செவ்வாய், 22 அக்டோபர், 2013

அரசாட்சி எப்படி இருக்க வேண்டும்?

அரசன் கையில் செங்கோல் இருக்கும். அஃது அவன் அதிகாரத்தைக் குறிக்கும் அடையாளச் சின்னமன்று. நீதி தவறாத, நெறிபிறழாத நிர்வாகத்தைக் குறிக்கும் அடையாளச் சின்னமாகும். அரசன் தன் கையிலிருக்கும் செங்கோல் நேராக இருப்பதைப் போல், கோணலற்ற நேர்மை மிக்க அரசாட்சியை மேற்கொள்ள வேண்டும் என்று அரசனுக்கு அக்கோல் நினைவூட்டுகிறது. எனவே அஃது ஒரு தார்மீகச் சின்னம். ஓர் அரசனை வாழ்த்த வந்த ஒளவை, வரப்புயர என்று வாழ்த்தினாராம். காரணம், வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் கோல் உயரும். கோல் உயரக் குடி உயரும். குடி உயரக் கோன் உயர்வான் என்பதாகும். ஒரு நாட்டின் அரசன் உயர வேண்டும் என்றால், அந்த உயர்வு எங்கிருந்து தொடங்குகிறது என்பதைக் குறிப்பால் காட்டி விட்டார் ஒளவையார். ஓர் அரசனின் வெற்றி என்பது, அவனது வாளின் வலிமையால் ஏற்படுவதில்லை. செங்கோலின் நேர்மையால் ஏற்படுகிறது என்கிறார் திருவள்ளுவர். அச்செங்கோலைப் பற்றிப் பாடுவதே செங்கோண்மை என்னும் இந்த அதிகாரம். இந்நாட்டில் செங்கோல் வழுவாத மன்னர்கள் பலர் வாழ்ந்து வந்திருக்கின்றனர். இரவுக்காவலுக்கு மாறுவேடத்தில் சென்ற பாண்டிய மன்னன், ஒரு வீட்டின் கதவைத் தட்டினான். எச்சரிக்கை செய்வதற்காக காவலர்கள் கதவைத் தட்டுவது வழக்கம். ஆனால் காவல் காவல் என்று கூவிக் கொண்டே கதவைத் தட்டுவார்கள். மன்னன் அவ்வாறு கூவவில்லை. குரல் மாறுபாட்டைக் கண்டு பிடித்து விடுவார்களே என்ற எண்ணம். எனவே கதவை மட்டும் தட்டி விட்டு வந்து விட்டான். ஆனால், வீட்டுக்குரிய நபர்களுக்கு, கதவைத் தட்டியவன் திருடன்தான் என்ற எண்ணத்தை அவனது செயல் ஏற்படுத்தி விட்டது. மறுநாள் பாண்டியன் அவைக்கு அவர்கள் புகார் செய்ய வந்தார்கள். மன்னா! என்வீட்டுக் கதவை இரவில் ஒரு திருடன் வந்து தட்டினான். நல்ல வேளை நாங்கள் கதவைத் திறக்கவில்லை. நீங்கள் அந்தத் திருடனைக் கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டும் என்றார்கள். என்ன தண்டனை தர வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? என்று கேட்டான் மன்னன். தட்டிய கையை வெட்டிவிட வேண்டும் என்றார்கள் அவர்கள். மன்னன் தான் செய்த சிறு தவறுக்கு வருந்தினான். தன் கையை வெட்டிக் கொண்டான். பிறகு அவனுக்கு செயற்கைக் கரமாக பொற்கை பொருத்தப்பட்டது. எனவே அவன் பொற்கைப் பாண்டியன் என்று அழைக்கப்பட்டான். கண்ணகியின் சிலம்புப் பரல் தெறித்து விழுந்ததும், தன் தவறை உணர்ந்தே ஒரு பாண்டிய மன்னன் அரியணையில் தன் உயிரை நீத்தான். இவை கதைகள் அல்ல, வரலாறுகள். மன்னன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர் பெருமான்.

ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்து செய்வதே முறை

மன்னன் தன் நாட்டில் குற்றம் குறை நேராமல் காப்பது முறை. குற்றங்களைத் தெளிவாக அறிந்ததும், வேண்டியவர், வேண்டாதவர் என்று பாரபட்சம் பார்க்காமல், சட்டமும், நீதியும் சொல்லும் தண்டனைகளைக் குற்றவாளிகளுக்கு அளிக்க வேண்டும். அப்படிச் செய்வதுதான் முறையாகும்.

கலில்கிப்ரானின் கதை இது.

