புதன், 19 செப்டம்பர், 2018

பகவான் பாடிய பகவத் கீதை!

பகவத் கீதா என்பதற்கு பகவான் பாடியது என்று பொருள். கீதம் என்றால் பாட்டு. கீதம் என்று சொல்லாமல் கீதா என்று சொன்னதன் காரணம் என்ன? கீதை உபநிஷத்துகளின் சாரம். உபநிஷத் என்பது பெண்பாலாக உள்ள வட சொல். ஆகவே, கீதா என்பதும் பெண் பாலில் இருப்பது; உபநிஷத்துகளின் மாற்று உருவமே கீதை என்பதைக் காட்டுகிறது. பாண்டவர்களை துரியோதனன் நாடு கடத்திவிட்டான். அவர்கள் வனவாசமும் அஞ்ஞாத வாசமும் செய்து திரும்பினார்கள். பிறகு, தம் ராஜ்ஜியத்தைத் தம்மிடம் ஒப்படைக்கும்படி கிருஷ்ண பகவானைத் துரியோதனனிடம் தூது அனுப்பினார்கள். ஆனால், பேராசை கொண்ட துரியோதனன், பாண்டவர்களுக்கு ஊசிமுனை இடம் கூட தரமாட்டேன் என்றான். இனி, யுத்தம் செய்தே நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்று பாண்டவர்கள் முடிவு செய்தார்கள். துரியோதனனும் அர்ஜுனனும் கண்ணபிரானின் உதவியைப் பெறுவதற்காக துவாரகைக்குச் சென்றனர். பகவான், நான் ஆயுதம் எடுப்பதில்லை. நிராயுதபாணியான நான் வேண்டுமா? அல்லது என் சேனை அனைத்தும் வேண்டுமா? என்று கேட்டார். துரியோதனன், அவருடைய சேனையே தனக்கு வேண்டும் என்றான். அர்ஜுனன், கண்ணபிரானின் உதவிதான் தேவை என்றான்.

யுத்தம் தொடங்க, இரு திறத்தாரின் சேனைகளும் அணிவகுத்து நின்றனர். கிருஷ்ணரின் ரதத்தில் அர்ஜுனன் அமர்ந்து, இரு பக்கத்து சேனையில் இருப்பவர்களையும் பார்த்தான். அவர்கள் எல்லோருமே தனது உறவினர்களாகவும் ஆசிரியர்களாகவும் இருப்பதைக் கண்டான். அவனுடைய மனம் கலங்கியது. எனக்குப் போர் வேண்டாம்; அரசு வேண்டாம்; போகங்கள் வேண்டாம்; என்றெல்லாம் பலவாறு வருந்தினான். அர்ஜுனனின் அந்த வருத்தமே, அர்ஜுன விஷாத யோகம் என்ற, பகவத்கீதையின் முதல் அத்தியாயமாக உருவெடுத்தது. இந்த அர்ஜுன விஷாத யோகமே, அடுத்துப் பதினேழு அத்தியாயங்களில் பகவான் சொல்லிய  உபதேசமான பகவத் கீதைக்கு வித்து போன்றது. வித்து என்றால் விதை. வித்தினால் வித் (ஞானோபதேசம்) உண்டாயிற்று. அர்ஜுனனை நிமித்தமாகக் கொண்டு பகவான் உபதேசித்த ஆத்ம ஞானத்தையே பகவத் கீதை என்ற பெயரால் நாம் போற்றுகிறோம். பகவத் கீதை என்பது தனிப் புத்தகமாக எழுதப்பெறவில்லை. மகாபாரதத்தில் பீஷ்ம பர்வம் 25-ஆம் அத்தியாயம் தொடங்கி 42-ஆம் அத்தியாயம் வரையிலான ஒரு பகுதியாகவே பகவத் கீதை அமைந்திருக்கிறது. பாரத: பஞ்சமோ வேத என்றபடி, பாரதம் ஐந்தாவது வேதம். வேதமோ ஞான காண்டம், கர்ம காண்டம் என்று இரு வகையாகப் பிரிந்திருக்கிறது. வேதத்தில் உள்ள ஞான காண்டம் போலவே, பாரதத்திலுள்ள பகவத் கீதை என்பதும் ஞான காண்டமாகும். வேதத்தில்  அந்த பாகத்தை உபநிஷத் என்கிறார்கள்.

ஆகவே, பகவத் கீதையைப் பெரியோர்களிடம் உபதேச ரூபமாக முதலில் கிரகித்து, அதன் பொருளையும் நன்கறிந்து தினந்தோறும் பாராயணம் செய்து வந்தால், சகல உபநிஷத்துகளையும் பாராயணம் செய்வதால் உண்டாகும் நற்பலன்கள் நமக்குக் கிட்டுவது உறுதி. பகவத் கீதைக்கு அன்று முதல் இன்று வரை எத்தனையோ உரைகள் எழுதியிருக்கிறார்கள். அவற்றை ஓரளவு மட்டுமே கணக்கிட்டு, மூவாயிரத்துக்கும் அதிகமான உரைகள் இருக்கின்றன. பகவத்கீதைக்கு சங்கரர், ராமானுஜர், மத்வாசாரியார் என்ற ஆசார்யர்கள் முறையாக எழுதிய பாஷ்யங்களையே உயர்ந்தவையாகவும் குருமூலமாக உபதேச முறையில் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டியவையாகவும் கருதிப் போற்றுகிறார்கள். ஸ்ரீ சங்கராசாரியர் அத்வைத சித்தாந்தத்தைப் பின்பற்றியும்; ஸ்ரீராமானுஜர் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தைப் பின்பற்றியும்; ஸ்ரீமத்வாசாரியர் துவைத சித்தாந்தத்தைப் பின்பற்றியும் கீதைக்கு பாஷ்யங்களை இயற்றியிருக்கிறார்கள். இவர்களுக்குப்பின் இந்த ஆச்சார்ய பரம்பரையில் வந்த சில மகான்கள், இந்த ஆச்சார்யர்களின் கீதா பாஷ்யங்களுக்கு டீகா என்ற விளக்க உரை எழுதியிருக்கிறார்கள். இந்த வைதீக சம்பிரதாய முறையிலான உரைகளைத் தவிர, சமஸ்கிருதத்திலும், கிரீக், ஜெர்மன், லத்தீன், ஆங்கிலம், பிரெஞ்ச், ருஷ்யன் முதலிய பல வெளிநாட்டு மொழிகளிலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராட்டி, வங்காளி, குஜராத்தி போன்ற நம் நாட்டு மொழிகளிலும் ஆயிரக்கணக்கில் பகவத் கீதைக்கு உரை எழுதியிருக்கிறார்கள். லோகமான்ய பால கங்காதர திலகர் எழுதிய கர்ம யோகம், மகாத்மா காந்தி எழுதிய அநாஸக்தி யோகம், ராஜாஜி எழுதிய கை விளக்கு ஆகிய கீதை உரைகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு நம் நாட்டிலும் பிற நாடுகளிலும் பகவத் கீதையின் மகிமையைப் பறைசாற்றுகின்றன.
ராமர் பட்டாபிஷேகம் எப்படி நடந்தது?

ஸ்ரீராமபிரானுக்கு பட்டாபிஷேகம் எப்படி நடந்தது? எத்தனையோ ராமயணங்கள் இருந்தாலும், அதில் வால்மீகி ராமாயணத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. அந்தக் காவியத்தில் ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடந்ததை வால்மீகி எப்படி வர்ணிக்கிறார்?

அதிகாலையின் அற்புதம் திவ்யமாக இருக்கிறது. மதுரமான இசையாலும், கருவிகளின் ஒலிகளாலும், தங்க ஆபரணங்கள் அணிந்து உத்தமப் பெண்களின் நாட்டியங்களாலும், தாங்கள் எழுப்பப்டுவதைக் கண்டு நாங்கள் சந்தோஷம் கொள்கிறோம்.  வானவீதியில் முழுமையான ஒளிக்கிரணங்களுடன் அனைத்து உலகுக்கும் தேஜஸையும் ஆயுளையும் வழங்கிக் கொண்டிருக்கும் நடுப்பகல் சூரியன் போன்று, தாங்கள் பட்டாபிஷேகப் பெரும் வைபவத்தோடு, சிம்மாசனத்திலிருந்து எங்கள் அனைவருக்கும் அருள்பாலித்து நலம் புரிவதைப் பார்த்துப் பார்த்து மகிழ்ச்சி கொள்கிறோம். பூமி உள்ள வரையிலும் தாங்கள் பரிபாலனம் நடத்த வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை! இவ்வாறாக பரதன், தலைமீது கரங்களைக் கூப்பியவண்ணமாக ஸ்ரீராமனிடம் வேண்டினான்.

பூஜிதா மாமிகா மாதா
தத்தம் ராஜ்யம் இதம் மம
தத் ததாமி புனஸ் துப்யம்
யதாத்வம் ததா மம

முன்பு எனக்கு அரசு தந்து என் தாயைப் போற்றினாய். அதை அப்படியே உனக்குத் தருகிறேன். பரதனின் சரணாகதியை அயோத்தி ராமனும் ஏற்றார். ஆசனத்தில் அமர்ந்தார். பட்டாபிஷேகத்துக்குரிய பணிவிடைகள் எல்லாம் சீராகத் தொடங்கின. ராம லக்ஷ்மண பரத சத்ருக்னார்களுடைய அலங்காரம் நடந்தேறியது. சீதாதேவிக்கு, தசரத பத்தினிகளே அலங்காரம் செய்தனர். வந்திருக்கும் வானரப் பெண்களுக்கும் அழகு செய்கிறாள் கௌசல்யை.

