செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

"ஸ்வஸ்தி வாசனம்"

|| ஸ்ரீ குருப்யோ நம: ||

ஸ்ரீ மஹாத்ரிபுரஸுந்தரி ஸமேத ஸ்ரீ சந்த்ரமௌளீச்வராய நம:

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்ரீசரணயோ: ப்ரணாமா:

ஸ்வஸ்தி ஸ்ரீமதகில பூமண்டலாலங்கார - த்ரயஸ் த்ரிம்சத்கோடி தேவதாஸேவித - ஸ்ரீகாமாக்ஷீ தேவீஸனாத - ஸ்ரீமதேகாம்ரநாத - ஸ்ரீமஹாதேவீ ஸநாத ஸ்ரீஹஸ்திகிரிநாத - ஸாக்ஷாத்கார - பரமாதிஷ்ட்டான - ஸத்யவ்ரத நாமாங்கித - காஞ்சீ திவ்யக்ஷேத்ரே - சாரதாமட ஸுஸ்த்திதாநாம் - அதுலித ஸுதாரஸ- மாதுர்ய கமலாஸன காமினீ தம்மில்ல ஸம்ப்புல்ல- மல்லிகாமாலிகா நிஷ்யந்த மஹரந்தஜ்ஜரீ - ஸௌவஸ்திக வாங்நிகும்ப்ப விஜ்ரும்ப்பணாநந்த - துந்துலித - மனீஷிமண்டலாநாம் அநவரதாத்வைத வித்யாவினோத ரஸிகாணாம் நிரந்தராலங்க்ருதீக்ருத - சாந்தி தாந்தி பூம்நாம் - ஸகல புவனசக்ர ப்ரதிஷ்ட்டாபக - ஸ்ரீசக்ர ப்ரதிஷ்ட்டா விக்க்யாத யசோலங்க்ருதாநாம் - நிகில பாஷண்ட ஷண்ட - கண்டகோத்காடநேந - விசதீக்ருத வேத வேதாந்த மார்க - ஷண்மத ப்ரதிஷ்ட்டாபகாசார்யாணாம்- ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய வர்ய - ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீமத் சங்கர பகவத்பாதாசார்யாணாம் அதிஷ்ட்டானே - ஸிம்ஹாஸனாபிஷிக்த ஸ்ரீமத் சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸம்யமீந்த்ராணாம் - அந்தேவாஸிவர்ய - ஸ்ரீமத் ஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீபாதாநாம் - ததந்தேவாஸிவர்ய - ஸ்ரீமத் சங்கரவிஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீபாதநாம் ச சரணநளினயோ: ஸ்ப்ரச்ரயம் ஸாஞ்சலிபந்த்தம் ச நமஸ்குர்ம:|

நம் காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்யர்களை இந்த ஸ்வஸ்தி வாசன ஸ்லோகம் பாராயணம் செய்து வணங்குதல் என்பது நம் பாரம்பரியம் என்கின்றனர் நம் பெரியோர்கள். வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மந்திரத்தைச் சொல்லி நம் ஆச்சார்யாளை வந்தனம் செய்தோமானால் கட்டாயம் குருவருள் நமக்குண்டு என்பது திண்ணம்.


-----------------------------------------------
காஞ்சி பீடத்தில் அமர்ந்த குருவாம் காமாக்ஷி தாயை பூஜிக்கும் குருவாம்.

காவல் தெய்வமாய் இருக்கும் குருவாம்.

காருண்ய மூர்த்தியாய் வந்த குருவாம்.

துவராடையை உடுத்தும் குருவாம்.
துரிதமாக வந்து காக்கும் குருவாம்.
துணையாக என்றும் இருக்கும் குருவாம்.

துவளா வண்ணம் காக்கும் குருவாம்.

அர்த்தநாரியாய் இருக்கும் குருவாம்.

அற்புதங்கள் பல செய்யும் குருவாம்.

அல்லும் பகலும் காக்கும் குருவாம்.
அழைத்தால் ஓடி வருகின்ற குருவாம்.

ஞானத்திலே உயர்வான குருவாம்.
மோனத்திலே மூழ்கிடும் குருவாம்.
கானம் கேட்டால் மகிழும் குருவாம்.
தானம் செய்திடும் தயாள குருவாம்.

ஊர் ஊராய் நடந்த குருவாம்.
பேர் புகழை விரும்பாத குருவாம்.
பார் முழுதும் போற்றும் குருவாம்.
பார்த்தசாரதியாய் காக்கும் குருவாம்.

குருவே சரணம்
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
காஞ்சி சங்கர காமகோடி சங்கர


அருள் மிகு வல்வில்ராமன் திருக்கோயில்
 
மூலவர்    :     வல்வில் ராமன், சக்கரவர்த்தி திருமகன்
தாயார்    :     பொற்றாமரையாள், ஹேமாம்புஜவல்லி
ஸ்தல விருட்சம்    :     புன்னை மரம்
தீர்த்தம்    :     ஜடாயு தீர்த்தம்
பழமை    :     2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :     பூதப்புரி
ஊர்    :     திருப்புள்ளம்பூதங்குடி
மாவட்டம்    :     தஞ்சாவூர்
மாநிலம்    :     தமிழ்நாடு
பாடியவர்கள் :     திருமங்கையாழ்வார்
             
மங்களாசாசனம் : அறிவதறியா னனைத்துலகும் உடையானென்னை யாளுடையான் குறிய மானி யுருவாய கூத்தன் மன்னி அமருமிடம் நறிய மலர்மேல் சுரும் பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாட பொறிகொள் சிறை வண்டிசை பாடும் புள்ளம் பூதங்குடி தானே.
திருமங்கையாழ்வார்.      
           
திறக்கும் நேரம் :     காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.    அருள் மிகு வல்வில்ராமன் திருக்கோயில், திருப்புள்ள பூதங்குடி- 612301, தஞ்சாவூர் மாவட்டம். போன் :    +91- 94435 25365
     
சிறப்பு :     பொதுவாக ராமர் நின்ற கோலத்தில் தான் அருள்பாலிப்பார். ஆனால் இத்தலத்தில் ராமர் சயன கோலத்தில் அருள் பாலிக்கிறார். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.      
             
தகவல் :     இத்தல பெருமாளை ராமன், ஜடாயு ஆகியோர் தரிசனம் செய்துள்ளனர். இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி புஜங்க சயனத்தில் சோபன விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.
     
ஸ்தல பெருமை :    ஜடாயுவாகிய புள்ளிற்கு ராமன் மோட்சம் கொடுத்து ஈமக்கிரியை செய்த நிகழ்வை குறிக்கும் தலமாதலால் இத்தலம் திருப்புள்ள பூதங்குடி ஆனது. வைணவ சம்பிராத யத்தில் வைணவர்களுக்கு இரண்டு பூதபுரிகள் உண்டு. ஒன்று காஞ்சிபுரம் அருகே ஸ்ரீபெரும்புதூர். ராமனுஜர் அவதரித்த இத்தலத்ததை ஆழ்வார்கள் சிறப்பித்தார்கள். மற்றொன்று தஞ்சாவூர் அருகே திருப்புள்ளபூதங்குடி. இதை ஆச்சாரியார்கள் சிறப்பித் தார்கள். ராமன் இத்தலத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளிப்பது விசேஷத்திலும் விசேஷம். திருமங்கையாழ்வார் இங்கு வந்த போது இக்கோயிலில் வேறு ஏதோ தெய்வம் இருப்பதாக கருதி கவனிக்காமல் சென்றார். அப்போது பெரிய ஒளி தோன்றி அதிலிருந்து சங்கு சக்ரதாரியாக ராமன் காட்சியளித்தார். இதைக்கண்ட திருமங்கை அறிய வேண்டியதை அறியாமல் சென்றேனே என 10 பாசுரம் பாடினார். தந்தை தசரதருக்கு செய்ய வேண்டிய இறுதி காரியத்தை செய்ய முடியா விட்டாலும் ஜடாயுவிற்கு செய்ததை நினைத்து மகிழ்ந்ததால் இத்தல ராமன் வல்வில் ராமன் என அழைக்கப்படுகிறார்.

