புதன், 30 அக்டோபர், 2013

08.அகப்பேய் சித்தர்

திருவள்ளுவர் பரம்பரையில் தோன்றிய இந்த சித்தரின் இயற்பெயர் நாயனார். இந்த மகான் நெசவுத் தொழில் நடத்தி வாழ்ந்து வந்தார். தொழிலில் நல்ல வருமானம் கிடைத்தது. எனினும் சித்தர் பெருமானின் மனம் பொருளாசையை விடுத்து அருளைத் தேடி அலைந்தது.

மக்களை மாயையிலிருந்து மீட்பதற்காக, முதலில் தனக்கு ஒரு குருவைத் தேடி காடுகளில் எல்லாம் தரிந்தார். அப்பொழுது ஜோதி மரம் ஒன்று இவர் கண்களுக்கு தெரிந்தது. உடனே அந்த மரப்பொந்துக்குள் புகுந்து கொண்டு வியாசர் பெருமானை தன் மனக் கோவிலில் குருவாக தியானித்து தவம் இருக்கத் துவங்கினார். இவரின் கடுந்தவத்தினை மெச்சிய வியாசர் நேரில் தோன்றினார். மிகப்பெரும் தவப்பேற்றை அகப்பேய் சித்தருக்கு கொடுத்து அரியபல மந்த்ர உபதேசங்களையும் செய்தார். அகப்பேய் சித்திரைவாழ்த்தி விட்டு வியாசர் மறைந்தார், மனிதர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றி வாழும் தீய செயல்களையும் தீய எண்ணங்களையும் நீக்குவதற்காக இவர் அகப்பேய் சித்தர் பாடல்கள் 90 என்ற நூலை எழுதினார்.

அங்கும் இங்கும் ஓடும் மன அலையை மட்டுப்படுத்தினால், நங்சுண்ணவும் வேண்டாம் நாதியற்று திரியவும் வேண்டாம். அந்த இறை நாதன் உன்முன் தோன்றுவான் என்பது இவரின் வாக்கு.

இவர் இயற்றிய நூல்களில் குறிப்பிடத்தக்கவை

அகப்பேய் சித்தர் பாடல் 90
அகப்பேய் பூரண ஞானம்
சித்தி அடைந்த திருத்தலம்- திருவையாறு
இலை உடையுடன் கலை உருவாய்
காட்சி தரும் காரியசித்தி ஸ்வாமியே
மாறாத சித்தியை மரப்பொந்தினில்
பெற்ற மங்காச் செல்வரே
அசைகின்ற புத்தியை
இசைகின்ற சித்தியால்
இனிது காப்பாய் அகப்பேய் சித்தரே

அகப்பேய் சித்தர் பூஜை முறைகள்: தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் அகப்பேய் சித்தர் ஸ்வாமியின் படத்தை வைத்து, அப்படத்திற்கு முன்பு மஞ்சள், குங்குமம் இட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். முதலில் இந்த சித்தருக்காகக் குறிப்பிட்டிருக்கும் தியானச் செய்யுளை மனமுருகக்கூற வேண்டும். பின்பு பின்வரும் பதினாறு போற்றிகளை வில்வம் அல்லது பச்சிலைகள் அல்லது துளசி அல்லது கதிர்பச்சை அல்லது விபூதி பச்சை கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

பதினாறு போற்றிகள்:

1. வனத்தில் சஞ்சாரம் செய்பவரே போற்றி!
2. பேய் பிசாசுகளை விரட்டுபவரே போற்றி!
3. பித்ருப்ரியரே போற்றி!
4. உயிர்களை காப்பாற்றுபவரே போற்றி!
5. சாந்தமாக இருப்பவரே போற்றி!
6. சந்தான தோஷத்தை போக்குபவரே போற்றி!
7. சங்கீதப்பிரியரே போற்றி!
8. சூரியன், சந்திரன் போன்று பிரகாசம் உடையவரே போற்றி!
9. ரத்தினங்களை அணிபவரே போற்றி!
10. ஹஸ்த தரிசனம் செய்பவரே போற்றி!
11. கஜபூஜை செய்பவரே போற்றி!
12. முனிவர்களுக்குக் காட்சி அளிப்பவரே போற்றி!
13. உலகரட்சகரே போற்றி!
14. சிறுவர்களால் வணங்கப்படுபவரே போற்றி!
15. முக்தி அளிப்பவரே போற்றி!
16. ஸ்ரீ சக்ர ஸ்வாமியாகிய அகப்பேய் சித்தர் ஸ்வாமியே போற்றி! போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான, ஓம் அகப்பேய் சித்தரே போற்றி என்று 108 முறை ஜபிக்க வேண்டும்.

பின்பு நிவேதனமாக இளநீர்(வடிகட்டி வைக்க வேண்டும்) அல்லது பால் பழம் வைத்து படைத்து உங்கள் பிரார்த்தனையை மனமுருகக்கூறி வேண்ட வேண்டும். நிறைவாக தீபாராதனை செய்யவும்.

ஸ்ரீ அகப்பேய் சட்டமுனி ஸ்வாமிகள் பூஜை பலன்கள்:

இவர் நவக்கிரஹத்தில் குரு பகவானால் பிரதிபலிப்பவர். இவரை வழிபட்டால்

1. ஜாதகத்தில் குருபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் அகலும்
2. பணப்பிரச்சனை, புத்திரபாக்கியம் கோளாறு, அரசாங்கத்தால் பிரச்சனை போன்றவை அகலும்.
3. வியாபாரத்தில் எதிர்பாராத நஷ்டம், சமாளிக்க முடியாத நிலை இவையெல்லாம் அகன்று லட்சுமி கடாட்சம் பெருகும். வயிறு, குடல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.
4. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்,
5. கொடுக்கல், வாங்கல் பிரச்சனை வழக்குகள் அகலும்.
6. அரசாங்கத்தால் பிரச்சனை, அரசாங்க அதிகாரிகளுக்குள்ள பிரச்சனை நீங்கும்,
7. வறுமை அகன்று வாழ்க்கை வளம் பெறும்.
8. இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்

இவரை பூஜிக்க சிறந்தநாள் வியாழக்கிழமை ஆகும்.
09.வல்லபசித்தர்

தாதி பொன்னனையாள் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். அவளது குடிலில் தகரம், செம்பு, பித்தளை பாத்திரங்கள் மட்டுமே இருந்தன. பெண்கள் திறமைசாலிகள். தங்களுக்கு கணவனோ, பிறரோ கொடுக்கும் பணத்திலோ, தாங்கள் உழைத்து சம்பாதித்ததிலோ சிறிதளவாவது மிச்சம் பிடித்து வெள்ளியிலோ, தங்கத்திலோ சிறுநகைஒன்றாவது வாங்கி விடுவார்கள். பொன்னனையாளும் அதற்கு விதிவிலக்கல்ல. சிவபக்தையான அவள், கூடல் மாநகராம் மதுரை அருகிலுள்ள திருப்புவனம் என்ற ஊரில் வசித்தாள். அங்குள்ள பூவன நாதர் அவளது இஷ்ட தெய்வம். அவரது ஆலயத்தில் சேவை செய்தது மட்டுமின்றி, ஆலயத்துக்கு வரும் சிவனடியார்களுக்கு, தான் ஆடிப்பிழைக்கும் பணத்தில் மிச்சம் பிடித்து அவர் களுக்கு உணவளிக்கும் பழக்கத்தை யும் கொண்டிருந்தாள். அவளது கண்ணீருக்கு காரணம் தெரிய வேண்டுமே. அவளுக்கு நீண்ட நாளாக ஒரு ஆசை. திருப்புவனநாதர் லிங்கவடிவில் காட்சியளிக்கிறார். அவருக்கு உற்சவர் சிலை இருந்தால், அதைக்கொண்டு திருவிழா நடத்தலாம். திருவிழா நடந்தால், மக்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் ஊர் நோக்கி வருவார்கள். கோயிலின் வருமானம் பெருகும். கோயில் விருத்தியாகும். ஆனால், சிலை செய்ய யார் முன்வருவார்கள்? தானே செய்யலாம் என்றால் அதற்கு அந்தளவுக்கு பணமில்லையே! என்ன செய்வது? இதை நினைத்து நினைத்து கண்ணீர் வடித்தபடியே, தன்னையறி யாமல் உறங்கி விடுவாள். நடனமாடும் நேரத்தில் கூட, இந்த சிந்தனை அவளை வாட்டிக் கொண்டிருந்தது.

ஒருநாள், அவளது ஊருக்கு சில சிவனடியார்கள் வந்தனர். அவர்களை தனது இல்லத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தாள் பொன்னனையாள். அடியார்களும், அவளது பக்தியைப் பற்றி ஊரார் சொல்லக் கேள்விப் பட்டு, அவளது இல்லத்துக்கு சென்றனர். அங்கு அனைவருக்கும் உணவு படைத்தாள். சம்பாதிக்கும் பணமெல்லாம், அடியவர்களுக்கு உணவளிப்பதிலேயே செலவழித்து விடுவாள். அவர்கள் சாப்பிட்டது போக மீதமிருந்தால், அதை மட்டுமே சாப்பிடுவது பொன்னனை யாளின் வழக்கம்.அன்று வந்திருந்த அடியவர் களில் ஒரு அடியவர் மிகுந்த தேஜஸுடன் இருந்தார். அவரது அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. பொன்னனையாளுக்கு உதவியாக இருந்த மற்ற கணிகைகளும், அவளுடன் இணைந்து அடியவர்களுக்கு உணவு பரிமாறினர். அழகாக இருந்த அடியவர் மட்டும் சாப்பிடாமல் அமர்ந்திருந்தார். அதற்கான காரணம் புரியாத கணிகைகள், பொன்னனையாளிடம் அதுபற்றிக் கூறினர். பொன்னனையாள் அவரருகில் சென்று, சுவாமி! மற்றவர்கள் நான் அளித்த இந்த எளிய உணவை சாப்பிடும்போது, தாங்கள் மட்டும் சாப்பிடாமல் இருக்கிறீர்களே! உணவு சுவையாக இல்லையா? தங்களுக்கு வேறு ஏதாவது கொண்டு வர வேண்டுமா? தாங்கள் கேட்பதை நொடியில் சமைத்து தருகிறேன், என்றதும், அந்த அடியவர் சிரித்தார்.

அவரது சிரிப்பில் சொக்கிப் போனாள் பொன்னனையாள். அவரது சிரிப்பு அந்த இடத்தையே ஆனந்தமயமாக்கியது. அம்மையே! உலகுக்கே படியளக்கும் எனக்கு, நீ இன்று படியளந்திருக்கிறாய். அதை நினைத்தேன், சிரித்தேன், என்ற அடியவரின் பேச்சில் இருந்த சூட்சுமம், பொன்னனையாளுக்கு புரியவில்லை. உடனே அடியவர் அவளிடம், வருந்தாதே, மகளே! நீ தந்த உணவின் மணம் என்னைச் சாப்பிடத் தூண்டுகிறது. ஆனால், உணவளிக்கும் போது, பெண்கள் மகிழ்ச்சியான மனநிலையைக்காட்ட வேண்டும். அது முகத்தில் எதிரொளிக்க வேண்டும். உன் முகத்தில் ஏதோ வாட்டம் தெரிந்தது. ஏதோ, சோகத்தை மனதில் தாங்கிய நீ தரும் உணவை எப்படி என்னால் மகிழ்ச்சியுடன் சாப்பிட முடியும். நான் சொல்வது சரிதானே! உன் மனதை ஏதோ ஒரு கவலை வாட்டுகிறது என்பது உண்மை தானே! என்றதும், அவளது கண்களில் கண்ணீர் வைகை நதியின் கரை புரண்ட வெள்ளம் போல் பெருகியது. ஐயனே! தாங்கள் என் மன நிலையைப் புரிந்து கொண்டீர்கள். ஆனால், இந்த வருத்தம் என் சுயநலம் கருதியது அல்ல. எம்பெருமானுக்கு, ஒரு சிலை வடிக்க வேண்டும். அதைக் கொண்டு உற்சவம் நடத்தி, மக்களை எனது ஊருக்கு ஈர்க்க வேண்டும். இங்கிருக்கும் பூவனநாதர் கோயில் பெரிய அளவுக்கு உயர வேண்டும்.

மன்னாதிமன்னர்களும், பிரபுக்களும் இங்கு வந்தார்கள் என்றால், அவர்கள் தரும் நன்கொடையைக் கொண்டு கோயிலை பெரிதாக்குவேன். உற்சவர் சிலையை வடித்து முடிப்பேன். இதெல்லாம், எப்படி நடக்கப் போகிறதோ என்ற கவலை தான், என் முகவாட்டத்துக்கு காரணம். இருப்பினும், தங்கள் முன்னால் கனிந்த முகம் காட்டாமைக்கு வருந்துகிறேன். அடியவர், இந்தச் சிறியவளின் தவறை புறந்தள்ளி, அமுது செய்ய வேண்டும், என அவரது பாதத்தில் விழுந்து வேண்டினாள். அடியவர் அவளைத் தேற்றினாள். அவளது விருப்பம் அவரை மிகவும் கவர்ந்தது. அவர் அவளிடம், மகளே! கலங்காதே. உன் விருப்பம் விரைவில் நிறை வேறும். உன் வீட்டிலுள்ள பாத்திரங்களை எடுத்து வா. சிலைசெய்ய நான் வகை செய்கிறேன், என்றார்.அவள் அந்த சோகத்திலும் நகைத்தாள். சுவாமி! என்னிடம் பித்தளையும், செம்பும், சிறு வெள்ளி பாத்திரமுமே உள்ளன. இதை விற்றால் வெற்றிலை வாங்கக்கூட பணம் கிடைக்காதே, என்றாள். மகளே! நான் சொல்வது உனக்குப் புரியவில்லை. பாத்திரங்களை என் முன்னால் எடுத்து வை. நான் அவற்றில் திருநீறு தூவுகிறேன். இன்றிரவு, அவற்றை தீ மூட்டி அதற்குள் தூக்கிப் போடு. அவை அனைத்தும் என்ன எடை இருக்கிறதோ, அதில் பாதியளவுக்கு தங்கமாக மாறிவிடும். அதைக் கொண்டு நீ சிலை செய்து விடலாம். சாதாரண சிலை வடிக்க இருந்த நீ, உன் பெயரிலுள்ள பொன்னைப் போல, பொன்னாலேயே சிலை வடித்து விடலாம், என்றார். அடியவரின் வாக்கை சிவவாக்காக கருதிய பொன்னனையாள், பாத்திரங்களை எடுத்து வைத்தாள். அவர் திருநீறைத் தூவினார். அவள் அடியவரிடம், சுவாமி! தாங்கள் இன்று இரவு என் வீட்டிலேயே தங்க வேண்டும். பாத்திரங்களை நெருப்பில் போடும்போது, நீங்களும் அருகில் இருந்தால் நன்றாக இருக்கும், என்றாள். தாதியின் பேச்சை மறுத்த அடியவர், அம்மா! சிவனடியார்கள் யார் வீட்டிலும் இரவு நேரத்தில் தங்குவதில்லை. நான் மதுரைக்கு புறப்படுகிறேன். அங்குள்ள ஆலயத்தில், சோமசுந்தரக் கடவுளின் பிரகாரத்தில் தங்கியிருப்பேன். உனக்கு ஏதாவது வேண்டுமென்றால் அங்கு வா, எனச் சொல்லி கிளம்பி விட்டார். பொன்னனையாள் அன்றிரவில் பாத்திரங்களை நெருப்பில் போட்டாள். என்ன ஆச்சரியம்!

தீயிலிட்ட பாத்திரங்கள் உருகி பொன் மட்டும் வெளிப்பட்டது. தீ அணைந்ததும், பொன்னை வாரி எடுத்த பொன்னனையாள், அதை ஒரு சிறந்த சிற்பியிடம் ஒப்படைத்து,சிவனின் உற்சவர் சிலையை வடிக்கச் சொன்னாள். அந்தச்சிற்பியும் அழகிய சிலை வடிவமைத்தார். அதைப் பார்த்த அவளது கண்களில் ஆனந்தக்கண்ணீர் ஆறாய்ப்பெருகியது. சிலையின் அழகில் சொக்கிப்போன அவள், அதன் மேல் ஆசை கொண்டவளாய், சிலையில் கன்னத்தில் கிள்ளி முத்தமிட்டாள். தன் வீட்டுக்கு வந்து, இந்த அதிசயம் நிகழக்காரணமாக இருந்த சிவனடியாரிடம் சிலையைக் காட்டுவதற்காக எடுத்துக்கொண்டு, மதுரை சென்றாள். இதனிடையே மதுரைக்கு வந்த அந்த அடியவர்,நகர வீதிகளில் அலைந்து திரிந்தார். அப்போது, அவர் ஒரு ஆணை பெண்ணாக்கினார். ஒரு முதியவரை இளைஞனாக்கினார். இரும்பை தங்கமாக்கினார். பிறவியிலேயே பேசாத ஒருவனை பேச வைத்தார். ஊசியை தரையில் நிறுத்தி, அதன் மேல் கால் கட்டை விரலை வைத்து நடனமாடினார். இவரது சித்து வேலைகளால் மக்கள் கவரப்பட்டனர். ஊரெங்கும் இவரைப் பற்றி எழுந்த பேச்சு, அப்போது மதுரையை ஆண்ட அபிஷேகப் பாண்டியனையும் எட்டியது. சித்தரை அழைத்து வர ஆட்களை அனுப்பி வைத்தான். என்னைப் பார்க்க வேண்டுமானால், உன் மன்னனை இங்கே வரச்சொல், என சொல்லிவிட்டார் சித்தர்.

மன்னனும் வந்து பார்த்தான். அவரைப் பற்றி அவன் அவரிடமே கேட்டான். என்னை எல்லாம் வல்ல சித்தர் என்று நீ அழைக்கலாம். நானே ஆதியும், அந்தமும் ஆவேன்,என்றார். சித்தரே! உம் சித்து வேலைகளை ஒப்புக் கொள்கிறேன். அதற்காக நீரே கடவுள் என்பதைப் போல் பேசுகிறீரே! எங்கே! இந்தக் கோயிலில் இருக்கும் கல்லால் செய்யப்பட்ட இந்த யானை, உம் சக்தியால் கரும்பு தின்னுமா? என்று கேட்டான். ஒரு கட்டு கரும்பை வரவழைக்கச் சொன்னார் சித்தர். கல்யானையின் முன்னால் போட்டார். சாப்பிடு என கண்ஜாடை காட்டினார். அம்மட்டிலே அது உயிர் பெற்று எழுந்து சாப்பிட ஆரம்பித்து விட்டது. மன்னன் சித்தரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான். அவனுக்கு புத்திர பாக்கியம் இல்லை. சித்தரிடம் தன் குறையைச் சொன்னான். அடுத்த ஆண்டிலேயே ஒரு ஆண் குழந்தைக்கு தந்தையானான். இப்படி பல அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டிருந்த சித்தரைக் காண வந்த பொன்னனையாள், மீனாட்சியையும், சுந்தரேஸ்வரரையும் வணங்கி விட்டு, பிரகாரத்தில் இருப்பதாகச் சொன்ன அடியவரை தேடி அலைந்தாள்.

துர்க்கை சன்னதி அருகில், ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். அவரை உற்று நோக்கிய போது, அவள் வீட்டுக்கு வந்த அடியவர் தான் என்பதில் சந்தேகமில்லாமல் போயிற்று. அவரை வணங்கிய அவள், சுவாமி! என்னை நினைவிருக்கிறதா? தாங்கள், சில மாதங்களுக்கு முன் என் வீட்டுக்கு அமுதுண்ண வந்திருந்தீர்கள். அப்போது, சிவனின் சிலை செய்யும் என் லட்சியத்தை வெளியிட்டேன். ஞாபகப் படுத்திப் பாருங்கள், என்றாள். ஓ! பொன்னனையாளா? நலமாக இருக்கிறாயா? உன் ஆசை பூர்த்தியாகி விட்டதா? என்றார் ஏதுமறியாதவர் போல.அவள் அந்தச்சிலையை அவர் முன்னால் எடுத்து வைத்தாள். பார்த்தாயா! நம்பிக்கையே வாழ்வின் அஸ்திவாரம். நீ, நான் சொன்னதை நம்பி பாத்திரங்களை தீயில் இட்டிருக்கிறாய். நினைத்ததை சாதித்து விட்டாய், என்றதும், சுவாமி, தாங்கள் யார்? தங்கள் பெயர் என்ன? தாங்கள் துறவு மேற்கொண்ட கதையை எனக்குச் சொல்ல வேண்டும், என்றாள் பொன்னனையாள். பெரியவர் சிரித்தார். எனக்கு ஆயிரம் பெயர்கள் இருக்கிறது தாயே! ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக அழைப்பார்கள். சிலர் சிவனே என்பார்கள். சிலர் பரமசிவா என கூப்பிடுவார்கள். இருந்தாலும், இந்தக் கோயிலில் உள்ளவர்கள் சுந்தரேசா என்பார்கள். ஆனால், இந்த எளிய மானிடன் தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பெயர் வல்லபன்,என்றார். அவள் அவரது பாதத்தை மீண்டும் நமஸ்கரித்து, அவரைச் சுற்றிலும் தான் கொண்டு வந்த பூக்களால் பந்தல் போல் அலங்கரித்தாள். அந்த சமயத்தில், அவர் தியானத்தில் இருந்தார். நீண்டநேரம் அப்படியே இருக்கவே, அவரிடம் விடை பெறுவதற்காக, தியானத்தைக் கலைக்க முற்பட்டாள் பொன்னனையாள். ஆனால், அவர் எழவே இல்லை. அப்படியே கற்சிலையாக மாறி விட்டார். அவள் அழுது தீர்த்தாள்.

சுவாமி! தங்களை வணங்க வந்தேன். தங்களையே எங்கள் ஊருக்கு அழைத்துச் சென்று, இச் சிலையை பிரதிஷ்டை செய்ய எண்ணியிருந்தேன். தாங்களோ கல்லாய் சமைந்து விட்டீர்களே! இனி,நான் என்ன செய்வேன்? என அவர் மீது விழுந்து கதறினாள். அப்போது அசரீரி ஒலித்தது. மகளே! கலங்காதே. உன் வீட்டுக்கு வந்த நானே சிவன். சித்தராய், இப்பூவுலகில் அமர்ந்து கருணை செய்யவே வந்தேன். மதுரையம்பதியில், நான் இதே பிரகாரத்தில் சித்தராய் இருப்பேன். எனக்கு நீ பூப்பந்தல் இட்டு அலங்காரம் செய்ததைப் போல், யாரெல்லாம் எனக்கு பூப்பந்தல் வழிபாடு செய்கின்றனரோ, அவர்களுக்கெல்லாம் நடக்காது என ஒதுக்கி வைத்த செயல் களைக் கூட வெற்றிகரமாக நிறைவேற்றித் தருவேன், என்றது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் செல்பவர்கள் சுவாமி பிரகாரத்தில், துர்க்கை சன்னதியை ஒட்டியுள்ள வல்லப சித்தரை தரிசிக்கலாம். சன்னதியில் தியானகோலத்தில் இவர் அமர்ந்திருப்பார். இப்போதும் பூப்பந்தல் வழிபாடு நடக்கிறது. பூக்கூடார வழிபாடு என்று இப்போது சொல்கிறார்கள். இவருக்கு வல்லபசித்தர் என்ற பெயர் தவிர சிவசித்தர், சுந்தரானந்தர் என்ற பெயர்களும் உண்டு. குழந்தையில்லாத பெண்களும், கணவனைப் பிரிந்திருக்கும் பெண்களும், கல்வியில் முதல்நிலைக்கு வர வேண்டும் என விரும்பும் மாணவர்களும் இந்த சித்தரை வணங்கி பூக்கூடாரமிட்டு வழிபட்டால், நினைத்தது நிறைவேறும்.

