புதன், 18 டிசம்பர், 2013

கீதையை விட எளிய திருப்பாவை!

பகவத்கீதை சமஸ்கிருத ஸ்லோகங்களைக் கொண்டது. அதன் தமிழாக்கத்தைப் படித்தாலே தலை சுற்றும். பலமுறை படித்தால் தான் கிருஷ்ணர் அதில் என்ன சொல்லியிருக்கிறார் என புரியும். அதில் 700 ஸ்லோகங்கள் உண்டு. திருப்பாவையில் முப்பதே பாடல்கள். எளிய தமிழில் இருக்கிறது. அத்தனையும் இனிய கானங்கள். அதிலும் எம். எல்.வசந்தகுமாரி போன்றவர்கள் பாடிக்கேட்டால் காதுகளுக்கு குலோப்ஜாமூனாக இருக்கும். கீதையின் நடை கடினமானது. பல விஷயங்களைச் சொன்ன கிருஷ்ணன், இதையெல்லாம் கடைபிடித்தால் நீ என்னை அடையலாம், என்று கடைசியில் சொன்னார்.மாம் ஏகம் சரணம் வ்ரஜ ( நான் ஒருவனே சரணடையத்தக்கவன்) என்ற வரி இதை உறுதிப்படுத்தும். ஆனால், திருப்பாவையில் ஆண்டாள் முதல் பாடலிலேயே மார்கழி நோன்பிருந்து அவனைச் சரணடைந்தால் அவன் தன்னையே நமக்கு தருவான் எனச் சொல்லி விட்டாள். நாராயணனே நமக்கே பறை தருவான் என்பது அந்த வரி. எனவே, கிருஷ்ணரின் கீதையைக் காட்டிலும் ஆண்டாளின் திருப்பாவை மிக மிக உயர்ந்ததாகிறது.
ஆண்டாள் பாடிய பாசுரங்கள்!

ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பெருமாளை வேண்டி திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பிரபந்தங்களை இயற்றினாள். இதில் திருப்பாவை 30 பாசுரங்களும், நாச்சியார்திருமொழி 143 பாசுரங்களும் உடையது.

பூமியைக் காட்டிய தாயார்: ஆண்டாளின் இடது கையில் கல்காரபுஷ்பமும், கிளியும் உள்ளன. வலக்கையை தொங்க விட்டு பூமியைக் காட்டியபடி இருக்கிறாள். இதனை, ஆண்டாள் தன்னை வேண்டி வரும் பக்தர்களுக்கு அருள் செய்வது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் கோலம் என்கிறார்கள்.

ஆண்டாளின் பிறபெயர்கள்: ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இவளுக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, ஆண்டாள், பட்டர்பிரான் புதல்வி, திருப்பாவைபாடிய செல்வி, வேயர்குல விளக்கு என்ற பெயர்கள் உண்டு.

வெள்ளிக்குறடு மண்டபம்: ஆண்டாள் சந்நிதி அர்த்தமண்டபத்தில் வெள்ளிக்குறடு மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் மாலை 6 மணிக்கு ஆண்டாள், ரங்கமன்னாருடன் ஊஞ்சலில் எழுந்தருள்வாள். இந்நேரத்தில் ஆண்டாளை தரிசனம் செய்தால், திருமண பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

ராமன் வணங்கிய பெருமாள்: ராவணனுடன் போரிடச் சென்ற ராமன் வானர சேனையுடன் சேதுக்கரையை அடைந்தார். கடலைக் கடந்து இலங்கை செல்ல வேண்டி கடலரசனை நோக்கி நாணல் புல்லின் மீது படுத்தபடி மூன்று நாட்கள் தியானத்தில் ஆழ்ந்தார். அந்த இடமே திருப்புல்லணை என்றானது. தற்போது திருப்புல்லாணி எனப்படுகிறது. ஆதிஜெகந்நாதப்பெருமாள் என்பது இவரது திருநாமம். ராமன் வாழ்ந்த திரேதாயுகத்திற்கும் முந்தியவர். இவருக்கு பெரியபெருமாள் என்ற பெயர் உண்டு. சங்கு சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் திகழ்கிறார். ராவண சம்ஹாரத்திற்கு முன் ஜெகந்நாதரை வழிபட்ட ராமன், வெற்றி பெற்று அயோத்தி திரும்பும் போது மீண்டும் இங்கு வந்தார். இந்தக் கோயிலை மார்கழி மாதம் வழிபட்டால், இரட் டிப்பு பலன் கிடைக்கும் என்பர்.
எல்லாம் சிவனுக்காகவே!

சிவனுடைய கருணையை, பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து என்று மாணிக்கவாசகர் போற்றுகிறார். குழந்தைக்குப் பசிக்குமே என வேளையறிந்து, பாலூட்டி பசி தீர்ப்பவள் அம்மா. சிவனோ அந்த தாயினும் மேலான அன்பு கொண்டவன் என்கிறார். உலகில் பிறந்த உயிர்கள் எல்லாம் உணவைத் தேடி அலைகின்றன. ஆறறிவு படைத்த மனிதன் வயிறு வளர்ப்பதற்காக மட்டும் வாழக்கூடாது. மேலான இறைவனை உணரவே, இந்தப் பிறவி என்பது பற்றி சிந்திக்க வேண்டும். திருவாசகத்திலுள்ள சுட்டறுத்தல் என்னும் பகுதியில், சிந்தித்தால் சிவனைச் சிந்திக்கிறேன். பார்ப்பதாக இருந்தால் சிவனின் திருப்பாத மலர்களைக் காண்கிறேன். அவன் திருவடிகளையே வணங்குகிறேன். அவனைப் பற்றிய மணியான வார்த்தைகளையே பேசுகிறேன், என்கிறார் மாணிக்கவாசகர்.

பொருள் புரிந்து பாடுவோம்: நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! என்னும் மாணிக்கவாசகரின் சிவபுராணத்தைப் பாராயணம் செய்து விட்டு அன்றாடப்பணிகளைத் தொடங்குவது சிவபக்தர்களின் வழக்கம். அதன் இறுதி அடி, சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப்பணிந்து என்று முடியும். சிவபுராணத்தின் பொருளைத் தெரிந்து பாடுபவர்கள், சிவலோகத்தில் ஈசனோடு வாழும் பாக்கியம் பெறுவர் என்பது இதன் பொருள். சிவபுராணம் மட்டுமில்லாமல் இறைவனுக்குரிய எந்த வழிபாட்டுப் பாடலாக இருந்தாலும் அதன் அர்த்தம் புரிந்து பாடுவதே சிறப்பு.
நாகநாதஸ்வாமி கோவிலில் தீர்த்தவாரி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் ராகுதோஷ நிவர்த்தி தலமாக, கிரிகுஜாம்பிகை உடனாய நாகநாதசுவாமிகோவில் விளங்குகிறது. இங்கு நாகநாதசுவாமியின் இடப்பாகத்தில் பிறையணியம்மன் சன்னதி உள்ளது. கார்த்திகைத் திங்கள் முழுநிலவு நாளில் இறைவியின் முகத்தில் நிலவொளி படுவது சிறப்பு. சிறப்பு மிக்க இத்தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் கடந்த, 6ம் தேதி கொடியேற்றத்துடன் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா துவங்கியது. விழா நாட்களில் தினசரி காலை பல்லக்கிலும், மாலை நாக, கிளி, காளை, பூத, சிம்ம,கைலாச, யானை, அன்ன, குதிரை என பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது. கடந்த, 10ம் தேதி மாலை ஓலைச்சப்பரத்தில் சுவாமி வீதியுலாவும், 12ம் தேதி மாலை திருக்கல்யாண வைபவமும், நேற்று முன்தினம் காலை, 7 மணிக்கு தேரோட்டமும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று, 15ம் தேதி காலை, 10 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனங்களில் சிறப்பு புஷ்பலங்காரத்தில் வீதியுலா நடந்தது. மதியம், 2 மணிக்கு சூரியபுஷ்கரணி முன்பு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். பின் சூரியபுஷ்கரணியின் நான்கு புறமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழுமியிருக்க, அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மதியம், 2.20 மணிக்கு சூரியபுஷ்கரணியில் தீர்த்தவாரி நடந்தது. அதே நேரத்தில் சூரியபுஷ்கரணியில் நான்குபுறமும், ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் புனித நீராடி, சுவாமியை தரிசனம் செய்தனர். பின் பஞ்சமூர்த்திகளுக்கு மகா தீபாராதனை நடந்தது.
சித்தர்கள் பற்றிய சிலத் தகவல்கள்!