ஸ்தல வரலாறு :    சீதையை ராவணன் கவர்ந்து சென்ற போது கழுகுகளின் அரசனான ஜடாயு அவனிடம் போரிட்டார். அப்போது ஜடாயுவை ராவணன் வாளால் வெட்டினான். ஜடாயு ராமா, ராமா என முனகியபடி குற்றுயிராக கிடந்தார். அந்த வழியே வந்த ராம, லட்சுமணர்கள் முனகல் சத்தத்தை கேட்டு அருகில் சென்று பார்த்தனர். ஜடாயு, ராவணன் சீதையை கவர்ந்து சென்ற விஷயத்தை கூறிவிட்டு உயிர் துறந்தார். இதைக்கண்டு வருந்திய ராமன் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்ய எண்ணினார். ஈமக்கிரியை செய்யும் போது மனைவியும் அருகில் இருக்க வேண்டும் என்பது விதி. சீதை இல்லை என்பதால் மானசீகமாக சீதையை மனதால் நினைத்தார். உடனே ராமனுக்கு உதவிபுரிவதற்காக சீதையின் மறு அம்சமாகிய பூமாதேவி காட்சியளித்தாள். அவளோடு இணைந்து ஜடாயுவிற்கு செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளை செய்து முடித்தார். இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இத்தலத்தில் கோயில் அமைக்கப்பட்டது.
ஓம் எனும் பொருளாய் விளங்கும் விநாயகா...

ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி

ஓம் பூமனும் பொருள்தொறும் பொலிவாய் போற்றி

ஓம் திங்கட் சடையோன் செல்வா போற்றி

ஓம் எங்கட் கருளும் இறைவா போற்றி

ஓம் அறுமுகச் செவ்வேட்கு அண்ணா போற்றி

ஓம் சிறுகண் களிற்றுத் திருமுக போற்றி

ஓம் மாலுக் கருளிய மதகிரி போற்றி

ஓம் பாலெனக் கடல்நீர் பருகினாய் போற்றி

ஓம் பாரதம் எழுதிய பரூஉக்கர போற்றி

ஓம் மாரதம் அச்சொடி மதவலி போற்றி

ஓம் உள்ளத் திருளை ஒழிப்பாய் போற்றி

ஓம் கள்ளப் புலனைக் கரைப்பாய் போற்றி

ஓம் நம்பியாண் டார்கருள் நல்லாய் போற்றி

ஓம் தம்பிக்கு வள்ளியை தந்தாய் போற்றி

ஓம் இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி

ஓம் கரிமுகத் தெந்தாய் காப்போய் போற்றி

ஓம் ஐந்துகை யுடைய ஐய போற்றி

ஓம் ஐந்தொழில் ஆற்றும் அமர போற்றி

ஓம் கயமுக அசுரனைக் காய்ந்தாய் போற்றி

ஓம் மயிலறும் இன்ப வாழ்வே போற்றி

ஓம் செல்வம் அருள்க தேவா போற்றி

ஓம் நல்லன எமக்கருள் நாயக போற்றி

ஓம் ஆக்கமும் ஊக்கமும் அருள்வாய் போற்றி

ஓம் காக்கஎங் களையுன் கழலினை போற்றியே!
-------------------------
கணபதி துதி

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம் பிறைபோலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்- கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீயெனக்கு
சங்கத் தமிழ் மூன்றுந் தா

அல்லல்போம் வல்லினைபோம்
அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத்துயரம் போம்- நல்ல
குணமதிகமா மருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது- பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பதம்
தப்பாமற் சார்வார் தமக்கு

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கருமம் இல்லையே.

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை
-------------------------
விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட்டால் என்ன பலன்!

விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என விநாயக புராணம் கூறுகிறது. மகப்பேறு பெறமருத இலை, எதிரிகள்  தரும் துன்பம் தொலைய அரசஇலை, இதர துன்பங்கள் நீங்க அகத்தி இலை, சுகமான வாழ்வு பெற வில்வ இலை. சவுபாக்கியமான வாழ்வு பெற  வெள்ளெருக்கு இலை, புகழ்பெற மாதுளை இலை, லட்சுமி கடாட்சம் பெற கண்டங்கத்திரி இலை ஆகியவற்றால் பூஜிக்க வேண்டும். அருகம்புல்,  செம்பருத்தி, எருக்கம்பூ, மாவிலை கொண்டும் அர்ச்சனை செய்தால் இவை எல்லாவற்றையும் ஒரு சேர அடையலாம்.
-------------------------
விநாயகர் சித்தி மந்திரம்!

ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
பிரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப
ஸாந்தயே.

விநாயகரைத் துதிக்க ஒரு மந்திரம்

ஓம் சுமுகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் நாயகாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் கணாத்பதியே நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் கணாத்ய க்ஷசாய நம
ஓம் பாலசந்த்ராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்ப கர்ணாய நம
ஓம் ஹேரம்பாய நம
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம

இந்த மந்திரத்தை தினந்தோறும் மனம் உருகச் சொல்லி விநாயகரை வழிபட்டு வந்தால் சகல சவுபாக்கியங்களோடு, சந்தோஷமான வாழ்வைப் பெறலாம்.
-------------------------
108 திவ்ய தேசங்கள் -43

அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில்
 
மூலவர்    :     தாமரையாள் கேள்வன், பார்த்தசாரதி
உற்சவர்     :     பார்த்தசாரதி
தாயார்    :     தாமரை நாயகி
தீர்த்தம்     :     கட்க புஷ்கரிணி
பழமை     :     1000 வருடங்களுக்கு முன்
ஊர்    :     பார்த்தன் பள்ளி
மாவட்டம்    :     நாகப்பட்டினம்
மாநிலம்    :     தமிழ்நாடு
பாடியவர்கள் : திருமங்கையாழ்வார்

கவள யானைக் கொம்பொசித்த கண்ணனென்றும் காமருசீர்க் குவளை மேக மன்ன மேனி கொண்ட கோனென் னானையென்றும் தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள் கேள்வன் என்றும் பவள வாயா ளென் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே. திருமங்கையாழ்வார்      
விழா :     வைகுண்ட ஏகாதசி, ராமநவமி, தைப்பூசத்தன்று தீர்த்தவாரி விசேஷம்.      
             
சிறப்பு :     108 திருப்பதிகளுள் ஒன்று பார்த்தன் பள்ளி. ராமர் யாககுண்டத்திலிருந்து காலைத்தூக்கி எழுந்து வருவது போல இரு தேவியருடன் காட்சிதருவது அதிசயத்திலும் அதிசயம்.      
             
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில், பார்த்தன் பள்ளி (திருநாங்கூர்)-609 106. நாகப்பட்டினம் மாவட்டம்,போன் :     
 +91- 4364-275 478.     
            
தகவல் :     இங்கு பெருமாள் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள விமானம் நாராயண விமானம் எனப்படுகிறது. அர்ஜுனனர், இந்திரன், பதினோரு ருத்திரர்கள் ஆகியோர் பெருமாளின் தரிசனம் கண்டுள்ளனர். மூன்றுநிலை ராஜகோபுரம் 75 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக உள்ளது.      
 
பெருமை :    உற்சவர் பார்த்தசாரதி பெருமாளின் கையில் கத்தி இருக்கும். அருகே கோலவல்லி ராமர் கையில் வில்லுடன் அருள்பாலிக்கிறார். இரண்டு தேவியருடன் ராமன், தசரதர் குழந்தை பாக்கியம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். அப்போது நாராயணன் ராமனாக தனக்கு குழந்தையாக அவதரிக்க போகிறார் என்பது இவருக்கு தெரிந்தது. தன் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள நாராயணனை அவர் வேண்டினார். அப்போது யாக குண்டத்திலிருந்து நாராயணன் தன் இரு தேவியருடன் தோன்றி தான் எப்படி இருப்பேன் என்பதை தசரதருக்கு காட்டினார். இருதேவியரும் ராமாவதார காலத்தில் அவருடன் வாழ முடியாது என்பதால், தங்கள் கண்குளிர ராமனை தரிசித்தனர். இந்தக் காட்சி சிலையாக வடிக்கப்பட்டு இத்தலத்தில் வைக்கப்பட்டுள்ளது. ராமர் யாககுண்டத்திலிருந்து காலைத்தூக்கி எழுந்து வருவது போல இரு தேவியருடன் காட்சிதருவது அதிசயத்திலும் அதிசயம். அர்ஜுனனுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது.