நூல்:

சந்தரானந்தன் வைத்திய திரட்டு
சந்தரானந்தர் விஷ நிஷவாணி
சந்தரானந்தர் வாக்கிய சூத்திரம்
சந்தரானந்தர் கேசரி
சந்தரானந்தர் சித்த ஆனம்
சந்தரானந்தர் தீட்சா விதி
சந்தரானந்தர் பூசா விதி
சந்தரானந்தர் அதிசய காரணம்
சந்தரானந்தர் சிவயோக ஞானம்
சந்தரானந்தர் மூப்பு
சந்தரானந்தர் தண்டகம்

தியானச் செய்யுள்:

சித்து விளையாட்டில் சிறந்தவரே
சிவனுடன் கலந்தவரே
ஆயசித்தி அனைத்தும் அறிந்தவரே
அபயம் அளிக்கும் அருளாளரே
மதுரையம்பதி வாழ் மகத்துவமே
உன்பாதம் சரணம்

வல்லபசித்தர் ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 800 ஆண்டுகள் 28 நாள் ஆகும்.
10.அகத்தியர்

தேவர்கள் அனைவரும் இந்திரனின் முன்னால் போய் நின்றனர். தேவாதி தேவ! உலகில் அநியாயம் பெருத்து விட்டது. அரக்கர்களின் அட்டகாசத்தால், எவ்வுலகிலும் பக்தர்களால் யாகம், பூஜை, புனஸ்காரங்கள் செய்ய முடியவில்லை. எங்களுடைய அவிர்ப்பாகம் கிடைக்காததால், நாங்கள் படும் வேதனைக்கு எல்லையில்லை. எங்கள் சக்தி குறைந்து, அசுரசக்தி வேகமாகத் தலைதூக்குகிறது. நல்லவர்கள் நிம்மதியின்றி உள்ளனர். கெட்டவர்களோ, அந்த ராட்சஷர்களுடன் கைகோர்த்து சுகபோக வாழ்வு நடத்துகின்றனர். கெட்டவர்களின் தரம் உயர்ந்தால், நல்லவர்களும் நம் மீதான நம்பிக்கையை இழந்தல்லவா விடுவார்கள். தேவர் தலைவனே! தாங்கள் தான் எங்களைக் காத்தருள வேண்டும், என்றனர். இந்திரன் தேவர்களின் குறையை கருணையுடன் கேட்டான். தேவர்களே! கலங்க வேண்டாம். தேவராயினும், மனிதராயினும், சிறு பூச்சி புழுவாயினும், அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக் கேற்ப பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். எனினும், இதுகண்டு நீங்கள் அஞ்சத் தேவையில்லை. அசுரர்களில் உயர்ந்தவனான தாரகன் தவவலிமை மிக்கவன். கடலுக்குள் மறைந்து வாழும் சக்தி படைத்தவன். பிரம்மாவின் அருளால் சாகாவரம் பெற்றவன். ஒரு கும்பத்தின் அளவே உருவமுடைய ஒருவரே அவனைக் கொல்ல முடியும். ஆனால், அவன் குறிப் பிட்டுள்ள அளவு உயரமுள்ளவர் எவரும் பூவுலகில் இல்லை. பிரம்மனால் கூட அப்படிப்பட்டவரைப் படைக்க முடியாது. இருப்பினும், பிறந்தவர் மாள்வது உறுதி. நீங்கள் அமைதி காக்க வேண்டும். நான் அவர்களை கடலுக்குள் வசிக்க இயலாத அளவுக்குரிய ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன். பின்னர், அவர்களது தொந்தரவு குறையும், என்றான்.

தேவர்கள் அரைகுறை மனதுடன் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பினர். இந்திரன் ஆழ்ந்து யோசித்தான். கடலை வற்றச்செய்வது என்பது எப்படி ஆகக்கூடிய காரியம். என்ன செய்வது? என குழம்பிப் போயிருந்த வேளையில், அதுவே சரி, என ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டான். அக்னிதேவனை தன் சபைக்கு வரச்செய்தான். அக்னி! நீ உடனே பூலோகத் துக்குச் செல். கடலுக்குள் அரக்கர்கள் ஒளிந்து கிடந்து நம் இனத்தாரை துன் புறுத்துகின்றனர். நீ கடலே வற்றும்படியாக வெப்பத்தை உமிழ். கடல் காய்ந்து போனதும், அரக்கர்கள் நம்மை துன்புறுத்தி விட்டு, ஓடி ஒளிய இடம் இல்லாமல் தவிப்பர். இதைப்பயன்படுத்தி அவர்களைக் கொல்ல ஏற்பாடு செய்வோம்,  என்றான். அக்னி சிரித்தான். இந்திரரே! தங்கள் யோசனை எனக்கு நகைப்பை வரவழைக்கிறது. அரக்கர்களை அழிப்பதே தேவர் களையும், பூலோக மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தான். உலகில் கடல் இல்லை என்றால் மழை எப்படி பொழியும்? மழை இல்லை என்றால் ஆறுகள் எப்படி ஓடும்? ஆறுகள் இல்லையென்றால், நமக்கு அவிர்பாகம் தரும் யாகங்களை நடத்த தீர்த்தம் கூட இல்லாமல் போய் விடுமே. நீர் வாயுவை அழைத்துப் பேசும். ஒருவேளை வறண்ட காற்றால் அவன்  கடலை வற்றச்செய்யக்கூடும், என்றான்.

இந்திரனுக்கு கோபம் வந்துவிட்டது. ஏ அக்னி! நான் இட்ட வேலையைச் செய்யும் வேலைக் காரன் நீ. தலைவனாகிய என்னையே எதிர்த்துப் பேசுகிறாயா?இந்த யோசனை யெல்லாம் இல்லாமலா நான் உன்னை கடலை வற்றச்செய்யும்படி பணிப்பேன். சொன்னதைச் செய்,என்றான்.அக்னியோ ஒரேயடியாக மறுத்து விட்டான். தாங்கள் என் எஜமானர் தான். எஜமானர் என்பதற்காக, அந்த எஜமானர் உள்ளிட்ட அத்தனை பேரையும் அழிக்கும் பாவத்தை நான் செய்ய மாட்டேன், எனச் சொல்லி விட்டு,கைகட்டி நின்றான். அடுத்து வாயு வரவழைக்கப் பட்டான். அவனிடமும் இந்திரன், கடல் சமாச்சாரம் பற்றிக் கூற, வாயுவும், அக்னி சொன்ன அதே பதிலையே சொன்னான். அக்னியும், வாயுவும் சொல்வதிலும் நியாயமிருக்குமோ என்னும் அளவுக்கு இந்திரனும் சிந்திக்க ஆரம்பித்து விட்டான். அத்திட்டத்தை கைவிட்டு, அவர்களை அனுப்பி விட்டான். ஆனால், சில நாட்களில் அரக்கர்களின் அட்டகாசம் அதிகரித்து, யாகங்கள் முழுமையாக நின்று போயின. யாக குண்டங்களில் அசுரர்கள் மாமிசத்தையும், ரத்த மழையையும் பொழிந்து தீட்டை உண்டாக்கினர். எந்த யாகமும் நடைபெறாமல் தேவர்கள் மெலிந்து போயினர். இப்போது, இந்திரனின் கோபம் அக்னி மற்றும் வாயுவின் மீதே திரும்பியது.

மீண்டும் அவர்களை வரவழைத்து, ஏ அக்னி! ஏ வாயு! அன்று நான் சொன்னதை நீங்கள் செய்யாமல் போனதால், அரக்கர்கள் தங்கள் அட்டகாசத்தை முடித்து விட்டு,  கடலுக்குள் போய் ஒளிந்து கொள்கின்றனர். கடலுக்குள் மறைந்திருப்பவர்களை யாரால் கண்டுபிடிக்க இயலும்? அவர்களைக் கொல்வதென்பது எப்படி சாத்தியம்? என் சொல்லைக் கேளாததால் ஏற்பட்ட துன்பத்தின் பலனை அனுபவிக்கும் வகையில், நீங்கள் பூலோகத்தில் பிறந்து மனிதர்கள் படும் வேதனையை அனுபவிக்க வேண்டும், என சாபமிட்டான். அக்னியும், வாயுவும் பூலோகத்தில் பிறந்தனர். அக்னி மித்திரா என்ற பெயரிலும், வாயு வருணர் என்ற பெயரிலும் வாழ்ந்தனர். இச்சமயம், தேவலோக மங்கையான ஊர்வசி, தான் செய்த தவறால், இந்திரனின் சாபம் பெற்று பூலோகம் வந்தாள். அவள், ஒரு நீர்நிலையில் நீராடிக் கொண்டிருந்த போது, அவளை மித்திராவும், வருணனும் பார்த்தனர். அப்படி ஒரு பேரழகியை அவர்கள் கண்டதே இல்லை. அப்போது, அவர்களிடம் இருந்து வீரியம் வெளிப்பட்டது. மித்திரர் தன் கையில் இருந்தகும்பத்தில் வீரியத்தை இட்டார். வருணரோ, அதைத் தண்ணீரில் இட்டார். கும்பத்தில் இருந்த வீரியம் வளர்ந்து ஒரு குழந்தையாக மாறியது. அது சில நாட்களில் கும்பத்தில் இருந்து வெளிப்பட்டு உயிர் பெற்று நடமாடியது. அந்த உருவம் கமண்டலம், ஜடாமுடியுடன் தோற்றமளித்தது.

குடத்தில் இருந்து பிறந்ததால், அந்த குள்ள முனிவருக்கு கும்பமுனிவர் என்றும், குடமுனிவர் என்றும் தேவர்கள் அழைக்கலாயினர். அரக்கர்களைக் கொல்ல கும்ப அளவே உயரமுள்ள ஒரு முனிவர் பிறந்து விட்டதில் அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி. இது ஒருபுறம் இருக்க, வாயுபகவான், தண்ணீரில் இட்ட வீரியத்தில் இருந்து வசிஷ்டர் பிறந்தார். இவர் அயோத்தியை நோக்கி போய் விட்டார். பிற்காலத்தில், இவர் மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமருடன் சேவை செய்ய  வேண்டியிருந்ததைக் கருத்தில்  கொண்டு அங்கு சென்று விட்டார். கும்பமுனி உருவத்தில் தான் குள்ளம். ஆனால், அவரது சக்தியோ எல்லை மீறியதாக இருந்தது. அக்னியில் இருந்து பிறந்தவர் என்பதால், இவர் உடலில் வெப்பம் தகித்தது. தன் வெப்பத்தை தணிக்க தண்ணீரின் மீதே படுத்திருப்பார். அவரிடம், தேவர்கள் தங்கள் குறையை வெளியிட்டனர். சுவாமி! தங்களால் மட்டுமே அரக்கர்களை அழித்து எங்களைக் காக்க முடியும், என்றனர்.அகத்தியர் அவர்களுக்கு அருள் செய்வதாக வாக்களித்தார். தேவர்களைக்காக்கும் தனது கடமை தடங்கலின்றி நிறைவேற, தனக்கு வசதியான தண்ணீரிலேயே தவத்தை துவங்கினார். 12 ஆண்டுகள் தொடர்ந்து தண்ணீரில் படுத்த படியே இறைவனை தியானித்தார். இறைவன் அருளும் கிடைத்தது.

அரக்கர்களை சம்ஹாரம் செய்ய அவர்கள் மறைந்திருந்த கடலை நோக்கிச் சென்றார். தங்களை குள்ள முனிவர் ஒருவர் கொல்ல வந்துள்ளார் என்பதை அறிந்த அரக்கர்கள்  தண்ணீரை விட்டு வெளியே வரவே இல்லை. ஆனால், அகத்தியர் விடுவாரா என்ன? தண்ணீர் முழுவதையும், தன் உள்ளங்கைக்குள் அடக்கி சித்து விளையாட்டு செய்தார்.  ஒட்டுமொத்த கடல் நீரும் அவர் கைக்குள் வந்தது. தீர்த்தம் குடிப்பது போல் குடித்து விட்டார். இதைப் பயன்படுத்திக் கொண்ட தேவர்கள், அசுரர்கள் மீது பாய்ந்தனர். இரு தரப்புக்கும் கடும் சண்டை நடந்தது. முடிவில், அரக்கர்கள் கொல்லப்பட்டனர். கடலையே சுருக்கி சாப்பிட்டவர் என்றால் சும்மாவா? மேலும், உலகையே காக்க வேண்டிய  தேவர்களையே பாதுகாத்தவர் என்றால் அவரது சக்தி எத்தகையதாக இருக்கும்? அந்த மாமுனிவர், தான் வந்த வேலையை அத்துடன்  முடித்துக் கொள்ள வில்லை. மகாவிஷ்ணு அப்போது மனித அவதாரமான ராமாவதாரம் எடுத்து இலங்கையிலே இருந்தார். ராமனின் மனைவியான சீதாவை, அந்நாட்டு அரக்க அரசனான ராவணன்  தூக்கிச் சென்று விட்டான். அவளை மீட்பதற்காக பெரும்படையுடன் சென்றிருந்தும் கூட, அவரால் ராவணனை அவ்வளவு எளிதில் ஜெயிக்க முடியவில்லை. அங்கு சென்ற அகத்தியர், ராமனிடம் சூரிய வழிபாடு செய்வதன் மூலம் பெரும் பலம் பெறலாம் எனக்கூறி, ஆதித்ய ஹ்ருதயம் என்னும் ஸ்லோகங்களைப் போதித்தார். மேலும்  அவருக்கு சிவகீதையையும் கற்றுத் தந்தார்.

ராமபிரானின் இலங்கை வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாக்களில் அகத்தியரும் ஒருவர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இமயமலைச் சாரலுக்கு வந்தார். அப்பகுதியில் தவமிருந்தார். ஒருமுறை, இந்திரத்துய்மன் என்ற அரசன் ஆண்ட நாட்டுக்குச் சென்றார். அவன் அகத்தியரின் மகிமை அறியாமல் உரிய மரியாதை கொடுக்கவில்லை. பெரியவர்களுக்கும்,  முனிவர்களுக்கும் மரியாதை கொடுக்காதவன் அரசாளத் தகுதியில்லாதவன் என்று கூறிய அவர், நீ யானையாகப் போ என சாபம் கொடுத்தார். அவன் வருந்தி அழுதான். கருணைக்கடலான அகத்தியர், மன்னா! நீ பக்தன் தான். யோகங்களில் தலை சிறந்தவன். ஆனால், மமதை என்னும் மதம் உன்னை ஆட்டிப் படைக்கிறது. அதன் காரணமாகவே, உன்னை மதம் பிடித்த யானையாக மாற்றி விட்டேன். இதுவும் நன்மைக்காகவே நடந்தது, என்றார். இதனால் எனக்கு என்ன நன்மை கிடைக்கும் சுவாமி? என் மனைவி, மக்கள் என் பிரிவால் துன்புறுவார்களே! என கேட்ட போது, மோட்சம் செல்லப் போகிறவன், சம்சார பந்தத்தை துறக்க வேண்டும். நீ சாட்சாத் மகாவிஷ்ணுவின் மூலம் சாபவிமோசனம் பெற்று வைகுண்டம் சேர்வாய். பிறப்பற்ற நிலை சித்திக்கும், என அருள் செய்தார்.

பிறவித்துன்பத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் என்றால், யானையாகத் திரிவதில் தனக்கு சம்மதமே என்ற இந்திரத்துய்மன், காட்டில் அலைந்து திரிந்தான். பின்னர், முதலை ஒன்று அதன் காலைக் கவ்வ, அது ஆதிமூலமே என அலற, ஆதிமூலமாகிய மகாவிஷ்ணு அதனைக் காப்பாற்றி வைகுண்டம் சென்று சேர்த்தார். இப்படி  ஆடம்பரத்தில் சிக்கித் திளைத்த அரசர்களுக்கு வைகுண்ட பிராப்தி அளிப்பவராகவும் அகத்தியர் விளங்கினார். சிவசிந்தனை தவிர வேறு ஏதும் அறியாத அகத்தியர்,  தவத்திலேயே ஈடுபட்டிருந்தார். இமயமலையில், பார்வதி, பரமேஸ்வரனுக்கு திருமணம் நடக்க இருந்த வேளையில், உலகை சமநிலைப்படுத்த அகத்தியரை பொதிகை  மலைக்கு அனுப்பி வைத்தார் சிவபெருமான். அவர் அங்கிருந்து புறப்பட்டு வரும் வழயில், ஒரு மரத்தில் சிலர் தலைகீழாகத் தொங்குவதைப் பார்த்தார். அவர்கள்  அகத்தியா! அகத்தியா! என கத்தினர். நீங்களெல்லாம் யார்? என் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்? நான் தவவலிமை மிக்கவன். அக்னி- ஊர்வசி புத்திரன். என்னை  வடபுலத்தோர் மட்டுமே அறிவார்கள். தென்திசையிலுள்ள உங்களுக்கு என் பெயர் எப்படி தெரிந்தது? என்னிலும் வலிமை மிக்கவர்களாகத் திகழ்கிறீர்களே! உங்கள் தரிசனம் கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன், என்ற அகத்தியர் அவர்களை தன்னையறியாமல் வணங்கினார். அகத்தியா! நீ சொன்ன தெல்லாம் சரிதான். நாங்கள் உன் முன்னோர்கள். உன்னைப் போலவே தவவாழ்வு வாழ்ந்தவர்கள். இருப்பினும், எங்களால் சுவர்க்கத்தை அடைய முடியவில்லை.  சொர்க்கம் செல்ல துறவறம் மட்டுமே உதவாது. இல்லறத்துக்கு பிறகே துறவறம் பூண வேண்டும். யார் ஒருவருக்கு ஆண் குழந்தை இல்லையோ, அவர்கள் பிதுர்களின் உலகை அடைய முடியாது. ஆண் குழந்தையே கொள்ளி வைக்க தகுதியானவன். அதனால் எங்கள் அன்பு மகனே! நீ திருமணம் செய்து கொள். ஒரு மகனைப் பெறு. அவன் மூலமாக எங்களுக் குரிய தர்ப்பணம், சிரார்த்தம் செய்து எங்களுக்கு சொர்க்கப்பாதையைக் காட்டு. இல்லாவிட்டால், நாங்கள் இந்த மரத்திலேயே தொங்க வேண்டியது தான், எனக் கூறி வருந்தினர். உயரத்தில் குள்ளமான அவருக்கு யார் பெண் தருவார்கள்?

மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிதென்பார்கள் நம்மவர்கள். அதுபோல, அகத்தியர் உயரத்தில் மிகச்சிறியவர் என்றாலும், அவரது மகிமைகளை அறிந்த பெண்மணி ஒருத்தி, நிச்சயம் வாழ்க்கைப்பட்டே தீருவாள். தென்னகம் வரும் வழியில், அவர் விதர்ப்பம் என்ற நாட்டை அடைந்தார். அந்நாட்டு மன்னன் யாகம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தான். அதில் பங்கேற்க அகத்தியரை அவன் அழைத்துச் சென்றான். யாகத் தீ கொழுந்து விட்டெரிந்த போது, அதில் இருந்து ஒரு பெண்மணி வெளிப்பட்டாள். அப்போது அசரீரி தோன்றி, அகத்தியரே! நீர் இந்தப்பெண்ணை மணந்து கொள்ளும். இவளது பெயர் உலோபமுத்திரை, என்றது. அகத்தியரும் தெய்வ வாக்கிற்கேற்ப அவளது சம்மதத்தைக் கேட்டார். மாமுனிவரே! நான் இந்நாட்டில் தோன்றியதால், விதர்ப்ப தேசத்தரசரே என்தந்தையாகிறார். அவர் சம்மதம் தெரிவித்தால், நான் உங்கள் மனைவியாகிறேன், என்றாள். விதர்ப்ப அரசனும் சம்மதம் தெரிவித்தான். அப்போது உலோபமுத்திரை, அகத்தியரே! தாங்கள் என்னை மணம் முடிக்க வேண்டிய அவசியத்தை நான் தெரிந்து கொள்ளலாமா? என்றாள்.

லோபா! என் முன்னோர்கள் ஆண் குழந்தை இன்மையால், இறந்தும் திதி செய்ய நாதியின்றி தவிக்கின்றனர். அவர்களால் சுவர்க்கத்தை அடைய முடியவில்லை. நானும் துறவியாகி விட்டதால், அவர்களின் நிலைமை மோசமாகி விட்டது. அவர்களின் ஆத்ம சாந்திக்காக, நான் திருமணம் முடிக்க வேண்டியுள்ளது. பிதுர் தர்ப்பணம் செய்யாதவன் நரகை அடைவான் என்பதை நீ அறிவாய். அவர்களின் விருப்பப்படி, நான் இல்லறத்தில் ஈடுபட்டு, ஒரு மகனை பெற்று, அவன் மூலமாக தர்ப்பணம் செய்ய வேண்டும். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றா விட்டால், நான் நரகத்தை அடைவேன் என சாபமும் இட்டுள்ளனர், என்றார். இதைக் கேட்ட விதர்ப்ப மன்னன்,அகத்தியரே! உமக்கு எம் மகளை தருவதற்கில்லை. அப்படி தர வேண்டுமானால், நான் உமக்கு சீதனம் தரமாட்டேன். நீரே நான் கேட்கும் பொருளை எனக்குத் தர வேண்டும், என சொல்லி விட்டான். இதென்ன சோதனை? துறவியிடம் ஏது செல்வம்? இந்த மன்னன் கேட்கும் தொகைக்கு எங்கு போவேன்? என எண்ணிக்கொண்டிருந்த போது, லோபமுத்திரையும், அகத்தியரே! என்ன யோசனை? இப்பூவுலகில் இனிய இல்லறம் நடத்த பொன்னும் பொருளும் தேவை என்பதை நீர் அறிய மாட்டீரா? எனவே மிகப்பெரிய மாளிகை கட்டும் அளவுக்கு இடமும், அதை நிரப்புமளவுக்கு செல்வமும் கொண்டு வந்து என்னை மணம் முடித்துக் கொள்ளும். இல்லாவிட்டால், நீர் நரகம்செல் வதைத் தவிர வேறு வழியில்லை என்பதைப் புரிந்து கொள்ளும், என்றார்.

