சனி, 24 ஆகஸ்ட், 2019

கிருஷ்ண சைதன்யர்

விருந்தாவனம்.. டில்லி அருகிலுள்ள ஒரு கிராமம். இங்கு மட்டும் இப்போது 5 ஆயிரம் கிருஷ்ணர் கோயில்கள் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இங்கே கிருஷ்ணருடன் ராதையும் எழுந்தருளியிருக்கிறாள். இந்தளவுக்கு ராதையின் மீது கிருஷ்ணருக்கு என்ன பிரியம்? இவ்வுலகில் எத்தனையோ காதலர்கள் உள்ளனர். ஒவ்வொரு கணவன் மனைவியும் கூட காதலர்களே. இவர்களெல்லாம் பகலில் பணத்தைப் பற்றி பேசுகிறார்கள். இரவில் சுகத்தைப் பற்றி பேசுகிறார்கள். இது தான் வாழ்க்கை; இந்த சக்கரம் ஒழுங்காக உருண்டு ஓடினாலே போதும் எனக் கருதுகிறார்கள். இவர்கள் நூறாண்டுகளே வாழ்கிறார்கள் என வைத்துக் கொள்வோமே. ஒரு நாளாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கும். வள்ளுவரின் மனைவி வாசுகி கணவர் என்ன செய்தாலும் கண்டு கொள்ளாமல் தான் இருந்தார். ஆனால், அவர்கூட வாழ்வின் கடைசி நாளில், அவர் செய்த சில செய்கைகள் பற்றி கேள்விகள் கேட்டாராம். ஆனால், ராதா அப்படியல்ல. அவள் பேசினால் கண்ணன் பேசியததாகத் தான் நினைப்பாள். பாடினால் கண்ணன் பாடியாகத்தான் நினைப்பாள். சாப்பிட்டால் கண்ணன் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகத் தான் கருதுவாள். அவளது நெஞ்சம் அந்த பரந்தாமனுக்கு மட்டுமே சொந்தமாக இருந்தது. பிறந்தது முதல் கண் விழியாமலே இருந்த அவள், கண்ணனை அவரது அன்னை அவளது வீட்டுக்கு எடுத்து வந்த போது தான் முதன் முதலாக கண்ணைத் திறந்து பார்த்தாளாம். அதன்பிறகு அவரது திருவடிகளைத் தவிர வேறெந்த நினைப்புமில்லை. அவளது இதயம் கிருஷ்ணா என்ற நான்கெழுத்து மந்திரத்தில் மூழ்கிக் கிடந்தது.

கிருஷ்ண பரமாத்மாவுக்கோ அவளது பிரேமையை மதிப்பிட அளவுகோலே கிடைக்கவில்லை. ஊரில் எல்லாரையும் சோதிக்கும் அந்த பரந்தாமனுக்கு அவளுக்கு சோதனை கொடுக்க வாய்ப்பே கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவருக்கு அவளது காதல் மீது பொறாமையே ஏற்பட்டு விட்டது. இப்படி ஒருத்தி நம்மைக் காதலிக்கிறாளே... நம்மை அடையத் துடிக்கிறாளே...இவள் தரும் அன்பை என்னால் தாங்கவே இயலவில்லை. இவள் தரும் காதல் சுவையை நான் அனுபவிக்கிறேன். அனுபவிக்கும் எனக்கே இவ்வளவு சுகம் என்றால், அதைக் கொடுக்கும் உனக்கு, எவ்வளவு சுகமாய் இருக்கும். அதை அனுபவித்து உணர்ந்து கொள்ளப் போகிறேன். அது மட்டுமல்ல. உலகத்து மக்களெல்லாம் என்னை அடையத் துடிக்கிறார்கள். என்னை அடைவதே இன்பமென கருதுகிறார்கள். அப்படி என்ன இன்பம் அதில் இருக்கிறது என்பதையும் அனுபவித்து தெரிந்து கொள்ளப் போகிறேன், என்று தமக்குள் அங்கலாய்த்தார். அது மட்டுமல்ல! கிருஷ்ணர் இப்பூமியில் அவதரிக்க துடித்தமைக்கு இன்னொரு முக்கிய காரணமும் இருந்தது. இந்த கலியுகத்தில், இவ்வுலகில் இனி மந்திரங்கள் எடுபடாது. பகவத்கீதை படிக்க நேரமிருக்காது. உலகம் ஏதோ ஒரு சுகத்தை நோக்கி நடை போடும். பகவந்நாமா சொல்ல ஆளிருக்காது. இறைவணக்கத்தை எளிமைப்படுத்தி, நாம சங்கீர்த்தனம் என்னும் புதிய சமயத்தை படைக்க வேண்டும். அதன் மூலம் பக்தியைப் பரப்ப வேண்டும் என்பதும் அவரது நோக்கமாயிற்று.

இதற்காக அவர் பூமிக்கு புறப்பட்டார். யார் வயிற்றில் பிறப்பது என யோசித்தார். சாந்திபுரா என்ற இடத்தில் அத்வைத ஆச்சாரியார் ஒருவர் இருந்தார். இவரது இல்லத்தில் தினமும் ஏராளமான பக்தர்கள் கூடுவர். கீதை, பாகவதம் ஆகியவற்றில் இருந்து கருத்துரைகளை ஆச்சாரியார் எடுத்துக் கூறுவார். அங்கு வரும் பக்தர்கள் கிருஷ்ணரைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பார்கள். ஆச்சாரியாருக்கு இதிலெல்லாம் திருப்தி ஏற்படவில்லை. இந்த உலக மக்கள் அனைவருமே கிருஷ்ணரைப் பற்றி சிந்திக்க வேண்டும். பிறப்பு இறப்பு இல்லாத ஆனந்த நிலையை அடைய வேண்டும். எல்லாருமே கிருஷ்ணருள் கலக்க வேண்டும், என தனக்குள் சொல்லிக் கொண்டார். ஒருமுறை கௌடாமியா தந்த்ரா என்ற நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வாசகத்தை வாசித்தார். யார் ஒருவன் அபரிமிதமான பக்தியுடன் கிருஷ்ணருக்கு வெறும் துளசி இலையையும், கையளவு தண்ணீரையும் கொடுக்கிறானோ, அவனிடம் பகவான் தன்னையே விற்றுக் கொள்கிறார், என்பதே அந்த வாசகம்.

ஆஹா...எவ்வளவு எளிமையான வழிபாடு. கங்கைக் கரையிலே எவ்வளவோ துளசி செடிகள் உள்ளனவே. அவற்றை பறித்து அவருக்கு அர்ப்பணம் செய்வதைத் தவிர வேறென்ன வேலை. கிருஷ்ணா! இப்பூமிக்கு வந்து அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். எங்களை ஆட்கொள்ள வேண்டும், என வேண்டினார். தினமும் துளசி இலைகளைப் பறித்து வந்து பூஜைகளைச் செய்தார். பகவான் பூமிக்கு வர வேண்டுமென நினைத்தாலும், யாராவது ஒருபக்தன் அழைத்தால் தானே வருவார்! நாராயணா இந்த தூணுக்குள் இருந்து வெளியே வா என பிரகலாதன் அழைத்ததால் தானே நரசிம்ம மூர்த்தியாய் அவர் எழுந்தருளினார். அதுபோல் ஆச்சாரியாரின் துளசி கைங்கர்ய அழைப்புக்கு பகவான் கட்டுப்பட்டார். உபேந்திர மிஸ்ரா என்ற அந்தணரின் குடும்பத்தில் அவதாரம் செய்ய முடிவெடுத்தார். இவர் கிருஷ்ணாவதார காலத்தில் கிருஷ்ணரின் தாத்தாவாக இருந்த பர்ஜன்யரின் மறுபிறவி என கருதப்பட்டார். இவருக்கு ஏழு மைந்தர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் ஜெகந்நாத மிஸ்ரா. இவர் இன்றைய மேற்கு வங்காள மாநிலத்தின் நாடியா நகரில் வசித்து வந்தார். இவ்வூர் கங்கைக்கரையில் உள்ளது. இவர் நீலாம்பர சக்ரவர்த்தி என்பவரின் மகள் சச்சிதேவியை திருமணம் செய்திருந்தார். இந்த தம்பதியர் தீராத சோகத்தில் மூழ்கியிருந்தனர். ஏன்...இவர்களுக்கு பிறந்த எட்டு பெண் குழந்தைகளும் இறந்து விட்டன என்றால் எந்தப் பெற்றவர்களைத் தான் வருத்தம் வாட்டி எடுக்காது?

பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா

ஹரே ராமா.... ஹரே கிருஷ்ணா !

ஜலதூதா எனும் பெயர் கொண்ட கப்பல், 1965 - ஆம் வருடம், இந்திய தேசத்திலிருந்து அமெரிக்கக் கரையை நோக்கிச் சென்றுகொண்டு இருந்தது. அதில், 69 வயது பெரியவர் ஒருவர், பயணம் மேற்கொண்டு இருந்தார். குடை, கைப்பை, சாப்பிடுவதற்குக் கொஞ்சம் தானிய வகை உணவுகள் மற்றும் பெட்டிகள் சிலவற்றில் புத்தகங்கள்; தவிர, 300 ரூபாய் மதிப்புள்ள ஏழு அமெரிக்க டாலர்கள்; இவையே அவருடைய உடைமைகள் !

அமெரிக்கக் கரையை நெருங்கிக்கொண்டிருந்தது கப்பல். தான் எதிர்கொள்ளவேண்டிய புதியதொரு சூழல் அவருக்குள் கவலையையும் மலைப்பையும் தந்தது ! கொண்டு வந்திருந்த பெட்டிகளில் ஒன்றினைத் திறந்து, நாட்குறிப்பேட்டை எடுத்தார். அன்றைய தினத்தின் பக்கத்தில், இன்று, என்னருமைத் துணைவன் கிருஷ்ணனிடம் உள்ளத்தில் இருப்பதைக் கொட்டித் தீர்த்தேன் என்று குறிப்பு எழுதினார். பிறகு, மண்டியிட்டுக் கண்கள் மூடி, கிருஷ்ணா, உனக்கு இங்கே ஆற்றவேண்டிய செயல்கள் ஏராளமாக இருக்கவேண்டும். இல்லையெனில் முற்றிலும் புதிதான இந்த பூமிக்கு என்னை ஏன் அழைத்துவந்தாய் ? நான் எளியவன்; சக்தியேதும் இல்லாதவன்; உனது பணியை நிறைவேற்ற எனக்குக் கருணை காட்டுவாயாக  என்று மனமுருகிப் பிரார்த்தித்தார். அவருக்குள் கண்ணனின் கருணை, வெள்ளமெனப் பாய்ந்தது. கிருஷ்ண பக்தி எனம் அமுதூற்று உலகளாவிய கிருஷ்ண விழிப்பு உணர்வு சங்கம் (இண்டர்நேஷனல் சொசைட்டி ஃபார் கிருஷ்ணா காண்சியஸ்நெஸ்) எனும் பெயரில் (இஸ்கான்), சிறு வித்தாய்த் தோன்றியது; பிறகு அதுவே பேரியக்கமாகப் பல்கிப் பெருகி, நாடுகளையும் கண்டங்களையும் தாண்டி, அனைவரையும் அரவணைத்தது ! இவை அனைத்துக்கும் அடிகோலிய அந்த முதியவர்... பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா ! 1896 ஆம் வருடம், கிருஷ்ண ஜன்மாஷ்டமிக்கு மறுநாள், செப்டம்பர் 1-ஆம் தேதியன்று, கொல்கத்தாவில்... கௌர் மோஹன் டே - ரஜனி டே ஆகிய வைணவத் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு, அபய் சரண் எனப் பெயரிட்டு, அன்புடன் வளர்த்தனர். தெய்வ பக்தியும், தேச பக்தியுமாக வளர்ந்தான், அபய் சரண். பள்ளிக் கல்வி முடித்ததும், கொல்கத்தாவில் ஸ்காடிஷ் சர்ச் கல்லூரியில் ஆங்கிலம், தத்துவம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் பட்டப் படிப்பை முடித்தான். ஆங்கிலத்தில் புலமை, தலைமையேற்று நடத்தும் திறமை, சம்ஸ்கிருதத்தில் பாண்டித்யம் என சிறந்து விளங்கினான் அபய் சரண். ஆனாலும் காந்திய வழியில், கதராடைகளையே உடுத்தி வந்தான். அது மட்டுமா ?! ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும்விதமாக, தன் படிப்புக்கு உரிய பட்டத்தையும் ஏற்க மறுத்தான் ! உரிய வயது வந்ததும், தந்தை சொல்படி, ராதா ராணி தத்தா என்பவளை மணந்தான்; அடுத்து ஆண் குழந்தைக்கும் தந்தையானான். ஆனாலும், ஆன்மிகத்தில் திளைப்பதிலும், ஸ்ரீ கிருஷ்ணரை நினைப்பதிலுமாக வாழ்ந்தான் அபய் சரண் ! 1922 - ஆம் வருடம் சுவாமி பக்தி சித்தாந்த சரஸ்வதி எனும் மகானைச் சந்தித்தான் அபய் சரண். அவரைத் தரிசித்த மாத்திரத்திலேயே வெகுவாகக் கவரப்பட்டு, அவரை தனது குருவாக ஏற்றான். அதுவே, அவனது வாழ்வின் மிகப் பெரிய திருப்புமுனை ! வேதங்கள், உபநிஷதங்கள் ஆகியவற்றில் உள்ள கருத்துக்களையும், சைதன்ய மகாபிரபுவின் ஸ்ரீகிருஷ்ண பக்தி சாரத்தையும், ஆங்கிலப் புலமையால், உலக மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும். என விரும்பினார் குருநாதர். அதன்படி, தனது வாழ்க்கையை அதற்காகவே அர்பணிக்க முடிவு செய்தார் அபய் சரண். அடுத்த சில வருடங்களில், பகவத்கீதைக்கு ஆங்கிலத்தில் உரை எழுதினார். அப்போது முதல், அபய் சரணின் ஆன்மிகப் பயணம், கிருஷ்ண பக்தி எனும் பாதையில் சீராகச் செல்லத் துவங்கியது. பரத கண்டத்தின் கலாசாரப் பொக்கிஷங்கள் அனைத்தும், அபய் சரணின் ஆங்கிலப் புலமையால், புத்தகங்களாக வெளிவந்தன; உலகெங்கும் பரவத் துவங்கின !