ததோ வானர பத்னீனாம்
ஸர்வாஸாமேவ சோபனம்
சகார யத்னாத் கௌஸல்யா
ப்ரஹ்ருஷ்டா புத்ரவத்ஸலா

சத்ருக்னருடைய ஆணையின் பேரில் இஷ்வாகு குலத்தின் தேரோட்டியான சுமந்திரர், கம்பீரமான குதிரைகள் பூட்டிய ரதத்தைக் கொணர்ந்தார். கதிரவன் போன்று ஒளிமயமாகக் காட்சிதரும் அந்த ரதத்தில் ஸ்ரீராமன் ஏறி அமர்ந்தார். சுக்ரீவனும் அனுமனும் உடன் சென்றனர். சுக்ரீவன் மனைவியும் சீதாபிராட்டியும், திவ்யமான அலங்காரத்துடன் அவர்களுடனே சென்றனர். ஸ்ரீராமனுக்கு சகல நலங்களும் சுகமும் தனமும் பெருகுவதற்கும், அயோத்தி நகரமும் அந்த நாடும் என்றும் மங்கலம் பெறுவதற்கும் உரிய சுப காரியங்களைச் செய்யுமாறு அனைவரும் வசிஷ்டரிடம் வேண்டினர். அமைச்சர்கள் பின்தொடர ஜய விஜயபீவ என்ற முழக்கம், ஜயகோஷமுமாகக் காற்றுடன் அலை மோதியது. ரகுராமனான, கல்யாண ராமனான, சீதா ராமனான, தசரத ராமனான, கல்யாண குனோஜ்வலனான, பித்ருவாக்ய பரிபாலனான, ஏக பத்னி விரதனான, சர்வஜன ரக்ஷகனான ஸ்ரீராமன் அயோத்தி நகரை நோக்கி வந்து கொண்டிருந்தார். மஞ்சள் கலந்த அட்சதையுடன் பிராமணர்களும் உடன் சென்றனர். பசுக்களும் கோலாகலத்தில் கலந்து சென்றன. குடிமக்களின் குதூகலம் பொங்க, ஸ்ரீராமன் அரண்மனைக்குள் அடியெடுத்து வைத்து, கௌசல்யாதேவி, சுமித்ரா தேவி, கைகேயி தேவி மூவரையும் நமஸ்கரித்தார். சத்ருக்னர், ராமருடைய அபிஷேகத்துக்காக சுக்ரீவனிடம் வானரர்களை அனுப்பப் பணித்தார். பொழுது புலரும் முன் வானரர்கள், ரத்னமும் தங்கமும் இழைத்த குடங்களில், கடலிலிருந்தும் நதிகளிலிருந்தும் புண்ணிய தீர்த்தத்தைக் கொணர்ந்தார்கள். ஜாம்பவான், அனுமன், வேகதர்சீ, சிஷபன் ஆகியோர் ஐந்நூறு நதிகளிலிருந்து புண்ணிய தீர்த்தத்துடன் வந்தார்கள். ஸுஷேணன், ரிஷபன், கவயன், நளன் நால்வரும் முறையே நாலா திசை சமுத்திரங்களிலிருந்தும் புனித நீரைக் கொணர்ந்தார்கள்.

பேரருள் பெற்றவரும் தசரத குல குருவுமான வசிஷ்ட மகரிஷி, புலன்களையும் புத்தியையும் சமன் செய்து, பிராமணர்களின் சம்மதத்துடன் ஸ்ரீராமனை ரத்தின ஒளிவீசும் சிம்மாசனத்தில் அமரும்படி செய்தார்.

ராமம் ரத்னமயே பீட
ஸஹஸுதம் ந்யவேசயத்

பட்டாபிஷேக வைபவம் பவித்திரமாகத் திகழ்ந்தது. வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காச்யபர், காத்யாயநர், ஸுயஜ்ஞர், கௌதமர், விஜயர் ஆகிய எட்டு மகா ஞானியர்களும் நிகழ்த்திய பட்டாபிஷேகம். எண்மரும் வேதச் சீர்மையுடன் மந்திரங்களை உச்சாடனம் செய்து ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை மணமிகுந்த திரவியங்கள் கலந்த புண்ணிய தீர்த்தத்தால் நெறிமுறைகளின்படி பட்டாபிஷேகத்தை நிறைவேற்றினார்கள். வானத்தில் திக்பாலர்களும் தேவகணங்களும் பேருவகை கொண்டார்கள். சத்ருக்னர் வெண்குடை பிடித்தார். சுக்ரீவன் வெண் சாமரம் வீசினார். வாயுபகவான் தங்கத் தாமரைகளாலான ஒளி கூடிய மாலைகளையும், ஒன்பது ரத்தினம் சேர்ந்த முத்து மாலையையும் கொணர்ந்தார். பூமி செழித்தது. மரங்களில் கனிகள் நிறைந்தன. பசுக்களையும், கன்றுகளையும், தங்க நாணயங்களையும், ஆபரணங்களையும் ஸ்ரீராமன் தானமாக வழங்கினார். சுக்ரீவனுக்குத் தங்க மாலையையும், அங்கதனுக்குத் தங்கத்தோள் வளைகளையும் வழங்கினார். சீதாதேவியிடம் சந்திரன் போன்று பிரகாசமான முத்துமாலையை வழங்கினார். பிராட்டியும் மணாளனின் விருப்பத்தை ஜாடையால் அறிந்து, அம்மாலையை அனுமனுக்கு அளித்தாள். விபீஷணர், ஸ்ரீரங்க விமானத்தைப் பெற்று லங்காபுரி சென்றார். தசரத குமாரனான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, குடிமக்கள் அனைவரையும் தமது குழந்தைகளாக நினைத்து பரிபாலனம் நடத்தி வந்தார். லக்ஷ்மணனை இளவரசாக இருக்கக் கோரினார். லக்ஷ்மணர் இசையவில்லை. பரதனுக்கு இளவரசுப் பட்டம் நிகழ்ந்தது. சிம்மாசனத்தைத் தாங்கி நிற்கிறான் அனுமன். அங்கதன் வாள் ஏந்த, பரதன் வெண்குடை தாங்க, மற்ற இரு சகோதர்களும் சாமரம் வீச, சீதையின் உவகை ஓங்க, வசிஷ்டர் மகுடம் சூட்டுகிறார். அச்வமேதம், வாஜபேயம் போன்ற யாகங்களைப் புரிந்து, ஸ்ரீராமன் ஆட்சி ராமமயமாகவே இருந்தது.
கோயிலில் கொடுக்கும் மலர்களை என்ன செய்ய வேண்டும்?

ஆலயங்களில் நமக்கு அளிக்கப்படும் மலர்கள் மற்றும் அனைத்து பிரஸாதங்களும் நிர்மால்யம் என போற்றப்படுகிறது. நிர்மால்யம் எனில் அழுக்கற்றது, தூய்மையானது. அவற்றில் இறைவனின் அருட்சக்தி நிறைந்து இருக்கும். அவற்றை வெறும் மலர் என்றோ அன்னம் என்றோ பார்க்கக்கூடாது. ரூபாய் நோட்டுக்கும் வெறும்தாளுக்கும் வேறுபாடு இருக்கிறதல்லவா. ரூபாய் நோட்டுக்களிலும் கூட அதனில் பதிக்கப்பட்ட எண்களைப் பொறுத்து மதிப்பு மாறுகிறது. இதுபோன்று ஒவ்வொரு கடவுளர்களின் பிரஸாதமும் ஒவ்வொரு சக்தி உடையது. அவற்றை நாம் பக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொண்டு, நமது நெற்றியிலும், இருதயத்திலும் வைத்து அந்த இறை அருள் நம்முள் உட்புகுவதாக எண்ணுதல் வேண்டும். பிறகு வீட்டில் பூஜை அறை இருப்பின் அங்கு வடக்கிலோ, வடகிழக்கு திசையிலோ ஒரு தாம்பாளத்தின் மீது வைத்துவிடல் வேண்டும். வீட்டில் பெண்கள் அவற்றிலிருந்து சிறிது எடுத்து பக்தியுடன் தலையில் வைத்துக் கொள்ளலாம். மறுநாள் காய்ந்த மலர்களை நீர்நிலைகளிலோ, மரங்களின் கீழோ வைத்திட வேண்டும். நமது வீட்டில் உள்ள இறை உருவங்களுக்குவேறு மலர்களை சார்த்துவது சிறந்தது.
முறைப்படி நடைபெறும் திருமணத்தின் சடங்குகளின் விபரம்!

நடைமுறையில் உள்ள மாங்கல்ய தாரணத்திற்குப்பின், மணமகன் தன் கீழ் நோக்கிய வலது உள்ளங்கையால், மணமகளின் மேல் நோக்கிய வலது கை ஐந்து விரல்களையும் சேர்த்துப்பிடிப்பது தான் பாணிக்ரஹனம்.

