திங்கள், 12 மே, 2014

கட உபநிஷதம்

மனிதன் என்றால் யார்?


1.3 விழித்தெழு!

உடம்பின் மாற்றங்களாலோ மனத்தின் மாற்றங்களாலோ பாதிக்கப்படாத ஆன்மா என்ற ஒன்று இதயக்குகையில் உள்ளது. அதை அறிய வேண்டும். பிரித்தறிந்து வாழ்தல், பிரணவ தியானம் போன்றவை அதற்குரிய சாதனைகள் என்பதைச் சென்ற அத்தியாயத்தில் கண்டோம். ஆனால் இந்தச் சாதனைகள் சிறந்த பலனளிக்க வேண்டுமானால் புத்தி விழிப்புற்றிருக்க வேண்டும் என்பதை இந்த அத்தியாயம் வலியுறுத்துகிறது.

வாழ்க்கையை ஒரு தேர்ப் பயணத்துடன் ஒப்பிட்டுக் கூறுகின்ற எமதர்மன் தேரோட்டி விழித்திருக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதைக் கூறுவதன்மூலம் புத்தியின் விழிப்பு எவ்வளவு முக்கியம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறான்.மனிதன் என்றால் யார் என்பது பற்றிய ஒரு தெளிவான விளக்கத்தையும் இங்கு நாம் காண்கிறோம்.

1. ரிதம் பிபந்தௌ ஸுக்ருதஸ்ய லோகே
குஹாம் ப்ரவிஷ்ட்டௌ பரமே பரார்தே
சாயாதபௌ ப்ரஹ்மவிதோ வதந்தி
பஞ்சாக்னயோ யே ச த்ரிணாசிகேதா

ஸுக்ருதஸ்ய-செயல்களின்; ரிதம்-பலனை; பிபந்தௌ-அனுபவிக்கின்ற இருவர்; லோகே-உடம்பில் பரமே-மேலான; பரார்தே-நுண்ணியதான; குஹாம்-இதயக் குகையில்; ப்ரவிஷ்ட்டௌ-புகுந்தவர்கள்; சாயா தபௌ-நிழலும் வெயிலும் போன்றவர்கள்; ப்ரஹ்மவித-மகான்கள்; பஞ்சாக்னய-ஐந்து அக்கினி உடையவர்கள்; த்ரிணாசிகேதா; மூன்றுமுறை நசிகேத யாகம் செய்தவர்கள், யே-யாரோ; வதந்தி-சொல்கின்றனர்.

பொருள் : செயல்களின் பலனை அனுபவிக்கின்ற இருவர் இந்த உடம்பில் உள்ளனர். அவர்கள் நிழலும் வெயிலும் போல் ஒருவருக்கொருவர் மாறுபட்டவர்கள்; இந்த உடம்பிலுள்ள நுண்ணியதான இதயக் குகையில் புகுந்தவர்கள். மகான்களும், ஐந்து அக்கினியை உடையவர்களும், மூன்றுமுறை நசிகேத யாகம் செய்தவர்களும் இவ்வாறு கூறுகின்றனர்.

இந்த உடம்பில் இருவர் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருவரும் செயல்களின் பலனை அனுபவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் நிழலும் வெயிலும்போல் ஒருவருக்கொருவர் மாறுபட்டவர் என்று கூறுவதால் ஒருவர் செயல்களின் பலனை அனுபவிக்கிறார், மற்றவர் எதிலும் பங்கெடுக்காமல் சாட்சியாக இருக்கிறார் என்றும் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீசங்கரர் விளக்குகிறார் (தௌ ச சாயாதபாவிவ விலக்ஷணௌ ஸம்ஸாரித்வ அஸம்ஸாரித்வத்வேன ப்ரஹ்மவிதோ வதந்தி)

ஸ்ரீராமகிருஷ்ணரின் அனுபவ வார்த்தைகள் இதனை விளக்குகிறது. தமது கையில் அடிப்பட்டபோது அவர் கூறினார் இதனுள்(உடம்பினுள்) இருவர் இருக்கின்றனர். ஒன்று அன்னை....இன்னொருவர் பக்தனாக ஆகியுள்ளான். பக்தனுக்குத்தான் கை உடைந்தது. இப்போது நோய் வந்திருப்பது அவனுக்குத்தான் புரிகிறதா?

முண்டக உபநிஷதம் ஒரு கதையின்மூலம் இந்தக் கருத்தை விளக்குகிறது. ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் வாழ்கின்றன. ஒன்று அந்த மரத்திலுள்ள இனிப்பும் புளிப்பும் கசப்புமான பல்வேறு பழங்களைத் தின்கிறது.; அதன் காரணமாக இன்ப துன்பங்களை மாறிமாறி அனுபவிக்கிறது. மற்றொரு பறவை எதையும் திண்ணாமல் அமைதியாக அனைத்தையும் பார்த்தவண்ணம் இருக்கிறது( த்வாஸுபர்ணாஸபுஜாஸகாயாமானம்வ்ருக்ஷம் பரிஷஸ்வாஜாதே தயோரன்ய: பிப்பலம் ஸ்வாத்வத்யனச்னன் அன்யோ அபிசாகசீதி)

செயல்களின் ஈடுபட்டு, சுகதுக்க அனுபவங்களைப் பெற்று, அவற்றின் பலனை அனுபவிப்பது ஜீவன் அல்லது உயிர். மனம் மற்றும் பிராணனின் சேர்க்கை இது. எதிலும் பங்கெடுக்காமல் அனைத்தையும் பார்த்து கொண்டு சாட்சியாக நிற்கின்ற ஒன்றே ஆன்மா. ஆன்மாவுடன் நம்மை ஒன்றுபடுத்தி காணக்காண நாம் இறைநிலையை அடைவோம். ஜீவனுடன் நம்மை ஒன்றுபடுத்தி காணக்காண நாம் உலகியலில், குழப்பங்களில் அழுந்துவோம்.

மேலே கண்ட உண்மையை மகான்களிடமிருந்து கேள்விப்பட்டதாக உபநிஷத முனிவர் கூறுகிறார். மூன்று வகையான மகான்களைப்பற்றி அவர் கூறுகிறார்

1. மகான்கள் : இறைவனை உணர்ந்தவர்கள் என்று பொருள்படுகின்ற ப்ரஹ்மவித என்ற வார்த்தை இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.

2. ஐந்து அக்கினி உடையவர்கள்: கார்ஹபத்யம், ஆஹவனீயம், தக்ஷிணாக்னி, ஸப்யம், ஆவஸத்யம் என்பவை ஐந்து அக்கினிகள். இல்லறத்தான் இந்த ஐந்து அக்கினிகளையும் வீட்டில் நிறுவி வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கார்ஹபத்யம்-குல தெய்வத்தின் வடிவமாகக் கருதப்படுவது. இல்லற தர்மத்தைப் பரிபாலிப்பதுவரை இந்த அக்கினி எரிய வேண்டும்.

ஆஹவனீயம்-ஆஹுதி அளிப்பதற்கான அக்கினி

தக்ஷிணாக்னி-தக்ஷிணம் என்றால் மகிழ்ச்சி. மகிழ்ச்சியைத் தருகின்ற அக்கினி. இது தெற்கு மூலையில் நிறுவப்படுகிறது.

ஸப்யம்-சாட்சி ரூபமாக விளங்குகிறது. செயல்கள் அனைத்தையும் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்த்துகின்ற அக்கினி.

ஆவஸத்யம்-ஆவஸத்யம் என்றால் வீடு. வீட்டிற்கு மங்கலத்தைத் தருகின்ற அக்கினி.

3. மூன்று முறை நசிகேத யாகம் செய்தவர்கள்; நசிகேத யாகம்பற்றி ஏற்கனவே(1.1.15-19) கண்டோம்.

ஒரு சுயத் தூண்டுதல்

2. ய: ஸேதுரீஜானானாம் அக்ஷரம் ப்ரஹ்ம யத் பரம்
அபயம் திதீர்ஷதாம் பாரம் நாசிகேதம் சகேமஹி

ய-எந்த வித்யை; ஈஜானானாம்-பின்பற்றுபவர்களுக்கு; ஸேது-பாலம் ஆகிறதோ; தம்-அந்த; நாசிகேதம்-நசிகேத வித்யையை; சகேமஹி-செய்ய வல்லவர்கள் ஆவோம்; அபயம்-பயமற்ற; பாரம்-கரையை; திதீர்ஷதாம்-அடைய விரும்புபவர்களுக்கு; யத் அக்ஷரம்-அழிவற்ற எந்த; ப்ரஹ்ம-இறைவன்; பரம்-அடைக்கலமானவரோ; தத்-அந்த இறைவனை.

பொருள் : பின்பற்றுபவர்களுக்கு எந்த வித்யை பாலமாக அமைகிறதோ அந்த நசிகேத யாகத்தைச் செய்ய வல்லவர்கள் ஆவோம். பயமற்ற கரையை அடைய விரும்புபவர்களுக்கு அழிவற்ற எந்த இறைவன் அடைக்கலமானவரோ அந்த இறைவனை அறிய வல்லவர்கள் ஆவோம்.

ஒரு லட்சியத்தை எடுத்துக்கொண்டு முன்னேறும் போது, சிலவேளைகளில் லட்சியத்தை மறந்துவிடுவதுண்டு; அதுபோலவே சிலவேளைகளில் லட்சிய நாட்டம் நீர்த்துப்போவதும் உண்டு. எனவே தினமும் அதனை நினைவூட்டிக் கொள்வது நல்லது. இது சுயத் தூண்டுதல் எனப்படுகிறது. இத்தகைய மந்திரங்கள் நமது வேதங்களிலும் உபநிஷதங்களிலும் ஏராளம் உள்ளன. உபநிஷதங்களைப் படிக்கும்போது மட்டுமல்லாமல் இவற்றைப் பொருளுணர்ந்து அவ்வப்போது ஓதுவது நாம் நமது லட்சியத்தில் உறுதியாக இருக்க உதவும். அத்தகைய தொரு மந்திரம் இது.

வாழ்கையும் தேர்ப் பயணமும் (3-9)

நமது வாழ்க்கையின் ஓர் அற்புதமான சித்திரம் இந்த ஏழு மந்திரங்களில் கூறப்படுகிறது.

3. ஆத்மானம் ரதினம் வித்தி சரீரம் ரதமேவ து
புத்திம் து ஸாரதிம் வித்தி மன: ப்ரக்ரஹமேவ ச

ஆத்மானம்-ஆன்மாவை; ரதினம்-சுவாரி செய்பவனாக; வித்தி-அறிந்துகொள்; சரீரம் து-புத்தி; ஸாரதிம்-தேரோட்டி; மன-மனம்; ப்ரக்ரஹம் ஏவ-கடிவாளம்; வித்தி-அறிந்துகொள்.

பொருள் : ஆன்மா பயணம் செய்பவன், உடம்பு தேர், புத்தி தேரோட்டி, மனம் கடிவாளம்.

4. இந்த்ரியாணி ஹயானாஹு: விஷயாம்ஸ் தேஷு கோசரான்
ஆத்மேந்த்ரிய மனோயுக்தம் போக்தேத்யாஹுர் மனீஷிண

இந்த்ரியாணி-புலன்கள்; ஹயான்-குதிரைகள்; தேஷு-அவற்றிற்கு; விஷயான்-உலகப் பொருட்கள்; கோசரான்-பாதைகள்; ஆஹு-சொல்கின்றனர்; ஆத்ம இந்த்ரிய மனோ யுக்தம்-உடம்பு, புலன்கள், மனம் ஆகியவற்றுடன்கூடிய ஜீவன்; போக்தா-அனுபவிப்பவன்; மனீஷிண-மகான்கள்; ஆஹு-சொல்கின்றனர்.

பொருள் : புலன்கள் குதிரைகள்; உலகப் பொருட்கள் அந்தக் குதிரைகள் செல்வதற்கான பாதைகள்; உடம்பு புலன்கள், மனம் ஆகியவற்றுடன்கூடிய ஜீவன் வாழ்க்கையை அனுபவிப்பவன் என்று மகான்கள் சொல்கின்றனர்.

5. யஸ்த்வவிஜ்ஞானவான் பவதி அயுக்தேன மனஸா ஸதா
தஸ்யேந்த்ரியாணி அவச்யானி துஷ்ட்டாச்வா இவ ஸாரதே

ய: து-யார்; அவிஜ்ஞானவன்-வழிப்புறாத வனோ; ஸதா-எப்போதும்; அயுக்தேன-பிளவுபட்ட; மனஸா-மனத்தினனாக; பவதி-ஆகிறானோ; ஸாரதே-தேரோட்டிக்கு; துஷ்ட்ட அச்வா; இவ-அடங்காத குதிரைகள்போல்; தஸ்ய-அவனுடைய; இந்த்ரியாணி-புலன்கள்; அவச்யானி-வசப்படாமல் போகின்றன.

பொருள் : யார் விழிப்புறாதவனோ, பிளவுபட்ட மனத்தை உடையவனோ, அவனுடைய புலன்கள் தேரோட்டிக்கு அடங்காத குதிரைகள்போல் வசப்படாமல் போகின்றன.

6. யஸ்து விஜ்ஞானவான் பவதி யுக்தேன மனஸா ஸதா
தஸ்யேந்த்ரியாணி வச்யானி ஸதச்வா இவ ஸாரதே

ய:து-யார்; விஜ்ஞானவான்-விழிப்புற்றவனோ; ஸதா-எப்போதும்; யுக்தேன-பொருந்திய; மனஸை-மனத்தினமாக; பவதி-ஆகிறானோ; ஸாரதே-தேரோட்டிக்கு; ஸத் அச்வா: இவ-அடங்கிய குதிரைகள்போல்; தஸ்ய-அவனுடைய; இந்த்ரியாணி-புலன்கள்; வச்யானி-வசப்பட்டவை ஆகின்றன.

பொருள் : யார் விழிப்புற்றவனோ, பொருந்திய மனத்தை உடையவனோ, அவனுடைய புலன்கள் தேரோட்டிக்கு அடங்கிய குதிரைகள்போல் வசப்படுகின்றன.

7. யஸ்த்வவிஜ்ஞானவான் பவதி அமனஸ்க: ஸதாசுசி
ந ஸ தத் பதமாப்னோதி ஸம்ஸாரம் சாதிகச்சதி

ய:து-யார்; அவிஜ்ஞானவான்-விழிப்புறாதவனாக; அமனஸ்க-அடங்காத மனத்துடன்; ஸதா-எப்போதும்; அசுசி-தூய்மை அற்றவனாக; பவதி-இருக்கிறானோ; ஸ-அவன்; தத்-அந்த; பதம்-இறைநிலையை; ந ஆப்னோதி-அடைய மாட்டான்; ஸம்ஸாரம் ச-உலகியலிலும் அதிகச்சதி-ஆழ்கிறான்.

பொருள் : யார் விழிப்புறாதவனாக, அடங்காத மனத்தை உடையவனாக தூய்மை இல்லாதவனாக இருக்கிறானோ அவன் இறைநிலையை அடைய மாட்டான்; உலகியலிலும் ஆழ்கிறான்.

8. யஸ்து விஜ்ஞானவான், பவதி ஸமனஸ்க: ஸதா சுசி
ஸ து தத் பதமாப்னோதி யஸ்மாத் பூயோ ந ஜாயதே

ய: து-யார்; விஜ்ஞானவான்-விழிப்புற்றவனாக; ஸமனஸ்க-அடங்கிய மனத்துடன்; ஸதா-எப்போதும்; சுசி-தூயவனாக; பவதி-இருக்கிறானோ; ஸ: து-அவன்; யஸ்மாத்-எங்கிருந்து; பூய: மீண்டும்; ந ஜாயதே-பிறக்கமாட்டானோ; தத்-அந்த; பதம்-இறைநிலையை ஆப்னோதி-அடைகிறான்.

பொருள் : யார் விழிப்புற்றவனாக, அடங்கிய மனத்தை உடைவனாக, எப்போதும் தூயவனாக இருக்கிறானோ அவன், எங்கே சென்றால் மீண்டும் பிறப்பு இல்லையோ அந்த இறைநிலையை; ஆப்னோதி-அடைகிறான்.

9. விஜ்ஞானஸாரதிர் யஸ்து மன: ப்ரக்ரஹவான் நர
ஸோத்வன பாரமாப்னோதி தத் விஷ்ணோ: பரமம் பதம்

ய: நர-எந்த மனிதன்; விஜ்ஞான ஸாரதி-விழிப்புற்ற தேரோட்டியுடனுன்; ப்ரக்ரஹவான் மன-கடிவாளமாகிய மனத்தைக் கைப்பற்றியவனாகவும்; ஸ: து-அவனே; அத்வன: பாரம்-பாதையின் முடிவை; ஆப்னோதி-அடைகிறான்; தத்-அது; விஷ்ணோ-இறைவனின்; பரமம்-மேலான; பதம்-இருப்பிடம்.

பொருள் : யார் விழிப்புற்ற தேரோட்டியுடனும், கடிவாளமாகிய மனத்தைக் கைப்பற்றியவனாகவும் இருக்கிறானோ அவனே பாதையின் முடிவை அடைகிறான். அது இறைவனின் மேலான இருப்பிடம்.

வாழ்க்கைப் பயணம்: ஒரு கண்ணோட்டம்

3 முதல் 9 வரையுள்ள மந்திரங்களில் நமது வாழ்க்கைப் பயணம் ஒரு தேர்ப் பயணத்திற்கு ஒப்பிடப்படுகிறது. முதலில் உவமையைக் காண்போம், பிறகு அது தரும் செய்தியைப் பார்ப்போம்.

தேர்ப் பயணமும் வாழ்க்கையும்

தேரில் ஒருவன் பயணம் செய்கிறான். தேரோட்டி ஒருவன் உள்ளான். அவன் கடிவாளத்தைப் பிடித்திருக்கிறான். ஐந்து குதிரைகள் தேரை இழுக்கின்றன. தேர் செல்லும் பாதை ஒன்று உள்ளது. இது தேர்ப் பயணம்.

நமது வாழ்க்கைக்கு உதாரணமாக இது கூறப்பட்டுள்ளது.

ஆன்மா- பயணம் செய்பவன்
புத்தி- தேரோட்டி
மனம்- கடிவாளம்
புலன்கள்- குதிரைகள்
உலகப் பொருட்கள்- பாதை

தேர்ப் பயணம் தரும் செய்தி

1. பயணம் உலகப் பொருட்களாகிய சாலை வழியாகத்தான் சென்றாக வேண்டும். அதாவது உலகப் பொருட்களிலிருந்து, உலகிலிருந்து விலக முடியாது. நாம் எதைச் செய்ய வேண்டுமானாலும் உலகப் பொருட்களுடன் வாழ்ந்தபடியேதான் சாதிக்க வேண்டும்.

2. பயணத்தின் வேகமும் வெற்றியும் குதிரைகளைப் பொறுத்து அமைகிறது. குதிரையின் வேகம் கடிவாளத்தால் கட்டுப்படுகிறது. கடிவாளத்தின் இயக்கம் தேரோட்டியைப் பொறுத்தது. எனவே பயணத்தின் வெற்றியோ தோல்வியோ தேரோட்டியால் நிர்ணயிக்கப்படுகிறது. குதிரைகளுடன் போராடுவதாலோ கடிவாளத்தில் மாற்றங்களைச் செய்வதாலோ எந்தப் பயனும் இல்லை.

தேரோட்டி திறமைசாலியாக இருந்தால் பயணம் எவ்விதத் தடங்கலுமின்று நடைபெறும். தேரோட்டி தூங்கிக்கொண்டிருந்தால் பயணம் என்னவாகும்? இதுவே சாதாரணமாக நம் வாழ்க்கையில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. புலன்கள் தங்கள் போக்கில் போகின்றன. மனம் கட்டவிழ்ந்து பல திசைகளில் பரந்து கிடக்கிறது. ஏனெனில் புத்தி விழிப்புறவில்லை. இந்த நேரத்தில் தேரோட்டியாகிய புத்தியை எழுப்புவதே நாம் செய்ய வேண்டியது. அதை விட்டுவிட்டு மனத்துடனோ புலன்களுடனோ போராடுவது பெரிதாக பலனளிப்பதில்லை.

3. புத்தியை எழுப்புதல் அல்லது புத்தி விழிப்படைதல் என்றால் என்ன?

சாதாரணமாக அறிவு மூன்று நிலைகளில் செயல்படுகிறது-1. இயல்புணர்ச்சி , 2. அறிவு, 3. உள்ளுணர்வு.

1. இயல்புணர்ச்சி: ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் இயல்பாக எழுகின்ற உணர்ச்சி, வாத்துக்குஞ்சு நீந்துவதும் குருவிகள் கூடுகட்டுவதும் யாரும் கற்றுக்கொடுத்ததல்ல. பிறவியிலிருந்தே இவை அவற்றிடம் இயல்பாக உள்ளன. அதுபோல ஒவ்வொரு மனிதனிடமும் இயல்பாகக் காணப்படுகின்ற இயற்கையான மனப்போக்குகளே இயல்புணர்ச்சி. இது ஆழ்மனத்திலிருந்து வருவதால் பொதுவாக தவறுவதில்லை. பொதுவாக, இதற்கேற்பவை ஒருவன் வாழ்க்கைச் சூழ்நிலைகளை எதிர்கொள்கிறான். எனினும் இது நமது ஆதிக்கத்தின் கீழ் இல்லாததால் நாம் விரும்பிய விதத்தில் இதனைப் பயன்படுத்த முடிவதில்லை.

2. அறிவு: புற உலகிலிருந்தும் வாழ்க்கை அனுபவங்களிலிருந்தும் பெறுகின்ற அறிவு, புற உலகைச் சார்ந்திருப்பதால் இந்த அறிவு தவறாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே இதனை முழுமையாக நம்பி நாம் செயல்பட முடியாது.

3. உள்ளுணர்வு: கற்றறிவு, கேட்டறிவு போன்ற எந்தப் புற உபகரணங்களின் துணையும் இன்றி உணர்வின் ஆழங்களிலிருந்து எழுகின்ற அறிவு இது. இது ஒரு போதும் பொய்ப்பதில்லை, இந்த உள்ளுணர்வு விழிக்கப் பெற்றவர்களே படைப்பாளிகளாக இருந்தார்கள்.

இது எல்லோரிலும் செயல்படத் தொடங்கவில்லை. கல்வி, விஞ்ஞானம், கலை, மதம் என்று எந்த துறையை எடுத்தாலும் அவற்றின் உன்னத சிகரங்களுக்கான வாசலாகத் திகழ்கிறது உள்ளுணர்வு. இது விழிப்பதே புத்தி விழிப்பது. இதை புத்தியோகம் என்று கீதை(2.49-58) கூறுகிறது.

இதயத் தூய்மையாலும், பிரார்த்தனையாலும், காயத்ரி போன்ற மந்திர ஜபங்களாலும் புத்தி விழிப்படைகிறது.

பயண லட்சியம் 10-11

இந்தப் பயணத்தின் லட்சியம் இறைவன். அனைத்திலும் வலிமை வாய்ந்தவர் அவர், எனவே பயணத்தின் வெற்றிக்கு அவரை நாடுவதே வழி என்பதைப் படிப்படியாக இரண்டு மந்திரங்கள் விளக்குகின்றன.

10. இந்த்ரியேப்ய: பராஹ்யர்த்தா: அர்த்தேப்யச்ச பரம் மன
மனஸஸ்து பரா புத்தி: புத்தேராத்மா மஹான் பர

இந்த்ரியேப்ய-புலன்களைவிட; அர்த்தா-உலகப் பொருட்கள்; பரா: ஹி-வலிமை வாய்ந்தவை; அர்த்தேப்ய ச-பொருட்களைவிட; மன-மனம்; பரம்-வலிமை வாய்ந்தது; மனஸ: து-மனத்தைவிட; புத்தி:-புத்தி; பரா-வலிமை வாய்ந்தது; மஹான் ஆத்மா-மகிமை வாய்ந்ததான ஆன்மா; புத்தே-புத்தியைவிட; பர-வலிமை வாய்ந்தது.

பொருள் : புலன்களைவிட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை. பொருட்களைவிட மனம் வலிமை வாய்ந்தது. மனத்தைவிட புத்தி வலிமை வாய்ந்தது. மகிமை வாய்ந்ததான ஆன்மா புத்தியைவிட வலிமை வாய்ந்தது.

11. மஹத: பரமவ்யக்தம் அவயக்தாத் புருஷ: பர
புருஷான்ன பரம் கிஞ்சித் ஸா காஷ்ட்டா ஸா பராகதி

மஹத-மகிமை வாய்ந்ததான ஆன்மாவைவிட; அவ்யக்தம்-அவ்யக்தம்; பரம்-வலிமை வாய்ந்தது; அவ்யக்தாத்-அவ்யக்தத்தைவிட; புருஷ-இறைவன்; பர-வலிமை வாய்ந்தவர்; புருஷாத்-இறைவனைவிட; பரம்-வலிமை வாய்ந்தது; ந கிஞ்சித்-எதுவும் இல்லை; ஸா-அவரே; காஷ்ட்டா-அறுதிப் பொருள்; ஸா-அவரே; பரா கதி-கடைசிப் புகலிடம்.

பொருள் : மகிமை வாய்ந்ததான ஆன்மாவைவிட அவ்யக்தம் வலிமை வாய்ந்தது. அவ்யக்தத்தைவிட இறைவன் வலிமை வாய்ந்தவர். இறைவனைவிட வலிமை வாய்ந்தது எதுவும் இல்லை. அவரே அறுதிப் பொருள். அவரே கடைசிப் புகலிடம்.

எந்த ஒன்றையும் வசப்படுத்த வேண்டுமானால் அதை விட உயர்ந்த ஒன்றை நாட வேண்டும். மேற்கிலிருந்து விலக வேண்டுமானால் விலக வேண்டும், விலக வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்வதாலோ, அங்கே நின்ற போராடுவதாலோ பயனில்லை. செய்ய வேண்டியதெல்லாம் கிழக்கு நோக்கி நடப்பதே. கிழக்கு நோக்கி நடந்தால் தானாகவே மேற்கிலிருந்து விலகிவிடுவோம். அது போலவே மனத்தை வசப்படுத்த, புலன்களை ஒரு கட்டுக்குள் கொண்டுவர அவற்றுடன் போராடுவதோ, அவற்றை அந்த நிலையிலேயே அடக்க முயற்சிப்பதோ பயனற்றது. இதையே கீதை, அடக்குவதால் என்ன பயன்?(நிக்ரஹ: கிம் கரிஷ்யதி?) என்று கேட்கிறது எனவே கீழானதை வசப்படுத்த மேலானதைப் பற்றிக்கொள்ள வேண்டும்.

புலன்களாகிய கண், காது, மூக்கு, வாய், உடம்பு இவற்றின்மூலமே நாம் செயல்படுகிறோம். இவை தன்னிச்சையாகச் செயல்படுவதில்லை. பார்க்குமாறு தூண்டப்படும்போது கண்கள் பார்க்கின்றன, கேட்குமாறு தூண்டப்படும்போது காதுகள் கேட்கின்றன. இவ்வாறே ஒவ்வொரு புலனும் செயல்படுகிறது. புலன்களைத் தூண்டுபவை உலகப் பொருட்கள். அவற்றின் மீதுள்ள கவர்ச்சியாலேயே நாம் உலகை அனுபவக்கிறோம். அதனால்தான் புலன்களைவிட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை என்று கூறப்பட்டது.