இவருடைய புலமை, மனித குலத்துக்கு ஆற்றி வரும் சேவை ஆகியவற்றின் காரணமாக, பக்தி வேதாந்த... பிரபுபாதா ஆகிய பட்டங்கள் இவரது பெயருடன் இணைந்தன. ஒரு கட்டத்தில், பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா என அனைவராலும் அழைக்கப்பட்டார். மனம் ஏற்காத சம்சார வாழ்வைத் துறந்தார். ஸ்ரீகண்ணன் லீலைகள் செய்த பிருந்தாவனத்தை, 1950-ஆம் வருடத்தில் தனது இருப்பிடமாக்கிக் கொண்டார் சுவாமிஜி. 59 - ஆம் வருடத்தில் தீட்சை பெற்று, காவியுடை அணிந்து, துறவறம் பூண்டார் பிரபுபாதா. ராதா தாமோதர் கோயிலும், கௌடியா மடத்திலும் வாழ்ந்துகொண்டே, உன்னிடம் எப்போது பணம் சேர்ந்தாலும், புத்தகத்தை வெளியிடு என்ற குருநாதரின் கட்டளைப்படி, தனது பக்தி இலக்கிய சேவையை முனைப்புடன் தொடர்ந்தார். சம்ஸ்கிருதம், ஹிந்துஸ்தானி போன்ற மொழிகளில் இருந்த பாகவத புராணம் முதலான அற்புதமான வைணவ கிரந்தங்கள், இவரது மொழிபெயர்ப்பில் விரிவான உரையுடன், ஆங்கில நூல்களாக வெளியாகின. கிருஷ்ண பக்தியை உலகெங்கும் பரவச் செய்யும் நோக்கில், 1965-ஆம் வருடம் கொல்கத்தாவில் கப்பலேறினார் பிரபுபாதா. கையில் அதிகம் பணமில்லை; வெளிநாட்டில் வரவேற்பாரும் இல்லை; உதவுபவர்களும் கிடையாது. நியூயார்க்கை அடைந்தவர், ஏழைகள் குடியிருக்கும் பகுதியில் பொது இடத்தில் ஓரு மரத்தடியில் காவியுடையும் நெற்றியில் சந்தனக் கீற்றுமாக அமர்ந்தார்; கையில் தாளத்தைத் தட்டிக்கொண்டே... ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே எனும் கிருஷ்ண நாமத்தைப் பாடத் தொடங்கினார். பாடலைக் கேட்டவர்கள் நின்றனர்; அருகில் வந்தனர்; அவர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமைகளின் லீலைகளையும் கீதையையும் பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில், ஆங்கிலத்தில் தெளிவாக எடுத்துரைத்தார். இதில் கிறங்கிப்போன பலரும், அவருடன் இணைந்து கிருஷ்ண நாமாவளியைப் பாடத் துவங்கினர். இப்படி எளிமையாய்த் துவங்கியதுதான் பிரபுபாதாவின் அமைப்பு ! தன்னை மதித்து அழைப்பவர் வீட்டில் தங்குவது, கொடுப்பதை உண்பது, பொது இடங்களில் கிருஷ்ணனின் நாமத்தைச் சொல்லி சொற்பொழிவு ஆற்றுவது என அவரது வாழ்க்கை முறை மாறியது.

அதுமட்டுமா ?! மது, போதை மருந்துகள், பாலியல் வன்முறைகள் எனச் சீரழிந்துகொண்டு இருந்த அமெரிக்க இளைஞர்களிடமும், யுவதிகளிடமும் பேசினார்; கிருஷ்ண பக்தி, நல்லொழுக்கம் மற்றும் நாம சங்கீர்த்தனம் ஆகியவற்றால் அவர்களைத் திருத்தி வெற்றி கண்டார். இதனால் பிரபுபாதாவின் புகழ் பரவியது. இவரது பக்தி இலக்கியங்களும் சொற்பொழிவுகளும் அனைவரையும் வசீகரித்தன. இதையடுத்து, 1966 - ஆம் வருடம், ஜூலை மாதம், நியூயார்க் நகரில், இஸ்கான் எனும் அமைப்பு உதயமானது. அடுத்து, சான்பிரான்சிஸ்கோ மற்றும் அமெரிக்காவின் பல நகரங்களிலும் இஸ்கான் கிளைகள் துவக்கப்பட்டன. ஸ்ரீகிருஷ்ணருக்கு ஆலயங்கள், பிரார்த்தனைக் கூடங்கள், கல்விச் சாலைகள், தொழில் மற்ணும் விவசாய மையங்கள் என கிளை பரப்பியது இஸ்கான் அமைப்பு. இங்கிலாந்தில் இந்த இயக்கத்தில், பீட்டில்ஸ் எனும் புகழ்பெற்ற பாப் இசைக் குழுவினர் இணைந்ததால், லண்டன் போன்ற முக்கிய நகரங்களிலும் இந்த இயக்கம் வேரூன்றியது. 1971-ஆம் வருடம் இந்தியா திரும்பிய பிரபுபாதா, இங்கேயும் பல நகரங்களில் ஸ்ரீகிருஷ்ணருக்கு அற்புதமான ஆலயங்களை அமைத்தார். நூற்றுக்கணக்கான ஆன்மிகப் புத்தகங்களை மொழிபெயர்த்தும் உரை எழுதியும் சேவையாற்றிய சுவாமியின் நூல்கள், இதுவரை 80-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ளன. இந்திய பக்தி இலக்கி யங்களைப்பிரசுரித்த வகையில், இன்றைக்கும் முன்னிலையில் நிற்கிறது இஸ்கான் அமைப்பு. உலகெங்கும் ஐந்நூறுக்கும் மேற்பட்ட மையங்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆலயங்களையும் கொண்டு விளங்கும் ஹரே கிருஷ்ண இயக்கத்தைத் துவக்கி வழி நடத்திய சுவாமி பிரபுபாதா, 77-ஆம் வருடம் நவம்பர் 14-ஆம் நாள், பிருந்தாவன மண்ணில், தனது வாழ்வை நிறைவு செய்துகொண்டார். எளிமையாக வாழ்ந்து, அரிதான செயல்களை நிகழ்த்தி, ஸ்ரீ கிருஷ்ண பக்தி சாம்ராஜ்ஜியத்தை உலகெங்கும் நிறுவிய சுவாமி பிரபுபாதாவை உலகமே போற்றுகிறது; கிருஷ்ண பக்தி இருக்கும்வரை, பிரபுபாதாவின் புகழும் இருக்கும்!
ராமகிருஷ்ணர் பகுதி -5

கதாதரனுக்கு அவரது தந்தை சுதிராம் தம் முன்னோர்களின் பெயரை வரிசையாக சொல்லிக் கொடுத்தார். அவர் சொல்வதை கதாதரன் அக்கறையுடன் கவனிப்பான். எத்தனை நாள் கழித்து திரும்ப கேட்டாலும் அப்படியே சொல்வான். ஆனால், அவருக்கு பள்ளிப்பாடத்தில் மட்டும் அதிக நாட்டம் இல்லை. குறிப்பாக கணக்கு என்றால் அவருக்கு வேப்பங்காய். யாராவது வாய்ப்பாடு சொன்னால் அவரை வெறுப்போடு பார்ப்பார். சிறிது காலத்தில் கதாதரன் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.பள்ளியில் சேர்ந்த சில மாதங்களிலேயே அவரை அனைவருக்கும் பிடித்துவிட்டது. படிப்பில் புத்திசாலியில்லாவிட்டாலும், மற்றவகைகளில் அவரை ஏனோ அத்தனைபேருக்கும் பிடித்திருந்தது. கடைசி வரை கணக்குப்பாடத்தை மட்டும் அவர் விரும்பவேயில்லை. இதை சுதிராம் பெரிதுப்படுத்தவில்லை. இறைவனின் ஆணைப்படி எப்படியாவது தன் மகன் முன்னேறிவிடுவான் என்றே அவர் நினைத்தார். வீட்டில் குறும்பு செய்தால்கூட அவர் கண்டிப்பதில்லை. அதேநேரம் கதாதரனும் குறும்பு செய்துவிட்டு எதையும் மறைப்பதில்லை. நான்தான் அதை செய்தேன் என தைரியமாக ஒப்புக் கொள்வார். இந்தப் போக்கு சுதிராமுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் கதாதரனுக்கு புத்திமதிகள் சொல்வார். குறும்பு செய்யவேண்டாம் என கேட்டுக் கொள்வார். அதை அப்படியே ஏற்றுக் கொள்வார் கதாதரன். ஆனால் வேறுமாதிரியான குறும்புகளை செய்வார். அந்த குறும்பினால் நிச்சயமாக மற்றவர்களுக்கு பாதிப்பு இருக்காது. இப்படியாக அவரது இளமைக்காலம் கழிந்து கொண்டிருந்தது. சிறிது காலம் கழித்து கணிதம் நீங்கலாக மற்ற பாடங்களில் கதாதரன் ஆர்வம் செலுத்தினார். நன்றாக எழுதினார். ஆன்மிக பெரியவர்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொண்டார். அவற்றை படிக்கும் நேரத்தில் இந்த உலகையே மறந்துவிடுவார். தியானம் செய்பவரை போல தோன்றும்.

 அவரது காலத்தில் ராமாயணமும், மகாபாரதமும் மிகவும் பிரசித்தம். ஊர் ஊராக நாடகம் மூலம் ராமாயணம், மகாபாரதம் கதை மக்களிடம் சொல்லப்படும். ஆனால் நாடகக் குழுவினரிடம் பணம் இருக்காது. எனவே அவர்கள் மேடைப்போட்டு நாடகம் நடத்தமாட்டார்கள். தெருவோரங்களில் மாதக்கணக்கில் தொடர்ச்சியாக நாடகத்தை நடத்திக் காட்டுவார்கள். இதைப்பார்ப்பதற்கென்று தவறாமல் கூட்டம் வரும். அந்த கூட்டத்தில் ஒருவராக கதாதரனும் இருப்பான். அந்த நாடகத்தில் வரும் வசனங்களையும், பாடல்களையும் கதாதரன் வரிவிடாமல் கேட்பார். வீட்டிற்கு வந்து ஒன்றுவிடாமல் திரும்ப சொல்லிப்பார்ப்பார். கற்றலில் கேட்டலே நன்று என்ற பழமொழிக்கு ஏற்ப, கதாதரனின் மனதில் ராமாயணம், மற்றும் மகாபாரத கதைகள் இலகுவாக பதிந்தன. இதைத்தவிர தான் வாழ்ந்த கிராமத்தில் உள்ள குயவர்களின் வீட்டிற்கு சென்றுசுவாமி பொம்மைகளை வாங்கி வருவார். அவர்கள் பொம்மை செய்யும் விதத்தை பார்த்துக் கொண்டேயிருப்பார். அவர்களோடு இணைந்து பொம்மை செய்யவும் கற்றுக் கொண்டார். நண்பர்கள் வீட்டிற்கு சென்று பொம்மைகள் செய்து கொடுப்பார். யாரேனும் ஓவியரைக் கண்டால் விடமாட்டார். அவர்களோடு சேர்ந்த ஓவியம் வரைவார். பொம்மை செய்வதிலும், ஓவியம் வரைவதிலும் தேர்ச்சி பெற்றார். பள்ளிப்படிப்பை விட இதுபோன்ற காரியங்களில் அவருக்கு அதீத அக்கறை இருந்தது. ஓய்வு நேரங்களில் புராண இதிகாசங்களை படிப்பார். வளர வளர தெய்வீக எண்ணங்கள் மனதில் பதிந்தன. சில நேரங்களில் பக்தி பரவசத்தால் மயங்கி விழுந்துவிடுவார். நாட்டுப்புற பாடல்களையும் அவர் கற்றுக் கொண்டார். அந்தக் காலத்தில் பேய், பிசாசு பயம் மக்களிடம் மிகவும் அதிகம். அங்கே பேய் இருக்கிறது, இங்கே பிசாசு இருக்கிறது என்றெல்லாம் மக்கள் பேசிக் கொள்வார்கள். அந்த இடங்களுக்கு தைரியமாக சென்று வருவார் கதாதரன்.

