புதன், 7 மே, 2014

சென்னையில் பார்க்க வேண்டிய பத்து கோயில்கள் - 4

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்    :வேதபுரீஸ்வரர்
உற்சவர்    :வேதபுரீஸ்வரர்,பாலாம்பிகை
அம்மன்:பாலாம்பிகை
தல விருட்சம்    :வெள்வேல மரம்
தீர்த்தம்    :வேத தீர்த்தம்,பாலிநதி
பழமை    :2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :திருவேற்காடு
ஊர்    :திருவேற்காடு
மாவட்டம்    :காஞ்சிபுரம்
மாநிலம்    :தமிழ்நாடு
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

ஆழ் கடலெனக் கங்கை கரந்தவன் வீழ்சடையினன் வேற்காடு தாழ்வுடை மனத்தால் பணிந்து ஏத்திடப் பாழ்படும் அவர் பாவமே. திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 23வது தலம்.    
           
திருவிழா:மகா சிவராத்திரி, நவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம்.    
           
தல சிறப்பு:இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். லிங்கத்தின் பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் அமர்ந்துள்ளது தனி சிறப்பு. இத்தலம் 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த தலம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 256 வது தேவாரத்தலம் ஆகும்.    
           
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.   
         
முகவரி:அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு- 600 077. காஞ்சிபுரம் மாவட்டம்.
போன்:+91-4426272430,26272487.   
          
பொது தகவல்:இக்கோயில் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரம், 3 பிரகாரங்களோடு கூடியது. இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் கஜபிருஷ்டம் எனப்படும்.    
           
பிரார்த்தனை:இத்தல தீர்த்தத்தில் ஞாயிறு தோறும் நீராடி வந்தால் தோல் சம்பந்த நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.   
          
நேர்த்திக்கடன்:பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.   
          
தலபெருமை:திருவேற்காடு பாலாம்பிகையையும், திருவலிதாயம் ஜகதாம்பிகையையும், திருவொற்றியூர் வடிவாம்பிகையையும் ஒரே நாளில் வழிபடுவோர் இம்மையிலும், மறுமையிலும் அனைத்து நலன்களையும் பெறுவர் என கூறப்படுகிறது. இத்தல தீர்த்தத்தில் ஞாயிறு தோறும் நீராடி வந்தால் தோல் சம்பந்த நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. இக்கோயில் சோழ அரசனால் கட்டப்பட்டது. சிவன் ஒரு முறை பார்வதியிடம், இத்தலத்தை மனதால் நினைத்தாலும், ஒரு பொழுதாவது இங்கு தங்கியிருந்தாலும், இத்தலம் வழியாக சென்றாலும் முக்தியடைவர் என்று கூறியுள்ளார்.வழிபட்டோர்: பாற்கடலை விநாயகர் பருகி விளையாடும் போது திருமால் தன் கையில் இருந்த வலம்புரி சங்கை தவற விட்டார். பின் இத்தல சிவனை வழிபட்டு பெற்றார். திருமால் சுதர்சன சக்கரத்தை பெறுவதற்காக இத்தலத்தை அடைந்து பூஜை செய்த போது, உடனிருந்து ஆதிசேஷனும் இங்கு வழிபட்டு, இத்தலத்தின் எல்லை வரை வாசம் செய்பவர்களை தீண்டமாட்டேன் என கூறியதாக வரலாறு. அன்றிலிருந்து இத்தலத்தில் யாரும் பாம்பு கடித்து இறந்தது கிடையது. இதனால் இத்தலத்திற்கு "விடந்தீண்டாப்பதி' என்ற பெயரும் உண்டு. முருகப்பெருமான் பிரம்மனை சிறையிலிருந்து நீக்காத குற்றத்திற்காக, இங்கு தீர்த்தம் உண்டாக்கி வெள்வேல மரத்தடியில் வழிபட்டு பிழை நீங்கப்பட்டார். மேலும் பராசரர், அத்திரி, பிருகு, குச்சரர், ஆங்கீரசர், வசிட்டர், கவுதமர், காசிபர், திண்டி, முண்டி, வாலகில்லியர், விரதாக்னி முதலிய முனிவர்கள், பஞ்சபாண்டவர்கள், சிபி சோழன், வாணன், மற்றும் ஒன்பது கோள்கள், அஷ்டதிக்பாலகர்கள் வழிபாடு செய்துள்ளனர். இத்தல முருகனை அருணகிரி நாதர் தன் திருப்புகழில் பாடியுள்ளார்.மூர்க்கநாயனார்: இத்தலம் 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த தலம். இவர் தினமும் அடியார்களுக்கு உணவு அளித்துவிட்டு, தான் உண்பதை கடமையாக கொண்டிருந்தார். ஒரு முறை இவருக்கு வறுமை ஏற்பட்டது. இதனால் தனக்கு தெரிந்த சூதாட்டத்தால் பலரிடம் வென்று வென்றதை மறுத்தவர்களை குத்தி, அதில் கிடைத்த பணத்தை வைத்து அடியவர்களுக்கு உணவளித்து வந்தார். இவரது மூர்க்க செயலால் இவரை மூர்க்க நாயனார் என்றழைத்தார்கள். இறைவன் திருவருளால் இவரது குற்றங்கள் நீங்கின. பின் சிவபதவியடைந்தார். இவர் அவதரித்த கார்த்திகை மூலம் நட்சத்திரத்தில் இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. இவருக்கு கோயில் வெளி சுற்று பிரகாரத்தில் தனி சன்னதி உள்ளது.    
           
