வைராக்யம் - முக்கூர் லக்ஷ்மி நரஸிம்மாச்சாரியார்
ஒரு பொருளிடத்தில் ஏன் வெறுப்பு வந்தது என்று கேட்டால் 'அதை அனுபவிக்க முடியாது என்பதால் வெறுப்பு வந்தது' எனச் சொல்வது வைராக்கியம் ஆகுமா? ஆகவே ஆகாது. வைராக்கியம் வந்து விட்டதானால் எல்லாவற்றையும் அனுபவிப்பதற்கு உடம்பிலே தெம்பும் சக்தியும்பலமும் இருக்கிற போதே அனுபவிக்காமல் விட்டுவிட வேண்டும் - விட்டுவிடத் தயாராக வேண்டும். எல்லாம் போன பிற்பாடு வைராக்கியம் வரட்டும் என்று இருந்தால் அதுவே இவரை விட்டு விடுகிறதே! அப்புறம் இவர் என்ன விடுவது! 'அதை விட்டேன்' இதை விட்டேன்' என்று சொல்வதில் பிரயோஜனம் என்ன? கைக்கு அத்தனையும் கிடைத்துக் கொண்டிருக்கிற நேரத்தில் எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும். விட்ட ஸ்தானத்தில் அவனை நாம் பற்றிக் கொள்ள வேண்டும். அது தான் வைராக்கியம். தாமரை இலைமேல் இருக்கும்படியான நீர்த்துளியானது எப்படி ஒட்டிக் கொள்ளாமல் இருக்கிறதோ அந்த மாதிரி உலகியல் வஸ்துக்களிலே நாட்டமில்லாமல் இருந்து கொண்டிருக்க வேண்டும்.
ஒட்டிக் கொள்ளக்கூடாது என்றால் என்ன?
உலகத்திலே நாம் வாழ வேண்டாமா?
வாழ்வதற்கு ஒட்டுதல் வேண்டாமா?
உலகத்தில் நாம் நன்றாகவே வாழ வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. பூரணமாக வாழவேண்டும் என்கிறது. அப்படி வாழாது போனால் வாழ்த்திச் சொல்லும் மந்திரங்களுக்கு என்ன அர்த்தம் இருக்கும்? பெரிய பெரிய மந்திரமெல்லம் சொல்லி ஆசிர்வாதம் பண்ணுகிறோமே! 'எதற்காக இந்த உலகம்? என்று கேள்வி வந்துவிட்டால் அப்புறம் ஆசிர்வாதம் மட்டும் எதற்கு?
பூரணமாக இந்த உலகத்திலே நாம் இருக்க வேண்டும். கர்மானுஷ்டமான தர்மங்கள் எல்லாம் பூரணமாகப் பண்ண வேண்டும். அதைத்தான் சாஸ்திரம் வலியுறுத்துகிறது. அதற்காகத்தான் பூரண ஆயுளுடன் இரு என்று சாஸ்திரம் சொல்கிறது. ஆனால் உலக வஸ்துக்களுடைய நாட்டம் உன்னுள்ளே புகலாமா என்றால் புகக்கூடாது. அதை உள்ளுக்குள்ளே புகுத்தாமல் உலகத்திலே இருக்க முடிந்தால் எத்தனை நாள் வேண்டுமானாலும் இருக்கலாம். இதைத் தான் சாஸ்திரம் சொல்கிறது. ஒரு கப்பல் இருக்கிறது. அது சமுத்திரத்திலே போகிறது. சமுத்திரத்தில் அது போனால் தான் வாணிபம் பெருகும். பல பேர் பல இடத்துக்குப் போவார்கள். கப்பல் சமுத்திரத்திலே போகலாமா என்றால் நன்றாகப் போகலாம். சமுத்திர ஜலம் கப்பலுக்குள் வரலாமா? இது அடுத்த கேள்வி. வந்தால் என்ன ஆகும்? அவ்வளவு தான்..
அதைப் போல்தான் இந்த உலகத்திலே நாம் இருக்கலாமா என்றால் இருக்கலாம்!
ஆனால் உலக வஸ்துக்கள் நம்முள் நுழையலாமா என்றால், அந்த கப்பலுக்கு என்ன ஆகுமோ அது தான் நமக்கும்! நாம் இதிலே மூழ்கிப் போய் விட்டோமானால் மறுபடியும் கரையேறுவது எப்போது? அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது, நமக்குக் கிடைத்திருக்கிற இந்த ஜன்மாவை வீணடிக்கலாமா? இந்த மாதிரி ஜன்மா நமக்கு மீண்டும் அமையுமா? எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!