வியாழன், 24 செப்டம்பர், 2020

நவராத்திரி மூன்றாம் நாள்

நவராத்திரி மூன்றாம் நாள்: எவ்வாறு வழிபட வேண்டும்?

நவராத்திரி மூன்றாம் நாளில் அம்பிகையை வராஹியாக அலங்கரிக்க வேண்டும். பன்றிமுகத்துடன் கூடியவளாக விளங்கும் இவளை வழிபட்டால் பகைவர் பயம் நீங்கும். மதுரை மீனாட்சியம்மன் நாளை தட்சிணாமூர்த்தி கோலத்தில் காட்சியளிக்கிறாள். தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி சிவன் கோயில்களில், கல்லால மரத்தின் கீழ் இருப்பார். இவர் முன்னால் சனகர்,சனந்தனர், சனதானர், சனத்குமாரர் என்னும் நான்கு சீடர்கள் இருப்பர். அவர்களுக்கு உபதேசம் செய்கிறார் தட்சிணாமூர்த்தி.

இவருடைய வலக்கை சின்முத்திரை காட்டியபடி இருக்கும். வலக்கைப் பெருவிரல் பரமாத்மாவாகிய கடவுளையும், ஆள்காட்டிவிரல் ஜீவாத்மாவாகிய உயிரையும் குறிக்கும். மற்ற விரல்களான நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகியவை ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றைக் குறிக்கும். ஆணவம் என்பது அகங்காரம். கன்மம் என்பது உயிர்கள் செய்யும் நல்வினை, தீவினைப்பயன்கள். மாயை என்பது இவ்வுலக வாழ்வு உண்மை என எண்ணும் நிலை. இம்மூன்றையும் விட்டு, ஒருவன் நீங்கினால் மட்டுமே கடவுளோடு ஐக்கியமாக முடியும் என்பதே சின்முத்திரை தத்துவம். அம்பாளைத் தட்சிணாமூர்த்தியாக உபதேசிக்கும் கோலத்தை காண்பவர்களுக்கு அஞ்ஞானம் அகலும். கடவுளின் திருவடியே நிலையானது என்ற மெய்ஞானம் உண்டாகும்.
 


நைவேத்யம்: எலுமிச்சை சாதம்
தூவவேண்டிய மலர்கள்: மல்லிகை, செவ்வந்தி.

பாட வேண்டிய பாடல்:

என்குறை தீர நின்று ஏத்துகின்றேன், இனியான் பிறக்கின்
நின்குறை யேயன்றி யார்குறை காண்! இருநீள் விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியளாய்
தன்குறை தீரஎங் கோன்சடை மேல் வைத்த தாமரையே.

நவராத்திரி இரண்டாம் நாள்

நவராத்திரி இரண்டாம் நாள்: வழிபடும் முறை!

அம்பிகையை நாளை மயில் வாகனம், சேவல் கொடியுடன் அலங்கரிக்க வேண்டும். இவளை "கவுமாரி என்றும், "குமார கண நாதம்பா என்றும் அழைப்பர். பக்தர்களின் பாவங்களைப் போக்கி, தைரியத்தை அருள்பவள் இவள். நாளை மதுரை மீனாட்சி முருகனுக்கு வேல் வழங்குதல் கோலத்தில் காட்சி தருகிறாள். சூரபத்மன் தேவர்களுக்கு பல கொடுமைகளைச் செய்தான். அவர்கள், சிவபெருமானின் உதவியை நாடினர். அவருடைய நெற்றிக்கண்களில் ஆறுதீப் பொறிகள் தோன்றின. அவை சரவணப்பொய்கையில் ஆறுதாமரைப் பூக்களில், ஆறு குழந்தைகளாக மாறியது. கார்த்திகைப் பெண்கள் அவர்களை வளர்த்தனர். பார்வதி அறுவரையும் ஒருவராக்கி "கந்தன் என்று பெயரிட்டாள். ஜகன்மாதாவான பராசக்தி தன் சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி வேல் ஆக்கினாள். "வேல் என்றால் "வெற்றி. அந்த சக்தி வேலாயுதத்தை முருகனுக்கு வழங்கினாள். முருகனுக்குரிய அடையாளமாகத் திகழும் வெற்றிவேலை, அன்னை மீனாட்சி வழங்குவதைக் கண்டால் வாழ்வில் வெற்றி வந்து சேரும்.
 


நைவேத்யம்: தயிர்சாதம்
தூவவேண்டிய மலர்: முல்லை

பாட வேண்டிய பாடல்:

இல்லாமை சொல்லி ஒருவர் தம் பால்சென்று இழிவுபட்டு நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம் கல்லாமை கற்ற கயவர் தம் பால் ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

15:ஸ்ரீ கீஷ்பதி கங்காதரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - 1 {கி. பி. 317 -கி.பி . 329 வரை}

நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி தெரிந்து கொள்வோம்!!

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள் இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

15:ஸ்ரீ கீஷ்பதி கங்காதரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - 1
{கி. பி. 317  -கி.பி . 329 வரை}




ஸ்ரீ கீஷ்பதி கங்காதரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - 1
ஸ்வாமிகள் ஆந்திராவைச் சேர்ந்தவர். இவரது தந்தையின் பெயர் "ஸ்ரீகாஞ்சிபத்ரகிரி". இவருக்கு பெற்றோர் இட்ட நாமதேயம் சுபத்ரர். இவர் ஸ்ரீ அகஸ்திய முனிவரை தரிசித்து அவரிடமே" பஞ்சதசாக்ஷரி" என்ற மந்திர உபதேசத்தை வாங்கிக் கொண்டார். இவர் காமகோடி பீடாதிபதியாகும் போது இவரது வயது பன்னிரண்டு. அப்போதே பெரும் புலமையும், ஞானமும் பெற்றிருந்தார். இவர் கி. பி. 329 ஆம் ஆண்டு சர்வதாரி வருடம், சித்திரை மாதம், சுக்லப்பிரதமையன்று அகஸ்தியமலை அருகில் சித்தியடைந்தார்.

பராசரர்

பராசரர்!