சுதிராமுக்கு ஆதரவு அளித்த சட்டர்ஜி குடும்பத்தினருக்கு தெய்வ அருள் வந்து ஆடுவார்கள். அவர்கள் அருகில் செல்லவே கிராமமக்கள் தயங்குவார்கள். ஆனால் கதாதரன் தைரியமாக அவர்களது அருகில் சென்று அவர்கள் செய்வதையெல்லாம் கவனிப்பார்.இந்த மாமா, அத்தை ஆகியோர் சுவாமி ஆடுவதைப் போல எனக்கும் ஆடத் தோன்றுகிறது. என்மேலும் தெய்வம் வந்து அமராதா? என்று வேடிக்கையாக சொல்வார். கதாதரனிடம் ஒரு வசீகர சக்தி இருந்தது. தன்னோடு பழகும் சிறுவர்களை விரைவில் தன்வசப்படுத்திவிடுவார். அவரது நண்பர்கள் சாப்பிடச் செல்லும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் அவரோடு இருப்பார்கள். அதுமிட்டுமின்றி அந்த கிராமத்தில் வசிக்கும் பெண்களும், உறவுக்காரர்களும் ஏதாவது காரணம் சொல்லிக் கொண்டு கதாதரனைக் காண வருவார்கள். அவர்கள் கையில் மிட்டாய் அல்லது பழங்கள் இருக்கும். கமார்புகூரில் சுதிராமனுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார். அவரது பெயர் மாணிக்ராம். அவர் கதாதரனைப் பார்க்காமல் ஒருநாள் கூட இருக்கமாட்டார். கதாதரனின் உடலில் உள்ள அங்க அடையாளங்களைக் கொண்டு இவன் பிற்காலத்தில் பெரிய மகானாக வருவான் என்று சொல்வார். கதாதரனுக்கு பல பரிசுகளை கொடுப்பார். இதிகாசங்களை படித்த கதாதரன் அதிலுள்ள பாத்திரங்களைப் போல நடித்துக் காட்டுவார். சில நேரங்க்ளில் அந்த பாத்திரத்தோடு ஒன்றி அப்படியே மயக்கநிலையில் ஆழ்ந்துவிடுவார். ஊராரில் சிலர் வேறுமாதிரியாக பேச ஆரம்பித்தனர்.அந்த சிறுவனுக்கு வலிப்பு வருகிறது. அதனால்தான் அவன் அடிக்கடி மயக்கம் அடைந்துவிடுகிறான், என்று கேலிபேசினர். கதாதரனின் பெற்றோர் இந்த கேலிபேச்சு கண்டு பயந்தார்கள். இப்படியே சொல்லிச் சொல்லி மற்றவர்களையும், நம்பவைத்து விடுவார்களோ என பயந்தனர்.
ராமகிருஷ்ணர் பகுதி -4

கயா சென்றிருந்த சுதிராம் வீடு திரும்பினார். மனைவி கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொண்டார். ஊரே பச்சை பசேலென இருந்தது. சந்திராதேவியின் குணத்திலும் அற்புதமான மாறுதல்கள் தென்பட்டன. தன்னை நாடிவந்த ஏழைகளுக்கு அவர் உதவி செய்தார். உணவளித்தார். சிலரது வீடுகளுக்கு சென்று அரிசி, பருப்பு ஆகியவற்றை தானம் செய்தார். சுதிராம் தன் மனைவியிடம் கயாவில் உள்ளகோயிலில் தான் கண்ட கனவு பற்றி கூறினார். சந்திராதேவியும், தாம் கண்ட கனவு பற்றி கூறி ஆச்சரியப்பட்டார். தங்கள் குடும்பத்தில் ஒரு தெய்வ குழந்தை பிறக்கப் போவது உறுதி என்பது அவர்களுக்கு புரிந்துவிட்டது. சந்திராதேவி தங்கள் குலதெய்வமான ராமபிரானை தினமும் வழிபட்டு குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்று வேண்டுவார். சில நாட்களில் அவ்வூரில் கடும் குளிர் மறைந்து வசந்தம் பிறந்தது. மக்கள் மென்மையாக பேசத் துவங்கினர். கெட்டவர்கள் கூட நல்லவர்களாயினர். மக்கள் தங்கள் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபட்டனர். கமார்புகூர் ஊர்மக்கள், தங்களிடமும், இயற்கையிலும் ஏற்பட்ட நல்ல மாற்றங்கள் கண்டு ஆச்சரியமடைந்தனர். அந்த இனிமையான காலகட்டத்தில் அவதரித்தார் பகவான் ராமகிருஷ்ணர். 1836 பிப்ரவரி 17 புதன்கிழமை சூரிய உதிப்பதற்கு சற்று முன்பு சந்திராதேவி அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். உலகில் மிகப் பெரிய மகான்கள் அவதரிக்கும்போது, ஏழைகள் வீட்டில்தான் பிறப்பார்கள் போலும்! கமார்புகூரில் சுதிராம் வசித்த வீட்டில் நெல் அவிக்கும் அடுப்பும், நெல்குத்தும் உரலும் தவிர வேறு எதுவுமே இல்லை. மேலே கூரை வேயப்பட்டிருந்தது.

உலக மக்களுக்கு எளிமையைப் போதிக்க வந்த அந்த மகான், இதுபோன்ற எளிய வீட்டில் பிறந்ததில் ஆச்சரியம் ஏதுமல்ல. குழந்தை பிறந்தவுடன், சந்திராதேவிக்கு பிரசவம் பார்த்த பெண்மணி திடுக்கிட்டு போனாள். தாயருகில் கிடத்தப்பட்டிருந்த குழந்தையை திடீரென காணவில்லை. அவள் எங்கெல்லாமோ தேடிப்பார்த்தாள். தாய் விழித்தவுடன் குழந்தை எங்கே என்றால் என்ன பதில் சொல்வது? அவள் கலங்கிப் போனாள். சுற்றும் முற்றும் தேடிப்பார்த்தாள். என்ன ஆச்சரியம்! அந்த கூரை வீட்டின் அடுப்புக்குள் குழந்தை படுத்திருந்தது. பிறந்த குழந்தை எப்படி நகர்ந்து செல்லும். அதிலும் தாயின் அருகில் கிடத்தப்பட்டிருந்த குழந்தை அடுப்புக்குள் போய் படுத்திருக்கிறது என்றால் இக்குழந்தை ஏதேனும் சக்தி வாய்ந்நததா? இது மாயக்குழந்தையா?மருத்துவச்சிக்கு கை, கால்கள் நடுங்கின. அவள் ஓடிப்போய் குழந்தையை தூக்கி வந்தாள். குழந்தையின் உடல் முழுவதும் அடுப்புச் சாம்பல்! அக்குழந்தை பிறந்தவுடனேயே அந்த சாம்பலை சிவபெருமானின் உடலில் பூசப்படும் திருநீறாகக் கருதி, உருண்டு புரண்டு வந்தது அவளுக்கு புரியவில்லை.மேலும் குழந்தை பிறந்த நேரத்திலிருந்து அழவே இல்லை. ஆறுமாத குழந்தையின் உருவம்போல கனமாகவும் இருந்தது. சுதிராமுக்கு குழந்தை பிறந்த செய்தி அறிவிக்கப்பட்டது. அவர் ஆனந்தம் கொண்டார். சங்கு ஊதப்பட்டது. அந்த காலத்தில் ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால் சங்கு ஊதி வெளியுலகிற்கு தெரிவிப்பார்கள். பிறந்த குழந்தையின் ஜாதகம் கணிக்கப்பட்டது. குழந்தை பிறந்த வேளையைக் கொண்டு அந்த குழந்தை திறமை மிக்கவனாகவும், மற்றவர்களால் போற்றப்படுபவனாகவும், மகானாகவும், எல்லாராலும் வணங்கப்படுபவனாகவும் இருப்பான் என கணிக்கப்பட்டது. ஜோதிடர் சொன்னதைக் கேட்டு சுதிராமுக்கு மிக்க மகிழ்ச்சி.

தன் குழந்தை சிறந்த அறிஞனாக வரப்போகிறான் என்பதை எண்ணி எண்ணி பூரித்தார். கயாவில் தாம் கண்ட கனவின் நினைவாக குழந்தைக்கு அவ்வூர் பெருமாளான கதாதரன் எனப்பெயர் சூட்டினார். அவர் பிறந்தநாளிலிருந்தே பல அதிசயங்கள் நிகழ்ந்தன. அவற்றை கண்டு சந்திராதேவி பயம் கொண்டார். தெய்வமே குழந்தையாக பிறந்திருப்பதால்தான் இத்தகைய அதிசயங்கள் நடக்கிறதோ என அவர் சந்தேகப்பட்டார். குழந்தைக்கு ஏதேனும் பேய் பிடித்திருக்கிறதோ என்றுகூட நினைத்தார். சில வேளைகளில் குழந்தையை தூக்கவே முடியாத அளவிற்கு கனமாக இருக்கும். சில சமயங்களில் மிக மிக இலகுவாக இருக்கும். இப்படியே மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. 1839ம் ஆண்டு மீண்டும் ஒரு பெண் குழந்தையை சந்திராதேவி பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு சர்வமங்களா எனப் பெயர் சூட்டினார். இதன் பிறகு இரண்டுஆண்டுகள் கடந்துவிட்டன. கதாதரன் 5 வயதை எட்டினான். சிறுவயதிலேயே நினைவாற்றல் அதிகமாக இருந்தது. சுதிராமன் தன் குழந்தைக்கு நல்லமுறையில் பிரார்த்தனை பாடல்களை சொல்லிக் கொடுத்தார். ஒருமுறை கேட்டாலே கதாதரன் அதை நன்றாக புரிந்து அப்படியே திரும்பச் சொல்லுவார். அவர் மந்திரங்களை திறம்பட படித்தார். விரைவிலேயே பூஜை புனஸ்காரங்களில் ஈடுபட்டார். மந்திரங்களை அருமையாகச் சொன்னார். சமயச் சடங்குகளில் கலந்து கொள்வார். அவரது புகழ் ஊரின் பல பகுதிகளில் பரவியது. அவர் சொன்னது சொன்னபடி நடக்கும் என்பதால் மக்கள் அவரைத் தேடி வர ஆரம்பித்தனர்.
ராமகிருஷ்ணர் பகுதி -3

காளிதேவியை பணிந்து வணங்கினார் ராம்குமார். அவள் ராம்குமாரின் நாவில் ஏதோ எழுதினாள். இதன்பிறகு ராம்குமாரின் ஒவ்வொரு வார்த்தையும் பலிக்க ஆரம்பித்தது. தனக்கு முதல் குழந்தை பிறந்தவுடன், தன் மனைவி இறந்து விடுவாள் என ராம்குமார் சொல்லியிருந்தார். அதுபோலவே நடக்கவும் செய்தது. மூத்தமகன் குடும்பப் பொறுப்பைச் சுமந்ததால், சுதிராமுக்கு ஆன்மிக வழிபாடுகளில் ஈடுபட அதிக நேரம் கிடைத்தது. எப்படியேனும் ஒருமுறை ராமேஸ்வரம் சென்று வர முடிவு செய்தார். கமார்புகூருக்கும், ராமேஸ்வரத்துக்கும் 2,400 கி.மீ., தூரம். அந்தக்காலத்தில் இந்த தூரத்தைக் சுதிராம் நடந்தே கடந்தார். வழியிலுள்ள எல்லா தலங்களையும் தரிசிக்கவும் செய்தார். 1824ல் இந்தப் பயணம் நிகழ்ந்தது. ராமேஸ்வரம் தரிசனம் முடிய அவருக்கு ஒரு ஆண்டு ஆகிவிட்டது. ஊர் திரும்பியதும், சந்திராதேவி கர்ப்பமானார். 1826ல் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ராமேஸ்வரம் ராமநாதரின் பெயரையே குழந்தைக்கு சூட்டினார். ராமேஸ்வர் என்பது இரண்டாவது மகனின் பெயர்.இதன்பிறகு பதினொரு ஆண்டுகள் சுதிராமின் வாழ்வில் எந்தப்புயலும் இல்லை. அமைதியாக அவரது வாழ்க்கை கழிந்தது. நிறைந்த செல்வமும் கிடைத்தது. ஆயினும், அவர் தனது நண்பர் கோஸ்வாமி கொடுத்த குடிசை வீட்டில் தான் வசித்தார். வயதும் அதிகமாகி விட்டது. கயாவுக்கு தீர்த்த யாத்திரைக்கு செல்ல விரும்பினார் சுதிராம். கயாவில், முன்னோர்களை எண்ணி பிண்டம் கரைத்தால், அவர்கள் பேரின்பம் பெறுவர் என்பது ஐதீகம். அதன் அடிப்படையில், தன் முன்னோர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கயாவுக்கு புறப்பட்டார் சுதிராம். கமார்புகூருக்கும், கயாவுக்கும் 320 கி.மீ., தூரம். இந்த தூரத்தையும் நடந்தே கடந்தார் சுதிராம். 1835 ஜனவரியில் புறப்பட்ட அவர், மார்ச்சில் அங்கு போய் சேர்ந்தார். மூன்று மாதம் நடந்தாலும் களைப்பேதும் தெரியவில்லை.

