செவ்வாய், 18 செப்டம்பர், 2018

தமிழ் மாதத்தின் முக்கிய பண்டிகைகளும் வழிபாட்டு முறைகளும்!

இந்துக்களாகிய நாம் எல்லோரும் வருடம் முழுவதும் மாதா மாதம் ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேலும் பண்டிகைகளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பண்டிகை நாட்களைக் கூர்ந்து கவனித்தால் பெரும்பாலும் அமாவாசையும் பவுர்ணமியும் பங்கு வகிக்கின்றன. இந்த இரண்டு நாட்களையும் நம் முன்னோர்கள் புனித நாட்களாகக் கருதி அந்த நாட்களில் இறைவனிடம் மனதை செலுத்த விரத நாட்களாகவும் ஆக்கினார்கள். அப்படி விரதம் இருக்க வேண்டுமானால் நம் உடலில் பலமும், மனதில் சக்தியும் வேண்டும். விஞ்ஞானபூர்வமாக பார்த்தால் அமாவாசை அன்று பூமி, சூரியன், சந்திரன் ஆகிய மூன்றும் நேர் கோட்டில் வருவதால் அந்த நாளில் பூமியின் ஆகர்ஷண சக்தி அதிகமாக இருக்கும் அமாவாசைக்குப் பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து பவுர்ணமி அன்று அழகிய முழுநிலவு வானில் தோன்றும். அன்று பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும். அன்று மனித உடலுக்கு சக்தி அதிகமாக இருக்கும். பவுர்ணமி அன்று கடலுக்கும் சக்தி அதிகமாகி கடல் அலைகள் வழக்கத்தைவிட அதிகமாக பொங்குவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

விஞ்ஞான ரீதியாக மட்டுமல்லாமல் ஆன்மிக ரீதியாகவும் பவுர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்த முக்கிய நாளாகக் கருதப்படுவதால் மாதாமாதம் ஒவ்வொரு பவுர்ணமியையும் ஒரு பண்டிகையாகக் கொண்டாடும்படி நம் முன்னோர்கள் வைத்துள்ளார்கள். மாதா மாதம் பவுர்ணமி ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்திலேயே வரும், அந்த நாட்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் பெரும்பாலும் அந்த நட்சத்திரத்தின் பெயரிலேயே வருவதைக் காணலாம். மேலும், தட்சனது சாபத்தால் சிவபெருமானிடம் அடைக்கலம் வேண்டினார் சந்திரன். சந்திரனுக்கு அடைக்கலம் அளித்த சிவபெருமான் அதை தன் தலையில் சூடிக்கொண்டு சந்திரசேகரர் ஆனார். ஆதலால் பன்னிரண்டு பவுர்ணமிகளுமே சிவபெருமானுக்குரிய விசேட நாட்களாகும்.

சித்திரை - சித்ரா பவுர்ணமி

சித்திரை மாதத்தில் பவுர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் வரும். சித்ரா பவுர்ணமி யன்றுதான் யமதர்மராஜாவின் கணக்கரான சித்ரகுப்தன் அவதரித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. அன்று ஒரு நாள் விரதம் இருந்து சித்ரகுப்தனை வழிபட்டால் மோக்ஷம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சித்திரை நட்சத்திரம் அம்மனுக்குரிய சிறப்பு தினம். மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதும் இந்நாளில்தான். சிவாலயங்களில் சிவனுக்கு மருக்கொழுந்தால் அபிஷேகம் செய்வார்கள்.

வைகாசி - வைகாசி விசாகம்

வைகாசி மாதத்தில் பவுர்ணமியில் வரும் விசாகம் என்பது முருகப் பெருமான் பொய்கையில் ஆறு முகங்களுடன் அவதரித்த நாளாகும் என்பதால் முருகன் கோயில்களில் இந்தநாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். சிவாலயங்களில் சிவனுக்கு சந்தனதத்தால் அபிஷேகமும், அலங்காரமும் செய்வார்கள். மேலும் புத்தபெருமான் அவதரித்ததும், ஞானம் பெற்றதும் இந்நாளில்தான்.

ஆனி - ஆனித் திருமஞ்சணம்

ஆனி மாதத்தில் பவுர்ணமி கேட்டை நட்சத்திரத்தில் வரும். சிவன் கோயில்களில் சிவனுக்கு முக்கனிகளால் (மா, பலா, வாழை) அபிஷேகம் செய்வார்கள். ஆனி மாதத்தில் சிவபெருமான், பார்வதியின் அருளைப் பெற வழிவகுக்கும் நாளாகும். சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆனித் திரு மஞ்சனத் திருவிழா இந்த நாளில் மிக சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆனி மாதம் பவுர்ணமியன்று காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனித் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

ஆடி - ஆடி குரு பூர்ணிமா

ஆடி மாதத்தில் பவுர்ணமி உத்திராடம் நட்சத்திரத்தில் வரும். இந்த பவுர்ணமியில் சிவன் கோயில்களில் சிவனுக்கு காராம் பசுவின் பாலால் அபிஷேகம் செய்வார்கள். மகாபாரதம் ஸ்ரீமத் பாகவதம் போன்ற புராணங்களை எழுதியவர் வேதவியாசர். ஆடி மாத பவுர்ணமியை வியாச பூர்ணிமா அல்லது குரு பூர்ணிமா என்ற பெயரில் வியாசபகவானை பூஜிக்கிறார்கள். ஆடி மாத பவுர்ணமியில் அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் கஜேந்திர மோட்சம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். அம்மன் கோயில்களிலும் இந்த பவுர்ணமி அன்று மாவிளக்கு போடுதல், பொங்கல் இடுதல், லலிதா ஸஹஸ்ரநாமம் அர்ச்சனை போன்ற விசேஷ ஆராதனைகள் நடைபெறுகின்றன.

ஆவணி - ஆவணி அவிட்டம்

ஆவணி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் வரும். இந்த பவுர்ணமியில் சிவன் கோயில்களில் சிவனுக்கு வெல்ல சர்க்கரையால் அபிஷேகம் செய்வார்கள் ஆவணி மாத பவுர்ணமி அன்று வட நாட்டில் ரக்ஷõ பந்தன் என்ற பண்டிகை தற்போது தென் இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. உபநயனம் செய்து கொண்ட பிராமணர்கள் ஆவணி மாத்தில் அவிட்டம் நட்சத்திரத்தோடு கூடிய பவுர்ணமி அன்று கொண்டாடும் பண்டிகை ஆவணி அவிட்டம்.

