திங்கள், 28 ஏப்ரல், 2014

சமணர்களின் கொடுமையும், திருநாவுக்கரசரின் பெருமையும்:-
*
திருநாவுக்கரசர், இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு சைவ சமயம் சார்ந்ததைக் கேள்வியுற்ற சமணர்கள், மன்னனும் இந்நிகழ்வால் சைவ சமயத்துக்கு மாறக் கூடும் என அஞ்சினர். மன்னனிடம் அப்பர் அடிகளைப் பற்றி தவறாகத் திரித்து உரைத்து, அடிகளைத் தண்டிக்கும் பொருட்டு அழைத்து வரச் செய்தனர். அன்பே வடிவான அடிகளும் அவர்களுக்கு இரங்கி, உடன் சென்றருளினார்.
*
பெருந்தீ கொழுந்து விட்டு எரியும் அறையுள் அப்பர் அடிகளை அடைத்து, 7 நாட்கள் வெளியில் நின்று காவல் புரிந்தனர். திருநாவுக்கரசர், இறைவனின் திருவுருவை மனதில் இருத்தி, 'மாசில் வீணையும் மாலை மதியமும்' என்னும் தேவாரம் பாடி அருளி, இனிது வீற்றிருந்தார். 7 நாட்களுக்குப் பின்னும் பொலிவுடன் அடிகள் வீற்றிருப்பதைக் கண்ணுற்ற சமணர்கள் பெரிதும் கலக்கமுற்றனர்.
*
பின்னர் அப்பர் அடிகளை, விடம் கலந்த நீரைப் பருகச் செய்தனர். விடம் உண்ட நீலகண்டனின் அடியவருக்கு, விடமும் அமிர்தமாக மாற முன்னிலும் பொலிவுடன் விளங்கினார் அடிகள். அறிவிழந்த மன்னனும் பொல்லாச் சமணர் சொல் கேட்டு, அடிகளை மண்ணில் திருக்கழுத்து வரை புதைத்து, அடிகளின் தலையை இடரும் பொருட்டு, பட்டத்து யானையை அழைத்து வர ஆணையிட்டான்.
*
அடிகள் 'அஞ்சுவது யாதொன்றும் இல்லை' என்னும் தேவாரம் பாடி அருள, யானை அடிகளை வலம் வந்து வணங்கிச் சென்றது. வஞ்சகர்கள் அத்துடன் நில்லாது இறுதி முயற்சியாக, அடிகளைக் கல்லுடன் பிணைத்துக் கட்டி ஆற்றில் மூழ்கச் செய்து, மகிழ்வுடன் சென்றனர். அப்பர் அடிகள் 'சொற்றுணை வேதியன்' என்னும் தேவாரம் பாடி அருள, கற்பாறை தோனியாக மாறி மிதந்து, அடிகளைக் கரை சேர்த்தது.
*
உண்மை நெறியுணர்ந்த பல்லவ மன்னன் அடிகளை வணங்கி, மன்னிப்பு வேண்டி நின்றான். கருணையே உருவான அப்பரடிகளும் அரசனின் பிழை பொறுத்து, ஆசிர்வதித்து அருளினார். சைவ சமயம் சார்ந்த பல்லவ மன்னன், அனைத்து சமணப் பள்ளிகளையும் இடித்து, குணபரவீச்சுரம் என்னும் சிவாலயம் புதுக்கினான்.
*
திருநாவுக்கரசு சுவாமிகள் பாடி அருளிய சிறப்புப் பொருந்திய இத்தேவாரப் பதிகங்களை அனுதினமும் பாராயணம் செய்வதால், பெரும் துன்பங்களில் இருந்தும் எளிதில் விடுபெறலாம் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.