புலன்களின் கவனத்தைக் கவரக்கூடிய பொருட்கள் வெளியில் இருந்தாலும் மனம் புலன்களுடன் ஒத்துழைக்கவில்லை என்றால் அந்தப் பொருட்கள் புலன்களைத் தூண்ட முடியாது. உதாரணமாக அழகிய தாமரை மலர் ஒன்றை நாம் இருக்கின்ற வழியாக ஒருவன் கொண்டு செல்கிறான். அந்த வேளையில் நாம் எதையாவது தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தால் அந்த மலரை நாம் கண்டிருக்கமாட்டோம். பிறகு கேட்டால், நான் பார்க்கவில்லையே என்போம். சாதாரண வேளையில் நம் கண்களைக் கவர்ந்திழுக்கக்கூடிய மலர் இப்போதும் இருந்தது. ஆனால் மனம் ஈடுபடாததால் நம் கண்களைக் கவர அந்த மலரால் முடியவில்லை. எனவே புறப் பொருட்களைவிட மனம் வலிமை வாய்ந்தது.

நமது வாழ்க்கைப் பயணத்தின் இந்த மூன்று பகுதிகளையும் நாம் அறிவோம்: புற உலகம் நமக்குத் தெரியும், புலன்களை நாம் அறிவோம் மனத்தை நாம் உணர்கிறோம். இதற்குமேல் உள்ளவை சாதாரணமாக நம்மால் உணரப்படாதவை. இவற்றுள் முதலில் வருவது புத்தி. இது விழிப்புறாத நிலையில் உள்ளது. புத்தியைவிட வலிமை வாய்ந்தது ஆன்மா.

ஆன்மாவைவிட வலிமையானது அவ்யக்தம். அவ்யக்தம் என்றால் இறைவனின் ஆற்றல். எந்த ஆற்றலால் இந்தப் பயணம் மட்டுமல்ல இந்தப் பிரபஞ்சமே வெளிப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறதோ அந்த ஆற்றல் ஆனால் அந்த ஆற்றலும் இறைவனாகிய தனம் இல்லாமல் இயங்க முடியாது. எனவே அவ்யக்தத்தைவிட வலிமை வாய்ந்தவர் இறைவன். அவரே கடைசிப் புகலிடம்.

புத்தி விழிப்புற வேண்டும்

12. ஏஷ ஸர்வேஷு புதேஷு
கூடோத்மா ந ப்ரகாசதே
த்ருச்யதே த்வக்ர்யயா புத்த்யா
ஸூக்ஷ்மயா ஸூக்ஷ்ம தர்சிபி

ஏஷ-இந்த; ஆத்மா-ஆன்மா; ஸர்வேஷுபூதேஷு-எல்லா உயிர்களிலும்; கூட-மறைவாக உள்ளது; ந ப்ரகாசதே-வெளிப்பட்டுத்  தெரிவதில்லை; து-ஆனால்; அக்ர்யயா-ஒருமைப்படுத்தப்பட்ட; ஸூக்ஷ்மயா-நுண்ணிய; புத்த்யா-புத்தியால்; ஸூக்ஷ்ம தர்சிபி-மகான்களால்; த்ருச்யதே-காணப்படுகிறது.

பொருள் : இந்த ஆன்மா எல்லா உயிர்களிலும் மறைவாக உள்ளது. வெளிப்பட்டுத் தெரிவதில்லை. ஆனால் ஒருமைப்படுத்தப்பட்ட நுண்ணிய புத்தியால் மகான்கள் இந்த ஆன்மாவைக் காண்கின்றனர்.

எப்போதும் சஞ்சலப்படுவது மனம், ஒன்றை நிச்சயமாக முடிவு செய்வது புத்தி. (மனோ நாம ஸங்கல்ப விகல்பாத்மிக அந்த: கரண வ்ருத்தி புத்திர் நாம நிச்சயாத்மிக அந்த: கரண வ்ருத்தி வேதாந்த சாரம், 66, 65) ஆனால் இந்த புத்தியால் புற விஷயங்களை மட்டுமே முடிவு செய்ய இயலும்; அக உண்மைகளைக் காணும் ஆற்றல் இதற்கு இல்லை. ஏனெனில் இது விழிப்புறாத நிலையில் உள்ள புத்தி. அது விழிப்புறும்போது மட்டுமே நுண்மை பெறுகிறது. அந்த நுண்ணிய புத்தியால்தான் ஆன்மாவை உணர முடியும்.

புத்தி விழிப்புற என்ன செய்ய வேண்டும்?

13. யச்சேத்வாங்மனஸீ ப்ராஜ்ஞ
தத் யச்சேத் ஜ்ஞான ஆத்மனி
ஜ்ஞானமாத்மனி மஹதி நியச்சேத்
தத் யச்சேத் சாந்த ஆத்மனி

ப்ராஜ்ஞ-அக நாட்டம் உடையவன்; வாக்-பேச்சை; மனஸீ-மனத்தில்; யச்சேத்-ஒடுக்க வேண்டும்; தத்-அந்த மனத்தை; ஜ்ஞானே-விழிப்புற்ற; ஆத்மனி-புத்தியில்; யச்சேத்-ஒடுக்க வேண்டும்; ஜ்ஞானம்-புத்தியை; மஹதி-மகிமை வாய்ந்த; ஆத்மனி-ஆன்மாவில்; நியச்சேத்-ஒடுக்க வேண்டும்; தத்-அந்த ஆன்மாவை; சாந்தே-அமைதியின் இருப்பிடமான; ஆத்மனி-இறைவனில்; யச்சேத்-ஒடுக்க வேண்டும்.

பொருள் : அக நாட்டம் உடையவன் பேச்சை மனத்தில் ஒடுக்க வேண்டும். மனத்தை விழிப்புற்ற புத்தியில் ஒடுக்க வேண்டும். புத்தியை மகிமை வாய்ந்த ஆன்மாவில் ஒடுக்க வேண்டும். ஆன்மாவை அமைதியின் இருப்பிடமான இறைவனில் ஒடுக்க வேண்டும்.

சாதனைமுறை இங்கே கூறப்படுகிறது. சாதாரண படியிலிருந்து ஆரம்பிக்கிறது இந்த சாதனை. பேச்சை மனத்தில் ஒடுக்க வேண்டும்-இது முதற்படி. உயர் வாழ்க்கைக்கு முதற்படி பேச்சுக் கட்டுப்பாடு. (யோகஸ்ய ப்ரதம த்வாரம் நிரோத) என்கிறார் ஸ்ரீசங்கரர். தேவையற்ற பேச்சு உயர் வாழ்க்கைக்கு என்றல்ல, சாதாரண வாழ்க்கைக்கும் பெரிய தடையாகும். நமது ஆற்றலில் முக்கியப் பகுதி பேச்சில் செலவழிகிறது. அதனைச் செலவிடாமல் சேமித்தால் அக வாழ்க்கை போன்ற உயர் தேவைகளுக்காக அதனைப் பயன்படுத்த முடியும்.

பேச்சு இரண்டு வகை-புறப் பேச்சு, அகப் பேச்சு; அதாவது வாய் பேசுவது மற்றும் எண்ணங்களின் கிளர்ச்சி. வாய் பேசாமல் இருந்தாலும் எண்ணங்கள் ஆர்ப்பரித்து எழும். இரண்டும் அடங்க வேண்டும். தேவையற்ற பேச்சைப் பயிற்சியின்மூலம் குறைக்கவோ தவிர்க்கவோ முடியும். ஆனால் எண்ணங்கள் எழுவதை எப்படித் தவிர்ப்பது? ஒரு சாட்சியாக நின்று எண்ணங்கள் எழுந்து அடங்குவதைக் கவனிக்க வேண்டும். எழுகின்ற எண்ணங்களுடன் சேர்ந்து மிதக்காமல் தனித்து நின்று அவற்றைக் காண்பதற்குப் பழக வேண்டும். பேச்சு என்பது ஓர் உதாரணமாகக் கூறப்பட்டது. இவ்வாறே அனைத்துப் புலன்களையும் வசப்படுத்த வேண்டும். அதாவது புலன்களின் போக்கில் போகாமல் சாட்சியாக நின்று பழக வேண்டும்.

இதுவே பேச்சை மனத்தில் ஒடுக்குவது என்ற முதற்படி. இந்தப் பயிற்சி மனத்திற்குப் பெரிய ஆற்றலையும் அமைதியையும் தருவதை நாம் உணர முடியும்.
தொடரும் படிகள் நாம் முன்னேற முன்னேற தாமாகவே நிகழ்வதை நாம் காணலாம். மனம் என்ற ஒன்றை நாம் அறிந்திருப்பதால் முதற்படி எளிதாக விளங்குகிறது. ஆனால் விழிப்புற்ற புத்தியோ, ஆன்மாவோ, இறைவனோ நாம் அறியாதவை. எனவே சாதனை முறையின் இரண்டாவது படியான விழிப்புற்ற புத்தி அல்லது புத்தி விழிப்புறுவதை உணரும் போதுதான் மனத்தை விழிப்புற்ற புத்தியில் ஒடுக்குவது என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். தொடரும் படிகள் அனைத்தும் இவ்வாறே. எனவே பேச்சைக் கட்டுப்படுத்தி பயிற்சியைத் தொடங்க வேண்டியதே முக்கியம். பேச்சைக் குறைத்து அமைதியைக் கடைப்பிடிப்பதன்மூலம் அமைதியின் உறை விடமான இறைவனை அடைகிறோம்.

குரு தேவை

14. உத்திஷ்ட்டத ஜாக்ரத ப்ராப்ய வாரன் நிபோதத
க்ஷúரஸ்ய தாரா நிசிதா துரத்யயா ஆர்கம் பதஸ்தத்கவயோ வதந்தி

உத்திஷ்ட்டத-எழுங்கள்; ஜாக்ரத-விழியுங்கள்; வரான்-தகுந்த குருவை; ப்ராப்ய-அடைந்து; நிபோதத-அனுபூதி பெறுங்கள்; நிசிதா-கூரான;க்ஷúரஸ்ய-கத்தியின்; தாரா-முனை; துரத்யயா-நடக்க இயலாதது; தத்-அது; துர்கம்-கடினமானது; கவய;-சான்றோர்கள் வதந்தி-கூறுகின்றனர்.

பொருள் : எழுங்கள், விழியுங்கள், தகுந்த குருவை அடைந்து அனுபூதி பெறுங்கள். கூரான கத்தியின் முனைமீது நடப்பதுபோன்று இறைநெறி கடினமானது என்று சான்றோர்கள் கூறுகின்றனர்.

தகுந்த குரு ஒருவரை அடைய வேண்டும். ஆனால் அதற்கு முன் நாம் செய்ய வேண்டிய இரண்டு விஷயங்களை இந்த மந்திரம் தெரிவிக்கிறது. முதலில் எழுந்திருக்க வேண்டும், பிறகு விழிக்க வேண்டும். எழுந்து, விழித்து, தகுந்த குருவை அடையும்போது அவர் அனுபூதி நிலைக்கான வழியைக் காட்டுவார். இந்த மூன்று படிகளையும் அப்யாரோஹ மந்திரம் (ஓம் அஸதோ மா ஸத்கமய தமஸோ மா ஜ்யோதிர் கமய ம்ருத்யோர்மா அம்ருதம் கமய) விளக்குகிறது.

உண்மையற்ற நிலையிலிருந்து என்னை
உண்மை நிலைக்கு அழைத்துச் செல்வாயாக!
அறியாமை இருளிலிருந்து என்னை
அறிவுப் பேரொளிக்கு அழைத்துச் செல்வாயாக!
மரணத்திலிருந்து என்னை
மரணமிலாப் பெருநிலைக்கு அழைத்துச் செல்வாயாக!

என்று பிரார்த்திக்கிறது அந்த வேத மந்திரம். எழுந்திருத்தல் என்றால் உண்மையற்றதிலிருந்து உண்மையைப் பிரித்தறிதல். விழித்தல் என்றால் அறியாமையிலிருந்து விடுபடல். மூன்றாவதாக மரணமிலாப் பெருநிலையாகிய அனுபூதியை அடைதல். உண்மையற்ற உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; இதில் உண்மையான இன்பத்தையோ அமைதியையோ அடைய முடியாது என்பதை உணர்வது முதற்படி. இது வெறும் புத்தக அறிவாக இல்லாமல் மனத்தின் அடியாழங்களில் பதிய வேண்டும். அப்போது தான் நமது செயல்கள் அதற்கேற்ப அமையும்.

உண்மையற்றதிலிருந்து உண்மையைப் பிரித்தறியும் போது நமக்குத் தெரிவது என்ன? நாம் அறியாமையில் மூழ்கியிருக்கிறோம் என்ற உண்மை. எது அறியாமை? புற வளர்ச்சியை உண்மையான வளர்ச்சி என்று நம்பி அகவளர்ச்சியில் நாட்டம் செலுத்தாமல் இருப்பதுதான் அது. இந்த உண்மையைப் புரிந்துகொண்டு அக வளர்ச்சியில் நாட்டம் செலுத்துவதுதான் விழித்தல் என்கின்ற இரண்டாம்படி. அக வளர்ச்சியில் நாட்டம் செலுத்தும்போதுதான் குருவின் தேவையை உண்மையாக நாம் உணர்வோம். உண்மையான தேவையுடன் தகுந்த குருவை அடைந்து அவரால் வழிகாட்டப்படும்போது இறையனுபூதி வாய்க்கிறது.

இறையனுபூதியின் மகிமை

15. அசப்தமஸ்பர்சமரூபமவ்யயம்
ததாரஸம் நித்யமகந்தவச்ச யத்
அனாத்யனந்தம் மஹத: பரம் த்ருவம்
நிசாய்ய தன்ம்ருத்யுமுகாத் ப்ரமுச்யதே

யத்-எது; அசப்தம்-ஒலியைக் கடந்தது; அஸ்பர்சம்-தொடு உணர்ச்சியைக் கடந்தது; அரூபம்-காட்சியைக் கடந்தது; அரஸம்-சுவையைக் கடந்தது; அந்தவத் ச-மணத்தைக் கடந்தது; ததா-அதுபோல்; அவ்யயம்-அழிவற்றது; நித்யம்-என்றென்றும் இருப்பது; அனாதி-ஆரம்பம் இல்லாதது-அனந்தம்-முடிவற்றது; மஹத-புத்தியைவிட; பரம்-மேலானது; த்ருவம்-நிலையானது; தத்-அதை; நிசாய்ய-அனுபூதியில் உணர்ந்து; ம்ருத்யுமுகாத்-மரணத்தின் பிடியிலிருந்து; ப்ரமுச்யதே-விடுபடுகிறான்.

பொருள் : ஒலி, தொடு உணர்ச்சி, காட்சி, சுவை, மணம் என்று புலன்களால் உணரக்கூடிய அனைத்தையும் கடந்த, அழிவற்ற, என்றென்றும் உள்ள, ஆரம்பம் இல்லாத, முடிவற்ற, புத்தியைவிட மேலான, நிலையான இறைவனை அனுபூதியில் உணர்பவன் மரணத்தின் பிடியிலிருந்து விடுபடுகிறான்.

உபநிஷத மகிமை 16-17

பொதுவாக ஒரு நூலின் முடிவில்தான் உபநிஷத மகிமை சொல்லப்படும். தொடரும் இரண்டு மந்திரங்களுடன் கட உபநிஷதத்தின் முதல் பகுதி நிறைவுறுவதால் இங்கும் கூறப்படுகிறது.

16. நாசிகேதமுபாக்யானம் ம்ருத்யு ப்ரோக்தம் ஸனாதனம்
உக்த்வா ச்ருத்வா மேதாவீ ப்ரஹ்ம லோகே மஹீயதே

நாசிகேதம்-நசிகேதன் கேட்ட; ம்ருத்யு ப்ரோக்தம்-எமதர்மன் கூறிய; ஸனாதனம்-பழமையான; உபாக்யானம்-விஷயத்தை; உக்த்வா-சொல்லி; ச்ருத்வா ச- கேட்கின்ற; மேதாவீ-புத்தி வழிக்கப் பெற்றவன்; ப்ரஹ்மலோகே-உயர் உலகங்களில்; மஹீயதே-போற்றப்படுகிறான்.

பொருள் : நசிகேதனுக்கு எமதர்மன் கூறிய இந்தப் பழமையான விஷயத்தை விழிப்புணர்வு பெற்ற ஒருவன் சொல்லவும் கேட்கவும் செய்தால் உயர் உலகங்களில் போற்றப்படுகிறான்.

17. ய இமம் பரமம் குஹ்யம்
ச்ராவயேத் ப்ரஹ்ம ஸம்ஸதி
ப்ரயத: ச்ராத்தகாலே வா ததானந்த்யாய கல்பதே
ததானந்த்யாய கல்பத இதி

ய-யார்; ப்ரயத-தூயவனாக இருந்து; பரமம்-மேலான; குஹ்யம்-பொருளாழம் மிக்க; இமம்-இதனை; ப்ரஹ்ம ஸம்ஸதி-சான்றோர்களின் சபையிலோ; ச்ராத்தகாலே வா-சிராத்த காலத்திலோ; ச்ராவயேத்-கேட்கச் செய்கிறானோ; தத்-அது; அனந்த்யாய-எல்லையற்ற பலனை; கல்பதே-தருகிறது.

பொருள் : மேலான, பொருளாழம் மிக்க இந்த உபநிஷதத்தைச் சான்றோர்களின் சபையிலோ சிராத்த காலத்திலோ தூயவனான ஒருவன் படித்தால் அது எல்லையற்ற பலனைத் தருகிறது.

பொதுவாக உபநிஷதங்கள் போன்றவற்றைப் படிப்பது ஒரு புண்ணிய செயலாகக் கருதப்படுகிறது. ஆனால் அதன் முழுப் பலனையும் பெற வேண்டுமானால் புத்தி விழிக்கப் பெற்ற தூயவனாக இருத்தல் அவசியம் என்பதை இந்த 16 மற்றும் 17 ஆம் மந்திரங்கள் கூறுகின்றன. அவர்களால்தான் உபநிஷங்களின் உட்பொருளை உணர்ந்துகொள்ள முடியும்; அதற்கேற்ப செயல்பட முடியும் என்பதே இதன் கருத்து. பாடுபடுபவர்களுக்கே பலன், வெறுமனே கிளிப்பிள்ளைபோல் படிப்பவர்கள் உயர்ந்த பலனை எதிர்ப்பார்க்கக் கூடாது.

இதி காடக உபநிஷதி ப்ரதம அத்யாயே த்ருதீயா வல்லீ

 

கட உபநிஷதம் மரணத்தை எதிர்கொள்வது எப்படி?

1.2 பிரித்திறந்து வாழ்!

மரணத்திற்குப் பிறகு மனிதனின் நிலை என்ன என்று கேட்டான் நசிகேதன். பலவிதங்களில் சோதித்து அவனது தகுதியை அறிந்த பிறகு சொல்லத் தொடங்குகிறான் எமதர்மன்.

மரணத்திற்குப் பின்னால் என்ன உள்ளது என்பதைப் பற்றி அறிய வேண்டுமானால் மரணத்தை எதிர் கொள்ள வேண்டும். இறக்கின்ற ஒவ்வொருவரும் மரணத்தை எதிர்கொள்வதில்லையா? இல்லை. பெரும்பாலோரும் மரணம் வருமுன்பு பயத்திலேயே செத்து விடுகின்றனர். எனவே அவர்கள் மரணத்தை எதிர்கொள்வதில்லை.

மரணத்தை எதிர்கொள்வது எப்படி?

வாழ்கையில் கவனம் செலுத்துவதன்மூலம். இந்த வாழ்க்கையைச் சிறப்பாக, உரிய முறையில் வாழ்பவனே இறைநிலையை அடைகிறான் (வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்) என்கிறார் தெய்வப் புலவர். வாழ்க்கை நம் முன் பல அனுபவங்களைக் கொண்டு வரும், சூழ்நிலைகளை உருவாக்கும், வாய்ப்புகளைத் தரும். அவற்றுள், நமது லட்சியத்திற்கானவற்றை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றவற்றை விலக்கி வாழ அறிந்திருக்க வேண்டும். இவ்வாறு பிரித்தறிந்து வாழ்வதை அத்யாத்ம யோகம் என்று இந்த அத்தியாயத்தில் விளக்குகிறான் எமதர்மன் இவ்வாறு வாழத் தெரிந்தவனால் மரணத்தை எதிர்கொள்ள முடியும். மரணத்திற்கு அப்பால் உள்ளது என்ன என்பதை அறிய முடியும்.

எனவே வாழ்க்கையின் ஓர் அற்புதமான சித்திரத்துடன் தனது விளக்கத்தைத் தொடங்குகிறான் எமதர்மன்.

வாழ்க்கையின் இரண்டு கோணங்கள்(1-6)

பொதுவாக ஒருவனிடம் இருப்பவற்றை வைத்தே அவனை எடைபோடுகிறோம். வீடு, செல்வம், பதவி, அந்தஸ்து போன்ற புற வளர்ச்சிகளே அவனை நிர்ணயிக்கின்றன. ஆனால் அக வளர்ச்சி, உணர்வின் விரிவு என்று ஒன்று உள்ளது. மனிதன் அகத்திலும் வளர்கிறான். அன்பு, இரக்கம், விவேகம் போன்ற அவனது பண்புகள் விரிகின்றன. தன் உடம்பை, தன்னை மட்டுமே நேசித்தவன், தன் வீடு, தன் கிராமம், தன் நாடு, உலகம் என்ற பிரபஞ்சம் முழுவதையுமே தனதாகக் கண்டு, தானாகக் கண்டு நேசிக்கும் அளவிற்கு அவனது உணர்வு விரிகிறது.

இந்த அக வளர்ச்சிதான் உண்மையான வளர்ச்சி. புற வளர்ச்சிக்குக் காரணமாக அவனிடம் சேர்ந்தவை விலக நேர்ந்தால் அவன் பழையபடியே ஆகிவிட நேர்கிறது. ஆனால் அக வளர்ச்சியில் எதையும் இழக்கும் அபாயம் இல்லை.

அக, புற வளர்ச்சிகளுக்கான களம் உலகம் : 1-3

அக வளர்ச்சி, புற வளர்ச்சி இரண்டிற்குமான களமாக உள்ளது உலகம். அதாவது உலகம் இரண்டிற்கும் வாய்ப்பு தருகிறது.

1. அன்யச்ச்ரேயோ ன்யதுதைவ ப்ரேய
தே உபே நானார்த்தே புருஷம் ஸினீத
தயோ: ச்ரேய ஆததானஸ்ய ஸாது பவதி
ஹீயதேர்த்தாத் ய உ ப்ரேயோ வ்ருணீதே

ச்ரேய-மேலானது; அன்ய-வேறு; உத-மேலும்; ப்ரேய-சுகம் தருவது; அன்யத் ஏவ-வேறானது; தே உபே-அவை இரண்டும்; நானா அர்த்தே-வேறுபட்ட பலன்களைத் தந்து; புருஷம்-மனிதனை; ஸினீத-பிணைக்கின்றன; தயோ-அந்த இரண்டினுள்; ச்ரேய-மேலானதை; ஆததானஸ்ய-ஏற்றுக்கொள்பவனுக்கு; ஸாது-நன்மை; பவதி-உண்டாகிறது; ய-யார்; ப்ரேய: உ-சுகம் தருவதை; வ்ருணீதே-நாடுகிறானோ; ஸ:-அவன்; அர்த்தாத்-லட்சியத்திலிருந்து; ஹீயதே-வீழ்கிறான்.

பொருள் : மேலானது வேறு, சுகம் தருவது. அவை இரண்டும் வேறுபட்ட பலன்களைத் தந்து அவற்றின் மூலம் மனிதனைப் பிணைக்கின்றன. மேலானதை ஏற்றுக்கொள்பவனுக்கு நன்மை உண்டாகிறது. சுகம் தருவதை நாடுபவன் லட்சியத்திலிருந்து வீழ்கிறான்.

உலகையும் அது தரும் சுகபோகங்களையுமே முடிவாகக் கொண்டு அவற்றைத் தேடுபவர்கள் பலர்; அவை பாதையில் சில படிக்கற்கள் மட்டுமே என்று கண்டு உயர் லட்சியங்களை நாடுபவர்கள் சிலர். இரு சாராரின் முன்னாலும் உலகம் உள்ளது. முன்னது புற வளர்ச்சிக்கு உதவுகிறது, மேலானது. உலகின் சுகங்கள், அனுபவிக்கின்ற அந்த நேரத்திற்கு இன்பத்தைத் தந்தாலும் முடிவில் துயரத்தில் ஆழ்த்துகின்றன. உயர் லட்சியங்கள் ஆரம்பத்தில் சிரமமாக, துன்பம் தருபவையாக இருந்தாலும் முடிவில் பேரின்பத்தில் சேர்க்கின்றன. மேலோட்டமாக இன்பத்தை நாடுபவன் முடிவில் துன்பத்தல் ஆழ்கிறான் என்பதையே இந்த மந்திரம், அவன் லட்சியத்திலிருந்து வீழ்கிறான் என்று கூறுகிறது.

2. ச்ரேயச்ச ப்ரேயச்ச மனுஷ்யமேத
தௌ ஸம்பரீத்ய விவினக்தி தீர
ச்ரேயோ ஹி தீரோபி ப்ரேயஸோ வ்ருணீதே
ப்ரேயா மந்தோ யோக ÷க்ஷமாத் வ்ருணீதே

ச்ரேய: ச-மேலானதும்; ப்ரேய: ச-சுகம் தருவதும்; மனுஷ்யம்-மனிதனை; ஏத-அணுகுகின்றன; தீர;-அறிவாளி ; தௌ-அவற்றை; ஸம்பரீத்ய-ஆராய்ந்து; விவினக்தி-பாகுபடுத்துகிறான்; ப்ரேயஸ-சுகம் தருவதை விட்டு; ச்ரேய; ஹி-மேலானதையே; அபி வ்ருணீதே-தேர்ந்தெடுக்கிறான். மந்த-மூடன்; யோக ÷க்ஷமாத்-உடம்பின் வளர்ச்சி, பாதுகாப்பு ஆகியவற்றிற்காக; ப்ரேய:-சுகம் தருவனவற்றை; வ்ருணீதே-வேண்டுகிறான்.

பொருள் : மேலானது, சுகம் தருவது இரண்டும் மனிதனை அணுகுகின்றன. அறிவாளி அவற்றை ஆராய்ந்து, அவை இரண்டையும் பாகுபடுத்துகிறான்; சுகம் தருவனவற்றை விட்டுவிட்டு மேலானதைத் தேர்ந்தெடுக்கிறான். மூடன், உடம்பின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு சுகம் தருவனவற்றை நாடுகிறான்.