புரட்டாசி - புரட்டாசி பூரட்டாதி

புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிறது. இந்த மாத பௌர்ணமியில் சிவன் கோயில்களில் சிவனுக்கு கோதுமையும் வெல்லமும் கலந்த வெல்ல அப்பத்தால் அபிஷேகம் செய்வார்கள். இந்த மாத பவுர்ணமி அன்று தான் உமா மகேஸ்வர விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

ஐப்பசி - ஐப்பசி அன்னாபிஷேகம்

ஐப்பசி மாதம் அசுவினி நட்சத்திரத்தில் பவுர்ணமி வரும். எல்லா சிவாலயங்களிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் மிக மிக சிறப்பாகக் கொண்டாடப்படும். உலகில் உள்ள ஜீவராசிகளுக்கெல்லாம் உணவளித்துக் காக்கும் சிவபிரானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவனுக்கு அன்னம், காய்கறி, பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்கரிப்பார்கள். கேதாரநாத்தில் உள்ள சிவனுக்கு தேவ பூஜை ஐப்பசி பவுர்ணமி அன்றுதான் தொடங்குகிறது. தமிழ் நாட்டில் கங்கை கொண்ட சோழ புரத்தில் இவ்விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை - கார்த்திகை தீபம்

கார்த்திகை பவுர்ணமி கார்த்திகை நட்சத்திரத்திலேயே வரும். இந்த பவுர்ணமியில் எல்லா சிவாலயங்களிலும் சிவனுக்குப் பசு நெய்யால் அபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை நட்சத்திரமும் கார்த்திகை பவுர்ணமி நாளும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் எல்லா சிவாலயங்களிலும் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த நாளில் ஏற்றப்படும் திருவண்ணாமலை தீபம் உலக பிரசித்தம். அன்று தான் பார்வதிக்கு ஈசுவரன் இடபாகம் தந்து அர்த்தநாரீசுவரன் ஆனார் என்பர்.

மார்கழி - மார்கழி திருவாதிரை

மார்கழி பவுர்ணமி திருவாதிரை நட்சத்திரத்தில் வரும். இது பரமசிவனின் நட்சத்திரமாகும். இந்த நாளில் சிவனுக்குப் பசு நெய்யாலும் நறுமண பன்னீராலும் அபிஷேகம் செய்வார்கள். மார்கழியில் பாடப்படும் திருப்பாவை மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் என்று பவுர்ணமியில் துவங்குகிறது. கோயில்களில் ஆருத்ரா தரிசனமும் இந்த திருவாதிரை பவுர்ணமி அன்றுதான் கொண்டாடப்படும்.

தை - தைப்பூசம்

தை மாதத்தில் பவுர்ணமி பூசம் நட்சத்திரத்தில் வரும். அன்று செய்யும் தைப்பூசம் முருகன் வழிபாட்டிற்கு ஈடு இணையே இல்லை. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளிலும் தைப்பூச தினத்தன்று முருகனுக்குக் காவடி எடுத்து அலகு வேல் குத்தி வேண்டுதல் நிறைவேற்றுவார்கள். தைப்பூசம் முருகனுக்கு உகந்த நாள் என்றாலும் அன்று முருகனுடன் சிவனையும் வழிபட வேண்டும். சிவனுக்கு அன்று கருப்பஞ்சாறால் அபிஷேகம் செய்வது உகந்தது. தைப்பூசத்தன்றுதான் உலகம் தோன்றியதாகக் கூறப்படுகிறது. சத்தியஞான சபையைத் தோற்றுவித்த வள்ளலார் தைமாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று ஏற்றி வைத்த ஜோதி ஜோதி தரிசனமாகக் காட்டப்படுகிறது. சிவ பெருமான் உமா தேவியுடன் ஞான சபையான சிதம்பரத்தில் நடனம் ஆடி தரிசனம் தந்ததும் இந்த தைப்பூசத் திருநாளில்தான்.

மாசி - மாசிமகம்

மாசி மாதத்தில் பவுர்ணமி மகம் நட்சத்திரத்தில் வரும். சிவன் கோயில்களில் சிவனுக்குப் பசு நெய்யில் அபிஷேகம் செய்வார்கள். இந்த நாளை மாசி மகம் என்று கோயில்களில் இறைவனை புனித நீர் நிலைகளில் நீராடல் செய்து கொண்டாடுவார்கள். இந்த நாளில் கடற்கரையை ஒட்டியுள்ள கோயில்களில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். வீடுகளில் அன்று சித்ரான்னங்கள் பாயசம் முதலியன செய்து நிலவிற்குப் படைத்து நிலவொளியில் குடும்பத்துடன் உண்டு மகிழ்வார்கள்.

பங்குனி - பங்குனி உத்திரம்

பங்குனி மாதத்தில் பவுர்ணமி உத்திர  நட்சத்திரத்தில் வரும். சிவன் கோயில்களில் முருகனுக்கு சிறப்பு விரத தினமாக் கொண்டாடப்படுகிறது. கடவுளரின் திருமண நாளாகவும் கொண்டாடப்படும். இந்த பவுர்ணமியன்று திருச்செந்தூர் கோயிலில் ஐராவத மண்டபத்தில் 108 சிவலிங்கங்கள் சாட்சியாக வள்ளி முருகன் திருமணம் சிறப்பாக நடைபெறும். மேலும் பார்வதி தேவி சிவனை மணந்து கொண்ட நாள். மேலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஸ்ரீராமர் - சீதை, ஆண்டாள் - ஸ்ரீரங்கநாதர், சாவித்திரி - சத்தியவான், மயிலை கற்பகாம்பாள் - கபாலீஸ்வரர் திருமணங்கள் நடைபெற்ற நன்னாள். இந்த தினம் ஸ்ரீஐயப்பனும், அர்ஜுனனும் அவதரித்த திருநாள்.

இவைகளைத் தவிர எல்லா பவுர்ணமிகளிலும் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்களால் கிரிவலம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் மேல்மருவத்தூர் ஆதிபரா சக்தி கோயில், வேலூர் நாராயணீ பீடம், புவனேஸ்வரி அம்மன் கோயில், பிரத்யங்கிரா கோயில் முதலிய அம்மன் கோயில்களில் பவுர்ணமி அன்று பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை, சத்தியநாராயண பூஜை, லலிதா சஹஸ்நாம பாராயணம் என்று பல விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. இப்படி பவுர்ணமியாகிய முழு மதிநாளில் இறையருள் எங்கும் நிறைந்து கிடக்கிறது. அதை உணர்ந்து நாம் அன்றைய தின வழிபாட்டின் மூலம் ஆன்மிக வாழ்வில் உயர்வோம்.
சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்!

