திங்கள், 29 ஜூலை, 2019

108 திவ்ய தேசங்கள்: அருள்மிகு காட்கரையப்பன் திருக்கோயில்
மூலவர் :  காட்கரையப்பன் (அப்பன்)
தாயார் :  பெருஞ்செல்வநாயகி, வாத்ஸல்யவல்லி
தீர்த்தம் :  கபில தீர்த்தம்
பழமை :  2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :  திருகாட்கரை
ஊர் :  திருக்காக்கரை
மாவட்டம் :  எர்ணாகுளம்
மாநிலம் :  கேரளா
பாடியவர்கள்:நம்மாழ்வார்
நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை ஈர்மை செய்து என்னுயிராய் என்னுயிருண்டான் சீர்மல்கு சோலை தென் காட்கரை யென்னப்பன் கார்முகில் வண்ணன்தன் கள்வம் அறிகிலேனே. நம்மாழ்வார்  
      
விழா : ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் திருவோண உற்சவம் நடக்கும். ஒரு காலத்தில் 28 நாள் திருவிழா நடந்துள்ளது. இப்போது பத்து நாள் திருவிழா நடக்கிறது.  
      
சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. இக்கோயிலின் நுழைவு வாயிலில் மகாபலியின் ஆஸ்தானம் இருந்துள்ளது. இந்த இடத்தில் தற்போது ஒரு சிம்மாசனம் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இவ்விடத்தில் விளக்கேற்றி மகாபலியை வழிபடுகின்றனர். கேரளபாணியில் ஓடு வேய்ந்த வட்ட வடிவ கோயில் இது. முகப்பில் உள்ள மண்டபத்தில் பெருமாள் வாமனராக, குள்ள வடிவம் எடுத்து வரும் காட்சி மரத்தில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தில் வாமன மூர்த்தி அருள்பாலிக்கிறார். இவரை மக்கள் திருக்காக்கரை அப்பன் என செல்லப் பெயரிட்டு அழைக்கிறார்கள்.  
      
திறக்கும் நேரம் : காலை 05:00 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 05:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு காட்கரையப்பன் (வாமனர்) திருக்கோயில், திருக்காக்கரை : 683 028 எர்ணாகுளம் மாவட்டம் கேரளா மாநிலம்.

தகவல் : கோயிலுக்கு வெளியே தனி சன்னதியில் தேவி பகவதி, சாஸ்தா, சுந்தர யக்க்ஷி, கோபால கிருஷ்ணன், நாகர் ஆகியோர் உள்ளனர். இக்கோயிலை பரசுராமர் நிறுவியுள்ளார். மகாபலி சிறந்த சிவபக்தன். அவன் வழிபாடு செய்ததாக சொல்லப்படும் லிங்கம் இங்கு இருக்கிறது. இந்த வகையில் சைவ, வைணவர்கள் இரு தரப்பினரும் இங்கு வழிபாடு செய்கின்றனர். இந்தக் கோயிலில் வாமனருக்கு ஒரு கருவறையும், சிவபெருமானுக்கு ஒரு கருவறையும் தனித்தனியே உள்ளன. தினமும் ஐந்து  பூஜைகள், மூன்று சீவேலிகள் நடைபெறுகின்றன. வாமன மூர்த்தி சந்நிதிக்கு தெற்குத் திசையில் மகாபலி வழிபட்டதாக கூறப்படும் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தலத்தில் வாமனரை வழிபடுவதற்கு முன்பாக சிவலிங்கத்தை வழிபடுவதைப் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தலபெருமை : கேரளத்தில் பழமை வாய்ந்த கோயில் இது. தமிழ் கல்வெட்டுக்கள் இங்கு உள்ளது. தமிழக மக்களுக்கு ஒரு காலத்தில் இது வழிபாட்டு தலமாக இருந்துள்ளது. கி.பி. ஒன்பது முதல் பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை சேர மன்னர்கள் இத்தலத்தை பிரபலமாக்கியுள்ளனர். 1825ல் திருவிதாங்கூர் அரசு இக்கோயிலை எடுத்து கொண்டது. 1948ல் புனர் பிரதிஷ்டை நடந்துள்ளது. இருந்தாலும் இன்றும் புதுப்பொலிவுடன் விளங்குகிறது. திருக்காட்கரை திருத்தலத்திலும் ஓணம் திருவிழா வெகு விசேஷமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்தத் தலத்தில் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார் வாமன அவதார பெருமாள். இவருக்குக் கதாயுதம் கிடையாது. கருவறை விமானம் புஷ்கல விமானம். தாயார் ஸ்ரீ பெருஞ் செல்வநாயகி. தாயாருக்குத் தனிச் சன்னதி கிடையாது. பத்து மற்றும் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பதினெட்டு கல்வெட்டுக்கள் இந்தத் தலத்தில் காணக்கிடைக்கின்றன.

ஸ்தல வரலாறு : மகா பலிச்சக்கரவர்த்தி என்பவன் கேட்டவர்க்கு கேட்டதை எல்லாம் கொடுப்பவன். இவன் அசுர குலத்தில் பிறந்தாலும் மிகவும் நல்லவன். ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் இடறி விட்டான். தர்மம் செய்வதில் தன்னை விட தலை சிறந்தவர் யாருமில்லை என்ற அகந்தை அவனிடம் ஏற்பட்டு விட்டது. நல்லவனிடத்தில் அகந்தை ஏற்பட்டால் ஆபத்து. இதை உணர்ந்த மகா விஷ்ணு அதை வளர விடாமல் தடுக்கவே குள்ள வடிவெடுத்து வந்தார். மகா பலியிடம் மூன்றடி நிலம் கேட்டார். தாங்கள் குள்ளமானவர். உங்கள் காலுக்கு மூன்றடி நிலம் கேட்கிறீர்களே. அது எதற்கும் பயன்படாதே என்றான் மகாபலி. அவனது குல குரு சுக்ராச்சாரியார், வந்திருப்பது மகா விஷ்ணு என்பதை அறிந்து தானம் கொடுப்பதை தடுத்தார். கேட்டவர்க்கு இல்லை என்று சொன்னால் இது வரை செய்த தானம் பலனில்லாமல் போய் விடும் என நினைத்தான் மகா பலி  சம்மதித்தான். பெருமாள் விஸ்வரூபம் எடுத்தார். ஓரடியால் பூமியையும், இன்னொரு அடியால் ஆகாயத்தையும் அளந்த பெருமாள், மூன்றாவது அடிக்கு நிலம் எங்கே? என கேட்டார். அகந்தை கொண்டிருந்த மகா பலி பணிந்து தலை வணங்கி நின்றான். பகவானே! இதோ என் தலை இதைத்தவிர என்னிடம் வேறெதுவும் இல்லை என்றான். பெருமாள் அவனை அப்படியே பூமியில் அழுத்தி தன்னோடு இணைத்து கொண்டார். வாமனர் மகா பலியைப் பாதாளத்திற்கு அனுப்புவதற்கு முன் மகா பலி ஒரு வரம் கேட்டான். வருடத்துக்கு ஒரு முறை தனது தேசத்து மக்களைச் சந்திப்பதற்கு அருள் செய்யுமாறு வேண்டிக்கொண்டான் பகவானும் ஏற்றுக்கொண்டார். பகவான் மகாபலிக்கு அருள் புரிந்தது ஆவணி மாதம் திருவோண நடசத்திரத் திருநாளில்  இதை நினைவு கூரும் வகையில் கேரளாவில் ஓணம் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மகாபலியும் நான் வேண்டிக்கொண்டபடி இந்த விழாவில் கலந்து கொண்டு குடிமக்களை வாழ்த்துவதாக ஐதீகம்.
108 திவ்ய தேசங்கள் : அருள் மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில்

மூலவர் : லெட்சுமணப்பெருமாள் (திருமூழிக்களத்தான், அப்பன்,ஸுக்திநாதன்)
தாயார் : மதுரவேணி நாச்சியார்
தீர்த்தம் : சங்க தீர்த்தம், சிற்றாறு
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருமூழிக்களம்
ஊர் : திருமூழிக்களம்
மாவட்டம் : எர்ணாகுளம்
மாநிலம் : கேரளா
பாடியவர்கள் : நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்
பூந்துழாய் முடியாருக்கு பொன்னாழிக் கையாருக்கு ஏந்து நீரிளங் குருகே திரு மூழிக் களத்ததாருக்கு ஏந்து பூண்முலை பயந்து என்னினை மலர்கண்கள் நீர் ததும்ப தாம் தம்மை கொண்டகல்தல் தகவன்றென்றுரையீரே. நம்மாழ்வார்
 
விழா : சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் ஆறாட்டு. அதற்கு பத்து நாள் முன்பாக கொடியேற்றம். சித்திரை திருவோணத்தை தவிர அனைத்து திருவோணத்திற்கும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் உண்டு. கேரளாவை பொறுத்த வரை ஆடி மாதம் முழுவதும் ராமாயண மாதம் என்பதால் இந்த மாதத்தில் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.  
      