ஒரு பெண் தன்னை மணம் முடிக்க சம்மதித்ததே பெரிய விஷயம் என்ற முறையில், அகத்தியர் பலநாட்டு மன்னர்களையும் சந்தித்தார். அவர்களிடம் பொருளை யாசித்து பெற்றார். லோபமுத்திரை கேட்ட அளவுக்கு பொன்னும், பொருளும் கிடைத்தது. அதை அவளிடம் தந்து அவளைத் திருமணம் செய்து ஒரு மகனைப் பெற்றார். முன்னோர்கள் சாபம் நீங்கி அவரை வாழ்த்தினர். தன் மனைவி லோபமுத்திரையிடம், அடங்காமல் பிரவாகம் எடுத்த நதிபோல், என்னை ஆட்டி வைத்தவளே! இனி, நீ எனக்கு அடங்கி நடக்க வேண்டும். எந்தச் செல்வம் உனக்கு அவசியப்பட்டதோ, அந்தச் செல்வம் உலகம் முழுமைக்கும் கிடைக்க வேண்டும். சிவபெருமான் என்னை தென்னகம் சென்று பூமியை சமப்படுத்தச் சொன்னதன் தாத்பர்யம் உனக்குத் தெரியுமா? இந்த உலகத்தை அவரது பாதத்தால் ஓர் அழுத்து அழுத்தினால், அது சரியாகி  விடும்.ஏனெனில், இந்த பூமி அவருக்கே சொந்தமானது. ஆனால், உலகிலுள்ள உயிர்கள் சமநிலை பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர் என்னை அனுப்பி வைத்தார். உலகம் செழிக்க தண்ணீர் தேவை. தண்ணீர் இருந்தால், உலகத்தின் எல்லாப்பகுதியும் தானாக செழித்து விடும். பயிர் பச்சைகள் வளரும். லோபா! நீ என் கமண்டலத்துக்குள் வந்து விடு, எனச்சொல்லி அவர் மீது தீர்த்தம் தெளித்தார். அவள் தண்ணீராக உருமாறி, கமண்டலத்தில் புகுந்தாள். அந்த கமண்டலத்துடன் அவர்  குடகுமலையை அடைந்தார். மலையின் ஓரிடத்தில் தன் கமண்டலத்தை வைத்து விட்டு லிங்கபூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது, ஒரு காகம் பறந்து வந்தது. கமண்டலத்தை தட்டி விட்டது. கமண்டலம் சரியவே, உள்ளிருந்த தண்ணீர் ஆறாய்பிரவாகம் எடுத்தது.

பெரிய நீர்வீழ்ச்சியாய் அது கொட்டியது. இதை எதிர்பாராத அகத்தியர் கமண்டலத்தில் கொட்டியது போக மீதி தண்ணீரை மீண்டும் பத்திரப் படுத்திக் கொண்டார். பிரவாகம்எடுத்த நதி கடல் போல் பெருகியதால் சிவசமுத்திரம் என சிவனின் பெயரால் அதை அழைத்தார். அது கா என்னும் சோலைகளுக்குள் விரிந்து பரவிச் சென்றதால், காவிரி என்று பெயர் வைத்தார். பின்னர், மீதி தண்ணீருடன் பொதிகை மலைக்கு வந்த அவர், லோபா! நீ நிரந்தரமானவள். என் முன்னோரின் சாபம் தீர்த்த நீ, குடகில் நதியாய் பிராவகம் எடுத்தது போல், இந்த பொதிகையிலும் நதியாகி உலகை செழிப்பாக்கு. செழிப் புள்ள உலகத்தில் வறியவர் இருக்கமாட்டார்கள். வறியவர்இல்லாத பூமியில் சமத்துவமான வாழ்வு கிடைக்கும், என்று கூறி, கமண்டலத்தில் இருந்த மீதி நீரை, பொதிகையின் உச்சத்தில் இருந்த சிகரத்தில் கொட்டினார். அது பளபளவென மின்னியபடியே பாணம் போல வேகமாகப் பாய்ந்து ஒரு அருவியை உருவாக்கியது. அதற்கு பாண தீர்த்தம் என பெயர் வைத்தார். அந்த அருவி ஓரிடத்தில் தேங்கி, நதியாகப் பாய்ந்தது. அப்போது, ஓரிடத்தில் சிவபார்வதி தரிசனம் கிடைத்தது. அதைக் கண்ட  லாபமுத்திரை ஆனந்தமயமாகி மற் றொரு அருவியாய் வீழ்ந்தாள். அதற்கு கல்யாண தீர்த்தம் என பெயர் சூட்டினார் அகத்தியர். மீண்டும் ஓரிடத்தில் பக்தர்கள் நீராடி மகிழ ஒரு நீர்வீழ்ச்சியாய் மாறி, தன் கணவரின் பெயரால் அகத்தியர் தீர்த்தம் என்றே அழைக்கப்பட வேண்டும் என்ற தன் விருப்பத்தை தெரிவித்தாள். இன்றும் அதில் பக்தர்கள் நீராடி மகிழ்கின்றனர். தாமிரபரணி என்னும் பெயர் பெற்று அப்பகுதியை வளப்படுத்தினாள். பின்னர் அகத்தியர் பொதிகையில் தங்கி தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். உலகை சமநிலையாக்கிய மகிழ்ச்சியில் அங்கிருந்து மலைப்பாதையில் திருவனந்தபுரத்தை அடைந்தார். அங்கே அவர் சமாதி அடைந்ததாக கூறப்படுகிறது. ஒரு சிலர் அகத்தியர் கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

தியானச் செய்யுள்

ஐந்திலக்கணம் தந்த அகத்தியரே
சித்த வேட்கை கொண்ட சிவ யோகியே
கடலுண்ட காருண்யரே
கும்பமுனி குருவே சரணம் சரணம்

காலம்

அகத்தியர் முனிவர் மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 4 யுகம் 48 நாள் ஆகும்.
11.போகர்

இந்த உலகமக்கள் திருந்த மாட்டார்கள். அவர்களைப் பற்றி நீ கவலைப் படாதே. நீ உன் வழியில் செல், என்று மூத்த சித்தர்கள் கூறினர். போகருக்கு மனம் கேட்கவில்லை. கூடாது. இந்த மக்கள் அழியக்கூடாது. உலகத்தில் பிறந்தவர்கள் இங்கேயே நிரந்தரமாக வாழ வேண்டும்... போகரின் வேட்கை அதிகரித்தது. போகா! நீ தெய்வத்தின் கட்டளைகளுக்கு புறம்பாகச் செல்கிறாய். இது நல்லதல்ல. இறந்தவர்களை எழுப்பும் சஞ்சீவினி மந்திரத்தை தவிர மற்றவற்றை கற்றுக் கொள். அதுதான் உனக்கு நல்லது, என்று சித்தர்கள் சொன்னதை அவர் செவியில் போட்டுக் கொள்ளவில்லை. கடும் தவம் செய்தேனும் அந்த மந்திரத்தைக் கற்றே தீருவேன், அல்லது இறையருளால் அதை பெற்றே தீருவேன் என்ற உறுதி எடுத்துக் கொண்டார். இந்த போகசித்தர் சீனாவில் பிறந்தவர். தமிழகம் இவரது முன்னோரின்  பூர்வீகம் என்றாலும், அவர்கள் பிழைப்புக்காக சீனா சென்று விட்டனர். இவரது பெற்றோர் சீனாவில் சலவைத்தொழில் செய்து வந் தனர்.

அந்நாட்டு சூழ்நிலைக்கு ஏற்ப இவருக்கு போ-யாங் என பெற்றவர்கள் பெயர் வைத்தனர். மற்றொரு கருத்தின்படி, போகர் தமிழகத் தில் தான் பிறந் தார் என்றும், இவரது பெற்றோர்  இவரது பிறப்புக்கு பிறகே சீனா சென்றனர் என்றும், அங்கே போ-யாங் என்ற சீனரின் உடலில் கூடுவிட்டு கூடு பாய்ந்து வாழ்ந்தார் என்றும் சொல்லப்படுகிறது. பல்லாண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்கள் என்பதால் எதையும் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. அகஸ்தியர் பனிரெண்டாயிரம் என்ற நூலில் வரும் பாடலில், சித்தான சித்து முனி போகநாதன் கனமான சீனப்பதிக்கு உகந்த பாலன் என சொல்லப்பட்டுள்ளதில் இருந்து, இவரது சீனத்தொடர்பை தெரிந்து கொள்ள முடிகிறது. சீனாவில் குறிப்பிட்ட காலம் தங்கியிருந்த இவர், இவரது பெற்றோர் மறைவுக்கு பிறகு தாயகம் வந்தார். மேருமலை, இமயமலையில் தங்கியிருந்த சித்தர்களை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்பட்டது. இவரது முக்கிய நோக்கம் பாரதத்தின் மலைப்பகுதிகளில் மக்களின் கண்ணுக்கு  தெரியாமல் மறைந்து கிடக்கும் செல்வத்தை அவர்களுக்கு பகிர்ந்தளிப்பதும், நோய்கள் தாக்கியோரை மீண்டும் அவை தாக்காமல் இருக்க வழி செய்வதுமாகும்.

இமயமலையில் தவம் செய்த முனிவர்களுக்கும், சித்தர்களுக்கும் அவர் தங்கம் செய்யும் முறையைச் சொல்லிக் கொடுத்தார். பொருள் என்பது தக்கவர்களிடம் இருக்க வேண்டும். முனிவர்களுக்கு அதிகப் பொருள் தேவையில்லை. பொருளை வெறுக்கும் அவர்கள், நிச்சயமாக உலக மக்களின் நன்மைக்கே அதைச் செலவிடுவார்கள் என்பதால் போகர் இந்த ஏற்பாட்டைச் செய்தார்.இமயமலையில் அவர் தங்கியிருந்த போது பல மாணவர்கள் அவரைச் சந்தித்தனர். அவரது திறமையை அறிந்த அந்த மாணவர்கள் போகரின் சீடர்கள் ஆயினர். அவர்களில் புலிப்பாணி, கருவூரார், சட்டைமுனி, இடைக்காடர் உள்ளிட்ட 63 பேர் இருந்தனர். மனிதர்களை ஒரே ஒரு ஆணவ குணம் இன்று வரை வாட்டி வதைக்கிறது. அதாவது, தனக்கு தெரிந்த நல்ல விஷயங்களை பிறருக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை. இந்த போக்கை போகர் அறவே வெறுத்தார். தனக்கு தெரிந்த நல்ல சித்து வேலைகளை தன் சீடர்கள் 63 பேருக்கும் சொல்லிக் கொடுத்து, பாரததேசத்திலுள்ள மக்கள் அனைவரும் அதனால் பயன்படும் ஏற்பாட்டைச் செய்தார். வானில் பறப்பது, நீரில் மிதப்பது, காயகல்பம் எனப்படும் உடலை நீண்ட நாள் ஆரோக்கியமாக வைத்திருக்கும் மருந்துகளைத் தயாரிப்பது உள்ளிட்ட பல விஷயங்களை சீடர்களுக்கு கற்றுத் தந்திருந்தார்.

அவர்களுக்கு தேர்வும் வைத்தார். தேர்வில் அனைவரும் வெற்றி பெற்றனர்.பின்னர், அந்த சீடர்கள் தேசத்தின் பல திசைகளுக்கும் சென்றனர். தங்கள் சித்துவேலைகளை மக்களிடம் கற்றுக் கொடுக்க முயன்றனர். அறியாமையில் தவித்த மக்களோ, அவற்றை அவர்களிடம் கற்றுக் கொள்ள  முன்வரவில்லை. இதையறிந்த போகர் வருத்தப் பட்டார்.இருந்தாலும், அவர் மனம் தளரவில்லை. இறந்தவர்களை பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரத்தை மக்கள் மத்தியில் பரப்புவதன் மூலம், அவர்கள் சித்து வித்தைகளை கற்று நன்மை பெற வேண்டும் என உறுதியெடுத்தார். இமயமலையில் பல மூத்த சித்தர்களையும் சந்தித்து தன் விருப்பத்தை தெரிவித்த போது, இந்தக் கதையின் துவக்கத்தில் எழுதப்பட்டுள்ள உரையாடல் சித்தர்களுக்கும், போகருக்கும் இடையே நிகழ்ந்தது. சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுத்தர  மூத்த சித்தர்கள் மறுத்துவிட்டதால், உலக மக்களின் சாவுப்பிணியை தீர்க்க முடியாமல் போனது குறித்து போகர் வருந்தினார். மக்களைக் காப்பாற்ற முடியாத நான்உலகில் வாழ்ந்து பயனில்லை. நான் சாகப்போகிறேன் எனச் சொல்லி தரையில் புரண்டு அழுதார்.மற்ற சித்தர்கள் அவரைத் தேற்றினர்.போகா, நீ எடுத்த முடிவு சரியல்ல. நாம் நினைத்தது நடக்கவில்லை என்பதற்காக, உயிரை விட்டால், உலகில் யாருமே மிஞ்சமாட்டார்கள். நினைப்பது எதுவும் நடப்பதில்லை. மரணம் என்பது உலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் இறைவன் வகுத்த நியதி. இறைநியதியை மீறுவது நல்லதல்ல. மேலும், நீ அவரது கோபத்திற்கு ஆளாவாய். உன் தற் கொலை எண்ணத்தை மாற்றிக் கொள். நீ காயகல்பம் உள்ளிட்ட மருத்துவ முறைகளைக் கற்றவன். அதைக் கொண்டு, மக்களுக்கு தீர்க்காயுள் தர முயற்சிக்கலாமே தவிர, நிரந்தர வாழ்வு தரும் எண்ணத்தை விட்டு விடு. நடக்காததைப் பற்றி சிந்திக்காதவனே ஞானி, என்று அறிவுரை கூறினர்.போகர் அரை மனதுடன் அங்கிருந்து கிளம்பி மேருமலைக்குச் சென்றார். அங்கே காலங்கிசித்தரின் சமாதி இருந்தது. அதை வணங்கியபோது, அவர் முன்னால் பல சித்தர்கள் தோன்றினர்.போகரே! நாங்கள் காலங்கி சித்தரின் சீடர்கள். ராமன், பாண்டவர்கள், திருதராஷ்டிரன், அரிச்சந்திரன், ராவணன் போன்றவர்களெல்லாம் இப்போது நாங்கள் தங்கியிருக் கும் இடத்திற்கு வந்து, தாங்கள் படித்த வித்தைகளை சோதித்து பார்த்தனர். அந்தக்காலம் முதலே இங்கு தங்கியிருக்கிறோம். உனக்கு என்ன வேண்டும்? என்றனர்.

உலகத்தில் பிறந்த எவரும் இறக்காத சஞ்சீவினி மந்திரத்தை கற்றுக் கொள்வதே தனது நோக்கம் என்பதை போகர் அவர்களிடம் பணிவுடனும், கருணை பொங்கவும் கேட்டார். அந்த சித்தர்கள் போகரிடம், மகனே! இதோ, அங்கே பார் என ஓரிடத்தைச்சுட்டிக்காட்டினர். போகர் வியந்தார். அங்கே ஏராளமான நவரத்தினங்கள் மலை போல் குவிந்து கிடந்தன. இன்னொரு இடத்தை அவருக்கு காட்டினர். அங்கே தங்கம் குவிந்து கிடந்தது. எங்கும் பிரகாச மயம்! போகரின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது. அந்நேரத்திலும் மக்களைப் பற்றிய சிந்தனையே அவர் உள்ளத்தில் எழுந்தது. சாதாரண மனிதனாக இருந்தால் என்ன செய்திருப்பான்? இது அத்தனையையும் வெட்டியெடுத்து, உலகின் முதல் பணக்காரன் என்ற அந்தஸ்தைப் பெற்று, பெருமையடிக்கலாம் என்ற எண்ணம் கொண்டிருப்பான். போகரோ, அந்த சித்தர்களிடம், சித்தர்களே! இது இங்கே வீணாகக் கிடக்கிறதே. உலக மக்கள் அனைவருக்கும் இதை அள்ளிக்கொடுத்தாலும் கூட, மிஞ்சும் போல தெரிகிறதே. எல்லோரும் வளமுடன் வாழ்வார்களே! இது இங்கிருந்தும் மக்களுக்கு கொடுக்காமல் வீணடிக்கிறீர்களே! என்றார். சித்தர்கள் வேதனையுடன் சிரித்தனர். போகா! எதற்காக இந்த மக்களைப் பற்றிக் கவலைப்படுகிறாய்? நம்மைப் போன்ற ஆன்மிக சிந்தனையுள்ளவர்களை அவர்கள் மதிப்பதும் இல்லை; இறையருளை நாடுவதுமில்லை. நிஜமான இன்பத்தை பற்றி நாம் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் புரிவதில்லை. அந்த நன்றிகெட்ட ஜனங்களுக்கு இதெல்லாம் போய் சேர வேண்டும் என எண்ணுகிறாயே! அவர்கள் இந்த செல்வத்தை அனுபவிக்க தகுதியில்லாதவர்கள், என சொல்லிவிட்டு, போகரின் பதிலுக்கு காத்திராமல் மறைந்தனர்.ஐயையோ! இந்த சித்தர்கள் திடீரென மறைந்து விட்டார்களே! இந்த செல்வத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அவசரத்தில்,  அவர்களை நிரந்தரமாக வாழ வழி செய்யும் மந்திரம் பற்றி பேச மறந்து விட்டேனே! இந்த செல்வம் தான் மனங்களை எப்படி மாற்றி விடுகிறது! கொண்ட கடமையையே மறக்கச் செய்து விடுகிறதே, என வருந்திய போகரை நோக்கி ஏதோ ஒரு ஒளி பாய்ந்தது. அது அவரது கண்களை கூசச் செய்தது.

போகர் தன் கைகளை மடக்கி, கண்களை மறைத்தபடியே, ஒளி வந்த திசையை நோக்கினார். ஆள் அளவு உயரமுள்ள ஒரு புற்றில் இருந்து அந்த ஒளி பாய்ந்து வந்தது. அந்த புற்றை நோக்கி நடந்தார் போகர். புற்றுக்குள்ளிருந்து மூச்சு வந்தது. இது பாம்புகளின் மூச்சு போல இல்லையே! யாரோ ஒருவர் புற்றுக்குள் அமர்ந்திருக்கிறார் போல் தெரிகிறதே, என கணித்த அவர், உள்ளிருப்பவர் மகா தபஸ்வியாகத்தான் இருக்க வேண்டும். இவர் மூலமாக சஞ்சீவினி மந்திரத்தை கற்று விடலாம் என்ற ஆர்வத்தில், அவர் வெளியே வரும் வரை காத்திருப்பது என முடிவு செய்து, உள்ளிருக்கும்  முனிவரை மனதில் எண்ணி தவம் செய்யத் தொடங்கி விட்டார்.இவரது தவத்தின் வெப்பம் உள்ளிருந்த முனிவரைத் தாக்கியது. அவர் புற்றில் இருந்து வெளியே வந்தார். அந்த முனிவர் கடந்த காலத்தில் நிகழ்ந்ததையும், எதிர்காலத்தில் நிகழப்போவதையும் அறிந்த மகாஞானி. அவர் தவமிருந்த போகரை எழுப்பி, போகரே! என ஆரம்பித்ததும்,  சுவாமி! என் பெயர்  தங்களுக்கு எப்படி தெரியும்? என வியப்புடன் கேட்டார். எல்லாம் அறிந்த அந்த சித்தர் சிரித்துக் கொண்டார். போகரே! தவ சித்தர்கள் அனைவருக்கும் ஒருவரை அடையாளம் கண்டுபிடிப்பது கடினமல்ல, என்ற சித்தரிடம், சித்தரே! தாங்கள் எவ்வளவு காலமாக இங்கே தவம் செய்கிறீர்கள்? என்றார் போகர். இப்போது எந்த ஆண்டு நடக்கிறது? என சித்தர் கேட்கவே, சித்தரே! இது கலியுகம் துவங்கி சில ஆண்டுகள் ஆகிறது, என்றதும், ஆஹா...காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது.

நான் துவாபராயுகத்தின் துவக்கத்தில் இருந்து இங்கே தவமிருக்கிறேன். ஒரு யுகமே முடிந்து விட்டதா? என்ற சித்தர், போகனே! உன் குறிக்கோளையும் நான் அறிவேன்.  முதலில், அதோ தெரிகிறதே! அந்த மரத்திலுள்ள பழத்தை சாப்பிட்டு பசியாறு. பிறகு பேசலாம், என்று சித்தர் சொன்னதும், போகர் அந்த மரத்தை நோக்கி நடந்தார். அதிலுள்ள கனியைப் பறித்து சாப்பிட்டதும், எங்கோ மிதப்பது போல் இருந்தது. தன்னை மறந்த நிலையில் ஓரிடத்தில் அமர்ந்து விட்டார். புற்றில் இருந்து வந்த சித்தர், அவரிடம் ஒரு மூலிகை பொம்மையைக் கொடுத்து, போகா! இந்த பதுமை உன் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும், என சொல்லிவிட்டு, மீண்டும் புற்றுக்குள் போய் விட்டார். போகர் அந்த பதுமையிடம், இறப்புக்குப் பின் உயிர் வாழும் வித்தை பற்றி கேட்டார். அந்தப் பொம்மையோ, பிறந்தது முதல் இறக்கும் வரை உள்ள விஷயங் களை பேசியதே அன்றி, அந்த வித்தையும், அதற்குரிய மூலிகைகளும் தனக்குத் தெரிந்தாலும், உலக நியதிப்படி அதைச் சொல்லித் தர முடியாது எனச் சொல்லி மறைந்து விட்டது.எவ்வளவு முயன்றாலும், இந்த ஒரு விஷயம் மட்டும் நடக்க மறுக்கிறதே என கலங்கிய போகசித்தர், தன் முயற்சியை விட்டாரில்லை. முயற்சி உடையவனுக்கு அவன் முயலுவது கிடைக்காமல் போனதில்லை. சித்தருக்கும் அந்த நல்ல நாள் வந்தது.அவர் ஒருமுறை, மேருமலை உச்சியில் ஏறினார். அந்த மலையில் சித்தர்கள் பலர் வசித்து, பல்வேறு மூலிகைகளைப் பயன்படுத்தியதன் விளைவாக தங்கப் பாறைகள் நிறைந்ததாக இருந்தது. ஓரிடத்தில், தங்கத்தின் ஒளி கண்ணைப் பறிக்கவே, அதன் பிரகாசம் தாங்க முடியாமல், போகர் தடுமாறி கீழே விழுந்தார். அவரை சில சித்தர்கள் தாங்கிப் பிடித்தனர்.