கைத்தலம் பற்றியவாறு அக்னிக்கு வடபுறத்தில் மணமகன் தன் இடது கையால், மணமகளின் கால் கட்டை விரலை பிடித்துக்கொள்ள வேண்டும். அன்னவளமை, உடல் வலிமை, விரதங்களில் சிரத்தை, சுகவாழ்க்கை, செல்வச்செழுமை, பருவ காலங்களில் தன்மை, யாகயக்யஞங்களால் பெருமை என்ற ஏழு பாக்கியங்களையும் விஷ்ணு எப்போதும் அளித்துக் காப்பாராக, என்று கூறி ஏழு அடி எடுத்து வைக்க வேண்டும். இதுவே ஸப்தபதி எனப்படும். இந்த ஏழுடிகளை கடந்து வந்து நாம் நண்பர்களாகி விட்டோம். இனி வாழ்நாள் முழுவதும் அன்புடனும் ஆதரவுடனும் இணைபிரிய மாட்டோம். இன்ப, துன்பங்களைப் பகிர்ந்து மனம் ஒன்றி வாழ்வோம் என்று மணமகன், மணப்பெண்ணிடம் உறுதி மொழி அளிக்கிறான்.
கல்வியில் சிறந்து விளங்க செல்ல வேண்டிய கோயில்!

தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும், கல்வியில் சிறந்து விளங்கவும் திருவாரூர் அருகில் உள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் உள்ள மதுரபாஷினிக்கு வழிபாடு செய்கின்றனர். சிவனுக்கு வெப்பமான நெற்றிக்கண் இருப்பதைப்போல், இத்தல அம்மன் மதுரபாஷினிக்கு சந்திரனைப் போல் குளிர்ச்சியான நெற்றிக்கண் இருக்கிறது. பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் எழுதப்பட்ட வந்தேமாதரம் தேசபக்திப்பாடலில் வரும் மதுரபாஷிநீம் என்ற வரிக்கு அடிப்படையான இவள், மனிதனுக்கு தேவையான 34 சவுபாக்கியங்களையும் தரும் ÷க்ஷõடாட்சர தேவியாக, ராஜராஜேஸ்வரியாக, கல்விக்கு அரசியாக அருளுகிறாள். இதனால் இத்தலம் வித்யாபீடமாகக் கருதப்படுகிறது. அகத்தியர் இவளை, ஸ்ரீசக்ர தாரிணி, ராஜசிம்மாசனேஸ்வரி, ஸ்ரீலலிதாம்பிகையே என புகழ்ந்து போற்றியுள்ளார். கல்வி மேல்படிக்க செல்லும் மாணவர்கள் இந்த அம்மனுக்கு தேன் அபிஷேகம் செய்து, அதனை சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி பெருகி அறிவாற்றல் வளரும். அதேபோல் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர்கள் மதுரபாஷினிக்கு தேன் அபிஷேகம், சிறப்பு அர்ச்சனை செய்து, அந்த தேனை குழந்தையின் நாவில் தடவி வேண்டிக்கொண்டு, பின்பு பள்ளிகளில் சேர்க்கும் நடைமுறையும் இங்கு உள்ளது.இதனால் குழந்தைகளின் கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. வாய் பேச முடியாதவர்கள், திக்கு வாய் உள்ளவர்கள் மதுரபாஷினி அம்மனை வழிபாடு செய்தால் விரைவில் சிறந்த பலன் கிடைக்கும் என்பது நிச்சயம்.

இருப்பிடம்: திருவாரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் 2 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.

போன்:  98947 81778, 99428 81778.
சித்ரகுப்தனின் அருள் பெற வேண்டுமா?

உலக மக்களின் கர்மபலன்களை நியாயம் தவறாமல் நிர்ணயிப்பவர் சித்ரகுப்தர் ஆவார். என்றும் பதினாறு சிரஞ்சீவியாக மார்க்கண்டேயர் இருப்பது போல், இவரும் பன்னிரண்டு வயது சிரஞ்சீவியாகத் திகழ்பவர். தேவ ஸ்வரூபர். பிரம்ம குரு. அனைத்து லோகங்களின் அமைப்பைப் பரிபாலனம் செய்பவர். உலகத்து உயிரினங்கள் அன்றாடம் செய்யும் பாவ புண்ணிய செயல்களைத் தொகுத்து தனது பதிவேட்டில் பதிய வைக்கும் தலையாய பணியைப் பொறுமையுடன் செயல்படுத்துபவர். மனிதர்கள் தங்களுக்குத் தானே ஆத்ம விசாரம் செய்துகொள்வதற்கு வித்திடுபவரும் இவரே! நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கும் கர்மவினைகளை இம்மியும் பிசகாமல் குறிப்பெடுப்பது அவ்வளவு எளிதா என்ன! சித்ரகுப்த மகராஜர் சாதாரணமாகக் கிரீடம் தரித்த தோற்றத்தில் காட்சியளிப்பார். மராட்டிய புண்ணிய புருஷர்களான ஏகநாதர், நாமதேவர் அணிந்திருப்பது போன்று துணியிலான தலைப்பாகையிலும் சிறப்புத் தோற்றத்தில் காட்சியளிக்கும் கோலமும் உண்டு.

உமாமகேஸ்வரரின் அருளால் தோன்றியவர்! பார்வதி தேவியின் ரூபமாகவும் பராசக்தியின் அவதாரமாகவும் அறியப்படும் இவர், தன் எட்டுக் கரங்களிலும் சித்தர்களை அமர்த்திக் கொண்டுள்ளதோடு, எட்டாவது கரத்தில் கார்க்கினி தேவியை அமுதக்கலசமாகவும் கொண்டு அன்ன வாகனத்தில், ஆயுர்தேவியின் சந்நிதானத்தில் தலைப்பாகை, எழுதுகோல் ஏட்டுடன் அமர்ந்திருக்கும் சிறப்புக் கோலத்திலும் சித்ரகுப்தரைத் தரிசிக்கலாம்! சித்ரகுப்தருக்கு பட்டுப் பீதாம்பரத் தலைப்பாகை வந்து சேர்ந்ததற்கு ஒரு சுவாரஸ்யமான பின்னணியும் உண்டு! ஒருமுறை பலகோடி ஜீவன்களின் கர்மவினைகளைக் கணக்கெழுதும் போது, அவருக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. அந்த வினைப்பயன் கணக்கில் பெரும் பகுதி தீவினையாகவே இருப்பதைக் கண்டு கலங்கினார். தனது எழுதுகோலால் புண்ணிய ஆத்மாக்களின் கணக்கை எழுதவே முடியாதோ? இது என்ன சோதனை? இப்படி ஒரு இக்கட்டில் சிக்கிக்கொண்டு விட்டோமே என வருந்தியவர், தன் தலையில் ஓங்கிக் குட்டிக்கொண்டார். அவ்வளவு தான்! தன் வேலையில் கண்ணும் கருத்துமாய் இருக்காமல் ஏன் விசாரப்பட வேண்டும் என இறைவன் நினைத்தாரோ என்னவோ, அவருக்கு ஒரு சோதனையை ஏற்படுத்தி வேடிக்கை பார்த்துவிட்டார். அழுத்திக் குட்டிக்கொண்டதில் சித்ரகுப்தருக்கு தீராத மண்டையிடி ஏற்பட்டுவிட்டது.

தாங்கிக்கொள்ள முடியாத வலியால் அவதிப்பட, தனது அன்றாட வேலையில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் கர்மங்கள் தேக்கமடைய, அனைத்து லோகங்களும் செயலிழக்க ஆரம்பித்தன. பதற்றமடைந்த சித்ரகுப்தர் ஸ்ரீகிருஷ்ணரை மானசீகமாகத் தொழுது வேண்டிக்கொண்டார். பரந்தாமன் மனமிரங்காமல் இருப்பாரா? சித்ரகுப்தர் முன் தோன்றினான் கேசவன்! சித்ரகுப்தா! தலைவலி ரொம்பப் பலமோ? என்று புன்முறுவலுடன் வினவிய மாயவனை அடிபணிந்த கணக்கர், பிரபோ! என்னை இந்த இக்கட்டிலிருந்து காத்தருளுங்கள் சுவாமி! என வேண்டினார். முறுவலித்த மாதவன், தன் இடையில் அணிந்திருந்த பட்டுப் பீதாம்பரக் கச்சையை அவிழ்த்து, சித்ரகுப்தரின் சிரசில் கிரீடமாக அணிவித்தார். அதுவரை வாடிய முகத்துடன் தென்பட்டவர், மனம் லேசாகிப் போனதை உணர்ந்தார். வாட்டியெடுத்த தீராத் தலைவலி, உடனே அகன்றது. தலைக்கு வந்த வலி, தலைப்பாகையை அணிவித்ததும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது! அகமகிழ்ந்த சித்ரகுப்தன், மாலவனைத் தொழுதுப் போற்றினார். இன்றிலிருந்து உன்னை வழிபடுவோருக்கு, தங்கள் குறைகளைக் களைந்து அவற்றை நிவர்த்தி செய்துகொள்ளும் பக்குவம் உண்டாகட்டும்! என்ற வரத்தை அருளினார் பரந்தாமன். மறுபடியும் கணக்கர் வேலையில் மூழ்கிவிட்டார் சித்ரகுப்தர். ஆகவே வேணுகானம் இசைக்கும் ஸ்ரீகிருஷ்ணரைத் தினமும் வழிபட்டால், சித்ரகுப்தரின் அருட்பார்வை நம்மீது பரவும் என்பது ஐதீகம்.
நவராத்திரி

ஒவ்வொரு காரியம் செய்வதற்கும் ஒரு சக்தி வேண்டும். கண் இருந்தால்தான் பார்க்க முடியும், குருடனால் பார்க்க முடியாது. காதுதான் கேட்கும், செவிடனால் கேட்க முடியாது. இப்படி ஒவ்வொரு பணி செய்வதற்கும் ஒரு சக்தி வேண்டும். இந்த சக்திகளுக்கெல்லாம் சக்தி அளிப்பவள் பராசக்தி. அந்த பராசக்திக்கு உருவம் கிடையாது. அது மின்சாரம் போல. காண முடியாது, உணரத்தான் முடியும். ஆனால் அதை பூரணமாக உணர விரும்பி உருவமாக அமைத்து வழிபடும் போது அதற்கு சில விசேஷ சக்திகள் கிடைக்கின்றன. அதை வைத்துத்தான் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்று மூன்று சக்திகளாக வழிபடுகிறோம்.