பாதையில் பணக்கட்டு ஒன்று கிடக்கிறது, அருகில் யாரும் இல்லை. அதை இறைவன் தந்தது என்று எடுத்து பையில் இட்டுக்கொண்டு எதுவும் அறியாயதுபோல் அங்கிருந்து அகலலாம், எடுத்து உரியவனைக் கண்டுபிடித்து அதைச் சேர்க்கலாம், எடுத்து நல்ல பணிகளில் செலவிடலாம், போலீஸ் ஸ்டேஷனில் தகவல் தெரிவிக்கலாம், நமக்கேன் வம்பு என்று அதை அங்கேயே விட்டுச் செல்லலாம். பொறுப்பு நம் கையில். அந்தப் பணத்தைப் பையில் இட்டுக் கொள்பவன் சுகம் பெறுகிறான்; ஆனால் அது திருட்டு என்பதால் மேலானதை இழக்கிறான்; இறைநெறியில் செல்வதற்கான தகுதியை இழக்கிறான். இவ்வாறு உலகம் வாய்ப்புகளைத் தருகிறது, சூழ்நிலைகளை உருவாக்குகிறது. நமது லட்சியம் என்ன, அந்த லட்சியத்திற்கான பாதை எது, இந்தச் சூழ்நிலையில் நான் எப்படி நடந்துகொண்டால் அது அந்த லட்சியத்தை அடையத்துணை செய்யும் என்பதை மனத்தில்கொண்டு செயல்பட வேண்டும். பிரித்தறிந்து வாழ்வது என்பது இதுவே.

3. ஸ த்வம் ப்ரியான் ப்ரியரூபாம்ச்ச காமான்
அபித்யாயன்  நசிகேதோ த்யஸ்ராக்ஷீ
ஸநதாம் ஸ்ருங்காம் வித்தமயீமவாப்தோ
யஸ்யாம் மஜ்ஜந்தி பஹவோ மனுஷ்யா

நசிகேத-நசிகேதா; ஸத்வம்-நீயோ; அபி த்யாயன்-நன்றாகச் சிந்தித்து; ப்ரியான்-செல்வங்களையும்; ப்ரியரூபான்-அழகிய பெண்களையும்; அத்யஸ்ராக்ஷீ-ஒதுக்கிவிட்டாய்; யஸ்யாம்-எந்தப் பாதையில்; பஹவ-பெரும்பாலான; மனுஷ்யா-மனிதர்கள்; மஜ்ஜந்தி-உழல்கிறார்களோ; வித்தமயீம்-செல்வத்தைக் குறிக்கோளாகக் கொண்டது; ஏதாம்-இந்த; ஸ்ருங்காம்-பாதையை; ந அவாப்த; -தேர்ந்தெடுக்கவில்லை.

பொருள் : நசிகேதா! நீயோ நன்றாகச் சிந்தித்து, செல்வங்களையும் அழகிய பெண்களையும் ஒதுக்கிவிட்டாய், எந்தப் பாதையில் பெரும்பாலான மனிதர்கள் உழல்கிறார்களோ அது செல்வத்தைக் குறிக்கோளாகக் கொண்டது. அந்தப் பாதையை நீ தேர்ந்தெடுக்கவில்லை.

இறைநெறியும் உலகியலும்

4. தூரமேதே விபரீதே விஷூசீ
அவித்யா யா ச வித்யேதி ஜ்ஞாதா
வித்யாபீப்ஸினம் நசிகேதஸம் மன்யே
ந த்வா காமா பஹவோலோகலுபந்த

யா-எது; அவித்யா-உலகியல்; யா-எது; வித்யா-இறைநெறி; இதி-என்று; ஜ்ஞாதா-அறியப்படுகின்றனவோ; ஏதே-இரண்டும்; தூரம்-வேறுபட்டவை; விபரீதே-நேர்மாறானவை; விஷூசீ-வேறான பாதைகளைப் பின்பற்றுபவை; பஹவ-பல; காமா-ஆசைகள்; த்வா-உன்னை; ந அலோலுபந்த-விலக்கவில்லை; நசிகேதஸம்-நசிகேதனை; வித்யாம் அபி-இறைநெறியில்; ஈப்ஸினம்-நாட்டமுடையவனாக; மன்பே-கருதுகிறேன்.

பொருள் : இறைநெறி, உலகியல் இரண்டும் வேறுபட்டவை, நேர்மாறானவை, வேறுவேறான பாதைகளைப் பின்பற்றுபவை. எந்த ஆசையும் உன்னை மேலான பாதையை நாடுவதிலிருந்து விலக்கவில்லை. எனவே நீ இறைநெறியில் நாட்டமுடையவன் என்று நான் கருதுகிறேன்.

வித்யை(இறை நெறி), அவித்யை(உலகியல்) இரண்டும் உள்ளன. அவித்யை மோகத்தில் ஆழ்த்துகிறது. காமமும் பணத்தாசையும் அதிலிருந்தே உண்டாகிறது, அது மனிதனை மோகத்தில் ஆழ்த்துகிறது. பக்தி, தயை, ஞானம், பிரேமை இவற்றைத் தோற்றுவிப்பது வித்யை. இது இறை நெயில் நம்மை அழைத்துச் செல்கிறது. என்று விளக்குகிறார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

உலகியல் வழிச் செல்பவர்களின் கதி: 5-6

5. அவித்யாயாமந்தரே வர்த்தமானா
ஸ்வயம் தீரா: பண்டிதம் மன்யமானா
தந்த்ரம்யமாணா: பரியந்தி மூடா
அந்தேனைவ நீயமானா யதாந்தா

அவித்யாயாம்-உலகியலின்; அந்தரே-நடுவில்; வர்த்தமானா-வாழ்பவர்கள்; ஸ்வயம்-தங்களை; தீரா-அறிவாளிகள்; பண்டிதம்-பண்டிதர்கள்; மன்யமானா-கருதுபவர்கள்; மூடா-மூடர்கள்; தந்த்ரம்யமாணா-குறுக்குவழிகளைப் பின்பற்றுபவர்கள்; அந்தேன-குருடனால்; நீயமானா-வழிகாட்டப்படுகின்ற; அந்தா யதா இவ-குருடனைப்போல்; பரியந்தி-உழல்கிறார்கள்.

பொருள் : உலகியலின் நடுவில் வாழ்கின்ற மூடர்கள் தங்களை அறிவாளிகள் என்றும் பண்டிதர்கள் என்றும் கருதி குறுக்கு வழிகளைப் பின்பற்றுகிறார்கள். குருடனால் வழிகாட்டப்பட்ட குருடனைப்போல் இவர்கள் மீண்டும்மீண்டும் பிறவிச் சுழலில் உழல்கிறார்கள்.

மேலானது என்று எமதர்மன் குறிப்பிடுகின்ற அகவளர்ச்சி அல்லது இறைநெறியில் குறுக்கு வழி எதுவும் கிடையாது. உலகில் சுக போகங்களை அனுபவித்து அல்லது குருவருளாலோ இறையருளாலோ புரிந்துகொண்டு, இந்த உலகம் போதும், இனி இறைவன் ஆசைகளை வைத்துக்கொள்ளலாம், கொஞ்சம் இறைவனையும் தேடலாம் என்றெல்லாம் கூறுபவர்கள் உண்மையை அறியாதவர்கள். சுயநலங்களுக்காக பிறருக்கு தவறான வழிகாட்டுபவர்கள். அவர்கள் காட்டும் பாதைகள் ஆரம்பத்தில் இதம் தருபவையாகத் தோன்றும். ஆனால் இறுதியில் படுகுழியிலேயே ஒருவனை ஆழ்த்தும். அத்தகைய வழிகாட்டுபவன். பின்பற்றுபவன் இருவருமே படுகுழியில் வீழ்கிறார்கள்
(குருட்டிகனை நீக்கும் குருவினைக்  கொள்ளார்
குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டாம் ஆடி
குருடும் குருடும் குழிவிழுமாறே)என்று எச்சரிக்கிறார் திருமூலர்.

அக வளர்ச்சி நோக்கமாகக் கொண்ட இறைநெறி என்பது ஆரம்பத்தில் கடினமாகத் தெரிகிறது. ஆனால் இறுதியில் பேரின்பத்தைத் தருகிறது. எனவே குறுக்கு வழிகளை நாடாமல், சிரமமாக இருந்தாலும், உண்மையான வழிகளை நாட வேண்டும் என்பது இந்த மந்திரத்தின் கருத்து.

6. ந ஸாம்பராய: ப்ரதிபாதி பாலம்
ப்ரமாத்யந்தம் வித்தமோஹேன மூடம்
அயம் லோகோ நாஸ்தி பர இதி மானீ
புன: புனர் வசமாபத்யதே மே

ப்ரமாத்யந்தம்-குறுக்குவழியில் செல்கின்ற; வித்த மோஹேன-பணத்தாசையால்; மூடம்-அறிவிழந்த; பாலம்-மனப்பக்குவமற்றவனுக்கு; ஸாம்பராய;-மறுவுலகம்; ந ப்ரதிபாதி-புரிவதில்லை; அயம்-இந்த; லோக:-உலகம்; பர-வேறு; ந அஸ்தி-கிடையாது; இதி-என்று; மானீ -கருதுபவன்; புன: புன: மீண்டும் மீண்டும்; மே வசம்-என்னை; ஆபத்யதே-அடைகிறான்.

பொருள் : குறுக்குவழியில் செல்கின்ற, பணத்தாசையால் அறிவிழந்த. மனப்பக்குவமற்றவர்களுக்கு மறுவுலக உண்மைகள் புரிவதில்லை. இந்த உலகம்தான் எல்லாம், வேறு எதுவும் கிடையாது என்று கருதுகின்ற அவர்கள் மீண்டும் மீண்டும் என்னை அடைகிறார்கள்.

குருக்குவழிகளை நாடுபவர்கள் மீண்டும் மீண்டும் மரண தேவனிடம் செல்கிறார்கள், அதாவது பிறப்பு-இறப்புச் சுழலில் உழல்கிறார்கள். அவர்கள் உயர்ந்த கதியை அடைவதில்லை. ஏன்? ஏனெனில் அவர்களுக்கு உண்மை புரியவில்லை; உலகமும் அது தருகின்ற சுகங்களும்தான் எல்லாம், அவற்றை அனுபவிப்பதே லட்சியம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்; அக வளர்ச்சி, உயர் லட்சியம் எதையும் அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

மரத்தால் செய்யப்பட்ட யானைச்சிலை ஒன்று உள்ளது. குழந்தை அதைப் பார்க்கும்போது யானை என்று பயப்படுகிறது. அங்கே அது மரத்தைக் காணவில்லை. மனவளர்ச்சி பெற்ற ஒருவன் அதே சிலையைக் காணும்போது அவன் பயப்படுவதில்லை. ஏனெனில் அங்கே அவன் யானையைக் காண்பதில்லை, மரப் பொம்மையைக் காண்கிறான். அதுபோல்தான் இந்த உலகமும். சுகபோகங்களும் காமமும் பணத்தாசையும் நம்மீது ஆதிக்கம் செலுத்தும் வரை உயர் லட்சியங்களோ அகவுலகமோ எதுவும் நம்  சிந்தையில் வருவதில்லை. அக வளர்ச்சி பெற்று உயர் லட்சியங்களை ஏற்று இறைநிலையை அடையும்வரை பிறவிச் சுழலிலிருந்து விடுபட முடியாது என்கிறது இந்த மந்திரம்.

உண்மையான குருவும் சீடரும் அபூர்வம்: 7-10

7. ச்ரவணாயாபி பஹுபிர்யோ ந லப்ய
ச்ருண்வந்தோபி பஹவோ யம் ந வித்யு
ஆச்சர்யோ வக்தா குசலோஸ்ய ஸப்தா
ஆச்சர்யோ ஜ்ஞாதா குசலானுசிஷ்ட்ட

ய:-எதனை; பஹுபி: பலரால்; ச்ரவணாய அபி-கேட்கவும்; ந லப்ய:-முடியவில்லையோ; ச்ருண்வந்த: அபி-கேட்டபோதிலும்; பஹவ-பலரால்; யம்-எதனை; ந வித்யு: அறிய முடியவில்லையோ; அஸ்ய-இதனை; வக்தா-உபதேசிப்பவரும்; ஆச்சர்ய:-அபூர்வம்; லப்தா-கேட்பவரும்; குசல:-அபூர்வம்; குசல அனுசிஷ்ட்ட: சிறந்த ஒருவரைப் பின்பற்றி; ஜ்ஞாதா அறிபவரும் ஆச்சர்ய-அபூர்வம்.

பொருள் : எதைப்பற்றி பலரால் கேட்க முடியவில்லையோ, கேட்கும் பலரால் எதனை அறிய முடியவில்லையோ அந்த ஆன்மாவைப்பற்றி உபதேசிப்பவரும் அபூர்வம், கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம்.

ஆன்மா, ஆன்மீகம், கடவுள், அக வளர்ச்சி, உணர்வு போன்ற உயர் உண்மைகளைப்பற்றி கேட்கும் வாய்ப்பு பெரும்பாலோருக்கும் கிடைப்பதில்லை என்பது உண்மை தான். ஆனால் நாம் உயர் உண்மைகளை உணர்வதற்கான தகுதி பெறும்போது, நமது மனம் அதற்கான பக்குவம் பெறும்போது அந்த உண்மைகளை உபதேசிப்பவர் வந்து சேர்வார் என்பதும் உண்மை. வயல் தயாரானதும், விதை வந்து சேர்ந்தேயாக வேண்டும் என்பது இயற்கையின் அறிய இயலாத நியதியாகும்........ நாம் எவ்வளவோ விரும்பியும், நமக்கு உண்மை இன்னும் கிடைக்கவில்லை என்று நாம் அங்கலாய்த்துக் கொள்ளும்போது, நமது முதல் கடமை, நம்முடைய  உள்ளத்தையே ஆராய்ந்து பார்த்து, உண்மையிலேயே நாம் உண்மையை விரும்புகிறோமோ என்று கண்டுபிடிப்பதுதான். பெரும்பாலோர் விஷயத்தில் நாம் இன்னும் தகுதி பெறவில்லை, நமக்கு உண்மையான ஆன்மீக தாகம் இன்னும் ஏற்படவில்லை என்பதையே காண்போம். என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

தகுதியான ஒருவர் வந்து அவரிடம் உபதேசம் பெற்றாலும், நமது நம்பிக்கை திடமாக இல்லாவிட்டால் பயனில்லை. என்னால் உயர் உண்மைகளை அடைய முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். இவரால் எனக்கு வழி காட்ட முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். இந்த வழி என்னை என் லட்சியத்திற்கு எடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கை வேண்டும். இவற்றுள் ஒன்று ஊசலாடினாலும் நமது முன்னேற்றம் தடைபடும். எனவேதான் தகுதி வாய்ந்த குருவும் அபூர்வம், தகுதி வாய்ந்த சீடனும் அபூர்வம் என்று இந்த மந்திரம் கூறுகிறது. ஆன்மீகத்தைப் பற்றிப் பேசுபவர் அற்புதமானவராக இருக்க வேண்டும். கேட்பவரும் அப்படியே இருக்க வேண்டும். இருவரும் சிறப்பான, அசாதாரணமானவர்களாக  இருக்கும்போது மட்டுமே மிகச் சிறந்த ஆன்மீக வளர்ச்சி ஏற்படுகிறது. இல்லாவிட்டால் ஏற்படாது. இவர்களே உண்மையான குருமார்கள், இவர்களே உண்மையான சீடர்கள். இவர்களோடு ஒப்பிடும்போது மற்றவர்கள் ஆன்மீகத்தோடு விளையாடுகிறார்கள்; தங்கள் அறிவாற்றலுக்குப் பயிற்சி கொடுக்கிறார்கள்; தங்கள் ஆர்வத்தைச் சிறிது தீர்த்துக் கொள்கிறார்கள்; ஆனால் உண்மையில், இன்னும் வெளிவிளிம்பில் நின்றுகொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் என்று விளக்குகிறார் சுவாமி விவேகானந்தர்.

8. ந நரேணாவரேண ப்ரோக்த ஏஷ
ஸுவிஜ்ஞேயோ பஹுதா சிந்த்யமான
அனன்ய ப்ரோக்தே கதிரத்ர நாஸ்தி அணீயான்
ஹ்யதர்க்யம் அணுப்ரமாணத்

ஏஷ-இந்த ஆன்மா; அவரேண நரேண-உலகியல் மனிதனால்; ப்ரோக்த-கூறப்படும்போது: ந ஹி ஸுவிஜ்ஞேய-நன்றாக அறியப்படுவதில்லை; பஹுதா -பலவிதமாக; சிந்த்யமான-கருதப்படுகிறது; அனன்ய-அனுபூதி பெற்றவரால்; ப்ரோக்தே-உபதேசிக்கப்படும் போது; அத்ர-இந்த விஷயத்தில்; கதி-குழப்பம்; ந அஸ்தி-இல்லை; அணு ப்ரமாணாத்-அணுவைவிட-அணீயாள்-நுண்ணியது; அதர்க்யம்-வாதங்களுக்கு அப்பாற்பட்டது.

பொருள் : உலகியல் மனிதர்கள் கூறும் வழிகளால் இந்த ஆன்மாவை அறிய முடியாது; ஏனெனில் அவர்கள் பலவிதமாகக் கூறுகின்றனர். அனுபூதி பெற்றவனின் உபதேசங்களைப் பின்பற்றினால் குழப்பம் இல்லை. இந்த ஆன்மா அணுவைவிட நுண்ணியது. எனவே வாதங்களுக்கு அப்பாற்பட்டது.

ஆன்மா அனுபவித்திற்கு உரியது; ஆராய்ச்சிக்கோ வாதங்களுக்கோ உரியது அல்ல. கடலை நேரில் காணாத ஒருவனுக்கு, எவ்வளவு விளக்கினாலும் அவனால் கடலைப் புரிந்துகொள்ள முடியாது. அதுபோலவே ஆன்மாவையும் விளக்கங்களால் புரிந்துகொள்ள முடியாது. ஆன்மா என்ற ஒன்று உண்டு. அது பெரியது, அது சிறியது என்றெல்லாம் பல விளக்கங்களை நூல்களில் காண முடியும். அவற்றையும் படித்துவிட்டு விளக்க முயன்றால் அது சரியான விளக்கமாக அமையாது, அந்த விளக்கத்தைக் கேட்டு அதைப் பின்பற்ற முயற்சிப்பவனும் 1.2.5-இல் கண்டதுபோல் படுகுழியிலேயே வீழ்வான்.

ஆனால் ஆன்மாவை அனுபூதியில் அறிந்தவன் சரியான வழியைக் காட்டுவான். அந்த வழியில் செல்பவனும் அதனை அடைவான்.

நசிகேதனின் மனவுறுதி: 9-11

9. நைஷா தர்க்கேண மதிராபனேயா
ப்ரோக்தான்யேனைவ ஸுஜ்ஞானாய ப்ரேஷ்ட்ட
யாம் த்வமாப: ஸத்யத்ருதிர் பதாஸி
த்வாத்ருங் நோ பூயாந்நசிதேத: ப்ரஷ்ட்டா

ப்ரேஷ்ட்ட-அன்பற்குரியவனே; த்வம்-நீ யாம்-எந்த அறிவை; ஆப:-அடைந்துள்ளாயோ; ஏஷா -இந்த; மதி-அறிவு; தர்க்கேண-வாதங்களினால்; ந ஆபனேயா-அடையக் கூடியது அல்ல; அன்யேன ஏவ-மற்றவரால்; ப்ரோக்தா-உபதேசிக்கப்படும்போது; ஸுஜ்ஞானாய-மேலான ஞானத்திற்கு; ஸத்யத்ருதி; பத அஸி-உண்மையில் உறுதி உடையவனாக இருக்கிறாய்; நசிகேத:-நசிகேதா; ந-எங்களுக்கு; த்வாத்ருக்-உண்னைப்போல்; ப்ரஷ்ட்டா-மாணவன்; பூயாத்-உண்டாகட்டும்.

பொருள் : அன்பிற்குரியவனே! நீ அடைந்துள்ள இந்த அறிவு வாதங்களினால் அடையக்கூடியது அல்ல. உண்மையை உணர்ந்த ஒருவர் உபதேசித்து, அதைப் பின்பற்றும்போது அது ஒருவனை மேலான ஞானத்திற்கு அழைத்துச் செல்கிறது. நசிகேதா! உண்மையை அடைவதில் நீ உறுதி உடையவனாக இருக்கிறாய். உன்னைப்போன்ற மாணவர்கள் எங்களுக்குக் கிடைக்க வேண்டும்.

ஒரு லட்சியத்தை எடுத்துக்கொண்டால் அதனை அடைவதற்கான உறுதி வேண்டும் வழியில் எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றைத் தகர்த்தெறிந்து முன்னேறுகின்ற ஆற்றல் வேண்டும். அத்தகைய ஒருவனே லட்சியத்தை அடைவான். நசிகேதன் மரணத்திற்கு அப்பாலுள்ள  உண்மையை அறிய வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டான். அதிலிருந்து அவனை விலக்குவதற்காக எமன் எத்தனையோ ஆசைகளைக் காட்டினான். அவை அனைத்தையும் மறுத்துவிட்டு உண்மையை அடைய வேண்டும் என்ற ஒன்றிலேயே உறுதியாக இருந்தான் நசிகேதன். அத்தகைய மாணவர்கள் தனக்கு வேண்டும் என்று கூறி அவனைப் புகழ்கிறான் எமதர்மன்.

10. ஜானாம்யஹம் சேவதிரித்யநித்யம்
ந ஹ்யத்ருவை: ப்ராப்யதே ஹி த்ருவம் தத்
ததோ மயா நசிகேதச் சிதோக்னி
அநித்யைர் த்ரவ்யை: ப்ராப்தவானஸ்மி நித்யம்

சேவதி-வினைப்பயன்கள்; அநித்யம்-நிலையற்றவை; இதி-என்று; அஹம்-நான்; ஜானாமி-அறிவேன்; அத்ருவை; -நிலையற்ற பொருட்களால்; த்ருவம்-நிலையான; தத்-அந்த ஆன்மா; ந ப்ராப்யதே ஹி-அடையப்படாது; தத:-அதனால்தான்; அநித்யை: த்ரவ்யை யாகத்தை; சித-செய்து; நித்யம்-எம பதவியை; ப்ராப்தவான் அஸ்மி-அடைந்திருக்கிறேன்.

பொருள் : வினைப்பயன்கள் நிலையற்றவை என்று நான் அறிவேன். நிலையற்ற அவற்றால் ஆன்மாவை அடைய முடியாது. அதனால்தான் நிலையற்ற பொருட்களால் நசிகேத யாகத்தைச் செய்த நான் எம பதவியை அடைந்திருக்கிறேன்.

நாம் செய்கின்ற நல்ல மற்றும் தீய செயல்களால் விளைபவை வினைப்பயன்கள். எவ்வளவு நல்ல செயலாக இருந்தாலும், அதன் விளைவாக எவ்வளவு உயர்ந்த சொர்க்க பதவி கிடைத்தாலும் அது நிலையற்றதே. ஏனெனில் புண்ணியம் நிறைவுற்றதும் பூமியில் பிறந்தேயாக வேண்டும். ஆசைகளற்ற நிலையை அடையும்போது மட்டுமே பிறப்பு-இறப்பு என்னும் சுழலிலிருந்து விடுபட்டு நிலையான இறைவனை அடைய முடியும்.

இங்கே எமதர்மன் தன்னையே உதாரணமாகக் காட்டுகிறான். நசிகேத யாகத்தைச் செய்ததால் தனக்கு சொர்க்கத்தில் பதவி, அதாவது எம பதவி கிடைத்துள்ளது என்கிறான் அவன். அவனது புண்ணிய காலம் தீர்ந்ததும் இந்த எமபதவியும் போய்விடும்.

நிலையற்ற பொருட்களால் என்று எமன் இங்கே குறிப்பிடுவதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஹோம குண்டம், விறகு, நெய், போன்ற புறப்பொருட்களால் செய்த யாகத்தை எம தர்மன் இங்கே குறிப்பிடுகிறான். இது நிலையற்ற சொர்க்க பதவியையே தரும். அதே யாகத்தை ஓர் அக யாகமாக, ஆன்மீக சாதனையாக, ஒரு வித்யையாகச் செய்யும்போது அது நிலையான முக்திப்பேற்றைத் தருகிறது. அந்த சாதனையையே 12-ஆம் மந்திரம் விளக்குகிறது.

11. காமஸ்யாப்திம் ஜகத: ப்ரதிஷ்ட்டாம்
க்ரதோரனந்த்யமபயஸ்ய பாரம்
ஸ்தோமம் மஹதுருகாயம் ப்ரதிஷ்ட்டாம் த்ருஷ்ட்வா
த்ருத்யா தீரோ நசிகேதோ த்யஸ்ராக்ஷீ

நசிகேத-நசிகேதா, காமஸ்ய-ஆசைகளின்; ஆப்திம்-நிறைவிடம்; ஜகத-உலகின்; ப்ரதிஷ்ட்டாம்-ஆதாரமானது; க்ரதோ-யாகங்களின்; அனந்த்யம்-அளவற்ற பலனாக இருப்பது; அபயஸ்ய-பயமின்மைக்கு; பாரம்-மேலான இடமானது; ஸதோம-போற்றத் தக்கது; மஹத்-மகிமை வாய்ந்தது; உருகாயம்-நீண்ட காலம் நிலைத்திருப்பது; ப்ரதிஷ்ட்டாம்-மேலானது; த்ருஷ்டவா-அறிந்து; தீர-புத்திசாலியான நீ; த்ருத்யா-உறுதியுடன்; அத்யஸ்ராக்ஷீ-மறுத்துவிட்டாய்.

பொருள் : நசிகேதா! சொர்க்க லோகம் ஆசைகளின் நிறைவிடம், உலகின் ஆதாரம், யாகங்களின் பலனாகக் கிடைக்கின்ற அளவற்ற இன்பங்களின் இருப்பிடம், பயமின்மையின் உறைவிடம், போற்றத் தக்கது, மகிமை வாய்ந்தது, நீண்ட காலம் நிலைத்திருப்பது, மேலானது. புத்திசாலியான நீ(இந்த உண்மைகளை அறிந்தும், அது நிலையற்றது என்பதற்காக) அதனை உறுதியுடன் மறுத்துவிட்டாய்.

பூமியில் அனுபவிக்கின்ற சுகபோகங்கள் போதாமல் சொர்க்கத்தை நாடுகிறான் மனிதன். எனவே சொர்க்கம் என்பது அனைத்து ஆசைகளும் நிறைவேறுகின்ற இடமாகக் கருதப்படுகிறது.

பிரபஞ்சத்தை இயக்குகின்ற பல்வேறு சக்திகள் தேவர்களாக உருவகிக்கப்பட்டிருப்பதை 1.1.1 விளக்க வுரையில் கண்டோம். யாகங்களின்மூலம் மனிதர்கள் தேவர்களைப் பேண வேண்டும், பதிலாக தேவர்கள் மழை, காற்று முதலானவற்றின்மூலம் மனித குலத்தை வளர்ப்பார்கள். இந்தச் சுழற்சியில் ஏற்றத் தாழ்வு ஏற்படும்போது இயற்கை வளம் குன்றுகிறது. எனவேதான் சொர்க்கம் உலகிற்கு ஆதாரமாகக் கூறப்பட்டது.