அப்பொழுது, அரண்மனைக்குள் ஒருவன் திடுதிடு என்று ஓடி வந்தான். யாரடா அது என்று போதை மயக்கத்தில் உறுமினான் மன்னன். ஓடிவந்தவன் மன்னனைக் கண்டதும் திகைத்து நின்றான். ஆனாலும் ஒருவழியாக தன்னைச் சமாளித்துக் கொண்டு பின்வருமாறு சொன்னான். மன்னர் மன்னவா! அடியேன் உங்கள் தாசன். உங்கள் மேல் மிகவும் அன்பு கொண்டவன். உங்களுடைய ஆட்சியின் கீழ் வாழும் ஒவ்வொரு வரையும் என் சகோதரர்களாகப் பாவித்து வளர்ந்தவன். ஒருவனுக்குப் பசி வந்தால் சகோதரரின் வீட்டில் தனக்குத் தேவையானதை எடுத்துக் கொள்ளக் கூடாதா? அது தவறா? நான் ஒரு சகோதரன் வீட்டில் எனக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டேன். ஆனால் அவனோ என்னைத் திருடன் திருடன் என்று கூவிக்கொண்டே விரட்டி வருகிறான். ஆட்களைச் சேர்த்துக் கொண்டுவந்து கொல்லத் துடிக்கிறான். என்ன நியாயம்? மன்னவா! நீங்கள்தான் எனக்கு நீதி வழங்க வேண்டும் என்று கூறியபடி மன்னவனின் கால்களில் விழுந்து வணங்கினான். போதையில் இருந்த அரசன் சொன்னான், பயப்படாதே எழுந்திரு. உன்னைப் போல் ஒரு நல்லவனைக் காப்பது என் கடமை. உன்னைத் துரத்தி வருபவர்களை நான் தண்டிப்பேன். மன்னவன் இவ்வாறு சொல்லியதும், அரண்மனைக்குள் மற்றொருவன் ஓடி வந்தான். யாரடா அது? என்று மன்னன் மீண்டும் உறுமினான். மன்னா! இங்கே ஒரு திருடன் ஓடி வந்தான். அவனை நான் துரத்தி வந்தேன். என்றான் அவன். திருடனா? அவன் இவனா பார் என்றான் மன்னன். ஆமாம் மன்னா! இவனேதான் என்றான் துரத்தி வந்தவன். மன்னன் பளார் என்று ஓர் அறை விட்டான். இவனோ எல்லாரையும் தன் சகோதரனாகப் பார்க்கிறான். நீயோ இவனைத் திருடன் என்று பார்க்கிறாயா? என்ன கண்களடா உன் கண்கள்? காவலா! இவன் கண்களைப் பிடுங்கி வீசு என்றான் மன்னன். துரத்தி வந்தவன் பயந்துவிட்டான். மன்னா! நான் தங்கள் தாசன். ஓர் ஏழை நெசவாளி. கண்கள் இரண்டும் நெசவுத் தொழிலுக்குத் தேவை என்று அறியாததா? வேண்டுமானால் என் பக்கத்து வீட்டில் ஒரு டெய்லர் இருக்கிறான். அவனுக்கு ஒரு கண்போதும். அவன் கண்களைப் பிடுங்கச் சொல்லுங்கள் மன்னா! நான் பிள்ளை குட்டிக்காரன். மன்னன் சொன்னான். சபாஷ், சரியான யோசனை. காவலா! இவன் சொன்னபடி அந்த டெய்லரின் கண்களைப் பிடுங்கிவிடு. இப்போது நீதிக்குப் பரம திருப்தி. கலில்கிப்ரான் காட்டிய மன்னன் போல ஒரு மன்னன் இருந்தால் நாடு எப்படி இருக்கும்? கன்று பயிரை மேயக் கழுதையைப் பிடித்துக் காதறுப்பதா? என்று ஒரு பழமொழி உண்டு. குற்றவாளிகள் இருக்க அப்பாவிகள் தண்டிக்கப்படுவதும், சிறிய குற்றங்களுக்குப் பெரிய தண்டனைகளைச் சிலர் அனுபவிப்பதும், பெரிய குற்றங்களைச் செய்துவிட்டு, ஒரு சிறிய தண்டனையும் அனுபவிக்காமல் வெளியே உலாவுவதையும் நாம் பார்க்கிறோம். இது செங்கோல் திறமோ முறையோ ஆகுமா?

வள்ளுவர் சொல்கிறார்.

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழும் குடி

வானம் வழங்கும் மழையை நம்பித்தான் உலக உயிர்கள் வாழுகின்றன. அதுபோல் மன்னவனின் செங்கோலை நம்பித்தான் அந்நாட்டின் குடிமக்கள் வாழுகிறார்கள். அரசன் எல்லைகளில் சேனைகளை நிறுத்தி பாதுகாப்பு செய்கிறான் என்ற நம்பிக்கையில்தான் குடிமக்கள் நிம்மதியாக உறங்குகிறார்கள். ஒவ்வோர் ஊரிலும் காவல்துறை இருப்பதால்தான் திருடன் பயமின்றித் தூங்க முடிகிறது. நீதிமன்றங்கள் குற்றவாளிகளைத் தண்டிக்கும் என்ற நம்பிக்கை இருக்கும்வரை ஊரில் அமைதி இருக்கும். இல்லையென்றால், எளியதை வலியது சாப்பிடும் மச்ச நியாயம் ஊரில் தலை தூக்கும். நிம்மதி போய்விடும். பிறகு தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்தான். மக்கள் செங்கோலை நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையை மன்னன் வீணடிக்கக் கூடாது என்று குறிப்பாகக் கூறிவிடுகிறார் வள்ளுவர். வேதநூல்களில் மக்கள் நம்பிக்கை வைத்து வாழ்வதற்கும் தர்மநியாயங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்வதற்கும் அடிப்படையாய் இருப்பதே... அரசாட்சியின் நீதி முறைமைதான் என்கிறார் அவர்.

