புதன், 23 அக்டோபர், 2013

உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா?

நடைமுறை வாழ்க்கையில் பல்வேறு விதமான பழமொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு சிலர் சகுன சாஸ்திரங்களை நம்பி அதன்படி நடக்கின்றனர். எனினும், எல்லாம் அறிந்தவர் இறைவன் ஒருவரே. இந்தக் காரணங்களினால் இந்த காரியம் நடைபெற வேண்டும் என்று நம்மை வழிநடத்திச் செல்பபவர் அவரே. கடுமையாக உழைத்தால் அதற்கு ஏற்ற பலன்களை இறைவன் நமக்கு நிச்சயம் அளிப்பார். இதுபோன்ற மக்களின் மூடநம்பிக்கைகளில் நேரத்தை செலவழிக்காமல் நம்மால் இயன்ற உதவிகளை பிறருக்கு செய்வோம். இறை அருள் நமக்கு எதை அருளினாலும் அதை ஏற்றுக்கொள்வோம்.
இறைவழிபாட்டில் எலுமிச்சம்பழத்திற்கு முக்கியத்துவம் ஏன்?

எல்லாம் வல்ல இறைவனுக்கு நம்மால் இயன்றவற்றை பக்தியுடன் அளிப்பதே பூஜை. ஆண்டவனுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனானது அவருக்கு மட்டும் இல்லாமல் அனைத்து ஜீவராசிகளையும் சென்றடைந்து பயன் அளிக்கிறது. நாம் நமது சக்திக்கு ஏற்றவாறு பக்தியுடன் அளிக்கும் அனைத்து பொருட்களையும், இறைவன் அன்புடன் ஏற்கிறார். ஆகமங்களில் ஒவ்வொரு தெய்வ வடிவங்களுக்கும் அவர்களுக்கு உரிய சிறப்பான மலர், பழங்கள், மந்திரங்கள், வஸ்திரங்கள், எந்த நாட்களில் செய்ய வேண்டும் என மிகச் சிறப்பாக வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு சில அனைத்து தெய்வங்களுக்கும் பொதுவானதாக உள்ளது. புஷ்பங்களைத் தொடுத்து மாலையாக அணிவிப்பதைப் போல, சில சிறப்பான பழங்களையும் மாலையாகக் கட்டி கடவுளுக்கு அர்ப்பணிப்பதை ஆகமங்கள் ஆமோதிக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று தான் எலுமிச்சம்பழம்.

தீயவற்றைப் போக்கி நன்மையை அளிக்கக்கூடிய மிகப் பெரிய மருந்து இது. வெற்றியின் அடையாளமாகவும் வீரத்தின் அடையாளமாகவும் எலுமிச்சம்பழம் உள்ளது. காளி, மாரி, துர்கா போன்ற வீரத்தை வெளிப்படுத்தி நம்மைக் காக்கும் தெய்வங்களுக்கு இவை மிக உகந்தது. எனினும், மற்ற தெய்வங்களுக்கும் இவற்றை அளிக்கலாம். இவ்வகையில் எலுமிச்சம்பழத்தை மாலையாகக் கடவுளுக்கு அளிப்பதினால், அந்தப் பழத்தின் சிறந்த மஞ்சள் நிறத்தினாலும் தன்மையாலும் நாம் நமது காரியங்களில் வெற்றியடையலாம் என்பது உறுதி. அக்காலங்களில் நாம் நமது பிரார்த்தனையைத் தெரிவிக்க வேண்டுமெனில், அவர்களாகவே தங்களின் பிரார்த்தனைகளை சங்கல்பித்துக்கொண்டு பூவையோ பழங்களையோ தொடுத்து கடவுளுக்கு அளித்து நன்மைகளைப் பெற்றார்கள். முயன்றவரை நாமும் நம் கைகளால் பூவையோ, பழங்களையோ மாலையாகத் தொடுத்து இறைவனுக்குப் படைத்து பயனடைவோம்.
பக்தர்கள் கருப்பு மற்றும் மஞ்சள் ஆடை அணிவது ஏன் தெரியுமா?

சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் கருப்பு, காவி மற்றும் கருநீலம், பச்சை ஆகிய நிறங்களில் ஆடைகள் அணிகிறார்கள். ஆனால் கருப்பு ஆடை அணிவது தான் ஏற்றது. கருப்பு ஆடை அணிந்தால் தீங்கு விளைவிக்கக் கூடிய மிருகங்கள் நெருங்காது. இதற்கு அடுத்ததாக காவி உடையை தேர்வு செய்யலாம் இந்த ஆடை அணிந்தால் தேள், பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் கிட்ட வரவே வராது.