ஸ்தல வரலாறு :    கவுரவர்களிடம் நாடிழந்து, வனவாசம் சென்ற போது அர்ஜுனன் தாகத்திற்கு தண்ணீர் தேடி அலைந்தான். ஓரிடத்தில் அகத்தியர் கமண்டலத்தை அருகில் வைத்து தியானத்தில் இருப்பதை பார்த்தான். தியானம் முடிந்து கண்திறக்கும் வரை தன்னால் தாகத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என்பதால் அகத்தியரின் தியானத்தை கலைத்து தனக்கு தண்ணீர் தருமாறு கேட்டான். அவரது அனுமதியுடன் கமண்டலத்தை திறந்தான். அதில் ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்லை. கேள்விக்குறியுடன் அகத்தியரின் முகத்தை பார்த்த அர்ஜூனனிடம் அர்ஜுனா! நீ எப்போதும் எது வேண்டினாலும் கொடுக்கும் கடவுளான கிருஷ்ணனிடம் அல்லவா கேட்டிருக்க வேண்டும் என்றார். தன் தவறை உணர்ந்த அர்ஜுனன் கிருஷ்ணா! கிருஷ்ணா! என அழைத்தான். கிருஷ்ணனும் அர்ஜுனன் முன் தோன்றி தன்னிடமிருந்த கத்தியை அவனிடம் கொடுத்து இந்த கத்தியை வைத்து நீ எந்த இடத்தில் தோண்டினாலும் தண்ணீர் வரும் என்று கூறி மறைந்தார். அர்ஜுனனும் அந்த கத்தியால் தரையில் கீறி கங்கையை வரவழைத்து தன் தாகத்தை தணித்து கொண்டான். இந்நிகழ்ச்சி நடந்த இடம் பார்த்தன்பள்ளி என புராணம் கூறுகிறது.
-----------------------
108 திவ்ய தேசங்கள் - 42

அருள்மிகு அண்ணன் பெருமாள் திருக்கோயில்
 
மூலவர்    :     அண்ணன் பெருமாள், கண்ணன் நாராயணன்
உற்சவர்    :     சீனிவாசன், பூவார் திருமகள், பத்மாவதி
தாயார்    :     அலர்மேல் மங்கை
தல விருட்சம்    :     வில்வம், பரசு
தீர்த்தம்    :     வெள்ளக்குள தீர்த்தம்
பழமை    :     3000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :     திருவெள்ளக்குளம்
ஊர்    :     திருவெள்ளக்குளம்
மாவட்டம்    :     நாகப்பட்டினம்
மாநிலம்    :     தமிழ்நாடு
பாடியவர்கள் : திருமங்கையாழ்வார்

கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய் நண்ணார்முனை வென்றி கொள்வார் மன்னுநாங்கூர் திண்ணார் மதிள்சூழ் திருவெள்ளக்குளத்துள் அண்ணா! அடியேன் இடரைக் களையாயே.

விழா : திருப்பதியைப் போல் இத்தலத்திலும் புரட்டாசியில் பிரமோற்ஸவம். வைகாசி முதல் ஐந்து தேதிகளில் வசந்த உற்சவம். ஆடிமாதம் கடைசி வெள்ளி திருக்கல்யாணம்.      
           
திறக்கும் நேரம் :    காலை ஏழு மணி முதல் இரவு எட்டு மணி வரை நடை திறந்திருக்கும்.    அருள் மிகு சீனிவாசப்பெருமாள் (அண்ணன் பெருமாள்) திருக்கோயில், திருவெள்ளக்குளம் (திருநாங்கூர்)- 609 106 நாகப்பட்டினம் மாவட்டம், போன் :   
 +91- 4364 - 266 534.     
          
தகவல் :     பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. இத்தல இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் தத்வத் யோதக விமானம் எனப்படும். ருத்ரர், ஸ்வேதராஜன் ஆகியோர் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளனர்.      
 
பெருமை :    மணவாள மாமுனிகளுக்கு பெருமாள் காட்சி கொடுத்த தலம். 12 ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார் இரண்டு கோயில்களில் உள்ள பெருமாளைத்தான் "அண்ணா' என அழைத்து பாடியுள்ளார். ஒன்று திருப்பதியில் உள்ள பெருமாள். மற்றொன்று இத்தல பெருமாள். இதில் திருப்பதிக்கு முன்பே இத்தலத்து பெருமாளை "அண்ணா' என பாடியதால் இங்குள்ள பெருமாள் திருப்பதி ஏழுமலையானுக்கு "அண்ணன்' ஆகிவிடுகிறார். எனவே தான் இங்குள்ள சீனிவாசப்பெருமாளின் திருநாமம் "அண்ணன் பெருமாள்' என்றும் இத்தலம் "அண்ணன் கோயில்' என்றும் வழங்கப்படுகிறது. திருப்பதியைப் போன்றே இத்தலத்திலும் பெருமாளின் திருநாமம் "சீனிவாசன்', தாயாரின் திரு நாமம் "அலர்மேல்மங்கை'. திரு மங்கையாழ்வார் இத்தலத்தை பூலோக வைகுண்டம் என்று பாடியுள்ளார். ஆழ்வாராக மாற்றிய அம்மன்: இங்குள்ள குளத்தில் குமுத மலர்களை பறிக்க தேவ மாதர்கள் வருவது வழக்கம். அப்படி வந்த போது ஒரு மனிதனின் பார்வை பட்டு இவர்களில் குமுதவல்லி தேவ லோகம் செல்லும் சக்தியை இழக்கிறாள். இதனை கேள்விப்பட்ட நீலன் என்ற பெயரில் படைத்தளபதியாக விளங்கிய திருமங்கை இவளை திருமணம் செய்ய விரும்புகிறார். குமுதவல்லி தன்னை திருமணம் செய்ய பல நிபந்தனைகள் விதிக்கிறாள். இவரும் நிபந்தனைகளை எல்லாம் நிறைவேற்றினார். கடைசியில் வைணவ அடியார்களுக்கு அன்னம் பாலிக்கும் நற்செயலில் ஈடுபடச்செய்தார். இதனையறிந்த பெருமாள் மன்னனுக்கு காட்சி கொடுத்து "திரு' மந்திரத்தை உபதேசித்து ஆழ்வாராக மாற்றினார். ஒரு மங்கையினால் ஆழ்வாராக மாறியதால் "திருமங்கை ஆழ்வார்' என அழைக்கப்பட்டார். குமுதவல்லி நாச்சியார் தனி சன்னதியில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

ஸ்தல வரலாறு :    துந்துமாரன் என்ற அரசனுக்கு சுவேதன் என்ற மகன் இருந்தான். அவனுக்கு ஒன்பது வயதில் அகால மரணம் ஏற்படும் என வசிஷ்ட முனிவர் கூறினார். அரசன் தன் மகனை காப்பாற்ற முனிவரிடம் கேட்டார். அவர் திருநாங்கூரில் உள்ள பொய்கையில் நீராடி அங்குள் பெருமாளை வேண்டி தவம் இருந்தால் பலன் கிடைக்கும் என்றார். முனிவர் கூறியபடி சுவேதன் குளத்தில் நீராடி வசிஷ்டர் கூறிய நரசிம்ம மிருத்யஞ்சய மந்திரத்தை சீனிவாச பெருமாளின் முன்பாக ஒரு மாத காலம் கூறிவந்தான். மனமிறங்கிய பெருமாள் சுவேதா! நரசிம்ம மந்திரத்தை தொடர்ந்து கூறியதால் நீ சிரஞ்சீவி ஆனாய். அத்துடன் எவனொருவன் இத்தலத்தில் எட்டாயிரம் தடவை இம் மந்திரத்தை கூறுகிறானோ அவனுக்கு எம பயம் கிடையது'' என்று கூறினார். வைணவத்தலங்களில் எம பயம் நீக்கும் தலம் இது.
-----------------------
108 திவ்ய தேசங்கள் - 41

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்
 
மூலவர்    :     வரதராஜப்பெருமாள் ( கஜேந்திரவரதன், மணிக்கூட நாயகன்)
தாயார்    :     திருமாமகள் நாச்சியார்,(ஸ்ரீதேவி)
தீர்த்தம்    :     சந்திர புஷ்கரிணி
பழமை    :     2000 வருடங்களுக்கு முன்
ஊர்    :     திருமணிக்கூடம்
மாவட்டம்    :     நாகப்பட்டினம்
மாநிலம்    :     தமிழ்நாடு
பாடியவர்கள் : திருமங்கையாழ்வார்

கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் மரியும் மாவும் அண்டமும் சுடரும் அல்லா ஆற்றதுமாய எந்தை ஒண்டிறல் தென்ன னோட வடவர சோட்டங்கண்ட திண்டிற லாளர் நாங்கூர்த் திருமணிக் கூடத்தானே.
     
