சென்னையில் பார்க்க வேண்டிய பத்து கோயில்கள் - 8
அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில்
மூலவர் :பாலசுப்பிரமணியர்
பழமை :500 வருடங்களுக்குள்
ஊர் :சிறுவாபுரி, சின்னம்பேடு
மாவட்டம் :திருவள்ளூர்
மாநிலம் :தமிழ்நாடு
பாடியவர்கள்:அருணகிரிநாதர்
திருவிழா:தைப்பூசம், பங்குனி உத்திரம், நவராத்திரி, திருக்கார்த்திகை.
தல சிறப்பு:முருகனைத்தவிர அனைத்து தெய்வங்களும் மரகதத்தால் ஆனது.
திறக்கும் நேரம்:காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சிறுவாபுரி- 601206 சென்னை திருவள்ளூர் மாவட்டம்.
போன்:+91-9444280595,9444171529
பொது தகவல்:கோயில் ஐந்து நிலை ராஜகோபுரம் உடையது.
பிரார்த்தனை:இத்தலத்திற்கு வருபவர் கடுமையாக விரதமிருந்து பசி பட்டினியுடன் தரிசிக்க வேண்டியதில்லை. இங்கு நேரில் வரவும் வேண்டியதில்லை. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பது போல, சிறுவாபுரி முருகனை நினைத்தாலே, வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. புதிதாக வீடு கட்ட விரும்புபவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.
நேர்த்திக்கடன்:தங்கள் கோரிக்கை நிறைவேரியவுடன் முருகனுக்கு பால் அபிஷேகம் செய்கிறார்கள்.
தலபெருமை:மரகதக்கல்லால் ஆன மயில் இங்கு விசேஷம். மூலவர் பாலசுப்பிரமணியர் நாலரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அவர் எதிரே அருணகிரிநாதர் சன்னதி உள்ளது. முருகனைத் தவிர அனைத்து தெய்வச்சிலைகளும் மரகதக்கல்லால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. முருகனுக்கு வலதுபக்கம் அண்ணாமலையார், உண்ணாமுலை அம்பாள் சன்னதி இருக்கிறது. இவர்களுக்கு நடுவில் வள்ளியும் முருகப் பெருமானும் கைகோர்த்து நின்ற நிலையில் திருமணக்கோலத்துடன் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு. இத்தகைய திருக்கோலத்தினை காண்பது அரிது. இந்த வள்ளிமணவாளனை பூச நட்சத்திரத்தில் வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. ஏனெனில், வள்ளி முருகன் திருமணம் பூச நட்சத்திரத்திலேயே நடந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. திருத்தணியில் மாசி மாதம் பூச நட்சத்திரத்தில் வள்ளி திருமணம் நடத்துகின்றனர்.
தல வரலாறு:ராமபிரான் தன் பட்டாபிஷேகத்திற்கு பிறகு, கர்ப்பிணியான மனைவி சீதை மீது ஊரார் பழிபோட்டதால், காட்டிற்கு அனுப்பி விட்டார். அங்கு லவனும், குசனும் பிறந்தனர். இதன் பிறகு அவர் அஸ்வமேதயாகம் செய்தார். மனைவியின்றி யாகம் செய்வது விதிக்கு புறம்பானது என்பதால், அவர் பல நாடுகளுக்கும் அனுப்பிய யாக குதிரையை லவனும் குசனும் கட்டிப்போட்டு விட்டனர். குதிரை திரும்பி வராமல் போகவே, அதை மீட்டு வர லட்சுமணனை அனுப்பினார் ராமர். லட்சுமணனால் குதிரையை மீட்க முடியவில்லை. இதனால் ராமரே, நேரில் சென்று குதிரையை மீட்டு சென்றார் என்பது ராமாயண கால செய்தியாகும். இந்த வரலாற்று செய்தியை, "சிறுவராகி இருவர் கரிபதாதி கொடுஞ்சொல் சிலை ராமன் உடன் எதிர்த்து ஜெயமதானநகர்' என்ற திருப்புகழ் பாடல் மூலம் அறிய முடிகிறது. ராமனிடம் லவனும் குசனும் சண்டை போட்டதாகவும், அந்த இடமே சிறுவாபுரி என்ற சின்னம்பேடு என்றும் இத்தல வரலாறு கூறுகிறது.சிறுவர்+அம்பு+எடு என்பது சின்னம்பேடு ஆனது. பேடு என்பது அம்பு வைக்கும் கூடு ஆகும். கை கொடுத்த கை: இத்தலத்தில் வாழ்ந்த முருகம்மையார் என்ற முருகபக்தை எப்போதும் முருகனின் சிந்தனையில் இருந்தார். அவரது கற்பின் மீது சந்தேகம் கொண்ட கணவர், அவரது கையை துண்டித்தார். அப்போதும் இவர் முருகன் சிந்தனையில் இருந்ததை அறிந்த முருகன், அம்மையாருக்கு காட்சி கொடுத்துஅருள் புரிந்தார். இதனால் இவரது கை ஒன்று சேர்ந்து பழைய நிலைக்கு திரும்பியது.
சிறப்பம்சம்: முருகனைத்தவிர அனைத்து தெய்வங்களும் மரகதத்தால் ஆனது.