பிரம்மமுனி: பிரம்மமுனி 18 சித்தர்களில் ஒருவர். இவரது பெற்றோர் மீன் வியாபாரம் செய்துவந்தனர். இவருக்கு பிரம்மனைப் போல படைப்புத்தொழிலை நடத்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதற்காக யாகம் செய்தார். அந்த யாக குண்டத்திலிருந்து தோன்றிய இரண்டு பெண்கள் தங்களை திருமணம் செய்துகொள்ளும்படி முனிவரை வற்புறுத்தினர். முனிவர் கோபத்துடன் அவர்களை சபிக்க முயலும்போது, யாககுண்டத்திலிருந்த அக்னிதேவனும் வருணனும் தாங்கள் அந்த பெண்களை திருமணம் செய்துகொள்வதாக கூறினர். இதற்கு சம்மதிக்காத முனிவர் கோபத்துடன் கமண்டல நீரை அந்தப் பெண்கள் மீது தெளித்தார். அவர்கள் இரண்டு செடிகளாக மாறிவிட்டனர். முனிவரின் நண்பரான கோரக்கர் இதில் ஒரு செடியை எடுத்துக்கொண்டார். பிரம்மமுனி ஒரு செடியை வைத்துக்கொண்டார். போதையைத் தரும் இந்த செடிகள் கற்ப மூலிகைகள் எனப்பட்டன.

சட்டைமுனி: சித்தர்களில் ஒருவரான சட்டைமுனி சித்தர் பல ஊர்களுக்கும் சென்றுவரும்போது, ஸ்ரீரங்கம் கோபுரத்தின் கலசங்கள் கண்ணில் பட்டன. கோயிலை நோக்கி அவர் வேகமாக நடந்துவந்தும், ஜாம பூஜை முடிந்து நடை அடைக்கப்பட்டுவிட்டது. அவர் ஏமாற்றத்துடன் வாசலில் நின்று அரங்கா... அரங்கா... அரங்கா என மூன்று முறை கூறினார். உடனே கோயில் மணிகள் ஒலித்தது. கதவுகள் தானாக திறந்தன. மக்கள் திரண்டு ஓடிவந்தனர். சட்டைமுனி அரங்கன் அருகில் அமர்ந்திருந்தார். ரங்கநாதர் அணிந்திருந்த சங்கு சக்கரங்கள் சட்டைமுனியின் மேல் இருந்தன. அவரை கள்வன் என நினைத்த அர்ச்சகர்கள் ஆபரணங்களை பறித்தனர். சட்டைமுனியை அரசனிடம் கொண்டு நிறுத்தினர். மன்னர் வியப்படைந்து மீண்டும் அவரை கோயிலுக்கு அழைத்து செல்லும்படி கூறினார். அப்போதும் வாசலில் நின்றபடி அரங்கா... அரங்கா என மூன்று முறை கூறினார் சட்டைமுனி. உடனே கோயில் மணிகள் ஒலித்து நடை திறந்தது. ஆபரணங்கள் மீண்டும் சட்டைமுனியின் மீது தானாக வந்து அமர்ந்தன. சட்டைமுனி அங்கேயே தங்கியிருந்து இறைவன் பாதமடைந்தார்.

மச்சமுனி: பிண்ணாக்கீசர் என்பவரின் வளர்ப்புமகன் மச்சமுனி. 18 சித்தர்களில் ஒருவர். கால ஞானம் பற்றி உமாதேவியாருக்கு சதாசிவமான சிவபெருமான் உபதேசித்த காலத்தில், அதன்மீது கவனம் செலுத்தாமல் உமாதேவி உறங்கிவிட்டார். அப்போது ஒரு மீன், இறைவன் சொன்ன கருத்துகளை கேட்டுக்கொண்டிருந்தது. அந்த மீனை முனிவராக சிவபெருமான் பிறக்கச்செய்தார். அதுவே மச்ச முனிவர் ஆயிற்று. இவர் பெருநூல் காவியம் என்ற நூலை எழுதியுள்ளார்.

கலைக்கோட்டு முனிவர்: ரிஷ்யசிருங்கரை கலைக்கோட்டு முனிவர் என்பார்கள். இவரது தலையில் மான்கொம்பு இருக்கும். காட்டில் மட்டுமே வசிப்பார். இவரது காலடிபட்டால் மழைபெய்யும். உரோமபாதன் என்ற அரசன் தன் நாட்டிற்கு அவரை வரவழைத்து மழை பெய்யச் செய்தான். தன் மகளைத் திருமணம் செய்துகொடுத்தான். புத்திர யோகம் இல்லாத தசரதனுக்கு புத்திரகாமேஷ்டி யாகம் செய்துவைத்து, ராமன் முதலான நான்கு மகன்களை பெற உதவினார் கலைக்கோட்டு முனிவர். இவர் எழுதிய தாகக்கலைக்கோட்டார் பிரம்மஞானம் 32 என்ற பகுதி யோகஞான சாஸ்திர திரட்டு என்ற புத்தகத்தில் உள்ளது.

பாம்பாட்டி சித்தர்: பாம்புகளை பிடித்து, படமெடுத்து ஆடச்செய்து வேடிக்கை காட்டும் தொழிலை செய்தவர் பாம்பாட்டி சித்தர். எவ்வளவு பெரிய விஷப்பாம்பையும் பிடித்து விஷத்தை கக்கவைத்து சாதாரண பாம்புபோல ஆக்கிவிடுவார். விஷத்தை முறிக்கும் மூலிகைகள் பற்றி நன்கு அறிந்தவர். மருதமலையில் இவர் விஷ வைத்திய ஆய்வுக்கூடம் நடத்தியதாக சொல்லப்படுவதுண்டு. ஒருமுறை மிகப்பெரிய நவரத்தின பாம்பு ஒன்றை பிடிக்க மலைக்கு சென்றார். அங்கு சட்டை முனிவரை கண்டார். சட்டைமுனி பாம்பாட்டி சித்தருக்கு உபதேசம் செய்தார். உபதேசம் பெற்ற பாம்பாட்டி, சித்தராகிவிட்டார். இவர் கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர். இவர் பாம்பாட்டி சித்தர் பாடல், சித்தராரூடம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
சனிபிரதோஷத்தின் சிறப்பு தெரியுமா?

நித்ய பிரதோஷம், பட்சப் பிரதோஷம், மாச பிரதோஷம், மஹா பிரதோஷம், ப்ரளய பிரதோஷம் என்று ஐந்து வகையாக பிரதோஷத்தைப் பிரித்துள்ளனர். பிரதோஷம் என்றால் அனைத்துக் குற்றங்களும் பாவங்களும் சிவபெருமானால் பொறுத்து மன்னிக்கக்கூடிய காலம் என்று பொருள். ஜாதகத்தில் ஏதாவது குற்றங்கள் இருந்தால் திருமணத் தடை, புத்திரப்பேறின்மை, கடன் போன்ற கஷ்டங்கள் ஏற்படுகின்றன. பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ஜாதக குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினால் எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகிறோம். பிரதோஷ விரதம், இவற்றிலிருந்தும் நம்மைக் காக்க வல்லது. தினமும் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு 24 நிமிடங்கள், பின்பு 24 நிமிடங்கள் ஆக 48 நிமிடங்கள் பிரதோஷகாலமாகும். இது நித்ய ப்ரதோஷம். வளர்பிறைதிரயோதசி திதி மாலைப்பொழுது பட்ச பிரதோஷமாகும். தேய்பிறைத் திரயோதசி திதியின் மாலைப்பொழுது மாச பிரதோஷமாகும். சனிக்கிழமையன்று தேய்பிறைத் திரயோதசி திதி கூடிவருவது தான் மஹா பிரதோஷம் என்று குறிப்பிடப்படுகிறது. இதனை சனி மஹாபிரதோஷம் என்றும் கூறுவர். தேவர்கள் பாற்கடலைக் கடைந்த பொழுது ஏற்பட்ட விஷத்தை சிவபெருமான் தாமே உட்கொண்டு உலகைக் காப்பாற்றிய நாள் இது. மற்றைய பிரதோஷங்களில் உபவாசம் (சாப்பிடாமல் இருப்பது) இருக்க இயலாதவர்கள் சனி பிரதோஷத்தன்றாவது உபவாசம் இருந்து சிவபெருமானை வழிபட்டால் எல்லா குற்றங்களும் பாவங்களும் நீங்கி சகல நன்மைகளும் உண்டாகும்.
பரமஹம்ஸ யோகானந்தர்