இறைவனால் பட்டம் சூட்டப் பெற்ற திருநாவுக்கரசர் (இன்று சித்திரை சதயம் (25/4/2014). அப்பர் சுவாமிகள் திருப்புகலூரில் முக்தி அடைந்த நன்னாள்):
*
திருநாவுக்கரசரின் அவதாரத் தலம் 'திருவாய்மூர்'.
இயற்பெயர் 'மருள் நீக்கியார்'. இவரின் தமக்கையான 'திலகவதியார்', சீரிய சிவத்தொண்டு புரிந்து வரும் இயல்பினர். மருள் நீக்கியார், இளமைக் காலத்தில் இறைவன் அருளாமையினால், தமக்கையாரையும் பிரிந்து, உய்யும் வழி அறியாது, சமண மதம் சேர்ந்து சமணர்களுள் பெரும் மதிப்பைப் பெற்றார்.
*
திலகவதியார் 'திருவதிகை' தலம் சென்று உழவாரப் பணி புரிந்து வந்தார். அனுதினமும் திருவதிகைப் பெருமானிடம், மருள் நீக்கியாரை புறச்சமயம் விட்டு நீக்கி அருளுமாறு வேண்டுவார். சிவபெருமான் திலகவதியார் கனவில் தோன்றி 'உன் சகோதரன் எம்மை அடைய முன்னமே தவம் செய்தவன். யாம் சூலை நோய் தந்து அவனை ஆட்கொள்வோம்' என்று அருளிச் செய்தார்.
*
சமணப் பள்ளியில் மருள்நீக்கியார், காரணம் இன்றிச் சூலைநோய் தாக்கிய தன்மையால் அலறிச் செய்வது அறியாது வீழ்ந்தார். மெய்நெறி உணரா சமணர்களின் அனைத்து மருத்துவ முறைகளும் பயனற்றுப் போயின. துடித்துப் பதறிய மருள் நீக்கியார் சமணக் கோலம் துறந்து, திருவதிகைத் தலத்துக்கு விரைந்து, திலகவதியாரின் பாதங்களில் பணிந்து பிணி போக்கி அருளுமாறு அழுதுத் தொழுதார்.
*
திலகவதியார், சகோதரர் உய்யும் பொருட்டு திருநீற்றை உடலெங்கும் பூசி, அவரைத் திருக்கோயிலினுள் அழைத்துச் சென்றார். திருவருள் தூண்ட மருள் நீக்கியார் 'கூற்றாயினவாறு' என்று தொடங்கும் 10 பாடல்கள் கொண்ட தேவாரம் பாடி அருளினார். சூலைநோயின் வலியை விளக்கி, அதை போக்கி அருளுமாறு மன்னிப்பு வேண்டும் ஒவ்வொரு பாடலும், கல்லையும் உருக்கும் தன்மை கொண்டவை.
*
இறைவன் மிக மகிழ்ந்து அடியவரின் சூலை நோயைப் போக்கி, 'இனியக் கவி பாடிய உன் நாவன்மையால் இன்று முதல் நாவுக்கரசர் என்று அழைக்கப் படுவாய்' என்று அசரீரியாய்த் திருவாய் மலர்ந்து அருளினார். இறைவனைத் தலைவனாகவும் தன்னைத் தொண்டனாகவும் பாவித்து வழிபாடு செய்யும் 'தாச மார்கத்தின்' வழி நின்றவர் திருநாவுக்கரசர்.
*
தலங்கள் தோறும் சென்று தேனினும் இனிய தேவாரம் பாடியருளி, உழவாரத் தொண்டும் புரிந்துத் தொண்டின் இலக்கணமாகத் திகழ்ந்தார்.


பத்ராசலம் ஸ்ரீசீதாராமர் திருக்கோயிலும் பக்த ராமதாசரும் (கிளியை கூண்டில் அடைத்ததால் 12 வருட சிறை தண்டனை):

பத்ராசலம் என்னும் பிரசித்தி பெற்ற தலம் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது. தென் அயோத்தி என்று அழைக்கப் பெறும் சிறப்புப் பொருந்தியது. தலத்தின் மூலவரான ஸ்ரீராமசந்திர மூர்த்தி அன்னை சீதையை மடியில் அமர்த்திய நிலையில், இலக்குவனும் உடன் இருக்க, அற்புதத் திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