சென்னையில் பார்க்க வேண்டிய பத்து கோயில்கள் - 7
அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில்
மூலவர் :கபாலீசுவரர்
உற்சவர் :கபாலீசுவரர்,கற்பகாம்பாள்
அம்மன் :கற்பகாம்பாள்
தல விருட்சம் :புன்னை மரம்
தீர்த்தம் :கபாலீ தீர்த்தம், கடவுள் தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், இராம தீர்த்தம்
ஆகமம்/பூஜை :காமீகம்
பழமை :1800 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :கபாலீச்சரம், திருமயிலாப்பூர்
ஊர் :மயிலாப்பூர்
மாவட்டம் :சென்னை
மாநிலம் :தமிழ்நாடு
பாடியவர்கள்:திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான் நெய்ப்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய் -திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 24வது தலம்.
திருவிழா:பங்குனிப் பெருவிழா - பங்குனி -10 நாட்கள் அறுபத்துமூவர் திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திருவிழாவின் போது கோயிலில் கூடுவர் பௌர்ணமி, அமாவாசை மற்றும் பிரதோச நாட்களில் இத்தலத்தில் ஏராளமான பக்தர்கள் கூடுவர் தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்கள் மற்றும் பிற விசேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். தவிர மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பானது.
தல சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 257 வது தேவாரத்தலம் ஆகும்.
திறக்கும் நேரம்:காலை 5 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:நிர்வாக அதிகாரி, அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை - 600 004.போன்:+91-44-24641670.
பொது தகவல்:இத்தல விநாயகர் நர்த்தனவிநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்து முருகப்பெருமான் (சிங்கார வேலர்) குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். சிவபெருமான், உமையவளோடு சேர்ந்து திருமால், பிரம்மா, வியாக்ரபாதர், பதஞ்சலி மற்றும் தில்லைவாழ் அந்தணர்களுக்கு நடனக்காட்சி அருளிய நாளே தைப்பூச திருநாளாகும்.இந்நாளில் சிவபெருமானை தரிசித்தால், பரமானந்த நிலை என்னும் பிறப்பற்ற நிலை பெறலாம் என்பது ஐதீகம். இவ்விழா இக்கோயிலில் ஒருகாலத்தில்மிகச்சிறப்பாககொண்டாடப்பட்டது.இத்தலத்திற்கு வந்த திருஞானசம்பந்தரும் இவ்விழாவை குறிப்பிட்டு பதிகம் பாடியிருக்கிறார். இங்கு தைப்பூசத்தை ஒட்டிய பவுர்ணமியன்று நடக்கும் தெப்பத்திருவிழாவில் சிவபார்வதியுடன், சிங்காரவேலரும் எழுந்தருளுகின்றார்.அன்று கபாலீஸ்வரருக்கு தேன் அபிஷேகம் செய்யப்படும்.கோயில் மேற்கு கோபுரம் அருகில் பூம்பாவைக்கு சன்னதி இருக்கிறது. அருகில் சம்பந்தரும் இருக்கிறார். வாயிலார் நாயனார் அவதரித்த தலம். இவருக்கும் தனிசன்னதி இருக்கிறது.
பிரார்த்தனை:இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது இத்தலத்தின் மிக முக்கிய சிறப்பு. உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் இத்தலத்து அம்பாளை வணங்கினால் விரைவில் குணமடைகிறது. கல்யாண வரம், குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவை கிடைக்கும்.
நேர்த்திக்கடன்:நோயால் பாதக்கப்பட்டவர்கள் இத்தலத்தின் முக்கிய திருவிழாவான அறுபத்து மூவர் திருவிழாவின் 8 ம் நாளில் மண்பானையில் சர்க்கரை வைத்து விநியோகம் செய்கிறார்கள். தவிர அம்பாளுக்கு புடவை சாத்துதல், சுவாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் அபிசேகம் ஆகியவை செய்யலாம்.
தலபெருமை:உமையம்மையார் மயிலுருக்கொண்டு கபாலீசுவரரைப் பூஜித்த தலம். முருகப்பெருமான் மயிலை நாதனை வழிபட்டுச் சக்திவேல் பெற்ற தலம். பிரம்மா பூஜை செய்து தன் இறுமாப்பு நீங்கி தனது படைக்கும் ஆற்றலைப் பெற்ற தலம். நான்மறைகள் பூஜித்ததால் வேதபுரி என்னும் பெயர் பெற்ற திருத்தலம். சுக்கிரன் பூஜித்ததால் சுக்கிரபுரி என்னும் பெயரும் பெற்ற திருத்தலம். இராம பிரான் நேசித்துத் தங்கியிருந்து பூசித்துத் திருவிழா நடத்திய தலம். திருஞானசம்பந்தப் பெருமான் எலும்பைப் பூம்பாவையாக்கிய புகழ்தலம். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய வாயிலார் தோன்றிய தலம். பன்னிரண்டு ஆழ்வார்களில் மூன்றாமவராகிய பேயாழ்வார் பிறப்பெடுத்த பெருமைத் தலம். ஆளுடைய பிள்ளை - ஆளுடைய அடிகள் தேவாரம் பெற்ற திருத்தலம்.
