சனி, 22 செப்டம்பர், 2018

உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!

காசேதான் கடவுளடா…

இந்தக்காலத்தில் கடவுளுக்கு அடுத்தபடியாக பொதுவாக எல்லோராலும் மதிக்கப்படுவது பணம். பணம் இல்லாவிட்டால் பிணம் என்ற பழமொழி கூட உண்டு. காசையே கூட கடவுள் என்று சொல்பவர்கள் கூட உண்டு. என்ன தான் கஷ்டப்பட்டு வேலை பார்த்து, பணம் சம்பாதித்தாலும், அதை மிச்சப்படுத்த முடியவில்லை. தேவையில்லாமல் வீண் செலவு அதிகமாகிறது என்று கவலைப்படுபவர்கள்: கீழ்த்திருப்பதியிலுள்ள கோவிந்தராஜப்பெருமாளையும், அலர்மேல்மங்கை தாயாரையும் வழிபாடு செய்யவேண்டும். பின்னர் திருப்பதி வெங்கடாஜலபதியை மனமார வேண்டினால் பணப்பிரச்சனை நீங்கி, வரவு அதிகமாகி, செலவு குறையும். அத்துடன் பணத்தை மிச்சமும் படுத்தலாம். மேலும் பெருமாளுக்குரிய சனிக்கிழமைகளில் விரதமிருந்து இயலாதவர்களுக்கு உதவுவது நல்லது.  அடிக்கடி பெருமாளுக்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதும், பெருமாள் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து வருவது சிறப்பு.  அத்துடன் விழுப்புரத்திலிருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் 4 கி.மீ. தூரத்திலுள்ள திருநகர் மகாலட்சுமி கோயிலுக்கு சென்று திருமஞ்சனம் செய்து சிறப்பு அர்ச்சனை செய்யுங்கள். இது தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற தனி மகாலட்சுமி கோயிலாகும். இனி மகாலட்சுமி உங்கள் வீட்டு கதவை தட்ட ஆரம்பித்து விடுவாள்.

கலாட்டா கல்யாணம்

நம் பிள்ளைகளுக்கு சமமான வயதுடையவர்கள் எல்லோருக்கும் கல்யாணமாகி குழந்தை குட்டிகளுடன் வாழ்கிறார்கள். ஆனால் நம் பிள்ளைக்கோ ஒரு நல்ல வரன் அமைய மாட்டேங்குது. நிறைய வரன் பார்த்துட்டோம். அதில் எந்த வரனும் அமையவில்லை. எந்த வரன் வந்தாலும்  தடைபட்டுக் கொண்டே செல்கிறது என்று வருத்தப்படுபவர்கள்; ஏதாவது ஒரு செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய் ஓரையில் குலதெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும். தங்கம், வெள்ளியால் தாலி செய்து அல்லது மஞ்சள் கிழங்கை குலதெய்வத்திற்கு காணிக்கையாக செலுத்துங்கள். வெற்றிலை, பாக்கு, பூ, பழம் வைத்து உங்களுக்கு இஷ்டப்பட்ட அம்மன் கோயிலுக்குச் சென்று அம்மன் பெயரில் அர்ச்சனை செய்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். திருமணம் நிச்சயம் ஆனவுடன் அந்த அம்மனுக்கு நன்றிகூறும் வகையில் சிறப்பு அர்ச்சனை செய்து விட்டு, ஏழை எளியவர் குறைந்தது ஏழு பேருக்கு அன்னதானம் செய்யுங்கள். அத்துடன் திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்று மங்கலத்திலுள்ள மாங்கல்யேஸ்வரர் கோயிலில் உள்ள மாங்கல்ய மகரிஷியை வழிபாடு செய்து, திருமணம் நிச்சயம் ஆனவுடன் முதல் பத்திரிக்கை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று வேண்டிக்கொண்டால், உங்கள் வீட்டு கல்யாணம் கலாட்டா கல்யாணமாக சிறப்பாக நடக்கும்.

படித்தால் மட்டும் போதுமா?

எவ்வளவு தான் கஷ்டப்பட்டு படித்தாலும் அது மனதில் நிற்காமல்  மறந்து  விடுகிறது. அப்படியே ஞாபகம் இருந்தாலும், அதை சரியாக தேர்வில்  எழுத முடியவில்லை. பெற்றோரும், ஆசிரியர்களும் படித்தால் மட்டும் போதாது. நிறைய மதிப்பெண் பெற வேண்டும் என திட்டுகிறார்கள். படிக்க வசதியில்லாமல் படிப்பு பாதியிலேயே நின்று போய்விடுகிறது என்றெல்லாம் கவலைப்படுபவர்கள்; முருகனின் அறுபடைவீடுகளில் இரண்டாவது படைவீடான திருச்செந்தூருக்குச் செல்லுங்கள். அங்குள்ள நாழிக்கிணறு தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டு செந்திலாண்டவனை மனதார பிரார்த்தனை செய்யுங்கள். நான்முகனான பிரம்மனுக்கே உபதேசம் செய்தவர் முருகப்பெருமான் என்பதன் அடிப்படையில் 40 லட்டுக்கும் குறையாமல் பக்தர்களுக்கு விநியோகம் செய்யுங்கள். திருச்செந்தூருக்கு சென்று வழிபட இயலாதவர்கள் முருகனின் உருவப்படத்தை வீட்டில் வைத்து அவரவர் பிறந்த கிழமைகளில் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். மேலும் கல்விக்கு அதிபதிகளான குருபகவான், சரஸ்வதி, ஹயக்ரீவர் போன்றோரின் காயத்ரி மந்திரத்தை தினமும் உச்சரியுங்கள். ஏழை மாணவர்களின் கல்விக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள்.  அத்துடன் நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள மணல்மேடு குற்றம் பொறுத்த நாதருக்கு அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்யுங்கள், அங்குள்ள தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். உங்களது கல்விக்கான தடைகள் அனைத்தும் நீங்கி, அதிக மதிப்பெண் பெற்று சிறப்பான வாழ்வு பெறுவீர்கள்.

வேலை கிடைச்சாச்சு

நான் படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்று நினைப்பவர்கள், ஏதாவது ஒரு வேலை கிடைச்சா போதும் என வருத்தப்படுவர்கள்; திருவாரூர் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் தலத்துக்கு சென்று அங்குள்ள அக்னீஸ்வரரையும், பொங்கு சனியையும் மனதார வழிபடுங்கள். உழைப்பின் பெருமையை உணர்த்தும் வகையில் இங்குள்ள சனிபகவான் கையில் கலப்பையை ஏந்தியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. திருவாரூர் செல்ல இயலாதவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கோயிலுக்கு சென்று அங்குள்ள சனிபகவானுக்கு 5 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் நீங்கள் பிறந்த கிழமைகளில் சிவன் கோயிலுக்கு சென்று சிவன் காயத்ரி மந்திரத்தை மனதாரக் கூறுங்கள். வேலை கிடைத்ததும், வாங்கும் வருவாயில் ஒரு பகுதியை ஏழை நோயாளிகளின் மருத்துவத்திற்கு செலவு செய்யுங்கள். அத்துடன் மயிலாடுதுறைக்கு வடக்கே 15 கி.மீ. தூரத்திலுள்ள திருப்புன்கூர் சிவலோகநாதருக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட்டால் உங்கள் தகுதிக்கேற்றபடி வேலை கிடைச்சாச்சு என்பதில் சந்தேகமில்லை.

நூறாண்டு காலம் வாழ்க

உடலில் சளி, இருமல் போன்ற ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்படுபவர்கள்; முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படைவீடான பழநி ஆண்டவனை தரிசனம் செய்யுங்கள். சித்தர்களும், யோகிகளும் இவரை வழிபட்டுப் பயனடைந்துள்ளனர். பிரசாதத்தினை ஏழை எளியோருக்கு தானம் செய்யுங்கள். முருகனின் ராஜஅலங்காரப் படத்தினை வீட்டில் வைத்து தினமும் வணங்குங்கள். செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய் ஓரையில் 5 அகல் தீபங்களை ஏற்றி முருகனின் துதிகளைப் பாடி பக்தியடையுங்கள். நவகிரகசன்னதியில் முதலாவதான சூரியனுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து வழிபடுங்கள். அத்துடன் 4448 நோய்களை குணப்படுத்தும் தலைமை இடமான வைத்தீஸ்வரன்கோவிலுக்கு சென்று, வைத்தியநாதரையும், அங்குள்ள தன்வந்திரியையும் வழிபடுங்கள்.  நோய் நொடிகளின்றி நூறாண்டு காலம் வளமோடு வாழ நல்லருள் கிடைக்கும்.

அடுத்த வாரிசு

தங்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லை என்று வருத்தப்படுகிறவர்கள்; தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள கோயிலில் உள்ள துர்கை அம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். 9 உதிரி எலுமிச்சம் பழத்தை அம்மன் காலடியில் வைக்க சொல்லி வழிபட்டு விட்டு அந்த பழங்களை திருப்பி வாங்கக் கூடாது. அர்ச்சனை செய்த குங்குமத்தை வீட்டில் வைத்து குழந்தைகளுக்கு தினமும் பூசிவிடுங்கள். கதிராமங்கலம் வனதுர்கை ஆலயத்துக்குச் சென்று அம்மனுக்கு அரக்கு அல்லது சிவப்புப் புடவை சாற்றி, அபிஷேக ஆராதனை செய்து அம்மனை வழிபடுங்கள். உங்கள் வாரிசுகள் பிறந்த கிழமைகளில் அருகிலுள்ள கோயில் நரசிம்மரை வழிபட்டு கல்கண்டு பிரசாதத்தை பக்தர்களுக்கு கொடுங்கள். துர்கை, நரசிம்மர் காயத்ரி மந்திரங்களை தினமும் உச்சரியுங்கள். திருக்கடையூர் காலசம்ஹார மூர்த்தியிடம் சென்று உங்களக்கு அடுத்த வாரிசுக்கு ஆயுஷ் ஹோம் செய்யுங்கள்.உங்கள் வாரிசுகளின் உடல் நலம் சீராக அமையும்.