தல வரலாறு:சிவபெருமான் பார்வதியை திருமணம் செய்து கொண்ட காலத்தில் தேவர் முதலியோர் இமயமலை எல்லையை அடைந்ததால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இதை சரிசெய்ய இறைவன் அகத்தியரை தென்திசைக்கு அனுப்பினார். அகத்தியர் இறைவனின் திருமணக்காட்சியை காண இயலவில்லையே என்ற வருத்தத்துடன் சென்றார். அப்போது இறைவன் நீ தென் திசை நோக்கி செல்லும் போது உமக்கு திருமண காட்சியை காட்டுவோம் என அருள்புரிந்து அனுப்பி வைத்தார்.அகத்தியர் திருவேற்காடு அடைந்த போது இறைவன் பார்வதியுடனான திருமணக்கோலத்தை காட்டி அருளினார். பிருகு முனிவரின் சாபத்தால் பெருமாள் ஜமத்கனி முனிவருக்கும், ரேணுகைக்கும் மகனாக அவதரித்தார். பரசுராமர் என பெயர் பெற்றார். அவர் இத்தல இறைவனை வழிபட வந்தபோது அவருடன் ரேணுகையும் உடன் வந்தார்.
ரேணுகை கோயிலே புகழ்பெற்ற,"கருமாரியம்மன் கோயில்' என்ற பெயரில் விளங்குகிறது. பிரளய காலத்தில் இந்த உலகம் மூடப்பட்ட பின், சிவன் மீண்டும் இந்த உலகை படைக்க விரும்பினார். முதலில் வெள்ளத்தை வற்றச்செய்து பின் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை இத்தலத்தில் வெள்ளெருக்கு மரங்களாக வடிவெடுக்குமாறு கட்டளையிட்டிருந்தார். அதன் படி இத்தலத்தில் வேதங்கள் வெள்வேல மரங்களாக மாறி இறைவனை வழிபட்டு வந்தன. இவ்வூரின் தல விருட்சம் வெள்வேல மரமாகும். இதனால் இத்தலம் "திருவேற்காடு' என அழைக்கப்படுகிறது.

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். லிங்கத்தின் பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் அமர்ந்துள்ளது தனி சிறப்பு.





சென்னையில் பார்க்க வேண்டிய பத்து கோயில்கள் -3

அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்    :மருந்தீஸ்வரர்
உற்சவர்    :தியாகராஜர்
அம்மன்   :திரிபுரசுந்தரி
தல விருட்சம்    :வன்னி
தீர்த்தம்    :பஞ்ச தீர்த்தம்
ஆகமம்/பூஜை     :காமீகம்
பழமை    :1800 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :திருவான்மீகியூர், திருவான்மியூர்
ஊர்    :திருவான்மியூர்
மாவட்டம்    :சென்னை
மாநிலம்    :தமிழ்நாடு
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரியார்   
           
தேவார பதிகம்:மந்த மாகிய சிந்தை மயக்கறுத்து அந்த மில்குணத்து ஆனை யடைந்துநின்று எந்தை ஈசனென் ஏத்திட வல்லீரேல் வந்து நின்றிடும் வான்மியூர் ஈசனே. திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 25வது தலம்.    
           
திருவிழா:பங்குனி பிரம்மோற்ஸவம், சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, கந்தசஷ்டி, பவுர்ணமி, கிருத்திகை.    
           
தல சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், மூலவரின் விமானம் சதுர்வஸ்தம் என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 258 வது தேவாரத்தலம் ஆகும்.    
           
திறக்கும் நேரம்:காலை 6மணி முதல் மணி 12வரை, மாலை 4மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்   
         
முகவரி:அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர், சென்னை-600 041. சென்னை மாவட்டம்.போன்:+91-44-2441 0477.   
          
பொது தகவல்:இத்தல விநாயகரின் திருநாமம் விக்னேஸ்வரர். ராஜகோபுரம் 5 நிலை உடையது. நைவேத்தியம் பொங்கல் படைக்கப்படுகிறது.    
           
பிரார்த்தனை:சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வணங்கி, விபூதி பிரசாதம் உண்டால் தீராத நோய்கள், பாவங்கள் தீரும், சிவன் காட்சி தந்த வன்னி மரத்தை சுற்றி வணங்கிட முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.   
          
நேர்த்திக்கடன்:சிவனுக்கும் அம்மனுக்கும் புது வஸ்திரம் அணிவித்து வணங்குதல்.   
          