நசிகேத வித்யை (12-17)

புற யாகத்தால் தனக்கு எம பதவி மட்டுமே கிடைத்தது(1.2.10) என்றும், இத்தகைய உலகங்களின் நிலையாமையை உணர்ந்த நசிகேதன் அவற்றை மறுத்து விட்டான் என்றும் (1.2.11) கூறிய எமதர்மன் அக யாகத்தைப் பற்றி அதாவது நசிகேத வித்யையைப்பற்றி கூற ஆரம்பிக்கிறான்.

அந்த அக்கினி இதயக் குகையில் உள்ளது. (1.1.13) என்பது நசிகேத வித்யையின் அடிப்படைக் கருத்தாக உள்ளது. அந்த இதயக் குகை பற்றிய விளக்கம் ஆரம்பிக்கிறது.

இதயக் குகை

12. தம் துர்தர்சம் கூடமனுப்ரவிஷ்ட்டம்
குஹாஹிதம் கஹ்வரேஷ்ட்டம் புராணம்
அத்யாத்ம யோகாதிகமேன தேவம்
மத்வா தீரோ ஹர்ஷ சோகௌ ஜஹாதி

துர்தர்சம்-சிரமப்பட்டு அடைய வேண்டியது; கூடம்-மறைவான இடத்தை; அனுப்ரவிஷ்ட்டம்-அடைந்தது; குஹாஹிதம்-இதயக் குகையில் உள்ளது; கஹ்வரேஷ்ட்டம்-இருண்ட பகுதியில் உள்ளது; தீர-புத்திவிழிப்புற்றவன்; புராணம்-பழமையானது; தம்-அந்த; வேதம்-ஒளிமயமானதை; அத்யாத்ம யோக அதிகமேன-அத்யாத்ம யோகத்தால்; மத்வா-தியானித்து; ஹர்ஷ சோகௌ-இன்ப துன்பங்களை; ஜஹாதி-கடக்கிறான்.

பொருள் : நீ கேட்ட ஆன்மா சிரமப்பட்டு அடைய வேண்டியது, மறைவான இடத்தில் இருப்பது, இதயக் குகையில் ஒளிர்வது, இருண்ட பகுதியில் உள்ளது, பழமையானது. புத்தி விழிப்புற்றவன் ஒளிமயமான அந்த ஆன்மாவை அத்யாத்ம யோகத்தால் தியானித்து இன்பதுன்பங்களைக் கிடக்கிறான்.

நம்முள்ளே இருக்கின்ற, நமக்கு ஆதாரமான ஆன்மா எளிதாக அறியத்தக்கது அல்ல. புறமுகமாக இயங்குகின்ற புலன்களை அகமுகமாக்கி ஆன்மாவைத் தேடுவது அவ்வளவு எளிய காரியம் அல்ல. எனவேதான் அதனை சிரமப்பட்டு அடைய வேண்டியது என்று இந்த உபநிஷதம் குறிப்பிடுகிறது.

இதயக் குகையில் ஆன்மா இருப்பதாக ஏற்கனவே (1.1.14) கண்டோம். ஆனால் இதயக் குகை என்ற ஒன்று இருப்பதாகவே நாம் அறிவதில்லையே, ஏன்? இதனைச் சற்று விரிவாக அறிய வேண்டியது அவசியம்.

இதயக் குகைபற்றி பேசப்படுகிறது இது எந்த இதயம்? லப்டப் என்று துடித்துக் கொண்டிருக்கின்ற பவுதீக இதயம் அல்ல இது. இது ஆன்மீக இதயம். இதற்கு மூன்று அடையாளங்களைச் சொல்கிறது நாராயண ஸூக்தம். ஒன்று, தொப்புளுக்கு மேலே ஒரு சாண் தூரத்தில் உள்ளது, ஆனால் அது சற்று இடது புறம் உள்ளது. ஆனால் ஆன்மீக இதயம் நடுவில் உள்ளது. இரண்டு, சுடர் வரிசையால் சூழப்பட்டுள்ளது. மூன்று, அந்த இதயம் பிரகாசிக்கிறது.(அதோ நிஷ்ட்ட்யா விதஸ்த்யாந்தே நாப்யாமுபரி திஷ்ட்டதி ஜ்வாலமாலாகுலம் பாதீ விச்வஸ்யாயதனம் மஹத் நாராயண ஸூக்தம், தைத்திரீய ஆரண்யாகம், 4.10.13.7). இந்த மூன்று அடையாளங்களும் பவுதீக இதயத்திற்குப் பொருந்தாது. இந்த ஆன்மீக இதயம்தான் இதயக் குகை. ஆனால் இதனை நாம் உணர்வதில்லையே! உணர்வதில்லை. ஆனாலும் அது அங்கே உள்ளது. இதுவே புத்தி, தீ; இதயத் தாமரை, மூன்றாம் கண் ஞானக் கண் என்றெல்லாம் சாஸ்திரங்களில் கூறப்படுகிறது. மிகப் பெரும்பாலோரிடம் இந்த ஆன்மீக இதயம் மலராமல் அரும்பாகவே உள்ளது. இதனால்தான் இது குகை, இருண்ட பகுதி, மறைவான இடம் என்றெல்லாம் கூறப்பட்டது முதலில் அதை மலரச் செய்ய வேண்டும், உணர வேண்டும்.

இதயக் குகையை உணர்வதற்கான ஒரு வழியாக இந்த உபநிஷதம் கூறுவது அத்யாத்ம யோகம். யோகம் என்றால் பொருந்துதல் அல்லது இணைதல். அத்யாத்ம யோகம் என்றால் ஆன்மாவுடன் இணைதல். புறப்பொருட்களை விட்டுவிட்டு அகத்தை நாடுந்தோறும் நாம் மேலும்மேலும் இதயக் குகையை உணர்வோம். புறப்பொருட்களிலிருந்து விலகவிலக, நம்முள் புற உலகால் பாதிக்கப்படாத அகஉலகம் ஒன்று இருப்பதை நாம் உணர்வோம். நம்முள் உள்ள இந்த அமைதிப் பிரதேசத்தை உணரத் தொடங்கிவிட்டது புற உலகம் நம்மைப் பாதிப்பது படிப்படியாகக் குறைத்து விடும். இதையே இந்த மந்திரம் இன்ப துன்பங்களைக் கடக்கிறான் என்று கூறுகிறது.

அத்யாத்ம யோகப் பயிற்சி

13. ஏதச்ச்ருத்வா ஸம்பரிக்ருஹ்ய மர்த்ய
ப்ரவ்ருஹ்ய தர்ம்யமணுமேதமாப்ய
ஸ மோததே மோதனீயம் ஹி லப்த்வா
விவ்ருதம் ஸத்ம நசிகேதஸம் மன்யே

ஏதத்-இந்த உண்மையை; ச்ருத்வா-கேட்டு; ஸம்பரிக்ருஹ்ய-ஆராய்ந்து; தர்ம்யம்-ஆன்மாவை; ப்ரவ்ருஹ்ய-பிரித்து; ஏதம்-இந்த; மோதனீயம்-ஆனந்தம் நிறைந்த; அணும்-அணு போன்ற ஆன்மாவை; ஆப்ய-அடைந்து; ஸ; மர்த்ய-மனிதன்; மோததே-மகிழ்கிறான்; ஸத்ம-அந்தப் பாதை; நசிகேதஸம்-நசிகேதனாகிய உனக்கு; விவ்ருதம்-திறந்திருப்பதாக; மன்யே-நினைக்கிறேன்.

பொருள் : இந்த உண்மையைத் தகுந்த குருவிடமிருந்து கேட்டு, ஆராய்ந்து அறிய வேண்டும். பிறகு, உடம்பிலிருந்து அதனைப் பிரித்து உணர வேண்டும். அணு போன்றதும், ஆனந்தம் நிறைந்ததுமான ஆன்மாவை இவ்வாறு பிரித்தறிபவன் ஆனந்தம் பெறுகிறான். நசிகேதா! உனக்கு அந்தப் பாதை திறந்திருப்பதாக நினைக்கிறேன்.

தலைவவி வந்தால் தலைவலி மாத்திரை சாப்பிடுகிறோம். இது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இது நோயை நிரந்தரமாக குணப்படுத்துவதற்கான வழி அல்ல, அதற்கு டாக்டரை அணுக வேண்டும். தலைவலிக்கான காரணத்தை ஆராய்ந்து அதற்குரிய மருந்தைத் தர அவரால் மட்டுமே முடியும். அவரது ஆலோசனைப்படி சிகிச்சை செய்தால் தலைவலியை முற்றிலுமாக குணப்படுத்த முடியும். அதுபோல்தான் அகவுலக உண்மைகளும், ஆன்மா, கடவுள் போன்ற விஷயங்களும் பல நூல்களில் காணப்படலாம், பலர் சொல்ல கேட்கவும் செய்திருக்கலாம். ஆனால் இவற்றை அனுபவித்து அறிந்த, ஆன்மாவை அனுபூதியில் உணர்ந்த, இறைவனை நேரடியாகக் கண்ட ஒருவரிடமிருந்து இந்த உண்மைகளை அறிந்தால் மட்டுமே அது நம்மைச் சரியான வழியில் அழைத்துச் செல்லும். அத்தகைய ஒருவரே குரு எனப்படுகிறார். எனவே உயர் வாழ்க்கை அல்லது ஆன்மீக வாழ்க்கைக்கு முதல் தேவை தகுந்த குரு. அவரிடமிருந்து நேரடியாக உண்மைகளைப் பெற வேண்டும்.

அடுத்ததாக குருவிடமிருந்து பெற்ற உண்மைகளை நன்றாக ஆராய்ந்து அதனை நமக்குரியதாக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு மனத்தளவில் உடம்பு வேறு ஆன்மா வேறு என்று பிரித்தறிந்து பழக வேண்டும். இவ்வாறு தொடர்ந்து மனத்திற்குப் பயிற்சி அளிப்பது ஆரம்பகால அடிப்படைப் பயிற்சிகளுள் ஒன்றாகும். சாதாரணமாக நமது வாழ்வில் உடம்பே எல்லாமாக இருக்கிறது. உடம்பே எல்லாம், அதைத் தவிர எதுவுமில்லை என்பதை அடிப்படையாக வைத்தே நமது வாழ்க்கை செல்கிறது. ஆனால் உடம்பு ஒரு கருவி மட்டுமே, வாழ்க்கை என்னும் மாபெரும் பயணத்தில் நாம் அணிகின்ற ஒரு சட்டை மட்டுமே உண்மையான நாம் என்பது இந்த உடம்பினுள் ஒளிர்கின்ற ஆன்மா என்பதை மனத்திற்குப் புரியவைக்க வேண்டும்.

நசிகேதனைப் பொறுத்தவரை இந்த மூன்று படிகளையும் கடந்து ஆன்மீக பாதையில் பயணம் செய்யத் தயாராக இருக்கிறான் என்பதை இங்கே எமதர்மன் சுட்டிக்காட்டுகிறான்.

நசிகேதனின் கேள்வி

14. அன்யத்ர தர்மாத் அன்யத்ராதர்மாத்
அன்யத்ராஸ்மாத் க்ருதாக்ருதாத்
அன்யத்ர பூதாச்ச பவ்யாச்ச
யத்தத் பச்யஸி தத்வத

தர்மாத்-தர்மத்திலிருந்து; அன்யத்ர-வேறுபட்டது; அதர்மாத்-அதர்மத்திலிருந்து; அன்யத்ர-வேறுபட்டது; அஸ்மாத்-இந்த; க்ருத அக்ருதாத்-காரியம், காரணம் ஆகியவற்றிலிருந்து; அன்யத்ர-வேறுபட்டது; பூதாத் ச-இறந்த காலத்திலிருந்து; பவ்யாத் ச-எதிர்காலத்திலிருந்து; அன்யத்ர-வேறுபட்டது; யத் தத்-எதை; பச்யஸி-காண்கிறாயோ; தத்-அதை; வத-சொல்வாய்.

பொருள் : தர்மம், அதர்மம் காரியம், காரணம், இறந்த காலம், எதிர் காலம் ஆகியவற்றிலிருந்து வேறு பட்டதாக நீ எதைக் காண்கிறாயோ அதை எனக்குச் சொல்வாய்.

பிரணவ தியானம்: 15-17

அத்யாத்ம யோகத்தின் சாதனையாக ஓங்காரம் அல்லது பிரணவ மந்திரத்தை தியானிக்குமாறு கூறுகிறது உபநிஷதம். இது ஓங்காரம், சப்த பிரம்மம், நாத பிரம்மம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. உலகம் படைக்கப்பட்ட போது முதலில் எழுந்தது இந்த ஓங்கார த்வனி. இது எங்கும் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் யோகிகளால் இதனைக் கேட்க முடியும் என்றும் கூறப்படுகிறது. யாராலும் எழுப்பப்படாத ஓசை ஆதலால் இது அனாஹத த்வனி எனப்படுகிறது. ஓங்காரமும் அதன் உபாசனை முறையும் நமது உபநிஷதங்களில், குறிப்பாக மாண்டூக்யம் போன்றவற்றில், சிறப்பாக பேசப்படுகிறது. பிரம்மம் என்ற அறுதி நிலையிலிருந்து எழுந்த முதல் நாதம் ஆதலால் இதனைப் பின்பற்றிச் செல்லும்போது இறைவனை அடையலாம். தொலைவிலிருந்து அலையோசையைக் கேட்கிறோம். அந்த ஓசையைப் பின்பற்றிச் சென்றால் கடலை அடைந்து விடலாம். அலையோசை இருந்தால் கடலும் இருக்கிறது. அதுபோல் அனாஹத த்வனியைப் பற்றியவாறே சென்றோமானால் அந்த த்வனி குறிப்பதான பிரம்மத்திடம் போய்ச் சேரலாம். அதுவே பரமபதம் எனப்படுகிறது. என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ணர். பிரணவ மந்திரத்தின் மகிமையை தொடரும் மூன்று மந்திரங்கள் கூறுகின்றன.

15. ஸர்வே வேதா யத்பதமாமனந்தி
தபாம்ஸி ஸர்வாணி ச யத் வதந்தி
யதிச்சந்தோ ப்ரஹ்மசார்யம் சரந்தி
தத்தே பதம் ஸங்க்ரஹேண ப்ரவீமி ஓமித்யேதத்

ஸர்வே-எல்லா; வேதா-வேதங்களும்; யத் பதம்-எந்த லட்சியத்தை; ஆமனந்தி-உபதேசிக்கின்றனவோ; ஸர்வாணி-எல்லா; தபாம்ஸி ச-தவங்களும்; யத்-எதை; வதந்தி-சொல்கின்றனவோ; யத்-எதை; இச்சந்த-விரும்பி; ப்ரஹ்மசர்யம்-பிரம்மச்சரியத்தை; சரந்தி-கடைப்பிடிக்கிறார்களோ; தத்-அந்த; பதம்-சொல்லை; ஸங்க்ரஹேண-சுருக்கமாக; தே-உனக்கு; ப்ரவீமி-சொல்கிறேன்; ஏதத்-அது; ஓம் இதி-ஓம் ஆகும்.

பொருள் : எல்லா வேதங்களும் எந்த லட்சியத்தை உபதேசிக்கின்றவோ, எதற்காக எல்லா தவங்களும் செய்யப்படுகின்றனவோ, எதை விரும்பி பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கிறார்களோ அந்த லட்சியத்தை அடைவதற்கான மந்திரத்தைச் சுருக்கமாக உனக்குச் சொல்கிறேன். அது ஓம்

16. ஏதத்த்யேவாக்ஷரம் ப்ரஹ்ம ஏதத்த்யேவாக்ஷரம் பரம்
ஏதத்த்யேவாக்ஷரம் ஜ்ஞாத்வா யோ யதிச்சதி தஸ்ய தத்

ஏதத்-இந்த; அக்ஷரம் ஏவ-மந்திரமே; ப்ரஹ்ம-இறைவன்; ஏதத்-இந்த; அக்ஷரம் ஏவ-மந்திரமே; பரம்-மேலானது; ஏதத்-இந்த; அக்ஷரம் ஏவ-மந்திரத்தை; ஜ்ஞாத்வா-அறிந்து; ய-யார்; யத்-எதை; இச்சதி-விரும்புகிறானோ; தஸ்ய-அவனுக்கு; தத்-அது கிடைக்கிறது.

பொருள் : ஓம் என்ற இந்த மந்திரமே இறைவன். இந்த மந்திரம் மேலானது. இந்த மந்திரத்தை அறிந்து யார் எதை விரும்புகிறானோ அவனுக்கு அது கிடைக்கிறது.

17. ஏததாலம்பனம் ச்ரேஷ்ட்டம் ஏததாலம்பனம் பரம்
ஏததாலம்பனம் ஜ்ஞாத்வா ப்ரஹ்ம லோகே மஹீயதே

ஏதத்-இந்த; ஆலம்பனம்-பாதை; ச்ரேஷ்ட்டம்-சிறந்தது; ஏதத்-இந்த; ஆலம்பனம்-பாதை; பரம்-மேலானது; ஏதத்-இந்த ஆலம்பனம்-பாதையை; ஜ்ஞாத்வா-அறிந்து; ப்ரஹ்ம லோகே-பிரம்ம லோகத்தில்; மஹீயதே-சிறப்பு பெறுகிறான்.

பொருள் : இந்தப் பாதை சிறந்தது. இந்தப் பாதை மேலானது. இந்தப் பாதையை அறிந்து அதன் வழிச் செல்பவன் பிரம்ம லோகத்தில் சிறப்பு பெறுகிறான்.

மரணம் யாருக்கு? (18-22)

உடம்பு, உயிர், ஆன்மா என்ற மூன்றின் சேர்க்கையே மனிதன். நாம் பொதுவாக மரணம் என்று குறிப்பிடுவது உடம்பின் மரணத்தை மட்டுமே. பழைய சட்டையைக் களைந்துவிட்டு புதிய சட்டை அணிந்து கொள்வதுபோல் ஜீவன் ஓர் உடம்பைக் களைந்துவிட்டு புதிய உடம்பை எடுக்கிறது.
(வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய நவானி க்ருஹ்ணாதி நரோபராணி
ததாசரீராணி விஹாய ஜீர்ணானி அன்யானி ஸம்பாதி நவானி தேஹீ) உடம்பைக் களைதலையே மரணம் என்கிறோம். ஆனால் நாம் ஆன்மா, நமக்கு மரணமில்லை. உடம்பின் மரணத்திற்குப் பிறகும் நாம் வாழ்கிறோம். என்றென்றும் நாம் வாழ்கிறோம்.

ஆன்மாவில் எந்த மாற்றங்களும் இல்லை: 18-19

18. ந ஜாயதே ம்ரியதே வா விபச்சித்
நாயம் குதச்சித் ந பபூவ கச்சித்
அஜோ நித்ய: சாச்வதோயம் புராணோ
ந ஹன்யதே ஹன்யமானே சரீரே

விபச்சித்-ஆன்மா; ந ஜாயதே-பிறப்பதில்லை; ம்ரியதே வா-இறப்பதும் இல்லை; அயம்-இது; குதச்சித்-எதிலிருந்தும்; ந பபூவ-உண்டானதில்லை; கச்சித்-எதுவும்; அயம்-இது; அஜ-பிறப்பற்றது; நித்ய-என்றென்றும் இருப்பது; சாச்வத; நிலையானது; புராண-பழமையானது; சரீரே-உடம்பு; ஹன்யமானே-அழிக்கப்பட்டாலும்; ந ஹன்யதே-அழியாதது.

பொருள் : ஆன்மா பிறப்பதில்லை, இறப்பதும் இல்லை, இது எதிலிருந்தும் உண்டானதில்லை, எதுவும் இதிலிருந்தும் உண்டாவதில்லை. இது பிறப்பற்றது, என்றென்றும் இருப்பது. நிலையானது, பழமையானது; உடம்பு அழிக்கப்பட்டாலும் அழியாதது.

19. ஹந்தா சேன்மன்யதே ஹந்தும்
ஹதச்சேன் மன்யதே ஹதம்
உபௌ தௌ ந விஜானீதோ
நாயம் ஹந்தி ந ஹன்யதே

ஹந்தா-அடிப்பவன்; ஹந்தும்-அடிப்பதாக; மன்யதே சேத்-நினைப்பானானால்; ஹத-அடிபட்டவன்; ஹதம்-அடிபட்டதாக; மன்யதே சேத்-நினைப்பானானால்; தௌஉபௌ-இருவரும்; ந விஜானீத-அறியாதவர்கள்; அயம்-இந்த ஆன்மா; ந ஹந்தி-அடிப்பதும் இல்லை; ந ஹன்யதே-அடிபடுவதும் இல்லை.

பொருள் : தான் அடிப்பதாக நினைப்பவன், தான் அடிபட்டதாக நினைப்பவன் இருவருமே உண்மையை அறியாதவர்கள். ஆன்மா அடிப்பதும் இல்லை, அடிபடுவதும் இல்லை.

ஆன்மாவின் இயல்புகள்: 20-22

அறிவு, உணர்ச்சி இரண்டும் வெவ்வேறானவை, நமது வாழ்க்கை, இரண்டுடனும் பின்னிப் பிணைந்ததாக உள்ளது. அன்பு, ஆசை, கோபம், பயம், வெறுப்பு என்று பொதுவாக நமது வாழ்க்கையில் உணர்ச்சிகளே ஆதிக்கம் செலுத்துகின்றன; அறிவின் செயல்பாடு மிகக் குறைவே. அதிலும் ஆன்மீகம், கடவுள், ஆன்மா போன்ற உண்மைகளை அறிவினால் ஆராய்ந்து புரிந்துகொள்ள முடியாது, உணர மட்டுமே இயலும்.

ஆன்மா, கடவுள் போன்றவைபற்றி படிக்கும்போது இந்தக் கண்ணோட்டம் நமக்கு மிக முக்கியமானது. அறிவுக்கு எட்டாதது என்பதை உணர்த்துவதற்கே நமது ரிஷிகள் முரண்பட்ட இயல்புகளால் அவற்றை விளக்க முயல்கின்றனர். தொடரும் மந்திரங்களை, சாதனைகள் செய்து உணர முடியுமே தவிர அறிவினால் விளக்கவோ அறியவோ முடியாது. அதற்கான ஒவ்வொரு முயற்சியும் நம்மை மேலும் குழப்பத்திலேயே ஆழ்த்தும்.

20. அணோரணீயன் மஹதோ மஹீயான்
ஆத்மாஸ்ய ஜந்தோர் நிஹிதோ குஹாயாம்
தமக்ரது: பச்யதி வீதசோகோ
தாதுப்ரஸாதான் மஹிமானமாத்மன

அணோ-அணுவைவிட; அணீயாள்-அணுவானதும்; மஹத: பெரியதைவிட; மஹீயான்-பெரியதும்; ஆத்மா-ஆன்மா; அஸ்ய-இந்த; ஜந்தோ-உயிரினங்களின்; குஹாயாம்-இதயக் குகையில்; நிஹித-இருக்கிறது; தம்-அதனை; அக்ரது-ஆசையற்றவன்; பச்யதி-காண்கிறான்; தாது ப்ரஸாதாத்-மனத் தெளிவினால்; ஆத்மன-ஆன்மாவின்; மஹிமானம்-மகிமையை; வீதசோக-கவலைகளைக் கடக்கிறான்.

பொருள் : அணுவைவிட அணுவானதும், பெரியதைவிடப் பெரியதுமான இந்த ஆன்மா உயிரினங்களின் இதயக் குகையில் இருக்கிறது. ஆசையற்றவன் அதனைக் காண்கிறான். மனத்தெளிவினால் ஆன்மாவின் மகிமையை உணர்கின்ற அவன் கவலைகளைக் கடந்து செல்கிறான்.

21. ஆஸீனோ தூரம் வ்ரஜதி சயானோ யாதி ஸர்வத
கஸ்தம் மதாமதம் தேவம் மதன்யோ ஜ்ஞாதுமர்ஹதி

ஆஸீன-உட்கார்ந்தபடியே; தூரம்-வெகுதூரம்; வ்ரஜதி-செல்கிறது; சயான-படுத்துக்கொண்டே; ஸர்வத-எல்லா இடங்களுக்கும்; யாதி-செல்கிறது; மத அமதம்-இன்ப துன்ப வடிவானது; தேவம்-ஒளி மயமானது; தம்-அந்த ஆன்மாவை; மத் அன்ய-என்னைத் தவிர; க-யார்; ஜ்ஞாதும்-அறிவதற்கு; அர்ஹதி-தகுந்தவன்.

பொருள் : அந்த ஆன்மா உட்கார்ந்தபடி வெகுதூரம் செல்கிறது. படுத்துக்கொண்டே எல்லா இடங்களுக்கும் செல்கிறது. அது இன்ப வடிவானது. துன்ப வடிவானதும் அதுவே. அது ஒளி மயமானது என்னைத் தவிர வேறு யார் அதனை அறிவதற்குத் தகுதியானவன்?

என்னைத் தவிர யார் தகுதியானவன்? என்று மரணதேவன் கேட்கிறான். அதாவது மரண நிலையைப் போன்ற தொரு நிலையிலேயே ஆன்மாவை உணர முடியும். இதன் பொருள் என்ன? மரணத்தில் புலன்கள், மனம் எல்லாம் செயலிழக்கின்றன. அதுபோல் புலன்களும் மனமும் செயலிழந்த, அதாவது புலன்களையும் மனத்தையும் கடந்த ஒரு நிலையில்தான் ஆன்மாவை உணர முடியுமே தவிர புலன்களாலோ மனத்தாலோ அதனை அறிய முடியாது என்பதை இங்கே குறிப்பால் உணர்த்துகிறான் எமதர்மன்.

22. அசரீரம் சரீரேஷு அனவஸ்தேஷு அவஸ்திதம்
மஹாந்தம் விபுமாத்மானம் மத்வா தீரோ சோசதி

சரீரேஷு-உடல்களில்; அசரீரம்-உடல் அற்றது; அனவஸ்தேஷு-நிலையற்ற பொருட்களில்; அவஸ்திதம்-நிலையானது; மஹாந்தம்-பெரியது; விபும்-எங்கும் நிறைந்தது; ஆத்மானம்-ஆன்மாவை; மத்வா-அறிந்து; தீர-புத்தி விழிப்புற்றவன்; ந சோசதி-கவலைப்படுவதில்லை.

பொருள் : ஆன்மா உடல்களில் உடலற்றது; நிலையற்ற பொருட்களில் நிலையானது; பெரியது; எங்கும் நிறைந்தது. புத்தி விழிப்புற்றவன் அதனை அறிந்து கவலைகள் நீங்கப் பெறுகிறான்.

ஆன்மா எல்லா உடல்களிலும் உறைகிறது. ஆனால் அதற்கென்று ஒரு தனியான உடலோ உருவமோ இல்லை. உடல்கள் உட்பட இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே நிலையற்றது, மாறுவது, தோன்றி மறைவது. ஆனால் இந்த மாற்றங்கள் எதுவுமே இல்லாமல் நிலைத்திருப்பது ஆன்மா.