ராமேஸ்வரத்துக்கே நடந்தவருக்கு இது பெரிய காரியமில்லை என்றாலும், முதுமையிலும் மனம் தளரவில்லை என்பதை நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். குறிப்பாக முதியவர்கள் தாங்கள் தளர்ந்து விட்டது போன்ற உணர்வுக்கு ஆளாகக்கூடாது. சுதிராமின் வாழ்க்கையை தங்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். கயாவில் கதாதரர் என்ற பெருமாள் கோயில் இருந்தது. விஷ்ணுவை வழிபட்டு கோயிலிலேயே தங்கியிருந்தார் சுதிராம். பிண்டம் கரைத்தார். விஷ்ணுவின் பாதங்களில் பிண்டங்கள் இட்டு வழிபட்டார். ஒருநாள் மாலையில், விஷ்ணுவை வழிபட்டு, இரவில் கோயிலிலேயே படுத்து அயர்ந்துறங்கி விட்டார். நள்ளிரவு வேளையில் ஒரு கனவு.அந்தக் கோயிலினுள் இருந்து ஒளிவெள்ளம் பாய்நது எங்கும் பரவியது. ஒரு குரல் கேட்டது.ஹே சுதிராம்! நான் சொல்வதைக் கேள். உலக நன்மைக்காகவும், அநியாயங்களை ஒடுக்கவும் நான் பூவுலகில் அவதரிக்கப் போகிறேன். அதுவும் உன் மகனாகப் பிறக்கப் போகிறேன். நீ வசிக்கும் குடிசை எனக்கு போதுமானது, குரல் அடங்கி விட்டது. விஷ்ணுவின் பாதங்களில் சுதிராம் இட்ட பிண்டங்களை அந்த ஒளி ஏற்றுக் கொள்வது போல் தெரிந்தது. ஒரு ஆசனத்தில் ஏதோ ஒரு தெய்வம் அமர்ந்திருப்பது போல் தோன்றியது.சுதிராம் மகிழ்ச்சிக்கடலில் மிதப்பது போன்ற ஒரு காட்சி. அதே நேம் முக வாட்டத்துடன், வேண்டாம் பிரபு. தாங்கள் என் குடிசையில் அவதரிப்பதா? என்னிடம் என்ன இருக்கிறது, உங்களை வளர்க்க. போயும் போயும் ஒரு பரதேசியின் வீட்டிலா பிறக்க வேண்டும். உங்களுக்கு சேவை செய்யும் போது, ஏதேனும் குறை நிகழ்ந்தால் என்னால் தாங்க முடியாது, என்றார். அந்த தெய்வ ஒளி, அவரைத் தேற்றியது.சுதிராம்! கவலை கொள்ளாதே. அனைத்தும் நல்லதாகவே நடக்கும்,.கனவு கலைந்து விட்டது. சுதிராம் திடுக்கிட்டு எழுந்தார்.

அந்த பரமாத்மாவே என் வீட்டில் அவதரிக்கப் போகிறாரா? இறைவா! உன் கருணையை என்னென்பேன்,. அவர் மகிழ்ச்சியுடன் உறங்கிப் போனார்.இதே நேரத்தில், கமார்புகூரிலும் சில அதிசயங்கள் நிகழ்ந்தன. சந்திராதேவி வீட்டில் தனித்து படுத்திருந்த போது, வீட்டினுள் ஜல்...ஜல்...ஜல்...என சலங்கை ஒலி கேட்டது. அருகில் சுதிராம் அமர்ந்திருப்பது போன்ற ஒரு உணர்வு. ஆனால், அவர் ஒளிப்பிழம்பாகக் காணப்பட்டார். திடுக்கிட்ட சந்திராதேவி விளக்கை ஏற்றி சுற்றுமுற்றும் பார்த்தார். எதுவுமே இல்லை.விடியவிடிய இதே நினைவில் இருந்த அவர் மறுநாள் தன் தோழிகள் பிரசன்னமயி, தனி ஆகியோரிடம் இதைச்சொன்னார். அவர்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்னும் சின்னக்குழந்தையாக இருக்கிறாயே! ஏதேனும் கனவு கண்டிருப்பாய். கவலை கொள்ளாதே. இதற்கு போய் பயப்படலாமா? என சிரித்துக் கொண்டே கூறினர். மறுநாள் அவர், தன் தோழி தனியுடன் சிவாலயத்திற்கு சென்றார். அப்போது பேரொளி ஒன்று புறப்பட்டு வந்தது. சிவாலய வாசலில் நின்ற சந்திராதேவியை நோக்கி அந்த ஒளி வெள்ளம் பாய்ந்தது. சந்திராதேவி வியப்போடு அந்த ஒளியை நோக்கினார். அந்த ஒளிக்கற்றைகள் சிவலிங்கத்தில் இருந்து கிளம்பி பாய்ந்து கொண்டிருந்தது.ஐயோ தனி! இங்கே பார். இது என்ன ஒளி, என்னை நோக்கி வருகிறதே, என அவர் சொல்ல, தனி அதைப் பார்க்க முயல்வதற்குள் அந்த ஒளி சந்திராதேவியாரின் வயிற்றில் ஐக்கியமாகி விட்டது. அவர் மூர்ச்சையாகி விட்டார். தனி பதறிப் போனார். தண்ணீர் தெளித்து தோழியை எழுப்பினார். மலங்க மலங்க விழித்த தோழிக்கு விசிறியால் வீசி, ஆசுவாசப்படுத்தினார். சந்திரா! உன்னிடம் ஏனிந்த மாற்றம். எதைக் கண்டு இப்படி பயப்படுகிறாய். நீ தைரியமாய் இருக்க வேண்டும். நாங்கள் இருக்கிறோம், என ஆறுதல் சொன்னார். சந்திராதேவியார் தான் கண்ட காட்சியை தோழியிடம் சொன்னார்.அட பைத்தியக்காரி! மீண்டும் இதே கதையைச் சொல்கிறாயா? நீ சொல்வது போல ஒளியோ எதுவுமோ தோன்றியிருக்காது. ஏதோ மவ பிரமையில் இவ்வாறு சொல்கிறாய், என்று தேறுதல் சொன்னார்.  ஆனால், வீடு திரும்பிய சந்திராதேவியின் உடலில் மாற்றங்கள் தெரிந்தன. வயிற்றில் ஏதோ மாறுதல்.நான் கர்ப்பம் தரித்திருக்கிறேனா? சந்திராதேவி ஆச்சரியத்தில் மூழ்கினார்.
ராமகிருஷ்ணர் பகுதி -2

அந்த  அன்புக்கரத்திற்கு சொந்தக்காரர் கமார்புகூரில் வசித்த சுகலால் கோஸ்வாமி. அவர் சுதிராமின் நெருங்கிய நண்பர். தன் நண்பனின் கஷ்டகாலத்தில் உதவுவது தனது கடமை என நினைத்தார். தனது ஊருக்கே வந்துவிடும்படி நண்பரை அழைத்தார். சுதிராமிற்கு வேறு வழியில்லை. மனைவி, இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகளுடன் கமார்புகூரில் குடியேறினார். தேரேய்பூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இந்த கிராமம் இருந்தது. கமார் என்ற வங்காள சொல்லுக்கு கொல்லர்கள் என்பது பொருள். புகூர் என்ற சொல்லுக்கு குளம் என்பது பொருள். இவ்வூர் செழிப்புமிக்க கிராமம். தண்ணீர் வசதி அதிகமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் வயல்வெளிகளில் தாவரங்கள் செழித்து வளர்ந்திருந்தன. தாமரைப்பூக்கள் நிறைந்த குளங்கள், ஆறு இக்கிராமத்தில் இருந்தது. கோஸ்வாமி தனது நண்பருக்கு ஒரு ஏக்கர் நிலத்தை கொடுத்தார். அதில் சில குடிசைகளும் இருந்தன. அந்த இடத்திற்கு லட்சுமிஜாலா என பெயர். பல கஷ்டங்களை அனுபவித்தாலும் நடப்பதெல்லாம் பகவான் செயல் என உணர்ந்து இறைநம்பிக்கையை விடாமல் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். துன்பங்கள் தொடரும் வேளையில் சுதிராமின் மனைவி சந்திராதேவி மிகுந்த பதட்டத்திற்கு ஆளானார். அவர் படும் வேதனையைக் கண்டு பொறாத சுதிராம் ஆறுதல் சொல்வார். சந்திரா! இவை சாதாரண துன்பங்கள். நாம் பட்டினி கிடக்கிறோம். பட்டினி என்பது ஒரு நோயல்ல. அதைக்கண்டு கலங்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. எத்தனையோ பேர் செல்வம் இருந்தும் பகவானுக்காக நோன்பிருக்கிறார்கள். அவர்களே பட்டினி கிடக்கும்போது ஏழைகளான நாம் பட்டினி கிடந்தால் என்ன? இறைவன் நம்மை நோன்பிருக்கச் செய்துள்ளார். அது அவரது விருப்பமாக இருக்கிறது. சற்று காலத்தில் நாம் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்புவோம். கவலைப்படாதே! என்பார்.

காலப்போக்கில் நண்பர் கோஸ்வாமி தந்த நிலம் விளையத் தொடங்கியது. சுதிராமின் குடும்பத்தில் பட்டினிக்கு இடமில்லாமல் போனது. எஞ்சிய உணவுப் பொருளை ஏழைகளுக்கு அவர் அளித்துவந்தார். ராமபக்தரான சுதிராம் வயலுக்கு சென்றதும், ஹே.. ராமா! ரகுவீரா! என்று அழைப்பார். அதன்பிறகே கூலியாட்களை வயலுக்குள் இறக்குவார். நடுகையின்போது ராமனின் பெயரை உரக்கச்சொல்லி முதல் நாற்றை நடுவார். தொடர்ந்து பணியாட்கள் வேலை செய்வார்கள். ஒருமுறை பக்கத்து ஊருக்கு ஏதோ பணி நிமித்தமாக சென்றிருந்த சுதிராம் அதை முடித்துவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவரால் நடக்கக்கூட முடியாமல் தளர்வு ஏற்பட்டது. அங்கிருந்த மரத்தடியில் படுத்தார். காற்று இதமாக இருந்தது. மரம் தந்த நிழலின் சுகத்தில் அப்படியே கண்ணயர்ந்துவிட்டார். அப்போது கனவு ஒன்று தோன்றியது. சுதிராம்! நான் சொல்லும் இடத்திற்கு செல். அங்கே கவனிப்பாரின்றி நான் கிடக்கிறேன். என்னை உன் வீட்டிற்கு எடுத்துச்செல், என ஒரு சிறுவனின் வடிவில் தோன்றிய ராமர் சொன்னார். சுதிராம் திடுக்கிட்டு விழித்தார். சற்று தூரம் சென்றார். ராமர் கனவில் சொன்னதுபோலவே ஒரு இடம் தென்பட்டது. அங்கே ஒரு பாம்பு படமெடுத்து நின்றது. அதன்கீழ் ஒரு சாளக்கிரம ராமர்சிலை கிடந்தது. அதை எடுப்பதற்காக சுதிராம் விரைந்தார். பாம்பு அங்கிருந்து சென்றுவிட்டது. சிலையை எடுத்துக்கொண்டு கண்களில் நீர் மல்க வீடு திரும்பினார் சுதிராம். ராமரே தந்த சிலை என்பதால் அவரது பக்தி உணர்வு மிகவும் அதிகரித்தது. அந்தச்சிலையை வீட்டில் வைத்து பூஜித்து வந்தார். அவரது குலதெய்வமான சீதளாதேவி ஒரு சிறுமியின் வடிவில் வந்து தினமும் பூ பறித்து தருவாள். அவளுடன் சுதிராம் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருப்பார். அந்தக்குழந்தை அவரோடு தோட்டத்திற்கு சென்று மரக்கிளைகளை வளைத்துக் கொடுப்பாள். சுதிராம் இலகுவாக மலர்களை பறித்துக்கொள்வார்.

