பொய்கை ஆழ்வார் 4203 BCE
பன்னிரெண்டு ஆழ்வார்களில் முதல் ஆழ்வார்.
முதல் திருவந்தாதி இயற்றியவர்.
ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் திவ்வியப்பிரபந்தம்
என்று அழைக்கப்படுகின்றன.
திவ்வியப்பிரபந்தத்திற்கு
திராவிட வேதம் என்றொரு பெயரும் உண்டு.
இறைவனின் பெருமையை நயமுற அழகாக - செவிக்கு இனிமையாகப் பாடுவதால் திவ்வியப்பிரபந்தம் எனச் சிறப்புப் பெறுகின்றது.
திருமாலிடம் தீவிர பக்தி கொண்டு தன்னையை அர்ப்பணித்தவர்கள் பன்னிரு ஆழ்வார்கள்.
அவர்களில் காலத்தால் முந்தியவர்கள் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார்.
இவர்கள் மூன்று பேரும் ‘முதலாழ்வார்கள்’ என்றும், ‘மூவர் முதலிகள்’ என்றும் போற்றப்படுகின்றனர்.
இந்த மூவரில் முதல்வர் பொய்கை ஆழ்வார்.
காஞ்சி மாநகரில் திருவெஃகா எனப்படும் யதோத்காரி திருக்கோவில் இப்போது சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோவில் அருகே உள்ள பொய்கையில் பொன்வண்ணமாக மின்னிய ஒரு தாமரை மலரில்,
சித்தார்த்தி ஆண்டு, ஐப்பசித் திங்கள் அஷ்டமித் திதி, திருவோண நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை அன்று தெய்வீக ஒளியுடன் ஒரு குழந்தை அவதரித்தது.
பொய்கையில் பொற்றாமரையில் அவதரித்ததால் இவருக்குப் பொய்கையாழ்வார் என்று பெயர் வந்தது.
திருமாலின் ஐம்படைகளின் ஒன்றாக விளங்கும் பாஞ்ச சன்யம் என்ற சங்கின் அம்சமாக பிறந்தவரே பொய்கை ஆழ்வார்.
திருமாலின் கருணையால் அனைத்தையும் கற்றார்.
இளமையிலேயே அனைத்து மறைகளையும் கற்று உணர்ந்து யோகியாய்த் திரிந்து, மகாவிஷ்ணுவிடம் மாறாத அன்பு
கொண்டு தன்னையே பெருமாளின் தொண்டிற்கு அர்ப்பணித்து கொண்டார்.
ஹரியும் சிவனும் ஒன்றுதான். ஹரியை வணங்குபவர்கள் சிவனை வெறுக்க வேண்டாம்.
சிவனை வழிபடுபவர்கள் ஹரியை பழிக்க வேண்டாம்.
இதை மக்களிடம் கூறிக்கொண்டதோடு ஹரியிடம் மாறாபக்தி கொண்டும் அவருக்கு சேவை செய்தும் வாழ்ந்து வந்தார்.
இறைவனை அடைந்து ஒன்றாக கலப்பது தான் ஆத்மாவின் தன்மை என்றும், இறைவனை பிரிந்திருப்பது தான் துன்பங்களுக்கெல்லாம் மூல காரணம் என்றும் கூறினார்.
இவர் பேயாழ்வார் மற்றும் பூதத்தாழ்வாருடன் பல திவ்ய தேசங்களுக்கு சென்று பரந்தாமனைப் பாடி பணிந்தார். பெருமாளின் 108 திருப்பதிகளில் பொய்கையாழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் , பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 6 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.
திருக்கோவலூரில்,
ஒரு வீட்டின் இடைகழியில்
மழை பெய்யும் ஒரு நாள் இரவில்
முதலாழ்வார்கள் மூவரையும் ஒருங்கிணைத்தான் இறைவன்.
தனித்தனியாக தலயாத்திரை மேற்கொண்ட மூன்று ஆழ்வார்களும் திருக்கோவலூரில் ஒரே சமயத்தில் நுழைய பெருமழை உண்டானது. மழைக்கு ஒதுங்கும் பொருட்டு ஒரு குடிசையை நெருங்க அவ்விடம் ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம் எனும் அளவில் இருக்க இம்மூவரும் அங்கு சிறிது நின்றுகொண்டிருக்க நான்காமவராக இருந்து இருளில் நெருக்கத்தை உண்டுபண்ணினான் இறைவன்.
நெருக்கத்தின் காரணத்தை அறிய வேறு விளக்கின்மையால்,
அவர்கள் பாசுரங்கள் மூலம் விளக்கேற்றினர்.
பொய்கையார் பூமியாகிற தகழியில்(அகல்) கடல்நீரை நெய்யாகக் கொண்டு சூரியனை விளக்காக ஏற்றினார்.
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சுட்டினேன் சொல் மாலை
இடராழி நிங்குகவே என்று முதல் திருவந்தாதி -1 ஆக பாடினார்.
கடலினால் சூழ்ந்த இவ்வுலகை அகழியாக கொண்டு, கடலை நெய்யாகக் கொண்டு,கதிரவனை திரியாகக் கொண்டு விளக்கை ஏற்றி திருமாலின் திருவடிக்கு பாசுரங்களை மாலையாகச் சூட்டினேன்.
பூதத்தார் அன்பாகிய தகழியில்(அகல்) ஆர்வத்தை நெய்யாகக் கொண்டு சிந்தையாகிய திரியில் ஞானவிளக்கை ஏற்றினார்.
அன்பே தகளிய ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானச் தமிழ் புரிந்த நான் இரண்டாம் திருவந்தாதி -1 ஆக பாடினார்.
அன்பை அகழியாகக் கொண்டு, ஆர்வத்தை நெய்யாகக் கொண்டு, அறிவை திரியாகக் கொண்டு திருமாலுக்கு விளக்கேற்றினேன்
இவ்விரண்டின் ஒளியால் இருள் அகல, நெருக்கத்திற்குக் காரணமான இறைப்பொருளைக் கண்டார் பேயாழ்வார்.
திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கனணி நிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று மூன்றாம் திருவந்தத்தி -1
என்றுப் பாடினார் பேயாழ்வார்.
பின் மூவரும் அப்பொருளின் சொரூபத்தை அறிந்து அனுபவித்து ஆனந்தம் எய்தினர்.
பொய்கையாரின் செயல் புற இருள் நீக்கியது, பூதத்தார் செயல் அக இருளை நீக்கியது.
அக இருள், புற இருள் இவ்விரண்டும் நீங்கினால் பரமனைக் காணலாம்.
ஆக முதல் இரண்டு ஆழ்வார்கள் செயல்கள் அக, புற இருள் நீக்க பேயாழ்வார் இறைவனின் வடிவழகை அன்பெனும் வெளிச்சத்தில் கண்டார் .
நெருக்கத்தின் காரணம், திருமாலே என்று உணர்தனர்.
நாலாயிர திவ்ய பந்தத்தில் நூறு பாடல்களை பாடியுள்ளார் பொய்கையாழ்வார்.