ஸ்ரீராமதாசர் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருளாளர். 'கோல்கொண்டா' பகுதியின் மன்னன் 'தானேஷாவிடம்' பணிபுரிந்து வந்தார். மன்னனின் ஆணையால் பத்ராசலப் பகுதியின் தாசில்தாராக பொறுப்பேற்றார். அங்கு சிறிய ஆலயத்தில் ஸ்ரீசீதாராமர் எழுந்தருளி இருப்பதைக் கண்ணுற்று வருந்தினார். பெருமானுக்கு பெரியதொரு ஆலயம் புதுக்க சங்கல்பம் பூண்டார்.

தன் செல்வமனைத்தும் திருப்பணிக்கு அர்ப்பணித்தும், நிதி போதாத நிலை உருவாக, அத்தல மக்கள் உதவ முன்வந்தனர். தங்கள் வரிப் பணத்திலிருந்து வேண்டிய நிதியை தற்சமயம் எடுத்துக் கொள்ளுமாறும், அவ்வருட விளைச்சலுக்குப் பின் தங்கள் பங்கை கொடுத்து விடுவதாகவும் வாக்களிக்க, திருப்பணியும் இனிதே நடந்தேறியது.

மன்னன் செய்தி அறிந்து வெகுண்டு, ஸ்ரீராமதாசரை கைது செய்து, சித்திரவதை செய்ய ஆணையிட்டான். சிறையில் அனுதினமும் கீர்த்தனைகள் புனைந்து, பெருமானிடம் தன்னைக் காத்தருளுமாறு கண்ணீர் மல்க முறையிடுவார் ஸ்ரீராமதாசர். 12 ஆண்டுகள் இதே முறையில் கழிய, ஸ்ரீராமர் இலக்குவனுடன் இரு வீரர்களின் உருக் கொண்டு அரண்மனையில் தோன்றி அருளினார்.
*
மன்னனிடம், ஸ்ரீராமதாசர் எடுத்த செல்வத்தை வட்டியுடன் செலுத்தி, ரசீதும் பெற்று மறைந்தார். இன்றும் பெருமான் செலுத்திய பொன் நாணயங்களை திருக்கோயிலில் தரிசிக்கலாம். பின்னர் ஸ்ரீராமர் சிறையில் ராமதாசருக்கு காட்சி அளித்து, ரசீதையும் சேர்ப்பித்தார். ராமதாசர் விழி நீர் மல்க, பன்முறை பெருமானைப் பணிந்து போற்றினார்.
*
'12 வருடங்களாக மனமுருக அழைத்தும், தன்னைக் காத்தருள வராததன் காரணம் யாது?' என பணிவுடன் வினவினார். 'முற்பிறவியில் ஒரு கிளியை கூண்டில் பல காலம் அடைத்து வைத்த பாவத்தால், இப்பிறவியில் ஸ்ரீராமதாசர் 12 வருடங்கள் சிறையில் துன்புறும் நிலை எய்தியது' என்று விளக்கியருளினார் ஸ்ரீராமர். ராமதாசர் சிறையிருந்த கோல்கொண்டா கோட்டையை இன்றும் தரிசிக்கலாம்.
*
இந்நிகழ்வில் இருந்து ராம பக்தியை மட்டும் அல்லாது, அகிம்சையையும் பாடமாகக் கற்போம். பரம பக்தரான ஸ்ரீராமதாசரையும் கர்மவினை விடவில்லை. உயிரினங்களை அடைத்து வைப்பது கொடிய பாவம். எனில், உயிரினங்களை வதைத்து உட்கொள்வது எவ்வளவு பாவம் என்று உணர்தல் மிகவும் அவசியம். இறைவன், பக்தியோடு அகிம்சையையும் நிச்சயம் எதிர்பார்க்கிறான் (ஸ்ரீராமஜெயம்).
 
