வெள்ளி, 18 அக்டோபர், 2013

புது ஆடைகளில் மஞ்சள் தடவி அணிவது ஏன்?

மஞ்சள் - தீமைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றக்கூடிய ஆற்றல் உடையது. புதிய ஆடைகள் அணிந்திருக்கும்போது, எவரேனும் தவறான எண்ணங்களுடனும் பொறாமையுடனும் நம்மைப் பார்த்தார்களேயானால், இந்த மஞ்சளானது நம்மைக் காப்பாற்றும் என்பது நமது நம்பிக்கை. இதுமட்டுமல்லாமல், மஞ்சள் என்பது மங்களத்தின் அடையாளம் ! எனவே, ஒருவர் மஞ்சள் தடவிய ஆடையை உடுத்தியிருப்பார் ஆயின், அவர் ஏதேனும் மங்கள காரியத்தில் பங்கேற்றியிருப்பார் என்பதை நாம் அறியலாம். புத்தாடை என்பது கஞ்சி முதலானவையின் சம்பந்தம் உடையதனால், மஞ்சளை அதன்மேல் தடவுவதன் மூலம் அனைத்துவித தீயவையும் விலகி நன்மைகள் அடையக் காரணமாக அமைகின்றது.
பஸ் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரை செல்வது ஏன்?

பாதயாத்திரையாக சென்று இறைவனை வணங்கும் முறை சமீபத்தில் அதிகரித்துள்ளது. முற்காலத்தில் வாகனங்கள் இல்லாத சூழ்நிலையில் அடியவர்கள் தெற்கிலிருந்து இமயமலை வரையும், இமயத்திலிருந்து பொதிகை வரையும் உள்ள தலங்களை நடந்துசென்றே தரிசித்தனர். இதே வழக்கம் இப்போதும் ஏற்பட்டுள்ளது. காலச்சூழ்நிலை கருதி குறுகிய இடத்திற்குள் பாதயாத்திரை செல்கின்றனர்.  பழநி, திருப்பதி ஆகிய தலங்களுக்கு பாதயாத்திரை செல்வோர் அதிகம். ஒருவன் தன்னைத்தானே வருத்திக் கொள்வதன் மூலமே தான் என்ற அகங்காரத்தைக் குறைக்க முடியும் என்பதின் அடிப்படையிலேயே பாதயாத்திரை நடத்தப்படுகிறது.
கோயிலில் காப்புக் கட்டினால் வெளியூர் செல்லக்கூடாதா?

திருவிழா காலத்திலாவது ஊர் சுற்றாமல் உள்ளூரிலேயே இருக்கலாமே என்று இதைக் கூறியிருப்பார்கள். நம் ஊர் திருவிழாவை நாம் எல்லோரும் இருந்து தானே நடத்த வேண்டும்? காப்புக் கட்டிக் கொள்பவருக்குத்தான் இந்த சட்டம் சாஸ்திர ரீதியானது. மற்றவர்களுக்கு வெளியூர் செல்லக்கூடாது போன்ற தடைகள் சாஸ்திரங்களில் இல்லை.
தவம் என்றால் என்ன?

தவம் என்றால் உடனே யாரும் அஞ்சி விடக்கூடாது. காட்டுக்குச் செல்வதும் பட்டினி கிடப்பதும் கனல் நடுவே நிற்பதும் தவம் என்று கருதி விடக்கூடாது. அவையாவும் தவத்திற்கு அங்கங்களே அன்றி தவமாகாது. தனக்கு வருகின்ற துன்பங்களைச் சித்சமாதானத்துடன் தாங்கிகொள்ளுதல், இன்னொரு உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தல் ஆகிய இரு பண்புகளும் சேர்ந்குணமே தவமாகும்.
மனிதனின் வாழ்க்கைக்குத் தேவை அருளா! பொருளா?!