தெய்வத்தை நேரில் தரிசிக்கும் பாக்கியம் கொண்டவரான சுதிராமின் வாழ்வில் மற்றொரு அதிசயமும் நிகழ்ந்தது. கமார்புகூரில் இருந்து 64 கி.மீ. தொலைவில் உள்ள மேதினிப்பூர் என்ற ஊருக்கு சுதிராம் சென்றுகொண்டிருந்தார். வழியில் வில்வ மரம் ஒன்று நின்றது. பொதுவாக அந்தக்காலத்தில் மரத்தில் இலைகள் உதிர்ந்திருக்கும். ஆனால் இந்த மரத்தில் மட்டும் இலைகள் ஏராளமாக இருந்தது சுதிராமிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது சிவபெருமானின் கருணை என்றே நினைத்தார். வில்வ இலைகளை பறித்தார். மேதினிப்பூருக்கு செல்லாமல் மீண்டும் வீட்டிற்கு வந்துவிட்டார். வீட்டில் இருந்த சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட்டார். வெளியூருக்கு புறப்பட்ட காரணத்தையே மறந்துவிட்டார். மறுநாள்தான் அவருக்கு அந்த நினைவே வந்தது. அந்த அளவிற்கு மிகப்பெரிய ராமபக்தராகவும், சிவபக்தராகவும் விளங்கினார் சுதிராம். எந்தச் சூழ்நிலையிலும் அவர் நேர்மை மாறவே இல்லை. யாரிடமும் கடனாகவோ, இலவசமாகவோ எதையும் பெறமாட்டார். ஒழுக்கமற்ற மனிதர்களைக் கண்டாலே ஒதுங்கிப்போவார். அவர் காயத்ரி ஜெபம் செய்யும்போது ஒரு தெய்வீக ஒளி வீசும். கன்னங்களில் கண்ணீர் வழியும். ராமசேவையிலேயே அவரது காலம் கழிந்தது. இதனிடையே மூத்த மகன் ராம்குமாருக்கும், மூத்த மகளுக்கும் திருமணம் நடந்து முடிந்தது. ராம்குமார் ஜோதிடக்கலையில் வல்லவர். தந்தையாரின் தொழிலில் உதவியாக இருந்தார்.  இதனால் குடும்பத்தில் மீண்டும் செல்வவளம் செழித்தது. ராம்குமாரிடமும் தெய்வீகசக்திகள் இருப்பதாக ஊரார் நம்பினர். அவரது ஜோதிடம் சரியாக இருந்ததால் கூட்டம் மொய்த்தது. காளிதேவியை ராம்குமார் வழிபட்டு வந்தார். ஒருமுறை காளி கோயிலுக்கு அவர் சென்றிருந்தார். அப்போது அதிபயங்கர வடிவத்தில் காளிதேவி அவர் முன்பு தோன்றினாள்.
ராமகிருஷ்ணர் பகுதி -1

சத்தியம் தவறாத சுதிராமிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவ்வூரில் மிகப்பெரிய ஜமீன்தார் ராமானந்தர். அவரைப் பகைத்துக்கொண்டு யாராலும் வாழ இயலாது. அவ்வாறு பகைத்துக்கொண்டால் அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு சொத்துக்களைப் பறித்துக்கொண்டு ஊரைவிட்டே விரட்டிவிடுவார். இதே நிலைமைதான் இப்போது சுதிராமிற்கு ஏற்பட்டிருந்தது. சத்தியம் தவறாத உத்தமரான சுதிராம் கோல்கட்டாவிலிருந்து 120 கி.மீ. தொலைவில் அமைந்திருந்த தேரேய்பூர் கிராமத்தில் வசித்தார். அவரது முன்னோர்கள் புகழ்பெற்று விளங்கினர். ராமபிரான் அவர்களின் குலதெய்வம். இருந்தாலும் சிவபெருமானையும் வழிபடத் தவறுவதில்லை. 50 ஏக்கர் நிலத்திற்கு சுதிராமும், அவரது இரண்டு தம்பிகளும் சொந்தக்காரர்கள். ஏழைகளுக்கு இரக்கத்துடன் உதவுவார்கள். பிறர் துன்பம் கண்டு மனமுருகும் தன்மை கொண்டவர்கள். இக்குடும்பத்தின் புகழ் பக்கத்து கிராமங்களில்கூட பரவியிருந்தது. மாணிக்ராம் சட்டர்ஜி என்பவர்தான் இக்குடும்ப தலைவராக இருந்தார். அவரது மகன்தான் சுதிராம். சுதிராமிற்கு பிறகு நிதிராம், கனைராம் என்ற தம்பிகளும், ராம்சிலா என்ற தங்கையும் பிறந்தார்கள். இவர்களில் சுதிராம் பக்தியில் மிகுந்த நாட்டமுள்ளவர். ராமபிரானைத் துதித்துக்கொண்டே இருப்பார். காலையில் ராமனை வணங்கிய பிறகுதான் தண்ணீர்கூட குடிப்பார். தியாக உணர்வு மிக்கவர். உண்மை மட்டுமே பேசுவார். அவருக்கு இயற்கையாகவே ஆசைகள் மனதில் இல்லை. ஒழுக்கம் தவறி நடப்பவர்களைக் கண்டால் ஒதுங்கிப் போய் விடுவார். அவர்களைப்பற்றி வேதனையோடு பேசுவார். சாஸ்திர சம்பிரதாயங்களில் அதிக நாட்டம் கொண்டவர்.

அக்கால அந்தணர் மரபுப்படி, இளமையிலேயே அவருக்கு ஒரு சிறுமியை மணம் செய்து வைத்தனர். ஆனால், அச்சிறுமி மனைவி சில நாட்களில் இறந்து போனார். மீண்டும் இருபத்தைந்தாம் வயதில் சந்திரமணிதேவி என்னும் நற்குண மங்கையை மணம் செய்துகொண்டார். சந்திராவும் தன் கணவரைப் போலவே பக்திப்பிழம்பாக இருந்தார். கள்ளம் கபடமற்றவர். பிறரது துன்பங்களை வலியச்சென்று ஏற்றுக்கொள்வார். ஒரு சுமைதாங்கியாக அவர் திகழ்ந்தார். 1805-ல் இத்தம்பதியருக்கு ராம்குமார் என்ற மகன் பிறந்தான். 1810-ல் காத்யாயனி என்ற மகள் பிறந்தாள். இதன்பிறகு 16 ஆண்டுகள் கழித்து ராமேஸ்வர் என்ற மகன் பிறந்தான். மூத்தவர் என்ற முறையில், குடும்பப் பொறுப்பு சுதிராமின் கைவசம் இருந்தது. உழைப்பில் வல்லவரான அவர் குடும்பத்திற்காக ஏராளமான சொத்துக்களைச் சேர்த்தார். செழுமைக்கு பஞ்சமில்லை. ஆனால், இந்த அழகிய குடும்பத்தின் மீது யார் கண்பட்டதோ; அல்லது சுதிராம் ராமனின் பக்தர் என்பதால், இயற்கையாகவே துன்பம் ஆட்கொண்டதோ தெரியவில்லை. அவரது குடும்பத்திற்கு வந்தது சோதனை. அப்போது தேரேய்பூர் கிராமம் ஜமீன்தார்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு இருந்தது. அவர்கள் பிரிட்டிஷ்காரர்களுக்கு மொத்தமாக வரியை கட்டிவிட்டு கிராமத்தை தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வருவார்கள். அவர்கள் வைத்தது தான் சட்டம். அவர்கள் விதித்தது தான் வரி. தேரேய்பூர் கிராமம் ராமானந்தராய் என்ற ஜமீன்தாரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அவர் பெரும் கொடுமைக்காரர்.

அவ்வூரில் வசித்த ஏழை ஒருவன் அவரது கட்டளைக்கு கீழ்ப்படிய மறுத்தான். அவன்மீது பொய்வழக்கு தொடர்ந்தார் ராய். தனது வழக்கிற்கு சாட்சிகளை அவர் தேடவேண்டி வந்தது. அவ்வூரிலேயே சத்தியவான் என கருதப்பட்டவர் சுதிராம். எனவே அவரை சாட்சிசொல்ல அனுப்பினால், அந்த சாட்சியம் நியாயமானதாகக் கருதப்பட்டு, ஏழைக்கு தக்க தண்டனை கிடைக்கும் என அவர் நம்பினார். சுதிராமிற்கு ஆள் அனுப்பினார். நான் சொல்வதை நீ கேட்க வேண்டும். அந்த ஏழைக்கு எதிராக நீ நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வேண்டும். அவ்வாறு செய்தால் நான் உனக்கு வேண்டிய வசதி செய்து தருகிறேன் என்றார். சத்தியம் தவறாத சுதிராம் இதற்கு மறுத்தார். ஏய் சுதிராம்! நீ சாட்சி சொல்ல மறுத்தால் அந்த ஏழையின் கதிதான் உனக்கும் ஏற்படும். உன்மீதும் பொய் வழக்கு போட்டு உன் சொத்துக்களைப் பறிப்பேன். உன் குடும்பத்தை நடுத்தெருவிற்கு கொண்டு வந்துவிடுவேன். நீ மட்டுமின்றி உனது சகோதரர்களும் அவர்களது குடும்பமும் தெருவிற்கு வந்துவிடும், ஜாக்கிரதை, என மிரட்டினார் ராமானந்தர்.

சுதிராம் அவரது மிரட்டலுக்கு பணியவில்லை. என்னால் ஒரு ஏழையின் குடும்பம் அழியக்கூடாது. என் குடும்பம் வேண்டுமானால் அழிந்து போகட்டும், என ஆணித்தரமாகச் சொல்லி விட்டார். தன் குடும்பமே அழியப்போகிறது என தெரிந்தும் சத்தியம் தவறக்கூடாது என்பதில் உறுதியாக நின்று விட்டார். ஆனால், அந்த ஜமீன்தாரின் செல்வாக்கின் முன் சாதாரண பணக்காரரான சுதிராமின் சத்தியம் எடுபடவில்லை. ராமானந்தர் நினைத்ததை சாதித்துவிட்டார். சுதிராம்மீது பொய்வழக்கு தொடுக்கப்பட்டது. அவரது வீடு, 50 ஏக்கர் நிலம் அத்தனையும் பறிமுதல் செய்யப்பட்டன. அவை ராமானந்தருக்கு சொந்தமாகிவிட்டன. தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த வீட்டை விட்டு குடும்பத்தினர் கண்ணீருடன் வெளியேறினர். ஊர்மக்கள் அவர்கள்மீது பரிதாபப்பட்டார்களே தவிர, ஜமீன்தாருக்கு பயந்து எவ்வித உதவியும் செய்ய முன்வரவில்லை. சுதிராமின் இரண்டு சகோதரர்களும் அவரவர் மாமனார் வீட்டிற்கு சென்றுவிட்டனர். 40 வயதே நிரம்பிய சுதிராம் மனைவி, குழந்தைகளுடன் நட்ட நடுரோட்டில் தத்தளித்து நின்றார். அப்போது ஒரு கரம் அவரது தோளைப் பற்றியது..
சிவானந்தர் சீரிய வாழ்விலிருந்து ...

கொடுத்து மகிழ்பவர்

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் அவதரித்தவர் சிவானந்தர். பலரும் இவரைக் குருவாக ஏற்றனர். இவரைக் காணவரும் பக்தர்கள் கூடை கூடையாகப் பழங்களைக் கொண்டுவந்து சமர்ப்பித்துக் கொண்டே இருப்பர். அவரும் அவற்றை தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கும், சீடர்களுக்கும் வழங்கிக் கொண்டே இருப்பார். உலகின் பல பாகங்களில் இருந்தும் பணமும், அன்பளிப்புகளும் ஆஸ்ரமத்திற்கு வரும். அதன்மூலம் துறவிகளுக்கு வேண்டிய உணவு, மருத்துவ உதவி, சிறந்த நூல்கள் என்று வேண்டியவற்றைச் செய்து மகிழ்ச்சி காண்பார். தம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுத்து மகிழவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் சிவானந்தரை, கவியோகி சுத்தானந்த பாரதியார், கிவ்ஆனந்தர் (கொடுத்து மகிழ்பவர்) என்று போற்றினார்.

பிறருக்குச் சொல்லிக் கொடுங்கள்

இடைவிடாத ஆன்மிகப்பயிற்சியாலும், தியானத்தாலும் சிவானந்தரிடம் எப்போதும் ஞானம் குடிகொண்டிருக்கும். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று எப்போதும் பரந்த மனப்பான்மையுடன் ஞானவிஷயங்களை வழங்கிக்கொண்டிருப்பார். இருபது முக்கிய ஆன்மிக போதனைகள், நாற்பது நல்லுரைகள், சாதன தத்துவம் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். ஞான தானத்தை எப்போதும் எல்லோருக்கும் கொடுங்கள்! இவ்வாறு செய்தால், யார் யாருக்கு எதெது வேண்டுமோ அத்தனையையும் அவர்களுக்குக் கொடுத்தவர்கள் ஆவீர்கள், என்கிறார் சிவானந்தர்.