மஞ்சள் ஆடையின் மகிமை: சில ஊர்களில் கோயில் திருவிழா ஆரம்பித்ததும், விரதம் இருக்கும் பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து கொள்வார்கள். அது பக்தியின் அடையாளம் தான் என்றாலும், அதனால் பல நன்மைகளும் இருக்கிறது. அதாவது, திருவிழா நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடுவதால் நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்பு உண்டு. அந்த கிருமிகள் தாக்குதலை தடுக்கும் சக்தி இந்த மஞ்சள் ஆடைக்கு உண்டு. மேலும் மன ரீதியாக தெய்வ நம்பிக்கையையும் இந்த மஞ்சள் ஆடை அதிகரிக்கிறது.
சனி பெயர்ச்சியால் சங்கடமா? இருக்கு எளிய பரிகாரம்!

சனிதோஷம் விலக வழி: சனிபகவானுக்குரிய இலை வன்னி இலை. இந்த இலையால் நவக்கிரக மண்டபத்திலுள்ள சனி பகவானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். உங்கள் ஊர் கோயில்களில் வன்னிமரம் வைக்க ஏற்பாடு செய்யலாம். மேலும், சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்ற வேண்டும். நவக்கிரக மண்டபத்திலுள்ள சனீஸ்வரருக்கு நீலநிற வஸ்திரம் அணிவிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், அவலட்சணமாக இருப்பவர்களுக்கு உதவி செய்தால், மிகுந்த நன்மை தருவார். திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு ( திருவாரூர்), குச்சனூர்(தேனி) ஆகிய ஊர்களிலுள்ள  கோயில்களுக்கு சென்று  அர்ச்சனை செய்து வரலாம்.

அஷ்டமச்சனி பரிகாரம்: நல்லெண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் இந்த மூன்று எண்ணெயையும் கலந்து, ஒரு இரும்பு விளக்கில் எட்டு முகம் வைத்த திரியை கொண்டு சனீஸ்வரனுக்கு விளக்கேற்றி, அவரை வலம் வந்து வழிபட்டால் அஷ்டமச்சனி விலகிவிடும். நிம்மதி பிறக்கும். வாழ்க்கை சந்தோஷமாகும்.
யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா?

சாஸ்திரங்களில் 9 விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த 9 விஷயங்கள் இவை தான்:

1. ஒருவரது வயது, 2. பணம் கொடுக்கல் வாங்கல் 3. வீட்டு சச்சரவு, 4. மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள், 5. கணவன்-மனைவி அனுபவங்கள், 6. செய்த தானம், 7. கிடைக்கும் புகழ், 8. சந்தித்த அவமானம், 9. பயன்படுத்திய மந்திரம். இந்த 9 விஷயங்களையும் என்றும் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
300 வயது வாழ அகத்தியர் கூறும் வழிமுறை!

நவீன அறிவியலின் படி ஒரு மனிதன் முன்னூறு ஆண்டுகள் வாழ்வதெல்லாம் சாத்தியமல்ல என்பது பல காலம் முன்னரே நிரூபிக்கப் பட்ட ஒன்று.இருந்தாலும் சித்தர்கள் பலநூறு வருடங்கள் வாழ்ந்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஹோமங்கள் செய்வதன் மூலமாக ஒருவன் முன்னூறு வயதுவரை வாழலாம் என்கிறார் அகத்தியர், இதன் சாத்தியங்கள் ஆய்வுக்குறியது. எனினும் நீண்ட ஆயுளைத் தரும் என்கிறவகையில் இந்த ஹோமத்தினை அணுகிடலாம். ஹோமங்கள் பற்றி அகத்தியரின் பாடல் ...

அறிந்துகொண்டு புவனையுட மந்திரந்தன்னால்
அப்பனே நெய்தனிலே அருகுதோய்த்து
தெரிந்தந்த ஓமகுண்டந் தன்னில்மைந்தா
சிறப்பான ஓமமது தீர்க்கமாக
வருந்திநன்றாய் மண்டலமே செய்தாயாகில்
மகத்தான பிரமமய மாவாய்பாரு
இருந்துரெண்டு மண்டலமே ஓமஞ்செய்தால்
என்னசொல்வேன் முன்னூறு வயதாம்பாரே

பொருள்: அறுகோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து, அதில் வன்னி மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டுமாம். அப்படி தீ வளர்க்கையில் வழமை போலவே அக்கினி மூல மந்திரமான ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்த்திட வேண்டும். தீ வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா என்ற மந்திரத்தைக் கூறிக் கொண்டே அறுகினை, பசு நெய்யில் தோய்த்து போட வேண்டும் என்கிறார். இப்படி 1008 முறை செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தினை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து வந்தால் பிரம்மத்தை உணரலாமாம். அதையே தொடர்ந்து  இரண்டு மண்டலம் அதாவது 96 நாட்கள் செய்து வர 300 வயதுக்கு மேல் வாழலாம் என்கிறார் அகத்தியர்.
பூஜையின் போது கோயில் மற்றும் வீடுகளில் மணியடிப்பது ஏன்?