ஆனந்தம்...ஆனந்தம்... ஆனந்தமே

வியாபாரத்தில் லாபம், நஷ்டம் இருப்பது சகஜம். தொழிலில் எப்பொழுதுமே நஷ்டமாக உள்ளது என வருத்தப்படுகிறவர்கள்; குபேரனுக்கே செல்வ வளம் கொடுத்தவர் சிவபெருமான், எனவே ஸ்ரீசைலம் சென்று அபிஷேக ஆராதனை செய்து சிவபெருமானை வழிபடுங்கள். அங்குள்ள விபூதி பிரசாதத்தை வாங்கி வந்து வீட்டிலும், வியாபாரம் நடக்கும் இடத்திலும் வைத்தால் நஷ்டம் குறைந்து லாபம் பெருகும். வியாபாரம் தொடங்கிய நாட்களில், திங்கட்கிழமைகளில் அருகிலுள்ள சிவாலயங்களுக்குப் போய் நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள். அங்கு நடைபெறும் அன்னதானத்திற்கு இயன்ற உதவி செய்யுங்கள். தினமும் சிவன் காயத்ரி மந்திரந்தை உச்சரியுங்கள். பிரதோஷ நாட்களில் பிராணிகளுக்கு உணவு கொடுங்கள். திருப்பட்டூர் பிரம்மா கோயிலுக்கு சென்று உங்கள் வயதுக்கேற்றபடி நெய்தீபம் ஏற்ற வழிபாடு செய்யுங்கள். (இக்கோயில் திருச்சியிலிருந்து சென்னை செல்லும் வழியில் 32 கி.மீ. தூரத்தில் உள்ள சிறுகனூரிலிருந்து மேற்கே 4 கி.மீ. தூரத்தில் உள்ளது. ) உங்கள் வாழ்க்கையில் நஷ்டமும், துன்பமும் விலகி லாபமும், மகிழ்ச்சியும் பெருகி, இனி எப்போதும் ஆனந்தம்...ஆனந்தம்... ஆனந்தமே...

கண்ணன் வருவான்

திருமணமாகி நீண்ட நாட்களாகியும் தனக்கு ஒரு வாரிசு இல்லை என வருத்தப்படுபவர்கள் திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயிலுக்குச் சென்று முல்லைவனநாதரையும், கர்ப்பரட்சாம்பிகை அம்மைனையும் வழிபடுங்கள். அம்மனின் பாதத்தில் வைத்து அபிஷேகம் செய்த நெய்யை கணவன், மனைவி இருவரும் 48 நாட்கள் சாப்பிட்டுவர குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும். உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள பெருமாள் கோயிலில் உள்ள சந்தான கோபால கிருஷ்ணரை மடியில் வைத்து மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் பிறந்த கிழமைகளில் வீட்டிலுள்ள இஷ்டதெய்வத்தின் முன் நெய் தீபம் ஏற்றி அபிராமி அந்தாதியில் தாமம் கடம்பு எனத் தொடங்கும் 73வது பாடலை தினமும் மனதார படியுங்கள். அரசமரத்தடி நாகர் மற்றும் விநாயகரை திங்கட்கிழமைகளில் வழிபடுங்கள். படிக்க வசதியில்லாத ஏழைச் சிறுவர்களின் படிப்புக்கு உதவுங்கள். விரைவிலேயே உங்கள் வீட்டில் சின்னக் கண்ணன் துள்ளி விளையாட வருவான்.

எதிரி தொந்தரவு நீங்க

உங்கள் வளர்ச்சியில் பொறாமைப்படுபவர்கள், உங்களை விரோதியாக நினைப்பவர்கள் போன்றவர்களால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமா; கும்பகோணம் அய்யாவாடி பிரத்யங்கிரா ஆலயத்தில் நடைபெறும் நிகும்பலா யாக பூஜையில் கலந்து கொண்டு அம்மனை மனதார பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பெருமாள் கோயில் சக்கரத்தாழ்வாரை மனதாரப் பிரார்த்தியுங்கள். அங்கு நடைபெறும் சுதர்சன ஹோமத்தில் கலந்து கொள்ளுங்கள். சனிக்கிழமைகளில் உங்களுக்கு இஷ்டமான அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யுங்கள். இயலாதவர்களுக்கு பிரசாதத்தை தானம் செய்யுங்கள். உங்களைப் பார்த்துப் பொறாமைப்படுபவர்கள், விரோதிகள் என யாராலும் எந்த பாதிப்புமின்றி இரும்பு கோட்டை போல் பாதுகாப்புடன் நிம்மதியாக வாழலாம்.

நல்லதொரு குடும்பம்

உங்கள் குடும்பங்களில் உள்ள உறவுகளுடன் சிறு சிறு சண்டைகளும், பிரச்சனைகளும் ஏற்படுகிறதா; அவைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ ஆசைப்படுபவர்கள்; பிள்ளையார்பட்டிக்கு சென்று அங்குள்ள கற்பக விநாயகருக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து மனதார வழிபடுங்கள். அங்கு தரும் விபூதி பிரசாதத்தை வீட்டிற்கு கொண்டு வந்து சிறுதுணியில் கட்டி வீட்டு வாசல்படி முன் வைத்துவிடுங்கள். மேலும் குடும்பத் தலைவன், தலைவி என அவரவர் பிறந்த கிழமைகளில் அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று அருகம்புல் மாலை சாற்றி, சிதறு தேங்காய் உடைத்து வழிபாடு செய்யுங்கள். வசதி படைத்தவர்கள் வீட்டில் கணபதி ஹோமம் நடத்தலாம். அல்லது வெள்ளிக்கிழமைகளில் பசுவின் கோமியத்தை வீடு முழுவதும் தெளித்து, சாம்பிராணி புகை போட்டு இஷ்ட தெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் குடும்பங்களில் அவ்வப்போது நிகழும் சிறு சிறு பிரச்சனைகள் நீங்கி சந்தோஷமாக ஒற்றுமையுடன் நல்லதொரு குடும்பம் அமையும்.

வழக்குப் பிரச்சனைகள் தீர

உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கோர்டில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது முடிவடையாமல் இழுத்துக்கொண்டே செல்கிறது. உங்களுக்கு சாதகமாக நல்லதொரு தீர்ப்பு அமைய விரும்புபவர்கள்; விழுப்புரம் பஞ்சவடிக்கு சென்று ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபாடு செய்யுங்கள். உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வெற்றிலைமாலை, வடைமாலை அல்லது வெண்ணெய் காப்பு சாற்றியும் வழிபடுங்கள். மேலும் அஷ்டமி தினத்தில் பைரவருக்கு தயிர்சாதம் நிவேதனம் செய்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்குங்கள். உங்களுக்கு ஏற்பட்டுள்ள வழக்கு சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து உங்களுக்கு சாதகமாக நல்லதொரு தீர்ப்பு கிடைக்கும்.

எங்கும் பயம்...எதிலும் பயம் நீங்க

பயம்.. பயம்.. பயம் என எதைப்பார்த்தாலும் பயமாக, நடுக்கமாக உள்ளது. என்னால் எந்த வேலையையும் நிம்மதியாக செய்து முடிக்க முடியவில்லை என வருத்தப்படுகிறவர்கள்; சிவகங்கை வைரவன்பட்டி பைரவரை வழிபடுங்கள். அவருக்கு உகந்த பிரசாதத்தை குறைந்தது 9 பேருக்காவது தானம் செய்யுங்கள். உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள பெருமாள் கோயில் நரசிம்மரை வழிபட்டு பானகம் நிவேதனம் செய்து வணங்குங்கள். அவருடைய தீர்த்தத்தை முகத்தில் தெளித்துக் கொண்டு பயமெல்லாம் போனதும் அவருக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள். தேய்பிறை அஷ்டமி தினத்தில் பைரவர் சன்னதியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து தயிர்சாதம் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வழங்குங்கள். நரசிம்மர் வழிபாட்டினால் உங்களுடைய பயம் அனைத்தும் விலகி வெற்றியே உங்களுக்கு கிடைக்கும்.

இருமலர்கள்

கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையாக மலரும் மணமும் போல் வாழ ஆசைப்படுபவர்கள்; சிவனும், சக்தியும் சரிபாதியாக இணைந்து அர்த்தநாரீஸ்வரராக விளங்கும் தலம் நாமக்கல் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம். இங்குள்ள மூலவருக்கு மாலை வாங்கி சாற்றி அபிஷேகம் செய்து மனதார வழிபாடு செய்யுங்கள். சிவபெருமானின் சாபத்தால் பூமிக்கு வந்த பார்வதி, மீண்டும் ஈசனை அடைய பஞ்சாக்னியில் நின்று தவம் செய்த தலம் காஞ்சி மாங்காடு வெள்ளீஸ்வரர் ஆலயம். இங்குள்ள சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேக ஆராதனை செய்து வழிபடுங்கள். காஞ்சி காமாட்சியம்மன் படத்தை வீட்டு பூஜையறையில் வைத்து அவரவர் பிறந்த கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள். கணவன் மனைவி இருவருக்கிடையேயும் எந்தவித பிரச்சனையுமின்றி இரு மலர்களாக மணம்வீசி மனம் போல வாழ்வு சிறக்கும்.

கனவோ...நிஜமோ...

இரவில் தூங்கும் போது கெட்ட கனவுகள் வந்து தொல்லை செய்கின்றன. எங்கே கனவில் கண்டது நிஜத்தில் பலித்து விடுமோ என்று பயமாக உள்ளது என வருத்தப்படுபவர்கள்; உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலுக்குச் சென்று 9 எலுமிச்சம் பழங்களை வாங்கிக் கொடுத்து குங்கும அர்ச்சனை செய்து வழிபடுங்கள். அதில் 3 எலுமிச்சம் பழத்தை மட்டும் திருப்பி வாங்கிட்டு வந்து ஒன்றை உங்கள் படுக்கை அறை அலமாரியில் வைத்து விடுங்கள். மீதி இரண்டை பூஜையறையில் வைத்தால் கெட்ட கனவுகள் வராது. மேலும் ராமேஸ்வரத்திற்கு அருகிலுள்ள தேவிபட்டணத்திற்கு சென்று அங்குள்ள நவகிரகங்களை மனதார வழிபாடு செய்யுங்கள். நல்ல செயல்களை நினைத்துக் கொண்டு நல்ல சிந்தனையோடு உறங்கச் செல்லுங்கள். தீய கனவுத்தொல்லைகளிலிருந்து விடுபட்டு நிம்மதியாக உறங்குங்கள்.