ஒரு மனிதனின் நிம்மதியான வாழ்க்கைக்குத் தேவை அருளும் பொருளும். இவை இரண்டும் இருந்து விட்டால், எதற்கும் கவலை இல்லை. அருள் அதிகம் இருக்க வேண்டும். பொருள் போதுமான அளவில் இருக்க வேண்டும்.  பொருள் அதிகம் இருந்தால், அருளைப் பெறுவதில் சிரமம் இருக்கும். அதாவது, அருளைப் பெறுவதில் மனம் நாட்டம் கொள்ளாது. அருளும் பொருளும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதவை. அருளை வைத்துக் கொண்டு பொருள் பெற முடியாது; பொருளை வைத்துக் கொண்டு அருளைப் பெற முடியாது. இரண்டையுமே தேடித்தான் பெற வேண்டும். நல்ல ராசிக்காரர்கள் சிலரை இவை இரண்டுமே தேடி வருவதும் உண்டு. அருள் என்றால், இறை இன்பம். இறை அருள். இறைவனின் ஆசி என்றெல்லாம் சொல்லலாம். என்றென்றைக்கும் எப்போதும் நல்ல நிலையில் ஒருவரை வைத்திருக்க உதவுவது அருள். இத்தகையோரைப் பார்த்தாலே, கையெடுத்துக் கும்பிடத் தோன்றும். பொருள் என்றால், நாம் தேடிச் சேகரித்த செல்வம். பொருள் தேடும் ஆசை குறையக் குறையத்தான் அருள் வந்து சேரும். ஒருவர் வைத்துக் கொண்டிருக்கும் செல்வத்தால், படிப்பால், பதவியினால், ஞானத்தால் அருளை வாங்க முடியாது. அருள் கடைச் சரக்கு அல்ல.

மனத்தூய்மையே அருளைப் பெற முயற்சிப்பதன் முதல் படி. ஸ்ரீராமபிரானின் மனத் தூய்மையை ராவணனே வியந்து போற்றி இருக்கிறான். எதிரியே என்றாலும், ராமனின் இந்தக் குணத்தை தன் மனைவியான மண்டோதரியிடம் வியந்து சொன்னதாக, பரமஹம்சர் சொல்வார். சீதையைத் தங்கள் நாயகி ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள். ஏன் இவ்வளவு அவஸ்தைப்படுகிறீர்கள்? ராமனைப் போன்ற மாய வடிவம் எடுத்து, சீதையிடம் சென்று அவளை ஏன் ஏமாற்றி அடையக் கூடாது. என்று கேட்டாளாம் மண்டோதரி. கணவனின் இந்த இச்சையைப் பூர்த்தி செய்ய விரும்பிய மண்டோதரியே இப்படி ஒரு வழியைச் சொன்னாள். அதற்கு ராவணன், சேச்சே... அப்படி இல்லை மண்டோதரி. ராமனை நினைத்த மாத்திரத்திலேயே வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஆனந்தமும் இன்பமும் மனதில் உண்டாகின்றன. பரமபதமான சொர்க்கமும்கூட வெறுப்பாகி விடும் போலிருக்கிறது. அப்படி இருக்கும்போது, அவனுடைய திவ்ய சொரூபத்தை எடுத்துக் கொண்டால், எனக்கு எப்படி சிற்றின்பத்தில் நாட்டம் செல்லும்? மனம் இச்சையில் லயிக்காது என்று மண்டோதரியிடம் சொன்னானாம். பொருளாசை மற்றும் இன்ன பிற ஆசைகளில் மனம் சென்று கொண்டிருந்தால், அருள் கிடைக்காது. இறைவனை தரிசிக்க முடியாது. பணம், பதவி, பட்டம், ஆற்றல் இவற்றைச் சேர்க்க முயலும் ஆசை அறவே அடங்கினால்தான் இறை தரிசனம் கிடைக்கும். அந்த இன்பத்தை உணர முடியும்.

அருளில் கிடைக்கும் ஆனந்தத்தை ஒருமுறை ருசித்துப் பார்த்து விட்டால், அதன் பின் வேறு எந்த ஆசையும் ஒரு மனிதனுக்கு எழாது. சான்றோர்கள் அனுபவித்துப் பெற்ற அந்த அருள் அமுதத்தைப் பெற முயற்சிக்கலாமே! அருளைப் பெறுவதற்கு மனதை முதலில் பக்குவப்படுத்துங்கள். பக்குவப்பட்ட மனதில்தான் அருள் ஆனந்த தாண்டவம் ஆடும்.
எலுமிச்சையின் மகிமை தெரியுமா?