தலபெருமை:தன்னை வணங்கி திருந்திய வால்மீகிக்கு, சிவன் வன்னி மரத்தினடியில் காட்சி தந்தார். அப்போது, வால்மீகி இறைவனிடம் வேண்டியதற்கேற்ப அவரது பெயரிலேயே இத்தலம் விளங்குகிறது. பிரகாரத்தில் அகத்தியர், வால்மீகிக்கு சிவன் காட்சி தந்த வன்னிமரம் உள்ளது. இவ்விடத்தில் பங்குனி பிரம்மோற்ஸவத்தின் போது, அகத்தியருக்கு காட்சி தந்த வைபவ நிகழ்ச்சி நடக்கிறது. நடராஜர், அருணகிரியாரால் பாடல் பெற்ற முத்துக்குமரர், மூன்று சக்தி விநாயகர்கள், 108 சிவலிங்கங்கள், பஞ்சலிங்கங்கள் தனித்தனி சன்னதியில் உள்ளன. தினசரி அதிகாலையில் கோபூஜை செய்யப்பட்ட பின்பே சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது. சுவாமிக்கு வான்மீகிநாதர், வேதபுரீஸ்வரர், அமுதீஸ்வரர், பால்வண்ணநாதர் என்ற பெயர்களும் உள்ளது.
அகத்தியருக்கு உபதேசம்: அகத்திய முனிவர் இங்கு வந்து சுவாமியை வணங்கி தவம் செய்தார். அவருக்கு, வன்னி மரத்தடியில் காட்சி தந்த சிவன் உலகில் தோன்றியுள்ள நோய்களுக்கு உண்டான மருந்துகளைக்குறித்தும், மூலிகைகளின் தன்மைகள் குறித்தும் உபதேசம் செய்தார். எனவே, இத்தலத்து ஈசன் "மருந்தீஸ்வரர்' எனப்படுகிறார்.

மேற்கு திரும்பிய சிவன்: அபயதீட்சிதர் எனும் பக்தர் ஒருவர், சுவாமியை வழிபட வந்தபோது கடும்மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்படவே, அவரால் நீரைக்கடந்து சுவாமியைக்காண வரமுடியவில்லை. அவர் சுவாமிக்கு பின்புறம் இருந்ததால் சுவாமியின் முதுகுப்பகுதியை மட்டும்தான் தரிசிக்க முடிந்தது. வருத்தம்கொண்ட அவர், "சிவனே! உன் முகம் கண்டு தரிசனம் செய்ய அருள மாட்டாயோ?' என வேண்டினார். அவருக்காக சிவன் மேற்கே திரும்பி காட்சி தந்தார். இதனால், இங்கு சிவன் மட்டும் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அம்பாள், சுவாமிக்கு பின்புறமாக தெற்கு நோக்கியும், முருகன், விநாயகர் ஆகியோர் கிழக்கு நோக்கியும் காட்சி தருகின்றனர்.

தல வரலாறு:வசிஷ்டமுனிவர் செய்த சிவபூஜைக்காக, இந்திரன் தன்னிடமிருந்த காமதேனுவை கருடன் அனுப்பி வைத்தான். பூஜை நேரத்தில் காமதேனு பால் சுரக்காமல் தாமதம் செய்யவே கோபம்கொண்ட முனிவர், அதனை புனிதத்தன்மை இழந்து காட்டுப்பசுவாக மாறும்படி சபித்தார்.  கலங்கிய காமதேனு, தனக்கு விமோசனம் கேட்க, இத்தலத்தில் வன்னி மரத்தடியில் சுயம்புலிங்கமாக உள்ள சிவனை வணங்கினால் விமோசனம் உண்டு என்றார். அதன்படி, இங்கு வந்த காமதேனு சுயம்புவாய் இருந்த சிவன் மீது தினசரி பால் சுரந்து விமோசனம் பெற்றது. இதனால், இங்குள்ள இறைவன் "பால்வண்ணநாதர்' என்றும் அழைக்கப்படுகிறார்.கொள்ளைக்காரராக இருந்த வால்மீகி, திருந்திட எண்ணம் கொண்டு இங்குள்ள சிவனை வணங்கி வந்தார். ஒருமுறை, அவர் சிவனை தரிசிக்க வந்தபோது, அவரைக்கண்டு பயந்த காமதேனு ஓடியது. அப்போது இங்கிருந்த லிங்கத்தை அறியாமல் மிதித்ததில் சுவாமியின் மேனியில் தடம் பதிந்தது. இன்றும்கூட, சுவாமியின் தலையிலும், மார்பிலும் பசு மிதித்த தடம் இருக்கிறது.

பாடல்: தேவாரப்பதிகம் மந்த மாகிய சிந்தை மயக்கறுத்து அந்த மில்குணத்து ஆனை யடைந்துநின்று எந்தை ஈசனென் ஏத்திட வல்லீரேல் வந்து நின்றிடும் வான்மியூர் ஈசனே. திருநாவுக்கரசர் தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 25வது தலம்.