ஞாபம் வருதே... ஞாபகம் வருதே...

மறதி பிரச்சனை இயல்பாகவே எல்லோருக்குமே இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை. ஒருசிலர் தாங்கள் அன்றாடம் செய்யும் பணிகளை மறந்து விடுவார்கள், கேட்டால் எனக்கு ஞாபக மறதி என்று சொல்வார்கள். மறதிவிலகி ஞாபக சக்தி அதிகரிக்க ஆசைப்படுபவர்கள்; உங்களுக்கு இஷ்டமான அம்மன் ஆலயத்துக்குச் சென்று 5 அகல் தீபம் ஏற்றி அம்பிகையை மனதார வழிபடுங்கள். ஏழைப் பெண்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். உங்கள் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி,

யாதேவி சர்வ பூதேஷு ஸ்ம்ருதி ரூபேண சம்ஸ்திதா:
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எல்லா உயிர்களிடமும் ஞாபக சக்தியாக விளங்கும் தேவியைத் துதிக்கிறேன் என்பதே இதன் பொருள். இந்த ஸ்லோகத்தையும், பொருளையும் தினமும் 11 முறை கூறுங்கள். ஞாபக மறதியிலிருந்து விடுபட்டு எந்த காரியத்தையும் மனதில் ஞாபகம் வைத்துக் கொண்டு செயலாற்றும் சக்தி கிடைக்கும்.

பயணப் பாதையில் ஆபத்து வராமல் இருக்க

நீங்கள் அடிக்கடி வெளியூர், வெளிநாடு பயணம் செய்பவராக இருக்கலாம். அலுவலகப் பணி அல்லது பள்ளி, கல்லூரிகளுக்கு நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் பயணத்தின் போது விபத்து மற்றும் ஆபத்துகள் ஏற்படாமல் இருக்க

ஓம் நமோ அங்காரகாய
ஓம் நமோ அங்காரகாய
ஓம் நமோ அங்காரகாய
ஓம் நமோ குஜாய
ஓம் நமோ குஜாய
ஓம் நமோ குஜாய
ஓம் நமோ மங்களாய
ஓம் நமோ மங்களாய
ஓம் நமோ மங்களாய
ஓம் நமோ வாகனாய
ஓம் நமோ வாகனாய
ஓம் நமோ வாகனாய
ஓம் நமோ ராகுவே
ஓம் நமோ ராகுவே
ஓம் நமோ ராகுவே

என்ற இந்த மந்திரத்தை வீட்டை விட்டுக் கிளம்பும் முன் உங்கள் வீட்டுப்பூஜையறையில் நின்று மனதார ஒருமுறை கூறிவிட்டு புறப்படுங்கள். அல்லது சுலபமாக,

சம்போ மகாதேவ தேவா - சிவ சம்போ மகாதேவ
தேவாதி தேவா நமோ மார்க்க பந்தோ

என்ற இந்தத் துதியை உங்க பயணம் ஆரம்பிக்கும் முன் குறைந்தது 11 முறை சொல்லுங்கள். நீங்கள் எந்தத் தடையுமின்றி பத்திரமாக உங்கள் பயணத்தை முடித்து விடுவீர்கள்.

வீட்டைக் கட்டிப்பார்; கல்யாணம் பண்ணிப்பார்!

சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்குமே இருக்கும்; வீட்டைக் கட்ட ஆரம்பிக்கும் முன்னே பலவிதமான தடைகள் ஏற்படும். இதில் ஒரு வீட்டைக் கட்டி முடிப்பது என்றால் அப்பப்பா சொல்லி முடிக்க இயலாது. வீடு கட்ட ஆரம்பிக்கும் முன்பு காளஹஸ்தி சென்று காளத்திநாதரையும், ஞான பிரசுன்னாம்பிகையையும் மனதார வழிபட்டு வாருங்கள். உங்களால் இயன்ற அளவு பச்சரிசியை கோயிலுக்கு தானமாகக் கொடுங்கள். ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்யுங்கள். கோயிலில் தரும் விபூதியை தண்ணீரில் கலந்து பூமி பூஜை ஆரம்பிக்கும் முன்  பூஜை செய்யும் இடத்தில் ஊற்றுங்கள். வீடு கட்டத் தொடங்கிய பின்பு புற்றுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று புற்றுக்கு பால் வாங்கி ஊற்றிவிட்டு அம்மனை மனதார வழிபட்டு வாருங்கள். அங்கு தரும் குங்குமத்தை சிறிதளவு தண்ணீரில் கலந்து வீடு கட்டும் இடத்தில் தெளியுங்கள். தடைகளைத் தாண்டி சொந்த வீட்டில் நீங்கள் சந்தோஷமாக வசிக்கலாம்.

திருட்டுப் பயம் போக...

உங்கள் வீட்டிலோ அல்லது வெளியூர் செல்லும் போதோ ஏதாவது பொருள், நகை, பணம் திருடு போகிவிட்டதா, இவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்ததை திருடி விட்டார்களே என வருத்தப்படுகிறவர்கள்; காரைக்குடி வைரவன்பட்டி பைரவர் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து பைரவரை மனதார வேண்டுங்கள். தயிர்சாதம் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாகக் கொடுங்கள். பைரவரின் வாகனமான நாய்களுக்கு இயன்ற உணவு வாங்கிக் கொடுங்கள். கோயிலில் தரும் விபூதியை வீட்டு பூஜை அறையில் வையுங்கள். தேய்பிறை அஷ்டமி தினத்தில் உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கோயிலில் உள்ள பைரவருக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபடுங்கள். தினமும் பைரவர் காயத்ரி மந்திரத்தைக் கூறுங்கள்.

கடன்கள் அடைந்திட...

கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கி நின்றான் இலங்கைவேந்தன் என்ற பழமொழிக்கேற்ப கடன் வாங்கி விட்டு அதைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லையே என வருத்தப்படுகிறீர்களா; தஞ்சாவூர் திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயிலில் உள்ள ரிண விமோசன லிங்கேஸ்வரரை வழிபடுங்கள். 11 வாரம் திங்கட்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து, 11 வாரம் அபிஷேகத்தில் கலந்து கொண்டால் உங்களது கடன் சுமை குறையும். மேலும் சுவர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வீட்டு பூஜையறையில் வைத்து தீபம் ஏற்றி வழிபடுங்கள். வெள்ளிக்கிழமைகளில் பசுமாட்டுக்கு தீவனம் வாங்கிக் கொடுங்கள். அபிராமி அந்தாதியை தவறாமல் தினமும் கூறுங்கள். உங்களது கடன் பிரச்சனைகள் அனைத்தும் மறைந்து செல்வ வளம் பெருகும்.

பயணத் தடைப் பிரச்சனை விலக

வெகுநாட்களாக சுற்றுலா, தூர தேசப்பயணம் மேற்கொள்ள ஆசைப்பட்டு அது நடைபெறாமல் தடைபட்டுக் கொண்டே செல்கிறதா, எங்கே நாம் ஆசைப்பட்ட இடத்திற்கு போகமுடியாமல் கனவாக இருந்து விடுமோ என நினைப்பவர்கள்; உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பெருமாள் கோயில் கருடனுக்கும், சிவன் கோயில் நந்திக்கும் அர்ச்சனை செய்து வழிபடுங்கள். கருடன், நந்திக்கு செய்ய வேண்டிய சரியான வழிபாட்டை செய்யுங்கள். வெளிநாடு செல்ல வேண்டிய பயணத்தடை விலக காரைக்கால் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்துக்கு சென்று அங்குள்ள நளதீர்த்தத்தில் நீராடுங்கள். 8 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி தர்ப்பாரண்யேஸ்வரரை மனதார வழிபாடு செய்யுங்கள். ஏதாவது ஒரு விநாயகர் கோயிலில் 3 சிதறுதேங்காய் உடைத்து விட்டு வீடு திரும்புங்கள். நீங்கள் விரும்பியபடியே உங்களது பயணம் எவ்விதத் தடையுமின்றி சிறப்பாக அமையும்.

அரசுப்பணி தடைகள் அதிரடிப்படையுடன் விரட்ட...

அரசுப்பணியில் இருப்பவர்கள் தங்களுக்கு ஏற்படும் தடைகள் விலகவும், அரசின் மூலம் கிடைக்க இருக்கும் அனுமதிக்கு காலதாமதம் ஏற்படுவதால் வருத்தப்படுபவர்கள்: அருகிலுள்ள ராகவேந்தர் கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பு. முடிந்தால் மந்திராலயம் சென்று, தீபமேற்ற பசு நெய் வாங்கிகொடுத்து வழிபட்டு வருவது சிறந்த பலனைத்தரும். அத்துடன் அங்கு கிடைக்கும் இனிப்பான கோயில் பிரசாதத்தை குறைந்தது நாற்பது பேருக்கு கொடுக்கவும். மேலும்  தங்கள் காரியம்  விரைவில் நிறைவேற தினமும்  ராகவேந்திரர் படத்திற்கு பூபோட்டு வணங்கி வருவதால் காரியசித்தி விரைவில் கூடும். அடிக்கடி உங்கள் வீட்டின் அருகேஉள்ள ஏதேனும் ஒரு மகானின் பிருந்தாவனத்திற்கு, நீங்கள் பிறந்த கிழமையில் அவசியம் சென்று நெய்தீபமேற்றி மனதார வணங்குங்கள். சனிக்கிழமைகளில் சனிபகவான் சன்னதி முன்பு 9 நல்லெண்ணை தீபமேற்றி 9 சுற்றுக்கள் வந்து வணங்கினால் கிரக தோஷம் நீங்கும். இப்படியெல்லாம் செய்து வந்தால் அரசுப்பணி தடைகள், பகவானின் அருள் எனும் அதிரடிப்படை துணை கொண்டு விரட்டலாம்.