தல சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. லட்சுமணனும் பரதனும் சேர்ந்து வழிபட்ட தலமாகும். இத்தலத்திற்கு கோபுரம் மண்டபம் போன்றவற்றை லட்சுமணன் கட்டி பல திருப்பணிகள் செய்துள்ளான்.  
      
திறக்கும் நேரம் : காலை 05:00 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 05:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில், திருமூழிக்களம் : 683 572 எர்ணாகுளம் மாவட்டம், கேரளா மாநிலம். போன் : +91- 484 - 247 3996 
     
தகவல் : நான்கு திருக்கரத்துடன் உள்ள இந்த பெருமாள் மேல் இரண்டு கைகளில் சங்கு, சக்கரம், வலது கீழ்க்கையில் கதை, இடது கீழ் கையில் தாமரை மலருடன் இடுப்பில் வைத்த கோலத்தில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். மூலவரின் விமானம் சவுந்தரிய விமானம். இவரை ஹாரித மகரிஷி தரிசித்துள்ளார். சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இங்கு சிவனுக்கு தனி சன்னதி உள்ளது.
     
ஸ்தல பெருமை : கேரளாவின் பிரசித்தி பெற்ற பாரதப்புழா நதிக்கரையில் கோயில் அமைந்துள்ளது. இத்தலம் ஒரு காலத்தில் பெரிய கலாக்ஷேத்திரமாக விளங்கியிருக்கிறது. "ஸ்ரீஸுஸீக்தி' இங்கு அருளப்பட்டதால் பல வகையான நூல்கள் இங்கு ஆராயப்பட்டன. இதனால் கற்றறிந்த பெரியோர்கள் குழுமியிருந்த கல்வி மாநகரமாகவும் கலை நகரமாகவும் இத்தலம் சிறப்புற்றிருந்தது. ராமன் வனவாசம் செல்லும் போது சித்திர கூடத்தில் தங்க நேரிட்டது. அப்போது அயோத்திக்கே ராமனை மீண்டும் அழைத்து செல்ல பரதன் அங்கு வந்தான். இதைக்கண்ட லட்சுமணன், ராமனுடன் போர் செய்யவே பரதன் வருவதாக நினைத்து அவனை கொல்ல முயற்சிக்கிறான். இது தவறு என்பதை உணர்ந்த லட்சுமணன் தவறுக்கு மன்னிப்பு வேண்டி இத்தலத்து பெருமாளிடம் அடிபணிந்து நின்றதாகவும் அப்போது பரதனே வந்து லட்சுமணனை ஆரத்தழுவி இன்சொல் கூறியதாகவும் இதனால் இத்தலம் திருமொழிக்களம் ஆனதாகவும் கூறுவர்.

        
ஸ்தல வரலாறு : கிருஷ்ண பகவான் துவாரகையில், ராமன், லட்சுமணன், பரதன், சத்ருகனன் என்ற நான்கு  விக்ரகங்களை பூஜித்து வந்தார். ஒரு முறை இப்பகுதி தண்ணீரில் மூழ்கிய போது வாக்கேல் கைமல் முனிவர் என்பவரிடம் இந்த விக்கிரகங்கள் கிடைத்தது. அன்றிரவு இவரது கனவில் தோன்றிய பகவான் இந்த விக்கிரகங்களை பாரதப்புழா ஆற்றின் கரையோர தலங்களில் பிரதிஷ்டை செய்ய கூறினார். இத்தலங்கள் தான் திருச்சூர் மாவட்டம் திருப்பறையார் ராமர் கோயிலாகவும் இரிஞ்சாலக்குடாவில் பரதன் கோயிலாகவும் பாயமல்லில் சத்ருக்கன் கோயிலாகவும் எர்ணாகுளம் மாவட்டம் திரு மூழிக்களத்தில் லெட்சுமணப்பெருமாள் கோயிலாகவும் அமைந்துள்ளது. கேரளாவில் உள்ள பெருமாள் கோயில்களில் லெட்சுமணப்பெருமாள் என்ற திருநாமத்துடன் அருள் பாலிப்பது இங்கு மட்டும் தான். இத்தலம் குறித்து இன்னொரு வரலாறும் உண்டு. முன்னொரு காலத்தில் ஹரித மகரிஷி என்பவர் இத்தலத்தில் பெருமாளை குறித்து தவமிருந்தார். இவரது தவத்தில் மகிழந்த பெருமாள் வேண்டும் வரம் கேள் என்றார். அதற்கு மகரிஷி பெருமாளே! இந்த உலக மக்கள் அனைவரும் உன்னை வந்து அடைவதற்கான எளிய வழிமுறையை கூறுங்கள் என்றார். அதற்கு பெருமாள் மகரிஷியே! மக்கள் அனைவரும் அவரவர்கள் செய்து கொண்டிருக்கும் தொழிலுக்கேற்ப (வர்ணாசிரம தர்மப்படி) எளிதில் என்னை அடைவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய பூஜை நெறிமுறைகளை போதிக்கும் ஸ்ரீ ஸுக்தியை  (திருமொழியை) இந்த தலத்தில் உங்களுக்கு வழங்குகிறேன் என்றார். எனவே தான் இத்தலம் திருமொழிக்களம் என்றும் பெருமாள் திரு மொழிக்களத்தான் எனவும் வழங்கப்படுகிறது. இதுவே காலப்போக்கில் திருமூழக்களம் ஆனது.

108 திவ்ய தேசங்கள் : அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில்
மூலவர் :  திருவாழ்மார்பன் (ஸ்ரீ வல்லபன் கோலப்பிரான்)
தாயார் :செல்வத்திருக்கொழுந்து நாச்சியார் (வாத்சல்ய தேவி)
தீர்த்தம் :கண்டகர்ண தீர்த்தம், பம்பை தீர்த்தம்
பழமை :2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : ஸ்ரீவல்லப சேத்திரம்
ஊர் : திருவல்லவாழ்
மாவட்டம் : பந்தனம் திட்டா
மாநிலம் : கேரளா
பாடியவர்கள் : நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்
    
காண்பது எஞ்ஞான்று கொலோ, விளையேன் கனிவாய் மடவீர் பாண்டுரல் வண்டினொடு பசுந்தென்றலுமாகி எங்கும் சேன் சினையோங்கு மரச் செழுங்கானல் திருவல்லவாழ் மான்குறள் கோலப் பிரான் மலர் தாமரைப் பாதங்களே.-நம்மாழ்வார்
 
விழா : மாசிமாதம் பூசம் நட்சத்திரத்தில் ஆறாட்டு. அதற்கு பத்து நாள் முன்பாக கொடியேற்றம் நடைபெறும். திருவிழா முடிந்த மறுநாள் அர்ச்சனையை தவிர வேறு எந்த பூஜையும் நடைபெறாது.  
      
சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளில் ஒன்று பெருமாள் இங்கு பிரம்மச்சரிய விரதம் அனுஷ்டிக்கிறார். எனவே, ஐயப்பன் கோயிலைப் போல, இங்கும் பெண்களுக்கு அனுமதியில்லை. மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்றும், சித்திரை விஷு அன்றும் இவரது மார்பு தரிசனம் விசேஷம் என்பதால், இந்த நாட்களில் மட்டும் பெண்களை அனுமதிப்பார்கள். உப்பு மாங்காய் நைவேத்யம்: சங்கரமங்கலத்தம்மையார் பிரம்மச்சாரிகளுக்கு தானம் செய்த போது பெருமாளும் பிரம்மச்சாரி வடிவில் வரிசையில் நின்றார். தனக்களித்த உணவை ஏற்ற அவர், இப்பெண் விரதம் முடித்து தான் சாப்பிடுவதற்காக வைத்திருந்த உப்பு மாங்காயை கேட்டாராம். அவள் அதை பாக்கு மரத்தின் இலையில் வைத்து பெருமாளுக்கு அளித்தார். அன்றிலிருந்து தினமும் இத்தலத்தில் கமுகு இலையில் சாதமும் உப்புமாங்காயும் நைவேத்யமாக வைக்கப்படுகிறது. இத்தலத்தில் கேரளாவுக்கே உரித்தான சந்தனத்துடன் விபூதியும் தரப்படுவது விசேஷம். மார்கழி திருவாதிரையன்று சிவன் இவரது கோலத்தைக் காண வந்தாராம். அதனால், விபூதியும் கொடுப்பது வழக்கமாயிற்று.