சந்தோஷிமாதாவின் விரதம் அனைவருக்கும் எளிமையானது பலன் தருவதில் வலிமை மிக்கது. சந்தோஷிமாதா விரதம் அனைவருக்கும் உரியது என்றாலும் பெண்களுக்கு மிகவும் ஏற்றது; சிறந்தது. அந்த விரதத்தை மேற் கொள்ளுவதால் சகல மங்களங்களும் உண்டாகும். சந்தோஷிமாதா விரதத்தை வெள்ளிக்கிழமை அன்றுதான் தொடங்க வேண்டும். அதுமுதல் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பூஜை செய்துவர வேண்டும். எண்ணம் கைகூடியபின் அந்த வெள்ளியன்று பூஜையைப் பூர்த்தி செய்து விடலாம். இந்த விரதத்திற்கு மஞ்சள்பொடி, குங்குமம், வெற்றிலை பாக்கு, ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம், சந்தனம், திரி நூல், நெய் அல்லது நல்லெண்ணெய், தேங்காய், மாவிலை, பூக்கள் இவற்றை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். சந்தோஷிமாதாவுக்கு மிகவும் உகந்தது வறுத்த கடலையும், வெல்லமுமே ஆகும். அவற்றை அவசியம் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

விரதத்தை வீட்டிற்குள்ளேயோ, வெளியேயுள்ள தனியான இடங்களிலோ, கோயில்களிலோ செய்யாலம். எங்கும் செய்தாலும் செய்யுமிடம் மிகவும் அமைதியும், தூய்மையும் உடையதாக இருக்க வேண்டும். மேடை ஒன்றை அமைத்து அதன் மீது சந்தோஷிமாதா படத்தை வைத்துச் சக்திக்குத் தக்கவாறு பூக்களால் அலங்கரித்துப் பூஜை செய்ய வேண்டும். படத்தின் முன் குத்துவிளக்கினை ஏற்றி வைக்க வேண்டும். தீர்த்தம் நிறைந்த செம்பை (கலசம்) வைக்க வேண்டும். அதற்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் இவைகளால் அலங்காரம் செய்ய வேண்டும். செம்பிற்குள் அவரவர்கள் சக்திக் கேற்ப நாணயம் ஒன்றைப் போட வேண்டும். பின்னர் செம்பின் மீது மாவிலைகளை வைத்து அதன் மீது தேங்காய் ஒன்றை வைக்க வேண்டும். அதற்குச் சந்தனத்தாலும், பூக்களாலும் அலங்காரம் செய்ய வேண்டும். மஞ்சள் பொடியில் சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசைந்து மஞ்சளினால் பிள்ளையார் பிடித்துச் கலசத்திற்கு எதிரில் வைத்துக் கொள்ள வேண்டும். கிண்ணம் ஒன்றில் கொஞ்சம் வறுத்த கடலையையும் வெல்லத்தையும் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கையில் கொஞ்சம் வறுத்த கடலையும், வெல்லமும் எடுத்துக் கொண்டு, எண்ணிய காரியம் நிறைவேற வேண்டும் என்று மனதில் திடமான நம்பிக்கையுடன் சங்கல்பம் செய்து, விக்னேச்சுவர பூஜையையும், சந்தோஷிமாதா பூஜையையும் செய்ய வேண்டும். பிறகு சந்தோஷி மாதாவின் கதையைப் பக்தி சிரத்தையோடு படிக்க வேண்டும். அல்லது பிறரைப் படிக்கச் சொல்லி கேட்க வேண்டும்.

கதை படித்து முடிந்ததும் மாதாவைப் பற்றிய ஸ்தோத்திரப் பாடல்களைப் பாடி நிவேதனம் செய்ய வேண்டும். பிறகு ஆரத்தி எடுக்க வேண்டும். அதன் பின் கலசத்தில் உள்ள நீரைப் பூஜைக்கு வந்தவர்களுக்குத் தீர்த்தமாகக் கொடுத்து வீடு முழுவதும் தெளித்தபின், மீதி உள்ள ஜலத்தைத் துளசிச் செடிக்கு ஊற்ற வேண்டும். நினைத்த காரியம் கை கூடிய பிறகு விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்கின்ற அன்று பூரி, முந்திரிப் பாயசம் வறுத்தகடலை இவற்றை நைவேத்தியம் செய்யவேண்டும். பின் எல்லோருக்கும் பிரசாதங்களைக் கொடுக்க வேண்டும். வீட்டில் மைத்துனர் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் எட்டுப் பேருக்கு உணவு படைக்க வேண்டும். அல்லது வெளியார் குழந்தைகள் எட்டுப் பேருக்கு உணவு படைக்க வேண்டும். இவர்களில் யாருக்கும் கண்டிப்பாகத் தட்சிணை ரொக்கமாகக் கொடுக்கக் கூடாது. விரதம் தொடங்கி விரதம் பூர்த்தியாகிறவரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விரதம் இருப்பவர்கள் புளியோ, புளிப்புப் பதார்த்தங்களோ தயிர், மோர் கண்டிப்பாகக் சாப்பிடக்கூடாது. விரதம் பூர்த்தியாகின்ற அன்று விரதம் இருக்கின்றவர்கள் புளிப்புச் சாப்பிடாமல் இருப்பதோடு மற்றவர்களுக்கும் புளிப்புப் பொருட்களை கண்டிப்பாக கொடுக்கவும் கூடாது. சந்தோஷி மாதா விரதத்தை மேற்கொள்பவர்களுக்கும் அதற்கு உதவுபவர்களுக்கும் எல்லாவிதமான சௌபாக்கியங்களும் உறுதியாக உண்டாகும்.
தியாகராஜர் கீர்த்தனை கேட்டால் ஆடாத மனமும் ஆடுமே! ஆனந்த கீதம் பாடுமே!

இசைக்கு மயங்காதவர்கள் யார் இருக்கிறார்கள்? சிலர் பாடினால், நம் தலை தானாகவே ஆடுகிறது. இப்படிப்பட்ட உயிரோட்டமுள்ள பாடல்களை அக்காலம் முதலே நம்மவர்கள் தந்துள்ளனர். அதிலும் இசைத்தென்றல் வீசிய நாதபிரும்மம் தியாகராஜ சுவாமிகளின் தெலுங்கு கீர்த்தனைகளைக் கேட்டால் ஆடாத மனமும் ஆடும். திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா ஜனவரி 24, பகுளபஞ்சமியன்று விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தியாகராஜரின் பிரபலமான இரண்டு கீர்த்தனைகளை பொருளுடன் தந்திருக்கிறோம். பாடுங்கள், மகிழுங்கள்.

கீர்த்தனை-1

மறி மறி நின்னே மொறலிட நீ
மனஸுன தய ராது(மறி)
கரி மொற லினி ஸரகுன சன நீகு
காரண மேமி ஸர்வாந்தர்யாமி(மறி)
கருணதோ த்ருவுனி கெதுட நில்சின
கத வின்னானய்யா
ஸுரரிபு தனயுனிகை நர ம்ருகமௌ
ஸுசன லேமய்யா
மறசி யுன்ன வனசருனி ப்ரோசின
மஹிம தெலுபவய்யா
தரனு வெலயு த்யாகராஜ ஸன்னுத
தரமுகாதிக நே வினனய்ய(மறி)

பொருள்: மீண்டும் மீண்டும் நான் உன்னிடம் வேண்டியும் உன் மனதில் கருணை பிறக்கவில்லையே ஐயா! எங்கும் நிறைந்த இறைவா! கஜேந்திரன் என்னும் யானையின் கதறலைக் கேட்டு நீ விரைந்து சென்ற காரணம் என்ன ஐயனே! இரக்கத்துடன் நீ துருவன் எதிரில் தோன்றிய கதையைக் கேட்கிறேன் சுவாமி! தேவர்களுக்கு எதிரான இரணியனின் மகன் பிரகலாதனுக்காக நீ நரசிம்மமாக மாறியதன் காரணம் தான் என்ன? எல்லாவற்றையும் இழந்திருந்த சுக்ரீவனை நீ காப்பாற்றியதன் மகிமையைச் சொல் ஐயனே! தியாகராஜன் வணங்கும் இறைவனே! இனியும் நான் பொறுக்கமாட்டேன். ஐயனே! நீ என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன்.