சிறு வயதிலேயே முகுந்தனுக்குக் கடவுள் பக்தி அதிகம். கோயிலுக்குச் செல்வதிலும், சந்நியாசிகளை தரிசிப்பதிலும் அவனுக்கு அப்படியொரு ஈடுபாடு! ஒருமுறை, அண்ணனைக் காண ஆக்ராவுக்குச் சென்ற முகுந்தனிடம், நீ இப்படிக் கோயில், குளம், சாமியார் என்று அலைந்தால், அப்பாவின் சொத்தில் ஒரு நயாபைசாகூட உனக்குக் கிடைக்காமல் போய்விடும் என அறிவுறுத்தினார் அண்ணன். ஆனால் முகுந்தனோ, எனக்குத் தேவையானதை கடவுள் தருவார் என்றான் உறுதியாக! இதைக் கேட்டுக் கேலியாகச் சிரித்த அண்ணன், அப்படியா சேதி..? சரி .. இங்கிருந்து மதுரா செல்வதற்கு, உனக்கும் உன் நண்பன் ஜிதேந்திராவுக்கும் ரயில் டிக்கெட் மட்டுமே எடுத்துத் தருவேன்; செலவுக்குக் காசு தரமாட்டேன். நீங்கள் இருவரும் மதுராவில் வயிராகச் சாப்பிட வேண்டும். ஸ்ரீகிருஷ்ணரைத் தரிசித்தபின், பிருந்தாவனம் முழுவதும் சுற்றிப்பார்த்து விட்டு ஆக்ராவுக்கு திரும்பவேண்டும். எவரிடமும் பணம் கேட்கவோ, திருடவோ கூடாது. இதில் நீ ஜெயித்துவிட்டால், நானே உனக்குச் சீடனாகிவிடுகிறேன் என்றார். சவாலை ஏற்றுக்கொண்டு, ஜிதேந்திராவுடன் புறப்பட்டான் முகுந்தன். மதுராவுக்கு முந்தைய ரயில்நிலையத்தில், நடுத்தர வயதுடைய இரண்டு பேர் ஏறி, இவர்களுக்கு எதிரில் அமர்ந்தனர். மதுராவில் இறங்கியவர்கள், முகுந்தனையும் ஜிதேந்திராவையும் குதிரை வண்டியில் அழைத்துச் சென்றனர். அந்த வண்டி, ஓர் ஆஸ்ரமத்தை அடைந்தது. அங்கிருந்த பெண்மணியிடம், கௌரிம்மா, இளவரசியால் வரமுடியவில்லையாம். சேதி வந்தது. ஆனால், சமைத்த விருந்து வீணாகிவிடக் கூடாதே என்பதால், இரண்டு கிருஷ்ண பக்தர்களை அழைத்து வந்துள்ளோம் என்றனர். உடனே முகுந்தனையும் ஜிதேந்திராவையும் உள்ளே அழைத்துச் சென்று, முப்பது வகை பண்டங்களைப் பரிமாறினாள் கௌரிம்மா. கிட்டத்தட்ட ராஜ விருந்துதான்!

பிறகு ஆஸ்ரமத்திலிருந்து கிளம்பியவர்கள், இளைப்பாறுவதற்காக ஒரு மரத்தடியில் நின்றனர். அப்போது அவர்களை நோக்கி ஓடி வந்த ஓர் இளைஞன், முகுந்தனை வணங்கினான். என் பெயர் பிரதாப். என் கனவில் தோன்றிய ஸ்ரீகிருஷ்ணர், உங்கள் இருவருக்கும் பிருந்தாவனத்தைச் சுற்றிக்காட்ட வேண்டும் என்று உத்தரவிட்டார். தயவு செய்து மறுக்காதீர்கள்! எனக் கெஞ்சி, அவர்களின் பதிலுக்குக் காத்திரமால், இருவரையும் கைப்பிடித்து அழைத்துச் சென்று, கிருஷ்ண தரிசனம் செய்து வைத்து, பிருந்தாவனத்தையும் சுற்றிக் காட்டினான். இருட்டத் துவங்கியதும், ஆக்ரா செல்வதற்கான ரயில் டிக்கெட்டுகளையும் அவனே வாங்கித் தந்தான். எல்லாவற்றையும் கண்டு அழுதேவிட்டான் ஜிதேந்திரா, ஆக்ராவுக்கு வந்ததும், அண்ணனிடம் நடந்ததை முகுந்தன் விளக்க... நெக்குருகிப் போன அண்ணன் அனந்தன், தம்பி முகுந்தனுக்குச் சீடரானார். நம்பிக்கை, கடவுளைவிட மேலானது! என உணர்த்திய அந்த முகுந்தனே, அன்பின் அவதாரம் எனப் பின்னாளில் போற்றப்பட்ட பரமஹம்ஸ யோகானந்தர். உத்திரப்பிரதேசத்தின் கோரக்பூரில், 1893 ஜனவரி 5-ஆம் தேதி, வங்காள க்ஷத்ரியக் குடும்பத்தில் பிறந்த அந்தக் குழந்தைக்கு, முகுந்தலால்கோஷ் எனப் பெயரிட்டனர் பெற்றோர். இளம் வயதிலேயே இறை பக்தியுடன் வளர்ந்த முகுந்தன், குருவைத் தேடி கோயில் கோயிலாக, ஆஸ்ரமம் ஆஸ்ரமமாக அலைந்தான். மகா ஞானியும், நூற்றாண்டுகள் கடந்தும் இன்றைக்கும் பூவுலகில் இருந்தபடி அருள்புரிவதாகக் கருதப்படுவருமான மகாவதார் பாபாஜியின் சீடர், ஞானி லஹரி மகாசாயா. இவருடைய அன்புச்சீடரான யுக்தேஷ்வர்கிரியின் அருட் பார்வை, 1910-ஆம் வருடம், முகுந்தனுக்குக் கிடைத்தது. அப்போது முகுந்தனுக்கு 17 வயது. குருவின் பார்வை பட்டதும், தேகம் சிலிர்த்தது முகுந்தனுக்கு. யுக்தேஷ்வர், இறைவனைத் தரிசித்த மகான். நமக்கு நல்வழி காட்டுபவர் இவரே! என உணர்ந்து, அவரைச் சரணடைந்தான். யுக்தேஷ்வரும், வா  குழந்தாய்! உன்னைத்தான் எதிர்பார்த்திருந்தேன். உன்னை என்னிடம் அனுப்புவதாக பாபாவே சொல்லியிருக்கிறார் என்று அவனை அன்புடன் வரவேற்று, ஆசீர்வதித்தார்.

1915-ல், தனது 22-வது வயதில் துறவறம் மேற்கொண்ட முகுந்தன், அன்று முதல் யோகானந்த கிரி என அழைக்கப்பட்டார். இந்த உலகுக்கு அவர் எதற்காக அனுப்பிவைக்கப்பட்டாரோ, அந்தக் கடமையை நிறைவேற்ற ஆங்கிலக் கல்வி அவசியம் என உணர்ந்த குருநாதர், யோகானந்த கிரியை கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் படிக்க அனுப்பி வைத்தார். அவரும் பட்டம் பெற்றார். யோகானந்த கிரியின் பிறப்பின் குறிக்கோள் நிறைவேறும் காலம் நெறுங்கியது. 1920 ஆம் வருடம், அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில், இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்துகொள்ள, கப்பல் பயணம் மேற்கொண்டார் யோகானந்த கிரி. கிரியா யோகம் என்கிற அற்புதமான யோகக் கலைப் பயிற்சி, பாரத மண்ணில் ரிஷிகள், ஞானிகள் ஆகியோரால் பல்லாயிரம் ஆண்டுகளாக அனுசரிக்கப்பட்டும் உபதேசிக்கப்பட்டும் வருகிறது. உடலின் இயக்கத்தையும் உள்ளத்தின் ஓட்டத்தையும் இணைத்து, பயிற்சியாலும் தியானத்தாலும் மனித உயிர்களை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் அந்த சூட்சுமக் கலை, மகாவதார் பாபாவிடமிருந்து, அவருடைய சீடர் பரம்பரை மூலம் யோகானந்த கிரிக்குக் கிடைத்தது. பாஸ்டன் மாநாட்டில் இந்து சமயப் பாரம்பரியம், யோகக் கலை, தியான நிலை ஆகியவை குறித்து அவர் ஆற்றிய உரை, அமெரிக்க மக்களை வியக்க வைத்தது. அந்த மண்ணில் தனது பணியைத் துவக்கியவர், அந்த வருடம் தன்னிலை உணர்வோர் சங்கம் எனும் இயக்கத்தையும் துவக்கினார். அமெரிக்கர்களிடையே இந்த யோகக் கலைப் பயிற்சியை அறிமுகப்படுத்தி, போதித்தார்.

