புதன், 7 மே, 2014

சென்னையில் பார்க்க வேண்டிய பத்து கோயில்கள் - 5

அருள்மிகு தேவநாதப்பெருமாள் (யோக ஹயக்ரீவர்) திருக்கோயில்

மூலவர்  : வரதராஜப்பெருமாள்
உற்சவர்  : தேவநாதப்பெருமாள், யோக ஹயக்ரீவர்
பழமை  : 500 வருடங்களுக்குள்
ஊர்  : செட்டி புண்ணியம்
மாவட்டம்  : காஞ்சிபுரம்
மாநிலம்  : தமிழ்நாடு

திருவிழா:வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அத்துடன் புதன், வியாழன், சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகிறது.    
           
தல சிறப்பு:யோக ஹயக்ரீவர் நான்கு கைகளுடன் சங்கு சக்கரதாரியாக யோக நிலையில் இருப்பது சிறப்பு.    
           
திறக்கும் நேரம்:காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.   
         
முகவரி:அருள்மிகு யோக ஹயக்ரீவர் திருக்கோயில் (தேவநாதப் பெருமாள்), செட்டிபுண்ணியம் - 603 204, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம்.போன்:+918675127999   
          
பொது தகவல்:நேரில் வரமுடியாத பக்தர்களுக்காக யாகத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட ஹயக்ரீவர் படம் பிரசாதம் மற்றும் பேனாக்கள் கொண்ட பாக்கெட்டை தபாலில் அனுப்பிவைப்பதும் நடைபெறுகிறது.    
           
பிரார்த்தனை:கல்வியில் சிறந்து விளங்கவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும், தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும், திருமணத்தடை நீங்கவும், வியாபாரம் செழிக்கவும், வழிபாடு செய்யப்படுகிறது.   
          
நேர்த்திக்கடன்:யோக ஹயக்கிரீவருக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாற்றியும், துளசி அர்ச்சனை செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.   
          
தலபெருமை:கல்வியும் செல்வமும் பெருக இங்குள்ள ஹயக்ரீவரை வணங்குகிறார்கள். இங்கு புதன் கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இவருக்கு ஏலக்காய் மாலை சார்த்தி வழிபடுகிறார்கள். இவரை வணங்கினால் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும்,ஞாபக சக்திகூடும் என்பதுடன் தேர்வு எழுதும்போது துணை நிற்பார் என்பதால் பள்ளி கல்லூரி மாணவ,மாணவியர் ஹால் டிக்கெட் வாங்கிய கையோடு தேர்வு எழுதப்போகும் பேனாவுடன் இங்கு வந்து ஹயக்ரீவரின் பாதத்தில் வைத்து அவரது ஆசீர்வாதத்துடன் எடுத்து செல்கின்றனர். பல ஆண்டுகளாக இது தொடர்வதாலும், வந்து சென்ற மாணவ,மாணவியர் பலன் பெற்றதாலும் தேர்வு நேரத்தில் அதுவும் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு எழுதும் மாணவ,மாணவியர் படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக செட்டி புண்ணியம் ஹயக்ரீவர் கோவில் என்றே இது பெயர் பெற்றுவிட்டது.    
           
தல வரலாறு:சுமார் 400 ஆண்டுகள் பழமையான  ஸ்ரீதேவநாத பெருமாள் கோவிலில் வரதராஜப்பெருமாள் மூலவராக இருந்து சேவை சாதித்து வருகிறார். கடந்த 1848-ம் வருடம் திருவஹிந்தபுரத்தில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்ட தேவநாத பெருமாளும், ஹயக்ரீவரும்,மற்றும் தஞ்சாவூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ராமரும் பக்தர்களுக்கு உற்சவர்களாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இதில் குதிரை முகம் கொண்ட யோக ஹயக்ரீவர் நான்கு கைகளுடன் சங்கு சக்கரதாரியாக யோக நிலையில் இருக்கிறார்.
   
சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: யோக ஹயக்ரீவர் நான்கு கைகளுடன் சங்கு சக்கரதாரியாக யோக நிலையில் இருப்பது சிறப்பு.


சென்னையில் பார்க்க வேண்டிய பத்து கோயில்கள் - 4

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்    :வேதபுரீஸ்வரர்
உற்சவர்    :வேதபுரீஸ்வரர்,பாலாம்பிகை
அம்மன்:பாலாம்பிகை
தல விருட்சம்    :வெள்வேல மரம்
தீர்த்தம்    :வேத தீர்த்தம்,பாலிநதி
பழமை    :2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :திருவேற்காடு
ஊர்    :திருவேற்காடு
மாவட்டம்    :காஞ்சிபுரம்
மாநிலம்    :தமிழ்நாடு
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

ஆழ் கடலெனக் கங்கை கரந்தவன் வீழ்சடையினன் வேற்காடு தாழ்வுடை மனத்தால் பணிந்து ஏத்திடப் பாழ்படும் அவர் பாவமே. திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 23வது தலம்.    
           
திருவிழா:மகா சிவராத்திரி, நவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம்.    
           
தல சிறப்பு:இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். லிங்கத்தின் பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் அமர்ந்துள்ளது தனி சிறப்பு. இத்தலம் 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த தலம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 256 வது தேவாரத்தலம் ஆகும்.    
           
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.   
         
முகவரி:அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு- 600 077. காஞ்சிபுரம் மாவட்டம்.
போன்:+91-4426272430,26272487.   
          
பொது தகவல்:இக்கோயில் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரம், 3 பிரகாரங்களோடு கூடியது. இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் கஜபிருஷ்டம் எனப்படும்.    
           
பிரார்த்தனை:இத்தல தீர்த்தத்தில் ஞாயிறு தோறும் நீராடி வந்தால் தோல் சம்பந்த நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.   
          
நேர்த்திக்கடன்:பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.   
          
தலபெருமை:திருவேற்காடு பாலாம்பிகையையும், திருவலிதாயம் ஜகதாம்பிகையையும், திருவொற்றியூர் வடிவாம்பிகையையும் ஒரே நாளில் வழிபடுவோர் இம்மையிலும், மறுமையிலும் அனைத்து நலன்களையும் பெறுவர் என கூறப்படுகிறது. இத்தல தீர்த்தத்தில் ஞாயிறு தோறும் நீராடி வந்தால் தோல் சம்பந்த நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. இக்கோயில் சோழ அரசனால் கட்டப்பட்டது. சிவன் ஒரு முறை பார்வதியிடம், இத்தலத்தை மனதால் நினைத்தாலும், ஒரு பொழுதாவது இங்கு தங்கியிருந்தாலும், இத்தலம் வழியாக சென்றாலும் முக்தியடைவர் என்று கூறியுள்ளார்.வழிபட்டோர்: பாற்கடலை விநாயகர் பருகி விளையாடும் போது திருமால் தன் கையில் இருந்த வலம்புரி சங்கை தவற விட்டார். பின் இத்தல சிவனை வழிபட்டு பெற்றார். திருமால் சுதர்சன சக்கரத்தை பெறுவதற்காக இத்தலத்தை அடைந்து பூஜை செய்த போது, உடனிருந்து ஆதிசேஷனும் இங்கு வழிபட்டு, இத்தலத்தின் எல்லை வரை வாசம் செய்பவர்களை தீண்டமாட்டேன் என கூறியதாக வரலாறு. அன்றிலிருந்து இத்தலத்தில் யாரும் பாம்பு கடித்து இறந்தது கிடையது. இதனால் இத்தலத்திற்கு "விடந்தீண்டாப்பதி' என்ற பெயரும் உண்டு. முருகப்பெருமான் பிரம்மனை சிறையிலிருந்து நீக்காத குற்றத்திற்காக, இங்கு தீர்த்தம் உண்டாக்கி வெள்வேல மரத்தடியில் வழிபட்டு பிழை நீங்கப்பட்டார். மேலும் பராசரர், அத்திரி, பிருகு, குச்சரர், ஆங்கீரசர், வசிட்டர், கவுதமர், காசிபர், திண்டி, முண்டி, வாலகில்லியர், விரதாக்னி முதலிய முனிவர்கள், பஞ்சபாண்டவர்கள், சிபி சோழன், வாணன், மற்றும் ஒன்பது கோள்கள், அஷ்டதிக்பாலகர்கள் வழிபாடு செய்துள்ளனர். இத்தல முருகனை அருணகிரி நாதர் தன் திருப்புகழில் பாடியுள்ளார்.மூர்க்கநாயனார்: இத்தலம் 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த தலம். இவர் தினமும் அடியார்களுக்கு உணவு அளித்துவிட்டு, தான் உண்பதை கடமையாக கொண்டிருந்தார். ஒரு முறை இவருக்கு வறுமை ஏற்பட்டது. இதனால் தனக்கு தெரிந்த சூதாட்டத்தால் பலரிடம் வென்று வென்றதை மறுத்தவர்களை குத்தி, அதில் கிடைத்த பணத்தை வைத்து அடியவர்களுக்கு உணவளித்து வந்தார். இவரது மூர்க்க செயலால் இவரை மூர்க்க நாயனார் என்றழைத்தார்கள். இறைவன் திருவருளால் இவரது குற்றங்கள் நீங்கின. பின் சிவபதவியடைந்தார். இவர் அவதரித்த கார்த்திகை மூலம் நட்சத்திரத்தில் இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. இவருக்கு கோயில் வெளி சுற்று பிரகாரத்தில் தனி சன்னதி உள்ளது.    
           