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்

செங்கோல் முறை சரியாக இல்லையென்றால், மக்களுக்கு வேத நம்பிக்கையும் போய்விடும். நீதியின்மேல் உள்ள நம்பிக்கையும் போய்விடும். எப்படியும் வாழலாம் என்ற எண்ணம் தலைதூக்கி விடும். அப்படி ஒரு நிலை வந்துவிட்டால், நாட்டில் வாழ்வதைவிட காட்டில் வாழ்வதே மேல் என்றுதான் நல்லோர் நினைப்பார்கள்.

வேடநெறி நில்லாமல் தம்மை விறல்வேந்தன்
வேடநெறி செய்தல் வீடதுவாமே

என்கிறார் திருமூலர். தவநெறியில் நிற்பவர்களில்கூட சில போலிகளும் இருந்துவிடுகிறார்கள். அவர்களைக் கூட அரசன்தான் முறைப்படுத்தவேண்டும் என்கிறார் திருமூலர். பழைய காலத்தில் வர்ண தர்மங்கள் தெளிவாக இருந்தன. ஆசிரம தர்மங்களும் முறையாக இருந்தன. அவரவர் நெறியில் அவரவரை நிறுத்துவது மன்னவன் கடமையாக இருந்தது.

மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல்கொண்ட தண்டஞ்செய் வேந்தர் கடனே.

மயக்கத்தால் கள்குடித்து மதியழிந்து நன்மை தீமையறியாது வாழும் நபர்களைத் தண்டிக்கவேண்டியது அரசன்கடனே என்று கூறுகிறார் திருமூலர். குடிமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களை ஆதரவுடன் தழுவி அரசாட்சி செய்வதே முறை.

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.

குடிமக்களைத் தழுவிக்கொண்டு கோல் செய்வது என்பது, என்ன? அவர்களை அவர்களின் இஷ்டப்படி விட்டுவிடுவதா? அப்படி இல்லை. ஒரு தாயும் தகப்பனும் அவர்களின் வளர்ச்சியில், அக்கறை செலுத்துவதுபோல், மன்னன் அக்கறையோடும் அன்புடனும் அவர்களை நடத்தவேண்டும். அவர்களுக்காக உழைக்க வேண்டும். அப்போதுதான் அந்த மன்னனின் கீழ் அந்நாட்டு மக்கள் கட்டுப்பட்டு இருப்பார்கள். இல்லையேல் பல்குழுவும், பாழ்செய்யும் உட்பகையும் அந்த நாட்டில் தோன்றும். சமூகம் சீரழியும். சீரழிந்த சமூகத்தில் உருவாகும் மக்கள் அந்நாட்டு மன்னனையே அழிக்கவும் செய்வார்கள். ஜார் மன்னன் அப்படித்தான் வீழ்ந்தான். ஹிட்லர் யூதர்களுக்குச் செய்த கொடுமைகளை சிறையில் யூதர்கள் அனுபவித்த சித்திரவதைகளை அவர் தேசத்து மக்களே தம் பிள்ளைகளுக்குக் காட்டி - இனி இப்படி ஒருவன் நம் நாட்டில் தோன்றக்கூடாது என்று சொல்லிக் கொடுக்கிறார்களாம். மக்கள் விரோத அரசு. தன் புதை குழியைத் தானே தேடிக்கொண்டதற்கு வரலாறு முழுக்கச் சான்றுகள் உள்ளன.

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு

அரச நீதியின் இயல்புக்கேற்றபடி ஆட்சி செய்யும் மன்னவனின் நாட்டில், ஒழுங்காக மழை பெய்யும். உற்பத்தியும் பெருகும் என்கிறது இக்குறள். மழை பெய்ய வேண்டுமென்றால் மரம் வளர்க்க வேண்டும் என்பது தற்போது ஒப்பிக்கும் குரல். மழை பெய்ய வேண்டும் என்றால் அறம் வளர்க்கவேண்டும் என்பது முன்னோர் குரல். எங்கே தர்மம் இல்லையோ அங்கே மழை பெய்யாது. பெய்தாலும் அது காக்கும் மழையாக இல்லாமல் அழிக்கும் மழையாக இருக்கும். மரம் வளர்ப்பதும்கூட ஓர் அறம்தான். ஆனால், அறமற்றுப்போன மக்களால்தாம் இங்கே மரமற்றுப்போன நிலை உருவானது என்பதை மறுக்க முடியாது. அரசன் முறையாக நடந்தால், மக்களும் முறையாக நடப்பார்கள். அங்கே வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இயற்கையும் அவர்களுக்கு ஒத்துழைக்கும். அதனால் உற்பத்தியும் பெருகும். இது வெறும் நம்பிக்கையன்று. பிரபஞ்ச உண்மை. சமூக உண்மையும் ஆகும். மன்னர்கள் முறையாக ஆட்சி செய்யாமல், தம் வேல்நுனியில் மக்களை மிரட்டி, ஒடுக்கி ஆட்சி செய்தால் வெற்றி பெற முடியுமா? இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம் என்று அதட்டி மிரட்டினால் மக்கள் கட்டுப்படுவார்களா? இல்லை என்கிறார் வள்ளுவர்.