தேடும்....உன் பார்வை....

ஞாபகமறதி உள்ள நபர்கள் அடிக்கடி ஏதேனும் ஒரு பொருளை எங்கேயாவது வைத்துவிட்டு தேடுவர்.  சில சமயம் அவை கிடைத்துவிடும். சில சமயம் கிடைக்காமல் போனாலும் அவர்கள் கவலைப்படுவதில்லை. ஏனெனில் அது சாதாரணப்பொருளாக இருக்கும். எப்போதும் உஷாராக இருப்பவர்கள் கூட,  சில நேரங்களில்,  ஏதேனும் ஒரு பொருளை தொலைத்து விடுவார்கள். மிகவும் விலை உயர்ந்த, அல்லது மதிப்பு மிக்க அந்தப்பொருளை தேடித்தேடி அலுத்துவிடுவார்கள். அத்துடன் எப்போதும் அவர்களது பார்வை அந்தப்பொருளை தேடிக்கொண்டிருக்கும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.
எப்போதும் கையால் வாயை மூடி இருப்பது எது தெரியுமா?

குருவின் முன் சீடர்கள் அடக்கத்தின் அடையாளமாக வாயைக் கையால் பொத்தி நிற்பதுண்டு. உயிரினங்களில் இயற்கையாகவே கையால் வாய் மூடி இருப்பது யானைக்கு மட்டுமே. இந்த தும்பிக்கை மூலம் விநாயகர் பெரிய தத்துவத்தை உணர்த்துகிறார். எவ்வளவு தான் கல்வி அறிவு பெற்றிருந்தாலும் தொணத் தொண என்று யாரும் வீணானதை பேசக்கூடாது. ஞானத்தின் அடையாளம் மவுனம் தான். வாயைத் திறந்தால், நல்ல விஷயங்கள் மட்டுமே வர வேண்டும். இதனால் தான் விநாயகரை ஸுமுகர் என்பர். இதற்கு நல்ல வாயை உடையவர் என்று பொருள். நல்ல விஷயங்களை பேசுபவர்களின் வீட்டில் எப்போதும் சுமூகமான நிலை இருக்கும். ஒரு இடத்தில் ஏதாவது பிரச்னை என்று வந்து விட்டால், சுமூகமான பேச்சு நடத்த வேண்டும். இல்லாவிட்டால் பிரச்னை பெரிதாகி விடும். ஞானத்தை அருளும் வித்யா கணபதியை வழிபட்டு வந்தால், நாம் இருக்கும் இடத்தில், சுமூகம் நிலவும்.
மனிதராய் பிறந்த மணிகண்டனின் மகரஜோதி தரிசனம்.
கேரள ஐயப்பன் கோயில்கள்

கேரளாவில் மலைகளிலும், ஆற்றங்கரைகளிலும் பல ஐயப்பன் கோயில்கள் உள்ளன. சபரிமலை, அச்சன்கோவில், குளத்துப்புழை, ஆரியங்காவு, சாஸ்தாம் பேட்டை கோயில்கள் குறிப்பிடத்தக்கவை. தர்மசாஸ்தாவின் ஆஸ்ரமநிலைக்கு ஏற்ப இக்கோயில்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. குளத்துப்புழையில் பாலனாகவும், ஆரியங்காவில் இளைஞராக புஷ்கலாவுடனும், அச்சன்கோவிலில் தம்பதி சமேதராகவும், சபரிமலையில் துறவியாகவும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். கேரளநாட்டை உருவாக்கிய பரசுராமர் இக்கோயில்களை உருவாக்கியதாக புராணங்கள் கூறுகின்றன. மற்றொரு பழமையான சாஸ்தா கோயில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பொதிகை மலையில் உள்ளது. இங்கே சாஸ்தாவை காவல் தெய்வமாகக் கருதி சொரிமுத்து அய்யனார் என்ற பெயர் சூட்டி வழிபடுகின்றனர்.தமிழகப் பிரிவினைக்கு முன்பு திருவிதாங்கூர் ராஜ்யத்தின் எல்லைக்குள் இருந்த இக்கோயில் தற்போது தமிழகத்தில் உள்ளது.

மீனாட்சி வழிபாடு

குளத்துப்புழை ஐயப்பன் கோயில் கொல்லம் மாவட்டத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்து உள்ளது. பாலகனாக இக்கோயிலில் ஐயப்பன் வீற்றிருக்கிறார். இக்கோயிலில் மீனூட்டு என்னும் வழிபாடு மிகவும் சிறப்பானதாகும். கோயில் குளத்தில் இருக்கும் மீன்களை ஐயப்பனின் நண்பர்களாகப் பக்தர்கள் கருதுகின்றனர். மீன்களுக்கு கோதுமை மற்றும் கடலையை உணவாக இடுகின்றனர். இதனால் இக் குளத்தில் யாரும் மீன் பிடிப்பதில்லை. இக்கோயிலுக்கு வந்த அனைவரும் தன்னை மறந்து குளத்துப்புழை பாலனே சரணம் ஐயப்பா! என்ற சரணகோஷத்தை முழங்குகின்றனர். கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் சாஸ்தாம் கோட்டை என்னும் ஊர் உள்ளது. இங்குள்ள கோயிலில் ஐயப்பன் சிறுவனாக காட்சிதருகிறார். இங்கு குரங்குகள் அதிகம் காணப்படுகின்றன. அவற்றிற்கு உணவிடுவதை முக்கியமான வழிபாடாக மக்கள் பின்பற்றுகின்றனர்.

பக்தன் தவறு செய்தால் குருசாமிக்கு பங்குண்டு

வழிபாட்டில் ஐயப்பனுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் உண்டோ, அதே அளவுக்கு குருசாமிக்கும் முக்கியத்துவம் உண்டு. குருசுவாமிகளை முதன்முதலில் ஏற்படுத்திக் கொடுத்தவரே ஐயப்பன் தான். கொள்ளையனான உதயணனை கொன்றபின், சபரிமலைபிரதிஷ்டை தினத்தில் ஞானிகளைத்தேர்ந்தெடுத்து தலைவராக்கி குழுக்களை நியமித்தார். இவர்களே முதல் குருசாமியானார்கள். இவர்களதுஉத்தரவின்படி எல்லா பக்தர்களும் நடக்கவேண்டும் என்று ஐயப்பன் கட்டளையிட்டார். குருமாரை வசதி, புகழ் இவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பதில்லை. சபரிமலை யாத்திரை அனுபவம், தெய்வ பக்தி, தர்மசிந்தனை இவற்றின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுத்தனர். அதுபோல, யாத்திரையின் போது எந்த பக்தர் பாவம் செய்தாலும் அதில் குருசாமிக்கும் பங்குண்டு என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. எனவே, விரத விதிகளை மீறும் பக்தர்களை குருசாமி கண்டித்து திருத்த உரிமையிருக்கிறது.

சபரிமலையில் பிறதெய்வ வழிபாடு

சபரிமலையில் உள்ள தெய்வங்களுக்கு தனித்தனியான பிரசாதமும், வழிபாட்டு முறைகளும் பின்பற்றப்டுகின்றன.மாளிகைப்புறத்தம்மனுக்கு கோயிலைச்சுற்றி தேங்காய் உருட்டுதல் சடங்கு நடக்கும். வெற்றிலை, மஞ்சள்பொடி, பட்டு, குங்குமத்தை இவளுக்கு காணிக்கையாகச் செலுத்தவேண்டும். விநாயகருக்கு தோப்புக்கரணமிட்டு நெய்த்தேங்காய் உடைத்து ஒரு பகுதியை அக்னி குண்டத்தில் சமர்ப்பிக்கவேண்டும். கடுத்தசுவாமிக்கு கதலி வாழைப்பழம், வறைப்பொடி, அவல், தேங்காய், சர்க்கரை, உலர்திராட்சை, கல்கண்டு சமர்ப்பித்து வழிபடவேண்டும். மலநடை பகவதிக்கு விளக்கேற்றி காணிக்கை செலுத்த வேண்டும். நாகராஜாவுக்கு கற்பூரம், மஞ்சள்பொடி சமர்ப்பித்து வழிபாடு செய்யலாம். வாவர் சுவாமிக்கு நெல், நல்லமிளகு, சந்தனம், ஊதுபத்தி, பன்னீர், நெய், தேங்காய் பிரசாதமாகப் படைக்க வேண்டும். ஐயப்பசுவாமிக்கு மிகவும் பிடித்தமான பிரசாதம்அரவணை. இதைக் கட்டிப் பாயாசம் என்பர்.உண்ணியப்பமும் பிடித்தமானதே. இது அரிசி மற்றும் வெல்லத்தால் செய்யப்படுகிறது. கற்பூரஜோதியையும்,

விழியில் விழுந்தது! உயிரில் கலந்தது!

சூரியனின் சஞ்சாரத்தில் மகரராசிக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. தென்திசை பயணித்த சூரியன் வடதிசை நோக்கி பயணத்தைத் துவக்கும் தினத்தையே மகரசங்கராந்தி என்று கொண்டாடுகிறோம். ஐயப்ப தரிசனத்தில் இந்நாள் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகத் திகழ்கிறது. மார்கழி மாதம், தைமாதத்திற்கு வழிவிட்டுக் கொடுக்கும் இந்நாளில், சபரிமலை யாத்திரை, மகரவிளக்கு ஜோதியோடு சுபநிறைவு பெறுகிறது. ஐயப்ப சந்நிதானத்தின் நேர் எதிரில் பொன்னம்பல மேட்டில் ஆகாயத்தை எட்டும் மலைச்சிகரங்களில் மகர ஜோதி தோன்றுகிறது. எங்கும் சரண கோஷங்கள் முழங்குகிறது. ஜோதியின் ஒளி, பக்தனின் விழியில் பட்ட அந்த கணத்திலேயே அருள்வெள்ளம் உள்ளத்திலும், உயிரிலும் கலக்கிறது. ஜோதி வடிவாக ஐயப்பனைக் காண விண்ணுலக தேவர்களும், தவம் செய்யும் முனிவர்களும் வருவதாக ஐதீகம்.