தல வரலாறு:சிவபெருமான் பார்வதியை திருமணம் செய்து கொண்ட காலத்தில் தேவர் முதலியோர் இமயமலை எல்லையை அடைந்ததால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இதை சரிசெய்ய இறைவன் அகத்தியரை தென்திசைக்கு அனுப்பினார். அகத்தியர் இறைவனின் திருமணக்காட்சியை காண இயலவில்லையே என்ற வருத்தத்துடன் சென்றார். அப்போது இறைவன் நீ தென் திசை நோக்கி செல்லும் போது உமக்கு திருமண காட்சியை காட்டுவோம் என அருள்புரிந்து அனுப்பி வைத்தார்.அகத்தியர் திருவேற்காடு அடைந்த போது இறைவன் பார்வதியுடனான திருமணக்கோலத்தை காட்டி அருளினார். பிருகு முனிவரின் சாபத்தால் பெருமாள் ஜமத்கனி முனிவருக்கும், ரேணுகைக்கும் மகனாக அவதரித்தார். பரசுராமர் என பெயர் பெற்றார். அவர் இத்தல இறைவனை வழிபட வந்தபோது அவருடன் ரேணுகையும் உடன் வந்தார்.
ரேணுகை கோயிலே புகழ்பெற்ற,"கருமாரியம்மன் கோயில்' என்ற பெயரில் விளங்குகிறது. பிரளய காலத்தில் இந்த உலகம் மூடப்பட்ட பின், சிவன் மீண்டும் இந்த உலகை படைக்க விரும்பினார். முதலில் வெள்ளத்தை வற்றச்செய்து பின் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை இத்தலத்தில் வெள்ளெருக்கு மரங்களாக வடிவெடுக்குமாறு கட்டளையிட்டிருந்தார். அதன் படி இத்தலத்தில் வேதங்கள் வெள்வேல மரங்களாக மாறி இறைவனை வழிபட்டு வந்தன. இவ்வூரின் தல விருட்சம் வெள்வேல மரமாகும். இதனால் இத்தலம் "திருவேற்காடு' என அழைக்கப்படுகிறது.

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். லிங்கத்தின் பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் அமர்ந்துள்ளது தனி சிறப்பு.