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉம் கோடாது எனின்

அரசனுக்கு வெற்றியைத் தருவது வேல் அன்று. செங்கோல். அதுவும் கோணலற்ற கோலாக இருக்குமென்றால் வெற்றி உறுதி. சொந்த நாட்டு மன்னன் மீது அண்டை நாட்டு மன்னன் படையெடுத்து வரும்போது, அதை உள்ளூர மகிழ்ந்து வரவேற்று மக்கள் மகிழ்ந்த கதையும் சரித்திரத்தில் உண்டு. காரணம், சொந்த நாட்டு மன்னன் ஆட்சி செய்த லட்சணம் அப்படியிருந்திருக்கிறது. படை பலத்தைப் பெருக்கிக்கொண்டே போவதும், நாட்டின் வளர்ச்சிக்குச் செலவிடும் தொகையைவிட சேனைகளுக்குச் செலவிடும் தொகை அதிகமாவது நல்லதன்று. புற்று நோயினால் நாளுக்கு நாள் மரணத்தை நோக்கிச் செல்லும் மனிதன், தலைக்கும் மார்புக்கும் கவசமணிந்து, கையில் துப்பாக்கியும் வைத்துக்கொண்டிருப்பதால் என்னபயன்? வறுமை, கல்வியின்மை, ஒழுங்கின்மை, போன்றவை ஒரு நாட்டுக்கு நேரும் புற்றுநோய். அந்நாடு வெளியே படைகளைப் பெருக்கி என்ன பயன்? வள்ளுவர் கூறும் இக்குறள் ஆட்சியாளர்களின் பார்வையில் அன்றாடம் படும்படி எழுதிவைக்க வேண்டும்.

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.

அரசன்தான் வையகத்தைக் காக்கிறான் என்றாலும், அந்த அரசனைக் காப்பாற்றுவது, முறையான ஆட்சிதான். அதை ஒழுங்காகச் செய்து வந்தால் அஃது அவனைக் காப்பாற்றும். சர்வாதிகார மனப்பாங்கு, ஆணவப்போக்கு முதலியவை மன்னர்களுக்கு வரக்கூடா. முறை தவறும்போது, அவன் மக்களின் கோபத்திற்கு உள்ளாவான். மேலும், கண்மாயில் நீரைத் தேக்குவதற்கு கால்வாய் வசதிகளும், கண்மாயிலிந்து வயலுக்கு நீரைக் கொண்டு செல்வதற்கு வாய்க்கால் வசதிகளும் செய்வது மாதிரி, நிதியை அரசு கஜானாவில் கொண்டுவந்து சேர்ப்பதற்கும், பின் நலத்திட்டங்களாக மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கும், பொருள் நூல்கள் சில முறைமைகளைப் பற்றிக் கூறுகின்றன.

சமூகத்தில் அமைதியான வாழ்வு நிலவுவதற்கு அறநூல்கள் சில விதிகளை விதிக்கின்றன. ஒரு மன்னனின் தனிப்பட்ட வாழ்வில்கூட பிறருக்கில்லாத நியதிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றன. இவற்றை மன்னன் கடைப்பிடிக்க வேண்டும். நியதிகளை மீறும்போது நிறையப் பிரச்னைகள் உருவாகிவிடும் என்பது எல்லாருக்கும் தெரிந்த உண்மைதான். நீதியோடும் நியமங்களோடும் வாழ்வது கஷ்டமாகத்தான் தோன்றும். மனம் போல போக்கில் வாழ்வது சுலபமாகத் தோன்றும். ஆனால், உண்மையை உற்று நோக்கினால், முறையோடு வாழ்வதுதான் இன்பம். முறைகெட்டு வாழ்வது துன்பம் என்பது புரியும். ஆதலால் மன்னருக்கு இவ்விஷயத்தையும் வலியுறுத்துகிறார் வள்ளுவர்.

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.

