புதன், 23 அக்டோபர், 2013

பிதுர் வழிபாட்டிற்கு உகந்த தை அமாவாசையின் சிறப்பு தெரியுமா?

ஒவ்வொரு அமாவாசையிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறந்தது. இருந்தாலும், தை அமாவாசை தினத்தில் பிதுர் தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறப்பு. எனவேதான் உத்தராயணப் புண்ணிய காலத்தில் வரும் தை அமாவாசை பிதுர் வழிபாட்டிற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் புனிதமான கடற்கரையிலோ, புண்ணிய நதிக்கரையிலோ, தீர்த்தங்களிலோ நீராடி, வேத விற்பன்னர் வழிகாட்டுதலுடன், நீத்தார் வழிபாட்டிற்குரிய பூஜையைச் செய்வது போற்றப்படுகிறது. அக்னி தீர்த்தம் உள்ள கடற்கரையான ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திலதர்ப்பணபுரி, திருவெண்காடு, மகாமகத் தீர்த்தக்குளம், காவேரி சங்கமம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், முக்கொம்பு, திருவையாறு தலத்தில் ஓடும் பஞ்சநதிக்கரை ஆகியவை பிதுர் பூஜைக்குரிய தலங்கள் என்று போற்றப்படுகின்றன. இவையன்றியும் பல தலங்கள் உள்ளன.

தமிழகத்தில் பிதுர் பூஜைக்குரிய இடங்கள் பல இருப்பதுபோல், வட நாட்டில் காசி, பத்ரிநாத், கயா போன்ற இடங்களில் எப்பொழுதும் எந்நாளிலும் பிதுர் பூஜை செய்யலாம். அந்த வகையில் காசியில் மணிகர்ணிகா கட்டம் மிகவும் புகழ்பெற்றுத் திகழ்கிறது. அதேபோல் கேரளாவில் ஐவர் மடம் என்னும் தலம் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இங்குள்ள மயானத்தில் தினமும் அறுபதிலிருந்து எழுபத்தைந்து சடலங்கள் தகனம் செய்யப்படுகின்றன. இந்த இடம் காசி கங்கைக்கரையோரம் உள்ள மணிகர்ணிகா காட் என்ற இடத்தை நினைவூட்டுகிறது. ஐவர் மடத்தின் அருகில் பாரதப் புழா என்னும் நதி ஓடுகிறது. இந்த நதியில் ஐந்து நதிகள் கலந்து வருவதால் மேன்மேலும் சிறப்புப் பெறுகிறது. இந்த நதிக்கரை அருகில்தான் மயானம் உள்ளது. காசி மணிகர்ணிகா காட் என்னுமிடத்தில் உள்ள மயானத்தில் சடலங்கள் தகனமாகிக் கொண்டேயிருக்கும். வெகுதூரத்திலிருந்து சடலங்களைக் கொண்டு வந்து தகனம் செய்வார்கள். இங்கு சிவன் ஏற்றி வைத்த நெருப்பு இன்றும் கனன்று கொண்டிருக்கிறது. அதிலிருந்து நெருப்பு எடுத்துதான் தகனத்திற்குத் தீமூட்டுவர்.

அதேபோல, ஐவர் மடம் மயானம் பஞ்சபாண்டவர்கள் மோட்சமடைந்த இடம் என்று கருதப்படுவதால், அவர்களது சடலங்கள் இங்கு எரியூட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. (இது குறித்து வேறு கருத்துகளும் உள்ளன) விடியற்காலையிலேயே இந்த மயானம் சுறுசுறுப்படைகிறது. இங்கு காலை ஆறு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை மட்டுமே சடலங்கள் எரியூட்டப்பட வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளதால், வெகுதூரத்திலிருந்தும் வாகனங்களில் குறித்த நேரத்திற்குள் வந்து, சடலத்திற்குச் செய்ய வேண்டிய சடங்குகளை முறைப்படி செய்து எரியூட்டுகிறார்கள். இங்கு மின்சார தகனம் என்பது கிடையாது. (காசியில் மின்சாரத் தகனம் செய்ய வசதி உள்ளது. தொடர்மழையால் விறகுக் கட்டைகளைப் பயன்படுத்த முடியாதபோது மின்சாரத் தகனத்தை மேற்கொள்கிறார்கள்.)