ராகு காலத்தில் எலுமிச்சையை துர்க்காதேவிக்கு தீபம் ஏற்று பயன்படுத்துகிறார்கள். சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுகிறது. இதற்கு காரணம் எலுமிச்சை தேவ கனி என்பதால் ஆகும். மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு. பலாவில் வியர்வை குற்றம் உண்டு. வாழையில் புள்ளி குற்றம் உண்டு. ஆனால் எலுமிச்சையில் மட்டும் இவ்வித குற்றங்கள் இல்லை. மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி மற்ற கனிகளைக் காட்டிலும் எலுமிச்சைக்கு அதிகம் உண்டு.
கலியுகம் எப்போது முடியும்?

கலியுகம் முடிய இன்னும் 4,26,896 ஆண்டுகள் உள்ளன. அப்போது உலகம் முழுமையாக இருக்காதாம். இப்போது கலியுகத்தின் 5104ம் ஆண்டு தான் நடக்கிறது. மொத்தம் 4,32,000 ஆண்டுகள். இப்போதே கலியுகத்தின் கொடுமை எல்லை மீறி போய் விட்டது. இனி காட்டுவாசிகள் போல நாகரீகமற்று போய் விடும் அந்த பழைய காலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்த யுகத்தின் முடிவில் தர்மத்தை நிலைநாட்ட திருமால் கல்கி அவதாரம் எடுப்பாரென்று புராணங்கள் கூறுகின்றன. கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும்.

புதன், 16 அக்டோபர், 2013

பெண்கள் மஞ்சள் கயிறு அணியாமல் தங்கச் சங்கிலியில் திருமாங்கல்யம் அணிவது சரியா?

மாங்கல்ய தந்துனா என்று திருமணத்தில் மந்திரம் சொல்லி தாலி கட்டப்படுகிறது. தந்து என்றால் மஞ்சள் கயிறு என்று பொருள். திருமாங்கல்ய சரடு என்றும் இதனைச் சொல்வார்கள். கணவன் இல்லாதவரை விதந்துஎன்று குறிப்பிடுவார்கள். அதாவது மாங்கல்ய கயிறு இல்லாதவள் என்று பொருள். மந்திர உச்சரிப்போடு கட்டப்படுகிற மஞ்சள்கயிறைத் தான் பெண்கள் அணிய வேண்டும். விருப்பமுள்ளவர்கள் திருமாங்கல்யத்தைக் கயிற்றிலும், மற்றவற்றை சங்கிலியிலும் அணிவதும் வழக்கம். எப்படியோ மஞ்சள் கயிறு அணிந்து தான் ஆக வேண்டும்.
திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்?