இருமாமுனிவர்கள் வசிஷ்டரும், கோசிகரும். இவர்கள் இருவருக்கிடையில் ஒற்றுமை இருந்ததே இல்லை. பகையுணர்வின் காரணமாக கோசிகன், வசிஷ்டரை பழி வாங்க முயன்று தவவலிமை இழந்து மீண்டும் தபோதனராகப் பலமுறை முயன்று தன் தவ வலிமை பெற்று வந்தார். உதிரன் என்ற அரக்கன் மூலம் தனது தவ வலிமைகளைத் தந்து வசிட்டரின் புதல்வர்களை அழிக்க ஏற்பாடு செய்தார் கோசிகன். வசிட்டரும் அருந்ததியும் இல்லாத சமயம் அவர்களது பிள்ளைகளை மாய்த்து விட்டான். வசிட்டரும், அருந்ததியும் மனமுடைந்து இருந்தனர். வசிட்டரின் மகன் சக்தி என்பவனின் மனைவி திரிசந்தி கருவுற்றிருந்த காரணத்தால் அவளது தாய் வீட்டிற்குச் சென்றிருந்தாள். தகவலறிந்து வந்து தானும் உயிர் துறக்க முற்பட்டாள். வசிட்டரும், அருந்ததியும் தங்களது வாரிசு அவளது வயிற்றில் வளர்வதனால் சாந்தப்படுத்தி கண்ணும் கருத்துமாக திரிசந்தியைப் பாதுகாத்தனர். தக்கதோர் நன்னாளில் திரிசந்தி ஆண் மகவொன்று ஈன்றெடுத்தாள்.

பேரனுக்கு பராசரன் என்று பெயரிட்டு கல்வியறிவூட்டினர். நற்குணம் நற்செயல்களோடு வேத நூல்யாவும் அறிந்தான். அவனது மனத்தில் இருந்த குறையை தாயிடம் கேட்டான். பாட்டி சுமங்கலியாக, தாய் அமங்கலியாக இருப்பதன் காரணம் பற்றி கேள்விகளாகக் கேட்டு துளைத்தெடுக்கும் நிலையில் உண்மையில் நடந்தவற்றை திரிசந்தி உரைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தாத்தா, பாட்டி, தாயின் மனமுவந்த ஆசிகள் பெற்று மனத்தை ஒருநிலைப்படுத்தி சிவபெருமானை நோக்கிக் கடுமையாக தவமேற் கொண்டான். நேரில் காட்சி தரும் நிலையும் ஏற்பட்டது. தன் தந்தையைக் காணவும், அரக்கர்களை அழிக்க ஆற்றலும் வேண்டிக் கோரினான். அவனது பக்தியின் வலிமையால் பராசரரின் தந்தையான சக்தி அங்கு தோன்றுமாறு ஈசன் கருணை புரிந்தான். தந்தையைக் கண்டு வணங்கி ஆசிகள் பெற்றான். அரக்கர்களை அழிப்பது எளிதல்ல என்பதால் வேள்வி செய்யுமாறு ஈசன் பணித்தார். ஈசன் உபதேசித்தப்படி சிறந்ததொரு யாகம் மேற்கொண்டான். யாகத்தில் ஏற்படும் புகை முழுவதும் அரக்கர்கள் இருக்குமிடத்தில் பரவி அரக்கர் கூட்டம் அழிந்து விட்டது.

யாரோ செய்த தவறுக்குப் பலர் அழிவதை உணர்ந்த வசிட்டர் தனது பேரன் பராசரரிடம் பலர் அழியக் காரணமாகி பலரைக் கொன்ற பாபம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. நாம் இறைவனை வேண்டி வழிபடுவதே தக்க செயலாகும் என்று கூறி வேள்வியை நிறுத்துமாறு உபதேசித்தார். அச்சமயம் அங்கு வந்த புலஸ்திய முனிவரும் பராசரரிடம் பிற உயிர்கள் அழியாத நிலையில் தவமேற் கொண்டோர் வாழ்வதே சிறப்பு என விளக்கினார். பாட்டனாரும், புலஸ்தியரும் கூறிய வார்த்தைகட்கு இணங்கி பராசரர் இறைவழிபாட்டில் தன் வாழ்க்கைப் பணி ஏற்றார்.  மூத்தோர் சொல் அமுதமாகும் என்பதை உணர்ந்த காரணத்தால் பராசரர் தனது அறிவை ஞானத்தின் பால் மாற்றி மெய் ஞானம் உணர்ந்திட்ட மஹானாக விளங்கினார் என்றும், அழியாப்புகழுடன் சிறந்த நூல்களை எழுதி வரும் சந்ததிகட்கு வழிகாட்டிய மஹானாகத் திகழ்ந்தார்.


நவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்

நவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்!

நவராத்திரியின் சிறப்புப் பற்றியும், இதை அனுஷ்டிக்க வேண்டிய முறை கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் தேவி மஹாத்மியத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் சும்பன் நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் தெய்வங்களிடம் வரம் பல பெற்று தங்களை அழிக்க யாருமில்லை என்று தலைக்கனம் பிடித்துத் திரிந்தார்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் மக்கள் மிகவும் அல்லலுற்றனர். தவசீலர்களால் வேள்விகளைச் செய்ய முடியவில்லை. அனைவரும் இந்த இரு அரக்கர்களையும் கண்டு அஞ்சி நடுங்கினர். இனியும் இப்படியே போனால் மக்கள் தாங்கமாட்டார்கள் என்று எண்ணிய தேவர்கள் மஹா விஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட்டனர். அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக் கொண்டு என்ன செய்வது என ஆலோசித்தனர். ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது வரம். அதனால் தேவர்களும் மூவர்களும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர்.

மக்களின் துன்பம் கண்டு சகியாத அவளும் மிக அழகான மங்கையின் வடிவம் கொண்டு பூமிக்கு வந்தாள். அவளுடைய அழகுக்கு யாரும் நிகர் இல்லை என விளங்கினாள். பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு சிலை என ஆனார்கள். அதே போல இந்திரனும் திக்குப் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்துவிட்டு சிலையாக நின்றார்கள். அப்படி அவர்கள் நின்றதால்தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது. அன்னை அந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி போர்க்கோலம் பூண்டு சும்ப நிசும்பர்களையும் அவர்களது படைத்தளபதிகளான மது கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள்.