ஒவ்வொரு அமாவாசையிலும் ஐவர் மடத்தில் தர்ப்பணம், நீத்தார் வழிபாடுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக தை, ஆடி, ஐப்பசி, புரட்டாசி அமாவாசை நாட்களில் இங்கு முன்னோர்களுக்கான வழிபாடுகள் செய்ய கூட்டம் நிரம்பி வழியும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு இங்கு சிறப்புப்பூஜை, சடங்குகள் செய்தால், அவர்கள் ஆவியாக அலையாமல் சொர்க்கம் செல்லுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த மயானத்தின் அருகேயுள்ள ஸ்ரீகிருஷ்ணன் கோயிலில் அதற்குரிய பூஜைகள், ஹோமங்கள் செய்து, அந்த ஆத்மாவைச் சாந்தப்படுத்தி மேலுலகத்திற்குச் செல்ல வழிசெய்கிறார்கள். பொதுவாக அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கான வழிபாட்டினைச் செய்வதுடன், அன்னதானமும் செய்தால் தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து காணப்படும். அதில் தை அமாவாசை மேலும் சிறப்புமிக்கது!
என்றும் நலமுடன் இருக்க என்ன செய்ய வேண்டும்?

நம் கருத்தைப் பிறர் மீது திணிக்கக் கூடாது. பிறர் கூறும் நல்ல கருத்துக்களை கேட்க வேண்டும்.பிறர் நம்மை நம்பும் படி நாம் நடந்து கொள்ள வேண்டும். மனதில் சாந்தி இருக்கும் பொழுது தான் ஆனந்தம் ஏற்படுகிறது. பணம் இருந்தும் அடக்கமாய் இருப்பவன் உயர்ந்தவன். பலம் இருந்தும் பொறுமையாய் இருப்பவன் வீரன். அடிக்கடி கோபம் கொள்ளாதீர்கள். ஏனெனில் கோப உணர்ச்சி கல்லீரலைப் பாதிக்கிறது. மாரடைப்பு ஏற்படாமல் இருக்க கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. எதற்கெடுத்தாலும் பயப்படாதீர்கள். ஏனெனில் பய உணர்ச்சி சிறுநீரகத்தைப் பாதிக்கிறது. நெய்யில் அடியில் தங்கியிருக்கும் கசடைப் பயன்படுத்தக் கூடாது. வெண்ணெயில் உள்ள அழுக்குகளின் திரட்சி இது. எளிதில் ஜீரணமாகாது. இதை உட்கொண்டால் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, கல்லீரல் மந்தம் உள்ளவர்களுக்குக் காமாலை நோய் ஆகியவை ஏற்படும். எனவே இதைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது. மனதை ஒருநிலைபடுத்தி இறைவனை நினைத்து தியானம் செய்வது நல்லது. தியானத்திற்கு எப்போதும் ஒரு அரிய சக்தி உண்டு. நம் நிதானம் தவறாது காப்பதே அதன் சக்தி. என்ன சூழ்நிலை வந்தாலும் நாம் நம்மை அமைதியாய், தெளிவாய், நிதானித்து பார்க்கும் ஒரு மனிதனாய் தியானம் நம்மை மாற்றியமைத்து விடுகிறது.
பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்பதன் பொருள் தெரியுமா?

ஒரு செயலைத் துவங்கினால் அதை நல்லபடியாக முடிக்க வேண்டும். இதற்கு நல்ல திட்டமும் மனஉறுதியும் தெய்வ பலமும் வேண்டும். திட்டமிடாமல், மன உறுதியும் இல்லாமல் ஒரு செயலைத் துவங்கினால் அதை முடிக்க முடியாமல் திண்டாடுவோம். அப்போது, பலரும் பலவிதமாக ஆலோசனை சொல்லி குழப்புவர். அப்போது, செயலைத் தொடங்கியவருக்கு அங்கும் இங்கும் தாவும் குரங்கு போன்ற மனநிலை ஏற்பட்டு, எடுத்த செயலை முடிக்காமலேயே விட்டு விடுவார்கள். ஒரு காரியத்தைச் செய்யத் துவங்குவது என்பதை பிள்ளையார் பிடிப்பது என்றும், அது சரி வர நடக்காமல் போனால் அங்குமிங்கும் தாவும் குரங்காய் முடிந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம். இதன் மற்றொரு அர்த்தம் எந்த ஒரு வழிபாட்டையும் பிள்ளையாரின் துவங்கி ஆஞ்சநேயரில் முடிக்க வேண்டும் என்பதே. நவக்கிரகங்களால் பிடிக்கப்பட முடியாத இருவர் ஆஞ்சநேயரும், பிள்ளையாரும் மட்டுமே. எனவே இந்த இரு தெய்வங்களை வழிபட்டாலேயே நவக்கிரக தோஷங்களிலிருந்து விடுபடலாம்.
வாழ்வில் உயர்வு பெற தேவை எது தெரியுமா?