        
திறக்கும் நேரம் : காலை 4 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், திருவல்லவாழ்- 689 101 (ஸ்ரீ வல்லப க்ஷேத்திரம்) பந்தனம் திட்டா மாவட்டம், கேரளா மாநிலம்.போன்:+91- 469 - 270 0191 
     
தகவல் : நாட்டிய குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கேரளாவின் பிரசித்தி பெற்ற கதகளி நிகழ்ச்சியை கோயிலில், நேர்ச்சையாக நடத்துகிறார்கள். நாட்டியக் கலைஞர்கள் கோயிலிலேயே உள்ளனர். தினமும் இந்த நேர்ச்சை நடத்தப்படுகிறது. இந்த நடனக்குழுவிற்கு கலாக்ஷேத்ரா என்று பெயர்.
     
ஸ்தல பெருமை : பொதுவாக, கருடாழ்வார் பெருமாளுக்கு எதிரில் அருள்பாலிப்பார். ஆனால் இங்கு 50 அடி உயரத்திலுள்ள கல் தூணின் மீது பறக்கும் நிலையில் அருள் பாலிக்கிறார். கருடனுக்கு தங்ககவசம் சாத்தப்பட்டுள்ளது. பெருமாளை வணங்குவோர் தங்களது நியாயமான வேண்டுகோளை அவரிடம் வேண்டியவுடனேயே கருடன் அவரை ஏற்றிச்செல்ல தயார் நிலையில் இருப்பதாக ஐதீகம். இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். மூலவரின் விமானம் சதுரங்க கோல விமானம் எனப்படுகிறது. இந்த பெருமாளை  கண்டாகர்ணன், சங்கரமங்கலத்தம்மையார் ஆகியோர் தரிசனம் செய்துள்ளனர்.  
      
தல வரலாறு : கேரளாவிலுள்ள சங்கரமங்கலம் கிராமத்தில் சங்கரமங்கலத்தம்மையார் என்ற பதிவிரதை வாழ்ந்தார். இவர் ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து இந்த கோயிலுக்கு வருவார். மறுநாள் துவதாசியன்று இந்தக் கோயிலில் வசிக்கும் துறவிகளுக்கு அன்னதானம் செய்வார். இவர் வரும் வழியிலுள்ள காட்டில் வசித்த தோலாகாசுரன் என்பவன் இந்த அம்மையாரை கோயிலுக்கு செல்ல விடாமல், மறைவாக இருந்து அவரே அறியாமல் துன்பம் விளைவித்தான். இதை பெருமாளிடம் அம்மையார் முறையிட்டார். ஒரு முறை அவர் காட்டு வழியே வரும் போது பிரம்மச்சாரி இளைஞன் ஒருவன் ஏதோ ஒரு அசுர சக்தியுடன் போர் புரிவதைக் கண்டார். சற்று நேரத்தில் சப்தம் அடங்கி விட்டது. பிரம்மச்சாரியைக் காணவில்லை. அம்மையார் கோயிலுக்கு வந்தார். அங்கே பெருமாள் காட்டில் பார்த்த பிரம்மச்சாரி இளைஞனைப் போன்ற தோற்றத்தில் இருந்தார். தன்னைப் பாதுகாக்க பெருமாளே நேரில் வந்து அசுரனுடன் போரிட்டதை அம்மையார் புரிந்து கொண்டார். பிரம்மச்சாரி இளைஞர்கள் அங்கவஸ்திரம் அணிவதில்லை. பெருமாளும் இத்தலத்தில் அங்கவஸ்திரம் இல்லாமல் மார்பு தெரிய காட்சியளிக்கிறார். அவரது மார்பில் லட்சுமி (திரு) நிரந்தரமாக குடியிருப்பதால் இவருக்கு திருவாழ்மார்பன் என்ற பெயர் ஏற்பட்டது. மற்ற தலங்களில் பெருமாளின் திருவடி தரிசனம் முக்கியம். இங்கோ மார்பு தரிசனம் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.



ஸ்ரீ பெரியவாளிடம் நாற்பது வருடங்களுக்கு மேல் பூஜா கைங்கர்யம் செய்து வந்தார் குள்ளச்சீனு ஐய்யர் என்பவர். அவருடைய புத்திரர் ஸ்ரீ மடத்தில் இப்போது சாமவேத அத்யாபகராயிருக்கும் ஸ்ரீ சந்திர மௌளிச்ரௌதிகள் சுமார் ஆறு வருஷங்களுக்கு முன் (2000 ஆண்டு வாக்கில்) உடலில் திடீரென்று வாயுத்தொல்லை அதிகமாகி எங்கேயாவது ஓடிப்போய்விடலாமா என்ற நிலை ஏற்பட்டது.ஆனால் வயதான தாயாரையும் குழந்தைகளையும் தன்னிடத்தில் படிக்கும் மாணவர்களையும் விட்டு விட்டு எப்படி எங்கே போவது ? என்று நிலைகொள்ளாமல் ஸ்ரீ பெரியவாளையே பிரார்த்தித்து கொண்டு இரவில் படுத்துக்கொண்டார். அப்பொழுது கனவில் கையில் தண்டமில்லாத சன்யாஸி போல் தோற்றமளித்த ஒருவர் சந்திரமௌளியை என் பின்னாலே வா என்று அழைத்துக் கொண்டு ஸ்ரீ பெரியவா சிவாஸ்தானத்தில் வழக்கமாகத் தங்கும் இடத்திற்குச் சென்று ஓர் இடுக்கு வழியாக உள்ளே சென்று விட்டார். மௌளி மட்டும் வெளியே நின்று கொண்டு அந்தப் பலகணி வழியாக எட்டிப் பார்த்தார். அப்போது ஸ்ரீ மஹா பெரியவா வெறும் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு படுத்துக் கொண்டிருந்தார்கள். பக்கத்தில் வேறு இரு சன்யாஸிகள். ஸ்ரீ மஹா பெரியவா சந்திரமௌளியைக் கூப்பிட்டு கையில் இருந்த எதோ ஒரு யந்திரம் எழுதியிருந்த தகட்டை நன்றாகத் துடைத்து விட்டு என்ன எழுதியிருக்கிறது? என்று படிக்கும் படி உத்திரவிட்டார்கள்.மௌளி அது கன்னட எழுத்து மாதிரியிருக்கிறது. எனக்குக் கன்னடம் படிக்கத் தெரியாது. பேச மட்டும் தான் தெரியும் என்றார். அதை அழித்து விட்டு மறுபடியும் காண்பித்து “படி” என்று உத்திரவிட்டார்கள். இந்த லிபியும் எனக்கு தெரியாது தெலுங்கு எழுத்து போல் இருக்கிறது என்றார் சந்திரமௌளி. அதன் பிறகு பெரியவா மறுபடியும் யந்திரத்தைத் துடைத்து விட்டு பிரகாசமான எழுத்தில் இருந்ததைப் படிக்கும் படி உத்திரவிட்டார்கள். அதில் தும் துர்காயை நமஹ என்று சம்ஸ்கிருத்தில் பளிச்சென்று எழுதியிருந்தது. இது தான் நான் உனக்குச் செய்யும் உபதேசம் இதையே ஜபம் செய் என்று அனுக்ரஹித்தார்கள்.

உடனே விழிப்பு வந்து விட்டது, சந்திரமௌளிக்கு.