 


படித்ததில் படித்து

ஒரு நாள் ஏகாந்தமாகவும் விஸ்ராந்தியாகவும் இருக்கும் பொழுது என்னுடன் பேசியது:


ஸ்ரீ பெரியவா:ஏண்டா, பெரியவான்னா என்ன?

நான்:(பதில் சொல்ல முடியாமல் முழித்தேன்)
ஸ்ரீ பெரியவா: தெரியலயா………
பெ ரி ய வா …..ன்னா என்ன?
நான்: (உண்மையாகவே ஒன்றும் புரியாமல் இருந்தேன்)
பெரியவா :ரி ………..ரி-ன்னா ரிக் வேதம்
ய …………ய -ன்னா யஜுர் வேதம்
இப்ப வார்த்த முடியப் போறது ங்கற மாதிரி கடைசி வேதத்தின்……அதாவது
அதர்வ வேதத்தின் கடைசி எழுத்தான ‘வ’. இதை சேக்கறதுக்கு முன்னாடி சாம வேதத்துக்கு உயிர் நாடி கானம். அ…..அ…..அ… ன்னு நிறைய வரும். அது சேந்துண்டு இருக்கு.
அதாவது
ரி …….ய…….அ………வ.
இப்ப அ+வ = வா…….
இப்ப ரி ……ய…… வா சரியாய்டுத்தா..?ஏதோ என்னால முடிஞ்சது பெரியவாளோட வேத சம்பந்தப்படுத்திட்டேன்னு
பாக்கிறயா..?ஒரே ஒரு எழுத்து மிச்சமிருக்கே! ‘பெ’ அத என்ன பண்றது?..(ஸ்ரீ பெரியவா என்னை நிமிர்ந்து பார்த்து என் பதிலை எதிர் பார்ப்பது போல் இருந்தது. நான் ஒன்றும் புரியாமலும், தெரியாததாலும் பதில் சொல்லாமல் இருந்தேன்)
ஸ்ரீ பெரியவா: என்ன முழிக்கறே? ஒண்ணும் புரியாம, தெரியாம இருக்கறதுக்கு என்ன பெயர் தெரியுமா?
அஞ்ஞானம்னு சொல்லுவா. அந்த அஞ்ஞானமா இருக்கறவாள பாத்து பேந்த்த பேந்த்த முழிக்கறத ‘பெ’ ன்னு முழிக்கறதா சொல்லலாம் இல்லையா? அப்போ ‘பெ’ ங்கறது அஞ்ஞான வார்த்தையாயிடறது.

இப்ப எல்லாதையும் சேத்தாக்க, அஞ்ஞானத்தோட இருக்கறவாளை வேதத்தோட சம்பந்தப்படுத்தறது தான் இந்த வார்த்தைன்னு தெரியறதா?.

அஞ்ஞானிகளை யார் ரிக், யஜுர், சாம அதர்வ வேத மார்க்கத்திலே மாத்தறாளோ அவாதான் “பெரியவா“
(எனக்கு இப்போதுதான் புரிந்தது அஞ்ஞானியான என்னை வேத மார்க்கத்தைக் காட்டியவராக இவர் இருப்பதினால்தான் நாம், ஏன், எல்லோருமே “பெரியவா” என்று கூப்பிடுகிறோம்னு.
 
 
பகவான் ஸர்வவ்யாபி

பெரியவாளிடம் அத்யந்த பக்தி கொண்டது திரு நடராஜசாஸ்த்ரிகள் குடும்பம். அவர் தஞ்சாவூர் பங்காரு காமாக்ஷி அம்மன் கோவில்டிரஸ்டியாக இருந்த சமயம். பெரியவா தஞ்சாவூரில்முகாம். பெரியவாளுக்கு ஒரு அழகான ரோஜாமாலையை அணிவிக்க வேண்டும் என்று கொள்ளை ஆசை! பூக்கடையில் இதற்கென ஆர்டர் குடுத்துரொம்ப அழகான குண்டு குண்டு பன்னீர் ரோஜாக்களை பொறுக்கி எடுத்து கட்டச்சொல்லி, பெரியவாளை தர்சனம் பண்ணப் போகும்போது எடுத்துக் கொண்டு போனார். ஆனால்,இவர் போய் சேருவதற்குள்
தர்சன நேரம் முடிந்து பெரியவா உள்ளே போய்விட்டார்.நடராஜ சாஸ்த்ரிகளுக்கோ ரொம்ப வருத்தம்! மாலையோடுவீடு திரும்பினார். அவருடைய மனைவி”எல்லாமே பெரியவாதானே? இந்த மாலையைஅம்பாளுக்கே போட்டுடுங்கோ. பெரியவாளும் அம்பாளும்வேறவேறயா என்ன?” என்றாள்.