சீர்த்திமிகு சிங்காரவேலன் கீர்த்திமிகு திருப்புகழைப் பெற்ற தலம். வான்புகழ் கொண்ட வள்ளுவர் புகழோடு தோன்றிய தொன்மைத்தலம்
ஹை லைட்ஸ் மயிலாப்பூர் : 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த கிரேக்க ஆசிரியர் தாலமி என்பவர் இவ்வூரை மல்லியார்பா என குறிப்பிடுகிறார்.மயில்கள் மிகுதியாக இருந்து ஆர்த்தெழுந்திருந்த காரணத்தால் இத்தலம் மயில் ஆர்ப்பு எனப் பெயர் பெற்றது. பின்னர் வழக்கில் மயிலாப்பு என்றாகி பின்பு மயிலாப்பூர் ஆகிவிட்டது.
கபாலீசுவரம் : பிரம்மதேவன் சிவபெருமானைப் போல தாமும் ஐந்து சிரம் உடையவன் என்று செருக்கடைய, அவன் நடுச்சிரத்தைக் கிள்ளி கபாலத்தை ஏந்திய காரணத்தால் கபாலம் ஏந்திய ஈசுவரன் கபாலீசுவரன் என அழைக்கப்பட்டதாகவும் அதனால் இது கபாலீசுவரம் எனப் பெயர் பெற்றதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.
இலக்கிய சிறப்பு :திருமயிலையைப் பற்றியும் கபாலீசுவரரை பற்றியும் எழுந்த முதல் இலக்கியம் திருஞானசம்பந்தர் பாடிய "மட்டிட்ட புன்னையங் கானல்...' எனத் தொடங்கும் பதிகமேயாகும். இப்பாடல்கள் மூலம் திருமயிலையில் வாழ்ந்த சிவநேசர் என்னும் வணிகர் சிவன் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். இவரது மகள் பூம்பாவையை, ஞானசம்பந்தருக்கு மணம் முடிக்க முடிவு செய்தார். இந்நேரத்தில் மலர் பறிக்கச்சென்ற பூம்பாவை, பாம்பு தீண்டி உயிர் இழந்தாள். அவளை தகனம் செய்த சிவநேசர், அஸ்தியையும், எலும்பையும் ஒரு குடத்தில் போட்டு வைத்துவிட்டார்.
சம்பந்தர் இங்கு வந்ததும் நடந்ததை அறிந்து, சாம்பல் வைத்திருக்கும் குடத்தை கொண்டு வரக் கூறினார். அப்போது சம்பந்தர் சிவனை வேண்டி,
""மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச்சர மமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்''
என்று பதிகம் பாடினார்.
""மண்ணில் பிறந்தவர்கள் சிவபெருமானுக்கு நடத்தப்படும் தைப்பூசம் என்னும் நல்விழாவை காண்பதே பிறவிப்பயனாகும். அவ்விழாவைக் காணாமல் நீ சென்றுவிட்டது உனக்குத்தானே நஷ்டம்,'' என்ற ரீதியில் இந்தப்பாடல் அமைந்தது.
அவர் பாடியதும், பூம்பாவை உயிர் பெற்று எழுந்தாள். அவளை திருமணம் செய்து கொள்ளும்படி சிவநேசர் சம்பந்தரிடம் வேண்டினார்.
உயிர் இழந்தவளுக்கு மீண்டும் உயிர் அளித்ததால், அவள் எனக்கு மகளாகிறாள் எனச்சொல்லி சம்பந்தர் மறுத்து விட்டார். பூம்பாவையும் இறுதிவரை சிவப்பணியே செய்து சிவனடி சேர்ந்தாள். இவர் பாடிய 11 பாடல்களில் முதல் 10 பாடல்கள் பூம்பாவையை அழைக்கும் முறையில் உள்ளன. இப்பதிகத்தில் இத்தலத்து ஈசனையும் கோயில் பற்றியும் மயிலாப்பூர் பற்றியும் அழகுறக் கூறுகிறார்.யானையில் தேவியர்: சூரனை வதம் செய்யும் முன்பு, முருகப்பெருமான் இக்கோயிலில் சிவனை வேண்டி தவமிருந்தார். சிவனும், அம்பிகையும் அவருக்கு காட்சி தந்து வேலாயுதம் கொடுத்தனுப்பினர். அதன்பின் முருகன், சூரனை எதிர்த்து போரிட்டு வெற்றி கண்டார். இவர் சிங்காரவேலராக அசுர மயிலுடன், ஒரு சன்னதியில் இருக்கிறார்.அசுரனை வென்றதால் இந்திரன் தன் மகள் தெய்வானையை, முருகனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். அப்போது அவரது வாகனமான ஐராவதம், தெய்வானையைப் பிரிய முடியாமல் அவளுடனேயே தங்கிவிட்டது. வள்ளியும், தெய்வானையும் யானை மீது அமர்ந்த கோலத்தில் இருக்கின்றனர். இத்தகைய கோலத்தை காண்பது அபூர்வம்.
