தரிகொண்ட வெங்கமாம்பா!
ஆந்திரமாநிலம் தரிகொண்டா என்ற சிறிய கிராமத்தில் பிறந்து, சதா சர்வகாலமும் திருவேங்கடவனை நினைத்து உருகி தன்னை அர்ப்பணித்து, திருவேங்கடமுடையானையே தன் கணவனாக பாவித்து, திருமலையில் ஸ்ரீவாரி சேவை செய்து பரந்தாமனை அடைந்தவள் மாத்ருஸ்ரீதரிகொண்ட வெங்கமாம்பா.
ஆந்திர மாநிலத்தில் ஒரு காலத்தில் கடும் வறட்சி ஏற்படவே ராய துர்க்க பகுதியைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து வெளியே கிளம்பி பிரத்தமிட்டா என்ற கிராமத்தில் ஒரு நாள் இரவு தங்கினர். காலையில் அங்கு லட்சுமி நரசம்மா என்ற அந்தணப் பெண்மணி தயிர்ப்பானையில் தயிர் கடைந்து கொண்டிருந்தாள். (தயிர்ப்பானைக்கு தெலுங்கில் தரிகொண்ட என்பது பெயர்.) அங்குள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மரிடம் பஞ்சத்தில் அடிபட்ட மக்களுக்காகப் பிரார்த்தனை செய்தவாறே அந்தப் பெண்மணி தயிர் கடைந்து கொண்டிருக்கையில் திடீரென்று தயிர் மத்து நின்று விட்டது. துணுக்குற்ற அவள் மீண்டும் தயிர் கடைய மீண்டும் மத்து சுழலாது நின்றது. மத்தை ஓடவிடாமல் ஏதாவது தடை செய்கிறதா என்றே கையை உள்ளே விட்டுப் பார்க்க ஏதும் இல்லாததும் கண்டு அவள் திகைத்தாள். மீண்டும் மத்து நின்ற போது, தன் கணவனை அழைத்துப் பார்க்கச் சொல்ல, கணவர் வந்து பார்த்தபோது ஸ்ரீலட்சுமிநரசிம்ம சிலை ஒன்று தயிர்பானையில் இருப்பதை அவர் கண்டார். தனக்கு கோவில் கட்டி வழிபட நல்ல காலம் பிறக்கும் என்ற அசரீரி கேட்க, ஊர் மக்கள் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு கோயில் எழுப்பி பெருமாளுக்கு தரிகொண்ட நரசிம்மர் (தயிர்ப்பானை நரசிம்மர்) என்று திருநாமம் இட்டு வழிபட்டு வந்தனர். கிராமத்தின் பெயரும் தரிகொண்ட என்று ஆயிற்று.
தரிகொண்ட கிராமத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சாந்த சொரூபராக எழுந்தருளியிருக்கிறார். ராஜகோபுரம், பலிபீடம், கொடிமரம், அகலமான பிரகாரம் ஆககியவற்றோடு கூடிய இந்த கோயிலில் பாஞ்சராத்ர ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. நீதிமன்றம், வழக்கு என்று செல்லாமல் மக்கள் இங்குள்ள பலிபீடத்தை வலம் வந்து ஆரத்தி செய்து சத்ய பிரமாணம் எடுத்துக் கொள்வது வழக்கம். எனவே தரிகொண்ட கிராமம் சத்ய ப்ரமாண க்ஷேத்ரமாகத் திகழ்கிறது. இந்த கோயிலில் செஞ்சு லட்சுமி, ஆதிலட்சுமி சன்னதிகளும், அனுமனுக்குச் சன்னதியும் உள்ளன. மேலும் இங்கு அவதரித்த பக்தை தரிகொண்ட ஸ்ரீவெங்கமாம்பாவுக்கு தனிச் சன்னதி உள்ளது. ஆந்திர மாநிலம் வாயல்பாடு என்ற ஊரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் தரிகொண்ட கிராமம் அமைந்துள்ளது. லட்சுமி நரசிம்மா வம்சத்தில் வந்தவர்கள் நியோகி அந்தணர்களான கிருஷ்ணய்யா மங்கமாம்பா தம்பதியர் குழந்தைப் பேற்றுக்காக வருந்தி திருப்பதி வெங்கடேசப் பெருமாளை அனவரதமும் அவர்கள் வேண்டி கொண்டிருக்கையில் ஒரு நாள் மங்கமாம்பாவிடம் ஒரு சிறு குழந்தை ஓடி வந்து தயிர் சாதம் கேட்க, அவள் தயிர்சாதம் எடுத்துக் கொண்டு குழந்தைக்கு ஊட்ட முற்பட்டபோது, அக்குழந்தை தயிர்சாதப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு ஓடி மறைந்தது. கிருஷ்ண பரமாத்வே தன்னிடம் வந்து தயிர் சாதம் பெற்றுச் சாப்பிட்டதாக மங்கமாம்பா மெய்சிலிர்த்தாள். ஸ்ரீவேங்கடேசப்பெருமாளையும் மனமுருகி அவர்கள் வேண்டிக்கொண்டனர். திருமலை வேங்கடவன் பெண் அம்சமாக தனக்குக் குழந்தையாகப் பிறக்கபோவதாக மங்கமாம்பா கனவு கண்டாள். அவள் கண்ட கனவு பலித்து, திருவேங்கடவன் அருளால் ஒரு பெண் குழந்தை (1730ம் ஆண்டு) அந்த தம்பதியருக்குப் பிறக்க, வேங்கடேசர், அலமேலுமங்கா ஆகிய பெயர்களை இணைத்து வெங்காம்பா என்று பெயரிட்டு அக்குழந்தையை அவர்கள் போற்றி வளர்த்தனர்.