மறு நாள் முதல் மௌளி அந்த மந்திரத்தை ஜபம் செய்ய ஆரம்பித்து விட்டார். படிப்படியாக உடல் உபத்திரவம் பரிபூரணமாகக் குணமடைந்தார்.சில தினங்கள் ஆயின. மறுபடி ஒரு கனவு. கையில் திரிசூலத்தை வைத்துக் கொண்டு லம்பாடி போல் தோற்றமளித்த ஒரு பெண்மணி மௌளி சென்ற இடமெல்லாம் தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தாள். எங்கு போனாலும் ஓடினாலும் மதில் மேல் ஏறிக் குதித்துச் சென்றாலும் கதவைச் சாத்திக்கொண்டு கோயிலுக்குச் சென்றாலும் அவரை விடாமல் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தாள்.மௌளிக்குப் பயத்துடன் விழிப்பு வந்து விட்டது. தற்செயலாக கும்பகோணத்திலிருந்து வந்த ஸ்ரீ வித்யா உபாசகரான தினகர சாஸ்திரிகளிடம் இதைப்பற்றிக் கேட்டார். நான் பல வருஷங்களாக ஜபம் செய்தும் எனக்கு துர்காம்பிகையின் தரிசனம் கிடைக்கவில்லை. உனக்கு ஸ்ரீ பெரியவாளின் அனுக்ரஹம் தான். கனவில் வந்தது சாட்சாத் துர்காதேவியே ! என்று சொன்ன்னர்.



ஒரு நாள் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் துவஜஸ்தம்பத்தின் அருகில் இந்த துர்கா மந்திரத்தை ஜபம் பண்ணிக்கொண்டிருக்கும் போது கோயில் ஸ்தானிகர் ஸ்ரீ காமகோடி சாஸ்திரிகள் “அம்பாள் சந்நிதியில் வந்து ஜபம் செய்” என்று அவரை அழைத்துக் கொண்டு போனார். கொஞ்ச நேரம் கண்ணை மூடிக் கொண்டு ஜபம் செய்தார். பின் யாரோ கழுத்தில் ஏதோ கட்டுவது போல் தெரிந்ததும் கண்ணைத் திறந்து பார்த்தால் காமகோடி சாஸ்திரிகள் தன் கையில் கட்டியிருந்த காப்புக்கயிற்றைக் கழற்றி இன்று காப்புக் கட்டு பூர்த்தி தினம் அம்பால் பிரசாதம் கழுத்தில் அணிந்துகொள் என்று கூறிக்கொண்டே கட்டி விட்டார்.

மறு நாள் ஸ்ரீ மௌளி காமகோடி சாஸ்திரிகளைச் சந்தித்த போது ஸ்ரீ மஹா பெரியவா கனவில் அநுக்ரஹித்ததையும் முதல் நாள் சாஸ்திரிகள் தம் கழுத்தில் கட்டிய காப்பையும் காட்டி சந்தோஷப்பட்டார்.
காமகோடி சாஸ்திரிகள் தனக்கு துவஜஸ்தம்பத்திலிருந்த மௌளியை சந்நிதிக்கு அழைத்து வந்ததோ தன் கைக்காப்பைக் கழற்றி மௌளியின் கழுத்தில் கட்டியதோ எதுவும் தெரியவே தெரியாது ! சந்திரமௌளியின் கையில் கட்டிய காப்பு இன்னும் இருக்கிறதே? அது கனவுப் பொருள் இல்லையே? அப்படியானால் ஸ்தானிகராக வந்தது யார் ? என்று திகைப்புடன் கூறினார்.

பெரியவா கடாக்ஷம் பரிபூரணம்
ஆண்டாளுக்கு வயது 5023

ஆடிதோறும் பூரநட்சத்திரம் வந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் ஆண்டாள் அவதரித்த பின் தான் அந்நாளுக்கு தனிச்சிறப்பு உண்டானது. அவள் பூமிப்பிராட்டியின் அம்சம். கிணற்றில் விழுந்த குழந்தையைக் காக்க எண்ணிய தாய் தானே கிணற்றுக்குள் குதிப்பதைப் போல பாசம் ஆசை  என்னும் கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருக்கும் உயிர்களை  காப்பாற்றி பரந்தாமனிடம் சேர்க்க பூவுலகில் அவதரித்தாள்.

பிறந்த வருடம் : ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள நந்தவனத்தில் ஒரு துளசிச் செடியின் அடியில் கலியுகம் பிறந்து 98வதாக நிகழ்ந்த நளவருடத்தில் ஆண்டாள் அவதரித்தாள். ஆடிமாதம் வளர்பிறை பஞ்சமி திதியும் பூரநட்சத்திரமும் செவ்வாய்க்கிழமையும் கூடிய நன்னாளில் பெரியாழ்வார்  அவளைக் கண்டெடுத்தார். தற்போது கலியுகம் 5117 நடக்கிறது. இவ்வகையில் ஆண்டாளுக்கு இவ்வாண்டு 5020 வது பிறந்த நாள். தான் பூஜித்து  வந்த வடபத்ரசாயி (ஸ்ரீவில்லிபுத்தூர் மூலவர்) குழந்தையை எடுத்துச் சென்றார். அவளுக்கு கோதை என்னும் பெயரிட்டு வளர்த்து வரும்படி அவர்  அருள்புரிந்தார். கோதை என்றால் நல்வாக்கு அருள்பவள் எனப்பொருள். ஆண்டாள் பெருமாளிடம் கொண்ட பக்தி காதலாக மாறியது. அவரையே தன் கணவனாக நினைத்து வாழத் தொடங்கினாள். கண்ணனோடு வாழ்ந்த கோபியர்களில் ஒருத்தியாக தன்னைக் கருதிக் கொண்டாள். ஸ்ரீவில்லி புத்தூரை கண்ணன் வசித்த ஆயர்பாடியாக கற்பனை செய்து அங்குள்ள பெண்களை கோபியராகச் சித்தரித்து அனைவருமாக இணைந்து பாவை நான்பு நோற்பதாக முப்பது பாடல்கள் எழுதினாள். அதுவே திருப்பாவை என்னும் இனிய நூல் ஆயிற்று.

ஞாயிறு, 28 ஜூலை, 2019

ஹிந்து வாழ்க்கை முறையில் உணவை எப்படி எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அன்னம் என்பது ப்ராணனைத் தாங்குவது. ஆகவே அதை யார் சமைக்கிறார்கள், எப்படி சமைக்கிறார்கள் என்பதும் கூட முக்கியம் தான்.

உணவில் ஐந்து தோஷங்கள் உண்டு.

1)   அர்த்த தோஷம்
2)   நிமித்த தோஷம்
3)   ஸ்தான தோஷம்
4)   ஜாதி தோஷம்
5)   சம்ஸ்கார தோஷம்   

1 )   #அர்த்த  தோஷம்

பண்டிதர் ஒருவர் தனது சீடர் ஒருவரின் வீட்டிற்கு உணவருந்த வந்தார். உணவருந்தி முடியும் போது அவரது வாடிக்கையாளர் ஒருவர் பணம் நிரம்பிய மூட்டை ஒன்றை சீடரிடம் தந்ததைப் பார்த்தார். உணவருந்தி முடிந்து தனியே அறையில் இருக்கும் போது அவருக்கு பணத்தாசை தோன்றியது. சீடருக்கு வந்த பைக்குள் கைவிட்டு கை நிறைய பணத்தை எடுத்துக் கொண்டார். பின்னர் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார். மறு நாள் காலையில் பூஜை செய்யும் போது முதல் நாள் தான் செய்ததை நினைத்துப் பார்த்தார். அடடா என்ன தவறு செய்து விட்டோம் இந்தத் தவறை நான் எப்படி செய்தேன் என்று நினைத்து வருந்தினார். பணத்தை எடுத்துக் கொண்டு நேரடியாகத் தன் சீடனின் வீட்டிற்குச் சென்றார். நடந்ததைச் சொல்லி தான் எடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்தார். சீடனின் வீட்டில் உணவருந்திய பின்னர் இந்தக் கெட்ட எண்ணம் தோன்றியதும் இரவில் அது ஜீரணமாகி கழிவுகள் வெளியேறிய பின்னர் மனம் பரிசுத்தம் ஆனதையும் அவர் நினைத்துப் பார்த்தார். தன் சீடனிடம் நீ சம்பாதித்த பணம் எப்படி வந்தது என்று கேட்டார். வெட்கமடைந்த சீடன் தான் நேர்மையற்ற வழியிலேயே பணம் சம்பாதிப்பதாக ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டான். இது பொருளால் வரும் தோஷம் அதாவது அர்த்த தோஷம்! அர்த்தம் என்றால் பொருள் என்று அர்த்தம். நாம் சமைக்கும் உணவுப் பொருள்கள் நியாயமான சம்பாத்தியத்தில் வாங்கியதாக இருத்தல் வேண்டும்.