ஒவ்வொரு துறையிலும் ஏற்படும் பிரச்னைகளை, அத்துறை சார்ந்த மேதைகளோடு கூடி விவாதித்து, தெளிவாக அறிந்து அப்பிரச்னை தீர வழிசெய்யாத மன்னவன், தன் மனப்போக்கின்படியே செயல்பட்டால், பகைவர் இல்லாவிட்டாலும் தன் செயலால் தானே கெட்டுவிடுவான் என்கிறது இக்குறள். இலங்கைமீது இராமன் போர் தொடுக்க வந்ததை அறிந்ததும், இராவணன் அமைச்சர் அவையைக் கூட்டினான். சேனாதிபதிகளை வரவழைத்தான். ஆனாலும், அவனுடைய அமைச்சர்களில் பலரும் அவனுக்கு ஜால்ரா தட்டுபவர்களாக அமைந்துவிட்டார்கள். சேனாதிபதிகளும் அவனுக்குத் தூபம் போட்டார்கள். சீதையினால் பிரச்னை வருகிறது. அவளை விட்டுவிடு. மேலும், இராமனைப் பற்றிய உன் மதிப்பீடு தவறானது. அவன் பகை வேண்டாம். அஃது ஆபத்து என்று எச்சரித்தவர்கள் வீடணனும், கும்பகர்ணனும்தாம். ஆயினும், அவர்கள் குரலுக்கு அவன் செவிசாய்க்கவில்லை. தனக்கும், தன் நாட்டுக்கும் பேரழிவைத் தேடிக்கொண்டான். தன்பதத்தால் அவன் தானே கெட்டான். வள்ளுவர் சொல்லுகிறார். சில நேரங்களில் மன்னன் தான் விரும்பவில்லை என்றாலும் சில செயல்களைச் செய்ய வேண்டிவரும். சிலருக்கு கடுந்தண்டனை தரும்போது, இரக்க சிந்தனை உடையவருக்கு அது வேதனையாகவும் இருக்கும். ஆனாலும், சமூக நன்மைக்காக அதைச்செய்துதான் ஆக வேண்டும். அது இராஜ தர்மம்.

குடிபுறம் காத்தோம்பி குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்

குடிமக்களைக் காப்பதற்காக குற்றவாளிகளைத் தண்டிப்பது குற்றமன்று. அது வேந்தனின் கடமை. அதனால் எழும் விமர்சனங்களைப் பற்றி மன்னன் கவலைப்பட வேண்டியதில்லை. அதே விஷயத்தை எளிய உவமை மூலமாக இன்னொரு குறளிலும் கூறுகிறார்.

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.

கொலையிலும் கொடியவர்கள் சிலர் எல்லாக் காலத்திலும் தோன்றிவிடுகிறார்கள். அத்தகையவர்களை மன்னன் அழித்தொழிக்க வேண்டும். அது பயிரைக் காப்பாற்றுவதற்காக புற்களைக் களையெடுக்கும் விவசாயத்திற்கு ஒப்பானது என்கிறது இக்குறள். ஓடும் ரயிலைக் கவிழ்க்க தண்டவாளத்தில் குண்டு வைப்பது, துணிகரக் கொள்ளை, கொலைகளில் ஈடுபடுவது, இராணுவ ரகசியத்தை விற்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு, சமூகத்திற்குப் பெரும் தலைவலியாக இருப்பவர்கள் பலபேர்-அண்டைநாடுகளின் ஆதரவும், தூண்டுதலும் காரணமாக உள்நாட்டில் பிளவு ஏற்படுத்துகிறவர்கள், குழப்பம் விளைவிப்பவர்கள், தாய் மண்ணுக்கே பாதகம் செய்கிறவர்கள் பலபேர். இத்தகையவர்களை அழிப்பது தவறா. தத்துவப் பார்வையுடையவர்களுக்கு நல்லவன் கெட்டவன் பேதமும் இல்லை. அனைவரும் இறைவனின் படைப்பு என்று தோன்றும். பாம்புகளும் இறைவனே, அவர்கள் பார்வையில். ஆனால், தார்மீகப் பார்வையில் பேதம் உண்டு. தீயை அடுப்பில்தான் வைக்கலாம். கூரையில் வைக்க முடியாது. பாம்புகளைப் படுக்கை அறைக்குள் தங்கவைக்க முடியாது. இங்கே தார்மீகம் தான் அவசியம். தீயவர்களை அழிப்பது தீமையே ஆகாது.
ஜலபரிஷேஸனம் என்றால் என்ன?

பிராமணர்கள் சாப்பிடும் முன்,"ஜலபரிஷேஸனம் என்ற முறையில் உள்ளங்கையில் சிறிது தண்ணீர் விட்டு உறிஞ்சுவதைப் பார்த்திருப்பீர்கள்.<வலக்கை ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் சேர்த்து வைத்து, மற்ற விரல்களை நீட்டி, உள்ளங்கையில் சிறிது தண்ணீர் ஊற்றி, உதட்டால் மணிக்கட்டு ரேகையில் வாய் வைத்து, மூன்று முறை உறிஞ்சிக் குடிப்பதே ஜலபரிஷேஸனம். இதற்கு காரணம் தெரியுமா!சாப்பிடும் போது இடையிடையே தண்ணீர் குடிக்கக் கூடாது என்பது பொது விதி. இவ்வாறு செய்தால் ஜீரணம் கெட்டு விடும். பற்களால் உணவைச் அரைத்து சாப்பிடும்போது, சுரக்கிற <உமிழ்நீரே, உணவைக் கரைக்க போதுமானது. சாப்பிடும் முன், கை கால் கழுவி, வாய் கொப்பளிப்பதும் இதனால் தான். அதிலும் ஓரளவு தண்ணீர் வாயில் ஒட்டிக்கொள்ளும் சரி..விக்கல் வந்து விட்டது, உணவு காரமாக இருக்கிறது... அப்போது என்ன செய்ய என்ற கேள்வி எழும். இதற்கு தீர்வு, உணவில் காரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். விக்கல் வர காரணம் என்ன தெரியுமா?சாப்பிடும் போது வேலை, தொழில், வியாபாரம், இன்ன பிற விஷயங்களைச் சிந்திப்பது தான். எனவே, சாப்பிடும் சமயத்தில் சாப்பாட்டைப் பற்றிய சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும். இதனால் தான் சாப்பிடும் முன், நாக்கு நனையுமளவு மிகக்குறைந்த அளவு தண்ணீர் குடித்து விட்டு சாப்பிட ஆரம்பித்தார்கள். ஜலபரிஷேஸனம் என்ற ஆன்மிகச் சடங்கு செய்பவர்களை கேலி செய்பவர்கள், இனியாவது, இதிலுள்ள அறிவியல் காரணத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.
பந்தி என்று பெயர் வந்தது ஏன்?