அவள் வெற்றி பெற்ற தினமே விஜயதசமி. ஒன்பது நாட்கள் போர் விடாமல் நடந்தது. அதனாலேயே நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். ஏன் ராத்திரி? ஒன்பது பகலில் கொண்டாடலாம் என்று கேள்வி எழுவது சகஜம். அந்நாட்களில் போருக்கு என்று சில சட்ட திட்டங்கள் உண்டு. மாலை நேரம் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு போர் புரிய மாட்டார்கள். படைகள் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும். அப்போது அன்னையின் படைக்கு ஊக்கம் கொடுக்கவும் மறுநாளைய போரில் உற்சாகமாகப் போரிடவும் வேண்டி அன்னையைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இது ஒன்பது இரவுகள் நடந்தது. அதனாலேயே நாம் நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.


நவராத்திரி முதல் நாள் வழிபாடு

நவராத்திரி முதல் நாள் வழிபாடு

நவராத்திரியின் முதல் நாளில்  அம்பாளுக்கு “மகேஸ்வரி பாலா என்று திருநாமம் சூட்டி வணங்க வேண்டும். மது, கைடபர் ஆகிய அசுரர்களின் அழிவுக்கு காரணமானவள் இவள். சாமுண்டியாக அலங்காரம் செய்ய வேண்டும். மதுரை மீனாட்சி நாளை ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அண்டசராசரத்துக்கும் அவள் தலைவி. இதை அண்டம்+ சரம்+அசரம் என்று பிரிக்க வேண்டும். “அண்டம் என்றால் “உலகம். “சரம் என்றால் “அசைகின்ற பொருட்கள். “அசரம் என்றால் “அசையாத பொருட்கள். ஆம்… அன்னை ராஜ ராஜேஸ்வரி, இந்த உலகிலுள்ள அசைகின்ற, அசையாப் பொருட்களுக்கெல்லாம் அனைத்துக்கும் அதிபதியாக இருந்து அருளாட்சி நடத்துவதைக் குறிக்கும் வகையில் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது.

நைவேத்யம்: சர்க்கரைப் பொங்கல்
தூவ வேண்டிய மலர்கள்: மல்லிகை, வில்வம்

சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

அம்பா சாம்பவி சந்திரமவுலிரமலா அபர்ணா உமா பார்வதீ காளீ ஹமவதீ சிவா த்ரிநயனீ காத்யாயினீ பைரவீ! ஸாவித்ரீ நயௌவனா சுபகரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மீப்ரதா சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி....


திருமாலின் தசாவதாரம்

திருமாலின் தசாவதாரம்!

வைகுண்டத்தை இருப்பிடமாகக் கொண்டிருக்கும் பரம் பொருள் திருமால். பூலோகத்தைக் காப்பதற்காக பல சமயங்களில் பல்வேறு அவதாரங்கள் எடுத்தார். அவருடைய அவதாரங்களைச் சிறப்பாக தசாவதாரம் என்று குறிப்பிடுவர்.

மச்சாவதாரம் : திருமால் எடுத்த முதல் அவதாரம் மச்சாவதாரம். மச்சம் என்றால் மீன் என்று பொருள். இந்த அவதாரத்தில் வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த சோமுகாசுரனைக் கொன்று அழித்தார்.

கூர்மாவதாரம் : தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக்கடைந்த போது மந்திரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் கூர்மாவதாரம். மலையை அசையும் போது தம் களைப்பு தீர்ந்து பெருமாள் நன்கு தூங்கிக்களித்ததாகச் சொல்வர்.

வராக அவதாரம் : பூமியைக் கவர்ந்து சென்ற இரண்யாட்சன் கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். ஆலிலையில் அறிதுயிலில் இருந்த திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து அசுரனைக் கொன்றதோடு அப்பூமியைத் தன் கொம்பில் தாங்கிக் கொண்டு அருள் செய்தார்.

நரசிம்ம அவதாரம் : அசுரன் இரண்யகசிபு நாராயணனே பரம் பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்காக தூணில் திருமால் சிங்கவடிவத்தில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றார்.

வாமன அவதாரம் : பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம். தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றார்.

பரசுராம அவதாரம் : ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் பரசுராமன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருக்கிறார்.

ராமாவதாரம் : ரகுகுலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் திருமால் எடுத்த அவதாரம் ராமன். ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும் அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும் தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும்.

பலராம அவதாரம் : கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றதாகக் கூறுவர்.

கிருஷ்ணாவதாரம் : வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். இந்த அவதாரத்தில் கண்டவர் தம் மனதை கவரும் அழகுடன் கோபியர் கொஞ்சும் ரமணனாக விளங்கினான். கம்சனைக் கொன்றும் பஞ்சபாண்ட வரைக்காத்தும் தர்மத்தை நிலைநாட்டினார்.

கல்கி அவதாரம்: ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் திருமால் ஒரு அவதாரம் எடுப்பார். கல்கி அவதாரமாக கலியுகத்தில் எடுத்து உலகை அழித்து நம்மை முக்தி நிலைக்கு கொண்டு செல்வார் என எதிர் பார்த்து காத்திருப்போம்.


ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 11

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 11
 


திருக்கச்சிநம்பிகள் & இளையாழ்வான்

இளையாழ்வான் தாய் சொன்னது போல் திருக்கச்சி நம்பிகளைத் தரிசிக்கச் சென்றார். திருக்கச்சி நம்பிகள் காஞ்சி பேரருளானனுக்கு ஆலவட்டம் வீசும் பணியைச் செய்து கொண்டிருந்தார். பின்னர், திருக்கச்சி நம்பிகளிடம் கங்கை யாத்திரை சென்றதையும், அங்கு நடந்த சம்பவங்களையும் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அனைத்தையும் சொல்லி தனக்கு தாங்கள் தான் குருவாக இருந்து "காலட்சேபம்" பண்ணியருள வேண்டும் என்று வேண்டினார்.

திருக்கச்சி நம்பிகளோ தன்னுடைய குலத்தினைக் காரணம் காட்டி, "நான் அந்தணர் குலத்தில் பிறக்காத காரணத்தால், நான் உனக்கு காலட்சேபம் பண்ணுவது வர்ணாசிரமத்திற்கு எதிரானது" என்று மறுத்துவிட்டார். காஞ்சி பேரருளானனுக்கு சாலக்கிணற்றிலிருந்து அபிசேகத்திற்கு நீர் எடுத்து வரும் பணியை செய்து வருமாறு கூறினார். இளையாழ்வானும் அவ்வாறே செய்தார்.