மனிதனுக்கு வியாதி என்பதே வரக்கூடாது. தலைவலி வந்தால் தாங்க முடியாது. அவதிப்படும் போது, பல்வலி வந்தால் தலைவலி பரவாயில்லை என்று தோன்றும். வயிற்று வலி வந்தால் இவை இரண்டும் பரவாயில்லையே என்று தோன்றும். இதேபோல் மனிதன் பொருளாதாரத்தினாலும், சாப்பாட்டுக்கும் கஷ்டப்படும் போது தன்னைவிட தன் தகுதிக்கும் அந்தஸ்துக்கும் குறைந்தவனை நினைத்தால் நமது கஷ்டம் பரவாயில்லை என்று தோன்றும். ஒருவனுக்கு பெரிய கஷ்டம் அல்லது ஆபத்து வரும்போது இதைவிட பெரிய ஆபத்திலும் கஷ்டத்திலும் உள்ளவனை நினைத்தால் இந்தக் கஷ்டம் பெரிதாகத் தெரியாது. இதற்கெல்லாம் பொறுமையும், தன்னடக்கமும், தெய்வ நம்பிக்கையும் வேண்டும். இன்று என்ன செய்வது என்று யோசிப்பதை விட முதலில் கஷ்டம் தீரும் என்ற நம்பிக்கையே ஒருவனது வாழ்க்கையை உயர்த்தும். வெற்றிக்கும் அதுவே சிறந்த வழி.
மலையேறி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகம் விரும்புவது ஏன்?

தற்போது மலை தரிசனத்துக்கு மவுசு அதிகம் உள்ளது, கைலாஷ், சபரிமலை போன்ற கடினமான யாத்திரைகளை பக்தர்கள் மேற்கொள்கின்றனர். திருப்பதியில் பாதை வசதி ஏற்படுவதற்கு முன், பக்தர்கள் மலையேறியே சென்றனர். சபரிமலையில் இப்போதும் பம்பையில் இருந்து சந்நிதானம் வரை நடந்தே செல்ல வேண்டியுள்ளது. நன்றாகப் பசித்த பிறகு சாப்பிட்டால் தான், உணவு உடலில் ஒட்டும் என்பார்கள். அதுபோல, கஷ்டப்பட்டு யாத்திரை செய்தால் தான் தரிசனபலன் பூரணமாக மனிதனுக்கு கிடைக்கும். இதன் காரணமாகவே இறைவன் மலைகளிலும், காடுகளிலும் பதுங்கியிருக்கிறான். ஒரு காலத்தில் ஜோதிர்லிங்கத் தலமான ஸ்ரீசைலத்துக்கு போவது என்றால் மிகவும் கடினம். செல்லலுற அரிய சிவன் சீபர்ப்பத மலை என்கிறார் சுந்தரர். சீபர்ப்பதம் என்பது ஸ்ரீசைலத்தைக் குறிக்கும். பர்வதம் என்றால் மலை. இதையே பர்ப்பதம் என்றார் சுந்தரர். ஸ்ரீ என்பதையே தமிழில் சீ என்றார். மலைக்கோயில்களுக்குச் செல்ல போக்குவரத்து வசதி இருந்தாலும், வலுவான உடல்நிலை உள்ளவர்கள் மலையேறிச் சென்று தரிசனம் செய்து வாருங்கள். அதிக பலனை அடைவீர்கள்.
இளைஞர் தினம்: கீழ்ப்படியக் கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்!