“இல்லே, இல்லே, அம்பாளும் பெரியவாளும் வேறவேற இல்லேதான். ஆனாலும், இந்த மாலை நாம ப்ரத்யக்ஷமா பாக்கற பெரியவாளுக்குத்தான்! ஆமா. இதுஅவருக்கு மட்டுந்தான்!” என்று கண்டிப்பாக சொல்லிவிட்டு, அதைபூஜை ரூமில் ஒரு பக்கமாக ஒரு ஆணியில் தொங்கவிட்டார்.

மறுநாள் காலை விடிந்தும் விடியாமலும்,பெரியவா மேலவீதி சங்கரமடத்திலிருந்து ஸ்ரீனிவாசபுரம்வந்து, நடராஜ சாஸ்த்ரிகள் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில்
தர்சனம் பண்ண வருவதாக தெருவே திமிலோகப்பட்டது! சாஸ்த்ரிகள் வீட்டிலும்ஒரே பரபரப்பு!
“பெரியவா வரா! பெரியவா வரா! தர்சனம் பண்ணிக்கோங்கோ!”மடத்து பாரிஷதர் உச்சஸ்தாயியில் தெருவில்சொல்லிக் கொண்டேபோனார்.உடனே வீடுகளுக்குள் இருந்தவர்கள்நண்டு சிண்டுவிலிருந்து தாத்தா, பாட்டி வரை அவசரஅவசரமாக பூர்ணகும்பம், குத்துவிளக்கு, புஷ்பம் சஹிதம் அடிச்சு பிடிச்சு வாசலுக்கு ஓடி வந்தனர்!பெரியவாளுடைய வேகம் அப்படி இருக்கும்! குள்ள உருவமாக இருந்தாலும், அவர் என்னவோசாதாரணமாக நடப்பது போல் இருக்கும். ஆனால், கூட வரும் நெட்டை மனிதர்கள் கூட குதிகால்பிடரியில் அடிக்க ஓடி வரவேண்டியிருக்கும். அந்தவேகம், உண்மையான மஹான்களுக்கே உரித்தான லக்ஷணம்!

பெரியவா நேராக பிள்ளையாரை தர்சனம் பண்ணிவிட்டு,சற்றும் எதிர்பாராமல், “டக்”கென்று சாஸ்த்ரிகள் வீட்டுக்குள் நுழைந்து, ரொம்ப ஸ்வாதீனமாகபூஜை ரூமுக்குள் போய், முன்தினம்
“பெரியவாளுக்குத்தான்!” என்று முத்ரை குத்தப்பட்டு,ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த ரோஜா மாலையைஅப்படி லாவகமாக, யானை தும்பிக்கையால் தூக்குவதுபோல், அருட்கரத்தால் தூக்கி, தானே தன் தலையில் சூடிக்கொண்டார்!சாஸ்த்ரிகளும் குடும்பத்தாரும் கண்களில் தாரைதாரையாக நீர் வழிய, விக்கித்து நின்றனர்!ஹ்ருதயமே வெடித்துவிடுவது போன்ற சந்தோஷம்! இப்படி ஒருபரமகருணையா? என்று சொல்லமுடியாத ஆனந்தம்!திக்கு முக்காடினார்கள்.