ஒரு முறை திருக்கச்சி நம்பிகள் ஆலவட்டம் வீசும் பணி செய்து முடித்தபின், ஆலயத்திலேயே அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். இதைக் கண்ட இளையாழ்வான் திருக்கச்சி நம்பிகளின் கால்களை அமுக்கி, குருவிற்கு செய்யும் பணியாக எண்ணி செய்தார்.

உறங்கி எழுந்த திருக்கச்சி நம்பிகள் இளையாழ்வானிடம், "நீர் என்ன செய்தாலும் நான் உன்னை சிஷ்யானாக ஏற்கப்போவது இல்லை" என்றார். இளையாழ்வானுக்கு எப்போதாவது திருக்கச்சி நம்பிகள் தம்மை சிஷ்யனாக ஏற்றுக் கொள்வார் என்று, நம்பிக்கையுடன் பேரருளானுக்கு நீர் எடுத்துவரும் பணியைச் செய்து வந்தார்.

 மீண்டும் யாதவப்பிரகாசரிடம் காலட்சேபம்

சில தினங்கள் கழித்து, வடநாட்டிற்கு கங்கை யாத்திரை பயணம் மேற்கொண்ட யாதவப் பிரகாசர் தன் சிஷ்யர்களுடன் திருப்புட்குழி வந்தார். இளையாழ்வான் காஞ்சிபுரத்தில் சாலக்கிணற்றிலிருந்து நீர் எடுத்துவரும் கைங்கரியம் செய்வதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தார். 'இளையாழ்வானை கரடி, புலி, விஷ ஜந்துகள் கொன்று விட்டதாகத் தானே நினைத்தோம், இவன் எப்படி இங்கு வந்தான்?' என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

இருந்தாலும், தன் சிஷ்யர்களிடம் சொல்லி இளையாழ்வானை காலட்சேபத்திற்கு அழைத்து வருமாறு சொல்ல, இளையாழ்வானும் காலட்சேபம் நடக்கும் திருப்புட்குழிக்கு வந்து சேர்ந்தார். இன்றும் திருப்புட்குழி விஜயாசனப் பெருமாள் திவ்யதேசத்திற்குச் சென்றால், இளையாழ்வான் யாதவப் பிரகாசரிடம் காலட்சேபம் பண்ண இடத்தினை காணலாம்.

இளையாழ்வான் காலட்சேபம் கேட்க வந்ததும் வழக்கம்போல் காலட்சேபம் நடந்து கொண்டிருந்தது. இதனிடையே இளையாழ்வானின் அன்னை காந்திமதி இறைவனடி சேர்ந்தார். இளையாழ்வானுக்கு மிகுந்த துயரம். தாய் இறந்த பின்பும் காலட்சேபம் சென்று கொண்டிருந்தார்.

திருக்கச்சி நம்பிகளின் குரு ஆளவந்தார் என்ற யமுனாச்சாரியார் காஞ்சிக்கு வருவதை நாளைய பதிவில் அறிந்திடலாம்..

எம்பெருமானார் வாழித்திருநாமங்கள்

எம்பெருமானார் (சித்திரை – திருவாதிரை)

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே!
அருட்கச்சி நம்பியுரை ஆறு பெற்றோன் வாழியே!
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே!
பதின்மர் கலை உட்பொருளைப் பரிந்து கற்றான் வாழியே!
சுத்த மகிழ்மாறன் அடி தொழுது உய்ந்தோன் வாழியே!
தொல் பெரியநம்பி சரண் தோன்றினான் வாழியே!
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே!
சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே!

எண்திசை யெண் இளையாழ்வார் எதிராசன் வாழியே!
எழுபத்து நால்வருக்கும் எண்ணான்கு உரைத்தான் வாழியே!
பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே!
பரகாலன் அடியிணையைப் பரவுமவன் வாழியே!
தண்தமிழ் நூல் நம்மாழ்வார் சரணானான் வாழியே!
தாரணியும் விண்ணுலகும் தானுடையோன் வாழியே!
தெண்திரை சூழ் பூதூர் எம்பெருமானார் வாழியே!
சித்திரையில் செய்ய திருவாதிரையோன் வாழியே!.

சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி
திருவரையிற் சாத்திய செந்துவராடை வாழி
ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி
இலங்கிய முன்னூல் வாழி இணைத் தோள்கள் வாழி
சோராத துய்யசெய்ய முகச்சோதி வாழி
தூமுறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி
இனி திருப்போடு எழில் ஞானமுத்திரை வாழியே!.

அறுசமயச் செடியதனை அடியறுத்தான் வாழியே!
அடர்ந்து வரும் குதிட்டிகளை அறத் துறந்தான் வாழியே!
செறு கலியைச் சிறிதும் அறத் தீர்த்துவிட்டான் வாழியே!
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே!
மறையதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியே!
மாறன் உரை செய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே!
அறமிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே!
அழகாரும் எதிராசர் அடியிணைகள் வாழியே!

(திருநாள்பாட்டு – திருநக்ஷத்ர தினங்களில் சேவிக்கப்படுவது)
சங்கர பாற்கர யாதவ பாட்டப் பிரபாகரர் தங்கள் மதம்
சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சதுமறை வாழ்ந்திடு நாள்
வெங்கலி இங்கினி வீறு நமக்கிலை என்று மிகத் தளர் நாள்
மேதினி நம் சுமை ஆறும் எனத் துயர்விட்டு விளங்கிய நாள்
மங்கையராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்
மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடு நாள்
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும்பூதூர்ச்
சீமான் இளையாழ்வார் வந்தருளிய நாள் திருவாதிரை நாளே.
[
 *உபதேச ரத்தினமாலை*

27,★இன்றுலகீர்! சித்திரையில் ஏய்ந்த திருவாதிரை நாள்*
என்றையினும் இன்றி இதனுக்கு ஏற்றம் என்தான்?*
என்றவர்க்குச் சாற்றுகின்றேன் கேண்மின் எதிராசர்தம் பிறப்பால்*
 நாற்திசையும் கொண்டாடும் நாள்.

28, ★ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும்*
வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர்!*
ஏழ்பாரும் உய்ய எதிராசர் உதித்தருளும்*
சித்திரையில் செய்ய திருவாதிரை.