ஜனவரி 12: விவேகானந்தரின் 150வது பிறந்ததினம். விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12-ம் தேதியைத் தேசிய இளைஞர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடுகின்றனர். விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது. சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது.1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் இறைவனுடன் கலந்தார்.

விவேகானந்தரின் பொன்மொழிகள்:

    நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!"
    உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!
    கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்
    உங்கள் தவறுகளைப் பெரும்பேறாக நினையுங்கள். அவை நம்மை அறியாமலே நமக்கு வழிகாட்டும் தெய்வங்கள் என்றால் மிகையில்லை.
    அழுகை பலவீனத்தின் அறிகுறி. அடிமைத்தனத்தின் அறிகுறி. தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் பயனேதும் இல்லை. போராட்டம் இல்லாத வாழ்க்கை சுவையாக இருக்காது.
    தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உன்னைத் தவிர யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது.
    கோபப்படும் மனிதனால் அதிக அளவோ அல்லது செய்யும் பணியைச் சிறப்பாகவோ செய்ய முடியாமல் போய் விடும். ஆனால், அமைதியானவனோ சிறப்பாகப் பணியாற்றுவான்.
    மன்னிக்கக் கூடியதும், சமநோக்குடையதும், நிலை தடுமாறாததுமான மனதை எவன் பெற்றிருக்கிறானோ அவனே ஆழ்ந்த அமைதியில் திளைத்திருப்பான்.
    கருணை என்பது சொர்க்கத்தைப் போன்றது. நாம் அனைவரும் கருணையுள்ளவர்களாக மாறி சொர்க்கத்தில் மகிழ்ந்திருப்போம்.
    சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்தபோதும் சுயநலம் இல்லாதவனாக இருந்தால் அவனிடம் கடவுள் இருக்கிறார்.
    ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்குங்கள். மனிதனாக பிறந்ததற்கு வாழ்ந்து சென்றபின்னும் ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.
    உங்களுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள். காலம் எல்லாம் அழுது கொண்டிருந்தது போதும். இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது.
    சுயவலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள். தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான் எல்லாவழிபாடுகளின் சாரமாகும்.
    ஏழைகளிடமும் பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் இறைவனைக் காண்பவனே உண்மையான வழிபாடு செய்பவன் ஆவான்.
    கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு கடவுள் ஒருவர் உலகில் இல்லை.உயிர்களுக்கு சேவை செய்வதன் மூலம் நாம் கடவுளுக்கே சேவை செய்தவராகிறோம்.
தை மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிபாடு மற்றும் விரதங்கள்!

சாவித்ரி கவுரி விரதம் : தை மாதம் 2-ஆம் நாள் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது. சிவனார் தனக்கருளிய இந்த விரதத்தை, தருமருக்கு போதித்தார் மார்க்கண்டேயர். விரத நாளன்று அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும். அதன்பின், குயவர் வீட்டுக்குப் போய் அவரது சக்கரத்தில் இருந்து மண்ணை எடுத்துக் கொண்டு வர வேண்டும். அந்த மண்ணால் சாவித்ரி தேவி வடிவம் செய்ய வேண்டும். பிறகு மவுன விரதம் பூண்டு முறைப்படி பூஜை செய்து, ஒன்பது முடிகள் போட்ட நோன்புக் கயிற்றைக் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 9 நாட்கள் பூஜித்து, 9-வது நாளன்று மலையில் பூஜையை முடிக்க வேண்டும். பூஜையை நிறைவு செய்யும்போது ஒன்பது ஜோதி முறங்களில்.. ஒவ்வொன்றிலும் ஒன்பது வெற்றிலை பாக்கு - ஒன்பது மஞ்சள் கிழங்குகள் - ஒன்பது பழங்கள் என வைக்க வேண்டும். அதன் பிறகு சுமங்கலிகளை வரவழைத்து அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவற்றைத் தந்து ஒருவருக்கு ஒரு ஜோடி முறம் தந்து அவர்களை வலம் வந்து வணங்கி, வழியனுப்ப வேண்டும். அதன் பிறகே உண்ண வேண்டும். நீண்ட ஆயுள், செல்வம், சந்தான பாக்கியத்தையும் அருளக் கூடியது இந்த விரதம்.