நாத்திகனுக்கே முக்கியத்துவம்

தரம் குறைந்த செய்திகளுடன் வரும் பத்திரிகைகளுக்கும் சிவானந்தர் கட்டுரை அனுப்புவது வழக்கம். இதனால் சிவானந்தரை பலரும் விமர்சித்தனர். சிலர் கண்டனமே தெரிவித்தனர். அந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த சிவானந்தர், ஒரே தராசில் ஆன்மிக விஷயத்தையும், காமச் சுவையையும் எடை போட்டுப் பார்க்கும் வாசகர்கள் விரைவிலேயே ஆன்மிகவாதிகளாக மாறிவிடுவார்கள். முதலில் நாத்திகர்களையும், நம்பிக்கையற்றவர்களையும் தான், நான் ஆன்மிகவாதியாக மாற்ற வேண்டும், என்று பதிலளித்தார். அவரது கட்டுரைகளைப் படித்து விட்டு, இந்தியா, இலங்கை, பர்மா, மலேசிய நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் அன்பர்கள் சிவானந்தரை நாடி வந்தனர்.

வாங்க குழந்தையே!

யாரும் எளிதில் அணுகும் விதத்தில் சிவானந்தர் மிக எளிமையான மகானாக வாழ்ந்தார். தரிசனநேரம் என்று தனியாக நேரம் எதையும் அவர் வைத்துக் கொள்ளவில்லை. தம்மிடம் வரும் பக்தர்களிடம் அவரவருடைய தாய்மொழியிலேயே பேசுவார். தமிழ், ஆங்கிலம், இந்தி, மலாய், ஜெர்மன், பிரெஞ்ச் ஆகிய மொழிகளில் வரவேற்று உபசரிப்பார். சிறுகுழந்தைகளையும் நீங்கள் என்று மதிப்புடன் உபசரிப்பார். ஒருமையில் அழைப்பதை அவர் விரும்புவதில்லை. மனிதர் மட்டுமில்லாமல் பறவை, விலங்குகளிடம் கூட அன்புடன் கவனிப்பார். பசித்த உயிர்களுக்கு உணவிடுவதை ஒரு தாய்போல செய்வதில் அவருக்கு இணை அவரே. தன்னை பெரிய மகானாக எண்ணிக்கொள்ளாமல் சாதாரண மனிதராகவே பழகுவார்..

கொலைகாரனிடமும் இறைவன்

1950, ஜனவரி 8 மாலையில், சிவானந்தரின் ஆஸ்ரமத்தில் சத்சங்க கூட்டம் நடந்து கொண்டிருந்தது. மின்விளக்கு அதிகம் இல்லாத காலம் அது. அரிக்கேன் விளக்கு எரிந்து கொண்டிருந்ததால் வெளிச்சம் மங்கலாக இருந்தது. அப்போது கோவிந்தன் என்னும் முரடன் சிவானந்தரைக் கொல்லும் நோக்கத்தில் கோடரியால் தாக்கினான். ஆனால், சிவானந்தர், தலைப்பாகை அணிந்திருந்ததால் அடி விழவில்லை. போலீசார் உடனே வந்து அவனைப் பிடித்தும் கூட அவனை தண்டிக்க சிவானந்தருக்கு மனமில்லை. பழங்கள், விபூதிபிரசாதம் கொடுத்து அவனை வழியனுப்பினார். திருடர், கொலைகாரர்களிடமும் இறைவன் இருக்கிறார் என்று எல்லாருக்கும் உபதேசம் செய்தார்.

மவுனமான நேரம் மனதில் ஏது பாரம்

*  எளிமையான அதே சமயத்தில் சத்துள்ள ஆகாரங்களை உண்ணுங்கள். உண்ணும் முன் கடவுளுக்கு சமர்ப்பணம் செய்யுங்கள். சரிவிகித உணவை உட்கொள்வதும் அவசியம்.
*  மிளகாய், பூண்டு, புளி போன்ற உணவுவகைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். காபி, டீ, மாமிசம், மது போன்ற உணவுவகைகளை முழுமையாக தவிர்த்து விடுங்கள்.
*  தினமும் பத்து பதினைந்து நிமிடங்களாவது யோகசனப் பயிற்சியோ, உடற்பயிற்சியோ செய்யுங்கள். நீண்ட தூர நடைபயிற்சியை அன்றாடம் மேற்கொள்ளுங்கள். முடிந்தால், சுறுசுறுப்பை உண்டாக்கும் விளையாட்டில் ஈடுபடுங்கள்.
*  தினமும் இரண்டு மணி நேரமாவது மவுனத்தை கடைபிடியுங்கள். விடுமுறை நாட்களில் நான்கு மணி முதல் எட்டுமணி நேரம்வரை மவுனம் நல்லது. இது மனதுக்கு நல்லது. கண், வாய், செவி, மூக்கு, நாக்கு ஆகியவற்றை முடிந்தளவுக்கு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது.
*  உண்மையே பேசுங்கள்.இரக்கமும், கனிவும் கொண்டிருங்கள். எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். ஒளிவுமறைவின்றி திறந்த மனத்துடன் எல்லோரிடமும் பழகுங்கள்.
*  நெஞ்சில் நேர்மையைப் பின்பற்றி வாழுங்கள். நன்மைக்கான நேரம் வரும் வரை காத்திருங்கள். உழைத்துப் பணம் சேருங்கள். நியாயமான வழியில் வராத எப்பொருளையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். பெருந்தன்மை உணர்வுடன் செயல்படுங்கள்.
*  கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். சகிப்புத்தன்மையுடன் பிறர் குற்றங்களை மன்னிக்கவும் மறக்கவும் செய்யுங்கள். நம்மைச் சுற்றி இருப்பவர்களுடனும், சூழ்நிலைகளுடனும் ஒத்துப்போக கற்றுக் கொள்ளுங்கள்.
* தீயவர்களின் தொடர்பை விட்டு விலகுங்கள். உங்கள் சாதனைகளையும், ஆன்மிக எண்ணங்களையும் குறை கூறுபவர்கள், கடவுள் நம்பிக்கை அற்றவர்களிடம் இருந்து விலகி விடுங்கள்.
*  உங்கள் தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடைமைகளை அளவோடு வைத்துக் கொள்ளுங்கள். எளிய வாழ்க்கையையும், உயர்ந்த சிந்தனையையும் பெற்று வாழுங்கள்.
*  பிறருக்கு நன்மை செய்து வாழ்வது தான் உயர்ந்த வாழ்வு. தன்னலமில்லாமல் பிறருக்கு சேவை செய்யுங்கள். நீங்கள் செய்யும் பணியையோ, தொழிலையேயோ கடவுளுக்குச் செய்யும் வழிபாடாகச் செய்யுங்கள். அதை அவருக்கே அர்ப்பணித்து விடுங்கள்.
*  உங்கள் வருமானத்தில் இரண்டு முதல் பத்து சதவீதத்தை தானம் செய்யுங்கள். உலகமே உங்கள் குடும்பம் என்ற பரந்த நோக்குடன் வாழுங்கள்.
*  பணிவுடன் எல்லா உயிர்களையும் மானசீகமாக வணங்குங்கள். ஆடம்பரம், போலி கவுரவம், டம்பம், கர்வம் போன்றவற்றை அறவே கைவிடுங்கள்.
*  கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளுங்கள். கடவுளிடம் பூரண சரணாகதி அடைந்து விடுங்கள். எல்லா நிலைமையிலும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.
*  கண்ணில் காணும் அனைத்திலும் கடவுளையே காணுங்கள். காலை எழும்போதில் இருந்தே கடவுள் சிந்தனையோடு அன்றாடப் பணிகளைத் தொடங்குங்கள்.
* அன்றாடம் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டு தெய்வப் பாடல்கள் பாடுங்கள். எளிய மந்திரங்களைச் சொல்லுங்கள். வாரம் ஒருமுறையாவது கோயிலுக்குச் சென்று மனதார வழிபாடு செய்யுங்கள்.
-இதயத்தை இதமாக்குகிறார் சிவானந்தர்
ராமகிருஷ்ணர் பகுதி -2

அந்த  அன்புக்கரத்திற்கு சொந்தக்காரர் கமார்புகூரில் வசித்த சுகலால் கோஸ்வாமி. அவர் சுதிராமின் நெருங்கிய நண்பர். தன் நண்பனின் கஷ்டகாலத்தில் உதவுவது தனது கடமை என நினைத்தார். தனது ஊருக்கே வந்துவிடும்படி நண்பரை அழைத்தார். சுதிராமிற்கு வேறு வழியில்லை. மனைவி, இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகளுடன் கமார்புகூரில் குடியேறினார். தேரேய்பூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இந்த கிராமம் இருந்தது. கமார் என்ற வங்காள சொல்லுக்கு கொல்லர்கள் என்பது பொருள். புகூர் என்ற சொல்லுக்கு குளம் என்பது பொருள். இவ்வூர் செழிப்புமிக்க கிராமம். தண்ணீர் வசதி அதிகமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் வயல்வெளிகளில் தாவரங்கள் செழித்து வளர்ந்திருந்தன. தாமரைப்பூக்கள் நிறைந்த குளங்கள், ஆறு இக்கிராமத்தில் இருந்தது. கோஸ்வாமி தனது நண்பருக்கு ஒரு ஏக்கர் நிலத்தை கொடுத்தார். அதில் சில குடிசைகளும் இருந்தன. அந்த இடத்திற்கு லட்சுமிஜாலா என பெயர். பல கஷ்டங்களை அனுபவித்தாலும் நடப்பதெல்லாம் பகவான் செயல் என உணர்ந்து இறைநம்பிக்கையை விடாமல் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். துன்பங்கள் தொடரும் வேளையில் சுதிராமின் மனைவி சந்திராதேவி மிகுந்த பதட்டத்திற்கு ஆளானார். அவர் படும் வேதனையைக் கண்டு பொறாத சுதிராம் ஆறுதல் சொல்வார். சந்திரா! இவை சாதாரண துன்பங்கள். நாம் பட்டினி கிடக்கிறோம். பட்டினி என்பது ஒரு நோயல்ல. அதைக்கண்டு கலங்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. எத்தனையோ பேர் செல்வம் இருந்தும் பகவானுக்காக நோன்பிருக்கிறார்கள். அவர்களே பட்டினி கிடக்கும்போது ஏழைகளான நாம் பட்டினி கிடந்தால் என்ன? இறைவன் நம்மை நோன்பிருக்கச் செய்துள்ளார். அது அவரது விருப்பமாக இருக்கிறது. சற்று காலத்தில் நாம் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்புவோம். கவலைப்படாதே! என்பார்.

காலப்போக்கில் நண்பர் கோஸ்வாமி தந்த நிலம் விளையத் தொடங்கியது. சுதிராமின் குடும்பத்தில் பட்டினிக்கு இடமில்லாமல் போனது. எஞ்சிய உணவுப் பொருளை ஏழைகளுக்கு அவர் அளித்துவந்தார். ராமபக்தரான சுதிராம் வயலுக்கு சென்றதும், ஹே.. ராமா! ரகுவீரா! என்று அழைப்பார். அதன்பிறகே கூலியாட்களை வயலுக்குள் இறக்குவார். நடுகையின்போது ராமனின் பெயரை உரக்கச்சொல்லி முதல் நாற்றை நடுவார். தொடர்ந்து பணியாட்கள் வேலை செய்வார்கள். ஒருமுறை பக்கத்து ஊருக்கு ஏதோ பணி நிமித்தமாக சென்றிருந்த சுதிராம் அதை முடித்துவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவரால் நடக்கக்கூட முடியாமல் தளர்வு ஏற்பட்டது. அங்கிருந்த மரத்தடியில் படுத்தார். காற்று இதமாக இருந்தது. மரம் தந்த நிழலின் சுகத்தில் அப்படியே கண்ணயர்ந்துவிட்டார். அப்போது கனவு ஒன்று தோன்றியது. சுதிராம்! நான் சொல்லும் இடத்திற்கு செல். அங்கே கவனிப்பாரின்றி நான் கிடக்கிறேன். என்னை உன் வீட்டிற்கு எடுத்துச்செல், என ஒரு சிறுவனின் வடிவில் தோன்றிய ராமர் சொன்னார். சுதிராம் திடுக்கிட்டு விழித்தார். சற்று தூரம் சென்றார். ராமர் கனவில் சொன்னதுபோலவே ஒரு இடம் தென்பட்டது. அங்கே ஒரு பாம்பு படமெடுத்து நின்றது. அதன்கீழ் ஒரு சாளக்கிரம ராமர்சிலை கிடந்தது. அதை எடுப்பதற்காக சுதிராம் விரைந்தார். பாம்பு அங்கிருந்து சென்றுவிட்டது. சிலையை எடுத்துக்கொண்டு கண்களில் நீர் மல்க வீடு திரும்பினார் சுதிராம். ராமரே தந்த சிலை என்பதால் அவரது பக்தி உணர்வு மிகவும் அதிகரித்தது. அந்தச்சிலையை வீட்டில் வைத்து பூஜித்து வந்தார். அவரது குலதெய்வமான சீதளாதேவி ஒரு சிறுமியின் வடிவில் வந்து தினமும் பூ பறித்து தருவாள். அவளுடன் சுதிராம் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருப்பார். அந்தக்குழந்தை அவரோடு தோட்டத்திற்கு சென்று மரக்கிளைகளை வளைத்துக் கொடுப்பாள். சுதிராம் இலகுவாக மலர்களை பறித்துக்கொள்வார்.