29, ★எந்தை எதிராசர் இவ்வுலகில் எந்தமக்கா*
வந்துதித்த நாள் என்னும் வாசியினால்*
இந்தத் திருவாதிரை தன்னின் சீர்மைதனை நெஞ்சே!*
ஒருவாமல் எப்பொழுதும் ஓர்.

இன்னும் அனுபவிப்போம்...


உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!💐🙏

புதன், 23 செப்டம்பர், 2020

ஆஞ்சநேயர் வழிபாட்டால் கிடைக்கும் அற்புத பலன்கள்

ஆஞ்சநேயர் வழிபாட்டால் கிடைக்கும் அற்புத பலன்கள் பற்றிய பகிர்வுகள் :
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


ஆஞ்சநேயர் பிறந்தநாள் மார்கழி மாதம் அமாவாசை மூலம் நக்ஷத்திரத்தில் அவதரித்தவர் ஆஞ்சநேயர். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, பல புராணங்களிலும் உண்டு. இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பது தான். எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும் கொடுக்கிறவர். "ராமா" என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் இருப்பது நிச்சயம். இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப் பூச்சும், வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம். பாரத புண்ணிய பூமியில் தொண்டரையே தெய்வமாக போற்றப்படும் மேன்மையை ஆஞ்சநேயர் வரலாற்றில் காணலாம்.

அனுமன் ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும், நினைத்த காரியம் கைகூடும், துன்பம் விலகும், குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை ராமநாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சார்த்தி ஆராதிக்க வேண்டும்.

சனிக்கிழமை தோறும் விரதமிருந்து ஆஞ்சநேயரை வழிபட்டால், சகல யோகங்களும் நமக்கு வந்து சேரும். விரதமிருக்கும் நாட்களில் மிகச் சுத்தமாக இருக்க வேண்டும். அனுமனை முழுமையாகத் தியானித்து ஒருவேளை உணவு மட்டும் உண்டால், உன்னத பலன் கிடைக்கும்.

அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ஆஞ்சநேயருக்கு வடை மாலை அணிவத்து வழிபட்டால் தடைகள் அகலும். வெற்றிலை மாலையை அணிவிப்பவர்கள் தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப, தாராபலம் பெற்ற நாளில் அணிவித்தால் ஏராளமான நற்பலன்களை அடையலாம்.  அவல், பொரி, கடலை, கற்கண்டு, வாழைப்பழம் போன்றவை அனுமனுக்குரிய நைவேத்தியங்களாக அமைகின்றன....

ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்

ராமானுஜர் பகுதி பத்து

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு பத்து

இன்றைய பதிவில் திருக்கச்சி நம்பிகள் பற்றிப் பார்க்கலாம்.

🌻🌺 திருக்கச்சி நம்பிகள்

சென்னை அருகிலுள்ள பூவிருந்தவல்லியில், 1009ம் ஆண்டு வீரராகவர்-கமலாயர் தம்பதிகள் வாழ்ந்தனர். திருமால் பக்தர்களான இவர்களுக்கு நான்காவதாக பிறந்தவர் 'கஜேந்திர தாசர்'. இவர் தான் பிற்காலத்தில் 'திருக்கச்சி நம்பிகள்' என்று பெயர் பெற்றார். கஜேந்திரதாசர் திருமாலின் மீது பக்தி கொண்டவராய் வளர்ந்து வந்தார்.

முதுமையை எய்தியதும் வீரராகவர், தன் பிள்ளைகள் நால்வருக்கும் சொத்தினை சமமாகப் பிரித்துக் கொடுத்தார். வைசியர்கள் என்பதால் செல்வத்தை மேலும் பெருக்கிக் கொண்டு செல்வந்தர்களாக வாழவேண்டும் என்று வீரராகவர் தன் பிள்ளைகளுக்கு அறிவுரை தந்தார். முதல் பிள்ளைகள் மூவரும் செல்வத்தைப் பெருக்கிக் கொண்டு வாழ்ந்தனர்.

கஜேந்திரதாசர் மட்டும் பணத்தைப் பற்றி எண்ணாமல் திருமாலுக்கு கைங்கர்யம் செய்வதிலேயே காலத்தைக் கழித்தார். ஒரு நாள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த திருக்கச்சி நம்பிகளின் கனவில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் வந்தார். "கஜேந்திர தாசரே! நந்தவனம் அமைத்து, பூக்களைப் பறித்து மாலையாக்கி நாளும் புஷ்ப கைங்கர்யம் செய்வாயாக! உனக்கு எம் அருளைப் பூரணமாகத் தந்தோம்!" என்று ஆணையிட்டார்.

பூவிருந்தவல்லியில் தந்தை கொடுத்த நிலத்தில் நந்தவனம் அமைத்தார் திருக்கச்சி நம்பிகள். பூக்களைப் பறித்து மாலையாக்கி, நடந்தே பூவிருந்தவல்லியில் இருந்து காஞ்சிபுரம் சென்று வரதராஜருக்கு மாலை அணிவித்து அழகு பார்த்தார். பிறகு சில காலங்கள் கழித்து ஆலவட்டம் கைங்கரியம் செய்து வந்தார். திருக்கச்சி நம்பிகளின் மேலான தூய பக்தியை கண்டு பெருமாளே நேருக்கு நேர் அவருடன் பேசத் தொடங்கி விட்டார்

 இளையாழ்வானும் திருக்கச்சி நம்பியும் :-

அப்படி பூவிருந்தவல்லியில் இருந்து திருக்கச்சி நம்பிகள் காஞ்சிபுரம் நடந்து செல்கையில் இளையாழ்வான் அவரைப் பார்த்துக் கொண்டிருப்பார். அவரிடம் பேசுவார். திருக்கச்சி நம்பிகள் பிராமணன் அல்லாதவர். அதனால் இளையாழ்வானுடன் ஓரளவுடன் மட்டுமே பழகுவார். இளையாழ்வானுக்கோ திருக்கச்சி நம்பிகள் மீது அதிக ஆர்வம். ஏனெனில், இறைவனுக்கே ஆலவட்டம் கைங்கரியம் செய்கிறார் அல்லவா?! அதுவும் இல்லாமல் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுடன் பேசுவார். அதனால் இளையாழ்வானுக்கு திருக்கச்சி நம்பிகளைக் கண்டாலே மரியாதை தானாக வந்துவிடும். சில காலங்கள் திருக்கச்சி நம்பிகள் காஞ்சிபுரத்திற்கு நடந்து வரும் பொழுது அவரைச் சந்திப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார் இளையாழ்வான்.