இறையுணர்வு என்பது மூட நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது அல்ல. நேரடியான அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டது. இறைவன் என்ற பேருண்மையை அனுபவித்து அறிதலே ஞானம். பிரபஞ்சம், இறைவனின் நாடக அரங்கம். அவர் நடத்தும் நாடகத்தில், நமக்கு விதிக்கப்பட்ட பாத்திரத்தை ஏற்று நடித்துக்கொண்டிருக்கிறோம். இறப்பு, மறுபிறப்பு என்பவை, ஒரு பாத்திரத்தில் நடித்து முடித்து, மற்றொரு பாத்திரத்தை ஏற்று நடிப்பது போலத்தான். இங்கே, மனிதர்களது துன்பங்களுக்குக் காரணம், அவர்கள் தாங்கள் ஏற்கும் பாத்திரத்துடன் ஒன்றிவிடுவதே! அதை விடுத்து, நாடகத்தின் சூத்ரதாரியான இறைவனிடம் ஒன்றுவதே, நம் பிரச்சனைகள் அனைத்துக்கும் தீர்வு. கிரியா யோகம், தியானம் ஆகியவற்றின் மூலம் இறைவனை அடையலாம் எனும் அவரது போதனைகள், அங்கே மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின. பிறகு யோகானந்த கிரி, குருநாதரை தரிசிக்கும் ஆவலுடனும், சத்சங்கப் பணியை இந்திய மண்ணில் பரப்பும் எண்ணத்துடனும், 1935- ஆம் வருடம் இந்தியாவுக்கு வந்தார். மகாத்மா காந்தி, சர்.சி.வி ராமன் முதலான சான்றோர்களைச் சந்தித்து, தனது கருத்துக்களை வலியுறுத்தினார். குருநாதர் யுக்தேஷ்வரைச் சந்தித்து நமஸ்கரித்தார். தனது சீடரின் வளர்ச்சி கண்டு பெருமிதம் அடைந்த குருநாதர், ஆன்மிகக் கரையைத் தொட்டவர் எனும் பொருள் படும்படி, பரமஹம்ஸர் எனும் பட்டத்தை யோகானந்த கிரிக்கு வழங்கினார். பிறகு, சில நாளில் இறைவனின் திருவடி சேர்ந்தார் குருநாதர்!

பரமஹம்ஸ யோகானந்தர், 1936- ஆம் வருடம் அமெரிக்கா திரும்பி, ஆன்மிகப் பணியைத் தொடர்ந்தார். ஒரு யோகியின் சுயசரிதை தொடர்ந்தார். ஒரு யோகியின் சுயசரிதை எனும் தலைப்பில், ஆங்கிலத்தில் அவர் எழுதிய புத்தகம், உலகின் பெரும்பாலான மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டது. அதிக விற்பனையாகும் புத்தகங்களின் வரிசையில், இன்றைக்கும் முக்கிய இடத்தில் உள்ளது அந்த நூல்! 1952-ஆம் வருடம், மார்ச் 7- ஆம் தேதி, அமெரிக்காவின் இந்தியத் தூதருக்கும் அவருடைய மனைவிக்கும், லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் விருந்து அளிக்கப்பட்டது. அதில் கலந்துகொண்ட பரமஹம்ஸ யோகானந்தர், கங்கை நீர், இமயமலைக் குகைகள் இறைவனைத் தொழுது வாழும் மக்கள் எனக் கொண்ட பாரதப் புனித மண்ணை இந்த உடல் ஸ்பரிசித்ததே பெரும்பேறு! என்று சொல்லியபடியே சரிந்து விழுந்தார்; இறைவனுடன் இரண்டறக் கலந்தார்! அந்த நகரில் உள்ள, இறந்தவர் உடல்களைப் பாதுகாக்கும் பிணவறையின் இயக்குநர் எழுதிய கடிதம் ஒன்று, அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம்ஸ் வார இதழில், 1952- ஆம் வருடம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வெளியானது. அதில், இறந்து 20 நாட்களான பின்பும், பரமஹம்ஸ யோகானந்தரின் உடல், மிக நல்ல நிலையிலேயே இருந்தது. உடலின் எந்தப் பகுதியும் கெடவில்லை; துர்நாற்றமும் வீசவில்லை. உயிரற்ற உடல் ஒன்று, இத்தனை நாட்கள் கடந்தும்கூட, நல்லநிலையில் இருப்பது, இதுவரை நடந்திராத அதிசயம்! என்று குறிப்பிட்டுள்ளார். பிறகு, பல நாட்கள் கழித்து, யோகானந்தரின் திருமேனி, கலிபோர்னியா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. யோகக் கலையின் உன்னதத்தை உலகுக்கு உணர்த்திய மகானான பரமஹம்ஸ யோகானந்தரின் புகழ், உலகம் உள்ளவரை உயிர்ப்புடன் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பத்ராசல ராமதாஸர்

கிருஷ்ணதேவராயர் ஆண்ட விஜயநகரப் பேரரசுக்கு உட்பட்ட, கொல்ல கொண்ட பல்லம் என்னும் ஊரில் லிங்கண்ணா, காமாம்பாள் தம்பதியர் வசித்தனர். இவர்களுக்கு தெய்வீகக்குழந்தையாக 1630ல் கோபன்னா பிறந்தார். இவரது இயற்பெயர் கஞ்செர்ல கோபராஜு. இளமையிலேயே ராமாயணக் கதையை விருப்பத்தோடு கேட்பார். இதன் காரணமாக, அவரது பிஞ்சுமனத்தில் ராமபக்தி ஆழமாக வேர் கொண்டது. மகான் கபீர்தாசரிடம் ராமநாம உபதேசம் பெற்று ஜபம் செய்யத் தொடங்கினார். இரவும் பகலும் அவருடைய நாவில் ராமநாமம் ஒலித்தது. தாய்மொழியாம் தெலுங்கிலும், சமஸ்கிருதத்திலும் தேர்ந்த புலமை பெற்றிருந்த கோபன்னா, இறைநாமத்தை சொல்லும் அற்புதக் கவிதைகளை இயற்றினான். இல்லறமே நல்லறம் எனப் பெற்றோர் உபதேசிக்க, கமலம்மா என்ற பெண்ணை மணந்து ஒரு குழந்தைக்குத் தந்தையானார். தம்பதியர் ஒருவருக்கொருவர் பக்தியில் சளைத்தவர்கள் இல்லை என்பதை உணர்த்தும்வகையில் ஒரு நிகழ்ச்சி அவர்கள் வீட்டில் நடந்தது.

மகான் கபீர்தாசர் கோபன்னாவின் கனவில் தோன்றி, ராமநாம உபதேசத்தை அருளினார். அன்று கோபன்னாவின் வாழ்க்கை திசை திரும்பியது. எந்நேரமும் ராமநாமத்தை உச்சரித்து ராமபக்தியில் மூழ்கிப்போனார். ஒருமுறை ஸ்ரீராமநவமியன்று, வீட்டில் விசேஷ பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாகவதகோஷ்டியினர் பஜனை செய்து கொண்டிருந்தனர். அடியார்களின் அன்னதானத்திற்காக சமையல்வேலை மும்முரமாக ஒருபுறம் நடந்து கொண்டிருந்தது. பஜனையில் ஈடுபட்டிருந்ததால் கமலம்மா குழந்தையை கவனிக்காமல் விட்டுவிட்டாள். மகன் தவழ்ந்தபடியே அடுப்படிக்குள் நுழைந்து சாதம் வடித்த சுடுகஞ்சியில் விழுந்துவிட்டான். சமையல் ஆட்கள் பதறிப்போய் கமலம்மாவிடம் தெரிவித்தனர். பேச்சு மூச்சில்லாமல் கிடந்த பிள்ளையைக் கண்ட தாய் மனம் துடித்தாள். ஆனால், யாரிடமும் காட்டிக் கொள்ளாமல் மங்கள ஆரத்தியில் கலந்து கொண்டு கண்ணீர் பெருக்கி நின்றாள். பஜனை முடித்த பாகவதர்கள் விருந்துண்ட பின் வீட்டுக்கு புறப்பட்டனர்.  கோபன்னாவிடம் கமலம்மா நடந்த விஷயத்தைத் தெரிவித்தாள். தம்பதியர் ராமபிரானிடம் முறையிட்டு அழுதனர். அப்போது அங்கே ஒரு அதிசயம் நிகழ்ந்தது. கீரைத்தண்டு போல துவண்டு கிடந்த பிள்ளையின் கண்கள் அசைந்தன. அம்மா என்று மெல்ல அழைத்தான். இருவரும் மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்தனர். அன்று முதல் கோபன்னாவின் மனம் ராமபக்தியில் முழுமையாக ஈடுபட்டு விட்டது. ராமன் மட்டுமே இனி நமக்கு கதி என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