போகனே! நாங்கள் நான்கு யுகங்களாக இங்கே வசிப்பவர்கள். உலகை வாழ வைக்க வேண்டுமென்ற உன் விடாமுயற்சியைப் பாராட்டுகிறோம். வா எங்களுடன்!இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மூலிகை இந்த மலையிலுள்ள ஒரு குகைக்குள் இருக்கிறது. அதை உனக்கு காட்டுகிறோம். சஞ்சீவினி மந்திரத்தையும் போதிக்கிறோம், என்றதும், போகரின் கண்கள் மகிழ்ச்சியால் விரிந்தன. குகைக்குள் சென்றதும், பச்சை பசேலென பல மூலிகைச் செடிகள் காணப்பட்டன. அவற்றில் யாரும் கை வைக்காததாலும், தூசு பட வழியே இல்லாததாலும், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் தெய்வத்தன்மை வாய்ந்ததாலும் பளபளவென மின்னின. போகரை அழைத்துச் சென்ற மற்ற சித்தர்கள் அந்த மூலிகைகளின் தன்மை, அதைப் பயன்படுத்தும் முறை ஆகியவற்றை பற்றி  விளக்கமாக எடுத்துச்சொன்னார்கள். பிறந்த பலனை அடைந்த மகிழ்ச்சியில் போகரின் நெஞ்சு ஆனந்தத்தால் விம்மியது. உணர்ச்சிக்கடலாக மாறிப்போன அவர், தனக்கு தகவல் தந்த சித்தர்களின் பாதங்களில் பணிந்து வணங்கி, இனி, இவற்றைக் கொண்டு உலகில் இறப்பில்லாமல் செய்வேன் எனச் சொல்லி அவர்களிடம் விடை பெற்றார். மனிதனுக்கு கிடைக்காத ஒன்று கிடைத்து விட்டால், அவன் ஆனந்தக் கூத்தாடுகிறான். ஆட்டம் பாட்டம் கும்மாளம் தான். போகரைப் போன்ற சித்தர்கள் கூட, இதற்கு விதிவிலக்கல்ல போலும்! மிதமிஞ்சிய கவலையும் ஆபத்து, மிதமிஞ்சிய மகிழ்ச்சியும் ஆபத்தான விஷயம் தான்! எதற்கும் ஒரு அளவு வேண்டும். போகர், தனக்கு கிடைக்காத ஒன்று கிடைத்த மகிழ்ச்சியில் குகையை விட்டு வெளியே வந்து துள்ளித் துள்ளி குதித்தார். ஆட்டம் என்றால் அப்படி ஒரு ஆட்டம்! அவர் ஆடிய ஆட்டத்தில் பூமியே அதிர்ந்தது. அப்போது, அப்பகுதியில் தவமிருந்த கண்ணுக்குத் தெரியாத சித்தர்கள் பலர் அவர் முன்பு தோன்றினர். போகா! என்ன இது! மகிழ்ச்சியின் போது தான் மனிதன் அடக்கத்துடன் இருக்க வேண்டும். உன் நடனத்தால், கலையாத எங்கள் தவத்தைக் கலைத்து விட்டாய். பல யுகங்களாக நாங்கள் செய்த தவம் வீணாகிப் போய் விட்டது. இதற்கு கடும் தண்டனையை உனக்கு அளிக்கப் போகிறோம். ஒருவர் செய்த வினையின் பலனை அனுபவித்தே தீர வேண்டும். எங்கள் நீண்ட கால தவம் எப்படி பயனற்றுப் போனதோ, அதே போல நீ இங்கே பார்த்த சஞ்சீவினி மூலிகைகளை பயன்படுத்தி உயிர்களைக் காக்க நினைத்த உங்கள் நீண்ட நாள் முயற்சி பயனற்றுப் போவதாக! இந்த மூலிகைகளை நீ பறித்துச்  சென்றாலும், நீ அதைப் பயன்படுத்தும் போது அதற்குரிய மந்திரம் உனக்கு மறந்து போகும் என சாபமிட்டனர். போகர் அலறித்துடித்தார்.

சித்தர் பெருமக்களே! செய்தற்கரிய தவறு செய்து உங்களின் சாபத்தை அடைந்தேனே! வேண்டாம்....  வேண்டாம்... இந்த உலகைக் காக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறதல்லவா! நமக்குள் நடந்த இந்த விவாகரத்துக்காக உலகத்தை பழி தீர்த்து விடாதீர்கள். மன்னியுங்கள், மன்னியுங்கள், என கண்களை மூடிக்கொண்டு கதறினார். அவரது கதறலைக் கேட்க அங்கே சித்தர்கள் இருந்தால் தானே! அவர்கள் காற்றில் கரைந்தது போல மறைந்து விட்டனர். ஐயோ! என் வாழ்க்கை லட்சியம் அழிந்ததே! இனி இந்த மக்கள் மரணத்தின் பிடியில் இருந்து எப்படி மீள முடியும்? இறைவா! என்னை சோதித்து விட்டாயே, என புலம்பியவர், வேறு வழியின்றி அப்படியே மயங்கி சாய்ந்து விட்டார். எதுவும் காரணத்துடனேயே நடக்கிறது. வந்தவரெல்லாம் தங்கி விட்டால், இந்த உலகம் தாங்காது. உலகத்திற்கு வருபவர்களெல்லாம் பிழைத்திருக்க வேண்டுமானால், அவர்களை வழி நடத்துவது யார்? இயற்கைக்கு இறைவன் விதித்திருக்கும் கட்டளைகளில் மிக முக்கியமானது மரணம். அதை இயற்கை எப்படி மீறும்? அதனால் தான், இறைவன் இப்படி ஒரு லீலையை சித்தர்கள் மூலமாக நிகழ்த்தியிருக்கிறான். அப்படியானால், அவன் ஏன் சஞ்சீவினி போன்ற மூலிகைகளைப் படைத்திருக்க வேண்டும் என்றால், அது தான் தெய்வ ரகசியம். தெய்வத்தின் சூட்சுமங்கள் முழுவதுமாக நமக்கு புரிந்து விட்டால், அதெப்படி தெய்வமாக இருக்க  முடியும்? மயங்கிக் கிடந்த போகரை நோக்கி ஒரு பறவை வந்தது. அந்தப் பறவையை கண்டப் பேரண்டம் என்பார்கள். அது, குகைக்குள் சென்று ஒரு மூலிகையைப் பறித்து வந்து போகரின் மூக்கருகே நீட்டியது. போகர் மயக்கம் தீர்ந்து எழுந்தார். போகரே! நடந்ததை நினைத்து வருத்தப்படக்கூடாது. இங்கே லட்சக்கணக்கான சித்தர்கள் தங்களை மறந்த நிலையில் தவமிருந்து வருகின்றனர். உன் நடமாட்டம் அவர்களை விழிக்கச் செய்து விடும். இப்போது கற்ற வித்தைகளே போதும்! இதைக் கொண்டே நீ உலகிலுள்ளோரின் ஆயுளை விருத்தி செய்து, தீர்க்காயுளுடன்  வாழ வழி செய்யலாம். இங்கிருக்கும் மற்ற சித்தர்களையும் விழிக்கச் செய்து, இருப்பதையும் இழந்து விடாதே. இருப்பதைக் கொண்டு திருப்தியடைபவனே புத்திமான், என அறிவுரை கூறியது. போகரும் அங்கிருந்து கிளம்பி ஆகாயமார்க்கமாக பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார். தியானத்தில் ஆழ்ந்த அவருக்கு அன்னை உமையவள் காட்சி தந்தாள்.போகா! வருந்தாதே! உலகை அழிப்பதும், காப்பதும் எனது பணி. நீ இங்கிருந்து பழநிமலைக்குச் செல். அங்கே என் மகன் முருகனை வழிபடு, என்று கூறி மறைந்தாள். அன்னையின் கட்டளையை ஏற்று போகர் பழநிக்கு வந்தார். கடும் தவமிருந்தார். அவர் முன்னால் முருகப்பெருமான் கோவணத்துடன், தண்டாயுதபாணியாகக் காட்சி தந்தார். போகரே! நீர் நவபாஷாணத்தால் எனக்கு சிலை வடிக்க வேண்டும்.

நான் சொல்லும் வழி முறைகளின் படி வழிபாட்டுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும், எனக்கூறி அதுபற்றி தெளிவாகச் சொன்னார். போகரும் மனம் மகிழ்ந்து நவபாஷாணத்தால் சிலை வடித்தார்.  முருகப்பெருமான் அருளியபடியே அதை பிரதிஷ்டை செய்து அபிஷேகமும் பூஜையும் செய்து வந்தார். அந்த அபிஷேகப் பிரசாதத்தைப் பெற்றவர்கள், நோய்கள் நீங்கி, சுகவாழ்வு பெற்று, தீர்க் காயுளுடன் வாழ்ந்தனர். இதனால் தான் இன்றைக்கும் பழநிமலைக்கு மக்கள் ஏராளமாக வருகின்றனர். தமிழகத்திலேயே அதிக வருமானம் உள்ள கோயிலாகவும் இது விளங்குகிறது. போகர், நாமக்கல் அருகிலுள்ள திருச்செங்கோடு சென்றார். அங்கிருக்கும் அர்த்தநாரீஸ்வரரையும் நவபாஷாணத்தில் வடித்தாகவும் ஒரு தகவல் இருக்கிறது. அவர் சீனாவுக்கும் அடிக்கடி வானமார்க்கமாக சென்றார்.  ஒரு கட்டத்தில் சீன அழகிகள் சிலருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டு, தனது சக்தியை இழந்தார். புலிப்பாணி அங்கு சென்று, அவரை மீட்டு வந்து மீண்டும் சக்தி  பெற ஏற்பாடு செய்தார்.  கொங்கணர், இடைக்காடர், கமலமுனி, மச்சமுனிவர், நந்தீசர் ஆகிய சித்தர்களும் இவரது சீடர்களாக இருந்தவர்களே! சீனாவில் இருந்து திரும்பி, பழனியில் சிலகாலம் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதியடைந்தார். அவரது சமாதி பழனி ஆண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது.

நூல்: அகத்தியர் தமது சவுமிய சாகரத்தில் போகர் இயற்றிய நூலின் பட்டியலைத் தருகின்றார்.

போகர்  12,000
சப்த காண்டம்  7000
போகர் நிகண்டு  1700
போகர் வைத்தியம் 1000
போகர் சரக்கு வைப்பு 800
போகர் ஜெனன சாகரம் 550
போகர் கற்பம்  360
போகர் உபதேசம் 150
போகர் இரண விகடம் 100
போகர் ஞானசாராம்சம் 100
போகர் கற்ப சூத்திரம் 54
போகர் வைத்திய சூத்திரம் 77
போகர் மூப்பு சூத்திரம் 51
போகர் ஞான சூத்திரம் 37
போகர் அட்டாங்க யோகம் 24
போகர் பூஜாவதி  20

தியானச் செய்யுள்:

சிவகை ஏந்தி, சிரம் தாழ்த்தும்
சித்தர் பெருமக்களுக்கு
மூலிகை மேனியாய் பேரருள் புரியும்
போகர் பெருமானே
சிவபாலனுக்கு ஜீவன் தந்த
சித்த ஒளியே
நவபாஷாணத்து நாயகனே
உங்கள் நல்லருள் காக்க காக்க....

காலம்: போகர் முனிவர் வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 300 ஆண்டுகள் 18 நாள் ஆகும்.
12.காலாங்கிநாதர்

திருமூலர் திகைத்தார். இங்கே இருந்த நம் சீடன் காலாங்கி எங்கே போய் தொலைந்தான்? அதோ, அங்கே ஒரு இளைஞன் நிற்கிறான்! அவனிடம் கேட்டால், விஷயம் தெரியும்! என சிந்தித்தவராய், தம்பி! இங்கே ஒருவர் சமையல் செய்து கொண்டிருந்ததை பார்த்தாயா? என்றார். அந்த இளைஞர் திருமூலரின் பாதங்களில் அப்படியே விழுந்தார். கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. குருவே! மன்னிக்க வேண்டும். நான் தான் உங்கள் சீடன் காலாங்கி. நடுத்தர வயது தோற்றத்தில் இருந்தவன் தான், இப்போது இப்படி இளைஞனாகி விட்டேன், என்று அரற்றினான்.திருமூலர் ஆச்சரியத்துடன், காலாங்கி!இதென்ன விந்தை! இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது? உன்னை சமைக்கத்தானே சொன்னேன். அதை விட்டுவிட்டு, நீ என்ன செய்தாய்? என்றார். குருவே! தங்கள் உத்தரவுப்படி நான் சமைக்கவே செய்தேன். சோறு பாத்திரத்தின் அடியில் பிடித்து விடக்கூடாதே என்பதற்காக, ஒரு மரத்தின் குச்சியை ஒடித்து கிளறினேன். அவ்வளவு தான்! சோறு கருப்பாகி விட்டது. தாங்கள் வந்தால் அரிசியை பாழாக்கி விட்டாயே மடையா என திட்டுவீர்கள் இல்லையா? அதற்கு பயந்து, சோறை வெளியில் கொட்டவும் தயங்கி, அதை சாப்பிட்டு விட்டேன். அடுத்த கணமே என் முதுமை மறைந்தது. நான் இளம்பிள்ளையாகி விட்டேன், என்றார் காலாங்கி.திருமூலருக்கு ஆச்சரியத்துடன் கோபமும் வந்தது.சோறு என்ன ஆனாலும், என்னிடமல்லவா சொல்லியிருக்க வேண்டும். உண்மையை மறைப்பதற்காக அதை சாப்பிட்டிருக்கிறாய். குருவிடம் சீடன் எதையும் மறைக்க நினைப்பது பாவம். இந்த பாவத்திற்கு பரிகாரத்தை நீயே செய்து கொள், என சொல்லி விட்டு அங்கிருந்து அகல முயன்றார். காலாங்கி, திருமூலரின் காலைப் பிடித்தார்.

குருவே! இந்த சிறுவனை மன்னியுங்கள். என்னை பிரிந்து சென்றுவிட்டால், நான் உயிர் தரிக்கமாட்டேன். சற்று பொறுங்கள். உங்கள் முன்னாலேயே என் தவறுக்கு பரிகாரம் தேடிக்கொள்கிறேன், என்றவர் தொண்டைக்குள் விரலை விட்டார். சாப்பிட்ட சோறை வாந்தியெடுத்தார். இதைப் பார்த்த திருமூலர், அவர் வாந்தியெடுத்ததை எடுத்து அப்படியே சாப்பிட்டு விட்டார். அடுத்த கணமே அவரும் இளைஞராகி விட்டார். காலாங்கிநாதரும் இளமை மாறாமல் அப்படியே இருந்தார். வயதில் முதியவர்களாக இருந்தாலும், வாலிப முறுக்கைப் பெற்ற இவர்கள் சேலம் அருகிலுள்ள கஞ்சமலையில் தங்கியிருந்தனர். திருமூலரின் காலத்துக்கு பிறகு, அங்கிருந்து புறப்பட்டு, மதுரை அருகில் ஏராளமான சித்தர்கள் வசித்த சதுரகிரி மலைக்குச் சென்றார் காலாங்கி.அந்த மலையில் ஒரு சிவாலயம் கட்டும் பணியில் வணிகர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். மிக உயரமான, மனிதர்கள் மிக எளிதில் நுழைய முடியாத காட்டுப்பகுதியில் கோயிலைக் கட்டி வந்ததால், அவர் கையில் இருந்த பணமெல்லாம் தீர்ந்து விட்டது. யாரிடமாவது உதவி பெற்று கோயில் பணியை முடிக்க வணிகர் முடிவு செய்திருந்தார். இந்நேரத்தில் காலாங்கிசித்தர் அங்கு வரவே, அவரிடம், சுவாமி! தாங்கள் தான் இந்தக் கோயிலை கட்டி முடிக்க செல்வத்தை தந்தருள வேண்டும், என்றார். காலாங்கியோ துறவி. அவரிடம் ஏது பணம்? அவர் அந்த வணிகரிடம், நான் அருட்செல்வத்தை தேடி அலைபவன். மக்கள் நன்றாக வாழ அவர்களின் கர்மவினைகளை ஏற்று, என்னை வருத்திக் கொள்ளவே இங்கு வந்துள்ளேன், என்றார். வணிகரோ விடவில்லை. அவருடனேயே தங்கி அவருக்கு பல சேவைகள் செய்து வந்தார். அந்த வணிகரின் குரு பக்தியையும், கோயில் கட்ட வேண்டும் என்ற மனஉறுதியையும் மெச்சிய காலாங்கிநாதர், அந்த மலையில் கிடைத்த பலவித மூலிகைகளை பறித்து வந்தார். அவற்றில் இருந்து தைலம் தயாரித்தார். அந்த தைலத்தைக் கொண்டு தங்கம் தயாரித்தார். அதில் கோயில் கட்ட தேவையான அளவு வணிகருக்கு கொடுத்தார். மீதி தங்கம் ஏராளமாக இருந்தது.

ஒரு பெரிய பள்ளத்தில் அதைப் போட்டு மூடி, பெரும்பாறை ஒன்றால் மூடிவிட்டார். கெட்டவர்களின் கையில் அது கிடைத்தால், அதை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதால் அப்படி செய்தார். மேலும் அந்தப் பாறையை சுற்றி காளி, கருப்பண்ணன், வராஹி, பேச்சியம்மன் என்ற காவல் தெய்வங்களை பிரதிஷ்டை செய்து அந்தப் பொன்னை பாதுகாக்கச் செய்தார். பழநியில் முருகனுக்கு சிலை செய்த போகர் இவரது சீடர்களில் ஒருவர். சதுரகிரி மலையில் பல சித்தர்களை அவர் கண்டார். இந்த சித்தர் காற்றைப் போன்றவர் என்பதால் பறக்கும் சக்தி பெற்றிருந்தார் என்கிறார்கள். இதைப் பயன்படுத்தி அடிக்கடி சீனா சென்று வந்துள்ளார். இவர் அங்கேயே சமாதி அடைந்ததாக ஒரு தகவல் இருக்கிறது.இன்னும் சிலர், தான் தன் குருவுடன் வசித்த கஞ்சமலையில் இரும்புத்தாதுவாக மாறி அங்கேயே ஜீவசமாதி அடைந்தார் என்கிறார்கள். இப்போதும் கஞ்சமலையில் லிங்கவடிவில் அருள் செய்வதால், இந்த லிங்கத்தை சித்தேஸ்வரர் என்கின்றனர். அமாவாசை அன்று இவரை தரிசிப்பது விசேஷம். கஞ்சமலையை பவுர்ணமியன்று மாலையில் கிரிவலமும் வருகின்றனர். இம்மலையிலுள்ள மூலிகை காற்று பல நோய்களை தீர்ப்பதாக பக்தர்கள் சொல்கிறார்கள். இம்மலையின் சுற்றளவு 18 கி.மீ.,பிரம்மலோகத்திற்கே இவர் சென்று விட்டதாகவும் சொல்கின்றனர். அந்த லோகத்தில், ஒரு வில்வமரத்தூண் இருக்கிறது. இதை காலங்கி நாதர் கால் என்பர். இந்த தூணில் அவர் உறைந்திருப்பதாகவும், பிரம்மனை வழிபடுபவர்களுக்கு காலாங்கிநாத சித்தரின் அருள் கிடைக்குமென்றும், அவர்களின் தலைவிதி மாற்றப்பட்டு ஆயுள் அதிகரிக்கும் என்றும் சொல்கிறார்கள்.இன்னும் சில நூல்களில், இவர் காஞ்சிபுரத்தில் சமாதி அடைந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.காலாங்கி முனிவர் காலத்தை வென்றவர். ஒருமுறை உலகமே தண்ணீரால் அழிந்த வேளையில், இவர் மேருமலையில் ஏறி அங்கிருந்த சித்தர்களுக்கு காயகல்ப வித்தைகள் பலவற்றை சொல்லிக் கொடுத்திருக்கிறார். இவரை வணங்குபவர்களுக்கு கோபம் கட்டுப்படும். திறமைசாலியாக இருப்பார்கள் என்பது நம்பிக்கை.
13.கொங்கணர்

திருவாவடுதுறையில் இருந்து கிளம்பிய ஒரு ஒளிக்கீற்று, அந்த இளைஞனின் கண்களை  தாக்கியது.ஆம்...அதே தான்! எனக்கு தேவையான அஷ்டமாசித்திகளை அருளும் தேவதை அங்கு தான் இருக்கிறது. எங்கிருந்து இந்த ஒளி கிளம்பியதோ, அந்த இடத்துக்கு நான் சென்றாக வேண்டும். அந்த தேவதையின் தேஜஸே, இப்படி ஒரு வெளிச்சமாக என் கண்களில் பரவியிருக்க வேண்டும். புறப்படுவோம். என் ஆன்மிக சந்தேகங்கள் அனைத்துக்கும் அங்கு தான் விடை கிடைக்கப் போகிறது, என்று மகிழ்ந் தான் அந்த இளைஞன்.இன்றைய கேரளத்தில், கொங்கணப்பிரதேசம் என்று சொல்லக்கூடிய பகுதியிலுள்ள காட்டில் அவனது குடில் இருந்தது. அவனது பெற்றோர் வேட்டைக்காரர்கள். வேடர் பரம்பரையில் பிறந்தவன் அந்த இளைஞன். யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல், இரவோடு இரவாக காட்டை விட்டு கிளம்பியவன், நாட்டுப்புறத்துக்குள் நுழைந்தான். உலகமக்கள் ஆசையில் மூழ்கி, செல்வத்தை சேர்க்க அங்குமிங்கும் ஓடுவதைக் கண்ட அவனுக்கு சிரிப்பும், அழுகையுமாய் மாறிமாறி வந்தது.அட உலகமே! நீ செல்வத்தை சேர்த்து என்ன சாதிக்கப் போகிறாய். சித்திகளை படித்து தேர்ந்தால், இறைவனை அடைந்து விடலாமே! இறைவனிடம் சென்று விட்டால், உனக்கேது பசி, பட்டினி, ஆசை, தூக்கம், துக்கம் இதெல்லாம்... எதன் மீதுமே பற்றின்றி வாழலாமே, என சிந்தித்தபடியே, ஒளி வந்த திசை நோக்கி நடந் தான் அந்த இளைஞன்.தமிழகத் துக்குள் நுழைந்த அவன், தஞ்சாவூர் இருக்கும் பகுதியைத் தாண்டி வந்த போது, திருவாவடுதுறை என்ற புண்ணிய தலம் தென்பட்டது. அங்கே, தன் மீது ஒளியைப் பாய்ச்சிய ஒரு சித்தர் தவத்தில் அமர்ந்திருந்தார். அவரது பாதங்களில் விழுந்து, அவர் கண் விழிக்கட்டுமே என காத்திருந்தான்.அவர் கண்களைத் திறந்தார். வா இளைஞனே! நீ இங்கு வருவாய் என்பதை நான் அறிவேன். உன் பெயர் இன்னதென்று கூட எனக்குத் தேவையில்லை.