கீர்த்தனை-2

சாந்தமு லேக ஸெளக்யமு லேது
ஸாரஸ தள நயன(சாந்தமு)
தாந்துநிகைன வேதாந்து நிகைன (சாந்தமு)
தார ஸுதுலு தன தான்யமு லுண்டின
ஸாரெகு ஜபதப ஸம்பத் கல்கின (சாந்தமு)
யாகாதி கர்மமு லன்னியு ஸேஸின
பாகுக ஸகல ஹ்ருத் பாவமு தெலிஸின(சாந்தமு)
ஆகம சாஸ்த்ரமு லன்னியு ஜதிவின
பாகவதுலனுசு பாகுக பேரைன(சாந்தமு)
ராஜாதி ராஜ ஸ்ரீராகவ த்யாக
ராஜவினுத ஸாது ரக்ஷக தனகுப(சாந்தமு)

பொருள்: தாமரைக் கண்களை உடைய திருமாலே! மனதில் அமைதி இல்லாவிட்டால் சுகம் இல்லை. புலன்களை அடக்கிய துறவியானாலும், மனைவி மக்களுடன் வாழும் இல்லறத்தான் என்றாலும், எந்நேரமும் ஜபம் தியானம் செய்பவனாக இருந்தாலும், மனதில் அமைதி இல்லாவிட்டால் என்ன பயன்? யாகம் உள்ளிட்ட வழிபாடுகளைச் செய்தாலும், அனைவரின் உள்ளக்கருத்துக்களை அறிந்திருந்தாலும், வேத சாஸ்திரங்களைக் கற்று பாகவதர் என்ற புகழ் பெற்றிருந்தாலும் சாந்தம் இல்லாவிட்டால் பயனில்லை. மன்னாதி மன்னரான ஸ்ரீராமனே! தியாகராஜனால் வணங்கப்படும் மூர்த்தியே! நல்லவர்களை பாதுகாப்பவனே! சாந்தமில்லாவிட்டால் ஏது சுகம்?
சிவபிரானின் வீரட்டானத் தலங்கள்

சிவபிரானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்களை வீரட்டானத் தலங்கள் என்று போற்றுவர். வீரஸ்தானம் என்பதுவே வீரட்டானம் என்றாயிற்று. இவை எட்டுத் தலங்களாதலால் அட்ட வீரட்டானம் என்று அழைக்கப்படுகிறது.

1. திருக்கண்டியூர்   : சிவபிரான் பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழிந்த தலம்
2. திருக்கோவலூர் : அந்தகாகரனைக் கொன்ற இடம்
3. திருவதிகை         : திரிபுரத்தை எரித்த இடம்
4. திருப்பறியலூர்  : தக்கன் தலையைத் தடிந்த தலம்
5. திருவிற்குடி        : சலந்தராசுரனை வதைத்த தலம்
6. திருவழுவூர்       : கயமுகாசுரனைக்கொன்று தோலை உரித்துப்போர்த்துக்கொண்ட தலம்
7. திருக்குறுக்கை    : மன்மதனை எரித்த தலம்
8. திருக்கடவூர்       : மார்க்கண்டேயனைக் காத்துக் கூற்றுவனை உதைத்த தலம்.
பந்தளராஜனின் பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்!

காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.

குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.

லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.

மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.

மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.

டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.

அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.

சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.

ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.

தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.

ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.

மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.

அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.

கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.

காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.

மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.

நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.

மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இவையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.

18 படி தெய்வங்கள்

ஐயப்பன் கோயிலில் உள்ள 18 படியிலும் 18 தெய்வங்கள் அருள்பாலிப்பது சிறப்பு.

1.விநாயகர் 2. சிவன் 3.பார்வதி 4.முருகன் 5.பிரம்மா 6.விஷ்ணு 7.ரங்கநாதர் 8.காளி 9.எமன் 10.சூரியன் 11.சந்திரன் 12.செவ்வாய் 13.புதன் 14.குரு(வியாழன்) 15.சுக்கிரன் 16.சனி 17.ராகு 18.கேது

பதினெட்டுப் படிகளின் தாத்பரியம் என்ன?

முதல் படி: விஷாத யோகம். பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பே விஷாத யோகம் இதுவே முதல் படி.

இரண்டாம் படி: சாங்கிய யோகம். பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது இரண்டாவது படி.

மூன்றாம் படி: கர்மயோகம். உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம் மூன்றாவது படி.

நான்காம் படி: ஞான கர்ம சன்னியாச யோகம். பாவம், புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது நான்காம் படி.

ஐந்தாம் படி: சன்னியாச யோகம். நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.

ஆறாம் படி: தியான யோகம். கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது. இதுவே ஆறாவது படி.

ஏழாம் படி: ஞானம். இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்.. எல்லாமே கடவுள்தான்  என உணர்வது ஏழாவது படி.

எட்டாம் படி: அட்சர பிரம்ம யோகம். எந்நேரமும் இறைவனைப்பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது எட்டாவதுபடி.

ஒன்பதாம் படி: ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம். கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத்தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உ<ணர்வது ஒன்பதாம் படி.

பத்தாம் படி: விபூதி யோகம். அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது பத்தாம் படி.

பதினொன்றாம் படி: விஸ்வரூப தரிசன யோகம். ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது பதினொன்றாம் படி.

பன்னிரண்டாம் படி: பக்தி யோகம். இன்பம் - துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை - பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம் படி.

பதின்மூன்றாம் படி: ஷேத்ரக்ஞ விபாக யோகம். எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல் பதின்மூன்றாம் படி.

பதினான்காம் படி: குணத்ர விபாக யோகம். பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி.

பதினைந்தாம் படி: தெய்வாசுர விபாக யோகம். தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.

பதினாறாம் படி: சம்பத் விபாக யோகம். இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது பதினாறாம் படி.

பதினேழாம் படி: சிரித்தாத்ரய விபாக யோகம். சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது பதினேழாவது படி.

பதினெட்டாம் படி: மோட்ச சன்யாச யோகம். யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது பதினெட்டாம் படி. சத்தியம் நிறைந்த இந்தப் பொன்னு பதினெட்டுப் படிகளையும் படிப்படியாய் கடந்து வந்தால், நம் கண் எதிரே அந்த கரிமலை வாசன் மணிகண்ட பிரபு பேரொளியாய் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே ஐயனின் பதினெட்டுப் படிகள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.
ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருமங்கையாழ்வார் இந்த ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி உற்சவமாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார். ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து. கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து. மனம் ஒன்று  ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம்.