2)  #நிமித்த  தோஷம்

அடுத்தது நிமித்த தோஷம். உணவைச் சமைக்கும் சமையல்காரர் நல்ல மனதைக் கொண்டிருத்தல் அவசியம். நேர்மையானவராகவும், அன்பானவராகவும் நல்ல் சுபாவம் உடையவராகவும் அவர் இருத்தல் வேண்டும். அத்தோடு சமைக்கப்பட்ட உணவு நாய், எறும்பு, பல்லி, காகம் போன்ற ஜந்துக்களால் தொடப்படாமல் இருத்தலும் அவசியம். அப்படித் தொடப்பட்ட உணவுகள் அசுத்தமானவை. உணவில் தூசி, தலை மயிர், புழுக்கள் போன்றவையும் இருக்கக் கூடாது. பீஷ்மர் 27 நாட்கள் அம்புப் படுக்கையில் இருந்தார். கிருஷ்ணரும் பஞ்ச பாண்டவர்களும் அவரைச் சுற்றி இருந்தனர். திரௌபதி மனதிற்குள் தன்னை சபையில் துரியோதனன்  ஆடையை அவிழ்க்க உத்தரவிட்ட போது இந்த பீஷ்மர் வாயை மூடிக் கொண்டு ஏன் இருந்தார் என்று எண்ணினாள். அவளது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட பீஷமர் அம்மா நான் துரியோதனனது ஆதரவில் அவனால் படைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு வந்தவன். என் அறிவை முற்றிலுமாக அந்த உணவு மறைத்து விட்டது. இதோ இந்த 27 நாட்களில் சாப்பிடாமல் இருக்கும் போது என் பழைய ரத்தம் சொட்டுச் சொட்டாக வெளியேறும் போது நான் பரிசுத்தனாகிறேன். எனது அறிவு பிரகாசிக்கிறது” என்று கூறினார். அசுத்தமான உணவு அனர்த்தத்தையே விளைவிக்கும். தீயவன் சமைத்த உணவு தீமையான எண்ணங்களையே உருவாக்கும். நல்லவன் சமைத்த உணவு நல்ல எண்ணங்களையே உருவாக்கும்.

3)  #ஸ்தான  தோஷம்

அடுத்தது ஸ்தான தோஷம் எந்த இடத்தில் உணவு சமைக்கப்படுகிறதோ அங்கு நல்ல அதிர்வுகள் இருத்தல் அவசியம். சமைக்கும் போது அனாவசிய சண்டைகள் அற்ப விவாதங்கள் நடந்தால் அந்த உணவு அசுத்தப்பட்டு விடும். அது மட்டுமின்றி கழிப்பறை, மருத்துவமனை, யுத்த களம், கோர்ட் ஆகியவற்றின் அருகே சமைக்கப்படும் உணவும் சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல. துரியோதனன் 56 விதமான விசேஷ உணவு வகைகளைத் தயாரித்து கிருஷ்ணரை சாப்பிடக் கூப்பிட்டான். அவரோ மறுத்து விட்டார். அவரை சிறைப்பிடிக்கவும் அவன் முயன்றான். ஆனால் அவரோ நேராக விதுரன் வீட்டிற்குச் சென்றார். அவரைப் பார்த்த விதுரரின் மனைவி புளகாங்கிதம் அடைந்தாள். எதைத் தருகிறோம் என்பதே தெரியாமல் வாழைப்பழத்தை உரித்து பழத்தைத் தூக்கி எறிந்து விட்டு தோலை அன்புடன் கிருஷ்ணருக்குத் தந்தாள். அதை வாங்கித் தின்ற கிருஷ்ணர் ஆனந்த முற்றார். இதைப் பார்த்துப் பதறிப் போன விதுரர் மனைவியை நோக்கிக் கோபமான பார்வையை வீசவே கிருஷ்ணர் விதுரா! நான் அன்பிற்காகத் தான் ஏங்குகிறேன். எனக்கு உள்ளன்புடன் ஒரு துளி ஜலம், ஒரு இலை, ஒரு பழம் எதைத் தந்தாலும் அதுவே எனக்குப் போதும் என்று அருளினார். உள்ளன்புடன் உணவு படைக்கப்பட வேண்டியது அவசியம்.

4 )  #ஜாதி  தோஷம்

அடுத்தது ஜாதி தோஷம். உணவில் அடங்கி இருக்கும் மூலப் பொருள்கள் சாத்வீக குணமுடையதாக இருத்தல் அவசியம். பால், நெய், அரிசி, மாவு, பருப்பு போன்றவை சாத்வீகமானவை. புளிப்பு, உரைப்பு, உப்பு உள்ளவை ராஜஸிகமானவை. உள்ளிப்பூண்டு, வெங்காயம், மாமிசம், முட்டை போன்றவை தாமஸிகமானவை. சாத்விக உணவு ஆன்மீக முன்னேற்றத்தைத் தருகிறது. ராஜஸிக உணவு உலோகாயத உணர்வைத் தூண்டி சுயநலத்திற்கு வழி வகுக்கிறது. தாமஸிக உணவு தீய பிசாசு குணத்தை வளர்க்கிறது.

5)  #சம்ஸ்கார  தோஷம்

அடுத்தது சம்ஸ்கார தோஷம். தூய்மையாக உணவு சமைக்கப்பட்டாலும் கூட உணவு வகைகள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டிருகக்க் கூடாது. அதிகமாக வேக வைத்தல், அதிகமாக வறுத்தல், பழைய உணவு போன்றவை தோஷமானவை. உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிப்பவை. ஆக இந்த ஐந்து வித தோஷங்களையும் விலக்கி ஒருவன் உணவை உண்ண வேண்டும். தாயார் அல்லது மனைவி இல்லத்தில் சமைத்துப் பரிமாறும் உணவை ஏற்புடையது என்று அதனால் தான் முன்னோர்கள் சொல்லி வைத்தனர். இன்றோ ஃபாஸ்ட் புட், ஜங்க் புட் என்று அசுத்த உணவை ஆரவாரத்துடன் சாப்பிடுகிறோம். அசைவ உணவைத் தயாரிக்கும அதே பாத்திரத்தில் தான் சாம்பார், அரிசி, பருப்பு போன்றவை தயாராகின்றன. தட்டுகள் உரிய முறைப்படி கழுவப்படுகிறதா இல்லையா என்று யாருக்கும் தெரியாது. மக்டொனால்ட், கெல்லாக் என்று இப்படி பிராண்டட் அயிட்டங்களில் மோகம் உச்சமடைந்திருக்கும் காலம் இது. அதன் விளைவையும் அனுபவித்துத்தானே ஆக வேண்டும். ஆசாரத்தைக் கடைப்பிடி என்றனர் ஆன்றோர். ஆசாரம் என்றால் சுத்தம்.

ஸ்ரீ பாலா திரிபுரஸுந்தரீ ஸ்தோத்ரம் {பாலாம்பிகை}

வெள்ளிக் கிழமைகளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி பால் அல்லது முடிந்த ப்ரஸாதத்தை நைவேத்யம் செய்து வந்தால் அம்பாள் அருள் நிச்சயம் கிட்டும்.