நீ கொங்கண தேசத்தில் இருந்து வந்தவன் என்பதால், உன்னை நான் கொங்கணா என்றே அழைப்பேன். அஷ்டமாசித்திகளை அடைய விரும்பி நீ வந்துள்ளாய், அவையே உன்னை இறைவனிடம் அழைத்துச் செல்லும் என நம்புகிறாய். அஷ்டமாசித்திகள், என்பவை மனித குலத்துக்கு நீ பல பயனுள்ளவற்றைச் செய்யவும் பயன்படும் என்பதை மறக்காதே, என்றதும், தான் வந்த நோக்கத்தை அப்படியே இந்த சித்தர் புட்டுபுட்டு வைக்கிறாரே! என்று ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்த அந்த இளைஞன், குருவே! தங்களை யாரென நான் அறிந்து கொள்ளலாமா? தங்களுக்கு சித்தமானால், இந்த சிறியவனிடம் அதுபற்றி சொல்லுங்கள், என்றான் இளைஞன்.சித்தர் கலகலவென சிரித்தபடியே, கொங்கணா! இந்தக் கட்டையை  போகர் என்று அழைக்கிறது இந்த உலகம், என்றதும், ஆ...போகரா! தாங்கள் சித்தர்களிலேயே உயர்ந்தவர் அல்லவா! உமையவளின் கட்டளைக் கிணங்க, அவளது மகனுக்கே சிலை செய்தவராயிற்றே தாங்கள். நானும் அம்பாள் உபாசகன்... என்று தொடரும் போதே, இடைமறித்த போகர், கொங்கணா! அதையும் நான் அறிவேன். அம்பிகையின் பல வடிவங்களை நேரில் தரிசிக்க நீ எண்ணுகிறாய். அது நடக்குமோ நடக்காதோ என கலங்குகிறாய். அதற்காக அஷ்டமாசித்திகளைக் கற்று, அவற்றில் ஏதேனும் ஒரு வழிமூலம் அவளைப் பார்த்து விடத் துடிக்கிறாய். ஒன்றை மட்டும் மறந்து விடாதே. அம்பிகையை நேரில் காண ஒரே வழி தவம். நீ மனிதர்களே இல்லாத இடத்துக்குச் செல். அங்கே அமர்ந்து தவம் செய். இவ்வுலக சஞ்சாரத்தை மறந்து விடு. அம்பிகை உன்னைக் காண நேரில் வருவாள், என ஆசியருளினார். போகரிடம் பிரியாவிடை பெற்ற கொங்கணர், ஒரு மலைக்குச் சென்றார். அனைவரும் அமர்ந்த நிலையிலோ, நின்ற நிலையிலோ தான் தவம் செய்வர். ஆனால், கொங்கணர் ஒரு மலை உச்சியிலுள்ள பாறையில் படுத்து விட்டார். படுத்த நிலையிலேயே கண்மூடினார். அப்படியே, தவத்தில் ஆழ்ந்து விட்டார். போகர் சொன்னபடியே நடந்தது. அம்பாளின் பல வடிவங்களை அவர் நேரில் கண்டார்.அம்பிகையின் வடிவங்களை நேரில் கண்டதன் மூலம், தனது சக்தி அதிகரித்தது போல உணர்ந்த கொங்கணர், தவத்தில் இருந்து எழுந்தார். அவர் கண் திறக்கவும், தன் முன் ஒரு சமாதி இருப்பதைப் பார்த்தார். அந்த சமாதியை மூடியிருந்த பாறை தானாக உருண்டது. அதன் உள்ளிருந்து ஒரு முனிவர் வெளிப்பட்டார். அவரை கொங்கணர் வணங்கினார்.

கொங்கணா! நீ அவசரக்காரனாக இருக்கிறாயே! அம்பிகையின் ஒரு சில வடிவங்களைப் பார்த்ததுமே உன் சக்தி அதிகரித்து விட்டதாக., நீயாகவே கருதிக் கொண்டு, தவத்தைக் கலைத்து விட்டாயே! அம்பிகைக்கு விண்ணிலுள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட அதிகமான வடிவங்கள் உண்டு. அவற்றைப் பார்க்கும் சந்தர்ப்பத்தை இழந்து விட்டாய். மீண்டும் தவம் செய். அவற்றை நீ காண்பாய், என்றார். அந்த முனிவர் யாரென கொங்கணர் விசாரித்த போது, நான் தான் கவுதமர் என்றார் அம்முனிவர். கண் விழித்து தவம் கலைந்ததால், அம்பிகையின் இன்னும் பல வடிவங்களைப் பார்க்கும் சந்தர்ப்பத்தை இழந்தாலும், ரிஷி தரிசனமாவது கிடைத்ததே என ஆறுதல் கொண்ட கொங்கணர், மீண்டும் தவத்தில் ஆழ்ந்தார். ஆனால், அந்த தவம் சில காலமே நீடித்தது. சித்திகளை அடைய வேண்டும் என்ற மனஉணர்வு, தவத்தைக் கெடுத்து விட்டது. கொங்கணர் அங்கிருந்து புறப்பட்டு, தில்லையம்பதியான சிதம்பரத்தை அடைந்தார். இறைவன் ஆகாயமாக எழுந்தருளியிருக்கும் அந்த புண்ணிய பூமியில் அஷ்டமாசித்திகள் வேண்டி யாகம் தொடங்கினார்.அப்போது, யாக குண்டத்தின் முன்னால், இதற்கு முன்னதாகப் பார்த்த கவுதமர் தோன்றினார். கொங்கணா! மீண்டும் தவறு செய்கிறாய். அஷ்டமாசித்திகளை அடைவதால் பலனேதும் இல்லை. அவற்றைப் பயன்படுத்தினால், நம்மால் எல்லாம் செய்ய முடியும் என்ற ஆணவமே உன்னுள் வளரும். தவமே இறைவனை அடைய உயர்ந்த பாதை. தவம் என்றால் கண்மூடி ஓரிடத்தில் அமர்வது என பலரும் தவறாகப் பொருள் புரிந்து கொண்டிருக்கின்றனர். தவத்தின் உண்மைப் பொருளை நீ தெரிந்து கொள்ள சில சந்தர்ப்பங்கள் கிடைக்கும். காத்திரு, என சொல்லிவிட்டு மறைந்தார். கவுதமரின் இந்த விமர்சனம், கொங்கணரைக் கவலை கொள்ளச் செய்தது. நாம், ஏன் இந்த பூமிக்கு வந்தோம். தவத்தின் பொருள் தெரிய சந்தர்ப்பங்கள் வரும் என்றாரே கவுதமர். அதை அறிந்து கொள்ள எங்கே செல்ல வேண்டும்? எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும்? இப்படி பல சிந்தனைகள் அவரைக் குழப்பின. ஆனால், தவத்தின் பொருளை அவருக்கு உணர்த்த, இந்த பூமிப்பந்தின் ஒரு பகுதியில் காத்திருந்தாள் ஒரு பெண்.

ஒருமுறை தியானத்தில் அமர்ந்திருந்த கொங்கணர் மீது, உயரே பறந்து கொண்டிருந்த கொக்கு ஒன்று எச்சம் போட்டது. பறக்கும் போதே எச்சமிடுவது பறவை களின் இயல்பு தான். நாம் கூட மரத்தடிகளில் நின்றால், பறவைகள் எச்சமிட்டு நம் உடைகள் அழுக்காகும். அதை துடைத்து விட்டு நடையைக் கட்டுவோம். கொங்கணர் சகல வல்லமை படைத்தவர் இல்லையா? ஆணவத்துடன் அவர் கொக்கை நோக்கிப் பார்த்தார். அவரது பார்வையின் தீட்சண்யம் தாளாமல் கொக்கு சாம்பலாகி உதிர்ந்து விட்டது.தன் தியானத்தைக் கெடுத்த கொக்கை சாம்பலாக்கிவிட்டதில் கொங்கணருக்கு பரமதிருப்தி, அகந்தை எல்லாம் ஏற்பட்டது. தான் தியானம் செய்யும் போது, யாராவது தனக்கு இடைஞ்சல் செய்தால், அவர்களுக் கும் இதே தான் கதி என்பது போல அவரது செய்கை அமர்ந்தது. இச்சம்பவம் நடந்து சில மாதங்களுக்குப் பிறகு, ஒருநாள், அவர் திருவள்ளுவரின் இல்லத்துக்குச் சென்றார்.யார் உள்ளே! எனக்கு பிச்சைப் போடு, பசிக்கிறது. நிறைய வேலை இருக்கிறது, என்று அதட்டலாகப் பேசினார். வள்ளுவரின் மனைவி வாசுகி, வெளியே இருந்து வந்த குரலைக் கேட்டார். அதிகார தோரணையுள்ள முகத்துடன் ஒரு துறவி நிற்பதைப் பார்த்தாள். அவர் கோபத்தில் பேசினாலும், அவள் அடக்கமாக, துறவியே! பொறுக்க வேண்டும், எனது கணவருக்கு பரிமாறிக் கொண்டிருக்கிறேன். பர்த்தாவுக்கு பரிமாறும் போது, இடையில் எழுந்து வந்ததே தவறு. இருப்பினும், நீர் ஒரு துறவி என் பதால், என் பர்த்தா இதை பொருட்படுத்தமாட்டார் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறேன். சற்று நேரம் திண்ணையில் அமரும். அவர் சாப்பிட்டதும், உமக்கு உணவெடுத்து வருகிறேன், என்று சொல்லிவிட்டு, அவர் பதிலுக்கு காத்திராமல் விடுவிடுவென வீட்டுக்குள் நடந்தாள். கொங்கணருக்கோ கோபம் எல்லை மீறி விட்டது. மீண்டும் கத்த ஆரம்பித்தார். ஏ பெண்ணே! துறவிகளுக்கு அன்னமிடுவது முதல் கடமை என்பது உனக்குத் தெரியாதா? அதிலும் நான் யார்? சகல சித்திகளும் கைவரப்பெற்றவன். என் தவத்தின் வலிமையை அறியாமல் பேசுகிறாய். உம்... இப்போது, உணவெடுத்து வருகிறாயா?  இல்லை...  உன்னையும்... என்று அவர் சொல்லி முடிக்கவும், கோபமடைந்த வாசுகி, மீண்டும் வெளியே வந்தாள்.

கொங்கணரே! உமக்கு மரியாதை தந்தது தவறாகப் போயிற்றே! என்னை என்ன செய்து விட முடியும் உம்மால்? பதிபக்தியே ஒரு பத்தினிப் பெண்ணுக்கு உயரிய குணம் என்பதை  கூட உணராத துறவியே! என்னைக் கொக்கென்று நினைத்துக் கொண்டீரா? என்றதும், கொங்கணருக்கு தூக்கி வாரிப்போட்டது. இவளுக்கு எப்படி தெரிந்தது என் பெயர் கொங்கணன் என்று! அத்துடன், இவள் கொக்கை எரித்த விஷயத்தை எப்படி அறிந்தாள்? அவர் அதிர்ச்சியுடன் அவள் முகத்தை ஏறிட்ட போது, கொங்கணரே! உம் சிந்தனை எனக்குப் புரிகிறது. ஒரு பெண் இறைவனை அடைய வேண்டுமானால், தவம் எதுவும் செய்யத் தேவையில்லை, பூஜை, புனஸ்காரங்கள் தேவையில்லை. கணவருக்கு பணிவிடை செய்வதே ஒரு பெண்ணுக்கு உயரிய தவம். நீர் தவம் என்றால் என்ன என்பது பற்றி அறியத்தானே இப்படி சுற்றித் திரிகிறீர்! என்னையும் விட உயர்ந்த ஒரு தபஸ்வி இந்த ஊரில் இருக்கிறார், என்றதும் கொங்கணர் அவள் முகத்தை ஆர்வத்துடன் நோக்கினார். தாயே! நீ என் அறிவுக்கண்ணை திறந்தது போல் இருக்கிறது. என் ஆணவம் அழிந்தது. அந்த தபஸ்வியை நான் பார்க்க வேண்டும். தவம் பற்றி அவரிடம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் எந்த இடத்தில் தவம் செய்து கொண்டிருப்பார்? என்றதும், வாசுகி கலகலவென சிரித்தாள். சுவாமி! அவர் தாடியும், ஜடாமுடியும் தரித்து கண்மூடி தியானத்தில் இருப்பார் என நினைக்கிறீரா! இல்லை...இல்லை...ஊர் எல்லையில் ஒரு இறைச்சிக்கடை இருக்கிறது. அந்தக்கடையின் உரிமையாளர் வீட்டில் போய் பிச்சை கேட்பது போல் நடியும், தவம் பற்றி இன்னும் தெரிந்து கொள்வீர், என்றாள். அவளிடம் பிச்சை வாங்கி அருந்திவிட்டு, அவர் ஆச்சரியத்துடன் இறைச்சி வியாபாரி வீட்டுக்குச் சென்றார். அதே அதிகாரத்தோரணையுடன், பிச்சை போடு எனக்கூவினார். வியாபாரி வெளியே வந்தான்.

ஐயா, கொக்கை எரித்த கொங்கணரே! வாசுகி அம்மையார் உம்மை அனுப்பினாரா? சத்தம் போடாதீரும். உள்ளே என் வயோதிகப் பெற்றோர் நோயின் கடுமையால் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கின்றனர். அவர்களது கை, கால்களை அமுக்கிவிட்டு, விசிறி தூங்க வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். உமக்கு  தெரியாதா? பெற்றவர்களுக்கு சேவை செய்வதே ஒரு மகனின் முக்கிய கடமையென்று. ஆணாகப் பிறந்த ஒருவன், தன்னைப் பெற்றவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் இறைவனை அடைந்து விடலாம். அதை விட உயர்ந்த தவம் ஏது? என்று அவன் சொன்னதும், கொங்கணருக்கு சுரீர் என முதுகெலும்பில் உறைத்தது போல் இருந்தது. ஆஹா! இவனுக்கு எப்படி நம்மைத் தெரிந்தது? வாசுகி வீட்டுக்குப் போய் வந்ததை இவன் எப்படி அறிந்தான்? என சிந்தித்தவர், உன் பெயர் என்ன? என்றார். தர்மவியாதன் என்று பதிலளித் தான் அவன். தர்மா! என்னை எப்படி உனக்குத்தெரியும்? என்றார்.ஐயனே! என்னைப் பெற்றவர்களுக்கு சேவை செய்வதையே உயரிய தவமாக நினைக்கிறேன். அந்த தவப்பலனால், முக்காலமும் உணரும் சக்தி எனக்கு இயற்கையாகவே வந்திருக்க வேண்டும் எனக்கருதுகிறேன். அதனாலேயே உம்மை எளிதில் அடையாளம் காண முடிந்தது, என்றான்.ஹா...ஒவ்வொரு மனிதனும் அவனவன் கடமையைச் செய்வதே தவத்திற்கு சமமானது, இதைப்புரிய இவ்வளவு நாளாகி இருக்கிறதே! என்றவர், தனக்கு நேர்ந்த அனுபவங்கள் சமூகத்திற்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கில், அவற்றை நூல்களாக எழுதி வைத்தார். பின்னர் அவர் ஏழுமலையான் குடியிருக்கும் திருப்பதிக்குச் சென்றார். அங்கே வலவேந்திரன் என்ற மன்னன் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தான். அவனுக்கு தவம் என்றால் கடமை என்பது பற்றி விளக்கினார். இது அவனுக்குப் பிடித்துப் போகவே, அவரது சீடன் ஆனான். அங்கேயே சிலகாலம் தங்கியிருந்து பல நூல்களையும் எழுதிய அவர் திருப்பதி திருமலையில் கோயில் குளத்தின் தெற்குப் பகுதியில், எட்டாம் படிக்கட்டில் அடக்கமாகி இருக்கிறார். அங்கே செல்பவர்கள் கொங்கணர் ஏற்படுத்தும் அதிர்வுகளை உணர முடியும்.

கொங்கணவர் இயற்றிய நூல்களாவன

கொங்கணவர் வாதகாவியம்  -3000
கொங்கணவர் முக்காண்டங்கள்  -1500
கொங்கணவர் தனிக்குணம்  -200
கொங்கணவர் வைத்தியம்  -200
கொங்கணவர் வாதசூத்திரம்  -200
கொங்கணவர் தண்டகம்  -120
கொங்கணவர் ஞான சைதன்னியம்  -109
கொங்கணவர் சரக்கு வைப்பு  -111
கொங்கணவர் கற்ப சூத்திரம்  -100
கொங்கணவர் வாலைக்கும்பி  -100
கொங்கணவர் ஞானமுக்காண்ட சூத்திரம் -80
கொங்கணவர் ஞான வெண்பா சூத்திரம் -49
கொங்கணவர் ஆதியந்த சூத்திரம்  -45
கொங்கணவர் முப்பு சூத்திரம்  -40
கொங்கணவர் உற்பத்தி ஞானம்  -21
கொங்கணவர் சுத்த ஞானம்  -16 என்பவை ஆகும்.

கொங்கணவர் சித்தர் தியானச்செய்யுள்:

கொக்கை எரித்த கொங்கணரே
அம்பிகை உபாசகரே
ஸ்ரீ கௌதமரின் தரிசனம் கண்டவரே
இரசவாதமரிந்த திவ்யரே
உங்கள் திருப்பாதம் சரணம்

காலம்: கொங்கணர் முனிவர் சித்திரை மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 800 ஆண்டுகள் 16 நாள்கள்.
14.காக புஜண்டர்

பக்திலோகத்தில் பிரமாண்ட நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. சக்தி கணங்கள் ஆனந்தக்களிப்பில் இருந்தனர். அந்த நடனத்தை சக்திலோகத்தில் இருந்த அன்னப்பறவைகளும் ரசித்துப் பார்த்து, அவையும் அவர்களுடன் சேர்ந்து நடனமாடின. சிவனும் பார்வதியும் இந்த நடனத்தைக் கண்டு மகிழ்ச்சியுடன் இருந்த வேளையில், சிவனின் தலையிலுள்ள சந்திரனின் கலை ஒன்று காகமாக வடிவெடுத்தது. அந்த காகம் அங்கிருந்த அன்னப்பறவைகளின் அழகில் லயித்தது. ஏதாவது, ஒரு அன்னத்துடன் உறவு வைத்துக் கொண்டால் என்ன என்று எண்ணியது, நினைத்தது போலவே ஒரு அன்னத்தை அழைக்க, அதுவும் காகத்துடன் உறவு கொண்டது. அந்த அன்னம் அப்போதே கர்ப்பமடைந்து 21 முட்டைகளை இட்டது. அதில் இருந்து 20 அன்னங்களும், ஒரு காகமும் உருவாயின. அந்த காகமே மனித ரூபம் பெற்று காக புஜண்டர் என்னும் சித்தராக மாறியது. நினைத்த நேரத்தில் காகமாக மாறிவிடும் சக்தியும் இந்த சித்தருக்கு இருந்தது.வாரிஷி என்னும் முனிவர் மீது, கணவனை இழந்த பெண் ஒருத்தி காதல் கொண்டாள்.முனிவர் அவளைச் சபித்து விட்டார். கணவனை இழந்த நிலையில் இன்னொருவன் மீது நாட்டம் கொண்டதால் உன் வயிற்றில் ஒரு குழந்தை பிறப்பதாக! என சொல்லி விட்டார். இதன்படி அந்தப்பெண் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள். அந்த குழந்தை சந்திர வம்சத்தை சேர்ந்தது. அதுவே காகபுஜண்டர் என்னும் சித்தராக மாறியது என்றும் புஜண்டரின் பிறப்பு பற்றி மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.

உஜ்ஜயினியில் உள்ள மகாகாலர் (சிவன்) கோயிலுக்கு காகபுஜண்டர் தினமும் செல்வார். ஓம் நமசிவாய என்னும் திருநாமத்தை ஒரு லட்சம் முறை ஓதுவார். சிறந்த பக்தரான இவரது பக்தியை உலகுக்கு வெளிப்படுத்த நினைத்த சிவன், திருமாலின் வாகனமான கருடனை அழைத்தார்.கருடனே! இப்பூவுலகில் பிறந்திருக்கும் காகபுஜண்டன் அழிவே இல்லாதவனாக இருப்பான். உலகம் அழிந்தால் தேவர்களும், மனிதர்களும், பூதங்களும் அந்த கல்பத்திற்குரிய பிரம்மனும்கூட அழிந்துவிடுவார்கள் என்பது உலக நியதி. ஆனால், இந்த காகபுஜண்டனுக்கு உலகம் அழிந்தால்கூட, அழிவு வராது. அந்தளவிற்கு அவன் எனது சிறந்த பக்தனாக விளங்குகிறான், என்றார். கருடன் ஆச்சரியத்துடன் பறந்து சென்றான். காகபுஜண்டருக்கோ சிவன் மீதுதான் பக்தி அதிகமே தவிர, திருமால் கோயில்களுக்கு செல்ல மாட்டார். போதாக்குறைக்கு திருமாலின் பக்தர்களையும் மதிக்க மாட்டார். காகபுஜண்டரின் குரு, இதற்காக புஜண்டரைக் கண்டித்தார். எந்த தெய்வமாயினும் சமமே என்பதை எடுத்துச் சொன்னார். ஆனால், காகபுஜண்டரோ இதைக் கண்டுகொள்ளவேயில்லை. பொறுமைமிக்க குரு, திரும்பத்திரும்ப அனைத்து தெய்வங்களும் சமமே என்பதை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.ஒருமுறை காகபுஜண்டர் மகாகாலர் ஆலயத்தில் சிவனை வணங்கிக்கொண்டிருந்தபோது, அவரது குரு வந்தார். காகபுஜண்டர் குரு வருவதை அறிந்தும்கூட, அவர் மீது கொண்ட கோபத்தால் எழக்கூட இல்லை. திருமாலை வணங்கச்சொல்கிறாரே என்ற கோபம் தான் அது. குருவும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், சிவபெருமானுக்கு கோபம் வந்துவிட்டது. தனது அன்பிற்குரிய பக்தன் என்றுகூட பார்க்காமல், காகபுஜண்டா! குருவுக்கு மரியாதை செய்யாதவன், எனது பக்தனாக இருக்க தகுதியில்லாதவன். நீ இதுவரை ஜபித்த மந்திரங்களின் பலனை இழந்து விட்டாய். திருமாலை மதிக்கும்படி குரு சொன்னதை நீ ஏற்றிருக்க வேண்டும். மேலும் கோபத்தின் காரணமாக குருவிற்கு மரியாதைகூட செலுத்த தவறிவிட்டாய். குருவிற்கு மரியாதை செலுத்தாத நீ பலகாலம் இந்த பூமி யில் பத்தாயிரம் பிறவிகளுக்கு குறையாமல் பிறப்பாய். நரக வேதனை அனுபவிப்பாய், என்றார்.