மனிதன் காலை எழுந்ததும் முதலில் தன் கரத்தை உற்றுப் பார்க்கவேண்டும். கையின் மேல்புறத்தில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், கீழே துர்க்கையும் கண்டு வணங்க வேண்டும் என்று சொல்வார்கள். மனித வாழ்வின் ஆதாரம் செல்வம். அதற்கு அதிபதியான மகாலட்சுமி முதலில், அந்த செல்வத்தை அறிந்து, உணர்ந்து, நல்வழியில் பயன் படுத்த அறிவு அவசியம். அந்தக் கல்வியின் நாயகியான சரஸ்வதி அடுத்து, இத்தனை இருந்தும் இதனைக் கட்டிக் காக்கும் பராக்ரமம், வீரம் வேண்டுமல்லவா? அடுத்ததாக துர்க்கை இருக்கிறாள் என்றும் இந்த வாக்கியத்தை விளக்கம் சொல்வார்கள். அப்படி, காலை எழுந்தவுடன் இந்த மூன்று சக்திகளையும் பிரார்த்தித்துக் கொண்டோமானால் வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய அத்தனை பலன்களும் மிகச் சுலபமாக நமக்குக் கிட்டுவிடும்.

இதைத்தான் அக்காலத்துப் பெரியோர்கள் தினம் செய்து வந்தார்கள். பிற்காலத்தில் இப்பழக்கம் மிகவும் குறைந்து பூஜை செய்வதோடு சரியென்று மாறி தற்போது அதுவும் அருகி வருகிறது. இப்போது ஏதூவது விசேஷங்களில் மட்டும் பூஜை செய்தால் போதும் என்று பலரும் கருதுகிறார்கள். அதையாவது ஒழுங்காகச் செய்யவேண்டுமென்பதற்காகத்தான் நவராத்திரி, சிவராத்திரி எல்லாம் இருக்கிறது.

பார்வதி தேவியே இரவின் ஸ்வரூபமாகவும், பரமசிவனே பகலின் ஸ்வரூபமாகவும் இருப்பதாக ஒரு புராணம் கூறுகிறது. பொதுவாக இரவிலே பூஜை செய்வது கூடாது. ஆனால் நவராத்திரியிலே மாத்திரம் இரவில் பூஜை செய்யலாம். சிவராத்திரியில் சிவனுக்கு பூஜை செய்யலாம்.

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கை வழிபாடும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடும் செய்வார்கள். சரஸ்வதி வழிபாட்டின் இறுதியில், நல்லறிவும், ஞானமும் வேண்டி, விஜயதசமியன்று பூஜையைப் பூர்த்தி செய்வார்கள்.

வடநாட்டிலும் இந்த நவராத்திரி பூஜை மிகச் சிறப்பாகச் செய்யப்படுகிறது. அங்கு விஜயதசமியன்று இந்த பூஜா விக்ரகங்களை பெரிய ஊர்வலமாக எடுத்துச் சென்று சமுத்திரத்தில் கலக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. துர்கா பூஜை என்று கல்கத்தா பகுதிகளில் இன்னும் அது மிகப் பிரசித்தம்.

இதே போன்று வஸந்த பஞ்சமியன்று அஸ்ஸாம், பெங்கால் பகுதிகளில் சரஸ்வதி பொம்மைகளைப் பெரிதாக ஊர்வலமாகக் கொண்டு சென்று சமுத்திரத்தில் கரைப்பார்கள்.

இப்படி துர்கா, லட்சுமி, சரஸ்வதி இந்த முக்கியமான மூன்று சக்திகளுக்கு நாடு முழுவதும் விழா கொண்டாடப் படுகிறது.

துக்கத்தைப் போக்குபவள் துர்க்கை.

செல்வத்தைப் பொழிபவள் லட்சுமி.

ஞானத்தை நல்குபவள் சரஸ்வதி.

இந்த மூன்று சக்திகளின் வழிபாட்டுக்குரிய காலம் இந்த நவராத்திரி.

சின்னச் சின்ன அற்ப நலன்களை எதிர்பார்த்து வழிபடுவதற்கல்ல இந்த பூஜை. இனி பிறவாத மிக உயர்ந்த நிலையை அருள வேண்டுவதுதான் இந்த பூஜையின் நோக்கம்.

ஞானத்தோடு, ஆத்ம சுத்தியோடு இந்த பூஜை நிறைவுருவதைக் குறிக்கும் படியாக ஞானவாஹினியான சரஸ்வதி பூஜையோடு இவ்விழா நிறைவுறுகிறது.

இந்த வகையிலே, ஒவ்வொருவரும் நவராத்திரி காலத்திலே நல்லெண்ணம், நல்ல சிந்தனையுடன் அம்பாளை பூஜை செய்து, தியானித்து வழிபட்டு வாழ்வில் எல்லா சுகங்களையும் பெற வேண்டுமாய் வாழ்த்தி ஆசிர்வதிக்கின்றோம்!
சாதுர்மாஸ்யம்

ஒவ்வோர் ஆண்டும், ச்ராவண பௌர்ணமி முதல் கார்த்திகை பௌர்ணமி வரையில் உள்ள காலம் நான்கு மாதத்தில் சாதுர்மாஸ்யம் வரும். அதாவது ஸ்ராவண ஏகாதசி துவாதசி முதல், கார்த்திகை ஏகாதசி துவாதசி வரையில் உள்ளவைகள் சாதுர்மாஸ்யங்கள். நாலு மாசம் சாதுர்மாஸ்யம் என்றால் சாதுர்மாஸ்யம் ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை நான்கு மாதம். அந்த ஆவணி மாதத்தில் ஏகாதசியில் விஷ்ணு பகவான் சயனித்துக் கொள்கிறார். இதற்கு சயன ஏகாதசி என்று பெயர். கார்த்திகை மாத ஏகாதசியில் விஷ்ணு பகவான் விழித்துக் கொள்கிறார். இதற்கு உத்ஸான ஏகாதசி என்று பெயர்.

அந்த ஆவணி மாத ஏகாதசி முதல் கார்த்திகை மாத ஏகாதசி வரை உள்ள காலங்களை நான்கு மாதங்களை சாதுர்மாஸ்யம் என்று சொல்லுவார்கள். பொதுவாக அந்தக் காலத்திலே மழை காலம் கூட இருக்கும். ஆகவே அந்தக் காலத்தில் ஒரே இடத்தில், தங்கி, சத்சங்கங்கள், பஜனைகள், வேதாந்த காலட்சேபங்கள் முதலியவைகள் எல்லாம் பெரியோர்கள் எல்லாம் செய்வார்கள். ரிஷிகள் எல்லாம் செய்வார்கள். நாரத மஹரிஷிகூட, அவர் பிறப்பதற்கு முன்பு, இது போன்று, சாதுக்கள், மஹரிஷிகள், சன்யாசிகள், சாதுர்மாஸ்ய காலத்தை நான்கு மாதம் ஓரிடத்தில் அனுஷ்டானம் செய்த பொழுது, அவருடைய தாயார், அவர்களுக்கு சேவை செய்து, அந்த ப்ரஸாதத்தினால் நாரத மஹரிஷி பிறந்ததாக வரலாறு உண்டு.

இந்த சாதுர்மாஸ்யம் மொத்தம் இரண்டு வீதம். ஒன்று, இல்லறத்தார்கள். ப்ரஹ்மச்சாரிகள், க்ரஹஸ்தர்கள், ஆண், பெண், அனைவரும் நான்கு மாதங்கள், வீட்டை விட்டு வெளியே உட்கார்நது கொண்டு, ஒரு பந்தலிலோ, கோயிலிலோ, அல்லது பொது இடத்திலோ, நதி தீரத்திலோ உட்கார்நது கொண்டு இறைவனைப் பற்றி, பாடல்கள், ஜபங்கள், பாராயணங்கள், ஸ்தோத்ரங்கள், த்யானங்கள், இவைகளிலேயே காலத்தை கழிப்பது, பகவத் சிந்தனையைத் தவிர வேறு ஒன்றும் செய்வது இல்லை. அது ஒரு விதமான சாதுர்மாஸ்யம்.