வேலாதிலங்க்ய கருணே விபு தேந்த்ர வந்த்யே
லீலா விநிர்மித சராசரஹ்ருந்நிவாஸே |
மாலா கிரீட மணி குண்டல மண்டி தாங்கே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||கஞ்ஜாஸனாதிமணி மஞ்ஜு கிரீட கோடி ப்ரத்யும்த
ரத்ன ருசி ரஞ்சிதபாத பத்மே |
மஞ்ஜீர மஞ்சுல விநிர்ஜித ஹம்ஸ நாதே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் || ப்ராளேய பானு கவிகா கலிதாதிரம்யே பாதாக்ரஜ
வளி வினிர்ஜித மௌக்திகாபே |
ப்ராணேஸ்வரீ ப்ரமத லோகபதே ப்ரஜானம்
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் || ஜங்காதிபிர் விஜித சித்தஜ தூணிபாகா
ரம்பாதி மார்தவ கரீந்த்ர கரோருயுக்மே |
கம்பாசதாதிக ஸமுஜ்வல சேலீலோ
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||மாணிக்ய மௌக்திக விநிர்ஜித மேகலாட்யே
மாயா விலக்ன விலஸன் மணி பட்டபந்தே |
லோலம்பராஜி விலஸந்நவ ரோம ஜாலே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||ந்யக்ரோத பல்லபத லோதர நிம்ன நாபே
நிர்தூத ஹார விலஸத் குசச் சக்ரவாகே |
நிஷ்காதி மணிபூஷண பூஷிதாங்கே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||கந்தர்ய சாப மதபங்க கிருதாதிரம்யே
ப்ரூ வல்லரீ விவிதா சேஷ்டத ரம்யமானே |
கந்தர்ப ஸோதர ஸமாகிருதி பாலதேசே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||மௌக்தாவனீ விலஸதூர்மித கம்பு கண்டே
மந்தஸ் பிதாளன விநிர்ஜித சந்த்ர பிம்பே |
பக்தேஷ்டதான நிரதா மிருத பூர்ணத் ருஷ்டே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||கர்ணா வலம்பி மணிகுண்டல கண்டபாகே
காணாந்த தீர்கநவ நீரஜபத்ர நேத்ரேஸ்வர் |
ணாயகாதி குண மௌக்திக சோபிநாஸே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||லோலம் பராஜி லலிதாலக ஜாலசோபே
மல்லீ நவீன களிகா நவ குந்தஜாலே |
பாலேந்து மஞ்ஜுல கிரீட விராஜமானே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||பாலாம்பிகே மஹாராக்ஞி வித்யாநாத ப்ரியேஸ்வரி |
பாஹிமாமம்ப க்ருபயா த்வத் பாதம் சரணம் கத: ||


மெய்யூர் ஸ்ரீ சுந்தரராஜ  பெருமாள்

ஆதியில் சத்யபுரி என்று அழைக்கப்பட்ட மெய்யூர் கிராமத்தில் ஸ்ரீ சுந்தரராஜ  பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. மூலவர் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். ஆனந்த விமானத்தைக்கொண்ட இத்திருக்கோயில் பாஞ்சராத்திர ஆகமத்தை சேர்ந்தது. பிரகாரத்தில் ஸ்ரீ சுந்தரவல்லி தாயாரும் ஸ்ரீ ஆண்டாளும் தனிக்கோயில் கொண்டு காட்சி கொடுக்கின்றனர். விஸ்வக்சேனர், நம்மாழ்வார், ராமானுஜர், திருமங்கை ஆழ்வார், மணவாளமாமுனிகள் ஆகிய ஆழ்வார் சன்னதிகள் இடம் பெற்றுள்ளன. சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன் இவ்வூரில் உள்ள ஒரு பெரியவருக்கு கனவில் யான் ஆற்றங்கரையில் உள்ளேன் நானே நாகை சுந்தரராஜன் என்று உரைத்திட ஊர் மக்கள் மறு நாள் ஆற்றங்கரையில் நான்கு பஞ்சலோக விக்கிரகங்களை கண்டு கொண்டு வந்து  இத்திருக்கோயிலில் சேர்த்ததாக  கூறப்படுகிறது. ஸ்ரீ அன்னம்மாசாரியார் இத்திருக்கோயில் பற்றி சுலோகம் செய்துள்ளார். இங்கு ஆவணி மாதம் பவித்ரோத்சவம், ஆழ்வார்கள் திருநட்சத்திரங்கள்  திருக்கல்யாண உற்சவம்  ஆகியவை நடைபெறுகின்றன. செங்கல்பட்டு திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் பாலாறு தாண்டிய உடன் செக்போஸ்ட் நிறுத்தத்தில் இறங்கி இவ்வூருக்கு வரலாம்.




பாடல் பெற்ற சிவாலயங்கள் : அருள் மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில்
மூலவர் : சத்தியகிரீஸ்வரர்
அம்மன் : சகிதேவியம்மை
தல விருட்சம் : ஆத்தி
தீர்த்தம் : மண்ணியாறு, சத்திய புஷ்கரிணி
பழமை : 2000 வருடங்களுக்கு மேல்
புராண பெயர் : சேய்ஞலூர், திருச்சேய்ஞலூர்
ஊர் : சேங்கனூர்
மாவட்டம் : தஞ்சாவூர்
பாடியவர் : திருஞானசம்பந்தர்
காடடைந்த ஏனமொன்றின் காரணமாகி வந்து வேடடைந்த வேடனாகி விசயனொடு எய்ததென்னே கோடடைந்த மால்களிற்றுக் கோச்செங்கணாற்கு அருள்செய் சேடடைந்த செல்வர் வாழும் சேய்ஞலூர் மேயவனே.(திருஞானசம்பந்தர்)
      
விழா : தை மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் சண்டேஸ்வர நாயனார் அவதார தினம் கொண்டாடப்படுகிறது.
      
ஸ்தல சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். எல்லா சிவன் கோயில்களிலும் அருள் பாலிக்கும் சண்டிகேஸ்வரர் இத்தலத்தில் தான் அவதாரம் செய்தார். மகா மண்டபத்தில் தட்டினால் வெங்கல ஒலி கேட்கும் பைரவர் சன்னதி உள்ளது.  
      
திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். 
    
முகவரி : அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் சேங்கனூர்: 612 504, திருப்பனந்தாள் போஸ்ட், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். போன் : +91- 435-2457 459, 93459 82373



பொது ஸ்தகவல் : மேருமலையின் ஒரு சிறு பகுதி விழுந்த தலமாதலால், கோயில் சிறு மலையில் அமைந்துள்ளதை போன்ற தோற்றத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோச்செங்கண்ணன் கட்டிய மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று.  மேலே ஒரு பிரகாரம், கீழே ஒரு பிரகாரம் என இரண்டு பிரகாரங்கள் உள்ளன. மேலே மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் உள்ளன. மஹா மண்டபத்தில் நடராஜர், தட்டினால் வெங்கல ஒலி கேட்கும் பைரவர், நால்வர் சன்னதிகள் உள்ளன. பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, சண்டேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.

ஸ்தலபெருமை : அருபத்திமுவர் நாயன்மார்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர் இவர். இத்தலத்தில் இவர் வேறெங்கும் காணாத நிலையில் அர்த்தநாரி திருக்கோலத்தில் உள்ளார். அருகிலுள்ள திருவாய்ப்பாடி இவரது முக்தி பெற்ற தலமாக போற்றப்படுகிறது. சிவன் காட்சி கொடுத்ததால், சண்டேஸ்வரரே பிறை, சடை, குண்டலம், கங்கையுடன் காட்சி தருகிறார். சிபிச்சக்கரவர்த்தி, அரிச்சந்திரன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். அருணகிரிநாதர் தனது திருப்புகழில் இத்தல முருகனை பாடியுள்ளார். சேக்கிழார் பெரிய புராணத்தில் இத்தல மகிமையை கூறியுள்ளார். சோழர்களின் முக்கிய ஐந்து நகரங்களுள் இதுவும் ஒன்று.வைணவத்தில் நாலாயிர திவ்விய பிரபந்தத்திற்கு உரை எழுதிய பெரியவாய்ச்சான் பிள்ளை அவதார தலம் இது. எதிரே இவருக்கு கோயில் உள்ளது.

முருகன் வழிபட்ட ஸ்தலம்: பிரணவமந்திரத்தின் பொருள் தெரியாததால் பிரமனை சிறையிலடைத்தார் முருகன். இதனால் பிரணவத்தின் பொருள் கூறும்படி சிவன் கேட்டார். அதற்கு சீடனாக கேட்டால் தான் கூறுவேன் என்றார் முருகன். இதனால் தந்தை சிஷ்யனாகவும், மகன் குருவாகவும் இருக்கும்படியான விபரீதம் ஏற்பட்டது. எனவே முருகனுக்கு சிவத்துரோக தோஷம் ஏற்பட்டது. இதை போக்க முருகன் இத்தலம் வந்து தீர்த்தம் உண்டாக்கி தினமும் நீராடி சிவனை வழிபட்டு தன் தோஷம் நீங்கினார். ஒரு முறை முருகன் சூரபத்மனை அழிக்க வரும் போது இத்தலத்தில் தங்கி சிவபூஜை செய்து உருத்திரபாசுபதப்படையை பெற்றார். அப்போது தேவதச்சன் இத்தலத்தை ஒரு நகரமாக ஆக்கினான். இதனால் இத்தலம் குமாரபுரம் என்றும், முருகன் வழிபட்டதால் சேய்(முருகன்)நல் ஊர் - சேய்ஞலூர் என்றும் பெயர் பெற்றது. முருகனுக்கு பெரிய தனி சன்னதி உள்ளது.