கோபன்னாவின் தாய்மாமன்கள் அக்கன்னாவும், மாதன்னாவும் ஐதராபாத் அரசர் தானீஷாவிடம் பணியாற்றி வந்தனர். தங்களின் மருமகன் கோபன்னாவிற்கும் சமஸ்தானத்தில் பணியாற்ற ஏற்பாடு செய்தனர். பத்ராசலம் நகரத்தில் வரிவசூலிக்க கோபன்னா நியமிக்கப்பட்டார். அன்பு, நேர்மை, நல்லொழுக்கம் ஆகியவற்றால் மக்களைக் கவர்ந்தவர், நியாயமான முறையில் வரி வசூலித்து அரசு கஜானாவுக்கு வழங்கினார். பத்ராசலத்தில் ராமர் கோயில் இருப்பதை அறிந்த கோபன்னா மகிழ்ச்சி அடைந்தார். காகேதய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலில் புதர் மண்டிக் கிடந்தது. வழிபாடு இல்லாமல் மோசமாக கிடந்த ராமசன்னதியைக் கண்டு வருந்தினார் கோபன்னா. அரசாங்கத்துக்காக வசூலித்த வரிப்பணத்தில் கோயில் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்தார். கட்டுமானப்பணியைத் தொடங்கினார். வரிப்பணம் முழுவதையும் ராமர் கோயில் திருப்பணிக்கு செலவிட்டார். ஆறுலட்சம் வராகன் செலவில் கோயிலைக் கட்டியதோடு, பலவிதமான தங்க ஆபரணங்களையும் செய்து கொடுத்தார். கோபன்னாவின் ராமபக்தியைக் கண்ட மக்கள் அவரை ராமதாசர் என்று அழைக்கத் தொடங்கினர். மக்கள் பாராட்டினாலும், வரிப்பணத்தை செலவிட்டால் அரசாங்கம் விடுமா? மன்னர் தானீஷா ராமதாசரை கோல்கொண்டா சிறையில் அடைக்க உத்தரவிட்டார். தாய்மாமனார்களால் ராமதாசருக்கு ஒரு உதவியும் செய்ய முடியவில்லை. தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் சிறையில் பல கொடுமைகளுக்கு ஆளானார்.  அப்போது அவர் பாடிய பாடல்கள் மிகவும் உருக்கமானவை. இனிமேல் இந்த கோரமான அடிகளை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. உன்னைக் கும்பிட்ட கைகளை தடி கொண்டு அடிக்கிறார்களே! என்று இவர் பாடிய பாடல்வரிகள் கல்லையும் கரையச் செய்யும் தன்மை கொண்டதாகும். இஷவாகுகுல திலகா என்று தொடங்கும் பாடலில் ராமனுக்காக கோயில் கட்டிய செலவுக் கணக்கைக் கூறி வேதனைப்படுகிறார். ராமா! உனக்கு கிரீடம், ஆபரணம் செய்து அழகு பார்த்தேனே! எனக்கு அளித்ததோ கை விலங்கு அல்லவா! அரசு பணத்தை உனக்காக செலவழித்தேன். அதை நீயே மன்னருக்கு அளித்துவிடு! என்று உள்ளம் உருகி வேண்டுகிறார்.

ஒருநாள் நள்ளிரவில், பாதுஷா தானீஷா பள்ளியறையில் இருந்தபோது ராமலட்சுமணர் இருவரும் ராமதாசரின் சேவகர் போல அவர் முன் வந்தனர். ராமதாசர் செலுத்தவேண்டிய ஆறுலட்சம் வராகன் பணத்தையும் திருப்பி அளித்து மன்னர் கையெழுத்திட்ட ரசீதையும் பெற்று, ராமதாசரின் அருகில் வைத்து விட்டு மறைந்தனர். ராமதாசரோ இப்படி ஒரு அதிசயத்தை நிகழ்த்தியது யாரென்று தெரியாமல் தவித்தார். பின், ராமரும், லட்சுமணரும் ராமதாசரின் சேவகர் போல வந்து பணத்தைத் திருப்பி செலுத்தியதை அறிந்தார். பாதுஷா தானீஷா ராமதாசரை சிறையில் இருந்து விடுவித்ததோடு அவரிடம் மன்னிப்பும் கேட்டார். பத்ராசலம் ராமர் கோயிலுக்கு பல நன்கொடைகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்குப்பின் என் ராமனைக் கண்ட தானீஷாவே என்னும் பொருள்பட பாடிய தன்யுடை தானீஷா நீவு நன்னு கன்னய்யா பதமுலு என்ற அவர் பாடிய பாடல் புகழ்பெற்றது. பத்ராசலம் கோயிலில் தன் இறுதிக் காலத்தைக் கழித்து வந்தார். 1688ம் வருடம் ஸ்ரீராமனின் திருவடியில் கலந்தார். ராமபக்தியில் சிறந்து விளங்கிய தியாகராஜருக்கு முன்னோடியாக வாழ்ந்தவர் ராமதாசர். ராமசந்திர மூர்த்தியின் பரமபக்தனாக விளங்கும் ராமதாஸரைப் போற்றி வணங்குகிறேன் என தியாகராஜர், தனது கீர்த்தனையில் புகழ்ந்து பாடியுள்ளார். ராமபக்திக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த ராமதாஸரின் ராமபக்திக்கு ஈடு இணையேது. அவர் பத்ரகிரிமலையில் ஏறியபோது விஷ்ணு தூதர்கள் வந்து வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றதாக பத்ராசலம் கோயில் தலவரலாறு கூறுகிறது.
புரந்தரதாஸர்

பண்டரிபுரம் அருகிலுள்ள வேமன்னபுரியில் வசித்த பாரம்பரியம் மிக்க குடும்பத்தில், கி.பி.1484ஆம் ஆண்டு மாதவராவ்- ரத்தினாபாய் தம்பதியருக்கு ஆண்குழந்தை பிறந்தது. பிள்ளைக்கு ரகுநாதன் என பெயர் சூட்டினர். வட்டிக்கடை நடத்தி வந்த மாதவராவ், நேர்மையானவராகவும், மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றும் இருந்தார். ரகுநாதன் இளம்வயதிலேயே தந்தையின் தொழிலைக் கற்றுக் கொண்டு வியாபாரம் நடத்தினார். லட்சுமிபாய் என்ற பெண்ணை திருமணம் செய்தார். அவரது மனதில் செல்வந்தனாக வாழவேண்டும் என்ற பேராசை அதிகரித்தது. ஊர்மக்கள் ரகுநாதனை வெறுத்து ஒதுக்கினர். ஆனாலும், பணம் தேடி பைத்தியமாக அலைந்தார். தப்பி தவறி யாராவது யாசித்து வருவதைக் கண்டாலும், அவருக்குப் பிடிக்காது. யாராவது உதவி கேட்டு வந்தால் ஓட ஓட விரட்டுவார். ஒருமுறை, ஒரு முதியவர் ரகுநாதனின் வீட்டிற்கு வந்தார். அவரைப் பார்த்ததும், அவரை எப்படியாவது ஒதுக்கி விட வேண்டும் என்று எரிச்சலும், ஏளனமும் கொண்டு ரகுநாதன் பார்த்தார். முதியவரோ ஒரு எலுமிச்சம்
பழத்தைக் கொடுத்து, சுவாமி! நீங்கள் மகாபிரபு! என் பிள்ளையின் திருமணத்திற்கு ஆயிரம் வராகன் பணம் தேவைப்படுகிறது. தானமாகக் கொடுத்தால் மனம் மகிழ்வேன்! என்று வேண்டிக் கொண்டார்.