சன்யாசிகள் போன்றவர்கள், நான்கு மாத காலங்களிலும், பன்னிரெண்டு மாதங்களில், எட்டு மாதம் யாத்திரை செய்து விட்டு, இந்த நான்கு மாத காலம், எந்தவித யாத்திரையும் செய்யாமல், ஒரே இடத்தில் தங்க வேண்டும். பொதுவாக சன்யாசிகளுடைய விதி ஒரு நாளைக்கு மேல் ஒரு ஊரில் தங்கக்கூடாது. பெரிய ஊராக இருந்தால் மூன்று நாள் தங்கலாம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

க்ராமைக ராத்ரம் - ஒரு க்ராமத்துக்கு க்ராமம் ஒரு ராத்ரம் தான் தங்கலாம், என்று நியதி. சன்யாசிக்கு மூன்று நாட்கள் பெரிய ஷேத்ரங்களில் தங்கலாம் இப்படி எப்போதுமே, போய்க்கொண்டிருக்கும் ஒரு இடத்தில் விச்ராந்தியாக இருந்து, சில சாதனைகளை செய்வதற்கும், அதே சமயத்தில் அஹிம்சையை, அடிப்படையாக கொண்ட சன்யாசிகளும் ஆனதினால், இந்த சாதுர்மாஸ்ய காலத்தில், அதாவது மழைக்காலத்தில், அந்தக் காலம் அப்பொழுது சில புழுக்கள், பூச்சிகள் எல்லாம் வெளியே வரும். அவைகளை காலில் மிதிபட்டோ, மற்றவை மூலமாகவோ ஹிம்சையாகும். அந்த ஹிம்சைகூட செய்யாமல் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவும், அஹிம்சையை அடிப்படையாக வைத்துக் கொண்டு, நான்கு

மாதம் சுற்ற வேண்டாம் என்பதற்காகவும், சாதுர்மாஸ்யம் சன்யாசிகள் அனுஷ்டிப்பார்கள். அதே நான்கு மாதங்களில் அவர்களும் த்யானங்களை செய்து கொண்டு, சாதனை செய்து கொண்டு இருப்பார்கள்.

இதைத் தவிர இந்த சாதுர்மாஸ்ய காலத்திலேயே ஆகாவரண சாதுர்மாஸ்யம் என்று ஒன்று உண்டு. முதல் மாதத்திலே பால் சேர்த்துக் கொள்ளக் கூடாது, மற்றவை அனைத்தையும் சாப்பிடலாம். இரண்டாம் மாதத்திலே தயிர் சாப்பிடக் கூடாது. மற்றவை அனைத்தையும் சாப்பிடலாம். மூன்றாவது மாதத்திலே கறிகாய்கள் சாப்பிடக்கூடாது. மற்றவை அனைத்தையும் சாப்பிடலாம். நான்காவது மாதத்திலே இரண்டாகப் பிளக்கக் கூடிய பருப்புகளை சாப்பிடக்கூடாது, மற்றவை அனைத்தையும் சாப்பிடலாம்.

கார்ததிகை மாதம் த்வாதசி அன்று அனைத்தையும் கலந்து வைத்து, பகவானுக்கும் படைத்து விட்டு, அந்த கார்த்திகை ஏகாதசி அன்று கிருஷ்ணருக்கும் ருக்மிணிக்கும் கல்யாணம் செய்து விட்டு, துவாதசி அன்று பாராயணம் செய்வது வழக்கம்.

பாரணை என்று சொல்லுவார்கள், பாரணை என்றால், உபவாசம் இருந்து மறுநாள் செய்வது பாரணை.

அப்படி கார்த்திகை மாதம் ஏகாதசிக்கும் உபவாசம் இருந்து இந்த சாகா வ்ரதம் ப்ரகாரம், ஒவ்வொரு மாசம் ஒன்றை ஒன்றை விட்டு விட்டு கார்த்திகை மாசம் துவாதசி அன்று கிருஷ்ணனுக்கு கல்யாணம் செய்து வைத்து அன்றைய தினம் எல்லா விதப் பொருட்களையும் பகவானுக்கு நிவேதனம் செய்து, பிறகு தாம் சாப்பிடுவது என்று ஒரு பழக்கம் உண்டு.

இது சன்யாசிகள், க்ரஹஸ்தர்கள், ப்ரஹ்மச்சாரிகள், வானப்ரஸ்தர்கள் அனைவரும் செய்யக்கூடியது. பிராமணர்கள் மாத்திரம் அல்ல அனைத்து வகுப்பினரும் கூட செய்வார்கள்.

இது மஹாராஷ்டிரத்திலும், ஆந்திராவிலும் மிகவும் பிரசித்தமாக நடைபெற்று வருகிறது.

கன்னட தேசத்திலும் சில பேர் செய்கிறார்கள். தமிழ்நாட்டிலே மிகவும் குறைந்த பேர்கள் தான் இந்த சாகா விரதத்தை கடைப்பிடிக்கிறார்கள்.

இந்த சாதுர்மாஸ்யத்தை கடைப்பிடிப்பவர்கள் மிகவும் குறைவு.

சன்யாசிகள் மாத்திரம் தான், சாதுர்மாஸ்யம் என்று பெயர் வைத்துக் கொண்டு தமிழ் நாட்டிலே கடைப்பிடிக்கிறார்கள். அதுவும் நாலு மாசத்திற்கு முடியாததினால் இரண்டு மாசத்திலே செய்யலாம் என்று ஒரு வேத வாக்கியம் இருப்பதினால், நான்கு மாசத்திற்கு பதிலாக நான்கு பட்சமாக வைத்துக்கொண்டு நான்கு பட்சங்களிலே இரண்டு மாசங்களிலே இந்த சாதுர்மாஸ்ய வ்ரதத்தை முடித்து விடுகிறார்கள்.

அப்படி நான்கு மாதத்தில் நான்கு பட்சங்களை வைத்துக் கொண்ட இரண்டு மாசத்தில் முடிக்கக் கூடிய சன்யாசிகள் கூட, சிலர் சாகா வ்ரதத்தை கடைப்பிடிப்பார்கள் நான்கு மாசமும். அதாவது, பால் சேர்க்காமல் இருப்பது, தயிர் சேர்க்காமல் இருப்பது காய்கறிகள் சேர்க்காமல் இருப்பது, இரண்டாக பிளக்கக்கூடிய பருப்பு வகைகளை சேர்க்காமல் இருப்பது இந்த விரதத்தை

மாத்திரம் நான்கு மாதம் எங்கு இருந்தாலும் கடைப்பிடிப்பார்கள்.

இப்படி இந்த வகையிலும் உண்டு. இப்படி சாதுர்மாஸ்யம் என்பது, பழங்காலம் தொட்டு வருகிறது. அன்றைய தினம், பூஜையில் முதல் முதல், இந்த சாதுர்மாஸ்ய ஆரம்பம் ஆவணி மாசம் ஏகாதசி அன்று (க்ராவண ஏகாதசி அன்று) முடிவு கார்த்திகை ஏகாதசி த்வாதசி அன்று. ஆனால் சாதர்மாயஸ்த்தைத் தவிர, சன்யாசிகள் செய்யகக கூடிய சாதுர்மாஸ்யம், வ்யாஸ பூஜை என்பது பௌர்ணமியிலிருந்து ஆரம்பிக்கும் ச்ராவண பௌர்ணமியிலிருந்து, கார்த்திகை பௌர்ணமி வரையில் நடைபெறும்.

அன்றைய தினம் அவர்கள் நான்கு மாதம் வெளியேபோக மாட்டேன் என்று சங்கல்பம் செய்து கொண்டு இந்த கார்யங்களை எல்லாம் செய்வார்கள். இது ச்ராவண மாத பௌர்ணமியிலிருந்து கார்த்திகை மாதம் பௌர்ணமி வரையில் இருக்கும். பௌர்ணமிக்கு பௌர்ணமி அவர்களுக்கு விசேஷம்.

அது போன்று சாதுர்மாஸ்ய்தைப் பற்றி விசேஷம் உண்டு. அந்த சாதுர்மாஸ்யத்தை, முதன் முதலாக அந்தக்காலம் முதல் கடைப்பிடித்து வந்தவர் வேதவியாசர். ஆகவே அந்த சாதுர்மாஸ்ய ஆரம்பத்தை வேதவியாச பூஜை என்றும் குறிப்பிடுவார்கள். ஆகவே வியாச பூஜையைத்தான் சன்யாசிகள் சாதுர்மாஸ்ய ஆரம்பத்தில் கைக் கொள்வது.
வேதமே ஆதாரம்

நம்முடைய வைதிக சனாதன தர்மத்திற்கு ஆதாரங்கள் வேதங்கள்.

வேதங்களில் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதமென நான்கு பிரிவுகள் உள்ளன.

ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களுக்கு முறையே ரிக் வேதத்திற்கு 21

சாகைகள், யஜுர் வேதத்திற்கு 101 சாகைகள், ஸாம வேதத்திற்கு ஆயிரம்

சாகைகள், அதர்வண வேதத்திற்கு ஒன்பது சாகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு

கிளை வேத பாகத்திற்குத் ஸம்ஹிதா பாகம், ப்ராம்மண பாகம் என பிரிக்கப்படும்.

ப்ராம்மண பாகத்தில் உபநிஷத்தும் ஒரு பகுதியில் வருகிறது. உபநிஷத் என்ற

சொல்லுக்கு அர்த்தம் பரமாத்மாவினுடைய சமீபத்துக்கு அழைத்து செல்வது என்று

பொருள். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் வேத அத்யயனம் செய்ய

வேண்டும், அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும், அதன்படி

கர்மானுஷ்டானங்கள் செய்ய வேண்டும் என்பது நியதி.

கர்மாக்கள் நித்ய கர்மா, காம்ய கர்மா, நைமித்திக கர்மா என்று மூன்று

வகைப்படும். நித்ய கர்மா என்றால் நித்யம் செய்வது என்று பொருள் அல்ல,

தவறாமல் செய்ய வேண்டும் என்று பொருள். சில க்ரமாக்கள் தினந்தோறும் செய்ய

வேண்டியதாக இருக்கும். சில க்ரமாக்கள் பட்சம், மாத, வருஷங்களில் செய்வதாக

இருக்கும். இதைச் செய்தே ஆகவேண்டும் என்பது விதி. நித்ய கர்மா

செய்வதனால் விசேஷ பலன் ஒன்றும் கிடையாது. பாபநிவர்த்தியும்,

மனத்தூய்மையும் கிடைக்கும். நைமித்திக கர்மாவை நிமித்தம் ஏற்படும்போது

செய்ய வேண்டும். நிமித்தம் யாருக்கு ஏற்படுகிறதோ, எப்போது ஏற்படுகிறதோ

அப்போது செய்வதற்கு நிமித்த கர்மா என்று பெயர். நிமித்த கர்மாவிற்கு பலன்

எதன் நிமித்தமாக செய்கிறோமோ அதனுடைய பலனை அடையவே. சூரிய

க்ருஹணம், சந்திர கிருஹணங்கள் வருகின்றன. அப்போது செய்யவேண்டிய

கர்மாக்கள் நிமித்த கர்மாக்கள் என்று சொல்லப்படுகின்றன. ஏனென்றால் சூரிய,

சந்திர கிரஹண நிமித்தத்தை வைத்துச் செய்வதால் அந்தப் பெயர். நிமித்த கர்மா

செய்வதன் மூலம் விசேஷ பாப பரிகாரம் உண்டு - பலனும் உண்டு.

மூன்றாவதாக காம்ய கர்மா. ஒரு பலனை உத்தேசித்து செய்வது காம்ய

கர்மா. மழை பொழிய வேண்டும், சத்ருபாதை தீரவேண்டும், உடல்

ஆரோக்கியமாக இருக்க வேண்டும், போன்ற உலகாயதனமான ஆசைகளை

வைத்துக் கொண்டு செய்யப்படும் கர்மாக்கள் எல்லாம் காம்ய என்று

சொல்லப்படுகிறது. காம்ய கர்மாவிற்கு பலன் நாம் விரும்பிய பலனை அடைவது.

இந்த மூன்று கர்மாக்களையும் செய்வது மனிதனுடைய கடமை. இந்த கர்மாக்களை

செய்வதன் மூலமாக வேதத்தில் சொல்லப்பட்ட கர்மாக்களை செய்தவர்களாக ஆகி

விடுவோம்.

இவைகளைப் பற்றி சொல்வது ஸம்ஹிதா பாகம், ப்ராம்மண பாகத்தில் சில

பாகம். இந்த கர்மாக்களை செய்து அதனால் வரக்கூடிய பலனை ஈச்வரனுக்கு

அர்ப்பணம் செய்துவிட்டால், அதனால் நம் வாழ்கையில் துக்கம் ஏற்படாது, சுகம்

கிடைக்கும். மனதுக்கு அமைதி கிடைக்கும். இந்த நிலையோடு நம் வாழ்க்கையில்

நாம் ஈச்வரனைப் பற்றியும், பரமாத்மாவைப் பற்றியும் அறிந்து கொள்வதற்குச்

சாதகமாக பல உபாசனைகளைப் பற்றியும், ஈச்வரனைப் பற்றியும், பரமாத்மாவைப்

பற்றியும் தெரிந்து கொள்வதற்காக, மகரிஷிகள் தவம் செய்த, பரிசீலனை செய்து

நூல்களை எழுதியுள்ளார்கள்.

கர்ம கண்டம் சம்பந்தமான விஷயங்களை அறிந்த கொண்டு,

அதற்கேற்றவாறு சூத்ரங்களை ஜைமினி மகரிஷி எழுதியுள்ளார். அந்த

சூத்ரங்களுக்கு சப்ரசுவாமி போன்றவர்கள் எல்லாம் பாஷ்யங்களையும்

எழுதியுள்ளார்கள். இந்த வேதங்களுக்கு எல்லாம் அர்த்தத்தை வித்யாரண்யர்

என்ற பெரிய சன்யாசி வேதத்துக்கு பாஷ்யங்களை எழுதியுள்ளார்கள்.

உபநிஷத்துக்களின் கருத்துக்களை அறிந்துகொள்ள வேதவ்யாசர் ப்ரும்ம சூத்ரம்

என்ற நூலை எழுதியுள்ளார். இதற்கு ஆதிசங்கரர் பாஷ்யம் எழுதியுள்ளார். இந்த

ப்ரம்ம சூத்ரத்திற்கு ராமானுஜர், மத்வர், வல்லபர், சைவ சம்பந்தமான ஸ்ரீ கண்டர்

போன்ற பலரும், ஆதிசங்கரரும் பாஷ்யங்கள் எழுதியுள்ளார்கள். ஆனால்

ஆதிசங்கரர் உபநிஷத் மந்திரங்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு ப்ரம்ம

சூத்ரத்திற்கு பாஷ்யங்கள் எழுதியுள்ளார். இந்த வேத வாக்யத்திற்கு விரோதமாகச்

சிறிதளவு கூட அவருடைய பாஷ்யத்தில் காண முடியாது.

சங்கராச்சாரியார் தவிர இதர பாஷ்யங்கள் யாவையும் ஆதிசங்கரர் போல்

உபநிஷத் வாக்யங்களோடு பாஷ்யம் எழுதவில்லை. புராணங்களை

அடிப்படையாகவைத்துக்கொண்டு ப்ரும்மசூத்ரத்திற்கு பாஷ்யம் எழுதியுள்ளார்கள்.

இதே போல் தசோபநிஷத்துக்கும், பகவத் கீதைக்கும் ஆதிசங்கரர் பாஷ்யம்

எழுதியுள்ளார்கள். இதைத்தவிர இந்த மூன்று கிரந்தத்தின் சாரமாக விவேக

சூடாமணி போன்ற நூல்களையும் தன்னுடைய சொந்த அனுபவத்தின் மூலமாக

ஆதிசங்கரர் எழுதியுள்ளார்.

இதே போல் குழந்தைகள் படிக்க வசிதயாக விநாயகர் முதல் ஆஞ்சநேயர்

வரை பல ஸ்தோத்ரங்களையும் வேதாந்த கருத்துக்கு ஏற்றவாறு எழுதியுள்ளார்.

பெரியவர்களடைய சதாப்தி நடைபெறகிற சமயத்தில் இது போன்ற நல்ல நூல்களை

படித்து பிறவிப் பயனை அடைய ஆசீர்வதிக்கிறோம்.
தாய் - தந்தை - குரு - தெய்வம்

(சிதம்பரனார் மாவட்டத்தில் கும்மிடிக்கோட்டை - வாலை குருநாதஸ்வாமி கோயிலில் கும்பாபிஷேகத்தில் சுவாமிகளின் அருள்வாக்கு)

கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்வார்கள். இந்த உயர்ந்த மனிதப்பிறவி எடுத்த எல்லோரும் நல்ல பழக்க வழக்கங்களோடு விளங்க வேண்டும். பக்தியும் மரியதையும் இருந்தால்தான் நல்ல பழக்கவழக்கங்கள் வரும் மூன்று பேர்களிடத்திலே பக்கிதியோடு இருக்க வேண்டும்.

தாய் தந்தையரிடத்திலே பக்தியோடு இருக்க வேண்டும். மரியாதையோடு இருக்க வேண்டும். குருவினடத்திலே பக்தியோட இருக்க வேண்டும். தெயவத்தினிடத்திலே பக்தியோடு இருக்க வேண்டும்.

முன்காலத்திலே பார்த்தால், படிப்பைத் தேடிக் கொள்வதற்காக குருவினடித்திலே சென்று அவருக்கு வேண்டிய சேவைகள் பணிவிடைகளெல்லாம் செய்து, பல காலங்கள் அவருடனேயே இருந்து, பாடமெல்லாம் கற்றுக் கொண்டார்கள். துரோணாச்சாரியாரிடத்திலே பலபேர் படித்தார்கள். ஆசிங்கரரிடத்திலே பலபேர் படித்தார்கள்.