பைரவ வழிபாடு : தை மாதத்தில் முதலில் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பைரவரை வடை மாலை சாற்றி வழிபடுவதால், சகல நலன்களும் உண்டாகும்.

வீரபத்திர வழிபாடு : மங்கலவாரம் எனப்படும் செவ்வாய்க் கிழமை தோறும் ஒரு வருட காலம் வீரபத்திரரை வழிபட, வல்வினைகள் நீங்கும். வருடம் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், தை மாதத்தில் வரும் செவ்வாய்க் கிழமைகளிலாவது இந்த விரதம் இருப்பது சிறப்பு. இதனால், நீங்காத தடைகள் நீங்கும். பயமும் தீவினைகளும் நம்மைவிட்டு விலகும். கிரக பாதிப்புகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும் அற்புத வழிபாடு இது.
குங்குமத்திற்கு பதிலாக ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்வது சரியா?

நாகரீக மோகத்தில் நிகழும் தவறுகளில் இதுவும் ஒன்று. சுமங்கலிப் பெண்கள் நெற்றியிலும் உச்சியிலும் வைத்துக் கொள்ளும் குங்குமத்தில் தாம் மகிழ்ந்து இருப்பதாக மகாலட்சுமி கூறுகிறாள். எனவே, குங்குமம் தான் உயர்ந்தது. பொட்டு வைத்துக் கொள்வதையே, நாகரீகக் குறைவாக சில சகோதரிகள் கருதும் சூழலில் ஸ்டிக்கராவது வைத்துக் கொள்கிறார்களே என்று அல்ப சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நெற்றியில் குங்குமம் அணியும் போது, தீய சக்திகள் விலகும். அதிலும் இரு புருவங்களுக்கிடையில் குங்குமம் வைத்தால், அவர்களை யாரும் அவ்வளவு எளிதில் வசியம் செய்ய முடியாது. மேலும் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினிப் பொருட்களைக் கொண்டு குங்குமம் தயார் செய்யப்படுகிறது. அவ்வாறு தயார் செய்யப்பட்ட குங்குமத்தை பெண்கள் தங்களுடைய நெற்றியின் மையப் பகுதியில் அணிவதால் உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை குங்குமம் தடுக்கிறது. மேலும் குங்குமத்தின் மேல் சூரிய ஒளிப்படும்போது குங்குமத்தில் உள்ள மூலிகை தன்மையும், சூரிய சக்தியிலிலிருந்து வெளிப்படும் வைட்டமின் டி சக்தியும் உடலுக்குள் சென்று நன்மையை ஏற்படுத்தி தருகிறது.அதேபோல் மன அமைதி, மங்களகரமான தோற்றம், உடல் நலத்தையும் தருவதால் பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவது சிறந்தது.
விரதம் மற்றும் பண்டிகை தினங்களில் ஆலயங்களில் செய்யக்கூடிய 18 பணிகள்!

நமக்கு அன்றாடம் எவ்வளவோ பணிகள் இருந்தாலும் விரத மற்றும் பண்டிகை நாட்களிலாவது ஆலயப்பணிகளை செய்து இறைவனின் பரிபூரண அருளைப் பெறுவோம்.

1. சன்னதிதோறும் கோலமிடுதல்
2. ஆலய வளாகத்தை அலங்கரித்தல்
3. தரைப் பகுதியைப் பெருக்குதல்
4. மேல்பகுதிகளில் ஒட்டடை நீக்குதல்
5. கட்டிடங்களில் உள்ள செடிகளை அகற்றுதல்
6. விளக்கு, திருவாசிகளைத் தேய்த்தல்
7. மின் அமைப்பைப் பராமரித்தல்
8. நந்தவனத்தைப் பேணுதல்
9. அபிஷேக நீர்த்தொட்டியை சுத்திகரித்தல்
10. மண்டபங்களைக் கழுவி விடுதல்
11.சிறப்பு வழிபாடுகளை நடத்துவித்தல்
12. பூஜைப் பணிகளில் உதவுதல்
13.தரிசிப்போரை வரிசைப்படுத்துதல்
14. பிரசாதம் வழங்களில் உதவுதல்
15. புதியவர்க்கு வழிகாட்டல்
16. இறைத் துதிகளை கற்றுவித்தல்
17. இறை நூல்களை விநியோகித்தல்
18. வழிபாட்டில் முழுமையாக பங்கேற்றல்.
கை குலுக்கும் பழக்கம் குரங்குகளிடமிருந்து மனித இனத்தைத் தொற்றியதா?