விழா : வைகுண்ட ஏகாதசி      
           
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.    அருள் மிகு வரதராஜப்பெருமாள் கோயில், திருமணிக்கூடம் - 609 106, திருநாங்கூர், நாகப்பட்டினம் மாவட்டம்.

தகவல் :     இத்தல இறைவன் கிழக்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் கனக விமானம் எனப்படுகிறது. இத்தல இறைவனை கருடாழ்வார், சந்திரன் ஆகியோர் தரிசித்துள்ளனர்.      
             
பெருமை :    பெருமாளின் 108 திருப்பதிகளில் இது 37வது தலம். தீராத நோய்கள் எல்லாம் திரு மணிக்கூடம் சென்றால் தீர்ந்து விடும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. உள்ளே நுழைந்ததும் பலிபீடமும், கருடாழ்வார் சன்னதியும் உள்ளது. மகா மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பகிரகம் மூலஸ்தானத்தில் வரதராஜர் கிழக்கு பார்த்து தாமரை பீடத்தின் மீது நின்ற கோலத்தில், பின் கைகளில் சங்கு, சக்கரமும் முன் கைகளில் அபய ஊரு முத்திரை காட்டியபடி சேவை சாதிக்கிறார். பெருமாளின் வலது புறத்தில் சதுர வடிவமான தாமரை பீடத்தின் மீது நின்ற படி இடது கரத்தில் தாமரை மலரும், வலது கரத்தினை தொங்க விட்ட படியும் ஸ்ரீ தேவி காட்சியளிக்கிறாள். இடது புறத்தில் பூமா தேவி வலது கரத்தில் தாமரை மொட்டும், இடது கரத்தை தொங்க விட்டபடியும் அருள் பாலிக்கிறாள். அருகி லேயே உற்சவமூர்த்திகள் உள்ளது. அர்த்த மண்டபத்தின் வட புறத்தில் நம்மாழ்வார் அமர்ந்த கோலத்தில் உள்ளார்.

ஸ்தல வரலாறு :    தக்கனுக்கு 27 மகள்கள். இவர்கள் அனைவரும் சந்திரனை திருமணம் செய்து கொண்டார்கள். 27 பெண்களிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதாக தக்கனிடம் சந்திரன் வாக்கு கொடுத்தான். ஆனால் ரோகிணியிடம் மட்டுமே மிகுந்த காதலுடன் இருந்தான். இதனால் மற்ற மனைவிகள் தங்களது தந்தையிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட தக்கன் உன் அழகும் ஒளியும் தினம் தினம் குறையட்டும் என சாபமிட்டான். சாபம் பலித்ததால், முழு சந்திரன் தேய தொடங்கினான். சாபம் தீர ஸ்ரீரங்கம், திரு இந்தளூர், தலைச்சங்காடு என ஒவ்வொரு கோயிலாக சென்று கடைசியில் திருமணிக்கூடத்திற்கு வந்தான். அங்கே அவனுக்கு பெருமாள் வரம் தந்து வரதராஜனாக காட்சி தந்தார். அவனது நோய் விலகியது. சாபவிமோசனம் கிடைத்தது.
-----------------------
சிதம்பர ரகசியம் பகுதி : 10

சிதம்பரம் கோவில் எப்போது கட்டப்பட்டது என்று அறுதியிட்டுக் கூற முடியாதெனினும் காலப் போக்கில் பல மன்னர்கள் இந்தக் கோயிலுக்குக் கட்டுமானப் பணிகளுக்கு மானியங்கள் விடுத்திருக்கிறார்கள். இந்தக் கோயில் இருந்த சமயம் தெரியாவிட்டாலும் முதலில் மூலநாதர் என்ற சிவலிங்கம் வழிபாட்டில் இருந்ததாய்த் தெரிய வருகிறது. சிவலிங்க வழிபாடு தான் சிவனை வழிபடுவோரின் முக்கிய வழிபாட்டுத் தெய்வமாகவும் இருந்து வந்தது. இந்த லிங்கத்தைத் தான் முதலில் வியாக்ரபாதர், பதஞ்சலி, உபமன்யு போன்றோரும் பின்னர் இந்தக் கோயிலுக்கு முதன் முதல் விஜயம் செய்த சூரிய வம்சத்தைச் சேர்ந்த வங்க நாட்டு கெளட அரசன் ஹிரண்யவர்மனும் வழி பட்டு வந்திருக்கிறார்கள். இந்த மன்னனின் திருப்பணிகள் பற்றிச் சிதம்பர மஹாத்மியம் புத்தகத்தில் காண முடிகிறது. இந்த மூலநாதர் கோயில் தற்போதைய சிதம்பரம் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ளது. கிழக்கே பார்த்து இருக்கும் மூலநாதரின் திருமேனி சுயம்புத் திருமேனி என்று சொல்லப் படுகிறது. பக்கத்திலேயே உமை அன்னையின் கோயிலும் தெற்குப் பார்த்து அமைந்துள்ளது. சிதம்பரத்தில் உள்ள மற்றக் கோயில்களில் உள்ள லிங்கத் திருமேனிகளை விட இந்த லிங்கத் திருமேனி மிகப் பழமை வாய்ந்ததாய்ச் சொல்லப் படுகிறது. இவ்வளவு பழமை வாய்ந்த மூலநாதரையும் உமை அன்னையையும் தரிசித்த பின் நாம் எங்கே செல்கிறோம் தெரியுமா? நேரே சித்சபைக்குத் தான். இங்கே கொஞ்சம் அதிக நேரம் செலவிடுவோம். தயாராய் இருக்கணும். இந்திரன் கேட்டுக் கொண்டதின் பேரில் விஸ்வகர்மா என்ற தேவசிற்பியால் எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருளின் ஆனந்தத் தாண்டவம் ஆட கட்டப்பட்டது இந்த சித்சபை என்னும் மூலஸ்தானம். சிதம்பரம் கோயிலின் நடுவில் உள்ளது இந்தச் சித்சபை. இதை ஹேம சபை, தாப்ர சபை என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். பக்தி இலக்கியத்தை வளர்த்த நம் நாயன்மார்களால் பொன்னம்பலம் என்று உருகி உருகிப் பாடப்பட்டது இது. முதலாம் பராந்தக சோழனால் பொற்கூரை வேயப்பட்டது. இந்தச் சித்சபை வேத காலத்தில் இருந்தே இருந்து வந்ததாய்க் கையால் எழுதப் பட்ட சில குறிப்புக்களில் இருந்து தெரிய வருகிறது. தெற்கே பார்த்து இருக்கும் இந்தச் சித்சபையில் தான் நடராஜர், சிவகாம சுந்தரியுடன் கோயில் கொண்டிருக்கிறார். "சித்" என்றால் "ஞானம்" என்றும் "அம்பரம்" என்றால் "ஆகாசம்" என்றும் பொருள். அந்தச் சிதம்பரத்தின் "சித்சபை" பற்றிய வர்ணனையைச் சற்றுப் பார்ப்போமா?

சிதம்பரத்திலேயே நடராஜர் தரிசனம் தான் முக்கியமானது. அந்த நடராஜர சிவகாம சுந்தரியுடன்  கோயில் கொண்டிருக்கும் சித்சபையை என்னால் முடிந்த வரை சொல்கிறேன். இந்தச் சபைக்குச் செல்ல ஐந்து வெள்ளியில் ஆன படிகள் இருக்கின்றன. இவை "நம சிவாய" என்னும் பஞ்சாட்சரத்தைக் குறிக்கும். சிவனின் ஐந்து விதத் தோற்றங்களைக் குறிக்கும் என்றும் சொல்கின்றனர். சிவனின் ஐந்து விதத் தோற்றங்கள். பிரம்ம பீடம், வி்ஷ்ணு பீடம், ருத்ர பீடம், மஹேஸ்வர பீடம், சதாசிவ பீடம். இந்த ஐந்து பீடங்களும் உள்ள இடங்கள் இனி வரிசையாய் வரும். படிக்கிற வசதிக்கும் புரிந்து கொள்ள வசதிக்கும் ஏற்றவாறு எழுதி வருகிறேன். புரியாத இடத்தில் சந்தேகத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும். இப்போ முதலில் பிரம்ம பீடம் என்று சொல்லப் படும் பகுதிக்குப் போகலாம்.

பிரம்ம பீடம் : இங்கே 28 மரத் தூண்கள் இருக்கின்றன. இவை 28 விதமான ஆகமங்களைக் குறிக்கிறது.

விஷ்ணு பீடம் : இங்கே உள்ள ஐந்து தூண்களும் ஆகாயம், பூமி, நீர், நெருப்பு, காற்று என்னும் பஞ்ச பூதங்களைக் குறிக்கும்.