இதென்ன தர்ம சத்திரமா! வேறு இடம் பாருங்கள்! என்று கடுமையாக கத்தி, அவரை வெளியேற்றினார். ரகுநாதனின் மனைவி லட்சுமிபாயோ சிறந்த குணவதி. முதியவர், அவளிடம் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். ரகுநாதனுக்கு தெரியமால், தன் வேண்டுகோளைச் சொல்லி யாசகம் கேட்டார். அவள் தன் வைரமூக்குத்தியைக் கொடுத்து, இதை விற்றால் ஆயிரம் வராகன் கிடைக்கும், என்று சொல்லி வழியனுப்பி வைத்தாள். முதியவர் அதை விற்க ரகுநாதனின் கடைக்கே வந்தார். மூக்குத்தியை விலைக்கு எடுத்துக் கொள்ளும்படி வேண்டினார். ரகுநாதனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இருந்தாலும், அவரிடம் காட்டிக் கொள்ளாமல், ஐயா! வீட்டுக்குச் சென்று பணம் எடுத்துவரும் வரை காத்திருங்கள், என்று சொல்லிவிட்டு அவசரமாக மனைவியைக் காண ஓடினார். படுவேகமாக வீட்டுக்குள் நுழைந்த ரகுநாதனைக் கண்ட லட்சுமிபாய் மனம் பதறியது. லட்சுமீ! நான் வாங்கித் தந்த வைரமூக்குத்தியை எடுத்து வா! என்று கட்டளையிட்டார்.  பகவானே! பாண்டுரங்கா! பண்டரிநாதா! என்னைக் காப்பாற்று! என்று பூஜையறையில் வேண்டிக் கொண்டு மூக்குத்தியைத் தேடுவது போல பெட்டியைத் திறந்து பார்த்துக் கொண்டிருந்தாள். என்ன ஆச்சர்யம்! பெட்டியில் அவளது வைரமூக்குத்தி மின்னிக் கொண்டிருந்தது. அதை எடுத்து வந்து கொடுத்தாள். அதேநேரம், உண்மையை மறைக்காமல், முதியவர் தன்னிடம் உதவிகேட்டு வந்ததையும், அவரிடம் மூக்குத்தியை ஒப்படைத்ததையும் விபரமாக சொன்னாள்.

ரகுநாதன் திகைப்புடன் கடைக்கு ஓடினார். லட்சுமிபாயும் பின் தொடர்ந்தாள். ஆனால், அங்கு முதியவரைக் காணவில்லை. லட்சுமி! நான் பாவியாகி விட்டேனே! வந்தவர் சாக்ஷõத் பண்டரிநாதரே தான்! என்று சொல்லி கண்ணீர் பெருக்கி நின்றார். கடையில் அவர் அமர்ந்திருந்த இடத்தில் சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கினார். தான் சேர்த்து வைத்திருக்கும் செல்வம் அனைத்தும் பண்டரிநாதனுக்கே உரியது என்று கூறி, அவரது
பக்தர்களுக்கு தானம் செய்தார். இசை நுணுக்கங்களை அறிந்திருந்த ரகுநாதன் பண்டரிநாதனை பாடி வணங்கினார். செய்த தர்மத்தால் செல்வம் முழுவதையும் இழந்து ஏழையானார். ஒரு காலத்தில், அளவுக்கு அதிகமான கஞ்சத்தனம்... இப்போதோ மிதமிஞ்சிய பக்திநாட்டம்.. என்று மனம் மாறிப்போன தன் கணவரைக் கண்டு லட்சுமிபாயும் அதிசயித்தாள். தனக்கு, திருமண வயதில் ருக்மணி என்னும் மகள் இருந்ததையே ரகுநாதன் மறந்துவிட்டார். பின், அதுபற்றிய நினைவு வந்து, கிஷ்கிந்தாபுரியில் வசித்த கேசவராவ் என்பவரின் மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். இதன்பின், பகவத்பக்தியில் முழுவதுமாக ஆழ்ந்துவிட்டார். மக்கள் அவரை ரகுநாத தாசர் அழைக்கத் தொடங்கினர்.  ஒருசமயம் ரகுநாததாசர், மனைவியுடன் திருப்பதி சென்றார். அங்கே தெய்வபக்தியில் சிறந்த புரந்தரி என்ற தாசிப்பெண்ணைக் கண்டார். திருப்பதிக்கு வந்த தம்பதியர், அவளது வீட்டிலேயே தங்கினர். தாசியாக இருந்தாலும், புனிதமான வாழ்க்கையை புரந்தரி நடத்தி வந்தாள்.

ஒருநாள், இரவில் புரந்தரி தன்னை அலங்கரித்துக் கொண்டு கையில் வீணையும், காலில் சதங்கையும் கட்டிக் கொண்டு கிளம்பினாள். ரகுநாத தாசரும் அவளைப் பின்தொடர்ந்து சென்றார். புரந்தரி அவரிடம்,  சுவாமி! நான் கோயிலுக்குச் செல்கிறேன். பெருமாள் முன் நடனமாடுவேன். அப்போது என் நடனத்திற்கேற்ப பெருமாள் வீணை வாசிப்பார். பின் அவர் நடனமாட, நான் வீணை வாசிப்பேன். நான் சொல்வது அனைத்தும் உண்மை. நீங்கள் பக்தியில் சிறந்தவர் என்பதால் உங்களிடம் இந்த உண்மையைச் சொல்கிறேன், என்றாள் புரந்தரி. இதைக்கேட்டு அதிசயித்த ரகுநாததாசர், திருப்பதி வேங்கடவன் தரிசனத்தை தானும் பெறவேண்டும் என்று சொல்லி உடன் வந்தார். ஒரு தூணின் மறைவில் நின்று கொண்டார். புரந்தரி சொன்னபடியே அவள் நடனமாட, பெருமாளே வீணை மீட்டி பாட்டுப் பாடினார். ரகுநாததாசர் மறைவில் இருப்பதை பெருமாள் அறியமாட்டாரா என்ன! வேண்டுமென்றே பாட்டின் நடுவே அபஸ்வரம் வரும்படி பாடத் தொடங்கினார். இதைக் காதில் கேட்ட மாத்திரத்தில் ரகுநாததாசர் அவரிடம், ஐயோ! புரந்தரி! இதென்ன பெருமாள் அபஸ்வரமாகப் பாடுகிறார்! என்று கத்தினார். பெருமாள் உள்ளம் மகிழ்ந்து புரந்தரதாசரே, வெளியே வாரும் என்று அழைத்தார். அதன்பின் அவரது பெயர் புரந்தரதாசர் ஆயிற்று.

அவரிடமிருந்து தேனெனப் பிரவாகித்தன பாடல்கள். தென்னகம் முழுதும் யாத்திரைகள் மேற்கொண்டு, கன்னடம் மற்றும் சமஸ்கிருத மொழியில், ஸ்ரீபாண்டுரங்கனையும் திருவேங்கடவனையும், ஆயிரக்கணக்கான பாடல்களால் பாடித் தொழுதார். அனைவரும் இறையருளைப் பெறுவதற்கான நெறிமுறைகளை தனது பாடல்கள் மூலம் வலியுறுத்தினார். ஏழு ஸ்வரங்களையும் கொண்டு, மாயா மாளவ கௌள ராகத்தில் அவர் பாடியதைக் கேட்டுப் பரவசமானார்கள் மக்கள். கர்நாடக சங்கீதத்தில் பத்ததி எனப்படும் புதிய வழிமுறையை வரையறுத்துத் தந்ததே புரந்தரதாஸர்தான். கீர்த்தனைகள், சூளாதிகள், லக்ஷண, லக்ஷிய கீதங்கள் ஆகியவற்றை இயற்றி, சங்கீதத்துக்குப் பெரும் தொண்டாற்றிய புரகர்நாடகாவிலுள்ள தொட்டமளூர் கிருஷ்ணன் கோயிலுக்கு இவர் விஜயம் செய்துள்ளார். அத்தலத்துக்கு சென்று இவரது கீர்த்தனையைப் பாடுவோர் குழந்தை வரம் பெறுவர். சங்கீதத்தையும் ஹரி பக்தியையும் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த புரந்தரதாஸர், 1564ஆம் வருடம், ஹம்பியில் பாண்டுரங்கனின் திருவடியில் கலந்தார். எம்.எஸ்.சுப்பு லட்சுமியின் குரலில் ஒலிக்கும், ஜகதோத் தாரண... எனும் ஸ்ரீகிருஷ்ணரின் லீலைகளை விவரிக்கும் கீர்த்தனை, எம்.எல். வசந்தகுமாரியின் குரலில் ஒலிக்கும் வேங்கடவனைப் பற்றிய வேங்கடாசல நிலையம்... எனும் கீர்த்தனை ஆகியவற்றின் மூலம் புரந்தரதாஸர் நம்மிடையே இன்றும் வாழ்ந்து வருகிறார். எத்தனையோ திருவிளையாடல்களை இறைவனோடு அனுபவித்த இசைவித்தகர் புரந்தரதாசர், அருளாளராக இன்றும் போற்றப்படுகிறார்.
ஞானேஸ்வரர்

