புதன், 7 மே, 2014

சென்னையில் பார்க்க வேண்டிய பத்து கோயில்கள் -2

அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில்

மூலவர்    :பார்த்தசாரதி
உற்சவர்    :வேங்கடகிருஷ்ணன், ஸ்ரீ தேவிபூதேவி
தாயார்    :ருக்மிணி
தல விருட்சம்    :மகிழம்
தீர்த்தம்    :கைரவிணி புஷ்கரிணி
ஆகமம்/பூஜை     :வைகானஸம்
பழமை    :2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :பிருந்தாரண்ய க்ஷேத்ரம்
ஊர்    :திருவல்லிக்கேணி
மாவட்டம்    :சென்னை
மாநிலம்    :தமிழ்நாடு
பாடியவர்கள்:பேயாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசை ஆழ்வார்,  ஸ்ரீ ராமானுஜர்

இன்துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன் நற்புவி தனக்கு இறைவன் தன்துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கிறை மற்றையோர்க் கெல்லாம் வன்துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்று இயங்கும் என்துணை எந்தை தந்தை தம்மானை திருவல்லிக் கேணி கண்டேனே.
-திருமங்கையழ்வார்

திருவிழா:ஸ்ரீ பார்த்தசாரதி லட்சார்ச்சனை - பிப்ரவரி - 10 நாட்கள் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவின் போது கோயிலில் கூடுவர் பிரம்மோற்ஸவம்- ஏப்ரல் - 10 நாட்கள் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர் வைகுண்ட ஏகாதேசி மற்றும் புது வருடப் பிறப்பின் போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர் தவிர மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பானது.    
           
தல சிறப்பு:பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 61 வது திவ்ய தேசம். 9 அடி உயர மூலவர், சாரதிக்குரிய மீசையோடு இருத்தல் இத்தலத்தில் மட்டுமே என்பது மிக முக்கிய சிறப்பாக கருதப்படுகிறது. குடும்ப சமேதராக பெருமாள் காட்சியளிக்கிறார்.    
           
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.   
         
முகவரி:நிர்வாக அதிகாரி, அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை-600 005,போன்:+91-44-28442462, 2844 2449.   
          
பொது தகவல்:தியாகபிரம்மம் முத்துசுவாமி தீட்சிதர், பாரதியார் ஆகியோர் இத்தலம் குறித்து பாடியுள்ளனர். குறிப்பாக பாரதியார் பாடிய கண்ணன் பாடல்கள் அனைத்தும் இப்பெருமாளைப் பற்றியது எனக் குறிப்பிடுவர். அனுதினமும் பார்த்தசாரதிப் பெருமாளை வழிபட்டிருக்கிறார். சங்கீத மேதை தியாகராஜ சுவாமிகள், தத்துவ மேதை விவேகானந்தர், கணித மேதை ராமானுஜம், அரசியல் மேதை சத்தியமூர்த்தி ஆகியோர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டுள்ளனர். பிரகாரத்தில் கஜேந்திரவரதர், கருடர் மீது காட்சி தருகிறார். எனவே இவரை, "நித்திய கருடசேவை சாதிக்கும் பெருமாள்' என்று அழைக்கின்றனர். திருக்கச்சிநம்பி, வேதாந்தச்சாரியார், ராமானுஜர், மணவாளமாமுனிகள், சக்கரத்தாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகியோர் பிரகாரத்தில் இருக்கின்றனர்.

திருப்பதி லட்டு, உப்பிலியப்பன் கோயில் உப்பில்லா சாதம், மதுரை கள்ளழகர் கோயில் தோசை ஆகிய பிரசாதங்கள் பிரசித்தி பெற்றிருப்பதைபோல, இக்கோயிலில் சர்க்கரைப்பொங்கல் பிரசித்தி பெற்ற பிரசாதமாகும். 2 கிலோ அரிசியில் இந்த பொங்கல் தயாரிக்கப்பட்டால், 1 கிலோ 400 கிராம் முந்திரிப்பருப்பும், 700 கிராம் நெய்யும் சேர்க்கப்பட்டு மிக சுவையாக தயாரிக்கப்படுகிறது. பக்தர்களும் இந்த நைவேத்யத்தை கட்டணம் செலுத்தி சுவாமிக்கு படைக்கலாம். ஒரு காலத்தில் துளசிக் காடாக(பிருந்தா ஆரண்யம்) இருந்து பல்லவ மன்னர்கள் மற்றும் சோழ மன்னர்களால் திருப்பணிகள் நடைபெற்ற தலம்.

