சனி, 24 ஆகஸ்ட், 2019

மயிலாடுதுறை- திருவாரூர் சாலையில் உள்ள எலந்தங்குடிக்கு கிழக்கில் உள்ளது அறிவாளூர்.
முழுவதும் சிதிலமடைந்துவிட்டது,

இறைவன் சுயம்புநாதர் கருவறை மட்டும் மீதம் உள்ளது, இருந்த கதவின் அருகிலும் யாரோ சூடம் ஏற்றி கதவினை அக்னிக்கு இறையாக்கிவிட்டனர்

 கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்,
ஆலயம் தொழுவது சாலவும் நன்று,  இப்படி பழமொழிகள் பலவிருக்க கோயில்கள் சிதிலமடைவது ஏன்? பல நூறு ஆண்டுகளாக இருந்த கோயில்கள் நவீன வசதிகள் நிறைந்த இக்காலத்தில் பராமரிக்க இயலாமல் விடுவது ஏன்? சிந்திப்பீர்களா?

காரணங்கள் பல உண்டு அவற்றில் சில காரணங்கள் பட்டியலில் முதன்மையானது

கிராம சிவாலயங்கள் முன்பு உயர் வகுப்பினரால் வழிபடபெற்று, பராமரிக்கப்பெற்றன, அவர்கள் தற்போது கிராமத்தில் இருந்து பல்வேறு காரணங்களால் நகரத்திற்கு இடம் பெயர்ந்து விட்டனர். 

 அடித்தட்டு மக்கள் தமக்கென்று தனி தெய்வங்களை கொண்டுள்ளனர் அவர்கள் சிவாலய வழிபாடோ, அல்லது அதன் முறைகளை அறிந்திலர். அதனால் அவர்கள் இகோயிலை விரும்பி வருவதில்லை.

 நகரத்து மக்கள் எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று பரிகார கோயில்களில் மட்டும் வரிசை கட்டி நிற்கின்றனர். பணக்கார கோயில்களுக்கு மட்டும் திரும்ப திரும்ப செல்வது , வேண்டுதல் என்ற பெயரில் அங்குள்ள உண்டியல் நிறைப்பது , இப்படி பலர்.

சிலர் கட்டுக்கடங்காத கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு கசக்கி பிழியப்பட்டு இறைவனை ஒரு செகண்டு நேரம் மட்டும் பார்த்து வெளிவரும் அவலத்தினை காண்கிறோம்.

உருவம், அருவுருவம், உருவமில்லா நிலை இப்படி பல படிகள் கடந்து செல்ல வேண்டிய நாம் இன்னும்  பக்தி என்ற பெயரில் கூண்டுக்குள்ளும், இரும்பு குழாய் பாதைகளிலும் நாட்களை கடத்திக்கொண்டு இருக்கிறோம்
அதனால் ஊடகங்களும், பத்திரிக்கைகளும் , ஜோதிடர்களும், போலி சாமியார்களும், யாகம், அபிஷேகம், பரிகாரம் என பக்தியை வியாபாரமாக்கிவிட்டனர்.

அன்பர்களே ஓடும் நீங்கள் சற்றே நில்லுங்கள் யோசியுங்கள் கிராம கோயில், ,  நகரகோயில்,பெரியகோயில், சிறிய கோயில் என்று பாராமல்

சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப் பார்இங்கு யாவரும் இல்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரை யானே.
 எனும் திருமூலர் வரிகளை மனதில் கொண்டு  அனைத்து சிவாலயங்களிலும் உங்கள் பொருளை செலவிடுங்கள்

உங்கள் பெயர் எழுதப்பட்ட கடைசி அரிசி உங்களை தேடிவரும். உங்களுக்கு கொடுக்கப்படவேண்டியதும், கொடுக்கப்படாமல் இருக்கப்படவேண்டியதும் உங்களுக்காக காத்திருக்கிறது.
நாம் பிறந்த போது யார் வந்து பார்த்தார்கள் என்று நமக்கு  தெரியாது?

நாம் இறந்த பிறகு யார் வந்து பார்க்க போகிறார்கள் என்று நமக்கு தெரியாது?

இருக்கும் வரை பார்க்கும் மனிதர்களிடம் அன்பாய் இருப்போம்.