தெய்வத்தை நேரில் தரிசிக்கும் பாக்கியம் கொண்டவரான சுதிராமின் வாழ்வில் மற்றொரு அதிசயமும் நிகழ்ந்தது. கமார்புகூரில் இருந்து 64 கி.மீ. தொலைவில் உள்ள மேதினிப்பூர் என்ற ஊருக்கு சுதிராம் சென்றுகொண்டிருந்தார். வழியில் வில்வ மரம் ஒன்று நின்றது. பொதுவாக அந்தக்காலத்தில் மரத்தில் இலைகள் உதிர்ந்திருக்கும். ஆனால் இந்த மரத்தில் மட்டும் இலைகள் ஏராளமாக இருந்தது சுதிராமிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது சிவபெருமானின் கருணை என்றே நினைத்தார். வில்வ இலைகளை பறித்தார். மேதினிப்பூருக்கு செல்லாமல் மீண்டும் வீட்டிற்கு வந்துவிட்டார். வீட்டில் இருந்த சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட்டார். வெளியூருக்கு புறப்பட்ட காரணத்தையே மறந்துவிட்டார். மறுநாள்தான் அவருக்கு அந்த நினைவே வந்தது. அந்த அளவிற்கு மிகப்பெரிய ராமபக்தராகவும், சிவபக்தராகவும் விளங்கினார் சுதிராம். எந்தச் சூழ்நிலையிலும் அவர் நேர்மை மாறவே இல்லை. யாரிடமும் கடனாகவோ, இலவசமாகவோ எதையும் பெறமாட்டார். ஒழுக்கமற்ற மனிதர்களைக் கண்டாலே ஒதுங்கிப்போவார். அவர் காயத்ரி ஜெபம் செய்யும்போது ஒரு தெய்வீக ஒளி வீசும். கன்னங்களில் கண்ணீர் வழியும். ராமசேவையிலேயே அவரது காலம் கழிந்தது. இதனிடையே மூத்த மகன் ராம்குமாருக்கும், மூத்த மகளுக்கும் திருமணம் நடந்து முடிந்தது. ராம்குமார் ஜோதிடக்கலையில் வல்லவர். தந்தையாரின் தொழிலில் உதவியாக இருந்தார்.  இதனால் குடும்பத்தில் மீண்டும் செல்வவளம் செழித்தது. ராம்குமாரிடமும் தெய்வீகசக்திகள் இருப்பதாக ஊரார் நம்பினர். அவரது ஜோதிடம் சரியாக இருந்ததால் கூட்டம் மொய்த்தது. காளிதேவியை ராம்குமார் வழிபட்டு வந்தார். ஒருமுறை காளி கோயிலுக்கு அவர் சென்றிருந்தார். அப்போது அதிபயங்கர வடிவத்தில் காளிதேவி அவர் முன்பு தோன்றினாள்.
🚨🙏🚨🙏🚨🙏🚨🙏🚨   🚨🚨  #நாசூக்கு_மிக_மிக_அவசியம் 
#ஞானிகளுக்கு_கூட...!

பிராமணர்கள் கடல் கடந்து போகக் கூடாது என்பது அந்தக் கால ஆச்சாரமாம் ... அதை ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன்...!

அப்படி கடல் கடந்து வெளிநாடு போய் வந்தவர்களுக்கு , காஞ்சி மஹா பெரியவர் தன் கையால் தீர்த்தம் கொடுப்பது இல்லையாம் ... அதையும் கேள்விப்பட்டிருக்கிறேன்...!

ஆனால்.. இந்த "நாசூக்கு" சம்பவத்தை இப்போது தான் நான் கேள்விப்படுகிறேன்..!

# ஒரு தடவை எம்.எஸ். சுப்புலக்ஷ்மி – சதாசிவம் தம்பதிகள் கச்சேரிக்காக வெளிநாடு போய் விட்டு திரும்பி வந்தவுடன் ... நேராக காஞ்சி மஹா பெரியவரை தரிசனம் செய்ய வந்து விட்டார்கள்...!

அவர்கள் வந்த  அந்த வேளையிலே பெரியவர் தன் கையாலேயே பக்தர்கள் எல்லாருக்கும் வரிசையாக  தீர்த்தம் கொடுத்துக் கொண்டிருந்தாராம்...!

சற்றும் யோசிக்காமல் , சதாசிவமும் தீர்த்தம் வாங்க வரிசையில் நின்று விட்டாராம்...
[அவருக்கு இந்த ஆச்சாரம் ,அனுஷ்டானம் எல்லாம் அந்த சமயத்தில் எப்படி மறந்து போனதோ..தெரியவில்லை..! ]

சதாசிவத்துக்கு பின்னால்  ரா.கணபதி என்ற ஆன்மீக எழுத்தாளர் நின்று கொண்டிருக்கிறார்..!

[இவர்தான் காஞ்சிப் பெரியவர் சொல்லச் சொல்ல அவற்றைத் தொகுத்து "தெய்வத்தின் குரல்” என்ற நூலை எழுதியவர்]

காஞ்சி மடத்துக்கு ரொம்ப நெருக்கமான அவருக்குத் தெரியும் ... கடல் கடந்து போய்விட்டு வந்த பிராம்மணர்களுக்கு பெரியவர் தன் கையால் அபிஷேக தீர்த்தம் தருவது சாஸ்த்திர விரோதம் ...

அதனால் கண்டிப்பாக கொடுக்க மாட்டார் என்று..!

ஆனால்....இதை எப்படி நாசூக்காக சதாசிவத்துக்கு எடுத்துச் சொல்வது..?

இப்போது ரா.கணபதிக்கு திக் திக்....
ஆனால், சதாசிவமோ இதைப் பற்றி எதுவும் சிந்திக்காமல் ,
ரொம்ப ரொம்ப சந்தோஷமாக ,பெரியவரை நோக்கி கியூவில் ......... முன்னேறிக் கொண்டே இருக்கிறார் ...

அவர் பக்கத்தில் நெருங்க நெருங்க , ரா.கணபதிக்கு “பக் பக்”....

மஹா பெரியவர் , சதாசிவத்துக்கு மட்டும் தீர்த்தம் கொடுக்காமல் விட்டு விட்டால் சதாசிவம் மனசு புண்பட்டுப் போவாரே..?

இந்த இக்கட்டான சூழ்நிலையை
எப்படி இங்கிதமாக சமாளிப்பது ?

ஊஹூம்..இனி அதைப் பற்றி யோசித்துப் பலன் இல்லை..!

வரிசை நகர்ந்து.......நகர்ந்து.....நகர்ந்து.....
இதோ... சதாசிவம்  ,காஞ்சி மஹா  பெரியவர் முன் ,
குனிந்து பணிவோடு பவ்யமாக தீர்த்தத்துக்காக கை நீட்டி நிற்கிறார் ...

படபடக்கும் இதயத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறார் ரா.கணபதி...!

நீட்டிய கைகளோடு சதாசிவம் நின்று கொண்டிருக்க....

மஹா பெரியவர் , மிக இயல்பாக தீர்த்த பாத்திரத்தை கீழே வைத்து விட்டு ,
சற்றே திரும்பி ... அவருக்கு அருகிலிருந்த தேங்காயை எடுத்து தரையில் “பட்” என்று தட்டி உடைத்து....அதிலிருந்த இளநீரை சதாசிவத்தின் கைகளில் விட்டு விட்டு சொன்னாராம் :

“இன்னிக்கு உனக்கு ஸ்பெஷல் தீர்த்தம்!”

அசந்து விட்டாராம் ரா.கணபதி...!

ஆஹா...!!!
 என்ன ஒரு இயல்பான இங்கித சமாளிப்பு ....
நாகரிக நாசூக்கு .!

இளநீரை ஏந்தியபடி நின்ற சதாசிவத்தின் முகத்தில் ஏகப்பட்ட பூரிப்பாம்...!

பக்கத்தில் நின்ற ரா.கணபதியிடம் திரும்பி ..
திருப்தியோடு சொன்னாராம் :
“பாத்தியா..? இன்னிக்கு பெரியவா எனக்கு மட்டும் ஸ்பெஷலா தீர்த்தம் கொடுத்துருக்கா... ”

ரா.கணபதி , மஹா பெரியவர் முகத்தைப் பார்க்க ... அதில் மந்தஹாசப் புன்னகை...!

 ஆம் ....  மஹா பெரியவர் சாஸ்திரத்தையும் மீறவில்லை..!
மற்றவர் மனசு நோகும்படி நடந்து கொள்ளவும் இல்லை...!
இதற்குப் பெயர்தான் “நாசூக்கு”

# இந்த  நாசூக்கு மிக மிக அவசியம் ...
ஞானிகளுக்கு கூட...!

# நமது பேச்சு , மற்றும் பழக்கவழக்கங்களில்
மற்றவரைப் புண்படுத்தாத தன்மை...
மென்மை..
இங்கிதம்..

🚨🙏🚨அதுவே தெய்வீகம்...!
கிருஷ்ண சைதன்யர்

விருந்தாவனம்.. டில்லி அருகிலுள்ள ஒரு கிராமம். இங்கு மட்டும் இப்போது 5 ஆயிரம் கிருஷ்ணர் கோயில்கள் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இங்கே கிருஷ்ணருடன் ராதையும் எழுந்தருளியிருக்கிறாள். இந்தளவுக்கு ராதையின் மீது கிருஷ்ணருக்கு என்ன பிரியம்? இவ்வுலகில் எத்தனையோ காதலர்கள் உள்ளனர். ஒவ்வொரு கணவன் மனைவியும் கூட காதலர்களே. இவர்களெல்லாம் பகலில் பணத்தைப் பற்றி பேசுகிறார்கள். இரவில் சுகத்தைப் பற்றி பேசுகிறார்கள். இது தான் வாழ்க்கை; இந்த சக்கரம் ஒழுங்காக உருண்டு ஓடினாலே போதும் எனக் கருதுகிறார்கள். இவர்கள் நூறாண்டுகளே வாழ்கிறார்கள் என வைத்துக் கொள்வோமே. ஒரு நாளாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கும். வள்ளுவரின் மனைவி வாசுகி கணவர் என்ன செய்தாலும் கண்டு கொள்ளாமல் தான் இருந்தார். ஆனால், அவர்கூட வாழ்வின் கடைசி நாளில், அவர் செய்த சில செய்கைகள் பற்றி கேள்விகள் கேட்டாராம். ஆனால், ராதா அப்படியல்ல. அவள் பேசினால் கண்ணன் பேசியததாகத் தான் நினைப்பாள். பாடினால் கண்ணன் பாடியாகத்தான் நினைப்பாள். சாப்பிட்டால் கண்ணன் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகத் தான் கருதுவாள். அவளது நெஞ்சம் அந்த பரந்தாமனுக்கு மட்டுமே சொந்தமாக இருந்தது. பிறந்தது முதல் கண் விழியாமலே இருந்த அவள், கண்ணனை அவரது அன்னை அவளது வீட்டுக்கு எடுத்து வந்த போது தான் முதன் முதலாக கண்ணைத் திறந்து பார்த்தாளாம். அதன்பிறகு அவரது திருவடிகளைத் தவிர வேறெந்த நினைப்புமில்லை. அவளது இதயம் கிருஷ்ணா என்ற நான்கெழுத்து மந்திரத்தில் மூழ்கிக் கிடந்தது.

கிருஷ்ண பரமாத்மாவுக்கோ அவளது பிரேமையை மதிப்பிட அளவுகோலே கிடைக்கவில்லை. ஊரில் எல்லாரையும் சோதிக்கும் அந்த பரந்தாமனுக்கு அவளுக்கு சோதனை கொடுக்க வாய்ப்பே கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவருக்கு அவளது காதல் மீது பொறாமையே ஏற்பட்டு விட்டது. இப்படி ஒருத்தி நம்மைக் காதலிக்கிறாளே... நம்மை அடையத் துடிக்கிறாளே...இவள் தரும் அன்பை என்னால் தாங்கவே இயலவில்லை. இவள் தரும் காதல் சுவையை நான் அனுபவிக்கிறேன். அனுபவிக்கும் எனக்கே இவ்வளவு சுகம் என்றால், அதைக் கொடுக்கும் உனக்கு, எவ்வளவு சுகமாய் இருக்கும். அதை அனுபவித்து உணர்ந்து கொள்ளப் போகிறேன். அது மட்டுமல்ல. உலகத்து மக்களெல்லாம் என்னை அடையத் துடிக்கிறார்கள். என்னை அடைவதே இன்பமென கருதுகிறார்கள். அப்படி என்ன இன்பம் அதில் இருக்கிறது என்பதையும் அனுபவித்து தெரிந்து கொள்ளப் போகிறேன், என்று தமக்குள் அங்கலாய்த்தார். அது மட்டுமல்ல! கிருஷ்ணர் இப்பூமியில் அவதரிக்க துடித்தமைக்கு இன்னொரு முக்கிய காரணமும் இருந்தது. இந்த கலியுகத்தில், இவ்வுலகில் இனி மந்திரங்கள் எடுபடாது. பகவத்கீதை படிக்க நேரமிருக்காது. உலகம் ஏதோ ஒரு சுகத்தை நோக்கி நடை போடும். பகவந்நாமா சொல்ல ஆளிருக்காது. இறைவணக்கத்தை எளிமைப்படுத்தி, நாம சங்கீர்த்தனம் என்னும் புதிய சமயத்தை படைக்க வேண்டும். அதன் மூலம் பக்தியைப் பரப்ப வேண்டும் என்பதும் அவரது நோக்கமாயிற்று.