பிரார்த்தனை:இங்குள்ள நரசிம்மரை வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் கிடைக்கும். தவிர இத்தலத்து பெருமாளை மனமுருக வேண்டினால் கல்யாண வரம், குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவை கிடைக்கும்   
          
நேர்த்திக்கடன்:சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து, சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.   
          
தலபெருமை:பார்த்தசாரதி : தருமத்தை நிலைநாட்ட வேண்டி நிகழ்ந்த மகாபாரதப்போரில் பீஷ்மர் எய்த அம்புகளை பார்த்தனுக்குத் தேரோட்டியாக நின்று தாமே தாங்கியதால் ஏற்பட்ட வடுக்களை உற்சவர் திருமுகத்தில் இன்றும் தரிசிக்கலாம்.இந்த ஐதீகத்தின் அடிப்படையில் பெருமாள் ஸ்ரீ பார்த்தசாரதி என்றழைக்கப்படுகிறார்.ஆலயமும் அப்பெயரில் அழைக்கப்படுகிறது.காயங் களுடன் இருப்பதால் இவருக்கான நைவேத்யத்தில், நெய் அதிகம் சேர்க்கப்படுகிறது. மிளகாய் போன்ற காரமான பொருட்கள் சேர்ப்பதில்லை. அழகாக பிறக்கவில்லையே என வருந்துபவர்கள், திருமாலின் இந்த கோலத்தை தரிசித்தால் அழகு அழியும் தன்மையுடையது என்ற தத்துவத்தை உணர்வர்.

தீர்த்த தாயார்: முன்னொரு காலத்தில், திருமாலை தனது மருமகனாக அடைய வேண்டி பிருகு மகரிஷி, இத்தலத்தில் தவமிருந்தார். அப்போது இங்கிருந்த புஷ்கரணியில் மலர்ந்த அல்லி மலரில், தாயார் தோன்றினார். பிருகு அவருக்கு வேதவல்லி என பெயரிட்டு வளர்த்தார். அவளுக்கு திருமணப்பருவம் வந்தபோது திருமால், ரங்கநாதராக இத்தலம் வந்து அவளைத் திருமணம் செய்து கொண்டார். இந்த திருக்கல்யாண வைபவம் இக்கோயிலில் மாசி மாதம், வளர்பிறை துவாதசியன்று நடக்கிறது. வேதவல்லி தாயார் தனி சன்னதியில் அமர்ந்த கோலத்தில் இருக்கிறாள். இவள் கோயிலைவிட்டு வெளியேறுவதில்லை. வெள்ளிக்கிழமை மற்றும் உத்திர நட்சத்திரத்தில் கோயில் வளாகத்திற்குள் புறப்பாடாகி, ஊஞ்சலில் காட்சியளிக்கிறாள்.

குடும்பத்துடன் கிருஷ்ணர்: மனிதர்கள் குடும்பத்தினருடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும்விதமாக இக்கோயிலில் பெருமாள் அருள்கிறார். மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணர் அருகில் ருக்மணி தாயார், மார்பில் மகாலட்சுமி ஆகியோர் உள்ளனர். இந்தப் பெருமாள், அர்ஜுனனுக்கு உதவியாக வந்த கிருஷ்ணாவதாரம் என்பதால், அருகில் ருக்மிணி தாயார் இருக்கிறாள். வலப்புறத்தில் அண்ணன் பலராமர், இடதுபுறத்தில் தம்பி சாத்யகி, மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் ஆகியோரும் இருக்கின்றனர். தனிசன்னதியில் இருக்கும் ராமபிரானுடன் சீதை, லட்சுணர், பரதன், சத்ருக்கனன், ஆஞ்சநேயர் ஆகியோர் உள்ளனர்.