மனிதநேயத்துடன் பழகுவோம்
மனிதனாய் இருந்து வாழ்வோம்.

தவம் என்பது என்ன?

இறைவனிடம் உறுதியான, அசைக்க முடியாத நம்பிக்கையும் பக்தியும் அடைய வேண்டுமென்றால் நீ கடும் தவம் செய்ய வேண்டும். தவம் என்பது குறிக்கோளின்றி அங்குமிங்கும் அலைவதல்ல; நிலைதடுமாறாது. நாள் தவறாது செய்யப்படும் ஜபம், தியானம் மற்றும் புலனடக்கம் ஆகியவையே தவமாகும் -சுவாமி அபேதானந்தர்.
---------------------------------------
இன்பமாய் வாழ

அநந்தாநந்த ஸுகத:ஸுமங்கள ஸுமங்கள:

இச்சாஸக்திர் ஜ்ஞாநஸக்தி க்ரியாஸக்தி நிஷேவித:

ஸுபகா ஸம்ஸ்ரிதபத:லலிதா லிதாஸ்ரய:

காமிநீ காமந:காம:மாலிநீ கேளிலாலித:

இதை காலையில் 10 முறை ஜபம் செய்தால் துக்கம் நீங்கி சந்தோஷம் உண்டாகும்.
---------------------------------------
கேது - சனி : புலாச புஷ்பஸங்காசம்
தாரகாக்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்
தம் கேதும் ப்ரணமாம்யஹம்
---------------------------------------
இதயத்து உணர்வு

இறைவன் இதயத்து உணர்வையே ஏற்றுக் கொள்கிறார். ஒருவன் எதைக் கருத்திற் கொண்டு சாதனை செய்கிறானோ, அதுவே அவனுக்கு அமைகிறது. இதயத்து உணர்வு எவ்வாறோ, அவ்வாறே பயனும் கிடைக்கும். -பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்
பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை
---------------------------------------
1. வாழ்க்கை ஒரு சவால்
அதனை சந்தியுங்கள்.

2. வாழ்க்கை ஒரு பரிசு
அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.

3. வாழ்க்கை ஒரு சாகசப் பயணம்
அதனை மேற்கொள்ளுங்கள்.

4. வாழ்க்கை ஒரு சோகம்
அதனை கடந்து வாருங்கள்.

5. வாழ்க்கை ஒரு துயரம்
அதனை தாங்கிக் கொள்ளுங்கள்.

6. வாழ்க்கை ஒரு கடமை
அதனை நிறைவேற்றுகள்.

7. வாழ்க்கை ஒரு விளையாட்டு
அதனை விளையாடுங்கள்.

8. வாழ்க்கை ஒரு வினோதம்
அதனை கண்டறியுங்கள்.

9. வாழ்க்கை ஒரு பாடல்
அதனை பாடுங்கள்.

10. வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம்
அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

11. வாழ்க்கை ஒரு பயணம்
அதனை புகழுடன் முடித்துவிடுங்கள்.

12. வாழ்க்கை ஒரு உறுதிமொழி
அதனை நிறைவேற்றுங்கள்.

13. வாழ்க்கை ஒரு காதல்
அதனை அனுபவியுங்கள்.

14. வாழ்க்கை ஒரு அழகு
அதனை ஆராதியுங்கள்.

15. வாழ்க்கை ஒரு உணர்வு
அதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

16. வாழ்க்கை ஒரு போராட்டம்
அதனை எதிர்கொள்ளுங்கள்.

17. வாழ்க்கை ஒரு குழப்பம்
அதனை விடைகாணுங்கள்.

18. வாழ்க்கை ஒரு இலக்கு
அதனை எட்டிப் பிடியுங்கள்.
---------------------------------------
சிவபெருமான்

கருத்திற்கு எட்டாத,
வண்ணமில்லாத,
குணமில்லாத,
அறியமுடியாப் பொருளாய்,
எங்கும் நீக்கமற நிறைந்துள்ளவராய்,
அழியா சோதியாய் அமைந்துள்ளவர் சிவபெருமான்.