ஐயப்பன் வரலாறு: ஐயப்பனின் ஆயுதமாக இருப்பது வில். ஐயப்பனை வில்லாளி என்று நாட்டுப்புறப்பாடல்கள் நமக்கு அறிமுகப்படுத்துகின்றன. ஐயப்பன்பாட்டு, பொன்னம்பலப்பாடல், பந்தளசேவம், வாவரங்கம், குத்திசேவம், இடிவதரசேவம், புலிப்பால் சேவம், பாண்டிசேவம் என்று பலவிதமான நாட்டுப்புறப்பாடல்களின் ஐயப்பசுவாமியின் வரலாறு கூறப்பட்டுள்ளது. இப்பாடல்கள் அனைத்திலும் ஐயப்பனை ஒரு மனிதனாகவே காணமுடிகிறது. கடவுளாக ஐயப்பனைப் போற்றும் பூதநாத புராணத்தில் இருந்து இந்நாட்டுப் புறப்பாடல்கள் முற்றிலும் வேறுபட்டவை. இந்நாட்டுப்புறப்பாடல்களில் ஐயப்பன் பந்தள நாட்டில் வாழ்ந்த வீரனாகச் சித்தரிக்கப்படுகிறார்.அவருக்கு உதவியாக வாவர், கடுத்தசுவாமி இருந்தனர். உதயணன் என்னும் கொள்ளையன் மற்றும் சோழமன்னர்களிடம் இருந்து பந்தளநாட்டு மக்களைக் காப் பாற்றினார் ஐயப்பன். இந்த வீரனையே தர்மசாஸ்தாவின் அவதாரமாக மக்கள் போற்றி வணங்குகின்றனர். காக்கும் கடவுள் விஷ்ணுவின் மாயாசக்திக்கும், அழிக்கும் கடவுளான சிவபெருமானுக்கும் பிறந்த பிள்ளையே சாஸ்தா. பிரம்மஞானம் என்னும் நூல், இக்கலியுகத்தில் தர்மத்தை நிலைநாட்ட வந்த அவதாரம் இது என்று குறிப்பிடுகிறது. கைம்மாறு கருதாமல் சேவை செய்து, உயிர்களைக் காப்பதை தன்னுடைய குறிக்கோளாக தர்மசாஸ்தா ஏற்று அமர்ந்திருக்கிறார். சைவசமயத்தின் முழுமுதற்பொருளான சிவமும், வைணவத்தின் முழுமுதல் பொருளான மகாவிஷ்ணுவும் இணைந்த அவதார என்பதால் ஐயப்பனை விட உயர்ந்த அவதாரம் உலகில் கிடையாது என்பர்.

ஐயப்ப வழிபாட்டில் மதபேதம் இல்லை

சாமி திந்தக்கதோம் ஐயப்ப திந்தக்கதோம் என்னும் கோஷத்தோடு பாட்டு பாடி ஆடும் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி ஐயப்பன் கோவிலில் தனிச்சிறப்பு மிக்கதாகும். ஐயப்பசுவாமி மகிஷி என்னும் அரக்கியைக் கொன்ற வெற்றியை அறிந்த எருமேலிவாசிகள் ஆடிய நடனமே பேட்டைத்துள்ளல். இந்த நிகழ்ச்சியை இரவு பகல் என்றில்லாமல் எந்நேரமும் பக்தர்கள் ஆடிப்பாடி மகிழ்வர். அப்போது, பல வண்ணப்பொடிகளை உடலெங்கும் பூசிக் கொள்வர். அம்பு, இலை, கம்புகளை ஏந்திக் கொண்டு கூட்டமாகச் செல்வர். மத ஒருமைப் பாட்டை நிலைநாட்டும் நிகழ்வாக இது அமைந்துள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் வாவர் மசூதிக்குச் சென்று காணிக்கை செலுத்தி வாவருக்கும், ஐயப்பனுக்கும் நன்றி செலுத்துகின்றனர். ஜாதிமத பேதம் அற்றவனே சரணம் ஐயப்பா என்னும் சரண கோஷத்துக்கு எடுத்துக்காட்டாக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது.

யாருக்கும் தெரியாமல் ஐயப்பன் கோயில் நடைதிறப்பது தெரியுமா?

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாத பூஜைகளுக்கு முந்தைய நாள், பக்தர்கள் இருப்பதில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு, அந்த நாளில் ஆயிரம் குடம் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்கின்றனர். இதற்கு சகஸ்ர கலசாபிஷேகம் என்று பெயர். ஒவ்வொரு மாதமும் இந்த அபிஷேகம் நடக்கும். இந்த பூஜையின் போது பலமுறை நடைதிறக்கவும், மூடவும் வேண்டி இருப்பதால் பக்தர்கள் வராத நாளை தேர்ந்தெடுத்து இந்த அபிஷேகத்தை நடத்துகிறார்கள். மதியவேளையில் இந்த அபிஷேகம் நடத்தப்படும். ஐயப்ப சுவாமியின் தெய்வீக அருளை அதிகப்படுத்துவதற்காக இவ்வாறு செய்கின்றனர். இந்த அபிஷேகம் நடத்த 3 மணி நேரமாகும்.

ஐயப்பனுக்கு எளிய உணவு: சபரிமலை தர்மசாஸ்தாவான ஐயப்பன் கோயில் நடை திறக்கும் நாட்களில் அவருக்கு செய்யப்படும் பூஜை, எளிய உணவு வகைகளைத் தெரிந்து கொள்வோமா! காலை 4மணிக்கு நடைதிறக்கப்பட்டதும், பிரதான புரோகிதரான தந்திரி முதலில் அபிஷேகம் செய்வார். பின்னர் கணபதிஹோமம் நடக்கும். கணபதி, நாகராஜாவுக்கு பாயாசம் படைக்கப்படும். பிரசன்னபூஜை முடிந்தபின் தீபாராதனை நடக்கும். மதியம் 12மணிவரை சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும். பின்னர் கோயில் சுத்தம் செய்யப்படும். 25 கலசங்களைக் கொண்டு தந்திரி மத்தியான பூஜை செய்வார். அரவணை பாயாசம் படைக்கப்பட்டு நடை சாத்தப்படும். மாலை 4மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு புஷ்பாபிஷேகம், தீபாராதனை நடக்கும். இரவு 10மணிக்கு நெய் அப்பமும், பானகமும் ஐயப்ப சுவாமிக்கு படைக்கப்படும். மீண்டும் கோயில் சுத்தம் செய்யப்பட்டு நடை சாத்தப்படும். இந்த சமயத்தில் ஐயப்பசுவாமி உறங்கச் செல்வதாக ஐதீகம். அப்போது உலகப்புகழ்பெற்ற பாடலான ஹரிவராசனம் பாடுவர்.

நெய்த் தேங்காயே நமது மனம்: இருமுடிக்கட்டில் இருக்கும் பொருள்களில் நெய்த்தேங்காய் முக்கியமானது. இந்த தேங்காயும், பக்தனின் மனமும் ஒன்று என்பது தான் இதன் தத்துவம். தேங்காயின் ஒரு கண்ணில் துளையிட்டு உள்ளிருக்கும் நீரை வெளியேற்றுவர். உலக ஆசைகள் ஒருவனுக்குத் தேவையில்லை என்று எண்ணி புறக்கணிப்பதைக் குறிக்கும். அத்தேங்காயில் நெய்யை ஊற்றுவது மனதில் தெய்வீக சிந்தனையை நிரப்ப வேண்டும் என்ற உண்மையைக் காட்டுகிறது. இந்த நெய்த்தேங்காயே சபரிமலை சந்நிதானத்தில் உடைக்கப்பட்டு சுவாமியின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படும். இறையருளை நம்மோடு கொண்டு வருவதன் அடையாளமாக இதில் சிறிதளவு நெய்யை வீட்டிற்குக் கொண்டுவருவர். இதனை வெறும் சடங்காக மட்டும் செய்யாமல் உள்ளப்பூர்வமாகச் செய்தால் நெய்தேங்காயோடு நம் மனமும் ஐயப்பனுக்குரிய அருட்தேங்காயாக மாறிவிடும் என்பதில் ஐயமில்லை.

பார்த்தாலும் பலன் உண்டு: ஐயப்பனுக்கு நடக்கும் பூஜைகளில் படிபூஜைக்கு சிறப்பிடம் உண்டு. இதற்கு நிலவிளக்கு, கற்பூரம், பத்தி, பூமாலை, பட்டுவஸ்திரம், தேங்காய், தந்திரி, மேல்சாந்தி, உதவியாளர்களுக்கு புது வஸ்திரங்கள் தர வேண்டும். நினைத்தது நினைத்தபடி நிறைவேற இப்பூஜையைப் செய்கின்றனர். அதிகச் செலவாகும் இப்பூஜையைப் பார்த்தவர்களுக்கும் நற்பலன் உண்டாகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்பூஜை நடந்து வந்தது. தற்போது மண்டல பூஜை, மகரவிளக்கு காலம் தவிர, நடைதிறக்கப்படும் மாத பூஜை நாட்களில் நடத்தப்படுகிறது. ஐயப்பனின் முன்னோர் தமிழகத்தில் வாழ்ந்தனர். இவர்கள் செம்பழஞ்ஞி குடும்பத்தினர் என அழைக்கப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் தான் இக்குடும்பம் வசித்து வந்தது. செல்வாக்கு மிக்க இக்குடும்பத்தை தஞ்சையை ஆண்ட சோழமன்னர்கள் புறக்கணித்ததோடு போரும் தொடுத்தனர். பகைமை விரும்பாத செம்பழஞ்ஞி குடும்பமும் தென்காசிப்பகுதியில் குடிபுகுந்தது. ஆனாலும், பகைமன்னர்கள் விட்டுவிடுவதாக இல்லை. மீண்டும் விரட்டினர். சிறிது காலத்திற்குப் பின், கேரளாவில் உள்ள கோந்தி என்னும் இடத்தில் குடியேறினர். அங்கேயும் சோழனின் நெருக்கடி தொடர்ந்தது. பாதுகாப்புக்காக பந்தளம் வந்து சேர்ந்தனர். பந்தளத்தில் இவர்களை பந்தளராஜா குடும்பத்தினர் என்று மக்கள் அழைத்தனர். அப்பெயர் இன்றும் ஐயப்பசுவாமிக்கு இருப்பதை அறியலாம். தங்கள் பகுதியான தென்காசி முதல் கோந்திவரையில் உள்ள பகுதியில் தங்களின் உரிமையை நிலைநாட்டிட விரும்பினர். இந்த சந்தர்ப்பத்தில் உதயணன் என்ற கொள்ளைக்காரனின் அட்டகாசமும் இப்பகுதியில் அதிகரித்து வந்தது. இந்த அடக்குமுறைக்கு முடிவுகட்டிட மணிகண்டன் அவதரித்தார். உதயணனை வென்றதோடு, கோட்டை கொத்தளங்களை அமைத்து பந்தளநாட்டைப் பலப்படுத்தினார். எரிமேலி முதல் சபரிமலை வரையிலுள்ள பகுதி இன்றும் ஐயப்பனின் சாம்ராஜ்ஜியமாகத் திகழ்கிறது.