சக்கரம் இல்லாத சுவாமி: பெருமாளின் பஞ்சாயுதங்களில் சங்கும், சக்கரமும் பிரதானமானவை. ஆனால், இக்கோயிலில் சுவாமியிடம் சக்கரம் இல்லை. மகாபாரத போரின்போது பாண்டவர்களுக்கு உதவிய கிருஷ்ண பரமாத்மா, போர் முடியும் வரையில் ஆயுதம் எடுப்பதில்லை என உறுதி எடுத்திருந்தார். எனவே, இவர் இத்தலத்தில் ஆயுதம் இல்லாமல் காட்சி தருகிறார். போரை அறிவிக்கும் சங்கு மட்டும் வைத்திருக்கிறார். பெருமாளை இத்தகைய கோலத்தில் தரிசிப்பது அபூர்வம். பொதுவாக நான்கு கரங்களுடன் காட்சி தரும் பெருமாள், இங்கே கிருஷ்ணனாகிய மானிட வடிவில் இருப்பதால் இரண்டு கரங்களே உள்ளன.

மீசையில்லாத தரிசனம்: தேரோட்டிக்கு அழகு கம்பீரத்தை உணர்த்தும் மீசை. இதனை உணர்த்தும் விதமாக, இக்கோயிலில் வேங்கடகிருஷ்ணர் மீசையுடன் காட்சிதருகிறார். இதனால் இவருக்கு, "மீசை பெருமாள்' என்றும் பெயருண்டு. வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது, பகல்பத்து ஆறாம் நாளில் இருந்து பத்தாம் நாள் வரையில் 5 நாட்கள் மட்டும் இவரை மீசையில்லாமல் தரிசிக்கலாம். உற்சவர் பார்த்தசாரதிக்கு வெள்ளிக் கிழமைகளில் விசேஷ அபிஷேகம் நடக்கும் போது மட்டும், மீசையுடன் அலங்காரம் செய்கின்றனர்.

ஐந்து மூலவர் ஸ்தலம்: கோயில்களில் பெரும்பாலும் ஒரு மூர்த்தி மட்டுமே பிரதான மூலவராக இருப்பார். ஆனால், இக்கோயிலில் ஐந்து மூர்த்திகள் மூலவர் அந்தஸ்தில் வணங்கப்படுகின்றனர். பிரதான மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணர், முன்மண்டபத்தில் ரங்கநாதர் மற்றும் ராமபிரான், பிரகாரத்தில் கஜேந்திரவரதர் மற்றும் யோகநரசிம்மர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் இருக்கின்றனர். எனவே இத்தலம், "பஞ்சமூர்த்தி தலம்' என்றழைக்கப்படுகிறது.ரங்க நாதர் சன்னதியில், சுவாமியின் தலைக்கு அருகில் வராகரும், கால் அருகில் நரசிம்மரும் இருக்கின்றனர். ரங்கநாதர், இங்கு தாயாரை திருமணம் செய்துகொள்ள வந்தபோது நரசிம்மரும், வராகமூர்த்தியும் உடன் வந்தனர் என்ற அடிப்படையில் இந்த அமைப்பு உள்ளது. இவ்வாறு ஒரே சன்னதிக்குள் பெருமாளின் மூன்று கோலங்களையும் இங்கு தரிசிக்க முடியும். திருமணத்திற்கு வந்த ரங்கநாதரை, தாயார் ""என்னவரே!'' என்ற பொருளில், ""ஸ்ரீமன்நாதா!'' என்றழைத்தார். எனவே இவருக்கு "ஸ்ரீமன்நாதர்' என்ற பெயரும் உண்டு.கிழக்கு நோக்கிய மூலவர் வேங்கட கிருஷ்ணன், மேற்கு நோக்கிய யோக நரசிம்மர் என இருவருக்கும் இரு திசைகளிலும் இரண்டு கொடி மரங்களும், வாசல்களும் உள்ளன.