தென் மாவட்டங்களில் தோசை, இட்லி சகிதமாகவும், வட மாவட்டங்கள் சிலவற்றில் பலவகை டிபன் சகிதமாகவும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கின்றனர். விரதத்தன்று சாதம் மட்டும் சாப்பிடக்கூடாது, வேறு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் (பட்டினி)இருக்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை. ஏழு முறை துளசி இலை சாப்பிட வேண்டும். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும். பட்டினி கிடப்பதால்,  ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது.

ஏகாதசியன்று இறந்தால் முக்தி கிடைத்துவிடுமா?

வைகுண்டம் நல்லவர்களின் காலடி பட்டவுடன் திறந்து கொள்ளும். ஏகாதசி திதியில் முழுமையாக திறந்திருக்கும். அதற்காக, வைகுண்டத்துக்குள் எல்லாரும் புகுந்து விட முடியாது. ஏகாதசி திதியன்று உயிர் நீப்பவர்களும் கூட அவரவர் பாவ, புண்ணிய பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். கிராமங்களில் மக்கள் இன்று வைகுண்ட ஏகாதசி. இன்று இறந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை. இவர் பெருமாளின் பாதத்தில் போய் சேர்ந்து விட்டார், என்பதற்கு வேறு காரணம் உண்டு. வாழ்நாள் முழுவதும் இறைபக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய குணத்துடனும் இருப்பவர்களே ஏகாதசியன்று மரணம் அடைவர் என்பதால் இவர் சொர்க்கத்திற்குள் செல்வது உறுதி  என்பர்.

ஏகாதசியன்று செய்யக்கூடாதது

ஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவுநாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசியன்று நடத்த வேண்டும். அன்று கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது. (கூடுமானவரை கோயில்களில் பிரசாதம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம்) ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக்கீழான நரகத்திற்கு செல்வான். இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும்.

ஏழு பிரகாரம்

இந்தியாவிலேயே ஏழு பிரகாரங்களைக் கொண்ட கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மட்டுமே. இந்தப் பிரகராங்களின் வாசல் சுவர்களின் நடுவில் கோபுரம் அமைக்கப்பட்டிருக்கும். பொதுவாக முதன்மை வாசல் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். ஆனால், இங்கு தெற்கு நோக்கி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோயிலின் பரப்பு 6 லட்சத்து 31 ஆயிரம் சதுரஅடி. அதாவது 156 ஏக்கர். ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டதற்கு காரணம் உண்டு. உடலின் நடுவே ஆத்மா <உள்ளது போல, கோயிலின் நடுவே பரமாத்மா இருக்கிறார். மனித உடல் ஏழு தாதுக்களால் ஆனதாகச் சொல்வதுண்டு. இதன் அடிப்படையிலேயே ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டது.

துவாதசிக்கு  அகத்திக்கீரை

வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று அதிகாலையில் நீராடி நெற்றியில் நாமம் அல்லது திருநீறு பூசி, துளசியும், தீர்த்தமும் அருந்த வேண்டும். காலை 3 மணிக்கு பக்திப் பாடல்களை பாட வேண்டும். 3.30 மணிக்கு சமையலைத் துவங்கி பல்வேறு வகை கறிகளுடன் (தென்மாவட்டங்களில் 21 கறி வைப்பார்கள்) உணவு தயாரிக்க வேண்டும். சூரிய உதயத்திற்குள் சமையல் முடித்து விட வேண்டும். அகத்திக்கீரை பொரியல், நெல்லிக்காய் துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை. இதை குடும்பத்தாருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும். ஆனால், துவாதசியன்று இரவில் சாப்பிடக்கூடாது.
பிரதோஷம் உருவான வரலாறு மற்றும் வழிபாட்டு முறைகள்!

இந்திராதி தேவர்கள், திருப்பாற்கடலை அடைந்து பாற்கடலைக் கடைய முயன்றார்கள். மந்திரகிரியை மத்தாகவும், சந்திரனைத் தறியாகவும் வாசுகி என்ற நாகராஜனைத் தாம்புக் கயிறாகவும் அமைத்தார்கள். திருமால் கூர்மமாகி மந்திரகிரியைத் தனது முதுகில் தாங்கினார். அசுரர்கள் தலைப்புறமும் தேவர்கள் வால்புறமும் நின்று கடையலானார்கள். அந்த நாள் தசமி திதி. அன்று ஒரு வேளையுண்டு திருப்பாற் கடலைக் கடைந்தார்கள். மறுநாள் ஏகாதசி பதினோராவது திதி. பாற்கடலைக் கடைந்தபோது வாசுகி வருத்தங்தாங்காது பதைபதைத்து நஞ்சை உமிழ்ந்தது. கடலில் இருந்தும் நஞ்சு தோன்றியது. வாசுகி கக்கிய ஆலமும், கடலில் தோன்றிய ஆலமும் ஒன்று சேர்ந்து ஆலாலம் எனப்பேர் பெற்றது. இந்த ஆலாலம் மிக்க பயங்கரமாக , வெப்பமுடன் உலகத்துக்கே முடிவு செய்வது போல் விண்ணவரை விரட்டியது. வலமாகவும், இடமாகவும் மறித்துத் துரத்தியது. திசை தோறும் தேவர்கள் நடுங்கி ஒடுங்கி ஓடினார்கள். வெண்ணிறமாக இருந்த விஷ்ணுமூர்த்தி விஷவேகத்தால் நீலநிறம் ஆனார். வானவர்கள் அஞ்சித்திருக்கயிலாஞ் சென்று சிவனாரிடம் அடைக்கலம் புகுந்தார்கள்.

தஞ்சம் புகுந்த வானவர்கள் தேவ தேவ மஹாதேவ அருட்கடலே! கருணைக் குன்றே! தேவரீர் ஆண்டவர்! நாங்கள் அடிமைகள், தேவரீர் உடையவர். நாங்கள் உடைமைகள். நாங்கள் பாற்கடலைக் கடைந்தோம். அந்த விவசாயத்தில் முதலில் விளைந்தது. தேவரீருக்கு உரியது என்று கூறி முறையிட்டார்கள். ஓலமிட்ட வண்ணம் இடமாகவும், வலமாகவும், இடவலமாகவும் அவர் சன்னதி முன்னுற்ற நந்திதேவரது அண்டத்தில் ஒளிந்தனர். அண்ட சராசரங்களும் சகல தேவர்களும் சிவபெருமானை ஏகச்சிந்தனையாகத் தங்களைத் காத்தருளக் கோரித்துதித்த நேரமே பிரதோஷ கால நேரமாகும். கருணையே வடிவான கண்ணுதற் கடவுள் தமது அருகில் நிற்கும் சுந்தரரைப் பார்த்து சுந்தரா அவ்விடத்தை இவ்விடத்துக்குக் கொணர்வாய் என்று பணித்தருளினார். சுந்தரர் மாலயனாதி வானவர்களால் அணுகமுடியாத அதிபயங்கரமான கொடிய விஷத்தை நாவல்பழம் போலத்திரட்டி உருட்டிக்கொணர்ந்து சிவபெருமானிடம் தந்தார். கருணாமூர்த்தியான சிவபெருமான் நந்திதேவரின் கொம்பின் நடுவில் தோன்றி அக்கொடிய விடத்தை அடியவர்களாகிய அமரர்கள் உய்ய அமுதம் போல் உண்டு அருளினார். அந்த விடம் உள்ளே சென்றால் உள்முகத்தில் உள்ள ஆருயிர்கள் அழிந்துவிடும். ஆதலால் உண்ணாமலும், உமிழாமலும் கண்டத்தில் தரித்தருளினார். அதனால் செம்மேனி எம்மானுடைய கண்டம் கரியதாயிற்று. அதனால் மணிகண்டர் என்று பேர் பெற்றார். இது கார்த்திகை மாதச் சனிப்பிரதோஷ காலமாகும். இக்கதை கடம்பவன புராணமென்னும் மதுரை ஸ்தல புராணத்தில் உள்ளதாகும்.