சிறப்பம்சம்: கபாலீஸ்வரருக்கு ஒவ்வொரு பவுர்ணமியிலும் விசேஷ பூஜை நடக்கிறது.அம்பிகை மயில் வடிவில் பூஜித்த தலமென்பதால், "மயிலாப்பூர்' என்ற பெயர் ஏற்பட்டது. தேவலோகத்து கற்பக மரம், கேட்டதை கொடுப்பதைப்போல, இத்தலத்து அம்பிகையும் கேட்கும் வரங்களை தருவதால் "கற்பகாம்பிகை' எனப்பட்டாள்.பங்குனியில் அறுபத்துமூவர் விழா நடக்கும்போது நாயன்மார்கள் வீதியுலா செல்வது சிறப்பு. இக்கோயிலின் கிழக்கு ராஜகோபுரத்தில், ஏழு நிலைகள்,ஒன்பது கலசங்கள் அமைந்துள்ளது. கோபுரத்தின் வடக்கில் பிரம்மனும், தெற்கில் தட்சிணாமூர்த்தியும், கோபுரத்தை சுற்றி புராணகால சிற்பங்களும் அமைந்துள்ளது. கிழக்கு கோபுரத்தின் வழியாக நுழைந்தவுடன் நர்த்தன விநாயகரும், அவருக்கு இடது பக்க சன்னதியில் அண்ணாமலையாரும், உண்ணாமுலையாளும் உள்ளனர். வலது பக்கம் ஜகதீஸ்வரர், நவக்கிரகம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது.
கோயிலின் தெற்கு பிரகாரத்திலிருந்து பார்த்தால் ராஜகோபுரத்தின் முழுமையான தரிசனம் கிடைக்கும். ராஜகோபுரத்தை அடுத்து தேர் மண்டபமும், பிரகாரத்தின் தென்பகுதியில் மடப்பள்ளி, அன்னதான மண்டபம், பூங்காவனம், பழநி ஆண்டவர் சன்னதி, இத்தலத்தில் அவதரித்த அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயன்மாரின் சன்னதி , நூல்நிலையம் ஆகியவை அமைந்துள்ளது. பிரகாரத்தின் நடுவில் 16 கால் நவராத்திரி மண்டபமும், நால்வர் மண்டபமும் உள்ளது.
இங்குள்ள சிங்கார வேலர் மயில் வாகனத்துடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இந்த சன்னதியில் 16 கால் மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், துவாரபாலகர்கள், பிரமாண்டமான விமானத்துடன் கூடிய இந்த சன்னதியில் இவருக்கென தனி கொடி மரம் உள்ளது. இந்த முருகனைப்புகழ்ந்து அருணகிரி நாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். இவருக்கான தனி சன்னதி முருகனுக்கு எதிரில் அமைந்துள்ளது. இந்த பிரகாரத்தில் ஊஞ்சல் உற்சவத்திற்காக, நான்கு கால் மண்டபம் அமைந்துள்ளது.கோயிலின் மேற்கு பிரகாரத்தில் தான் கபாலீஸ்வரரின் மேற்கு நோக்கிய சன்னதியும், கற்பகாம்பாளின் தெற்கு நோக்கிய சன்னதியும் அமைந்துள்ளது. மேற்கு நோக்கிய இந்த சிவனை தரிசித்தால் ஆயிரம் கிழக்கு நோக்கிய சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்குமாம். சிவனுக்கு எதிரில் நந்தி மண்டபம், பலி பீடம், கொடிமரம் அமைந்துள்ளது. மேற்கு வாசலின் அருகே சிவனைபார்த்தபடி திருஞானசம்பந்தரும், அங்கம்பூம்பாவையும் தனி சன்னதியில் உள்ளனர். இந்த வாசலுக்கு எதிரில் தான் கபாலீஸ்வரர் தெப்பக்குளம் அமைந்துள்ளது.கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கேற்ப, இங்குள்ள வடக்கு பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் நின்றுபார்த்தால் கிழக்கு ராஜகோபுரம், அம்மன் கோபுரம், சிவன் கோபுரம், முருகன் கோபுரம், மேற்கு கோபுரம் என அனைத்து கோபுரங்களும் தெரியும். இந்த இடத்தில் தான் கோயிலுக்கான மிகப்பெரிய மணி அமைக்கப்பட்டுள்ளது. பிரகாரத்தின் மேல்புறமும், வடபுறமும் யானை, யாழி, மயில், நாகர்,ஆட்டுக்கிடா, நந்தி, காமதேனு, குதிரை போன்ற வாகனங்கள் வைக்கப்பட்டுள்ள மண்டபம் அமைந்துள்ளது.