அவர் அனைத்து ஆன்மாக்களிலும் ஆணவம் மட்டும் நிலையாக இருப்பதை அறிந்தார். அதனை அகற்ற அருள் செய்தார். அதனால் ஞானத்தை கொடுத்து அதன் மூலமாக ஆணவம், கன்மம், மாயையை அகற்றி இறுதியில் தூய்மையான தன்னை வந்து அடையும்படி செய்தார். எனவே ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், மறைத்தல், அருளல் என ஐந்து வகையானத் தொழில்களைச் செய்து வந்தார்.ஊழிக்காலத்தில் உலகிலுள்ள அனைத்து உயிரிகளும் தன்னிடம் ஒடுங்க, தன் தேவியும் அவரிடம் ஒடுங்கி விடுவார். இவர் மட்டுமே அழியாமல் இருப்பவர் என ஆகமங்களும் வேதங்களும் கூறுகின்றன.

இவர் எத்தனை ஊழிக்காலங்கள் வந்தாலும் அனைத்தும்
இவரிடமே ஆரம்பிக்கின்றன,
இவரிடமே முடிகின்றன.
இவர் தனியானவர் முதன்மையானவர்.
இவரிமிருந்தே அனைத்து விதமான சக்திகளும் பிறக்கின்றன.
இவரிடமே தஞ்சமடைகின்றன.
இவரை வணங்கியே அனைத்து தேவர், மூர்த்திகளும் அனைத்து வகையான செல்வங்களையும் பெற்றனர்.
இவர் உலகின் முதன்மையானவராவர்.
---------------------------------------
உன் ஆன்மாவே உன் ஆசிரியர்

நீயே உன்னுள்ளிருப்பதை வெளிவரச் செய்ய வேண்டும். ஒருவராலும் உனக்குக் கற்பிக்க முடியாது. யாராலும் உன்னை ஆன்மீகவாதியாக்க முடியாது. உன் ஆன்மாவைத் தவிர வேறெந்த ஆசிரியரும் இல்லை -சுவாமி விவேகானந்தர்
---------------------------------------
ஓம் சிவாய நம

சி-சிவன்
வா-அருள்
ய-உயிர்
நம-மும்மலங்கள் [மாயை,ஆணவம்,கர்வம்]

ஸ்தூலபஞ்சாட்சரம்-------- நமசிவாய
சூட்சுமபஞ்சாட்சரம்---------சிவயநம
அதி சூட்சுமபஞ்சாட்சரம்--சிவய சிவ
காரண பஞ்சாட்சரம்-------- சிவ சிவ

இம்மந்திரத்தை சொல்லி இறைவனை வேண்டும்போது, கர்வம், ஆணவம் மற்றும் உலக மாயையிலிருந்து விடுபடலாம்.
---------------------------------------
லிங்கம் விளக்கம்: நம்முடைய புராணங்களும், வேதங்களும் பரசிவத்தை கீழ்கண்டவாறு விவரிக்கின்றது. .

மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களும் இல்லாதது. மனம்,சொல்,செயல் இவற்றிற்க்கு மேல் வேறொரு <உயர்வான நிலை இல்லை எனுமளவிற்கு உயர்ந்தது. உருவமற்றது. ஆகவே இன்னதென நம்மால் சுட்டிக்காட்ட இயலாதது. அதுவே அனைத்துமானது, பற்பல குணாதிசயங்களைக் கொண்டது. நிறமில்லாதது, அழிவென்பதே இல்
லாதது, ஈரேழு உலகங்களும் தோன்ற, அழிய காரணமாயிருப்பது, இதுதான் எனக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நிலையை நமக்கு கொடுக்காதது. இத்தகைய நம் அனைவரையும் இயக்க வைக்கும் சக்தியை நாம் பரமசிவம் என்றால் எல்லோரும் அறிந்தது என பொருள் படும்.