இயற்கையாகவே சிறுவயதிலேயே இறைப்பற்று கொண்டிருந்த ஸ்ரீவெங்கமாம்பா தரிகொண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயிலுக்குச் சென்று கோயில்க் கைங்கர்யங்கள் செய்வதில் ஈடுபட்டாள். சுப்ரமண்ய ஆச்சார்யர் என்பவரிடம் ராமாயணம், பாரதம், பாகவதம் போன்றவற்றைப் பயின்றாள். திருமண வயது வந்தவுடன் பெற்றோர் வெங்கமாம்பாவுக்கு தக்க வரணைத் தேடி திருமணம் செய்து வைத்தனர். ஆனால் வெங்கமாம்பாவோ இல்லறத்தில் ஈடுபாடின்றி, பக்தி மேலீட்டால் திருவேங்கடமுடையானே தன்னுடைய பதி என்று கூறி பரவசப்பட்டு வந்தாள். நோய்வாய்ப்பட்டு அவள் கணவன் இறந்தபோது, தன்னுடைய மணாளன் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் என்றும், தான் நித்ய சுமங்கலி என்றும் கூறிய வெங்கமாம்பா தன்னிடமிருந்து மங்கலப்பொருட்கள் அகற்றப்படுவதைத் தடுத்தாள். அவளது பக்தியைக் கண்ட கிராம மக்கள் வெங்கமாம்பா அலிமேலுமங்கா (அலர்மேல் மங்கா) அவதாரம் என்று கூறி, அவளை தேவுடம்மா என்று வழிபட்டனர். தரிகொண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயிலில் கைங்கர்யங்கள் செய்வதிலும், இறைவன் மீது கீர்த்தனைகள் இயத்துவதிலும், பாடுவதிலும், ஆடுவதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மாத்ருஸ்ரீ வெங்கமாம்பா திருமலையானைத் தரிசக்க பயணம் மேற்கொண்டாள்.
திருவேங்கடவன் மீது 36000 கீர்த்தனைகள் எழுதி இறவாப் புகழ் பெற்ற தாளப்பாக்கம் அன்னமய்யா (1408-1503) அவர்களின் சந்ததியினர் -ஸ்ரீவெங்கமாம்பாவின் மகிமை அறிந்து அவளை வரவேற்றனர். முதலில் ஸ்ரீவெங்கமாம்பவை கோயிலுற்குள் அனுமதிக்க மறுத்த அர்ச்சகர்களும் அவள் மகிமை அறிந்து ஏற்றுக் கொண்டனர். திருவேங்கடவன் மீது ஆறாத காதல் கொண்ட ஸ்ரீவெங்கமாம்பா ஏராளமான கீர்த்தனைகளை இயற்றினாள். தன்னை மறந்து கோயில்க் கைங்கர்யங்களில் ஈடுபட்டு வந்த அவள், ஸ்ரீவேங்கடாசல மஹாத்மியம், தரிகொண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சதகம், நரசிம்மர் விலாச கதை, சிவ நாடகம், பாலகிருஷ்ண நாடகம், விஷ்ணு பாரிஜாதம் போன்ற பல முக்கியமான நூல்களை இயற்றியதோடு யோகக் கலையையும் நன்கு பயின்று அஷ்டாங்க யோக சாரம் என்ற நூலையும் இயற்றி பெருமையடைந்தாள். திருமலையையும், திருவேங்கடமுடையானையும் பற்றி ஏராளமான கவிகள் இயற்றி தலைசிறந்த கவியத்ரியாகத் திகழ்ந்த மாத்ருஸ்ரீ வெங்கமாம்பாதான் இயற்றிய கீர்த்தனைகளில் முத்திரையாக கிருஷ்ணமய்யாவின் மகள் வெங்கமாம்பா என்று பதிஷ செய்திருக்கிறாள்.