இதற்காக அவர் பூமிக்கு புறப்பட்டார். யார் வயிற்றில் பிறப்பது என யோசித்தார். சாந்திபுரா என்ற இடத்தில் அத்வைத ஆச்சாரியார் ஒருவர் இருந்தார். இவரது இல்லத்தில் தினமும் ஏராளமான பக்தர்கள் கூடுவர். கீதை, பாகவதம் ஆகியவற்றில் இருந்து கருத்துரைகளை ஆச்சாரியார் எடுத்துக் கூறுவார். அங்கு வரும் பக்தர்கள் கிருஷ்ணரைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பார்கள். ஆச்சாரியாருக்கு இதிலெல்லாம் திருப்தி ஏற்படவில்லை. இந்த உலக மக்கள் அனைவருமே கிருஷ்ணரைப் பற்றி சிந்திக்க வேண்டும். பிறப்பு இறப்பு இல்லாத ஆனந்த நிலையை அடைய வேண்டும். எல்லாருமே கிருஷ்ணருள் கலக்க வேண்டும், என தனக்குள் சொல்லிக் கொண்டார். ஒருமுறை கௌடாமியா தந்த்ரா என்ற நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வாசகத்தை வாசித்தார். யார் ஒருவன் அபரிமிதமான பக்தியுடன் கிருஷ்ணருக்கு வெறும் துளசி இலையையும், கையளவு தண்ணீரையும் கொடுக்கிறானோ, அவனிடம் பகவான் தன்னையே விற்றுக் கொள்கிறார், என்பதே அந்த வாசகம்.

ஆஹா...எவ்வளவு எளிமையான வழிபாடு. கங்கைக் கரையிலே எவ்வளவோ துளசி செடிகள் உள்ளனவே. அவற்றை பறித்து அவருக்கு அர்ப்பணம் செய்வதைத் தவிர வேறென்ன வேலை. கிருஷ்ணா! இப்பூமிக்கு வந்து அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். எங்களை ஆட்கொள்ள வேண்டும், என வேண்டினார். தினமும் துளசி இலைகளைப் பறித்து வந்து பூஜைகளைச் செய்தார். பகவான் பூமிக்கு வர வேண்டுமென நினைத்தாலும், யாராவது ஒருபக்தன் அழைத்தால் தானே வருவார்! நாராயணா இந்த தூணுக்குள் இருந்து வெளியே வா என பிரகலாதன் அழைத்ததால் தானே நரசிம்ம மூர்த்தியாய் அவர் எழுந்தருளினார். அதுபோல் ஆச்சாரியாரின் துளசி கைங்கர்ய அழைப்புக்கு பகவான் கட்டுப்பட்டார். உபேந்திர மிஸ்ரா என்ற அந்தணரின் குடும்பத்தில் அவதாரம் செய்ய முடிவெடுத்தார். இவர் கிருஷ்ணாவதார காலத்தில் கிருஷ்ணரின் தாத்தாவாக இருந்த பர்ஜன்யரின் மறுபிறவி என கருதப்பட்டார். இவருக்கு ஏழு மைந்தர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் ஜெகந்நாத மிஸ்ரா. இவர் இன்றைய மேற்கு வங்காள மாநிலத்தின் நாடியா நகரில் வசித்து வந்தார். இவ்வூர் கங்கைக்கரையில் உள்ளது. இவர் நீலாம்பர சக்ரவர்த்தி என்பவரின் மகள் சச்சிதேவியை திருமணம் செய்திருந்தார். இந்த தம்பதியர் தீராத சோகத்தில் மூழ்கியிருந்தனர். ஏன்...இவர்களுக்கு பிறந்த எட்டு பெண் குழந்தைகளும் இறந்து விட்டன என்றால் எந்தப் பெற்றவர்களைத் தான் வருத்தம் வாட்டி எடுக்காது?
ராகவேந்திரர் பகுதி-3

பிராமன்ய தீர்த்தர் சொன்னபடியே அந்தத்தாய் கர்ப்பமானார். 1447, ஏப்ரல் 22 ஒரு புண்ணிய தினமாக இந்த உலகத்துக்கு அமைந்தது. ஆம்... அன்று தான் அந்த அற்புதக்குழந்தை பூமியில் அவதரித்தது. தீர்த்தர் சொன்னபடி பிறந்த அன்றே குழந்தையை ஆஸ்ரமத்தில் ஒப்படைத்து விட்டனர் பெற்றோர். குழந்தைக்கு எத்திராஜன் என்று பெயர் வைத்தார் தீர்த்தர். குழந்தையைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டார் தீர்த்தர். எத்திராஜனுக்கு ஆறு வயதானது. அவருக்கு உபநயனம் (பூணூல் அணிவிக்கும் சடங்கு) நடத்தப்பட்டது. அதன்பின் இரண்டே ஆண்டுகள். எட்டே வயதில் சன்னியாசமும் வழங்கப்பட்டு விட்டது. சன்னியாசம் பெற்ற எத்திராஜனின் பெயர் வியாசராயர் என மாற்றப்பட்டது. வியாசராயருக்கு மத்வாச்சாரியாரின் துவைத கருத்துக்கள் போதிக்கப்பட்டன. வியாசராயரும் அதை அக்கறையுடன் படித்தார். பின்னர், மேல்படிப்புக்காக மூலபஹல் என்ற ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவ்வூரில் ஸ்ரீபாதராஜர் என்ற மகான் இருந்தார். அவர் சிறந்த கல்விமான். அந்தக் கல்விமானிடம் படித்த வியாசராயரும் பெரும் கல்வியாளர் ஆனார். அது மட்டுமல்ல! துவைதக் கருத்துக்களை மிகத்துல்லியமாக மற்றவர்களுக்கும் கற்பிக்கும் ஆற்றலைப் பெற்றார்.இந்த நேரத்தில் வியாசராயரை வளர்த்து ஆளாக்கிய பிரமான்ய தீர்த்தர் முக்தி பெற்றார். அவருக்குப் பின் ஆஸ்ரமத்தை சிறந்த முறையில் நடத்த கல்விமானான வியாசராயரே தகுதியானவர் என அங்கிருந்தோர் கருதினர். மடத்தின் தலைவராக வியாசராயர் நியமிக்கப் பட்டார். பின்னர், அவர் நாடு முழுவதும் பயணம் செய்து துவைதக் கருத்துக்களை மக்களிடையே எடுத்துச் சொன்னார். அவரது கருத்துக்களை ஏற்ற பெரியவர்கள் எல்லாம் தங்கள் சொத்தையே ஆஸ்ரமத்துக்கு எழுதி வைத்தனர். அந்த மடம் வியாசராய மடம் என்று பெயர் பெற்றது.வியாசராயர் அந்தப் பணத்தைக் கொண்டு ஏராளமான ஆன்மிகப்பணிகளைச் செய்தார். நாடெங்கும் 700க்கும் மேற்பட்ட இடங்களில் ராமதூதனான ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்ய விக்ரகம் வடித்துக் கொடுத்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலிலுள்ள வழிபாட்டு முறைகளை நெறிப்படுத்திக் கொடுத்தார். 12 நூல்களை அவர் எழுதினார். வியாசராயரின் அரும்பணிகளும் ஒருநாள் முடிவுக்கு வந்தன.துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள நவபிருந்தாவனத்தில் அவர் சமாதியடைந்தார். ஆக, பிரம்மாவின் ஆணைப்படி மூன்று பிறவிகளையும் நிறைவு செய்துவிட்டான் சங்குகர்ணன். இனி அவன் பிரம்மலோகம் சென்றுவிடலாம் என்று நினைத்திருந்தான்.சங்குகர்ணன் அளவுக்கதிகமான புண்ணியம் செய்திருந்ததால், அதன் பலன் இன்னும் 700 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்து அனுபவிக்கும் அளவுக்கு மிஞ்சியிருந்தது. அதையும் இந்த பூமியில் பிறந்து மக்களுக்கு அருள் வழங்கிக் கழிக்கலாம் என முடிவெடுத்தான் சங்குகர்ணன்.மாசில்லாத வானத்தில் வரும் வட்டநிலா போல பூமிக்கு வரத்  தயாரானது அந்தச் செல்வம்.1519ல் கர்நாடக மாநிலத்தில், வேதசாஸ்திரங்களை அறிந்த கிருஷ்ணபட்டர் குடும்பத்தினர் வசித்து வந்தனர். பட்டர் சிறந்த இசைமேதையும் கூட. விஜயநகரப் பேரரசை நிறுவிய கிருஷ்ணதேவராயரே இவரிடம் தான் வீணை கற்றுக்கொண்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! அத்துடன் விஜயநகரப் பேரரசின் ஆஸ்தான கவியாகவும் விளங்கினார். கிருஷ்ணபட்டரின் மகன் கனகசாலபட்டரும், தந்தைக்கு சற்றும் குறையாத அறிஞராக விளங்கினார். கனகசால பட்டரின் வாரிசாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு திம்மண்ணா பட்டர் என்று பெயர் சூட்டினர். திம்மண்ணா துவைத சித்தாந்தத்தில் பெரும் மேதையாகத் திகழ்ந்தார். புலிக்கு பிறந்தது புலி என்பதை நிரூபிக்கும் வகையில், வீணை வாசிக்கவும் கற்றுக்கொண்டார். அது மட்டுமல்ல! வீணை இசை பெரிதா! இவர் குரலழகு பெரிதா என்று மற்றவர்கள் விவாதிக்கும் வகையில், பாடும் திறமையையும் பெற்றிருந்தார். ஆனால், என்ன துரதிர்ஷ்டமோ..தனது முன்னோரைப் போல திம்மண்ணா பட்டருக்கு அரசவைப்பதவி கிடைக்கவில்லை.

திம்மண்ணா பட்டருக்கு கோப்பம்மா என்ற பெண்மணியைத் திருமணம் செய்து வைத்தனர். இந்த சமயத்தில் விஜயநகரப் பேரரசுக்கு உட்பட்ட பகுதிகளில் மதக்கலவரம் ஏற்பட்டதால், அங்கு இந்துக்களால் வாழ முடியாத சூழல் ஏற்பட்டது. குறிப்பாக, பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருந்தது. சிறுமிகளுக்கும், வயதான பெண்களுக்கும் கூட பாதுகாப்பில்லாமல் போனது.எனவே, இந்துக்கள் அங்கிருந்து வேறு இடங்களுக்கு இடம் பெயர வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாயினர். திம்மண்ணா பட்டருக்கு குருராஜ் என்ற மகனும், வெங்கம்மா என்ற பெண் குழந்தையும் இருந்தனர். பெண்ணைப் பெற்றவர் என்பதாலும், மனைவிக்கும் பாதுகாப்பு வேண்டும் என்பதாலும் திம்மண்ணா பட்டரும் தன்இருப்பிடத்தை மாற்ற முடிவெடுத்தார். தன் பாட்டனாரும், தந்தையும் சேர்த்து வைத்த நவரத்தினங்களையும், தங்கம், விலை உயர்ந்த ஆடைகளை எடுத்துக் கொண்டு, அவர்கள் இந்துக்களின் புனித பூமியாகத் திகழ்ந்த தஞ்சாவூர் வந்து சேர்ந்தனர்.தஞ்சாவூர் அருகே புவனகிரி என்ற கிராமம் இருந்தது. அங்கே திம்மண்ணா பட்டர் குடியேறினார். அங்கே பாதுகாப்பு கிடைத்ததே தவிர, அன்றாடச் செலவுக்கு திண்டாட வேண்டியிருந்தது. விஜயநகரத்தில் இருந்து கொண்டு வந்த பொருட்களை விற்று செலவழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். செக்களவு பொன் இருந்தாலும் செதுக்கித் தின்றால் எத்தனை நாளைக்கு வரும் என்பது நம்மவர் சொல்லியிருக்கும் பொன்மொழி. திம்மண்ணா பட்டர் வீட்டில் இருந்த கஜானா காலியாகத் தொடங்கியது.