ஸ்தல வரலாறு : ஒரு காலத்தில் வாயுவுக்கும் ஆதிசேஷனுக்கும் பலப்பரீட்சை ஏற்பட்டது. ஆதிசேஷன் மேருமலையை இறுகிப்பிடிக்க, வாயுதேவன் பெருங்காற்றால் மலையை அசைக்க முயன்றான். இதில் ஒரு சிறு பகுதி இத்தலத்தில் விழுந்தது. இதனால் இத்தலம் சத்தியகிரி எனப்பட்டது. முருகக்கடவுள் பூஜித்ததால் சேய்ஞலூர் என்ற பெயரும் உண்டு.  இத்தலத்தில் எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக பிறந்தவர் விசாரசருமன். இவர் தன் இளம் வயதில் அனைத்தும் கற்றார். ஏழாவது வயதில் குல முறைப்படி உபநயனம் நடந்தது. சிவனே அனைத்தும் என நினைத்து அதன்படி வாழ்ந்து வந்தார்.அப்பகுதி அந்தணர்களின் பசுக்களை விசாரசருமன் தானே மேய்த்து வந்தார். தாயன்புடன் இவன் மேய்த்ததால் அதிக பால் கொடுத்தது. விசாரசருமன் எப்போதும் சிவசிந்தனையிலேயே இருந்ததால் மண்ணியாற்றங்கரையில் வெண் மணலால் ஆத்திமர நிழலின் கீழ் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தான். அதற்கு பசுக்கள் சொரியும் பாலை அபிஷேகம் செய்தான். இருந்தாலும் பசுவின் சொந்தக்காரருக்கு சரியான அளவு பால் கிடைத்து வந்தது. விசாரசருமரின் இந்த செயலை பார்த்த சிலர் வேள்விக்கு உபயோகப்படுத்தும் பாலை வீணாக்குவதாக கூறினர். இவனது தந்தையும் இதை கேள்விப்பட்டு மறைந்திருந்து நடப்பதை பார்த்தார். இதையெல்லாம் அறியாத விசாரசருமன் எப்போதும் போல் நீராடி விட்டு தன் பூஜைகளை தொடர்ந்தான். பசுவின் பாலால் அபிஷேகமும் செய்தான். இதைப்பார்த்த தந்தை அவனை அடித்ததுடன் பால் குடங்களையும் தட்டி விட்டார். சிவ பூஜையில் ஆழ்ந்திருந்த விசாரசருமன் பூஜைக்கு இடையூறு செய்தவரை ஒரு கோலால் தாக்க அதுவே மழுவாக மாறி கால்களை வெட்டியது. கால்கள் வெட்டப்பெற்றவர் தன் தந்தை என்பதை அறியாத விசாரசருமன் மீண்டும் சிவபூஜையில் ஆழ்ந்தார். இதைக்கண்ட சிவபெருமான் பார்வதியுடன் தரிசனம் தந்து என் மீது கொண்ட பக்தியால் தந்தையின் கால்களை வெட்டினாய். இனி நானே உனக்கு தந்தையாவேன் என கூறி தன் கழுத்திலிருந்த கொன்றை மாலையை விசாரசருமனுக்கு சூட்டி சண்டிகேஸ்வரர் ஆக்கினார்.
108 திவ்ய தேசங்கள்:அருள்மிகு வீரராகவர் திருக்கோயில் 

மூலவர் : எவ்வுள்கிடந்தான் (வீரராகவ பெருமாள் )
உற்சவர் : வைத்திய வீரராகவர்
அம்மன்/தாயார்    :     கனகவல்லி
தீர்த்தம் : ஹிருதாபதணி
ஆகமம்/பூஜை  : பாஞ்சராத்திரம்
பழமை  : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : எவ்வுளூர், திருஎவ்வுள்
ஊர் : திருவள்ளூர்
மாவட்டம் : திருவள்ளூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : திருமங்கைஆழ்வார், திருமழிசைபிரான், ஸ்ரீ வேதாந்த தேசிகன்.

தையலாள் மேல் காதல் செய்த தாளவன் வாளரக்கன் பொய்யிலாத பொன்முடிக ளொன்ப தோடொன்றும் அன்று செய்த வெம்போர் தன்னிலங்கோர் செஞ்சரத் தாளூருள எய்த வெந்தை யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே.-திருமங்கையாழ்வார் 



திருவிழா:பிரம்மோற்சவம் - தைமாதம் - 10 நாட்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுகிறார்கள். பிரம்மோற்சவம் - சித்திரைமாதம் - 10 நாட்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவிலும் கலந்து கொள்கின்றனர். பவித்ர உற்சவம் - 7 நாட்கள் திருவிழா - இத்திருவிழாவிலும் பெருமளவில் பக்தர்கள் கூடுவர் இவை தவிர தை அம்மாவாசை, வைகுண்ட ஏகாதசி, தமிழ், ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ தினங்கள் தவிர வாரத்தின் சனிக் கிழமைகளில் பக்தர்கள் வெள்ளமென திரள்வது வழக்கம்.       




தல சிறப்பு:மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே அபிஷேகம். இத்தலத்து ஹிருதாபதணி தீர்த்தம் கங்கையை விட புனிதமானது. இக்குளத்தில் குளித்தால் மனதால் நினைக்கும் பாவங்கள்கூட விலகுமாம்.      

திறக்கும் நேரம்:காலை 5 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.     

முகவரி:    அருள்மிகு வீரராகவர் சுவாமி திருக்கோயில், திருவள்ளூர்-602 001, திருவள்ளூர் மாவட்டம்.போன்:+91-44-2766 0378, 97894 19330       


பொது தகவல்:இங்குள்ள விமானம் விஜயகோடி. வனம்: வீஷாரண்யம்.      
 பிரார்த்தனை:வைத்திய வீரராகவர் - பிணி தீர்க்கும் வீரராகவர். 3 அமாவாசைகளுக்கு தொடர்ந்து வந்து பெருமாளிடம் வேண்டிக்கொண்டால் தீராத வியாதிகளும் .குறிப்பாக வயிற்று வலி, கைகால் வியாதி, காய்ச்சல் ஆகியவை குணமாகி விடுகிறது. தவிர கல்யாணம் குழந்தை பாக்கியம் கிடைக்க மற்றும் கஷ்டங்கள் தீர செல்வம் பெருக இத்தலத்து பெருமாளை வேண்டிக்கொள்ளலாம்.     

நேர்த்திக்கடன்:பப்ளி துப்பட்டி (மேல் வஸ்திரம் - அங்கி) வாங்கி பெருமாளுக்கு செலுத்தலாம்.இந்த அங்கி வெளியில் எங்கும் கிடைக்காது. திருக்கோயில் அலுவலகத்தில் இந்த அங்கி கிடைக்கும்.இதன் விலை ரூ.300 .இத்தலத்தில் இந்த நேர்த்திகடன் மிகவும் விசேஷமானது. உருவத்தகடுகளை (வெள்ளி ,தங்கம்) செய்து போடுதல். தவிர பெருமாளுக்கு அபிஷேகம் ஆராதனை செய்தல் , நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கலாம். தாயாருக்கு 9 கஜ பட்டுப் புடவை சாத்துதலும் முக்கிய நேர்த்திகடனாக கருதப்படுகிறது. உடம்பில் உள்ள மரு, கட்டி ஆகியவை மறைய இத்தலத்து குளத்தில் பால், வெல்லம் ஆகியவற்றை பக்தர்கள் கரைக்கிறார்கள். கோயில் மண்டபத்தில் உப்பு மிளகு ஆகியவற்றை சமர்ப்பிக்கின்றனர்.     

தலபெருமை:தொண்டை மண்டலத்தில் உள்ள மிக முக்கிய திவ்ய தேசம். இத்தலத்து குளம்(தீர்த்தம்) கங்கையை விட புனிதமானது. இக்குளத்தில் குளித்தால் மனதால் நினைக்கும் பாவங்கள்கூட விலகுமாம். ஆறுகால பூஜைகள் இன்றும் நடந்துகொண்டிருக்கும் சிறப்பு கொண்ட திருத்தலம். மார்க்கண்டேய புராணத்தில் இத்தலம் குறித்து கூறப்பட்டுள்ளது. மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே அபிஷேகம். சுமார் 15 அடிநீள 5 அடி உயரத்தில் பெருமாள் சயனம் கொண்டுள்ளார். லட்சுமி நரசிம்மர், சக்கரத்தாழ்வார் சன்னதிகள் இத்தலத்தில் மிகவும் விசேஷம். மிகவும் பழமையான தலம். இத்திருக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது.      