அசரீரியாக ஒலித்த இந்த குரல் கேட்டு காகபுஜண்டர் நடுங்கி விட்டார். குருவிடம் மன்னிப்பு கேட்டார். குருவும் புஜண்டர் மீது அன்பு கொண்டு சிவபெருமானை வணங்கி சாபவிமோசனம் தரும்படி கேட்டார். குருவின் மனிதாபிமானம் கண்டு மகிழ்ந்த சிவன், பத்தாயிரம் பிறவிகளை ஆயிரம் பிறவிகளாக குறைத்தார். பிறவிகளை எடுத்தாலும் பிறவிக்குரிய துன்பங்கள் எதுவும் அணுகாது என்றும், தான் ஏற்கனவே வாக்கு கொடுத்ததைப் போல உலகமே அழிந்தாலும் காகபுஜண்டன் அழிய மாட்டான் என்றும் வாக்களித்தார். இப்படி 999 பிறவிகளை எடுத்து முடித்த காகபுஜண்டர், கடைசியாக ஒரு அந்தணரின் வீட்டில் பிறந்தார். அந்த பிறவியில் தன் முந்தைய பாவத்திற்கு பரிகாரமாக ராமபக்தராக மாறினார். ராமனைக் காண தவம் செய்தார். காக வடிவெடுத்து ராமனை பல உலகங்களிலும் தேடி அழைந்தார். அவர் சென்ற உலகங் களில் எல்லாம் பல அற்புதங்களை நிகழ்த்தினார். சதுரகிரி மலைக்குச் சென்ற காகபுஜண்டர், போகரின் சீடர்கள் சிலரை தனது சீடர்களாக்கிக் கொண்டார். சூரசேனன் என்ற சீடன், காட்டில் பழம் பறித்துக் கொண்டிருந்தபோது ஒரு விஷக்கனியை தவறுதலாக சாப்பிட்டு இறந்தான். அவனை, நாக தாலி என்ற மூலிகையைக் கொண்டு உயிர்பெறச் செய்தார். இப்படி பல அற்புதங்களைச் செய்தார்.உலகம் பலமுறை அழிந்தபோது அதை உச்சியில் இருந்து பார்த்தவர் காகபுஜண்டர். கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டுபிடிக்கும் விதத்தையும், தட்பவெப்ப நிலை மாறுதல் களையும் பற்றி அவர் சில நூல்களில் சொல்லியிருக்கிறார்.நட்சத்திரங்களில் அவிட்டத்திற்கு சொந்தக்காரர் காகபுஜண்டர். ஒருசிலர் காகபுஜண்டரே, சிவனருளால் அவிட்ட நட்சத்திரமாக மாறினார் என்றும் சொல்கின்றனர். தனது கடைசிக் காலத்தை காகபுஜண்டர் திருச்சியிலுள்ள உறையூரில் கழித்ததாகவும், அங்கேயே சமாதியானதாகவும் சொல்கிறார்கள்.

தியானச் செய்யுள்:

காலச்சக்கரம் மேல்
ஞானச்சக்கரம் ஏந்திய
மகா ஞானியே
யுகங்களைக் கணங்களாக்கி
கவனித்திடும் காக்கை ஸ்வாமியே
மும்மூர்த்திகள் போற்றும்- புஜண்டரே உமது
கால் பற்றிய எம்மைக் காப்பாய்
காக புஜண்ட சுவாமியே
15.கோரக்கர்

பெண்ணே ! இன்னும் என்ன கலக்கம். உனக்குத்தான் ஒரு மகன் பிறந்திருப்பானே ! அவன் உன்னைக் கவனிப்பதில்லையோ என்ன ! எதற்காக அழுது கொண்டிருக்கிறாய் ? என்ணார் மச்சேந்திர சித்தர். மச்சேந்திரன் பிறப்பு அலாதியானது. சிவபெருமான் ஒருமுறை பார்வதிதேவிக்கு ஒரு கடற்கரையில் அமர்ந்து மந்திர உபதேசம் செய்து கொண்டிருந்தார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு மீன், ஒரு மந்திரத்தை அப்படியே கிரகித்துக் கொண்டது. அந்த மந்திரம் மனித வடிவாக மீனின் வயிற்றில் உருவாகி வெளிப்பட்டது. மீனுக்கு மச்சம் என்ற பெயரும் உண்டு. அந்தக் குழந்தைக்கு மச்சேந்திரன் எனப் பெயரிட்ட சிவன், நீ சித்தனாகி மக்களுக்கு நலப்பணி செய்வாயாக என அருளினார். சிவனருளால் பிறந்த மச்சேந்திரர், பல இடங்களுக்கும் சென்ற போது, ஒரு பெண் அழுது கொண்டிருப்பதைப் பார்த்தார். அவளது வருத்தத்திற்கான காரணத்தைக் கேட்டார். சுவாமி ! நான் குழந்தையின்றி இருக்கிறேன். ஊராரும் என் குடும்பத்தாரும் என்னை மலடி என திட்டுகின்றனர். என் நிலைமைக்கு தீர்வு எப்படி வரப்போகிறதோ என கலங்குகிறேன், என்றாள் கண்ணீர் சிந்தியபடியே. அம்மா ! அழாதே. இதோ! திருநீறு, இதை சாப்பிடு. நீ கர்ப்பம் தரிப்பாய், என்று சொல்லி திருநீறை கொடுத்து விட்டு சென்று விட்டார். திருநீறுடன் தெருவில் சென்று கொண்டிருந்தவனை அவளது தோழி ஒருத்தி பார்த்தாள். சாமியார் திருநீறு தந்த விபரத்தை அந்தப்பெண் தோழியிடம் சொன்னாள். தோழி அவளிடம், அடிபைத்தியக்காரி ! யாராவது திருநீறு கொடுத்தால் அதை வாங்கி விடுவதா ! இதை சாப்பிட்டால் நீ மயங்கி விடுவாய். அந்த சாமியார் உன்னை தன் தவறான இச்சைக்கு ஆட்படுத்தி விடுவார். இதை வீசி எறிந்து விடு, என்றாள். தோழி சொன்னதிலும் உண்மையிருக்குமோ என்று பயந்து போன அந்தப் பெண், திருநீறை வீட்டுக்கு கொண்டு சென்று யாருக்கும் தெரியாமல் எரியும் அடுப்பில் போட்டு விட்டாள்.

சில ஆண்டுகள் கடந்தன. அந்தப் பெண், இப்போதும் அழுது கொண்டிருக்க, மச்சேந்திரர் வந்தார். அப்போது தான், மேற்கண்ட கேள்வியைக் கேட்டார். சுவாமி ! என்னை மன்னிக்க வேண்டும். தாங்கள் கொடுத்த திருநீறை என் தோழி சொன்னதால் பயத்தில் அடுப்பில் போட்டு எரித்து விட்டேன். எனக்கு இன்னும் குழந்தையே பிறக்கவில்லை. என்னை மன்னிக்க வேண்டும் என்றாள். அவளது நிலைமையில் யார் இருந்தாலும் அப்படித் தான் செய்திருப்பார்கள் என்பதை உணர்ந்து கொண்ட மச்சேந்திரர் அவளிடம் கோபிக்கவில்லை. சரியம்மா ! உன் வீட்டு அடுப்புச் சாம்பலை எங்கே கொட்டுவீர்கள் ? ஒரு வேளை கொட்டியதை அப்புறப்படுத்தி விட்டீர்களா ? என்றார். இல்லை சுவாமிஜி அடுப்புச்சாம்பலை இதோ அந்த எருக்குழியில் (கழிவுகளை உரமாக்கும் தொட்டி போன்ற அமைப்பு)  போட்டு வைத்திருக்கிறோம், பல ஆண்டுகளுக்கு  ஒருமுறை தான் அதை அப்புறப்படுத்துவார்கள். நான் திருநீறை எரித்து சாம்பலும் இத்துடன் கலந்து தான் கிடக்கிறது, என்றாள். மச்சேந்திரர் மகிழ்ந்தார். உனக்கு யோகமிருக்கிறது, என்றவர், எருக்குழியில் அருகே போய், கோரக்கா ! என குரல் கொடுத்தார். என்ன சித்தரே ! என உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. எழுந்து வெளியே வா, என்றார் சித்தர். அப்போது, சாம்பலைக் கொடுத்த நாளில் இருந்து, இதுவரை கடந்த பத்தாண்டுகளைக் கடந்த நிலையில், பத்து வயது சிறுவன் ஒருவன், தெய்வ லட்சணங்களுடன் எழுந்து வந்தான். அவனை தாயிடம் ஒப்படைத்தார் மச்சேந்திரர். சுவாமி ! தாங்கள் தந்த திருநீற்றின் மகிமை அறியாமல், வீசி எறிந்தேன். இவனை என் வயிற்றில் சுமக்கும் பாக்கியத்தை இழந்தேன். என அழுதவள், மகனை அரவணைத்துக் கொண்டாள். ஆனால், அந்த சிறுவனோ அன்னையின் பிடியில் இருந்து தன்னை உதறிக்கொண்டு வெளிப்பட்டான். தாயே! என்னை சிறு வயதிலேயே வீசி எறிந்துவிட்டாய். நான் இந்த நாற்றம்பிடித்த குழியில் இவ்வளவு நாளும் கிடந்தேன். என்னை ஒதுக்கிய உன்னோடு இணைந்து வாழ நான் விரும்பவில்லை. மேலும், நான் தவ வாழ்வில் ஈடுபடப்போகிறேன். இருப்பினும், நான் இந்த பூமிக்கு வர காரணமாக இருந்ததற்கும், என் தாய் என்ற முறையிலும் உன்னை வணங்குகிறேன். நான் இந்த சித்தருடன் செல்கிறேன். என்னை வழியனுப்பு, என்றான்.

கைக்கு கிடைத்தும் வாய்க்கு கிடைக்காமல் போனாலும், மகனின் உறுதியான பேச்சால் ஆடிப்போன அந்தத்தாய், வேறு வழியின்றி கோரக்கருக்கு விடை கொடுத்தாள். அதன்பின் கோரக்கர் நாலா திசைகளிலும் அலைந்தார். அவருக்குள் மனிதனையும் பிற உயிர்களையும் படைக்கும் பிரம்மனின் தொழிலை தானே பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த சக்தியைப் பெறுவதற்காக அவர் தனது நண்பரான பிரம்ம முனியுடன் இணைந்து ஒரு யாகத்தைத் துவக்கினார். படைக்கும் தொழில் இந்த சித்தர்களின் கைக்கு போய் விட்டால், தங்களுக்கு மதிப்பில்லாமல் போய்விடுமே என அஞ்சிய தேவர்கள் வருணனையும், அக்னியையும் அனுப்பி யாகத்தை அழித்து விட உத்தரவிட்டனர். அவர்களும் வந்து யாகத்தில் தொல்லை செய்ய, யாககுண்டத்தில் போட்ட பொருட்கள் இரண்டு பெண்களாக உருமாறி வெளிப்பட்டன. அவர்கள் முனிவர்களைச் சுற்றி சுற்றி வந்தனர். அவர்களது அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. ஆனால், இன்ப வாழ்வை முற்றிலுமாக வெறுத்த கோரக்கரும், பிரம்ம முனியும் கமண்டலத்தை எடுத்து, எங்கள் யாகத்தை அழிக்க நீங்கள் பிறப்பெடுத்தீர்களா ? என்று சொல்லி கமண்டல நீரை தெளிக்க இரண்டு செடிகளாக மாறிவிட்டனர். அவை காயகல்ப செடிகள் எனப்பட்டன. சிவபெருமான் அவர்கள் முன்பு தோன்றி, சித்தர்களே! நீங்கள் தவவலிமை மிக்கவர்கள் என்றாலும், யாகத்தில் இடையூறு ஏற்பட்டது பற்றி என்னிடம் முறையிடாமல், நீங்களே யாக குண்டத்தில் பிறந்த பெண்களை செடிகளாக மாற்றினீர்கள். சித்தர்களுக்கு கோபம் ஆகாது. கோபம் கொண்டவன் தன் பலத்தை இழப்பான். நீங்களும் உங்கள் தவவலிமையை பெருமளவு இழந்து விட்டீர்கள். இனி இந்த காயகல்பத்தைக் கொண்டு, உலக உயிர்கள் பல காலம் வாழ்வதற்குரிய மருந்துகளைத் தயாரியுங்கள், என்றார். அவர்கள் வருத்தப்பட்டாலும், சிவன் சொன்னவாறே செய்தனர். சதுரகிரி மலைக்கும் அவர்கள் வந்ததாக ஒரு தகவல் உண்டு. பல சித்துவேலைகள் செய்து மக்களுக்கு வாழ்வளித்த கோரக்கர், பேரூரில் சித்தியடைந்ததாகக் கூறப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்திலுள்ள கோர்காடு என்னும் ஊரில் சித்தியடைந்ததாகவும் கூறப்படுகிறது.

நூல்:

கோரக்கர் சந்திர ரேகை
கோரக்கர் நமநாசத்திறவுகோல்
கோரக்கர் ரக்ஷமேகலை
கோரக்கர் முத்தாரம்
கோரக்கர் மலைவாக்கம்
கோரக்கர் கற்பம்
கோரக்கர் முத்தி நெறி
கோரக்கர் அட்டகர்மம்
கோரக்கர் சூத்திரம்
கோரக்கர் வசார சூத்திரம்
கோரக்கர் மூலிகை
கோரக்கர் தண்டகம்
கோரக்கர் கற்பசூத்திரம்
கோரக்கர் பிரம்ம ஞானம்

தியானச் செய்யுள்:

சந்திர விழியும் மந்திர மொழியும்
கொண்ட சிவபக்தரே
சாம்பலில் தோன்றிய தவமணியே
விடை தெரியா பாதையில்
வீறாப்பாய் நடைபோடும் எம்மை
கைப்பிடித்து கரை சேர்ப்பாய்
கோரக்க சித்த பெருமானே

காலம்: கோரக்கர் முனிவர் கார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 880 ஆண்டுகள் 11 நாள் ஆகும்.
16.கருவூரார்

என்ன கருவூராரைக் காணவில்லையா? சிறையில் அடைக்கப்பட்டவர் எப்படி வெளியே போவார் ? நீங்களெல்லாம் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? மன்னன் இரணியவர்மன் கர்ஜித்தான். காவலர்கள் தங்கள் தலைக்கு கத்த வந்து விட்டது என்பதை புரிந்து கொண்டு நடுநடுங்கினர். போகர் சித்தரே ! அறியாமல் நடந்த பிழையை மன்னிக்க வேண்டும். தங்கள் மாணவன் தான் கருவூரார் என்பதை அறியாமல் அவரைச் சிறையில் அடைத்து விட்டேன். நான் என்ன செய்வேன் !. எப்படி உங்களை சமாதானம் செய்யப்போகிறேன்! நான் செய்த தவறுக்கு வேண்டுமானால், என் உயிரை எடுத்துக் கொள்ளுங்கள், மன்னன் புலம்பினான்.அவன் புலம்புமளவுக்கும், போகர் சித்தர் கருவூராரைத் தேடி வருமளவுக்கு அப்படி என்ன நடந்து விட்டது ?கருவூரார் சோழநாட்டிலுள்ள போகர் சித்தர் கருவூராரைத் தேடி வருமளவுக்கும் அப்படி என்ன நடந்து விட்டது ? கருவூரார் சோழநாட்டிலுள்ள கருவூரில் (இன்றைய கரூர்) ஒரு அந்தணத்தம்பதியரின் மகனாக அவதரித்தவர். இளமையிலேயே ஞானம் தேடி அலைந்தார். அவருக்கு பழநியில் நவபாஷண முருகன் நிலை செய்த போகரின் தரிசனம் ஒருமுறை கிடைத்தது. அவரிடம், இந்த உலக வாழ்வின் உண்மை நிலையை அறிந்து கொள்ள விரும்புவதாகச் சொன்னார். கருவூரா! மக்கள் சேவையே மகேசன் சேவை. ஒவ்வொரு மனிதனும் இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் சோவை செய்வதற்காக  படைக்கப்பட்டவளே ! சேவையில் நீ கடவுளைக் காணலாம். பராசக்தியை நீ வழிபடு. வாழ்க்கை பற்றிய அரிய ஞானத்தைப் பெறுவாய், என ஆசிர்வதித்தார். பல காலமாக தொண்டு செய்து வந்தார் கருவூரார். இந்நிலையில், வடநாட்டை ஆண்ட இரணியவர்மன் , ஒருமுறை தில்லையம்பலமாகிய சிதம்பரத்துக்கு வந்தான். சிவகங்கை தீர்த்ததில் நீராடிக் கொண்டிருந்தான். ஒருமுறை அவன் தண்ணீருக்குள் கண்டான். பெரும் பரவசம் அவனைத் தொற்றிக் கொண்டது. தண்ணீரில் இருந்து எழுந்து மீண்டும் மூழ்கி கண்களைத் திறந்து பார்த்தான். அங்கே யாரையும் காணவில்லை. ஆனால், சிவனின் நாட்டியக்காட்சி அவன் நெஞ்சை  விட்டு அகல மறுத்தது.

எப்படியாவது இந்த நடன சிவனை சிலையாக வடிக்க வேண்டும். அதுவும் தங்கத்தில் வடித்தால், அது பூமி உள்ளளவும் நம் பெயர் சொல்லும் என்று எண்ணினான். சிற்பிகள் அனைவரையும் வரவழைத்தான். தங்கத்தை அள்ளி அள்ளிக் கொடுத்து, நான் கண்ட காட்சியைக்ஞா கூறி, நடன சிவன் சிலை வடிக்க வேண்டுமென்றும், அதற்கு 48 நாட்கள் அவகாசம் தருவதாகவும், அதற்குள் சிலை வடிக்காவிட்டால் அவர்களுக்கு கடும் தண்டனை அளிப்பதாகவும் உத்தரவு போட்டுவிட்டான். சிற்பிகளும் வேலையை தொடங்கினர். தங்கத்தை வளைப்பதனால் செம்பு சிறிதளவு சேர்க்க வேண்டும். மன்னனோ, எக்காரணம் கொண்டும் செம்பு சேர்க்கக் கூடாது என்றும், என்ன வித்தை செய்தேனும், தங்கத்தை வளைத்தே சிலை செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருந்தான். சிற்பிகளும் ஏதோ ஒரு தைரியத்தில் வேலையைத் தொடங்கி விட்டனர். 47 நாட்கள் கடந்து விட்டன. யாருக்குமே சிலை சரியாக வரவில்லை. நாளை மன்னன் வருவான் ! அவன் சிலையை எங்கே என்று கேட்டால் என்ன செய்வது ! சிறையில் அடைத்து விடுவானே சிற்பிகள் பயந்தனர். இந்த சம்பவம் போகரின் சித்தத்திற்கு எட்டியது. அவர் திருவூராரை அழைத்து, சிதம்பரத்தில் நடந்து கொண்டிருக்கும் விஷயத்தை விளக்கினார். கருவூரா ! நீ உடனே சிதம்பரம் செல். அந்த சிலைøப் பணியை முடித்துக் கொடு, என்றார். கருவூரார் கண்ணிமைக்கும் நேரத்தில், சிற்பிகள் முன்பு ஒரு துறவியின் வேடத்தில் போய் நின்றார். சிற்பிகளே ! உங்கள் மனக் கலக்கத்தை நான் அறிவேன். நீங்கள் எதற்கும் கலங்க வேண்டாம். இன்னும் இரண்டே நாழிகையில்  (சுமார் முக்கால் மணி நேரம்) சிலையை நான் தயார் செய்து விடுகிறேன். துறவியே ! நீர் யாரோ எவரோ ? சிவனின் அடியார் போல் தோன்றுகிறீர். நாங்கள் தமிழகத்தின் பெரும் சிற்பிகள். எங்களாலேயே 48 நாட்களில் செய்து  முடிக்க முடியாததை உம்மால் எப்படி இரண்டு நாழிகையில் சாதிக்க முடியும் ? நீர் எங்களைக் கேலி செய்கிறீரா ? இல்லை... உமக்கு மாயமந்திரங்கள் தெரியுமா ? மனம் நொந்து போயுள்ள எங்களை புண்படுத்துவது அடியாரான உமக்கு அழகாகுமோ ? என கோபமாகக் கேட்டனர்.

அவர்கள் அப்படி சொன்னதற்காக பண்பட்ட மனம் கொண்ட கருவூரார் கோபிக்கவில்லை. அவர்களின் நிலையில் யார் இருந்தாலும் அப்படித்தான் பேசுவர் என்பது அந்த சித்தாந்திக்கு தெரியாதா என்ன ! அவர் தன் வாதத்தில் உறுதியாக இருந்தார்.என்னதான் நடக்கிறதென பார்ப்போமே என சிற்பிகளும் தலையாட்டினர். கருவூரார் அறைக்கும் சென்றார். யாரும் உள்ளே வரக்கூடாது என கட்டளையிட்டார். அது மிகுந்த பாதுகாப்பு மிக்க இடம் என்பதால், தங்கத்தை எடுத்துக் கொண்டு அவர் வேறு வழியில் செல்லவே வழியில்லை என்பதால் அதற்கும் சிற்பிகள் சம்மதித்தனர். சொன்னபடி இரண்டே நாழிகையில் அறைக்கதவு திறந்தது. சிற்பிகளே ! உள்ளே போய் பாருங்கள். சிலை தயாராகி விட்டது, என்றார் சிற்பிகள் ஓடிச்சென்று பார்த்தனர். ஜெலித்தார் நடராஜப் பெருமான். ஆஹா... இப்படி ஒரு சிலையை எங்கள் வாழ்வில் பார்த்தில்லையே, என சிற்பிகள் ஆச்சரியமடைந்தனர். அந்த ஆனந்த சிவனைப் போலவே இவர்களும் தாண்டவமாடினர். கருவூராரிடம் கோபப்பட்டதற்காக மன்னிப்பும் கேட்டனர். மறுநாள் மன்னன் இரணியவர்மன் வந்தான். நடராஜரைப் பார்த்ததும், தான் கண்ட காட்சி எப்படி இருந்ததோ, அப்படியே சிலை வடித்தமைக்காக சிற்பிகளை வானளவு பாராட்டினான். அந்த நேரத்தில் தான் அமைச்சர் ஒரு சந்தேகத்தைக் கிளப்பினார். அமைச்சரே ! நீர் சொல்வதும் சரிதான் ! அப்படியே செய்து பாரும் என்றான் இரணியவர்மன்.