எல்லாரும்நமஸ்கரித்ததும்,விடுவிடென்றுவாசல்பக்கம்நடந்தார். சற்று நின்று திரும்பி,“எங்கே வெள்ளிக்கிண்ணம்?” என்று சாஸ்த்ரிகளிடம் கேட்டார்.அவ்வளவுதான்! ஆடிப் போய்விட்டார் சாஸ்த்ரிகள்!நேற்று மனைவியிடம் பெரியவாளுக்கு ஒரு வெள்ளிக் கிண்ணம்குடுக்கணும் என்று சொல்லி, ஒருபுது கிண்ணத்தையும் எடுத்து வைத்திருந்தார். இதோ!
அவர்கள் நேற்று பேசியதைஏதோ பக்கத்திலிருந்து கேட்டதுபோல்அல்லவா’வெள்ளிக்கிண்ணம்எங்கே?’ என்று கேட்கிறார்! ஓடிப் போய் பீரோவிலிருந்த வெள்ளிக் கிண்ணத்தையும் கொண்டுவந்து சமர்ப்பித்தார்.

பகவான் ஸர்வவ்யாபி! என்பதைஅன்று எல்லாரும் ப்ரத்யக்ஷமாக கண்டார்கள், உணர்ந்தார்கள்!
 
 
காஞ்சிப்பெரியவா

காஞ்சிப்பெரியவர் 1914 முதல் 1918 வரை கும்பகோணத்தில் தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார். ஒரு சமயம், கலைமேதைகளை வரவழைத்து பாராட்டுவிழா நடத்தினார். அங்கு வந்த அஷ்டாவதானிகள், சதாவதானிகள் ஆகிய பல்கலை நிபுணர்கள் சுவாமிகளிடம் ஆசி பெற எண்ணினர். சதாவதானி என்பவர் நூறு விஷயங்களுக்குரிய கேள்விகளை மனதில் வாங்கிக் கொண்டு பின்னர் அவற்றுக்கு ஒன்றுவிடாமலும், தவறு இல்லாமலும் விடை கூறுபவர். அஷ்டாவதானி என்பவர் ஒரே நேரத்தில் எட்டு விஷயங்களை வாங்கிக் கொண்டு பதில் கூறுபவர். இவர்கள் பலமொழிகளிலும் கவிதை இயற்றும் திறன் படைத்தவர்களாக இருப்பர். சுவாமிகள் தலைமையில் இத்தகைய சிறப்புப்போட்டி ஒன்றுக்கு ஏற்பாடாகி இருந்தது. அப்போட்டியில் கலந்து கொள்ள மூத்த சதாவதானி ஒருவர் வந்திருந்தார். அவர் தன்னுடைய செயல்திறமையினை சுவாமிகளிடம் எடுத்துச் சொன்னதோடு யாரும் தன்னோடு போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்று கர்வத்துடன் கூறிக்கொண்டார். போட்டி துவங்கும் முன், சுவாமிகள் ஒருவரை அழைத்து, சதாவதானியிடம் கேட்கும் போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வைக்கும்படி கூறினார். பதில்களை சதாவதானி கூறும்போதே சுவாமிகளின் பதில்களும் வாசிக்கப்பட்டு வந்தது. இருவர் சொன்ன விடைகளும் ஒன்றாக இருப்பதை கண்டு சதாவதானி ஆச்சரியப்பட்டார். சுவாமிகளின் பாதங்களில் விழுந்து,தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். அதன்பின், சுவாமிகள் அவருக்குப் பொன்னாடை போர்த்தி ஆசி வழங்கினார்.