சிவபெருமானுடைய கருணைக்கு உதாரணம் இது ஒன்று போதாதா? என்று நாலம் வா என்று ஒரு பாடலை ஆதிசங்கரர் சிவானந்தலகரியில் பாடியருளினார். இவ்வாறு எம்பெருமான் நஞ்சுண்டருளிய கருணைத் திறத்தை நால்வர்களும் மற்றைய ஆன்றோர்களும் புகழ்ந்து கூறியிருக்கிறார்கள். இறைவன் ஆலால விஷத்தை உண்ணவில்லையானால் பிரம விஷ்ணு இந்திராதி தேவர்கள் அன்றே மாண்டிருப்பார்கள். எல்லோருடைய கண்டத்தையும் எந்தைபிரான் கண்டந்தீர்த்தது. மாலெங்கே? வேந்தனுயர் வாழ்வெங்கே? இந்திரன் செங்கோலெங்கே? வானோர் குடியெங்கே? கோலஞ் செய் அண்டங்கள் எங்கே? எந்தை பிரான் கண்டமங்கே நீலமுறாக்கால்? என்கிறார் வடலூர் வள்ளலார்.

பரவி வானவர் தானவர் பலரும்
கலங்கிட வந்த விடம்
வெருள உண்டு கந்த
அருள் என் கொல்? விண்ணவனே
கரவின் மாமணி பொன் கொழித்திழி
சந்து காரகில் தந்து பம்பை நீர்
அருவி வந்தலைக்கும்
ஆமாத்தூர் அம்மானே - திருஞானசம்பந்தர்

இந்த விடத்தின் வெம்மையால் திருமால் நீலநிறம் பெற்றார். அதற்கு முன் அவர் வெண்ணிறமுடன் இருந்தார் என்பதைப்பின்வரும் பாடலால் அறிக.

மலை வளர் சிறகு கண்டேன்
வாரிதி நன்னீர் கண்டேன்
சிலை மதன் உருவு கண்டேன்
சிவன் சுத்த களம் கண்டேன்
அலை கடல் கடையக் கண்டேன்
அயன் சிரம் ஐந்துங் கண்டேன்
சிலை எரிஇரு கண் கண்டேன்
கொடுத்ததை வாங்கக்கண்டேன்

இந்தக்கருத்தை வலியுறுத்தும் வடமொழிப் பாடல் ஒன்று காண்க.

இந்த்ரம் த்வயஷம் அமந்த
பூர்வ முதிதம் பஞ்சானனம் பத்மஜம்
வார்திம் சுத்த ஜலம் சிவம் சித களம்
லட்சுமிபதிம் பிங்களம்
சைலான் பகூகதரான ஹயான பிததா
காமஞ்ச சத்விக்ரகம்
சர்வம் த்ருஷ்டம் இதம்மயா ரகுபதே
தத்தா பஹாரம் விநா

இவ்வாறு தேவர்கள் பொருட்டு சிவபெருமான் ஆலால விஷத்தை உண்டருளியது ஏகாதசி மாலை நேரமாகும்.

மீண்டும் பாற்கடல் கடைந்தது: சிவபெருமான் தேவர்களை நோக்கி மீண்டும் சென்று திருப்பாற் கடலைக் கடையுமாறு பணித்தருளினார். அமரர்களும் அசுரர்களும் மீண்டும் கடலருகில் சென்று நின்று முன்போலவே கடலைக்கடையத் தொடங்கினார்கள். பாற்கடலிருந்து இலக்குமி, ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துபமணி, சூடாமணி, உச்சைச்ரவம் முதலியன ஒவ்வொன்றாகத் தோன்றின. இலக்குமியைத் திருமால் ஏற்றுக்கொண்டார். ஏனைய பொருட்களை இந்திராதி தேவர்கள் அடைந்தார்கள். ஏகாதசியாகிய அன்று இரவு முழுவதும் உறக்கம் இன்றி பாற்கடலைக் கடைந்தார்கள். மறுநாள், துவாதசியன்று அதிகாலையில் அமிர்தம் தோன்றியது. அதனை, தேவர்கள் பகிர்ந்து உண்டார்கள். அமிர்தம் உண்ட அவர்கள் அந்த மகிழ்ச்சியினால் துவாதசியன்று ஆடியும் பாடியும் பொழுதைப் போக்கினார்கள்.

பிரதோஷம்: மறுநாள் திரயோதசி பதிமூன்றாம் நாள் தேவர்கள் சிவபெருமானை முன்னாலே வணங்காது பொழுது போக்கிய தங்கள் குற்றத்தை உணர்ந்து சிவபெருமானிடம் பணிந்து தங்கள் குற்றத்தை மன்னித்தருளுமாறு வேண்டினார்கள். பரமகருணாநிதியாகிய சிவபெருமான் மகிழ்ந்து தேவர்களுக்கு அருள்புரியத் திருவுளம் கயிலையில் அன்று மாலை (4.30 மணி முதல் 6.00 மணி வரை) பிரதோஷ வேளையில் சிவபெருமான் தம் கையில் டமருகம் ஏந்தி, சூலத்தைச் சுழற்றி, நந்தி தேவரின் இரண்டு கொம்புகளிடையே ஒரு யாமம் நடனமாடினார். தருமதேவதையே நந்தியாக உள்ளார். கலைமகள் வீணை வாசிக்க, திருமகள் பாட, இந்திரன் புல்லாங்குழல் ஊத, பிரமன் தாளமிட, திருமால் மிருதங்கம் வாசிக்க, சிவபெருமான் தாண்டவமாடினார். ஆலகால நஞ்சை, ஆலால சுந்தரர் கையில் எடுத்து வந்து பிரதோஷ வேளையில் நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடை வழியாக ஈசனிடம் கொடுத்தார். அவர் அதை வாங்கி, உண்டு நடனமாடினார். தேவர்கள் அதனைத்தரிசித்து சிவபெருமானைத் துதி செய்து வணங்கினார்கள். அது முதல் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும் வரும் திரயோதசி திதியில், சூரியன் மறைவதற்கு முன் உள்ள நேரமாகிய மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை  உள்ள பிரதோஷ நேரம் பாபத்தைப்போக்கும் நேரமாயிற்று.