ருத்ரபீடம் : இங்கே உள்ள 6 தூண்களும் ஆறுவிதமான சாஸ்திரங்களைக் குறிக்கும். தர்க்கம், வ்யாகரணம், வேதாந்தம், மீமாம்சம், ஜோதிடம், வைத்தியம் போன்றவை அவை.

மஹேஸ்வர பீடம் : கிழக்கே உள்ள இந்தப் பீடத்தில் சந்தங்கள், கல்பங்கள், ஜோதிஷம், நிருத்தம், வ்யாகர்ணம், சிக்ஷை, போன்ற ஆறும் ஸ்தம்பங்களாயும், வைசேசிகா, பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை, சாங்கியம், கெளடம் போன்ற தத்துவங்கள் தூண்களாயும் இருக்கின்றன. இதற்கு மேல் உள்ள பிரணவ பீடத்தில்தான் நடராஜர், சிவகாமியுடன் ஆடிக் கொண்டிருக்கிறார்.

சதாசிவ பீடம் : 4 வேதங்களும் 4 பொன்னாலாகிய தூண்களாய் உள்ளன இங்கு. இங்கே தான் "சிதம்பர ரகசியம்" தரிசனம் கிடைக்கும்.

மேலே உள்ளவை எல்லாம் தத்துவங்கள். சில பாடங்கள் பெயர் நாம் கேட்டிருப்போம். மற்றவை எல்லாம் தத்துவம் படிப்பவர்களுக்குப் புரியும். ஆகமங்கள் 28ம் பெயர் வேணாம்னு தான் எழுதலை. இம்மாதிரியான மொத்தம் 96 தத்துவங்களை உள்ளடக்கியது சித்சபை.

சித்சபையின் மேற்கூரையைப் பார்ப்போமா? சற்றே வெளியே வந்து சித்சபையின் மேல் கோபுரத்தைப் பார்த்தால் அங்கே ஒன்பது கலசங்கள் பார்க்கலாம். நவசக்தியும் ஒன்பது கலசங்களாய்ப் பிரதி்ஷ்டை செய்யப் பட்டிருக்கிறது. அவை வாம சக்தி, ஜ்யேஷ்ட சக்தி, ரெளத்ரி சக்தி, காளி, காலிவிகாரினி, பலி, பாலவிகரணி, பலப்ரமதனி, மனோன்மணி.

64 விதமான மரத்தாலான வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் "beam" என்று சொல்லப்படும் இவை 64 கலைகளைக் குறிக்கும்.

21,600 தங்க ஓடுகள் ஒரு மனிதன் ஒரு நாளில் விடும் 21,600 மூச்சுக் காற்றைக் குறிக்கும்.

72,000 ஆணிகள் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. நம் உடலில் உள்ள நாடி, நரம்புகளையும் நாடித்துடிப்பையும் குறிக்கும் அவை.

நாளை நடராஜர் ஆடும்போது பார்க்கலாமா?
திவ்ய தேசங்கள் அருள் மிகு சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில்

மூலவர் : நீலமேகப்பெருமாள்
உற்சவர் : சவுரிராஜப்பெருமாள்
தாயார் : கண்ணபுரநாயகி
தீர்த்தம் : நித்யபுஷ்கரிணி
ஆகமம்  : வைகானஸம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : கிருஷ்ணபுரம்
ஊர் : திருக்கண்ணபுரம்
மாவட்டம் : நாகப்பட்டினம்
பாடியவர்கள் : நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார்          

இல்லையலல் எனக்கேல் இனியென்குறை அல்லி மாத ரமரும் திரு மார்பினன் கல்லிலேயந்த மதில்சூழ் திருக்கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாரவே.நம்மாழ்வார்
 
விழா : வைகாசியில் 15 நாள், மாசியில் 15 நாள் பிரம்மோற்ஸவம்.  
      
சிறப்பு : இத்தலத்தில் உள்ள உற்சவர் "சவுரிராஜப் பெருமாள்' என்ற பெயருடன், தலையில் முடியுடன் இருக்கிறார். அமாவாசையன்று உலா செல்லும் போது மட்டுமே திரு முடி தரிசனம் காண முடியும். "சவுரி' என்ற சொல்லுக்கு "முடி' என்றும்"அழகு' என்றும் பொருள்கள் உண்டு.  
      
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  முகவரி : அருள்மிகு சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம் - 609 704. நாகப்பட்டினம் மாவட்டம்.  போன்: +91- 4366 - 270 557, 270 718, 99426 - 56580.
     
பெருமை : சவுரிராஜப் பெருமாள் ஒருசமயம் இக்கோயில் அர்ச்சகர் ஒருவர் சுவாமிக்கு சாத்திய மாலையை தன் காதலிக்கு சூடிவிட்டார். அந்த நேரத்தில் மன்னர் கோயிலுக்கு வந்து விடவே அவருக்கு மரியாதை செய்ய அர்ச்சகரிடம் மாலை இல்லை. எனவே தன் காதலிக்கு சூட்டிய மாலையையே மன்னருக்கு போட்டு விட்டார். அதில் பெண்ணின் கூந்தல் முடி இருந்ததைக்கண்ட மன்னர் மாலையில் முடி எப்படி வந்தது? என கேட்டார். அர்ச்சகர் பெருமாளின் தலையில் இருந்த முடிதான் அது என பொய் சொல்லிவிட்டார். மன்னனுக்கு சந்தேகம் வரவே, தான் பெருமாளின் திருமுடியை பார்க்க வேண்டும் என்றார். மறுநாள் கோயிலுக்கு வந்தால் முடியைக் காட்டுவதாக அர்ச்சகர் கூறினார். சுவாமிக்கு திருமுடி இல்லாத பட்சத்தில் தண்டனைக்கு ஆளாக வேண்டும் என எச்சரித்துவிட்டுச் சென்றார் மன்னர். கலங்கிய அர்ச்சகர் அன்றிரவில் சுவாமியை வணங்கி தன்னை காக்கும்படி வேண்டினார்.மறுநாள் மன்னர் கோயிலுக்கு வந்தார். அர்ச்சகர் பயந்து கொண்டே சுவாமியின் தலையை மன்னருக்கு காட்ட, திருமுடியுடனே காட்சி தந்தார் பெருமாள். எனவே "சவுரிராஜப் பெருமாள்' என்ற பெயரும் பெற்றார். இவர் இத்தலத்தில் உற்சவராக தலையில் முடியுடன் இருக்கிறார். அமாவாசையன்று உலா செல்லும்போது மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும். "சவுரி' என்ற சொல்லுக்கு "முடி' என்றும், "அழகு' என்றும் பொருள்கள் உண்டு.