ஒலி எழுப்பாத மணி: யோக நரசிம்மர், யோக பீடத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரே இத்தலத்தின் முதல் மூர்த்தியாவார். காலையில் இவருக்கே முதல் பூஜை நடக்கிறது. அத்ரி மகரிஷிக்கு காட்சி தந்த நரசிம்மர் இவர். இவரது சன்னதியில் உள்ள மணிகளில் மட்டும் சப்தம் எழுப்பும் நாக்குகள் இல்லை. நரசிம்மர் யோக நிலையில் இருப்பதால் மணி ஒலிக்கும் சப்தமும், பேச்சு சப்தமும் கேட்கக்கூடாது என்கின்றனர். எனவே, இவரது சன்னதியில் அலங்காரத்திற்காக கதவில் இருக்கும் மணிகள்கூட, நடுவில் சப்தம் எழுப்பும் நாக்கு இல்லாமல் செய்யப்பட்டிருக்கிறது. பக்தர்கள் இவரிடம் வேண்டிக் கொண்டு உப்பு, மிளகை இவரது சன்னதிக்கு பின்புறத்தில் காணிக்கையாக செலுத்துகிறார்கள். இதற்காக சிறிய மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை.

தல வரலாறு:திருமாலின் பக்தனான சுமதிராஜன் என்னும் மன்னனுக்கு,பெருமாளை குருக்ஷேத்ர  போரில் தேரோட்டியாக இருந்த கண்ணனாக, தரிசிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. தனக்கு அக்காட்சியை தந்தருளும்படி பெருமாளிடம் வேண்டினார். சுவாமியும் இங்கு தேரோட்டியாக காட்சி தந்தார். மகிழ்ந்த மன்னர், அதே கோலத்தில் தங்கும்படி வேண்டவே, பாரதப் போரில் அர்ச்சுனனுக்கு சாரதியாக இருந்த திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமாள் ஆயுதம் எதையும் எடுப்பதில்லை என்று செய்த சபதத்திற்கு ஏற்ப ஒரு கையில் சங்கு மட்டுமே ஏந்தி இருக்கிறார்.பாரதப்போரில் அர்ச்சுனன் மீது பீஷ்மர் தொடுத்த அம்புகளையெல்லாம் தானே முன்னின்று ஏற்று க் கொண்டு அர்ச்சுனனுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்ததை விளக்கும் வகையில் இன்றும் பார்த்தசாரதி முகத்தில் அம்பு பட்ட வடுக்கள் காணப்படுகின்றன. "வேங்கடகிருஷ்ணர்' என்றும் பெயர் பெற்றார். இத்தலத்து உற்சவர், பார்த்தசாரதி ஆவார். பிற்காலத்தில் இவர் பிரசித்தி பெறவே, இவரது பெயரில் கோயில் அழைக்கப்பட்டது.    
           
சிறப்பம்சம்:பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று 9 அடி உயர மூலவர், சாரதிக்குரிய மீசையோடு இருத்தல் இத்தலத்தில் மட்டுமே என்பது மிக முக்கிய சிறப்பாக கருதப்படுகிறது. குடும்ப சமேதராக பெருமாள் காட்சியளிக்கிறார்.




சென்னையில் பார்க்க வேண்டிய பத்து கோயில்கள் - 1

அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில்

மூலவர்    :அஷ்டலட்சுமி, மகாலட்சுமி, மகாவிஷ்ணு,
உற்சவர்    :அஷ்டலட்சுமி
அம்மன்   :ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி,கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி
தீர்த்தம்    :சமுத்திர புஷ்கரணி (வங்கக் கடல்)
பழமை    :500 வருடங்களுக்குள்
ஊர்    :பெசன்ட் நகர்
மாவட்டம்    :சென்னை
மாநிலம்    :தமிழ்நாடு
   
திருவிழா:புரட்டாசி நவராத்திரி திருவிழா 10 நாட்கள் இத்தலத்தில் பத்து விதமான அலங்காரங்களில் திருவிழா நடைபெறும் இத்திருவிழாவின் போது பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுவர். தீபாவளி, லட்சுமி பூஜை, தை வெள்ளி, ஆடி வெள்ளி ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.அந்த தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவர்.    
           