அமிர்தம் வேண்டி அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால நஞ்சு தோன்றி அனைவருக்கும் பெருந்தொல்லை உண்டாக்கிய காலம். சிவன் அதை உண்டு, ஒருவருக்கும் தீங்கு ஏற்படாது காப்பாற்றிய காலம். சகல தேவதைகளும் சிவசந்நிதியில் கூடி, ஈசனை வழிபடும் காலம். தங்களைக் காக்க எல்லாரும் ஈசனை வேண்ட, அவர்கள் துன்பம் நீங்கி மகிழ, சிவபெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய காலம். ஈசனை வழிபட மிகச் சிறந்த காலம் பிரதோஷ காலம். சிவன் ஆலால விஷத்தை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் சனிப்பிரதோஷம் என மிகவும் சிறப்புடையதாகும். தோஷம் என்றால் குற்றம்; பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது என்று பொருள். எனவே, குற்றமற்ற இந்தப் பொழுதில் இறைவனை வழிபடுவதால் நம்முடைய தோஷங்கள் நீங்கும் என்றும் ஆன்றோர்கள் கூறுவர். இரவும் பகலும் சந்திக்கும் நேரத்துக்கு உஷத் காலம் என்று பெயர். இந்த வேளையின் அதிதேவதை சூரியனின் மனைவி உஷாதேவி. அதேபோல் பகலும் இரவும் சந்திக்கும் நேரம் பிரத்யுஷத் காலம் இதன் அதிதேவதை, சூரியனின் மற்றொரு தேவியாகிய பிரத்யுஷா. அவள் பெயரால் இது பிரத்யுஷத் காலம் எனப்பட்டு, பேச்சுவழக்கில் பிரதோஷ காலம் ஆனதாகச் சொல்வர்.

பிரதோஷ விரதம்: பிரதோஷ விரதம் சிவமூர்த்திக்கு உரிய பலவித விரதங்களில் முக்கியமானது.இவ்விரதத்தை அனுஷ்டிப்போர் துன்பங்களில் நின்றும் நீங்கி இன்பத்தை எய்துவர். பிரதோஷ நேரத்தில் கடவுளை நினைத்துக் கொண்டால், கேட்ட கோரிக்கை பலிக்கும் என்பது நம்பிக்கை. அலுவலகத்தில், பணியில் இருப்பவர்கள் இந்நேரத்தில், ஒரு விநாடி தங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்வது நல்லது.

ஐந்து வகைப் பிரதோஷம் :

1. நித்தியப் பிரதோஷம்: தினமும் சூரிய அஸ்தமனத்திற்கு மூன்று நாழிகைக்கு (72 நிமிடம்) முன்னர்  உள்ள காலகட்டத்தை இது குறிக்கும்.

2. பட்சப் பிரதோஷம்:  இது வளர்பிறைத் திரயோதசியன்று வரும்.

3. மாதப் பிரதோஷம்:  இது தேய்பிறைத் திரயோதசி யன்று வரும்.

4. மகா பிரதோஷம்:  சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் சனிக்கிழமை கூடிய திரயோதசி நாளன்று இது வரும். (ஆலகால நஞ்சை ஈசன் ஏற்றருளியது கார்த்திகை மாதம் சனிப் பிரதோஷத்தன்று என்று கருதப்படுகிறது. இதற்கு மாறாக, ஆந்திராவில் வைகாசி மாதம் சனிப் பிரதோஷ வேளையென்று கருதுகிறார்கள்.)

5. பிரளயப் பிரதோஷம்:  இது பிரளய காலத்தில் வருவது. அப்போது எல்லாமே ஈசனுள் அடங்கும்.

பிரதோஷம் விளக்கும் கோட்பாடு: உலகில் பிரதிகூலமாக இருப்பவைகளை அனுகூலமாக மாற்றத் தெரிந்து கொள்ள வேண்டும். அழிவைத் தரும் ஆலகால நஞ்சையுண்டு நம்மைக்காத்த சிவதாண்டவம் இக்கோட்பாட்டை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. பிரதோஷ காலத்தில், சிவனை வழிபட்டு, இம்மை மறுமை நலன்களை நாமெல்லோரும் பெறுவோமாக!
நமசிவாய என்று சொல்வோமே! நன்மைகள் ஆயிரம் கொள்வோமே

கயிலாயத்தில் பார்வதி சிவபெருமானிடம் உயிர்கள் உய்யும் வழி பற்றி விவாதித்துக் கொண்டிருந்தாள். அப்போது தேவி இறைவனிடம், நாதா! உங்களை வழிபாடு செய்வதில் எந்தநாள் மிகவும் உகந்தது? என்று கேட்டாள்.  சுவாமியும் அன்னையின் விருப்பமறிந்து, உமா! மாசி மாதத்தேய்பிறையில் வரும் சிவராத்திரியே எனக்கு மிகவும் உகந்தநாளாகும். அந்நாளில் செய்யும் தீர்த்த ஸ்நானம், தூபதீபம், நிவேதனம், அபிஷேகம் ஆகிய வற்றைக் காட்டிலும் விரதம் மேற்கொள்வதே சிறப்பாகும். சிவபெருமானின் உள்ளம் அறிந்த உமையவள் மிகவும் பரவசமுற்றாள். தானும் சிவராத்திரி நோன்பிருக்க எண்ணம் கொண்டாள். தன்னுடைய தோழிகளுக்கும் விஷயத்தை தெரிவித்தாள். அவர்கள் பூலோகத்திற்கு தெரியப்படுத்தினர். இப்படியே சிவராத்திரி விரதமகிமை உலகெங்கும் பரவியது.மனிதனுக்கு சத்வ, ரஜோ, தமோ என்னும் மூவித குணங்கள் இருக்கின்றன. இதில் சாதுக்களிடம் இருக்கும் உயர்ந்த குணமே சத்வகுணம். ரஜோ, தமோ குணங்கள் நம்மை தாழ்ந்த நிலைக்கு கொண்டு செல்பவை. காமம், கோபம், பொறாமை கொண்டு செயலைச் செய்பவன் ரஜோ குணம் பொருந்தியவன். சோம்பல், தாமதம் ஆகிய குணங்களைக் கொண்டவன் தாமச குணம் பொருந்தியவன். சிவராத்திரி விரதத்தின் மூலம் இவ்விருகுணங்களையும் போக்கிக் கொள்கிறோம். சோம்பல் தரும் தூக்கத்தை வெல்லவேண்டும் என்பதால், இந்நாளில் இரவு முழுவதும் விழிக்கவேண்டும் என்பதை விரத நியமமாக ஏற்படுத்தினர்.சிவனை அபிஷேகம் செய்வது புற வழிபாடு. உண்மையில் சிவபெருமான் ஒளிவடிவமானவர். தவக்கனலால் அவர் ஜொலிக்கிறார். அவரிடம் நாம், இறைவா! பால் தண்ணீர், பால் போன்றவற்றால் நாங்கள் அபிஷேகம் செய்கிறோம். நீர் எம்மை ஞானத்தால் நீராட்டுவீராக. பாவம் அனைத்தையும் போக்கி புனிதமாக்குவீராக. உமது அருளால் அநீதியும், அக்கிரமமும் ஒட்டுமொத்தமாக அகற்றப்படட்டும். இரண்டற்ற நிலையில் பரம்பொருளான உமது அருள் எம்மிடம் பூரணமாக நிலைத்திருக்கட்டும் என்று வழிபட வேண்டும்.