நாளை உணவு கிடைக்காதோ என்ற எண்ணம் கவலையைத் தருகிறது. நாளை இறந்து விடுவோமோ என்ற பயம் கவலையைத் தருகிறது. அதாவது, வாழ்க்கையில் நிகழும் மாற்றங்களே கவலையையும் பயத்தையும் தருகின்றன. ஆன்மா இந்த மாற்றங்கள் அனைத்தையும் கடந்தது. ஆதலால் அந்த நிலையை அடைபவன் கவலைகள் நீங்கப் பெறுகிறான்.

நான் ஆன்மா என்று யாரால் உணர முடியும்? 23-24

23. நாயமாத்மா ப்ரவசனேன லப்யோ
ந மேதயா ந பஹுனா ச்ருதேன
யமேவைஷ வ்ருணுதே தேன லப்யஸ்
தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனூம் ஸ்வாம்

அயம்-இந்த; ஆத்மா-ஆன்மா; ப்ரவசனேன-சொற்பொழிவுகளால்; ந லப்ய-அடையப்படுவதில்லை; ந மேதயா-புலமையால் அல்ல; பஹுனா ச்ருதேன-எவ்வளவோ கேட்பதாலும் அல்ல; யம் ஏவ ஏஷ-யார் அதற்காகவே; வ்ருணுதே-மன ஏக்கம் கொள்கிறானோ; தேன-அவனால்; லப்ய-அடையப்படுகிறது; தஸ்ய-அவனுக்கு; ஸ்வாம்-தனது; தனூம்-சொந்த இயல்பை; விவ்ருணுதே-வெளிப்படுத்துகிறது.

பொருள் : சொற்பொழிவுகளாலோ, புலமையாலோ, பலவற்றைக் கேட்பதாலோ இந்த ஆன்மாவை அடைய இயலாது. யார் அதை அடைவதற்காக மன ஏக்கம் கொள்கிறானோ அவன் மட்டுமே அதனை அடைகிறான். அந்த ஆன்மா அவனுக்குத் தனது சொந்த இயல்பை வெளிப்படுத்துகிறது.

மன ஏக்கம் என்பதை ஸ்ரீராமகிருஷ்ணர் ஓர் ஆன்மீக சாதனையாகக் கூறுவதுடன். இறைக் காட்சிக்கு முந்தின நிலையாகவும் வைக்கிறார்; ஆழ்ந்த மன ஏக்கத்துடன் அழுதால் அவரைக் காண முடியும்....... மன ஏக்கம் வந்து விட்டாலே அருணோதயம் ஆகிவிட்டது. அதன்பிறகு கதிரவன் தன்னைக் காட்டியருள்வான். அதுபோல் மனஏக்கத்திற்குப் பிறகு இறைக்காட்சி வருகிறது.

தீவிரமான தேவை ஏற்படும்போதுதான் மன ஏக்கம் வருகிறது. உள்ளார்ந்த ஏக்கமின்றி, சொற்பொழிவுகளைச் செய்வதாலோ கேட்பதாலோ, நூல்களைப் படிப்பதாலோ ஆன்மீகத்தில் எதையும் அடைய இயலாது. உயர் உண்மையை அடைய வேண்டும், இறைவனைக் காண வேண்டும் என்பதெல்லாம் உணவு, உடை போன்ற நமது அன்றாடத் தேவைகளுள் ஒன்றாக வேண்டும். அப்போது மட்டுமே அதற்காக நாம் ஏக்கம் கொள்வோம். ஏக்கம் கொள்ளும்போதுதான் வழி பிறக்கும், உண்மை தெரியும்.

24. நாவிரதோ துச்சரிதாத் நாசாந்தோ நாஸமாஹித
நாசாந்தமானஸோ வாபி ப்ரஜ்ஞானேன ஏனமாப்னுயாத்

துச்சரிதாத்-தீய ஒழுக்கத்திலிருந்து; ந அவிரத-விலகாதவன்; ந அசாந்த-புலனடக்கம் இல்லாதவன்; ந அஸமாஹித-மன ஒருமைப்பாடு இல்லாதவன்; ந அசாந்த மானஸ; வா அபி-மனத்தின் பரபரப்பு அடங்கப் பெறாதவன்; ப்ரஜ்ஞானேன-அறிவினால்; ஏனம்-இந்த ஆன்மாவை; ந ஆப்னுயாத்-அடைவதில்லை.

பொருள் : தீய ஒழுக்கத்திலிருந்து விலகாதவன், புலனடக்கம் இல்லாதவன், மன ஒருமைப்பாடு இல்லாதவன், மனதில் பரபரப்பு அடங்கப் பெறாதவன்-இத்தகையவன் எவ்வளவுதான் அறிவாளியாக இருந்தாலும் ஆன்மாவை அடைவதில்லை.

உயர் உண்மைகளை அடைவதற்கான சில அடிப்படை பண்புகள் இங்கே கூறப்படுகின்றன.

1. நல்லொழுக்கம்: எந்த ஒன்றையும் செய்ய வேண்டுமானால் அதற்கு ஆற்றல் தேவை. பவுதீகமாக ஒன்றைச் செய்ய உடம்பின் ஆற்றல் வேண்டும். மனத்தால் ஒன்றைச் செய்ய வேண்டுமானால் மன ஆற்றல் வேண்டும். உயர் உண்மைகளை நாடி, இறைவனைத் தேடி செய்யப்படுகின்ற அனைத்தும் மனத்தின்மூலமே செய்யப்படுகின்றன. அதற்கு மன ஆற்றல் தேவை. இந்த ஆற்றல் ஒழுக்க வாழ்வின்மூலம் மட்டுமே அடையப்படுகிறது. தூய்மையின் ஆற்றல் நிலையான ஆற்றல் என்கிறார் சுவாமி விவேகானந்தர். மனத்திற்கு இந்த ஆற்றல் வரும்போது தான் அதனால் உயர்ந்த உண்மைகளைச் சந்திக்க முடிகிறது, அதற்கான வழியில் செல்ல முடிகிறது. இந்த ஆற்றலை தருவது நல்லொழுக்க வாழ்க்கை மட்டுமே.

2. புலனடக்கம்: புலன்கள் புற உலகை நாடுமாறே படைக்கப்பட்டுள்ளன என்று இதே உபநிஷதம் பின்னால் (2.1.1) கூறுகிறது. எனினும் ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டால், அதற்கு ஏற்புடையவற்றை மட்டுமே நாடுமாறு அவற்றிற்குப் பயிற்சி அளிக்க வேண்டும். இது புலனடக்கம். தொடர்ந்த பயிற்சியால் இதனைச் சாதிக்க முடியும்.

3. மன ஒருமைப்பாடு: பணம் சம்பாதிப்பதிலும் சரி, கடவுளை வழிபடுவதிலும் சரி, மற்ற எதைச் செய்வதிலும் சரி, மன ஒருமைப்பாடு ஆற்றல் வாய்ந்ததாக இருக்கின்ற அளவுக்கு அந்த காரியத்தை நன்றாகச் செய்ய முடியும். இந்த ஒரு முயற்சியால் மட்டுமே, இந்த ஒரு சாவியால் மட்டுமே இயற்கையின் கதவுகளைத் திறக்க முடியும், அதன் ஒளியை வெளியே கொண்டுவர முடியும். இந்த ஒருமைப்பாட்டுச் சக்தியே அறிவுப் பொக்கிஷத்திற்கான ஒரே திறவுகோல் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

4. பரபரப்பின்மை: எந்தப் பூவிலும் அமராமல் படபடத்தபடியே பறக்கின்ற வண்ணத்துப்பூச்சிபோல் மனம் சிலவேளைகளில் பரபரப்பதை அனைவரும் உணர முடியும். இந்த நேரங்களில் மனத்தால் எதிலும் ஆழ்ந்து ஈடுபட இயலாது; ஜபம் தியானம் போன்றவற்றில் கட்டாயமாக மனத்தைச் செலுத்த முடியாது.

புலனடக்கம், மன ஒருமைப்பாடு, மனத்தின் பரபரப்பின்மை அனைத்தையும் ஒழுக்க வாழ்வின்மூலம் நாம் அடைய முடியும். அதைத் தவிர வேறு வழியில்லை. அனைத்திற்கும் மூலமாக அமைவது நல்லொழுக்கம். ஆன்மீக வாழ்வில் ஈடுபட விரும்பும் ஒருவருக்குச் சிந்தையில், சொல்லில், செயலில் தூய்மை முற்றிலும் இன்றியமையாதது என்கிறார் சுவாமி விவேகானந்தர். ஒழுக்கவாழ்க்கை இல்லாமல் எவ்வளவு கற்றாலும் கேட்டாலும் முயற்சித்தாலும் ஆன்மாவை அடைய முடியாது என்பது இங்கே ஆணித்தரமாகக் கூறப்படுகிறது.

ஆன்மாவின் மகிமை

25. யஸ்ய ப்ரஹ்ம ச க்ஷத்ரம் ச உபே பவத ஓதன
ம்ருத்யுர் யஸ்யோபஸேசனம் க இத்தா வேத யத்ர ஸ

யஸ்ய-யாருக்கு; ப்ரஹ்ம ச-அறிவின் ஆற்றல்; க்ஷத்ரம் ச-தோள் வலிமை; உபே-இரண்டும்; ஓதன-உணவாக; பவத-ஆகிறதோ; யஸ்ய-யாருக்கு; ம்ருத்யு-மரணம்; உபஸேசனம்-ஊறுகாயாக உள்ளதோ; ஸ-அது; யத்ர-எங்கே உள்ளது; இத்தா-இவ்வாறு; க-யார்; வேத-அறிவார்.

பொருள் : அறிவின் ஆற்றல், தோள் வலிமை இரண்டும் யாருக்கு உணவாக உள்ளதோ, மரணம் யாருக்கு ஊறுகாயாக உள்ளதோ அது எத்தகையது என்பதை யார் அறிவார்?

நம்மை இயக்குபவற்றுள் அறிவின் ஆற்றல், தோள் வலிமை இரண்டும் முக்கியமானவை. இந்த இரண்டும் ஆன்மாவிற்கு உணவு போன்றவை. அனைவரும் பயப்படும் மரணம் அதற்கு ஊறுகாய் போன்றது. அதாவது ஆற்றல்கள், மரணம் எல்லாம் ஆன்மாவின் முன் மண்டியிடுகின்றன. இத்தகைய ஆற்றல்களால் ஆன்மாவை அறிய முடியாது. மன ஏக்கம் ஆகிய அன்பின் ஆற்றல் ஒன்றினாலேயே அதனை அடைய இயலும் என்பது இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது.

இதி காடக உபநிஷதி ப்ரதம அத்யாயே த்விதீயா வல்லீ
கட உபநிஷதம்  முதல் அத்தியாயம்

1.1  எல்லாம் உன்னுள்நசிகேதன்

கடஉபநிஷதத்திற்கு ஒருமுன்னுரைபோல் அமைகிறது.

இந்தமுதல்அத்தியாயம்.மரணத்தை ஆராய,
மறுவாழ்க்கையைச்சிந்திக்க,
உயர்வாழ்க்கையைவிரும்ப,ஆன்மாவைஉணர,
இறைவனைநாடஎத்தகையமனப்பக்குவம்தேவை,என்னென்னதகுதிகள்வேண்டும்என்பதையெல்லாம்இங்கேநாம்காண்கிறோம்.நசிகேதன்என்றசிறுவனிடம்இவையெல்லாம்இருந்தனஎன்றுகூறுவதன்மூலம்,உயர்வாழ்க்கையைவிரும்புவர்களிடம்இத்தகையபண்புகள்வேண்டும்என்பதைஇந்தஅத்தியாயம்சுட்டிக்காட்டுகிறது.நசிகேதனின் தந்தை செய்த யாகம்1. ஓம் உசன் ஹ வை வாஜச்ரவஸ: ஸர்வவேதஸம் ததௌதஸ்ய ஹ நசிகேதா நாம புத்ர ஆஸ

ஹ வை-முன்பொரு சமயம்; வாஜச்ரவஸ-வாஜசிரவஸ்; உசன்-பலனில் ஆசை கொண்ட வராய்; ஸர்வவேதஸம்-தன்னிடமுள்ள எல்லாப் பொருட்களையும்; ததௌ-கொடுத்தார்; தஸ்ய-அவருக்கு; நசிகேதா நாம-நசிகேதன் என்ற பெயருள்ள; புத்ர:-மகன்; ஆஸ ஹ-இருந்தான்.

பொருள் : முன்பொரு சமயம் வாஜசிரவஸ் என்பவர் பலனில் ஆசை கொண்டவராய் தன்னிடமுள்ள எல்லாப் பொருள்களையும் தானமாகக் கொடுத்தார். அவருக்கு நசிகேதன் என்ற மகன் இருந்தான்.

இயற்கையை எண்ணற்ற சக்திகள் ஆட்சி செய்கின்றன. ஒவ்வொரு சக்தியையும் ஒரு தேவனாகக் கண்டார்கள் வேத முனிவர்கள். காற்று வீசுவதும். சூரியன் சுடுவதும், மழை பெய்வதும் எல்லாம் இந்த தேவர்களின் ஆற்றலால் என்று அவர்கள் கருதினர். இந்த தேவர்களை வழிபடுவதன்மூலம் உலக வாழ்க்கைக்கான அனைத்தையும் பெறலாம் என்று கண்ட அவர்கள், தேவர்களை வழிபடுவதற்காகக் கண்ட வழிமுறையே யாகம். இக உலக வாழ்க்கைக்கான வசதிகளைப் பெறுவதற்கானாலும், சொர்க்க போகங்களை அனுபவிப்பதற்கானாலும், மோட்ச மார்க்கத்திற்கு ஆனாலும் அவர்கள் யாகத்தை வழியாகக் கொண்டனர்.

யாக குண்டத்தில் அக்கினி வளர்த்து, குறிப்பிட்ட தேவனை உத்தேசித்து, உரிய மந்திரங்களுடன் உரிய பொருட்களைச் சமர்பித்து வழிபடும்போது அந்த யாகம் அதற்குரிய பலனைத் தருகிறது. அத்தகையதொரு யாகம் விசுவஜித். பேரரசனாகி உலகத்தையே ஆள்வது இந்த யாகத்தால் பெறப்படும் பலன். ஆனால் அந்த யாகத்திற்கான நிபந்தனை வினோதமானது-அனைத்தையும் ஆள்வது நோக்கம், நிபந்தனை என்னவென்றால் தன்னிடமுள்ள அனைத்தையும் தானம் செய்ய வேண்டும்.

வாழ்க்கையைக் கொடுத்தால் வாழ்க்கையைப் பெறலாம் என்பார் சுவாமி விவேகானந்தர். எல்லாம் நமக்கு வேண்டுமென்றால் நாம் எல்லாவற்றையும் விட வேண்டும். அதாவது அனைத்தையும் துறந்தவனுக்கு அனைத்தும் உரியதாகும். வேதகாலத்திலிருந்தே வந்திருக்கின்ற கருத்துச் செல்வம் இது. உலகையே ஆளும் நோக்கத்துடன் விசுவஜித் யாகத்தைச் செய்தார் வாஜசிரவஸ். யாக முடிவில் தமது செல்வம் அனைத்தையும் தானம் செய்தார்.

தானப் பொருட்களைக் கண்ட நசிகேதனின் சிந்தனை

2. தம் ஹ குமாரம் ஸந்தம் தக்ஷிணாஸு நீயமானாஸு ச்ரத்தா விவேச ஸோமன்யத

தக்ஷிணாஸு-தட்சிணைகள்; நீயமானாஸு-எடுத்துச் செல்வதைக் கண்டபோது; குமாரம்-சிறுவனாக; தம் ஹ ஸந்தம்- இருக்கின்ற அவனை; ச்ரத்தா-சிரத்தை; ஆவிவேச-வந்தடைந்தது; ஸ-அவன்; அமன்யத-சிந்திக்கலானான்.

பொருள் : தட்சிணைகள் எடுத்துச் செல்வதைச் சிறுவனான நசிகேதன் கண்டான். சிரத்தை அவனை வந்தடைந்தது. அவன் சிந்திக்கலானான்.

சிரத்தை என்றால் செயல்பாட்டுடன் கூடிய நம்பிக்கை என்று பொருள் கொள்ளலாம். நம்புகிறேன் என்று சொல்லிக் கொண்டு சும்மா இருப்பதல்ல; அந்த நம்பிக்கையைச் செயல்படுத்துவது, அந்த நம்பிக்கையின் லட்சியத்தை அடையப் பாடுபடுவது-இதுவே சிரத்தை. உயர் லட்சியத்தை அடைவதற்கான எல்லா முயற்சிகளுக்கும் சிரத்தை தேவை (ச்ரத்தா யத்பூர்வக: ஸர்வ புருஷார்த்த ஸாதன ப்ரயோக-முண்டக உபநிஷதம்)என்கிறார் ஸ்ரீ சங்கரர். இத்தகைய சிரத்தையே இன்று நமக்கு வேண்டியது என்பார் சுவாமி விவேகானந்தர். சிரத்தையின் பெருமையைப் போற்றுவதாகவும் அது நம்மிடம் வருமாறு பிராத்திப்பதாகவும் ரிக் வேதத்தில் ச்ரத்தா ஸூக்தம் என்று ஒரு பாடலே உள்ளது. சிரத்தை இறைவனின் தலையில் உள்ளது. இதய தாகத்தால் அது அடையப்படுகிறது என்று அந்தப் பாடல் கூறுகிறது. அத்தகைய சிரத்தை நசிகேதனிடம் வந்தது.

நசிகேதனின் சிந்தனைக்கான காரணம்

3. பீதோதகா ஜக்தத்ருணா துக்ததோஹா நிரிந்த்ரியா
அனந்தா நாம தே லோகாஸ்தான் ஸ கச்சதி தா ததத்

பீத உதகா-தண்ணீர் குடித்து முடித்த: ஜகத் த்ருணா-புல் மேய்ந்து முடித்த; துக்த தோஹா-பால் கறந்து முடித்த; நிரிந்த்ரியா-கன்று போடும் சக்தி இழந்த; தா-அந்தப் பசுக்களை; ததத்-தானம் செய்பவன்; அனந்தா நாம-மகிழ்ச்சி இல்லாத; தே லோகா; தான்-அந்த உலகங்களை; கச்சதி-அடைகிறான்.

பொருள் : தண்ணீர் குடித்து முடித்த, புல் மேய்ந்து முடித்த, பால் கறந்து முடித்த, கன்று போடும் சக்தியை இழந்த பசுக்களைத் தானம் செய்பவன் மகிழ்ச்சி இல்லாத உலகங்களை அடைகிறான்.

ஒருவனிடம் இருக்கும் பசுக்களின் எண்ணிக்கையை வைத்து அவனது செல்வாக்கை அந்த நாட்களில் மதிப்பிட்டார்கள். எனவே பசுக்களைத் தானம் செய்வது தானங்களில் சிறந்த ஒன்றாகக் கருதப்பட்டது. விசுவஜித் யாகத்தின் முடிவில் அனைத்தையும் தானம் செய்ய வேண்டும். ஆனால் வாஜசிரவஸ் தனக்கு உதவாதவற்றையெல்லாம் தானம் என்ற பெயரில் கொடுத்தார், ஒன்றுக்கும் உதவாத கிழட்டு பசுக்களைக் கொடுத்தார். இதனால், தானத்தின் பலன் கிடைக்காமல் போவது மட்டுமல்ல, தானத்தின் அடிப்படைக் கருத்தைச் சரியாகக் கடைபிடிக்காததால் இரட்டைத் தவறுக்கு உள்ளானார் வாஜசிரவஸ். அதற்குத் தண்டனையாக மகிழ்ச்சியற்ற உலகங்களில் வாழவும் நேரும் என்பதைப் புரிந்துகொண்ட நசிகேதன் ஆழ்ந்த சிந்தனை வசப்பட்டான்.

நசிகேதன் தந்தைக்கு உண்மையை அறிவுறுத்துதல்

தந்தை செய்யும் தவறை மறைமுகமாகச் சுட்டிக் காட்டும் நோக்கத்துடன் நசிகேதன் அவரிடம் சென்று கூறினான் :

4. ஸ ஹோவாச பிதரம் தத கஸ்மை மாம் தாஸ்யஸீதி
த்வதீயம் த்ருதீயம் தம் ஹோவாச ம்ருத்யவே த்வா ததாமீதி

ஸ-அவன்; தத-அப்பா; மாம்-என்னை; கஸ்மை-யாருக்கு; தாஸ்யஸி-கொடுக்கப் போகிறீர்கள்; இதி-என்று; பிதரம்-தந்தையை; உவாச ஹ-சொன்னான்; த்விதீயம்-இரண்டாவது முறை. த்ருதீயம்-மூன்றாம் முறை; த்வா உன்னை; ம்ருத்யவே-எமனுக்கு; ததாமி-கொடுக்கிறேன்; இதி-என்று; தம்-அவனிடம்; உவாச ஹ-சொன்னார்.

பொருள் : நசிகேதன் தந்தையிடம் சென்று, அப்பா, என்னை யாருக்குக் கொடுக்கப் போகிறீர்கள்? என்று கேட்டான். இரண்டாவது முறையும் மூன்றாவது முறையும் கேட்டான். அதற்குத் தந்தை, உன்னை எமனுக்குக் கொடுக்கப் போகிறேன் என்று கூறினார்.

தந்தை தவறு செய்வதைக் கண்டு ஆழ்ந்து சிந்தித்த நசிகேதன், அவரைத் தவறிலிருந்து காப்பாற்றி, அவர் மகிழ்ச்சியற்ற உலகங்களை அடையாமல் தடுப்பது தனது கடமை என்று உணர்ந்தான். சிறுவனான தான் நேரடியாக நீங்கள் செய்வது தவறு என்று தந்தையிடம் கூறினால் அது அதிகப்பிரசங்கித்தனமாக ஆகிவிடும் என்று கருதி, மறைமுகமாக அவருக்கு விஷயத்தைத் தெளிவுபடுத்த எண்ணினான்.

சிறந்தவற்றை தானம் செய்ய வேண்டும் என்பது யாகத்தின் நிபந்தனை. ஒரு தந்தைக்கு நல்ல மகனைவிடச் சிறந்த செல்வம் இல்லை. எனவே என்னை யாருக்கு தானமாகக் கொடுக்கப் போகிறீர்கள்? என்று நசிகேதன் வாஜசிரவஸிடம் கேட்டான். இதன் மூலம் சிறந்தவற்றை தானம் செய்ய வேண்டும் என்பதை மறந்துவிட்டீர்களே! என்று அவருக்கு நினைவூட்டினான்.

நசிகேதனின் இந்தக் கேள்வியை முதலில் வாஜசிரவஸ் பொருட்படுத்தவில்லை. சிறுவன் ஏதோ சொல்கிறான் என்று விட்டுவிட்டார். ஆனால் நசிகேதன் விடவில்லை. தந்தையை அணுகி மீண்டும் கேட்டான். அதற்கும் வாஜசிரவஸ் பதில் சொல்லவில்லை எனவே மூன்றாம் முறையாகக் கேட்டான். அதனால் கோபமுற்ற வாஜசிரவஸ், உன்னை எமனுக்குக் கொடுக்கிறேன், அதாவது, நீ செத்துத் தொலை என்று ஆத்திரத்துடன் கூறினார்.

நசிகேதனின் சுய மதிப்பு

5. பஹூனாமேமி ப்ரதமோ பஹூனாமேமி மத்யம
கிம் ஸ்வித் யமஸ்ய கர்த்தவ்யம் யன்மயாத்ய கரிஷ்யதி

பஹூனாம்-பல விஷயங்களில்; ப்ரதம: ஏமி-முதல் நிலையில் உள்ளேன்; பஹூனாம்-பல விஷயங்களில்; மத்யம: ஏமி-இடைநிலையில் இருக்கிறேன்; யமஸ்ய-எமனுக்கு; கிம்ஸ்வித்-என்ன; மயா-என்னால்; கரிஷ்யதி-செய்யப் போகிறார்; அத்ய-இப்போது; கர்த்தவ்யம்-செய்யத் தக்கது; யத்-என்ன.

பொருள் : பல விஷயங்களில் நான் முதல் நிலையில் இருக்கிறேன். பல விஷயங்களில் இடைநிலையில் இருக்கிறேன். என்னை எமனிடம் அனுப்புவதன்மூலம் தந்தை என்ன சாதிக்கப் போகிறார்? என்று சிந்தித்தான் நசிகேதன்.

நசிகேதனிடம் நாம் காணும் ஒரு முக்கியப் பண்பு இது: சுய மதிப்பு. தன்னை, வாழ்க்கையில் தனது இடத்தை, தனது குறைநிறைகளை அறிந்து வைத்திருந்தான் அவன். எனவே, அவன் பல விஷயங்களில் முதல் நிலையில் உள்ளேன், பல விஷயங்களில் இடை நிலையில் உள்ளேன். ஆனால் எதிலும் கடை நிலையில் இல்லை என்று துணிச்சலாக தன்னை மதிப்பிடுகிறான்; அப்படிப்பட்ட என்மீது தந்தை ஆத்திரப்படுகிறாரே! எதற்காக நான் அவரிடம் இதைச் சொல்கிறேன் என்பதைப் புரிந்துகொள்ளாமல் என்னை எமனிடம் அனுப்புவதாகக் கூறிவிட்டாரே என்று ஆதங்கப்படுகிறான்.

நசிகேதன் தந்தையிடம் சிந்திக்குமாறு கூறியது

தந்தை ஆத்திரத்தால் சொன்னாலும், சொன்னது சொன்னதுதான், தான் எமனிடம் போயே ஆக வேண்டும் என்பதை நிச்சயித்துக்கொண்டான் நசிகேதன். ஆனால் போகுமுன் அவருக்கு உண்மையை உணர்த்த விரும்பிய அவன் அவரிடம் கூறினான்.

6. அனுபச்ய யதா பூர்வே ப்ரதிபச்ய ததாபரே
ஸஸ்யமிவ மர்த்ய பச்யதே ஸஸ்யமிவாஜாயதே புன

பூர்வே-முன்னோர்; அனு-முறையே; யதா-எப்படி இருந்தார்களோ; பச்ய-பாருங்கள்; ததா-அப்படியே செய்யுங்கள்; மர்த்ய-மனிதன்; ஸஸ்யம் இவ-செடிகொடிகளைப் போல்; பச்யதே-அழிகிறான்; புன-மீண்டும்; ஸஸ்யம் இவ-செடிகொடிகளைப் போலவே; ஆஜாயதே-பிறக்கிறான்.

பொருள் : முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். இப்போதுள்ளவர்கள் எப்படி வாழ்கிறார்களோ அதையும் சிந்தித்துப் பாருங்கள். செடிகொடிகளைப்போல் மனிதன் பிறக்கவும் இறக்கவும் செய்கிறான் என்று தந்தையிடம் கூறினான் நசிகேதன்.

வாழ்க்கையில் அனுபவங்கள் பெரிய வழிகாட்டிகள். நமது அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது உண்மை. ஆனால் பிறருடைய அனுபவங்களிலிருந்தும் நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும். தீ சுடும் என்பதை நாமே அனுபவித்துப் பார்க்க வேண்டியதில்லை. பிறருடைய அனுபவத்திலிருந்தே அதைப் புரிந்துகொள்ளலாம். அதுபோல், பிறருடைய அனுபவங்களிலிருந்து உண்மையைக் கற்றுக்கொள்ளுமாறு வாஜசிரவஸிடம் கூறினான் நசிகேதன். நல்லவர்கள் இவ்வாறு தானம் செய்யவில்லை, அப்படிச் செய்தவர்கள் மகிழ்ச்சியற்ற உலகங்களை அடையாமலும் இல்லை. எனவே உண்மையாக நடந்துகொள்ளுங்கள் என்று தந்தைக்கு அறிவுறுத்துகிறான் அவன்.