ஒரே ஒரு முனிவரிடத்திலே ஆயிரம் பேர்கள் கூட படித்தார்கள். இதுபோல் பல நூறுபேர் சேர்ந்து படிக்கக் கூடிய இடத்திற்கு, கடிகாஸ்தானம் என்று பெயர். பல்கலைக்கழகம் என்று சொல்லுகிறோமே அது போன்று கடிகாஸ்தானம்.

உபமன்யு என்று ஒருவர், அவர் ஒரு முனிவரிடத்திலே சேவை செய்து, அவர் சொல்லும்படியெல்லாம் கேட்டுக்கொண்டு படித்தார். அவர் என்ன சாப்பிடச் சொல்லுகிறாரோ, அதைத்தான் சாப்பிடுவார். அவர் சொல்லும்படியெல்லாம் இருந்துகொண்டு கஷ்டப்பட்டுப் படித்தார்.

இதுபோல் கிருஷ்ணபரமாத்மா கூட சாந்த்வீபணி என்ற முனிவரிடத்திலே.. பகவானே.. படித்தார். ராமபிரானுக்கு விஸ்வாமித்திரர் நல் உபதேசம் செய்தார். எப்படிப் பசியை நீக்குவது, எப்படித் தூக்கத்தை வெல்வது என்றெல்லாம் விஸ்வாமித்திரர் ராமபிரானுக்குச் சொல்லிக் கொடுத்தார். அது குருபக்தி.

அதுபோன்று தாய் தந்தையர்களுக்குச் செய்ய வேணடியதைச் செய்து, மதித்தார். இப்படி மதித்தவர்களில் பெரிய உதாரணம் பிள்ளையார்.

உலகமனைத்துமே தாய் தந்தையர்தான் என்று தாய் தந்தையரையே வலம் வந்தவர். அதன் மூலமாக ஒரு பழத்தையே பெற்றவர்.

அதுபோல, சிரவணகுமாரன் என்று ராமாயணத்திலே வருகிறது, வயதான தாய் தந்தையருக்குப் பணிவிடைகளெல்லாம் செய்து வந்தார். ஒரு சமயம் தசரத மகாராஜா வேட்டைக்காகச் செல்லும்பொழுது ஒரு யானை தண்ணீர் குடிக்கிற மாதிரிச் சத்தம் கேட்டது. அதைப் பார்த்து சத்தத்தைக் கேட்டு யானை தான் தண்ணீர் குடீக்கிறதாக்கும் என்று நினைத்து அவர் அடித்தார். அவர் சத்தத்தைக் கேட்டு திக்கை அறிந்து கொண்டு அடிக்கக் கூடியவர் என்னும் திறமைக்காக.. வேறு ஒன்றுமில்லை.. அந்த நேரம் மனிதக்குரல் கேட்டவுடனேயே அவர்களிடத்திலே போய் மன்னிப்பெல்லாம் கேட்டுக்கொண்டார் தசரத மகாராஜா.

மகாராஷ்டிராவிலே பண்டர்பூர் என்று ஒர் ஊர் இருக்கிறது. சில படங்களைப் பார்த்தால் தெரியும். இடுப்பிலே கை வைத்துக்கொண்டு ஒரு பெருமாள் இருப்பார்.

அவரை விட்டல் என்று சொல்லுவார்கள். அந்த இடத்திலே புண்டரீகன் என்று ஒருவர் இருந்தார். அவர் தாய், தந்தையர்களுக்கெல்லாம் பணிவிடை செய்து வந்தார். கூப்பிட்டால் மட்டுமே வரக்கூடிய ஸ்வாமி, இவ்வளவு நல்லவர்கள் இருக்கிறார்களே என்று தானாகவே வந்தார், தாய் தந்தையர்களிடத்திலே பக்திக்கு இது போன்றவர்கள் உதாரணங்கள்.

அதேபோன்று தெய்வத்தினிடத்தில் பக்திக்கு, துருவன் என்று ஒருவர் இருந்தார். ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர், சின்ன வயதிலேயே தவம் செய்தார். அதே போன்று பிரஹலாதன் சின்ன வயசிலேயே தபஸ் பண்ணினார். சின்ன பாலகராக இருந்தவர் பெரிய ஞானத்தைப் பிரசாரம் செய்யக்கூடிய ஞானஸ்தனாக விளங்கினார். இவர்களெல்லாம் சிறந்த தெய்வ சக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர்கள்.

இதுபோல், தாய் தந்தையர் குரு, தெய்வம் இவர்களிடத்தில பக்தி செய்து நல்லதொரு மனப்பக்குவத்தை அடைந்து அதன் மூலமாக இறைவனுடைய அருளைப் பெற்றவர்கள், ஞானத்தைப் பெற்றவர்கள், முக்தியை அடைந்தவர்கள், ஆனந்த அனுபவ நிலையிலேயே திளைத்திருந்தவர்கள் நம்முடைய முன்னோர்கள் எல்லாம் ஈஸ்வரனிடத்திலே பக்தியை வைக்க வேண்டும். அந்த பக்தி மாறுதல் அடையக் கூடியதாக இல்லாமல் சஞ்சலமும் சந்தேகமும் உள்ளதாக இல்லாமல் தீர்மானமானதாகவும், அகங்காரம் கர்வம் இல்லாததாகவும் இருக்க வேண்டும், பிரியத்துடன் இருக்க வேண்டும். பிரார்த்தனைகளை நல்ல பிரார்த்தனைகளாகச் செய்ய வேண்டும், தர்மத்தினுடைய அடிப்படையில் பிரார்த்தனைகள் அமைய வேண்டும். அப்படி என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நமக்குத் தெரிய வில்லையென்றால் 'என்ன கொடுத்தால் எனக்கு நல்லதோ, அதைக் கொடுங்கள்' என்று பிரார்த்தனை செய்ய வாவது தெரிந்து கொள்ளவேண்டும். இப்படியாக பக்தி அமைய வேண்டும்.

அப்படி ஒரு பக்தி செய்வதற்காகத்தான் உருவ வழிபாடெல்லாம் நாம் செய்து வருகிறோம். எல்லா இடத்திலேயும் நிறைந்திருக்கக்கூடியவர் ஸ்வாமி. அவரை அதே ரூபத்திலே நாம் தெரிந்து கொள்வது கடினம். அதற்காகத்தான் மூர்த்தி வழியாக, உருவத்தின் வழியாக வழிபடுகிறோம்.

தீபத்தை வழிபடுகிறோம். தீபமங்கள் ஜோதி என்று சொல்லுகிறோம்.

இது போல தீபத்தை வழிபடுவதை, ஆதிசங்கரர் முதலாகப் பல பேரும் சொல்லியிருக்கிறார்கள். சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். ஆதிசங்கரர் அம்மனைப் பற்றிச் சொல்லும் போதும் இ தை சொல்லியிருக்கிறார்.

மிருத்யுஞ்சயன் என்று ஒரு ஸ்வாமி. ஈஸ்வரனுடைய ஒரு விதம். பதினாறு வயதில் ஒரு மார்க்கண்டேயர். வயது முடிந்தவுடனயே எமன் வந்தபோது ஈஸ்வரனை பக்தி செய்தார். எமன் வந்தார். ஈஸ்வரனுடைய அருள் இருந்ததனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பக்திக்காக ஈஸ்வரன் இவருக்கு ஆசி புரிந்தார். அந்த மிருத்யுஞ்ஜயரைப் பற்றிச் சொல்லும்போது அந்த தீபத்தைப் பற்றியும் சொல்லி எப்படியெல்லாம் தீபம் இருக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.

ஒரு தீபத்திலிருந்து இன்னொரு தீபம் எரிவது போல் ஞானம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்க வேண்டும் என்பது தாத்பர்யம். அதையும் நம்முடைய

உருவ வழிபாட்டில் சேர்த்தார்கள், பல தீபங்களைப் பற்றியும் பல நூல்களிலும் சொல்லியிருக்கிறார்கள்.

'மாதா ச பார்வதீ தேவீ, பிதா தேவோ மஹேஸ்வரா:' என்பத ஸ்லோகம். அதேதான், 'சொல்லும் பொருளும் என் நடமாடும்' என்று ஆதீ தம்பதிகள் என்று பெயர். வால்மீகி முனிவர் ஆதிகவி. ஒருவர் புரிந்து கொள்வதற்காகப் பேசுகிறோம். நம்முடைய இலக்கியங்கள் எல்லாம் பாட்டில் இருக்கிறது தேசிகர் விருத்தம், கலிவெண்பா, கட்டளைக் கலிவெண்பா, சக்கர பந்தம் இப்படிப் பல முறைகளில், வெண்பாக்களில் அமைந்திருக்கிறது, எழுத்துக்களில் குறில் நெடில் எல்லாம் வைத்து வெவ்வேறு விருத்தங்கள் அமைந்திருக்கின்றன. அந்தாதி என்று சொல்லுகிறோம், அதுபோல் பல விதங்களில் அமைந்துள்ளது. முதல் முதலில் பாட்டு என்று அமைத்தவர் வால்மீகி முனிவர். அவர்தான் முதல் முதலாக ராமாயணத்தை எழுதியவர். முதலில் மனிதன் எழுதிய பாட்டு என்றால் அதுதான்.