கல்யாணம் மற்றும் பிற சுபநிகழ்ச்சிகளில், எல்லாரும் இணைந்து உண்பதை "பந்தி என்கிறார்கள். இந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா? சமஸ்கிருதத்தில் "பங்க்தி என்பது தமிழில் "பந்தி ஆனது. "பங்க்தி என்றால் "சேர்ந்து உண்ணுதல். மனத்தூய்மையான ஒருவர், பந்தியில் அமர்ந்து சாப்பிட்டால் அங்கு பரிமாறும் உணவெல்லாம் சுத்தமாகி விடும் என்பது ஐதீகம். அப்படிப்பட்டவரை "பங்க்தி பாவனர் என்பர். நம்மோடு சேர்ந்து சாப்பிடுபவர்களின் குணம், பக்கத்தில் அமர்ந்திருக்கும் எல்லார் உணவின் மீதும் பரவும். எனவே,நற்குணத்தை வளர்த்துக் கொண்டால், நம் எல்லாருக்குமே நல்லது.
கோயில்களில் தரும் கயிறு எத்தனை நாள் கையில் இருக்கலாம்?

காசி, திருப்பதி  போன்ற இடங்களுக்கும், இன்னும் பல அம்மன் கோயில்களிலும் பைரவர் கயிறு, வெங்கடாஜலபதி கயிறு என கருப்பு கயிறுகள் வாங்கி கட்டி வருகிறார்கள். சில கோயில்களில்  சிவப்பு, மஞ்சள் கயிறுகையில்  கட்டப்படுகிறது. இதை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்ள வேண்டும். வரலட்சுமி நோன்பு  கயிறை மட்டும் பெண்கள் வலது கையில் கட்ட வேண்டும். இந்தக் கயிறுகளை பெரும்பாலானவர்கள் ஒரு வருடம் வரையிலும் கட்டிக் கொள்கிறார்கள்.  அவ்வாறு செய்யக்கூடாது. இந்த கயிறுகளுக்குரிய காலம் 48 நாட்கள்  மட்டுமே. அதன்பின், இதைக் கழற்றி  ஆற்றிலோ பிற  நீர்நிலைகளிலோ  போட்டு விட வேண்டும்.
கோயில்களில் தரும் கயிறு எத்தனை நாள் கையில் இருக்கலாம்?

காசி, திருப்பதி  போன்ற இடங்களுக்கும், இன்னும் பல அம்மன் கோயில்களிலும் பைரவர் கயிறு, வெங்கடாஜலபதி கயிறு என கருப்பு கயிறுகள் வாங்கி கட்டி வருகிறார்கள். சில கோயில்களில்  சிவப்பு, மஞ்சள் கயிறுகையில்  கட்டப்படுகிறது. இதை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்ள வேண்டும். வரலட்சுமி நோன்பு  கயிறை மட்டும் பெண்கள் வலது கையில் கட்ட வேண்டும். இந்தக் கயிறுகளை பெரும்பாலானவர்கள் ஒரு வருடம் வரையிலும் கட்டிக் கொள்கிறார்கள்.  அவ்வாறு செய்யக்கூடாது. இந்த கயிறுகளுக்குரிய காலம் 48 நாட்கள்  மட்டுமே. அதன்பின், இதைக் கழற்றி  ஆற்றிலோ பிற  நீர்நிலைகளிலோ  போட்டு விட வேண்டும்.

வெள்ளி, 18 அக்டோபர், 2013

இறைவனின் கல்கி அவதாரம் எப்போது?