அதுமட்டுமல்ல; தன்னை எமனுக்குக் கொடுப்பதாக தந்தை ஆத்திரத்திலோ கோபத்திலோ சொல்லியிருந்தாலும் அவர் சொன்ன வாக்கு காப்பாற்றப்பட வேண்டும், தான் எமனிடம் போயே ஆக வேண்டும் என்று அதனை எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொண்டான் நசிகேதன், அவனுக்குத் தந்தையிடம் வருத்தமோ கோபமோ வரவில்லை  என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.

பிறகு, எமலோகம் போவதான தன் முடிவைத் தந்தையிடம் கூறினான் நசிகேதன். ஆத்திரத்தில், தான் செய்து விட்டதை எண்ணிய வாஜசிரவஸ் கவலையில் ஆழ்ந்தார். அதைக் கண்ட நசிகேதன் அவருக்கு வாழ்க்கையின் உண்மையை எடுத்துக் கூறினான். வாழ்க்கை நிலையற்றது. மனிதன் செடிகொடிகளைப்போல் பிறக்கவும் இறக்கவும் செய்கிறான். பிறந்தவர்கள் இறப்பதும் இறந்தவர் பிறப்பதும் உறுதி. எனவே நான் எமலோகம் போவதுபற்றி கலங்க வேண்டாம் என்று அவரிடம் கூறிவிட்டு, எமலோகம் சென்றான் அவன்.

எமதர்மனிடம் மந்திரிகள் கூறியது : 7-8

நசிகேதன் சென்றபோது எமதர்மன் அங்கே இல்லை. எனவே அவன் எமனின் மாளிகையின் முன்னால் மூன்று நாட்கள் காத்திருக்க நேர்ந்தது, அதன்பிறகே எமதர்மன் வந்தான். அவனது மந்திரிகள் அவனிடம் சென்று நசிகேதன் வந்து காத்திருப்பதைப் பற்றி கூறினர்.

7. வைச்வானர: ப்ரவிசதி அதிதிர் ப்ராஹ்மணோ க்ருஹான்
தஸ்யைதாம் சாந்திம் குர்வந்தி ஹர வைவஸ்வதோதகம்

அதிதி-விருந்தினனாக; ப்ராஹ்மண:-தூயவன்; வைச்வானர-நெருப்பு; க்ருஹான்-வீட்டில்; ப்ரவிசதி-நுழைகிறான்; தஸ்ய-அவனுக்கு; ஏதாம்-இவற்றைக் கொடுத்து; சாந்திம்-அமைதியை; குர்வந்தி-செய்கின்றனர்; வைவஸ்வத-எம தர்மனே; உதகம்-தண்ணீர்; ஹர-கொண்டுவா

பொருள் : தூயவன் ஒருவன் விருந்தினனாக வரும்போது நெருப்புப் போலவே நுழைகிறான். நல்லவர்கள், அவனுக்குத் தண்ணீர் முதலானவற்றைக் கொடுத்து, உபசரித்து அவனை அமைதிப்படுத்துகின்றனர். எமதர்மனே! நீயும் அந்தச் சிறுவனுக்கு தண்ணீர் முதலியவற்றைக் கொடு என்று மந்திரிகள் எமதர்மனிடம் கூறினர்.

விருந்தினர் என்பவர் வழிபாட்டிற்குரியவர். அந்த வேளைக்கு அவர் தெய்வமே; அந்த நிலையில் அவர் போற்றப்பட வேண்டும் என்கிறார் சுவாமி விவேகானந்தர். அவர் கூறுவதுபோல், விருந்தினரை உபசரித்தல் என்பது இந்தியாவில் ஒரு காலத்தில் வழிபாடாகவே செய்யப்பட்டு வந்தது. அதன் முக்கியத்துவத்தை இங்கே மந்திரிகள் எமதர்மனிடம் தெரிவிக்கின்றனர்.

8. ஆசா ப்ரதீ÷க்ஷ ஸங்கதம் ஸூன்ருதாம்ச
இஷ்ட்டாபூர்த்தே புத்ர பசூம்ச்ச ஸர்வான்
ஏதத் வ்ருங்க்தே புருஷஸ்யால்பமேதஸோ
யஸ்யானச்னன் வஸதி ப்ராஹ்மணோ க்ருஹே

அல்பமேதஸ-அற்ப புத்தியுடைய; யஸ்ய புருஷஸ்ய-எந்த மனிதனின்; க்ருஹே-வீட்டில்; ப்ராஹ்மண-தூயவன்; அனச்னன்-உணவின்றி; வஸதி-வசிக்கிறானோ; ஆசா-நம்பிக்கைகள்; ப்ரதீக்ஷõ-எதிர்பார்ப்புகள்; ஸங்கதம்-புண்ணிய பலன்; ஸூன்ருதாம்-இனிய பேச்சின் பலன்; இஷ்ட்டா பூர்த்தே-யாக பலன். நற்பணிகளின் பலன்; ஸர்வான்-எல்லாம்; புத்ர பசூன் ச-பிள்ளைச் செல்வம், கால்நடைச் செல்வம்; ஏதத்-அனைத்தையும்; வ்ருங்தே-நாசமாக்குகிறான்.

பொருள் : யாருடைய வீட்டில் தூயவன் ஒருவன் உணவின்றி இருக்க நேர்கிறதோ, அற்ப புத்தி உடையவனான அவனது நம்பிக்கைகள், எதிர்ப்பார்ப்புகள் எல்லாம் அழிகின்றன. தான் செய்த புண்ணியங்களின் பலன், இனிய பேச்சின் பலன், யாகங்கள் வழிபாடு போன்றவற்றின் பலன், நற்பணிகளின் பலன் அனைத்தையும் அவன் இழக்கிறான். அவனது பிள்ளைச் செல்வம், கால்நடைச் செல்வம் அனைத்தும் அழிகின்றன.

தூயவன் ஒருவன் வீட்டிற்கு வந்தால் அவனை உபசரிக்க வேண்டியது கடமை என்பதை இந்த மந்திரம் உணர்த்துகிறது. உபசரிக்காவிட்டால் எல்லா செல்வமும் அழியும். அதேவேளையில், உபசரித்து அவர்களின் மனம் கனிந்த ஆசிகளைப் பெற்றால் செல்வம் அனைத்தும் சேரும் என்பது உணர்த்தப்படுகிறது.

எமதர்மனின் உபசாரம்

மந்திரிகள் கூறியதைக் கேட்ட எமதர்மன் நேராக நசிகேதனிடம் சென்று அவனை உபசரித்தான்

9. திஸ்ரோ ராத்ரீர் யதவாத்ஸீர் க்ருஹே மே
னச்னன் ப்ரஹ்மன் அதிதிர் நமஸ்ய
நமஸ்தேஸ்து ப்ரஹ்மன் ஸ்வஸ்தி மேஸ்து
தஸ்மாத் ப்ரதி த்ரீன் வரான் வ்ருணீஷ்வ

ப்ரஹ்மன்-வழிபாட்டிற்கு உரியவனே; அதிதி-விருந்தாளி; நமஸ்ய-வணங்கத் தக்க; திஸ்ர; ராத்ரீ-மூன்று இரவுகள்; அனச்னன்-உணவின்றி; மே-எனது; க்ருஹே-வீட்டில்; யத் அவாத்ஸீ-வசித்தாய்; ப்ரஹ்மன்-தூய பாலனே; தஸ்மாத்-அதனால்; மே-எனக்கு; ஸ்வஸ்தி-நன்மை; அஸ்து-உண்டாகட்டும்; தே-உனக்கு; நம: அஸ்து-வணக்கம்; ப்ரதி-அதற்காக; த்ரீன்-மூன்று; வரான்-வரங்களை; வ்ருணீஷ்வ-கேட்டுக்கொள்.

பொருள் : வழிபாட்டிற்கு உரியவனே! விருந்தாளியும் வணங்கத் தக்கவனுமான நீ உணவின்றி என் வீட்டில் மூன்று இரவுகள் தங்க நேர்ந்தது. தூய பாலனே! அந்தக் குற்றம் என்னைப் பாதிக்காமல் எனக்கு நன்மை உண்டாகட்டும். உனக்கு வணக்கம். நீ மூன்று இரவுகள் தங்க நேர்ந்ததற்காக என்னிடமிருந்து மூன்று வரங்களைப் பெற்றுக்கொள்.

முதல் வரம் : தந்தையின் நலம்(10-11)

நசிகேதன் கேட்டது

10. சாந்த ஸங்கல்ப: ஸுமனா யதா ஸ்யாத்
வீதமன்யுர் கௌதமோ மாபி ம்ருத்யோ
த்வத் ப்ரஸ்ருஷ்ட்டம் மாபி வதேத் ப்ரதீத
ஏதத் த்ரயாணாம் ப்ரதமம் வரம் வ்ருணே

ம்ருத்யோ-எமதர்மனே; கௌதம-கௌதமர்; த்வத் ப்ரஸ்ருஷ்ட்டம்-உன்னால் அனுப்பப்பட்ட; மா அபி-என்னை; ப்ரதீத-நினைவைப் பெற்று; சாந்த ஸங்கல்ப-மனக்கவலை அற்றவராக; ஸுமனா: தெளிந்த மனத்தினராக; வீத மன்யு-கோபம் அற்றவராக; ஸுமனா-தெளிந்த மனத்தினராக; வீத மன்யு-கோபம் அற்றவராக; யதா ஸ்யாத்-எவ்வாறு ஆவாரோ; வதேத்-பேச வேண்டும்; த்ரயாணாம்-மூன்று வரங்களுள்; ஏதத்-இதனை; ப்ரதமம் வரம்-முதல் வரமாக; வ்ருணே-கேட்கிறேன்.

பொருள் : எமதர்மனே! உன்னிடமிருந்து திரும்பிச் செல்கின்ற என்னை எனது தந்தையாகிய கவுதமர் புரிந்துகொள்ளவேண்டும். என்னை ஏற்றுக்கொண்டு, மனக்கவலை அற்றவராக, தெளிந்த மனத்தினராக, கோபம் அற்றவராக என்னுடன் பேச வேண்டும் மூன்று வரங்களுள் இதையே முதல் வரமாகக் கேட்கிறேன்.

எமனைச் சந்தித்து வருகின்ற இவன் ஆவியல்ல, என் மகன்தான் என்று வாஜசிரவஸ் புரிந்துகொள்ள வேண்டும், தான் ஒரு தவறு செய்ததாகக் கோபம் கொண்ட அவர் இப்போது அந்தக் கோபத்தை விட்டிருக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்வதானால், தந்தை தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நசிகேதன் முதல் வரமாகக் கேட்டான்.

எமதர்மன் வரமளித்தல்

11. யதா புரஸ்தாத் பவிதா ப்ரதீத
ஒளத்தாலகிராருணிர் மத்ப்ரஸ்ருஷ்ட்ட
ஸுகம் ராத்ரீ: சயிதா வீதமன்யு
த்வாம் தத்ருசிவான் ம்ருத்யு முகாத் ப்ரமுக்தம்

ஆருணி-அருணனின் மகனான; ஒளத்தாலகி: உத்தாலகர்; புரஸ்தாத்-முன்னால்; யதா-எப்படி; ப்ரதீத: நினைவைப் பெற்று; மத்ப்ரஸ்ருஷ்ட்ட-என்னால் அனுமதிக்கப்பட்டு; ராத்ரீ-இரவில்; ஸுகம்-நன்றாக; சயிதா-தூங்குபவராக; ம்ருத்யு-முகாத்-எமனிடமிருந்து; ப்ரமுக்தம்-திரும்பிச் செல்கின்ற; த்வாம்-உன்னை; தத்ருசிவான்-கண்டு; வீதமன்யு-கோபம் அற்றவராக; பவிதா-ஆவார்.

பொருள் : அருணனின் மகனும் உனது தந்தையுமாகிய உத்தாலகர் உன்னைக் காணும்போது முன்பு போலவே உன்னைப் புரிந்துகொள்வார். என் அருளால் இரவுகளில் கவலையற்று தூங்குவார். என்னிடமிருந்து திரும்பிச் செல்கின்ற உன்னைக் கண்டு கோபம் கொள்ளவும் மாட்டார் என்று கூறி முதல் வரத்தை அளித்தான் எமதர்மன்.

இரண்டாம் வரம் (12-18)

இரண்டாம் வரம்: சொர்க்க லோகம் 12-13

12. ஸ்வர்கே லோகே ந பயம் கிஞ்சனாஸ்தி
ந தத்ர த்வம் ந ஜரயா பிபேதி
உபே தீர்த்வா சனாயாபிபாஸே
சோகாதிகோ மோததே ஸ்வர்கலோகே

ஸ்வர்கே லோகே-சொர்க்கத்தில்; கிஞ்சன-சிறிதும்; பயம்-பயம்; ந அஸ்தி-கிடையாது; தத்ர-அங்கே; த்வம்-நீ; ந-இல்லை; ஜரயா-மூப்பினால்; ந பிபேதி-பயப்படுவதில்லை; ஸ்வர்க லோகே-சொர்க்கத்தில் உள்ளவன்; அசனாயாபிபாஸே-பசியையும் தாகத்தையும்; உபே-இரண்டையும்; தீர்த்வா-தாண்டி; சோகாதிக-கவலையற்றவனாய்; மோததே-மகிழ்கிறான்.

பொருள் : சொர்க்கத்தில் சிறிதும் பயம் கிடையாது. மரண தேவனாகிய நீயும் அங்கில்லை. அங்கே யாரும் மூப்பினால் பயப்படுவதில்லை. அவர்களுக்குப் பசி, தாகம் இரண்டும் கிடையாது. அவர்கள் கவலையற்றவர்களாக மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள்.

13. ஸ த்வமக்னிம் ஸ்வர்க்யமத்யேஷி ம்ருத்யோ
ப்ரப்ரூஹி தம் ச்ரத்ததானாய மஹ்யம்
ஸ்வர்கலோகா அம்ருதத்வம் பஜந்தே
ஏதத் த்விதீயேன வ்ருணே வரேண

ம்ருத்யோ-எமதர்மனே; ஸ்வர்கலோகா-சொர்க்க லோகத்தில் வாழ்பவர்கள்; அம்ருதத்வம்-தேவத்தன்மையை; பஜந்தே-பெறுகின்றனர்; ஸ்வர்க்யம் அக்னிம்-சொர்க்கலோகத்திற்கு அழைத்துச் செல்லக் கூடிய யாகத்தைப் பற்றி; ஸ: த்வம்-உனக்கு; அத்யேஷி-தெரியும்; ச்ரத்ததானாய-சிரத்தை மிக்கவனான; மஹ்யம்-எனக்கு; த்வம்-நீ; ப்ரப்ரூஹி-சொல்; ஏதத்-இதனை; த்வதீயேன வரேண-இரண்டாவது வரமாக; வ்ருணே-கேட்கிறேன்.

பொருள் : எமதர்மனே! சொர்க்கத்தில் வாழ்பவர்கள் தேவத்தன்மையைப் பெறுகின்றனர். அங்கே அழைத்துச் செல்லக் கூடிய யாகத்தைப்பற்றி உனக்குத் தெரியும். சிரத்தை மிக்கவனான எனக்கு அதைப்பற்றி சொல். இதனை இரண்டாவது வரமாகக் கேட்கிறேன்

மனிதனுக்கு இன்ப நுகர்ச்சியிலுள்ள நாட்டம் முடிவற்றது, ஆயுளோ குறைவு. எனவே இங்கே கிடைக்காத, இங்கே பூர்த்தி செய்ய முடியாத இன்பங்கள் வேறோர் உலகத்தில் இருப்பதாகக் கொண்டு, அங்கே சென்று தனது சுகபோக வாழ்க்கையைத் தொடர நினைக்கிறான் அவன். இதன் விளைவாக எழுந்ததே சொர்க்கம் என்ற கருத்து. எல்லா நாட்டுப் புராணங்களிலும் இந்தக் கருத்து இருப்பதைக் காணலாம். பசி, தாகம், மூப்பு, அனைத்திற்கும் மேலாக மரணம் போன்றவை சுகபோகங்களுக்குத் தடையாக உள்ளன. எனவே அந்தத் தடைகள் இல்லாத உலகமாக சொர்க்கத்தைக் கருதினான் மனிதன்.

சொர்க்கத்திற்குப் போவது எப்படி?

வாழ்வில் சாதிக்க வேண்டிய அனைத்திற்கும் யாகத்தை நாடினான் வேதகால மனிதன் என்பதை 1.1.1 விளக்கவுரையில் கண்டோம். சொர்க்கத்திற்குப் போவதற்கென்றும் தனியாக யாகங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றைப்பற்றி எமதர்மனிடம் இரண்டாவது வரமாக நசிகேதன் கேட்கிறான்.

நசிகேத வித்யை

யாகங்கள் புறத்தில் செய்யப்படுபவை. சில பொருட்களைக் கொண்டு புறத்தில் செய்யப்படுகின்ற கிரியைகள் புண்ணியத்தைத் தரலாம், சொர்க்க வாழ்வைப் பெற்றுத் தரலாம்; ஆனால் அக வளர்ச்சியைத் தருமா, அனுபூதியைத் தருமா என்ற கேள்வி காலப்போக்கில் எழுந்தது. அகப் பயிற்சிகளே அக வளர்ச்சியைத் தர முடியும் என்ற கருத்து வலுப்பெற்றது யாகங்கள் அகமுகமாக்கப்பட்டன. வித்யைகள் உருவாயின. இந்த மந்திரத்தில் யாகம் வித்யை யாகப் பரிணமிப்பதைக் காண்கிறோம்.

14. ப்ர தே ப்ரவீமி தது மே நிபோத
ஸ்வர்க்யமக்னிம் நசிகேத: ப்ரஜானன்
அனந்த கோலகாப்திமதோ ப்ரதிஷ்ட்டாம்
வித்தி த்வமேதம் நிஹிதம் குஹாயாம்

நசிகேத: நசிகேதா; தத் உ-நீ கேட்ட அதை; ப்ரஜானன்-அறிந்த நான்; தே-உனக்கு; ப்ர ப்ரவீமி-சொல்கிறேன்; ஸ்வர்க்யம்-சொர்க்கத்தைத் தருவதான; அக்னிம்-யாகத்தை; நிபோத-விழிப்புற்றவனாகக் கேள்; அனந்த லோக ஆப்திம் அதோ-சொர்க்கத்தைத் தருவதும்; ப்ரதிஷ்ட்டாம்-பிரபஞ்சத்திற்கு ஆதாரமானதும்; குஹாயாம்-இதயக் குகையில்; நிஹிதம்-இருப்பதாகவும்; த்வம்-நீ; ஏதம்-இதனை; வித்தி-அறிந்துகொள்.

பொருள் : நசிகேதா! சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கின்ற யாகத்தைப்பற்றி கேட்டாய். அது எனக்குத் தெரியும். அதை உனக்குச் சொல்கிறேன். விழிப்புற்றவனாகக் கேள்.  சொர்க்கத்தைத் தருவதும், பிரபஞ்சத்திற்கு ஆதாரமானதுமான அந்த அக்கினி இதயக்குகையில் உள்ளது.

சொர்க்கத்திற்குப் போவதுபற்றிய யாகத்தை அறிய விரும்பினான் நசிகேதன். அது தனக்குத் தெரியும் என்கிறான் எமதர்மன். புறக் கரியையாகச் செய்யும் போது சொர்க்கத்தைத் தருகின்ற அதே யாகம் அக அக்கினியாக, ஆன்ம அக்கினியாகக் கொண்டு வித்யையாகச்  செய்யப்படும்போது பிரபஞ்சத்திற்கு ஆதாரமான இறைவனை அடைவதற்கான ஒரு சாதனை ஆகிறது.

இறை வாழ்வில் முன்னேற முன்னேறத்தான் உபநிஷதங்களின் உட்பொருள் விளங்கும் என்று ஏற்கனவே கண்டோம். விழிப்புற்றவனாகக் கேள் என்று எமதர்மன் அதையே குறிப்பிடுகிறான். அந்த அக்கினி இதயக் குகையில் உள்ளது என்கிறான் எமதர்மன். இதுவே நசிகேத வித்யை. இதயக்குகை என்பதை அறிவதற்கான, புத்தியை விழிப்புறச் செய்வதற்கான ஒரு பயிற்சியாக இது இருந்திருக்க வேண்டும்.
ஆன்மீக உண்மைகளை இறைவனைப்பற்றிய உண்மைகளை அறிய புத்தி விழிப்புற்றிருக்க வேண்டும். இந்தக் கருத்து பல இடங்களில் வலியுறுத்தப் படுவதைக் காணலாம்.

நசிகேத யாகம்: 15-16

சொர்க்கத்தை அடைவதற்கான வழி இதயக் குகையில் இருக்கிறது என்று நசிகேத வித்யையைச் சுட்டிக்காட்டிய எமதர்மன், புறத்தில் அதை யாகமாகச் செய்வதற்கான வழிமுறைகளைக் கூறுகிறான்.

15. லோகாதிமக்னிம் தமுவாச தஸ்மை
யா இஷ்ட்டகா யாவதீர்வா யதா வா
ஸ சாபி தத்ப்ரத்யவதத் யதோக்தம்
அதாஸ்ய ம்ருத்யு: புனரேவாஹ துஷ்ட்ட

லோகாதிம்-ஆதியில் தோன்றிய; தம் அக்னிம்-அந்த யாகத்தை; யா இஷ்ட்டகா-எத்தகைய செங்கற்கள்; யாவதீ: வா-எத்தனை; யதா வா-எவ்வாறு; தஸ்மை-நசிகேதனுக்கு; உவாச-சொன்னான்; ஸ: சஅபி-நசிகேதனும்; தத்-அதனை; யதா உக்தம்-சொன்னதுபோலவே; ப்ரதி அவதத்-திருப்பிச் சொன்னான்; அத-பிறகு; தஸ்ய-நசிகேதனின் பதிலால்; துஷ்ட்ட: மகிழ்ந்த: ம்ருத்யு-எமன்; புன: ஏவ-மீண்டும்; ஆஹ-சொன்னான்.

பொருள் : ஆதியில் தோன்றிய அந்த யாகத்தைப்பற்றி எமதர்மன் நசிகேதனுக்குக் கூறினான். அந்த யாகத்திற்கு எத்தகைய செங்கற்கள் வேண்டும், எத்தனை வேண்டும், எவ்வாறு யாக குண்டத்தை அமைக்க வேண்டும் என்பதையெல்லாம் உபதேசித்தான். எம தர்மன் கூறியவற்றை நசிகேசன் அப்படியே திருப்பிக் கூறினான். நசிகேதன் அவற்றைப் புரிந்துகொண்டதைக் கண்டு மகிழ்ந்த எமதர்மன் மீண்டும் கூறினான்.

16. தமப்ரவீத் ப்ரீயமாணோ மஹாத்மா
வரம் தவேஹாத்ய ததாமி பூய
தவைவ நாம்னா பவிதாயமக்னி
ஸ்ருங்காம் ச இமாமனேகரூபாம் க்ருஹாண

ப்ரீயமாண-மகிழ்ச்சியுற்ற; மஹாத்மா-மகாத்மாவாகிய எமதர்மன்; தவ-உனக்கு; பூய-மீண்டும்; வரம்-வரத்தை; இஹ-இங்கே; ததாமி-தருகிறேன்; தம்-நசிகேதனிடம்; அப்ரவீத்-கூறினான்; அயம்-இந்த; அக்னி-யாகம்; தவ-உனது; நாம்னா ஏவ-பெயராலேயே; பவிதா-விளங்கட்டும்; அனேக ரூபாம்-பல்வேறு வண்ணங்களைக் காட்டுகின்ற; இமாம்-இந்த; ஸ்ருங்காம்-மாலையை; க்ருஹாண-பெற்றுக்கொள்.

பொருள் : நசிகேதனின் பதிலால் மகிழ்ச்சியுற்ற மகாத்மாவாகிய எமதர்மன் அவனிடம், உனக்கு இன்னொரு வரமும் தருகிறேன்: இந்த யாகம் இனி உனது பெயராலேயே விளங்கும். மேலும், பல வண்ணங்களைக் காட்டுகின்ற இந்த மாலையையும் பெற்றுக்கொள் என்று கூறினான்.

நல்ல திறமையான மாணவர்களிடம் ஓர் ஆசிரியருக்கும், தகுதிவாய்ந்த சீடனிடம் குருவிற்கும் ஏற்படுகின்ற உணர்ச்சியில் எமதர்மன் கூறிய வார்த்தைகள் இவை. இரண்டாவது வரத்தையும் அளித்துவிட்டு, இந்த இரண்டு வரங்களையும் அதிகமாகக் கொடுத்தான் அவன். எந்த யாகத்தால் சொர்க்கத்தை அடைய முடியமோ அது நசிகேத யாகம் என்று வழங்கப்படும் என்பது முதல் வரம். இரண்டாவதாக ஓர் அழகிய ரத்தின மாலை. இந்த ரத்தின மாலை என்பது பல்வேறு யாகங்களைப் பற்றிய அறிவைக் குறிக்கிறது( ஸ்ருங்காம் அகுத்ஸிதாம் கதிம் கர்ம மயீம் க்ருஹாண-ஸ்ரீசங்கரர்)

நசிகேத வித்யையின் மகிமை: 17-19

17. த்ரிணாசிகேதஸ்த்ரிபிரேத்ய ஸந்திம்
த்ரிகர்மக்ருத் தரதி ஜன்ம ம்ருத்யூ
ப்ரஹ்ம ஜஜ்ஞம் தேவமீட்யம் விதித்வா
நிசாய்யேமாம் சாந்திமத்யந்தமேதி

த்ரிணாசிகேத-நசிகேத யாகத்தை மும்முறை செய்து; த்ரிபி-மூவருடன்; ஸந்திம் ஏத்ய-தொடர்புகொண்டு; த்ரிகர்ம க்ருத்-மூன்று பயிற்சிகளைச் செய்து; ஜன்ம ம்ருத்யூ-பிறப்பையும் இறப்பையும்; தரதி-கடக்கிறான்; ப்ரஹ்மஜஜ்ஞம்-பிரம்மத்திலிருந்து தோன்றிய; ஈட்யம்-வழிபடத் தகுந்த; தேவம்-இறைவனை; விதித்வா-அறிந்து; நிசாய்ய-அனுபவித்து; இமாம்-இந்த; அத்யந்தம்-நிலைத்த; சாந்திம்-அமைதியை; ஏதி-பெறுகிறான்.

பொருள் : நசிகேத யாகத்தை மும்முறை செய்தவன் மூவருடன் தொடர்பு கொண்டு மூன்று பயிற்சிகளைச் செய்யும்போது பிறப்பையும் இறப்பையும் கடக்கிறான். பிரம்மத்திலிருந்து தோன்றியவரும் வழிபடத்தகுந்தவருமான இறைவனை அறிந்து அனுபவித்து அவன் நிலைத்த அமைதியைப் பெறுகிறான்.