பூஜையின் போது மணியோசை முக்கிய பங்குவகுக்கிறது. பூஜை முன்னால் மணி அடித்தால், அந்த மணி சப்தம் அசுரர், அரக்கர்கள் போன்ற கொடியவர்களை விரட்டியடித்து தேவர்களையும், தேவ கணத்தினரையும் அழைக்கவே பூஜையின் போது மணியடிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். நிருத்தம், வாத்தியம், கீதம் இந்த மூன்றில் மணியோசைக்கும் ஓர் இடம் உண்டு. சங்கு, மணி, சேமக்கலம் இம்மூன்றுமே கடவுள் வழிபாட்டிற்கான சிறந்த சாதனங்களாக இன்றளவும் விளங்குகின்றன. மணி சத்தம் கேட்கும் இடங்களில் தீய சக்திகள் நெருங்காது என்பது நம்பிக்கை.
யார் இறைவனாக மதிக்கப்படுகிறார்?

தானம் செய்வது மிகச் சிறந்த விஷயமாகும். இருப்பவன் இல்லாதவனுக்கு கொடுக்கும் போது இறைவனாகவே மதிக்கப்படுகிறான். அவ்வாறு தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்...

1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்
2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்
3. தங்கம் தானம் தர தோஷம் விலகும்
4. பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும்
5. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்
6. நெய் தானம் தர நோயைப் போக்கும்
7. பால் தானம் தர துக்கநிலை மாறும்
8. தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்
9. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்
10. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்
11. தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்
12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்
13. பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும்
14. ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும்
15. அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.
மகாகவி பாரதியார் கூறும் பக்தி நெறிமுறைகள்!

டிசம்பர்-11: மகாகவி பாரதி பிறந்த தினம்,1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த பாரதி தனது 11-ம் வயதிலேயே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார் பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும், மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பாரதியாரின் வரிகள் ..

தைரியம் தரும் பக்தி:

* தெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே உலகமே வியக்கும் வண்ணம் ஒருவனுக்கு எதிர்பாராத விதத்தில் பயன்கள் கிடைக்கும்.
* கோயிலுக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி, தெய்வத்தைக் கும்பிட்டாலும் சரி, பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினாலே தெய்வம் அருள் புரியும்.
* நல்ல விளக்கிருந்தாலும் பார்க்க கண் வேண்டும். அதேபோல் நாலுபேர் துணையிருந்தாலும் நல்ல முறையில் வாழ சுயபுத்தி வேண்டும்.
* தன்னைத் தானே திருத்திக் கொள்ளாதவன், பிற உயிர்களைத் திருத்த அதிகாரம் பெறமாட்டான்.
* வெறும் சொல்லுக்கு மகிமையில்லை. அச்சொல் உள்ளத் துணிவை உணர்த்துமாயின் அதற்கு மகிமையுண்டு.
* உண்மையான பக்தி இருந்தால் மனதைரியம் கிடைக்கும், மனதைரியம் இருந்தால் தெய்வ பக்தி ஏற்படும். அத்துடன், இந்த பிறவியிலேயே தெய்வநிலை பெறலாம்.
* கடவுளிடமும் அவருடைய படைப்பாகிய அனைத்து ஜீவன்களிடமும் என்றும் மாறாத அன்பு செலுத்துவதே பக்தி. அதுவே முடிவான சாதனமாகும்.