கோதாவரி நதிக்கரையில் ஆபேகாம் எனும் சிற்றூரில் வாழ்ந்த அந்தண குலத்தவரான கோவிந்த பண்டிதர்-நிருபமாதேவி தம்பதிக்கு 13-ம் நூற்றாண்டில் மகனாகப் பிறந்தான், விடோபா. சிறு வயதிலேயே ஆன்மிகத்தில் லயித்த விடோபா, புனிதத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டான். அப்படி, ஆலந்தி நகருக்கு வந்தபோது, அவரின் முகத்தில் படர்ந்த தேஜஸ் மற்றும் அவரது இறை சிந்தனை ஆகியவற்றால் அதிசயித்த சித்தோபந்த் எனும் அந்தணர், தன் மகள் ருக்மிணியை அவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். நாட்கள் நகர்ந்தன. ஒருநாள், மனைவியின் சம்மதத்துடன் காசிக்குச் சென்றார் விடோபா. அங்கே, சுவாமி ராமானந்தரைச் சந்தித்தவருக்குத் துறவறம் மேற்கொள்ளும் எண்ணம் எழுந்தது. தான் திருமணமானவன் என்பதை மறைத்து, ராமானந்தரிடம் தீட்சை பெற்று துறவறம் பூண்டார். பிறகு காசியிலேயே துறவு வாழ்க்கையைத் தொடர்ந்தார். அவரின் மனைவி ருக்மிணி கணவரைக் காணோமே எனப் பரிதவிப்புடன் காத்திருந்தாள். இந்த நிலையில், சுவாமி ராமானந்தர் யாத்திரை புறப்பட்டார். வழியில் ஆலந்தியை அடைந்தார். அவரைச் சந்தித்து தனது குறையைச் சொன்னாள் ருக்மிணி. அதைக் கேட்ட சுவாமி, விடோபா தான் இவளின் கணவன் என அறிந்து வேதனைப்பட்டார். பிறகு காசிக்குத் திரும்பியவர், விடோபாவைக் கடிந்து கொண்டதுடன் மனைவியுடன் சேர்ந்து வாழ்வாயாக! என்றார். அவரின் கட்டளைப்படி, ஆலந்திக்கு திரும்பிய விடோபாவை அன்புடன் வரவேற்றாள் ருக்மிணி. காலங்கள் ஓடின. அந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். அவர்களின் இரண்டாவது மகனாக அவதரித்தவரே ஞானேஸ்வரர் (கி.பி. 1275ம் வருடம்).

அவரை விஷ்ணுவின் அம்சம் எனப் போற்றுவர். வேதங்களையும் உபநிடதங்களையும் இளமையிலேயே கற்றுத் தேர்ந்த ஞானேஸ்வர், அவற்றை மிக எளிமையாகப் போதித்து வந்தார். தான் செய்த தவற்றால், சமூகத்தால் தள்ளி வைக்கப்பட்டு, தான் அடைந்த துன்பத்தை குழந்தைகள் அனுபவிக்கக் கூடாது எனக் கருதிய விடோபா, தவற்றுக்குப் பிராயச் சித்தமாக, மனைவியை அழைத்துக்கொண்டு கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடத்தில் மூழ்கி, உயிர்த் தியாகம் செய்தார். ஆதரவற்ற நிலையில் தவித்த குழந்தைகளைக் கண்டு, ஆலந்தி அந்தணர்கள் மனமிரங்கினர். குல வழக்கப்படி அவர்களுக்கு உபநயனம் செய்யவும் முடிவு செய்தனர். இருப்பினும், பைதன் நகர பண்டிதர்களின் அனுமதியைப் பெற்று வரும்படி, அவர்களை அனுப்பி வைத்தனர்.வேத சாஸ்திரங்களில் கரைகண்டவர்கள் அந்த அந்தணர்கள். அவர்களின் முன், இளம் சகோதரர்கள் மூவர் பணிவுடன் நின்றனர். அந்தணர்களின் புனிதக் கடமை, உபநயனம் செய்து கொள்வது ! எங்களது ஆலந்தி கிராமத்து அந்தணர்கள், எங்களுக்கு உபநயனம் செய்துவைக்கத் தயாராக உள்ளனர். ஆனாலும், உங்களின் அனுமதிக்காக எங்களை இங்கு அனுப்பியுள்ளனர். எங்களுக்கு அனுமதி வழங்கி உதவுங்கள் ! என்றனர். அதைக் கேட்டதும் அந்தப் பண்டிதர்கள், உபநயனம் செய்துகொள்ள, உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? எனப் பரிகசித்தனர். அதில் ஆவேசமான மூவரும், மடமடவென வேதத்தை ஓதத் துவங்கினர். உடனே பண்டிதர்கள், முறையற்று வாழ்ந்த அந்தணன் பெற்றெடுத்த மக்கள் நீங்கள். எனவே, உங்களுக்கு வேதம் ஓதுகிற உரிமையில்லை. அது, எங்களைப் போன்ற உயர் மக்களுக்கே உரித்தானது! என்று கர்வத்துடன் சொன்னார்கள். இதைக் கேட்டு, மூன்று சகோதரர்களில் ஒரு சிறுவன், கொதித்து எழுந்தான்; அவனுக்கு வயது எட்டு.

அருகில் தண்ணீர்ப் பானைகளைச் சுமந்தபடி வந்த எருமைக் கிடாவைச் சுட்டிக் காட்டி, வேதம் ஓதும் தகுதி உங்களுக்கு மட்டுமே உரியதல்ல! இதோ... இந்த எருமைக்கும் தகுதி உண்டு என்று சொல்லிவிட்டு, அந்த எருமையின் முதுகில் கைவைக்க... அப்போது நிகழ்ந்தது அந்த அதிசயம் ! மூவரும் வேதம் ஓதி நிறுத்தினார்கள், அல்லவா... அந்த இடத்தில் இருந்து வரி பிசகாமல், வேதம் ஓதத் துவங்கியது, எருமை. இறுதியில், பிறப்பால் தாழ்ந்த குலத்தவனாக இருப்பினும், கர்மானுஷ்டானங்களான செயல்களாலும் நடத்தையாலும் ஒருவன் உயர்ந்த குலத்தவனாகிறான் எனப் பொருள்படும்படி, நான்கு கவிதைகளை அழகாகச் சொல்லிற்று. எருமை வேதம் ஓதியதைக் கேட்டு, வாயடைத்துப் போனது பண்டிதர் கூட்டம். அனைவரும் ஓடோடி வந்து, சிறுவனை நமஸ்கரித்தனர். தனது மூத்த சகோதரரான நிவ்ருத்திநாத்தையே குருவாக ஏற்று, குண்டலினி யோகம் முதலானவற்றைக் கற்றுத் தேர்ந்தார். குருநாதர் அறிவுரைப்படி, தனது 15-வது வயதில், மராட்டிய மொழியில், பாமரர்க்கும் புரியும் வகையில், 18 அத்தியாயங்களில் அற்புதமான விளக்கவுரை எழுதினார், ஞானேஸ்வர். பாவார்த்த தீபிகா தீகா எனும் பெயரில் அறியப்பட்ட அந்த உரை, பிறகு அவரது திருநாமத்துடன் ஞானேஸ்வரி எனப் போற்றப்படுகிறது. அத்வைத சித்தாந்தத்தை விளக்கும் அம்ருதானுபவ எனும் நூல், அவரின் மற்றொரு படைப்பு. அவர் நிகழ்த்திய அற்புதங்களும் ஏராளம் ! இறை நம்பிக்கையற்ற ஒருவனைத் திருத்துவதற்காகத் தனது முதுகையே அடுப்பாக்கி, கொதிக்கச் செய்து, தனது சகோதரி முக்தாபாயை, தன் முதுகின் மீது ரொட்டி சுடச் செய்திருக்கிறார், ஞானேஸ்வர். தனது யோக சக்தியின் மீது கர்வம் கொண்டு, புலியின் மீது அமர்ந்து, பாம்பைக் கையில் பிடித்தபடி வாதம் செய்ய வந்த சித்த புருஷர் சாங்கதேவரை, தாம் அமர்ந்திருந்த குட்டிச் சுவரை அப்படியே நகர்த்தி தடுத்து நிறுத்தி, அவருக்கு உபதேசித்து ஆட்கொண்டருளினார் ஞானேஸ்வர். சகோதர - சகோதரிகள் மற்றும் நாமதேவருடன் இணைந்து பண்டரிபுரம், துவாரகை, அயோத்தி, மதுரா, காசி, மதுரை, ராமேஸ்வரம் முதலான தலங்களுக்குச் சென்று உபதேசங்கள் செய்து, பக்தர்களை நெறிப்படுத்தியுள்ளார். பிறகு, 1296-ஆம் வருடம், தனது 22 - வது வயதில், பிறவியெடுத்ததன் நோக்கம் நிறைவேறியதாக உணர்ந்த ஞானேஸ்வர், கார்த்திகை மாதம், ஆலந்தி நகரில், தியான நிலையில் இருந்தபடி மகாசமாதியானார். தனது ஞானம் மற்றும் உபதேசத்தால் மக்களுக்கு இறையுணர்வூட்டி, மராட்டிய மண்ணில் பக்தி சம்பிரதாயத்துக்கு வித்திட்ட ஞானேஸ்வர் இன்றளவும் போற்றி வணங்கப்படுகிறார்.
  • நரசிம்ம மேத்தா