நசிகேதனின் இரண்டாவது வரம் சொர்க்கத்திற்குப் போவதற்கான வழிபற்றியது. அந்த வழி நசிகேத யாகம். அந்தப் புற யாகத்தை சில நிபந்தனைகளுடன் செய்தால் அதுவே ஓர் அகப் பயிற்சியாக, ஒரு வித்யையாக இறை நெறியில் நம்மைச் சேர்க்கும் என்பதை இந்த மந்திரம் சுட்டிக்காட்டுகிறது. அந்த நிபந்தனைகள் என்னென்ன?

1. மூவருடன் தொடர்பு: தாய், தந்தை, குரு ஆகிய மூவர் காட்டும் வழியில் செல்ல வேண்டும். தாயின் அரவணைப்பு, உலக விஷயங்களில் தந்தையின் வழிகாட்டுதல், அக வாழ்க்கையில் தகுந்த குருவின் வழிநடத்தல் ஆகிய மூன்றும் உரிய வேளையில் சரியாகக் கிடைப்பவனின் வாழ்க்கை வெற்றிகரமானதாக அமைகிறது. இதில் ஒன்று குறைந்தாலும் அந்த வாழ்க்கை நிறைவு பெறுவதில்லை. எனவே இந்த மூவரின் ஆசிகளால் வாழ்க்கை நிறைவு பெற்றவனாக இருக்க வேண்டும்.

இந்த மூவரின் தொடர்பால் ஒருவன் இறைவனை அறிகிறான்; அதாவது இறைவன் ஒருவர் இருக்கிறார், அவரை அடைவதே வாழ்க்கையின் நோக்கம் என்பது அவனுக்குத் தெரிய வருகிறது. இதனையே மந்திரத்தில் வரும் அறிந்து (விதித்வா) என்ற வார்த்தை குறிப்பிடுகிறது ஆனால் அப்படி அறிவது மட்டும் போதாது. அனுபூதியில் இறைவனை உணர வேண்டும், அனுபவிக்க வேண்டும் இதனை மந்திரத்தில் வரும் அனுபவித்து (நிசாய்ய) என்ற வார்த்தை குறிப்பிடுகிறது. அதற்கான பயிற்சிகள் எவை?

2. மூன்று பயிற்சிகள்: தவம், ஸ்வாத்யாயம், ஈசுவர ப்ரணிதானம் என்பவை மூன்றும் கர்மங்கள் அல்லது மூன்று பயிற்சிகள் என்று பதஞ்ஜலி முனிவர் கூறுகிறார்( தப: ஸ்வாத்யாயேச்வர ப்ரணிதானானி க்ரியாயோக:).

சொந்த தேவைகளைச் சுருக்கிக்கொள்வதும், தனது வாழ்க்கை பிறருக்குப் பயனுள்ளதாக அமையும் வண்ணம் வாழ்வதும் தவம். நல்ல நூல்களைப் படித்தல், நல்ல கருத்துக்களைப் பிறருக்குச் சொல்லுதல், மந்திர ஜபம், சுய ஆராய்ச்சி போன்றவை ஸ்வாத்யாயம். இறைவனை வழிபடுவதும், அவரைச் சரணடைந்து வாழ்வதும் ஈசுவர ப்ரணிதானம். இவ்வாறு மூவரின் தொடர்புடன் மூன்று பயிற்சிகளைச் செய்பவன் இறைவனை அடைகிறான். அந்த இறைவன் யார்?

பிரம்மத்திலிருந்து தோன்றியவர். உருவமற்ற, குணங்களற்ற அறுதி நிலையில் இறைவன் பிரம்மம் என்று வழங்கப்படுகிறார். சாதாரண மனிதர்கள் புரிந்துகொள்ளத்தக்க நிலையில் குறிப்பிட்ட வடிவத்துடனும் குணங்களுடனும் இருக்கின்ற நிலையில் இறைவன், கடவுள் மற்றும் சிவன், விஷ்ணு, தேவி என்றும் பல்வேறு பெயர்களைப் பெறுகிறார். இந்த நிலையிலுள்ள இறைவனை அவன் அடைகிறான்.

அதனால் விளையும் பலன் என்ன? நிலைத்த அமைதி.

இறைவனைத் தவிர வேறு எதன்மூலம் கிடைக்கின்ற அமைதியும் நிலையானதல்ல. சில புறக் காரணங்களின் வாயிலாகக் கிடைக்கின்ற அமைதி, அந்தக் காரணம் விலகியதும் குலைந்துவிடும். ஆனால் இறைவனைப் பெறுவதால் கிடைக்கின்ற அமைதி, எதனாலும் குலையாது.

18. த்ரிணாசிகேதஸ் த்ரயமேதத் விதித்வா
ய ஏவம் வித்வாம்ச் சினுதே நாசிகேதம்
ஸ ம்ருத்யுபாசான் புரத: ப்ரணோத்ய
சோகாதிகோ மோததே ஸ்வர்க லோகே

த்ரிணாசிகேத:-மும்முறை நசிகேத யாகம் செய்த; ய-யார்; ஏதத்-இந்த; த்ரயம்-மூன்றையும்; ஏவம்-இவ்வாறு; வித்வான்-அறிந்தவன்; விதத்வா-அறிந்த பிறகு; நாசிகேதம்-நசிகேத யாகத்தை; சினுதே-செய்கிறானோ; ஸ-அவன்; ம்ருத்யுபாசாத்-எமனின் பாசக்கயிற்றை; புரத-முன்பே; ப்ரணோத்ய-உதறிக்கொண்டு; சோகாதிக-கவலையைக் கடந்து;ஸ்வர்கலோகே-சொர்க்கத்தில்; மோததே-மகிழ்கிறான்.

பொருள் : (முந்தின மந்திரத்தில் கூறிய) மூன்றையும் அறிந்து யார் நசிகேத யாகத்தைச் செய்கிறானோ அவன் உடல் விழும்முன்பே மரணத்தை வென்று, கவலைகளைக் கடந்து சொர்க்க லோகத்தில் மகிழ்ந்திருக்கிறான்.

நசிகேத யாகத்தை ஒரு வித்யையாகச் செய்யுமாறு இந்த சுலோகம் வலியுறுத்துகிறது. வெறுமனே நசிகேத யாகத்தைச் செய்வதால் சொர்க்க லோகத்திற்குச் செல்கிறான். மூன்றையும் அறிந்து நசிகேத வித்யையைச் செய்பவன் மரணத்தை வெல்கிறான்.

உடல் விழும் முன்பே, அதாவது வாழும்போதே மரணத்தை வெல்வது என்றால் என்ன என்பதை அற்புதமாக விளக்குகிறார் ஸ்ரீசங்கரர். அவன் அறியாமையிலிருந்து விடுபடுகிறான்; ஆசை, வெறுப்பு போன்ற உணர்ச்சிகளின் பிடியிலிருந்து விடுபட்டு வாழ்கிறான் என்கிறார் அவர் (ம்ருத்யுபாசான் அதர்ம அஜ்ஞான ராக த்வேஷாதி லக்ஷணான்) அறியாமை, ஆசை போன்றவற்றின் வசப்பட்டு பிணைக்கிறது; தொடர்ந்த பிறவிக்கு வழியாகிறது. ஆசையோ வெறுப்போ அற்றவனாக வாழும்போது பிறவியற்றுப் போவதால் அது மரணத்தை வென்ற வாழ்க்கை ஆகிறது.

19. ஏஷ தேக்னிர் நசிகேத: ஸ்வர்க்யோ
யமவ்ருணீதா த்விதீயேன வரேண
ஏதமக்னிம் தவைவ ப்ரவக்ஷ்யந்தி ஜனாஸ
த்ருதீயம் வரம் நசிகேதோ வ்ருணீஷ்வ

நசிகேத: நசிகேதா; த்விதீயேன-இரண்டாவது; வரேண-வரத்தால்; யம்-எதனை; அவ்ருணீதா-கேட்டாயோ; ஸ்வர்க்ய-சொர்க்கத்தைத் தருவதான; ஏஷ-இந்த; அக்னி-யாகம்; தே-உனக்கு; உக்த; சொல்லப்பட்டது; ஏதம்-இந்த; அக்னிம்-யாகத்தை; ஜனாஸ-மக்கள்; தவ ஏவ-உனது பெயராலேயே; ப்ரவக்ஷ்யந்தி-அழைப்பார்கள்; நசிகேத-நசிகேதா; த்ருதீயம்-மூன்றாவது; வரம்-வரத்தை; வ்ருணீஷ்வ-கேள்

பொருள் : நசிகேதா! சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கின்ற எந்த யாகத்தைப்பற்றி கேட்டாயோ அதை உனக்குச் சொன்னேன். இந்த யாகத்தை மக்கள் இனி உன் பெயராலேயே அழைப்பார்கள். இனி மூன்றாவது வரத்தைக் கேள்.

மூன்றாவது வரம்(20-29)

மரணத்திற்குப்பிறகு மனிதனின் நிலை: 20-22

இந்த உபநிஷதத்தின் மையக்கருவான மரணத்திற்குப் பிறகு மனிதனின் நிலை பற்றிய உபதேசம் இங்கிருந்து தொடங்குகிறது.

20. யேயம் ப்ரேதே விசிகித்ஸா மனுஷ்யே
ஸ்தீத்யேகே நாயமஸ்தீதி சைகே
ஏதத்வித்யாமனுசிஷ்ட்டஸ்த்வயாஹம்
வரணாமேஷவரஸ்த்ருதீய

ப்ரேதே மனுஷ்யே-மரணத்திற்குப் பிறகு; அஸ்தி-இருக்கிறான்; இதி-என்று; ஏகே-சிலரும்; அயம்-இது; ந அஸ்தி-இல்லை; இதி-என்று சிலரும்; யா இயம் இந்த-விசிகித்ஸா-சந்தேகம்; ஏதத்-இதனை; அஹம்-நான்; த்வயா-உன்னிடமிருந்து-அனுசிஷ்ட்ட-கேட்டு; வித்யாம்-தெரிந்துகொள்கிறேன்; ஏஷ-இது; வாராணாம்-வரங்களுள்; த்ருதீய-மூன்றாவது; வர-வரம்.

பொருள் : மரணத்திற்குப் பிறகு மனிதன் வாழ்கிறான் என்று சிலரும், இல்லை என்று சிலரும் கூறுகின்றனர். இந்தச் சந்தேகத்தை உன்னிடம் கேட்டுத் தெளிவுபெற விரும்புகிறேன். நான் கேட்க விரும்பும் மூன்றாவது வரம் இதுவே.

எமதர்மனின் பதில்

21. தேவைரத்ராபி விசிகித்ஸிதம் புரா
ந ஹி ஸுவிஜ்ஞேயமணுரேஷ தர்ம
அன்யம் வரம் நசிகேதோ வ்ருணீஷ்வ
மா மோபரோத்ஸீரதி மா ஸ்ருஜைனம்

நசிகேத:-நசிகேதா; அத்ர-இந்த விஷயத்தில்; தேவை: அபி-தேவர்களுக்கும்கூட; புரா-முன்னர்; விசிகித்ஸிதம்-சந்தேகம் உள்ளது; ஏஷ-இந்த; தர்ம-விஷயம்; அணு-நுண்மையானது; ந ஹி ஸுவிஜ்ஞேயம்-எளிதாக அறியக்கூடியதல்ல; அன்யம்-வேறு; வரம்-வரத்தை; வ்ருணீஷ்வ-கேட்டுக்கொள்; மா-என்னை; மா உபரோத்ஸீ-கட்டாயப்படுத்தாதே; ஏனம்-இதனை; மா-என்னை; அதிஸ்ருஜ-விட்டுவிடு.

பொருள் : நசிகேதா! இந்த விஷயத்தில் தேவர்களுக்கும்கூட சந்தேகம் உள்ளது. இந்த விஷயம் மிகவும் நுண்மையானது; எளிதாக அறியக்கூடியதல்ல. எனவே வேறு வரம் கேட்டுக்கொள். என்னைக் கட்டாயப்படுத்தாதே, விட்டுவிடு.

நசிகேதனின் பதில்

22. தேவைரத்ராபி விசிகித்ஸிதம் கில
த்வம் ச ம்ருத்யோ யன்ன ஸுஜ்ஞேயமாத்த
வக்தா சாஸ்ய த்வாத்ருகன்யோ ந லப்யோ
நான்யோ வரஸ்துல்ய ஏதஸ்ய கச்சித்

அத்ர-இந்த விஷயத்தில்; தேவை: அபி-தேவர்களுக்கும்; விசிகித்ஸிதம் கில-சந்தேகம் உள்ளதா; ம்ருத்யோ-எமதர்மனே; ந ஸுஜ்ஞேயம்-எளிதாக அறிய முடியாது; த்வம் ச-நீயும்; யத்-எதனால்; ஆத்த-சொல்கிறாயோ; அஸ்ய-இதனை; வக்த-உபதேசிப்பவர்; த்வாத்ருக்-உன்னைப்போல்; அன்ய-வேறொருவர்; ந லப்ய-கிடைக்க மாட்டார்; அன்ய-வேறு; கச்சித் வர-எந்த வரமும்; ஏதஸ்ய-இதற்கு; துல்ய-இணையாக; ந-ஆகாது.

பொருள் : இந்த விஷயத்தில் தேவர்களுக்கும் சந்தேகம் உள்ளதா! எமதர்மனே! இதனை எளிதாக அறிய முடியாது என்று நீயும் சொல்கிறாய். ஆனால் இதை உபதேசிப்பதற்கு உன்னைப்போல் வேறொருவர் கிடைக்க மாட்டார். வேறு எந்த வரமும் இதற்கு இணையாகவும் ஆகாது.

நசிகேதனைத் திசைதிருப்ப எமதர்மனின் முயற்சி : 23-25

23. சதாயுஷ: புத்ர பௌத்ரான் வ்ருணீஷ்வ
பஹூன் பசூன் ஹஸ்தி ஹிரண்யமச்வான்
பூமேர் மஹதாயதனம் வ்ருணீஷ்வ
ஸ்வயம் ச ஜீவ சரதோ யாவதிச்சஸி

சதாயுஷ: நூறாண்டு ஆயுள் உள்ள; புத்ர பௌத்ரான்-மகன்களையும் பேரன்களையும்; வ்ருணீஷ்வ-கேள்; பஹூன்-ஏராளம்; பசூன்-பசுக்கள்; ஹஸ்தி ஹிரண்யம்-யானை, பொன், அச்வான்-குதிரைகள்; பூமியில்; மஹத்-பரந்த; ஆயதனம்-அரசையும்; வ்ருணீஷ்வ-கேட்டுக்கொள்; யாவத்-எதுவரை; இச்சஸி-விரும்புகிறாயோ; சரத-வருடங்கள்; ஸ்வயம் ச-நீயும்; ஜீவ-வாழ்க.

பொருள் : நூறாண்டு ஆயுள் உள்ள மகன்களையும் பேரன்களையும் கேள். ஏராளம் பசுக்கள், யானை, பொன், குதிரை போன்றவற்றைக் கேள். பூமியில் பரந்த அரசைக் கேள். நீயும் எவ்வளவு விரும்புகிறாயோ அதுவரை வாழ்ந்துகொள்.

24. ஏதத் துல்யம் யதி மன்யஸே வரம்
வ்ருணீஷ்வ வித்தம் சிரஜீவிகாம்
மஹாபூமௌ நசிகேதஸ்த்வமேதி
காமானாம் த்வா காமபாஜம் கரோமி

ஏதத் துல்யம்-இதற்கு இணையான; வரம்-வரமாக; யதி மன்யஸே-நினைத்தால்; வ்ருணீஷ்வ-கேள்; வித்தம்-செல்வம்; சிர ஜீவிகாம் ச-நீண்ட ஆயுள்; நசிகேத-நசிகேதா; மஹா பூமௌ-பரந்த பூமியில்; த்வம்-நீ; ஏதி-இரு; த்வா-உன்னை; காமானாம்-ஆசைகளையெல்லாம்; காமபாஜம்-அனுபவிப்பவனாக; கரோமி-செய்கிறேன்.

பொருள் : நசிகேதா! இதற்கு இணையான வரம் என்று நீ எதையாவது கருதினால் அதைக் கேள். செல்வம், நீண்ட ஆயுள், பரந்த பூமியில் அதிபதியாக வாழ்க்கை என்று எதை வேண்டுமானாலும் கேள். உன்னை எல்லா ஆசைகளையும்  அனுபவிப்பவனாகச் செய்கிறேன்.

25. யே யே காமா துர்லபா மர்த்யலோகே
ஸர்வான் காமான்ச் சந்தத: ப்ரார்த்தயஸ்வ
இமா ராமா: ஸரதா: ஸதூர்யா
நஹீத்ருசா லம்பனீயா மனுஷ்யை
ஆபிர்மத்ப்ரத்தாபி: பரிசாரயஸ்வ
நசிகேதோ மரணம் மானுப்ராக்ஷீ

நசிகேத-நசிகேதா; மர்த்யலோகே-மானிட உலகில்; துர்லபா-அடைதற்கரிய; காமா-ஆசைகள்; யே யே-எவை எவை; ஸர்வான் காமான்-யுல்லா ஆசைகளையும்; சந்தத-விருப்பம்போல்; ப்ரார்த்தயஸ்வ-கேட்டுக்கொள்; ஸரதா-தேர்களுடனும்; ஸதூர்யா-வாத்தியக் கருவிகளுடனும்; ராமா-ஆண்களை மயக்குகின்ற; இமா-இந்தப் பெண்கள்; ஈத்ருசா-இத்தகைய பெண்கள்; மனுஷ்யை-மனிதர்களால்; ந லம்பனீயா: ஹி-அடையக் கூடியவர்கள் அல்ல; மத் ப்ரத்தாபி-என்னால் தரப்பட்ட; ஆபி-இவர்களால்; பரிசாரயஸ்வ-பணிவிடை பெற்றுக்கொள்; மரணம்-மரணத்தைப்பற்றி; மா அனுப்ராக்ஷீ-கேட்காதே

பொருள் : நசிகேதா! மானிட உலகில் அடைதற்கரிய ஆசைகள் எவையெவை உண்டோ அவை அனைத்தையும் உன் விருப்பம்போல் கேட்டுக்கொள் சாரதிகளுடன் தேர்களைத் தருகிறேன். வாத்தியக் கலைஞர்களைத் தருகிறேன். ஆண்களை மயக்குகின்ற இந்த தேவலோகப் பெண்களைத் தருகிறேன். இத்தகைய பெண்கள் மனிதர்களுக்குக் கிடைக்கக் கூடியவர்கள் அல்லவே! நான் தருகின்ற இவர்களால் நீ வேண்டிய பணிவிடை பெற்றுக்கொள். ஆனால் மரணத்தைப்பற்றி மட்டுமே கேட்காதே.

நசிகேதனின் ஆசையின்மை : 26-29

26. ச்வோபாவா மர்த்யஸ்ய யதந்தகைதத்
ஸர்வேந்த்ரியாணாம் ஜரயந்தி தேஜ
அபி ஸர்வம் ஜீவிதமல்பமேவ
தவைவ வாஹாஸ்தவ ந்ருத்ய கீதே

அந்தக-மரணதேவனே; ச்வோ பாவா-நிலையற்றவை; மர்த்யஸ்ய-மனிதனின்; ஸர்வ இந்த்ரியாணாம்-எல்லா புலன்களின்; யத் தேஜ-ஆற்றலையும்; தத் அவை; ஜரயந்தி-வீணாக்குகின்றன; ஸர்வம் ஜீவிதம் அபி-எல்லா வாழ்க்கையும்; அல்பம் ஏவ-குறுகியதே; தவ-உனது; வாஹா-குதிரைகளும்; ந்ருத்ய கீதே-ஆடல்களும் பாடல்களும்; தவ ஏவ-உன்னிடம் இருக்கட்டும்

பொருள் : மரணதேவனே! நீ கூறுகின்ற இன்பங்கள் அனைத்தும் நிலையற்றவை அவை மனிதனுடைய புலன்கள் அனைத்தின் ஆற்றலையும் வீணாக்குகின்றன. வாழ்க்கையோ குறுகியது. எனவே நீ சொன்ன குதிரைகள், ஆடல்கள், பாடல்கள் எல்லாம் உன்னிடமே இருக்கட்டும்.

உலகின் இன்பங்கள் நிலையற்றவை. அதாவது உலகப் பொருட்களிலிருந்து கிடைக்கும் இன்பம் நிலையாக இருக்காது. அந்த இன்பங்களைத் தொடர்ந்து எப்போதும் துன்பங்கள் வரும். அது மட்டுமல்ல, இன்பங்களை அனுபவிக்க அனுபவிக்க அது ஆற்றலை விரயம் செய்து புலன்களை அழிக்கின்றன. நம்மையும் அழித்து, துன்பங்களையும் விளைவாகக் கொண்டுவருகின்ற இந்த உலக இன்பங்களை நாடக் கூடாது. மனிதனின் ஆயுள் மிகவும் குறுகிறது. இறைவன் தந்துள்ள இந்தக் குறுகிய ஆயுளை அற்ப சுகங்களில் செலவிடக்கூடாது; உயர் லட்சியத்தை அடைவதற்காகவே பயன்படுத்த வேண்டும். இதனைப் புரிந்துகொண்டு, எமதர்மன் அளித்த சுகபோகங்களை மறுத்துவிட்டான் நசிகேதன்.

27. ந வித்தேன தர்ப்பணீயோ மனுஷ்யோ
லப்ஸ்யாமஹே வித்தமத்ராக்ஷ்ம சேத் த்வா
ஜீவிஷ்யாமோ யாவதீசிஷ்யஸி த்வம்
வரஸ்து மே வரணீய: ஸ ஏவ

மனுஷ்ய-மனிதன்; வித்தேன-பணத்தால்; ந தர்ப்பணீய-திருப்தி அடையக்கூடியவன் அல்ல-த்வா-உன்னை; அத்ராக்ஷ்ம சேத்-பார்த்ததால்; வித்தம்-செல்வம்; லப்ஸ்யாமஹே-பெறுவோம்; த்வம்-நீ யாவத்-எதுவரை; ஈசிஷ்யஸி-ஆள்கிறாயோ; ஜீவிஷ்யாம-வாழ்வோம்; மே-என்னால்; வரணீய-கேட்கத் தக்க; வர: து-வரமோ; ஸ ஏவ-அதுவே.

பொருள் : மனிதன் பணத்தால் திருப்தி அடையக்கூடியவன் அல்ல. உன்னை பார்த்ததால் வேண்டிய செல்வம் பெறுவது உறுதி. நீ ஆளும்வரை என் ஆயுளுக்கும் பஞ்சமில்லை. எனவே ஆயுளோ செல்வமோ எதுவும் எனக்கு வேண்டாம். நான் கேட்கத் தக்க வரம் அது ஒன்றே.

பத்து ரூபாய் கிடைத்தால் நூறு போதும் என்று தோன்றும் நூறு கிடைத்தால் ஆயிரம் சரி என்று தோன்றும். இவ்வாறு வளர்ந்துகொண்டே செல்வது பணத்தின்மீது உள்ள ஆசை என்று எழுதுகிறார் கேரளத்தில் வாழ்ந்த மகானான பூந்தானம். அதனால்தான் ஆசையை ஒரு சங்கிலி (நிகளம்) என்று குறிப்பிட்டார் அருணகிரி நாதர்( ஆசா நிகளம் துகளாயின பின் பேசா அனுபூதி பிறந்ததுவே), பணம் என்று மட்டுமல்ல, உலக இன்பங்கள் எதிலும் திருப்தி என்பது வராது. எமதர்மன் கொடுத்த அத்தனை செல்வத்தை அனுபவித்தாலும் விளைவு ஒன்றாகத்தான் இருக்கும்; அதாவது திருப்தி கிடைக்கப்போவதில்லை. எனவே அதை நாடிப் பலனில்லை,

புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப ஒருவரது ஆயுளை நிர்ணயிப்பவன் எமதர்மன். வேண்டிய காலம் வரை வாழ்வதற்கான வரத்தை நசிகேதனுக்கு அவனே அளித்துள்ளான். ஆனாலும் அந்தக் காலம் முடிந்தபின் இறக்கத்தான் வேண்டும். எனவே நீண்ட ஆயுளாலும் பலன் இல்லை. அதனால், மரணத்தைப்பற்றி தான் கேட்டதற்கு விடை வேண்டும், அது மட்டுமே வேண்டும் என்று சாதிக்கிறான் நசிகேதன்.

28. அஜீர்யதாமம்ருதானாமுபேத்ய
ஜீர்யன் மர்த்ய: க்வத ஸ்த: ப்ரஜானன்
அபித்யாயன் வர்ணரதி ப்ரமோதான்
அதிதீர்கே ஜீவிதே கோ ரமேத

அஜீர்யதாம்-மூப்பற்றவர்களும்; அம்ருதானாம்-மரணமற்றவர்களும்; உபேத்ய-அடைந்து; ப்ரஜானன்-அறந்து ஜீர்யன்-மூப்படையக்கூடிய; மர்த்ய-இறக்கக்கூடிய; க்வத; ஸ்த-கீழ் உலகங்களில் வாழ்கின்ற ஒருவன்; வர்ண ரதி ப்ரமோதான்-பாடல், உடல்சுகம்-இவற்றால் உண்டாகும் இன்பத்தை; அபி த்யாயன்-சிந்தித்து; அதி தீர்கே-நீண்ட காலமானாலும்; ஜீவிதே-வாழ்க்கையில்; க-யார்; ரமேத-ஆசைப்படுவான்.

பொருள் : மூப்பற்றவர்களும் மரணமற்றவர்களுமான உங்களை அடைந்து உண்மையை அறிந்துகொண்டேன். நானோ; மூப்பும் மரணமும் உள்ள கீழ் உலகில் வசிப்பவன்; பாடல், உடல்சுகம் முதலியவற்றால் உண்டாகும் இன்பம் என்ன என்பதைச் சிந்தித்து அறிந்தவன். எனவே எவ்வளவுதான் நீண்ட ஆயுள் தந்தாலும் அந்த வாழ்க்கையில் நான் ஆசை வைப்பேனா?

தேவர்கள் மூப்பற்றவர்கள், மரணமற்றவர்கள் என்று கூறப்படுகின்றனர். அதாவது நம்முடன் ஒப்பிடும் போது அவர்கள் இன்னும் நீண்ட காலம், மிக நீண்ட காலம் வாழ்கிறார்கள், ஆனால் அவர்களும் அநதக் காலம் முடிந்ததும் மீண்டும் பிறப்பிற்கு உள்ளாகியே தீர வேண்டும். உங்களை அடைந்து உண்மையை அறிந்துகொண்டேன் என்று நசிகேதன் குறிப்பிடுவது இதைத்தான். தேவர்களே ஒருநாள் மரணத்தைத் தழுவ வேண்டுமானால் மனிதனின் ஆயுள் எவ்வளவு சிறியது! அதனை இந்த நிலையற்ற உலக இன்பங்களில் செலவிடுவேனா என்பது நசிகேதனின் கேள்வி. மரணத்திற்குப் பின்னால் என்ன உள்ளது என்பதை மட்டுமே அறிய விரும்புகிறான் அவன்.

