும். மேற்கிலோ கிழக்கிலோ ஸத்யோஜாத மூர்த்தியை ஸ்மரித்து பூஜிக்க வேண்டும்.
87. ஹ்ருதய மந்திரத்தை தென்கிழக்கிலோ வடமேற்கிலோ பூஜிக்க வேண்டும். சிரோ மந்திரத்தை வடகிழக்கிலோ தென் மேற்கிலோ சிகா மந்திரத்தை தென் மேற்கிலோ வடகிழக்கிலோ பூஜிக்க வேண்டும்.
88. கவச மந்திரத்தை வடமேற்கிலோ தென் கிழக்கிலோ பூஜிக்க வேண்டும். கிழக்கு முக பூஜை மேற்கு முக பூஜையிலும் அஸ்த்ரமந்திரத்தை நான்கு திக்கிலும் பூஜிக்க வேண்டும்.
89. வித்யேச்வர ஆவரண பூஜையை கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ சுற்றிலும் பூஜிக்க வேண்டும். கணேச ஆவரண பூஜையை வடக்கிலிருந்தோ தெற்கிலிருந்தோ ஆரம்பித்து பூஜிக்க வேண்டும்.
90. லோகேசாவரணத்தை கிழக்கிலிருந்து இருப்பதாகவும் அஸ்த்ரம் முதலியவைகளையும் அவ்வாறே (கிழக்கிலிருந்து) பூஜிக்க வேண்டும். ஸ்வாமிக்கு முன்பாக வ்ருஷபம், சூலம், த்வஜஸ்தம்ப ஸ்தானம் இவைகளும் கோபுரமும் ஏற்படுத்த வேண்டும்.
91. பரிவார தேவதையின் பூஜை கிழக்கிலிருந்து ஆரம்பித்து பூஜிக்க வேண்டும். மேற்கு திசையிலிருந்து தென் மேற்கு திசை வரையிலுமோ பரிவார தேவதார்ச்சனை செய்யலாம்.
92. சுவாமியின் இடதுபுறம் கோமுகமானது வடக்கு நோக்கியதாக அமைக்க வேண்டும். சண்டிகேஸ்வரரை ஈசான திக்கிலும் வினாயகரை நிருதி திக்கிலும் ஸ்தாபிக்க வேண்டும்.
93. மற்ற எல்லா விதமான ஸ்தானம் பூஜை விஷயங்கள் கிழக்கு திவார அர்ச்சனைக்கு சமமானதாக ஆகும்.
இவ்வாறு உத்தர காமிக மஹாதந்த்ரத்தில் மேற்கு வாயில் அர்ச்சனை முறையாகிய முதல் படலமாகும்.