சிறப்பு : இங்கு சுவாமி எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாக கையில் முழுவதும் திரும்பிய பிரயோகச் சக்கரத்துடன் அருளுகிறார். அருகிலேயே கருடன் வணங்கிய கோலத்தில் இருக்கிறார். வைகாசி பிரம்மோற்ஸவத்தின் போது சுவாமி அதிகாலையில் சிவன், மாலையில் பிரம்மா, இரவில் விஷ்ணு என மும்மூர்த்திகளாக காட்சி தருகிறார். விஷ்ணுவின் இந்த மும்மூர்த்தி தரிசனம் விசேஷ பலன்களைத் தரக்கூடியது. விபீஷ்ணனை தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமபிரான், அவனுக்கு இத்தலத்தில் பெருமாளாக நடந்து காட்சி தந்தார்.அமாவாசைதோறும் உச்சிகால பூஜையில் பெருமாள் விபீஷணனுக்கு நடந்து காட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. இத்தலத்தை நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் மங்களாசாஸனம் செய்துள்ளனர் கர்வம் அழிந்த கருடன் : தன் தாயை விடுவிப்பதற்காக பாற்கடலில் அமிர்தம் பெற்று திரும்பிக் கொண்டிருந்தார் கருடன். வழியில் யாருக்கும் கிடைக்காத அமிர்தத்தை தான் கொண்டு வருவதை எண்ணி அவர் மனம் கர்வம் கொண்டது. கர்வத்துடன் அவர் இத்தலத்திற்கு மேலே சென்றதால் தன் சக்தி இழந்து கடலில் வீழ்ந்தார். தவறை உணர்ந்த கருடன் மன்னிப்பு வேண்டி கடலினுள் இருந்த ஒரு மலையின் மீது சுவாமியை வேண்டி தவம் செய்தார். விஷ்ணு அவரை மன்னித்து வாகனமாகவும் ஏற்றுக்கொண்டார். மாசி பவுர்ணமியில் கடற்கரையில் கருடனுக்கு காட்சி தரும் விழா நடக்கிறது. இவ்விழாவின்போது பக்தர்கள் சுவாமியை "மாப்பிள்ளை!' என்று கோஷமிட்டு வித்தியாசமாக வரவேற்கின்றனர்.முனையதரையன் பொங்கல் : முன்னொரு காலத்தில் இப்பகுதியை முனையதரையன் என்றொரு குறுநில மன்னர் ஆட்சி செய்து வந்தார். தினசரி பெருமாளை வணங்கிவிட்டு உணவு உண்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். பெருமாள் சேவைக்காக பணத்தை எல்லாம் செலவழித்ததால் வறுமையில் வாடிய அவர் மன்னனுக்கும் வரி கட்டவில்லை. எனவே, மன்னன் அவரை சிறைப்பிடித்துச் சென்றார். அன்று மன்னரின் கனவில் தோன்றிய விஷ்ணு, அவரை விடுவிக்கும்படி சொல்லவே முனையதரையன் விடுவிக்கப்பட்டார். இரவில் வீடு திரும்பிய முனையதரையனுக்கு அரிசி, பருப்பு, உப்பு மட்டும் கலந்த பொங்கல் செய்து கொடுத்தாள் மனைவி. அவர் பெருமாளுக்கு மானசீகமாக (மனதில் நினைத்து) நைவேத்யம் படைத்து சாப்பிட்டார். மறுநாள் அர்ச்சகர் கோயிலுக்கு வந்தபோது கருவறையில் சுவாமியின் வாயில் பொங்கல் ஒட்டியிருந்ததைக் கண்டார். இத்தகவல் மன்னரிடம் தெரிவிக்கப்படவே அவர்கள் முனையதரையன் படைத்த பொங்கலை சுவாமி உண்டதை அறிந்து கொண்டனர். அன்றிலிருந்து இக்கோயிலில் இரவு பூஜையின்போது பொங்கல் படைக்கும் பழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இதனை "முனையதரையன் பொங்கல்' என்றே சொல்கின்றனர். இங்குள்ள தீர்த்தம் மிகவும் விசேஷமானது. உத்ராயணத்தின் போது மூன்று நாட்கள் இத்தீர்த்தத்தில் அனைத்து நதிகளும் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக் கொள்வதாக ஐதீகம். இதில் அமாவாசை தினத்தில் பித்ரு பூஜைகள் செய்கிறார்கள். தோஷத்தால் பாதிக்கப்பட்ட இந்திரன் இங்கு வந்து நவக்கிரக பிரதிஷ்டை செய்து சுவாமியை வணங்கி தோஷம் நீங்கப்பெற்றான். இந்திரன் பிரதிஷ்டை செய்த நவக்கிரகம் கோபுரத்திற்கு அடியில் மதிற்சுவரில் மேற்கு பார்த்தபடி இருக்கிறது. இந்த நவக்கிரகம் சுற்றிலும் 12 ராசிகளுடன் இருப்பது வித்தியாசமான அமைப்பாகும். இத்தலம் பூலோக வைகுண்டம் என கருதப்படுவதால் இங்கு சொர்க்கவாசல் இல்லை. திவ்யதேசங்களில் கீழை வீடாக இருக்கும் இத்தலம் பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. கருவறைக்கு மேல் உள்ள உத்பலாவதக விமானத்தில் விஷ்ணுவை வணங்கி முனிவர்கள் தவம் இருப்பதாக ஐதீகம். எனவே, இங்கு விமானத்தை தரிசனம் செய்ய முடியாதபடி சுற்றி மதில் எழுப்பப்பட்டுள்ளது.

திருநெற்றியில் தழும்பு : உற்சவ மூர்த்தியின் திருமேனியில் வலப்புருவத்திற்கு மேல் சிறு தழும்பும் இன்றும் காணலாம். முன் காலத்தில் அந்நியர் திருமதில்களை இடித்து வந்தபோது திருக்கண்ணபுரத்து அரையர், மனம் புழுங்கி, "பெருமானே பொருவரை முன்போர் தொலைத்த பொன்னழி மற்றொரு கை என்றது பொய்த்ததோ' என்று கையிலிருந்த தாளத்தை வீசி எறிந்தார். அது பெருமானது புருவத்தில் பட்டது. "தழும்பிருந்த பூங்கோரையாள் வெருவப் பொன்பெயரோன் மார்பிடந்த வீங்கோத வண்ணர் விரல்' என்ற பாசுரத்தில் போல இத்தழும்பை இன்றும் காட்டித் தமக்கு அடியாரிடம் கொண்ட பரிவைப் பெருமான் விளங்குகின்றார். (சந்தேகம்) "ஓம் நமோ நாராயணா' என்ற மந்திரத்தின் முடிவு நிகழ்ந்த இடம் இது. அஷ்டாச்சர சொரூபி மந்திர உபதேசம் பெற்ற தலம். இந்த ஊரில் கால் பட்டாலே வைகுந்தம் கிடைக்கும் என்பதால் இந்த பெருமாள் தலத்தில் சொர்க்க வாசல் கிடையாது. மற்ற தலங்களில் அபய காட்சியோடு பெருமாள் இருப்பார்.இங்குள்ள பெருமாள் தானம் வாங்கிக் கொள்தல் போல காட்சியில் இருப்பார். இதன் பொருள் நம் கஷ்டங்களை பெருமாள் வாங்கிக் கொள்ளுதல் போல ஐதீகம். இத்தலத்தில் பெருமாள் சக்கரம் பிரயோகச் சக்கரம் வதம் பண்ணுவதாய் உள்ளது. உற்சவ பெருமாளுக்கு சவுரி முடி வளர்ந்ததால் சவுரி ராஜ பெருமாள் என்று பெயர். சவுரிராஜப் பெருமாளிடம் திருமங்கை ஆழ்வார் மந்திர உபதேசம் பெற்ற தலம் இது. திருமங்கை ஆழ்வார் 100 பாசுரம் இத்தலம் குறித்து பாடியுள்ளார். குலசேகர ஆழ்வார் சவுரிராஜப் பெருமாளை இராமனாக நினைத்துக் கொண்டு தாலேலோ (ராத்திரி தூங்க வைக்கப் பாடும் பாசுரம்)பாடிய திவ்ய தேசம் திருக்கண்ணபுரம் மட்டுமே. நம்மாழ்வார் 11 பாசுரம் பாடியுள்ளார்.

கருட தண்டக மகரிஷிக்கு பெருமாள் காட்சி தந்த தலம்.

கிருஷ்ணாரண்ய ஷேத்திரம் என்று திருக்கண்ணபுரம் , திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி, கபிஸ்தலம், திருக்கோயிலூர் என்று இந்த ஐந்தும் கிருஷ்ணன் வாழ்ந்து உறைந்த இடம்.

திருப்புற்குழியில் வறுத்த பயிறு, திருப்பதியில் லட்டு, ஸ்ரீரங்கத்தில் அரவணை (பாயாசம்) கும்பகோணத்தில் தோசை (பால் பாயாசம்) அதுபோல் இங்கு முனியோதரன் பொங்கல் பிரசித்தம். 108 திவ்ய தேசங்களுள் சிறப்புடையதாக மேலை வீடு திருவரங்கம்,வடக்கு வீடு திருவேங்கடம் எனவும் தெற்கு வீடு திருமாலிருஞ் சோலை (அழகர் கோயில்) எனவும் அமைந்த வரிசையுள் கீழை வீடாக திருக்கண்ணபுரம் ஆகும்.
 