 மோட்சம் உண்டா?

சில காலம் கழித்து, பூவிருந்தவல்லிக்கு வராமல், காஞ்சிபுரத்திலேயே தங்கி ஆலவட்டம் என்னும் விசிறி சேவை செய்யவும் செய்தார் திருக்கச்சி நம்பிகள். பெருமாளுடனேயே பேசும் சக்தி மிக்க திருக்கச்சி நம்பியின் பாதத்தூளியை (கால் தூசு) வணங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தார் ஒரு அன்பர். அவர் ஒரு முறை நம்பிகளிடம், "சுவாமி! அடியேனுக்கு மோட்சம் உண்டா?" என்று பெருமாளிடம் கேட்டுச் சொல்லுங்கள் என்றார். பெருமாளும், "அவருக்கு மோட்சம் உறுதி"  என்று பதில் தந்தார். திருக்கச்சி நம்பிகள் பெருமாளிடம், "பெருமாளே! அடியேனுக்கும் மோட்சம் உண்டுதானே?"  என்று கேட்டார். பெருமாளோ அவரிடம், "அதெப்படி முடியும்! குரு பக்தியோடு சேவை செய்து, பாகவத அபிமானம் பெற்றால் தான் வைகுண்டம் போக முடியும்"  என்று பதில் தந்தார். மறுநாளே குரு ஒருவருக்கு சேவை செய்யும் எண்ணத்தில் ஸ்ரீரங்கம் கிளம்பினார் திருக்கச்சி நம்பி. அங்கு குருவாக இருந்த திருக்கோஷ்டியூர் நம்பியிடம் மாடுமேய்க்கும் வேலையாளாக சேர்ந்து விட்டார்.

 திருக்கோஷ்டியூர் நம்பிகள் உணர்தல்

ஒரு நாள் மழை கடுமையாகப் பெய்து கொண்டிருந்தது. மழையில் நனைந்த மாட்டிற்கு தன் ஆடையைப் போர்த்தி விட்டு தான் அதன் கீழ் படுத்துக் கொண்டிருந்தார். பசுக்கொட்டிலில் நடந்த இந்த நிகழ்வைக் கண்ட கோஷ்டியூர் நம்பிக்கு கண்களில் கண்ணீர் வந்து விட்டது. "தம்பி, ஏன் உன் ஆடையை பசுவுக்கு கொடுத்தாய்?" என்று கேட்டார்." மழையில் நனைந்தால் பசுவுக்கு சீதளம் உண்டாகும். அதன் பாலைப் பருகும் உங்களுக்கும் சீதளம் உண்டாகுமே. அதனால் தான் இப்படி செய்தேன்" என்றார்.

திருக்கோஷ்டியூர் நம்பி, இவர் மாடுமேய்ப்பவர் அல்ல, பரம ஞானி என்று உணர்ந்து கொண்டார். பிறகு ஆளவந்தார் என்ற யமுனாச்சாரியாரிடமும் சிஷ்யனாக சேர வேண்டும் என்று நினைத்தார் திருக்கச்சி நம்பிகள். அதுவும் நிறைவேறி விட்டது.

ஆளவந்தருடன் ஸ்ரீரங்கத்தில் தங்கி ஸ்ரீரங்கத்திலும் பெருமாளுக்கு விசிறி வீசும் தொண்டு செய்து வந்தார் திருக்கச்சி நம்பி. ரங்கநாதர் அவரிடம், "எனக்கு இங்கே காவிரிக்கரையோர காற்று சுகமாக வீசுகிறது. திருமலை (திருப்பதி) செல். அங்கு எனக்கு ஆலவட்டம் வீசு" என்று ஆணையிட்டார். எனவே திருக்கச்சி நம்பி, திருமலை சென்று வெங்கடேச பெருமாளுக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்தார். அங்கே பெருமாள், "எனக்கு எதற்கு விசிறி? இங்கே, மலைக்காற்று சுகமாக இருக்கிறது. காஞ்சிபுரம் செல், வரதராஜப் பெருமாளுக்கு இந்த சேவையைச் செய்" என்று அனுப்பி வைத்தார். அன்றிலிருந்து காஞ்சிபுரத்தில் ஆலவட்டம் வீசுவதையே கைங்கர்யமாகக் கொண்டிருந்தார் திருக்கச்சி நம்பிகள்.

அவரிடம் தான் இளையாழ்வானின் அன்னை காந்திமதி, பிரச்சினைகளைச் சொல்லி தீர்வு கேட்க இளையாழ்வானை அனுப்பி வைக்கிறார். இளையாழ்வான் திருக்கச்சி நம்பிகள் சந்திப்பு பற்றி நாளைய பதிவில் அறியலாம்.