ஐயப்பனின் உதவியாளர்: ஐயப்பசுவாமியின் உதவியாளர்களில் வாபரைப் பற்றி பலரும் அறிந்திருப்போம். ஆனால், வெளுத்தச்சனைப் பற்றி ஒருவருக்கும் தெரிவதில்லை. ஆனால், ஐயப்பனுக்குரிய சரணத்தில் ஆர்த்துங்கல் பள்ளியே சரணம் ஐயப்பா என்றொரு வரி உண்டு. அது ஐயப்பனின் உதவியாளரான புனிதசெபஸ்பதியனைக் குறிக்கிறது. இவரை வெளுத்தச்சன் என்று ஐயப்ப வர்ணனைகளில் குறிப்பிடுவர். ஆலப்புழை மாவட்டத்திலுள்ள ஆர்த்துங்கல்லில் இவருக்கு கோயில் உள்ளது. இப்பகுதி மக்கள் ஆர்த்துங்கல் சென்று காணிக்கை செலுத்திய பின்னரே, சபரிமலைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

கோட்டைக்குள் ராஜா: சபரிமலை காடு முழுவதும் ஐயப்பனின் அருளாட்சி நடந்து வருகிறது. இப்பகுதியை ஐயப்பனின் பூங்காவனம் என்று குறிப்பிடுவர். எரிமேலியில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள பேரூர்த்தோடு என்னும்   இடத்தில் இருந்து பூங்காவனம் ஆரம்பமாகிறது. இங்கிருந்து ஏழு கோட்டைகளைக் கடந்தால் தான் ஐயப்ப தரிசனம் கிட்டும். கோட்டபுறம், காளைகெட்டி, உடும்பாறமலை, கரிமலை, சபரிபீடம், சரம்குத்தி, திருப்படி என்பவையே அந்தக் கோட்டைகள்.

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

திருஷ்டி கழிக்க என்ன செய்ய வேண்டும்?

திருஷ்டி என்பது மற்றவர்களின் தீய எண்ணங்களால் நாம் சூழப்பட்டிருப்பது. த்ருஷ் எனில் பார்த்தல். நம்மை சிலர் நோக்கும்போது நமது வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொண்டார்கள் எனில் அவை நம்மை தாக்கக்கூடும். தற்காலத்தில் உளவியல் அறிஞர்கள்கூட பாசிட்டிவ் திங்கிங், நெகட்டிவ் திங்திங் என எண்ணங்களின் தன்மைகளைப் பிரித்து இருக்கிறார்கள். மற்றவர்கள் இப்படித்தான் நினைக்கவேண்டும் என்று நாம் கட்டளை இடமுடியாது. எனினும், மழை பெய்தால் நாம் ஒரு குடையை பிடித்துக்கொண்டு நம்மை தற்காத்துக் கொள்கிறோமோ, அதுபோன்று நமது புருவ மத்தியில் தூய மஞ்சளினால் ஆன குங்குமத்தை வைத்துக் கொள்ளுதல், பெண்கள் சிறப்பாக மஞ்சள் தேய்த்து நீராடுதல், வீட்டு நிலைக்காலில் மஞ்சள் போன்ற மங்கள சின்னங்களை வைத்தல், பார்த்தவுடன் மற்றவர்களின் மனதில் மாற்று எண்ணம் வருவதுபோல் நமது வீட்டுவாசலில் பொம்மைகள், படங்கள் வைப்பது, பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சம்பழம் போன்றவற்றை வைப்பது இப்படி பல வழிமுறைகள் தீய த்ருஷ்டியை போக்குவதற்கும், நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் நாம் பயன்படுத்தி வருகிறோம். இவற்றில் ஒன்றுதான் மேலே குறிப்பிட்டுள்ளது.

தந்திர சாஸ்திரங்களிலும் பெரியோர்களின் பழக்க வழக்கங்களினாலும் அந்தந்த ஊர்களில் இருக்கக்கூடிய வழக்கங்களிலும் உள்ளவற்றைக் கடைப்பிடிக்கலாம். இவற்றைத் தவிர நாம் முக்கியமாகக் கொள்ள வேண்டியது கடவுளின் மீது முழு நம்பிக்கை வைத்து நாம் மற்றவர்கள் மீது பொறாமைப்படாமல் இருப்பது, எண்ணம் போல் வாழ்வு என்பதுபோல் நாம் தூய எண்ணத்துடன் நமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டோமானால் சூரியனைக் கண்ட பனி போல எப்படிப்பட்ட தீய சக்திகளும் நம்மை அண்டாத வண்ணம் கடவுள் நம்மைக் காப்பாற்றுவார்.
__________________________________________________________
பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்

பல்வேறு புராண சம்பவங்கள் ஹரியும், சிவனும் ஒன்றே என்று நமக்கு உணர்த்துகின்றன. திருமாலின் இருதய மத்தியில் என்றும் நீங்காமல் சிவன் இருக்கிறார் என்று தைத்திரிய ஆரண்யம் என்ற நூல் கூறுகிறது. சிவபெருமான்  கைலாயத்தில் எப்போதும் ராமநாமாவை சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்று விஷ்ணு சகஸ்ரநாமம் கூறுகிறது. திருமால் பத்து அவதாரங்கள் எடுத்தார். இந்த பத்து அவதாரங்களில் பெருமாள் சிவபிரானை பூஜித்ததற்கு பல சான்றுகள் உள்ளன. அவற்றின் தொகுப்பே இது.

01. மச்சாவதாரம்

சோமுகாசுரன் வேதங்களை  திருடிச்சென்று, கடலுக்கடியில் ஒளிந்துகொண்டபோது, திருமால் பெரிய சுறா மீனாக உருவம் தாங்கி, கடலுக்கடியில் சென்று, அவனை சம்ஹாரம் செய்து, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார். பிறகு மீன் உருவத்துடன் கடலுக்கடியில் சென்று மகிழ்ச்சியில் கடலை கலக்கி விளையாடினார். இந்த செயலால் உலகம் துன்பமடைந்தது. அப்போது சிவபெருமான் பெரிய கொக்கு வடிவமெடுத்து திருமாலுக்கு தன் தவறை உணர்த்தினார். திருமால் மத்ஸ்ய (மீன்) உருவத்துடன் பல காலம் சிவபூஜை செய்ததாக வரலாறு கூறுகிறது. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் முன் உள்ள 16 கால் மண்டபத்தில் உள்ள தூணில் பெரிய கொக்கு வடிவில் சிவபெருமானும், அவருடைய அலகில் சிக்கிக்கொண்டு மீன் உருவத்தில் வழிபடும் பெருமாளையும் காண்கிறோம். திருமால் மீனாக அவதாரம் எடுத்து சிவனை வழிபட்டதால் இக்கோயில் இறைவன் மச்சேஸ்வரர் எனப்படுகிறார். கும்பகோணம் அருகிலுள்ள தேவராயன்பேட்டை என்ற ஸ்தலம் முன்னாளில் சேலூர் (சேல் - மீன்) என்று அழைக்கப்பட்டது. அங்குள்ள சிவபெருமானையும் மீன் வடிவ திருமால் வணங்கியதால், இறைவன் மச்சேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

02. கூர்மாவதாரம்

திருப்பாற்கடலை தேவர்களும், அசுரர் களும் கடைந்தபோது, மத்தாக இருந்த மந்திரமலை கடலுக்கடியில் மூழ்காமல் இருக்க ஆமை (கூர்மம்) அவதாரம் எடுத்து தன் முதுகில் தாங்கினார் திருமால். ஆமை வடிவம் கொண்ட பெருமாள், மலையை தாங்கும் வல்லமையை தர சிவபெருமானை வேண்டினார். இதற்காக, காஞ்சிபுரத்திலுள்ள திருக்கச்சூர் சிவன் கோயிலில் ஆமைமடு என்ற தீர்த்தம் உண்டாக்கி பூஜித்ததாக தல வரலாறு கூறுகிறது. இங்குள்ள விநாயகர் சன்னதி விதானத்தில் திருமால் ஆமை வடிவில் சிவபூஜை செய்வது சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. முருங்கை மரத்தின்கீழ் ஜோதி வடிவாக விளங்கும் சிவலிங்கத்தை பெருமாள் ஆமை வடிவத்தில் வழிபட்டதால் இந்த சிவபெருமானுக்கு கச்சபேஸ்வரர் (கச்சபம் - ஆமை) என்ற பெயர் ஏற்பட்டது.

03.வராக அவதாரம்

இரண்யாட்சன் என்ற அசுரன் பாதாள லோகத்தில் இருந்தபடி தேவர்களைத் துன்புறுத்த பெருமாள் வராக அவதாரமெடுத்து  பூமியை தோண்டி அங்கு சென்று அவனை அழித்தார். கோபம் நீங்காத அவரை சிவபெருமான் சாந்தப்படுத்தினார். சிவ தரிசனத்தால் சினம் தணிந்த பெருமாளுக்கு  சிவபெருமான் அருள் புரிந்த தலமே திருப்பன்றிக்கோடு (வராகம் - பன்றி) ஆகும்.  இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.