ஸ்தல வரலாறு : முன்னொரு காலத்தில் சில முனிவர்கள் இத்தலத்தில் பெருமாளை வேண்டி தவம் செய்து கொண்டிருந்தனர். சாப்பாடு, தூக்கம் என எதனையும் பொருட்படுத்தாமல் பெருமாளை மட்டும் எப்போதும் தியானித்து வணங்கி வந்ததால் அவர்கள் நெற்கதிர்கள் போன்று மிகவும் மெலிந்த தேகம் உடையவர்களாக இருந்தனர். மகாவிஷ்ணுவிடம் "அஷ்டாட்சர மந்திரம்' கற்றிருந்த உபரிசிரவசு எனும் மன்னன் ஒருசமயம் தன் படையுடன் இவ்வழியாக திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது வீரர்களுக்கு பசியெடுத்தது. எனவே இங்கு தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களை நெற்கதிர்கள் என நினைத்த வீரர்கள் அவர்களை வாளால் வெட்டினர். முனிவர்களின் நிலையைக் கண்ட விஷ்ணு, சிறுவன் வடிவில் வந்து உபரிசிரவசுவுடன் போர் புரிந்தார். மன்னனின் படையால் சிறுவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே, இறுதியாக மன்னன் தான் கற்றிருந்த அஷ்டாட்சர மந்திரத்தை சிறுவன் மீது ஏவினான். அம்மந்திரம் சிறுவனின் பாதத்தில் சரணடைந்தது. இதைக்கண்ட மன்னன் தன்னை எதிர்த்து நிற்பது மகாவிஷ்ணு எனத் தெரிந்து மன்னிப்பு கேட்டான். விஷ்ணு அவனை மன்னித்து நீலமேகப்பெருமாளாக காட்சி தந்தார். அவனது வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். பின் மன்னன் விஸ்வகர்மாவைக் கொண்டு இங்கு கோயில் எழுப்பினான்.


ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

வேதங்கள் பற்றியும் மந்திரங்கள் பற்றியும் நமக்குத் தெரிந்தவை மிகக் குறைவு. அதன் மூலம் அவற்றால் ஒரு பயனும் இல்லை என்று முடிவு கட்டுகிறோம். ஆனால் அது அப்படி இல்லை. வேதங்களில் சொல்லாத விஷயமே இல்லை. அரசன், செய்ய வேண்டிய கடமையைப் பற்றிக் கூறும் அர்த்த சாஸ்திரம், உத்தமமான மருத்துவ முறையைப் பற்றிக் கூறும் ஆயுர்வேத சாஸ்திரம், சிற்பங்கள் வடிக்கும் முறை பற்றியும் கோவில் களின் விதி முறைகளையும் பற்றிக் கூறும் சிற்ப சாஸ்திரம், ஆகம சாஸ்திரம் இவற்றை எல்லாம் நாம் படிக்காமல் விட்டு விட்டோம்.தப்புத் தப்பாக அர்த்தம் செய்து கொள்கிறோம். ஆயுர்வேத மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்து மேன்மேலும் முன்னேற்றி இருக்க வேண்டிய ஒர் வைத்தியம் ஆயுர்வேத மருத்துவம். ஆனால் நாம் இதில் பின் தங்கி விட்டோம். அந்தக் காலத்தில் ரண சிகிச்சை முறை ஆயுர்வேதத்தில் இருந்திருக்கிறது. ஸுஸ்ருதர் என்பவர் இதைப் பற்றி எழுதி இருக்கிறார். வெளி நாட்டில் இருந்து வந்தவர்கள் நம் சாஸ்திரங்களில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக் கொண்டு மேலும் மேலும் ஆராய்ச்சி செய்து விஞ்ஞானத்தில் முன்னேறி விட்டார்கள்.

சீனாவிலிருந்து வந்தது என்று ஒரு கணக்கு முறையைப் பற்றிப் பைத்தியமாக அலைகிறோம். குங்ஃபூ, கராத்தே போன்றவை ஜப்பானில் இருந்து வந்தது என்று கற்றுக் கொள்கிறோம். ஆனால் நம்முடைய செல்வங்களான கலரி, சிலம்பம், வர்மம் போன்றவை பற்றி யாருக்குத் தெரியும்? சிலம்பம் என்றால் சினிமாவில் வருவது தான் என்று நினைப்பார்களே தவிர, நிஜ வாழ்வில் இப்படி ஒரு விளையாட்டு இருந்ததே இன்றைய தலைமுறைக்குத் தெரியாது. நம்மைப் பற்றி நாமே குறைவாக நினைக்காமல் நம்முடைய முன்னோர்கள் சொல்லிச் செய்த ஒவ்வொரு காரியமும் அர்த்தமுள்ளது என்று நினக்க வேண்டும்.இப்போது திருமணங்களில் வரும் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். திருமணம் நடக்கும் போது மணமகனிடம் சொல்வது போல் அமைந்த ஒரு மந்திரம்:

"ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர:த்ரூதீயோ அக்னிஷ்டேபதி:துரீயஸ்தே மனுஷ்யஜா: என்று ஒரு மந்திரம்.

வெளிப்படையாகப் பார்த்தால் பெண் முதலில் சோமன் என்னும் சந்திரனிடமும், பின் கந்தர்வர்களிடமும், பின் அக்னியிடமும் இருக்கிறாள், அக்னியிடம் இருந்து இந்தப் பெண்ணை உனக்குத் தருகிறேன்" என்று அர்த்தம் வரும். ஆனால் இதன் உண்மையான அர்த்தம் எல்லாருக்கும் புரிவது இல்லை. நான் புத்தகங்களில் இருந்தும், எங்கள் வீட்டுக் கல்யாணங்களில் இருந்தும் கேட்டுத் தெரிந்து கொண்டது என்ன என்றால்: பெண் குழந்தை பிறந்ததில் இருந்து திருமணம் வரை இருக்கும் காலத்தை மூன்றாகப் பிரித்துச் சொல்கிறார்கள். முதல் பாகத்தைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்பவர் ஸோமன். இது சந்திரனைக் குறிக்கும். சந்திரன் குளிர்ச்சியும் மகிஷ்ச்சியும் அளிப்பவன். தேவர்கள் பலசாலியாக இருப்பதற்கு எப்படிச் சந்திரனின் அருள் தேவையோ அது போல பூமி வளம் பெறுவதற்கும் சந்திரனின் அருள் தேவை. அவன் அருளால் உலக ஆரோக்கியத்திற்கு உகந்த வகையில் பருவங்கள் உருவாகிறது. பூமி, வலுவும் வளமும் பெறுகிறது. அவன் அருளால் பெண்ணின் குழந்தைப் பருவம் ஆரோக்கியமானதாகவும், வளம் பொருந்தியதாகவும் இருக்கும். இதற்குச் சந்திரனின் அருள் தேவை. மேலும் ஆயுர்வேத முறைப்படியும், சோமம் என்றால் "கபம்" என்றும் ஒரு பொருள் உண்டு. பிறந்த குழந்தைக்கு இருக்கும் அதிகக் கபத்தினால் தொல்லைகள் கொடுக்காமல் காப்பாற்றும் பொறுப்பை ஏற்பவன் ஸோமன். மேலும் குழந்தை பிறந்து சிலவருடங்கள் வரை தாயின் கண்காணிப்பில் இருக்கும். தாயின் மென்மையான அணுகுமுறையைக் கூட ஸோமனின் உதாரணத்துக்குச் சொல்லலாம்.

வளர்கையில் பெண்ணின் குணமும், குரலும், மாறி அழகு அதிகரிக்கிறது. பெண் கனவு காண ஆரம்பிக்கிறாள். இதில் இருந்து அவளைக் காத்து நல்வழிக்குத் திருப்பும் பொறுப்பு கந்தர்வர்களுடையது. அதாவது தாய், தந்தை இருவரும் சேர்ந்து பெண்ணைக் கண்காணிக்கிறார்கள். அவளுடைய அழகுக்குக் காரணனான கபத்தை மட்டுப் படுத்தி அவளைத் தன்னிலை பெறச் செய்வது கந்தர்வர்கள் பொறுப்பு. அழகும், பருவமும் சேர்ந்து விட்டால் பின்னால் ஏற்படும் உணர்வுகளுக்கும் அவளுடைய துணை தேடும் நினைவுகளுக்கும் காரணம் அக்னி. இந்தச் சமயத்தில் தான் பெண் அந்த அக்னியைப் போல இருக்க வேண்டும். அவள் நினைவுகளும், கனவுகளும் அவளைச் சுட்டுப் பொசுக்காமல் அவளைப் பாதுகாப்பவன் அக்னி. அந்தப் பாதுகாப்பு உணர்வு அவளுக்குத் தோன்றக் காரணமாக இருப்பவன் அக்னி. ஏனென்றால் சிருஷ்டியின் மூலமே பெண்ணால்தான். தன்னிச்சையாகச் செயல் படும் தகுதி அவளுக்கு இருந்தாலும் அவள் ஜாக்கிரதையாகத் தன் குடும்பம், சமூகம் என்ற உணர்வுகளோடு ஆரோக்கியமான சிந்தனைகளோடு செயல் படுவதற்குக் காரணம் அக்னி. பெண்ணினம் காப்பாற்றப் பட்டால் அத்தனை தர்மங்களும் காப்பாற்றப் படும். ஆகவே திருமணம் ஆகும் வரை அவளைக் காக்கும் பொறுப்பை அக்னி ஏற்றுக் கொண்டு மணமகனிடம் மணப் பெண்ணை ஒப்படைக்கிறார். ஆகவே தான் திருமணங்கள் அக்னி சாட்சியாகவும் நடைபெறுகிறது. மணமகன், மணமகள் இருவரும் சேர்ந்து ஸோமன், கந்தர்வன், அக்னி இவர்கள் மூவருக்கும் முறைப்படி அவர்களுக்குப் பூஜை செய்து வணங்கி வழி அனுப்புவார்கள். முறையே சந்திரனுக்குப் பிடித்த பழத்தை ஒரு குழந்தைக்கும், கந்தர்வனுக்கு வேண்டிய ஆடை, அலங்கரம், வாசனைத் திரவியம் போன்றவைகளுக்கு மணமகன், மணமகள் ஆடைகளில் இருந்து நூல் எடுத்தும், அக்னிக்குப் பிரியமான நெய்யும் கொடுத்து வழி அனுப்புவார்கள். இதில் அவர்கள் இதுவரை செய்த தவறுகளை மன்னிக்கவும், மேலும் இனித் தவறு செய்யாமல் இருக்கவும் இருவரும் வேண்டும் வேண்டுதலும் இருக்கும். அக்னி பரிசுத்தமானது. அவன் பாதுகாப்பில் இருந்த பெண்ணும் சுத்தமானவள். அப்பழுக்கற்றவள்.