கோயிலின் வட கிழக்கு பிரகாரத்தின் தெற்கு பக்கம் தல விருட்சம் புன்னை மரமும், கோசாலையும் அமைந்துள்ளது. பெண்கள் தல விருட்சத்தில் குழந்தைபாக்கியம், தாலிபாக்கியம் வேண்டி வழிபாடு செய்கின்றனர். கைலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பஞ்சாட்சர மந்திரம் கூறும் போது, கவனிக்காமல் அருகிலிருந்த மயிலை கவனித்ததால், மயில் உருவம் பெற்றாள். அவள் மீண்டும் சிவனை அடைய இங்கு வழிபாடு செய்த காட்சி இங்கு புன்னைவன நாதர் சன்னதியில் உள்ளது. இதன் அடிப்படையில் தான் இத்தலத்திற்கு மயிலாப்பூர் என்று பெயர் வந்தது. பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலிப்பது சிறப்பு. ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெறும் அறுபத்துமூவர் விழா, தனித்துவம் வாய்ந்தது. பங்குனித் திருவிழாவின் 8-ம் நாளில், வெள்ளி வாகனத்தில் சிவனார் திருவீதியுலா வர... அவருடன் அறுபத்து மூன்று நாயன்மார்களும் வாகனத்தில் பவனி வரும் அழகைக் காண சிலிர்த்துப் போவோம். சிவ - பார்வதி தரிசனம் ஒருபக்கம், அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருவீதியுலா இன்னொரு பக்கம் என விழாக்கோலம் பூண்டிருக்கும் வேளையில்... அடியவர்களும் ஆண்டவனும் ஒன்றே என்பதைப் பறைசாற்றுகிற இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து விடுவார்கள். மயிலாப்பூரின் ஒவ்வொரு தெருவிலும் கோயிலைச் சுற்றி பல இடங்களிலும் தண்ணீர்ப்பந்தலும் மோர்ப்பந்தலும் களைகட்டியிருக்கும். எங்கு பார்த்தாலும் அன்னதானம் சிறப்புற நடைபெறும். மனிதனாகப் பிறந்தவர் மகா கும்பமேளா, மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை தீபம் முதலான பத்து விழாக்களைத் தரிசித்தால் மறுபிறவி இல்லை என்பது ஐதீகம்! அதில் மயிலையில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவும் ஒன்று. இது இன்றைக்கு நேற்றைக்கு அல்ல, எட்டாம் நூற்றாண்டில் இருந்தே கொண்டாடப்படுகிற விழா எனப் பெருமையுடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.
தல வரலாறு:உமையவள் சிவபெருமானிடம் ஐந்தெழுத்தின் பெருமைதனையும், திருநீற்றின் மகிமைதனையும் விளக்கிட வேண்டுகோள் விடுக்க, சிவபெருமான் அவ்விளக்கந்தனை நல்கிட, அதுபோது மயிலொன்று தோகை விரித்தாட, தேவியார் தமது கவனத்தை அதில் செலுத்தினார். அதனால் கோபமுற்ற சிவபெருமான் , "நீ பூதலத்தில் மயில் உருப்பெற்றிடுவாய்' என சாபமிட்டார். "சாபம் நீங்க தொண்டை நாட்டிற்கு சென்று தவம் செய்' எனக் கூறினார்.அவ்வாறே இத்தலத்தில் அமைந்துள்ள புன்னைமரத்தின் கீழ் சிவலிங்கத்தை பூஜித்து தேவியார் வழிபட்டார். அவர்தம் அரும் தவத்தின் மகிமையால் சிவபெருமான் தேவியின் முன் தோன்றி, "மயிலாய் இருந்த பழி உன்னை விட்டகன்றது. கற்பகவல்லி என்பதான பெயர் உனக்காகுக' என வரம் அருளினார். அச்சமயம் தேவியார் பரமனை நோக்கி அடியேன் இங்கு தவம் செய்து உயர்ந்ததால் இப்பகுதி "மயிலை' என பெயர் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். பரமனும் அவ்வாறே அருளியதாக வரலாறு கூறுகிறது.
சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
சென்னையில் பார்க்க வேண்டிய பத்து கோயில்கள் - 6
அருள்மிகு காமாட்சி திருக்கோயில்
மூலவர்:காமாட்சி
உற்சவர்:காமாட்சி
அம்மன்:காமாட்சி
தல விருட்சம்:மாமரம்
பழமை:3000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:சூதவனம்
ஊர் :மாங்காடு
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
திருவிழா:சித்திரைத் திருவிழா -10 நாட்கள் - இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் இத்தலத்தில் கூடுவர். இத்திருவிழா தவிர தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்கள் தீபாவளி, பொங்கல் நவராத்திரி, மாசி மகம், மகாசிவராத்திரி, ஆனித்திருமஞ்சனம் ஆகிய நாட்கள் இக்கோயிலில் விசேச நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாட்களில் இக்கோயில் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளிப்பது சிறப்பு.
தல சிறப்பு:அம்மன் ஈசனை நோக்கி ஒற்றைக்காலில் அக்னிதவம் இருந்த இடம். இத்தலத்தில் தவம் இருந்து விட்டு பின்புதான் காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரரை திருமணம் செய்து கொண்டார். இங்கு ஸ்ரீ சக்ரம்தான் பிரதானமாக கருதப்படுகிறது. அபிசேகம் பஞ்சலோக காமாட்சிக்கும், அர்ச்சனை ஸ்ரீ சக்ரத்துக்கும் செய்யப்படுகிறது.
திறக்கும் நேரம்:காலை 6 மணி - 1.30 மணி, மாலை 3 - இரவு 9.30 மணி வரையிலும் திறந்திருக்கும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பகலில் நடை அடைக்கப்படுவதில்லை.
முகவரி:அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், மாங்காடு-602101,காஞ்சிபுரம் மாவட்டம்.போன்:+91- 44 - 2627 2053, 2649 5883.