இந்திய தேசத் திருமணங்களில், அம்மி மிதித்து அருந்ததி காட்டும் வழக்கம் உண்டு. வசிஷ்டா என்ற பெயருக்கு உயிர்மூச்சுடன் உறுதியான மனம் கொண்டவன் என்ற பொருளும், அருந்ததி என்ற பெயருக்கு கணவனின் எண்ணம் அறிந்து கற்பு நெறியுடன் வாழ்பவள் என்ற பொருளும் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. வஸ்து என்றால் பஞ்சபூதங்கள் என்றும், வசிஷ்தா என்றால் பஞ்சபூதங்களில் ஐக்கியமானவன் என்றும் பொருள் உண்டு. திருமண பந்தத்தில் இணையும் நாள்வரை, மணப்பெண்ணானவள் தன்னையும் தன் உடலையும் காமக்கண்ணுடன் பிறர் பார்த்ததால், திருமண நாளில் தனது உடலை அக்னிக்குள் சமர்ப்பித்து தன்னைப் பரிசுத்தப்படுத்திக்கொள்வதுடன், தன்னைத் திருமணம் செய்துகொள்பவளின் பாவங்களையும் அதே அக்னியில் சாட்சியாக நீக்கி, பரிசுத்தப்படுத்தி, தன் ஆற்றல் எனும் ஆக்ஞை சக்கரத்தை கணவனுக்கு முழுமையாகக் கொடுத்து புருவ மத்தியில் திலகமாக ஏற்றுக்கொள்கிறாள்; கணவனிடம் சரணாகதி அடைகிறாள். பெண்ணின் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவன் மணப்பெண்ணைப் பார்த்து, இனி நான் உனது உயிர்மூச்சாகவும் கல்லைப் போல மன உறுதியுடனும் இருந்து உன் வாழ்க்கைக்கு வழிகாட்டுவேன் என்பதை, வசிஷ்ட மகரிஷியின் சாட்சியாக உன் காலை அம்மிமீது வைத்து அதன் சாட்சியாக உன் காலில் மெட்டியைச் சூட்டுகின்றேன் என்று கூறுகின்றான். மணப்பெண்ணானவள், தன் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவனுக்கு அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டி அருந்ததியைப் போல் ஏழு ஜன்மங்களிலும் உமக்கு மட்டும் மனைவியாக இருப்பேன் என்று சத்யப்பிரமாணம் செய்கின்றாள். அக்னியில் பிறந்த பெண், அக்னியாலேயே பரிசுத்தப்படுத்திக்கொண்டு ஆணையும் பரிசுத்தப்படுத்தி திருமணம் எனும் தெய்வீக பந்தத்துக்குள் இணைந்து அர்த்தநாரீஸ்வரியாகத் திகழ்கின்றாள்.
ஆஞ்சநேயருக்கு வடை மாலை, வெண்ணெய் சார்த்துவது ஏன்?

நமது உடல் தசையால் ஆனது. தசை வளர்ச்சிக்கு உளுந்து முக்கிய காரணமாகிறது. ஒல்லியாக இருப்பவர்கள் இட்லி, தோசை, உளுந்துவடை சாப்பிட்டால் சதைப்பிடிப்பு ஏற்படும். ஆனால், சதையாலான இந்த உடம்பு எதற்காவது பயன்படுமா? எனவே, பயனற்ற இந்த உடலை உனக்கே அர்ப்பணிக்கிறேன் ஆஞ்சநேயா என்ற தத்துவார்த்தத்தின் அடிப்படையிலேயே உளுந்துவடை மாலை அணிவிக்கிறோம். அனுமானுடைய தாய் அஞ்சனாதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடைசெய்து கொடுத்ததாக ஐதீகம். உளுந்து எலும்புகளுக்கு நல்ல போஷாக்கு.

வெண்ணெய் சாத்துதல்: ராம ராவண யுத்தம் நடக்கிறது அப்போது ராமரையும் லக்குமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டு சென்றார் அனுமான் அப்போது ராவணன் சராமாரியாய் அம்பு தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப் பட்டார், அந்தக் காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய் பூசிக் கொண்டாராம். வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை, அதனால் வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது,
பூஜையில் சுண்டலின் முக்கியத்துவம் தெரியுமா!

பூஜையின் போது சுண்டலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. பொதுவாக  இறைவனை நினைத்து உபவாசம் இருப்பதே மேலானது. இந்நேரத்தில் புரதச்சத்து மிகுந்த சமச்சீர் உணவான சுண்டலை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியம். நீராவியில் வேக வைப்பதால் சத்து குறையாது. நோயாளிகளுக்கும் கருவுற்ற பெண்களுக்கும் சுண்டல் அற்புதமான உணவு. மேலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான தானிய வகை சுண்டல் சமைத்தால், நவக்கிரகங்களையும் திருப்திபடுத்தலாம்.

ஞாயிறு (சூரியன்)- அவித்த கோதுமை கலந்த சுண்டல், திங்கள் (சந்திரன்)- பாசிப்பயிறு, அப்பளம் கலந்த புட்டு, செவ்வாய்- துவரை சுண்டல், புதன்- பயறு சுண்டல், வியாழன்- கொண்டைக்கடலை சுண்டல், வெள்ளி- மொச்சை சுண்டல், சனி- எள் சேர்த்த சுண்டல், ராகு- உளுந்து சுண்டல், கேது- கொள்ளு சுண்டல்.