ஆகையால் நாம் சந்தேகமே இல்லாமல் வேதங்களும் மந்திரங்களும் கூறும் உண்மையைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.
சிதம்பர ரகசியம் பகுதி : 8

ஆட்டம் ஆரம்பிச்சாச்சு. ஆடப் போவது யாரு? இந்த அகில உலகங்களையும் படைக்கும், காக்கும், அழித்துத் திரும்பப் படைக்கும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனும், நாயகியும். இவங்க ஆடினதைப் பார்க்கப் போவது நாம் எல்லாருமே! ரெண்டு பேருக்கும் போட்டி வேறே யார் பெரியவங்க யார் சின்னவங்கன்னு! ஒண்ணிலே ஒண்ணாக இருக்கும் இவங்களிலே யாரைப் பெரியவங்க யாரைச் சின்னவங்கனு சொல்றது? அதுவும் புரியலை. நடுவர்களோ என்றால் சிவனை மட்டுமல்லாது அன்னையையும் போற்றித் துதிக்கும் ரிஷி முனிவர்கள். சிவனின் தாண்டவத்தைக் காண ஆவலுடன் காத்திருப்பவர்கள். ம்ம்ம்ம் செருமிக் கொண்டு வருகிறாள் காளி அன்னை. இவள் எப்படிப் பட்டவள்? இதோ பாரதி சொல்கிறார்: காலமாம் வனத்திலண்டக் கோல மாமரத்தின் மீது காளி சக்தி என்ற பெயர் கொண்டு-ரீங் காரமிட்டு உலவு மொரு வண்டு - தழல் காலும் வழி நீலவன்ன மூல அத்து வாக்கனெனனும் கால்களாறுடையதெனக் கண்டு மறை காணு முனிவோருரைத்தார் பண்டு. ஆட்டம் ஆரமபி்க்கிறது. திக்குகள் எட்டும் அதிருகின்றது. தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தித்தோம்! இறைவன் பதில் கொடுக்கிறார். தாம் தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தித்தோம்! அகில உலகும் குலுங்குகிறது. அண்டமே குலுங்க ஆடிய இந்த ஆட்டத்தில் யார் ஜெயிக்கப் போகிறார். காளியவளோ கலங்காமல் ஆடுகிறாள். இறைவனின் ஒவ்வொரு அபிநயத்துக்கும் பாவங்களுக்கும் சரியான பதில் கொடுக்கிறாள். ஆட்டத்துக்கு ஒரு முடிவே இல்லையோ என அனைவரும் எண்ணும் வேளையில் இறைவன் செய்த ஒரு காரியத்தில் காளி அன்னை வெட்கித் தலை குனிகிறாள். அவளால் அவ்வாறு செய்ய முடியவில்லை. அப்படி என்ன செய்தார் ஈசன் சர்வேசன்? ஆட்ட வேகத்தில் அவர் காதுக் குழை கழன்று கீழே விழ அதை அந்த ஆடும் வேகத்திலும் கவனித்த இறைவன் தன் இடது காலால் அந்த வலதுக் குழையை எடுத்துக் கொண்டு அந்தக் காலை அப்படியே மேலே தூக்கிக் காது வரை கொண்டு போய்க் குழையை மாட்டிக் கொள்கிறார் வலது காதில். ஆட்டத்தில் தேர்ச்சி இருந்தாலும் பெண்ணால் இவ்வாறு செய்ய முடியாது அல்லவா? பெண்கள் போன போகும் போகப் போகிற தூரம் இவ்வளவு என்று வரையறுக்கப் பட்டிருக்கிறதல்லவா? அனைவரையும் படைத்த அன்னையானாலும் அவளும் ஒரு பெண்ணல்லவா? அவள் பெண்மை அவளைத் தடுத்தது. இந்தக் காட்சியைக் கண்ட முனிவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இறைவனைப் பார்க்கிறார்கள். அப்போது இறைவன் அவர்களைத் திருவள்ளுவரிடம் போய்க் கேட்கச் சொன்னதாயும் அவர்கள் வள்ளுவரிடம் போய் இறைவன் ஏன் அவ்வாறு பாதி நாட்டியத்தில் செய்தார் எனக் கேட்க அவர் உடனேயே காதுக் குழையைப் போட்டுக் கொண்டாரே அதையா கேட்கிறீர்கள்? எனக் கேட்டதாயும் வள்ளுவரின் பக்தியையும் அவர் இருந்த இடத்திலேயே இறை தரிசனம் கிடைக்கப் பெற்றதில் இருந்து அவருடைய தனித் தன்மை வெளிப்பட்டதாயும் அவர் ஒரு சித்தர் என்றும் செவி வழிச் செய்திகள்.

காளி தோற்றுப் போனாள். தன்னுடைய இடத்தை கொடுத்து விட்டுப் போகிறாள். உடலில் ஒரு பாகம் ஆனவள் இந்த இடத்துக்குச் சண்டை போடுவாளா? எல்லாம் ஒரு நாடகம். நமக்காக. நாம் நம் எல்லையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. ஆனால் இறைவன் அவ்வாறு விட்டு விடுவாரா? நீ இந்த ஊர் எல்லையில் காவல் காத்து வா என்று ஆணை இடுகிறார். அவ்வாறே காளி ஊர் எல்லைக்குச் செல்கிறாள். நடராஜர் ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறார். பதஞ்சலியும், வியாக்ரபாதரும் ஆவலுடன் பார்த்து ரசிக்கிறார்கள். இறைவனை அங்கேயே கோயில் கொள்ள வேண்டுகின்றனர். இறைவனும் இசைகிறான். அவனுக்குத் தெரியாதா? ஆதியாஞ்சிவனுமவன் சோதியான சக்தியுந்தான் அங்குமிங்கு மெங்கு முளவாகும் ஒன்றே யாகினாலுகனைத்தும் சாகும்வையன்றியோர் பொருளுமில்லை அன்றியொன்றுமில்லை ஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும் இந்த அறிவு தான் பரமஞானமாகும். இவ்வாறு இறைவனுக்குத் தன்னுடைய இடத்தை விட்டுக் கொடுத்து விட்டுக் காளி போனதும் இறைவன் அங்கே குடி கொள்கிறான். தேவ சிற்பியான விஸ்வக்ரமா வந்து நடன அரங்கம் எழுப்பித் தருகிறார் இறைவன் ஆட. அதற்கு முதலில் இந்த ஆட்டத்தின் ரகசியம் புரியவேண்டும் அல்லவா? அதன் படி தானே நடன அரங்கம் எழும்ப முடியும்? முனிவர்கள் விஸ்வகர்மாவுக்குப் போதிக்க அதைக் கருத்தில் கொண்டு எழுப்புகிறார் "சித் சபை". ஆனால் நாம் முதலில் பார்க்கப் போவது "மூலநாதரை"த் தான். ஆதியில் குடி கொண்ட அவரை விட்டு விட்டு முன்னே போகக் கூடாது அல்லவா?

தரிசனம் தொடரும். நாளை சந்திக்கலாம்