பொது தகவல்:ஒருகாலத்தில் மாமரங்கள் நிறைந்து மாமரக்காடாக விளங்கியதால் இத்தலம் மாங்காடு எனும் பெயர் பெற்றது. மாங்காடு கோயிலிலிருந்து சற்றுதூரத்தில், வெள்ளீஸ்வரர் கோயில் உள்ளது. சுக்கிரனின் மற்றொரு பெயர் வெள்ளி. இந்த ஈஸ்வரன், நவக்கிரக கோயிலான கஞ்சனூர் சுக்ரபுரீஸ்வரர் கோயில் போன்று சுக்கிரனுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கோயிலாகும்.காஞ்சிபுரத்தைப் போல, மாங்காட்டில் காமாட்சிக்கே முக்கியத்துவம் என்பதால், வெள்ளீஸ்வரர் கோயிலில் அம்பாள் இல்லை. அம்பாளின் பாதம் மட்டுமே இருக்கிறது. வெள்ளீஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர், கைகளில் நெற்கதிரும், மாங்கனியும் வைத்திருக்கிறார். விவசாயிகள் இவருக்கு மாங்கனி மற்றும் நெல் நைவேத்யமாக படைத்து வழிபடுகிறார்கள். இதனால், விவசாயம் செழிப்பதாக நம்பிக்கை. கோஷ்டத்தில் உள்ள மற்றொரு விநாயகர் கையில் குடை, சாமரத்துடன் நின்ற கோலத்தில் உள்ளார்.
பிரார்த்தனை:இத்தலத்தில் ஆறு வார வழிபாட்டு முறை நடைமுறையில் உள்ளது. வாரத்தில் ஏதேனும் ஒருநாளில் எலுமிச்சைக் கனியுடன் அம்மனைத் தரிசித்து பின்னர் அதே கிழமைகளில் தொடர்ந்து ஆறு வாரங்கள் (அதாவது ஒரு மண்டலம் ) வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடுகிறது.
அம்பாள் இத்தலத்தில் தவம் புரிந்து பின்னர் இதன் பயனால் காஞ்சியில் மணந்து கொண்டமையால் கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைக் கட்டி வழிபட்டால் மணக்கோலம் பூணுவர். ஆண்களுக்கும் இது பொருந்தும். புத்திர பாக்கியம் இல்லாதோர் தொட்டில் கட்டி வழிபட்டால் வீட்டிலே குழந்தைக்குதொட்டில் கட்ட அன்னை அருள்புரிவாள்.பணி இல்லாதோரும் ஆறு வாரம் வழிபட்டால் பலன் கிடைக்கும். பல்லாயிரக்கணக்கோர் ஆறு வார வழிபாட்டால் பலனடைந்து வருகின்றனர். உத்தியோக உயர்வு , உடல் சார்ந்த குறைகள் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்திற்கு பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர்.
நேர்த்திக்கடன்:அம்மனுக்கு (ஸ்ரீஅர்த்தமேருஸ்ரீசக்கிரம்)புடவை சாத்துதல், பால் அபிசேகம்,அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.
தலபெருமை:ஸ்ரீஅர்த்தமேரு ஸ்ரீசக்ரம் ஆதிசங்கரர் : இக்கோயிலிலுள்ள அர்த்தமேரு ஸ்ரீசக்ரம் மிகவும் விசேஷமானது. 43 திரிகோணங்கள் கொண்ட இச்சக்ரம், "அஷ்டகந்தம்' என்னும் எட்டு வகையான மூலிகைகளால் செய்யப்பட்டது. எனவே இதற்கு அபிஷேகம் கிடையாது. சந்தனம், புனுகு, சந்தனம் சாத்தி, குங்கும அர்ச்சனை செய்கின்றனர். இச்சக்ரத்திற்கு விஜயதசமியன்று அஷ்டகந்த மூலிகை சாத்தப்படுகிறது. அன்று ஒருநாள் மட்டும் இதனை தங்க கவசத்தில் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் வெள்ளி கவசம் சாத்தப்பட்டிருக்கும். இத் திருக்கோயிலில் ஸ்ரீ சக்ரத்திற்கே முக்கிய பிராதானம்.மூலிகைகளால் ஆனதால் அபிசேகம் கிடையாது.குங்கும அர்ச்சனை விசேசமானது.இந்த அர்த்தமேரு ராஜ யந்திரமாகும்.இதற்கு கூர்மம்(ஆமை) உருவத்தை அடித்தளமாக்கி அதன் மேல் மூன்று படிக்கட்டுகள் கட்டி அதற்கு மேல் 16 இதழ் தாமரை அதற்கும் மேல் 8 இதழ் தாமரை அமைத்து அதன்மேல் ஸ்ரீ சக்ர யந்திரம் வரையப்பட்டுள்ளது.இந்தர அர்த்தமேரு மிகப்பெரியது.இம்மாதிரி வேறு எங்குமே இல்லை.இதற்கு 18 முழப்புடவை அணிவிக்கிறார்கள்.