அதுபோல் பார்வதி பரமேஸ்வரன் இரண்டு பேரும் ஆதி தம்பதிகள். 'ஏகபிம்பம் சிவார்ப்பணம்' என்பதாக பக்தியோடு சமர்ப்பிக்க வேண்டும். சுதோஷி என்று பெயர். ஒரு தும்பைப்பூ. அது இருந்தாலே சந்தோஷப்படக்கூடியவர் ஸ்வாமி, சிவ சிவ சிவ சிவ என்று சொன்னாலே போதும். கங்காதரர் அவர் ,ஒரு புனிதமான எண்ணத்தைக் கொடுக்கக்கூடிய, பாவங்களைப் போக்கக்கூடிய கங்கையை நமக்காகத் தரித்துக் கொண்டிருப்பவர், அவருக்கு கங்கையினால் ஆகவேண்டியது ஒனறுமில்லை. அவருக்கு எந்தப் புனிதத் தன்மையும் வேண்டியதேயில்லை. மனிதர்கள், இந்த உலகத்திலே இருக்கக்கூடியவர்கள், நல்லதொரு மனதுடன் இருக்கவேண்டும், பாவங்கள் நீங்க இருக்கவேண்டும் என்பதற்காக, பகீரதன் தவம் பண்ணினதை ஏற்றுக்கொண்டு அதற்காகத் கங்கையைத் தருவித்துக் கொடுத்தவர். அதனால் கங்காதரன் என்று பெயர்.

அம்பாள், இந்த அம்பாளுடைய கருணையானது தனியானது, முனிவர்கள் எல்லோரும் அம்பாளுடைய பக்தியைச் செய்த ஞானத்தைச் செய்திருக்கிறார்கள். இந்திரனுக்கு ஞானத்தை உபதேசித்தவள் அம்பாள். ஆதி சங்கரர் சௌந்தர்ய லஹரியெல்லாம் செய்திருக்கிறார். காமாட்சியம்மனிடத்திலே ஸ்ரீ சக்ரப்பிரதிஷ்டை செய்திரூக்கிறார். அதே போன்று திருவானைக்கா. அது நீரைச் சேர்ந்த ஸ்தலம். அங்கே அம்பாளுக்கு காதணிகள் இருக்கிறதே, அதை தாடங்கம் என்று சொல்லுவார்கள். அந்த தாடங்கத்தை அணிவித்தவர். இதுபோன்று பல இடங்களிலே ஆதிசங்கரர் பக்தி செய்திருக்கிறார்.

காளிதாஸர் சாதாரணமாக இருந்து, அம்பாளுடைய அருளினாலே பெரிய மகாகவி ஆனவர். காஞ்சிபுரத்திலே ஒருவர் ஊமையாக இருந்தார். அம்மனின் அருளாலே பேசும் சக்தி பெற்றார், பாடினார். வேறு யாரைப் பற்றியும் பாடவோ பேசவோ விரும்பாமல் இதுவே போதும் என்று இருந்துவிட்டார். ஐந்து விதங்களிலே அம்மனைப் பற்றிப் பாடியிருக்கிறார். ஐநூறு பாடல்கள். அதில் ஒரு பகுதியில் அம்மனுடைய பாதங்களை, மந்தஹாஸத்தை (புன்னகை) கடாட்சத்தை (பார்வை) எல்லாவற்றையும் பற்றி நூறு நூறு எழுதியிருக்கிறார். அந்த அளவுக்கு பக்தியினுடைய மகிமை !

ஐம்பத்தி ஒரு சக்தி பீடங்கள் இருக்கின்றன. அம்பாதி என்ற ஊரிலே ஐம்பது

ஷேத்திரங்கள் இருக்கின்றனவே அதற்கெல்லாம் சேர்த்த மாதிரி கோயில் கட்டியிருக்கிறார்கள். குஜராத்தில் இருக்கிறது காமாட்சியம்மன் கோயில். இமயமலை, காஞ்சீபுரம் என்று எங்கெங்கெல்லாம் அம்மனுடைய சக்தி பீடம் இருக்கிறதோ அதற்கெல்லாம் கோயில் கட்டியிருக்கிறார்கள்.

இப்படி அம்பாளுடைய பக்தர்களாக விளங்கியவர்கள் எல்லோரும் பெரிய ஞானிகளாக விளங்கியிருக்கிறார்கள் அகத்தியர். தெய்வீகத்துக்கும் தமிழ் மொழிக்கும் முக்கியமானவர் அந்த அகத்திய முனிவருடைய தர்மத்தின் லோபாமுத்திரை. இந்த லோபாமுத்திரை அம்மனுடைய பக்தை. இதுபோன்று பெரியவர்கள் எல்லாம் நிறைய பக்தி செய்து அவரவர்களுக்கு வேண்டிய அறம், பொருள், இன்பம், வீடு என்று சொல்லக்கூடிய எல்லா வகையிலும் பயன் பெற்றிருக்கிறார்கள். இந்த ஊரிலே வெள்ளிக் கிழமைகளிலே சுவாமிக்கும் அம்பாளுக்கும் பூஜைகள் எல்லாம் நடைபெற்றிருக்கிறது. முன்பிருந்த பெரியவர்கள் எல்லாம் இந்த ஊருக்கு வந்து செய்திருக்கிறார்கள். இந்த ஊரைச் சேர்ந்தார்கள் எல்லாம் பெரிய பெரிய விழாவெல்லாம் நடத்தினார்கள். எல்லோருமே தினமும் காலையிலும் சாயங்காலமும் ஐந்து நிமிஷம் தீப வழிபாடு செய்து, இறைவனுடைய பெயரை வெட்கமில்லாமல் பக்தியோடு, உரக்கச் சொல்லி பிரார்த்தனை செய்துகொண்டு, நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து, அதன் மூலம் எல்லோரும் சிறந்து விளங்க வேண்டும் என்று வாழ்த்தி ஆசிர்வதிக்கின்றோம்.
ஒரு பசுவின் உருக்கமான கதை

ஒரு நாள் பசுவதை செய்யும் இடத்தில் ஒருவன் கோமாதாவை ஸம்ஹாரம் செய்வதற்கு வந்தவுடன் கோமாதா அவனை பார்த்து சிரித்தது.அதை பார்த்து அவன் கேட்டான்.நான் உன்னை ஸம்ஹாரம் செய்ய வந்துள்ளேன் அது தெரிந்தும் கூட நீ எதற்காக சிரிக்கின்றாய்?என்றுகேட்டான்.அப்பொழுது கோமாதா சொன்னது.நான் எப்பொழுதும் மாமிசத்தை உண்டதில்லை.ஆனாலும் என் மரணம் மிகவும் கோரமாக இருக்கப் போகிறது.எந்த தப்பும் செய்யாமல் யாருக்கும் எத்தகைய ஆபத்தையும் விளைவிக்காத என்னை நீ கொன்று என் மாமிசத்தை சாப்பிடும் உன் மரணம் எவ்வளவு கோரமாக இருக்குமோ என்று நினைத்து நான் சிரித்தேன்.பால் கொடுத்து உங்களை வளர்த்தேன்.உங்கள் பிள்ளைளுக்கு பால் கொடுக்கிறேன்.ஆனால் நான் சாப்பிடுவது புல்லை மட்டுமே.பாலிலிருந்து வெண்ணை எடுத்தீர்கள். வெண்ணையினால் நெய்யை செய்தீர்கள். என்னுடைய சாணத்தினால் வறட்டி செய்துசமையலுக்கு உபயோகித்தீர்கள்.அதே போல் என்னுடைய சாணத்தினால் எருவினை தயார் செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தீனீர்கள்.அந்த பணத்தினால் இன்பமான் வாழ்க்கையை வாழ்கிறீர்கள்.ஆனால் எனக்கு மட்டும் அழுகிப் போன காய்றிளையும் காய்ந்து போன புல்லையும் தந்தீர்கள்.என்னுடைய சாணத்தினால் கோபர் கேஸ் தயார் செய்து கொண்டு உங்கள் வீட்டை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்தீர்கள்.என் உடம்பில் முப்பத்தி முக்கோடி தேவர்களும் இருக்கிறார்கள்.ஆனால் என்னை கசாப்புக்காரன் போல் கொல்ல வந்திருக்கிறாய்...என்னுடைய பாலிலிருந்து கிடைத்த சக்தியினால் தான் என்னை கொல்ல ஆயுதத்தை தூக்க முடிந்தது.அந்த ஆயுதத்தை தூக்கும் சக்தி உனக்கு கிடைத்தது என்னால் தான்.என் மூலம் நிறைய சம்பாதித்து வீட்டை கட்டிக் கொண்டாய்.ஆனால் என்னை மட்டும் ஒரு குடிசையில் வைத்தாய்.உன்னை பெற்ற தாயை விட மேலாக உனக்கு அண்டையாக இருந்தேன். ஸ்ரீக்ருஷ்ண பகவானிற்கு ப்ரீதியானவள் நான்.எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கும் உன் கதி என்னவாகும்?உன் வருங்காலத்தை குறித்து நினைத்து நான் சிரித்தேன் என்று சொன்னது.

(உஙக்ளால் முடிந்த அளவு எல்லோருக்கும் இதை தெரியப்படுத்தி கோமாதாவின் ருணத்தை (கடன்) தீர்க்கவும்)