ஷேக் ஹாண்ட் கொடுக்கும் பழக்கம் மேல்நாட்டுக்காரர்களிடம் இருந்து இன்று உலகிலுள்ள எல்லாரையும் தொற்றியுள்ளது. வெளிநாட்டு பிரமுகர்கள் நம்மூர் பிரமுகர்களை சந்திக்க வந்தால் நீண்ட நேரமாக கை குலுக்குவதை டிவிகளில் காட்டுகிறார்கள். இந்தப் பழக்கம் குரங்குகளிடம் இருந்து மனித இனத்தைத் தொற்றிய சுவாரஸ்யமான கதை உங்களுக்கு தெரியுமா?

ஒரு பெண்ணை ஆணுக்கு தாரை வார்த்துக் கொடுப்பதை பாணிக்ரஹணம் என்பர். அதுபோல, ராமபிரானை சுக்ரீவன் சந்தித்து அவருடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ள விரும்பினான். அதற்கு அடையாளமாக தனது கையை அவர் பிடித்தால் போதும் எனக்கருதி க்ருஹயதாம் பாணினா பாணிம் என்றான். கையைப் பிடித்தாலே நம் நட்பு உறுதியாகி விட்டது என்று பொருள். ராமன் மனிதனாக வந்திருந்தார் என்றாலும் அவர் கருணாமூர்த்தி. அவரவர் தரத்தைப் புரிந்து கொண்டு, அதே தரத்திற்கு தானும் இறங்கி வந்து அனுக்கிரஹம் செய்பவர். எனவே, குரங்கு என்றும் பாராமல் சுக்ரீவனின் கையைப் பிடித்து நட்பை உருவாக்கிக் கொண்டார். இவ்வாறு முதன் முதலில் கைபிடித்து உருவாகிய நட்பு, இன்று பரிணாம வளர்ச்சி பெற்று கை குலுக்கும் அளவுக்கு போயிருக்கிறது. வெள்ளைக் காரர்கள் நம் நாட்டை ஆண்ட போது, அவர்களை குரங்குக்கு ஒப்பிட்டு பரிகாசம் செய்ய, ஆன்மிக உபன்யாசகர்கள் இந்த மேற்கோளை காட்டுவார்களாம்.
இடதுகண் துடித்தால் ஆண்களுக்கு கேடு என்பது ஏன்?

இடதுகண் துடித்தால் பெண்களுக்கு லாபம், ஆண்களுக்கு கேடு என்பதை ராமாயணம் தெளிவாகக் காட்டுகிறது. ராமனும், சுக்ரீவனும் நட்பு கொண்டனர். அவர்கள் நட்பு கொண்டதற்கு அடையாளமாக கையைப் பிடித்தபடியே, புதுமணத் தம்பதிகள் போல அக்னியை வலம் வந்தனர். ""ராமா! நாம் நண்பர்களாகி விட்டோம். இனிமேல், சுகமோ கஷ்டமோ நம் இரண்டு பேருக்கும் உரியது, என்றான் சுக்ரீவன். ராமனும் அந்த வார்த்தைகளை அங்கீகரித்தார். அந்த சமயத்தில், எங்கோ இருந்த மூவருக்கு இடதுகண் துடித்தது. ஒன்று அசோகவனத்தில் இருந்த சீதை. பெண்களுக்கு இடதுகண் துடித்தால் நன்மை ஏற்படும். சீதையின் விடுதலைக்கான நேரம் அப்போதே குறிக்கப்பட்டு விட்டது. வாலி மற்றும் ராவணனுக்கும் இடது கண்கள் துடித்தன. ஆண்களுக்கு இது கெடுபலனை உண்டாக்கும். அவர்களின் அழிவுக்கான நேரமும் அப்போதே உருவாகி விட்டது. பெண்களுக்கு எந்த ஆண் துரோகம் இழைக்கிறானோ, அவனுக்கு இடதுகண் துடித்தால், அவனது முடிவுகாலம் நெருங்கி விட்டது என்று அர்த்தம்.