அன்னையின் தவக்கோலம் : ஐந்து குண்டங்களில் தீ வளர்த்து நடுக்குண்டத்தில் தனது இடது காலின் கட்டை விரலின் நுனிப்பகுதி அக்னியில் படுமாறும் வலது காலை இடது காலின் தொடைக்கு மேற்புறமாயும் இடது கையை நாபிக் கமலத்திற்கு அருகிலும் வலது கையில் ஜபமாலையுடன் தனது சிரசிற்கு மேலும், அழகிய கண்களை மூடிய நிலையிலும் அம்பாள் தன்னை ஐயனுடன் இணைத்துக் கொள்ள மாங்காடு திருத்தலத்தில் கடும் தவம் புரிந்தார்.இத்தலத்தில் பஞ்சாக்னி மத்தியில் ஸ்ரீ காமாட்சி அம்மன் தவம் புரியும் அற்புத காட்சி உற்சவ சிற்பமாக உள்ளது கறிப்பித்தக்கது.
நான்கு அம்பாள் தரிசனம் : மூலஸ்தானத்தில் அம்பாளாக பாவித்து வணங்கப்படும் ஸ்ரீசக்ரம், அதற்கு பின்புறம் பஞ்சலோகத்தால் ஆன ஆதிகாமாட்சி மற்றும் முன் மண்டபத்தில் பஞ்சாக்னியில் தவம் செய்யும் காமாட்சி என இங்கு மூன்று அம்பாளை தரிசிக்கலாம். இதுமட்டுமின்றி ஆதிகாமாட்சி அருகில், சிறிய காமாட்சி விளக்கும் எரிந்து கொண்டிருக்கிறது. இந்த விளக்கையும் அம்பிகையாகவே கருதி வழிபடுகிறார்கள். இவ்வாறு இக்கோயிலில் நான்கு அம்பிகைகளையும் முன் மண்டபத்திலிருந்து ஒரே சமயத்தில் தரிசிக்கலாம் என்பது விசேஷம். மூலஸ்தானத்திலுள்ள அம்பாள், வலக்கையில் கிளி வைத்து, தலையில் பிறைச்சந்திரனை சூடியிருப்பது சிறப்பம்சம்.
"ஒத்தக்கால்ல நின்னு சாதிச்சுட்டான்'னு சொல்வது ஏன்? : குழந்தைகள் அடம்பிடித்து எதையாவது வாங்கி விட்டாலும் சரி.., அவர்களே தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று விட்டாலும் சரி..."ஒற்றைக்காலில் நின்று சாதித்து விட்டான்' என்று சொல்வது வழக்கம். இந்த பேச்சு வழக்கு காமாட்சியம்மனை மையப்படுத்தியே வந்தது. அம்பாளை, சிவன் பூலோகத்திற்கு அனுப்பியபோது அவள் இங்கு தவமிருந்தாள். ஆனால், சிவனது தரிசனம் கிடைக்கவில்லை. எனவே, தீயின் மத்தியில் நின்று பார்த்தாள். அதற்கும் அவர் மசியவில்லை. பின்னர் ஒற்றைக்காலில், ஊசிமுனையில் நின்று தவம் செய்ய ஆரம்பித்து, அவரது தரிசனம் பெற்றாள். இறைவனை கண்ணால் பார்த்தால் தான் நம்புவேன் என சிலர் விதண்டாவாதம் பேசுவர். இறைதரிசனம் அவ்வளவு எளிதில் கிடைக்காது. ஈசனின் மனைவியே அவரைப் பார்க்க ஒற்றைக்காலில் நிற்க வேண்டி இருக்கிறது என்றால், சாதாரண மானிடர்களான நமக்கு எவ்வளவோ பக்குவம் வேண்டும்!
பக்தனுக்கே முதலிடம்... : திருமால், மகாபலி சக்கரவர்த்தியை ஆட்கொள்ள வாமன அவதாரம் எடுத்து வந்தபோது, சுக்ராச்சாரியார் தடுத்தார். அதைக்கேட்காத மகாபலி, திருமாலிடம் கமண்டல நீரை ஊற்றி தாரை வார்த்துக்கொடுக்க முயன்றார். அப்போது, சுக்ராச்சாரியார் வண்டு வடிவம் எடுத்து, கமண்டல நீர் வெளியேறும் பகுதியை அடைத்து நின்றார். திருமால் ஒரு தர்ப்பைப்புல்லால் குத்தினார். எனவே, ஒரு கண் பார்வையிழந்த சுக்ராச்சாரியார் மீண்டும் பார்வை வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார். அதேசமயம் காமாட்சியம்மனும் இங்கு தவம் புரிந்து கொண்டிருந்தாள். அம்பிகைக்கு காட்சி கொடுக்க வந்த சிவன், முதலில் சுக்ராச்சாரியாருக்கு காட்சி கொடுத்தார். இவ்வாறு, அம்பிகையை விட தன்னை வேண்டிய பக்தனுக்கே அருளினார் சிவன்.
கணையாழியுடன் பெருமாள்: சிவன், அம்பாளுக்கு அருள்புரிய இங்கு வந்தபோது, திருமாலும் தன் தங்கைக்கு திருமணச்சீர் கொண்டு வந்தார். ஆனால், சிவனின் கட்டளைப்படி அம்பாள் காஞ்சிபுரம் செல்லவே திருமாலும் கிளம்பினார். அப்போது மார்க்கண்டேயர் இங்கேயே தங்கும்படி அவரிடம் வேண்டினார். எனவே திருமால், வைகுண்டப்பெருமாளாக இங்கு எழுந்தருளினார். பிரயோக சக்கரத்துடன் இருக்கும் இவர், சீர் கொண்டு வந்ததன் அடையாளமாக கையில் கணையாழி (மோதிரம்) வைத்திருக்கிறார். இவரை, "சீர் பெருமாள்' என்றும் அழைக்கிறார்கள்.