அக்காலத்தில் சர்க்கஸ் கம்பெனி நடத்திய பேராசியர் ராமமூர்த்தி யோகக்கலையில் நிபுணராக இருந்து வந்தார். இவர் சுவாமிகளைத் தரிசிக்க வந்திருந்தார். இருவரும் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தனர். பேசிவிட்டு வெளியே வந்த பேராசிரியரின் கண்களில் நீர் பெருகியது. பிரம்மச்சர்யத்தின் தெய்வீக சக்தியை சுவாமிகளிடத்தில் உணர்ந்ததாகவும், இதைவிட வேறு பாக்கியம் வாழ்வில் தேவையில்லை என்று மகிழ்ச்சி அடைந்தார். கும்பகோணம் அரசுக்கல்லூரியில் பணியாற்றிய இயற்பியல் பேராசிரியர் ராஜகோபால் ஐயரும், இன்ஜினியர் பி.வி. மாணிக்கநாயக்கரும் சுவாமிகளிடம் பக்தி கொண்டவர்கள். இருவரும் சுவாமி களிடம் வானசாஸ்திரத்தைப் பற்றிப் பேசினர். அவர்களிடம், ஒரு டெலஸ்கோப் மூலமாக, இக்கலையில் நம் நாட்டு வழிமுறைக்கும், வெளிநாட்டவர் வழிமுறைக்கும் உள்ள ஒற்றுமைகளை எடுத்துச் சொல்லி, சுவாமிகள் விளக்கம் அளித்தார். அவரது நுணுக்கமான வானவியல் அறிவு கண்டு இருநிபுணர் களும் பெருமிதமும் ஆச்சரியமும் கொண்டனர்.
 
 
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.

5. மூன்று மூர்த்திகளுக்கும் மேலே அதீதராகப் பரமசிவன் இருக்கிறார். அவர் ப்ரம்மாவுக்கு அனுக்ரஹம் பண்ணுகிறார். காமேச்வரனாக அருள் புரிகிறார். பராசக்தி காமேச்வரியாக அனுக்ரஹிப்பாள். பரமேச்வரனுடைய அனுக்ரஹத்தால் ப்ரம்மா வேதங்களை அறிந்து கொள்கிறார். நான்கு வேதங்களையும் நான்கு முகத்தில் சொல்லிக் கொண்டு சிருஷ்டியைச் செய்து கொண்டிருக்கிறார்.
 
 
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.
4. நம்முடைய மதம் எவ்வளவோ யுகங்களாக நீடித்து வாழ்ந்து வருகிறது. நமக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. எவ்வளவோ வித்யாசங்கள் இருந்தாலும் இந்த மதம் அழியாமல் நிற்கிறது. லோகம் புரண்டு போனாலும் நம்முடைய கடமைகளைச் செய்து கொண்டு பயமின்றி அன்புடன் சாமாண்ய தர்மங்களை நன்றாக ரக்ஷித்து விசேஷதர்மத்தைக் கூடியவரை ரக்ஷிக்க வேண்டும். அதற்குரிய சக்தியைப் பகவான் அளிப்பாராக.
 
 
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.

3. நாமாவும் ரூபமும் இல்லாத மதம் நமது மதம். பேர் ஏன் இல்லை? அடையாளம் ஏன் இல்லை? மற்ற மதங்களுக்கெல்லாம் இருக்கிறதே என்று ஒரு சமயம் யோசித்துப் பார்த்தேன். அப்புறம் எனக்கு நிரம்ப சந்தோஷமாக இருந்தது. பேரில்லாமல் இருப்பது ஒரு கௌரவம் என்பது ஏற்பட்டது.
 
 
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.

2. இந்த ஜென்மத்திற்குப் பின்பும் உபயோகப்படக் கூடிய சில காரியங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம். விபூதி இட்டுக் கொள்ளுதல், ருத்ராக்ஷம் அணிதல், ச்ராத்தம் செய்தல் முதலிய காரியங்கள் நாம் எப்பொழுதும் சௌக்யமாக இருப்பதற்கு உதவுங்காரியங்கள்.
 
 
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.

1. உடம்பினால் நல்ல காரியம் செய்யவேண்டும். கோயிலுக்குப் போய் பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். தண்டம் சமர்ப்பித்தல் என்று சமஸ்காரத்தைச் சொல்லுவார்கள். தடியைப்போல் விழுவது தான் அது. இந்த உடம்பு நமதன்று, அவருடையது என்று நினைத்து அவர் சந்நிதியில் போட்டு விட வேண்டும்.