மருவாரும் திருமல்லி வாழவந்தோன் வாழியே
மாசி மிருகசீரிடத்தில் வந்துதித்தான் வாழியே
அருளாளருடன் மொழி சொல் அதிசயத்தோன் வாழியே
ஆறுமொழி பூதூரர்க்களித்தபிரான் வாழியே
திருவாலவட்டம் செய்து சேவிப்போன் வாழியே
தேவராச அட்டகத்தைச் செப்புமவன் வாழியே
தெருளாரும் ஆளவந்தார் திருவடியோன் வாழியே
திருக்கச்சி நம்பி இரு திருவடிகள் வாழியே
வரதரின் அன்புத்தொல்லை பல வருடங்களுக்கு முன் காஞ்சி மாநகரம். அனைவரும் நெற்றி நிறைய திருமண் இட்டுக் கொண்டு வாய் நிறைய வரதனின் நாமங்களைப் பாடியபடிவரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சென்று அவரை சேவித்துக் கொண்டிருந்தார்கள் இவர்கள் நடுவே கஜேந்திரதாசர் என்ற திருக்கச்சிநம்பிகளும் ஞான ஜோதியாகபிரகாசித்தபடி இருந்தார் அவரது கைகளில்  அழகான  வேலைப்பாடுடன் கூடிய ஒரு  விசிறி இருந்தது ஆம் அந்த  வைணவப் பெரியவர் காஞ்சி  வரதனுக்கு ஆலவட்டக்கைங்கரியம்(பெருமானுக்கு  விசிறி  விடும்சேவை)செய்யவே கோயிலுக்குச் சென்று  கொண்டிருந்தார் உலகமே வரதனின் திருமுன்பு தன் மனதில் இருக்கும் பாரத்தைக் கொட்டுவார்கள். ஆனால்  அந்த  வரதன் ஆசை தீர பேசி மகிழ்வது இந்த மகானுடன்தான் அந்த அளவு பக்தியையும் புண்ணியத்தையும் உடைய உத்தமர் அவர்.இராமாயணத்தின் சபரியே கலியுகத்தில் தனது எளிய பக்தி நெறியை உலகிற்கு போதிக்க நம்பிகளாக அவதரித்தார் சென்ற ஜென்மத்தில் சபரியின் பக்திக்கு மயங்கி அவள் தந்த எச்சில் பழத்தைஉண்டபகவான், இந்த ஜென்மத்தில்அவரோடு பேசி மகிழ்வதில்வியப்பொன்றும் இல்லையே அன்பு என்ற ஓன்றை அவர் மேல் வைத்தால் தன்னையேதரும் தயாபரன் அல்லவா அந்த மாயவன் அன்பே உருவான நம்பிகள் கோயிலுக்குள் நுழைந்தார் எதேச்சையாக வலது பக்கம் அவரது பார்வை சென்றது அங்கு அவர் என்ன கண்டாரோ தெரியாது தன்னை மறந்து வலது பக்கமாக விழுந்து விழுந்து வணங்கத் தொடங்கினார் நம்பிகள் அவரது கண்களில் அருவியைப்போல நீர் வழிந்தபடீ இருந்தது நாராயணா வரதா என்று அவர் நா உச்சரித்து அருகில் இருந்தவர்கள் இதைக் கண்டு மலைத்துப் போனார்கள நம்பிகளிடம் சென்று சுவாமி இப்படி நீங்கள் ஆனந்தப் பரவசநிலையை அடையக் காரணம் என்ன எதைக் கண்டு இப்படி திக்குமுக்காடிப்போய் இருக்கிறீர்கள்  என்று கேட்டார்கள் அவர் தனது விரலை நீட்டி எதையோ காண்பித்தார் அங்கிருந்தவர்களுக்கு எதுவும் தெரியவில்லை புரியவுமில்லை அங்கே ஒன்றுமில்லையே சுவாமி உங்களுக்குத் தெரியவில்லையா அங்கு சங்கு சக்கரங்களைக் கையில் எந்திக் கொண்டு திருமகளாம் பெருந்தேவி தாயாரின் வலது கையைப் பற்றிக்கொண்டு தேவர்களும் முனிவர்களும் தொழ நமது தேவாதி தேவன் வரதன் உல்லாசமாக வலம் வந்து கொணடீருக்கிறார் பாருங்கள் பாருங்கள் அந்த திசையை வணங்கியபடியே சொன்னார் நம்பிகள் சுவாமி எங்களால் வரதனைக்காணமுடியவில்லை ஆனால் வரதனைக்கண்டு பேசி மகிழும் தங்களைக் கண்டதையே பெரும் பாக்கியமாகக் கருதுகிறோம் என்றபடிஅனைவரும் அவர்பாதத்தில் விழுந்தார்கள் புரியதா கண்ணா இந்த திருக்கச்சிநம்பிகள் எம்பெருமான் வரதருடன் பேசி அவரைப் பார்த்துப் பழகிமகிழ்தவர் கடவுளோட பேசினவங்க இருக்காங்களானு தொடர்ந்து காலம்காலமா மக்கள் கேட்டுட்டுஇருக்காங்க இல்லையா ஒவ்வொரு காலத்துலயும் அதுக்கான வாழும் உதாரணங்களை அந்தப் பெருமாளே மக்களுக்கு காட்டிட்டு இருக்கார் இல்லையா மின்டும் தரிசிக்கலாம்
இன்னும் அனுபவிப்போம்...

திருக்கச்சி நம்பிகள் தனக்கு ஆச்சாரியாராக இசையாததால், அவரிடம் சில கேள்விகள் கொடுத்து அவற்றுக்கு பேரருளாளனிடமே பதில்கள் பெற்றுத் தருமாறு வேண்டி, அவர் மூலமாக பேரருளாளன் பணித்ததாக ஆறு வார்த்தைகள் பெற்றார் அவையாவன,

1. பரத்துவம் நாமே - நாமே சகலத்துக்கும் உயர்ந்த சத்தியமான மூலப்பொருள்.

2.. பேதமே தர்சனம். - ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் அவசியமான பேதம் உண்டு என்பதே உண்மையான தத்துவம்.

3. உபாயமும் பிரபத்தியே. - என்னை அடைய ஒரே நேரான வழி நம்மிடம் அடைக்கலம்.

4. அந்திஸ்மிருதியம் வேண்டா - இப்படி வாழ்பவன் உடல் உயிரை விட்டு பிரியும் காலத்தில் நம்மை துதி செய்ய அவசியம் இல்லை.

5. சரீர அவஸானத்திலே மோக்ஷம் - உடலிலிருந்து உயிர் பிரிந்ததும் அவன் என்னிடம் வந்து சேர்வான்.

6.பெரிய நம்பி திருவடிகளிலே ஆஸ்ரயி - பெரிய நம்பிகளை ஆச்சாரியராகக் கொள்

என்பவை இவ்வார்த்தைகள். பின் திருவரஙகம் பெரிய கோவிலில் உள்ள ஆளவந்தாரின் சீடர்களின் விருப்பத்தற்கிணங்க மதத்தலைவராக திருவரங்கம் செல்லும் வழியில் மதுராந்தகத்தில் ஏரி காத்த இராமர் திருக்கோவிலில் பெரிய நம்பியைக் சந்தித்தார். அந்த திருக்கோவிலிலேயே மகிழ மரத்தடியில் பெரிய நம்பி இராமானுஜருக்கு திருவிலச்சினை செய்து தன்னைவிட ஆளவந்தாரை ஆச்சாரியனாக கொண்டிருக்க வேண்டினார். பின் பெரிய நம்பியிடம் காஞ்சியில் ஆழ்வார்களின் அருளிச்செயல்களையும், ஆளவந்தாரின் கருத்துகளையும் கேட்டறிந்து வந்தார். தனது மனைவியின் குணத்தினால் பெரிதும் துன்பமுற்ற இராமானுஜர், இல்லற வாழ்க்கையை விடுத்து திரிதண்ட சந்நியாசியாக தீட்சை பெற்றார். கூரத்தாழ்வானும், முதலியாண்டானும் இவரது பிரதம சீடர்களானார்கள். துறவிகளில் சிறந்தவராக விளங்கியதால் இவர் யதிராஜர் என்னும் திருநாமம் பெற்றார்.