தல வரலாறு:சாலிஹோத்ரர் எனும் முனிவர் இக்கோயில் அருகில் உள்ள புனித குளக்கரையில் 1 வருடம் தவம் இருந்தார்.தை மாதம் அன்று தனது பூஜைகளை முடித்து விட்டு ஆகாரத்துக்காக மாவை சுவாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு ஒரு பங்கை கொடுக்க இருந்தார்.வயதான அந்தணர் வந்து அதை கேட்க இவரும் அதை கொடுத்தார்.கிழவரும் புசித்து பசி இன்னும் தீரவில்லை என்று மேலும் கேட்க முனிவரும் மகிழ்ச்சியோடு மீதியையும் தந்தார். முனிவரும் அன்று முழுவதும் உபவாசம் இருந்து அடுத்த நாள் முதல் 1 வருடம் கழித்து திரும்பவும் தபம் செய்தார். 1 வருடம் கழித்து முன்பு போல் மறுபடியும் நிவேதனம் செய்த பின் விருந்தாளி வருவாரா என்று எதிர்பார்த்திருக்க, அதேபோல் அதே கிழவர் வந்து மாவு கேட்க, முனிவரும் தந்தார்.பிறகு படுத்துறங்க அந்த கிழவர் ""எவ்வுள்' என்று வினவ முனிவரும் தன் இடத்தையே காட்டி "இவ்விடம் படுத்துக் கொள்ளவும்' என்றார். மறுகணமே அந்த பிராமணர் ரூபத்தில் வந்த பகவான் சயன கோலத்தில் காட்சி தந்தார். முனிவரிடம் ""வரம் கேள்' என கூற இங்கு வரும் பக்தர்களுக்கு அவரது பிரச்னைகளை நிறைவேற்றி வைக்கும்படி கேட்க, பகவானும் அவ்வாறே அருளி இங்கு எழுந்தருளியதாக இத்தல வரலாறு கூறுகிறது.
274 சிவாலயங்கள்:அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோயில்
மூலவர் :  தயாநிதீஸ்வரர்
உற்சவர் :  குலை வணங்கி நாதர்
அம்மன் :  ஜடாமகுட நாயகி
தல விருட்சம் :  தென்னை
பழமை :  2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :கபிஸ்தலம், ஆடுதுறைப்பெருமாள் கோவில், திருவடகுரங்காடுதுறை
ஊர் :  வடகுரங்காடுதுறை
மாவட்டம் :  தஞ்சாவூர்
மாநிலம் :  தமிழ்நாடு
பாடியவர்கள்:திருஞானசம்பந்தரர்,தேவாரப்பதிகம்
நீலமா மணிநிறத் தரக்கனை யிருபது கரத்தொடல்க வாலினாற் கட்டிய வாலியார் வழிபட மன்னுகோயில் ஏலமோ டிலையில வங்கமே யிஞ்சியே மஞ்சளுந்தி ஆலியா வருபுனல் வடகரை யடைகுரங் காடுதுறையே.-திருஞானசம்பந்தர்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 49வது தலம்.

திருவிழா:பங்குனி உத்திர திருவிழா, நவராத்திரி பத்து நாள் விழா ஆகியவை சிறப்பாக நடக்கிறது. கார்த்திகையில் அம்பிகையை பெண்கள் 1008 முறை சுற்றி வருவது விசேஷ அம்சமாகும்.  
      
தல சிறப்பு:இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சிறப்பு கர்ப்பிணிப்பெண்கள் வணங்க வேண்டிய கோயில்.  
      
திறக்கும் நேரம்:காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும், அருள்மிகு தயாநிதீஸ்வரர் கோயில், வடகுரங்காடுதுறை - 614 202. தஞ்சாவூர் மாவட்டம்.போன்:+91 4374 240 491, 244 191


     
பொது தகவல்:நடராஜரின் கல் சிற்பம், சிவகாமி அம்பிகை, அர்த்தநாரீஸ்வரர், இரட்டை பைரவர், சூரியன், நாகர், சனீஸ்வரர், லிங்கோத்பவர், பிரம்மா, சுப்பிரமணியர், காசி விஸ்வநாதர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர் ஆகியோரும் இங்கு அருள்பாலிக்கின்றனர்.  
      
 பிரார்த்தனை:சில பாவங்கள் நீங்க அனுமானும் இங்கு பூஜை செய்துள்ளார். இங்குள்ள தெட்சிணாமூர்த்தியை தரிசித்தால் குருபலம் பெருகுகிறது.

நேர்த்திக்கடன்:சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.


    
தலபெருமை:கோயிலின் சிறப்பம்சம்  : இக்கோயிலுக்கு முக்கியமாக கர்ப்பிணிப் பெண்களே வருகிறார்கள். கர்ப்பமான பெண்களை பொதுவாக கோயிலுக்கு செல்ல வேண்டாம் என சொல்வதுண்டு. ஆனால் இக்கோயிலில் சிவபெருமான் கர்ப்பிணிக்கு அருள் செய்ததால் இந்த தலத்திற்கு வந்தால் சுகமான பிரசவம் நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.  திருஞான சம்பந்தர், அருணகிரி நாதரால் பாடல் பெற்றது.

நவராத்திரி காலத்தில் மகாலட்சுமியை வழிபடுவதன் மூலம் செல்வச்சிறப்பு கூடும்.

துர்க்கையின் சிறப்பு: இங்கு விஷ்ணுதுர்க்கை கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறாள். எட்டு புஜங்கள் கொண்ட இந்த துர்க்கைக்கு பாலபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாக காட்சியளிப்பது சிறப்பாகும்.  வேறு எந்த துர்க்கை தலத்திலும் இம்மாதிரியான அதிசயம் நிகழ்வதாக தெரியவில்லை. நவராத்திரி காலத்தில் இந்த அதிசய துர்க்கையை வழிபடுவதன் மூலம் மனதில் தைரியம் அதிகரிக்கும்.

தல வரலாறு:சிவபெருமான் தனது லீலைகளை பல இடங்களிலும் வெளிப்படுத்தியிருக்கிறார். வாலிக்கு வால் வளர அருள்செய்த இடமே குரங்காடுதுறை ஆகும். வாலிக்கு வால் அறுந்துபோனது எப்போது என்பது பற்றி கேள்வி எழலாம். வாலியைக்கண்டு ராவணனே நடுங்கியிருக்கிறான். அவனை வாலால் அடிக்கும்போது ஒரு வேளை வால் அறுபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. தனது வால் வளர அவன் சிவனை வணங்கினான்.

குரங்காடுதுறை தலத்திற்கு வந்து சிவனை வணங்கியதால் அவனது வால் மீண்டும் வளர்ந்தது. இங்கு சிவன் தயாநிதீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அம்பாள் ஜடாமகுட நாயகி. சிட்டுக்குருவி ஒன்றிற்கும் சிவபெருமான் மோட்சம் அளித்துள்ளார். எனவே இவர் சிட்டிலிங்கேஸ்வரர் என்றும் வழங்கப்படுகிறார். தயாநிதி என்ற பெயருக்கு ஏற்ப கருணை மழை பொழிந்துள்ளார்.

செட்டிப்பெண் எனப்படும் கர்ப்பிணி பெண் ஒருத்தி தாகம் தாளாமல் இக்கோயில் வழியே நடந்து வந்து கொண்டிருந்தாள். அவள் தாகத்தால் இறந்துவிடுவாளோ என்ற நிலைமை ஏற்பட்டது. சுற்றிலும் எங்கும் தண்ணீர் இல்லை. அவள் உயிர் போகும் தருணத்தில் அங்கிருந்த சிவலிங்கத்தை வணங்கினாள்.  சிவபெருமானே அங்கு தோன்றி அருகிலிருந்த தென்னைமரத்தை வளைத்து இளநீரை பறித்துக்கொடுத்தார். அந்தப்பெண் தாகம் நீங்கினாள். எனவே இறைவனுக்கு குலைவணங்கிநாதர் என்ற பெயரும் உள்ளது.

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.