04.நரசிம்மஅவதாரம்

தன் பக்தனான பிரகலாதனை இரண்யனிடமிருந்து காப்பாற்ற நரசிம்ம அவதாரம் எடுத்து பெருமாள் வெளிப்பட்டார். இரண்யனைக் கொன்றார். அவரது உக்கிரத்தைத் தணிக்க, அதனினும் மேற்பட்ட உக்கிரத்துடன் சிவபெருமான் சரபேஸ்வரராக வடிவெடுத்தார். காஞ்சிபுரத்தில் தாமல் என்ற பகுதியில், நரசிம்மர் வழிபட்ட நரசிம்மேஸ்வர சிவாலயம் உள்ளது. புதுச்சேரி அருகிலுள்ள வில்லியனூர் தலத்தில் நரசிம்மர் வழிபட்ட காமீஸ்வரர் என பெயர் கொண்ட சிவபெருமானை தரிசிக்கலாம்.

05.வாமன அவதாரம்

மலை நாட்டை ஆண்ட மகாபலியின் ஆணவத்தை அடக்க அவனை குள்ள அந்தணன் (வாமனன்) வடிவெடுத்து திருமால் முக்தி கொடுத்தார். அவனை காலால் அழுத்தி பாதாள லோகம் அனுப்பிய பாவம் தீர பெருமாள் வழிபட்ட சிவத்தலம் கடலூர் அருகிலுள்ள திருமாணிக்குழியாகும்.

06.பரசுராம அவதாரம்

ஜமதக்னி என்ற முனிவரின் மகனாய் பிறந்து, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற தத்துவத்தை உணர்த்த, தன் தாயின் தலையையே கொய்து, அவளுக்கு மீண்டும் உயிர் வரம் கேட்ட அவதாரம் பரசுராம அவதாரம். இந்த அவதாரத்தில் மன்னர்களின் செருக்கையும் அடக்கினார் திருமால். திருமால் பரசுராமராய் பூஜித்த சிவத்தலங்கள் பெரம்பலூர் மாவட்டம் அரியலூர் அருகிலுள்ள பழுவூர் மற்றும் மயிலாடுதுறை அருகே உள்ள திருநின்றியூர் ஆகும்.

07.ராமாவதாரம்

ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை உணர்த்தவும், பெற்றவர் சொல் கேட்டு நடக்கவும், அநியாயத்தை எப்பாடுபட்டேனும் வேரறுக்கவும், சிவ பக்தனாயினும் காமத்திற்கு அடிமைப்பட்ட அரக்கனை அழிக்கவும் திருமால் எடுத்த அவதாரம் ராமாவதாரம். ராம நாமத்தை சிவனே  உச்சரிக்கிறார் என்பதும் வரலாறு. அவரே அனுமானாக உருவெடுத்து, ராவணனை அழிக்க திருமாலுக்கு உதவினார் என்பதும் செவிவழிச் செய்தி. திருமால், ராமாவதார காலத்தில் சிவனுக்காக சேதுக்கரையில் ஒரு தலமே உருவாக காரணமாக இருந்தார்.  சிவலிங்கம் சமைத்து பூஜித்தார். அதுவே ராமேஸ்வரம் ராமநாதர் கோயிலாகும். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்திலுள்ள சிவனை ராமர் வழிபட்டதாக கூறப்படுவதால் அவர் ராமலிங்கேஸ்வரர் எனப்படுகிறார்.

08. பலராம அவதாரம்

திருமால் கிருஷ்ணாவதாரம் எடுக்கும் முன்பு, அவரது சயனமான ஆதிசேஷன் பலராமனாக உருவெடுத்ததாகவும், திருமால் அதனைக் கவுரவிக்க தன் அண்ணனாக உருவெடுக்கச் செய்தார் என்பதும் பலராம அவதாரத்தின் வரலாறு. காஞ்சிபுரத்தில் பலராமர் வழிபட்ட சிவன் கோயில் பலபத்ர ராமேஸ்வரம் என பெயர் கொண்டதாகும். திருமறைக்காடு எனப்படும் வேதாரண்யம் (நாகப்பட்டினம் மாவட்டம்) அருகிலுள்ள கோடியக்கரை குழகர்கோயில் பலராமர் வழிபட்ட தலமாகும்.

09.கிருஷ்ண அவதாரம்

கண்ணன் தனது சிவயோக மகிமையால் சிவபெருமானாகவே இருந்து, குரு÷க்ஷத்ர யுத்தத்திற்கு காரண பூதராய் அழித்தல் தொழிலை செய்ததாக பாகவதம் கூறுகிறது. மேலும் கண்ணன் தன் வினைகள் தீர, திருவீழிமலை (திருவாரூர் மாவட்டம்) மற்றும் திருவிடை மருதூர் (தஞ்சாவூர் மாவட்டம்) சிவபெருமானை பூஜித்த தலங்களாக கூறப்படுகிறது.
வீட்டிற்குள் நுழையக்கூடாத ஆமை எது தெரியுமா?

ஆமைகள் நாம் குடியிருக்கும் வீட்டிற்குள் வரக்கூடாது, அதேபோல், ஆமை நுழைந்த வீடு உருப்படாது என்றெல்லாம் சொல்வதுண்டு. இதில் ஆமை என்பது ஏதோ ஒரு உயிரினத்தைக் குறிப்பதல்ல. கல்லாமை, இல்லாமை, பொறாமை போன்ற ஆமைகள் வீட்டிற்குள் வரக்கூடாது என்பதைத் தான் இப்படி குறிப்பிட்டனர். தெய்வப்புலவர் திருவள்ளுவர், ஆமையாக மாறும்படிநம்மிடம் வேண்டுகோள் விடுக்கிறார். ஒருமையுள் ஆமைபோல் என்னும் குறளில் ஆமைபோல ஐம்புலனையும் அடக்கி ஆளச் சொல்கிறார். ஒருபிறவியில் இதனைக் கற்றுக் கொண்டால் ஏழேழு பிறவிக்கும் நம்மைப் பாதுகாக்கும் என்கிறார். எதிரியிடம் இருந்து தன்னைப் பாதுகாக்க, தலை, முன்னங்கால்கள், பின்னங்கால்கள் ஆகிய ஐந்தையும் ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வது ஆமை. அதுபோல, கண், காது, மூக்கு, வாய். உடல் என்னும் ஐந்தையும் அடக்கி வாழ்பவன் வாழ்வில் உயர்வது உறுதி. ஆமையின் சிறப்பை உலகிற்கு உணர்த்தும் விதத்தில் திருமால் கூர்மாவதாரம் எடுத்து தேவர்களைக் காத்தருளினார். அவரை வழிபட்டவர்க்கு மன அடக்கம், புலனடக்கம் ஆகிய நற்பண்புகள் ஏற்படும்.
அந்த ஒருவர் நீங்களா?

அந்தக் காலத்தில் மாதம் மும்மாரி மழை பொழிந்ததாகச் சொல்வர். இந்த மும்மாரி பெய்தது என்பதற்கான பழம் பாடல் ஒன்றுண்டு. அது என்ன தெரியுமா?..

வேதம் ஓதும் வேதியர்க்கோர் மழை
நீதி மன்னர் நெறியினர்க்கோர் மழை
மாதர் கற்புடை மங்கையர்க்கோர் மழை
மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே

மூதுரை என்னும் நூலில், நெல்லுக்கு பாய்ச்சிய நீர் புல்லுக்கும் பாய்வது போல, ஊரில் ஒரு நல்லவர் இருந்தாலும் போதும் அவருக்காகவே மழை பொழியும். அதன் பயன் எல்லா உயிர்களுக்கும் கிடைக்கும், என்கிறார் அவ்வையார். அந்த ஒருவராகும் முயற்சியில் நாம் ஒவ்வொருவரும் இருக்கவேண்டும் என்பதே அவரின் எண்ணம்.
14 உலகங்களில் வசிப்பவர்கள் யார் தெரியுமா?

இறைவன் ஏழு உலகங்களை உருவாக்கி இருக்கிறாராம். சத்தியலோகத்தில் பிரம்மன், தபோலோகத்தில் தேவதைகள், ஜனோலோகத்தில் பித்ருக்கள், சொர்க்கத்தில் இந்திரன் முதலான தேவர்கள், மஹர்லோகத்தில் முனிவர்கள், புனர்லோகத்தில் கிரகங்கள், நட்சத்திர தேவதைகள், பூலோகத்தில் மனிதர்கள், விலங்குகள் வசிக்கின்றனர். இவையெல்லாம் பூமிக்கு மேலிருப்பவை. பாதாளத்திலும் இதே போல ஏ ழு லோகங்கள் உண்டு. இதனால் தான் அசுரர்கள் ஈரேழு 14 லோகங்களையும் அடக்கியாண்டதாக புராணங்களில் சொல்லப்படும். கீழுள்ள அதல, விதல லோகங்களில் அரக்கர்கள், சுதல லோகத்தில் அரக்கர் குலத்தில் பிறந்தாலும் உலகளந்த நாயகனால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி, தலாதல லோகத்தில் மாயாவிகள், மகாதல லோகத்தில் புகழ்பெற்ற அசுரர்கள், பாதாள லோகத்தில் வாசுகி முதலான பாம்புகள், ரஸாதல லோகத்தில் அசுர ஆசான்கள் வசிப்பதாக நம்பிக்கை.
மார்கழி வழிபாடும் அதன் சிறப்பும்!

மார்க்கசீர்ஷம் என்ற வடமொழிச் சொல்லே தமிழில் மார்கழி ஆனது. மார்க்க என்றால் வழி. சீர்ஷம் என்றால் மேலான. ஆக, மார்கழி என்றால் மேலான வழி எனப்பொருள். பக்தியே மேலான வழி. அதிலும், இறைவனைச் சரணடைந்து விடுதல் மிக மிக உயர்ந்த வழி. ஆண்டாள், பெருமாளைச் சரணடைந்து தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினாள். அதற்காக, முப்பது நாள் நோன்பிருந்தாள். தான் மட்டுமின்றி, மற்றவர்களும் இறைவனை அடைய வேண்டும் என்ற மேலான நோக்கில், தோழியரையும் நோன்பிருக்கும்படி வற்புறுத்தினாள். பக்தி மட்டுமின்றி பொதுநலமும் மேலான வழி என்பதை இம்மாதம் நமக்கு எடுத்துரைக்கிறது.
பலகோடி மடங்கு பலன் தரும் பாதரச லிங்கம்!