தன் உடல், ஆவி அனைத்தையும் திருவேங்கடவனுக்கே அர்ப்பணித்த ஸ்ரீவெங்கமாம்பா ஒவ்வொரு நாள் இரவும் ஏகாந்தசேவை ஆரத்தி கைங்கரியத்தின்போது தட்டில் முத்துக்களை வைத்து வேங்கடவனை வணங்கி வந்தாள். தினந்தோறும் காலையில் ஸ்ரீவேல்கடவன் சன்னிதிக் கதவுகள் திறக்கப்படும்போது அங்கு சிதறிக் கிடந்த முத்துக்களைக் கண்டு துணுக்குற்ற அர்ச்சகர்கள், வெங்கமாம்பாவே இதற்குக் காரணம் என்றறிந்து வெங்கமாம்பாவை கோயிலிலிருந்து தொலைவில் உள்ள தும்புரகோணா என்ற குகைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வேங்கடவன் அருளால் அங்கிருந்து ஒரு குகைப் பாதையின் வழியாக தன் ஆரத்தி சேவையை அவள் மீண்டும் தொடர்ந்தாள். பெருமாளும் தன் பக்தை வெங்கமாம்பாவின் ஆரத்தியுடன் தான் தனக்கு இரவு பூஜை முடிய வேண்டும் என்று அர்ச்சகர்களின் கனவில் கட்டளையிட அர்ச்சகர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து ஏகாந்த சேவையின்போது வெங்கமாம்பாவை அனுமதித்தனர். தன்னுடைய ஆரத்தியில் திருவேங்கடமுடையானையே அவள் கண்டு மெய்மறந்தாள்.
அன்று முதல் தொடர்ந்து, திருமலை திருவேங்கடவன் திருக்கோவிலின் கடைசி சேவையான ஏகாந்த சேவையின் போது மாத்ரு ஸ்ரீ வெங்கமாம்பாவின் சந்ததியினர் இந்த ஆரத்திக் கைங்கர்யத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெங்கமாம்பா முத்துக்களைக் காணிக்கையாக்கியதால் இந்த ஆரத்தி முத்தியா<லு ஆரத்தி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆரத்தியின் போது ஒரு வெள்ளத்தட்டில், வெற்றிலை, பாக்குதூள் ஆகியவற்றோடு மாத்ருஸ்ரீ வெங்கமாம்பாவின் இஷ்ட தெய்வமான முத்துமாலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சிலை ஆகியவை வைக்கப்படுகின்றன. தினந்தோறும் கடைசி சேவையான ஏகாந்த சேவை அதிகாலை 1.30 மணி அளவில் முடிந்து, திருக்காப்பிடப்பட்டு, மீண்டும் 3.00 மணிக்கு ஸ்ரீவாரி சுப்ரபாத சேவையுடன் அடுத்த நாள் பூஜைகள், வழிபாடுகள் துவங்குகின்றன. 1730ஆம் ஆண்டு வேங்கடவன் அருளால் அவதரித்த ஸ்ரீவெங்கமாம்பா, எண்ணற்ற கீர்த்தனைகளையும், நூல்களையும் இயற்றி, இறுதியில் 1817 ஆம் ஆண்டு தனது 87வது வயதில் தன் பெருமானுக்காக அமைத்த துளசி வனத்தில் ஜீவசமாதி அடைந்தார். ஒரு பள்ளிக் கூட வளாக்ததிற்குள் அமைந்திருக்கும் பக்தை ஸ்ரீவெங்கமாம்பாவின் சமாதி பக்தர்களின் பார்வைக்காகத் தினமும் திறந்து வைக்கப்படுகிறது. மேலும் திருப்பதியில் மாத்ருஸ்ரீ வெங்கமாம்பாவின் சிலை ஒன்றும் இரயில்வே பாலத்தின் கீழ் உள்ள சந்திப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் திருமலையில் கவியத்ரி மாத்ருஸ்ரீ வெங்கமாம்பாவின் 285வது ஜயந்தி நாள் கொண்டாடப்படுகிறது. வெங்கமாம்பாவின் ஜயந்தி மற்றும் நினைவு நாட்களை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தினர் மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். கூர்ம ஜயந்தி இதே நாளில்தான் தாளப்பாக்க அன்னமய்யாவின் ஜயந்தி நாளும் கொண்டாடப்படுகிறது.
-----------------------------------------------