அமைச்சர் அறைக்குள் சென்றாள், தங்கத்தை பரிசேதிக்கும் அதிகாரியை அழைத்தார். சிலை பரிசோதிக்கப்பட்டது. அதிகாரி அமைச்சரிடம், அரசே ! இது முழுமையான தங்கச் சிலை இல்லை. இதில் குறிப்பிட்ட அளவு செம்பு கலக்கப்பட்டிருக்கிறது, என்றார். அமைச்சர் கொதித்துப்போனார். அரசரிடம் ஓடிவந்தார். இரணிய ராஜ மகாபிரபு ! தங்களையே இந்த சிற்பிகள் ஏமாற்றி விட்டார்கள். சிலையில் செம்பு கலக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் முழுமையான தங்கச்சிலை  வேண்டும் என்ற உத்தரவு மீறப்பட்டிருக்கிறது. மேலும், எஞ்சிய தங்கம் எங்கே என்ற கேள்வியும் எழுகிறது. தாங்கள், தகுந்த விசாரணை நடத்தி இந்த சிற்பிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும், என்றார். சிற்பிகள் நடுங்கி விட்டனர். அவர்களது உடல் அனலில் இட்ட புழுவாய் துடித்தது. இந்த துறவியை நம்பி மோசம் போனோமே ! முழுமையான தங்கத்தில் சிலை வடிக்க வேண்டும் என்ற கட்டளையை இவன் மீறியதால் தானே, நமக்கு வினை வந்து சேர்ந்தது என யோசித்தவர்கள், மன்னரின் காலடியில் விழுந்தனர். மகாபிரபோ ! தவறு நடந்து விட்டது. நாங்கள், இதோ நிற்கிறானே ! இந்தத் துறவியை நம்பிமோசம் போனோம். பெருமானின் சிற்பத்தை வடிக்க சுத்த தங்கத்தால் பலநாள் முயற்சித்தோம். நாங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க முடியவில்லை. தங்களிடம் உண்மையைச் சொல்லியிருந்தால் கூட எங்களுக்கு உயிர்ப்பிச்சை தந்திருப்பீர்கள். ஆனால், கடைசி நேரத்தில் வந்த இவன், சில நாழிகைகளுக்குள் சிலைப்பணியை முடித்து விட்டான். அதுகண்டு, நாங்களே ஆச்சரியம் கொண்டோம். இந்த அதிசய செயல் கண்டு அவனைக் ஆச்சரியம் கொண்டோம். இந்த அதிசய செயல் கண்டு அவனைக் கொண்டாடினோம். அவன் தனிமையில் அந்த அறையில் அமர்ந்து சிலை செய்தான். எங்களை அனுமதிக்கவில்லை. எனவே என்ன நடந்ததென்றே எங்களுக்கு தெரியவில்லை. எங்களை மன்னித்து விடுவியுங்கள், என்று கதறினர். மன்னனுக்கு கோபம் அதிகமானது.

துறவி வேடமிட்டு தங்கத்தை அபகரித்த அந்தக் கயவனை இழுத்துச் செல்லுங்கள். சிறையில் தனியறையில் வைத்து சித்ரவதை செய்யுங்கள். இந்த சிற்பிகளையும் விசாரணை முடியும் வரை சிறையில் வையுங்கள், என்றான். எல்லாச்சிற்பிகளும் கைகூப்பி தில்லையம்பலத்தானை வணங்கி, அன்புக்கடலே ! அருள்வடிவே ! நீ எல்லாம் அறிவாய். உண்மை விரைவில் வெளிப்பட வேண்டும். சாவுக்கு நாங்கள் கலங்கவில்லை. ஆனால், திருடர்கள் என்று களங்கம் எங்கள் பரம்பரையைச் சாரும் வகையில் எங்களைக் கொன்று விடாதே, என்று பிரார்த்தித்தவாறு சென்றனர். இந்தத் தகவல் போகர் சித்தரின் ஞான அறிவுக்கு எட்டியது. அவர் தன் சீடர்களுடன் வானமார்க்கமாக கணநேரத்தில் தில்லையம்பலத்தை அடைந்தார். கோபமாக இரணியராஜன் முன்பு தோன்றினார். தன் முன்னால் திடீரென கோபக்கனல் பொங்க நின்ற ஒரு துறவியைக் கண்டு அதிசயித்தனர் இரணிய ராஜன். ராஜா! என்ன நினைத்து என் சீடனை சிறையில் அடைத்தாய். தங்கத்தை வளைக்க செம்பு தேவை என்ற அடிப்படை ஞானமில்லாத நீ, இப்படிப்பட்ட முட்டாள்தனங்களைச் செய்வாய் என்பதிலும் ஆச்சரியமில்லை தான் ! இருப்பினும் குற்றமற்ற என் சீடன் செய்த செயலை மனதில் கொள்ளாமல், தக்க விசாரணை செய்யாமல் சிறையில் தள்ளி விட்டாய். மூடனே ! அவனை உடனே வெளியே அனுப்பு. நான் போக சித்தர். இப்போதாவது புரிந்து கொண்டாயா? என்றதும், இரணியரஜன் கலங்கி விட்டான். சித்தரே! தங்கள் தரிசனம் கிடைக்க என்ன பாக்கியம் கிடைக்க என்ன பாக்கியம் செய்தேன். தங்கள் சீடனை வேண்டுமென்றே அடைக்கவில்லை. தங்கத்தால் சிலை செய்ய முடியாது என்ற தகவலை சிற்பிகள் பயத்தில் மறைத்திருக்கின்றனர். தங்கள் சித்தர் கருவூராரும் அதையே செய்யவே இப்படி செய்து விட்டேன், என்றான். சரி... சரி... இப்போதே என் பக்தனை விடுதலை செய், என்று அவர் கூறவும், ஆணைகள் பறந்தன. காவலர்கள் சிறைக்குச் சென்றனர். அங்கே கருவூர் சித்தரைக் காணவில்லை. அவர்கள் ஓடிவந்து தகவல் கூறினர். போகர் இன்னும் கோபமானார்.

இரணியராஜா ! விளையாடுகிறாயா ? கருவூரான் இன்னும் ஒரு நாழிகைக்குள் வந்தாக வேண்டும். தங்கத்துக்காக தானே அவனை சிறையில் அடைத்தாய். இதோ பிடி தங்கம் ! அந்த சிலையை தூக்கி இந்தத் தராசில் வை. அந்த சிலையையும் விட மேலான அளவுக்கு உனக்கு நான் தங்கம் தருகிறேன், என்றனர் சீடர்களை பார்க்க, அவர்கள் சிலையை எடுத்து தராசில் வைத்தனர். நடராஜர் சிலையின் எடைக்கும் மேலாக தங்கத்தை வைத்தார் போகர். உம்... இதோ நீ விரும்பும் தங்கம், எடுத்துக் கொள், என் சீடனை என்னிடம் ஒப்படைத்துவிடு, என்றார். மன்னன் நடுங்கினான். தில்லையம்பலத்தானை மனம் உருகி வேண்டினான். அவனது நிலையை கண்ட போகர் மனமிரங்கினார். இரணியராஜா கலங்காதே. கருவூரான் சிறையில் தான் இருக்கிறாள். சித்தர்களுக்கே உரித்தான சில யோகங்கள் மூலம் அவன் தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறான். நான் அழைத்தால் வருவான், என்றார். பின்னர், கருவூரா வெளியே வா, என்றார் போகர். அக்கணமே அவர் முன்னால் வந்த கருவூரார், குருவே ! தாங்கள் கற்றுக் கொடுத்தபடி குறுகிய இடைவெளி வழியே வெளியே வரும் கலை மூலம் சிறையில் இருந்து வெளிப்பட்டேன், என்றார். பின்னர் போகர் மன்னனிடம், நடராஜர் சிலை அமைய வேண்டிய முறை, கோயில் எழுப்ப வேண்டியே முறை ஆகியவற்றை போதித்து கருவூராருடன் மறைந்து விட்டார். பின்னர் கருவூரார் தனித்தே பல தலங்களுக்கு சென்றார். ஒருநான் ஒரு காகம் அவர் முன்னால் ஒலைச்சுவடியைப் போட்டது. அதைப் பிரித்து படித்தார் கருவூரார்.

அந்த ஓலையை குருநாதர் போகர் அனுப்பியிருந்தார். அதில், கருவூரா! உடனே தஞ்சாவூருக்குச் செல் அங்குள்ள கோயிலில் சிவலிங்கத்தை நிலைநிறுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது, என எழுதப்பட்டிருக்கறது. கருவூராரும் தஞ்சாவூர் சென்றடைந்தார். கோயிலுக்குள் சென்று கருவறையை அடைந்தார். அங்கே திருப்படி முடிந்து, லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெண்ணின் பயங்கர சிரிப்பொலி கருவூராரின் காதில் கேட்டது. சுற்றுமுற்றும் பார்த்தபோது, ஒரு ராட்சஷி அங்கு நிற்பது கருவூராரின் கண்களுக்கு மட்டும் தெரிந்தது. பக்திமார்க்கம் தழைப்பதை விரும்பாத அந்த ராட்சஷியைக் கொண்டு சிவபெருமான் ஏதோ ஒரு நாடகத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்த கருவூரார், உடனடியாக  அவளை நோக்கி, ஏ பூதமே ! ஒழிந்து போ, என்று அøõ நோக்கி உமிழ்ந்தார். அவரது எச்சில் அனலாய் மாறி அவளைத் தகித்தது. அவள் சாம்பலாகி விட்டாள். பக்தர்கள், கருவூராரின் அசைவுகளையும் கோபக்கனல் பொங்கும் கண்களையும் கவனித்தார்கள். ஆனால், என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குப் புரியவில்லை. இப்போது லிங்கத்தை அஷ்டபந்தனம் சாத்தி பரதிஷ்டை செய்யுங்கள், என்று அர்ச்சகர்களிடம் சொன்னார் கருவூரார். அர்ச்சகர்களும் அவ்வாறே செய்ய, லிங்கம் தனது இடத்தில் அமர்ந்தது. மேலும், அதில் இருந்து வெளிப்பட்ட ஜோதி, கருவூராரின் நெஞ்சில் பாய்ந்தது. கருவூரார் இனம்புரியாத பரவசநிலைக்கு ஆளானார். ஒருமுறை தான் பிறந்த கருவூருக்கு அவர் சென்றார். அவ்வூர் மக்களில் பெரும்பகுதியினர் அவரது மகிமையை உணர்ந்து கொள்ளவில்லை. அவரை உதாசீனப்படுத்தினர். அவர் நிகழ்த்திய அற்புதங்களை சித்துவேலை என்று குற்றம் சாட்டினர். கருவூரார் மனம் வருந்திய போது போகர் அங்கு தோன்றினார். சீடனே ! கவலை கொள்ளாதே. சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும் பிறரது சொல்லடிக்காக வருத்தும் கொள்ளக்கூடாது. அவர்கள் நம்மைத் தூற்றினாலும், நாம் அவர்களது  நன்மை கருதியே செயல்பட வேண்டும். மனம் தளராமல் உன் கடமைகளைச் செய், என்றார். குருவின் இந்த போதனையை ஏற்ற கருவூரார் தன்னைச் சந்திக்க வருபவர்களிடம், நீங்கள் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள். போனால் கிடைக்காதது காலம் மட்டுமே ! உங்களைத் தேடி எமதர்மன் எந்த நேரமும் வந்தது விடுவான். அதற்கும் வந்து கடமையை முடித்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலைக் காக்க கல்ப சாதனை செய்யுங்கள் கடவுளுக்கு அர்ப்பணித்து விடுங்கள். செல்வம்.... செல்வம் என அலையாதீர்கள். சம்பாதிக்க மட்டுமே நீங்கள் பிறக்கவில்லை. அப்படி சம்பாதிப்பதில் பயனும் இல்லை. எவ்வளவு சம்பாதித்தாலும் அது உங்களுடன் வரப்போவதில்லை. அம்பாள் மட்டுமே நிலையான செல்வம், என் போதிப்பார்.

இதை ஒரு சாரார் மட்டுமே ஏற்றுக்கொண்டார். பெரும்பாலானவர்கள் அவரைத் தொடர்ந்து விமர்சித்தனர். இந்த சாமியார் வேண்டாததை எல்லாம் மக்களிடம் சொல்கிறான். மக்களை சோம்பேறியாக்கப் பார்க்கிறான். உழைத்தால் தானே அந்த அம்பாளுக்கு கூட பூஜை செய்ய முடியும் ? வெறும் கை முழம் போடுமா ? சரியான வேஷக்காரன், என்றெல்லாம் திட்டித்தீர்த்தனர். ஆனால், போகரின் அறிவுரை தந்த மனஉறுதியால் அதை அவர் கண்டு கொள்ளவில்லை. தனது மகிமையை நிரூபிக்க அவர் சில அதிசயங்களைச் செய்து காட்ட வேண்டியாதியிற்று. ஒரு கோடைகாலத்தில் மழை பெய்யச் செய்தார். அவ்வூர் அம்மன் கோயில் கதவைத் தானாகத் திறக்கச் செய்தார். இதையும், சித்து வேலை என்றே அவ்வூர் மக்கள் கூறவே, அவர்களைத் திருத்த முடியாது எனக்கருதிய கருவூரார், சில காலம் மட்டும் கருவூரில் தங்கியிருந்து விட்டு, அவர் அங்கிருந்து கிளம்பி விட்டார். மக்களிடம் எவ்வளவோ எடுத்துக்சொல்லியும் அவர்கள் ஆன்மிகத்தின் பக்கம் வர மறுக்கின்றனர் என்ற ஆதங்கத்தை அம்பாளிடமே அவர் சொல்லி அழுதார். இதன் பிறகு அவர் திருக்கூருகூர் எனப்படும் ஆழ்வார்திருநகரி பெருமாள் கோயிலுக்குச் சென்றார். அவ்வூர் பக்தர்களின் கனவில் தோன்றிய நாராயணன், தன் பக்தன் அங்கு வருவதாகச் சொல்லியிருந்தார். அவர்கள் ஊர் எல்லையில் கருவூராரை வரவேற்ற போது, பெருமாளின் லீலையால் தனக்கு கிடைத்த வரவேற்பை எண்ணி கருவூரார் பெருமைப்பட்டார். பின்னர் அவர் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்குச் சென்று, சுவாமியின் பெரைச் சொல்லி இங்கே வா என மூன்று முறை அழைத்தார். நெல்லையப்பர் வரவில்லை. இதனால் கோபமடைந்த அவர், இவ்வூரில் இனிநெல் முறைக்ககூடாது, எருக்கஞ்செடி முளைக்கட்டும் என சாபமிட்டு விட்டு, அருகிலுள்ள மானூருக்கு சென்று விட்டார். தன் பக்தனை அதற்கும் மேலாக சோதிக்க விரும்பாத நெல்லையப்பர், அவரை நேரில் சென்று கோயிலுக்கு அழைத்து வந்தார். அவர் அங்கே வந்ததும் எருக்கங்காடு மறைந்து, வயல்களில் மறைந்திருந்த நெற்கதிர் வெளிப்பட்டது. பின்னர் கருவூரார் திருப்புடைமருதூர் என்ற தலத்திற்கு சென்றார். தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் ஆற்றைக் கடந்து கோயிலுக்குச் செல்ல முடியவில்லை. அங்கு நின்றபடியே நாறும்பூ நாதா என்று சுவாமியின் பெயரைச் சொல்லி அழைத்தார். லிங்கள் சற்றே சாய்ந்து, அவரது இரலைக் கேட்டது. இப்போதும் இவ்வூர் லிங்கம் கருவறையில் சாய்ந்துள்ளது இறிப்பிடத்தக்கது. அதே ஊரிலுள்ள கஜேந்திர வரதப்பெருமாளையும் அவர் தரிசித்தார். பின்னர் திருச்சி அருகிலுள்ள திருவானைக்கவலுக்குச் சென்றார். அங்கே ஒரு பெண் இவரது வாழ்வில் குறுக்கிட்டாள்.

அவளது பெயர் அரபஞ்சி. அவள் ஒரு பொதுமாது. தனது இல்லத்திற்கு வரும்படி அவள், கருவூராரை அழைத்தான். மக்கள் செய்யும் தொழிலை மகான்கள் பார்ப்பதில்லை. எல்லோரையும் ஒரே மாதிரியான கண்ணோட்டத்துடன் தான் பார்ப்பார்கள். சிறந்த தொழில் செய்யும் அனைவருமே நல்லவர்கள் என சொல்வதற்கில்லை. அதுபோல மோசமான தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களிலும் நல்லவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அரபஞ்சியும் அந்த ரகம்தான். அவளது தொழில் ஏற்புடையதாக இல்லாவிட்டாலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமான் மீது அவளுக்கு அளவு கடந்த பக்தி உண்டு. தங்கள் ஊருக்கு வரும் அடியவர்கள் தனது வீட்டிற்கு வர மாட்டார்களா என அவள் ஏங்குவாள். ஆனால், பொதுமாது தொழிலைச் செய்யும் பெண்ணின் வீட்டிற்கு யார்தான் வருவார்கள் ? கருவூராரோ அவளது இல்லத்திற்கு வர சம்மதித்தார். அவள் ஆனந்தக் கூத்தாடினாள். தனது இல்லத்தை மெழுகி, ரங்கநாதரின் படத்திற்கு தூபதீபம் காட்டி, அவரது வருகைக்காக காத்திருந்தாள். பகல் முழுவதும் அவர் வரவில்லை. இரவாகி விட்டது. அரபஞ்சி மிகவும் சோர்ந்து போனாள். சித்தர் தன்னை ஏமாற்றிவிட்டாரோ அல்லது இரவுப்பொழுதில் அவரது ஒரு சாதாரண மனிதரைப் போல, தன்னிடம் நடந்து கொள்வாரோ என்றெல்லாம் பலவாறாக சிந்தித்தான். அவள் நினைத்தது போல, இரவு வெகுநேரம் கழித்து சித்தர் அவளது வீட்டிற்கு வந்தார். அவளுடன் நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்தார். ஆனால், அவர்களது பேச்சில் ஆன்மிகத்தை தவிர வேறு எதுவும் இடம்பெறவில்லை. விடிய, விடிய ஒரு மோசமான அனுபவத்தைச் சந்தித்த அரபஞ்சிக்கு அன்றைய இரவு நல்லிரவாக கழிந்தது. விடியும் வரை அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். கருவூரார் அவளிடம் விடைபெற்றுக் கிளம்பினார். அப்போது ஒரு நவரத்தின மாலையை வரவழைத்து அவளுக்கு கொடுத்தார். அதை அன்புடன் பெற்றுக்கொண்ட அவள், நீராடிவிட்டு ரங்கநாதர் முன்னால் வைத்து வணங்கி அணிந்து கொண்டாள்.

அன்று காலையில் ஸ்ரீரங்கம் முழுவதும் களேபரமாக இருந்தது. ரங்கநாதரின் நவரத்தின மாலை தொலைந்துவிட்டதாம், களவு போய்விட்டதாம், கோயிலுக்குள் கொள்ளை நடந்திருக்கிறது.... இப்படி பலவாறாக மக்கள் பேசிகொண்டனர். கோயில் அதிகாரி அர்ச்சகர்களை அழைத்து விசாரணை நடத்திக் கொண்டிருந்தார். அனைவரும் தங்கள் மீது எந்தக் குற்றுமும் இல்லையென்றும், தாங்கள் காலம் காலமாக ரங்கநாதருக்கு எவ்வித எதிர்பார்ப்புமின்றி சேவை செய்வதைத் தவிர, வேறு எதுவும் அறியமாட்டோம் என்றும் கண்ணீர் வடித்தனர். அந்த நேரத்தில் அரபஞ்சி கோயிலுக்குள் பக்தி ததும்ப நுழைந்தாள். அவளது கழுத்தில் நவரத்தின மாலை ஒன்று மின்னியது. அர்ச்சகர்கள் மட்டுமின்றி, கோயில் அதிகாரியும் அதைக்கண்டு அசந்து போனார். அர்ச்சகர்களையும், ஊழியர்களையும் கடுமையான பார்வை பார்ததார். அவருடைய பார்வையின் பொருள் இதுதான். யாரோ ஒருவர், ரங்கநாதருக்கு அணிவிக்கப்பட்டிருந்த நவரத்தின் மாலையைத் திருடிச் சென்று அரபஞ்சியிடம் சந்தோஷமாக இருப்பதற்காக அவளுக்கு பரிசளித்திருக்கிறார்கள் என்பதுதான் ! அரபஞ்சியைக் கண்டதும் கோயில் ஊழியர்கள் அவளை இழுத்து வந்து, அதிகாரியின் முன்னால் நிறுத்தினர். அவர் அரபஞ்சியிடம் இந்த நவரத்தின மாலையை உன்னிடம் யார் கொடுத்தார்கள் ? என்று கேட்டார். அவள் மிகவும் அமைதியாக, நமது ஊருக்கு வந்திருக்கும் கருவூர் சித்தர் பெருமான் இதை எனக்குத் தந்தார். அவரது பேரருளால் கிடைத்த இந்த மாலையை நான் பிரசாதமாகக் கருதி அணிந்திருக்கிறேன், என்றாள். அதிகாரிக்கு கோபம் வந்து விட்டது. அவரைப் பழிக்காதே ! அவர் பெரிய மகான். அவரைப் போன்றவர்கள் உன் வீட்டின் பக்கம்கூட எட்டிப்பார்க்க மாட்டார்கள். உண்மையைச் சொல் ! எனக் கண்டித்தார். அரபஞ்சியோ தனது பதிலில் உறுதியாக இருந்தாள். வேறு வழியின்றி கருவூர் சித்தரை விசாரணைக்கு அழைக்கும்படியான நிர்பந்தத்திற்கு அதிகாரி ஆளானார். கருவூராரை காவலர்கள் அழைத்து வந்தனர். அவரிடம் விசாரணை நடந்தது. அதிகாரியோ ! அரபஞ்சி சொல்வது உண்மைதான். நேற்றிரவு நான் அவளது வீட்டில்தான் இருந்தேன். ரங்கநாதப்பெருமான் என்னிடம் அவரது நவரத்தின மாலையைக் கொடுத்து, தனது பக்தையான அரபஞ்சியிடம் ஒப்படைக்கச் சொன்னார், அதையே நான் செய்தேன், என்றார் அனைவரும் சிரித்தனர். சித்தரின் பேச்சை யாரும் நம்பவில்லை.