கோடிக்கணக்கான சிவலிங்கங்களை பூஜிப்பதால் கிடைக்கும் பலன்களைவிட, பாதரச லிங்கத்தை பூஜிப்பதன் மூலம் பல மடங்கு பலன்களை எளிதில் பெற முடியும் என்கின்றன சாஸ்திர புராணங்கள்.  பிரம்மபுராணத்தின் கருத்துப்படி, மனதிலுள்ள ஆசைகளையெல்லாம் பூர்த்தி செய்யும் பாதரச லிங்கத்தை பூஜிக்கும் மனிதன் தன்யனாகிறான். யார் வேண்டுமானாலும் பாதரச லிங்கத்தை பூஜித்து எல்லா பவுதிக சுகங்களையும் அனுபவித்து, பரமபதத்தை அடைய முடியும். பிரம்மவைவர்த்த புராணம் சொல்லுவது என்னவென்றால் பாதரலிங்கத்தை விதிப்படியும் முறைப்படியும் ஒரே ஒரு முறை பூஜிப்பவர்கள்கூட சூரிய சந்திரர்கள் இருக்கும் வரை அளவில்லா சுகத்தைப் பெற முடியும்!

சிவ நிர்ணய ரத்னாகரம் என்ற நூலின் கருத்துப்படி கல்லாலான சிவலிங்கத்தை பூஜிப்பதைவிட கோடி மடங்கு நற்பலன், தங்கம் வேயப்பட்ட சிவலிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கும். அதைவிட பன்மடங்கு பலன் ரத்தினங்கள் பதித்த லிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கும். ஆனால் அதைவிட பலப்பல மடங்கு பலன், பாதரச லிங்கத்தின் பூஜை அல்லது தரிசனத்தாலேயே கிடைக்கும். பாதரச லிங்கத்தைவிட உயர்வான சிவலிங்கம் உலகில் இருந்ததுமில்லை; இருக்கப்போவதுமில்லை!

சிவபுராணத்தின் கூற்றுப்படி, பசு வதை செய்த பாவியும், நன்றிகெட்ட மனிதனும், வீரனைக் கொலை செய்தவனும், கர்ப்பத்தலுள்ள சிசுவைக் கொன்றவனும், தாய் தந்தையரைக் கொன்றவனும்கூட, பாதரச லிங்கத்தை பூஜித்து வந்தால், எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு, முக்தியை அடைய முடியும்! வாய்விய சம்ஹிதையின் கருத்துப்படி நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வரியம் மற்றும் நம் வாழ்வில் வேண்டுவதையெல்லாம் பெறுவதற்கு ஒரே சிறந்த சுலபமான வழி பாதரச லிங்கத்தை பூஜித்து வழிபடுவதுதானாம். பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களை தரிசித்தவரைவிட, பாதரசலிங்கத்தை தரிசித்த அதிர்ஷ்டசாலியையே நான் அதிகம் விரும்புகிறேன்! என்று சிவபெருமானே சொல்லியிருக்கிறார்!

சர்வதரிசன சங்கிரகம் என்ற நூலில் பாதரசத்தை திடப்பொருளாக்கி, அதை லிங்கமாக்கி பூஜிப்பவர்களுக்கு, எப்போதுமே மரணபயம் இருப்பதில்லை. தவிர எந்த ஒரு காலத்திலும் அவர்கள் வீட்டில் வறுமை எட்டிப் பார்ப்பதில்லை என்று சிவபெருமான் பார்வதியிடம் கூறியிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ரசார்ணவ தந்திரம் என்ற நூலின் கருத்துப்படி எந்த ஒரு மனிதனும் ஒரே ஒருமுறை பாதரசலிங்கத்தை பூஜித்து விட்டாலே போதும், அவனுக்கு வாழ்கையில் அறம், பொருள், இன்பம், வீடு என்ற சித்திகள் கிடைத்துவிடுகின்றன. பிரசித்திபெற்ற ஆயிரம் லிங்கங்களை பூஜிப்பதால் கிடைக்கும் பலனைவிடக் கோடி மடங்கு நற்பலன், பாதரச லிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கிறது.

ரசசமுச்சயம் என்ற நூலில், பாதரசலிங்கத்தைத் தொடர்ந்து ஆராதித்து வருவதால், எல்லாவித நோய்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது. வயதான காலத்தில், மனிதனை நோயின்றி வைத்துக் கொள்வதற்கு வேறெந்தத் தரவரத்திற்கோ, உலோகத்திற்கோ சக்தியில்லை. ஏனெனில் அவை எல்லாமே தண்ணீரில் கரைந்து போகக்கூடியவை; வெப்பத்தால் காய்ந்து போகக்கூடியவை. ஆனால் பாதரசம் ஒன்றுதான் எதனாலும் பாதிக்கப்படுவதில்லை.

பாதரசத்தை விசேஷச் செயல்பாடுகள் மூலம் திடபதார்த்த மாக்குவதால், அது அமிர்தமாகி விடுகிறது. அப்படி திடப்படுத்தப்பட்ட பாதரசத்தில் சிவலிங்கத்தை உருவாக்கி, அந்த லிங்கத்தை வழிபடும் பக்தர்களுக்கு கல்வி, அறிவு, செல்வம், சொத்து, சுகம், அமைதி, செழிப்பு, ஐஸ்வர்யம், மக்களன்பு முதலிய எல்லாப் பலன்களும் தானாகவே வந்தடைகின்றன. பாதரசம் நோய்களை அகற்றி புத்துயிரும் புது இளமையையும் கொடுக்கிறது. அதோடு அஷ்டசித்திகளையும் நவநிதிகளையும் அளிக்கிறது. சாதாரணமாக பாதரசத்தில் அழுத்தங்கள் நிறைய இருக்கும். அதை புடம் போட்டு அசுத்தங்களை அகற்றிய பிறகுதான் அது திடபதார்த்தமாக்கப்படுகிறது. அதிலிருந்து வடிவமைக்கப்படும் சிவலிங்கம் முழுப் பலன்களையும் அளிக்கவல்லது. விதிமுறைப்படி தினந்தோறும் அனுஷ்டானங்கள் செய்து பூஜை, அர்ச்சனை, ஆரத்தி முதலிய சேவைகள் செய்து ஆராதிக்கக்கூடியவர்கள் மட்டும் பாதரச லிங்கத்தை வீட்டில் ஸ்தாபிக்க வேண்டும். வெறும் லிங்கத்தைக் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து விடுவதால் மட்டும் பலன் கிடைப்பதில்லை!
சாஸ்திரத்தை அனுசரியுங்கள்!

வாழ்க்கையானது, தர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது போல் அமைய வேண்டும். அப்படி அமைத்துக் கொள்வது நம் கையில் தான் உள்ளது. உலகில் பல மதங்கள் உள்ளன; ஒவ்வொரு மதத்திலும், சில கோட்பாடுகள் உள்ளன. அவைகளில் கூறியுள்ளபடி, ஒவ்வொரு மதத்தினரும் நடந்து கொள்ள வேண்டும். இந்து மதத்தில் ஏராளமான சாஸ்திர சம்பந்தமான விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் அனுசரிக்க முடியா விட்டாலும், ஒரு சிலவற்றையாவது அனுசரிக்க வேண்டும். பூஜா நேரத்தில் பட்டு வஸ்திரம் உடுத்திக் கொள்வது நல்லது. அதிலும், கரை போட்டதாக இருக்க வேண்டும். கரையில்லாத வஸ்திரம் எப்போதுமே உடுத்தக் கூடாது. வஸ்திரங்களில் கிழிசல், தையல் இருக்கக் கூடாது; இவைகளைப் பயன்படுத்தக் கூடாது. பூஜைக்கு மடி வஸ்திரம் உபயோகிக்க வேண்டும். புது வஸ்திரம் நல்லது. பட்டு வஸ்திரம் நனைக்காததாக இருந்தால், திரும்பத் திரும்ப உபயோகிக்கலாம். பூஜை முடிந்து சாப்பிட ஆரம்பிக்கும் முன், கை, கால் அலம்பி, மந்திரம் உச்சரித்து, சாப்பிடுமிடத்தை சுத்தம் செய்து, வடக்கு, கிழக்கு முகமாக உட்கார்ந்து வாழை இலை அல்லது வெள்ளித் தட்டில் சாப்பிடலாம். தையல் இலை மற்றும் சில இலைகளில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும்போது, வீண் வம்பு பேச்சு பேசாமல், அன்னத்தை நிந்திக்காமல், பகவத் தியானத்தோடு சாப்பிட வேண்டும். அந்த சமயத்தில், வீட்டில் அவசப்தம், அழுகைக் குரல் போன்றவை கூடாது. சாப்பிடுவது நம் சரீர பலத்துக்காக மட்டுமல்ல, நமக்குள் இருக்கும் பரமாத்மாவுக்கு, அர்ப்பணம் செய்யப்படுவதற்காகவும் தான். உத்தரீயம் இல்லாமல் ஒற்றை வேஷ்டியுடனோ, சட்டை அணிந்தோ, உடைந்த பாத்திரங்களிலோ, இலையின் பின்புறத்திலோ சாப்பிடக் கூடாது. சிலர் தாமரை இலையின் பின்புறத்திலும், வாழை மட்டையை சீவி பின்புறத்திலோ சாப்பிடுவதுண்டு; இது கூடாது. வெண்கலப் பாத்திரத்தில் சாப்பிடுவதோ, தண்ணீர் எடுத்து கை, கால் அலம்பவோ கூடாது. "என்ன சார்... இவ்வளவு சாஸ்திரங்கள் சொல்கிறீர்களே... அனுசரிக்க முடியுமா... என்று கேட்டால், சாஸ்திரத்தில் அப்படியுள்ளது என்ற பதில் தான் கிடைக்கும். முடிந்ததை அனுசரிக்கலாமே!