மேற்சொன்னவாறு ஐம்புலனில்லாத எட்டாத நிலையைக் கொண்ட, இதற்கு மேல் வேறொரு உயர்ந்த நிலையினை சுட்டிக்காட்ட முடியாத, உலகம் தோன்ற, அழிய காரணமான இதனை உருவம் உள்ளது, அதாவது சகளம் என்றும், உருவமற்றது அதாவது நிட்களம் என்றும் பிரிக்கலாம். மேற்ச்சொன்ன சகலநிட்கள நிலையையே நாம் லிங்கம் என்போம். லிங்கம் சிவரூபம் அதாவது மேலேயுள்ளது. அது பொருந்தியிருக்கும் பீடம் சக்தி வடிவமாகும். பொதுவாக லிங்கத்தை ஞான சக்தியின் மறுவடிவமாக கொள்ளலாம். இத்தகைய ஞான சக்தியின் மறுவடிவமான லிங்க உருவமே சிவபெருமானின் உடலாகும். லிங்கம் மூவகைப்படும் . அவ்வியக்தம், வியக்தம், வியக்தாவியக்கம். இதில் கை, முகம் வெளிப்படாமல் இருப்பது அவ்வியக்தம், வெளிப்படுவது வியக்தம். அருவுருவத் திருமேனியுடையது வியக்தாவியக்தம். சிவலிங்கத்தின் உருண்டையாக இருக்கும் பகுதி ருத்ரபாகம் என்றழைக்கப்படும். பீடத்தின் கீழாக உள்ள நான்கு மூலையும் பிரம்ம பாகம் என்றழைக்கப்படும். பீடத்தில் லிங்கம் பொருந்தியுள்ள எட்டு மூலையும் திருமால் பாகம் என்றழைக்கப்படும். ருத்ரபாகம் ஆணாகவும், திருமால் பாகம் பெண்ணாகவும் பிரமபாகம் பேடு எனவும் குறிக்கப்படும்.

கன்ம சாதாக்கியம் என்பதற்கேற்ப லிங்கத்தின் நடுவே சதாசிவனும், மேற்கே ஈசனும், வடக்கே பிரம்மனும், தெற்கே திருமாலும், கிழக்கே ஈசனும் அமைந்திருக்கின்றனர். இத்தகைய சிறப்பு பெற்ற லிங்கத்தைப் பற்றி மகாலிங்க தலம் எனும் சிறப்புப் பெற்ற ஊர் மயிலாடுதுறை அருகே உள்ள இடைமருதூர் ஆகும். இங்கு சிவபெருமான் தானே லிங்கம் அமைத்து, தானே பூஜித்து, பூஜைக்குறிய வழிமுறைகளை வகுத்தும் தந்துள்ளார். இங்கு காவிரி நதி வில்வத்தால் சிவனைப் பூஜித்தாள். நம்மிடமுள்ள மும்மலங்களை அகற்றும் வல்லமையுடையவர் இவர். பிரமஹத்தி தோஷ பரிகார தலமாகும். வில்வார்ச்சனையும், தயிர் அன்ன நைவேத்தியமும் செய்தால் மூளை, மனம் சம்மந்தப்பட்டவை தீரும். அக உடல் தூய்மையடையும். இறைவன் பெயர் மகாலிங்கேஸ்வரர். இறைவி பெயர் பெருநலமுலையம்மையார் என்பதாகும்.
---------------------------------------
"நமசிவய" என்னும் ஐந்தெழுத்து மந்திரம் சிவனின் மூல மந்திரம்.
சிவம் என்றால் காரணமில்லாத மங்களம் என்று பொருள்.

யஜுர் வேதத்தின் நடு நாயகமானது ஸ்ரீருத்திரம். அதன் நடுநாயகமே "நமசிவய". தீக்கை பெற்றிருந்தாலும், பெறாவிடினும் "நமசிவய" என தாயைக் கூவியழைக்கும் சேய்போல் அழைக்க யாவருக்கும் உரிமை உண்டு. கடல் தன்மயமாய் இருந்துகொண்டு அதில் வந்து சேரும் நீரையெல்லாம் தன்மயமாக்குவதைப்போல்,
சிவனும் தம்மைக் கூவியழைப்பவர்களை எல்லாம் சிவமயமாக்குகிறார்.

பிரபஞ்சம் நாதம் அல்லது ஓசையின் தூலவடிவே. இறைவன் நாதமாயும், நாதத்திற்கு அப்பாற்பட்டும் உள்ளான்.

திருமந்திரம்
நாதத்தின் அந்தமும் நாற்போத அந்தமும்
வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவா னந்தமுந்
தாதற்ற நல்ல சதாசிவா னந்தத்து
நாதப் பிரமஞ் சிவநட மாகுமே."