கிருஷ்ணர் தன் அவதார நோக்கம் முடிந்து சங்கு சக்கரத்துடன் காட்சி தந்தார். தேவலோகத்தில் தேவர்கள் அனைவரும் மலர் மாறி பொழிந்து மங்கலவாத்தியம் முழங்க பகவானை வரவேற்க காத்திருந்தனர். பூமியில் இருந்து புறப்பட்டு வைகுண்டம் சென்றடைந்தார் விஷ்ணு பகவான். கிருஷ்ணாவதாரம் முடிந்த உடனே கலியுகமும் பிறந்தது. ராம அவதாரத்தில் ராமரின் அன்பினால் கொல்லப்பட்ட வாலிதான் கிருஷ்ணா அவதாரத்தில் வேடனாக வந்து கண்ணன் மீது தவறுதலாய் அம்பு எய்தினான். அதனால் கிருஷ்ணர் உயிர் பிரிந்தது. அவர் வைகுந்தம் சென்றதால் உடன் துவாரகையும் கடலில் மூழ்கியது. கண்ணன் உடல் சந்தனக் கட்டையாகி மிதந்து குருவாயூர் சென்று அடைந்தது. அவ்விடம் தான் குருவாயூர் ஆகும். தசாவதாரங்களில் 9 அவதாரங்களில் ராமாவதாரமும்,கிருஷ்ணாவதாரமும் தான் பூரண அவதாரங்கள் இவை இரண்டும் தான் இதிகாசங்களாக மலர்ந்தன. அவைதான் ராமாயணம், மகாபாரதம். இந்த 9 அவதாரங்களுடன் நின்றுவிடப் போவதில்லை. இன்னும் ஓர் அவதாரம் உள்ளது. அது தான் கல்கி அவதாரம். பகவான் குதிரை முகத்துடன் யாஸஸ் என்பவருக்கு மகனாக அவதாரம் செய்ய போகிறார். தீமைகளை அழித்து நன்மை செய்யவே பகவான் அவதாரம் செய்வார். கலியுக முடிவில் மக்கள் தீமையே உருவாக உள்ளனர். அவர்களை அழித்து அமைதியும் அன்பும் நிலைநாட்ட கல்கி அவதாரம் நிகழும்.

கலியுகம் முடிவில் வருணங்கள் ஒன்றுக்கொன்று கலந்து பலவிதமாக இருக்கும். துர்க்குணம் உடையவர்கள் அதிகமாவார்கள். சாஸ்திரம் பயின்றாலும் அவற்றை அனாச்சாரங்களாகத்தான் பரப்புவார்கள். மிலேச்சர்கள் தலைமை பொறுப்பேற்று மக்களைத் துன்புறுத்துவார்கள். கலியுகத்தில் மனிதர்களிடையே பொய், வஞ்சனை, தூக்கம், சோம்பல், மனவருத்தம், ஹிம்சை செய்தல், பலவீனம், பயம், அறியாமை, அழுகை அதிகமாக இருக்கும் எல்லாவற்றையும் அடைய வேண்டும் என்ற வெறி ஏற்படும். துறவிகள் பணத்தாசையால் அலைவர். இல்லறத்தார் எங்கே எது கிடைக்கும் என்று திரிவர். தாய் வழி உறவினர்களை தவிர்த்து மனைவி வழி உறவினர்களை மட்டுமே மதிப்பார்கள். மனைவிக்கு மட்டுமே கட்டுப்படுவர். சிறிதளவு சொத்துக்கும் உறவினர்களை கொல்வார்கள். பெற்றோர்களைக் காப்பாற்ற மாட்டார்கள். திருமணத்தில் முறை இருக்காது. இவ்வளவு கெடுதல் இருந்தாலும் கடுமையான தியானத்தால் கிருதயுகத்திலும், யாகங்களில் திரேதா யுகத்திலும் பூக்கள் கொண்டு செய்த விரிவான பூஜைகளால் துவாபர யுகத்திலும் கிடைத்த அதே பலனை கலியுகத்தில் கண்ணனின் திருநாமத்தை உச்சரித்த மாத்திரத்திலேயே கிடைத்துவிடும். பாவங்களும் விலகிவிடும். கலியுகத்திலும் இதுவே யுகதர்மமாக மாறும்.

கலியுகத்தில் 3000 ஆண்டுகள் கடந்துவிட்டன என ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். கலியுகத்தின் 2000 ஆண்டு கழிந்ததுமே அன்னிய ஆதிக்கம் பரவிவிட்டது. கலியுகத்தின் கேசவனுடைய ஹரி நாமத்தை பாராயணம் செய்வதாலேயே 3 யுகங்களுக்கான புண்ணியம் பெற்று விடலாம். இப்படி மகனீயர்களும் தபஸ்விகளும் தாம் அதர்மத்தை சீர்தூக்கிப் பார்த்து உணர்ந்தாலும் உலகில் தர்மம் சிதைந்து நீதி நேர்மை நசிந்து அராஜகம் தலை விரித்தாடும் போது நல்லவர்களையும் தர்மத்தையும் காக்க கல்கி அவதாரம் நிகழும்.
கோயில்களில் முடிகாணிக்கை செலுத்துவதன் தத்துவம் என்ன?

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்துகின்றனர். இதற்கு ஒரு கர்ண பரம்பரை கதை கூறப்படுகிறது. வருஷபன் என்ற அசுரன் பரமபதம் வேண்டி மலையப்ப சுவாமியை தரிசிப்பதற்கு முன்பு தினந்தோறும் யாகம் செய்வான். அப்படி ஒருநாள் யாகம் செய்யும்போது பக்தி மிகுதியால் தன் தலையையே புஷ்பமாக கருதி கிள்ளி எடுத்து நெருப்பில் போட்டு விட்டான். இதை நினைவு கூறும் விதத்தில் பக்தர்கள் தலைமுடியை புஷ்பமாக சமர்ப்பித்து தான் என்ற அகங்காரத்தை அகற்றி இறைவனை வழிபடுகின்றனர்.
உறங்கி எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்க வேண்டும் என்பது ஏன்?