ஆன்மிக சாதகர்கள் அனைவருமே இருக்கவேண்டிய விரதம் சிவராத்திரி. தண்ணீரைக் கூட அருந்துவதைத் தவிர்ப்பது சிறப்பு. உலக அமைதி மற்றும் சுபிட்சத்திற்காக சிவனுக்குரிய ஹோமம் செய்ய வேண்டும் அல்லது அதில் கலந்துகொள்ள வேண்டும்.  நாள் முழுவதும் ஓம் நமசிவாய மந்திர ஜபத்தை தியானிக்க வேண்டும். இரவில் சிவாலயத்தில் ஒன்றுகூடி நான்கு கால அபிஷேக தரிசனமும், மந்திரஜெபமும் செய்யவேண்டும்.  என் இதயத் தாமரையில் வீற்றிருக்கும் ரத்தினமான சிவனே! உம்மை நான் வணங்குகிறேன். சிரத்தை, பக்தி என்னும் நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரான என் தூய மனதால் அபிஷேகம் செய்கிறேன். தியானம் என்னும் நறுமணப்பூக்களால் வழிபடுகிறேன்,என்று சொல்லி உளமாற வழிபட வேண்டும். சிவபெருமானே! நீரே என் உயிர். என் மனமே பார்வதி. என் கருவி கரணங்களே உமது சேவகர்கள். என் உடலே உமது வீடு. என் அன்றாட செயல்கள் அனைத்தும் உமது வழிபாடு. என் உறக்கத்தில் உம்மோடு இரண்டற கலந்து விடுகிறேன். என் கால் நடக்கும் பாதை எல்லாம் உமது கோயில் பிரகாரம். என் பேச்செல்லாம் உமது பிரார்த்தனை மொழி. இவ்விதம் என் எண்ணம், சொல், செயல் அனைத்தையும் உமக்கே அர்ப்பணிக்கிறேன், என்றும் பிரார்த்திக்கலாம். சிவராத்திரி நாளன்று மனவீட்டில் விளக்காக திகழும் ஐந்தெழுத்து மந்திரம் நமசிவாயத்தை இயன்றவரை சொல்லி ஆயிரமாயிரம் நன்மைகளை வாழ்வில் பெறுவோம்.
ஜாக்கிரதையா இருங்க!

பூஜையறையில், கண்ணாடி போல் இருக்கும் ஸ்படிக லிங்கம் வைத்து வழிபடுவோர் ஏராளமாக இருக்கிறார்கள். இதை வழிபடும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஸ்படிகலிங்க வழிபாட்டின் போது, உங்கள் மனதில் என்ன தோன்ற வேண்டும் தெரியுமா? ஸ்படிகலிங்கத்திற்கு நிறம் கிடையாது. ஆனால், அதன் பின்னால் ஒரு செவ்வரளியை வைத்தால் சிவப்பாகத் தோன்றும். வில்வத்தை வைத்தால் பச்சையாக இருக்கும். அதாவது, எதை வைத்துள்ளோமோ, அந்த நிறத்தை அப்படியே உள்வாங்கி நம்மிடம் காட்டும். அதே போல், நாம் என்ன எண்ணத்துடன் அந்த லிங்கத்தை வணங்குகிறோமோ, அதற்குரிய பலனே நமக்கு கிடைக்கும். நம் எதிரிக்கு கூட கஷ்டம் வர வேண்டும் என அந்த லிங்கத்திடம் கேட்கக்கூடாது. அவ்வாறு கேட்டால், அது நம்மையே வந்தடையும். எனவே, ஸ்படிக லிங்க வழிபாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நமக்கு ஒரு கஷ்டம் என்றால், நீ பார்த்துக்கொள் என்று அந்த கஷ்டத்தையும் அவனிடமே சமர்ப்பித்து விடுங்கள். நடவடிக்கை எடுக்க வேண்டியது அவன் பொறுப்பு. ஸ்படிகலிங்கத்தின் முன்னால் நின்று வீட்டுக்கும், நாட்டுக்கும் நன்மையை மட்டும் கேளுங்கள்.
எல்லாம் இங்கு ஐந்து நாள்

சிவபெருமானுக்கு ஐந்தெழுத்து மந்திரத்தால் ஏற்பட்ட பெயர் பஞ்சாட்சரம். பஞ்சாட்சர மந்திரமான நமசிவாயத்தை இறைவனே ஓதுவதால் காசியை விட புனிதமான தலமாக விருத்தாசலம் போற்றப்படுகிறது. விருத்தாசலம் என்பதற்கு பழமையான மலை என்பது பொருள். பூலோகத்தில் இம்மலையே மிகப்பழமையானது என்று இக்கோயில் புராணம் கூறுகிறது. இக்கோயிலுக்கும் ஐந்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. திசைக்கொரு கோபுரமாக நான்கு ராஜகோபுரங்களும், கோயிலுக்குள்ளே ஒரு கோபுரமாக ஐந்து கோபுரங்கள் உள்ளன. கோயிலில் ஐந்து கொடிமரங்கள் உள்ளன. பிரம்மோற்ஸவத்தின் போது ஐந்து கொடிமரத்திலும் கொடி ஏற்றப்படுகிறது. வலப்புறம் தலைசாய்த்தபடியே ஐந்து நந்திகள் இருப்பது சிறப்பாகும். மணிமுத்தாறு, அக்னி, சக்கர, குபேர, நித்தியானந்த கூபம் என்னும் ஐந்து தீர்த்தம் இங்குண்டு. விபசித்து, உரோமசர், குமாரதேவர், நாதசர்மா, அவைர்த்தணி என்னும் ஐந்து ரிஷிகள் விருத்தகிரீஸ்வரரை வழிபட்டு முக்தி பெற்றனர்.
பஞ்ச சிவராத்திரி

சிவராத்திரி ஐந்து வகைப்படும். அவை நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாதசிவராத்திரி, யோகசிவராத்திரி, மகா சிவராத்திரி. மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தசி நாளை மகாசிவராத்திரியாக சிவாலயங்களில் கொண்டாடுகிறோம். ராத்ர என்னும் சொல்லுக்கு செயலற்று ஒடுங்கி நிற்கும் காலம் என்று பொருள். இதனையே சம்கார காலம் அல்லது பிரளயகாலம் என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு நாள் இரவும் உயிர்கள் தூக்கத்தில் ஒடுங்கி செயலற்று விடுகின்றன. அதனையே நித்திய சிவராத்திரி என்று குறிப்பிடுவர். தைமாத தேய்பிறை சதுர்த்தசியில் வருவது பட்ச சிவராத்திரி. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி நாளில் வருவது மாத சிவராத்திரி. சோமவாரமான திங்கட்கிழமை சிவராத்திரி வந்தால் யோக சிவராத்திரி என்பர். மாசிமாத சிவராத்திரி மகாசிவராத்திரி.