"நாதத் துவங்கடந் தாதி மறைநம்பி
பூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர்
நேதத் துவமும் அவற்றொடு நேதியும்
பேதப் படாவண்ணம் பின்னிநின் றானன்றே."

நாதத்தின் நாயகனை நாதத்தால்தான் கட்ட இயலும். "நமசிவய" என்னும் மூலமந்திரத்தை ஓதவேண்டும்.

மந்திரத்தை வாய்விட்டுச் சொல்லுதல் தூலஜபம். ஒலி வெளிவராமலும் நாவசைந்து ஓதுதல் சூக்கும ஜபம். நாவசையாது, ஒலி வெளிவராது உள்ளுக்குள்ளே (உள்ளுக்கு உள்ளே) ஓதுதல்தான் உன்னத காரண நிலை.

நாதத்தின் தலைவன் நாதன். அப்படிப்பட்ட நாதனின் தாள் வாழ்க.இது பக்தி மார்க்கத்தில் உள்ளவருக்கு.

இதன் ஞான நிலை:சிவவாக்கியர்
நவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய்
சிவ்விரண்டு தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய்
யவ்விரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில்
செவ்வைஒத்து நின்றதே சிவாயநம அஞ்செழுத்துமே!"

தாள் என்பது சிவனின் மலர்ப்பாதம்.
நம் உடலில் மலர் போன்ற பகுதி நம் கண்களே.
அதுவே இறையின் மலர்ப்பாதங்கள்.

இவைகளைப்(சூரியகலை, சந்திரகலை) பயன்படுத்தி, அக்கினி கலையுடன் கூட "நமசிவய" எனும் மந்திரம் நம்முடலினுள்ளே கேட்கும்.
---------------------------------------
தமிழ் வருடங்களுக்கு சரியான ஆங்கில ஆண்டுகள்!

பிரபவ:1867-68 1927-28 1987-88
விபவ:1868-69 1928-29 1988-89
சுக்கில:1869-70 1929-30 1989-90
பிரமோதூத:1870-71 1930-31 1990-91
பிரஜோத்பத்தி:1871-72 1931-32 1991-92
ஆங்கீரஸ:1872-73 1932-33 1992-93
ஸ்ரீமுக:1873-74 1933-34 1993-94
பவ:1874-75 1934-35 1994-95
யுவ:1875-76 1935-36 1995-96
தாது:1876-77 1936-37 1996-97
ஈஸ்வர:1877-78 1937-38 1997-98
வெருதான்ய:1878-79 1938-39 1998-99
பிரமாதி:1879-80 1939-40 1999-2000
விக்ரம:1880-81 1940-41 2000-01
விஷு:1881-82 1941-42 2001-02
சித்ரபானு:1882-83 1942-43 2002-03
சுபானு:1883-84 1943-44 2003-04
தாரண:1884-85 1944-45 2004-05
பார்த்திப:1885-86 1945-46 2005-06
விய:1886-87 1946-47 2006-07
சர்வஜித்து:1887-88 1947-48 2007-08
சர்வதாரி:1888-89 1948-49 2008-09
விரோதி:1889-90 1949-50 2009-10
விக்ருதி:1890-91 1950-51 2010-11
கர:1891-92 1951-52 2011-12
நந்தன:1892-93 1952-53 2012-13
விஜய:1893-94 1953-54 2013-14
ஜய:1894-95 1954-55 2014-15
மன்மத:1895-96 1955-56 2015-16
துன்முகி:1896-97 1956-57 2016-17
ஹேவிளம்பி:1897-98 1957-58 2017-18
விளம்பி:1898-99 1958-59 2018-19
விகாரி:1899-1900 1959-60 2019-20
சார்வரி:1900-01 1960-61 2020-21
பிலவ:1901-02 1961-62 2021-22
சுபகிருது:1902-03 1962-63 2022-23
சோயகிருது:1903-04 1963-64 2023-24
குரோதி:1904-05 1964-65 2024-25
விசுவாவசு:1905-06 1965-66 2025-26
பராபவ:1906-07 1966-67 2026-27
பிலவங்க:1907-08 1967-68 2027-28
கீலக:1908-09 1968-69 2028-29
சௌமிய:1909-10 1969-70 2029-30
சாதாரண:1910-11 1970-71 2030-31
விரோதிரிகிருது:1911-12 1971-72 2031-32
பரிதாபி:1912-13 1972-73 2032-33
பிரமாதீச:1913-14 1973-74 2033-34
ஆனந்த:1914-15 1974-75 2034-35
இராக்ஷஸ:1915-16 1975-76 2035-36
நள:1916-17 1976-77 2036-37
பிங்கள:1917-18 1977-78 2037-38
காளயுக்தி:1918-19 1978-79 2038-39
சித்தாத்ரி:1919-20 1979-80 2039-40
ரௌத்ரி:1920-21 1980-81 2040-41
துன்மதி:1921-22 1981-82 2041-42
துன்துபி:1922-23 1982-83 2042-43
ருத்ரோத்காரி:1923-24 1983-84 2043-44
ரக்தாக்ஷி:1924-25 1984-85 2044-45
குரோதன:1925-26 1985-86 2045-46
அக்ஷய:1926-27 1986-87 2046-47.
---------------------------------------
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஏன்?