நாம் நமது அன்றாடப் பணிகளைச் செய்வதற்கு கைகள் மிகவும் பயன்படுகின்றது. கைகளின் உதவியில்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. செயல்களுக்குரிய புலன்களில் கைகளுக்குத் தனி இடம் உண்டு. இறையுருவத்தை வணங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப்பணம் செய்ய கைகள் உதவும். இறையுருவங்கள், அபய வரத முத்திரைகளைத் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தரும்; இறையுருவத்தின் பெருமையை கைகள் வெளிப்படுத்தும். கைகளை கடவுளுக்குச் சமானமாகச் சொல்கிறது வேதம் (அயம் மெஹஸ்தோ பகவான்...). திருமணத்தை நிறைவு செய்வது பாணிக்ரஹணம்; அதாவது, கை பிடித்தல்... கன்னிகையின் கை பிடித்து வரனிடம் அளிக்க வேண்டும். அரசர்களையும் துறவிகளையும் கைத்தாங்கி பெருமைப்படுத்துவார்கள். மந்திர ஜபங்களில் கரன்யாசத்துக்குக் கைகள் வேண்டும். முதுமையில் ஊன்றுகோலைப் பயன்படுத்த கை வேண்டும்.

கையின் நுனியில் அலைமகளும், நடுவில் கலைமகளும் அடிப்பக்கத்தில் கோவிந்தனும் இருப்பதாகப் புராணம் சொல்லும். ஹஸ்தரேகா சாஸ்திரம் கையை வைத்து உருவானது. அறிவு, செல்வம், ஆன்மிகம் ஆகிய மூன்றையும் பெற, காலையில் எழுந்ததும் கைகளைப் பார்க்க வேண்டும். அத்துடன்

கராக்ரே வஸதெ லஷ்மீ கரமத்யே ஸரஸ்வதி
கரமூலேது கோவிந்த: ப்ரபாதெ கரதர்சனம்

என்ற ஸ்லோகத்தைக் கூற வேண்டும். கையைத் தலையணையாக வைத்து உறங்கும் நமக்கு, விழித்ததும் அதைப் பார்ப்பது எளிது. நல்ல நடைமுறைகளைப் பின்பற்றினால் நன்மைகள் பல உண்டு.
பெண்கள் அணியும் ஒவ்வொரு ஆபரணத்திற்கும் காரணம் உண்டு தெரியுமா?

கோயிலில் உள்ள அம்மனுக்கு என்னதான் பட்டுப்புடவை கட்டி மலர் மாலையெல்லாம் சூட்டினாலும், தாலி, தோடு,மூக்குத்தி, வளையல், ஒட்டியானம், மோதிரம் ஆகிய அணிகலன்கள் அணிவித்தால் தான் அலங்காரம் முழுமையடையும். பெண்களை அம்மனின் அம்சமாக கூறுகின்றனர். எனவே தான் பெண்கள் அணியும் கீழ்கண்ட அணிகலன்களுக்கும் சில காரணங்கள் கூறப்படுகிறது.

1. தாலி - தாயாகி, தாலாட்டுப்பாட கணவன் தரும் பரிசு சின்னம்.
2. தோடு - எதையும் காதோடு போட்டுக் கொள். வெளியில் சொல்லாதே !
3. மூக்குத்தி - மூக்கு தான் முதலில் சமையலை அறியும் உத்தி என்பதை உணர்த்துகிறது.
4. வளையல் - கணவன் உன்னை வளைய, வளைய வர வேண்டும், என்பதற்காக,
5. ஒட்டியாணம் - கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக !
6. மோதிரம் - எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க.
ஓற்றுமையாய் வாழ என்ன வழி?

சிலநேரங்களில் நன்றாக இருக்கும் குடும்பங்களில் கூட சூறாவளியாக புயல் வீசி விடுவதுண்டு. பல்வேறு பிரச்னைகளில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமலோ, அனுசரணை இல்லாததாலோ குடும்ப அமைதிக்கு பங்கம் வந்து விடுகிறது. கணவன்- மனைவி, பெற்றோர்- பிள்ளைகள் உறவு கூட பாதிக்கப்படுகிறது. இவர்கள்

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே

என்ற தேவாரப்பாடலை 12 முறை பாராயணம் செய்து வரவேண்டும். விநாயகர், முருகன், சிவன்,பார்வதி ஆகிய நால்வரும் சேர்ந்திருக்கும் சிவகுடும்ப படம் வைத்து இப்பாடலைப் பாடுவது சிறந்த பரிகாரம். செவ்வாய், வெள்ளியில் இவ்வழிபாட்டை  செய்யலாம். கோயில்களில் சுவாமி, அம்மன் சந்நிதிகளில் விளக்கேற்றுவதும் குடும்ப ஒற்றுமைக்கு வழி வகுக்கும்.
மாவிலைத் தோரணம் கட்டுவதன் தத்துவம் என்ன?

மாவிலை ஒரு கிருமிநாசினி. இதற்கு துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும் மாவிலை அழுகுவது கிடையாது. முறையாக காய்ந்து உலரும். இதுபோல், வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நடைபெற்று முற்றுபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், மங்கலம் பெருக மாவிலைத் தோரணம் கட்டுகிறோம்.