    1414- ஆம் வருடம், குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில், தலாஜா எனும் ஊரில் வசித்த பலராம் மேத்தாவுக்கு, ஆண் குழந்தை பிறந்தது. ஸ்ரீநரசிம்ம ஸ்வாமியின் பக்தரான பலராம் மேத்தா, தன் மகனுக்கு நரசிம்ம மேத்தா எனப் பெயரிட்டு மகிழ்ந்தார். நரசிம்ம மேத்தா, சிறுவயதில் எவருக்கும் அடங்காத பிள்ளையாக வளர்ந்தார். பள்ளிக்குச் செல்லாமல் ஊர் சுற்றுவது, மரம் ஏறுவது, குளத்தில் நீந்தி விளையாடுவது எனப்பொழுதைக் கழித்தார். சிறு வயதில், பெற்றோரின் மரணம்தான் இவரை வேறொரு திசைக்கு இட்டுச் சென்றது. தனிமரமாகிப் போன நரஸி, ஜூனாகாத் எனும் ஊரில் வசித்து வந்த சித்தப்பா யமுனாதாஸ் வீட்டில் அடைக்கலமானார். அங்கே சித்தப்பாவின் மகனும் மருமகளும் இருந்தனர். படிப்பில் நாட்டமின்றித் திரிந்த நரஸியை, அவரின் மதனி ஏசினாள். இந்த அவமானத்தால், வீட்டை விட்டு வெளியேறிய நரஸி, அருகில் இருந்த காட்டுக்குள் ஓடி, அங்கேயே தங்கினார். பிறகு, கோபமும் வேகமும் தணிந்து, தன்னைத்தானே நொந்து, கண்ணீர் விட்டு அழுதார். அருகில், பாழடைந்த நிலையில் சிவாலயம் ஒன்று இருந்தது. அங்கே சென்றவர், சிவலிங்கத்தின் முன்னே அமர்ந்து கொண்டார். உணவு, தாகம், தூக்கம் ஆகியவற்றை மறந்து, நாட்கணக்கில் தியானத்தில் ஆழ்ந்தார். ஒருநாள், நரஸிக்கு திருக்காட்சி தந்தார் சிவனார். சிலிர்த்துப் போனார் நரஸி. அங்கே, சிவ சன்னதியில் அவருக்கு ஞானம் கிட்டியது. பிறகு சிவனருளால், ஸ்ரீகிருஷ்ணரின் லீலைகளை தனது அகக்கண்ணால் தரிசிக்கும் பேறு பெற்றார். ராதை மற்றும் கோபிகையருடன் ஸ்ரீகண்ணன் புரிந்த ராஸக்கிரீடைகளைக் கண்ட நரஸி, கிருஷ்ண பக்தரானார். கண்களில் ஆனந்தக் கண்ணீரும், நாவினில் தேனினும் இனிய கவிதைகளும் பெருக்கெடுத்தன. இந்த நிலையில், நரஸியைக் காணாமல் சித்தப்பாவும் மற்றவர்களும் தேடினர். இறுதியில், சிவாலயத்தில் அவரைக் கண்டனர். அங்கே, பள்ளிக் கல்வியைக் கற்காத நரஸி, கண்ணன் மீது அர்த்தங்கள் பொதிந்த பாடல்களைப் பாடியது கண்டு வியந்தனர். அதன் பின், அனைவரின் வற்புறுத்தலுக்கு இணங்க, வீடு திரும்பினார் நரஸி. பெரியவர்களின் அறிவுரைப்படி, மானெக்பாய் என்பவளை மணந்து இல்லறத்தில் ஈடுபட்ட நரஸிக்கு, மகளும் மகனும் பிறந்தனர். ஸ்ரீகிருஷ்ணரின் புகழைப் பாடிய நரஸி மேத்தாவின் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களை, குஜராத் மக்கள் இன்றைக்கும் கதைகதையாகச் சொல்லிப் பூரிக்கின்றனர்.

    அவற்றில் ஒரு சம்பவம்... நரஸி மேத்தாவின் மகள் வளர்ந்து, உரிய பருவத்துக்கு வந்தாள். அவளுக்குத் திருமணத் தேதியும் குறித்தாகிவிட்டது. ஆனால், நரஸி மேத்தாவிடம் சல்லிக்காசு கூட இல்லை. இருப்பினும், இறை சன்னதியிலேயே காலத்தைக் கழித்து வந்தார் அவர். அப்போது, ஜூனாகாத் பகுதியை மான்லித் என்பவர் ஆட்சி செய்து கொண்டிருந்தார். நரஸி மேத்தாவையும் அவரின் கிருஷ்ண பக்தியையும் அறிந்த மான்லித், நரஸிக்கு பாடம் புகட்ட நினைத்தான். நரஸியைக் கைது சிறையில் அடைத்தான். உன் மகளுக்குத் திருமணம்; உன்னிடம் காசு இல்லை. ஆனால், நீயோ எந்தக் கவலையுமின்றி, கடவுள் சன்னதியிலேயே காலத்தை ஓட்டுகிறாய்? உன்னுடைய தாமோதரனின் கழுத்தில் ஜொலிக்கிற ஹாரம், சிறையில் இருக்கிற உன் கைக்கு வந்துவிட்டால், தாமோதரனையும் உன் பகுதியையும் ஏற்றுக்கொள்கிறேன். தவிர, தாமோதரனுக்கு அடிமையாகிறேன். உம்மையும் விடுதலை செய்கிறேன் என்றான் எகத்தாளமாக. இதைக் கேட்டதும், மெய்யுருகி தாமோதரனைப் போற்றிப் பாடினார் நரஸி மேத்தா. மணிவண்ணா! என்னை உன் காலடியில் இருந்து பிரித்துவிட்டாயே... நான் என்ன தவறு செய்தேன்? என அழுது புலம்பினார். பக்தனின் கதறலைக் கேட்டுச் சும்மா இருப்பாரா தாமோதரன்?! நரஸி மேத்தாவுக்குத் திருக்காட்சி தந்தார். நரஸி, கேதார ராகத்தில் என்னைப் பற்றிப் பாடு! என் கழுத்து ஹாரத்தை உனக்குத் தருகிறேன் என்று பகவான் சொல்ல... நிலைகுலைந்தார் நரஸி மேத்தா. ஐயோ... கேதார ராகத்தில் பாடமுடியாதே! அதனை அடகு வைத்து, வீட்டுச் செலவுக்கு ஏற்கெனவே பணம் வாங்கி விட்டேனே! என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறினார் நரஸி மேத்தா. உடனே ஸ்ரீகண்ணன், அடகுக்கடைக்காரரிடம் சென்று, நரஸி மேத்தா தரவேண்டிய தொகையை வட்டியுடன் தந்தார்; கேதார ராகத்தை மீட்டெடுத்தார்; அதற்குச் சாட்சியாக கடைக்காரரிடம் இருந்து கடிதம் ஒன்றையும் வாங்கி வந்து,