சூரிய நமஸ்காரம்: முனிவர்களும், புலவர்களும் உமது பெருமையைப் பெரிதென்று போற்றுகின்றனர். அப்பெருமையைக்கொண்ட சூரியதேவனே! உம்மை வாழ்த்துகின்றேன். பரிதியே! யாவற்றுள்ளும் முதல் பொருளாகத் திகழ்பவனே! பானு என்ற பெயர் கொண்டவனே! பொன் போல் நல்லொளியினை திரளாகப் பிரகாசிப்பவனே! உன்னை வணங்குகின்றேன். கதிரொளி தரும் உன் முகத்தினை சற்றே காட்டுவாயாக! வேதமொழிகள் உன்னைப் புகழும் புகழினைக் கண்டு நானும் வேள்விப்பாடல்களை பாடுவதற்கு ஆவல் கொண்டேன். நீ உதிக்கும் வேளையில் நாதத்தினை எழுப்பும் கடலின் இனிய ஒலியோடு நல்ல தமிழில் சொல்லில் இசைப்பாடல்களைச் சேர்ப்பேன். கீழ்வானில் படரும் வான் ஒளி இன்பத்தைக் கண்டு, பறவைகள் பாட்டுப்பாடி மகிழும். விழியினைப் போல சுடர்முகம் கொண்ட உன் வடிவம் கண்டு கடலின் ஒவ்வொரு துளியும் சுருதி பாடி புகழ் சேர்க்கும். என் உள்ளம் கடலினைப் போல் உன் இணையடியின் கீழே நின்று வணங்கும். உலகில் ஒவ்வோர் அணுவும் உந்தன் ஜோதியால் நிறைந்து நல்வாழ்வு பெறும். வானிலே நிலைபெற்று உலகமெல்லாம் வாழ்விக்கும் ஒளி தரும் தேவா! உன்னை ஆயிரம் முறை அஞ்சலி செய்வேன்.
திருக்கார்த்திகையில் தீபம் ஏற்றுவதன் சிறப்பு தெரியுமா!

திருக்கார்த்திகை அன்று ஏற்றப்படும் தீபங்களை யார் பார்த்தாலும், ஏன்....விலங்குகள் பார்த்தாலும் கூட அவைகளுக்கு நீண்ட ஆயுள் உண்டாகும் என்பது ஐதீகம். கார்த்திகை தீபத் திருநாள் அன்று 60 வயது நிரம்பிய சுமங்கலிப் பெண்ணைக் கொண்டு தீபம் ஏற்றி, அதிலிருந்து 6 தீபங்கள் சுமங்கலிப் பெண்கள் ஏற்ற வேண்டும். அவர்கள் ஏற்றும் தீபங்களில் இருந்து ஆறு, ஆறாக பசுநெய் விளக்குகளை ஏற்றி வீட்டை அலங்கரித்தால் அவர்களுக்கு தீர்க்க சுமங்கலித்துவ வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. வடமாநிலங்களில் கார்த்திகை தீபத்திருநாள் அன்று பெண்கள் தீபம்ஏற்றி, அதை இலையில் வைத்து ஆற்றில் விடும் வழக்கம் உள்ளது. இப்படிச் செய்தால், தங்கள் உடன் பிறந்தவர்கள் நீண்ட ஆயுள் பெறுவார்கள் என்று நம்புகிறார்கள்.
இறைவனை எளிதாக அடைய கைகொடுக்கும் 108!

அண்ணாமலையார், அபிதகுஜாம்பிகை, விநாயகர், முருகன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு மட்டுமல்ல, திருக்கார்த்திகையன்று திருவிளக்கு ஏற்றி பூஜை செய்யும் போதும் 108 போற்றி சொல்லி வழிபடுகிறோம். இதை 120, 130, 150, 1000 என்றும் வைத்திருக்கலாமே! ஏன் 108க்கு முக்கியத்துவம் தரப்பட்டது தெரியுமா?

மனிதன் ஒரு மணிநேரத்துக்கு 900 தடவை வீதம் 24 மணி நேரத்துக்கு 21,600 தடவை மூச்சு விடுகிறான். இதில் பகலில் 10,800 தடவையும், இரவில் 10,800 தடவையும் மூச்சு விடப்படுகிறது. ஒவ்வொரு தடவை மூச்சு விடும் போதும் இறைவனை நினைக்க வேண்டும் என்பது விதி. ஆனால், இது சாத்தியமா என்றால் இல்லை. "மாயை (உலக வாழ்க்கை நிரந்தரமானது என்ற எண்ணம்) என்ற வலையில் சிக்கியுள்ள மனிதன் இறைவனை நினைப்பதில்லை, நினைத்தாலும் அதற்கு ஒதுக்கப்படும் நேரம் குறைவு. மாயைக்குரிய எண் 8. இந்த மாயையில் இருந்து நம்மை மீட்பவன் இறைவன். நாம் பல வடிவங்களில் வழிபட்டாலும், அவன் ஒரே ஒருவன் தான். ஆக, ஏக இறைவனுக்கும் (ஒன்றுக்கும்) எட்டுக்கும் ( மாயைக்கும்) மத்தியில் நாம் ஒரு சக்தியுமே இல்லாத பூஜ்யமாக இருக்கிறோம். அதனால் தான் 108 என்ற எண் முக்கியத்துவம் பெற்றது. கலியுகத்தில் இறைவனை அடைய 108 போற்றி அதிகமாகவே கைகொடுக்கிறது.