தல சிறப்பு:கோபுரத்தில் ஓம்கார வடிவத்தில் அஷ்டாங்க விமானத்துடன் கூடியதாக திருக்கோயில் அமைந்துள்ளது. (ஓம்கார சேத்திரம்) கோபுரத்தின் நிழல் பூமியில் விழாது.இது தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் சிறப்பை ஒட்டி அமைந்துள்ளது.    
           
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்   
         
முகவரி:அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில், பெசன்ட் நகர்-600 090, சென்னை.போன்:+91- 44-2446 6777, 2491 7777, 2491 1763   
          
பொது தகவல்:ஆறுகால பூஜைகள் இத்தலத்தில் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க அம்சம். இங்கு முழுக்க முழுக்க நெய் விளக்குகள் மட்டுமே ஏற்றப்படுகின்றன.    
           
பிரார்த்தனை;இங்கு அஷ்ட லட்சுமிகளாக அருள் பாலிக்கும் மகாலட்சுமியை வணங்கினால் சிறப்பு வாய்ந்த வாழ்க்கை அமையப்பெறலாம். தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கும் ஒவ்வொரு தெய்வங்களும் தனித்தனி சிறப்பை பெற்றதாக உள்ளது.உடல்நலம்பெற ஆதிலட்சுமியையும், பசிப்பிணி நீங்க தான்யலட்சுமியையும், தைரியம் பெற தைரியலட்சுமியையும், சவுபாக்கியம் பெற கஜலட்சுமி யையும், குழந்தைவரம் வேண்டுமெனில் சந்தானலட்சுமியையும், காரியத்தில் வெற்றி கிடைக்க விஜயலட்சுமியையும், கல்வி ஞானம் பெற வித்யாலட்சுமியையும், செல்வம் பெருக தனலட்சுமியை வணங்குதல் நலம்.
   
நேர்த்திக்கடன்:வேண்டிய வரங்கள் எல்லாம் கிடைக்கும் இத்தலத்தில் அபிஷேக ஆராதனைகள்,புடவை சாத்துதல் ஆகியவையும், பிரசாதம் செய்து விநியோகிப்பதும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது   
          
தலபெருமை:அஷ்டலட்சுமிகளும் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.கடல் அருகே அமைந்திருக்கும் அழகிய திருக்கோயில். பெருமாள் நின்ற கல்யாணத் திருக்கோலம். தாயார் 9 கஜம் (மடிசார்) புடவை கட்டி அருளுகிறார்.
   
தல வரலாறு:சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயில் பெருமளவு பக்தர்கள் வருகையினால் நாளடைவில் சென்னையின் மிகவும் புகழ்பெற்ற கோயிலாக ஆனது.அதோடு சென்னை பெசன்ட் நகர் பீச் மிகவும் புகழ் பெற்றது. இந்த பீச்சுக்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளதால் "பக்தர்கள் தவிர ஏராளமான சுற்றுலா பயணிகளும் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் என்ற ஊரில் இருக்கும் பெருமாள் கோயிலைப் போலவே இக்கோயில் அடுக்கடுக்காக கட்டப்பட்டுள்ளது மிகவும் விசேஷம். அருமையான சலவைக் கற்களால் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் உள்ள சுதைகள் மிகவும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.
   
சிறப்பம்சம்:கோபுரத்தில் ஓம்கார வடிவத்தில் அஷ்டாங்க விமானத்துடன் கூடியதாக திருக்கோயில் அமைந்துள்ளது.(ஓம்கார சேத்திரம்) கோபுரத்தின் நிழல் பூமியில் விழாது.இது தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் சிறப்பை ஒட்டி அமைந்துள்ளது.