29. யஸ்மின்னிதம் விசிகித்ஸந்தி ம்ருத்யோ
யத்ஸாம்பராயே மஹதி ப்ரூஹி நஸ்தத்
யோயம் வரோ கூடமனுப்ரவிஷ்ட்டோ
நான்யம் தஸ்மான்னசிகேதா வ்ருணீதே

ம்ருத்யோ-மரண தேவனே; யஸ்மின்-எதைப்பற்றி; இதம் விசிகித்ஸந்தி-இந்த சந்தேகம் நிலவுகிறதோ; மஹதி-பெரும் பலனைத் தருகின்ற-ஸாம்பராயே-மறு உலக விஷயத்தில்; யத்-எது உண்டோ; தத்-அதை; ந-எங்களுக்கு; ப்ரூஹி-சொல்; ய: வர-எந்த வரம்; கூடம் அனுப்ரவிஷ்ட்ட-ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதோ; அயம்-இந்த; தஸ்மாத்-அதைவிட; அன்யம்-வேறு வரத்தை; நசிகேதா-நசிகேதன்; ந வ்ருணீதே-கேட்க மாட்டேன்.

பொருள் : மரண தேவனே! எந்த விஷயத்தில் இந்தச் சந்தேகம் நிலவுகிறதோ, மறுஉலக விஷயத்தைப் பற்றிய எதனை அறிந்தால் பெரும் பலன் கிடைக்குமோ, எந்த உண்மை மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதோ அதை நான் தெரிந்துகொள்ள வேண்டும். வேறு எந்த வரமும் எனக்கு வேண்டாம்.

இதி காடக உபநிஷதி ப்ரதம அத்யாயே ப்ரதமா வல்லீ இவ்வாறு கட உபநிஷதத்தில் முதல் அத்தியாயத்தில் முதல் பகுதி நிறைவுறுகிறது

மூன்று வரங்கள்: ஒரு கண்ணோட்டம்

நசிகேதன்

உயர் உண்மையை நாடுபவர்களுக்கு நசிகேதனின் கதை ஒரு கலங்கரை விளக்கம். அவர்களிடம் இருக்க வேண்டிய சில முக்கியமான குணங்கள் நசிகேதனின்மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன.

முதலாவதாக சிரத்தை(2) வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, அந்த நம்பிக்கையைச் சாதிக்கின்ற செயல்திறன்.

இரண்டாவது சுய மதிப்பு. தனது மதிப்பு நசிகேதனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அதாவது, தன்னைப்பற்றி அவன் அறிந்திருந்தான். சிரத்தை மிக்கவனான எனக்குச் சொல் என்று (13) அவன் சொல்வதிலிருந்து இதனை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. சிரத்தை உள்ளவரிடம் சொன்னால் அது வீண் போகாது. ஏனெனில் அதை அவன் செயல்படுத்துவான். தன்னால் செயல்படுத்த முடிந்ததையே அவன் கேட்பான். கேட்டதைச் செயல் படுத்துவான். தன்னிடம் அந்தப் பண்பு இருப்பதை, எமன் சொல்வதைக் கடைபிடிக்கின்ற திறமை தன்னிடம் இருப்பதை உணர்ந்திருந்தான் நசிகேதன். இதுவே சுய மதிப்பு என்பது.

அது மட்டுமின்றி, செல்வம், பதவி, பெண் என்று பல விஷயங்களைக் காட்டி திசைதிருப்ப எமதர்மன் முயற்சித்த போது இந்த இன்பம் என்ன என்பதைச் சிந்தித்து அறிந்தவன் நான்(28) என்று தைரியமாகக் கூறுகிறான் நசிகேதன். இதுவும் அவன் தன்னைப்பற்றி அறிந்திருந்தான், தன்னைப்பற்றிய உயர்ந்த மதிப்பு வைத்திருந்தான் என்பதையே காட்டுகிறது. சுயமதிப்பை ஆணவத்துடன் குழப்பிக்கொள்ளக் கூடாது. இல்லாத திறமைகளை இருப்பதாகக் காட்டிக் கொள்வதும், பலவீனங்களை மறைப்பதற்காக இடுவதுமான முகமூடியே ஆணவம். சுய மதிப்பு என்பது தன்னிடம் இருப்பதைப் புரிந்துகொள்வது. ஆணவம் பிறரைக் கீழாகப் பார்க்கும், சுய மதிப்பு அனைவரையும் சமமாகப் பார்க்கும். எனவே தன்னறிவு, அதன் விளைவாக வருகின்ற சுய மதிப்பு இரண்டும் உயர் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது.

அடுத்தது உண்மையை ஏற்றுக்கொள்ளல். வாஜசிரவஸ் நசிகேதனை மரண தேவனிடம் அனுப்பத் துணிந்தபோதும் கோபமோ ஆத்திரமோ அடையாமல் அதனை அப்படியே ஏற்றுக் கொண்டு ஆழ்ந்து சிந்திக்கிறான் அவன்(5,6) சூழ்நிலை கொண்டு வருபவற்றை, அவை நல்லவையானாலும் கெட்டவையானாலும், அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். உயர் உண்மையை நாடுபவன் ஒருபோதும் சூழ்நிலைகளை மாற்றியமைக்க முயற்சி செய்யக் கூடாது. எத்தகைய சூழ்நிலை வந்தாலும், உடனே மனத்தை உள்ளே திருப்பி அதனை அகவளர்ச்சிக்கான ஒரு படியாக மாற்றும் திறமை வேண்டும்.

அடுத்தது துணிச்சல்(10). எமனையே நேரில் சந்தித்துப் பேசுகின்ற துணிச்சலை நசிகேதனிடம் காண்கிறோம். பாதையில் எத்தனை இடர்கள் வந்தாலும் அத்தனையையும் எதிர்கொண்டு, தான் லட்சியமாகக் கொண்டதைச் சாதிப்பதற்கான துணிச்சல், உண்மையை நாடுபவனிடம் வேண்டும்.

கடைசியாக ஆசையின்மை(29). உயர் உண்மையை நாடுபவனிடம் உலகைப்பற்றிய, அதன் சுகபோகங்களைப் பற்றி தெளிவான கருத்து இருக்க வேண்டும். அப்போது மட்டுமே அவன் தனது லட்சியத்தை அடைய முடியும். உலகம், அதன் சுகபோகங்கள் என்றால் என்ன? அவற்றிற்கு வாழ்க்கையில் எந்த அளவு இடம் கொடுக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்று. உலகின் சுகங்கள் அத்தனையையும் எமதர்மன் கொடுத்த பிறகும் நசிகேதன் அவற்றை உதறிவிட்டு, லட்சியத்திலேயே குறியாக இருக்கிறான். ஏனெனில் அந்த சுகபோகங்களின் நிலையாமையை அவன் சிந்தித்து அறிந்திருக்கிறான்(28). எனவே உண்மையை நாடுபவனுக்கு உலகின் கவர்ச்சிகள் எதனாலும் நிலைகுலையாத மனம் வேண்டும்

மூன்று வரங்கள்

நசிகேதன் எமனிடம் கேட்கின்ற மூன்று வரங்களில் ஒரு தெளிவான, படிப்படியான லட்சிய நாட்டத்தைக் காண்கிறோம். உயர் வாழ்க்கையை, ஆன்மீக வாழ்க்கையை நாடுகிறோம் என்பதற்காக உலகின் உண்மையையோ சமுதாய உறவுகளையோ தூக்கி எறிய வேண்டும் என்பதில்லை. நசிகேதனின் முதல் வரம் தந்தை தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதாக இருந்தது. இது குடும்பத்தில் ஒரு நல்ல உறவு நிலவ வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது. பெற்றோருடனும் குடும்பத்தில் உள்ளவர்களிடமும் சரியான உறவு நிலவ வேண்டும்.

இரண்டாம் வரம் யாகம் பற்றியது. யாகங்களின் மூலம் இயற்கை சக்திகளுடன் நாம் தொடர்புகொள்கிறோம். நமக்கு வேண்டியவற்றை இயற்கை சக்திகளின்மூலம் சாதித்துக் கொள்கிறோம். அதாவது, இயற்கையைப் பேணுதல் சமுதாயத்துடனும் இயற்கையுடனும் இயைந்து வாழ நாம் கற்றிருக்க வேண்டும்.

மூன்றாம் வரம் உயர் உண்மையைப்பற்றியது

குடும்பத்துடனும் சமுதாயத்துடனும் இயற்கையுடனும் நல்ல உறவை வைத்துக்கொண்டே உயர் ஆன்மீக உண்மைகளை நாம் அடைய முடியும் என்பதை இந்த மூன்று வரங்களும் நமக்குக் காட்டுகின்றன.
கட உபநிஷதம் (மரணத்திற்கு பின்னால்) ஒரு கண்ணோட்டம்!

வேதங்கள்: உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது பாரதத் திருநாடு ஆன்மஒளியில் விழித்தெழுந்தது. அதன் தவப் புதல்வர்களாகிய ரிஷிகள், இருளைக் கடந்து, பொன்னிறத்தில் ஒளிரும் மாபெரும் இறைவனை நான் அறிந்துகொண்டேன். அவரை அறிவதால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும். வேறு எந்த வழியும் இல்லை. ( வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்யவர்ணம் தமஸ: பரஸ்தாத் தமேவ விதித்வா திம்ருத்யுமேதி நான்ய: பந்தா வித்யதேயனாய- சுவேதாஸ்வதர உபநிஷதம், 3.8) அழியாத அமரத்துவத்தின் குழந்தைகளே, கேளுங்கள் (ச்ருண்வந்து விச்வே அம்ருதஸ்ய புத்ரா சுவேதாஸ்வதர உபநிஷதம், 2.5) என்று பூமியில் வாழ்பவர்களை மட்டுமல்ல, பிற உலகங்களில் வாழ்வோரையும் அறை கூவினர். குறித்து வைக்கப்பட்ட சரித்திரமோ, பாரம்பரியத்தின் மங்கிய வெளிச்சமோகூட ஊடுருவ முடியாத, காலத்தின் அந்த நீண்ட நெடுந்தொலைவில் இந்த உலகை புனிதமாக்கியபடி வாழ்ந்த அந்த ரிஷிகள் அனுபூதியில் கண்ட உண்மைகளின் தொகுப்பே வேதங்கள்.

உலகிலேயே மிகப்பழைய நூல் இந்த சிந்தனைக் கருவூலம்தான். இது எப்போது தோன்றியது என்பது ஒருவருக்கும் தெரியாது. இக்கால ஆராய்ச்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இது எட்டாயிரம் அல்லது ஒன்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றியதாக இருக்கலாம்.........ஆனால் அன்று போலவே இன்றும் அவை புதுமை மாறாமல் இருக்கின்றன; ஏன் முன்னைவிட புதுப் பொலிவுடன் திகழ்வதாகவே கூறலாம்.

வேதங்கள் யாராலும் எழுதப்பட்டவை அல்ல. என்றென்றும் நின்று நிலவுகின்ற உண்மைகளின் தொகுப்பே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது. மனித இனம் முழுவதும் அதை மறந்து விட்டாலும் இருக்கும். அவ்வாறுதான் ஆன்மீக உலகின் விதிகளும்........அவை கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்னரும் இருந்தன, நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும்  என்று எழுதுகிறார் சுவாமி விவேகானந்தர், ரிஷிகள் அந்த விதிகளை வெளிப்படுத்தினார்கள், அவ்வளவுதான்

அவ்வாறு ரிஷிகள் வெளிப்படுத்திய அந்த உண்மைகள் பின்னாளில் வியாச முனிவரால் நான்காகத் தொகுக்கப்பட்டன. அவை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள். ஒவ்வொரு வேதமும் மூன்று முக்கியப் பிரிவாக பிரிக்கப்படுகின்றன. அவை சம்ஹிதை (பல்வேறு தேவர்களிடம் பிரார்த்தனைகள்) பிராம்மணம் (யாக விவரங்கள்) ஆரண்யகம் (உபநிஷதங்கள்; அறுதி உண்மையைப் பற்றிய ஆராய்ச்சி.)

உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், ஸ்ரீமத் பகவத்கீதை மூன்றும் ப்ரஸ்தான த்ரயம் என்று வழங்கப்படுகின்றன. அறுதிப் பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது இதன் பொருள்.

வேதகாலச் சிந்தனையின் மணிமகுடமாகத் திகழ்பவை உபநிஷதங்கள். அறுதி உண்மையைப் பற்றிய ஆராய்ச்சியில் மனித மனத்தால் தொடக்கூடிய எல்லையை உபநிஷதங்கள் தொட்டுவிட்டன என்றே உலகின் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்.

உபநிஷதங்கள் பல. அவற்றுள் 108 பொதுவாக கணக்கில் கொள்ளப்படுகின்றன. அவற்றில் பதினான்கு உபநிஷதங்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அவை ஈச, கேன, கட, ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய, ஐதரேய, தைத்திரீய, சாந்தோக்ய, பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர, கவுசீதகி, மஹாநாராயண, மைத்ராயணி உபநிஷதங்கள் ஆகும். இவற்றுள் முதல் பத்து உபநிஷதங்களுக்கு ஸ்ரீசங்கரர் விளக்கவுரை எழுதியுள்ளார், 14 உபநிஷதங்களும் கீழ்க்கண்ட பட்டியலின்படி நான்கு வேதங்களில் அமைந்துள்ளன.

வேதம்-உபநிஷதம்

ரிக்- ஐதரேய, கவுசீதகி

யஜுர்- ஈச, கட, தைத்திரீய, பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர, மைத்ராயணீ, மஹாநாராயண

சாம-கேன, சாந்தோக்கிய

அதர்வண- ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய

யஜுர் வேதத்தில் சுக்ல யஜுர் தேவம், கிருஷ்ண யஜுர் வேதம் என்று இரண்டு பிரிவுகள் உள்ளன. கிருஷ்ண யஜுர் வேதத்தில் தைத்திரீய ஆரண்யகம் என்ற பகுதியில் கட உபநிஷதம் உள்ளது. கடர் என்ற முனிவர் இதை அருளியதால் கட உபநிஷதம் என்று வழங்கப்படுகிறது.

கட உபநிஷதத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன. முதற்பகுதியில் மூன்று அத்தியாயங்கள், இரண்டாம் பகுதியில் மூன்று அத்தியாயங்கள். இந்த ஆறு அத்தியாயங்களிலுமாக 119 மந்திரங்கள் ( இன்றைய வழக்கில் மீண்டும் மீண்டும் சொல்லி, அதாவது ஜபித்து உய்வு பெறுவதற்கான ஒன்றே மந்திரம்(மனனாத் த்ராயதே இதி மந்த்ர) என்று கொள்ளப்படுகிறது. ஆனால் வேதப் பாடல்கள் அனைத்துமே மந்திரங்கள் என்றுதான் வழங்கப்படுகின்றன) உள்ளன.

பாரதத்தின் பண்டைய ஆச்சாரியர்களும் சரி, இன்றைய ஆச்சாரியர்களும் சரி கதைகள்மூலம் உயர் உண்மைகளைப் போதிப்பதில் நிகரற்று விளங்குகிறார்கள். அதற்கு முன்னோடியாகத் திகழ்பவை உபநிஷதங்கள். கட உபநிஷதத்திலும், உலகையே வெல்வதற்காக வாஜசிரவஸ் என்ற பணக்காரர் செய்த யாகம் மற்றும் அதைத் தொடர்ந்த நிகழ்ச்சிகளின்மூலம் உண்மை புகட்டப்படுகின்றன.

நசிகேதன் ஒரு சிறுவன், வாஜசிரவஸின் மகன். தந்தை, யாக நியதிகளைச் சரியாகக் கடைபிடிக்கவில்லை என்பதைக் கண்ட அவன் தந்தையின் தவறைச் சுட்டிக்காட்ட முற்பட்டான். அதை வாஜசிரவஸ் விரும்பாததால் அவன் எமதர்மனிடம் செல்ல நேர்ந்தது. எமதர்மனிடம் மூன்று வரங்கள் பெற்றான் அவன். மூன்று வரங்களின்மூலம் இந்த உபநிஷதத்தில் உயர் உண்மைகள் போதிக்கப்படுகின்றன.

பிறப்பும் மரணமும் வாழ்க்கையின் இரண்டு மாபெரும் புதிர்கள். பிறப்பு நம் வாழ்வில் நடந்துவிட்ட ஒன்று; அதைப்பற்றி நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. மற்றொரு புதிர் மரணம். மரணம் என்றால் என்ன, அப்போது மனிதனுக்கு என்ன நடக்கிறது, அதன்பிறகு அவன் என்ன ஆகிறான் போன்ற கேள்விகளுக்கு விடை காண அன்றிலிருந்து இன்று வரை மனிதன் முயன்று கொண்டிருக்கிறான். சாஸ்திரங்களும் அதனைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து விளக்கத்தான் செய்துள்ளன. ஆனாலும் மரணம் என்பது இன்றுவரை ஒரு புதிராகவே உள்ளது.

கட உபநிஷதம் தனக்கென்று ஒரு கோணத்தை எடுத்துக்கொண்டு மரணத்தை ஆராய்கிறது. மரணத்தின் போது என்ன நடக்கிறது என்பதைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்த உபநிஷம் கூறுகிறது(2.2). ஆனால் மரணத்தைப்பற்றி ஆராய்வதைவிட அதை வென்று அறுதி உண்மையை அடைவதே முக்கியம்; நம்மிடம் தரப்பட்டுள்ள வாழ்க்கையை உரிய முறையில் வாழ்வதே அதற்கு வழி என்று சுட்டிக் காட்டுகிறது இந்த உபநிஷதம்(உதாரணமாக 1.1.18)

வித்யைகள்: மனிதன், உலகம், இறைவன் என்பவை மூன்று அடிப்படை உண்மைகள். உபநிஷதங்கள் இந்த மூன்றையும், இவற்றிக்கு இடையே நிலவுகின்ற தொடர்பையும் ஆராய்கின்றன. அறுதி உண்மையாகிய இறைவனை ஒவ்வொரு மனிதனும், ஒவ்வோர் உயிரும் சென்று அடைவதே வாழ்க்கையின் லட்சியம், அதற்கான களமே உலகம். உலகம் தருகின்ற அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு, உலகில் வாழ்ந்தபடியே அந்த லட்சியத்தை அடையுமாறு உபநிஷதங்கள் வலியுறுத்துகின்றன. இதற்கு ஒவ்வோர் உபநிஷதங்களும் தங்களுக்கென்று சில குறிப்பிட்ட பாதைகளைக் காட்டுகின்றன. இவை வித்யை எனப்படுகின்றன. வித்யைகள் எண்ணற்றவை. ஆனால் தற்போது சுமார் 35 வித்யைகள். இந்த 14 முக்கிய உபநிஷதங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன. காலங்கள் பல கடந்து விட்டதாலும், வேறு பல காரணங்களாலும் இந்த வித்யைகளின் செயல்முறையோ சரியான பொருளோ நமக்கு தெரியாமல் போய் விட்டது.

கட உபநிஷதத்தில் இரண்டு வித்யைகள் கூறப்பட்டுள்ளன 1. நசிகேத வித்யை(1.1.14 மற்றும் 1.3.2) 2. அங்குஷ்ட்ட மாத்ர வித்யை(2.1.12 மற்றும் 2.3.17). இந்த இரண்டு வித்யைகளும் இரண்டு படிகள் போல் அமைந்து, இறைவனை உணர்வதற்கான, மரணத்தை வெல்வதற்கான ஒரு பாதையாக விளங்கியிருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம்.

மொழிபெயர்ப்பு: 1935-இல் கடலங்குடி ஸ்ரீநடேச சாஸ்திரிகள் ஸ்ரீசங்கரரின் விளக்கவுரையைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். தற்போது வெளிவருகின்ற இந்த மொழிபெயர்ப்பு, கடஉபநதிஷதத்தை முதன்முதலாகப் படிப்பவர்களை நோக்கமாகக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. எனவே இரண்டு முக்கியமான விஷயங்கள் இந்த மொழிபெயர்ப்புக்கு அடிப்படையாக வைக்கப்பட்டுள்ளன.

1. தத்துவச் சிக்கல்கள் எதையும் கருத்தில் கொள்ளவில்லை. உதாரணமாக, ஈசுவரன், பிரம்மம் போன்ற வார்த்தைகள் தத்துவரீதியாக பரம்பொருளின் வெவ்வேறு நிலைகளைக் குறிப்பிடுபவை. இருப்பினும் தமிழில் இறைவன் போன்ற பொதுப்பதங்களையே பயன்படுத்தியுள்ளோம். இறைவன் என்ற மாபெரும் சக்தியுடன் நாம் தொடர்பு கொள்கிறோம் என்ற உணர்வுக்கு முதலிடம் கொடுத்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
2. அதுபோலவே காலம், இடம் போன்ற இலக்கண நியதிகளுக்கும் மொழிபெயர்ப்பில் முக்கிய இடம் அளிக்கவில்லை.

அமைப்பு: ஒவ்வொர் அத்தியாயத்திலும் முதலில் அந்த அத்தியாயத்தின் கரு கூறப்படுகிறது. பிறகு சம்ஸ்கிருத மூலம், தமிழ் வடிவம், வார்த்தைக்கு வார்த்தை பொருள், திரண்ட பொருள் விளக்கம் என்று ரீதியில் நூல் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொர் அத்தியாயத்தின் கடைசியிலும் தரப்பட்டுள்ள சுருக்கம் என்ற பகுதி, விரிவாகப் படித்ததை எளிதாக மனத்தில் வைத்துக்கொள்ள உதவுகிறது. அதே வேளையில் பொருள் குறிப்பு அகராதியாகவும் அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஒரு வார்த்தை: உபநிஷதங்கள் ரிஷிகளின் அனுபவ உண்மைகள். வெறும் நூலறிவு கொண்டோ, சம்ஸ்கிருதப் புலமை கொண்டோ அவற்றின் உண்மையான பொருள் அறிந்து கொள்வது சாத்தியம் அல்ல. உண்மையான சாதனை வாழ்வில் ஈடுபட்டு, மனம் தூய்மைபெற்று நாம் இறைவனை நோக்கி முன்னேற முன்னேற இவற்றின் உட்பொருள் மேன்மேலும் ஆழமாக நமக்குப் புரியும். மீண்டும் மீண்டும் படித்து, மந்திரங்களின் பொருளை ஆழமாகச் சிந்தித்து, சாதனைகளிலும் ஈடுபட்டால்தான் உபநிஷதங்களை உண்மையாகப் புரிந்துகொள்ள முடியும்; அவற்றின் அற்புதத்தில் ஆழ்ந்து மனம் மகிழ முடியும். பல மந்திரங்களின் பொருள் சுலபத்தில் அறிந்து கொள்ளத் தக்கதாக இல்லை. பொருள் புரியவில்லை என்பதற்காக சோர்ந்துவிடாமல், புரிந்த மந்திரங்களின் பொருளை ஆழ்ந்து சிந்தித்து சாதனைகளின் உயர்வடைய முயற்சிக்க வேண்டும்.

சாந்தி மந்திரம்: எந்த ஒன்றையும் செய்யும்போது அதற்குரிய மனநிலை இருக்கப் பெறுவது இன்றியமையாதது. எந்தக் காரியத்தைச் செய்கிறோமோ அதற்குரிய மனநிலையை வரவழைத்துக்கொண்டு, அதன்பிறகு அந்தச் செயலில் ஈடுபடுவது சிறப்பான பலனை அளிக்கும். நமது கோயில்களில் பல பிரகாரங்கள் அமைந்திருப்பதன் காரணம் இதுவே. ஒவ்வொரு பிரகாரத்தில் சுற்றி வரும்போதும் மற்ற எண்ணங்களை எல்லாம் விட்டு, கடைசியாக கருவறையில் சென்று தெய்வத்தைத் தரிசிக்கும் போது, நம்மால் முழுமனத்துடன் தெய்வ சிந்தனையில் ஈடுபட முடிகிறது. அதுபோல் அனுபூதிக் கருவூலமான உபநிஷதங்களைப் படிக்கப் புகுமுன் நமது சிந்தனையை அவற்றுடன் இயைபுபடுத்த சாந்தி மந்திரங்கள் உதவுகின்றன.

உபநிஷதங்களின் உண்மைப் பொருளை வெறும் புலமையால் உணர முடியாது. பணிவுடனும் வழிபாட்டு உணர்வுடனும் அணுகும்போது மட்டுமே அதனைப் புரிந்துகொள்ள முடியும். அத்தகைய மனப்பான்மையை மனத்தில் கொள்வதற்காக இந்த மந்திரங்கள் முதலில் ஓதப்படுகின்றன.

கட உபநிஷதத்திற்கான சாந்தி மந்திரம் இது.

ஓம் ஸஹ நாவவது
ஸஹ நௌ புனக்து
ஸஹ வீர்யம் கரவாவஹை
தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவஹை
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

ஸஹ நௌ-நம் இருவரையும்; அவது-காப்பாராக; ஸஹ நௌ-நம் இருவரையும்; புனக்து-அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாராக; ஸஹ-சேர்ந்து; வீர்யம்-ஈடுபாடுமிக்க ஆற்றலுடன்; கரவாவஹை-உழைப்போமாக; அதீதம்-கற்றது; நௌ-நமக்கு; தேஜஸ்வி-பயனுள்ளதாக; அஸ்து-விளங்கட்டும்; மா வித்விஷாவஹை-வெறுக்காமல் இருப்போமாக!

ஆச்சாரியர், சீடர் ஆகிய நம் இருவரையும் இறைவன் காப்பாராக!
அறிவன் ஆற்றலை நாம் இருவரும் அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாரக!
நாம் இருவரும் ஈடுபாடுமிக்க ஆற்றலுடன் உழைப்போமாக!
கற்றது நமக்குப் பயனுள்ளதாக விளங்கட்டும்!
எதற்காகவும் நாம் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருப்போமாக!

குறைகளும் தடைகளும் இல்லாமல் உபநிஷதக் கல்வி நிறைவேற இந்த மந்திரம் பிரார்த்திக்கிறது.

வேத மந்திரங்கள் அனைத்தும் இறுதியில் ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: என்று நிறைவுறுவதைக் காணலாம். சாந்தி: என்றால் அமைதி. மூன்றுவிதமான தடைகளிலிருந்து நாம் விடுபடுவதற்காக மூன்று முறை சொல்லப்படுகிறது. மூன்றுவகைக் தடைகள் வருமாறு.

1. ஆத்யாத்மிகம் : நம்மால் வரும் தடை; உடல் நோய், மனப் பிரச்சனைகள் போன்றவை.
2. ஆதி பவுதிகம் : பிற உயிர்களால் வரும் தடை
3. ஆதி தைவிகம் : இயற்கை சக்திகளால் வரும் தடை; மழை, இடி, தீ போன்றவற்றால் வருபவை.

மூன்றுமுறை சொல்வதன்மூலம் இந்த மூவகை தடைகளிலிருந்து விடுபட்டு, இந்த உபநிஷதத்தைப் படிப்பதற்கான நமது முயற்சி வெற்றி பெறுவதற்காக பிரார்த்திகிறோம்.