சூரியன் ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு மாதம் சஞ்சரிக்கிறார். அதில், மகர ராசிக்குள் அவர் நுழையும் நாளை தைப்பொங்கல் என்று குறிப்பிடுவர். வடநாட்டில் இதை மகர சங்கராந்தி என்பர். இந்நாளில் வீட்டு வாசலில் கோலம் இட்டும், மாவிலைத் தோரணம் இட்டும் அலங்கரிப்பர். மார்கழி மாதத்தின் கடைசி நாளான  போகியன்று பழைய பொருள்களை தீயிட்டுக் கொளுத்துவதும் வீட்டின் தூய்மைக்காகவே. வேண்டாத பழமையை விலக்கி, புதுமையை வரவேற்கும் விதமாக பொங்கல் அமைந்துள்ளது. அதனால், வாழ்வில் முன்னேறுவதற்கான வழிவகை உண்டாவது இயற்கை. இதனால் தான், தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொல்வழக்கு ஏற்பட்டது. வயலில் விளைந்த புது நெல்லில் குத்திய அரிசியில் பொங்கலிட்டு, கண் கண்ட தெய்வமான சூரியனுக்குப் படைப்பர். பொங்கல் பானையில் பொங்கும்போது, பொங்கலோ பொங்கல் என்று ஒலி எழுப்புவர். ஒருமித்த குரலில், இதைச் சொல்லும்போது, எல்லா மங்களங்களும், நன்மைகளும் வீட்டிற்கு வந்து சேரும் என்பது ஐதீகம்.
----------------------------------------



பொங்கல் பூஜை செய்வது எப்படி?

இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ஸ்டவ்வில் பொங்கல் வைக்கிறார்கள். ஆனால், சூழ்நிலைகளைக்காரணம் காட்டி, நமது பாரம்பரியத்தை மறந்து போவது முறையானதல்ல. மேலும், இளைய தலைமுறையினர், அக்காலத்தில் நாம் எப்படி பொங்கலிட்டோம் என்பதையும் தெரிந்து கொண்டு எதிர்காலத்திலும் கடைபிடிக்க வேண்டும்.

வீட்டு வாசலில் பொங்கல் வைக்க வசதியில்லாவிட்டால், தெருமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நல்ல நேரத்தை தேர்ந்தெடுத்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் இணைந்து பொங்கல் வைக்க வேண்டும். கோயில்களையும் தேர்ந்தெடுக்கலாம். பால் பொங்கும் போது, சூரிய நமஸ்காரம் செய்து, ""பொங்கலோ பொங்கல் என ஒரு சேர முழக்கமிட வேண்டும். ஏனெனில், இது ஒரு ஒற்றுமைத் திருவிழா. தேரோட்டம் என்ற நிகழ்ச்சியை ஊர் ஒற்றுமை கருதி எப்படி நம் முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்தி சென்றார்களோ, அதுபோல பொங்கலும் மக்களிடையே ஒருமைப்பாட்டை வளர்க்கும் விழா என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே வீட்டுக்குள் காஸ்ஸ்டவ், மண்ணெண்ணெய் அடுப்பு இவற்றில் பொங்கல் வைப்பதைத் தவிர்த்து வீதியில் வைக்க வேண்டும். நகரங்களாக இருந்தாலும் கூட, கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அங்கிருந்து பனை ஓலை அல்லது தென்னை ஓலை தருவித்து பொங்கலிட வேண்டும்.