நிறைமணி தரிசனம்: பவுர்ணமியன்று மாலையில் இங்கு நவகலச ஹோமம் நடக்கிறது. ஒன்பது கலசங்களில், ஒன்பது சக்திகளை ஆவாஹனம் செய்து ஹோமமும், ஸ்ரீசக்ரத்திற்கு புஷ்பாஞ்சலியும் செய்கின்றனர்.
புரட்டாசி பவுர்ணமியில் இங்கு நடக்கும் நிறைமணி தரிசனத்தில் இனிப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள், தானியம் இவற்றால் அர்த்தமண்டபம், தபஸ் மண்டபம் மற்றும் முன் மண்டபத்தை அலங்காரம் செய்கின்றனர். இந்த தரிசனம் கண்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
முத்தேவியருடன் தங்கத்தேர்: தினமும் மாலையில் இக்கோயிலில் தங்கத்தேரில் அம்பிகை, சரஸ்வதி, லட்சுமி மூவரும் உலா வருகின்றனர். சப்தமாதர்களில் ஒருத்தியான பிராஹ்மி தேரோட்டியாக முன்புறம் இருக்கிறாள். தேரைச்சுற்றிலும் நவகன்னியரும் இருக்கின்றனர். மகாமண்டபத்திற்கு மத்தியில் அணையா குத்து விளக்கு இருக்கிறது. இதற்கு இடதுபுறம் தபஸ் காமாட்சி சன்னதி உள்ளது.
தல வரலாறு:கைலாயத்தில் ஒருசமயம் பார்வதிதேவி, விளையாட்டாக சிவனின் கண்களை மூட, உலக இயக்கமே நின்றது. சிவன் அவளை பூலோகத்தில் பிறக்கும்படி சபித்தார். தவறை உணர்ந்த அம்பிகை மன்னிப்பு கோரினாள். இத்தலத்தில் தவமிருந்து வழிபட, தகுந்த காலத்தில் காட்சி தந்து அவளைத் திருமணம் செய்து கொள்வதாக கூறினார். அதன்படி இங்கு வந்த அம்பாள் பஞ்சாக்னியை (ஐந்து அக்னிகள்) வளர்த்து, அதன் மத்தியில் இடது கால் கட்டைவிரலை ஊன்றி நின்று கடுந்தவமிருந்தாள். காஞ்சிக்குச் சென்று தவமிருக்கும்படி சிவனின் அருள்வாக்கு கிடைக்கவே அங்கு சென்றாள். இருப்பினும், அம்பிகை முதன் முதலாக தவம் செய்த இடம் என்பதால் மாங்காடு "ஆதி காமாட்சி தலம்' எனப்படுகிறது.அம்பாள் அந்தஸ்தில் ஸ்ரீசக்ரம் பொதுவாக மூலஸ்தானத்தில் அம்பிகைதான் பிரதான தெய்வமாக (மூலவர்) வணங்கப்படுவாள். ஆனால், இக்கோயிலில் அர்த்தமேரு ஸ்ரீசக்ரமே அம்பாளாக கருதி வணங்கப்படுகிறது. ஸ்ரீசக்ரத்திற்கு பின்புறம் அம்பாளின் உற்சவர் சிலை இருக்கிறது. இவளுக்கே அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்படுகிறது. இங்கு தவம் புரிந்த அம்பாள், சிவனின் உத்தரவிற்கு பின்பு காஞ்சிபுரம் சென்றாள். அப்போது தவம் செய்த பஞ்சாக்னியை அணைக்காமல் சென்றதால் மாங்காடும் சுற்றுப் பிரதேசங்களும் தீயின் வெம்மையால் வறண்டன. இந்நிலையில் தேசாந்திரம் செல்லும் போது ஆதி சங்கரர் மாங்காட்டின் நிலையறிந்து அஷ்டகந்தம் எனப்படும் 8 மூலிகைகளால் ஆன ஸ்ரீ அர்த்தமேரு ஸ்ரீ சக்ரத்தை அம்மை தவம் புரிந்த இடத்தில் பிரதிஷ்டை செய்கிறார்.இதனால் தீயின் கொடுமை மறைந்து மக்கள் சுபிட்சம் பெற்றனர் என வரலாறு கூறுகிறது.
சிறப்பம்சம்:அம்மன் ஈசனை நோக்கி ஒற்றைக்காலில் அக்னிதவம் இருந்த இடம். இத்தலத்தில் தவம் இருந்து விட்டு பின்புதான் காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரரை திருமணம் செய்து கொண்டார். இங்கு ஸ்ரீ சக்ரம்தான் பிரதானமாக கருதப்படுகிறது. அபிசேகம் பஞ்சலோக காமாட்சிக்கும், அர்ச்சனை ஸ்ரீ சக்ரத்துக்கும் செய்யப்படுகிறது.