சித்தரிடம் அதிகாரி, கருவூராரே ! நீர் சொல்வது உண்மையானால், அதை அனைவர் முன்னிலையிலும் நிரூபிக்க வேண்டும், என்றார். கருவூரார் சற்றும் தயங்காமல், ரங்கநாதா... ரங்கநாதா.. இங்கிருப்பவர்களுக்கு உண்மையை சொல், என்று கூவினார். அப்போது அசரீரி எழுந்தது.கருவூரான் சொல்வது உண்மைதான். அரபஞ்சி எனது ஆத்ம பக்தை. அவளுக்கு நானே எனது ரத்தின மாலையை கருவூரான் மூலமாக அனுப்பிவைத்தேன், என்று சொல்ல அடங்கியது.அனைவரும் ரங்கநாதப் பெருமானை துதித்ததுடன் கருவூராரிடமும், அரபஞ்சியிடமும் மன்னிப்பு கேட்டனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு கருவூரார், தான் பிறந்த கருவூருக்குச் சென்றார். அவரது செல்வாக்கு கண்டு பொறாமை கொண்டிருந்த அவ்வூர் மக்களில் சிலர், அவரது பெரைக் கெடுக்க எண்ணினார். இதற்காக மன்னனிடம் சென்று, கருவூராரின் வீட்டில் மது வகைகள் இருப்பதாகவும், அவர் எந்நேரமும் போதையில் திரிவதாகவும் புகார் கூறினர். மன்னன் காவலர்களை அனுப்பி சோதனை செய்தான். கருவூராரின் வீட்டில் பூஜைப் பொருட்களைத் தவிர எதுவுமே இல்லை. புகார் சொன்னவர்களை அழைத்த மன்னன், அவர்களைக் கடுமையாகக் கண்டித்தான். கருவூராரை வரவழைத்து நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டான். ஆனாலும், கருவூரார் மீது கொண்ட பொறாமையால், அவரைக் கொலை செய்ய சிலர் முடிவு செய்தனர். ஆயுதங்களுடன் அவரது வீட்டிற்குச் சென்றனர். இப்படிப்பட்ட மக்களின் மத்தியில் கருவூராருக்குப் பிடிக்கவில்லை. அவர் அந்த மக்களுக்குப் பயந்து ஓடுவது போல நடத்தார். அவ்வூரிலுள்ள ஆனிலையப்பர் கோயிலுக்குள் சென்று சிவலிங்கத்தை அணைத்து கொண்டார். கோயில் என்றும் பாராமல், கொலைகாரர்கள் அங்கும் நுழைந்தனர். அப்போது அவர்களின் கண்முன்னாலேயே ஆனிலையப்பா பசுபதீஸ்வரா என்று கூறி அழைத்து கருவறையிலிருந்து சிவலிங்கத்தை தழுவினார். இனி எந்தக் கருவிலும் ஊறுதல் இல்லாத கருவூரார் இறைவனுடன் இரண்டறக் கலந்து விட்டார். இதுகண்டு கொலைகாரர்கள் மனம் திருந்தினர். அவரது சக்தியை எண்ணி வியந்தனர்.

நூல்:

கருவூரார் செய்த 11 நூல்கள் 
கருவூரார் வாதகாவியம்  700
கருவூரார் வைத்தியம்  500
கருவூரார் யோக ஞானம்  500
கருவூரார் பலதிட்டு  300
கருவூரார் குரு நரல் சூத்திரம்  105
கருவூரார் பூரண ஞானம்  100
கருவூரார் மெய் சுருக்கம்  52
கருவூரார் சிவஞானபோதம்  42
கருவூரார் கட்ப விதி  39
கருவூரார் முப்பு சூத்திரம்  32

தியானச் செய்யுள்:

கருவூரில் அவதரித்த மஹாஸ்தபஸ்யே திருக்
கலைத் தேரில் முடிதரித்த நவநிதியே
வாரி வழங்கி அருள் கொடுத்தாய்!
மாறாத சித்துடையாய்
கள் உள்ளளவும் மண் உள்ளளவும்-உன்
கருணைக் கரங்களே காப்பு காப்பு!

காலம்: கருவூரார் முனிவர் சித்திரை மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 300 ஆண்டுகள் 42 நாள் ஆகும்.
17.பாம்பாட்டி சித்தர்

மருதமலை காட்டிலுள்ள எல்லா பாம்புகளும் ஒன்று கூடின. பாம்புகளின் தலைவன் கவலையுடன் பேசியது. பாம்புகளே! நம்மைக் கண்டால் படையும் நடுங்கும் என்ற பழமொழியையே பொய்யாக்கி விட்டான் அந்த இளைஞன். நம் தோழர்கள் எத்தனை பேர் இறந்திருப்பார்கள். அவனைக் கடிக்க மறைந்திருந்து தாக்கினாலும், எப்படியோ நாம் இருக்கும் இடத்தை மோப்பம் பிடித்து, நம்மைத் தூக்கி வீசி எறிந்து விடுகிறான். புற்றுகளையெல்லாம் இடித்து தள்ளுகிறான். அதனுள் இருக்கும் குஞ்சுகளை நசுக்கி விடுகிறான். நம்மிலுள்ள விஷப்பைகளை எடுத்து மருந்து தயாரிப்பதாகச் சொல்கிறான். இப்போது, நம் பாம்பினத்திற்கே பெருமை தரும் வகையில் ஒளிவீசும் நவரத்தினங்களை உள்ளடக்கிய ரத்தினப் பாம்பைப் பிடிக்க வருகிறான். அது மட்டும் அவனிடம் சிக்கி விட்டால், அவன் இந்த உலகத்திலேயே பெரிய செல்வந்தனாகி விடுவான். மன்னாதி மன்னரெல்லாம் கூட அவனிடம் சரணடைந்து விடுவார்கள், என்றது. எல்லாப்பாம்புகளும் வருத்தப் பட்டதே ஒழிய, அந்த இளைஞனுக்கு எதிராக கருத்துச் சொல்லக்கூடத் தயங்கின. இவை இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே, காலடி ஓசை கேட்டது. தங்கள் உணர்வலைகளால், வருபவன் அந்த இளைஞனே என்பதை உணர்ந்து கொண்ட பாம்புகள் திசைக்கு ஒன்றாக ஓடின. பாம்புகளின் தலைவனும் உயிருக்கு அஞ்சி எங்கோ சென்று மறைந்து கொண்டது. இப்படி பாம்புகளையே கலங்கடித்த அந்த இளைஞனுக்கென பெயர் ஏதும் இல்லை. பாம்புகளைப் பிடித்து மகுடி ஊதி ஆடச்செய்பவன் என்பதால், பாம்பாட்டி என்றே அவனை மருதமலை பகுதி மக்கள் அழைத்தனர். அந்த இளைஞனே பாம்பாட்டி சித்தர் என்ற பெயரில் பிற்காலத்தில் மக்களால் வணங்கப்பட்டார்.

அவர் திருக்கோகர்ணம் என்னும் புண்ணிய தலத்தில் பிறந்ததாக சொல்லப்படுகிறது. இந்தத்தலம் கர்நாடக மாநிலத்தின் உட்பகுதியில் இருப்பதாகவும், ஒரு சாரார், அவர் அங்கே பிறந்திருக்க வாய்ப்பில்லை என்றும், தமிழகத்தில் புதுக்கோட்டை நகர எல்லையிலுள்ள திருக்கோகர்ணத்தில் பிறந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர். இவர் பிறந்த ஊர் பற்றிய ஆதாரம் சரியாக இல்லை.இவர் இளைஞராக இருந்த காலத்தில் தான் பாம்புகளைப் பிடித்து அவற்றின் நாக ரத்தினங்களை எடுப்பதையும், விஷத்தைக் கொண்டு மருந்து தயாரிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இப்போது, நவரத்தின பாம்பு பற்றிக் கேள்விப் பட்டு, அதைப் பிடித்து அதனுள் இருக்கும் ரத்தினங்களை எடுத்து விற்றால், உலகத்தின் முதல் பணக் காரராகி விடலாம் என்ற எண்ணம் கொண்டார்.அவர் தான் இப்போது காட்டிற்குள் வந்து கொண்டிருக்கிறார்.பாம்புகள் மறைந்து ஓடின. அப்போது ஓரிடத்தில் ஒளிவெள்ளம் பாய்ந்தது. ஆஹா....நவரத்தின பாம்பு தான் அவ்விடத்தில் மறைந்திருக்கிறது. அது தன் உடலை முழுமையாக மறைக்க முடியாததால், அதன் உடல் ஒளிவீசுகிறது என பாம்பாட்டி சித்தர் நினைத்துக் கொண்டார். ஆனால், ஒளி வெள்ளம் சற்று மங்கி, அவர் முன்னால் ஒரு மனிதர் நின்றார். அவரிடம், மகானே! தாங்கள் யார்? தங்கள் உடல் பொன் போல் பிரகாசிக்கிறதே. ஒருவேளை நான் தேடி வந்த பாம்பாக இருந்த நீங்கள், என்னிடம் சிக்காமல் இருக்க மனித உருவம் கொண்டீர்களோ! என்றவர், அவரது தேஜஸைப் பார்த்து, தன்னையும் அறியாமல் அவரது பாதங்களில் விழுந்து வணங்கினார். அந்த மகான் பாம்பாட்டி சித்தரை ஆசிர்வதித்தார். இளைஞனே! நீ இந்த சாதாரண பாம்புகளைப் பிடிப்பதற்காகவா இந்த உலகத்தில் பிறந்தாய். உன் பிறப்பின் ரகசியமே வேறு. நீ தேடி வந்த செல்வத்தின் அளவு பெரியது தான்.

செல்வமே உலகத்தை ஆட்டிவைக்கும் கருவி என நீ நினைக்கிறாய். எல்லா மக்களுமே இப்படி நினைப்பதால், நீயும் நினைப்பது இயற்கையே. எனவே, சாதாரண செல்வத்தை தேடி இங்கு வந்திருக்கிறாய், என்றவரை இடைமறித்த பாம்பாட்டி சித்தர், சுவாமி! தாங்கள் யார்? தங்கள் உடலே பொன்போல் மின்னுகிறதே, என்றார்.மகனே! உடலைக்கூட பொன்னாகக் கருதி பார்க்கும் அளவுக்கு, உன் மூளையில் செல்வம் தேடுவதின் தாக்கம் தெரிகிறது. சரி...இந்த உடல் என்றாவது அழியத்தானே போகிறது. அப்போது அது தீயில் கருகியோ, மண்ணில் நைந்தோ உருத்தெரியாமல் போய்விடுமே. அப்போது பொன்னை எங்கே தேடுவாய், என்றார்.அவரது அந்த வார்த்தைகள் இளைஞனின் மனதைத் தொட்டன.சுவாமி! இந்த அரிய உபதேசத்தை செய்த தாங்கள் யார் என்பதை நான் அறிந்து கொள்ளும் தகுதியுடையவனா? என பாம்பாட்டியார் பணிவுடன் கேட்டதும், அவனது மனம் செல்வத்தில் இருந்து விடுபட்டுவிட்டது என்பதை வந்தவர் உணர்ந்து கொண்டார்.மகனே! நான் தான் சட்டைமுனி சித்தர். இந்தக் காடுகளில் வசிக்கிறேன். நீ நவரத்தின பாம்பைத் தேடி வந்துள்ளதை நான் அறிவேன். அந்தப்பாம்பு உனக்கு பல லட்சம் கோடி தங்கம் வாங்குமளவு செல்வத்தைத் தரும். அதனால் அதை ஆட்டி வைக்க வந்துள்ளாய். ஆனால், அதையும் விட உயர்ந்த பாம்பு ஒன்று இருக்கிறது தெரியுமா? என்றதும், பாம்பாட்டியாரின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.அப்படியா? அப்படியும் ஒரு பாம்பினம் இருக்கிறதா? அப்படியானால், எனக்கு இந்த சாதாரண நவரத்தின பாம்பு வேண்டாம். தாங்கள் சொல்லும், அந்த உயரிய இனமே வேண்டும், என்ற பாம்பாட்டியாரிடம், அப்படியா! அந்தப் பாம்பு உன் உடலுக்குள்ளேயே இருக்கிறது, என்றார் சட்டைமுனி.இதைக் கேட்டு ஆ...வென மலைத்து விட்டார் பாம்பாட்டியார்.

சுவாமி! தாங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லை. மனிதர்களின் உடலுக்குள் எப்படி பாம்பு இருக்கும்? பாம்பாட்டியார் சந்தேகம் எழுப்பினார். சட்டைமுனி அவரிடம், மகனே! உன்னுள் மட்டுமல்ல. உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனிடமும் இந்தப்பாம்பு இருக்கிறது. அதன் பெயர் குண்டலினி. அந்த பாம்பை நீ ஆட்டுவித்தால் போதும். உன்னிலும் உயர்ந்தவர் யாரும் இருக்க முடியாது. அதை மட்டும் நீ அடக்கிவிட்டால், மாபெரும் சித்தனாகி விடுவாய். சித்தர்களுக்கு உலகப்பொருள்கள் மீது ஆசை வருவதில்லை. அவர்களால் தங்கத்தையே உருவாக்க முடியும். ஆனால், அதைத் தாங்கள் பயன்படுத்தாமல், உலக நன்மைக்காக பயன் படுத்துவர். அப்படிப்பட்ட மனப் பக்குவத்தை தருவதே குண்டலினி. உலகத்தில் உள்ள எல்லாருமே பணத்தைத் தேடி ஓடுகிறார்கள். ஆனால், நிஜமான செல்வம் உன் உடலுக்குள் இருக்கிறது. அதைத் தேடு, என்றார். பாம்பாட்டியார் அவரது உபதேசத்தை ஏற்றார். சுவாமி! தாங்கள் சொல்வது இப்போது எனக்கு விளங்குகிறது. செல்வத்தை அடைந்து தனியொரு மனிதனாக ஆட்சிசெய்வதில் இல்லாத சந்தோஷம், தாங்கள் சொல்லும் குண்டலினியை எழுப்புவதன் மூலம் கிடைக்குமென நம்புகிறேன். தங்கள் உபதேசப்படி நடப்பேன், என்று சொல்லி அவர் காலில் விழுந்தார். செல்வமே பெரிதெனக் கருதிய ஒருவன், தன் கருத்தை ஏற்று, உடனடியாக தன்னைச் சரணடைந்ததை எண்ணி மகிழ்ச்சியடைந்த சட்டைமுனி, மகனே! உடலுக்குள்  குண்டலினி என்னும் சக்தி பாம்பு போல தொங்கிக் கொண்டிருக்கும். இந்தப் பாம்பு எப்போதுமே தூங்கிக் கொண்டிருக்கும். இது தூங்குவதால் தான் மனிதன் உலக வாழ்க்கை நிரந்தரமென எண்ணி, அறியாமையில் மூழ்கித்தவிக்கிறான். இதை தட்டி எழுப்ப வேண்டுமானால், தெய்வசிந்தனை எந்நேரமும் இருக்க வேண்டும். அப்போது அந்தப் பாம்பு விழிக்கும். நமது ஜீவனுக்குள் அது அடைக்கலமாகும். அப்போது, உனக்குள் இருக்கும் ஆத்மா இது தான் உலகம், இது தான் வாழ்க்கை என்பதைப் புரிந்துகொள்ளும். அப்போது, நீ தேடியலையும் பொருள் தரும் ஆனந்தத்தை விட பேரானந்தம் உனக்கு கிடைக்கும், என்றார்.

பாம்பாட்டியார் சட்டைமுனிவரின் பேச்சைக் கேட்டு பரவசமடைந்தார்.சித்தரே! இப்படி ஒரு அரிய உபதேசத்தை வழங்கி, என்னை அறிவீனத்தில் இருந்து மீட்ட தாங்களே எனது குருநாதர். தாங்கள் சொன்ன சொல்படி நடப்பேன். இது உறுதி, என்றார் பாம்பாட்டியார். அவரது மனஉறுதி கண்டு மகிழ்ந்த சட்டை முனிவர் பாம்பாட்டியாருக்கு அருள்வழங்கி, மகனே! நீ பாம்பாட்டியே பிழைத்ததால், அந்த  பெயரே உனக்கு நிலைத்து விட்டது. இனி உலகமக்கள் உன்னை பாம்பாட்டி சித்தர் என வழங்குவர் எனச்சொல்லி விட்டு மறைந்து விட்டார். இதன்பிறகு, அஷ்டமாசித்திகள் எனப்படும் கூடுவிட்டு கூடு பாய்தல் உள்ளிட்ட அனைத்து சித்து வேலைகளும் பாம்பாட்டி சித்தருக்கு கைவந்த கலையாயின. குண்டலினியை தட்டி எழுப்பும் வகையில் கடும் தியானங்களிலும் அவர் ஈடுபட்டார். பின்னர், தொட்டதெல்லாம் தங்கமாக மாறும் ரசவாதம் எனப்படும் வித்தை அவருக்கு தெரிந்தது. நவரத்தினக் கற்களைத் தேடி ஓடிய காலம் போய், அவர் வெறும் கற்களைத் தொட்டாலும் அவை நவரத்தினங்களாக மாறின. அதனால் தனக்கு என்ன பயன் என்று, அவற்றை வீசிவிட்டார். வானத்தில் நடந்து செல்லும் பயிற்சியும் அவருக்கு கிடைத்து விட்டது. ஒருமுறை அவர் வானத்தில் நடந்து சென்ற போது, ஒரு அரண்மனையைக் கண்டார். அந்நாட்டு  அரசன் இறந்து விட்டதால், மகாராணி தன் கணவனின் உடலில் விழுந்து புரண்டு அழுது கொண்டிருந்தாள். ஊரே சோகமயமாக இருந்தது. அப்போது வானத்தில் இருந்தபடியே இறந்துபோன ஒரு பாம்பை மன்னனை சுற்றிநின்ற மக்களின் கூட்டத்தில் வீசினார் பாம்பாட்டி சித்தர். கூட்டத்தினர் அலறி அடித்து ஓடினர். ஆனால், ராணி மட்டும் மிரளவில்லை. அவள் அங்கேயே நின்றாள். அப்போது, பாம்பாட்டி சித்தர் தன்னை மறையச்செய்து, மன்னனின் உடலுக்குள் புகுந்தார். இறந்து கிடந்த மன்னன் உருவில் சித்தர் எழுந்து நின்றார். ராணிக்கோ மகிழ்ச்சி தாங்கவில்லை. அவரை அணைத்துக் கொள்வதற்காக வேகமாக அவரருகில் சென்றாள். மன்னன், வடிவிலுள்ள சித்தரோ, அவளைத் தடுத்து விட்டார். அவர் இறந்து கிடந்த பாம்பின் அருகில் சென்று, பாம்பே எழுந்திரு, என்றார். அது உயிர் பெற்றது. மகிழ்ச்சியுடன் தனது கூட்டம் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தது. அதை தடுத்து நிறுத்திய மன்னர், பாம்பே! நீ வாழும் காலத்தில் உன் கூட்டம் எந்தளவுக்கு உன்னை அவமானம் செய்தது? ஆனாலும், உயிர் பெற்றதும் உன் கூட்டத்தை தேடி ஓடுகிறாயே! இந்த உலக வாழ்வில் அப்படி என்ன சுகத்தைக் கண்டுவிட்டாய்? என்றார்.

இதைக் கண்ட ராணியும், அமைச்சர்களும் இறந்தவர் உயிர் பிழைத்து எழுந்ததால் இவருக்கு சித்தசுவாதீனம் இல்லாமல் போய்விட்டதோ! அதே நேரம், இறந்த பாம்பை இவர் உயிர் பிழைக்க வைத்தது எப்படி? என்று குழம்பிப் போனார்கள். அரசிக்கு ஒரு சந்தேகம்.மன்னர் சாகும் முன்பு, நான் ஒருத்தி போதாதென்று, ஏராளமான பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார். சிற்றின்பத்திலேயே மூழ்கிக்கிடப்பார். பணம் வரி கிஸ்தி என எந்நேரமும் செல்வத்தின் நினைப்பிலேயே கிடப்பார். இப்போதோ, ஓடுகிற பாம்பை நிறுத்தி, உலக வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? என தத்துவம் பேசுகிறார். இதென்ன குழப்பம், என அதிர்ந்து நின்றாள். இதற்கு பதிலளிக்கும் வகையில் சித்தர் பாட ஆரம்பித்தார். நாடும், வீடும், மனைவியும், உறவும் உயிர் போன பிறகு கூட வராது என்ற பொருளில் அவரது பாடல் அமைந்தது. நான் மனதில் நினைத்தது இவருக்கு எப்படி தெரிந்தது? நம் எண்ணத்திற்கு தக்க பதில் போல் இந்தப் பாடல் இருக்கிறதே என அவள் மேலும் அதிர்ச்சியடைந்தாள். இருப்பினும் சுதாரித்துக் கொண்டு, மன்னரே! தாங்கள் எப்படி உயிர் பெற்றீர்கள்? இங்கு நான் காண்பது கனவா, நிஜமா? எனக்கேட்டாள். அதற்கு மேலும் அங்குள்ள மக்களை குழப்ப விரும்பாத சித்தர், மகாராணி! உன் கணவனின் உடலில் புகுந்திருக்கும் என் பெயர் பாம்பாட்டி சித்தர். நீ மன்னனைப் பிரிந்த துயரத்தில் அழுதாய். இறப்பு சாதாரண மான ஒன்று. அது நிச்சயம் எனத்  தெரிந்த பிறகும், இறந்தவர்களுக்காக அழக்கூடாது என்பதை உனக்கும், உலகுக்கும் அறிவிக்கவே இந்த விளையாடலைச் செய்தேன், என்றார்.சித்தரின் உண்மை மொழிகளால் ராணி மனம் தேறினாள்.பின்னர் மன்னனின் உடலில் இருந்து விடுபட்டார் சித்தர். மன் னனின் உடல் மீண்டும் சாய்ந்தது.இப்படி உலகுக்கு அளப்பரிய தத்துவத்தை தந்த பாம்பாட்டி சித்தர், மருதமலையில் சித்தியடைந்தார் என்றும், விருத்தாச்சலம் அருகிலுள்ள பழமலையில் என்று சிலரும், துவாரகையில் அவர் சித்தியடைந்ததாகவும் கூறுகிறார்கள். மூன்று தலங்களிலும் இவரது நினைவிடம் உள்ளது.

நூல்:

பாம்பாட்டிச் சித்தர் பாடல்
சித்தரா ரூடம்
சில வைத்திய நூல்கள்

தியானச் செய்யுள்:

அடவி வாழ் பாம்புகளை ஆட்டுவித்து! பின்
உடலில் வாழ் பாம்புதனை எழுப்புவித்து
கூடுவிட்டு கூடுபாய்ந்து ஞானமுத்து கொடுத்தவரே! குவலயத்தின் காவலரே!
ஆதிசேஷனின் அருள் கண்டு
ஆதிசிவன் மகன் வரம் கொண்டு
ஜாதி மதங்கள் பேதம் இன்றி
காக்கும் சித்தரே! காக்க! காக்க!

காலம்: பாம்பாட்டி முனிவர் கார்த்திகை மாதம் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 123 ஆண்டுகள் 4 நாள் ஆகும்.