பொங்கலன்று காலையில் நல்ல நேரம் பார்த்து வீட்டு முற்றத்தில் பெரிய அளவிலான குத்துவிளக்கேற்றி அதன் முன் ஒரு வாழை இலையைப் போட வேண்டும். அதன் இடது ஓரத்தில் நாழி நிறைய பச்சை நெல் வைக்க வேண்டும். இலையில் பச்சரிசியை பரப்பி, அதன் மேல் கத்தரிக்காய், கருணைக்கிழங்கு, சிறுகிழங்கு, வள்ளிக்கிழங்கு, அவரைக்காய், சீனிஅவரை, பூசணித் துண்டு, பிடிகிழங்கு, காப்பரிசி (வெல்லம், பச்சரிசி கலவை) வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள்கிழங்கு ஆகியவற்றை வைக்க வேண்டும். கரும்பின் ஓலையை வெட்டாமல் நீள கரும்பாக சுவரில் சாய்த்து வைக்க வேண்டும். ஒற்றைக் கரும்பாக வைப்பதைத் தவிர்த்து இரண்டு கரும்புகள் வைக்க வேண்டும்.

பொங்கல் பானையை மண்அடுப்பு அல்லது பொங்கல் கட்டி எனப்படும் கற்கள் மீது வைக்க வேண்டும். திருவிளக்கிற்கு பத்தி, கற்பூர ஆரத்தி காட்டிய பிறகு உங்கள் குல தெய்வம் இருக்கும் கோயிலின் திசையை நோக்கி காட்ட வேண்டும். பின்னர் சூரியபகவானுக்கு ஆரத்தி காட்டியதும் ஒரு தேங்காயை உடைத்து அதன் நீரை பானையில் விட வேண்டும்.

சுத்தப்படுத்திய பச்சரிசியை நன்றாகக் களைந்து அந்த தண்ணீரை பானையில் விட வேண்டும். அடுப்புக்கும், பொங்கல் பானைக்கும் தூபம் (பத்தி) காட்டி, பற்ற வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்து பால் பொங்கும் போது குலவையிட வேண்டும். குலவை தெரியாதவர்கள் "பொங்கலோ பொங்கல் என முழங்க வேண்டும். பின்னர் பானையிலுள்ள சுடும் நீரை, அரிசி வேகும்அளவிற்கு மட்டும் வைத்துக் கொண்டு, மீதியை முகந்து விட வேண்டும். அரிசியை போட்டு, வெந்ததும் அவ்வப்போது அகப்பையால் கிண்டி கொடுக்க வேண்டும். இல்லா விட்டால், பாத்திரத்தின் அடியில் பிடித்து விட வாய்ப்புண்டு. பொங்கலை இறக்கிய பிறகு, சர்க்கரைப் பொங்கல் வைக்க வேண்டும்.

இலையின் முன்னால் இந்த பானைகளை இறக்கி வைத்து, திருவிளக்கிற்கும், சூரியனுக்கும் பூஜை செய்ய வேண்டும். ஆதித்ய ஹ்ருதயம் தெரிந்தவர்கள் அந்த ஸ்லோகங்களைச் சொல்லலாம். மற்றவர்கள் சூரியன் குறித்த தமிழ் பாடல்களைப் படிக்கலாம். பின்னர் காகத்திற்கு பொங்கல் வைக்க வேண்டும். காகம் உணவை எடுத்த பிறகு குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் கொடுக்க வேண்டும். அதன் பிறகே பெரியவர்கள் சாப்பிட வேண்டும். பின் காய்கறி வகைகள் சமைத்து வெண் பொங்கலை மதிய வேளையில் சாப்பிட வேண்டும். இரவில் முன்னோரை நினைத்து இனிப்பு வகைகள் புத்தாடை வைத்து வணங்க வேண்டும். புத்தாடையை தானமாக கொடுத்து விட வேண்டும்.
----------------------------------------