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!🙏💐


ராமானுஜர் பகுதி ஒன்பது

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு ஒன்பது




கங்கை யாத்திரை சென்றபோது கோவிந்தன் சொன்னதைக்கேட்டு தப்பித்துச் செல்கிறார்  இளையாழ்வான்.

🐚🐚 வேடுவன் வேடுவச்சி

இளையாழ்வான் வழி தெரியாமல், கால் சென்ற பாதையில் ஸ்ரீமந்நாராயணனை மனதில் தியானித்துக் கொண்டு செல்கிறார். இரவுப் பொழுதாகிவிட்டது. அப்போது ஒரு வேடுவ தம்பதியரைக் காண்கிறார். அவர்கள் பயங்கரமான தோற்றம் உடையவர்களாக இருந்தார்கள். இருந்தாலும் கண்களில் கருணை வெள்ளம் ததும்பி இருந்தது.

அவர்கள் யார் தெரியுமா?

இளையாழ்வான் யாருடைய மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே, யாரை நினைத்துக்கொண்டே சென்றாரோ அவர்கள் தான். உலகத்துக்கே படியளக்கும் காஞ்சி வரதராஜப் பெருமாளும், பெருந்தேவி தாயாரும் தான். இளையாழ்வான் வழி தெரியாமல் ஸ்ரீமந்நாராயணனை அழைத்துக் கொண்டே இருந்தார் அல்லவா?! தன்னை நம்பி தன்னுடைய திருநாமத்தை அழைத்த இளையாழ்வானுக்கு அருள் செய்ய வேண்டும் என்று நினைத்தார் பெருமாள். பெருந்தேவி தாயாருடன் தானும் அருள் செய்ய வந்துவிட்டார்.

"அவர்களிடம் சென்று காஞ்சிபுரம் போக வேண்டும். வழி தெரிந்தால் சொல்லுங்கள்" என்று கேட்கிறார். வேடுவனும் வேடுவச்சியும் "நாங்கள் அங்கே தான் செல்கிறோம். நீங்கள் எங்களுடன் சேர்ந்து வாருங்கள்" என்று சொல்ல, இளையாழ்வானும் அவர்களோடு நடந்து சென்றார். இருட்டு அதிகமாக இருந்ததால், பாதை தெரியவில்லை. இதனால் அனைவரும் இரவு தங்கிவிட்டு காலை எழுந்ததும் புறப்படலாம் என்று அங்கேயே படுத்து விட்டார்கள்.

அப்பொழுது வேடுவச்சி குடிக்க தண்ணீர் வேண்டும் என்று தன் கணவனிடம் கேட்கிறாள். உலக உயிர்களை எல்லாம் காக்கும் ஜகந்மாதா, தன் கணவனிடம் குடிக்க நீர் கேட்கிறாள். காஞ்சி வரதராஜரான வேடுவனோ தன் மனைவியிடம் "இங்கே ஒரு கிணறு இருக்கிறது. காலை எழுந்ததும் உனக்கு நீர் கொண்டுவந்து தருகிறேன்" என்று சொன்னார். இதைக்கேட்ட இளையாழ்வானோ, 'காலை விடிந்ததும் முதலில் இந்த பெண்ணிற்குக் குடிக்க நீர் கொண்டு வந்து கொடுக்க வேண்டும்' என்று மனதில் எண்ணிக் கொண்டு உறங்கிவிட்டார்.

காலை விடிந்ததும் இளையாழ்வான் அருகில் இருக்கும் கிணற்றில் நீர் கொண்டு வந்து, இரவு உறங்கிய இடத்தினைப் பார்த்தார். வேடுவன் வேடுவச்சியைக் காணவில்லை. அருகில் இருப்பவர்களிடம், "இது எந்த ஊர்?" என்று கேட்க, அவர்களோ "நீர் பிறந்த ஊரையே நீர் மறந்துவிட்டீரா? அதோபாரும், புண்ணிய கோடி விமானம் தெரிகிறது. அருகே கிணறு ஒன்று இருக்கிறது. இது சாலக்கிணறு. இங்கே காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலில் வரதராஜப் பெருமாள் அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார். நீர் அவரை உள்ளே சென்று சேவித்துவிட்டு வாரும்" என்றார்கள்.

இதைக்கேட்ட இளையாழ்வானுக்கு ஒரே திகைப்பு. வந்தவர்கள் வரதராஜரும், பெருந்தேவி தாயாரும் என்று உணர்ந்து கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். தரிசனம் செய்த பின் தன் அன்னை காந்திமதியிடம் சென்று யாத்திரையில் நடந்தவற்றையெல்லாம் கூறினார். காந்திமதியோ திருக்கச்சி நம்பிகளிடம் இதைப்பற்றி சொல்லி, அவர் சொல்லும் வழியைப் பின்பற்றுமாறு உரைத்தார். இந்த திருக்கச்சி நம்பிகள் யார் என்பதை நாளைய பதிவில் அறியலாம்
இன்னும் அனுபவிப்போம்...
🌷எதிராசர் வடிவழகு 🌷

பற்பமெனத் திகழ் பைங்கழல்
  உந்தன் பல்லவமே விரலும்

பாவனமாகிய பைந்துவராட
  பதிந்த மருங்கழகும்

முப்புரி நூலொடு முன்கையில்
  ஏந்திய முக்கோல் தன்னழகும்

முன்னவர் தந்திடு மொழிகள்
   நிறைந்திடு முறுவல் நிலாவழகும்

எப்போதும் கற்பகமே விழி கருணை
   பொருந்திடு கமலக் கண்ணழகும்

காரிசுதன் கழல் சூடிய முடியும்
   கனநற்சிகை முடியும்

எப்பொழுதும் எதிராசர் வடிவழகு
   என் இதயத்துளதால்

இல்லை எனக்கெதிர்
இல்லை எனக்கெதிர்
இல்லை எனக்கெதிரே!

🌸 ஸ்ரீ எம்பார் இயற்றிய எம்பெருமானார் வடிவழகு

சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி.

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!